வியாழன், ஆகஸ்ட் 04, 2016

எப்படி மனம் துணிந்தீரோ?

            
‘உனக்கு நினைவிருக்கா? எனக்காக ஏதோ ஒரு அபிநயம் பிடின்னு உன்னைக் கேட்டேன்... எப்படி மனம் துணிந்தீரோ?’ ன்னு, அது அருணாசல கவியோட சாகித்தியம் தானே? அப்படித்தான் இருக்கணும்.. அதுக்கு நீ ஆடினே... 
தான் மட்டும் காட்டுக்கு போறதா ஸ்ரீராமசந்த்ர பிரபு சீதாதேவிக்கு சொல்ற கட்டம். தான்மட்டும் சொகுசா அரண்மனையிலே இருக்க, தன் பர்த்தா  தனியா காட்டுக்குப் போறதாங்கிற தவிப்பு சீதைக்கு. ராமர் தனியா காட்டுக்குப் போய் பலகஷ்டமும் பட்டு, அவர் மட்டும் நல்ல பேரு வாங்கிக்கவானுல்லாம் ஏதேதோ கேக்கிறா... ராமனோட நிழலா கூடவே போயிடணும்னு அவளுக்கு தவிப்பு. என்னென்னவோ உணர்ச்சிகள்....

என்னமாடி அபிநயிச்சே என் செல்வமே? திரும்பத் திரும்ப பாடின ஒரே வரிக்கு ஒவ்வொரு முறையும் எத்தனை தினுசா உன் கண்ணும் புருவமும்,கைகளும் விரல்களும் பேசினது? உன் உடம்பை இயக்குவதெல்லாம் நரம்புகளா இல்லை மின்னல்கொடிகளா? என்ன சுருக்கு, என்ன லாவகம்? கண்முன்னே காட்டையும், பட்சிகளையும், மிருகங்களையும் கொண்டு நிறுத்தினே!’.

சரி ! கூட வான்னு ராமன் ஒத்துகிட்டவுடன் அத்தனை ஆவேச அலம்பலையெல்லாம் விட்டு பூரிப்பும் நிறைவுமா நீ நகைகளை,மகுடத்தை, பட்டாடைகளை களைந்த வேகமென்ன? மரவுரி தரித்து நாணத்துடன் ஸ்ரீராமன் சுண்டுவிரலை உன் சுண்டு விரலால் பற்றின பாந்தமென்ன? நிமிஷமா அயோத்திக்கு என்னையும் கொண்டு சேர்த்தே. அந்த பத்து பதினைந்து நிமிஷத்துக்குள்ளே எனக்குள் என்னென்னவோ ஆனதே... நீ சீதையா பட்ட அவஸ்தையெல்லாம் என் அடிவயித்தைக் கலக்கிப் போட்டதே.... சீதையைப் பெத்த ஜனகனா தவிச்சேனே. ஜனகனுக்கு எது தவிப்பு? உணர்ச்சிகளையெல்லாம் கடந்த ஆத்ம ஞானி அல்லவா அவர்...

யாருக்கு வேணும் ஞானமும் ஆத்மனும்.  அந்தக் கலக்கமும் தவிப்பும் தானேடி எனக்கு நீ காட்டின ஞானம்.. என் கண்ணே.. என் கண்ணே...

“சார்! சார்! சார் !! “

தோளை உலுக்கியபின் தான் ஹரிஹரன் சுயநினைவுக்கு வந்தார்.

“பயமுறுத்திட்டீங்களே சார்!” என்றபடி நின்றிருந்தான் காலையில் அந்த மருத்துவமனை அக்கௌவுன்ட்சில் பார்த்த வாலிபன்.

அவனை வெற்றுப் பார்வை பார்த்தபடி நின்றார். இன்னமும் ‘எப்படி மனம் துணிந்தீரோ’ கண்களுக்குள் சலனித்தபடி இருந்தது.

மூன்றுநாட்கள் தூங்காத கண்கள். உகுக்க மறந்த கண்ணீர் உறைந்து கிடந்த கண்கள். ’’ம்’’....

"சார்! இன்னைக்கு பதினோரு மணிக்கு மும்பை ஸ்பெஷலிஸ்ட் லேண்ட் ஆயிடுவார். ராசியான கை சார் அவருது. எப்படியும் சரியாக்கிடுவார் சார்”

“ம்”

“அவருக்கு பேமென்ட் கேஷா குடுக்கணும்னு பெரிய டாக்டர் சொல்லிகிட்டிருந்தார் சார். கொஞ்சம் ஏற்பாடு பண்ணிட்டீங்கன்னா தேவலை”

“ஓ... எப்போதைக்குள்ள வேணும்?”

“சாயங்காலம் ஆறு மணிக்குள்ளே சார். பேங்கு நாலுமணி வரை தான் சார்.”

“சரிப்பா ! போய் டிரா பண்ணிக்கிட்டு வரேன்.”

“தேங்க்ஸ் சார்... ஏதும் சாப்பிட்டீங்களா?”

சின்னதொரு தலையாட்டல்.... ஆயிற்று என்றோ இல்லை என்றோ,கேட்டதற்கு நன்றி என்றோ அர்த்தம் பண்ணிக்கொள்ள இயலாத தலையாட்டல். மெல்ல ஐ.சி.யூ அறையின் சிறு கண்ணாடி வட்டத்தின் வழியே பார்த்தார். பாதங்கள் அசைவுகளின்றி வாடித் தெரிந்தன. வரும் டாக்டர் என்ன செய்வார் என்று தெரியவில்லை. நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்ளக்கூட பயமாய் இருந்தது. பேங்குக்கு போக திரும்பினார்.
எதிரே ஜூனியர் டாக்டரும் மூன்று போலீஸ் அதிகாரிகளும் வந்துகொண்டிருந்தார்கள்.

“சார்! போலீஸ் வாண்ட்ஸ் டு டாக் டு யூ”

“ம்”

“சார்! இந்த அறையில்  உட்கார்ந்து பேசுங்கள்.! மைண்ட் சம் டீ?”

போலீஸ் அதிகாரி அவரை புன்னகையுடன் மறுத்தார்.

“வெரி சாரி மிஸ்டர் ஹரிஹரன். பெரிய அதிர்ச்சி தான் இது.”
ஹரிஹரன் கண்களை மூடி ஆழமான பெருமூச்சு விட்டார்.

“சார்! என் பெயர் சார்லஸ். இந்த வழக்கைப் பற்றி உங்களுக்கு தெரிந்ததை எல்லாமும் சொல்லுங்கள்.”

“ முந்தா நாளே கேட்டாங்களே...”

“ இதுவும் தேவை கருதி தான். ப்ளீஸ் கோஆப்பரேட்”

“ஷ்யூர்...கேளுங்க சார்... சார்லஸ்....”

“ இந்தப் பெண் உங்கள் சொந்த மகளில்லை என்று சொன்னார்கள்.”

“ ஆமாம். திருமணமாகி ஆறு ஆண்டுகளாகியும் எனக்கு குழந்தைப் பிறக்கவில்லை. என் தொழிற்சாலை போர்மேனும் அவன் மனைவியும் ஒரு சாலை விபத்தில் உயிரிழக்க, அவர்கள் இரண்டு வயது மகளை நானே.. நாங்களே வளர்க்க ஆரம்பித்தோம்.”

“இந்தப் பெண் மஹிமாவுக்கு இது தெரியுமா?”

“பத்து வயது ஆகும்போது தெரிவிக்க வேண்டி வந்தது. என் சொத்துக்களை உயில் எழுதிய தருணத்தில்”

“அதற்கென்ன அவசியம் அப்போது நேர்ந்தது சார்?”

“காட்! அந்த சமயத்தில் என் மனைவிக்கும் எனக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது. அவளுடைய சுற்றம் சரியில்லை. என் பணத்தை எனக்கு சொல்லாமலே அவர்களுக்காக செலவு செய்ய ஆரம்பித்தாள். கேட்டபோது சண்டை. அழுகை.. அவள் அண்ணன் தம்பிகளால் எனக்கும், இந்தக் குழந்தைக்கும் ஏதும் ஆகிவிடுமோ என நினைத்தேன். மனைவியோடு விலகல் முற்றியது. என் செயல்களுக்கு முட்டுக்கட்டை போட ஆரம்பித்தாள். எங்கள் விவாகரத்தும் நடந்தது. அதற்குப் பிறகுதான்
உயில் எழுதினேன். இதையெல்லாம் அன்றே விவரமாகக் கேட்டார்களே மிஸ்டர் சார்லஸ். “
ஹரிஹரன் குரலில் அலுப்பு தெரிந்தது.

“சாரி சார்! நான் நேற்றுதான் மாற்றலாகி இங்கு வந்தேன். என்னை இந்த வழக்கிற்கு அதிகாரியாகப் போட்டிருக்கிறார்கள். நேர்பேச்சில் புதுத் தகவல்கள் கிடைக்குமா என்றுதான் உங்களை மீண்டும் தொந்தரவு செய்கிறேன். ப்ளீஸ் டோன்ட் மைண்ட்”

“உங்கள் மனைவி... முன்னாள் மனைவி மேல் ஏதும் சந்கேகம் இருக்கிறதா?”

“இவ்வளவு நாட்கள் கழித்து அவள் ஏன் ஏதும் செய்ய வேண்டும்? அவளுக்கு மஹிமா மேல் அன்பிருந்தது. எனது ஆன்மீக நாட்டங்கள்தான் அவளை விவாகரத்து கேட்கும் அளவுக்கு கொண்டுசென்று விட்டது.. கடைசிவரை என்னிடம் மன்றாடிக்கொண்டே தானே இருந்தாள்?”

“ஓ! அவர்களுக்கு கடவுள் நம்பிக்கைக் கிடையாதா?”

“அவள் முருக பக்தை. விரதங்கள் கூட இருப்பாள். நான் ஒரு குருவை நாடிச் சென்றதும், அவளையும் அவர் சத்சங்கங்களில் கலந்து கொள்ள வற்புறுத்தியதும் தான் தவறாகப் போய்விட்டது.
ஒரு முறை குருவை சந்திக்க அவளை நிர்பந்தித்து கூப்பிட்டு சென்றேன். அவர் ஏதோ ஆசிபோல் சொல்லப்போக, இவள் கடுப்பாகி அவரை மிகவும் ஏசிவிட்டாள். அன்றுதான் முதல்முதலாய்  அவளை கைநீட்டி அடித்தும் விட்டேன். அதுவே பிரிவுக்கு காரணமாகிப் போனது”

ஹரிஹரன் தன் வலது உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டார்.
அடித்த கை... அணைக்க முடியாத கை போலும்.

“ஸோ... அவர்கள் மீது சந்தேகமில்லை?”...

“ஆமாம் சார்! அவளுக்கு தொடர்பிருக்க முடியாது. நேற்று பேப்பரில் படித்துவிட்டு, விசாரித்துக்கொண்டு வந்து அழுது ஆர்ப்பாட்டம் செய்து விட்டாள். அவளை நான் இழந்திருக்கக் கூடாது. இவளையும் எப்போதைக்குமாக இழந்துவிடுவேனோ என்று பயமாய் இருக்கிறது சார்லஸ் சார்!”

சப்தமில்லாமல் வாய்திறந்து அழுதார். கண்கள் பிரவாகமாயிற்று. ஒரு கேவல் வந்து அழுகை நின்றது.” சாரி! சாரி!”

சார்லஸ் அவர் கைகளை அழுந்தப் பற்றியது ஆறுதலாக இருந்தது.

“மஹிமாவின் உடம்பில் மொத்தம் பதினொரு கத்திக் குத்துகள். பதற்றத்துடன் குத்தப்பட்டவை. அவற்றில் சில உடம்பில் அதிகம் ஊடுருவாமல் கிழித்திருக்கிறது. நான்கு இடத்தில் ஆழமான குத்துக்கள். அவள் சாகவேண்டும் என்ற அவசரத்துடன் செய்யப்பட்டிருக்கும் அன்ப்ரொஃபஷனல் அட்டெம்ப்ட்.”

“சொல்லாதீர்கள் சார். ப்ளீஸ்!” ஹரிஹரன் பதறினார்.

“மஹிமாவுக்கு ஏதும் காதல் இல்லை என்றும், உங்களுக்கு எதிரிகள் கிடையாது என்றும் சொல்லியிருக்கிறீர்கள். அப்படித்தானே?”

“ஆமாம். சார்! குருவருளால் அந்தப்பிரச்னைகள் ஏதும் எனக்கும் மஹிமாவுக்கும் இல்லை.. குருநாதர் சொன்னதுபோல், இது பூர்வ ஜென்ம பாபம் தான்.”

சார்லஸ் அவரைக் கூர்ந்து நோக்கினார். மஹிமாவுக்கு உங்கள் குருநாதர் பற்றி சொல்லியிருக்கிறீர்களா?”

“இல்லை சார் .அவள் குழந்தை தானே? மேலும் அவளுக்கும் அமுதா போல் அவரை பிடிக்காமல் போய்விட்டால் என்ன செய்வது என்று அவர்பற்றி சொல்லவில்லை. மேலும் குருநாதர் பதிமூன்று ஆண்டுகாலம் இங்கில்லையே.”

ராமன் பதினான்காண்டுகள் காட்டுக்குப் போனார். என் குரு பதிமூன்றாண்டுகள்.. அவர் விருப்பமில்லாமல் அப்படி சிறைக்கு போயிருப்பாரா? குருநாதா... எப்படி மனம் துணிந்தீரோ என் சுவாமி?... ஹரிஹரன் மனதுக்குள் அரற்றினார்..

“யார் அமுதா?”

சட்டென்று கவனம்திரும்பி, “என் மனைவி சார். முன்னாள் மனைவி.”என்றார் ஹரிஹரன்.

“ஓ..சரி”

“உங்கள் குரு இங்கில்லை என்றீர்கள். அவ்வளவு நாளும் எங்கிருந்தார்.?”

“பக்தர்களின் பாவங்களை சுமந்து கொள்ளும் குருநாதர் அதை அனுபவித்துத் தானே ஆகவேண்டும்? எங்கள் குரு ஒரு வட மாநிலத்திலும் பிரபலமாகி வந்த நாட்கள்... அமைச்சர்களும் தனவந்தர்களுமாய் அவரை எப்போதும் சுற்றி நின்றிருப்பார்கள். பெரும்பழிக்கு ஆளாகி, யாருடைய கொலையிலோ சம்பந்தப்படுத்தப்பட்டு அவரை அங்கே சிறையில் அடைத்து விட்டார்கள். அவருடைய சொத்துக்களை எல்லாமும் பறிமுதல் விட்டார்கள். நானும் இன்னுமிரு பக்தர்களும் ஆறுமாதத்துக்கொருமுறை சென்று பார்த்துவிட்டு வந்தபடி இருந்தோம்.
போன மாதம்தான் விடுதலையாகி, பஞ்சைப் பராரியாய் வந்து நின்றார். பளபள என ஜொலித்த என் ஸ்வாமி, வாடி வதங்கி வந்தார். அந்த நிலையில்கூட என் மனைவி பற்றியும், மஹிமா பற்றியும் கேட்டார் அவர்.!”

“பாவம். அவர் இப்போது எங்கேயோ?”

“என் வீட்டின் அவுட்ஹவுசிலேயே தங்கச் சொல்லிவிட்டேன். அதுவும் வசதியான இடம்தான். பாக்யமில்லையோ?! சரி...
எனக்கு வேலையிருக்கிறது சார்லஸ் சார்! பணமெடுக்கப் போக வேண்டும்.”

“கடைசியாக இரு கேள்வி. உங்கள் உயில் என்று சொன்னீர்களே... அது விவரம் சொல்ல முடியுமா?”

ஹரிஹரன் சொல்லத் தயங்கினார். “நான் என் வக்கீலைக் கேட்டுக் கொண்டுதான் சொல்ல முடியும். தப்பா நினைக்காதீங்க”

“சார்! உங்கள் நல்லதுக்குத் தான் கேட்கிறேன். இதை எங்கும் ரெகார்ட் செய்யவில்லை. ஏதும் க்ளூ கிடைக்குமா என்றுதான் கேட்கிறேன். உங்கள் முன்னாள் மனைவிக்கு உயில் விவரம் தெரியுமா?”

தயக்கத்துடன் உடனிருந்த இரு போலீசாரையும் பார்த்தார். அவர்கள் பக்கம் சார்லஸ் திரும்ப, குறிப்பறிந்து ‘வெளியே இருக்கிறோம் சார் ‘ என்று நீங்கினார்கள்.

“இப்போது சொல்லுங்கள் சார். நாமிருவர் மட்டுமே இருக்கிறோம்.”

“என் உயில் விவரம் எனது வக்கீலுக்கும் எனக்கும், மஹிமாவுக்கும்  மட்டுமே தெரியும். அண்மையில்தான் குருநாதர் காதிலும் போட்டு வைத்தேன்.”

“என்னவாறு அந்த உயிலை எழுதியிருந்தீர்கள்.?

“என் சொத்துக்கள் நானே சம்பாதித்தவை. எனக்குப் பின்னால் அவை என் மகளுக்கு போய் சேர வேண்டும் என்றும், அவள் மேஜராகும் வரை குருநாதர் தான் அவளுக்கு கார்டியனாக இருக்க நியமித்தும், ஒருவேளை எனக்கும் மஹிமாவுக்கும் ஏதும் ஆகிவிட்டால், சொத்துக்களுக்கு குருநாதரே பாத்தியதை என்றும் உயில் எழுதியிருந்தேன்.
குருநாதர் வந்த பிறகே விவரத்தை அவருக்கும் சொல்லி ஆசி பெற்றேன். அடுத்த வாரம் மஹிமாவுக்கு பதினெட்டு முடிந்து பத்தொன்பது தொடங்குகிறது. குருநாதர் ஒரு ஹோமத்துக்கு ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னார்.”

“நல்லது சார்! நல்லதே நடக்கட்டும். தேவைப்பட்டால் மீண்டும் வருவேன். போலீசுக்கு தெரிவிக்காமல் வெளியூர் எங்கும் போகவேண்டாம் ” என்று சார்லஸ் விடைபெற்றார்.

ஹரிஹரன் வங்கிக்கு சென்றார்....

சார்லஸ் ஹரிஹரன் வீடு நோக்கி சென்றார்.

ஹரிஹரன் வீட்டு அவுட்ஹவுசில் இருந்தபடி, மஹிமாவுக்கு வந்ததாய் ஒரு காதல் ரசம் சொட்டும் கடிதத்தை தயார் செய்துகொண்டிருந்த குரு, சார்லசை எதிர்பார்க்கவில்லை.      (பின் குறிப்பு: இந்த கதையோட்டத்தில் ஒரு வித்தியாசம் அல்லது மாற்றம் ஒன்று இருக்கிறது. என்னவென்று கண்டு பிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு உண்டு.)

வெள்ளி, ஜூலை 29, 2016

வங்கத்து சீயமும் தங்கத் தமிழ் கவிஞனும்

நானும் 'ஜிங்க்னு போயிட்டு ஜங்க்ன்னு வந்துடலாம்
என்றுதான் போன பதிவுக்கப்புறம் போனேன். 
அப்பிடியே தாமதமாகி விட்டது. 
ஓயாத ஊர்சுற்றல். வெளிநாட்டுப் பயணங்கள்.... 
வெளியூர் பயணங்கள்... லண்டன், ஐரோப்பா சென்று வந்தேன். 
வந்தவுடன் ஐயப்பன் புத்தக வேலை முடித்தேன்.. 
அச்சுக்கு போயிருக்கிறது.. வந்தவுடன் தெரிவிப்பேன். 
ஒரு புத்தக மொழியாக்கம் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். 
என் சிறுகதை தொகுப்பு வெளியீட்டிற்காக தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

எதுக்காக இவ்வளவு பீடிகை என்கிறீர்களா? 
வலைக்கு வராது டபாய்த்ததிற்கு சால்ஜாப்பு சொல்லத்தான். 
இனிமே வண்டி ஒழுங்காய் ஓடும்..

துவக்கத்திற்கு முன், முடிந்துபோன இரு சகாப்தங்கள் பற்றிய அஞ்சலி

முடிந்து போனது அந்த ஆளுமைகளின் ஸ்தூல சரீரத்தின் 
நடமாட்டம் மட்டுமே. 
இலக்கிய வானில் என்றும் அந்தத் தாரகைகள் 
ஒளிவீசிக் கொண்டிருக்கும்.

மஹாஸ்வேதா தேவி

இந்திய இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத படைப்பாளியாக 
விளங்கிய மகாஸ்வேதாதேவி தனது 90வது வயதில் 
நேற்று காலமானார். 

அவர் வெறும் படைப்பாளி மட்டுமல்ல. ஒரு சமூக சேவகி: 
அரசியல் விமரிசகர்: பிற்பட்டவர்களுக்கும், சமுதாயத்தில் 
ஒடுக்கப்பட்ட மக்களுக்குமாய் இறுதிவரை குரல்கொடுத்த 
புரட்சிக்குயில். இலக்கியவாதிகளைப் பெற்றோராகப் பெற்று, 
ஒரு நாடகாசிரியரை மணந்து, நபரூன் பட்டாச்சார்யா எனும் 
திறமை வாய்ந்த நாவலாசிரியரை மகனாகவும் பெற்றவர். 
வங்கதேசத்தில் பிறந்து, இந்தியப் பிரிவினைக்குப் பின் 
கொல்கத்தா நகரில் குடியேறினார். 
ஒரு பத்திரிகையாசிரியராகவும் நாவலாசிரியையாகவும் 
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். 
ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாய் ஓங்கி ஒலித்தது இவர் குரல். 
மலைவாழ் பழங்குடியினர் படும் அல்லல்களும், அவர்களைச் 
சுரண்டும் மேட்டுக்குடியினரின் கொடுமையும்  அவருடைய 
நாவல்களில் இடம்பெற்றபடி இருந்தது . மேற்கு வங்காளத்தில் 
தொழில் வளர்ச்சியைக் காரணம் காட்டி விவசாய நிலங்கள் 
ஆர்ஜிதம் செய்யப்படுவதற்கு கடும் எதிப்பு தெரிவித்தவர். 
விளைவுகளைப் பற்றி அச்சம் இன்றி செயல்பட்டவர் இந்த 
பாரதி கண்ட புதுமைப் பெண். மகாஸ்வேதாதேவி மார்க்கசீய 
சிந்தனைகள் கொண்டவரே ஆன போதிலும், 
மேற்குவங்கத்தில் மா.கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தபோது, 
நந்திக்ராம் பிரச்னையின் போது அரசை எதிர்த்தவர்.


தனது கணவர் பிஜோன் பட்டாசார்யவுடன் ஏற்பட்ட விவாகரத்தும், 
தன் மகனும் தந்தையோடு போனதும் இந்த உறுதிவாய்ந்த 
பெண்ணரசியை நிலைகுலைய செய்யவில்லை. எழுத்தும், 
சமூக நோக்குமே அவர் வாழ்க்கையாகிப் போனது.

மகாஸ்வேதாதேவியின் ஆக்கங்கள் ஆங்கிலம் ஹிந்தி உட்பட 
பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. 
பெண்களின் முன்னேற்றத்துக்கும் சமவாய்ப்புகளுக்கும் 
தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார்.

பத்மவிபூஷன்(2006), மேகசெசே விருது (1996),சாஹித்திய அகாதமி 
விருது  (1979), ஞானபீட விருது (1995),பத்மஸ்ரீ  (1986) மற்றும் 
பல மாநில விருதுகளும் பட்டங்களும் இவரைத் தேடிவந்தன. 
இவர் படைப்புகளில் ஜான்சி ராணி, அக்னி கர்பா, 
சோட்டி முண்டா ஏவம் தார் திர், பாஷாய் துடு, 
ருடாலி, பெண்களும் நலிந்தவர்களும் விவசாயிகளும், குலபுத்ரா 
ஆகியவை முக்கியமானவை. வங்க இலக்கியத்தில்  வாழ்நாள் சாதனையாளர் பட்டமும் பெற்றார். 
“ஆரண்யேர் அதிகார்” நாவலுக்காக கிடைத்ததே 
சாஹித்ய அகாதமி விருதாகும்.

எண்பதுகளில் கல்கத்தாவில் நான் பணியாற்றியபோது 
வங்க இலக்கிய ஆர்வல நண்பருடன் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு போயிருந்தேன். 
விழாமுடிந்தவுடன் நண்பருடன் மகாஸ்வேதா தேவி அவர்கள் 
அருகாமையில் சென்றோம். அறிமுகம் செய்விக்கப் பட்டேன். 
தமிழ்நாடு என்றவுடன்... ‘ஜோயகோந்தோன்’ (ஜெயகாந்தன் ) என்று சிரித்தார். 
அந்த சிரிப்பை என் புத்தக அலமாரிகளில் ஒன்றில் 
பத்திரமாய் வைத்திருக்கிறேன்.  

மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த அவர் மறைவு இலக்கியத்துக்கும் 
ஆதரவற்ற ஏழைச் சமூகத்துக்கும் ஒரு பெரும் இழப்பு.


ஞானக்கூத்தன்

தமிழ்ப் புதுக்கவிதையுலகில் ஒரு முன்னோடியாக இருந்த கவிஞர் 
ஞானக் கூத்தன் மறைவு ஒரு சொந்த சோகம். மிகக்குறைந்த 
சொற்களில், கூற வந்ததை காட்சிப்படுத்த வல்லவை இவர் கவிதைகள். 
இவர் மரபுக்கவிதை இலக்கணம் நன்கு அறிந்திருந்ததாலேயே 
புதுக் கவிதைகளும் உறுத்தாத ஒலிநயம் கொண்டிருந்தன. 
அங்கதம் பேசும் வரிகள்.
           
எனக்கும்
தமிழ் தான் மூச்சு ஆனால்,
அதை பிறர் மேல் விடேன்!

என்ற வரிகள்தான் நான்கு தசாப்தங்களுக்கு முன் என் பிடரியை 
உலுக்கி ஞானக்கூத்தனை திரும்பிப் பார்க்க வைத்தது. 
அவர் கவிதைகள் எளிமை போல் தோன்றும், எள்ளி நகையாடும், 
நம் உள்ளேபோன கவிதை நள்ளிரவில் எழுப்பி வேறோர் அர்த்தம் சொல்லும்.....

அவருடைய மேஜையில் இருந்த நடராஜர் பற்றிய கவிதையும், 
'அம்மாவின் பொய்கள்' போன்ற பல கவிதைகளும் என்றும் 
நினைவில் நிழலாடும். 

'பவழமல்லி' என்ற ஞானக்கூத்தனின் காதல்கவிதையைப் பாருங்கள்: 


கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா
மாடிக்கொட்டகைக்குப் போய் விடுவார் அப்பா
சன்னத் தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத்தம்பி தூங்கிவிடும்
சிறுபொழுது தாத்தாவுக்கு விசிறியதும் அவரோடு வீடுதூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் – மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி

கதைமுடிந்து தாய்திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழுநிலவில்- அந்த நேரத்தனிமையிலே
என் நினைப்புத் தோன்றுமோடி ?

அவருடைய கவிதைத் தொகுப்புக்களான ‘அன்று வேறு கிழமை’, ‘மீண்டும் அவர்கள்’, ‘சூரியனுக்கு பின் பக்கம்’ போன்றவைகளை தேடி வாசியுங்கள். அப்போது புரியும் மரணம் ஏன் கவிஞனை வெல்லவே முடியாதென்று.

ஞாயிறு, மே 29, 2016

ஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்

2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித்தேன். கோவையில் ஆரம்பித்த நாவலை, நான் முடிக்கும் போது ஹைதராபாதை நெருங்கியிருந்தேன்.

அந்தப் பயணம் முழுவதும் நான் என் வசம் இல்லை. சமயம் வாய்க்கும் போதெல்லாம் காடுகளில் சுற்றிய எனக்கு, இந்த நாவல் ஒரு அந்தரங்கமான அனுபவமாக இருந்தது.கடந்த பன்னிரண்டு வருடங்களில், மேலும் மூன்று வாசிப்புகள் முடித்திருந்தேன்.


நீண்ட இடைவெளிக்குப் பின்பு,நான்கு நாட்களுக்கு முன், புதியதாய் வாசிப்பவன் போல் ஒரு பாவனை மேற்கொண்டு, ஐந்தாம் முறையாக வாசிக்கத் தொடங்கினேன். ஆயினும், எனக்குள் இருந்த கதையையும்,பதிந்த முகங்களையும், மனதுள் முகிழ்ந்திருந்த சம்பவங்களின் சூழல் காட்சிகளையும் மீறி ,அவற்றின் மேல் புதிதாய் ஒன்றை அழித்தெழுத இயலவில்லை. பழைய பாட்டையிலேயே வாசிப்பு நடந்து முடிந்தது.

                                             


என்றுமே நான் இந்தக்கதை மாந்தரின் மொழியை  பேசப் போவதில்லை. என்றும் இந்தக்கதையின் நாயகன் போல் உருகிஉருகி அலையப் போவதில்லை. இந்தக் கதையின் பாத்திரங்கள் போன்ற குணமும் ஆளுமையும் கொண்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் இருக்கப் போவதில்லை. எனினும், இது எனக்கு நெருக்கமான கதை. காடும், விரவிய சங்கக்கவிதைச்சிதறல்களும், தொட்டுச் சென்ற தொன்மமும், காதலின் உன்மத்தமும் தான் இந்த நெருக்கத்திற்கு காரணங்களாக இருக்கலாம்.

அம்மா சுடச்சுடத்தரும் வெண்பொங்கல் நினைவுக்கு வருகிறது'.லேகியம் போல கிளறியிருக்கேன். சாப்பிடுடா தங்கம்' என்று அருகிருந்து பரிமாறும் அவள் குரலின் கனிவும் நினைவிலாடுகிறது.. குழைந்த அரிசிபருப்பின் கூடவே மிளகு,நறுக்கின இஞ்சித்துண்டு,முந்திரிப் பருப்பும் சேர்த்து நெய்யையும் உருக்கியூற்றினால் தான் அது வெண்பொங்கல். இந்தக் காடு நாவல் கூட வெண்பொங்கல் போன்ற ஒரு கலவை சுவைதான்.

காடே அரிசியாகவும், காதல் பருப்பாகவும்,மிளகு காமமாகவும்
இஞ்சித்துண்டுகள் கட்டற்ற பெருந்திணையாக காமத் திளைப்பாயும்,
முந்திரிப்பருப்பு சங்கப் பாடல்துணுக்குகளாகவும்
நெய்மணமோ மலையாத்தி நீலியாகவும் ஆன பொங்கல் காடு.
இதில் மிளகையும் இஞ்சியையும் ஒவ்வாதவர்கள் அவற்றை ஒதுக்கிவிட்டாலும் காடு வாசிப்பு சுவை குன்றாது.

மிளகின் விறுவிறுப்பும் இஞ்சியின் மணமும் வேகமும்தான் பொங்கலுக்கு சுவை சேர்க்கின்றன என்பதையும் உணராமலில்லை. அவையன்றி பொங்கல் பொங்கலாக இருந்திருக்காதுதான். இந்தக் கதைக்கு இன்றியமையாத நுட்பமான உள்சரடு,  அந்தக்காமத்தின் சதிராட்டமதான். சித்தர்பாடல்கள் போல,அருணகிரியின் பாடல்கள் போல வெளிப்படையாக சொல்லப் படுகிறது. அவர்களெல்லாமும் காமத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டு,அதை தவிர்க்கச் சொன்னார்கள் . ஆசிரியரும் அதை வெளிப்படையாகத்தான் சொல்லிச் செல்கிறார். காமத்தின் இன்றியமையாமையை , மானுடத்தின் ஆடையில் ஊவாமுள்ளாய் பொதிந்திருக்கும் அதன் உறுத்தலை, சொன்னபடி செல்கிறார்.

இந்தக்காட்டின் மறுபக்கம் தறிகெட்டலையும் காமம் தான். வசப்படாத காட்டின் மர்மங்களே போல், காமமும் ஒரு தைய்யமாக மானுடத்தை ஆட்டிவைக்கும் கதையை பந்திவைக்கிறார் ஆசிரியர். நகரங்களின் நிகழும் மேல்பூச்சுகளின்றி, சடுதியில் சதிராடுகிறது காமக்களி. விரசமா இந்த விவரணை என்று யோசித்துமுடிக்குமுன், காட்டுமழையின் வேகத்தோடு காமச்சாரல் பொழிந்து விடுகிறது. மழையை கேள்வி கேட்பது எங்ஙனம்? அதுவும் பொழிந்தபின்??

கதாநாயகன் கிரியின் உன்னதமான காதலின் தவிப்பையும், அந்தத் தவிப்பினால் உந்தப்பட்ட எண்ணங்களின் தறிகெட்ட ஓட்டத்தையும் கவிதையைப் பிழிந்து எழுதியிருக்கிறார் ஜெயமோகன். கதைசொல்லலினூடே, பிரமிக்கவைக்கும் உவமைகள் தரும் கிறக்கத்தில் அங்கங்கே நின்று மலைத்து, வாசிப்பைத் தொடர நேர்கிறது.மிகப் பொருத்தமாக, செறுகலாக அன்றி, சங்கப்பாடல் வரிகள் கதையில் இழையோடுகின்றன.

இதன் கதாபாத்திரங்கள் யாவரும் தன்னளவில் முழுமையானவர்களாகவும், கதாநாயகனுக்கு சிறப்பு அந்தஸ்து ஏதுமின்றியும் நாவல் நிர்தாட்சண்யமாக நீள்கிறது. காடே கதாநாயகனை மீறிய உயிர்ப்புடன் நம் புலன்களில் விரிகிறது. குட்டப்பன், ரேசாலம்,குரிசு, அய்யர்,கிரியின் மாமா,மாமி, அம்மா,வேணி, சினேகம்மை,ரெஜினாள்,ஆகியோரின் பாத்திரங்கள் கச்சிதமாக படைக்கப் பட்டிருக்கின்றன. தேவாங்கும்,மிளாவும், கீறக்காதனும், ஏன் அயனிமரம் கூட கதையின் ஓட்டத்திற்கு பங்காற்றியிருக்கின்றன.

காட்டின் உள்ளிட்டை, இவ்வளவு தெளிவாகவும் விவரமாகவும் சொன்ன பிரிதோர் ஆக்கம் தமிழில் வந்திருக்குமா என்பது சந்தேகமே. எனது பதினெட்டாம் வயதில் , சபரிமலையின் அடர்ந்த காட்டில் எனக்கோர் மறக்கவியலாத அனுபவம் ஏற்பட்டது. ஒரு குருஸ்வாமியின் துணையாக ஓர் புழக்கம் அற்றுப்போன ஒரு வழியில் காட்டினுள்ளே செல்ல நேர்ந்தது.அது எல்லோரும் செல்லும் பாதையல்ல . நான் துணை செல்ல ஒப்புக்கொண்டது ஆர்வக் கோளாறாலும் வயதுக் கோளாறாலும் எனச் சொல்லலாம். காட்டின் உள்ளிருந்து மூன்றுமணிநேரம் கழித்து வெளியே பொதுவழிக்கு மீண்ட   போது, வேறொரு மனிதனாய் வந்தேன். உடம்பே கண்ணாக, உடலே ஒரு இதயமாக, சாகசம் ஒடுங்கி, பயம் வடிந்து, பக்திகூட பயமோ என்றுணர்ந்து, நினைவழிந்து நிர்மலமாகி இருந்தேன். இந்தக் கதையில் காடு விவரிக்கப்படும் இடமெல்லாம் என் அனுபவம் விழித்துக் கொள்ளும். உணர்ந்த ஒருவனுக்குத்தான் அந்த எழுத்தின் உயரம் புரியும் போலும் . அது வெறும் விவரணை அன்று. ஆசிரியருடைய வித்வத்தின் வெளிப்பாடு!.

குறிஞ்சித் திணையின் அழகியல்,மண்மனம் போல் கதையெங்கும் மணந்து கிடக்கின்றது. கதாநாயகன் கிரியின் நனவும் கனவும் ஒன்றோடொன்று இழைந்து கிடப்பதை சிலந்திவலையின் இழைபின்னலாக கதைபின்னிச் செல்கிறது. கூர்ந்த வாசிப்பினுடே அதை நாம் உள்வாங்கும் போது, அந்த மயக்கே இந்தப் படைப்பிற்கு ஒரு அலங்காரமாகிறது .

காடழிவின் நிதர்சனத்தை கதை காட்டிச் செல்லும்போது, அடிவயிற்றுள் கல் விழுந்தது போன்ற துக்கம் நம்மைக் கவ்விக் கொள்கிறது. மனிதனின் கயமைக்கு விடிவே இல்லையா என்ற பதற்றம் பற்றித் கொள்கிறது.

கதையின் முதலிலேயே வரும் காஞ்சிரமரத்தின் கசப்பை, அதில் வாழ்ந்த வனநீலியின் நிழலசைவை வாசித்தபின், அது மனத்தின் ஆழத்தில் பரவிப் புரள்கிறது. கண்ணாடி கோளத்தின் கீழே காற்றில் படபடக்கும் காகிதம் போல் அது அங்கே அல்லாடியபடி இருக்கிறது. எந்தநேரமும் அந்தக் கோளத்தை உருட்டிவிட்டுவிட்டு காகிதம் பறந்து விடுமோ எனும் கிலி படர்கிறது.  கதைமுடியும் வரை கூடவரும் அந்த போதத்தின் பதைப்பு, எழுத்தாளனின் கையொப்பம்; முத்திரையுடன் இடப்பட்ட நேர்த்தி.

இந்தக் கதையின் மொழியும் வார்த்தைகளும் புத்தம்புதியவை. ஐந்தாவது வாசிப்பிலும் மங்காது சுடர்விடுகின்றன. ஜெயமோகனின் நீலம் படித்த உன்மத்த தருணங்களிலும்கூட, காடுஏனோ  நினைவுக்கு வந்தபடியே இருந்தது. இந்தக்  கதையின் பல வரிகள் எனக்கு பாடாந்திரம் ஆனவை எனதான் சொல்ல வேண்டும். ('காடாந்திரம்'ஆனவை என சொல்ல வேணுமோ?!)

இந்த நாவலை, ஜெயமோகன் தனக்கே தனக்காக எழுதிவைத்து, போனால் போகிறது என்று வாசகருக்காய் விட்டுக் கொடுத்து விட்டாரோ எனும்படியான கட்டற்ற அந்தரங்க எழுத்தாய் காடு மிளிர்கிறது.

அந்த மிளாவின் காலடித்தடங்கள் கல்வெர்ட்டின் சிமிட்டி சுவர்மாட்டில் மட்டுமா பதிந்திருக்கிறது? என் மனசில் கூடத்தான்.


காடு நாவல்
தமிழினி வெளியீடு
ரூ 190/-
 (படங்கள் நன்றியுடன்: கூகிள்)

வெள்ளி, மே 27, 2016

ஈஸ்வர அல்லா தேரே நாம்

'பெர்ரீங்கன்ன்'..... என்று தெருவில் கூவின குரல்,
சட்டமடித்த கண்ணாடிப் பெட்டியில் வளையல்களும் பிறவும்.
வந்திடும் நேரம் முன்மாலைப் பெரும்பாலும்.

"எங்கடா உன்னைக் காணல்லியே ரெண்டுவாரமாய்?"
அம்மாவின் கேள்விக்கு சிரிப்போடே அமர்ந்தபடி அவர்.

என்னொத்த பயலுகளுக்கு 'வளையல் மாமா'
தெருவாசிகளுக்கு 'வளவி யாவாரி'
அம்மாவுக்கு மட்டும் 'ரகு'.
அவளுடைய தம்பி நினைப்பு வந்தால் 'ராதாகிருஷ்ணா'.
எல்லாவருக்குமே அவர் பதில் புன்னகைதான்.

அழுக்கில்லாத வெள்ளைசட்டை, கையிலெப்போதும் கைக்குட்டை,
துடைத்துதுடைத்து சிவந்தமுகம், சினேகமான கண்கள், சிரிப்பு தேங்கின வாய்.
இதுதான் ரகுமாமா.

திண்ணையில் கடைவிரிக்கும் அவரின் சரக்கில்
எனக்கு ஆர்வமூட்ட எதுவும் இல்லை.
கண்ணாடி வளை,ஐடெக்ஸ் மை,குங்கும டப்பிகள்
கொண்டைவலை,பிச்சோடா ரிங், ,ஹேர்பின், ஊக்குப்பின்கள்
கலர்கலராய் ரிப்பன் சுருள்கள்,கில்ட் மூக்குத்திகள்,
காதணியென பெண்கள் சமாச்சாரம்.
குனேகா ஸெண்ட் குப்பியை திறக்காமல் முகர
எனக்கு மட்டும் அனுமதியுண்டு.

பெரும்பாலும்அம்மா வாங்கியது 
மெரூன்கலர்  குங்குமம், ரப்பர்ஹேர்ப்பின்கள்,
சந்தணமணத்துடன் ஒரு சின்னபவுடர் டப்பா.

சிலமுறை அக்கம்பக்க பெண்டிரும்  எங்கள்  திண்ணைவந்து வாங்குவதுண்டு.
அம்மாவின் தேர்வே அவர்களுக்காய் பெரும்பாலும்.

விலையை மெல்ல சங்கோஜமாய் சொல்வதுதான் அவர்  சம்பாஷனையில் அதிகம்.
பேரங்கள் இருந்ததில்லை. குறைத்துக் கேட்டபோதும் கோணாது கொடுக்கும் குணம்.
அப்போதெல்லாம் ...
'நீ கேட்பதில் நியாயம் உண்டாடி?' என்று பேரம் கேட்டவளையும்,
'எப்படிடா பிழைக்கப் போறே?'என்று ரகுமாமாவையும் அம்மா திட்டுவதுண்டு.
விழாக்கால தின்பண்டங்கள் அதிகமாகவே அவரிடம் தந்தனுப்புவாள்.
உப்புமா காபி உபசாரமும் ஓரொருமுறை நடப்பதுண்டு.

எங்கோ வட இந்திய மூலையிலிருந்து வந்த என் ராதாமாமாவை
ஒருமுறை அவர் வந்தபோது அறிமுகம் செய்துவைத்தாள்.
இருவரையும் பார்த்தபோது இரட்டையர் போல் தோன்றியது.
சிரிப்பில் தான் வித்தியாசம்.

ஒரு கோடைவிடுமுறையில் நண்பன் மைதீன் வீடு சென்றேன்.
உப்பலவாடித் தெருவில் 'பெர்ரீங்கன்ன்' என்றொலித்தது.
'பாயைக் கூப்பிடு' என்றாள் மைதீனின் அம்மா. 
உள்ளறையிலிருந்த என்னை இருக்கச்சொல்லி மைதீன் வீதிக்கு ஓடினான்.

வாசலுக்கு வந்த ரகுமாமாவை உள்ளறை ஜன்னல்வழியே பார்த்தேன்.
மைதீனம்மா கேட்டது இல்லாததால், 'நல்லது'என்றபடி வீதியிறங்கினார்.

'அவரை ஏண்டா பாய் என்கிறே? ரகுமாமாடா அவர்!'

மைதீன் சிரித்தான், "லூசு.. ரகுமான்டா அவருபேரு. நாகூரு அவங்க ஊரு"

மைதீன்வீட்டுக் கேரம்போர்டில் கையளைந்தாலும்,
ரகுமாமா எப்படி ரகுமான் ஆனார் என்று மனது அளைந்தபடி கிடந்தது.

வீடு திரும்பும்போது  விடைதுலங்கியது.
அம்மா அவரை வினவியிருக்க வேண்டும் "உன் பேரென்னப்பா?"
"ரகுமான்"
'ரகும்மா' என்று அம்மா அதைக் கேட்டிருக்க வேண்டும்.

மாலை அப்பாவுடன் பெரியகோவில் போனபோது அவருக்கு சொன்னேன்.
"எனக்குத் தெரியுமே ரகுமானை " என்றார்.
"அம்மாவுக்கு சொன்னீங்களாப்பா?"
"தெரிந்ததையெல்லாம் சொல்லணும்னு இல்லடா" என்று சிரித்தார்.

"அம்மாவுக்கு தெரிந்திருந்தாலும் ராதான்னோ ரகுன்னோ கூப்பிட்டுத்தானிருப்பா.
உப்புமா கொடுத்துதானிருப்பா" என்றேன்.
அம்மாவை எனக்குத் தெரியும். 
என்னைவிட அவருக்குத் தெரியும்.

இந்தமுறை என் பதில் கேட்டு அப்பா சிரிக்கவில்லை.
என்தலை கோதியபடி கண் துடைத்துக் கொண்டார்
.
கண்ணில் விபூதி விழுந்திருக்கும்.

வெள்ளி, மே 20, 2016

ஷெல்லியின் காதல் தத்துவம்ஷெல்லியின் கவிதைகள் காலம் கடந்து நிற்கும் இலக்கியக் கானகம்.அதை,கானகம் என்று தான் குறிப்பிட வேண்டும். அவன் ஆக்கங்கள்,சீர்த்திருத்தி அமைக்கப்பட்ட பூங்காவனம் அல்ல. தருக்கள் மண்டி செழித்த காடு. உள்ளே புகுந்துவிட்ட மனம் வெளியேறுவது அத்தனை சுலபமன்று. அந்த வனத்தின் அழகிலே, அதன் வளத்தின் வகைமையிலே ஒன்றி அலைவது ஒரு சுகம்.


தமிழ்க்கவிதை புனைவது வசமான இளமையில், ஷெல்லியின் பல கவிதைவரிகளை மொழியாக்கம் செய்ததுண்டு. என் ஆதர்சக் கவிஞன் கீட்ஸ் தான் என்றாலும், தமிழ்ப்பாட்டன் பாரதியோ, ஷெல்லியை பரிந்துரை செய்திருந்தான். ஷெல்லிதாசன் என தன்னை பாரதி அழைத்துக் கொண்டான்.

காதல் தத்துவம் (love philosophy) என்ற ஷெல்லியின் கவிதை என் மொழிபெயர்ப்பில் இதோ அன்பர்களே! கீழே ஆங்கிலக் கவிதையையும் தந்திருக்கிறேன்.  

காதல் தத்துவம்

ஆற்றிடை கலக்கும்பல  ஊற்று
   கடலேறிக் கலந்திடும் ஆறு.
ஏற்றமிகு விண்ணகத்துக் காற்று
  கலக்குமே  இன்னுணர் வோடு.
ஒற்றையெனப் புவியிலொன்று ஏது?
   படைப்பெலாம் இறைநியதி யோடு
பற்றியோர் உணர்வொன்றிய போது
   நாமிருவர்  கலக்கத்தடை யேது?

மலைமுகடுகள் விண்ணையிடும் முத்தம்
அலைதழுவிடும் ஒன்றையொன்று நித்தம்.
எந்தமலர் இணைமலரை தள்ளிவைக்கும்?
சொந்தமிலா  பதரென்றதை ஊரொதுக்கும்.

கதிரொளி நிலம்தன்னை அணைத்திருக்கும்
மதியொளி அலைகடல்மேல் இதழ்பதிக்கும்.
இவ்வினிய  இணைகளெல்லாம் பயனிழக்கும்
கவ்வியிதழ் முத்தமொன்றுநீ தரும்வரைக்கும்


Love’s Philosophy

The fountains mingle with the river

And the rivers with the ocean,

The winds of heaven mix for ever

With a sweet emotion;

Nothing in the world is single;

All things by a law divine

In one spirit meet and mingle.

Why not I with thine?—See the mountains kiss high heaven

And the waves clasp one another;

No sister-flower would be forgiven

If it disdained its brother;

And the sunlight clasps the earth

And the moonbeams kiss the sea:

What is all this sweet work worth

If thou kiss not me?


                                                                          (படம்: நன்றி கூகிள்,விக்கிபீடியா )வெள்ளி, மே 13, 2016

ராஜா ரவிவர்மாரவிவர்மன் எழுதாத கலையோ?' என்று ஜேசுதாஸ் நேற்று ராத்திரி ஐபோனில் கொஞ்சிக் கொண்டிருக்க, நானறிந்த ரவிவர்மா சித்திரங்களை நினைவின் ஆழங்களில்தேடி துழாவியபடியே தூங்கிப்போனேன். விடிந்தும் கூட, ஜேசுதாஸின் சிணுங்கலும் ரவிவர்மாவின் நினைவும் விடவில்லை.

                                                   


ராஜா ரவி வர்மாவின் சித்திரங்கள் எனக்கு மழலை தெளியுமுன்னே பரிச்சயமாகி இருந்தது. தாத்தாவின் பூஜையறையில் கணபதிக்கு இடமும் வலமுமாக இருந்த லட்சுமியும ஸரஸ்வதியும் ரவிவர்மனின் கைவண்ணம். யாகுந்தேந்து என்று இன்றும்கூட கைதொழும்போது அந்த மலையாளத்திச்சி தான் வாணியாக மனதில் நிழலாடுவாள். பெரியகூடம் நெடுகிலும் வரிசைகட்டியிருந்த படங்களில் பலவும் ரவிவர்மன் எழுதின கலைதான்.
                               
                                      
மயிலமர்ந்த ஆறுமுக சுப்ரமணியரின் இருபுறமும், அவர் தொடைகளில் அபத்திரமாய் உட்கார்ந்திருந்த வள்ளிதேவானையர் விழுந்து விடுவார்களோ என்று விசனப்பட்டிருக்கிறேன். ஆகாயத்திலிருந்து விழும் கங்கையை தலையில் ஏற்கத் தயாராக,இடுப்பில் இருகையூன்றி புலித்தோலுடுத்து, தலைச்சடை விரித்தபடி, மேலே பார்க்கும் சிவன் ஞாபகம் வருகிறது. அவருடைய நான்கு கரங்களில் இருகரங்களால் தன் சூலாயுதத்தை தனக்குபின்னால் பிடித்திருப்பார். அந்த படத்தில் ஒரு ரிஷி சிவனை பார்த்தபடி இருப்பார். சிவனுடைய காளையின் முதுகில் கையூன்றியபடி சிவப்பு சேலையில் பார்வதி. என் பள்ளித்தோழன் கிருஷ்ணமூர்த்தியின் அம்மா ஜாடையுடன் மார்த்துவ மாமிபோல் விசனத்துடன் பார்த்திருப்பாள். நிறம் பழுத்த படம். சமையற்கட்டு வாசலுக்குமுன் முண்டக்கட்டையாய் குழந்தை கிருஷ்ணன் யசோதைமுன் நின்றிருப்பார். பார்க்கும் போதெல்லாம் சிரிப்பு வரும். இப்படியா டிங்காவைக் காட்டிக் கொண்டு நிற்பான் இந்தக் கிருஷ்ண படவா?!

நினைவு தான் எவ்வளவு தெளிவாக இருக்கிறது? மீண்டும் மனசெல்லாம் நாங்கள் குடியிருந்த அந்த நாயுடு வீட்டுக்கூடம்தனில் படர்ந்திருக்கிறது. அந்தப்படங்களின் வரிசை, நடுவேயிருந்த இரண்டு முக்கோண மாடங்கள். ஒன்றில் மகாபெரியவர் படம்.ஒன்றில் சந்திரப்பிரபை போன்ற விபூதி சம்புடம்.... அதை 'விபூதி போட்' என்று அழைக்கும் தம்பி.... அடடா ! பதிவு ரவிவர்மா பற்றி அல்லவா?

ஓவியத்தில் ரசனை ஏற்பட்டு பின்னாளில் தேடித்தேடி சித்திரங்களில் மூழ்கிக் கிடந்த நாட்கள்.ஐரோப்பிய ஓவியங்களின் பரிச்சயம் ; சில ஓவியப் பித்தர்களின் நட்பு இவையெல்லாம் சித்திரங்களை பார்க்கும் கண்ணோட்டத்தையே மாற்றி அமைத்தன. வண்ணங்களின் கலவை, சித்தரிக்கப்படும் உடலின் பரிமாணங்கள், ஆகியவை ஒரு ஓவியத்தின் கலைநயத்தை தீர்மானிக்கின்றன. இந்திய ஓவியர்களில், மேனாட்டு சைத்தரீக முறைமையை,நம் கலாச்சார பண்டாட்டிற்கொப்ப பயன்படுத்தி தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர் ராஜாரவிவர்மா. வரைந்த காட்சியும் உருவங்களும் தட்டையாக ஒற்றைப் பரிமாணத்தில் தோன்றும் நமது ஓவிய மரபில், அவரது முப்பரிமாண ஐரோப்பிய பாணி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. கடவுளரின் உருவங்களையும் புராணக் காட்சிகளையும் வரைந்து தள்ளினார். அவற்றின் வணிக சாத்தியம் உணர்ந்து அவற்றை அச்சிட்டு விற்பனை செய்யும் ஏற்பாடுகள் வெற்றி கண்டன. கடந்த நூற்றாண்டு ஹிந்துக் குடும்பங்களில்,ரவிவர்மாவின் அச்சிடப்பட்ட கடவுளர் படங்கள் இல்லாத வீடே இருக்காது என்று ஆனது.

ராஜாரவிவர்மா 1848ல் கிளிமானூர் அரசகுடும்பத்தில் பிறந்தார். திருவனந்தபுரம் அரசவம்சத்துடன் தொடர்புள்ள குடும்பம் அவருடையது. கோயில் தம்புரான் என்றழைக்கப்பட்ட அவர்கள் திருவிதாங்கூர் ராஜவம்சத்துடன் திருமணத் தொடர்புகள் ஏற்படுத்திக்கொள்ளும் உரிமை பெற்றது. 'மறுமக்கத்தாயம்' எனும் தாய்வழி மரபுப்படி மாமன் ராஜராஜவர்மனின் ராஜா பட்டம் இவரை அடைந்தது. திருவனந்தபுரம் அரண்மனையில் ஓவியம் கற்றார். தஞ்சை ஓவியப்பாணியையும் முறையாகக் கற்றார். டச்சு ஓவிய அறிமுகமும், தைல ஓவியமுறையும்(oil painting) இவருக்கு அறிமுகமாகின. ரவிவர்மாவின் இளைய சகோதரர் ராஜராஜவர்மாவும் அவருடன் ஓவியக்கலையில் ஈடுபட்டார். ராஜா தீன்தயாள் என்ற புகழ்பெற்ற ஹைதராபாத் புகைப்படக்கலைஞருடைய நட்பும் பல காலம் நீடித்தது.

திருவனந்தபுரம் மஹாராஜா ஆயில்யம் திருநாள் ஆதரவுடன் இவரது ஓவியக்கலை பெயர்பெற்றது. பல சர்வதேச கண்காட்சிகளில் அவரது ஓவியங்கள் பங்குபெற்றன. பதக்கங்களை அள்ளின. விவேகானந்தர் பங்கேற்ற உலக மதங்களின் மகாசபையில் காட்சிப்படுத்த இவரின் சில ஓவியங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. . பல ராஜ வம்சத்தினர் மற்றும் பிரபுக்களை சித்திரமாய் தீட்டி பாராட்டுகள் பெற்றார்.

மைசூர் அரண்மனை,ஹைதராபாத் சலார் ஜங்க் மியூசியம் ,மும்பை ஆர்ட் சொஸைட்டி,சென்னை எழும்பூர் மியூசியம் ,புதுக்கோட்டை மியூசியம் ,பதேசிங்க் மஹாராஜா மியூசியம் பரோடா,கல்கத்தா விக்டோரியா மெமோரியல் ,தில்லி ரயில்வே மியூசியம், திருவனந்தபுரம் சித்ரா ஆர்ட் கேலரி மற்றும் பல தனியார் சேகரிப்புகளில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காணக் கிடைக்கின்றன. இணையப் படங்களிலும், யூடியூப் தொகுப்புப் படங்களிலும் ரவிவர்மா நீக்கமற நிறைந்திருக்கிறார்.

ஐரோப்பிய நாடுகளுக்கெல்லாம் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு நிராசையாகவே போயிற்று. கடல்தாண்டி பயணம் மேற்கொண்டால் அந்த நாட்களில் ஏற்பட்டிருக்கக்கூடிய சமூக நிராகரிப்புகளும், பயணம் போய் திரும்பிய பின்,கோவில்களுக்குள் நுழைய விதிக்கப்படும் தடைகளும் அவரைப் பின்வாங்கச் செய்தது.

பாரதத்தின் பல பிரதேசங்களுக்கும் பயணம் செய்தபடி இருந்தார். அந்நாளைய சமஸ்தானங்களுக்கு சென்று மன்னர்களையும் ராணிகளையும் பட்டத்து இளவல்களையும், மற்றும் ஆங்கிலேய பிரபுக்களையுமே வரைந்து தள்ளியிருக்கிறார். மிக சொற்ப நேர அளவே ஓவியம் தீட்ட எடுத்துக் கொள்வாராம்.ஏறத்தாழ இரண்டாயிரம் ஓவியங்கள் வரை அவர் வரைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.மகாபாரதம், இராமயணக் காட்சிகள் , மற்றும் புராணகதைமாந்தர்கள் அவருடைய ஓவியங்களின் பரிமளித்தன. சாகுந்தலம் பற்றிய சில ஓவியங்கள், தூரிகை வனைந்த கவிதைகளாயின. அவர் வரைந்த பெண்களின் கண்களிலேயே சொல்ல வந்த உணர்ச்சியை விதைத்து வைத்தார். கடவுளரின் தனி ஓவியங்கள் அல்லாது, ரவிவர்மாவின் பிரபலமான ஓவியங்களில் சில:
ஶ்ரீகிருஷ்ணன் ராயபாரம்(தூது);
மதுக்குடுவை ஏந்திச் செல்லும் திரௌபதி;
காலில் குத்திய முள்ளை நீக்கும் சகுந்தலை; சந்தனுவும் மத்ச்யகந்தியும்
ருக்மாங்கதனும் மோகினியும்;
ஜூடித்;ஶ்ரீராமர் வருணபகவானை மிரட்டும் காட்சி ;
அன்னப்பறவை தூது;
விஸ்வாமித்திர்ர் மேனகையை ஏற்கமறுத்தல்;
நிலவொளியில் நங்கை;ஜடாயுவின் சிறகுகளை இராவணன் வெட்டும் காட்சி;
ஊஞ்சலாடும் மோகினி;
தந்தைக்கு இந்திரஜித்தின் காணிக்கை முதலியன.

எனினும் ஸ்வாமி விவேகானந்தருக்கு ரவிவர்மாவின் ஓவியங்களை பற்றி ஏதும் நல்ல அபிப்ராயம் இல்லை . அந்த ஓவியங்கள், இந்திய கலாசாரத்தின் வெளிப்பாடற்றவை என்ற கருத்தை ஸ்வாமிஜி சொல்லியிருந்தார். விநோதமாக, மகான் அரவிந்தரும் அதே போல மாறுபட்ட கருத்தைத்தான் ரவிவர்மாவின் கலைமீது வெளிப்படுத்தினார்.இந்திய ரசனையையும்,அதன் கலைப்பண்பாட்டையும் தரம்தாழ்த்தியவர் என்று குற்றம் சுமத்தினார்.

மனிதர்களை வரைந்த சித்திரங்களில், அந்த இடத்தின் சூழல், அணிந்த நகைகள், ஆடைகள், தரை,சுவர் என எல்லாவற்றிலும் விசேஷ கவனம் செலுத்தி நுணுக்கமாய் வரைந்தார். வரையப் பட்ட மனிதரின் முகம் மற்றும் உருவ அமைப்பிலும் தென்படக்கூடிய மாறுபாடுகளை சமன்செய்யும் உத்திபோலும்.

ஜனவரி 1905ல் சகோதரர் ராஜராஜ வர்மாவின் மறைவு ரவிவர்மாவை மிகவும் பாதித்தது . தன்னுடைய கலையிலும் பயணங்களிலும் உற்றதுணையாக நின்ற தம்பியின் மரணம் அவரை நிலைகுலையச் செய்துவிட்டது.

ரவிவர்மா சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்தார். அந்தகாலத்தில் மதுமேகத்திற்கு சரியான மருத்துவ தீர்வுகள் இல்லாததாலும், இடைவிடாத பயணங்களாலும் சரியான உணவுமுறைகளை அவர் கைகொள்ளவில்லை. குற்றாலம் அருவியின் மூலிகை நீரும் காற்றும் அவர் நோயைத் தீர்க்கும் என நம்பினார். தமது கடைசிகாலத்தை அங்கேயே கழிக்க எண்ணி, குற்றாலத்துக்கு அருகேயுள்ள இலஞ்சியில் நிலமும் வாங்கினார். சர்க்கரை நோய் முற்றி அவர் முதுகில் ராஜப் பிளவை எனும் பல்வாய்ப்பிளவை உண்டாகி அல்லலுற்றார். அக்டாபர் 1906ல் அவர்தூரிகை ஓய்ந்தது.

எந்தக் கலைஞனுக்கும், அவன் மேற்கொள்ளும் கலைவடிவத்திற்கும், நோக்கத்திற்கும் ஒப்ப, போற்றுதலும் எதிர்மறை விமர்சனமும் உண்டாகும். ரவிவர்மாவும் கடும் விமரிசனத்திக்கு ஆளானவர். மேற்கத்திய பாணியைக் கைக்கொண்டு நமது பாரம்பரிய சித்திரக்கலையை சிதைத்துவிட்டார் என்றும், அரண்மனைக் கலைஞன் என்றும், சராசரிகளின் ஓவியன் என்றும் விமரிசனத்திற்கு உள்ளானார். எனினும் ஓவியக்கலையை சாதாரண மக்களும் ரசிக்கும் விதத்தில் அதை வெகுஜனக் கலையாக பரப்பினார் என்பதில் ஐயமில்லை. கடந்த நூறாண்டுகளில் வந்த தலைமுறைகள், இரவிவர்மாவின் ஓவியங்களை ரசிக்காமல் இருந்திருக்க முடியாது. சித்திரக்கலை ரசனையின் பாலபாடம் ரவிவர்மாவிலிருந்தே தொடங்குவதாய்க் கொள்ளலாம்.

                                                            
                                                                         (படங்கள்: நன்றியுடன் கூகிள், விக்கி)வியாழன், மே 05, 2016

பெரிய பாட்டன் சங்கதி

மெல்ல ஊர்ந்திடும் கடிகார முட்கள் 
வேகமாய் கிழிபடும் தினசரித்தாள்.

சிரிக்கும் தொறும் கண்ணீர்.
அழுகையே போலும் புன்னகை

சாபம் போல்வரும் ஆசி
சரசம் போலோ கோபம்

உணர்வதோ யானைப்பசி
உண்பதோ குழந்தைக் கொறிப்பு

கனவு காண்பதாய் விழிப்பு
நினைவு அழியா உறக்கம்

தாவிஅலையும் ஞாபகங்கள்
தவிக்கவிடும் பொல்லா மறதி

கூட்டத்தில் உணர்வதோ தனிமை
தனிமையில் நினைவுகளின் சந்தடி

உறவுகளுடன் ஓயாத பேச்சு 
பேச்சாலே விலகும் உறவு

சொல்லத் தடுமாறும் நாவு
சொல்லியே வருமோ சாவு

சனி, ஏப்ரல் 23, 2016

தி ஜானகிராமனின் செம்பருத்தி

அண்மையில் தி ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யை பலகாலம் கழித்து மீண்டும் வாசித்தேன். சாவி ஆசிரியராய் இருந்த தினமணிக் கதிரில் 1968ல் தொடராக வந்த புதினம் ‘செம்பருத்தி’.

தமிழ் இலக்கிய முன்னோடிகளில் ஒரு அசைக்கமுடியாத இடம்  தி.ஜானகிராமனுடையது. தஞ்சை மண்ணின் மணம்கமழும் எழுத்து. காட்சி சித்தரிப்புகளிலும், உணர்வுகளைத் துல்லியமாக எழுத்தாக்கும் நுண்மையிலும் அவருக்கு இணை அவரே தான். அவருடைய பத்து நாவல்களில் மிகவும் அதிகம் விமரிசிக்கப்பட்டவை   அம்மா வந்தாள், மோகமுள், மற்றும் மரப்பசு ஆகிய மூன்றும் எனில், அதிகம் கவனம் பெறாத நாவல் அவருடைய ‘செம்பருத்தி’ என சொல்லலாம். 

நிகழ்வுகளைக் கட்டமைக்கும் நேர்த்தி, சரளமான நடை, கதைசொல்லலை உரையாடல்களாலேயே நகர்த்திக் கொண்டுபோகும் லாவகம், சொல்லாமல் போனவற்றை ஓரிரு சொற்களில் பூடகமாய் இட்டுநிரப்பும் ஜாலம்....இவை 
தி ஜாவின் தனிமுத்திரை.

கண்களைக் கட்டிக்கொண்டு கம்பிமேல் நடக்கும் கழைக்கூத்தாடி நமக்குள் எழுப்பும் பரபரப்பையும் பரிவையும்அவருடைய முக்கிய வார்ப்புகள் எழுப்புவதை அந்தப் படைப்புகலைஞனின் வெற்றி எனத்தான் கொள்ள வேண்டும். ஆண்பெண் உறவுகளில் உள்ள சிக்கல்களை, மனிதமனம் காமம் சார்ந்து கொள்ளும் கோணல்களை, கட்டுமீறும் வேட்கைகளை, வெறும் நினைவுகளாகவே மட்டும் முயங்கும் ஆசைகளை தி ஜா போன்று சித்தரித்தவர்கள் இல்லை. அந்த விவரிப்பு, ஒரு நூல் பிசகினாலும் ஆபாசமாய் அனர்த்தப் படக்கூடிய கட்டங்களை, அந்த எல்லையின் இழையிலேயே தடுமாற்றமின்றி கொண்டுசெல்லும் நுட்பம்......எவ்வளவு பெரிய படைப்பாளி  தி ஜா?!

செம்பருத்தியின் நாயகன் சட்டநாதன். அறத்தின் மாண்பை இயல்பாகக் கொண்டு, அதை வாழ்க்கையின் பிரவாகம் அடித்துச் சென்றுவிடாமல் பற்றிக் கொண்டிருக்கும் இயல்பான மனிதன்.

சட்டநாதனின் இளமைக் காலம், சட்டநாதனின் நடுவயது, முதுமையின் வாசலில் சட்டநாதன் என்று மூன்று நிலைகளையும் தொட்டுச் செல்கிறது கதை. சட்டநாதனின் வாழ்க்கையில் மோதுகின்றார்கள்  மூன்று பெண்கள். பெரிய அண்ணி, சின்னஅண்ணி குஞ்சம்மாள் , மனைவி புவனா என்ற மூவரும் அவன்பால் கொள்ளும் ஈர்ப்பு, அவனை அலைக்கழிக்கும் அவர்களின் குணமாறுபாடுகள், அவற்றினூடே தன் சீர்மையை விட்டு அகலாது சட்டநாதன் வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் விவரிப்பே கதை.தஞ்சையின் ஒரு சிறு கிராமத்துச் சூழலில் வளரும் கதையின் துணை மாந்தர்களும் தன் இருப்பை நம் மனத்தில் ஆழப் பதிக்கிறார்கள் .

இளம்பிராயத்தில் சட்டநாதன் காதல்வயப்பட்ட குஞ்சம்மாளை அவனுடைய சின்ன அண்ணன் மணக்க நேர்கிறது. சட்டநாதனும் அவன் அம்மாவும் அந்த சின்ன அண்ணன் ஆதரவில்தான் வாழ்கிறார்கள். சட்டநாதனின் கண்டிப்புமிக்கஅதேசமயம் பேரன்பை மனதில் பூட்டிவைத்திருந்த சின்னஅண்ணன் முத்துசாமி சடுதியில் இறந்துபோகிறான். இளம்விதவையான குஞ்சம்மாள் தன் கைக்குழந்தையுடன் புகுந்த வீட்டிலேயே வாழத் துணிகிறாள்.

இந்த கட்டத்தில் பஞ்சாய் சட்டநாதனும், நெருப்பாக குஞ்சம்மாளும் அருகருகே இருக்க, சட்டநாதனோ சின்ன அண்ணன் மேல்கொண்ட நன்றியில் ‘நனைந்த பஞ்சாகவே’ காலம் கடத்துகிறான். சட்டநாதன்மேல் தனக்கான பிரியத்தை வெளிப்படுத்தும் குஞ்சம்மாளின் வேட்கையை சட்டநாதன் மறுதலிக்கிறான். பலவந்தமாய் அவனை ஒருமுறை இறுக அணைத்துவிட்டு, ‘வாழ்நாளுக்கு  இதுவே போதும்’ என்பதாய் குஞ்சம்மாள் ஒதுங்குகிறாள். 

சின்னஅண்ணன் தன் மரணத்தருவாயிலும் சட்டநாதனுக்கு சிவநெறிச் செல்வரான சண்பகவனம் பிள்ளையின் மகள் புவனாவை நிச்சயித்து விட்டே இறக்கிறான். செம்பருத்தி மலரைக் கூந்தலில் எப்போதும் சூடும் புவனா அனைவரையும் அரவணைத்துச் செல்லும் ஒரு பொறுமைசாலியாய், ஒரு ஆதர்ச மனைவியாகவே வருகிறாள். சட்டநாதன் ஒளிவுமறைவின்றி அத்தனை நடப்புகளையும் மனைவியிடம் பகிர்ந்து கொள்கிறான், சின்ன அண்ணியோடு தனக்கிருந்த காதல் உட்பட. சின்னசின்ன சம்பவங்களினூடே அந்த தம்பதிகளின் அன்னியோன்னியதிற்கு வண்ணம் சேர்க்கிறார் தி.ஜா.

இதுவரை சட்டநாதன்குடும்பத்தில் ஒட்டாது, வசதியான வணிகராய் சட்ட நாதனின் பெரியண்ணன் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். பெரும் வாழ்வு வாழ்ந்து ஓரிரவில் அத்தனையும் இழந்து, சட்டநாதனின்  ஆதரவில் அண்டிவாழும் நிலைமைக்கு ஆளாகிறார். பெரிய அண்ணனின் மனைவி தான்  கதையின் சிக்கலான வார்ப்பான ‘பெரிய அண்ணி’. தி. ஜாவின் விவரிப்பில் பெரிய அண்ணியின் மேல் கோபமும், அசூசையும், அனுதாபமும் மாறிமாறி நம்மை ஆட்கொள்கின்றன. படாடோபமும், எடுத்தெறிந்து பேசுவதும், மாளா காம இச்சையும், குயுக்தியும், குதர்க்கமும் கலந்த ஒரு பாத்திரமாய் இருப்பவள் பெரிய அண்ணி. வீட்டில் கிடைக்காத அன்பை வெளியில் தேடிக்கொள்ளும் பெரியண்ணனின் தொடுப்பாய் ஆண்டாள் எனும் ஒரு தாசி. தாசியேயானாலும் அவரை உளமார நேசிக்கும் குணவதி.

பெரியண்ணன் குடும்பமும் கிராமத்திற்கு வந்து சேர, சச்சரவுகள் மிகுந்து இருப்பை நரகமாக்குகின்றன. துர்க்குணமே உருவாக பெரிய அண்ணியும் குஞ்சம்மாளையும் சட்டநாதனையும் தொடர்பு படுத்தி புரணி பேசுகிறாள்.
காலம் ஓடிக் கொண்டிருக்கிறது. சட்டநாதன் பொருளாதார மேம்பாடும் மன முதிர்ச்சியும் அடைகிறார். பிள்ளைகள் பெரியவர்களாகிறார்கள். சின்ன அண்ணனின் மகளுக்கும்,மற்றும்  பெரியண்ணன் வாரிசுகளுக்கும் திருமணம் செய்விக்கிறார் சட்டநாதன். முன்பு பெரியண்ணன் பட்டகடனை அடைக்க விற்ற நிலத்தில் கிடைத்த புதையல் மூலமான பணம், வாங்கியவரின் மகன் மூலம் கிடைக்கிறது. அதில் சின்ன அண்ணன் பங்கு என சின்ன அண்ணிக்கு சட்டநாதன் கொடுக்க எத்தனிக்க, சின்ன அண்ணிக்கு அவர்பேரில் பெரும் கசப்பு மூள்கிறது.

தன்னுடனான உறவையும்கூட புவனாவுக்கு சட்டநாதன் தெரிவித்து இருந்ததை அவன் மூலமே அறிந்து வெறுப்புற்று தன் மகள்வீட்டோடு  போகிறாள் குஞ்சம்மாள். மனதுக்குள் சட்டநாதன் மேல் நேசம்வளர்த்து, அதை  போஷித்து ஆராதித்து வந்தவளின் அன்பே துவேஷமாக மாறி நிரந்தரமாய்ப் பிரிகிறாள். பெண்ணோடு வாழ சென்னைக்கு போய்விடுகிறாள்.

கடைசிவரை தேளாய் கொட்டிக்கொண்டிருந்த பெரிய அண்ணி, தன் மேல் தானே கொண்ட வெறுப்பில் உணவையும் மறுத்து ஆரோக்கியம் கெட்டு காலமாகிறாள். பெரிய அண்ணனுக்கும் மரணம் நேர்கிறது. சட்டநாதனின் பிள்ளைகளும் பணி நிமித்தம் வெளியூர்களுக்கு சென்று விடுகிறார்கள்.

இதுகாறும் சட்டநாதன் வாழ்வில் பூவாய் வாசம் வீசிய புவனா, ஒரு கேள்விக்குறியாய் மாறிப்போகிறாள். சட்டநாதனை சந்தேகத்தாலும் நம்பிக்கையின்மையாலும் வாட்டி எடுக்கிறாள். சின்ன அண்ணியுடனான சட்டநாதனின் உறவை மீண்டும் தோண்டியெடுத்து சந்தேகச்சாட்டை வீசுகிறாள்.

தான் ஏமாற்றப் பட்டதாயும் இடையூறாய் இருந்து விட்டதாயும் சிடுசிடுத்தபடி சட்டநாதன் வாழ்க்கையை நரகமாக்குகிறாள். புவனாவின் இந்த குணபேதத்தை சட்டநாதன் பொறுமையாகக் கையாள்கிறார். PMT( Pre Menstural Tension) எனும் மெனோபாஸ் பருவத்து உளச்சிக்கலை புவனாவின் இந்த பிறழ்நிலைக்கு காரணமாக்கி புவனாவுக்கு தி ஜா வக்காலத்தும் வாங்குகிறார்.

மீண்டும் புவனா ஆச்சர்யக் குறியாய் மீள்கிறாள். பழைய புவனாவாகி அன்பு செலுத்துகிறாள். கதையும் முடிகிறது.

ஆணும் பெண்ணும் ஈருடல் ஒருயிராய் எக்காலமும் மாற இயலாது என்று முத்தாய்ப்பு வைக்கிறாரோ தி ஜா? முடிவில் சட்டநாதன் புவனாவை அணைத்துக் கொள்கிறார். அவளும் அவருக்குள் புகுந்து கொள்வதுபோல் தான் ஒட்டிக் கொள்கிறாள்.
‘ஒன்றாக முடியவில்லை போல் தான் இருந்தது.அவருக்கு.அணைப்பு விட்டதும் மீண்டும் தனியாகத்தான் இருந்தது.
ஈஸ்வரனால் தான் முடியும் போலிருக்கிறது என்று அவருக்குத் தோன்றிற்று. ஈஸ்வரனுக்கும் முடியாது.ஒரு முலையும் ஒரு மூக்குத்தியும் ஒரு கொலுசும் நசுங்கிவிடவில்லை.மறைந்துவிடவில்லை.’
ஒரு சாதாரண கதையோட்டத்தை தன் புனைவின் மந்திரத்தூரிகையால் பெரும்சித்திரமாய்த் தீட்டியிருக்கிறார் தி ஜா.

தி ஜா வின் படைப்புகளில், செம்பருத்தியில்தான் பெண்களின் சித்தரிப்பு ஏதோ ஒருவகையில் துர்க்குணமே சற்று தூக்கலாக  காட்டியிருப்பதாய்ப் படுகிறது.

இளம்விதவையான சின்ன அண்ணி தன்பால் கொண்டுள்ள ஈர்ப்பை அறிந்தும், தன்னை பார்த்துக் கொண்டாவது இருப்பதே போதும் எனும் அவளின் உள்ளக்கிடக்கையை புரிந்து கொண்டும் கூடபுது தம்பதிகளாய் அவளையும் உடன்வைத்துக் கொண்டு வாழ்வது சரியா சட்டநாதன்? என்று கேட்கத் தோன்றுகிறது. கதையின் விவரிப்பில் குஞ்சம்மாள் விரகத்தில் எரிந்து கொண்டிருப்பதை உள்ளூர வெறித்துக் கொண்டிருக்கும் ‘ஆண்மை’ மிக்கவனோ என்று தோன்றுகிறது. எல்லாவற்றையும் நன்கு புரிந்து கொண்டு புத்திசாலியாக வாழும் புவனா கூட இந்த சேர்ந்து வாழ்தலை யோசிக்கவில்லையோ? அதுவும் புருஷன்-ஓரகத்தி பூர்வோத்திரம் அறிந்த பின்புமா? இளம்விதவைகளை வதைப்பதே வேலையாய் போய் விட்டது தி ஜாவுக்கு!
அப்போ அம்மா வந்தாள் இந்து.... இப்போ குஞ்சம்மாள்....

‘பெரியண்ணி’யை புளியமரம் என்று உருவகிக்கிறார். அடுத்தவர் சுவாசக் காற்றை மாசேற்றும் புளியமரம்.. பேய் வாழும் புளியமரம்... அவளுடைய காமத்தை வெளிச்சம் போடும் படைப்பாளி, கைப்பிடித்தவன் தொடுப்பை நியாயம் செய்வது போன்று மெழுகுவதும், தாசி ஆண்டாளம்மாவை அம்பிகையாக தோற்றுவிப்பதும் ஒருவேளை பெரியண்ணி பாத்திர வார்ப்பை மேலும் குரூரமாகத் தோன்றச் செய்யத்தானோ?

புவனாவுக்கு வருவோம். மாதர்குல மாணிக்கமாய் நிறுத்தப்படும் புவனா, சட்டநாதனிடம் கொடூரமாய் நடந்து கொள்வது எதிர்பாராதது. புவனாவின் இந்த சறுக்கல்,சின்ன அதிர்ச்சி மதிப்பையன்றி கதைக்கு எந்த பரிமாணமும் ஏற்படுத்தாத திணிப்பாகத் தோன்றுகிறது. மாறாக, ‘ச்சே! பொம்பளைங்களே இப்படித்தான்’ எனும் நினைப்பை வரவழைக்கிறதோ? இந்த ‘திருப்பத்தேவை’  வாராந்திர தொடர்கதைக்காக ஏற்படுத்தப் பட்டிருக்கலாம்.   

இடையிடையே சுதந்திரப் போராட்ட செய்திகள் கதையின் காலத்தை நினைவுறுத்துகின்றன. ஆனாலும் இது பழைய கதை என்று ஒதுக்கவியலாமல் நம்மையும் எல்லா கதாபாத்திரங்களும் ஆகர்ஷித்துக் கொள்கின்றன.

வரப்பில் முளைத்த குறும்பூக்கள், வீடுதோறும் மாக்கோலம் துலங்கும்  தெருவின் காட்சிகள், வயல்,வரப்பு, கடை,மூங்கில் மரக்கூட்டம், பட்சிஜாலம், என அனைத்தையும் விவரிக்கும் அழகு.. இயல்பான உரையாடல்களில் தெறிக்கும் கூர்மையும், தஞ்சை வழக்கும்... அடடா!

கதையின் ஓட்டத்தினூடே ஏதோ வரியில், ஒரு உரையாடல் துணுக்கில் கதையின் ஒரு முக்கிய முடிச்சை பொதித்து வைக்கும் தி ஜாவின் கதைகூறல் மிக நளினமானது. நாவலை படிப்பவர்கள், தன் வாசகத்தன்மையின் மேன்மையை தானே உணர்ந்துகொள்ள, அவர் வைக்கும் வசீகரமான ‘மின்னல்வேக வினாவிடை பரிட்சை’யோ இது என்று தோன்றுகிறது.

தி ஜா வைப் படிக்கப் போகிறோம் என்ற எண்ணம் வந்தவுடன் மனசு பரபரவென்று தன்னை அலம்பிவிட்டுக் கொண்டு  தெளிந்து போவதும், படிக்கத் தொடங்கியவுடனே புத்தி தன்னை கூர்படுத்திக் கொள்வதும்வாசிப்பின் போதுஇரண்டாம் பக்கத்திலேயே சூட்சும சரீரம்தாங்கி, ஜீவரசம் ததும்பும் கதை மாந்தரோடு தாமும் ஒரு பாத்திரமாய் மாறிப்போவதும் தி ஜா வின் ரசனைக்கார வாசகர்களின் சுபாவம். கேள்விகள் எழும்பாத மோனத்திளைப்பு. கேள்வியெல்லாம் எழுவது சில மீள்வாசிப்புகளுக்குப் பிறகுதான். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் நம் மனசே சொல்லும் ஒரே ஒரு பதிலும் ஒன்றுண்டு.

அந்த பதில்....
‘அது அப்படித் தான்!’


                                                                                   பிரசுரம் :ஐந்திணைப்பதிப்பகம்
                                                                                                              செம்பதிப்பு 2003