திங்கள், ஜூன் 11, 2012

காதல் பலூன்






என் காதல் பலூன்களை
கொத்தாய்ப் பறித்துப் போகிறான்
வாழ்க்கை வியாபாரி.

குழந்தையாய்க் கேவி அழத் தோன்றுகிறது.

காற்றுவெளியெங்கும் நிரம்பிய
என் அன்பின் சிறுகூறேயன்றோ
பறிகொடுத்த பலூன்தொறும்
காதலாய்
நிரப்பப் பட்டிருந்தது?

பலூன்களும் ஒவ்வொன்றாய் உடையும்

தடையற்ற வெளியில் கலக்கும்
அடைபட்ட காற்றின் சொச்சம்.

இடைப்பெற்ற அனுபவமோ
உடைந்ததன் கிழிசல் மிச்சம்.

புகைப்படம்: திரு ஹரிஹரன் சங்கர்

சனி, ஜூன் 09, 2012

துங்கா


யாரப்பா நீங்களெல்லோரும்?” கணக்கப்பிள்ளையின் வினவலுக்கு பதில் கூற முன்னகர்ந்தான் இருளன்.

வந்தவர்கள் பத்து பேர். இருளனுக்குப் பின்னால் சுடர்விளக்காய் நின்றிருந்தாள் துங்கா. யொவனம் பூரிக்கும் பதினாறு வயது பைங்கிளி. அவள் இருளன் மகள்.

கணக்கையா! நாங்க கழைக் கூத்தாடிங்க சாமி! உங்க புழல் கோட்டம் பார்த்திராத வித்தையெல்லாம் செய்து காட்ட வந்திருக்கோமுங்க. வள்ளலைய்யாவை ஒரு முறை பார்த்து விட்டால் எங்களுக்கு விமோசனம் கிட்டும் சாமி!


ஐயாவை இந்நேரம்..... என்று மறுப்பை கணக்கர் விடுக்குமுன், தந்த வேலைப்பாடு செய்யப்பெற்ற பெரும் கதவு திறந்தது.
வெளியே வந்தவரோ வள்ளலே தான். அயன்றை சடையநாதர் எனும் அவர்பெயரை யாரும் வாய்விட்டு உரைத்ததில்லை. கர்ண மகா பிரபு கலியுகத்தில் அவதரித்தது போல் அள்ளி வழங்கும் கொடைவள்ளல். புலவரும் கலைஞரும் தொண்டை நாட்டுக்கு தொடர்ந்து வந்து வள்ளலின் ஆதரவு பெற்றார்கள்.

யாரப்பா இவர்கள்?”  

நிலம்பட வணங்கி எழுந்தனர் அனைவரும். இருளனே தொடர்ந்தான். 

ஐயா! நாங்கள் கழைக்கூத்தாடிகள்.. இந்தக் கலையின் அருகி வரும் சில கரணங்களை என் மகள் துங்கா மிக அநாசயமாய் செய்வாள் பிரபு! உங்கள் சன்னிதானத்தில் ஒரு முறை எங்கள் திறம் காட்ட கருணை செய்யுங்கள் பிரபு !

அப்போதே துங்காவைக் கண்ணுற்றார்.'இந்த சிறுபெண்ணா?'

உம்ம்... அப்படி என்ன வித்தைதான் தெரியும் இவளுக்கு?”

கழைக்கூத்தில் மிகக் கடினமான விச்சுளிப் பாய்ச்சல் எனும் வித்தையை இவளுக்கு கற்பித்திருக்கிறேன். சிறு பிராயத்திலேயே சூட்டிகையாய்க் கற்றுக் கொண்டாள் ஐயா! ஒரு கலைஞனின் கம்பீரமும்,ஒரு தகப்பனின் பெருமிதமும் இருளனின் குரலில் ஒலித்தது.

விச்சுளிப் பாய்ச்சலா? அது என்னய்யா பெரிய வித்தை?” வள்ளலின் குரலில் ஆர்வம் மேலிட்டது.

பிரபு! விச்சுளிப் பாய்ச்சல் மிகவும் நுண்ணிய,ஆபத்து நிறைந்த வித்தை. ஒரு நெடிய மூங்கிலின் உச்சிக்கு இவள் ஏறி அந்தரத்தில் நிற்பாள். அங்கிருந்தபடி தன் காதணியைக் கழட்டி நிலத்தில் எறிவாள்.

அப்புறம்?”

எறியப்பட்டக் காதணி நிலத்தில் விழுமுன்னர் மின்னலாய்க் கீழே பாய்ந்து, அதைக் கைக்கொண்டு ஒரு நொடிக்குள் மீண்டும் மூங்கிலின் உச்சிக்கு பழையபடி சென்று விடுவாள்.

அதெப்படி சாத்தியம்?“

உச்சியில் ஏறியபின் ஒரு யோகப் பிரயோகத்தினால் மூச்சை அடக்கி தன் உடலை ஒரு இறகைப் போல் லேசாக்கிக் கொள்வாள்.

ஆச்சரியம்...கொஞ்சம் ஆபத்தான வித்தை தான்!

ஆபத்து கொஞ்சமல்ல ஐயா! உயிரையே பறித்து விடக் கூடியது.
ஒரு முறை செய்வதற்கு ஆறு மாத காலம் மூச்சடக்கும் யோகப் பயிற்சியை கடுமையாய்ச் செய்ய வேண்டும். ஒரு முறை இப்பாய்ச்சலை செய்து விட்டால், மீண்டும் இந்த வித்தையை ஆறுமாதத்திற்குப் பிறகு தான் செய்ய வேண்டும். அதுவன்றி உடனேயே செய்யத் துணிந்தால் மரணம் அந்தக் கணமே...

போதும்.. இந்த விச்சுளிப் பாய்ச்சலுக்காக மட்டுமே இவளைத் தயார் செய்து அவளை வேறொன்றுக்கும் லாயக்கில்லாமல் அடித்து விட்டாயோ?”

இல்லைப் பிரபு.. அவள் வயதுப் பெண்கள் கற்க முடிந்தவை அத்தனையும் கூடவே கற்று வந்திருக்கிறாள். அது மட்டுமல்ல பிரபு! பாக்கள் புனைவதிலும் முறையாக தமிழாசான்களிடம் பாடம் கேட்டிருக்கிறாள்.

பாப்புனையவும் வருமோ.? அதைச்சொல்லு.. அதைச்சொல்லு...
நீங்களனைவரும் இன்று முதல் எம் விருந்தினர்.. விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள். நாளை முதல் காலை வேளையில் கொஞ்ச நேரம் தூங்காவின் தமிழைக் கேட்போம்..

பிரபு! விச்சுளிப் பாய்ச்சல் எப்போது வைத்துக் கொள்ளலாம்?”

சொல்கிறேன்... கொஞ்சம் போகட்டும்.

அடுத்த ஒரு வாரகாலம் துங்காவின் செய்யுளியற்றும் வேகத்திலும், செறிவான கருத்துக்களிலும் வள்ளல் தன்னை மறந்தார். துங்காவின் மேல் அவருக்கு அபிமானமும், வாஞ்சையும் தோன்றி மகளாகவே நடத்தலுற்றார். அடுத்த வெள்ளிக் கிழமை துங்கா விச்சுளிப் பாய்ச்சல் வித்தை நிகழ்த்த முடிவாயிற்று. பறையறிவித்து ஊரெல்லாம் கூடியது.

இருளன் கணீர்க் குரலில் பாய்ச்சல் நிகழும் விதம் குறித்து அறிவித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் கீழே பாய்ந்து ,ஒரு நொடியில் காதணியைக் கைக்கொண்டு மீண்டும் மூங்கிலின் உச்சிக்கு துங்கா சென்று விடுவாள் ஆதலின் தக்கையில் வைத்த கண் போல் பாய்ச்சலைக் காணுமாறு வேண்டினான்.

கரகரவென துங்கா மூங்கிலின் உச்சிக்கு சென்று விட்டாள்.
வள்ளல் மூச்சைப் பிடித்துக் கொண்டார். இந்திர ஜாலம்...
காதணியை எறிந்ததென்ன? பாய்ந்த வேகமென்ன? அது தரையைத் தொடுமுன்னர் கைக்கொண்டதென்ன? மீண்டும் மூங்கில்முனை சேர்ந்ததென்ன??

ஜனங்கள் கையொலி எழுப்ப மறந்து வாய்ப் பிளந்து நின்றார்கள்.

சடையநாத வள்ளல் மனம் மகிழ்ந்து பலப்பல பரிசுகள் நல்கிக் கொண்டாடினார். இருளன் கூட்டம் விடைப் பெற்றபோது வள்ளல் நெகிழ்ந்து போனார். துங்கா! கவனமாய் இரு தாயே! கவிபுனையும் ஆற்றலை பெருக்கிக் கொள். கூடிய விரைவில் இங்கு மீண்டும் வா! வரும் போது கவிதையோலைகள் ஒரு வண்டி கூட வர வேண்டும் புரிந்ததா?”

துங்கா கண்ணீரோடு விடை பெற்றாள். வள்ளலின் அன்பும் தமிழ் போற்றும் அருங்குணமும் அவளுடைய உள்ளமெல்லாம் நிறைந்து நின்றது.

அடுத்து இருளன் கூட்டம் பாண்டிய நாடு சென்றது. மதுரையில் வழுதிப் பாண்டியனிடம் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்தி பரிசில் பெறல் இருளனின் நீண்ட நாள் கனவன்றோ.?

மதுரை வந்த பின் மன்னன் முன்னர் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்ச்சியும் முடிவானது.

எள்போட்டால் எள்விழாத கூட்டம். மன்னன் பரிவாரங்களுடனும், குறிப்பாகதன் புதிய ஆசைக்கிழத்தியுடனும் வந்தமர்ந்தான்.

வழுதிக்கு கட்டியம் கூறி முடித்தவுடன் இருளன் விச்சுளிப் பாய்ச்சல் நிகழும் விதம் பற்றி சொல்லி, கண்ணிமைக்காமல் காண வேண்டினான்.

மூங்கிலேறிய துங்கா பாய்ச்சலை வெற்றிகரமாய் முடித்தும் விட்டாள். அவள் பாயத்தொடங்குமுன் தானா வழுதியின்
ஆசைநாயகி அவனை அவள்பால் திருப்ப வேண்டும்?! 
பாய்ச்சலில் ஆனந்தித்து மக்கள் எழுப்பிய ஆரவாரம் வழுதியை திடுக்குறச் செய்தது.
என்ன?நான் பார்க்கு முன்னரே பாய்ச்சல் நிகழ்ந்து விட்டதா?’

மீண்டும் விச்சுளிப் பாய்ச்சல் நிகழ்த்த துங்காவுக்கு ஆணையிட்டான்.

மறுபடியும் ஆறுமாதம் கழித்தே நிகழ்த்தமுடியும் இல்லையெனில் தான் மாள்வது உறுதியென்ற துங்காவின் இரைஞ்சல்களுக்கு அந்தக் கல்நெஞ்சன் செவி சாய்க்கவில்லை.

இது என் ஆணை! செய். என்று உருமினான் வழுதி.

வேறு வழியில்லை. செய் அல்லது செத்து மடி என்பது மன்னன் உறுதி. செய்தாலோ செத்து மடிவதும் உறுதியன்றோ.

துங்கா சுற்றுமுற்றும் பார்த்தாள்.இருளனும் கூட்டமும் அரற்றிக் கொண்டிருந்தார்கள். ஜனங்களோ திகிலோடு நின்றார்கள். வான் நோக்கி பிரார்த்தித்தாள். மரணத்தின் மடியில் சாய்ந்து விட்ட அந்தத் தருணத்தில் கூட,தன் மீது அன்பு பொழிந்த சடைய நாத வள்ளலை நினைவு கூர்ந்தாள். அவள் பாப்புனையும் திறன் மீது அவர் கொண்ட மதிப்பை எண்ணினாள். வானத்தில் அப்போது ஒரு நாரைக் கூட்டம் பறந்து கொண்டு இருந்தது. புள் வீடு தூதாய் அக்கணமே செய்யுள் புனைந்து உரத்துக் கூவினாள்.

மாகுன் றனையபொற் தோளான் வழுதிமன்
                   வான்க ரும்பின்
      பாகொன்று சொல்லியைப் பார்த்தெனைப் பார்த்திலன்
                          பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள் புழற் கோட்டம்
                      புகுவ துண்டேல்
சாகின்றனள் என்று சொல்லீர் அயன்றைச்
                        சடையனுக்கே

விண்தொடு கழைமீ மிசையோர் விச்சுளிப்பாயும் வித்தை
கண்கொடு காணான் வேற்றுக் கணிகைபால் கருத்தைப் போக்கி  
எண்கெட இருகால் ஈண்டே இயற்றுமோர் ஏவல் ஏற்றே
பெண்விடும் ஆவி அன்னோன்  பெருங்கழல் வாழ்த்திற் றென்னீர்


கூட்டம் திகைத்தது.

மூங்கிலேறினாள். மூச்சை அடக்கினாள். காதணியை எறிந்தாள். சரிந்தாள். சடலமாய் வீழ்ந்தாள். திரும்பிப் போன வழுதியின் செவிகளில் மக்கள் இட்ட சாபம் விழுந்திருக்காது தான்.

விச்சுளிப் பாய்ச்சல் பெண் குறித்து ஒரு கழைக்கூத்தைத் தாண்டி செல்லும் போது என் தமிழையா சொன்னதுவும், அப்பாடல்கள் தேடிப் படித்த தருணம் கண் கசிந்ததுவும் நெஞ்சில் நீங்கா நினைவுகள்.

சாகும் அந்தக் கணத்திலும் ஒரு வள்ளல் பெருமை சொல்கிறாள் எனில் அவன் எத்துணை உயர்ந்தோனாய் இருக்கவேண்டுமெனக் கருதி, பாண்டியன் தன் புலவர்களை வள்ளல் சடையனை சந்தித்து வரப் பணிக்கிறான். அவர்கள் மீண்டு, சடையன் பெருமை சொல்லும் தனிப் பாடலும் மூன்றுண்டு. பிறிதொரு சமயம் அவற்றைப் பார்ப்போம்.



ஞாயிறு, ஜூன் 03, 2012

பிள்ளைக் கனியமுதே!


மா..ர்ட்டீனா... நவரத்தி...லோவா

கருப்புவெள்ளை டயனோரா டீ.வி யில் பிரென்ச் உச்சரிப்புக் காமெண்டரியுடன் க்ரீஸ் எவர்ட்டும் மார்டீனாவும் ஆத்தாடி பாவாட காத்தாட என்று டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஞாயிற்றுக் கிழமை காலை சுகமாகத்தான் துவங்கியது. ஹாலில் தரையில் அமர்ந்து கண்கள் டீ.வியிலும், கையில் பீலரும் இருக்க, உருளைக்கிழங்கின் தோலைநீக்கிக் கொண்டிருந்தேன். கர்ப்பிணியான மனைவிக்கு ஒத்தாசை செய்கிறேனாக்கும்.!

ஹாலுக்கும் இடைக்கழிக்கும் மத்தியிலான தளத்தின் படிக்கட்டு தான் என் மூத்த வாரிசின் சிம்மாசனம். மூணு வயசு இன்ஜினீயர். கையிலிருந்த கார் பொம்மையை எப்படி உடைக்கலாம் என்ற யோசனையுடன் கால்களை ‘M’ எழுத்தைப் போல் பரப்பிக் கொண்டு அதை உருட்டியவாறு இருந்தான்.



என்ன.. ஆச்சா என்று ஹாலுக்கு கையில் காப்பியுடனும், வயிற்றில் இரண்டாம் வாரிசை சுமந்தபடியும் வந்தாள் என் தர்ம பத்தினி.. இந்த முறை கண்டிப்பா உனக்கு பொண்ணு தான்டீ.. வயறு நல்லா சரிஞ்சிருக்கு பாரு என்று கீழ்வீட்டு ஜம்பகா மாமி நேற்று அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. மகளுக்கு நல்ல பேரா வைக்கணும்.... கண்ணம்மா, நிவேதிதா,மதுமதி,ஓவியா,கவிதா, தாக்ஷாயினி,திரிபுரா....

காலங்காத்தால டென்னிஸ்... விவேக்குக்கு பல்லு தேய்க்க சொல்லிக் குடுங்கன்னு தினம் உங்களுக்கு சொல்றேன். அதைக் கேக்காதீங்க. இந்த டீ.வியை முதல்ல நிறுத்துங்களேன்.

அவன் பெயர் பிரஸ்தாபிக்கப் படுவதைக் கேட்டு நிமிர்ந்த விவேக் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

முழியத் தோண்டிடுவேன் கம்மனாட்டி. கண்ணா அடிக்கிறே?”

மீண்டும் கண் சிமிட்டும் குறும்பனைப் பார்த்து சிரித்தாள். உங்கப்பா கிட்ட இதெல்லாம் தான் கத்துக்கலாம். நல்லா கண்ணடி..  “ஏங்க இந்த சனியனை நிப்பாட்டுங்களேன்.

இருடி! உலகமே இதைப் பார்த்துகிட்டிருக்கு. அயனான மேட்சு.. படுத்தாத

போறும் உங்க ரசனை. நீங்க ஆம்பளைங்க விளையாடுற டென்னிஸ் பாக்கறதை நான் கண்டதே இல்லையே!

கிராதகி!

மோகன் சார்! கீழ் வீட்டு ஜக்கு சார் குரல். விவேக்கு! அப்பா என்னடா பண்றா..

உள்ளே கைகாட்டி ஆலூக்கு சேவீங் பண்றா என்றான் சின்னக் கள்ளன்.
ஆலூக்கு ஷேவிங்கா?!” வியப்புடன் கேட்டபடி உள்ளே வந்தார்.

வாங்க சார்!

அடடே! இதத்தான் சொன்னியா என்று என் கையில் தோலுரிந்து
வெளுத்திருந்த உருளைக் கிழங்கைப் பார்த்து பெரிதாக சிரித்தார்.

தூக்கினியூண்டு இருந்துகிட்டு என்னமா யோசிக்கிறான் பாருங்க படவா! சரியானப் பயடா நீ!

என் மனைவி பூரிப்புடன் கேட்டாள் கொஞ்சம் காபி தரவா மாமா?”

மகராசியா குடும்மா.

சார் ! உங்கப் பயலுக்கு நேத்து நான் முத்தம் கொடுத்தேன். சட்டையால கன்னத்த தொடச்சிக்கிட்டான். ஆனா பாருங்கோ.. மாமியைத் தேடிப் போயி முத்தம் கொடுக்கிறான். பொல்லாதப் பய!.

அடியே நான் என்ன பண்ணுவேன். என்னைப் பார்த்து முழிய உருட்டுறே?

சொல்லுங்க சார். என்ன சமாச்சாரம்?”

ஏன் ஓய்? சங்கரா ஹால்ல வருஷப் பிறப்பு கவியரங்கத்துலே போன வாரம் கவிதை சொல்லி பின்னியெடுத்துட்டீங்களாம்? நேத்து லேக் மார்க்கெட்ல மூ.நா. சொல்லி சொல்லி மாய்ஞ்சி போயிட்டார். எனக்கு ஒரு வார்த்த சொல்லக் கூடாதோ? நான் ரசனைகெட்ட அசடுன்னு இருந்துட்டீங்களா? சண்டை போடலாம்னு தான் வந்தேன். உங்கபிள்ளை போட்ட போடுலயும், ஜெயந்தி கொடுத்த காபிக்காகவும் தான் உம்மை விடுறேன். பொழைச்சு போம்.

சாரி சார்! இது ஒரு பெரிய விஷயமான்னு உங்க கிட்டே சொல்லத் தோணலே. உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும்னு தெரிஞ்சிருந்தா கூப்பிடாம இருந்திருப்பேனா?”

போகட்டும் இந்த சின்ன வயசுல சபைலே கௌரவம் கிடைக்கிறதுன்னா லேசு பட்டதா? மூ.நா உங்களைப் பத்தி சொன்னப்போ எனக்கே அந்த கௌரவம் கிடைச்சா மாதிரி இருந்தது. எங்க தான் உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கோ. பெரிய விஷயம்.. பெரிய விஷயம்..."

தேடி வந்து பாராட்ட உங்களுக்கு தான் சார் பெரிய மனசு..

இந்திரா காந்தி, எம் ஜீ ஆர், துர்கா பூஜை, மாமியின் முட்டிவலி என்று அலசிவிட்டு கிளம்பினார். அடேய் குட்டிப் பயலே! என்னோட வர்றியா?

விவேக் அவரைப் பார்த்து கண் சிமிட்டினான்...பாலுக்கு கோபம் வந்துச்சு என்றான்.

என்னடா சொல்றே?”

எனக்கும் புரியவில்லை.

அவனுடைய ஆஸ்தான மொழிபெயர்ப்பாளினியான என் மனைவி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அதுவா! காலைலே இவனை இடுப்புல வச்சுக்கிட்டு பால் காய்ச்சிக் கொண்டிருந்தேன்.பால் பொங்கி வர்றதைப் பார்த்து பாலுக்கு கோவம் வந்துடிச்சிங்கறான். அதைத்தான் உங்களுக்கு சேதியா சொல்லியாறது

பலே பலே! கவிஞன் பிள்ளையில்லையா? என்னமா யோசிக்கிறான்? வரேன் சார்!  

பெருமையாய்த் தான் இருந்தது.

......................

இப்போது யோசித்துப் பார்க்கிறேன்...

என் பிள்ளை கவிதை எழுதுவதில்லை... கண்ணடிப்பதில்லை...

அதுக்கெல்லாம் தான் நானிருக்கின்றேனே!