செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

விட்ட குறை தொட்ட குறை


வேகம் பிடித்து விட்ட ரயிலின் தடதடப்பு ஒரு தாளகதியோடு என்னுள்ளே முழுமையாய் இறங்கி உடம்பு மனசெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
தட் தடக் தட் தடக். தடக் தடக்

அன்று போல் தான் இன்றும் ரயிலின் கதவருகே  நின்றபடி நான்.

அன்று மார்கோ சோப் மணக்க அருகே அவளும் நின்றிருந்தாள்
இன்று நான் மட்டும் தனியாய் கதவருகில்...

அவள்...  அருகே தான்..  பெட்டியின் இரண்டாவது வரிசையில்...
ஆனாலும் வெகு தொலைவில்.

சார்! இங்கே ஸ்மோக் பண்ணக் கூடாது.

சாரிங்க. சிகரட்டை பற்ற வைக்குமுன்னரே வெளியே எறிந்தேன்.

முப்பது நிமிடங்களுக்கு முன்வரை, அவளின் நினைவுகள், பிரிவின் ரணங்கள் எல்லாமே புதையுண்டு புல்முளைத்து போய் விட்டதென்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன் ? உறங்கிக் கிடந்த எரிமலை பொங்கிக் கக்கும் என்று கண்டேனா?

இதற்காகவா இந்தியா வந்தேன்? கூல் கூல்... இதென்ன இப்படி படபடக்கிறது எனக்கு? தென்ன பைத்தியக்காரத்தனம்..நோ.. நோ.. கூல்.. கூல்..

இது விந்தையாகக் கூட இருக்கிறது.. நேற்று இரவு தானே ராகவன் சார் கேட்டார்...

என்ன ஸ்ரீராம்! உங்க எழுத்தின் அடியாழத்தில் ஒரு காதலின் ஏக்கம்.. ஒரு பிரிவின் ஆராட்டம் நீரோட்டமாய் சலனித்தபடியே இருக்கிறதாய் எனக்கு தோணும்.. தப்பா கேட்கிறேனா?”. 

என்ன உரிமை கேள்வியில்?! இது பிறர் விவகாரத்தில் மூக்கு நுழைக்கும் வக்கிரம் அல்ல.. ராத்திரி என்ன சாப்ட்டீங்க என்று ஒரு டாக்டர் கேட்கும் கேள்வியாய்..  கோத்திரம் நட்சத்திரம் சொல்லுங்கோ என வினவும் அர்ச்சகரின் கடமைக் குரலாய்..

ராகவன் சாரோடு எனக்கு ஒரு வருடப் பழக்கம் தான். ஒருவருக்கொருவர் வலைப்பூக்களில் கருத்துகள் பரிமாறியும் அவரின் தமிழில் வசமிழந்தும், கேள்வி கேட்காமல் அவரை என் இலக்கிய நண்பனாய் ஒரு வழிகாட்டியாய் ஏற்றுக் கொண்டிருந்தேன். இருபது வருட லண்டன் வாழ்க்கையின் அன்னியத்தை  சமன்செய்து வரும் இணையத் தொடர்புகளில் ராகவன் சார் ஒரு முக்கிய கண்ணி.

என் தங்கை மகளின் திருமணதிற்கான கோயமுத்தூர் பயணத்தின் போது  ராகவன் சாரை சந்திக்கும் விருப்பம் தெரிவித்தேன். அவரும் மறுக்காமல் சென்னையிலிருந்து வந்திருந்தார்.. இருவரும் தனியே அளவளாவ உதகைக்கு நேற்று சென்றிருந்தோம். அவரை முழுதுமாய்  பேசவிட்டு கேட்டுக் கொண்டல்லவா இருந்தேன்? அவர் எழுத்தில் ததும்பும் மேதாவிலாசமும் , மனிதாபிமானமும் அவர் பேச்சில் கூட விகசித்து என்னை திக்குமுக்காட வைத்தபடி இருந்தது. என்னவோர் அனுபவம்?. அதிக நேரம் அவருடன் இருக்க வேண்டியே சென்னை திரும்ப ரயில் பயணம் தேர்வு செய்தேன். விடுமுறை சீசன். ஒருவாறாய் வெவ்வேறு பெட்டிகளில் இடம் கிடைத்த ஏமாற்றதுடன் இந்தப் பயணம். .. இந்த ஏமாற்றத்தை விழுங்கி விட ஒரு அதிர்ச்சி என் எதிர் சீட்டில் காத்திருந்தது. இருபது வருடங்களுக்கு முன் என் கவிதைகளுக்கு ஊற்றுக் கண்ணாக இருந்தவள் ...  சாவதை யோசிக்க வைத்து என்னை உதறிவிட்டு சென்ற அபி அமர்ந்திருந்தாள்.

இந்த நேரத்து அதிர்ச்சிக்கு முன்னோடியாகத்தான் நேற்று இரண்டுமூன்று தரம் இவள் நினைப்பு எழுந்ததா?

நேற்று ரோஜா தோட்டத்தை பார்த்துவிட்டு ராகவன் சாருடன் நடந்து கொண்டிருந்தேன். ஒரு நெடிய மரத்தினருகே அதைத் தொட்டபடி ராகவன் சார் நின்றார்.

ஸ்ரீராம்! இந்த இடத்துல எத்தனை சினிமாக்காதல் அரங்கேறியிருக்கும்?” சாருக்கு பழைய பாடல்களில் நுண்ணிய ரசனை.

சார்! நான் வேணும்னா உங்களை கதாநாயகனாய் வைத்து ஒரு சினிமா எடுக்கவா?” சிரித்தபடி கேட்டேன்.

ஏன்? நான் நடிக்க மாட்டேனா? முப்பது வருஷமா நல்ல கணவனாய் நடிச்சுக்கிட்டிருக்கேன் தெரியுமா?”

சரி! சொல்லுங்க யாரை கதாநாயகியாய்ப் போடட்டும்?"

"அப்ப முதல்லேருந்து வருவோம். வைஜயந்திமாலாவை முதல் படத்துல போடேன்?”

அப்போ ரெண்டாவது மூணாவது படம்கூட இருக்கா? கதாநாயகிகள் லிஸ்ட் நீளமா இருக்கும் போலிருக்கே?”

ராகவன் புன்னகையுடன்  மறுப்பாய் தலையாட்டினார். நடிகை லிஸ்ட் இல்ல ஸ்ரீராம்... என் மனசில்.பாட்டு லிஸ்ட் தான் இருக்கு

வைஜயந்தி மாலா பட பாட்டு ஒண்ணு பாடுங்களேன்...

ஒய் நாட்.. ராகவன் பாட ஆரம்பித்தார்.

தில் தடப் தடப் கெ கெஹரஹா ஹை ஹஹா பி ஜா...

பன்னீர் பூக்கள் என் மேல் சொரிந்தது போலிருந்தது அவர் பாடிய பாடலும், பாடிய விதமும்...  ஒரு கண்ணிறுக்கம், ஒரு வாய்க் கோணல் உண்டா.?. என்ன இந்த மனிதன்  என்னுள்ளே விஸ்வரூபமாய் எடுத்துக் கொண்டே போகிறார்?

அந்தப்பாட்டு எங்கேயோ என்னுள்ளிருந்து குடைந்ததே..

ஆம். நினைவுக்கு வந்தது. கல்லூரிக்கு செல்லும் வழக்கமான ரயில் பயணத்தில் இந்தப் பாட்டை ரயிலின் தடதடப்பை பின்னிசையாய்க் கொண்டு அபி பாடினாள் ஒரு முறை. அவளுக்கு இது பிடித்த பாட்டு.

என்ன ஸ்ரீராம்? ஏதும் பிளேஷ்பாக்கா?”

 இல்ல சார்.. பாட்டுல சொக்கிட்டேன். பியூட்டிபுல் சார்.,
முகமத் ரபியும் லதாவும் தானே பாடினது?”. பேச்சை மாற்றினேன்.

இல்லை.. முகேஷும் லதாவும். மதுமதின்னு அழகான படம் திலீப் குமாரும் வைஜயந்தியும்.. இளமையும் இயற்கையும் கொஞ்சும் பாட்டு


எவ்வளவு நேரம் தான் ரயில் கதவருகே நிற்பது? இருக்கைக்கு திரும்பினேன் .

அபியின் பக்கத்திலிருந்த பெண் பன்னிரண்டு வயதிருக்கலாம். அவளுடைய மகளாயிருக்க வேண்டும்.. அபியின் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.

நீங்க அப்படியே இறங்கிப் போய்ட்டீங்களோன்னு பார்த்தேன். இது அபியின் குரலா?

நான் ஏதும் பதில் சொல்லவில்லை.

எப்படி இருக்கீங்க. எங்க இருக்கீங்க?”

பைன்.. லண்டன்ல இருக்கேன்.

உங்க வைஃப் வரல்லையா?”

அவங்க இப்போ இல்ல..

ஐ ஆம் சாரி. அவங்களுக்கு என்னாச்சு?”

ஒண்ணும் ஆகல்லே. இட் வாஸ் அ டிவோர்ஸ்.

அபி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் என்ன பேசுவது என்று இருவருக்கும் புரியாது அங்கு மௌனம் கவிந்ததுபோல் இருந்தது. என் குறைந்த ஆங்கில அறிவு, உத்தியோக வாய்ப்புகள் குறித்த ஐயம், வசதியான அவள் பெற்றோரின் மறுப்பு, ஏதோவொன்று அபியை  என்னை ஒதுக்கும்படி செய்திருக்கவேண்டும். இவற்றை ஏதேதோ விதங்களில் அவள் வெளிப்படுத்திக் கொண்டிருந்த சமயங்களில் என் காதல் மும்முரம் கண்களை மறைத்து விட்டிருந்ததை பின்னாட்களில் உணர்ந்து கொண்டேன்.

இவன் எப்படி லண்டன்,.. வியாபாரம் என்று போயிருக்க முடியும் என்று அவளுக்குள் ஏதோ ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.
சட்டென்று பாதாதிகேசம் கசப்பு தட்டியது. நெஞ்சில் அசூயை மண்டியது. நான்கு வருடக் காதலை மறுதலித்து, என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று என் வீட்டு படியேறி விடைத்துக் கொண்டு சொல்லி அகன்றவள்.

ஆனாலும், என் இன்றைய முன்னேற்றத்திற்கு இவளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். உடைந்து நொறுங்கி விட்ட எனக்கு இந்த உதாசீனம் புரிபட்ட போது உண்டான வெறியில் என்னைப் பட்டைத் தீட்டிக் கொண்டேன். அபி குடியிருந்த என் மனதை பார்க்க மறுத்தேன். முகம் பார்க்கும் கண்ணாடியைக்  கூட பார்க்காத தவம்... என்னிலிருந்து நானே பெற்றுக் கொண்ட விடுதலை... திரும்பிப் பார்க்காத ஓட்டம். என்னை நானே ஜெயித்து விட்டது போலத் தான் தோன்றுகிறது. என்ன.....வாழ்க்கை ஒன்று தான் இந்த ஓட்டத்தில் எங்கோ வழியில் நழுவி விட்டது.

எதிரில் அபி கண்ணை மூடிய நிலையில் இருந்தாள். ஏதும் யோசிக்கிறாளா? பழைய நினைவுகள் அவள் உள்ளுக்குள்ளே அலைக்கழிக்கின்றதா?

சட்டென்று அவள் தலை முன்னோக்கித் துவண்ட அதிர்ச்சியில் கண் விழித்தாள். சை! நல்ல தூக்கம் தான் அவளுக்கு. கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது எனக்கு.

காலையில் ராகவன் சாருக்கு என் தொலைந்து போன காதலை சொல்ல வேண்டும். இன்றைய அசந்தர்ப்பமான சந்திப்பைப் பற்றி சொல்ல வேண்டும்.

காதலையும் அன்பையும் உருகிஉருகி எழுதும் அவரிடம் இதைப் பற்றியும் எழுதச் சொல்ல வேண்டும். ஏதும் மிஞ்சாத இந்த காதல் விபத்தில், ஒரு கதையேனும் மிஞ்சுகிறதா என அவரைப் பார்க்கச் சொல்ல வேண்டும். உணர்வுகளின் நுணுக்கங்களை துல்லியமாய்ச் சொல்லும் ராகவன் சார், இந்தக் காதல் சிலுவையை என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்.

மனதினுள் ஒரு சன்னல் திறந்து, தூசுகளின் நடனத்துடன் உள்ளே வெளிச்சம் பரவியது..

தூக்கம் எனக்கும் வரும் போலத்தான் இருக்கிறது.