ஞாயிறு, நவம்பர் 29, 2015

புத்தினி


நடுநிசியில் நீங்கிச் சென்றான் சித்தார்த்தன்.  
சடுதியில் பிரிந்தே  யசோதரை இதயத்தை,
சுக்கலாய்ப் பொடித்து சுயம்தேட அகன்றான்.
பக்கலில் நல்மகவை பார்த்தபடி தவித்தாள்.

ஓரிரவில் குலைந்ததோர் வாழ்வுதனை  ஒதுக்காமல்,.
ஈரைந்து திங்கள்சுமந்த  மகவெண்ணி உயிர்தரித்தாள்.
உருவழிந்து ஊண்குறைத்து உறக்கம் துறந்தாள்.
கருபுகுந்தாள் தான்வகுத்த கூடொன்றின் கர்பத்துளே.

ஆசிகொண்ட நாளொன்றில் புத்தனும் மீண்டான்.
தூசிமூடிய பாதத்தையவள்  கண்டு உறைந்தாள்
ஞானம்கண்டு  சுக்கான தேகமதோ தகதகக்க,
மோனத்திலே சருகாய் ஆனவளோ கேட்டனளே!

‘உம்மையே  புத்தன்என்பரோ? புத்தனெனில் யாதாதல்?’
“இம்மையிலே ஞானம்கொண்டான்’’ என்றனனே ததாகதன்.
பல்லக்கு ஏறாதான் பாதம்பார்த்திருந்த அபலையவள்,
மெல்லவோர் மென்முறுவல் சிந்தியே மௌனமானாள்.

‘இருவருமே ஞானம் கண்டடைந்தோம்  ஐயன்மீர் !
இவ்வுலகை உமது மெய்யறிவோ உய்விக்கும் - ஆயின்
நானடைந்த ஞானமதோ பந்திக்கு வாராதே !
கானகத்து நிலவெனவே வீசியே ஓய்ந்திடுமே’

அளந்துமனம் சொல்லியே சூனியத்தில் லயித்தனள் !  
‘விளக்கும்படி’ புத்தனவன் வினவவும் முடித்தனளே :
“பெண்மையது முழுமைகாண வெளித்தேடல் வேண்டாவே.
திண்ணமாய் தன்னுள்ளே  பூரணம்தான் கொள்வாளே”


படம்: நன்றி கூகிள்


  


செவ்வாய், நவம்பர் 17, 2015

முகநூல் கவிதைகள்

கனவில் வந்த சீடன்
காலையில் வந்த கனவில்
என் காலருகே அமர்ந்திருந்ததோ
சுந்தர்ஜி....

'உப்புமாவுக்கு கடுகைவிடுத்து
எள்ளைத் தாளித்திருக்கிறாய்'என்று
.திருகிக் கொண்டிருக்கிறேன் அவன் காதை.


திரிகடுகம் செய்யுள் சொல்லவா? என்கிறான்.
ஐம்பதாச்சு...தாளிக்கத் துப்பிருக்கா? எனத் திருகலைக் கூட்ட,
'நீங்கள் தானே நான்' எனக் கள்ளம் தொனிக்கா பதில்...
திருகின காது வலிக்காதோ... சிரிப்பைப் பொசுக்க....

தொலைக்காட்சி உயிர்பெறுகிறது.
'சிறந்தவர் குருமார்களா? சீடர்களா?' எனப் பட்டிமன்றம்.
பாரதிபாஸ்கர் என் கட்சியைப் பேசுமுன்னேயே கைதட்டுகிறர்கள்.
'சிறந்தவர் சீடர்களே' என 
சுந்தர்ஜியைப் பார்த்து சிரிக்கும் சாலமன் பாப்பையா.

சேனல் மாற்றிப் போட்டால் அங்கே தலைப்போ 
'தாளிக்க உகந்தது கடுகா எள்ளா?'
கெட்டவார்த்தை சொல்வதுபோன்ற வாயசைப்பில் திண்டுக்கல் லியோனி...
'கடுகா இருந்தா என்ன, எள்ளா இருந்தா என்ன,
போட்டதத் தின்னுட்டு பொழப்பப் பாருங்க' என்கிறார்.

புவ்வாக்கு அர்ப்பணம்னா கடுகு,
அவ்வாக்கு தர்ப்பணம்னா எள்ளு
என்றார் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி;
'காதை விட்டால் யூடியூப் கேட்பேன் குருஜி' எனும் சுந்தர்ஜி ;
சீடர் செவிகளை விடாதீர் என்றார் பரமார்த்தகுரு;
இதையே கவிதையாக முகநூலில் போடச் சொன்னார் ரிஷபன்;

'பன்னிரண்டு லைக்குக்கு இந்தப்பாடா?'என்றபடி என் காது திருகப்பட்டது.
பின்னே கோபமாய் மீசைதுடிக்க நின்றிருந்தான் 
முண்டாசுக்காரன்....

.முதுமை
பாடமுயன்றால் தொண்டை வலிக்கிறது.
தூக்க முயன்றால் கை(வலது) வலிக்கிறது.
அதேபோல்,
குனியமுயன்றால் இடுப்பும்,
குதிக்கமுயன்றால் காலும்,
திருப்பும் போதெல்லாம் கழுத்தும்,
வலிக்கின்றன.
எதையும் முயலாமலே,
வலித்துக் கொண்டேயிருக்கும் .....
மனசு மட்டும்.

வியாழன், நவம்பர் 12, 2015

வைஜெயந்தி மாலா


கலைக்கும் காலத்திற்கும் ஏதும் உறவோ பகையோ உண்டா என்ன? தன் காலத்தில் கொடிகட்டிப்பறந்த கலைஞர்களும், படைப்பாளிகளும் தன் காலத்திலேயே பெரும்பாலும் மறக்கப்பட்டு விடுவதும், அல்லது, அதிக பட்சம்  அடுத்த தலைமுறைமட்டும்  நினைவுகூறப் படுவதும்தான் அதிகம்.
அன்றி, அந்தக்கலையின் பெயர் உச்சரிக்கப்படும்தோறும் நினைவிலாடும் மேதாவிலாசம் மிக்கவர்களை காலம் தன் மடியிலேயே கிடத்தியிருக்குமோ ? தான்வாழும் காலத்திலேயே, தான் போஷித்த  கலைதழைக்க, அடுத்த தலைமுறையை உருவாக்கியும்: நரையும்திரையும் அற்பமானிடர்க்கே தானன்றி தனக்கல்ல என்றே, தன் கலையே தானாகி வளைய வரும் மேதைகளும் இன்றும் உண்டல்லவா?

கவிஞர் திருலோகசீதாராம் பேத்தியின் திருமணத்துக்காய் இந்தமுறை மும்பை வந்திருக்கிறேன். நேற்று ஷன்முகானந்தா ஹாலில் திருமதி வைஜெயந்திமாலாபாலி அவர்கள் நிகழ்த்திய ராமாயண காட்சிகள் நாட்டியம் காணும் வாய்ப்பு அமைந்தது. வைஜெயந்திமாலா அவர்களின் தற்போதைய வயது 79. அவர் கௌசல்யையாக வந்து, அட்சதை போட்டுவிட்டு சிஷ்யமார்களை வைத்து ஒப்பேற்றி விடுவார்கள் என நிகழ்ச்சியைத் தவிர்க்க இருந்தேன். எதற்கும் என் சித்தப்பாவின் கனவுக்கன்னியை பார்த்துவிட்டு வருவோமென்றே போனேன். ஆச்சரியமான ஏமாற்றம் எனக்கு.

மேடையில் அபிநயம் பிடித்தது வைஜெயந்திமாலா அவர்கள் மட்டும்தான். வேறு ஒரு ஜீவனும் சதங்கை கட்டவில்லை. சில ராமாயணக் காட்சிகள். ஸ்ரீமத் பாகவதம் சொல்லும் ‘நவ விதி பக்தி’ எனப்படும் ஒன்பது பக்தி முறைகளுக்குள் இராமாயண கதாபாத்திரங்களைப் பொருத்தி வழங்கப் பட்ட ஒரு கலைஅர்ப்பணமாய் நிகழ்ச்சி அமைந்தது.முறையாக நாட்டியம் பயின்ற என் மருமகள் மதுமிதா உடன்இருந்து அசைவுகளின் நுட்பங்களை விளக்கிய வண்ணம் இருக்க,வியப்பின் உச்சத்துக்கே சென்று விட்டேன்.    

வார்த்தைகள் உணர்த்த இயலாத உணர்வுகளை இசை உணர்த்தி விடும், இசையாலும் உணர்த்த இயலாதவற்றை நிருத்தியம் உணர்த்திவிடும் என்று சொல்வார்கள். 

கம்பனால் புரிந்தவை, தியாகையரால் தெளிந்தவை யாவுமே இந்த அபிநய ஜாலத்தில் வேறு கோணத்தைக் காட்டின. வைஜெயந்திமாலா காலத்தோடு போட்டிபோடவில்லை. உணர்வுகளின் உள்ளார்ந்த நுட்பங்களுடன் போட்டியிட்டார்.
ராமனுக்காய் பழம் பறிக்கும் தள்ளாத சபரியின் வைராக்கியம் புரிந்தது: மரணத் தருவாயில் இறகுகள் இழந்து, சீதையை ராவணன் கையிலிருந்து காப்பாற்ற முடியாமல் போன ஜடாயுவின் இயலாமையின் அவலம் புரிந்தது. பரதன், இலக்குவன், விபீஷணன், சீதை, அனுமன் ,சுக்ரீவன் என அனைவரின் பக்திபாவமும் விரல் அசைவுகளில், விழியிமைப்பில், நடைநடத்திய நாடகத்தில் பொங்கிவந்தன. அபாரம்.

நடனத்தின் போக்கில் பலமுறை மண்டியிட்டு அமர்ந்தார். எழுந்தார். சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். எண்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த நாட்டியத் தாரகையின் அசைவுகளில், கரணங்களில் முதிர்ச்சியும் அனுபவமும் மட்டுமே தெரிந்தது. மூப்பும் முடியாமையின் சிறு பிசிறுகூடத் தெரியவில்லை. பரதம் இவரை ஆட்கொண்டு விட்டது கண்கூடு. நாட்டிய நிகழ்ச்சி முடிந்து பேசியபோது, எனக்கு கணக்கு வைப்பது என்பதே மறந்துவிட்டது. வயதும் அந்த மறதியியோடு போயவிட்டது என்றார். அந்த வயதுகூட இவரை மறந்து போகட்டும்.

வைஜெயந்திமாலா நடிகையென நினைவுகொள்ளப் படுவதைவிட நாட்டிய கலைஞர் என்றே அறியப்பட விரும்புவார் எனத் தோன்றுகிறது. அவருடைய  சமகாலத்து நடிகைகள் கேரளாவிலிருந்தும், ஆந்திராவில் இருந்தும் வந்து, தமிழ்த் திரையுலகை தன் வசப்படுத்தியிருந்த போதும், தமிழகத்தை சேர்ந்த தமிழச்சியான வைஜெயந்திமாலா ஏனோ இங்கு அதிகம் படங்களில் நடிக்கவில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபன், இரும்புத்திரை, வாழ்க்கை, பெண், பார்த்திபன் கனவு , பாக்தாத் திருடன், தேன் நிலவு போன்ற சில படங்களில் மட்டுமே நடித்தார். ஆனால் ஹிந்தி திரையுலகில் பெரிய தாரகையாக உருவானார்.


நாகின், லட்கி, தேவதாஸ், மதுமதி, தேவதாஸ், சூரஜ், கங்காஜமுனா, சங்கம், அம்ரபாலி, சூரஜ், ஜூவல்தீப் என்று பல வெற்றிப்படங்களில் நடித்தார். பலமுறை பிலிம்பேர் அவார்ட் இவரைத் தேர்ந்தேடுத்தது.


கதாநாயகியாய் மட்டுமே 63 படங்களில் நடித்த அவர் வயதுஏற நடிப்புக்கு முழுக்குப் போட்டார். என்றுமே உடன் இருந்த நாட்டியத்தை இன்றுவரைத் தொடர்கிறார். நடுவில் அரசியலிலும் தடம்பதித்தார். விலகவும் செய்தார். அவர் வாழ்க்கை சரிதமாய் ‘பாண்டிங்’ (BONDING) எனும் புத்தகம் வெளியிட்டார்.

நான் முதன்முதலில் பொன்னியின் செல்வன் படித்தபோது ஏனோ, 'நந்தினி'யாய் என் மனதில் பதிந்த உருவம் வைஜெயந்திமாலா தான். அவ்வாறே,கடல்புறாவின் 'மஞ்சளழகி'யாய் இவரையே நினைவில் பதித்திருந்தேன். சற்றே சோகமும் திமிரும் கலந்த பார்வை. அசரடிக்கும் அழகு. பார்த்திபன் கனவு திரைப்படத்தில் மிக நளினமாய் அவரை காமெரா காட்டியது. வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி நடனத்தை எப்படி மறக்க இயலும்? ஹீராலால் மாஸ்டரின் உழைப்பு அதில் தெரியும். பத்மினியின் தாயாரும் வை.மாலாவின் தாயாரும் கொடுத்த நெருக்கடியில், நடனப் போட்டி வெற்றிதோல்வியின்றி சடுதியில் முடித்துவைக்கப் பட்டதாம்.

வஞ்சிக்கோட்டை வாலிபன் பற்றி சொல்லும்போது ஒரு இணைய விவாதத்தில் அ முத்துலிங்கம் சார் குறிப்பிட்டதாய் ஒரு சம்பவம்பற்றி படித்தது நினைவுக்கு வருகிறது. அந்தப் போட்டிநடனம் ஆடும் போது படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயம், ஒரு முறை பத்மினியின் நிழல் வைஜெயந்திமாலாவின் மேல் விழுந்ததாம்.  பத்மினி வருத்ததுடன் படபிடிப்பை நிறுத்தி 'என்னுடைய நிழல் உங்கள்மேலே விழுகிறது ' என்றார். உடனேயே வைஜயந்திமாலா குதர்க்கமாக ஆங்கிலத்தில் 'It's only a passing shadow’ என்றாராம் அந்த வார்த்தைகளின் கடுமையில் பத்மினி நெடுநேரம் அழுதபடி இருந்தாராம். ஆனாலும் இந்தம்மாவுக்கு வாய் கொஞ்சம் ஜாஸ்திதான்  என்று ஒருகாலத்தில் பத்மினியின் பரம விசிறியான நான் கூட ரொம்பவே வருத்தப் பட்டேன்.

வைஜெயந்தி மாலா சிறுமியாக இருந்தபோதே போப்பாண்டவர் முன் நடனமாடியவர். 1959ல் ஐக்கிய நாடுகள் சபையில் பரதநாட்டியம் ஆடிய முதல் பெண்மணி. அவர் நடனத்தில் மட்டுமல்ல, பில்லியர்ட்ஸ் விளையாட்டிலும் கைதேர்ந்தவர். கர்நாடக இசையை முறையாகப் பயின்றவர்.அதுவும், ராஜம் ஐயர், டி.கெ.பட்டம்மாள், அரியக்குடி ராமானுஜம் அய்யங்கார், கெ.வே.நாராயணசுவாமி போன்ற சங்கீத கலாநிதிகளிடம் கற்றவர்.

 
கலைஞர்களின் தனிப்பட்ட ஆசாபாசங்கள், கோபதாபங்கள், உணர்வுச்சிக்கல்களையும் மீறி மேலெழுவது அவர்களின் உன்னதக் கலையொன்றே. அதற்கான அவர்களின் உழைப்பும் அர்ப்பணிப்பும் அவர்களை நம் போற்றுதலுக்குரியவர்களாய் ஆக்குகின்றன. வைஜெயந்திமாலா அவர்கள் சந்தேகத்திற்க்கிடமில்லாமல் அத்தகு போற்றுதலுக்குரியவர் தான். 


சில காணொளிகள் கீழே:
1. பழகும் தமிழே (படம்:பார்த்திபன் கனவு)
2.தில் தடப் தடப் கெ...( படம்: மதுமதி... ஹிந்தி )

3.கண்ணும் கண்ணும் கலந்து (படம்:வஞ்சிக் கோட்டை வாலிபன்)நன்றி:
படங்கள்: கூகிள்
காணொளிகள்: யூ டியூப்