ஞாயிறு, மார்ச் 27, 2011

பச்ச மொழகா

ரசத்துக்கு ருசியே அதுல நாலு பச்ச மொழகா கிள்ளிப் போட்டாத்தான் சார்’’
ராஜாமணியின் வாய், புகையிலை அதக்கலில் குழைந்து, பச்சை மிளகாய்பச்சமொழகாஆகிவிட்டது எனத்தான் முதலில் நினைத்தான் மதுசூதனன். ஆனாலும்,இரண்டு மூன்று சந்தர்ப்பங்களில் ராஜாமணி அதேவிதமாய் அவருடைய மெஸ்ஸில் உச்சரித்தார். அந்தமொழகாய்ப் போல அவர் வாழ்க்கையும் நடைமுறையில் இல்லாத தினுசாகத்தானே இருந்தது?
ராஜாமணியை மதுசூதனனுக்கு பத்து நாளாய்த்தான் பழக்கம். முதன்முதலாய் அவரை சந்தித்தபோது வெங்கடேஸ்வரா ஹோட்டலில் எதிரில் அமர்ந்து காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சிநேகமான புன்னகையுடன் கேட்டார்
நீங்க இந்த ஹோட்டலுக்கு ரொம்பநாள் வாடிக்கைப் போலிருக்கே
ரொம்ப நாளில்லீங்க.. ஒரு மூணுமாசமாத்தான்.”
சாருக்கு எந்த ஊரு? ஏதும் காலேஜ்ல படிக்கிறீங்களா?”
வலங்கிமான்ங்க..அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர்ந்து மூணுமாசம்தான் ஆச்சு.”
அப்படிப் போடுங்க! எனக்கு திருவிடைமருதூர்.” காபியை முடித்த கையோடு, நிமிஷமாய் நான்கு வெற்றிலையோடு புகையிலையையும் போட்டுக் கொண்டார்.
மது அவரை தீர்க்கமாய்ப் பார்த்தான். சற்று குட்டையான கச்சலான உருவம். சச்சதுரமான முகம்..
மோவாய் மட்டும் கூம்பாய் இறங்கியிருந்தது. சற்றே ஒட்டிய கன்னங்கள். வெற்றிலை புகையிலைக் குதப்பலின் தளும்பல் உதட்டோரத்தில் கசிந்து நின்றது. நெற்றியில் தீற்றலாய் இட்ட குங்குமம்..  சட்டைக் காலருக்கு கைகுட்டையால் உறை. மடித்துக் கட்டிய நாலுமுழ வேட்டி. முன்வழுக்கையில் எண்ணை பளபளப்பு.. பேச்சில் பரபரப்பு.
சார். ஒரு வேண்டுகோள். இதே ரோட்ல பிள்ளையார் கோவில் தாண்டி, புதுசா ஒரு சாப்பாட்டுக் கடை துவக்கறேன். காலமே இட்லி, பொங்கல், வடை,தோசை, பூரிக்கிழங்கு போடறேன் சார். மதியம் சாப்பாடு. ராத்திரில மீண்டும் தோசை, சப்பாத்தி, இட்லி கிடைக்கும் சார். உங்களையெல்லாம் தான் நம்பி இஞ்ச வந்திருக்கேன். கைத்தூக்கி விடணும் சார். உங்க சிநேகிதர்களையெல்லாம் கூட கூப்பிட்டுகிட்டு வரணும் சார்.”
அவசியம் வரேங்க. என்னைக்கு ஆரம்பிக்கிறீங்க?”
நாளைக்கு நாள் நல்லா இருக்கு சார். காலமே வாங்களேன். உங்களுக்காய்  காத்திருப்பேன்
வரேங்க” 
மது தன் அறைநோக்கி நடந்தான். மணி இப்போ ஒன்பது இருக்குமா.. சாலை வெறிச்சோடி இருந்தது. அந்த எழுபதுகளின் அம்பத்தூர் சென்னையின் தாக்கம் அதிகமில்லாது, ஆனாலும் அதோடு ஒட்டியே இயங்கிக் கொண்டிருந்த காலம். சேட்டு வீட்டுக் கல்யாணத்தில் தனித்து தெரியும் ஒரு மடிசார் சுமங்கலியைப் போல ....
 மறுநாள் காலை ராஜாமணியின் அழைப்பு ஞாபகம் வந்தது.
ராஜாமணியின் சாப்பாட்டுக் கடையை மெஸ் என்றோ ஹோட்டல் என்றோ அழைக்க முடியாதுதான்... கிழக்கு பார்த்த அந்தப் பழைய வீட்டின், ரோட்டிலிருந்து ஒரு அடி உயரமே இருந்த அகலமான திண்ணை தான் மெஸ். திண்ணையின் மூன்று பக்கத்திலும் தென்னங்கீற்றால் இரண்டடி உயரத்துக்கு தடுப்பும் மேலே கூரையும் வேய்ந்திருந்தது. ஏககாலத்தில் பதினைந்து முதல் இருபது பேர் அங்கு சாப்பிட இடமிருந்தது.
பலகைகளையே சாப்பாட்டு மேஜையாயும், அமர்வதற்கு பெஞ்ச்சாயும் அமைத்து இந்த்ரஜாலம் புரிந்திருந்தான் மகாதேவ ஆசாரி. இந்த மெஸ்ஸில்... போகட்டும் அப்படியேதான் அதை அழைப்போமே... துவங்கிய இந்த பத்துநாட்களாக  மது அங்குதான் சாப்பிடுகிறான். டிபனும் சாப்பாடும் பரவாயில்லை. காப்பி தான் கொஞ்சம் சுமார் ரகம். பில் கூட ஹோட்டலை விடக் கம்மிதான். ராஜாமணியின் உபச்சாரம் சற்று தூக்கலாயும் சமயத்தில் கொஞ்சம் எரிச்சலாகவும்கூட இருந்தது.. மதுவோடு சேர்ந்து இன்னும் பத்து பதினைந்து பேர் வாடிக்கையாகி இருந்தனர். மகாதேவ ஆசாரியையும் காலை டிபன் நேரத்திலும், இரவு சாப்பாட்டின் போதும் அங்கே சாப்பிடுவதைப் பார்க்கிறான். சாப்பிட்டுவிட்டு போகும் போது ஏதும் காசும் கொடுப்பதில்லை ஆசாரி. ராஜமணியும் கேட்பதில்லை. இந்தப் பந்தல் அமைப்புக்கு ராஜாமணி பணம் தராமல் இருந்திருக்க வேண்டும். சாப்பிட்டுத்தானே அதை வசூலிக்க முடியும்.? மதுவுக்கு பாவமாய் இருந்தது.
அன்று ஞாயிற்றுக் கிழமை. காலை ஒன்பது மணிக்கு மது மெஸ்ஸில் நுழைந்தான்.
வாங்க சார்!’ ராஜாமணி வரவேற்று முடிக்கும் முன்பே ஆசாரியின் ரம்பக் குரல் கரகரத்தது. “என்ன ராஜாமணி.. வடைக்கு சவுரி வச்சிருக்கே’’ நீளமாய் ஒரு தலைமுடியை வடையிலிருந்து ராட்டை நூற்பதுபோல் சாய்வாக இழுத்தபடி குரல் உயர்த்தினார்.
ஐயய்யோமன்னிக்கணும். அதை களைஞ்சிடுங்கோன்னா. வேற போடறேன்டீ பத்மா! செக்கொலக்கே! இஞ்ச வாகாட்டுக் கத்தலாய் ராஜாமணி அலறினார். இடுப்பில் குழந்தையுடன்  அவர் சம்சாரம் உள்ளிருந்து வந்தாள்.
ஜடமே! வடைக்கு அரைக்கறச்சே தலையை விரிச்சிப் போட்டுண்டு நர்த்தனம் பண்ணினியா? தலைய செரைக்க...ஜடமே  ஜடமே!” சட்டென்று அருகிருந்த சட்டுவத்தால், சப்பென்று அவள் கன்னத்தில் அடித்தார்.
ஒரு முக்கலில்லை முணகலில்லை.. இன்னும் ஏதும் உண்டா என்பதுபோல் நின்றுவிட்டு வந்தவாகிலேயே திரும்பினாள். ஒரு அமைதி அங்கு பரவியது.. சகிக்கவியலாத அமைதி.
என்ன ராஜாமணி இப்படி பண்ணிட்டே?’ அமுங்கிய குரலில் ஆசாரி கேட்டார். ‘சரி கொஞ்சம் சாம்பார் ஊற்று.’.
மதுவுக்குத் தாளவில்லை. கோபத்திலும் அதிர்ச்சியிலும் அவன் கைகள் நடுங்கின. ராஜாமணியை ஒரு புழுவைப் போல் வெறித்து விட்டு ஏதும் பேசாமல் வேகமாய் அங்கிருந்து வெளியேறினான்.
சார்.. சார்..  அவன் பின்னே ராஜாமணியின் குரல் தேய்ந்தது.”
இரவு எட்டுமணிக்கு வாயிற்கதவை மெல்ல தட்டும் சத்தம்..
வாசலில் ராஜாமணி..
என்ன?’ மதுவின் குரல் வறட்சியாய்  ஒலித்தது.
ஒரு ஆத்திரத்தில் பத்மாவை அடிச்சிபிட்டேன் சார். உங்களுக்கு பூ மாதிரி மனசு. தாங்காம கிளம்பிட்டீங்க. என்ன செய்யிறது? இல்லாமையும் இயலாமையும் கூடப் பிறந்துடிச்சிபாழாப்போன கோபத்தால பலதை இழந்துட்டு இப்படி அலையிறேன் சார். அதைப் பங்குபோட்டுக்க வந்தவகிட்டத்தானே காமிக்க வேண்டியிருக்கு.”
ஒரு பொம்பளையை கை நீட்டி அடிக்கிற நீரெல்லாம் எதிலே சேர்த்தி? வயசுல பெரியவர்னு பாக்கிறேன். உம்ம சங்காத்தமே வேண்டாம். இடத்தைக் காலி பண்ணும்.”
அடிபட்டவளே சமாதானமாயிட்டா.. நீங்க இன்னமும் அதையே நினைச்சுகிட்டு..... வாங்க சார்! இன்னிமே நான் கைநீட்டினேன்னு காதில் விழுந்தா, காலில் இருக்கிறதைக் கழட்டி என்னை அடிங்க.. கிளம்புங்க இன்னிக்கு பத்மா அடைக்கு அரைச்சிருக்கா. சூடா வார்த்துப் போடறேன் வாங்க சார்.”
போறும்.போறும். கைப்புள்ளைக்காரியை சட்டுவத்தால் அடிக்கிற ராக்ஷசன் நீர். உம்மை பார்த்தாலே பாவம்.. கிளம்பும்...”
சார்! அப்படி ஒதுக்கிடாதீங்க சார்! உங்களைப் பார்த்ததிலிருந்து என் கூடப்பிறந்த பிறப்பாதான் நினைக்கிறேன். செய்யிறத் தொழிலை குலசாமியாய் பாக்குறேன் சார். சாம்பார்ல தண்ணி விளாவி இருப்பேனா? புண்ணாக்கை சட்னியில் கலந்து அரைச்சிருப்பேனா? அன்னம் கொஞ்சம் கூட கேட்டா முகம் சுணங்கியிருப்பேனா? நீங்க வர்றதாலத் தான் நாலுபேர் கடைக்கு வராங்க.. ரெண்டு நாளாத்தான் போட்டகாசு கையைக் கடிக்காம எடுக்குறேன் சார்!’ ராஜாமணியின் குரல் தழுதழுத்து கண்கள் குளம் கட்டின.
ராஜாமணி விடுவதாய் தோன்றவில்லை.
சரி இப்போ சாப்பிடத் தோணலே.. காலைல பார்க்கலாம். போயிட்டு வாங்க.”
ஸாரி சார்! அவசியம் வாங்க. எனக்கு மனசுக்குக் கலக்கமா இருக்கு”.
சரி! போயிட்டு வாங்க!’
சற்று நேரத்திற்குள், அப்பாவுக்கு மாரடைப்பு என்று வந்த செய்தியில் மது ஊருக்கு விரைய நேர்ந்தது. அவன் ஊர்போய் சேர்வதற்குள் அப்பா காலமாகி, காரியம் முடித்து சொத்து பத்து விவகாரமெல்லாம் கையாண்டு மீண்டும் அம்பத்தூர் வருவதற்குள் ஒரு மாதம் ஓடிவிட்டது.
மதுவின் மனதில் பின்னுக்கு தள்ளப்பட்டிருந்த ராஜாமணியின் நினைப்பு சட்டென்று மேலெழுந்தது. போகும்போது அவரிடம் கொஞ்சம் வேகமாய்த்தான் நடந்து கொண்டு விட்டோமோ?
மெஸ் நோக்கி விரைந்தான் மது.
அந்தக் கொட்டகைப் பிரிக்கப்பட்டு, அது இருந்த சுவடே தெரியாமல் துடைத்துவிடப் பட்டிருந்தது கண்டு துணுக்குற்றான்.
மாமி!” ராஜாமணி இருந்த வீட்டின் சொந்தக்கார அம்மாளை கதவைத்தட்டி அழைத்தான்.
யாரப்பா அதுஎன்றபடி கதவைத் திறந்தவளிடம் மது கேட்டான்.
இங்கே கடை வைத்திருந்த ராஜாமணி எங்கே மாமி?”
அந்தக் கூத்தை ஏன் கேக்குறப்பா? ஜாகை வாடகைக்குக் கொடுன்னு பல்லெல்லாம் கெஞ்சினவனை, அவன் பொண்டாட்டியையும் குழந்தையையும் பார்த்துத்தான் வாடகைக்கு விட்டேன். அவனும் அவன் கோவமும்..... கொஞ்சம் கிறுக்கனப்பா. போனமாசம் ஒரு நாள்  ராத்திரி வந்து, தன் கையை எரியிற விறகால தீச்சிகிட்டு, என்னை மன்னிச்சுக்கோ மன்னிச்சிக்கோன்னு அவளாண்டை அவன் கத்த, பதிலுக்கு அவள் தலையை சுவற்றில் முட்டிக்கொண்டு அழ, குழந்தை அலற...  போறும்டாப்பா இந்தமாசக் கொடக்கூலியை குடுத்துட்டு கிளம்புன்னு  சொல்லிட்டேன். என்னண்ட பணமில்லை இந்த பாத்திரங்களை இங்க வச்சுட்டுப் போறேன். காசைக் கொடுத்துட்டு திரும்ப எடுத்துக்கிறேன்னு குடும்பத்தோட போனவன்தான். இன்னும் வல்லே. இன்னம் நாலு நாள் பார்த்துட்டு இதையெல்லாம் கடையில போட்டுறப் போறேன்.”
அந்த ரேழியின் மூலையில் பாணலி, குடம், தூக்குகள், டம்ளர்கள், கூடை, தாம்பாளம், எவர்சில்வர் வாளிகள் என குமித்திருந்தது.
உனக்கு ஏதும் அவன் பணம் தரணுமாப்பா?”
இல்லை மாமி .நான் வாடிக்கையா அங்க சாப்பிட்டுகிட்டு இருந்தேன். வரேன்
சரிடாப்பா
திரும்ப எத்தனிக்கையில், தன்னிச்சையாய் மதுவின் கண்கள் பாத்திரங்கள் கிடந்த மூலையைத் திலாவின.
நிமிர்ந்து தனித்து நின்ற சட்டுவம், நூறு கண்களுடன் மதுவைப் பார்த்து விழித்தது.



புதன், மார்ச் 02, 2011

பெயர் பிறந்த கதை




(தீராத விளையாட்டுப் பிள்ளை ஆர்.வீ.எஸ் என் பெயர் பிறந்த கதைபற்றி தொடர்பதிவாய் எழுத அழைத்தார். இதைப் படித்து
கோபம் கொள்வோர், யாரைத் திட்ட வேண்டும் என்று இப்போது புரிந்திருக்கும். இனி உங்கள் பாடு... ஆர்.வீ.எஸ் பாடு )


அது ஒரு செவ்வாய்க்கிழமை. மாலை நான்குமணி. மேல்வானில் ஒரு வானவில் தோன்றியது. பறவைகள் எக்காளக்கூச்சல் போட்டன. பசுக்களெல்லாம் தாமாய் பால் சொரிந்தன. மூட்டமிட்ட மேகங்கள் இரண்டுநிமிடம் பூத்தூறலாய் தூவி ஓய்ந்தன.

கடலூர் செய்த பாக்கியம்தான் என்னே?........

இப்படியெல்லாம் என்றோ ஒருநாள் சக்திவிகடனிலோ, குமுதம் பக்தி ஸ்பெஷலிலோ, உய்விக்க வந்த மகான்கள் என்ற ஒரு பக்திகட்டுரையில் என் அவதாரமகிமையை யாரும் எழுதுவார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை.

பள்ளிக்கூடம் போன பிள்ளைகள் எப்படா வீட்டுக்குப்போக மணி அடிக்கும் என்று ஆவலுடன் காத்திருக்கும் ஒரு சாதாரண மாலை நேரத்தில் தான் நான் பிறந்தேனாம்.

அடடா! பெயர்க் காரணம் பற்றியல்லவா இந்தப் பதிவு?
நான் பிறந்தநாளின் ஒரே விசேஷம் அது சர்வோதய நாளான ஜனவரி 30 ஆம் தேதி என்பதுதான். மகாத்மா காந்தியின் நினைவு நாள் மௌன அஞ்சலிக்கான சங்கு அன்றுகாலை பதினொரு மணிக்குத்தான் ஒலித்திருந்தது..

பின்னே ! ஒரு மகாத்மா போனா இன்னொரு மகாத்மா வரவேண்டாமா? அதான் வந்தேன்..

என் அப்பா, காந்தியின் நினைவாய் அவரின் முதற்பெயரான மோகன் என்று பெயர்வைக்கலாம் என்று சொல்ல, அந்நாளில் மோகன் எனும் பெயர் புதுமோஸ்தராய் இருந்ததாலும், அப்போது வெளியான ஒரு சினிமாவில் சிவாஜியின் பெயர் மோகன் என்று இருந்ததாலும். சித்தி, அக்கா எல்லோரும் மோகனுக்கே பேராதரவு தந்தார்கள்.

தாத்தா பாட்டி ஒத்துக் கொள்ளாமல் சுவாமிநாதன் என்று பெயர் வைத்தார்கள். என் அக்காவோ மோகன் தான் பெயர் என்று ஆகாத்தியம் செய்து போராடினாளாம்.
கடைசியில் செல்லமாய் அழைக்கும் பெயராய்மட்டும் மோகன்  ஒத்துக் கொள்ளப்பட்டு மோகன் நிலைபெற்றது.

மோஹி என்று கொஞ்சல் பேராய் அது உலாவந்தது.

நான் பள்ளியில் சேர்ந்த வைபவம் நினைவிருக்கிறது.
கோட்டுசூட்டுமாய் கோச்சுவண்டியில் பள்ளிக்கு அழைத்து சென்று சேர்த்தார் என் தாத்தா. அத்தனை வகுப்புக்களுக்கும் சாக்லேட் விநியோகம் நடந்தது. தலைமைஆசிரியர் சேர்ப்புபடிவத்தில் எழுத இவன் பேர் என்ன?  என்று கேட்க, என் தாத்தா சுவாமிநாதன் என்று வாய் திறப்பதற்குமுன் என்அக்கா அவசரஅவசரமாய் மோகன் என்று சொல்லிவிட்டாள். தலைமைஆசிரியரும் படிவத்தில் மோகன் என எழுத ஆரம்பித்து விட்டாராம். ஆரம்பத்திலேயே அதை அடித்து எழுத வேண்டாம் என்று தாத்தாவும் விட்டுவிட்டாராம். இதற்காய் என் அக்கா வாங்கிய திட்டு கணக்கில் அடங்காது. ஒருவாறு மோகன் என் வழங்கு பெயரானது. சுவாமிநாதன் வைதீகதருணங்களின் பெயராய் இன்னமும் ஒட்டிக கொண்டிருக்கிறது.

என் எட்டுவயதில், வந்தேமாதரம் என் பட்டப்பெயராய்  ஆயிற்று. ஆண்டுவிழாவில் இறைநம்பிக்கைப்பற்றி ஞானம் டீச்சர் எழுதித்தந்து , பலமுறை ரிஹர்சல் செய்தும்  மேடைஏறியவுடன் பயத்தில் பேச்சு வராமல் நின்றுவிட்டேன். கீழிருந்து பேசுடாபேசுடா என்று டீச்சர் உறும, வந்தேமாதரம்,வந்தேமாதரம் என்று முஷ்டி உயர்த்தி கூவிவிட்டு இறங்கிவிட்டேன். அது முதல் சிலகாலம் வந்தேமாதரம் என்றே  அழைக்கப்பட்டேன். பின்னாளில்,உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரிநாட்களிலும் மேடைப்பேச்சு எனக்கு உவப்பானதாய் மாறிப்போய்,மைக் மோகனாயும் வலம் வந்தேன்.

எங்கள் அடுத்த வீட்டில் ஒரு மாமா,மாமி இருந்தனர். மாமாவின் பெயர் புருஷோத்தமன். ஒரு கம்யூனிஸ்ட். அவர்களுக்கு பிள்ளை இல்லை. அந்த தம்பதியருக்கு நான் செல்லப்பிள்ளை. என் பத்துவயதில் அவரே எனக்கு ஆதர்சமாய் இருந்தார். எனக்கு பாரதியார்ப் பாடல்களை மனனம் செய்யவைத்தார். அவர் வீட்டில் நடக்கும் கம்யூனிசக் கூட்டங்கள் என் பாரதி பாட்டுடன் துவங்கும். எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் மனைவியும் அந்த கம்யூனிஸ்ட் மாமியும் அக்கா தங்கை என்று ஞாபகம். என் தீவிர வாசிக்கும் பழக்கத்துக்கும்,பொதுவுடைமை மனப்பாங்குக்கும் பின்னாளில் என் தொழிற்சங்க ஈடுபாட்டுக்கும் அவர்களே காரணம்..

ஓ! ஏதோ சொல்லவந்து எங்கோ போய்விட்டேன்.
அவர்கள் என்னை வாயார மோகனம் என்று அழைப்பதை மீண்டும் கேட்க மனம் ஏங்குகிறது.

   கல்லூரி நாட்களில் மோனிகா,அன்பெழிலன் என்ற புனைப்பெயர்களில் வலம் வந்ததுண்டு.


இளமையில் சபரிமலை செல்ல ஆரம்பித்தேன்.. காவடியாட்டம் முறையாய் ஆடிய நாட்கள். என் குருசாமி என் ஆட்டம் பார்த்து மயிலு என்று கூப்பிடுவார். பலருக்கு இன்னமும் நான் மயில்சாமிதான்.. குருசாமி என்றும் அன்பர்களால் அழைக்கப் படும் போதும்.. மயிலுஎனக்கு பிடித்த பெயர்.

ஒருமுறை ஒரு கவியரங்கில் இன்னொரு மோகனும் கவிதை வாசிக்க வர, என் தமிழ்ப்பேராசிரியர் ஜி.மோகன் ஆன என்னை மோகன்ஜி ஆக்கினார். அந்த டீலிங் எனக்கும் பிடிச்சது ! மோகன்ஜியாய் செட்டில் ஆகிட்டேன்.

என் பிள்ளைகள் டாட்,அப்போய்,நைனா என்றெல்லாம்  அழைக்கும்போது களிகொள்ளும்  மனம், வயசுபெண்கள் அங்கிள் என்றழைக்கும் போது ஏனோ கஷ்டப்படுகிறது.!

வருங்காலத்தில் பேரப்பிள்ளைகள் பிறந்தால் அவர்கள் தாத்தா  என்று கூப்பிட்டால் எப்படி தாங்குவது என்பதே இப்போது என் யோசனை.. ஆரம்பமுதலே அவர்களை மோஹி,மயிலு என்று கூப்பிட பழக்க வேண்டியதுதான் என்ன  சொல்றீங்க?