ஞாயிறு, ஏப்ரல் 19, 2015

அங்கிங்கெனாதபடி....

'இந்த கெடிலநதி மேம்பாலத்தின் மீதுதானே வெய்யிலில் நடந்து போனாள் ஜெயகாந்தன் கதையில் ஒரு பாட்டி' மனோகர் தன்னையே வினவிக் கொண்டான். 'ஐய்யமாரு வீட்டுப்பாட்டி.. வேகாத வெய்யிலில் நடந்து போகும், புள்ளை வீட்டுக்கு.. '

ஜட்காவண்டியின் பக்கப்பலகைக்கு தோதாக முதுகை சரி செய்து கொண்டான். குதிரை வண்டிக்காரன்பின் மனோகரும், அவனையடுத்து அவன் தாயார் துளசியம்மாவும் அமர்ந்திருந்தார்கள். வேறு சந்தர்ப்பமாயிருந்தால் 'ரெண்டுமூணு மைல்தூரத்துக்கு ஜட்கா கேக்குதா?' என்றுதான் அம்மா திட்டியிருப்பாள். ஆனால் இன்று ஏதும் சொல்லாமல் ஏறிக் கொண்டாள்.

அம்மா அப்படி தன் பேச்சை அங்கீகரித்து அமர்ந்தது மனோவுக்கு சந்தோஷமாய் இருந்தது. வெயிலால் இருக்கலாம், நாலுமாதமாய் சிமிட்டி பேக்டரியில் வேலை பார்க்கிறானே... அதற்கு அவள் தரும் கௌரவமாய் இருக்கலாம்.. எதோ ஒன்று. டவுன் ஹால் தாண்டி ஜட்கா சிறு ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்தது. கிழட்டுக்குதிரையும் கிழட்டு வண்டிக்காரனுமாய் நல்ல ஜோடிதான். 

'தேருபாக்க வந்திருக்கும் சித்திரப்பெண்ணே.. உன்னைத் திருடிக்கொண்டு போகட்டுமா பத்தினிக் பெண்ணே !' என்று லவுட்ஸ்பீகரில் புதுப்பிளேட்டு ஒன்று எங்கோ அலறிக் கொண்டிருந்தது.

'திரும்பும்போது என்னுடன் ஒரு பொக்கிஷமும் அல்லவா உடன் வரப்போகிறது ? எத்தனை நாள் இதற்காக காத்திருந்தேன் ? ' மனோவின் மனசு பரபரவென்று அல்லாடியது.

ஒருவேளை 'போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடே'ன்னு திரும்ப வேண்டியிருக்குமோ என்ற நினைவும் வந்தது.. அந்த எண்ணம்தந்த சின்ன திகிலில் மனோவுக்கு வயிறு குழைந்தது. 

"அம்மா! கொடுத்திடுவாங்க இல்லே?"

பின்னோடும் சாலையை வைத்தகண் வாங்காமல் வெறித்திருந்த துளசியம்மாளை மனோவின் கேள்வி கலைத்தது.

'என்ன கேட்டே?' என்றவளின் குரல் வழக்கத்தைமீறிய கத்தலாய் வெளிப்பட்டது. அதிகநேரம் பேசாதிருந்து உள்வாங்கின குரல், சட்டென பதில்சொல்ல விழைந்ததின் சமனின்மை அது.. ஒருமுறை செருமிக் கொண்டாள்.

'இல்லம்மா... சாமியையெல்லாம் தந்திடுவாங்க தானே'ன்னு....

"தராம போயிடமாட்டாங்க... தருமஞாயத்துக்கு பயந்தவங்க தாம்ப்பா.."

"எப்படிம்மா கேட்கப் போறே ? அதுவும் இவ்வளவு காலம் சென்னு?"

"அதத்தான் ரோசனை பண்ணிகிட்டு வரேன்... பார்ப்போம் கவலப்படாத மனோ"

கவலையில்லை தான்..அம்மா இருக்கும்போது கவலையில்லை தான். லேசுபட்டவளா? எல்லோருக்கும் எவ்வளவு செய்திருப்பாள்? மறுவார்த்தை அவளிடம் சொல்லமுடியுமா? ஒரு பார்வையில்,ஒரு ஹூங்காரத்தின் கார்வையில் அம்மா தன் கொடியை நாட்டி விடுவாள். 


தனக்கென்று எதுவும் வைத்துக்கொண்டவளுமில்லை.ஒன்று வேண்டுமென்று ஆசைப்பட்டவளுமில்லை.அதனால்தானோ என்னவோ  அவளுக்கு மரியாதை.  'மஹாராணி' என்று விளிக்கும் அப்பாவின் நையாண்டி நிஜம் தான். அவள் மஹாராணிதான். அந்தப் பாவிமனுசன் போனதிலிருந்துதான் கிரீடத்தை கழற்றிவிட்டு நடமாடுகிறாள். அப்பா போனபின்பு இந்த இரண்டு வருஷத்தில், இப்போதுதான் முதல்முறையாக திருச்சியைவிட்டு வெளியூர் வருகிறாள் ... அதுவும் மனோ கரையாய்க்கரைத்து அரித்ததினால் தானே?

மனோவுக்கு தன் பல்லுபோன ஆயாவின் குரல் நினைவுக்கு வந்தது. அவள் சொல்லித்தான் பத்துவயசு மனோவுக்குள் வந்துபுகுந்தது இந்த 'வீட்டுத் தெய்வம்' சங்கதி.

'எத்தன வருசத்து சாமிங்கடா பேராண்டி ! ஒரு முழத்துக்கு கொஞ்சம் மட்டம் ராஜேஸ்வரி தாயாரு. என்ன கண்ணு..என்ன மூக்கு... மூக்குத்தி வளையம்,தண்டை கொலுசு முத்துபதக்கமின்னு பொளிச்ச தாயாரு... தட்டுநிரம்ப சக்கரப் பொங்கல படையலாப் போட்டுட்டு,'சிரிக்கிறாடி.. சிரிக்கிறாடி'ன்னு பொங்கி அழுவாரு உன் தாத்தா.. அம்மனுக்கு தொணையா கூடவே மடில அமர்ந்த ஜானகியோடு ராமரு, தனியா லச்சுமணன், மண்டிபோட்டு உக்காந்தமேனிக்கி தனியா அனுமாரு, அஞ்சாரு சாளக்கராம கல்லுவ, மொழையா லிங்கமொண்ணு, குருபாதுகை, வலம்புரி சங்கு, பாதரசத்துல பண்ணுன சுப்ரமண்யரு... அய்யன் பூஜையை முடிச்சாவுட்டு நானு தான் தொடச்சி, வஸ்த்ரம் சாத்தி, பொட்டுவச்சு,புஸ்பம் போட்டு அதுகளை பொட்டியில வைப்பேன். வைக்கசொல்ல சுப்ரமண்யர எடுத்து கண்ணுல வச்சு ஒத்திக்குவேன். தண்ணுன்னு உசுரைத் தொடும் பெருமாளு"

"ஏன் ஆயா கடலூரு வைத்தியராண்டயே விட்டுட்டு வந்துட்டீங்க?"

அவள் சொன்ன சங்கடமும்,பின்னே நடந்த சங்கதியும் இதுதான்:

அப்போது மனோவின் தாத்தாவும் ஆயாவும் கடலூரில் வசித்தனர். உத்யோக நிமித்தம் திருச்சியில் மனோவின் அப்பா வசித்து வந்தபோதுதான், தாத்தாவின் கடலூர்வீடு ஒரு பகலில் தீப்பிடித்து முற்றுமாய் எரிந்து போனது. 
தீக்காயங்களுடன் உயிர்நீத்த தாத்தா, பிள்ளை வீட்டோடு வந்துவிட்ட ஆயா, தாத்தாவீட்டின் அண்டையில் வசித்த தாத்தாவின் சிநேகிதரான வைத்தியரோடே தங்கிப்போன சாமிப்பொட்டி..... 

எரியும்வீட்டில் பாய்ந்து அந்தப்பெட்டியை மீட்டுவந்தபோதுதான் தாத்தா தீக்காயங்கள் பட்டாராம். இந்தக் களேபரத்தில் அந்தப் பெட்டியை மீண்டும் கொண்டுவரும் முயற்சி ஏனோ எடுக்கப்படவில்லை. சாமிக்கு நேரமில்லாத அப்பா, தாத்தாபோய் ஓரிரு வருடங்களே வாழ்ந்த ஆயா..உருண்டோடும் காலம்.

இத்தனைக்கும் ஆயா காரியத்துக்குவந்த வைத்தியர் சாமிப்பெட்டியை ஒருநடை கடலூருக்கு வந்து எடுத்து செல்லுமாறு அப்பாவிடம் சொன்னதும் ,அதுபற்றி அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டதும் மனோவுக்கு நிழலாடும் ஞாபகங்கள். அவ்வப்போது அவன் அம்மாவுக்கு நினைவுறுத்துவதும், அந்த நேரம்மட்டுமே அதுபற்றிப் பேசும் பெற்றோருமாகத் தான் வருடங்கள் நகர்ந்து கொண்டே இருந்தன.

அண்ணனுக்கும் அப்பா போன்றே சாமி விஷயத்தில் ஈடுபாடு இல்லை. ஆனால் மனோ அப்படியா ? நாள் தவறாமல் பக்கத்திலிருக்கும் பிள்ளையார் கோவில், வெள்ளிக்கிழமை வெக்காளியம்மன் கோவில், ஞாயிறு சமயபுரமென்று பெட்டி சாமிகளை மானசீகமாய்க் கும்பிட்டுக் கொண்டிருந்தான். இருபத்துமூணு வயசு இளைஞன் மனோவுக்கு அவன் பாட்டன் ரத்தம் குங்கும வர்ணத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நாலுமாசமாய் டால்மியாபுரத்தில் வாசம்.... அண்ணன் தான் வந்து வீடுபார்த்து வச்சு,பக்கெட்டு, வாருகோல்லேருந்து முச்சூடும் வாங்கி தந்தார். 

நேற்று மனோ திருச்சி வீட்டிற்கு வந்தபோது, அம்மாவிடம் சாமிபொட்டி பேச்செடுத்தான். அடுத்த இரண்டுநாளும் தனக்கு விடுமுறையாதலால், கடலூருக்கு போய் வந்துவிடலாம் என்றபோது 'சரி 'என்றவளை நம்பமுடியாமல் குதூகுலத்துடன் கட்டிக்கொண்டான். அன்றிரவே ரயில்பிடித்து ஒருவழியாய் கடலூருக்கும் பகலுக்கு வந்தாயிற்று. இன்னும் கொஞ்ச நேரம் தான்... 

"இந்த வீடுதாம்பா! நிறுத்து! " என்ற அம்மாவின் குரல் மனோவை உலுக்கியது. வரும்போது வாங்கிவந்த மாம்பழங்களும்,பூவும் இருந்த பையை கையிலெடுத்துக் கொண்டான்.

வாசலிலிருந்து கூப்பிட்டான். ஆளோடியில் நிழலாடியது.. 'யாரு?'
'அம்பிகே! தாயே ! என் குரல் உனக்கு கேட்குதா ?'என்று உள்ளுக்குள் அரற்றிய மனோவுக்கு இருப்புக்கொள்ளவில்லை.


"நான் தான் அத்தே ! பட்டாளத்தார் மருமக.. துளசி.."

"அடடா..வா கண்ணு..எம்மாம் வருஷமாச்சு.சொகமாயிருக்கியாஎன்னாடி இது? நீயும் வாரிக் கொடுத்துட்டையா?" என்று வைத்தியர் சம்சாரம் கண்கலங்கினாள்.

படமாய்த் தொங்கும் வைத்தியரைப் பார்த்தபடி,தலையை மட்டும் ஆட்டினாள்  துளசியம்மா . பழமிருந்த பையை கையில் கொடுத்தாள்.

'காப்பித்தண்ணி வைக்கிறேன் இரு' என எழுந்தவளைக் கையமர்த்தினாள் துளசியம்மா.

"நானு விரதம் அத்தே! பச்சதண்ணி பல்லுலபடாது. எம்மவனுக்கு காபிடீன்னு பழக்கமில்லே"

"சரி... என்ன விஷயமா இம்மாந்தொலவு வந்தே கண்ணு... நீ வாசலையடைச்சு தேராட்டம் கோலம் போடுவையே... இனி எப்படி கண்ணு பார்ப்பேனோ "

"அத்தே ! நேத்திக்கு விடிகாலம்புற சொப்பனம் அத்தே ! எங்கவீட்டுசாமி ராஜேஸ்வரி.... அதான் அத்தே உங்களாண்ட கொடுத்து வச்சிருக்கமே... அது மானத்துக்கும் மண்ணுக்குமா நிக்குது... எனக்கு ஒரு வாய் பானகத்துக்கு வழியுண்டாடி... எவ்வளவு நாளும் நானு பொட்டிக்குள்ளே மக்கி மழுங்குறது? பீடம் வச்சு விளக்கேத்தடி.. நெய்யிலே குளிப்பாட்டி சூடம் காட்டடி... வீட்டு சாமியையா தள்ளி வைக்குறேன்னு சூலத்தை ஆட்டிஆட்டி கலங்கடிச்சுபிட்டா அத்தே... அதான் கொண்டு போயிருவோமின்னு..... வந்தேன் ."

வைத்தியர் சம்சாரம் கன்னத்தில் போட்டுக் கொண்டாள் . "அம்மாடி! நானு உங்க சாமியை குளிப்பாட்டுறதில்லைன்னாலும், நாளுகிழமை வந்தா பெட்டிமேல பூப்போட்டு கும்பிடுவேன். சாமில்லாம் இன்னிக்கிருக்கட்டும்... நாளை பொங்கல் வச்சு படைச்சி அம்பாள அனுப்பி வைக்கிறேனே தங்கம் உன்னோடே.. இவ்வளவு காலம் இங்க இருந்துட்டா இல்லையா?"

"நீங்க சொல்லுறது சரி அத்தே! ஆனா பாருங்க... நேத்து விடிகாலம்புற அவ அடிச்ச கூத்துக்கப்புறம் பொட்டு தண்ணி குடிக்கல்லே அத்தே ! கிளம்புறேன்.. கொஞ்சம் உங்க கையால சூடம்காட்டிட்டு, எனக்கு ஆசியோட அம்பாளைக் குடுங்க அத்தே!"

அம்மா தட்டிக்கொண்டு எழுந்தாள். அவ்வளவு தீவிரம் அவள் பார்வையில்.. மனோ வாயடைத்து நின்றான்.

அம்மாவும் வைத்தியர் சம்சாரமும் சமையல்கட்டு பக்கம் சென்றார்கள். மணியடிக்கும் ஓசை கேட்டது. சொல்ல இயலாத ஆனந்தமும் அமைதியும் மனோவை சூழ்ந்தது. அந்த அம்மாளை மனோவும் அம்மாவும் விழுந்து நமஸ்கரித்தார்கள். கண்கள்கசிய "ஒரு கொறையில்லாம பெருங்குடியா வாழணும்" என்றாள். அவள் தந்த ஒரு கோணிப்பைக்குள் சாமிபொட்டியை வைத்து சணலால் அதன்வாய் கட்டப்பட்டிருந்தது. 

வாசலில் காத்திருந்த ஜட்காவண்டியில் ஏறிக்கொண்டார்கள். மனோவின் மடியில் கோணிப்பை இருந்தது. அதன்மேல் ஒரு கையும், அம்மாவின் தோள் மேல் ஒரு கையுமாக மனோ மிதந்தான். பஸ்பிடித்து வந்தார்கள். அம்மாவின் கனவைப்பற்றி மனோவும் கேட்கவில்லை.. அவளும் சொல்லவில்லை. 

மறுநாள் காலை அந்த கோணியைக் கண்ட அண்ணி பொறிந்தாள். "இருக்கிற அடைப்பாசாரம் காணாதுன்னு இதையும் வாரிகிட்டு வந்தாச்சா?" என்றாள்.

ஹாலில் ஒருமூலையில் கம்பளம் விரித்து,அந்தப் பெட்டியைத்திறந்து விக்கிரகங்களை வெளியே எடுத்தபோது கரப்பான் பூச்சிகள் நெளிந்து ஓடின. விக்கிரகங்கள் பச்சைப்பூத்து தகரமாய்த் தோன்றியது. அவற்றின் கைகால் இடுக்குகளில் கரப்புமுட்டைகள் பதிந்து கிடந்தன.

' ஐயோ..ஐயோ' என்று அரற்றிய அண்ணியிடம் மெல்லச் சொன்னான் மனோ.. "கவலைப்படாதீங்க அண்ணி! இவற்றை இங்கே அடைக்கமாட்டேன். என்னோடு எடுத்துப் போய் விடுகிறேன். சரியா?"

மனோ கடைத்தெருவுக்குப் போனான். பூஜைதிரவியங்கள், பூ, பழம், வெற்றிலை, வஸ்திரம் சார்ந்த நியூஸ்டைல் டெய்லர்ஸிலிருந்து வெட்டிக் கழித்த புதுத்துணிகளின் மீதங்கள் என வாங்கிவந்தான். ஐயரிடமும் அபிஷேகம், பூஜைக்கு சொல்லி வந்தான்.

அரப்புத்தூள்,புளி,எலுமிச்சை விபூதி கொண்டு விக்ரகங்களை உள்ளங்கைகள் தோலுரியத் தேய்த்தான். பச்சை நெகிழ்ந்து. பளபளப்பேறியது. பஞ்சலோகத்தின் தெய்வீக்க்கலப்பு துலங்கியது. மதியத்தூக்கம் கலைந்து அம்மாவும்அண்ணியும் கிணற்றடிக்கு வந்தபோதும் அவற்றுக்கு மெருகேற்றியபடி இருந்தான். அவனே தாமிரத்தாலும் செம்பினாலும் வார்த்த சிலையைப்போலே துளசியம்மாவுக்குத் தோன்றியது.தோய்க்கும் கல்லின்மீது ஒவ்வொன்றாய் வைத்த விக்கிரகங்கள் தகதகத்தன. 

"ஆ.. ஆ.. கைப்பட்டா கண்ணாடி தான் ! ஒரே முங்கில் அத்தனை மண்ணையும் எடுக்கணுமா ? கொஞ்சம் கொஞ்சமாக செய்யக்கூடாதோ ? "என்றாள். அடைப்பாசாரம் என்று முன்பு சொன்ன அண்ணியோ வைத்தகண் வாங்காது பார்க்க மட்டும் செய்தாள். 

இரவில் அவனுக்கு ஜுரமடித்ததோ இல்லை வேக்காட்டில் அடைந்து கிடந்த தெய்வங்களின் தொந்தமோ... மனோவுக்கு உடம்பு கதகதவென்றிருந்தது. 
'ஊர் திரும்பியவுடன் சாமியைவைக்க நாலுதட்டு வைத்த அலமாரி ஒன்று செய்யவேண்டும். தினம் ரெண்டுமுழம் பூவுக்கு,பூக்காரியிடம் வாடிக்கை சொல்லி வைக்க வேண்டும். அம்மாவும் என்னோடு சிலநாள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அவளும் இந்த விக்கிரகங்கள் போல்அடைந்துதான் கிடக்கிறாளோ? அம்மாவை அனுப்ப அண்ணா ஒத்துக் கொள்வாரா?'

இந்த எண்ணவோட்டம் முடியுமுன்னமே ஒரு குவளை பாலுடன் அம்மா அவன் பக்கத்தில்வந்து அமர்ந்தாள். "அம்மா ! ஒண்ணு சொல்லட்டுமா ?"

"சொல்லேன்... இதைக்குடிச்சுகிட்டே..."

"நீயும் என்னோடு வந்து இரேன்... "

அம்மா சிரித்தாள்.... "வந்துட்டா போச்சு. சரி ....படு. காலை வேகமா எழுந்துடணும். அயிரு வந்துடுவாரு. உள்அலமாரிலே புதுவேட்டி இரண்டு ஜதை இருக்கு . அயிருக்கு கொடுக்கணும். ஞாபகப்படுத்து."


"ஒரு ஜதை கொடுத்தா போதாதோ ?"

"ஒண்ணு உங்கள் பாட்டன் நெனவா.... ஒண்ணு கடலூர் வைத்தியர் நெனவா..."

"சரிம்மா..". திரும்பிப் படுத்த மனோவின் கண்களில் நீர் வழிந்தது. 
'என்ன ஒரு மனசு இவளுக்கு?'

பூஜை முடிந்தது. பழங்கள்,தட்சணை ,வேட்டி வைத்த தாம்பாளத்தை அண்ணனிடம் கொடுத்து அய்யரிடம் தரச் சொன்னான் மனோ. அய்யரின் சந்தோஷம் அவர் குரலில் தெரிந்தது.

"என்னவொரு சாட்சாத்காரம்?! இப்படி சைதன்யம் பொங்கும் விக்ரகங்களை ஆராதிக்க ரொம்ப புண்ணியம் பண்ணியிருக்கேள். தினமும் அன்னமும் பருப்பும் ஒரு உத்ரணி நெய் விட்டு மஹாநைவேத்தியம் பண்ணுங்கோ.. நிறைய ஸ்வாமி இருக்கோன்னோ..."

அண்ணி இடைப்புகுந்தாள்.

"அய்யிரே ! வழிவழியாய் வர்ற இந்த சுவாமியெல்லாம் வீட்டுமூத்தவர் கிட்டே தானே இருக்கணும்? என்ன நான் சொல்றது?", மேலும் தொடர்ந்தாள்...." எங்களுக்கென்ன தெரியும் ... பௌர்ணமியோ.. அம்மாவாசையோ நீங்களே வந்து அபிசேகம் பண்ணி வச்சுடறது "

மனோவிற்கு அண்ணியின் கேள்விதந்த திகைப்பு அடங்குமுன் அய்யர் அவள் கூற்றை ஆமோதித்தார்.

"நீங்க சொல்றது ரொம்ப சரி! மூத்தவர் ஆராதிக்கறது தான் சம்பிரதாயம்.. அதுக்கென்ன? நானே வந்து பண்ணி வச்சுடறேன்"

"அதை அம்மாகிட்ட சொல்லுங்க" என்று துளசியம்மாவைக் கைகாட்டினாள்.

மீண்டும் 'சம்பிரதாயம் 'என்று ஆரம்பித்த அய்யரை இடைமறித்து ,
"முறையோ எதுவோ, சாமில்லாம் இங்கேயே இருக்கட்டும். என் பிள்ளைகளுக்குள்ளே எந்தபேதமும் கிடையாது அய்யரே. எல்லா ஸ்வாமியும் செட்டா இங்கயே இருக்கும்"

"எனக்குத் தெரியாதா? உங்கள் பிள்ளைகளை எனக்குத் தெரியாதா? உத்தரவு வாங்கிக்கிறேன் அப்போ..."

மனோ விக்கித்து நின்றான். ஏதும் சொல்லத்தோன்றவில்லை... 'அம்மாவுக்கு என்ன ஆச்சு? தன்னுடைய ஒரே ஆசையையும் கூட புரிந்து கொள்ளாதவளா என்ன? இத்தனை வருஷமாய் மனசில்உருப்போட்டதென்ன ?சாமியையெல்லாம் எடுத்துவர தார்க்கோல் போட்டுக் கொண்டேயிருந்ததென்ன?'

'போகட்டும்... இவனுக்கு அம்பாள், உனக்கு ராமாதிகள்,இவனுக்கு பிள்ளையார்,உனக்கு லிங்கம்னு சொல்லிருந்தாளானா கூட அதுல ஒரு நியாயம் உண்டு. இப்படியா ? அண்ணாவுக்குத்தான் பக்தி, பஜனைன்னு உண்டா..'. மனோவுக்கு மனசு ஆறவே இல்லை.

சாப்பிட உட்கார்ந்தபோது கூட பிரமை பிடித்தது போலத்தான் இருந்தான்.


"இலையைப் பார்த்து சாப்புடுறா"

"சரிண்ணா "

துளசியம்மா மனோவுடன் கொஞ்சநாள் இருந்து வருவதாய் சொன்னபோது 'அதுக்கென்னம்மா ..இருந்துட்டுதான் வாயேன் ' என்றான் மூத்தவன்.

காலை முதல்பஸ்ஸுக்கு டால்மியாபுரம் கிளம்பினார்கள் மனோவும் துளசியம்மாவும் .

கிளம்புமுன் ஏதோ பால்கணக்கு விவரத்தை அண்ணியிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் துளசியம்மா.

'கிளம்புறோமண்ணே'

"பேங்க் வேலைக்கு, பெரிய கம்பனிக்கெல்லாம் அப்ளிகேஷன் போடு. அந்த எக்ஸாமுக்கெல்லாம் படி. சாமி பூதமுன்னு திரிஞ்சிகிட்டிருக்காதே என்ன?"

"சரிண்ணா! சாமியையும், பூதத்தையும் நீங்களே பார்த்துகிடுங்க. போயி கடுதாசி போடறேனண்ணா."

அண்ணன் ஒருமுறை புருவம் உயர்த்தி பின்பு சிரித்தார். "சரிம்மா.. வாரக்கடைசியிலே நானு ஒருவாட்டி வரேன் "

"சரிப்பா... டேய் மனோ! கட்டி சுமந்துகிட்டு வந்தியே சாமியையெல்லாம் ....உள்ளே போய் ஒரு கும்பிடு போட்டுட்டு வா "


ஒரு நொடி தயக்கத்துக்குப்பின் வேகமாக உள்ளே போனான். 

'அம்பிகே! திரிபுரசுந்தரி ! உன்னைப்பார்க்க அப்பப்ப வருவேன். மகாநிவேத்தியம்னு அய்யர் சொன்னாரே.... அது இங்கே கிடைக்குமோ என்னவோ... என் வசம் தினம்தினம் கிடைக்கும் தாயே.. உனக்கும் எனக்கும் உள்ள தூரம் உன் கவனத்துக்கு நாலெட்டு தானே? வந்து ஏத்துக்கோ' என்றுப் பிரார்த்தித்துக் கொண்டான்.

மனோவின் கண்கள் ஒவ்வொரு விக்கிரகமாய் அள்ளி உள்ளே தக்கவைத்துக் கொண்டது. ஸ்வாமிக்கெல்லாம் அய்யர் திருத்தமாய்த்தான் உடுத்தி, அலங்காரம் செய்து வரிசையாய் அடுக்கியிருக்கிறார். பார்த்துக் கொண்டே வந்த மனோவின் கண்கள் ஒருமுறை சலனித்தது.

எல்லா தெய்வமும் நேரே பார்த்திருக்க, லட்சுமணஸ்வாமி மட்டும் லேசாய் ஒரு பக்கமாக திரும்பியிருந்தார்.

திங்கள், ஏப்ரல் 13, 2015

தவிப்பும் காத்திருப்பும்...

தவிப்பு

என் பால்கனியில்
வளைந்து வளைந்து பறக்கிறது 
ஒரு பட்டாம்பூச்சி.

வண்ணங்கள் வாய்க்காத
ஏழைப்பட்டாம்பூச்சி

ஏதோ சேதி சொல்லவந்தாற்போல்
ஏனோ பதைபதைக்கிறாற்போல்
எங்கோ பாதைதவறி வந்தாற்போல்
எதற்கோ எதிர்ப்பு சொல்வது போல்

கருமையும் வெறும்பழுப்புமாய்
படபடத்து மேலும்கீழுமாய்த் தவிக்கிறது .

துணையைத் தேடுகிறதா? இல்லை
பறிகொடுத்துவிட்டதா?

உள்ளங்கைக்குள் வந்து உட்காரேன்.
சேர்ந்தே தான் எதிர்கொள்வோமே?

உதடுகளுக்குள் சொல்லிக்கொண்ட தருணம்,
பால்கனியை விட்டு பறந்துபோனது.

எக்கிஎக்கி பார்க்கிறேன்.
புலப்படவேயில்லை.

எங்கோ நீ
சுகப்பட்டால் சரிதான்.


காத்திருப்பு

நானும் பதினைந்து நிமிடமாய்
           பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த இளம்பெண் தன் குழந்தையிடம்,
 என்னென்னவோ பேசுகிறாள்....

வாயோடு சேர்ந்து பேசுகிறது,
அவள் கண்ணும் மூக்கும்.

தாயின் முகம்விட்டு கண்கள் அகலாமல்,
கைகொட்டி சிரித்தபடி அந்தக் கருப்புக்குழந்தை.

புகைவண்டி வந்துசேர இன்னமும் 
அரைமணி இருக்கிறது.

கூடவே ஒரு குழந்தை இருந்தால்,
பொழுதுபோகும்.

நானே ஒரு குழந்தையாய் இருந்தாலும் கூட.

வியாழன், ஏப்ரல் 09, 2015

ஜெயகாந்தன்


மானிடர் மரணம் ஒருமுறை,ஒரேமுறை மட்டும் நேர்வதில்லை. தன்னை செதுக்கியவர்கள், தன்னில் ஒரு தவிர்க்கவியலாத ஆளுமையாய்ப் பொதிந்தவர்கள் ஒவ்வொருவராய் மரணம் எய்தும் தோறும் தவணைகளில் தானும் சிறுகச்சிறுக மரணிக்கிறார்கள். அந்த சிறு மரணத்தில் இழக்கும் வாழ்வின் ஒரு பகுதி, ஈடு செய்யப்படாமலேயே, ஒரு பெருநினைவின் வடுவாய் எஞ்சிப் போகிறது.

எனக்கும் அந்த மரணம் ... தவணை மரணமாய் நேற்றிரவு நிகழ்ந்தது. ஜே.கே எனும் மாபெரும் ஆளுமை மறைந்ததை எப்படி சொல்ல?? எனக்கு அவர் வெறும் இலக்கியவாதி மட்டும் தானா ? எழுத்தால் வாழ்க்கையை உபதேசித்த குரு மட்டும் தானா? இல்லை.. நானிங்கே இரங்கல் செய்தி எழுதப் போவதில்லை.... அவரின் படைப்புகளையும் திரை,இலக்கிய மற்றும் அரசியல் முயற்சிகளைப் பட்டியலிடப்போவதில்லை... அவையெல்லாம் எல்லோர்க்கும் பெய்தபோது எனக்கும் பெய்தமழை. அவருடன் எனக்கே எனக்கான சில அனுபவங்கள்...... சிறுகுருவி சேர்ப்பது போல் ஞாபகங்களின் கூரைகளில் சேமித்துவைத்த நிகழ்வுகள் . அவற்றில் இங்கே ஓரிரண்டு.....

எனக்கோர் அசட்டுப் பெருமையுண்டு. நானும் அவர் பிறந்த அதே கடலூரில், அதே மஞ்சக்குப்பம் பகுதியில் , அதே தெருவில் பிறந்தவன். கம்பன் தெரு கட்டுத்தறி.. கட்டுத்தறியென்ற நினைப்பொன்று போதாதோ காலந்தள்ள?? இந்த அசட்டுப்பெருமை நிஜப்பெருமையாய் ஏற்றம் பெற்ற தருணம்கூட வாய்த்தது.


எண்பத்திரண்டாம் வருடம்... ஒரு இரவுப்பொழுது...சென்னை அண்ணாநகர் மேற்கு பஸ்டிப்போவிலிருந்து தி.நகர் செல்லும் கடைசி பேருந்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருக்கிறேன். டிப்போவிலிருந்து கிளம்பி சற்றே ஓடிய பஸ், யாரோ கைகாட்டி நிறுத்த,கிறீச்சிட்டு நின்றது .
பின்புறம் அந்தப்பயணி ஏறியவுடன் வண்டி குலுங்கிப்புறப்பட்டது. அந்தக்குலுங்கலில் தள்ளாடியவரை தாங்கிச்சென்று பிடித்தேன். எனக்கருகேயே அமரவைத்தேன்.
அவர்குடித்திருந்ததை நாசி உணருமுன்னரே, அவர் என்னுடைய ஜே.கே என்பதை மனசு உணர்ந்து கொண்டது.

'தேங்க்ஸ்' என்றார் அரைக்கண்களால் ஏறிட்டபடி.

'நி..நீங்க.. ஜே.கே தானே சார்..'

' என்னைத் தெரியுமா?'

' உங்களைத்தெரியாமல் இருக்குமா சார்?.. நான் எட்டுவயசு பையனாய் இருக்கும் போதே உங்களிடம் ஊர்பட்ட அரட்டை அடிச்சிருக்கிறேன் சார்'

'மேலே சொல்லு' என்பதுபோல் அவர் தலையாடியது.
கண்களில் போதையை கட்டுக்குள் அடைத்த வெறி.

கடலூர் பாஷ்யம் ரெட்டியார் தெரு... அங்கு வசித்த அவருடைய மாமா , அடுத்தவீட்டுப் பையனாய் அவர்வீட்டிலேயே ஆடித்திரிந்த நான்.....
அந்தக் கம்யூனிஸ்ட் மாமா வீட்டிற்கு அவர் வருகைதந்த தருணங்கள் என பரபரப்பாய் நான் பட்டியலிட்டது...

'நீ.. நீங்க ஐயரா,நாயுடுவா ?'

ஜாதியையா பேசுகிறது என் ஆளுமை?!

'கம்யூனிஸ்ட்டா இல்லைன்னு ஆயிட்டா ஜாதி வரணம்லாம் வந்துடுச்சி பாருங்க சார்!'

அரைக்கண் கிறக்கத்திலேயே சிரித்தார். 'அப்படியில்லைப்பா... யார்வீடு என்று ஞாபகம் கொள்ள ஐயர் ,ரெட்டியார் என்று கவனம் வைக்கிறது.
அது ஒரு வசதிக்காகத்தான்' சமாதானமாய் சொன்னார்.
 'அவரைத் தெரியுமா இவரைத்தெரியுமா 'என்று சில வினவல்கள்.
இல்லை என்ற என் உதட்டுப் பிதுக்கலை அவர் பார்க்கவே இல்லை.
கண்களை மூடியபடி இருந்தார். 
கிறக்கமென்றுதான் அவரையே பார்த்தபடி இருந்தேன்.

' கடலூர் தெருப்பெயர்கள் வித்தியாசமானவை இல்லையா?' என்று கேட்டார். அது கிறக்கமல்ல, நினைவின் ஆழத்தில் தேடல் என்று புரிந்தது. 'கவரைத்தெரு.... தெற்கு கவரைத்தெரு'

'ஆக்கர் சந்து' என்று தொடர்ந்தேன் அவர் கேட்காமலேயே.

'சபாஷ். ஞாபகத்தில் இருக்கு. உப்பலவாடி....

கோமுட்டிசந்து, நேப்பியர் ரோடு, ஞான ஒளிவுத்தெரு, கொத்தவால் சாவடித்தெரு,வண்ணாங்குட்டை.......
இருவரும் பல தெரு பெயர்களை சிறுவர்களின் ஊக்கத்துடன்
நினைவுகூர்ந்த அந்த சில நிமிடங்கள்.... 
மீண்டும் அவர் கண்கள் மூடிக்கொண்டு விட்டன . 
அவராக கண்விழிக்கட்டும் என்று காத்திருந்தேன். 
நான் இறங்கவேண்டிய நிறுத்தமோ காத்திராமல் சமீபித்தது. 
அவரைத் தொட்டு எழுப்பி விடைபெற மனம் ஒப்பவில்லை. 
நடத்துனரிடம் ஜே.கே வை சுட்டி ஜாடைகாட்டினேன். 
'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்ற நடத்துனரிடன் அபிநயம் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது.

நான் இறங்கிய நிறுத்தத்தில் சில நொடிகளே நின்ற பஸ் கிளம்பும் வரை அவரையே பார்த்திருந்தேன்.
பஸ் போனபின்னும் மனசு அவரையே பார்த்துக் கொண்டிருந்தது ரொம்ப நேரம்.

பின்னர் அவரை சென்று சந்திக்கும் வாய்ப்புகள் சில நேர்ந்தும், ஏனோ அது வாய்க்கவில்லை. எழுத்தாளனுக்கு கம்பீரமும், சுயகௌரவமும் இயல்பாக வேண்டும் என்பது போன்றதொரு வாழ்க்கை அவருடையது. 
அவரிடம் அகம்பாவம் கூட ஒரு அலங்காரமாகி நின்றது . 
சீற்றம் கூட சிங்காரமாகி சிரித்தது.... சிறந்த சிந்தனையாளர். 
எண்ணங்களை கோர்வையாய் எழுத்தில் எப்படி செதுக்கினாரோ,அது போன்றே மேடைப்பேச்சிலும் சண்டமாருதமாய் பொழியும் ஞானபானு அவர். 

ஏதோ உந்துதலில் நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் எழுதிய 'ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர' நாவலைப் படித்தேன்.
அவர் எழுத்துக்கள் அனைத்தும் மீண்டும்மீண்டும் படித்தது தான். 
இந்தமுறை 'ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர' புதிய தாக்கங்களைக் தந்தது.

அந்த வாசிப்பின் நீட்சியாக ஒரு சிறுகதை எழுத ஆரம்பித்தேன் .
 'இந்த கெடில நதி மேம் பாலத்தின் மீதுதானே வெய்யிலில்நடந்து போனாள் ஜெயகாந்தன் படைப்பில் ஒரு பாட்டி' என்று ஒரே வரி மட்டும் தொடங்கி அப்படியே நிற்கிறது.

அந்தக் கதையை முடிப்பேன் என்று தோன்றவில்லை.


(புகைப்படங்களுக்கு நன்றி Google)வெள்ளி, ஏப்ரல் 03, 2015

பிள்ளை விளையாட்டுஅர்த்தம் நூற்று அர்த்தம் நூற்று
நமக்கிடையே ஆயிரம் வாக்கியங்கள்.

கரும்பிழி சக்கைகள் காய்ந்து கிடக்கின்றன
ஈக்களுக்கேதுமினி மிச்சமின்றி.

புதிதாய்சொல்ல உனக்கோ ஒன்றுமேயில்லை,
கேட்பதற்கும்தான்.

சலிப்பு சிணுங்கலாய், பெருங்குரலாய், ஓலமாய்
பரிணமித்தே ஓய்ந்தநிஜம்.

மாறன்அம்புகள் எரியீட்டிகளாய் மாறி
போர்முடித்த களம்.

மிஞ்சிநிற்கும் மௌனமோ எதிரொலிக்கிறது,
பெரும்மௌனமாய்.

ஒரேகோட்டில் அருகருகே நிற்கும் சாத்தியங்கள்
அருகித்தான் போய்விட்டன.

ஊருக்கென்று ஒட்டாமல் உறவாட்டம்
ஊடல்மீறி உலைக்களனாய் கனன்றுபுகையும்.

சிறுசிறு விலகல்களில் முன்னும்பின்னுமாய்
மாறிப்போன கோணங்கள்.

அட்டையில் கட்டிய தடுப்பு வேலிகள்
கற்சுவராகும் காலப்பிரமாணம்.

நைந்திடா தெஞ்சிய ஓரிருபிரிகளில்
ஊசலாடும் நம் தாம்பத்தியம்.

மீண்டும் யாவையும் கலைத்துவிட்டு
புதிதாய் ஆட்டம் துவக்கவேணும்.

தனித்தனியாயென அனுபவம் சொல்லும்
ஒன்றாக ஆடவோ உள்ளம்கோரும்.