புதன், டிசம்பர் 30, 2015

புது வருட உறுதிப்'பாடு'

ஆச்சு!  இன்னுமொரு ஆண்டு கடந்தபடி இருக்கிறது.. வயது ஆகஆக புதுவருடங்கள் சின்ன தடுமாற்றத்தோடு கலந்த எதிர்பார்ப்பைத்தான் தருமோ?
வழக்கம்போலே இந்த வருடப்பிறப்பு சமயத்திலும் சபரிமலைக்கு விரதம் இருந்தபடி இருக்கிறேன்! ஆண்டவன்மேல் பாரம் போட்டுவிடுவது வசதியாகத் தான் இருக்கிறது!
2015முடியுமுன் நான்கு புத்தக வெளியீடுகளை செய்துவிட வேண்டுமென்று மஞ்சள்துணியில் நாலணா முடித்து வைத்திருந்தேன்.. வெள்ளத்தின்மேல் பழியைப் போட்டுவிட்டு வரும் வருடத்தில் வெளியிட்டுவிட உத்தேசம்.
ஆங்கிலவருடப் பிறப்புதொறும் ஏதேனும் சிலஉறுதிகளை எடுத்துக்கொண்டு அவற்றில் பெரும்பாலும் நிறைவேற்றிவிடுவது என் வாடிக்கை.

 2016க்கான என் உறுதிகள் :
1.ஆன்மிகம் சம்பந்தமான பதிவுகளை இடுவதற்கு  ஒரு புதிய வலைப்பூ
   தொடங்க வேண்டும்.
2. கம்பராமாயணம் முழு ரிவிஷன் செய்ய வேண்டும்
3. ஹிமாலய யாத்திரை
4. சிறு குறிப்புகளாக உள்ள பல சிறுகதைகளையும் பதிவேற்ற வேண்டும்.
5. பாதியில் நிற்கும் நாவலை முடிக்க ஆசை.
6. புதியதாய் வாங்கி இன்னமும் படிக்காத 14 புத்தகங்கள், உறையை விட்டு
  எடுக்காத ஒலிஒளிவட்டுக்கள் முடியும்வரை புதியவை வாங்குவதில்லை.
 7. அடுத்த பதிவர் மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்.
8. இன்னமும் மூன்று விருப்பங்கள் கொஞ்சம் பெர்சனல். என் கதை எதிலாவது
  தலைகாட்டினால் பார்த்துக் கொள்ளுங்கள்.

என் பதிவுலக சொந்தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். நலமே விளைக!

போனசாக, முகநூலில் இன்று இட்டிருந்த சிறுபதிவொன்றை கீழே தந்திருக்கிறேன். புதுவருடத்தில் இவற்றில் சிலவற்றை நாம் கைகொள்ள இயலாதா என்ன?? அன்பு....


மனப்பக்குவம் என்பது....
1.. பிறரை மாற்றும் முயற்சிகளைக் கைவிட்டு, தன்னை
      சூழலுக்குத் தக்கபடி மாற்றிக்கொள்ள முயலுதல்.....

2.  பிறரை அவர்கள் உள்ளபடியே ஏற்றுக் கொள்ளுதல்.....

3.
அவரவர் நோக்கில் அவரவர் சரியே எனும் நிதர்சனத்தை புரிந்து
  கொள்ளுதல்......

4.
நிகழ்ந்ததை அதன் போக்கில்விட கற்றுக் கொள்ளுதல்....

5 .
உறவுகளில் எதிர்பார்ப்புகளை ஒதுக்கி, நாம் அளிப்பதை 
   அளித்தல் தரும் ஆனந்தத்துக்காகவே அளித்தல்.....

6. நாம் எதைச் செய்தாலும் அதை நம் திருப்திக்காகவே செய்தல்....

7.
நாம் எவ்வளவு திறமையானவர்கள் என்று உலகத்திற்கு நிறுவ
  முயல்வதை விடுத்தல்....
8.
பிறரோடு நம்மை எப்போதும் ஒப்பீடு செய்யும் வீண்செயலை
  நிறுத்தல்....
9.
நம் தனிமையான கணங்களில் நம்முடனே நாம் அமைதியாய்
  இருக்க முற்படுதல்.....

10.
நம் சந்தோஷத்தை பொருட்களுடன்பொருத்திக்
  கொள்ளுவதை அறவே நீக்குதல் ...

11.
தேவைக்கும் நம் விருப்பத்திற்கும் உள்ள வேறுபாட்டை
   உணர்ந்து விருப்பங்களின் மேல் பற்றை ஒழித்தல்.,

(புத்த லாமா)
Top of Form


வெள்ளி, டிசம்பர் 25, 2015

கல்



(சில நாட்களுக்கு முன்,ஏதோவோர் தெலுங்கு தொலைக்காட்சியைக் கடந்தபோது ,பாதியிலேஒரு கவிதைகேட்டேன். எழுதிய தெலுங்கு கவிஞன் யார் என அறியமுடியவில்லை. நினைவில் தொகுத்து தமிழாக்கித் தந்திருக்கிறேன். அந்தக் கேள்வியின் உக்கிரம் சற்று நேரம் தகித்தபடி இருந்தது.)

ஏதோ ஓர் ஊரிலிருந்து ஒரு மஹா சிற்பி வந்தான்.
வேறேதோ ஊரிலிருந்து பெரிய கல்லைத் தருவித்தான்.

ஆறடி அளந்து கல்லை அறுத்துக் கொண்டான்.
மிகுந்து விட்ட மூன்றடிக்கல்லை ஒதுக்கி விட்டான்.

ஆறடிக் கல்லோ விக்கிரகமாய் கோவில்கொண்டது.
மூன்றடிக் கல்லோ வண்ணான்துறை சேர்ந்தது.

நாற்றமெடுத்த மனங்களெல்லாம்
 தெய்வத்தின் முன்னே நின்றன....
நாற்றமெடுத்த துணிகளெல்லாம், அந்த
துவைக்கும் கல்லை சூழ்ந்தன.

வேண்டிவேண்டி உலர்ந்த தொண்டைகள்
தீர்த்தம் பட்டு நனைந்தன.
அழுக்குக்கறை கொண்ட துணிகளோ
தண்ணீரினில் முங்கின.

அர்த்தம் புரியா தோத்திரங்களில் 
பூஜாரியின் பக்திக்குரலோசை.
துவைக்கும் வண்ணான் குரலெழுப்பும் 
இஸ்ஸுஇஸ்ஸெனும் தப்பலொலி.

சடகோபம் பவித்திரமாய்
தலைகளை வருடியது.
பவித்திரம் வேண்டி துணிகளோ
படிக்கல்லை மோதின.

ஆயிற்று....

கோவில்விட்டு நீங்கிய மனங்கள் 
தத்தம் அழுக்கை 
             மீண்டும் வாரிச் சென்றன.
துவைக்கப்பட்ட துணிகளோ 
தூய்மை கொண்டு திரும்பின.

கோவில்கொண்ட தெய்வமா?துவைக்க சென்ற கல்லா?
யார் தெய்வம்? யாரே கல்??


திங்கள், டிசம்பர் 07, 2015

பெண்ணையின் வெள்ளம்


வெண்ணை உருகுமுன் பெருகிவிட்ட பெண்ணை நதி
எண்ணற்ற செடிமரமென அள்ளிக்கொண்டு போகின்றது.
புயலும் மழையும் கடலூருக்குப் புதிதா என்ன ??

புரட்டிபோடப்பட்ட வாழ்க்கையை கக்கத்தில் ஏற்றியபடி,
உயிரும் உறவும் இருப்பதை தலைக்கணக்கு எண்ணி 
புதிய தொடக்கத்துடன் போகும் என் மக்கள்.

கண்ணீரில் எங்களூர் ‘மல்லாட்டை’யை விதைப்போம்.
அதன் உவர்ப்பில்  இனிக்கும் எங்கள் கரும்பு.
நிவாரணம் என்றொரு நீர்க்கடன் சடங்கு
நிராதரவாய் உயிர்மீண்ட சடலங்களுக்கும் உண்டு.

பெண்ணைநதி சீறும்தோறும் மீண்டுவரும் அவன்முகம்.
ராமதாசு... என் பள்ளி சிநேகிதன்........

ஒரு புயலின்போது,
ஊரினிரு எல்லைகளாய் கோடிட்ட
கெடிலமும் பெண்ணையும் தழுவிக் கொண்டன.
தெப்பமாய் மிதந்த ஊர் சோகத்தில் தவிக்க,
பள்ளிவிடுமுறையைக் கொண்டாடித்திரிந்த பாலியம்.
கர்ணத்தோட்டம் சூழ்ந்த இடுப்பளவு நீரில் விளையாட
காற்றில்சரிந்த வாழைகளால் கட்டுமரம்
ராமதாசு தான் கட்டினான்.  
பழக்கமில்லாத பனங்கிழங்கை சாப்பிடத் தந்தான்.

பெண்ணை பாலத்தின் அக்கரையின் அருகிருந்த  மடுவைக்
காட்டித்தந்தவனும் அவன்தான்.
‘அதன் சுழலில் விழுந்தால்,
பிச்சாவரத்தில் தான் பொணம் கிடைக்கும்’ என்று அவன் சொன்னதை நம்பியிருந்தேன் மறு கேள்வியின்றி.

ஓரிரு மாதங்களில் அந்த மடுவிலேயே அவன் மாண்டுபோனான்.
பள்ளிப் பிரார்த்தனையில்
பீட்டர் சாமியார் மௌனஅஞ்சலி செய்யச்சொன்ன கணம்'
சத்தமாய் அழுதேன்..
நொண்டிசார் விரல் அசைப்பில் வாய்பொத்திய அன்று மதியம் ஏதும் சாப்பிடவில்லை நாங்கள்.

மனதில் உறைந்த துக்கம்.
படியாத அவன் முன்தலை முடி ,
அவன் சொல்லித் தந்த கெட்டவார்த்தைகள்.
‘அய்யிரே’ என்ற அழைப்பு.
பனங்கிழங்கின் மணம்.
மனசோரம் சிரித்தபடி தான் இருக்கிறான்.

பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடந்த போதெல்லாம்
மனக்கரங்கள் நீளும் அந்த மடுவைத் துழாவியபடி.
நினைவின் பாரம் தாங்கவொட்டாமல்
மீண்டும் அவனை மடுவிலேயே எறிகின்றேன்.

இன்றும் கடலூரை வெள்ளம் பதம் பார்க்கிறது.
மாநிலத்து நேய உள்ளங்கள் 
உதவிக்கென்று விரைகின்றன
உணவுடனும் உடையுடனும்.

இதை யாரேனும் படிக்கக் கூடும்.

அந்தப் பாலம் கடப்பீராயின்
அந்த மடுவருகில்  
ஒரு உணவுப் பொட்டலத்தைப் போடுங்கள்.
அங்கு தான் என் ராமதாசு இருக்கிறான்.
உணவு முடியாதெனில்...
ஒரு பனங்கிழங்கையேனும்.