செவ்வாய், செப்டம்பர் 15, 2015

கீதா மதிவாணனின் 'என்றாவது ஒரு நாள்'ஒரு நல்ல மொழியாக்கம் என்பது அந்தரத்தில் கட்டிவைத்த கம்பியின் மேல் நடப்பது மாதிரி. அது செப்பிடு வித்தை. மூலமொழிக்கே உரித்தான சொற்பிரயோகங்கள், நடை, வாக்கிய கட்டமைப்புகளை மொழியாக்கம் செய்யப்படும் பெறுமொழிக்குரிய கட்டுமானத்துக்குள் கொண்டு சேர்ப்பது சிற்பம் செதுக்குவது போல. அப்படிக் கொண்டு வருவதை மாற்றமொழியின் மரபுக்குண்டான வகையிலும் சொல்லப்பட வேண்டும். அப்படி சொல்லப்பட்டது,அம்மொழியின் புதிய ஆக்கமாகவே ஏற்கும் வகையில் அமையவும் வேண்டும்.

நல்ல வாசகன், சமையற்கலையை நன்கறிந்த சாப்பாட்டுராம புருஷன் போன்றவன். ருசிபேதம் அறிந்தவன். ரசமண்டியை சாம்பாராக்கினால் கண்டுபிடிப்பவன்; வாசனையிலேயே உப்பு சேர்க்காததை உணர்ந்து கொள்பவன். அத்தனை இலக்கியமும் அத்தகைய நல்ல வாசகனை மனதில் நிறுத்தியே எழுதப்பட வேண்டும். நல்ல சுவடிகள் காலவெள்ளத்தையும் எதிர்த்து கரை சேரும்.

மொழியாக்கத்தினை படிப்பவரின் மனவோட்டமும் முன்முடிபுகளும் கூட இங்கு கவனம் கொள்ளத்தக்கது. வேற்றுமொழியின் நகலிது என்று தெரிந்தே படிப்பது,வாசிப்பனுபவத்தில் ஒரு மாற்று குறைவுதான். அயலார் வீட்டு தலையணையை தலைக்குவைத்து படுத்திருப்பது போன்ற சங்கடமும்,சிறிய மனவிலக்கமும் மொழிபெயர்ப்பை வாசிக்கும் போது நேர்வது தவிர்க்க இயலாதது. அதையும் மீறி வாசகனை கட்டிப்போடும் எழுத்தாளுமை கைவரப் பெற்ற மொழியாக்க எழுத்தாளர் வரிசையில், கண்டிப்பாக சகோதரி கீதாமதிவாணனை வைப்பேன். அவரின் மொழிபெயர்ப்பு நூலான '  என்றாவது ஒரு நாள்'அண்மைக்காலங்களில் நான் வாசித்த நல்லதோர் முயற்சியாகும். இந்த முயற்சியை நான் மொழிபெயர்ப்பு என்று பகுக்காமல் மொழியாக்கம் என்பதற்கு காரணம்  மேற்சொன்ன கூறுகளே.


ஆஸ்திரேலியாவின் மாபெரும் சிறுகதையாசிரியரும்  கவிஞரும் எழுத்தாளருமான 'ஹென்றி ஹெட்ஸ்பர்க் லாஸன்'இரு நூற்றாண்டுகளுக்கு முன் எழுதிய ஆஸ்திரேலிய புதர்க்காடுறை மாந்தர்களின் வாழ்க்கைக் கதைகளின் மொழியாக்கமே இந்நூல். புலம்பெயர்ந்த ஐரோப்பிய வந்தேறிகளே இந்த புதர்காடுறை மாந்தர்கள் .

 காடுறை வாழ்க்கையின் ஆபத்துகளும், அச்சந்தரும் தனிமையும், சுரங்கத் தொழிலாளிகளின் பரிதாப வாழ்க்கையும் சுரங்கநிலங்கள் கைவிடப்படும்போது எழும் வறுமையும் இயலாமையும், வேலை வாய்ப்புகளைத் தேடி நகர்ப்பறங்களுக்கு இடம்பெயரும்போது எதிர்கொள்ளும் சவால்களுமாய் . அந்த ஐரோப்பியரின்  வாழ்க்கைச்சிக்கல்களை, புலப்பெயர்வின் சொல்லொணா இன்னல்களை மையக்கருவாய்க்கொண்டு லாசன் படைத்த அற்புதமான கதைகள் இவை.

இந்த செவ்வியல் படைப்பாளியின் சீரிய ஆக்கத்தை, அந்தக் கதைகள்நிகழ்ந்த காலத்திற்கான மனநிலையை வரித்துக் கொண்டு , கதைமாந்தர்களின் போக்கையும் படைப்பாளி எத்தனித்த தாக்கத்தையும் உள்வாங்கி இந்த படைப்பு நேர்படவே மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. கீதா மதிவாணனுடன் போட்டிபோட்டுக்கொண்டு லாசனைப் படிக்க நேர்ந்தது. இந்த மதிப்புரைக்கான தாமதமும் அதனாலே தான். மூலமொழியில் படைப்பாளியின் படைப்பூக்கத்தை பழுதின்றி,சிதைவுகள் இன்றி தமிழுக்கு மடைமாற்றியது பாராட்டுக்குரியது.

இந்தத்தொகுப்பில் மொத்தம் 27கதைகள். லாசன் , தன் கதைமாந்தர்களையும் கதைக்களனையும் உருவாக்கியவிதம் எழுதுவதில் ஆர்வம் உள்ளோர் கைகொள்ளவேண்டிய யுக்தியாகும். ஒரு குறிப்பிட்ட குழுவின் வாழ்க்கைச் சித்திரங்களையே இத்தொகுதி பேசினாலும், கதைகள் வெவ்வேறு வாசிப்பனுபவங்களை அளிக்கின்றன. 
முதல்கதையான 'மந்தையோட்டியின் மனைவி' அழையா விருந்தாளியாய் வீட்டினுள் நுழைந்த பாம்பைக் பற்றியது. கணவன் வீட்டிலில்லாத நேரம். குழந்தைகளுடன் தனியே இருக்கும் மனைவி இந்த இக்கட்டை எதிர்கொள்வதை சுவையாக விவரிக்கின்றது. நமக்கும் அந்த பரிதவிப்பும் படபடப்பும் தொற்றிக் கொள்கிறது. 

சீனத்தவனின் ஆவி நம்மையும் அச்சுறுத்துகிறது. அந்த ஆவியே ஒரு படிமமாகி கதையை நகர்த்துகிறது. எவற்றுக்கெல்லாம்தாம் நாம் அரண்டபடியே இருக்கின்றோம்?!

'ஒற்றைச்சக்கரவண்டி' ஒரு குடும்பத்து உறுப்பினர்களின் மனநிலையை நுட்பமாக கையாளுகிறது.

'மலாக்கி' ஒரு அசடனின் கதை. அனைவரின் ஏளனத்திற்கும் உள்ளாகும் அவனுக்குள்ளும் பாசமும் நேசமும் உண்டென்பதை அவன் மரணத்தில் மற்றவர்கள் உணர்கிறார்கள். அந்தக் கழிவிரக்கம் நம்முள்ளும் உருக்குகின்றது.

'என்றாவது ஒருநாள்' கதையில் ஒருபகுதி: "இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லை... ஒரு வேளை உணவுக்காக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கிறோம். வயதாகும்வரை... நம்மைப் பற்றிய சிரத்தை குறையும்வரை.. உடல் அழுக்கடையும்வரை... இந்த ஓட்டம் தொடரும். இன்னும் வயதாகும்... இன்னும் சிரத்தை குறையும்... இன்னும் அழுக்கடவோம். இப்படியே இந்த மண்ணுக்கும் புழுதிக்கும் வெக்கைக்கும் ஈக்களுக்கும் கொசுக்களுக்கும் பழகிப்போவாம். இலக்கைத் தொலைத்து நம்பிக்கையைக் கைவிட்டு ஒரு மாடு மாதிரி கால்நடை வாழ்க்கையில் ஈடுபடுத்திக்கொள்கிறோம். ஒரு நாயைப் போல போகுமிடமெல்லாம் நம்மோடு வருகிறது உடலின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது இந்த முதுகுப் பை. அது இல்லாவிடில் சுமையற்றத் தோள்களும் எதையோ இழந்தது போலான தவிப்பும் நம்மைப் இயல்பாயிருக்க விடுவதில்லை." - எப்படி அந்த ஆற்றாமையும் இயலாமையும் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது பாருங்கள். ஒரு படைப்பாளியே மொழிமாற்றம் செய்யுமுகந்தான் இத்தகைய இயல்பான வரிகள் விழும். குறைகளைன்று பெரிதாய் ஒன்றுமில்லை. இன்னமும்கூட கொஞ்சம் சுதந்திரம் எடுத்துக்கொண்டு தமிழ்சிலம்பம் சுற்றியிருக்கலாம்தான். ஆனால் அது எந்த வகையாகவும் போயிருக்கலாம். கீதாவின் சுயகட்டுப்பாட்டுக்கு பாராட்டுகள்.

இந்தத் தொகுதியின் பிறகதைகளை, படிப்பவர் பார்வைக்கே விடுகின்றேன். இந்தக் கதைகளின் முழுமையான வாசிப்பில் ஒரு காலகட்டத்தின் கலாசாரமும் வாழ்க்கை போட்டுவிடும் இறுக்கமான முடிச்சுகளும் நம் நினைவுகளில் சுற்றியபடியே இருக்கின்றன. இரு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் இவற்றில் பலவும் நம்மை சுற்றி நடந்தபடியேதான் இருக்கின்றன என்பது ஆச்சரியமான நிகழ்வு தான்.
திருமதி கீதா மதிவாணனின் இந்தத் தொகுப்பு ஒரு செய்தியை உரத்துச்சொல்கிறது. இதுபோன்ற பல தரமான மொழியாக்கங்கள் தமிழில் வர வேண்டும். புதிய சாளரங்கள் திறந்து  பலவாய் இலக்கிய காட்சிகள் விரிவுபட வேண்டும்.

இன்றும்கூட,ஆஸ்திரேலியா போற்றும் செவ்வியல் படைப்பாளியான லாசனின் அறிமுகத்திற்கும், ஆற்றொழுக்காய் அவர் கதைகளை தமிழில் அள்ளிவந்ததிற்கும் திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.