வெள்ளி, அக்டோபர் 29, 2010

பிரிவுபசாரக் கூட்டம்இன்றுவோர் பிரிவுபசாரக் கூட்டம் ...

கூடிக்கூடி இரைதேடிய கோழிக்கூட்டம்,
இன்றோர் சேவலுக்கு விடை கொடுக்கும்.

பகிர்ந்துண்ட நாட்களும்,பகைகொண்ட நாட்களும்,
இன்று ஞானஸ்நானம் பெறப் போகின்றன.

இனிமேல் நினைவின் வேலிதாண்டியே
     நிற்கப் போகும் சேவலுக்கான ஒப்பனைப் பாசத்தில்,
நட்புகள் புனிதப்படுத்தப் படுகின்றன.
களிம்பேறி விட்ட உறவுகளுக்கு,
தற்காலிகமாய்....
முலாம் பூசப் போகிறார்கள்.

காவியேறிய பற்களின் சிரிப்புக்கும்,
கரிமண்டிய மனங்களின் எண்ணங்களுக்கும்,
இன்று...
இன்று ஒரு நாள் மட்டும்,
சம்பந்தம் இருக்கப் போவதில்லை!
உதடுகள் மட்டுமே,
உறவாடப் போகின்றன..
உரையாடப் போகின்றன.  

பிரிவை எண்ணியே,
விடைபெறும் சேவல் வருத்தப்படும்
இவ்விடத்து இரையில் உள்ள அனுகூலங்களும்,
போகுமிடத்து நிலைகுறித்த வியாகூலங்களும்,
அதன் குரலைக் கம்மச் செய்து விடும்


பழகிப்போன வார்த்தைகள்....
புளித்துப்போன பாராட்டுக்கள்...
செருமல்கள்.. கனைப்புகள்
எல்லாமே,
பூமாலை மணத்தோடு,
இனிப்புகார வகையோடு..
முற்றுப் பெற்று விடும்..

இப்போது இங்கே வழியும் பாசஅருவி,
நாளை விடியும் போது....
சுவடற்று மறைந்து விடும்...

என்றோ ஒரு நாள் பிரியப் போகின்ற கோழிகளும்,
மீண்டும்,
கூடிக் கூடி இரை தேடும்.
அவை பகிர்ந்துண்ணும்... பகை கொள்ளும்
பழைய சேவலோ ..
நினைவின் வேலிகளுக்கப்பால்...

இந்த பிரிவு
வெறும் உபசாரத்துக்காகத் தான்.(என் கவிதைப் பரணிலிருந்து....)

சனி, அக்டோபர் 23, 2010

இன்றைய பூக்கள் உனக்காகத்தான் பூத்தனஇன்றைய பூக்கள்

வா !

இன்றைய பூக்கள் உனக்காகத்தான் பூத்தன.
இரவெல்லாம் தூங்காமல் காத்திருந்து
                  உனக்காகத்தான் பூத்தன.
பார்வையில் பாரதம் படிப்பவளே.
வா !
உன்னெஞ்சில் நடக்கும் குருக்ஷேத்திரங்களை
எனக்கும் படித்துக் காட்டு......

என் பேச்சில் குளிர்ந்து போகின்றவளே !
என் மூச்சிலோ எரிந்து விடுவாய் !
மீண்டும் உன்னை உயிர்ப்பிக்க
          எனக்குத் தான் தெரியும்.
நிலையாத இந்த பூமியில்,
நீயும் நானும் சாஸ்வதம்.

வா!
உன்னை இதயத்தில் இருந்து எறிந்துவிட
                யத்தனித்த போதேல்லாம்,
நான் எறிய முடிந்தது
         என் இதயத்தைத் தான் !
மடிதனில் முகம் புதைத்தால் ..
மறுபிறவிகள் கண்ணில் தெரியும்.

எனக்கும் உனக்குமில்லாதது யாருக்குத் தான்?

வா !
இன்றைய பூக்கள் உனக்காகத்தான் பூத்தன
நான்கூட...
உனக்காகத் தான் பிறந்தேன்.என் மகன்

மலரைப் படைத்த கையோடு
உன்னையும் வடித்து
மானுடம் கண்டிடா இன்பத்தை
நீயாக அமைத்த இறைவன்,
என்னிடம் ஒரு வார்த்தை
சொல்லியிருந்தால்...
என் சபலமும் இச்சையும்
உன்னை உருவாக்க
ஒப்பியிருப்பேனா??

தவிப்பு

இவ்விருண்ட காட்டினில்
நான் தேடியலைவது உன்னைத்தான்.

இவ்வழியே சின்னச் சின்ன
                கவிதைத் தடங்கள்.
எங்கிருக்கிறாய் இனியவளே?

கண்ணம்மா

ஆவியதிர அழைக்கின்றேனே.....
            கேட்கவில்லையா?
தனிமை உன்னை அச்சுறுத்த வில்லையா?

இந்த முட்களும் கற்களும்,
      புதர்களும்  வேர்களும்
உன்னை வருத்த வில்லையா?

கண்ணீர்மல்க எங்கு நிற்கிறாய்
                    என்னுயிரே?
இங்கு தான் எங்கேயோ இருக்கிறாய்...

இவ்வழியே தொடர்பற்ற
                  சின்னச் சின்ன
                     கவிதைத் தடங்கள்


பிரசாதம்

உள்ளங்கை குவித்து பெற்ற
உத்தரணி தீர்த்தம்
பருகுமுன்,
விரலிடுக்கில் வழிந்து
வாய்க்கு மிஞ்சாமல்
வாசமாய் நாசிக்கு மட்டும்.......
நினைவுக்கே எஞ்சிய
நம் காதலைப் போல.......


(இவை என் கவிதைப் பரணிலிருந்து மீள் பதிவாய்) 


வியாழன், அக்டோபர் 14, 2010

மின்விசிறிநீ
விட்டத்தில் பூத்த குப் பூ.
செயற்கையின் சிசுவே !
நீ வந்த பின்னர்
நாங்கள் வேப்பங்காற்றை மறந்து விட்டோம்


ஓய்ந்திருக்கும் போது தென்படும்
உன் இறக்கைகளின் அழுக்கை 
சுழலும் போது சாதூரியமாய்
          மறைத்து விடுகிறாய்..
இதயத்தை மறைத்து கண்களை சுழற்றும்
            கயமையைப் போல...

நீ புழுக்கத்தில் அமர்ந்து
தென்றலைப் பாடும் கவிஞன்.

இரண்டுக்கு மூன்றாய் சிறகுகள் இருந்தும்,
நீ பறக்கத் தெரியாத இரும்புப் பறவை.

பலர் தூங்கி விட உதவும் நீ
சிலர் தூக்கிலாடவும் துணை புரிகிறாய்.

உன் வேகத்தை கட்டுப் படுத்த கற்ற மனிதர்கள்,
தம் மோகத்தை மட்டுப் படுத்த முயலாததற்கு
நீயோர் வெட்கம் கேட்ட சாட்சி !

(ஜூலை 1984)
(இது என் கவிதைப் பரணிலிருந்து மீள் பதிவாய்)  

சனி, அக்டோபர் 09, 2010

ஞொய்யாஞ்ஜி கும்மாளம்


ஞொய்யாஞ்ஜியைப் பார்த்து அவர் மனைவி பல்லேலக்கா கேட்டாள்,
       ஏங்க ஒரு வேலையும் உங்களுக்கு கிடைக்க மாட்டேங்குது?
       நானும் மாச செலவுக்கு எங்க அப்பா கைய
      இன்னும் எவ்வளவு நாள் தான் எதிர்பாக்குறது?


ஞொய்யாஞ்ஜி: நான் என்னடி செய்வேன்? நானும் கேக்குற
           கேள்விக்கெல்லாம் டான் டான்னு பதில் சொல்றேன்..
           இதைக் கேளேன்.. போன வாரம் திருச்சில ஒரு கார்
           சர்வீஸ்ஸ்டேஷன்க்கு இண்டர்வியூ போனேனில்லையா?

பல்லேலக்கா: ஆமாங்க..என்ன ஆச்சு?”

ஞொய்யாஞ்ஜி: "என் கிட்ட எலெக்டிரிக் மோட்டார் எப்பிடி
               ஓடும்ன்னு கேட்டாங்க".

பல்லேலக்கா: நீங்க என்ன பதில் சொன்னிங்க?

ஞொய்யாஞ்ஜி: டுர் ர் ர் ர் ர் ர் ர் ர் ......ன்னு சவுண்டு விட்டேன்.
                அந்த முதலாளி உர்ர்ன்னு முகத்தை
                வச்சுகிட்டு நிறுத்துன்னு கத்தினார்.

பல்லேலக்கா:  அப்புறம் ?

ஞொய்யாஞ்ஜி: எனக்கா தெரியாது?
                டுர் ர் ர் ர் ர் ர் ர் ர்...டுப்..டுப்..டுப்.. ன்னேன்.

பல்லேலக்கா:அப்பிடியே என்ஜின் நிக்கிற மாதிரியே இருக்குங்க!

 ஞொய்யாஞ்ஜி: என் போதாத வேளை.. அவரு அப்பிடியே நெஞ்சை
       பிடிச்சிகிட்டு சாஞ்சிட்டாரு..ஹார்ட் ப்ராப்ளம் போல இருக்கு..
       வேளை சரியில்லேன்னு வந்துட்டேன்.

பல்லேலக்கா: என் ராசா. எவ்வளவு அறிவு உங்களுக்கு?
        கண்டிப்பா ஏதோ கம்பெனி உங்களைக் கொத்திக்கிட்டு
        போகப் போகுது பாருங்க..

ஞொய்யாஞ்ஜி பெருமையுடன் மனைவியை ஏறிட்டார்!  

வெள்ளி, அக்டோபர் 08, 2010

இவ்விரவு நானிங்கே துயில வேண்டும்

அண்மையில் சுகவீனப் பட்டிருந்த என் அம்மாவைப் பார்க்க சென்னை வந்திருந்தேன். ஆன பிராயம் என்பத்துநான்கையும்
காலம் அவள் மேனியில் கோட்டோவியமாய்த் தீட்டியிருந்தது.
மூன்று தலைமுறைக்கு மைய வேராய், குடும்பத்தின் அச்சாணியாய் சுழன்றவள், மூப்பின் நொய்வில் தளர்ந்து படுத்திருந்தாள், துலக்கி வைத்த குத்துவிளக்கை கிடத்தி வைத்ததுபோல்....கண்கள் பனித்திடப் பார்த்தபடி நின்றேன்..

நினைவலைகள் பின்னோக்கி தளும்ப... ஆம்... இதேபோல் ஓர்நாள் என்  முன்னே அவள் களைத்துப் படுத்திருந்தாள் பல ஆண்டுகளுக்கு முன்...பொங்கி வந்த உணர்வுகளைக் கவிதையாய் வடித்தது நினைவுக்கு வர, அந்த பழைய கவிதையைத் தேடி பிடித்தேன்..
இளமையின் வாசலில் நானிருந்தகாலை எழுதியதில், இன்னும் மெருகூட்டத் தோன்றிய போதும், அந்த நினைவை உதறிவிட்டு, எழுதிய வண்ணமே இங்கு பதிவிடுகிறேன்....


இவ்விரவு நானிங்கே துயில வேண்டும் என்தாயின்
செவ்விதழ்கள் தாலாட்ட மென்விரல்கள் உடல்வருட,
உலகத்தை நான்மறந்து உறங்கவேண்டும்: அவள்மடியில்
மலர்ச்செண்டாய்  மாறிநான் மணக்க வேண்டும்.  

போலிகளை நானிங்கே புகழ்ந்ததுபோதும் இதயத்து
வேலிகளை தாண்டிமனம் களைத்தது போதும்.: நிதமிங்கே
கூலிக்கு பொய்மூட்டை சுமந்தது போதும்: அன்னையவள்
காலிலென் தலைவைத்தே ஓய்தல் வேண்டும்.   

வெண்ணிலவில் ஔவை வடைசுட்ட கதைகேட்டு,
கண்ணிரண்டில் துயில்பரவ அவள்கரம் நான்பற்றி
மண்ணில்விரித்த அவள் முந்தானைமணம் முகர்ந்து,
விண்ணேறித் தாரகை திரள்களோடு மிதக்க வேண்டும்.


கயமையோடு நான்பழக நேர்ந்ததுபோதும் இருள்நெஞ்ச
மையல்களில் என்மனது அலைந்ததுபோதும் : பாவத்தின்
செயல்களினை என்கண்கள் பார்த்ததுபோதும் பாசத்தின்
உயர்வுகளைத் தாய்மடியில் உணரவேண்டும்.

அன்னையவள் மடிமீண்டு குழந்தையாகி- அவள்தம்
மென்விழிகள் சிந்தும் நீரென் சிரத்தில் ஏற்று தெய்வ
சன்னதியின் சாந்தியவள் அருகாமை  என்றுணர்ந்தே
என்னுயிரை அவளுக்கென இருத்தல் வேண்டும்.


.

திங்கள், அக்டோபர் 04, 2010

காதோடு காதாக


ஒரு காதை அறுத்துக்குறேன் எனப்  பந்தயம் கட்டறதும்
கேட்கவே காது கூசுதுன்றதும்,
காது குளுந்து போச்சுய்யான்றதும்,
கேட்டு கேட்டு காது புளிச்சு போச்சுன்றதும்...
கண்ணு,காது வச்சு பெரிதாக்கிடுவாங்கங்கிறதும்........

எப்பவும் காதுலயே  கையி!
காதை இழுக்காம நமக்கு  ஒரு பேச்சு வருதா?


நான் சொல்றதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கிறீர்களா?

காதைக் கடிப்பது  என்பது ரகசியம் சொல்வதைக் குறிக்கும்.
மைக் டைசன் கோபத்தில் நிஜமாகவே எதிராளியின் காதை கடித்து துப்பி விட்டான். எதற்கும் ரகசியம் பேசும் போது ஜாக்கிரதையாய் இருங்கள்...

காதோரம் எங்கும் துளையிட்டு தங்கத்தில் மாட்டல்கள் போடுவது பேஷன் இப்போ. ஒரு காதை அறுத்தால்,போதும், ஒரு மாதம் ஒரு குடும்பம் உட்கார்ந்து சாப்பிடலாம்.

என் மாமியாருக்கு பாம்புக் காதுடீ என்று உங்கள் தோழி சொன்னால் நம்பாதீர்கள். ஏனென்றால்  பாம்புக்கு செவியே கிடையாது. அதிர்வையும் சலனத்தையும் மட்டும் கொண்டே அது உதார் விடுகிறது.

மூணு தவளை டூர் போச்சாம். மூணும் ஒரு பள்ளத்துல விழுந்துடிச்சாம். எம்பி எம்பி வெளிய வர பாத்துச்சாம்.
சுத்தி இருந்த தவளை எல்லாம் கைய கைய ஆட்டி,
வேணாம் குதிச்சு சோர்ந்துடாதீங்க. இது பெரிய பள்ளம். வெளிய வர வாய்ப்பேயில்லே. எதாச்சும் சாப்பிட குடுக்குறோம். பாம்பு வர்ற வரை உள்ளே இருங்கன்னு கூச்சல் போட்டதுகளாம். இதைக்  கேட்ட பயத்திலேயே ஒரு தவளை உயிரை விட்டுடிச்சாம். இன்னொன்னு ரொம்ப டென்சனோட குதிச்சு மயங்கிடிச்சாம்.
மூணாவதோ குதிச்சு குதிச்சு வெளியே  வந்துடிச்சாம்.
மற்ற தவளைகளைப் பார்த்து, நீங்க உற்சாகப் படுத்தினதுக்கு நன்றின்னுதாம்.
மத்த தவளைகளுக்கு ஒண்ணுமே புரியலையாம்.
விஷயம் என்னன்னா, மூணாவது தவளைக்கு காது கேட்காது. மற்றவை வராதே வராதேன்னு கைய ஆட்டினதை,
ஊக்கப் படுத்தறதா நினைச்சு உற்சாகமா குதிச்சுதாம்.

பிறர்  நம்மை சோர்வுறச் செய்யும் போதோ, அதைர்யப் படுத்தும் போதோ, செவிடாய் இருக்க பழகிக் கொள்ளுங்கள்.

பாருங்களேன் அநியாயத்தை, இரண்டு காதும் கஷ்டப்பட்டு தாங்கும் கண்ணாடியை  காதுக் கண்ணாடி எனக் கூப்பிடாமல், வெறுமே முட்டுக் கொடுக்கும்  மூக்கின் பேரால்,
மூக்குக் கண்ணாடி என்றல்லவா அழைக்கிறோம்?!


விமானப் பயணத்தின் போது காது அடைக்கும்..எனக்கும் ஒரு பயணத்தில் இப்படி அடைத்து ஞொய் ஆனபோது, விமானப் பணிப்பெண் புன்னகையுடன் வெஜ்ஜா நான்வேஜ்ஜா எனக் கேட்க,அஜ்ஜீத் தானே நீங்க? எனக் கேட்டதாய்ப் புரிந்து கொண்டு, ஓ நோ!என நான் தன்னடக்கம் காட்ட, புவ்வா  இல்லாமல் பயணித்தேன் போங்கள்! தல புண்ணியத்தில் உபவாசம்! அட! நிஜமாதாங்க!


நடிகை மீனாவின் காதுக்கும் மேலூருக்கும் ஒரு தொடர்பு இருக்கு தெரியுமா? எதுக்கு சஸ்பென்ஸ்? நானே சொல்லிடறேன்.
காது செஞ்ச மண்ணு அது மேலூரு என்று பொற்காலம் சினிமாவில் மறைந்த முரளி பாடினாரே....தஞ்சாவூரு மண்ணு எடுத்து பாட்டில்..... அதைத்தான் சொன்னேன்...  ஏன்.. ஏன்.. நீங்க டென்சன் ஆவுறீங்க? மீதியையும் காது குடுத்து கேளுங்க!

மிகச் சிறந்த சிம்பனி இசையை வடித்த மேதை பீதோவனுக்கு காது கேட்காது.
காந்தி தாத்தாவுக்கு காது மடல்கள் பெரியவை.


எங்க பாட்டி சொல்லும்,இட்டு கெட்டது காது.. இடாது கெட்டது கண் காதுக்குள்ள குச்சி ,ஹேர்பின்,பட்ஸ், ஸ்க்ரூ டிரைவர் எல்லாம் இட்டு கொடஞ்சா காது டமாரமாயிடும்..
நல்ல அஞ்சனம்(கண் மை) இடாததால கண்ணு புட்டுக்குமாம்.
ஆகவே தாய்க்குலமே! ஐடெக்ஸ் உபயோகிங்க!!

ஒரு பழைய தெலுங்கு சினிமா பாட்டு ..
அதில் இரு வரிகள்....

 மனம் ஓர் ஊமை எனினும் அதற்கோர் மொழியும் இருக்கும்.
 செவியுள்ள இன்னொரு இதயத்துக்கே அம்மொழியும்  புரியும்

நல்லா இருக்கில்லே?

கடவுள் அர்த்தமின்றி எதையும் செய்யரதில்லே! பாருங்களேன்.
ஒரு வாயைக் கொடுத்தவன் காதை இரண்டா இல்லை தந்திருக்கான்!
அந்த வாயும் ரெண்டே  இன்ச்சு..
காதோ ஒவ்வொன்னும் நாலு இன்ச்சு...
வாய்க்கு மேலுதடு, கீழுதடுன்னு ரெண்டு ஷட்டர் வேற இருக்கு.
காதுகளோ திறந்த மேனிக்கு மூடியில்லாம.. ஏன்? ஏன்?
கொஞ்சமா பேசு, நிறைய கேளுன்னு இல்ல அப்பிடி வச்சாரு?..
அப்பிடியா  இருக்கோம்.. கேட்கிறேன் சொல்லுங்க?

குழந்தைங்களோட காது மடலை தடவிப் பார்ப்பது
என்னா சொகம்.!

இருங்க முடிச்சிட்டேன்..
காதே ஒரு கேள்விக் குறி மாதிரி இருப்பதாலே, ரெண்டே ரெண்டு கேள்வியோட என் காதை, ஸாரி வாயைப்  பொத்திக்கிறேன்!

அமெரிக்காவில் வாழும் அன்பு நெஞ்சங்களே! உங்க ஊர் ஓபாமாவுக்கு காது எக்ஸ்ட்ரா லார்ஜ் சைசாமே ?

நம்ம தெக்கத்தி காது பாம்படம் மறுபடி பேஷனா வரப்  போவுதாமே!

இப்பத்தானே சொன்னேன்? காதைக்  கொடையாதீங்க..
 .  
 (தீராத விளையாட்டுப் பிள்ளை வலைப்பூவில் நான் ஒரு பின்னூட்டம் இடப் போக, எனக்கு காது இருக்கிறதா என அன்பர் ஆர்.வீ.எஸ் அவர்களுக்கும், என தங்கை ஹேமாவுக்கும் சந்தேகம் வந்தது., காது பற்றி இடுகை இடுமாறு எனக்கு அன்புக் கட்டளை இட்டு விட்டார்கள்.. இந்தக் காது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா?   )
  

வெள்ளி, அக்டோபர் 01, 2010

களவு தந்த தருணம்நான் பஞ்சகுட்டா போலீஸ் இன்ஸ்பெக்டர் பேசறேன். இன்றைக்கு அவகாசம் இருந்தால் ஒரு முறை ஸ்டேஷனுக்கு வந்து விட்டு போக முடியுமா?"  தெலுங்கில் வந்த தொலைப்பேசி அழைப்பு..

ஏதும் தகவல் தெரிஞ்சுதா இன்ஸ்பெக்டர்?

முயற்சி பண்ணிகிட்டிருக்கிறோம்  கோர்ட்க்கு ஒரு பாரம் கொடுக்கணும்.

சரிங்க.. 

நடந்தது இது தான்...

ஹைதராபாதில் நான் வசித்த வீட்டின் கீழ்ப் பகுதியில் நாங்களும், முதல் மாடியில் வீட்டு ஓனருமாய் இருந்தோம் .
  
சில மாதங்களுக்கு முன், வீட்டைப் பூட்டிக் கொண்டு மும்பை சென்றிருந்தோம். அங்கு போன இரண்டாம் நாளே, 
என் வீட்டு ஓனரின் அலைபேசி அழைப்பு. 

மோகன்காரு! ஒரு சின்ன ப்ராப்ளம் ! இன்று காலை வாக்கிங் செல்ல கீழே வந்தபோது உங்கள் வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டு, வீட்டினுள்ளே அனைத்தும் அலங்கோலமாய் இரைந்து கிடப்பதைப் பார்த்து போலீசில் புகார் செய்தேன். இப்போது வீடெங்கும் பவுடர் அடித்து தடயம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் வந்தால் தான் என்னென்ன திருட்டுப் போனது என்று கணக்கிட முடியும். வரும் விவரம் சொல்லுங்கள். ஐயாம் ஸாரி!!

என்ன சொல்வது என்று தெரியவில்லை. நான் திரும்பவும் உங்களைக் கூப்பிடுகிறேன்.


மனைவிக்கு விஷயத்தை சொன்னவுடனே பதறினாள்..
நகைகள் லாக்கரில் தான் இருக்குங்க! ,சின்னச் சின்ன உருப்படிகளே அலமாரியில் இருக்கு , வெள்ளிப் பாத்திரங்கள் பூஜை அறையில் வெளியிலேயே இருக்குங்க. அதெல்லாம் போயிருக்கும்.கடவுளே ! .

சரி. பதட்டப் படாதே! பார்ப்போம்அவளை மும்பையிலேயே விட்டு விட்டு விமானத்தில் ஹைதராபாத் விரைந்தேன்.

வீட்டுக்குள் நுழைந்த போது, ஏதோ சுனாமி தாக்கிய சென்னை கடற்கரை போல அது இருந்தது. காட்ரெஜ் அலமாரிகள் நெம்பித் திறக்கப் பட்டு அதிலிருந்த  சாமான்களும், மேலே லாப்ட்டில் இருந்த பெட்டிகள் எல்லாம் 
பிரித்தெறியப் பட்டு, துணிமணிகளும் புத்தகங்களும் வீடெங்கும் சிதறிக் கிடக்க, மெத்தைகள் கிழிக்கப் பட்டு...  கலைந்த கூடாய் என் வீடு.....
தலை சுற்றியது.


வெள்ளி பூஜைப் பாத்திரங்கள், ஐ பாட் , கேமரா,சின்ன தங்க உருப்படிகள், சில புடவைகள்.. இத்யாதிகள் திருடப் பட்டிருந்தன. ரூபாய் எண்பதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை அவற்றின் மதிப்பு இருக்கலாம்.

இரவெல்லாம் வீட்டுக்குள்ளிருந்தே 20-20 மேட்ச் ஆடியிருக்கிறார்கள். திருடர்கள் மூவராய்  இருக்கலாம் என்று போலீசில் சொன்னார்கள். மனைவிக்கு நிலவரம் சொல்லி,போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் F.I.R 
எழுதி , பட்டியல் கொடுத்து... 
மீண்டும் வீட்டுக்குள் நுழைந்த போது,வீடேஅன்னியமாய்ப் பட்டது.
புடவைகள், பெட்டிகளின்  நடுவே நகைகளை வைத்து இருக்கலாம் என்று தான் அவற்றை உதறித் தேடியிருக்கிறான் திருடன்.

இரைந்து கிடந்த புத்தகங்களிலும் துணிமணிகளிலும் போலீசின் பூட்ஸ் தடங்கள்.... போகட்டும்.

களவு போன வீடு எங்கோ ஊர்கோடியில் இல்லை... நகரின் பரபரப்பான பகுதியில், நெருக்கமான குடியிருப்புகளுக்கிடையே இருந்தது. போலீஸ் ஸ்டேஷனிலேருந்து மோகின்னு கூப்பிட்டால் உள்ளேன் ஐயா என்று என் பதில் கேட்கும் அருகாமை.

இந்த எதிர்பாராத நிகழ்வில் புன்னகை,வேதனை, சந்தோஷம், படிப்பினைகள் எனக்கு வாய்த்தன.....

புன்னகை ஒன்று...
  
பூஜை அறையில் சாளக்கிராமங்களுக்கு நடுவே இரண்டு பெரிய லக்ஷ்மி டாலர் வெள்ளியில் இருந்தது . அவற்றையும் எடுத்துக் கொண்ட களவாணி., இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை பதிலுக்கு வைத்து விட்டு 
போயிருந்தான். உம்மாச்சிக்கு பயந்தவன் போலும்.!!

வேதனை இரண்டு.

-என் குருசாமி எனக்களித்த வெள்ளிக் காசு போனது.

-ஐ பாட் வந்தபுதிதில், யாரிடமோ அதைக் கண்டு நான் ரசித்ததும், அதை அரைமணி நேரத்தில், தன் சேமிப்பிலிருந்து என் மகன் வாங்கி வந்து எனக்கு பரிசளித்த ஐ பாட் களவு போனது.. அத்துடன்,என் பிரியமான காற்றினிலே வரும் கீதமும் ,முத்துக்களோ கண்கள் பாடலும்...... 


சந்தோஷம் மூன்று..

-பல நாளாய் நான் தேடிக் கொண்டிருந்த என் மகனின் குழந்தை போட்டோ, புத்தகக் குவியலின் நடுவே கிடைத்தது.

-என் மனைவி அவ்வப்போது அணியும், எனக்குப் பிடிக்காத, துணுக்கு ஜிமிக்கியை திருடன் எடுத்துப் போனது.

-தொலைந்தே போய் விட்டது என்று நான் எண்ணிக கொண்டிருந்த இன்னொரு புகைப்படம் புதையல் போல் கிடைத்தது.-  . 
மறைந்த நடிகர் நாகேஷுடன் நானிருக்கும் போட்டோ : ஒரு நாடக விழாவில் எடுக்கப் பட்டது.... ஒரு பழைய மீனாக்ஷி அம்மாள் சமையல் கலைப் புத்தகத்தினுள் வாசம் பிடித்துக் கொண்டிருந்து. மூக்கை வெளியே 
நீட்டியிருந்தது... 

படிப்பினை

கலைந்து கிடந்த என் மனைவியின் புடவைகளை ஒன்று விடாமல், நீவி,மடித்து,பீரோவில் நான் அடுக்கி வைக்க,
வீட்டு ஓனர் மனைவி, சன்னலின் வழியே அதைக் கண்ணுற்று அவருக்கு கன்னத்தில் இடியாம்!...நீங்களும் இருக்கீங்களே!

அடுத்த நாள் மும்பையிலிருந்து திரும்பிய என் மனைவி, அடுக்கப் பட்ட புடவைகளைக் கண்டு, குரல் கம்ம, காதலுடன்,நீங்களா இத்தனையும் மடித்து வைத்தீர்கள்?’’ என்று நெகிழ்ந்த வேளை, சின்ன சிரிப்போடு அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டிருக்கலாம்.. விதி யாரை விட்டது?

உன்கிட்ட இவ்ளோ புடவையா இருக்கு என நான் ஆச்சரியப் பட்டு,
அவள் அதற்கு கோபப் பட்டு...
மீண்டும் நான் வாங்க நேர்ந்தது ஒரு பிரிண்டட் பட்டு...


கொஞ்ச நாள் போலீஸ் ஸ்டேஷன் நடந்து பார்த்தேன்.
பல்லைக் குத்திக் கொண்டு ஒன்றும் கிடைக்கவில்லை என்று அவர்கள் திருப்பிவிட..
நாகேஷ் மாதிரி அலுத்துக் கொண்டு விட்டுவிட்டேன்... 
போங்கோடா.