சனி, டிசம்பர் 10, 2011

அமராவதியே! ஆனந்தமே!!


அதிக நாட்கள் தான் ஆகி விட்டது வலை மேய்ந்து.
நிறைய வேலை...கொஞ்சம் அலுப்பு.....
நிறைய பயணம்... கொஞ்சம் ஆசுவாசம்..
நிறைய பூஜை... சாமி சரணம் ...

வெறும் கையோடு வரவில்லை...
ஒரு ஆன்மீகப் பயணத்தின் பகிர்தலோடு பதிவிடத் துவங்குகிறேன் என் சொந்தங்களே!

இந்த வாரம் ஆந்திர மாநிலம் குண்டூரில் அலுவலக வேலையாக
இருக்க நேர்ந்தது. குண்டூரிலிருந்து 36 கி.மீ தொலைவிலுள்ள அமராவதி சென்று வந்தேன். வரலாற்றின் சுவடுகள் இன்னமும் அழியாமல் சலனமற்று இருக்கும் ஒரு சிற்றூர். இந்து சமயமும் பௌத்தமும் செழிப்புற்று இங்கு கோலோச்சிய தலம்.

முதலில் அமரேசன் ஆலயம் பற்றி பார்ப்போம்.. புனிதமான கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்திருக்கும் இந்த சிவன்கோவிலில் உறையும் ஈசன் அமரேஸ்வரர், அமரலிங்கேஸ்வரர் என்ற திருநாமங்களுடன் அழைக்கப் படுகிறார். அம்பிகை பால சாமுண்டேஸ்வரி. இது தத்த க்ஷேத்திரமும் கூட.

இந்தத் தலம் பஞ்சாராமம் எனும் ஐந்து தலங்களில் முக்கியமானதும், முதன்மையானதும் ஆகும். இதை அமரராமம்
என்பர்.மற்ற நான்கு தலங்கள் திராக்ஷாராமம்,குமாரராமம் க்ஷீரராமம் மற்றும் பீமராமம் ஆகும். இவையனைத்தும் ஆந்திரத்திலேயே அமைந்துள்ளன. இந்த பஞ்சாராமத்துக்கு ஒரு புராண கதையுண்டு.தாரகாசூரன் பிரம்மதேவரை நோக்கி கடும்தவம் இருந்தான். தன்னை விட சக்தியுள்ளவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று ஒரு வரமும், தனக்கு மரணம் நேரிட்டால் அது சிவனுக்குப் பிறந்த ஒரு பாலகனாலேயே நிகழ வேண்டும் என்று இரண்டாம் வரமும் பெற்றான். சிவன் நெடுந்தவத்தில் ஆழ்ந்து விட்ட படியால் சிவகுமார சம்பவத்திற்கு வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையில் தான் இரண்டாம் வரத்தை பெற்றான். வரம் வாங்கியவன் சும்மா இருப்பானா? தேவர்களை இம்ஸித்தான், யாகங்களைக் கலைத்தான். கொடுங்கோல் புரிந்தான்.

தேவர்களைக் காக்க துணை புரிய வேண்டிய சிவனோ தவத்திலல்லவா இருக்கிறார்? பிருகஸ்பதியை அனுப்பி மன்மதனை அழைத்து வந்து....

உங்களக்குத்தான் தெரியுமே ? மன்மதன் சிவனின் தவத்தைக் கலைத்ததும், காமதகனம் நடந்ததும், ஆறுமுகன் சரவணப் பொய்கையில் உதித்ததுவும் நிகழ்ந்தன. தாகாசுரனால் துரத்தப் பட்ட இந்திரனும், ஏனைய தேவர்களும் இந்தத்தலத்தில் தஞ்சம் புகுந்து சிவனை நோக்கி தவமிருந்தனர். அதனால் தான் இந்தத் தலம் அமரேசம், அமராவதி, அமராபுரம், (தேவர்கள் தன்யமடைந்ததால்) தன்ய கோட்டா என பல பெயர்கள் பெற்றது.

தாரகாசுரன் செய்து கொண்ட அட்வான்ஸ் புக்கிங் படி, சிவகுமாரனான முருகன் கைவேல் தாரகனின் நெஞ்சைக் கிழித்தது. முன்னொருமுறை தவத்தால் சிவனிடம் பெற்றதும் தாரகன் நெஞ்சில் பொதிந்திருந்ததுமான ஆத்ம லிங்கம் ஐந்து துண்டுகளாய் சிதறி மேற்சொன்ன பஞ்சாராமங்களில் விழுந்தன. அந்த ஆத்மலிங்கத்தின் பெரிய துண்டு விழுந்தது இந்த அமராவதியில். அதை இந்திரனும், தேவகுரு பிருகஸ்பதியும், அசுரகுரு சுக்ராச்சார்யார் ஆகிய மூவருமாய் பிரதிஷ்டை செய்ததாய் ஐதீகம். இந்த பளிங்கு லிங்கம் பதினைந்து அடி உயரம் கொண்டது. இதற்கு அபிஷேகம் மேன்மாடத்திலிருந்து செய்யப் படுகிறது. தமிழ் நாட்டில் இப்படி நெடுநெடுவென சிவலிங்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

இன்னொரு தலபுராணம் யாதெனில் திரிபுரம் முற்றுமாய் சிவபெருமான் எரித்த பிறகு, சூரியனால் உருவாக்கப் பட்ட உயர்ந்த சிவலிங்கம் ஒன்று மட்டுமே எஞ்சியிருந்ததாம். சிவபெருமானே அதை ஐந்தாக்கி இந்த ஐந்து தலங்களிலும் இருக்கச் செய்ததாயும் ஐதீகம்.

மற்றபடி பல தலங்களிலும் சொல்லப் படுவதைப் போல் வளர்ந்து கொண்டே வந்த இந்த சிவலிங்கத்தின் உச்சியில் இந்திரன் ஒரு ஆணி அறைந்து வளர்ச்சியை தடுக்க முயன்றதாயும், உச்சியிலிருந்து இரத்தம் வழிந்ததாயும், லிங்கத்தின் மேனியில் இன்னமும் அந்த வடு காணப்படுவதாயும் ஒரு இளம் குருக்கள் சொன்னபோது ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டேன். இன்னுமெவ்வளவு எடத்துல தாண்டா இந்த கதையையே விடுவீங்க?’ என என்னுள் இருந்த ஒரு கவுண்டமணி சவுண்டு விட, அவசர அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.

கோவில் பிராகாரத்தில் பல கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. கிருஷ்ண தேவராயர் கால கல்வெட்டுகளும், பனிரெண்டாம் நூற்றாண்டு சார்ந்த கல்வெட்டுக்களும் இருப்பதாய் அறியவருகிறது.

ஆந்திரத்தில் புழங்கும் இன்னொரு சரித்திரம் பண்டிதராத்ய சரிதம் ஆகும். ஸ்ரீபதி பண்டிதராத்யர் எனும் மகான் சூர்ய சிம்ஹாசன பண்டிதராத்ய பீடத்தை ஸ்தாபித்தவர். மல்லிகார்ஜுனஸ்வாமியின் அருளால் சிவராத்ரி சமயம் அவதரித்தவர். அவர் வாழ்ந்த கொண்டவீடு பகுதியின் அரசன்  பௌத்த துறவிகள் சிலரின் துர்போதனையால் பண்டிதராத்யர் கண்களைத் தோண்டி அவரைக் குருடாக்கினான். ஒரு முறையல்ல... மூன்று முறை. ஒவ்வொரு முறையும் அம்மகானுக்கு மீண்டும் கண்கள் தெரிந்தது. மூன்றாம் முறை கண் தோண்டிய குழியில் கள்ளிப்பாலை ஊற்றி கொடுமை புரிந்தான். இந்த முறை அமராவதி வந்த பண்டிதராத்யர் அமரேஸ்வரரைக் கண்டவுடன் மீண்டும் கண்பார்வை கிடைக்கப் பெற்றார். இப்படியாய் ஒரு சரிதம் இத்தல மகிமை பற்றி பேசுகிறது.

ஆலயம் விட்டு வெளியே வந்தால் கிருஷ்ணை நதி அமரேஸ்வரன் பாதம் அலம்பியபடி அமைதியாய் ஓடுகிறது. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் கோவிலுக்குள் நீர் புகாது என்றும் ஒருவர் சொன்னார்.

கிருஷ்ணா நதியிலிருந்து படகுகளில் ஆற்று மணல் நிரப்பி அதை
கோவிலுக்கு எதிரிலேயே லாரிகளில் ஏற்றுகிறார்கள். மணல்கொள்ளைக்கு ஆந்திரம் தமிழ்நாடு எனும் பேதமே இருக்காது போலும். தமிழ் நாடு என்றவுடன் போன வருடத்து பத்திரிகை செய்தி நினைவுக்கு வருகிறது. இந்த அமராவதி கோவிலுக்கு சொந்தமான ஐநூறு ஏக்கரோ என்னவோ, நிலம் மகாபலிபுரம் செல்லும் வழியில் இருப்பதாயும் அதற்காக அந்நாள் ஆந்திர முதல்வர் ரோசய்யா தமிழக முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாயும் செய்தி வந்தது. .அந்த  நிலத்துக்கான மதிப்பை ஆந்திரம் பெற்றதோ இல்லையோ, ரோசய்யா அவர்களையே தமிழகம் பெற்று விட்டதே! எப்படியாவது என்குடி வாழ்க!

கோவிலுக்கு வெளியே ஒரு மண்டபம் இருக்கிறது. அதன் முகப்பில் ஒரு மாடம். அந்த மாடத்தில் இடது பதம் தூக்கி ஆடும் அம்பலவன் நடராஜனின் சுதைச் சிற்பம்.... கோவிலுள் அமரேச லிங்கத்தினைக் கண்டு மனம் உருகியதை விட இந்த நடராஜனின் சுதைச் சிற்பம் என்னுள் பெரும் ஆன்மீக விழிப்பை கிளர்த்தி கல்லாய் சமைந்து நிற்கச் செய்துவிட்டது. அந்த நடராஜனின் மடக்கிய வலக்கைக்கும் மார்புக்கும் இடையே ஒரு குருவியின் கூடு. கிரீச்சிடும் குஞ்சுகளை ஒரு தாய் போல் மார்பில் தாங்கி ஆதூரம் காட்டும் மன்றாடி.

எனக்கென்னவோ, கூடு பொதிந்த கையன், தென்னாடு உடைய சிவன் கண்ணெதிரே காட்டிய இறைமையை விட ஏடு கூறும் தலபுராணம் முகிழ்த்தும் ஆன்மீக உணர்வு ஒரு மாற்று குறைவுதான் என்று தோன்றுகிறது.

நீங்க என்ன சொல்றீங்க?