புதன், பிப்ரவரி 23, 2011

கொன்டே புடுவேன் !



சம்பேஸ்த்தா! என்ற கடுமையான குரல் கேட்டு நின்றுவிட்டேன்.

இரவு எட்டரை மணி இருக்கும். மனைவியுடன் காலாற நடக்கலாமென்று என் வீட்டிலிருந்து அமீர்பெட் மார்க்கெட் போய்க்கொண்டிருந்த போதுதான் இந்த சம்பேஸ்த்தா!

நான் ஒருத்தன்...... மொட்டையா சொன்னா உங்களுக்கு எப்படி புரியும்?

நான்  ஹைதராபாதில் தானே குப்பைக் கொட்டிக் கொண்டு இருக்கிறேன்? என் இல்லம் இருக்கும் ஏரியா சென்னையின் தி.நகர் போன்று நகரின் மையப்பகுதி. இங்கே பலவீடுகளில் பத்துபதினைந்து பெண்களுக்கான லேடீஸ்ஹாஸ்டல் ஏற்பாடுகள். இந்நகரத்தில் தனியாகத் தங்கி சிறிதும் பெரிதுமாய் வேலைகளைப் பார்க்கும் இளம் பெண்களுக்காய்..

கரெக்டு! நீங்க நினைச்சது தான்!. இரவு ஏழுமணிக்குமேல் இந்தக் குமரிகளில் சிலர்..ஏன்... பலர்... தத்தம் மனங்கவர்ந்த தொத்தல்,வத்தல்,குண்டு,குட்டை வாலிபர்களுடன்
தெருவோரங்களில்,நிறுத்தப்பட்டிருக்கும் கார்களின் இடுக்கில், இருட்டில் நின்றபடி தன்னை மறந்து சுந்தரத் தெலுங்கினில் வேர்சனிகாய்(அதாங்க .. தெலுங்கில் கடலை)போட்டுக் கொண்டு இருப்பார்கள்.

என் சகதர்மினியுடன் சேர்ந்து போகும் போதெல்லாம் இந்த ஜோடிகளைக் கண்டு எரிச்சலை நான் வெளிபடுத்துவதும், அவங்களை நீங்க ஏன் பாக்குறீங்க? என்று என்னையவள்  மட்டுறுத்துவதும் அவ்வப்போது நடக்கும் விஷயம் தான்.

இன்று அந்த சம்பேஸ்த்தாவை உதிர்த்தவன் ஒரு உதிரிஜோடியின் ஒற்றைநாடிக் காதலன்.

சம்பேஸ்த்தா, என்றால் கொன்னுடுவேன்.. கொன்டே புடுவேன்னு அர்த்தம்.

அந்தக் குரலில் இருந்த கடுமை என்னை கட்டிநிறுத்தியது .அந்த மங்கலான வெளிச்சத்தில் அந்தப் பெண் குலுங்கிக்குலுங்கி அழுது கொண்டிருந்தாள்.

நான் நின்றுவிட்டதை உணராமல், தான் விவரித்துக் கொண்டு வந்த தெலுங்கானா பந்த பற்றிய அப்டேட்டை சொல்லிய வண்ணம் கடந்த என் மனைவி திரும்பி வந்தாள் .

வாங்க! அழுத்தமானக் கீழ்த்தொண்டைக் கட்டளையில் இழுத்தபடி முன்னேறினாள்.

அக்கிரமம் பாரு. அந்தப் பொண்ணை தொரத்தி தொரத்தி காதலித்து விட்டு இப்போ கைவிடரதுக்கு மிரட்டுறான்.

”ஆமாம். அவங்க விவகாரம் உங்களுக்கு ரொம்பத் தெரியும், உங்க வேலையைப் பார்க்காமல் எல்லாத்திலேயும் மூக்கை நுழைக்குறதை எப்பத்தான் நிறுத்தப் போறீங்களோ?

கைப்புண்ணுக்கு கண்ணாடி வேணுமா? அந்தப் பொண்ணைப் பாரு. எப்படி அழுறா?.. கம்மனாட்டி! ஜோலியயெல்லாம் முடிச்சிட்டு வெட்டிவிடறான் பாரு.

வில் யூ மைன்ட் யுவர் லாங்குவேஜ்? என்மனைவி ஆங்கிலத்துக்கு மாறினால், என்னை ரெண்டில் ஒன்று பார்க்க தயாராகிட்டாள்னு அர்த்தம்.

இந்த சின்னப்பெண்கள் தான் யோசிக்கிறாங்களா? எத்தையாவது சினிமா பாக்க வேண்டியது.. தான் தமன்னா... தனக்கு ஜோடியா ஒரு அஜித் வேணும்.. ரொம்ப முடையா..

இவ்வளவு இலக்கியம் பேசுறீங்க.. அலமாரி.. பொட்டி...எதைத்  தொட்டாலும் கவிதை கொட்டுது. நீங்க இதே வேலையாத்தானே அந்த நாள்ல...

கொச்சைப்படுத்தாதே.. நானெல்லாம் இப்படியா இருந்தேன்? இப்படியா நடுரோட்டுல..

உங்களுக்கு திருவாங்கூர் மகாராஜா பார்க் இருந்தது.. சாதாரணமாய் சொல்வதுபோல் எப்படி பெண்களால் ஊசியேற்ற முடிகிறது ?

பாரீஸ்கார்னரின் அண்ணாமலை மன்றத்துக்கு எதிரே இருந்த பார்க்.. பத்தே நிமிஷம்... இவளுடன் மகாராஜா சிலையின் கீழே அமர்ந்து பேசிவிட்டு, போர்ட்ஸ்டேஷனில் இவளை விட்டுவிட்டு கவிதை யோசித்தபடி நடந்தக் காதல் மோகன் ..

இப்போ இதுவா முக்கியம். அந்தப் பரிதாபத்துக்குரிய பொண்ணை பத்தியில்ல சொல்லிகிட்டிருந்தேன்?


என் பேச்சு இப்ப எதுக்கு? நம்மக் காதல் முடிஞ்சதும்தான் மகாராஜா மனசொடிஞ்சுபோய் பார்க்கை காலி  பண்ணிட்டு எங்கயோ இல்லை போயிட்டாரு.(அந்த பூங்கா இப்போது அங்கில்லை)

இப்படி ஒரு ஜோடியப்பார்த்த கண்ணால வேற காதலர்களைக்  பார்க்கவேணாம்னுதான் போய்ட்டாரோ என்னமோ?

ரொம்பதான் நீ புத்திசாலி..போ! இப்போஎன்ன அவங்க பண்றது தப்பிலைன்னு சொல்ல வரியா?

இல்லீங்க.. அது தப்பு ரைட்டுன்னு சொல்ல நம்ம யாருங்க..

என்னத்த சொல்றே? பல நாட்கள் லோவ்வோ லவ்வுன்னு சுத்திட்டு அந்த ராஸ்கல் இப்படி அவளை பிழியப்பிழிய இல்லே அழவிடுறான். நீ வேணா நாளைக்குப் பாரு. காதல் தோல்வியினால் பெண் அமீர்பெட்டில் தற்கொலை.கைவிட்ட வாலிபன் தலைமறைவுன்னு பேப்பர்ல வரப் போகுது பாரு..

”அந்த திருவாங்கூர் ராஜா பார்க் அங்கிருந்தா யாருக்கு அசௌகரியம்? அதப் போய் மூடிட்டாங்களே?

உம்....நாளைக்கு கலைஞரைக் கேட்டு சொல்றேன்.
அந்தப் பையனை நாலு மொத்துமொத்தணும் போல இருக்கு. அயோக்கியன்.. அந்தப் பொண்ணு இனிமே அவ்ளோ தான்!

குமைந்து கொண்டே நடந்தேன்.

போனவழியே திரும்பி வந்தோம். அந்த ஜோடி நின்றிருந்த இடத்தைப் பார்த்தேன்..அவர்கள் இல்லை. பக்கென்றிருந்தது.

அவங்களைக் காணோம் என்றேன் ஈனஸ்வரமாய்.

இன்னும் அவங்களை விடல்லையா?

மௌனமானேன். யார் பெற்ற பெண்ணோ?

அட என்ன அது?

இடப்பக்கம் இருந்த ஐஸ் கிரீம் பார்லரில் அதே ஜோடி.
ரோடு பார்த்தக் கண்ணாடிசுவர் அருகே நெருக்கமாய் அமர்ந்த படி.. அந்த தெலுங்கு தனுஷுக்கு அவள் ஐஸ்கிரீம் ஊட்டிக் கொண்டிருந்தாள். அவன் வாயெல்லாம் பல்லாக இளித்தபடி...

இவளிடம் அந்தக் காட்சியை காட்டவேண்டி திரும்பினேன்.
தனக்குள் சிரித்தபடி பின்னால் வந்து கொண்டிருந்தாள் . திருவாங்கூர் மகாராஜா மேட்டராய்த்தான்  இருக்க வேண்டும். அவளைக் கலைக்க மனசில்லை.

வேண்டாம். என்னை முட்டாளாய் அடித்த இவர்களை அவள் பார்க்க வேண்டாம்.

இத்தனை நேரம் நான் செய்த அமளிதுமளிக்கு, இந்த சல்லாபத்தை மட்டும் இவள் பார்த்தால்,என்னைக் கொன்டேயில்லே போட்டுடுவா ?    

    



வியாழன், பிப்ரவரி 17, 2011

ஞாபகங்கள்




ததிக்ராவிண்ணோ அகாரிஷம்.....

கூடமெங்கும்  தெளிக்கப்பட்ட நீர்த்துளிகள் சின்னச்சின்னதாய்க் குளம்கட்டியிருந்தது.

தட்டப்பட்ட வாயிற் கதவை நோக்கி விரைந்தாள் அகிலாண்டம்.

வாங்கோண்ணா" புடவைத்தலைப்பை இழுத்து போர்த்தியபடி கதவைத் திறந்தாள்.

என்ன சொல்றான்?"

உங்க சினேகிதர் அடிக்கிற கூத்தை நீங்களே பாருங்க. சொன்ன மந்திரத்தையே திரும்பதிரும்ப சொல்லினபடி சந்தி பண்ணிண்டு வீடுமுழுக்க தீர்த்தவாரி.. இது வரைக்கும் ரெண்டு சொம்பு ஜலம் தெளிச்சாச்சு.. அம்பிகே!
சலிப்பும் திகிலுமாய் அவள் கண்களில் ஈரம் பளபளத்தது.

ஏய்! சாம்பா! சகாயம் வந்திருக்கேன் பாரு

"கோணிய மோவாயுடன் வெறித்துப் பார்த்தார் சாம்பா என்கிற சாம்பசிவன்.
.பத்துநாள் தாடி.. .காதெல்லாம் அப்பிய விபூதிக் குழைசல்..

இன்னும் ஜலம் அகிலாண்டத்தை நோக்கி சொம்பை நீட்டினார்

போறும்.. கெணறு வத்திடுத்து.. வெடுக்கென சொம்பைப் அவள் பிடுங்கியதில்அலங்கோலமாய் கூடத்தில் சரிந்த சாம்பனை தூக்கி மணையில் அமர்த்தினார்  சகாயம் என்கிற சகாயராஜ்.

சாம்பனின் உடல் கனத்தில் அவருக்கும் மூச்சிறைத்தது. ஆச்சே.. அவருக்கும் இந்த கிறிஸ்மஸ்ஸுக்கு அறுபத்தெட்டு தொடங்கிடுமே....

என்னடா சாம்பா இது? பண்ணின சந்தியெல்லாம் போதாதா?

படவா.. நித்திய கர்மா நித்திய கர்மா...

சரி மெல்ல எழுந்திரு

இவனுடன் லோல்பட ஒரு பத்து நிமிஷம் என்னாலயே முடியலயே.. இந்த அகிலாண்டம் என்ன பண்ணும். சகாயம் கவலைப் பட்டார்..

நண்பனை அணைத்தபடி வாயிற்திண்ணைக்கு வந்தார்.

மெல்ல உட்காரு..

சாப்டியா?

மீண்டும் வெறித்தப் பார்வை

நாளைக்கு ஜிப்மர் போறோம்

ம்ம்..

என்கிட்டயாவது பேசேண்டா.. என்னைகூட மறந்துட்டியா?

தமிழரசிக்கிட்டே கடுதாசி குடுத்தியே...” சாம்பன் கண்ணில் பழைய குறும்பு சின்னதாய் எட்டி பார்த்தது.

சகாயராஜுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

என் கல்லூரி நாட்களின் கதை அல்லவா அது? எல்லாவற்றையும் மறந்து போனாலும் என் சிநேகிதன் என்னை மறக்கவில்லை. என் வாழ்வின் சம்பவங்கள் இன்னும் சாம்பனின் மனத்தின் ஓரத்தில். அந்த ஞாபகங்கள் கூட அவ்வப்போது மட்டும்.....

சகாயராஜின் கண்கள் கசிந்தன.

சாம்பா! நான் அத்தனை முக்கியமா உனக்கு? மனைவியின் பெயர் மறந்து விட்டது. பேரனைத் தெரியவில்லை. உடன்பிறந்த தம்பியை செருப்புக்கடை பாலு தானே என்கிறான்.. என்னை மட்டும்... என்னை மட்டும்.

கொஞ்சம் காபி குடிங்கோண்ணா.. பித்தளை தம்ளர் பொன்னாய்  மின்னியது..
 இந்த சிதம்பரத்தில் தான் இன்னும் பித்தளை டம்ளர்ல காப்பி.. எல்லா எடத்துலயும் காது மொளச்ச பீங்கான் கப்பு.

அண்ணா! பாண்டிச்சேரி ஆஸ்பத்திரிலயாவது சொஸ்தமாயிடுமா?

எதுக்கும்மா இவ்வளவு கவலை? கர்த்தர் மகிமை.. நல்லது தான் அகிலாண்டம் நடக்கும்

எங்க நடராஜருக்கு காலை மாத்திகிட்டு ஆடக்கூட ஒழியல்லே.. உங்க சாமியாவது உதவட்டும் அண்ணா.

பைத்தியம்... எல்லா சாமியும் ஒண்ணு தாம்மா! நம்பிக்கைதாம்மா சாமி!

என்ன பாக்கிறேள்? வெறிக்கும் கணவனைக் கேட்டாள்.

கமலம் அத்தை தானே நீ?

ஈஸ்வரா! முந்தி பேசாம கழுத்தறுத்தார். இப்போ ஏதேதோ.... மேற்கொண்டு பேசமுடியாமல் அகிலாண்டம் விம்மினாள்.

சரியாயிடும்மா. நான் காலை ஆறு மணிக்குல்லாம் வந்துடறேன். எதுக்கும் மூணு நாலு நாளைக்கு துணிமணி எடுத்துக்கம்மா.டாக்டர் கடுதாசிஎல்லாம் எடுத்து வச்சிக்கோ. நான் பாங்குக்கு போய் பணம் எடுத்துகிட்டு வந்திடுறேன். கவலைப்படாதே. டேய் சாம்பா! வர்றேன்.

சாம்பன் குரல் எழுந்தது
தெய்வச் சிதம்பர தேவா! உன் சித்தம் திரும்பிவிட்டால்
 பொய்வித்த சொப்பன மாமன்னர் வாழ்வும்புவியுமிங்கே
மெய்வைத்த ... உம்ம்ம்... அவர்  கண்கள் அலைந்தன...

இது ஒண்ணு தான் குறைச்சல். என்ன பாவம் நான் பண்ணினேன்

அகிலாண்டம். அவன் மனசுல ஏதேதோ ஞாபகம் அலைமோதுது. ஏதோ ஒரு நேரம் எல்லாமே நேராயுடும் பாரேன்.

பாங்கு நோக்கி நடந்தார் சகாயம்.. எப்படி இருந்தவன்? எத்தனைக் கால நட்பு.
சாம்பனின் நிர்தாட்சண்யமான குணத்தால் எத்தனை இழந்தான்?.. நான் ஒருவன் மட்டும் தான் இன்றுவரை அவனுடன்.. நல்லதோ கெட்டதோ. எனக்குத் தெரியாத ரகசியம் சாம்பன் வாழ்வில் ஏது?

வேண்டாம் என்று ஆகிவிட்டால் திரும்பிக்கூட பார்க்காத பிடிவாதம்...
சாம்பனின் தங்கைக் கல்யாணத்தில் அவமானப் படுத்திய தன் தந்தையை இறுதிவரை பார்க்காதவன்.

சாம்பனின் ஒரே மகன் பிறந்த புதிது. வாலிபத்தின் உந்துதலில் மனைவியை நெருங்க, எப்போதும் இதே நினைப்புத்தானா?’ என்றவளை உதறி ஒரேயடியாய் அந்த நினைப்பை ஒழித்தவன். இதைக்கூட என் கையைப் பிடித்துக் கொண்டு முறுக்காய்ச் சொன்னவன்.


பிள்ளை வெளிநாட்டில் வேலைக்குப் போய் ஒரு குஜராத்திப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சிதம்பரம் வர, அவன் முகம் பார்க்காமல், பிள்ளை ஊர் திரும்பும் வரை சீர்காழி, வைதீஸ்வரன் கோவில் என்று திரிந்தவன்..

எதனாலோ இப்போது தன் ஞாபகங்களையும் தன்னிலையையும் 
ஒழித்து விட்டு நிற்கிறான்.


சகாயராஜின் மனம் கனத்தது.

மறுநாள் சகாயம், சாம்பனின் கையைப் பிடித்துக் கொண்டு,அகிலாண்டம் பின்தொடர பஸ் நிலையத்தை அடைந்தார்.

சகாயம் சார்! எங்க பிரயாணம்? சிவகுரு தான். சாம்பனின் சகோதரன்.

'ஆஸ்பத்திரிக்கு'.

கடலூர் பெரியாஸ்பத்திரியா?

கோரிமேட்டுக்கு

அவ்வளவு முத்திடுச்சா? எள்ளல் தெறித்தது.
அவனைப் புழுப்போல பார்த்தபடி மேற்கொண்டு நடந்தார் சகாயம்.

பஸ் விரைந்து கொண்டிருந்தது. சூனியத்தில் வெறித்தபடி சாம்பன்..

இவன் வாழ்க்கைக்கு ஏதும் அர்த்தம் இருக்கிறதா?
சுற்றங்களை ஒழித்துவிட்டு, வாழ்க்கையை ஒழித்துவிட்டு,அது கிளர்த்திய நினைவுகளைக் கூட ஒழித்துவிட்டு, மனதின் ஓரத்தில் நூலாம்படைபோல் ஒட்டிக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு நினைவுகள் மட்டும் கண்ணாமூச்சு ஆட...

சாம்பனுக்கு நினைவு முழுதாய்த் திரும்பி என்ன சாதிக்கப் போகிறான்?
வேலையிலும், வாழ்க்கையிலும் பட்ட அவமானங்களையும் தோல்விகளையும் மீண்டும் மீண்டும் அசைபோட்டு மனசை ரணகளமாக்கிக் கொள்ளவா? பேரனைக் கூட ஒட்டவிடாமல்  முறுக்கிக் கொண்டு நிற்கும் மகனை எண்ணிக் குமையவா?
கொஞ்ச நேரம் முன்னர் கெக்கலி கொட்டி விட்டுப் போனானே இவன் தம்பி சிவகுரு ...அந்தப் பேச்சுக்கெல்லாம் அர்த்தம் புரிந்து கொண்டு வேதனைப்படவா?
எதற்கு.. எதற்காக  இவனுக்கு நினைவு திரும்ப வேண்டும்?..

இல்லை இல்லை.. இன்பமோ துன்பமோ.. வாழ்வின் முழுமை அவற்றை இறுதிவரை எண்ணி எண்ணி சுகிக்கவோ, துக்கிக்கவோ செய்வதில் தானே இருக்கிறது.. சாம்பனுடன் நினைவுபடுத்தி அசைபோட எங்கள் நட்பொன்று போதாதா?

சகாயம் குமைந்தார்.. கர்த்தரே? இது  என்ன சோதனை.?. என் நண்பனுக்கு வழிகாட்டுதல் புரியும்.. அவனுக்கு சாந்தி அருளும்..

கண்மூடி பிரார்த்தித்தார்.

ஜிப்மர் எறங்கு....

அண்ணே! அண்ணே! இவரைப் பாருங்களேன்.....

சாம்பனின் கையைப் பிடித்த சகாயம் குழறினார்.. சாம்பா...”

பதினைந்து நிமிட பரபரப்புக்குப் பின், பஸ் இருவரோடு சாம்பனின் உடலையும் இறக்கிவிட்டுவிட்டு... அவரின்  சொச்ச நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நகரத் தொடங்கியது.

புதன், பிப்ரவரி 09, 2011

லொள்ளப் பாரு! எகத்தாளத்தப் பாரு!!


அன்பு நண்பர் மூவார் முத்து (ஆர்.ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி) அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்னொரு இலக்கிய டிட்பிட் .. இது கூட பிரபலமானது தான்.அ
இரண்டு புலவர்கள் சேர்ந்து பக்கத்து ஊருக்கு நடந்தே போனாங்களாம். ஏழை புலவர்கள் காலில் செருப்பேது? இலக்கிய சர்ச்சை செய்துகொண்டே போனார்கள்.


திடீரென்று ஒரு புலவர், ஐந்து தலை நாகமொன்று என் காலில் குத்தியதே!. என் செய்கேன்?" என்றார். 


அதற்கு மற்ற புலவர் சொன்ன மறுமொழி என்ன தெரியுமா?


"பத்துரதன் புத்திரனின் மித்திரனின் சத்துருவின்
பத்தினியின் காலை எடுத்துத் தேய்


எமகாதகர்கள் இருவரும்.


முதல் புலவர் காலில் நெருஞ்சி முள் ஒன்று குத்தியது.  நெருஞ்சி முள்ளுக்கு ஐந்து முள்முனைகள் இருப்பதால்,  ஐந்து தலை நாகம் காலில் தீண்டியதாய் புதிர் போட்டார்.


அடுத்தவர் சொன்ன சிலேடை வரிகளுக்கு விளக்கம் இதுதான்:


பத்துரதன் =  தசரதன் (தச எனில் பத்து )
புத்திரனின் = தசரதனின் புத்திரனாகிய இராமனின்
மித்திரனின் = இராமனின் மித்திரனாகிய சுக்ரீவனின்
                             (மித்திரன் என்றால்  நண்பன்)
சத்துருவின் = சுக்ரீவனின் சத்துருவாகிய வாலியின் 
                                (சத்துரு என்றால் எதிரி)


பத்தினியின் = வாலியின் பத்தினியாகிய தாரையின்
                             (பத்தினி என்றால் மனைவி )
காலெடுத்து= தாரை எனும் பதத்தின் காலாகிய (ா)வை
                               எடுத்தால் தரை  ஆகும்
தேய் = தரையில்(காலைத்) தேய் .  


 அதாவது முள் குத்தின காலை தரையில் தேய். சரியாகிவிடும் என்பதே அவர்சொன்ன மறுமொழியின் பொருளாகும்.


லொள்ளப் பாரு! ஏகத்தாளத்தப் பாரு!

ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

கம்பன் ஏமாந்தான்




சில எளிமையான இலக்கிய சுவாரஸ்யங்களை பார்ப்போம்.
கம்பனும் ஔவையாரும் முட்டிக் கொண்ட கதை தெரியுமா?
இது போன தலைமுறை வரை பிரபலமான கதை. 
ஏற்கெனவே அறிந்தவர்கள் இதை நினைவுறுத்திக் கொண்டு குழந்தைகளுக்கு  சொல்லுங்கள். முன்னம் கேள்விப்பட்டிராதவர்கள் குழந்தையாய் மாறி மேற்கொண்டு கேளுங்கள். இது. எளிமையான தமிழுக்கும், புலவர்களின் குறும்புக்கும் ஒரு சான்று.

நான் நாலாம் வகுப்பு படிக்கையிலே, ஈசிசேரில், நீலசட்டைப் போட்டுக் கொண்டு, என்னை மடியிருத்தி அப்பா சொன்ன கதை/பாடல்


 புலவர் கம்பருக்கும், தமிழ் மூதாட்டி ஔவைக்கும்  புலவர்களுக்கேயான போட்டியும் பொறாமையும் இருந்ததாம்.

சோழ நாடு வந்த ஔவை, குலோத்துங்க சோழன் அரசவைக்கு சென்றாளாம்.
மன்னன் ஔவையை வரவேற்று உபசரித்து அவளின் தமிழைக் கேட்க ஆவலாய் காத்திருப்பதாய் சொன்னானாம்.

இது கண்டு பொறுக்காத அரசவைப் புலவரான கம்பர் ஔவையை மட்டம்தட்ட உறுதி கொண்டார்.

நான் சொல்லும் ஓரடியை பொருள் கண்டு பாட்டிலே  உரைக்க இயலுமோ?

மன்னன் தமிழ் விருந்துக்கு தயாராகி, ஔவையின் முகம் நோக்கினான்.

அப்படியே ஆகட்டும் கம்ப நாடரே!

ஒரு தண்டில் நான்கே இலைகளை தாங்கி நிற்கும் ஆரைக்கீரையை பொருளாய்க் கொண்டு, கம்பர் சொல்லலுற்றார்
      
"ஒரு காலில் நாலிலைப் பந்தலடீ" 

தமிழறிந்த சோழன் துணுக்குற்றான். பந்தலடி என்ற பதத்தில் அடியாக கொள் எனப் பொருள் பட்டாலும்,அடியே என்று ஔவையை விளிக்கும் குதர்க்கம் அல்லவா தென்படுகிறது?! ஔவையின் மறுமொழியை கேட்க முனைந்தான்.

ஔவையோ நிமிடம் கூட தாமதித்தாளில்லை. சடசடவென வார்த்தைகள் அவளிடமிருந்து தெறித்தன.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது

கர்வபங்கப் பட்ட கம்பர் ஔவையின் மேதைமைக்கு தலை வணங்கினார்.

ஔவையின் பாட்டுக்கு பொருள் காண்போமா?

அடியே என்று விளித்த கம்பனை எப்படியெல்லாம் பாட்டுவிட்டார் பாருங்கள்!
 

எட்டேகால் லட்சணமே .... "அவலட்சணமே"( '' என்பது 8 ஐக் குறிக்கும்.
                                                                    '' என்பது 1/4 என தமிழில்
                                       பொருள்படும் . இரண்டையும்
                                      சேர்த்தால் 'அவ' என்றாகும்)

எமனேறும் பரியே..          "எருமையே" (எமனின் வாகனம் 
                                               எருமையல்லவா!)

மட்டில் பெரியம்மை வாகனமே.. கழுதையே(
                               அம்மை என்பவள் ஸ்ரீதேவி..
                                 பெரியம்மை ஸ்ரீதேவியின் அக்காவான 
                                  மூதேவி. மூதேவியின் வாகனம் கழுதை)
                                      

முட்டமேற் கூரையில்லா வீடே..  குட்டிச்சுவரே  (மேலேகூரை இல்லாதது)

குலராமன் தூதுவனே..        "குரங்கே! (ராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயர்
                                          குரங்குதானே?)
 
ஆரையடா சொன்னாயது... ஆரைக்கீரை  என்பது பதில் என்றுபொருள் படும்
                          நீ  யாரையடா பார்த்து இப்படிச் சொன்னாய்?
                          என்றும் அர்த்தப்படும்.

கம்பராமாயணத்தில் பெண்மையின் மேன்மையை உரத்து சொன்ன கம்பன், மனவியலையும் அவையடக்கத்தையும் தன் காவியமெங்கும் விரவிய சொற்கோ, ஒரு பெண்மணியை, அதுவும் மேம்பட்ட புலமைப்பெருமகளை இவ்விதம் மட்டம்தட்ட முயன்றிருக்கக் கூடும் என மனம் ஒப்ப மறுக்கிறது. மேலும் ஔவையின் காலம் குறித்து சர்ச்சைகள் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட ஔவைகள் இருந்திருக்கக் கூடும் எனும் துணிபும் உண்டு. 

எது எப்படியாகிலும் சரி, இந்த ரசமான கற்பனையை சித்தரித்த புலவன் யாரோ, இதை பிரபலப்படுத்த எண்ணி ஔவையையும் கம்பனையும் வம்புக்கிழுத்தான் போலும்.

கம்பனுக்கும் ஔவைக்கும் ஏன் பகைமை உணர்வு ஏற்ப்பட்டது என்பதற்கும் ஓர்
பாட்டுண்டு. பிறிதொருமுறை அதைப் பார்ப்போம்..

என்ன? கதையும் பாட்டும் பிடிச்சதா?? 
 






செவ்வாய், பிப்ரவரி 01, 2011

சபரிமலையும் சனீஸ்வரனும்



புருஷன் பொண்டாட்டியை பிரித்து வைப்பேன் கொக்கரித்தார் சனீஸ்வரன்.

காந்தகிரியில் சனீஸ்வரனுடன் உரையாடிக் கொண்டிருந்தார்
ஸ்வாமி ஐயப்பன். தன் பக்தர்களை சனிபகவான் பீடிக்காதிருக்கும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்தார்.

மானுடர்களுக்கு என்ன கஷ்டமெல்லாம் கொடுக்க முடியும் என்ற ஐயப்பனின் கேள்விக்குத்தான் மேற்கண்ட பதிலிறுத்தார் சனிபகவான்.

சனீஸ்வரா! எனக்காய் விரதமிருக்கும் சமயம், என் பக்தர்கள் மனைவியரிடமிருந்து பிரிந்தே வாழுகிறார்கள்

பஞ்சணையில் புரள்பவரை கட்டாந்தரையில் உருட்டி விடுவேன் 

ஐயப்பன் சிரித்தார். என் பக்தர்கள் வெறும்தரையில் தான் படுக்கிறார்கள் சனீஸ்வரா!

வாசனாதி திரவியங்கள் சேர்த்து பன்னிரிலும் வெந்நீரிலும் குளிப்பவனை பச்சைத் தண்ணீரில் பரிதவிக்க விடுவேன் சனீஸ்வரன் குரல் உயர்ந்தது.

நடுக்கும் குளிரிலும் அவர்கள் குளிர்ந்த நீரிலேயே குளிக்கிறார்கள். மந்தனே!

முடிதிருத்தி முகம்மழித்து சௌந்தர்யமாய் இருப்பவனை காட்டுமிராண்டிபோல் ஆக்கிவிடுவேன் ஸ்வாமி!

நல்லது. விரதம் இருக்கும் என் பக்தர்கள் முகம் மழிக்காமல் முடி திருத்தாமல் தீட்சையுடனேயே திரிகிறார்கள். புறஅழகை அவர்கள் பொருட்படுத்துவதில்லை சனீஸ்வரா!.

உயர்ந்தவன் தாழ்ந்தவன் எல்லோரையும் ஒன்றாய் உழலவிட்டு கலங்க வைப்பேன்

ஐயப்பன் குலுங்கிகுலுங்கி சிரித்தார். சனீஸ்வரா! அல்லது என்று நினைத்து நல்லதைத்தானே செய்கிறாய்? என் பக்தர்களுக்கு
மேலோன் கீழோன்,உயர்ந்தவன் தாழ்ந்தவன், ஜாதி மதம் என்று  பேதமில்லை.. எல்லோரும் ஓரினம் எல்லோரும் ஓர் குலம் என்பது ஐயப்ப மார்க்கம்.

சனீஸ்வரனுக்கு சலிப்பு தட்டியது.பெருமானே! நான் பீடித்திருப்பவனை கல்லிலும் முள்ளிலும்,காட்டிலும் மேட்டிலும் திரிய விடுவேன்.

ஐயனின் குரல் கம்மியது. சனீஸ்வரா! என்னை நாடி வரும் பக்தர்கள் காலில் செருப்பின்றி கல்லிலும் முள்ளிலும் கடும் பயணம் மேற்கொண்டு காடுமலைகள் தாண்டியல்லவா வருகிறார்கள். அவர்களின் தாரக மந்திரமே கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை அல்லவா?

மேற்கொண்டு சொல்வதற்கு சனிபகவானுக்கு ஒன்றும் தோன்றாமல் மௌனம் காத்தார்.

பார்த்தாயா சனீஸ்வரா! நீ என்னவெல்லாம் கஷ்டங்கள் தர முடியுமோ அவை அத்தனையையுமே என் அன்பர்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே மீண்டும் அவர்களுக்கு கஷ்டம் தராமல்,உன் பார்வையை அவர்கள் பக்கம் திருப்பாமலிரு. அதற்கு பிரதியாக, உனக்குப் பிடித்த கருப்பு வண்ணத்திலேயே அவர்கள் ஆடை அணிவார்கள். சரிதானே?
பேட்டி முடிந்து விட்டது என்பதை சனீஸ்வரன் உணர்ந்தார்.

கால் தாங்கியபடி மெல்ல வெளிவந்தார்.

கஷ்டத்தை விரும்பி ஏற்கும் பக்தர்கள் ! சுகம் வேண்டாத பக்தர்கள்!! விந்தை விந்தை.! தனக்குள் சொல்லிக் கொண்டே காக ஊர்தியை நெருங்கினார்.

தற்போதைய கதை தெரியுமா?

சனீஸ்வரனின் பார்வையின் ஒரு கலை சபரிமலைக் கோவிலின் நிர்வாகத்தின் பொறுப்பிலிருப்பவர்களாய் உருவெடுத்தது.
கோடிகோடியாய் நிதி குவிந்தாலும், கடும்பயணம் மேற்கொண்டு வரும் பக்தர்களுக்கு பெரிதாய் வசதிகள் செய்து தருவதில்லை. வருடாவருடம் குவியும் மக்களின் எண்ணிக்கையோ பெருகிக் கொண்டே போகிறது. கேரளே கேளி விக்ரஹமாயிருந்த
ஐயப்பனைக் காண இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் கூட வருகிறார்கள். ஆனாலும் என்ன?
ஐயப்ப பக்தர்கள் தான் கஷ்டத்தை விரும்பி ஏற்றுக் கொள்பவர்கள் ஆயிற்றே? சனீஸ்வரனின் கலைக்கு இது புரிந்ததால்தான், அங்குமிங்குமாய் ஒப்புக்கு சில ஏற்பாடுகள் மட்டும்... யானையின் கோரப் பசிக்கு பப்பிள் கம்..

சபரிமலைக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலோர் தமிழகத்திலிருந்தும் ஆந்திராவிலிருந்துமே வருகிறார்கள்.
இந்த வருடம் ஜனவரி 14 ல் பலியான 132 பேரின் மரணம் கொடுமையானது. தவிர்த்திருக்கப் படவேண்டியது. இங்கு யாருக்கும் பொறுப்பில்லை. யாருக்கும் வெட்கமும் இல்லை.
எவன் செத்தால் எனக்கென்ன என்னும் மனோபாவமா?
இந்த பலியாவது இவர்கள் கண்களைத் திறக்குமா?

நாள்தோறும் லட்சக் கணக்கானோர் கூடும் திருப்பதியில் எத்தனை வசதிகளைக் கூட்டிக்கொண்டு போகிறார்கள்?
சபரிமலைக்கு வரும் பாண்டிபரதேசிகளை கொல்லாமலாவது  கேரளம் காத்தருளுமா?

மற்றும் ஒன்று. ஆந்திர ஊடகங்களில் பெரிய அளவில் இந்த சம்பவம் அலசப்பட்டு வருகிறது. தமிழகத்திலோ இது பத்தோடு பதினொன்று. அவர்களும் தான் பாவம் யாருக்காக அழுவார்கள்?
இருமுடிகட்டு கட்டிக்  கொண்டுபோய் செத்த சாமிகளுக்காய்
விசனப்படுவார்களா? இல்லை, மீன்பிடிக்கப் போய் வானேகிப் போன மீனவனுக்காய் புலம்புவார்களா?

எனக்கொரு நண்பன். இரும்பு மனிதன் .. சொன்னானே பார்க்கணும். ஏன் அங்கல்லாம் போய் உயிரை விடுறீங்க? அரசாங்கமா அங்க போக சொல்லுச்சி?

நாவலர் நெடுஞ்செழியன் தான் என்று நினைக்கிறேன். ஒரு முறை தமிழன் குறித்து அங்கலாய்த்தார்.நம்மாளு ஒண்ணு கோவிந்தா கோவிந்தான்னு போய் ஆந்திராவுல பணத்தை கொட்டுவான். இல்லேன்னா சாமியோவ் சாமியோவ்ன்னு கேரளாவுல போய் கொட்டுவான். உள்ளூர் சாமியில்லாம் உதவாதா

ஒண்ணும் புரியல போங்க!

தெரிந்தும் தெரிந்தும், அறிந்தும் அறிந்தும் நாங்கள் செய்த சகல பிழைகளையும் பொறுத்தருள்வாய் ஐயப்பா!