ஞாயிறு, ஜூலை 31, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 8அன்பின் வலைச்சொந்தங்களே!

வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியப் பணியை நான் ரசித்தே செய்தேன்.  வழக்கமான பணிச்சுமைகளோடே இன்னமும் சில முக்கிய பொறுப்புகள் இந்த வாரம் சேர்ந்த போதிலும், வலைச்சரத்தின் பதிவுகளையும் அறிமுகங்களையும் இயன்றவரையில் முழு அர்ப்பணிப்போடு செய்து முடித்த திருப்தி இருக்கிறது.

நிறைய புதுப்பதிவர்களின் வரவும் வலையில் அதிகரித்திருக்கிறது. அவர்களுக்கு உபயோகமாய் இருக்கும் என எனக்குத் தோன்றிய பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறேன் .

பல முக்கிய பதிவர்களை என்னால் சேர்க்க முடியவில்லை. அதற்கு காரணம் நேரமின்மையே தவிர வேறொன்றில்லை.

வலையை நாம் எதற்கு உபயோகிக்கிறோம் என்பது முக்கியமான ஒன்று. புது நட்புகளும் சொந்தங்களும் இங்கே கண்டிப்பாய்க் கிட்டும்.. நம் குடும்பத்தின் நீட்சியாக பதிவர்கள் அமைந்து விடுகிறார்கள். இலக்கியம் நுகர ,பொழுது போக்க, சமையல் கலை அறிய, அரட்டைத் தளமாக, தொழில் நுட்பம் அறிய ,இசை பகிர என அத்துணையும் வலையுலகில் இருக்கிறது.

பதிவர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். வலை மேய்வதை ஒரு தளையாக  உங்களைச் சுற்றி பின்னிக் கொண்டு,  உங்களைச் சார்ந்தவர்களுடனான உறவை பாதிக்கும் ஒரு தொல்லையாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். எதற்குமே ஒரு அளவு உண்டல்லவா?. வலையின்பம் நுகர, வாழ்க்கை இன்பம் தொலைக்கப் போமோ? இதை அறிவுரையாய் இல்லாமல் உள்ளார்ந்த அன்பால் நான் சொல்வதாகவே புரிந்து கொள்ளுங்கள்.

வானவில்லுக்கு வருகை தந்து பதிவுகளை படிக்கும் அன்பர்களுக்கும் ,பின்னூட்டங்கள் இட்டும், மின்னஞ்சலிலும், அலைபேசியிலும் அன்பு செலுத்தும் நட்பு நெஞ்சங்களுக்கும்,  இந்த ஒரு வாரத்தில் முதன் முறையாய் அறிமுகமான பதிவர்களுக்கும் என் நன்றி கூடிய வணக்கங்கள் .

இந்த வாய்ப்பை நல்கிய வலைச்சரத்துக்கும், சகோதரர் சீனா அவர்களுக்கும் என் நன்றியும் அன்பும். திரு. சீனா அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. பதிவுகளுக்கும் படிப்பவர்களுக்கும் இடையே பாலமாய் விளங்கும் 'வலைச்சரம்' பதிவுலகில் ஒரு பள்ளிக் கூடம்.

மீண்டும் சந்திப்போம் சொந்தங்களே.. வானவில்லுக்கும் அடிக்கடி வாருங்கள்..  காத்திருப்பேன் அங்கே...

என்றென்றும் அன்புடன்

மோகன்ஜி
ஹைதராபாத்.
பட உதவி :Google Image

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -7என் கவிதையொன்று.... 


ஓர் பின்னிரவுப் பயணத்தில் 


நெடுந்தொலைவுப் பேருந்தின்
பின்னிரவுப் பயணத்தில்,
சாலை பாவா ஓட்டத்தில்
சன்னலின் வழியாக
சல்லிக்கும் காற்றுவந்து
சேதி சொல்லும் – உன்னினைவும்
கற்பூர மணமாக
மனம் பரவும்.

காற்று வெளியினிலே
கவிதை யினம்தேடி
கண்ணும் அலைபாயும்
மேகப் பொதிகளிடை
மேவுநிலா வெளிவந்து
உந்தன்முகம் காட்டும்.

சாலையின் இருமருங்கும்
தலைதெறிக்க வருமரங்கள்
பார்வைக்குத் திரைவிரிக்கும்
உனையெண்ணி விகசிக்கும்
என்முகத்தை வெளிநீண்ட
புளியங்கிளைத் தட்டி
புவிக் கொணரும்.

மங்கிய வெளிச்சத்தில்
மறையும் பெயர்ப்பலகை
வரிசையில் உன்பெயரைக்
கண் தேடி மாயும்.
பேருந்தின் தாலாட்டில்
சீறிவரும் எதிர்க்காற்றும்
உன்னன்பின் பரவசம்போல்
மூச்சு முட்டும்.

சேருமிடம் வந்தபின்னர்
பேருந்து நின்றபின்னும்
விரைந்திடும் உள்ளம்மட்டும்
தீர்ந்திடாத கனவைத்தாங்கி
சோர்ந்து செல்லும்.

(பெங்களூர் 1979)

பட உதவி : Google Images 


இன்னுமொரு கவிதை......வாழ்க்கை

உலைபொங்கி கொதிவழிந்து
      பொறுக்குச் சுவடுகள்
               கோடிட்ட கலயம்....
பற்று நீங்கி பளபளக்கும் நேரம்,
பழைய கோலம் மறந்திருக்கும்.


மீண்டும் பொங்கி, பொறுக்குத்தட்டி
மீண்டும் துலங்கி, பொலிவு கூடி...

கலயம் தொடரும்,
அலுக்காத ஆட்டம்.....
உருண்டொரு நாள்
        உடையும் வரை.ஒரு கணக்கு

நம்மாளு ஞொய்யாந்ஜி ரொம்ப கஷ்டப்பட்டு வேலை பார்த்தாலும், சம்பள உயர்வையோ, பதவி உயர்வையோ தராமல் இருந்தது அவர் பணிபுரிந்த அலுவலகம். ஒரு நாள் அவர் மேலதிகாரியைப் பார்த்து இதுபற்றி பேசப் போனார்.

மேலதிகாரி : என்ன ஞொய்யாந்ஜி? இன்னா விஷயம்.?

ஞொய்யாந்ஜி : சார் ! நாலு வருஷமா சம்பள உயர்வோ,
               பிரமோஷனோ இல்லாம இருக்கேன். உடனே
                அதுக்கு ஏற்பாடு பண்ணுங்க. சார்

மேலதிகாரி:    எதுக்காக உனக்கு தர வேண்டும்?

ஞொய்யாந்ஜி:   வேலை செஞ்சேன் சார்! வேலை..

மேலதிகாரி:   எப்போ செஞ்சே? நான் கேக்குறதுக்கெல்லாம்
              பதில் சொல்லு .. ஒரு வருசத்துக்கு எத்தினி நாள்?

ஞொய்யாந்ஜி:  365 சார்!

மேலதிகாரி: ஒரு நாளின் 24 மணி நேரத்துல எவ்வளவு நேரம்
             ஆபீஸ்ல இருப்பே?

ஞொய்யாந்ஜி: 8 மணி நேரம் சார்!

மேலதிகாரி: அதாவது ஒரு நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரம்
            இங்கிருக்கே. அப்பிடின்னா ஒரு வருஷத்தின்
            மூன்றிலொரு பங்கு 122 நாள் தான். சரியா?

ஞொய்யாந்ஜி: ஆமாம் சார்!


மேலதிகாரி: வாரத்துல லீவு எப்போ?

ஞொய்யாந்ஜி : சனி,ஞாயிறு ரெண்டு நாள் சார்!

மேலதிகாரி: வருஷத்துல மொத்தம் எத்தனை சனி ,ஞாயிறு?

ஞொய்யாந்ஜி: உம்... 52 சனி 52 ஞாயிறு மொத்தம் 104 நாள்

மேலதிகாரி: அப்போ ஏற்கெனவே நான் சொன்ன 122 நாளில் 104
             கழிச்சா மீதி 18 நாள் தான்

ஞொய்யாந்ஜி: ஆமாம் சார்!

மேலதிகாரி:  வருசத்துக்கு எத்தினி நாள் கேஷவல் லீவு எடுப்பே?

ஞொய்யாந்ஜி :12 நாள் சார்

மேலதிகாரி: 18இல் 12 போன மீதி 6 நாள் தான். அதுவுமில்லாம
             பொங்கல்,தீபாவளின்னு அரசு விடுமுறை 10 நாள்
             வேறு. அப்படின்னா வேலைநாள் எதுவுமே மீதி இல்லே.
           எப்படி சம்பள உயர்வு, பிரமோஷன் உனக்கு தருவது?

ஞொய்யாந்ஜி: அதானே? உங்களை தொந்தரவு பண்ணிட்டேன். 
               ரொம்ப சாரி சார்! வரேன்..


இனி சில  வலைத்தளங்கள் அறிமுகம் 


சங்கப்பலகை வலைப்பூவின் பதிவர் திரு. அறிவன். அரசியல், இலக்கியம் பற்றி ஆராய்ச்சி அணுகுமுறையுடன் எழுதுகிறார்.   வானவில் மனிதனில் வந்த காமச்சேறு எனும் அருணகிரி நாதர் பற்றிய என் பதிவில், இவர் இட்ட பின்னூட்டங்கள் இவர் நோக்கின் கூர்மையைப் புலப்படுத்துகின்றன.இவர் அதிகம் எழுத வேண்டும் எனும் பேராவல் எனக்குண்டு.


வெங்கட் நாகராஜ்  தலைநகரில் கால்பதித்த நற்றமிழன். எளிமையும், யதார்த்தமும் நிறைந்தது இவர் எழுத்து. இவரின் பார்வையின் வீச்சை உணர்ந்ததினால் சொல்வேன்.. இவர் ஒரு சிறந்த விமரிசகராய் பரிமானிக்க முடியும். களத்துல இறங்குங்க நண்பரே!
மனவிழி திரு சத்ரியன் அவர்களின் வலைப்பூ. கவிதைகள், நாட்டு நடப்பு என்று கொடி நாட்டும் பதிவுகள்.. கவிதைகள் சிக்கனமாய் ரசிக்கும் படி இருக்கின்றன.  சட்டு புட்டுன்னு இந்த வலைப்பூவைப் பார்த்துடுங்க.


பா.ராகவன்  பா.ராகவன் அவர்கள் அமுதசுரபி, கல்கி, குமுதம் போன்ற பல இதழ்களில் தடம் பதித்தவர். அவ்ர் அறிமுகம் பதிவே சுவையாக இருக்கிறது. நல்ல எழுத்தை பழக வேண்டுமெனில் இவ்வகை வலைப்பூக்கள் 'பாடத்திட்டம்' போன்றவை. கருத்தும் எழுத்தும் கலந்து காட்சியாய் மனத்துள் விரிவடையச செய்வது எளிதல்ல. எழுத்து முலாம் பூசும் வேலை அல்ல. அதற்கு பொன்னகை செய்யும் சூட்சமம் தேவை. இந்த தளத்தில் அது காணக் கிடைக்கின்றது.


அழியாச்சுடர்கள்  இந்த வலைப்பூவை தொடங்கி நடத்தும் அன்பர்களுக்கு என் அனந்த கோடி நமஸ்காரம். இதை வலைப்பூ என்று சொல்ல மனம் வரவில்லை.. திராட்சைக் கொத்து?...  தேன் கூடு? நவரத்தின ஹாரம்? காலத்தின் பொக்கிஷம்??.. சொல்லத்தெரியவில்லை. சிறந்த படைப்புகள்  சிங்காரிக்கும் வலைமகுடம்.. சத்திரத்து விருந்துக்கு தாத்தையங்கார் சிபாரிசு எதற்கு..  அழியாச்ச்டர் அழைக்கிறது. அமிழ்ந்து முத்தெடுங்கள்....

சனி, ஜூலை 30, 2011

வலைச்சரத்தில்ஒரு குயிலிறகு-6எனைக் கவர்ந்த சில புதுக் கவிதை வரிகள்


கண்ணாடியைத் துடைக்கத் துடைக்க 
என் முகத்தின் அழுக்கு 
மேலும் தெளிவாகத் தெரிகிறது 
                                                                     (வைதீஸ்வரன் )
                     
திருமணங்கள் சொர்க்கத்தில்
நிச்சயிக்கப் படுகின்றனவாம்
என் கல்யாணம் மட்டும் ஏன்
செட்டிப் பாளையத்தில் நிச்சயிக்கப் பட்டது?
                                                               
                                                                  (சக்திக்கனல்)


உனக்கும் எனக்கும் ஒரே ஊர் 
வாசுதேவ நல்லூர் 
நீயும் நானும் ஒரே குலம்
திருநெல்வேலி சைவப்பிள்ளைமார்
உன் தந்தையும் என் தந்தையும் 
உறவினர்-மைத்துனன்மார்கள்
செம்புலப் பெயநீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந்தனவே    
                                                                          (மீரா )   
அழுகை


இன்று நான் அழுதேன்; ஊமை 
          ஏக்கத்தால் அழுதேன் -ஏழைக் 
கன்று போல் அழுதேன். ஆனால் 
          கவிதையில் அழுதேன்.;இந்த 
மன்றத்தில் அழுத என்னை 
          மறுபடி அழவைக்காமல் 
சென்றுவா தமிழே! நாளை 
          திரும்பவும் சந்திக்கின்றேன்.
                                                                    (கண்ணதாசன் )
நானும் இலவு காத்த 
                                கிளிதான்.
ஆனாலும்
தலையணை செய்யும் 
தந்திரம் அறிவேன்          
                                                       (ஹா! கவிஞர் பேர் மறந்துடுச்சே!) 


இன்றைய பதிவர் தேர்வு 
  
எம்.ஏ.சுசீலா  இந்தப் பதிவர் தமிழ்பேராசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர். சங்க இலக்கியம் , பக்தி இலக்கியம் இவற்றில் தன் புலமையை வெளிப்படுத்தும் விதமாய் தமிழ்மணம் பரப்பும் தமிழம்மா. ஜெயமோகன் அவர்களின் வலைக்குழுமத்தில் பல திரிகளில் இலக்கியம் பேசும் இவர் பதிவுகளை நீங்கள் உடனே படிக்க வேண்டும். சொல்லிட்டேன்!

மதுரை சரவணன்  மதுரையில் ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராய் பணிபுரியும் சரவணன் சமுதாய நோக்குள்ள நல்ல பதிவர்.  தன் அனுபவங்களை எளிய பதிவுகளாய் வெளியிடும் இந்த நண்பரின் வலைப்பூவை அவசியம் நீங்கள் பார்க்கத்தான் வேண்டும்.

தியாகராஜ வைபவம்  தியாகராஜர் கீர்த்தனங்களை பாடல்களின் அர்த்தத்துடன்  எழுதப்படும் வலைப்பூ. கர்நாடக இசைப் பிரியர்களுக்கு பிடித்துப் போகும் இந்த சங்கீதப்பூ.

வடலூரான் கழுகுப் பார்வை என்று பேனர் போட்டிருந்தாலும் ஹாஸ்யப் பார்வை தான் பார்க்கப் படுகிறது. ட்வீட்ஸ்-ரிவீட்ஸ் என்ற ஒரு கலக்கல் பதிவை நினைவுப் படுத்தித்தான் இங்கு அறிமுகம் செய்கிறேன். ஏனோ அதிகம் பதிவுகள் இடாமல் இருக்கிறார் இதன் பதிவர் கலையரசன். எழுதுங்க சார்!

என் சமையலறையில்  தேவசுகந்தி அவர்களின் வலைப்பூ. சுவையான சமையல் குறிப்புகள் . இவரின் பின்னூட்டங்கள் கூட சுவையானவை தான். அடிக்கடி பதிவு போடுங்க மேடம்.    

ரசித்தவை நினைவில் நிற்பவை  திரு சூரி அவர்களின் வலைப்பூ.  சுகமான பாட்ல்களின் வீடியோப் பதிவுகள். பல வலைப்பூக்களை தன் களமாய் வைத்திருக்கும் இவர் தளத்துக்கு ஞாயிறு மதியம், தூங்காமல் போய் மேயலாம்.

என் வாசகம் : திரு ஜீவா அவர்களின் இந்த வலைப்பூ திரு வாசகம்ங்க!. ஆன்மீகம், நற்சிந்தை என நிராய விஷயம் சொல்கிறார். ஒரு சுத்து சுத்திப்பார்த்துடுங்க


பெருங்குளம் ராமக்ரிஷ்ணன் பக்கங்கள்   ஜோக்கு வலைன்னு நினைச்சீங்களா? இது ஜோசிய வலைங்க. அகஸ்மாத்தா கண்ணுல பட்டுதூ. ஆர்வமிருக்கிறவங்க  போய்ப் பாருங்க. கிரிக்கெட்டுல்லாம் கூட எழுதியிருக்கிறார். சில உபயோகமான ஆன்மீகத் தகவல்களும் காணக் கிடைக்கின்றன. ஏதோ நல்லது நடந்தா சரி!


வெள்ளி, ஜூலை 29, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-5
ஒரு கவிதை
அப்பா

சட்டைப் பித்தான்களை வரிசைமாற்றாமல்
போட்டதில்லை என்றும் நீ.

இடுப்பு வேட்டி இறுக்கக் கட்டாமல்
தடுக்கித் தடுமாறும் உன் கால்கள்.

லைஃப்பாய்மணக்க குளித்து வந்தபின்னும்
சோப்புமிச்சம் காதோரம் குழைந்துமின்னும்.

அன்னம் தரைசிதறாமல்
உண்ணத் தெரியாதுனக்கு

வேயுறுதோளிபங்கன் தவிர
வேறுபாட்டு நீ சொன்னதில்லை

கால்மாற்றி செருப்பு நுழைத்துதற
பால்மாறாது உன் கவனக் குறைவு.

காசெண்ணக்  கைநடுங்கும் ; இரகசியம்
சூசகமாய் சொல்ல அறியாய் நீ

அப்பா!

ஈதெல்லாம் இனியும் சொல்லி
கேலி செய்ய மாட்டேன் உன்னை.
பட்டுமாலை சார்த்திய
படம்விட்டு இறங்கிவந்து
என்
பக்கத்தில் உட்காரேன்!

********************************************
இரண்டு ஜோக்குகள்

ஆசிரியர்: ஞொய்யாஞ்ஜி! உணவு செரிமான முறையை இரண்டே வரிகளில் சொல்லு பார்ப்போம்?
ஞொய்யாஞ்ஜி:  அதுவா? வலது கையோடு ஆரம்பிச்சி இடது கையால முடியும் சார்


###########

ஞொய்யாஞ்ஜி ஒரு பத்திரிகையைக் காட்டி தன் மனைவி பல்லெலக்காவிடம் சொன்னார்,
இதுல என்ன போட்டிருக்கான் பார்த்தியா? ஒரு ஆம்பிளை ஒரு நாளில் 15000 வார்த்தைகள் தான் பேசறானாம். ஆனா பொம்பளையோ, ஒரு நாளைக்கு 30000 வார்த்தைகள் பேசுவாளாம். ரெண்டு மடங்கு!!
பல்லெலக்கா: அது ஏன்னா பொம்பளை ஒவ்வொரு விஷயத்தையும் திரும்பவும் ஒருமுறை சொல்ல வேண்டியிருக்கு ஆம்பிளைக்கு
ஞொய்யாஞ்ஜி: என்ன சொன்னே? திரும்ப சொல்லு?  
இன்றைய வலைப்பதிவர்கள் தேர்வு

எட்டயபுரம் : இது கவிஞர் கலாப்ப்ரியாவின் வலைப்பூ. என் அபிமானக் கவிஞர் . இவரது எழுத்துக்கள் ஒரு தெள்ளிய நீரோடை போல் சீரானது. தாகூரை ஆதர்சமாய்க் கொண்ட கவிஞர் இவர். கண்டிப்பாய் பாருங்கள் இந்த கவிவனத்தை.

பொன் மாலைப் பொழுது.: சகோதரர் கக்கு-மாணிக்கம் அவர்களின் வலைப்பூ.  நல்ல ரசனையுள்ள இவர் படைப்புகளும் வித்தியாசமானவை. இவர்பதிவிடும் பாடல்களின் தேர்ச்சி  இவரின் ரசனையை எண்ணி வியக்க வைக்கும்.

கலியுகம்: தினேஷ்குமாரின் வலைப்பூ. அவர் கவிதை புனையும் வேகம் அசாத்தியமானது. இவரின் பாடுபொருள் தெரிவுகள் சில சமயம் பிரமிப்பூட்டுபவை. வார்த்தை சாரலில் தொலைந்து போய்விடுகிறாரோ அவ்வப்போது.? தினேஷ்! கொஞ்சம் பார்த்துக்குங்க. கைத்தட்ட நாங்க இருக்கிறோம்.

(லிங்க் கொடுப்பதில் மடிகணனி பிரச்னை உள்ளதால் பதிவர் அறிமுகம் சற்று நேரம் கழித்து மீண்டும் தொடருகிறேன், மன்னிக்கவும் )
மோகன்ஜி    என்னுடைய இளஞ்சாராயத்தை

வியாழன், ஜூலை 28, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு 4


கவிதைகள்

சூத்திரம்
மான்குட்டியை கவ்வும் வேங்கை 
தன்குட்டியை கவ்வும் பாங்கை
                       புரிந்து கொள்கிறேன்.
,
உறவுகளுக்கும் சூத்திரம் 
                            அதுதானென்பதோ,
பிறழ்வுகள் நேரும்வரை 
                        புரிவதேயில்லை.

மயக்கம் 

என்னதான் சொல்லு 
எச்சில் மாங்காய் 
என் விரதத்தைக் கலைத்ததேயில்லை

உன் பல்பதிந்த பகுதி.தவிர்த்து
மறுபுறம் சுவைக்கிறேன்.

உன் வாய்ப்பட்ட மாங்காய் 
புளிப்பானதென்று 
உன் முகச்சுழிப்பு ஒன்றாலேயே
தெரிகிறதெனக்கு.


முகமாயம் 

இற்றுப் போன குடிசைக் கூரைக்கு
மஞ்சள் பூசி அலங்கரிக்கும் 
                  பூசணிப் பூக்கள். 

சாந்துப்பொட்டாய் உச்சியில் ஒரு குயில் 

இருபுறமும் புருவமாய்   
வாலசைக்கும் அணில்களும். 

கண்களாய் சார்ந்த
கருப்பு டயரிரண்டு .

மூக்காய் முதிர்ந்த பூசணிக்காய்.
வாயாய் அகன்ற குடிசை வாசல் .

குடிசைக்கு எல்லாம் தான் இருக்கிறது 
வயிறொன்றைத் தவிர.


சலிப்பு 
எனக்கு பழகிவிட்டது
உன் ஈர முத்தமும் 
கண்டக்டர் எச்சிலும்  

உலரும் ஈரங்கள் 
ஊர்ப்பட்ட வாகனப்புகை 
உள்ளிழுக்கும் போக்குவரத்து போலீசை,
பார்க்கும் போதெல்லாம் 
பாவமாய்த்தான் இருந்தது.....

சாலைக் கடந்த தள்ளுவண்டி மடக்கி,
ஆப்பிள்களை அள்ளியதை காணும்வரை.

 இனி பதிவர்கள் அறிமுகப் படலம் 

எங்க கலையாத சங்கத்து சாமியாடிகள்!

மூன்றாம் சுழி : பதிவர் அப்பாதுரை அவர்களின் வலைப்பூ. இதில் இவர் வெளியிடும் கதைகள், நாடகங்கள், தேர்ந்த திரையிசைப் பாடல் அனைத்துமே இவரின் புதுமையான, வழக்கமான சிந்தனையை தவிர்த்தவையாய், தனித்து நிற்கின்றன. சட்டெனத் தலையில் தட்டி திருப்பும் வரிகள். கொஞ்சம் அதிர்ச்சி, கொஞ்சம் ஆச்சரியம், நிறைய வியப்பு, கொஞ்சமே கொஞ்சம் சீண்டலெல்லாம் கலந்துகட்டிய உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தக் கூடும்.
இவரின் நசிகேத வெண்பா இவரின் மேதைமையை வெளிப்படுத்தும் இன்னொரு வலைப்பூ. கடோபநிஷதத்தின் சாரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, அதன் கட்டுமானத்தை மீறாமல், இவரின் சில கொள்கைகளுக்கும் பங்கம் வராமல் எடுத்தாண்டிருக்கும் ரசவாதத்தை நீங்களே படித்தால்  மட்டுமே அனுபவிக்க இயலும். தளைதட்டாத வெண்பாக்களின் அழகா, வந்துவிழுகின்ற வார்த்தைகளின் வசீகரமா, தொடரும் விளக்கங்களா... எதைச் சொல்வேன்?..

தீராத விளையாட்டுப் பிள்ளை : ஆர்.வீ.எஸ் அவர்களின் புன்னகைப்பூ.இந்த ஐ.டீ அசுரன் தொடாத துறையில்லை. எல்லாவற்றையும் நகைச்சுவை லாரியில் அள்ளிக் கொண்டு வந்து அதகளப்படுத்தும் பொல்லாத பிள்ளை.
எதையும் நகையுணர்வோடு பார்க்கும் இவரின் எழுத்துக்களில் வார்த்தை ஜாலம், நக்கல் , சுய எள்ளல்எல்லாமும் உண்டு. 'சூப்பர், கலக்கல்' என்று பின்னூட்டம் போட்டுவிட்டு அலைபேசியில் திட்டும் உரிமை எனக்குண்டு. கொஞ்சம் மூடு கெடும் போதெல்லாம் இந்த வலைத்தளத்துக்கு செல்லுங்கள். விசிலடித்துக் கொண்டு திரும்புவீர்கள்!

ஆனந்த வாசிப்பு: பத்மநாபன் அவர்களின் வலைப்பூ. இவர் பதிவுகளை அத்திப்பூ என்று சொல்ல மாட்டேன். அடிக்கடி தென்படாத குறிஞ்சிப்பூ. ஆனாலும் ரசமான பின்னூட்டங்களால் அனைவர் தளத்தையும் அழகுபடுத்தும் வண்ணத்துப் பூச்சி இவர். வானவில்லின் நிறப்பிரிகையில் இவரின் சாயம்கூட ஒட்டிக் கொண்டிருக்கிறது. நன்றி பத்மநாபன்.

சிவகுமாரன் கவிதைகள் : கவிதையை சுவாசிக்கும் என் அன்புத்தம்பியை படித்தால் நீங்களும் நேசிப்பீர்கள். சந்தங்களின் அந்தம் காட்டும் இவர் கவிதைகளின் சொல் புதிது. பொருளும் புதிது. அருட்கவியென்று இன்னொரு ஆன்மீகப்பூவும் இவர் தோட்டத்தில் உண்டு. சென்று பாருங்கள். இருந்தமிழை இருந்து படியுங்கள்.

கைகள் அள்ளிய நீர் : சுந்தர்ஜி அவர்களின் வலைப்பூ. நானும் இவரின் கருத்துப் புனலை கைகளில் அள்ளி விடத்தான் பார்க்கிறேன். இயலவில்லை.  சங்கோஜ நடையுமுண்டு.. சாட்டை அடியுமுண்டு. பொலிவான சுந்தர்ஜீயின் வலையை அவசியம் பார்க்கவேண்டும் நீங்கள்..

ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி அவர்களின் அழகு வலைப்பூ. இவர் தேவன், கல்கி ஜாதி. 'மூவார்முத்து' என்று நான் சூட்டிய பேருக்கு இதுவரை சண்டை போடாதவர்.மெல்லிய நகைச்சுவை இழையோடும் உறுத்தாத தமிழை ரசிக்கலாம். தரனின் கீர்த்தனாஞ்சலி எனும் இன்னொரு வலைப்பூவில் இவரின் கீர்த்தனை சமைக்கும் அழகையும் பார்க்கலாம்.

ரிஷபன்: தோளில் தூக்கிய குழந்தை படம் போட்ட வலைப்பூங்க!. இவர் கதைகளைப் படித்தால் நீங்களும் அவர் தோளில் அமைதிமாய் கவலை மறந்து வாசிப்பானுபவம் கொண்டு மிதக்கலாம். சிறுகதை செதுக்கும் வித்தையை இவர் சில பதிவுகள் போட்டு இளைய தலைமுறைக்கு வழிகாட்டவேண்டும் என்பது என் ஆவல்.

வை.கோபாலகிருஷ்ணன்: இவர் ஒரு எழுத்து பாக்டரி வைத்திருக்கும் இளைஞர். பழைய நிகழ்வுகளை அசைபோடும் அழகே தனி. பாருங்கள்.

 வானம் வெளித்த பின்னும் ஹேமா: என் கோபக்கார, சுவீகாரத் தங்கை. இவரின் இன்னொரு வலைப்பூ உப்புமட சந்திஎன் தங்கையாக இவள் இருப்பதால்தானோ என்னவோ, எதுஎழுதினாலும் எனக்கு பிடித்து போகிறது. அதனால் நீங்களே பார்த்துவிட்டு  மார்க் போடுங்கள். ( கொஞ்சமா போட்டீர்களானால் நான் அழுதுடுவேன் !)

மைத்துளிகள் மாதங்கி மௌளியின் வலைப்பூ . சிக்கனமான வார்த்தைப் பிரயோகத்தில் மனக்காட்சியை ஏற்படுத்தும் நல்ல எழுத்து. வித்தியாச பார்வை. இன்னமும் நிறைய எழுதுங்கள் மாதங்கி!

பாகீரதி :எல்.கே அவர்களின் வலைப்பூ. பாசாங்கில்லாத எழுத்து இவருடையது. புதுமையான கருத்துக்கள் கொண்ட இந்தப் பதிவர்  ஒரு நல்ல நாவலை செதுக்க வேண்டும். இது இந்த அண்ணனின் அன்புக் கட்டளை!

உள்ளதை (உள்ளத்தை)சொல்லுகிறேன் :சாய் அவர்களின் வலைப்பூ. ஒளிவு மறைவு இல்லாத எழுத்து. இவருடையது. ரசமான பதிவுகள் உண்டு. பாருங்கள் உடனே!

மணிராஜ் இராஜராஜேஸ்வரி: இவரின் ஸ்தல யாத்திரை பதிவுகள் கன்னத்தில் போட்டுக் கொள்ள வைக்கும். மேடம் பிடியுங்க இந்தப் பட்டத்தை...
"லையுலக சுந்தராம்பாள்  .K.P.S போல பக்தியை பரப்புங்கள்.

எங்கள் பிளாக் ஸ்ரீராம் அவர்களின் வலைப்பூ. நாங்கள் அவரை அழைப்பதென்னவோ பின்னூட்டப் பெருமாளு என்று. சுவையான கருத்துக்களை பதியும் இவரின் பதிவுகளை கண்டிப்பாய் ரசிப்பீர்கள் என்பதற்கு நான் உத்தரவாதம்.

இன்னமும் இருக்குங்க 'பதிவார் திருக்கூட்டம்' . நாளை சந்திப்போம்.   
  
      


                            

புதன், ஜூலை 27, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு-3


கேட்டலும் கவனித்தலும்
சீனப் பேரரசன் ட்சூ மஞ்சத்தில் சயனித்திருந்தான். மெல்ல அவன் கைகளை வருடியபடி, அவன் ராணி பேசத் துவங்கினாள்.

“அரசே! நம் மகனுக்கு இந்த வசந்தத்தின் துவக்கத்தில் பதினேழாம் பிராயம் முடிந்து பதினெட்டு தொடங்கிவிடும். வில் வித்தையிலோ, வாள் வீச்சிலோ அவன் நிபுணன் ஆகி வருகிறான் என்றும் நேற்று நீங்கள் தானே சொன்னீர்கள்?

“ஆம் ராணி. அதெற்கென்ன வந்தது?”

"நம் பிரதம தளபதியின் மரணத்திற்குப் பிறகு அந்தப் பதவியை இன்னமும் நாம் நிரப்பவில்லையே"...

"தகுந்த வீரனுக்காய் பார்த்து வருகிறேன். என் தேசத்தில் வீரர்களுக்கா பஞ்சம்?"

"உண்மை அரசே. அந்தப் பதவியில் பணிபுரிய டியூ மிக்க ஆவலாய் இருக்கிறான்

"என்ன? இளவரசனா?” அரசன் கண்கள் யோசனையில் இடுங்கின.
"என்ன யோசிக்கிறீர்கள்? போன படையெடுப்பில் அவன் தன் வீரத்தை பறைசாற்ற வில்லையா?"

"சேனாதிபதியின் பணியில் வீரம் மட்டும் போதாது கண்ணே!. அரசனின் பொறுப்புகளை விடக் கடினமானவை அந்தப் பதவியின் தகுதிகள்."

அவன் விருப்பப்படி பதவிகொடுப்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாதா?"

"நான் தீர்மானிக்க விரும்பவில்லை ராணி. நான் பாசம் மிகுந்த தகப்பன் மட்டுமன்று. தேசம் காக்கும் மன்னன் கூட.

"நீங்கள் இல்லையென்றால் டியூவுக்கு பதவி கொடுப்பதை யார் தீர்மானிப்பது?"

" என் குரு பான்க்கு.. மிங்கிலிக் காட்டில் வசிக்கும் என் குரு பான்க்கு"

"பின்னர் அதையாவது உடனே ஏற்பாடு செய்யுங்கள். என் மகன் ஆவல் மேலிட காத்திருக்கிறான். என் கண்மணியை ஏமாற்றாமல் படைத் தலைமையை அவனுக்கு அளியுங்கள்"

"பார்ப்போம்

++++

சிரம் நிலம் தொட குருவை பேரரசன் ட்சு வணங்கினான்.
"என்னைக் கடைத்தேற்றுங்கள் தேவனே!

"வா சக்ரவர்த்தி திருமகனே.. இந்தக் கிழவன் நினைவு கூட உனக்கு இருக்கிறதா? இந்த தகதகக்கும் சூரியன் யார்?"

"இந்தக் கிரீடத்தின் பாரம் பெரும் பாரமாகிவிட்டது குருவே. என்ன செய்வேன்.. இவன் என் ஒரே மகன் டியூ."

"நன்று நன்று. நான் செய்ய வேண்டியது ஏதும் உண்டா?"

"ஆம் பிரபு. இளவரசன் சேனாதிபதியாக ஆவலாயிருக்கிறான்.

"பின் என்ன? பதவியை தர உனக்கு என்ன தடை?”

"அதல்ல குருவே! இவனுக்கு அந்த பதவிக்கான தகுதி இருக்கிறதா என நீங்கள் தான் சோதித்து சொல்ல வேண்டும்

"நீதி மாறாத தன் சீடனை பெருமிதமாகப் பார்த்தார் குரு பான்க்கு.

"நல்லது. இவனை இங்கே விட்டுச் செல். சோதித்துச் சொல்கிறேன். நீ போய்  வா. இவன் நாடு திரும்ப நாளாகலாம்."

"தங்கள் சித்தம்.". அரசனின் ரதம் உருண்டு மறைந்தது.

அடுத்த நாள் காலை இளவரசனை அழைத்த குரு சொன்னார்,
இளைஞனே! நீ இப்போதே இந்தக் காட்டின் உட்பகுதிக்கு தனியாகச் செல். உன் உணவையும் நீயே தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும். நீ செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். காட்டில் ஒலிக்கும் அத்தனை சப்தங்களையும் கவனமாய்க் கேட்டுவந்து எனக்கு எதையும் விடாமல் சொல்ல வேண்டும்"
.
"அப்படியே பிரபு!"  இளவரசன் காட்டுக்குள் சென்றான்.
 நாட்கள் சென்றன. பலவித சப்தங்களையும் கேட்டான். 
பின் ஒருநாள் குருவின் இருப்பிடம் திரும்பினான்.

"வா! இராஜகுமாரா! என்னென்ன சப்தம் கேட்டாய்?"

இளவரசன் விவரிக்க ஆரம்பித்தான்.

"சிங்கத்தின் கர்ச்சனை, புலிகளின் உறுமல்,யானைகளின் பிளிறல், நரிகளின் ஊளை, மரநாய்களின் சிறுகுறைப்பு, மான்களின் கனைப்பு, மயில்களின் அகவல், கிளிகளின் கீச்சிடுதல், குயில்களின் கூவல், காக்கைகளின் கரைதல்,"

"அப்புறம் ?"

"ஆந்தைகளின் அலறல்... பாம்புகளின் சீறல்"....

"அப்புறம்?"

"சி.. சில்வண்டுகளின் ரீங்காரம்."

"அவ்வளவு தானா?"

"காட்டினூடே வீசும் காற்றின் ஹூங்காரம். ஓடைகளின் சலசலப்பு
உருளும் சருகுகளின் மொடமொடப்பு."

"இன்னும்..... இன்னும்??"
...
"வேறொரு சப்தமும் கேட்டதாய்த் தெரியவில்லை குருவே
இளவரசனின் குரலில் சின்ன சலிப்பு ஒலித்ததோ ?

"சரி குழந்தாய் ! நாளை மீண்டும் காட்டின் உள்ளே செல். கேட்காத சப்தங்கள் இன்னமும் இருக்கின்றன. ஆழ்ந்து கேட்டு வா.  கத்தி போல் காதையும் தீட்டு. கண்டிப்பாய் கேட்கும்"

தளர்ந்த நடையுடன் சென்ற இளவரசனைப் பார்த்து சிரித்துக் கொண்டார்.
காட்டினுள் சென்ற இளவரசனுக்கு மீண்டும் மீண்டும் பழைய ஒலிகளே காதில் பாய்ந்தன.

"என்ன இது? குரலிழந்து போய் விட்டீர்களா சப்த தேவதைகளே?..
கேள்.. தீர்க்கமாய்க் கேள். ஆழ்ந்து ஆழ்ந்து உடம்பே காதாக, உற்றுக் கேள்.
கத்தி போல் காதையும் தீட்டு. கண்டிப்பாய் கேட்கும்...

ஆம்.. கேட்கும்... கேட்பேன்... கேட்பேன்...

கேட்டது.

இதுவரை அறிந்திராத ஞானம் நிரம்பி, தளும்பி வழிந்தது.

அமைதியாய் ஆசிரமத்தில் நுழைந்த இளவரசனைக் கண்டார் குரு 
அவன் நடையின் அமைதி, அவன் கண்களின் புதுஒளி.. 
குருவுக்கு தளும்புவது யாதெனப் புலப்பட்டது.

"இன்னும் என்ன கேட்டாய்?"

"கேட்காதனவற்றைக் கேட்டேன் குருவே!"
.
"ஆதவனின் கிரணங்கள் நிலத்தைச் 'விர்ரும் விர்ரும்' என சூடேற்றும் ஒலியதிர்வைத் துல்லியமாய்க் கேட்டேன்.
புல்லின் நுனி பனித்துளியை 'களுக்' என விழுங்கிய மிடற்றைக் கேட்டேன்.
காலையில் காட்டுமலர் விகசித்து மலர்ந்த போது  அதன் இதழ்கள் உரசிக் கொண்ட ஒலியை கேட்டேன்"

சரும மடலில் எழுத்தாணி கொண்டு குரு எழுத ஆரம்பித்தார்.
 நாட்டின் சேனாதிபதியை தக்க கவுரவத்துடன் வரவேற்குமாறு.....  

  
.இனி பதிவற்குல தாரகைகள் ...

இனி உலகம் நம் கையில் சென்னையை சேர்ந்த குணசேகரன் வண்ணமயமான வலைப்பதிவு. முகப்பிலேயே அழகான பாதங்களை கொலுசுடன் ஸிலைட்ஷோ காட்டுகிறார். எந்திரப்பறவையிலிருந்து பப்பாளியின் பயன்கள் வரை நல்ல பதிவுகள். இன்னமும் நிறைய எழுதுங்கள் குணசேகரன் !

கே.பி.ஜனா  சிறிய பதிவுகளாய் சில அழகான கவிதைகளையும் ஒரு பக்க கதைகளும் பதிவிட்டிருக்கிறார்.  .

முத்துச் சிதறல்  ஷார்ஜாவில்,வசிக்கும் மனோ ஸ்வாமினாதன் அவர்களின் வலைப்பூ. சினிமா விமரிசனம், சமையல் குறிப்புகள், கைவினை, சிறுகதை,மருத்துவக் குறிப்பு எனக் கலக்கும் சகலகலாவல்லி. எளிமையான நடை வசீகரிக்கின்றது.

கீதமஞ்சரி : ஆஸ்திரேலியாவில் வசிக்கும் கீதாவின் வலைப்பூ. 32 பதிவுகளே வெளியிட்டிருக்கும் இந்த புதிய பதிவருக்கு வானவில்லும் வலைச்சரமும்  வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றன. இவரின் சிறுகதைகள் ஆற்றொழுக்காய்
செல்கின்றன.

தீதும் நன்றும் பிறர் தர வாரா  மதுரையைச் சேர்ந்த சகோதரர் ரமணியின் ரம்மியமான வலைப்பூ . கவிதைகளில் இயல்பான ஆர்வமும் காட்டும் இவரின் எழுத்தில் கொஞ்சம் உபதேசம்‌ அரைஸ்பூன் கூட. சில ஆச்சரியமான வரிகள்  அசத்துகின்றன. இவரின் பின்னூட்டத்தை எதிர்பார்த்தபடி ஒரு கோஷ்டியே வலைபூவில் பதிவிட்டுக் கொண்டிருக்கிறது(நான் உட்பட). உங்களை உறிமுகம் செய்வதில் வானவில் பெருமைக் கொள்கிறது.

காச்‌யபன் நாக்பூரில் வசிக்கும் இந்த தோழர் செம்மலர், மற்றும் தீக்கதிர் பத்திரிகைகளில் பலகாலம் பணிபுரிந்தவர். இவரின் பதிவுகள் தகவல் களஞ்சியங்கள். பல நிகழ்வுகளை நுணுக்கமான விவரங்களுடன் எழுதும் இவரின் நினைவாற்றல் ஆச்சரியம் அளிப்பது. தயவுதாட்சண்ணியம் இல்லாமல் தன் கருத்தை சொல்லும் இவர் பதிவுகளை ஒரு முறை கண்டிப்பாய் பாருங்கள்.

ஹரணி பக்கங்கள்  தஞ்சை கரந்தையைச் சேர்ந்த ஹரணி அவர்களின் வலைப்பூ. அழகான நடையில் பல நோக்குகளிலும் இவரின் எழுத்துக்கள் ரசிக்க வைக்கின்றன.சாணக்ய நீதி ஸமுச்சயம் முதல் ஓலைச்சுவடியின் வகைகள் வரை பலவும் இவர் கைவண்ணத்தில். ஹரணி சார் ! நிறைய எழுதுங்கள். படிக்கக் காத்திருக்கிறோம். 


ஆஹா பக்கங்கள் . எம். அப்துல் காதர் அவர்களின் வலைப்பூ. நடைமுறை சம்பவங்களை எளிமையாய் நகைச்சுவையோடு சொல்லும் இவரின் எழுத்து.  எனக்கு பிடித்த பதிவர்களில் காதர் பாயும் ஒருவர்.


Picture: With thanks to GOOGLE IMAGES