ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

கணவக்கத்தரி எண்ணைக்கறி



நானும் பல மேட்டேரைப் பதிவாப் போடறேன். ஆனாலும் மக்கள் சமையல்குறிப்பு பதிவுகள் பக்கமல்லவா மொய்க்கிறார்கள் ? மோதிப் பார்த்துடலாமேன்னு முடிவுப் பண்ணிட்டேங்க .. சரியா? இனி மேற்கொண்டு படிங்க! 

இந்த க.க.எ.க வை செய்யத் தேவையானது :

-டீ.வீ. ரிமோட்
-பிஞ்சு கத்திரிக்காய் அரைக்கிலோ
- கைத்தலம் பற்றிய கணவர்
- நூல்கண்டு
- கடலைப் பருப்பு இரண்டு டீஸ்பூன்
-உளுத்தம் பருப்பு ஒன்றரை டீஸ்பூன்
-மிளகாய் வற்றல்
-தனியா இரண்டு டீஸ்பூன்
-பெருங்காயம் கொஞ்சம்
- அரைமூடி தேங்காய்த் துருவல்
-எண்ணை தேவையான அளவு


தாய்க் குலமே! நீங்கள் பக்கத்தில் இருக்கும் போது சங்கரா சேனலையும், அந்தப்பக்கம் நகர்ந்து விட்டால் சைலண்டாய் எப் டீ.வீ யும் பார்த்துக் கொண்டிருக்கும் கணவரை, இந்தக் கறிவகையை செய்ய ஈடுபடுத்துவது அதன் சுவையை மேலும் அதிகரிக்கும்.

முதலில் டீ.வீ. ரிமோட்டைக் கைப்படுத்தி, படக் என்று டீ.வி யை அணைக்கவும். அந்த சமயம் உங்கள் முகத்தில் சற்றே கடுகடுப்பு அவசியம் தேவை. இந்த பாவம் கணவரின் ஒத்துழையாமையையும், நழுவுதலையும் கட்டுப்படுத்த உதவும்.

முதலில் வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரையும், கத்தரிக்காய் மற்றும் கத்தியையும் கணவர் கையில் தரவும்.

கணவரைத் தண்ணீரில் அப்படியே அமுக்கி... ஸாரி.. கணவர் என்றா சொன்னேன்?  ஸாரி! கத்தரிக்காய் .. கத்தரிக்காய் என்று மாற்றி வாசிக்கவும்.

சற்றே வறண்ட குரலில் செய்முறையை கணவருக்கு  விளக்கவும். பட்சி இந்த நேரத்திலும் பறந்துவிட வாய்ப்பிருக்கிறது. ஒரு கத்திரிக்காயை வேண்டுமானால் வெட்டிக் காண்பிக்கலாம்.

கத்திரிகாயின் காம்புத்தொப்பியை மட்டும் வெட்டி,முழுதுமாய் நறுக்காமல், குறுக்கும் நெடுக்குமாய் கீற வேண்டும்..

கணவர் சார் கத்திரிக்காய்க்கு வலிக்காமல் கீறி முடிப்பதற்குள்,
வாணலியில் சிறிதளவு  எண்ணை விட்டு க.பருப்பு,உ.பருப்பு, மிளகாய் வற்றல், சிறுங்காயம்( அதாவது சிறிதளவான பெருங்காயம்), தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும்.

தலைவரிடம் அவ்வப்போது ஆச்சா... ஆச்சா என வினவிக் கொண்டே இருக்கவும்.

வறுத்தவற்றை மிக்சியில் இட்டு,கரகரவென அரைக்கவும்.
சொல்ல விட்டுப் போச்சே... தேவையான அளவு உப்பையும் அரைக்கும் போது சேர்க்கவும்.

அரைத்த பொடியை ஒரு ஸ்பூனோடு கணவர் வசம் தந்து கீறி வைத்த ஒவ்வொரு கத்தரிக்காயின் உள்ளேயும்  ஸ்பூனால் திணிக்கச் சொல்லுங்கள். வேணுமானால் முகத்தில் இப்போது  கடுகடுப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.

பிறகு, அவரிடம் நூல்கண்டைத் தரவும். ஸ்டப்பிங் செய்யப்பட்ட கத்தரிக்காயைச் சுற்றி நூலால் பம்பரத்துக்கு சாட்டைசுற்றுவது போல் இரண்டே சுற்று சுற்றி, ஒரு முடிச்சை போடச் சொல்லவும். மூணு முடிச்சு போட்ட அவரின் அனுபவம் இப்போது கண்டிப்பாய்க் கை கொடுக்கும்.  நூல்கண்டைக் கையில் வாங்கியபடி, சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது? போன்ற பன்ச் டயலாக் எல்லாம் கணவர் உதிர்க்கலாம். அதைப் பொருட்படுத்த வேண்டாம்.

முடிச்சுகள் போட்டு முடித்தபின், கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொல்லிக் கொண்டே, வாணலியில் எண்ணைவிட்டு, கடுகு தாளித்தபின் கத்தரிக்காயகளை சேர்த்து மெல்ல பிரட்டவும்.
காஸ் அடுப்பை சிம்மில் வைக்கவும்.

இதுவே, கணவக்கத்திரிக்காய் எண்ணைக்கறி செய்முறை. காய் வெந்தபின் சுற்றிய நூலை நீக்கி விடலாம்.

கொஞ்சம் அதிகமாய் செய்து வைத்துக் கொண்டால், பிரிட்ஜில் வைத்து, காலை வரவர உப்புமாவுக்குத் தொட்டுக் கொள்வதற்கும், மதியம் டிபன் பாக்சில் சாதத்துக்கு கலந்து கொள்ளவும், இரவு சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாகவும் அன்புக் கணவருக்கு பதினைந்து நாள் பரிமாறலாம்.

வர்ட்டா?

         
( படம் கூகிளுக்கு நன்றியுடன்) 


-

திங்கள், ஏப்ரல் 04, 2011

காமச்சேறு


காமம்.. காமம்.. இரவுபகல் எந்நேரமும் பெண்ணுடலையே நச்சும் மனம்.
மோகவெறியில் பெரும்செல்வம் தொலைத்து பெருநோயும் பீடித்து அருணகிரி உழன்றகாலை...

இருக்கும் சிறிது உணவையும் தம்பிக்காக வைத்து அருணகிரியை சாப்பிட அழைக்கின்றாள் தமக்கை ஆதிலட்சுமி..

அக்கா! எனக்கு ஏதும் பணம் தா .. நான் போக வேண்டும்

ஆம் அவன் விலைமாதரை  நாடிப் போக வேண்டும்.. அதுவும் உடனேயே.. அதற்கு பணம் வேண்டும்.

வீட்டிலோ சல்லிக் காசில்லை.

காசு ஏதும் இல்லையடா அருணகிரி! நீ ஆடியதெல்லாம் போதாதா?. உள்ளே வா ! சாப்பிட்டுவிட்டு அமைதியாய் முருகா முருகா எனச் சொல்லிக்கொண்டு உறங்கு. பிள்ளையாய் வளர்த்த தம்பியின் நிலைகண்டு கண்ணீர் உகுத்தவாறே நின்றாள் தமக்கை.

நீயெல்லாம் ஒரு அக்காவா? பணம் தா. தருகிறாயா இல்லையா? உடலிச்சை பிடித்தாட்ட, வசம் இழந்த அருணகிரி வெறிபிடித்து கத்தினான்.

ஆதிலட்சுமியின் கண்ணீர் நின்றது. உடல் நிமிர்ந்தது.உள்ளே வா

வந்தேன்.. பணம் தா அருணகிரியின் கண்களில் வெறி

சரேலென தம்பி முன் சேலை களைந்தாள். என்னை பெண்டாள வா! அந்த பரத்தையரிடம் நீ சுகிக்கும் அதே அவயவங்கள் தான் இங்கே என்னிடமும் இருக்கிறது. வா.. உன் வெறியைத் தீர்த்துக் கொள்.

அதிர்ந்தான் அருணகிரி. கால்களின் கீழ் பூமி நழுவலாயிற்று. கண் பொத்தி விழுந்தான்.. ஐயகோ! இதற்கா திரிந்தேன்?
வீட்டைவிட்டு வேகமாய் வெளியேறினான்.

கால் போனபோக்கில் நடந்தான். வழியில் எதிர்ப்பட்ட ஒரு முதியவர்,உன் வாதை தீர்ந்து வாகை சூடும் காலம் வந்துற்றது.. முருகனருள்! மேற்கே தெரிந்த திருவண்ணாமலை கோபுரத்தைக் கைகாட்டி நகர்ந்தார்.

கோவிலடைந்த அருணகிரிக்கு தன்மீதான வெறுப்போ நொடிக்கு நொடி பல்கிப் பெருகியது. பெண்டாளச் சொல்லி சேலைக் களைந்த தமக்கை. இந்த இழிந்த வாழ்வு இனியும் வேண்டுமோ?

அருகிருந்த வல்லாள மகராஜன் கோபுரத்தின் மேல் கரகரவென்று ஏறினான்.  போகட்டும்.. வெறும் தசைப்பற்றில் கழிந்த என் காலம் இத்தோடு முடியட்டும். அக்கா! என்னை மன்னித்துக் கொள்.

கோபுர உச்சியிலிருந்து காமப் பெருநோய் குதித்தது.

என்ன இது? எனக்கேதும் நேர்ந்தது போல் தெரியவில்லையே. சொர்க்கம் புகுந்துவிட்டேனா? எனக்கேது சொர்க்கம்.. செய்த பாவத்திற்கு நரகத்தில் கூட எனக்கு இடம் உண்டா என்ன?

கண்ணைத் திறக்கவொட்டாமல் பொன்னொத்த ஒளி.

அருணகிரி! நில்! தாங்கிப் பிடித்த கரங்கள் அவனை தரையிறக்கின.

கண்ணெதிரில் சக்திவேல் தாங்கிய சம்புகுமாரன்.

குமரா! எம்பெருமானே! அருணகிரி தன்னிலை மறந்தான். வேதனையும் வெறியும் அகன்றன. நெஞ்சகமோ கழுவிக் கோலம் இட்டது போல் நிர்மலமாய்த் துலங்கியது. நல்லுருவும்  கொண்டான். 

அருணகிரி! இனி எனைப்பாடும் பணி யுனக்கு பூவாய் சொரிந்தன செவ்வேளின் வார்த்தைகள் .

அருணகிரியின் தலை மட்டும் ஆமோதித்தது.

தனைமறந்த மோனநிலை. . 

எழுந்தது காங்கேயன் கைவேல்.

நாவை நீட்டு

நீட்டிய நாவில் வேலெழுதியது ஆறெழுத்து மந்திரத்தை.
கட்டிய கவியெல்லாம் சந்தம் கொஞ்சப் போகும் அருணகிரியின்  நாவில், வேலேழுத்து விதையூன்றியது.

அருணகிரி! இனி நீ பாடத்தடையில்லை. தந்த இவ்வேலை நீ முடித்தபின்னர் சாயுச்சியம் தருமிவ் வேல். அதுவரைப்
பாடிப்பாடிக் கரைந்து விடு. கேட்போரைக் கரைத்துவிடு.

ஏதும் சொல்லவியலா அருணகிரியின் மத்துநிலையை, தரையில் தட்டப் பட்ட வேல் உணர்வுநிலைக்கு திருப்பியது.

வடிவேலா!  எந்த சொல்.. எந்த மொழி உன்னை முழுதுமாய் வர்ணிக்கத் திறம் கொண்டது அறிகிலேனே?
வள்ளியம்மையின் பாதங்களைக் கண்ட கணமே காமுறுபவனே!
தேவசேனை முந்தானை முகர்ந்து மெய்மறந்து  கைவேல் நழுவ நிற்கும் அழகா!
மன்மதனுக்கு மாயபாணங்கள் தந்தவனே.!
கண்டோர்  மோகிக்கும் சௌந்தர்யனே !
நல்லோரைவிடுத்து இந்த நீசனை உய்விக்க திருவுளம் கொண்டதேன் கந்தவேளே?

முருகனின் மோகனப் புன்முறுவல் பெருஞ்சிரிப்பாய் மலர்ந்தது. இருவிலாவிலும் கைகள் அமர்த்தி பேரருள் சிரித்தது.

அருணகிரி நிதானித்தான். நான் சொன்னதில் ஏதும் தவறா? 

கந்த சிவம் ஏன் நகைக்கிறது?

அடடா! காமத்தில் ஊறி மோகத்தில்  திளைத்து கலையழிந்தும்,
முன்வினைப் பேற்றால்  கந்தனே தன்னை ஆட்கொண்டும், காமத்தின் வாசனை என்னை இன்னமும் விடவில்லையே?
பெருமானைப் போற்ற, வள்ளித்தாயாரையும் தேவயானை
அம்மையையும் குறித்தபோதும் கூடவா என் வார்த்தைகள் காமச்சேறு பூசிவர வேண்டும்? இதென்ன சோதனை? முருகா என் செய்வேன்? அருணகிரியின் உள்ளம் அரற்றிற்று.

அருணகிரி! அஞ்சற்க! எமது விருப்பமே  உன் வார்த்தைகளில் மகரந்தமாய் சூல்கொண்டது. உன் நாவினின்று பிரவகிக்கும்  பாடல்களில் அங்குமிங்குமாய் காமத்தீற்றல் தெறிக்கட்டும்.அதீதமான காமவேட்கை கண்மறைக்கும் மாயத்தை மக்களுக்கு உணர்த்தட்டும்.


வா! வள்ளி! அருணகிரிக்கு உன் ஆசிகளைத் தா! நம் தத்துப் பிள்ளையல்லவா அவன்?       

தமிழில் வைதாரையும் வாழவைக்கும் தெய்வம்.....  ஒளவையுடன் சுட்டப்பழமா சுடாதபழமா என்று தமிழ்க்குறும்பு செய்த ஞானப்பழம்.... இன்னமும் தமிழ்சந்தம் சுவைக்க தயாராகிவிட்டதை உணர்ந்தாள் வள்ளியம்மை.

நல்லது அருணகிரி! என் பிராணநாதன் உறையும் தலமெல்லாம் சென்று உன் தமிழால் கந்தசுகந்தம் வீசும் பாமாலைகள் தொடுத்துவா! என்றென்றும் அவை என் சுவாமியின் புகழைப் பாடிக் கொண்டிருக்கும். அந்தப் பாடல்களை நெக்குருகிப் பாடும் தமிழ் நெஞ்சமெல்லாம் காருண்யமும்,அன்பும்,மன ஒருமையும் ஏற்படுத்தும். வள்ளியம்மையின் குரலோசை குயிலைப் பழித்தது.

தாயே! தன்யனானேன்.. உன் அருளால் இந்த மனிதமயில் குகன் குன்றுதோறும் ஆடும். இந்த கந்தக்குயில் குமரன்
கோவிலெல்லாம் நாடி அழகன் திருப்புகழைப் பாடும். தாயே! தாயே!! எனக்கு தமிழை வரமாக தா!”. இறைஞ்சினான்  அருணகிரி.


பூஞ்சிரிப்பு உதிர்ந்தது புண்ணியனின் பவழஇதழ்களில்,

தமிழைவிட எனக்கேது அமிழ்து அருணகிரி? தந்தோம். எம்தமிழில் சிறிது உனக்கும் தந்தோம். உன் பாடல்கள் எனக்கு மட்டுமல்ல, தமிழுக்கும் புகழ் சேர்க்கட்டும். போய் வா! தமிழ் பொழிந்து வா !

ஏன் பிரபு? அருணகிரி இப்போதே பாடட்டுமே? காதாரக் கேட்போமே? வள்ளி ஆர்வம் காட்டினாள்.

அருணகிரி தயங்கி நின்றான். என்னவென்று பாட? எதிலிருந்து துவங்க?

தமிழ்த் தெய்வம் வாய் மலர்ந்தது.

அருணகிரி! நானே அடிஎடுத்துத் தருகிறேன். இப்போதே துவங்கு.. பாடிப்பரவு பாரெல்லாம்...

என் பாக்கியம் பிரபு!

உம். தொடங்கு அருணகிரி... முத்தைத்தரு பத்தி திருநகை.....   .
         
.....