வியாழன், செப்டம்பர் 29, 2011

தொழுவத்து மயில்


ஏங்க்கா! பொண்ணு அம்மாம் அளகாமே?”

அத்தையேண்டி மேரி கேக்குறே? போன கிறிஸ்மஸப்போ பிரபாத்ல சிவாஜிபடம் ஒண்ணு பாத்தோமே?”

ஆமாங்க்கா! உயர்ந்தமனிதன்...

ஆங்! அச்சு அசப்பா அதுல வர்ற குட்டிமாதிரியே தான் இருக்கா

வாணிஸ்ரீயாக்கா?”

த.. அது எதுக்கு தொம்ப மாதிரி.? மயிலு கணக்கா கழுத்த சிவுக்சிவுக்குன்னு வெட்டிக்கிட்டு ரெட்டைபின்னல் போட்டுகிட்டு சிவ்க்குமார் கூட ஆடுமேடி? எது என்ன பாட்டு எளவு வாய்க்கு வல்லே

அட அதாக்கா. என் கேள்விக்கு என்னா பதில்ன்னு அயனான பாட்டக்கா. அந்தப் பொண்ணு பாரதி. அய்யோ..அம்சமான பொண்ணுக்கா. என்று வியந்த மேரி சற்று தாழ்ந்த குரலில் தொடர்ந்தாள். பாரதிக்கு கழுத்துக்கு கீழே ஒரு மச்சம் இருக்கும். அதான் அவ்ளோ அதிஷ்டம் அதுக்கு! ஏங்க்கா? உங்கண்ணன் மரிமவளுக்கும் எதுனா அப்படி மச்சம் இருக்கா பாத்தியாக்கா?” என்றாள் பீரிடும் சிரிப்புடன்

 மரிமவளுக்கு மச்சம் இருக்கிறதோ இல்லையோ, அண்ணன்  புள்ளை கிறிஸ்டிராசுக்கு உடம்பு முச்சூடும் மச்சம். அவன் ஈரப் பனை நெறத்துக்கும் மூஞ்சிக்கும் இப்பிடியா ஒரு அபசரஸ்ஸு வந்து மாட்டும்? எத்தனை கொடுப்பினை எங்கண்ணனுக்கு?”

மேற்திண்ணையில், தன் அத்தை தெரேசம்மாளுக்கும், அண்டைவீட்டு மேரிக்கும் நிகழ்ந்த உரையாடலை உள்ளறையில் படுத்திருந்த கிறிஸ்டிராஜும்  கேட்டான். அத்தை குறிப்பிட்ட மச்சக்கார மாப்பிள்ளையும் அவனேதான். தெரேசம்மா சொல்வது உண்மை. கிறிஸ்டிராஜ் நல்ல கருப்பு.. சிறுவயதில் கண்ட வைசூரி உடம்பில் பல அம்மைத்தழும்பு குழிகளை விட்டுச் சென்றிருந்தது.. மூக்கின் மேலேயே மூன்று குழிகள்.. ரெண்டு வருஷமாய் பட்டை ப்ரேமுடன் மூக்குக் கண்ணாடிவேறு.. அம்மாவிடமிருந்து வந்த முகக்களையும்,சிரித்தமுகமும் தான் இதையெல்லாம் நிரவியிருந்தது .

ஆனால் போனவாரம் என்னென்னவெல்லாம் நடந்து விட்டது. ஒரு சொர்க்க வீச்சில், நினைத்தே பார்த்திராத அவன் திருமணமும் முடிந்து, தன் தகுதிக்கு எந்த வகையிலும் எதிர்பார்க்க முடியாத ஒரு தேவதையை தனக்கு வாழ்க்கைத்துணையாய் வழங்கிவிட்டு போய்விட்டது.

கர்த்தரே! இதென்ன கருணை! என்னுடன் விளையாட திருவுளம் கொண்டீரா?. இந்த அசடனுக்கு ஒரு பொக்கிஷத்தை தந்து சென்றீரே. என்ன உமது உத்தேசம்!  

ஒரு வாரமாய் இதைத்தானே கிறிஸ்டிராஜ் ஆண்டவரிடம் கேட்டுக் கொண்டிருக்கிறான்?

போன வெள்ளிக்கிழமை, அப்பா சவரிமுத்து  மற்றும் சில உறவினரோடு, தன் தாய்வழி சொந்தமான அந்தோணிசார் மகள்  வனரோஜாவின் கல்யாணத்திற்காய் திண்டிவனம் சென்றிருந்தார்கள். தூரத்து சொந்தம் தான்.ஆனால் சவரிமுத்துவும் அந்தோணிசாரும் நெருங்கிய நண்பர்கள். அவ்வளவு ஏன்? இப்போது கிறிஸ்டிராஜ் பார்த்துக் கொண்டிருக்கும் தமிழாசிரியர் வேலைகூட அந்தோணிசாரின் பரிந்துரையில் கிடைத்தது தானே?

எல்லா உறவினரும் நண்பருமாய்க் கூடியிருந்த நேரம். மாப்பிள்ளை பம்பாயில் வேலைபார்க்கிறாராம். வசதியான குடும்பமாம்.

அந்த அதிகாலை ,திடீரென்று பெரியதோர் சலசலப்பு அந்தோணிசார் வீட்டாரிடம் புறப்பட்டது. மாப்பிள்ளை கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்திவிடும்படியும், தான் வேறொரு பெண்ணை விரும்புவதாயும் அவன் வீட்டாரிடம் தகவல் சொல்லி கடைசி நேரத்தில் அங்கு வருவதைத் தவிர்த்துவிட்டான். பையனின் தகப்பனார் நேரில் வந்து அந்தோணிசாரிடம் சொல்லி அழுதுவிட்டு தன்னை மன்னிக்கும்படி பலவாறாய்க் கெஞ்சிவிட்டு கிளம்பிவிட்டார். பிள்ளையை பெற்ற பாவத்திற்கு  வேறு என்ன செய்ய முடியும்?

அந்தோணி உடைந்து போய்விட்டார். விஷயம் கேள்வியுற்று அவரைத் தேற்றவெண்ணி சவரிமுத்து அந்தோணியை  நெருங்கினார்..

கலங்காதே அந்தோணி! ஆண்டவன் ஏதோ பேரிழப்பைத் தடுக்கத்தான் இந்த அளவில் நிறுத்தினார். நம் வனரோஜாவின் அழகுக்கும் குணத்துக்கும் ஆயிரம் மாப்பிள்ளைக் கிடைக்கும். நானே கொண்டுவந்து நிறுத்துகிறேன் பார் ஒரு ராஜகுமாரனை!

என்ன செய்வேன்.. என்ன செய்வேன்! சவரிமுத்து! இந்த திருமணத்திற்கு எவ்வளவு பேர் கூடிவிட்டார்கள் பார் ? இன்னமும் கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் தெரிந்து கொல்லென்று போய்விடாதா?”

திடீரென உறுதியாய் எழுந்து நின்றார் அந்தோணி. ஒரு.. ஒரு நிமிஷம் இங்கேயே இரேன்.. இதோ வந்துவிட்டேன்.

அவர் வெளியே வர பதினைந்து நிமிடம் ஆயிற்று.

ஓடி வந்து சவரிமுத்துவின் கைகளைப் பிடித்துக் கொண்டார் அந்தோணி.

சவரி! நீ சொன்னயே ஒரு ராஜகுமாரனைக் கொண்டு வருவதாய்... உன் வீட்டு ராஜகுமாரனை இப்போதே ஏன் வனரோஜாவுக்கு கட்டிவைத்து என் மானத்தைக் காப்பாற்றுவாயா?”

விக்கித்துப் போனார் சவரிமுத்து. அந்தோணி! என்ன பேசுகிறாய் என்று தெரிந்துதான் பேசுகிறாயா? வனரோஜா எங்கே?இவன் எங்கே? அவளுக்கு எந்தவகையிலும் கிறிஸ்டி பொருத்தமில்லையே? உணர்ச்சிவேகத்தில் முடிவெடுக்காதே. உன் பெண் இதற்கு சம்மதிப்பாளா?” படபடவென்று வந்தது சவரிமுத்துவுக்கு.

வனரோஜாவுக்கு சம்மதம். நம்ம கிறிஸ்டிக்கென்ன? என்னப்பா கிறிஸ்டிராஜ்? வனரோஜாவை ஏற்றுக்கொள்ள சம்மதமா? சொல்லுப்பா அந்தோனியின் குரல் உடைந்து கேவலாயிற்று.

ஐயா... நான் போய் உங்களுக்கு... கிறிஸ்டிக்கு வார்த்தைகள் வரவில்லை.

சவரிமுத்துவின் தோள்களை இறுக்க அணைத்தவாறே தனியே அழைத்துச் சென்றார் அந்தோணி. திரும்பிய இருவர் கண்களிலும் கண்ணீர்.

கிறிஸ்டி! வனரோஜாவை மருமகளாய் ஏற்றுக் கொண்டுவிட்டேன். என் நண்பனுக்கு வாக்குக் கொடுத்து விட்டேன். எங்கள் இருவர் மானமும் உன் ஒரு சொல்லில்.

சரியப்பா தீனமாய்த் தேய்ந்தது கிறிஸ்டியின் குரல் .

அந்த நொடியிலிருந்து தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியும் திராணிழந்து சாவிகொடுத்த பொம்மைபோல் ஆனான். யார்யாரோ சொன்னவண்ணம் செய்தான். சொல்லச் சொன்ன வசனங்களைச் சொன்னான். குலுக்கிய கரங்களும், வாழ்த்திய இதழ்களும் அவனை கேலி செய்கிறதா? வனரோஜாவுக்கு நான் கணவனா? மயிலுக்கும்,மாட்டிற்கும் கல்யாணமா? கர்த்தரே!

திருமணம் எதிர்பாராமல் நடந்துவிட்ட படியால் உள்ளூர் நண்பர்களுக்காய் ஞாயிற்றுகிழமை ரிசப்ஷன் போல ஏற்பாடு செய்வதற்காய் சவரிமுத்து வெளியில் போயிருக்கிறார். தலைவலி என்று இவன் உள்ளறையில் படுத்தபடி. இன்னமும் ஏதெதையோ திண்ணையில் அலசிக்கொண்டிருந்தாள் தெரேசம்மாள்.

சவரிமுத்துவின் ஏற்பாட்டின் பேரில், திருமணம் முடிந்தவுடன் வனரோஜா அவள் வீட்டிலேயே அந்தவாரம் இருந்தபின்னர்  நாளை இங்கு அந்தோணி அழைத்து வந்து விடுவார். இந்த தொழுவத்துக்கு கலாபமயிலை இழுத்துவந்து கட்டப் போகிறார்.

......................................................

...........................................................................இப்படித்தானே தன் வனரோஜா தன்னைவந்து சேர்ந்தது? போனமாதம் தானே மணநாள் வெள்ளிவிழா கொண்டாடினோம்.. இத்தனை வருட தாம்பத்தியத்தில் வனரோஜா தன்னை ஒரு சேயாய்,மாணவனாய்நண்பனாய் எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டாள்? எவ்வளவு உற்சாகம் கொப்பளிக்கும் அவள் செயல்பாடுகளில்..

தமிழய்யா கிறிஸ்டிராஜுக்கு தாகம் எடுத்தது.

அவருடைய வனரோஜா ஸௌந்தர்யம் துலங்க கண்முன்னே...

ரோஜா மெல்லக் கூப்பிட்டார். தன் குரல் தனக்கே  கேட்கவில்லை.

தன்முன்னே நீண்ட இரவு இரைவிழுங்கிய மலைப்பாம்பாய் மெல்ல புரண்டபடி இருக்கிறது.

அவர்களிருவரும் வாழ்ந்த கணங்களை அசைபோட்டபடி,அவள் அருகாமையில், முட்டிமோதும் நினைவலைகளை வெறித்தபடி எங்கோ சஞ்சரித்தார். காலம், நிகழ்வு எல்லாம் பனிக்கட்டியாய் உறைந்து ஏதோ ஒரு நினைவுநாடியின் மெல்லிய துடிப்பொன்றே அவரையும்வனரோஜாவையும் ,இந்த உலகத்தையும் பிடித்து வைத்திருக்கிறது இந்தக் கணம்........

(தொடரும்)

ஞாயிறு, செப்டம்பர் 18, 2011

ஒரு சிகிச்சையின் ராகம்


அண்மையில் அறுவை சிகிச்சைக்காய் மருத்துவமனையில் நானிருந்தபோதுவலைப்பூவிலும்,மின்னஞ்சலிலும்,அலைபேசியிலும் விரைவில் நலம்பெற வாழ்த்திய அத்துணை அன்பு நெஞ்சங்களுக்கும் என் நன்றியும் அன்பும்...

நலந்தானா?’ என்று உலகத்து சோகமெல்லாம் முகத்தில் தாங்கி துடிக்கும் பத்மினியைப் பார்த்து, உதடுகள் துடிக்க கண்கள்கசிய உணர்ச்சிக்குவியலாவாரே நடிகர் திலகம் சிவாஜி.......
நானும் அவர் போலானேன்.

எனக்கு அறுவைசிகிச்சையான உடற்பகுதி அப்படி ஒன்றும் பெருமையாய் சொல்லிக் கொள்ளக் கூடிய இடம் இல்லை.

பிராஸ்டேட் என்லார்ஜ்மெண்டுக்காக அறுவைசிகிச்சை நடந்தது. கடந்த சிலமாதங்களாகவே மூச்சா போவது பெரிய வேதனையாக இருந்தது. போனாமோவந்தோமா  என்றில்லாமல், கொஞ்சம்கொஞ்சமாக மீண்டும்மீண்டும் போகவேண்டியிருக்கும்.

அண்மைக்காலமாய், அதிகாரிகளுக்கு ஒரு செஷன் ஒன்றரை மணி நேரம் எடுத்தபின்  பரபரப்பாய் டாய்லெட்டுக்கு ஓடுவேன். வகுப்பு முடிந்தவுடன் வழக்கமாய் சந்தேகம் கேட்கவோ, சிலாகிக்கவோ சூழ்ந்து கொள்ளும் அதிகாரிகளைப் பார்த்து முட்டிக்கிச்சுடா, நான் வழியவிடுமுன்னர் வழியைவிடு என்று கத்தவேண்டும் போலிருக்கும்.

டாக்டர் அறிவுரையின்படி,ஹைதராபாதில் அறுவைசிகிச்சை செய்து கொண்டேன். ஆபரேஷன் ஆனவுடன் தனியறையில் விட்டார்கள்.இரண்டு நாள் டிரிப்ஸ் மட்டும்தான். வலி பின்னியெடுத்தது.... இப்போதும் பின்னுகிறது.. இன்னமும் ஒரு வாரம் பின்னுமாம்.. பின்னட்டும்...

என் தங்கமணியோ ஆடிப்போய்விட்டாள்.. இரண்டாம் நாள் சாப்பிடலாம் என்றார்கள். பூமாதிரி இட்டிலியை ஊட்டிவிட்டாள். எனக்கோ வெட்கமும், காதலும் ஒரேநேரம் முட்டிக் கொண்டது. சீச்சீ.. இதுவுமா முட்டிக்கணும்...

சின்னதாய்க் கண்ணடித்தவாறே,”எப்போ எனக்கு கடைசீயாய் ஊட்டிவிட்டே சொல்லேன்!

சாப்பிடும் போது பேசினா புரையேறும் என்று பதிலாய் அவள் சொன்னாலும், அவள் பார்வையோ வாயிலேயே ஒண்ணு போட்டேன்னா என்பது போலிருந்தது. அதற்குப்பின் பானிபூரிக்காரன் முதலில் கொடுத்ததை விழுங்குமுன்பே அடுத்தபூரியை கையில் திணிப்பானே அந்த மாதிரியில்லே மீதி இட்லியை வேகமாய்த் வாயில் திணித்தாள்?

என்னுடைய நெருங்கிய நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு.

இப்போ எப்படி இருக்கே?”

ரொம்ப வலிக்குதுடா!

சிரித்தான்... காலேஜில இன்பவலின்னு ஒரு கவிதை எழுதினே   தெரியுமா?”

நானே மறந்து போனதையெல்லாம் இன்னுமாடா ஞாபகம் வச்சிருக்கே?”

மீண்டும் சிரித்தான்.. பிராஸ்டேட் பிரச்னை அறுபது வயசுக்கு மேல தானே வரும்? சரிசரி.. நீ பிஞ்சிலேயே பழுத்தவன் இல்லையா? அது இப்ப வந்ததும் ரைட்டுத்தான்!

உதைபடுவே! அது என்ன வலி கவிதை?”

படுவம் வந்த விரலுக்கு எலுமிச்சம்பழம் சொருக போறப்போ, நீயிட்ட மருதாணியை மறைக்கும்னு பழத்தை வேணாம்னு உருட்டிவிடுவே..

நினைப்புக்கு வரல்லையே?”

வரவேணாம்... இப்போ வந்தா ரத்தக்களரியாயிடும்.

சரி!அப்புறமா பேசுடா..

,கே! சிநேகம் காட்டும் செவிலிப்புறாவேன்னு நர்ஸைப் பார்த்து கவிதை எழுதாம பொத்திக்கிட்டு படு....

சரிடா! சிரிக்க முடியலே! பை !!

எவ்வளவு வருஷமானால் என்ன? நட்பு மனத்தை லேசாக்கி விடுகிறது..

இன்பவலி கவிதை நினைவுக்கு வரவேயில்லை.

மாறாக தூக்கம் வராமல் இன்பவலி பின்னத் தொடங்கியது.

என்னப்பா? வலிக்குதா?" அருகிருந்த மகனின் கரிசனம்..

நீ தூங்கு...” ஹெட்போனை மாட்டிக் கொண்டு படுத்தான்.

வலி, மயக்க மருந்து, வலி மாத்திரையால் வந்த மப்பு..

கண்கள் சொருகத் தொடங்கின....

டி.எம்.எஸ் ,சுசீலாம்மா இருவரும் என் படுக்கைக்கு அருகில் வந்தார்கள்..

செல்லத்துக்கு தூக்கம் வரல்லியா?”

இல்லேம்மா.... ரொம்ப வலியா இருக்கு..

சரி.. நாங்க ரெண்டு பேரும் கொஞ்சம் பாடுவோமாம்.
சமர்த்தா தூங்கிடுவியாம்

ரொம்ப தேங்க்ஸ்ம்மா

இன்னமும் கொழந்தையாவே இருக்காம் பாரு...
இது டி.எம்.எஸ்,வாஞ்சையாக என் தலையைத் தடவியபடி.....

சரி. சுசீலா ஆரம்பிங்க..

விழியே விழியே உனக்கென்ன வேலை. விருந்துக்கு வரவா நாளைக்கு மாலை...... பாடல் எங்கும் நிறைகிறது.

வலிக்குதும்மா

சரி இதைக் கேளு... ஞாயிறு என்பது பெண்ணாக...

 நாலுநிமிட நந்தவன உலா இருவரின் கைகளையும் கோர்த்தபடி..

போறுமா?”

ஹூஹூம்

பூந்தோட்டக் காவல்காரா பூப்பறிக்க இத்தனை நாளா?

உம்ம்ம்ம்....... இன்னொரு பாட்டு பிளீஸ்

பாட்டோடு பொருள் இருந்தென்ன அரங்கேறும் நாள் வரவேண்டும்

இன்னம் ஒண்ணே ஒண்ணு பாட்டு.. குழறும் குரலில்...

நீலநிறம்,வானுக்கும் கடலுக்கும் நீலநிறம்......

இன்னம் கூட ஒண்ணு.....

தொட்டால் பூ மலரும் தொடாமல் நான் மலர்ந்தேன்

அந்த அத்தைமக பாட்டு டி.எம்.எஸ்..

ஒத்தையடிபாதையிலே அத்தமக போகையிலே காலடியோ மண்மேலே.. அம்மாடி அவ கண்ணடியோ என் மேலே

சூப்பர். ஒண்ணே ஒண்ணு இன்னும்.

டேய்.இதுதான் கடைசி.. இனமே கேட்டா அடிதான் இது டி.எம்.எஸ்

சரி..

மனம் என்னும் மேடை மேலே,முகம் ஒன்று ஆடுது

கானமழை பொழிந்து... சிறுதூறலாய் அதன் ரீங்காரம் இன்னும்...

டி.எம்.எஸ் ! ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா இது என்ன ராகம்? ஆபோகியா? மத்யமாவதியா?”

யோசிக்கும் டி.எம்.எஸ்

பாடுங்க! ராகத்தைப் பிடிப்போம்?”என்றேன்.

டி.எம்.எஸ் துவங்க சுசீலாம்மா தொங்கா! என்றபடி உடன்பாடி முடித்தார்கள்.

எங்கோ அமிழ்ந்தபடி நான் மெல்லமெல்ல...


இன்பவலி....
    செவிலிப்புறா....
        நீயிட்ட மருதாணி...
               எலுமிச்சம்பழம்.....
                    கதீட்டர்.... ஐ.வீ ப்ளூயிட்
                             சுசீலாம்மா .....
                                      டி.எம்.எஸ்... டி.எம்.எஸ் 

  

புதன், செப்டம்பர் 07, 2011

பொன்வீதி

கொடியில் உணர்த்தியிருந்த தாவணியும் பாவாடை சட்டையும் இன்னமும் முழுதாய்க் காயவில்லைமணி மூணாகி விட்டது. நாலுமணிக்கு  சிவா வந்துவிடுவான்

கிரைண்டரின் பெல்ட்டையெல்லாம் இழுத்துவிட்டு, அவன் வருவதற்குள், காலையிலிருந்து காத்திருக்கும் இரண்டு பாத்திரம் அரிசி, உளுந்து ஊறலை அரைத்த பின்தான் முகம் கழுவிக்கொள்ள வேண்டும். ஜானுவுக்கு பரபரப்பாய்  இருந்தது.

ஒரு மில்குமாஸ்தாவுக்கு மகளாகப்பிறந்து வளர்ந்த இந்த பதினைந்து வயதிற்குள் ஜானுவுக்கு அசாத்திய நிதானமும் ஒரு முதிர்ச்சியும் வந்திருந்தது. அவளுக்குப்பின் மூன்று தங்கைகள், ஒரு தம்பி வேறு. கடந்த மூன்று வருடங்களாய் பள்ளி விடுமுறை நாட்களில் மேட்டூரிலிருந்து சேலம் அத்தைவீட்டுக்கு கூடமாட மாவு அரைக்க  ஒத்தாசையாக வந்து கொண்டிருக்கிறாள். இல்லையா பின்னே? தட்டினாமுட்டினா அப்பாவுக்கு கைமாத்துத் தரும் அத்தைக்கு இந்த பிரதியுபகாரமாவது பண்ணவேணும் இல்லையா?

ஜானு... ஜானும்மா...” பின்கட்டிலிருந்து அத்தை கூப்பிட்டாள். தொண்டைக்கட்டின ஆம்பிளைக்குரல் அத்தைக்கு..

முதலியார் வீட்டு மாவை அரைச்சுடேன் கொழந்தே

சரித்தே... டீ போட்டுட்டு அரைக்கிறேனே?”

அதுவும் சரிதான்.. மகராசியா இரு.”

ஸ்டவ்வில் தேநீருக்காய் நீரைக் கொதிக்கவிட்டாள்.
 ‘சளக்புளக் என நீரும் கொதிக்கத் துவங்கியது. குமிழிகளாய்ப் பொங்கிப்பொங்கி பாத்திரத்தின் ஓரம்தொட்டு உடைந்தவாறு இருந்தது. அதில் டீத்தூள் சேர்ந்த எதிர்பாராமையில் சற்று அடங்கி, பின் உத்வேகத்துடன் அத்தூளை பாத்திரத்திலிருந்து வெளியேற்ற  யத்தனித்துக்கொண்டிருந்தது. கொதிக்கும் நீரின் ஆர்ப்பாட்டத்தை பார்த்தபடி கிடுக்கியை எடுத்துக் கொண்டாள். இந்தத் தண்ணீர் லேசில் எதையும் தன்னுடன் சேர்க்காதத் தொட்டாற்சிணுங்கி... அம்மா மாதிரி..  தீயைக் குறைக்காவிட்டால் அனர்த்தம்தான். ஜானுவுக்கு அவள் அம்மாவின் நினைவு வந்தது.

அப்பா காலையில் எதற்கோ போட்டசத்தத்துக்கு கறுவிக் கறுவி, இரவுச் சாப்பாட்டைத் தட்டில் போட்டுவிட்டு பிலுபிலுவென பிடித்துக் கொள்வாள். எதுவும் அவளுள்ளே தங்காதுகொதிக்கும் நீர் டீத்தூளை வெளியில் தள்ளுவது மாதிரி... ஒருவார்த்தை அவளுக்கு யாரும்  யோசனையாய் சொன்னால்கூட தாங்கமாட்டாள்.திராவகம் கொட்டும் ஆங்காரி.. 

மேட்டூரிலிருந்து இந்த சேலம் அத்தை வீட்டுக்கு குதித்துக் கொண்டு ஜானு வருவதற்கு, அம்மாவின் சிடுசிடுப்பை இரண்டுமாதம் பார்க்கவேண்டாம் என்பதும் ஒரு காரணம்..

டீயை ஒரு தம்ளரில் எடுத்துக் கொண்டு பின்கட்டுக்குப் போனாள். அதை ருசித்த அத்தையின் முகம் மலர்ந்தது..

எவன் குடுத்து வச்சிருக்கானோ உன்னை கொத்திண்டு போக....’’

என்னை யாரும் கொத்த வேணாம் அத்தை. நான் போய் மாவறைக்கிறேன்.’’

சௌடாம்பிகே’’ என்றபடி அத்தை மீண்டும் சாய்ந்தாள். அடுத்த குரல் இனி ராத்திரி சாப்பாட்டுக்குத்தான் எழும்.. அவளும் என்ன செய்வாள்.? பாவம் ரத்தக் கொதிப்பாமே?

ஜானு வேகவேகமாய் முகம் அலம்பினாள். கொடியில் இருந்து துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டாள். தாவணி காய்ந்திருந்தது. பாவாடை மட்டும் இடுப்பருகே இன்னமும் கொஞ்சம் ஈரம் உலராமல் இருந்தது. ரோஸ்கலரில் பெரிய  கருநீலபூக்கள் சிதறியிருந்த சீட்டிப் பாவாடை. இந்த வருடம் தீபாவளிக்கு அத்தை உபயம். பளிச்சென இருப்பது இது ஒண்ணுதானே? ரெமி பவுடர் பூசி சாந்தைத் திலகமாய்  இட்டுக் கொண்டாள். இன்றைக்குப் எல்லாம் புதுசாய்த்தான் இருக்கிறது.

முதலியார் வீட்டு மாவு அரைத்தாகிவிட்டது. வாசலுக்கும் உள்ளுக்குமாய் தவித்தபடி நடந்தாள்.

போன தசரா விடுமுறைக்கு வந்தபோதுதான் சிவராமன் பரிச்சயம்.
நேரே கண்ணைப்பார்த்து பேசும்பேச்சும், அதிராத குரலும் அவனுக்குகண் காது மூக்கு எல்லாமுமாகவா ஒருத்தனுக்கு சிரிக்கும்.? அவன் ரமணி டீச்சரோட தம்பி.. கடலூரில் படிக்கிறான். ரமணி டீச்சரை இங்கே கட்டிக் கொடுத்திருக்கிறது

மாவரைக்கும் கிரைண்டர் வைப்பது ஒரு நல்ல ஜீவனோபாயமாக துவங்கிய காலம். நடுத்தர வர்க்க வீடுகளில் சொந்த கிரைண்டர் இன்னமும் அத்தியாவசியமில்லாத வஸ்துவாய்த் தானிருந்ததுஒரு லிட்டர் அரிசி உளுந்துக்கு  ஐம்பது பைசாமாவாட்டும் வேலை மிச்சம் என்று மாவு மாமியிடம்  அரைக்க கொடுத்து விடுவது தான். ஜானுவின் அத்தை இந்த கிரைண்டர் வைத்த சில நாட்களிலேயேமாவுமாமியாக மாறிப்போனாள்.

சிவா வந்து விட்டான். கத்தி வீசினாற்போல் சரக் என்று வேகமாய் வந்த சைக்கிள், வீட்டுவாசல் முன் பிரேக் அடித்து நின்றது. வெயிலில் அவன் முகம் தாமிரவர்ணத்தில் பளபளத்தது.

சைக்கிள் நின்ற வேகத்தில்மூடிபோட்ட எவர்சில்வர் பாத்திரத்திலிருந்து வெளியே தண்ணீர் வழிந்தது.

வா சிவா! காலைலேருந்து உன்னைத்தான் எதிர்பார்த்து கிட்டிருக்கேன்.’’

நாலு மணிக்கு மேலதான் மாவுக்கு அனுப்புவேன்னு மாமிக்கிட்ட நேத்து தியேட்டர்ல அக்கா சொன்னாளே?’’ இது சிவாவின் பழைய குரல் இல்லை
ஏதோ பதில் சொல்ல வேண்டுமே என்று பேசுவதாக ஜானுவுக்கு தோன்றியது

சொன்னா தான்.. .பரிட்சையெல்லாம் எப்படி எழுதியிருக்கேநேத்து சினிமா புடிச்சுதா நோக்கு?’’

இல்லை...அந்தகாதலின் பொன் வீதியில் பாட்டு மட்டும் ரொம்ப புடிச்சது’’

நேக்கும் தான். அது சரி.. பரிட்சை என்னாச்சு?’’

நல்லாவே எழுதியிருக்கேன். மாமி இல்லையா?.’’

படுத்துண்டிருக்கா.. மாமிக்கிட்டத்தான் பேசுவியா? நானெல்லாம் ஆளாய்த் தெரியலையா?’’

கொஞ்ச நேரம் ஓடும் கிரைண்டரையே பார்த்துக் கொண்டிருந்தான். கரும்பச்சையில் அரைக்கை சட்டை.. அதன் இரு கைகளையும் ஒரு சுற்று மடித்துவேறு விட்டிருந்தான். போனதரம் பார்த்ததிற்கு உதட்டு மேல் மீசை அரும்பு விட்டிருந்தது.. பளிச்சென்று துடைத்துவைத்த  கண்ணாடிபோல் இருந்தான்ஓடும் கிரைண்டரின் தடுப்புப் பலகையில் முட்டிமோதி குழைந்து தவிக்கும் மாவின் சலனத்தோடு அவன் கண்களும் சலனப்பட்டவாறு இருந்தது.

என்ன... பேச மாட்டேங்கறே? ஏதும் கோபமா?’’

போனவாட்டி லீவுக்கு நான் வந்துட்டு போனப்புறம் அக்காகிட்டே, எங்க மாமாகிட்டேயெல்லாம் என்னைப் பத்தி எதுக்கு விசாரிச்சிக்கிட்டே இருந்தே?’’

நீ சொல்லிக்காம போயிட்டியேன்னு... ஏதும் பிரச்சினையா?’’

பாட்டி திவசத்துக்கு வந்த அக்கா கேட்டாளே? என்னடா அந்தப் பொண்ணு உன்னைப்பத்தி துருவித்துருவி விசாரிக்கிறான்னு அப்பாவை வச்சுக்கிட்டு கேட்டா தெரியுமா?’’

சாரி.. ஏதோ ஆவல்.. இனிமே கேக்கல்ல சிவா!’’ ஸ்ருதியிறங்கிய குரலின் தழுதழுப்பை  அவன் கவனித்தாற்போல் தெரியவில்லை. இவ்வளவு நாள் காத்திருந்து இவனை நேற்று சினிமா தியேட்டரில் அவன் அக்கா, மாமாவுடன் பார்த்தபோது பொங்கி பரவசப்பட்ட மனசு புஸ்ஸென்று அடங்கிப்போனது. ஆமாம், நேற்று பார்த்த ரெண்டு நிமிஷத்தில் அவன் என்னை நேராக பார்க்கவில்லை என்று இப்போதுதான் அவளுக்கு உறைத்தது. இதுதானா அவனுடைய கோபத்துக்கு காரணம்?...

அதை விடு.. முட்டாள் மாதிரி என் ஸ்கூல் விலாசத்துக்கே லெட்டர் வேற போட்டிருக்கே?’’

சிவாவின் குரலில் படபடத்து  வினோதமாய்  ஒலித்தது.

நீ சொல்லிக்காம போனே. உன் அக்கா கிட்டே விசாரிச்சப்போ குர்ருன்னு பார்த்துட்டு போயிட்டா.. உன் பள்ளிக்கூடம் திறக்கிற வரையில் காத்திருந்து லெட்டர் போட்டேன். நான் தப்பா ஒண்ணும் எழுதலையே’’

லெட்டர் எழுதறதே தப்பு. அதை தப்பா வேற எழுதுவியா?’’

......’’

தமிழ்க்கிளாஸ் பாதி நடந்துகிட்டிருக்குறப்போ ஜோசப் சார் வந்து அதைக் குடுத்தார். யார்ரா அது ஸ்கூலுக்கெல்லாம் உனக்கு லெட்டர் போடறதுன்னு கொடைஞ்சுட்டார் இன்லாண்டு லெட்டர் பின்பக்கம்ஜான்... அப்பிடின்னு போட்டிருந்தயோ பொழச்சேனோ. என் சினேகிதன்னு சொல்லி தப்பிச்சேன். இனிமே வீட்டு அட்ரசுக்கு அந்த பரதேசியை எழுதச் சொல்லுன்னு போய்ட்டார்.’’

அந்த பரதேசிக்கு நீ ஒரு பதில் போட்டிருக்கலாமில்லையா?’’

நீ என்னை என்னன்னு நினச்சுக்கிட்டிருக்கே? நானொன்னும் அந்த மாதிரி பையனில்லே’’

சரி.. நான்தான் அந்த மாதிரி பொண்ணா இருந்துட்டு போறேன். இன்னும் ஐஞ்சு நிமிஷம் இருந்தேள்ன்னா இங்க மாவு தயாராயிடும்.’’

ஜானு கூடம் தாண்டி விடுவிடுவேன உள்ளே போனாள். சிவாவுக்கு சட்டென்று பாவமாய் இருந்தது.. கொஞ்சம் அதிகமாய் கடுமைக்காட்டி விட்டோமோ? போன தடவை வந்தபோது இரண்டுநாளைக்கொருமுறை பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு வருவதும் அவளோடு பேசுவதும் பிடித்துத் தானே இருந்தது.? அவன் அம்மாவிற்கு மாவாட்டிக் கொடுப்பதிலிருந்து சினிமா, கதைகள், நண்பர்கள் என்று எல்லாவற்றையும் அவளுக்கு சொன்னதும், அவளும் அவளின் கோபக்கார அம்மா, , ஊருக்கு வந்த மகாபெரியவா, அவள் தீட்டும் ஓவியங்கள் என்று என்னென்னவோ பகிர்ந்து கொண்டாளே..  இவளைப் பற்றி அம்மாவிடமும், நண்பர்களிடமும் கூட சொன்னானே... 

அக்காவிடம் அவள் விசாரித்ததும், கடிதம் போட்டதும்தான் தப்பாகி விடுமா?
உள்ளேபோனவள் வெளியே வரவில்லை. சிவாவுக்கு தவிப்பாக இருந்தது. முதலில் அவளை சமாதானப் படுத்தவேண்டும் என்ற எண்ணம் பிடரியை உந்த, சட்டென்று வீட்டினுள் நுழைந்தான், “ஜானு’’ என்று சன்னமாய்க் கூப்பிட்டபடி.

வாடிக்கைக்காராளெல்லாம் அந்த அங்கணதோடேயே நின்னுக்கலாம். ஆத்துக்குள்ள வரவேண்டாம்’’ என்றபடி ஜானு வெளியில் வந்தாள்கண்களும் மூக்குநுனியும் சிவந்திருந்தது. அழுதிருக்கவேண்டும்.

சாரி! நானொன்னும் உன் மனசைப் புண்படுத்தணும்னு  கேக்கல்லை.
 எதுக்கு வீணா பிறத்தியாருக்கு தப்பா அபிப்ராயம் வர்றாப் போலன்னு......’’

விடுங்கோ சிவா. காணாத சிநேகிதத்தைக் கண்டெடுத்தேனா?!. தலைகால் புரியலை நேக்கு. சாரி!’’

புரிஞ்சிக்கோ ஜானு. உன் சிநேகிதத்தை யாரு வேண்டாமின்னா?. உன்னைப் பத்தி என் ப்ரெண்ட்ஸ் கிட்டே, எங்கம்மா கிட்டகூட சொல்லியிருக்கேன் தெரியுமா?  கோச்சுக்காத ப்ளீஸ்.’’

 “போறும்.. நான்தான் றெக்கை இல்லாம பறக்கப் பார்க்கிறேன். விடுங்கோ. உங்க மாவுகூட ரெடியாயிடுத்து. காசை எண்ணி வச்சுட்டு நடையைக் கட்டலாம்.’’

ஜானு..  நான் சொல்லவந்தது என்னன்னா கடுதாசி, ஜாரிப்புல்லாம் வேண்டாமின்னு தான்..’’

இன்னும் எத்தனை தரம் இதையே சொல்வேள்?.’’

ஜானு.. அத்தோட விடு. இன்னமும் மாயாவி, பி.டி.சாமி கதை தான் படிக்கிறாயா?. ஜெயகாந்தன், நா..பா புத்தகமாப் படி...’’ பேச்சை மாற்றிப் பார்த்தான்.

ஜானு இன்னமும் உம்மென்று தான் இருந்தாள்.

அவள் அத்தை மாவுமாமிக் குரலில்  கிரைண்டரை அலம்புவது  பற்றி மாமி பேசுவதுபோல் பேசிக் காட்டினான்.

ஜானுவுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு கண்ணீரோடு கலந்து வந்தது.

ரொம்ப சாரி ஜானு. இப்போதான் நீ  பழைய ஜானுவா இருக்கே. பயந்தே போயிட்டேன் தெரியுமா?’’

என் லெட்டெரையாவது படிச்சயா இல்லையா?’’

கொஞ்சம் முன்னே என்னை வாங்கோ போங்கோன்னே?’’

எனக்கு மட்டும் கோபம் வராதா..  லெட்டரைப் படிச்சியான்னு கேட்டேன்.’’

படிச்சேன்.. படிச்சேன்...  ஒப்பிக்கணுமா?’’

வாண்டாம். அதுதான் உனக்கு நான் முதலும் கடைசியுமா எழுதினதா இருக்கட்டும். மத்தபடி இங்க வரும்போதாவது இப்போ மாதிரி பேசலாமோன்னோ?...’’

என்ன இது ஜானு.. உச்சாணிக் கொம்பிலருந்து இறங்கவே மாட்டியா?’’

ஜானூ... யாரு வாசல்ல?’’ உள்ளிருந்து மாவு மாமியின் வினாவல்.

ரமணி டீச்சர் தம்பி அத்தே.’’

மாவுத்தூக்கின் மூடியை மெதுவாய் மூடினாள். காசை வாங்கிக் கொண்டு தூக்கைக் கொடுத்தாள்... அவள் விரலில் ஒட்டியிருந்த மாவை குறும்புப்பார்வையுடன் சிவாவின் புறங்கையில் பூசினாள்.

வரட்டுமா?.’’

சரி. சட்டைக் கையை மடிச்சு விட்டுக்க வாண்டாம். ரௌடி மாதிரி இருக்கு.”

நான் ரௌடி தான்.’’

போறும். ஒரு கடுதாசிக்கே ஜூரம் வந்துடுத்து உனக்கு. ரௌடியாம் ரௌடி!’’

சிரித்துக் கொண்டே சைக்கிளில் ஏறி மிதித்தான்..

அன்றே திடீரென்று சேலம் வந்த அப்பாவுடன் அடுத்த நாளே சிவா ஊர் திரும்ப நேரிட்டது..  இந்த முறையும் ஜானுவிடம் சொல்லிக் கொள்ள இயலவில்லை. அவளை நோகடித்த அந்த மாலையின் நிகழ்வு  நினைவில் அவ்வப்போது  உறுத்தியது..

தீபாவளிக்கு வந்த அக்கா , கோயமுத்தூரிலிருந்து வீட்டுக்கு கிரைண்டர் வாங்கிவந்து விட்டதாய் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதைக் கேட்ட சிவாவுக்கு முகம் வாடிப் போனது.

என்ன சிவா? சேலம் வந்தா இனிமே உனக்கு தினமும் இட்லி, வடை தான்.’’

அப்போ இனிமே எனக்கு மாவரைச்சுகிட்டு வர்ற வேலை சேலத்துல இல்லை?’’

என்ன சொன்னே? சேலத்துல வேலை இல்லன்னா?.. இல்லை சேலம் வர்ற வேலை இல்லைன்னா?’’

அக்கா சொன்னது அம்மாவுக்கு புரியவில்லை. சிவாவுக்கு புரிந்து கொள்ள இஷ்டமில்லை.

பள்ளியிறுதித் தேர்வுக்குப் பிறகு சேலம் போனபோது மாவுமாமி வீட்டிற்கு அக்காவுக்கு சொல்லாமல் சென்று பார்த்தான். அந்த மாமி அந்த வீட்டை விற்றுவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன் திருப்பத்தூரோ, திருப்பூரோ போய் விட்டாள் என்று பக்கத்து வீட்டில் அறிந்து கொண்டான். செய்வதொன்றும் தோன்றாமல்  திரும்பினான்.

வருஷங்கள் காலடியில் நழுவிக் கொண்டு ஓடுகின்றன.

காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்’’ என்று எப்போதாவது ஒலிக்கும் பாடலில் கொப்பளித்துக் கிளம்பும் வேதனையும் தவிப்பையும் புறம் தள்ள சிவா யத்தனிப்பதில்லை.