வெள்ளி, ஜூலை 23, 2010

அசினும் 'அக்குள்’ மேட்டரும்

சீச்சீ... இதென்ன கருமம் அக்குள் புக்குள்ன்னு?
உவ்வே.... இது பற்றியெல்லாம் கூடவா எழுதுவது?பேசுவது?
கொஞ்சம் கூட நாகரீகமில்லாமல்.... தூ...

படிக்க ஆரம்பித்த உடன் இப்படித்தானே முகம் சுளித்தீர்கள்?
டி.வி ல. ஒரு டியோடிரன்ட் விளம்பரம் பார்த்தீர்களா?
(தேகத்தின் மேல் தெளித்த பின் மணம் கமழ்வதால் டியோடிரன்ட்டை “தேகக் கமழி “ எனலாமா? அடிக்க வராதீர்கள்)
அந்த விளம்பரத்தில், மேற்படி சமாச்சாரம் பத்தி ..அதுதாங்க அக்குள் மேட்டர்... அசின் அங்கிருந்து வர்ற வாசனை பத்தி... (மீண்டும் கருமம் ) சீரியசாக சொல்ல.. ‘அப்பளப்பூ’ மாதிரி எதையோ ரெண்டு பக்க அக்கு...ளிலும் வைத்து.. வேற டியோடிரன்ட் அடித்த 'அக்'ஸில் வச்ச அப்பளப்பூவில் பச்சையா பாசி மாதிரி படிந்து...

விளம்பரதாரர்கள் அந்த பெண்ணை விட்டு விட்டு நடிகர் கஞ்சா கருப்பையோ அல்லது நடிகர் குண்டு கலியாணத்தையோ நடிக்க வச்சிருந்தா, அப்பளப்பூ என்ன? பெரிய ‘பொருட்காட்சி அப்பள’த்தையே ‘அங்க’ வச்சு தீர்மானமா அவங்க டியோடிரன்ட் தான் சூப்பர்ன்னு நிலை நிறுத்தியிருக்கலாம் இல்ல?

பண்ணலாம் தான்.. யார் சாமி பாக்குறது?

இந்த விஷயத்துல நான் சொல்ல வந்ததே வேற.. அந்த விளம்பரத்துக்குப் பின்னணி பேசிய பெண்குரல் பற்றித்தான்.
‘அக்குள்’ என்கிற முகம் சுளிக்க வைக்கும் சொல்லையும் ‘அங்கிள்’ன்னு வாத்சல்யத்தோட சொல்வதுபோல் உச்சரிக்கும் அழகு இருக்கிறதே.... அசினை விட அழகு போங்க!!

நிற்க, இன்னும் நாலு மாசத்துக்கு நான் ஏன் அப்பளப்பூவையோ இல்ல அப்பளத்தையோ தொடப் போறேன்.?. உவ்வே...

வியாழன், ஜூலை 15, 2010

உயில்

அசையும் சொத்துக்கள்
அன்பு மகனுக்கு,
அசையா சொத்தெல்லாம்
உடனிருந்த மனைவிக்கு..
கடனிருந்தால் கண்டிப்பாய்ச்
கடவுளுக்கு சேரட்டும்.

சொச்சமின்றி வாழ்ந்து விட்டேன்
மிச்சம் மீதி ஏதுமுண்டோ ?

எஞ்சியவையோ.....
என் புத்தகங்களும் கவிதைகளும்.
இருக்கட்டும்.
யாருக்கவை வேண்டும்??
அவற்றையெல்லாம்
என்னோடே புதைத்திடுங்கள்.

சீக்கிரம் வா !

உன் உதட்டின் ஈரத்தில்
உயிர்ப்பயிரை வளர்த்தேன்
நெஞ்சமுகட்டின் வெம்மையில்
கண்வளரக் கற்றேன்.
உன் புன்னகையின் வெளிச்சத்தில்
வாழ்வினைப் படித்தேன்.
மடிதனில் தலைவைத்து
மௌனத்தை ரசித்தேன்.

இன்றோ
சிறியதோர் பிரிவில்,
நானோர் வெறுமையின் அகராதி.
தனிமையின் மறுபதிப்பு
இறுக்கத்தின் இலவச இணைப்பு .

என்னவளே !
எப்போது வருகிறாய்?
திறந்தேயிருக்கும் என் இமைப்பூட்டின் சாவி,
உன்னிடம் தானே இருக்கிறது?

சீக்கிரம் வா !
நான் உறங்க வேண்டும்.
உன் மடியில் இமை மூடி
அமைதியில் கரைய வேண்டும்.


(சென்னை 1981)

புதன், ஜூலை 14, 2010

மறுமுகம்

ஆட்களில்லாச் சாலைகள்
ஆனாலும்,
அளவில்லா கூக்குரல்கள் ......

தெருவோரத் திண்ணைகள்
துணையற்ற வாழ்க்கை.......

பொருமுகின்ற நெஞ்சின்,
புலப்படா இரைச்சல்கள் .

முதுகினில் உறுத்தும் கண்பார்வைகள்..
முகம் காட்டாத சகபிரயாணிகள்....

உருவம் மறைத்த கெக்கலிப்புகள்..
இருளில் மின்னும் கத்தியின் வீச்சொலிகள்

தேடுகின்றேன் மனிதர்களை...
யாருக்கு யாரைத் தெரியும்?

ஆட்களில்லாச் சாலைகள்
ஆனாலும்,
அளவில்லா கூக்குரல்கள் ......


( கல்கத்தா 1987)

மொழி

புரியும்படி நான் சொன்ன போது,
போதும் போதும் என்றார்கள்.

புரிந்தும் புரியாதவையாய் சொல்லியதை,
புதிர் புதிர் என்றார்கள்.

புரியாமலே அவை ஆன போது,
கவிதை கவிதை என்றார்கள்.

மௌனத்திலே நான் முடித்த போது,
மரணம் மரணம் என்கிறார்கள்.


(கடலூர் 1995)

அங்கலாய்ப்பு

சேற்றுச் சகதியிலே
சாக்கடை ரோட்டிலே,
நடக்கேன்
செருப்பில்லா காலோடே ....

மழிக்காத முகத்தினிலே
முப்பது நாள் தாடியோடே........

நல்ல சட்டைப் பேண்ட்டில்லே
நாலு முழ கருப்பு வேட்டி

மூணு நாளா
அலமேலுவும் ‘வீட்டில்’ இல்லே.....
நான் வச்சக் குழம்பிலோ
உப்புமில்லே சப்புமில்லே....

சாமி சரணம் சாமி சரணம்
இன்னிக்கு பூஜை செய்ய டயமில்லே.......

வெள்ளி, ஜூலை 09, 2010

ஓர் பின்னிரவுப் பயணத்தில்

நெடுந்தொலைவுப் பேருந்தின்
பின்னிரவுப் பயணத்தில்,
சாலை பாவா ஓட்டத்தில்
சன்னலின் வழியாக
சல்லிக்கும் காற்றுவந்து
சேதி சொல்லும் – உன்னினைவும்
கற்பூர மணமாக
மனம் பரவும்.

காற்று வெளியினிலே
கவிதை யினம்தேடி
கண்ணும் அலைபாயும்
மேகப் பொதிகளிடை
மேவுநிலா வெளிவந்து
உந்தன்முகம் காட்டும்.

சாலையின் இருமருங்கும்
தலைதெறிக்க வருமரங்கள்
பார்வைக்குத் திரைவிரிக்கும்
உனையெண்ணி விகசிக்கும்
என்முகத்தை வெளிநீண்ட
புளியங்கிளைத் தட்டி
புவிக் கொணரும்.

மங்கிய வெளிச்சத்தில்
மறையும் பெயர்ப்பலகை
வரிசையில் உன்பெயரைக்
கண் தேடி மாயும்.
பேருந்தின் தாலாட்டில்
சீறிவரும் எதிர்க்காற்றும்
உன்னன்பின் பரவசம்போல்
மூச்சு முட்டும்.

சேருமிடம் வந்தபின்னர்
பேருந்து நின்றபின்னும்
விரைந்திடும் உள்ளம்மட்டும்
தீர்ந்திடாத கனவைத்தாங்கி
சோர்ந்து செல்லும்.


(பெங்களூர் 1979)

பைத்தியம்

பாவம்ப்பா... அவன் பைத்தியமா?
விரல் பிடித்து வினவும் மகன்..

யாரில்லை பைத்தியம்?
நானில்லையா? நீயில்லையா? யாரில்லை?

பலருக்கு பணம்.
சிலருக்கு பதவி.
சிலருக்குப் பொன்.
பலருக்குப் பெண்.
உனக்கு கிரிக்கெட்.
எனக்கு கவிதை.

எல்லோர்க்குமிங்கே
ஏதோவொன்றில் பைத்தியம்.....

எதன்மீதும் ஏதுமில்லாத அவனையோ ,

கூசாமல்

பைத்தியம் என்கிறார்கள்.


(கல்கத்தா 1988)

மறதி

போகுமிடமெல்லாம்
மறந்துபோய் தொலைத்துவிடுகிறேன்

குடையையும்.....

மனத்தையும்......


(கடலூர் 1976)

பழைய கவிதை....புதிய சங்கடம்

என் உயிர் நண்பனின் மகன், கல்லூரி மாணவன் தொலைபேசியில்..

‘அங்கிள் ! உங்க புது தமிழ் BLOG பாத்தேன்.
லே அவுட்டுல்லாம் அட்டகாசமா இருக்கு.
மொத்த BLOGம் தமிழ்லன்னா கஷ்டமில்லையா?’

‘இதுல என்னடா கஷ்டம்? அப்பல்லாம் மோட்டுவளைய
பாத்துகிட்டு பேப்பர்ல எழுதினோம்.. இப்போ கீபோர்ட
பாத்துகிட்டு தடவி தடவி டோக்கு டோக்குன்னு’....

‘ அதுல உங்களோட கவித ஒண்ணு படிச்சேன். சிம்பிளாதான் இருக்கு. ஆனா லாஜிக்கு தான் இடிக்குது’...

ஆஹா.. கெளம்பிட்டாங்கய்யா.....

‘என்ன கவிதைடா செல்லம்?’

வாசிக்கிறான் அதை.

தலையணைத் தொட்டில்

அவள்
கடிதத்தில் மட்டுமே
அவனைக் கலந்ததற்கு

நெஞ்சிலே கருவுற்று
கண்ணால் ஈன்றாள்
இருதுளி கண்ணீர்.

இவ்விரட்டைக் குழந்தைகளை
இட்டதோ
இந்தத் தலையணைத் தொட்டிலில்.

தபால்கார புரோகிதரே !
எவ்வளவு தாமதமாய் வந்திருக்கிறீர்?

( மார்ச் 1981)


‘இதுல என்னடா புரியறதுக்கு இருக்கு?’


‘கொழந்த பிறக்கறதையும் மனசு பீலிங்க்சையும்
வச்சு ஏதோ லவ் மேட்டர் சொல்ல வர்றீங்க.
உங்க லவ்ஸ் தானே? அப்பா சொல்லியிருக்காரு’

டேய்.. விஷயத்துக்கு வாடா’..

‘ ஏன் லெட்டர் லேட்டாச்சுன்னு அவ்ளோ கஷ்ட படணும்?’
அப்பப்ப ஒரு நடை போய் பாக்க வேண்டியதுதானே?’

“நான் இருந்தது பெங்களூர்ல... அவ சென்னையில...”

“லெட்டர் லேட்டாவுதுன்னா கொரியர்ல அனுப்பலாம்ல?’

‘அப்போ கொரியர்லாம் கிடையாதுடா..’...

இல்லைன்னா செல்லுல பேசவேண்டியது தானே?
S.M.S ஆவது அனுப்பலாம்ல?

‘செல்லுல்லாம் அந்த காலத்துல கிடையாதுடா’.....

‘சரி போவுது.. S.T.D போட்டு பேசியிருக்கலாமே.’

“அப்பா சாக்ரடீசு! லாங் கால் அப்பல்லாம் பேசறது ரொம்ப கஷ்டம். டிரங்கால் போட்டு பேசணும் .அவங்க வீட்ல போன் வேற கிடையாது. இன்னும் கேள்வி இருக்கா? இவ்ளோதானா”

கொஞ்ச நேரம் பேச்சில்லை மறுமுனையில்.... அப்புறம் சொன்னான் பாக்கணுமே......
‘எதுவுமே கிடையாது... சுத்தம் !
அப்போ எதுக்காக தண்டமா லவ் பண்ணீங்க.?’

“மக்கு.. போடா! அதெல்லாம் உனக்குப் புரியாது!”

‘எனக்கெல்லாம் புரியும்... என்னா பீலிங்கு ?
பாவம் ஆண்ட்டிக்குத் தான் உங்களைப் பத்தி புரியல்ல..’

‘டேய்...டேய்....’
.

புதன், ஜூலை 07, 2010

வேள்வி

என்னிலிருந்து உன்னை
கால இடைவெளிகள் பிரித்து விடவில்லை.

சந்திப்புகள் நம்வரை ஓர் சம்பிரதாயம்....

உன்னை நினைப்பதுண்டோ எனக் கேட்கிறாய்.
பூந்தோட்டக்காரன் பூ வாங்குவதில்லை

நினைவுகள் நம்வரை ஓர் சம்பிரதாயம்.....

நாம் பேசிக்கொள்வதேயில்லை என்கிறாய்.
சந்திரோதயம் ஒரு மௌன நாடகமே

சம்பாஷணை நம்வரை ஓர் சம்பிரதாயம்.....

உனக்கான என் கவிதைகளோ ......
சம்பிரதாயமல்ல ....
அது
உயிர் பெய்து வளர்க்கும் வேள்வித்தீ.

(சென்னை 1982)

விறகும் நெய்யும்

குளிர்காய எண்ணியிருந்த
விறகுகள் ....
குளித்தன தணல் மேடையில்.

எதிர்பார்ப்புகள் சடசடத்த பின்னர்
எஞ்சியதங்கே சாம்பல் சரங்கள்.

தீயிலே நெய்யுருக்கி
அதனையே
தீவளர்க்க வார்த்தார்கள்.

விறகுகளோ சாம்பலாயாவது எஞ்சியது....
நெய்யோ வெறும் வாசமாய்க் காற்றில்

விழாச் சொரிதல்

மேடைமீது காக்கைக் கூட்டம்
ஒருவர் முதுகை ஒருவர் சொறிய
கேட்ட ஜனங்களுக்கோ
புல்லரிப்பு !


(கடலூர் 1974)

ரியலிசம்

சாரப் பள்ளி கிராமத்திலும்,
சரசம்பட்டி குப்பத்திலும்
பாமரர்கள் அலசிக்
கொண்டிருந்தார்கள்,
பாரதிராஜாவுக்கும்
இளையராஜாவுக்கும்
ஏதோ மனத்தாங்கலாமே?


(புதுவை 1989)

புதுக் கவிஞன்

குயர் குயராய் பேப்பரும்
கோப்பை சில தேநீரும்

பலமணி நேரங்களும்
பத்துவிரல் நகங்களும்
போயாயிற்று.

விடிவதற்குள் ஒரு கவிதை
எழுதி விடுவேன் கண்டிப்பாய்.

( சென்னை 1974)

பிலாக்கணம்

உறவுகளின் பெயரால் ஊடுருவல்கள்
இரவுகளின் இணக்கங்களுக்காய் .........

பாச வியாபாரங்களின் பங்கீடுகள்....
நீச நெஞ்சங்களின் மூலதனமாய்.

வேஷங்கள் கலைத்த ராஜாக்கள்,
வேண்டுவதந்தோ கூலியைத்தான்.

உண்மைகள் செய்து கொண்ட தற்கொலை
ஊமைக் கனவுகளின் கலக்கங்களுக்காய்.

ஊடே புகுந்த ஒட்டகங்கள்
உரிமை போன கூடாரத்துக்காய்.......

ஓடுகின்ற மேகங்கள் விட்டுச்செல்லா
சுவடுகளில்.....
எதிர்பார்ப்பின் துணையோடு பின்தொடர்ந்தே
தேடல்கள்.

காலம் சொல்லமுடியாத பதில்களுக்காய்
காத்திருக்கிறோம்......
அதுவரை அதுவரை நிதமும் இங்கே,

இருளில் பொய்மையின் ஓலங்கள்.


( சென்னை 1978)

பாவம்

ஜபதபங்கள் செய்து
விரதமெல்லாம் இருந்து
ஏகாதசியன்று.....
மாபாவம் செய்தார் மாத்ருபூதம்,
மாம்பலம் பஸ்ஸில்
எச்சில் டிக்கெட் வாங்கி !

(சென்னை 1974)

பட்ஜெட்

மாதாந்திர வரவு செலவு
மாய்ந்திங்கே நான் எழுதும்

எட்டாத கற்பனைகளின்
பட்டியல் கவிதைகள்.

வரவுகள் என்றுமிங்கே
‘மரபு’க்கு உட்படாமையால்

விசனத்தில் நின்றுவிடும்
‘வசன’க் கவிதைகள்.


(சென்னை 1983)

தாலி

தாலி எனும்
சிறு கயிற்றில்
என் நெஞ்சிலாடுவது
தங்கம் மட்டுமல்ல கணவரே....

சமுதாயத்தின் சத்தியமும்
நம்பிக்கைகளின் சங்கல்பங்களும்
கூடத்தான் .....
உமக்கேன்றே துடிக்குமென்
இதயத்தின சங்கீதத்தை ,
உடனிருந்து கேட்கத்தான் !

(தாலி எனும் தலைப்பில் கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதையின் ஒரு பகுதி –
கல்கத்தா தமிழ் MANDRAM 1988)

சிகரெட்

‘உயிர்’த் தலைவன்
‘விடுதலை’க்காக
தீக்குளிக்கும்
தொண்டன்...

(1974)

கோடை மழை

மழைமுத்து வார்த்தைகளை
சரங்களாய்ச் சொரிந்து
வான் கவிஞன்
மண் வாசக இதயங்களைத் தீண்டும் நேரம்,....

சந்த மின்னல்களிடை கருத்து இடிமுழக்கம்.
உணர்வுச் சாரல்களில்
உள்ளப் பூரிப்புகள் .

மழை நின்றும் அடங்கா மண்வாசனை.
மழை வெறும் நிகழ்வன்று...

துளிர் விடும் துடிப்பிற்கும்,
துணைக் காட்டும் ஆளுமைக்கும்
மழையோர் தொடர்புத் தூது.

கவிஞனே!
உன் பொறுப்போ வான்மட்டு.

கவிமழையில் துளிர்க்கட்டும்,
எதிர்காலத்தின் நம்பிக்கைகள்...

மழை நின்றும் அடங்குவதில்லை
மண்வாசனை.

(சென்னை 1974)

கடனும் உடனும்

பரிந்துரைத்த கடனுக்கு
உடன்படாத வங்கிதனை
ஏழைகளின் எம்.எல்.ஏ சாடினார்.

அம்பது வேலி தோட்டந்தொரவு
ஆனானப் பட்ட அப்பாவு
விண்ணப்பமா?
கொக்கா??

( புதுவை 1992)

என்றேனும் ஓர் நாளில்

என்றேனும் ஓர் நாளில்

நெருஞ்சிக் காடாய் நெஞ்சில் மண்டிவிட்ட
இனம்தெரியா துயரங்கள்
குறிஞ்சி மலராய் என்றோ ஒரு நாள்
நம் சந்திப்பு மலரும் போது.....
அகன்று விடும்...
மன ரணங்கள் ஆறி விடும்

மலர்ந்த உணர்வுகள்
மறையுமுன்னர்
ஒருமுறை சொல்லிவிட்டுப் போ !
குறிஞ்சி மலர்வது என்றோ ஓர் நாளென...


(சென்னை 1978)

டைரி

டைரி

புதுக்காகித மணப் பெண்ணின்
கதுப்புக் கன்னத்தில்,
மைமுத்தங்கள்.

ஆசை நாள் அறுபதும்
மோக நாள் முப்பதும்
புரட்டி ஓய்ந்ததும் ......

‘பால் கணக்கு’ பிள்ளைபெறும்
பத்து மாதம் கடந்த பின்னே !

( சென்னை 1978)

பயணம்

பலவந்தமானதோர் அண்மையில்
பிடரியைத் தாக்கும் மூச்சோடு
‘அந்த வீட்டைப் பாத்தீங்களா??’
வினவும் மனைவியின் குரல்.
‘உம் ...உம் ’
குலுக்கலில் அதிரும் என் மறுமொழி.

யார் அதைப் பார்த்தார்கள்?
ஆட்டோ மீட்டர் மீது
நிலை குத்திய என் கண்கள்.
எகிறும் எண்களோடு
மனமோ சடுகுடு ஆடும் போது.


(இதுவே ஹைக்கூவில் )

தலைப்பு : ஆட்டோ

எகிறும் எண்கள்
நிலை குத்திய கண்கள்
வயிற்றுள் சடுகுடு.

டிப்ஸ்

டிப்ஸ்

போட்டுக் கொடுக்க
போர்ட்டருடன்
மல்லாடும் தனவான்கள்
ஓட்டல்களின் அரையிருட்டில்
பிரியாணி பில்லுக்கு
மீதமென தாராளமாய்
சில்லறை விட்டகலும்
வேடிக்கை பார விகிதம்

(பிப்ரவரி 1977)

தவிப்பு

இவ்விருண்ட காட்டினில்
நான் தேடியலைவது உன்னைத்தான்.

இவ்வழியே சின்னச் சின்ன
கவிதைத் தடங்கள்.
எங்கிருக்கிறாய் இனியவளே?

கண்ணம்மா

ஆவியதிர அழைக்கின்றேனே.....
கேட்கவில்லையா?
தனிமை உன்னை அச்சுறுத்த வில்லையா?

இந்த முட்களும் கற்களும்,
புதர்களும் வேர்களும்
உன்னை வருத்த வில்லையா?

கண்ணீர்மல்க எங்கு நிற்கிறாய்
என்னுயிரே?
இங்கு தான் எங்கேயோ இருக்கிறாய்...

இவ்வழியே தொடர்பற்ற
சின்னச் சின்ன
கவிதைத் தடங்கள்


(சென்னை 1977)

விபச்சாரம்

ஓ....
இந்த பாலத்தின் கீழே
வயிற்றுப் பசிக்கும்
உடற் பசிக்கும்
இடையே
பாலம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்


( சென்னை 1977)

கருத்தரங்கு

ஆறு மணி நேர
ஆய்வுக் கருத்தரங்கில்
மோட்டுவளை வெறித்து
கிறுக்கிய கவிதைகள் பாதி
விட்ட கொட்டாவி மீதி.


( கடலூர் 1992)

ஊடல்

அவுக
பகலில் பேசச்சொல
என் எச்சல் தெறிச்சதுன்னு
பலவாறா திட்டினாக.......
ரவைக்கு வரட்டுங்....
எச்சல் என்னாதுன்னு
காட்டித் தாரேன்....


( புதுவை 1989)

என் கவிதைகள்

என் சிந்தனையும் சீற்றமும்
கனவும் காதலும்
இயந்திரங்களின்
இச்சைக்குட்பட்டு
அச்சாகி,
பலரின் கண்களும்
எச்சிற் படுத்தாமல்
முழுமையாய்,
ஒருமையாய்
உனக்கே நிவேதனம்.


(சென்னை 1977)

உலகம் கெட்டுப் போச்சு

தகிக்கும் பேருந்து
அனல் பகல் பயணம்.
அமட்டும் கண்கள்.

பின்னிருக்கையிலிருந்து
முகமில்லாத ஓர் குரல்.

‘உலகம் கேட்டுப் போச்சுய்யா’

உண்மை !
கயமை, ஊழல், விரோதம்,
பொறாமை, வன்முறை,
சோரம், சுயநலம்,
பித்தலாட்டம்.......

பொய்மையின் அச்சிலே
சுழலும் இவ்வுலகம்....

ஆம்

உலகம் கெட்டுப் போச்சு...
ரொம்பவே கெட்டு போச்சு...

ஒல்ட்டான்... ஓட்டுனரே !

சுற்றும் உலகை நிறுத்து !

நான் இறங்கிக் கொள்கிறேன்..


(கல்கத்தா 1984)

உடன் கட்டை

புகையிலைப் பெண்ணே !
வெள்ளைத்தாள் சேலை கட்டி
முனை நெருப்பில் நீ கனியும் போது,
வாயாலும் மூக்காலும்
உன் சிதையை புகைய விட்டு
தவணை முறையில்
உடன்கட்டை ஏறுகின்ற
எங்களுக்கும்
கற்புண்டு.


(கல்கத்தா 1984)

அவன்-அவள்

அவனும் அவளும்
அவனுக்காய் அவளும்,
அவளுக்காய் அவனும்,

அவனால் அவளும்
அவளால் அவனும்…..

அவனே அவளும்
அவளே அவனும்

ஆனார்கள்.........

இன்றோ,

அவன் அவளில் அவளையும்,
அவள் அவனில் அவனையும்,

தேடி ஓய்ந்த பின்னர்......

அவன் அவனே தான் !
அவளும் அவளே தான் !!


கல்கத்தா 1984

ஞாயிறு, ஜூலை 04, 2010

தமிழே ! என் தமிழே !!

(பதினைந்து வருடங்களுக்கு முன்,கடலூரில் ஒரு அந்திமாலைப் பொழுது. என் இல்லத்திற்கு திரு இறையன்பு I.A.S அவர்களும், மறைந்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்களும் வந்திருந்தனர்.
அப்போது நான் ஆந்திரா-ஒரிஸ்ஸா மாநில எல்லையில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய ஊரின் வங்கிக் கிளைக்கு மேலாளராய்
மாற்றலாகி, விடுப்பில் வந்திருந்த நேரம்.
புது ஊரில், யாரோடும் தமிழ் பேச வாய்ப்பில்லாத சூழலில், அதற்காக நான் தவித்த தவிப்பையும், சில சம்பவங்களையும் இருவரோடும் பகிர்ந்து கொண்டேன். உணர்வு பூர்வமான சிறு மௌனத்திற்கு பின் திரு.இறையன்பு அவர்கள், இந்த சம்பவத்தை அப்படியே கதை போல் எழுதுங்களேன் என்று சொன்னார். அந்த அன்புக் கட்டளையில் எழுதியது தான் இது. இதைக் கதை என்பதா? கட்டுரை என்பதா? நீங்களே சொல்லுங்களேன்!)

*****************

அன்றாட வாழ்க்கையில் நாம் சற்றும் கவனம் கொள்ளாத விஷயங்கள் சில,அவை இல்லாத சூழ்நிலை வரும் போது, எப்படித்தான் பூதாகாரமாய் நம் சிந்தையை ஆக்கிரமித்துக் கொள்கிறது? எப்படியெல்லாம் அதற்காக ஏங்கச் செய்கிறது?

இன்று அந்த நிலையில் தான் அய்யா நான்.....

வங்கிப்பணி எனும் நாடோடி வாழ்க்கையில் எதிலும் அதிகம் பற்றுக் கூடாது தான்..

அதை நான் பற்ற வில்லை அய்யா.. அது தான் என்னைப் பற்றிக் கொண்டது. என்ன என்கிறீர்களா?

தமிழ் அய்யா , தமிழ்! அந்தத் தேமதுரத் தமிழோசை கேட்காமல் தான் இந்த தவிப்பு.

முந்தைய இட மாற்றங்களில் கல்கத்தா,பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு சென்ற போது இந்த தவிப்பு இல்லை.அங்கெல்லாம் தமிழர்களும்,என் குடும்பமும் உடனிருந்த படியால் இப்படியொரு தமிழ் ஏக்கம் இல்லை போலும்.

இந்தமுறை மாற்றத்தில், இதம் தரும் மனை நீங்கி, தமிழ் வாசனையே இல்லாத, நெடுஞ்சாலை ஒட்டிய ஒரு ஆந்திர கிராமத்தில் வந்து விழுந்தேன். இங்கு எல்லோரும் “பச்சை”தெலுங்கர்களே. காதார தமிழ் கேட்க நான் ஏங்கும் ஏக்கம் மனதில் பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கிறது.

வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் சில நிமிடங்களுள் காதில் விழும் செலவுப் பட்டியலும்,என் சுய சமையலுக்கு கொடுக்கப்படும் குறிப்புகளும் தமிழில் சேர்த்தியில்லை.

அந்த செவ்வாய்க்கிழமை மாலை,ஒரு பெரும் ஆனந்தத்தை, லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தது. ‘தமிழ்ச்செல்வி’ என்ற பெயர் பலகையுடன்

நெடுஞ்சாலை ஓரம் நின்றிருந்த அந்த சரக்கு லாரியை கண்ட போது நான் கொண்ட பரவசம் இருக்கிறதே...

லாரியை நோக்கி ஓடினேன் .டிரைவரைத் தேடினேன்...

”எந்த ஊருப்பா நீ?”.... என் குரல் படபடத்தது.

“அட! தமிழா சார்? இது மதுர வண்டி சார்.. இம்புட்டு தொலவு வந்து என்ன சார் பண்றீங்க?”

“பேங்க் மானேஜர்ப்பா...உன் பேர் என்னய்யா?”

“நான் டேவிட் சார்.. இவன் கிளீனர் .பேரு சுடத்தண்ணி”

“சுடத்தண்ணியா? என்னய்யா இது பேரு?”

“ஆமாம் சார். அவன் பேரே அதான்.. எவன் வச்சானோ.. அனாதப் பொணம்’
‘அப்படி சொல்லாதய்யா... சின்னப் பையனைப் போய் ‘

‘இவனா சார் சின்னவன்? வெவரமானவன் சார். நம்பிடாத’

அருகிருந்த டீக்கடைக்கு அழைத்து சென்று இருவருக்கும் விருந்தோம்பல்.

‘அப்பாராவ்.. மூடு டீ வேயி நைனா”

‘டேவிட். பிஸ்கட் எடுத்துக்கய்யா’

டீக்கடை அப்பாராவுக்கு ஆச்சரியம். முதன் முதலாய் ரோட்டில் நின்று டீ குடிக்கும் இந்த மேனஜரைப் பார்த்து .

‘அப்புறம் சொல்லு டேவிட். மதுரை நிலவரம் எல்லாம் எப்படி?’

வேகவேகமாய் தமிழ் பேசித் தீர்த்துவிட துடிக்கிறது மனசு.
சரஸ்வதி சபதம் சினிமாவில் ஊமை சிவாஜிக்கு பேச்சு வந்ததும் வேகவேகமாய் தமிழில் அடுக்குவாரே அதுபோல...

‘வண்டி எங்கே போகுது டேவிட்?’

‘கல்கத்தா சார். ராத்திரி இப்படி ரோட்டோரம் வண்டிய நிப்பாட்டிட்டு விடிகாலையில் தான் சார் கிளம்புவேன்.இந்த தெலுங்கனுங்க ஓட்டல்ல சாப்புட்டு நவத்துவாரமும் எரியுது சார்.’

‘டேவிட். இன்னைக்கு வேணா என்னோட எடத்துல தங்கிக்குங்களேன் .ராத்திரி என்னோட சாப்பிடலாம்...’

‘ஐயோ சார்.. பெத்த ஆத்தா மாதிரி கேட்குறீங்க..சந்தோஷம் சார்.
உங்களுக்கு என்னாத்துக்கு சிரமம் சார். நீங்க வாங்கித் தந்த டீயே போதும். ஊட்ல போய் என் சம்சாரத்துகிட்ட சொல்வேன் சார். எனக்கு நம்ம ஊர்க்கார பேங்க் மேனேஜர் டீ வாங்கித் தந்தார்னு.’


எனக்கோ தனிமையைக் கொல்ல வேண்டும். தமிழில் பேச வேண்டும்.

‘மேல பேசாத டேவிட்.. கிளம்புன்னா கிளம்பு. எனக்கொரு கஷ்டமும் இல்ல... சும்மா வாப்பா.’

‘எங்க ஊரானா பேங்க் மேனேஜராண்ட நின்னு இவ்ளோ நேரம் பேச விடுவாங்களா? ரொம்ப மெனக்கெடுறீங்க சார்.”

“டிரைவர் அண்ணே! சாரு அய்யராட்டங்க்கீது. ராத்திரி கவுச்சி சாப்பிடலாம்னு சொன்னியே? –இது சுடத்தண்ணி.

‘எல பொறம்போக்கு! பொத்திக்கிட்டு வாடா... சரி சார். இவ்ளோ தூரம் என்னையும் மனுஷனா மதிச்சு கூப்புடுறீங்க . உங்க வீட்டுல ஒரு ஓரமா படுத்துட்டு கருக்கல்ல கிளம்பறோம் சார்.. ஊர் பேர் தெரியாதவன வெத்தில பாக்கு வச்சு கூப்புடுறீங்க. வீடெங்க சார்?’

‘லாரிய எடு டேவிட். இதே ரோடுல மூணு மைல் போகணும்.’

வண்டியில் ஏறினேன். லாரியின் உறுமல் கூட தமிழில் ஒலித்தது!

நான் இருந்த கெஸ்ட் ஹவுஸ் கொய்யா,சப்போட்டா,தென்னை,மா மரங்கள் இருந்த தோப்பின் நடுவே இருந்தது..பாரதி கேட்ட காணி நிலம் போல அங்கு அனைத்தும் இருந்தது, பாட்டுக் கலந்திட ஒரு பத்தினி பெண் நீங்கலாக ...

‘எம்மாம் பெரிய வீடு சார்.... என்ன சார் நீங்களே பூட்டத் திறக்குறீங்க? ஊட்ல அம்மா இல்லியா சார்?.. எங்கள சாப்பிட வேற சொன்னீங்க?.’டேவிடின் குழப்பத்தில் சாப்பாட்டுக் கவலை தொனித்தது.

‘நான் தனியாத் தான் இருக்கேன் டேவிட். நான் நல்லாவே சமைப்பேன் ராஜா. தைரியமாய் சாப்பிடலாம். மணி ஏழு தானே? எட்டரைக்கெல்லாம் சாப்பிடலாம்.’

‘சரி சார்.’ டேவிட் வீட்டை முழுவதும் துப்புரவாக கண்ணால் அளந்தான்.” எல்லாம் இருக்கு சார். ஆனா ஒண்ணுமே இல்ல”

இவன் டிரைவரா இல்லை பட்டினத்தாரா?

‘சார் நான் குளிச்சிக்கவா?’

‘ஜம்னு குளிப்பா.. சோப்பு அங்கியே இருக்கு.டவல் தரேன்.’

‘அய்ய..அதெல்லாம் வேணாம் சார். டேய் பன்னாட. வண்டில இருந்து என் லுங்கி,துண்ட கொண்டா’ சுடத்ததண்ணியை விரட்டினான்.

சிரித்துக் கொண்டேன். ‘உட்காரு டேவிட்’

தரையில் அமர்ந்தான்.

‘சார் ஒரு டி.வி ,ரேடியோ பொட்டி கூட இல்லாமயா இருக்கீங்க?’

‘என்ன விடு. உன்னப் பத்தி சொல்லு’

‘என்னப் பத்தி என்னா இருக்கு சொல்ல? ஸ்டீரிங் புடிச்சிகுனே பொறந்தேன். ராத்திரி பகல் பாக்காம ஓட்டிக்கினே இருக்கேன். என்ன நம்பி நாலு வயிறு இருக்கே சார்!’

‘ஓ.. சொல்லு’

‘நீங்க நெனச்சிக்கிட்டு இருக்குற மாதிரி நான் ஒண்ணும் உத்தமன் இல்லே சார். லாரிக்காரன் பண்ற தப்பு தண்டா ஒண்ணையும் நான் உடலே சார் . எங்க ஆத்தா ரோதன தாங்காமத் தான் சரோஜாவ கட்டுனேன் சார். மாட்டோட கண்ணுகுட்டியா ரெண்டு பொட்ட புள்ளைங்களயும் ஓட்டியாந்தேன் சார்’

‘புரியற மாதிரி சொல்லுப்பா’

‘சரோஜா ஏற்கனவே கண்ணாலம் ஆனவ. புருஷன் ஆக்சிடன்ட்ல போய்ட்டான். சின்னப் புள்ளைங்களோட பக்கத்து விட்ல இருந்தா.
எங்க ஆத்தாவுக்கு இளகின மனசு சார். என்னிய கரைச்சு அதுக்கு கட்டி வச்சுடுச்சு சார். அதுவும் நல்ல பொண்ணு தான். என் பங்கா இன்னும் ரெண்டு பெத்துக்குனோம்’ சிரிக்கிறான்.

‘அட.. பெரிய கதையால்ல இருக்கு? சரி. போய் குளி.’

குக்கரில் உலை வைத்தேன். வெங்காயம்,கத்தரிக்காய் போட்டு சாம்பார், உருளைக் கிழங்கு கறியும் சமைத்து,அப்பளம் பொறித்து,
தயிரை மூன்று பேருக்குமாய் மோராக்கி.... சமைக்கும் போதே இருவருடனும் ஊர்க்கதை பேசி......

எதற்காக இப்படி பேசிக் கொண்டிருக்கிறேன்? யார் இவர்கள்?
டேவிடுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

சாப்பிட உட்கார்ந்தோம்.

“நெசம்மா சொல்றேன். ரொம்ப ருசியா இருக்கு சார். உங்களுக்கு நீங்களே சமைச்சுகிட்டு ஒண்டியா எப்புடி சார் சாப்பபிடுறீங்க?’

‘வேறே வழி? இந்த ஊர் ஓட்டல்ல காரம் ஜாஸ்தி. எனக்கும் நவத்துவாரம் இருக்குதேப்பா!’

கண்ணுல நீர் முட்ட டேவிட் சிரித்தான். ‘நம்ம கிட்ட இருந்து நவத்துவாரத்த கத்துக்கிட்டீங்க போல ?’.

‘உன் வருமானத்துல சந்தோஷமா இருக்கியா டேவிட்?’

‘சந்தோஷம் வருமானத்துலயா? மனசுல தான் சார். இந்த நிமிட்டு நான் ராஜா சார். பெரிய பதவில இருக்கிற மேனேஜர் எனக்காக சமைச்சு வயிறார போட கர்த்தரு இன்னிக்கு ஆசீர்வதிச்சிருக்குறாரு. நாலு சக்கரத்துக்கு மேல என் வாழ்க்கை சார். எப்ப வேணும்னாலும் எதுவும் ஆகலாம். முன்னமெல்லாம் ரோட்சைட்ல வண்டிய நிப்பாட்டிட்டு கெட்டதுங்களோட கொஞ்ச நேரம் குஜாலா இருக்கிறது தான். சம்சாரத்துக்கு சத்தியம் பண்ணி குடுத்தேன்... கருமத்த உட்டேன் சார். ஒரு வாரம்,பத்து நாள் இப்படி ஊர் சுத்திட்டு வீட்டுக்கு போய் பிள்ளைங்கள பாக்கிறப்போ
மனசு பொங்கி வழியும் சார். வீட்டுக்கு எப்போ போறோம்னு மனசு அடிச்சிக்கும் சார். உனக்கு எத்தினி புள்ளைங்க சார்?’

‘எனக்கா? ரெண்டு பசங்க, ஒரு பொண்டாட்டி.”

டேவிட் பெரிதாக சிரிக்கிறான். இவன் சிரிப்பில் ஒரு தோரணை இருக்கிறது. ‘என்ன சார் ஒரு பொண்டாட்டி? பின்ன பத்தா கட்டுவாங்க? என்னக் கேட்டா ஒண்ணே வேஸ்ட்டு சார். நம்ம பாட்டன் கல்யாணம் கட்டுனான். அப்பன் கட்டுனான். நம்மளும் கட்டுனோம். நம்மள மாதிரி நம்ம பிள்ளையும் கட்டுவான். அவன் கட்டலன்னா நாம் தான் உடுவோமா?’

‘அடேயப்பா! அப்பிடிப் போடு!

‘கண்ணாலம் கட்டாம இருந்துட்டா பரவாயில்ல. கட்டினப்புறம் இல்லாம இருக்கிறது கஷ்டம் சார்.. சம்சாரத்துக்கிட்ட ஸ்பெசலா ஒண்ணும் இல்ல. பழகிடுறோம் பாத்தீங்களா..அந்த பாவம் தான்.
கூடவே இருக்கறச்சே அவ முகத்தக் கூட பாக்காம நம்ம சோலிய பாத்துகிட்டிருப்போம். நாலு நாள் அவ இல்லையின்னா கையொடிஞ்சாப்புல ஹோன்னு ஆயிடும் சார்..எல்லாம் நம்ம மனசு தான் சார்.’

‘என்ன சொல்ற டேவிட்? உன் மனசுக்கு கொடுக்கிற முக்கியம் அந்த மனுஷிக்கும் கொடுப்பா.’

‘சார். நான் உங்களை மாதிரி படிச்சவன் இல்ல...ஆனாலும் சொல்றேன். எல்லாம் மனசு தான் சார். லாரி சூட்டுல உட்கார முடியாம எரியும் பாரு.... அப்ப வண்டிய புளிய மரத்துல ஏத்திடலாம்னு தோணும். ஒரு வாரம் வண்டிய எடுக்கலேன்னு வச்சிக்கோ,அப்போ ஸ்டீரிங் புடிக்க கையெல்லாம் நமநமங்கும்.’

‘அப்போ உனக்கு லாரியும் பொண்டாட்டியும் ஒண்ணு தான் இல்லையா?’

‘எனக்கு தெரிஞ்ச ஞாயம் சார். எல்லாமே நம்ம மனசு தான்.
ஆனா ஒண்ணு.... எரியுதேன்னு லாரியையும் புளிய மரத்துல ஏத்த மாட்டேன்...ஆளப் புடுங்குதேன்னு சம்சாரத்தையும் விட்டுற மாட்டேன். என்ன சார் நான் சொல்றது? அய்யாவுக்கு தெரியாத ஞாயமா? உங்க புண்ணியத்துல இந்த ராத்திரி கால் நீட்டி படுக்கிறேன் சார். குட்நைட்டு...’

படுத்தவன் ரெண்டு நிமிஷத்தில் தூங்கிப் போனான். முன்னமே படுத்துவிட்ட சுடத்தண்ணியின் உறுமல் குறட்டைக் கூட எனக்கு எரிச்சலூட்டவில்லை.

தூக்கம் என்னுடன் கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருந்தது. என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு? எந்த தேவையோ நிர்பந்தமோ இன்றி இவனை அழைத்து வந்தது வாயார தமிழ்ப் பேச வேண்டி தானே?

இவனைத் தமிழில் பேசச் சொன்னால், வாழ்க்கையை அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்?

ஹும்... எல்லாவற்றுக்கும் நம் மனசு தானே காரணம்?



*******

வியாழன், ஜூலை 01, 2010

தேடல்

வசந்தம் விடை பெற்று விட்டது
கண்மணி!
அதன் சுவடுகளைத் தேடி
அலைவதொன்றே சுகமாய் ........
நினைவிருக்கிறதா ?
இந்த சரக்கொன்றை மரக்கூட்டம்
பூத்து விரித்த மலர் பாதையில்
மௌனித்திருந்தே
நாம் கரைத்த யுகங்களை ?
உன்
கண்ணோரத்தில் ஈரம்.....
கனியதழில் ஈரம் ....
நெஞ்சில்..... நினைவில் ......
நெகிழும் காற்றில் ....
எங்கும் ஈரம் ...
நினைவிருக்கிறதா ?
இன்றோ ,
உலைக்களனாய்
உள்ளம் கக்கும் அனல் கங்குகள் .
ஈரம் இந்நாளில் இறந்த காலமடி!
நான்
இப்போதும் மௌனித்திருக்கிறேன்.
தனிமையில்
வசந்தத்தின் சுவடுகளைத்
தேடிக்கொண்டு....
வசந்தம் மீண்டும் வரலாம் ,
ஆனால் நீ?

1985

மயக்கம்

மனதைத் தொலைத்து
நினைவைத் தேக்கி,

நினைவை ஈந்து
காதல் கொண்டு ,

காதல் தொலைத்து -
வேதனை வாங்கி

மீண்டும்

காதல் துறந்து
நினைவை மீட்டு,

மனதைத் தேடி
மயங்கும் வாழ்வு

முத்தம்

அதர ஏர்கள்
உழுத கன்னம் ...
மதுர வயலாய்
காதல் விளைய
இதர வேர்கள்
விட்டுப் போகும்...


இன்னொரு முத்தம்

என் கன்னப் பூங்காவில்
முத்தப் பூ மலரும் நேரம்...
அன்பே !
உதடுகளைப் பிரிக்காதே!

(மார்ச் 1983)

பிரார்த்தனை

ஆண்டவனே !
வாழையிலையில்
அன்னமும் புளிக்குழம்பும் இட்டு
வயிரடைக்கத்தான் வழியில்லே.

வெத்தலையில்
சுண்ணாம்பும் பொகயலையும் வச்சு
வாயடைக்கவாவது வழி செய்யேன்.

(ஜூலை 1983)

யுகங்கள் கடந்து...

மொழிகள் பிறப்பதற்கு முன்னமே
நாமிருவரும் பிறந்து விட்டோம்.
இன்னமும்,
மௌனத்தைக் கண்டு என்னடி பயம்?

உன் இமை முடிகளின் எண்ணிக்கை
நானறிவேன்.
என் கண்களை விடவா வாய்க்குத் தெரியும்?
இன்னும் மௌனத்தைக் கண்டு என்னடி பயம்?

பேசியதெல்லாம் போதும்.
சின்ன சின்ன வார்த்தைகள்.....
காதல், அன்பு, பாசம்.....
யாருக்கிவை வேண்டும்?


மெல்லத்தான் என் முகவாயை
கைகளில் ஏந்திக் கொள் .
என் முகத்தில் விழும் உன்
குழல் கற்றைகளை ஒதுக்காதே.

பார்க்க முடிந்தால்
என் கண்களைப் பார்.

பேதைப் பெண்ணே !
இன்னும் மௌனத்தைக் கண்டு என்னடி பயம்?


( ஆகஸ்ட்1982)

தலையணைத் தொட்டில்

அவள்
கடிதத்தில் மட்டுமே
அவனைக் கலந்ததற்கு

நெஞ்சிலே கருவுற்று
கண்ணால் ஈன்றாள்
இருதுளி கண்ணீர்.

இவ்விரட்டைக் குழந்தைகளை
இட்டதோ
இந்தத் தலையணைத் தொட்டிலில்.

தபால்கார புரோகிதரே !
எவ்வளவு தாமதமாய் வந்திருக்கிறீர்?

( மார்ச் 1981)

நீ சொன்ன பிறகுதான்!

சடுதியில் நெகிழ்ந்த
சந்தர்ப்ப ஆடையை
சரியாது காத்த கை
சாச்வதமென நிலைக்க,
சங்கடத்தில் நெளியும்
சலித்த மனது .
சிந்திக்க முயன்றது
நீ சொன்ன பிறகுதான்


(ஜனவரி 1978)

மின் விசிறி

நீ
விட்டத்தில் பூத்த இரும்புப் பூ.
செயற்கையின் சிசுவே !
நீ வந்த பின்னர்
நாங்கள் வேப்பங்காற்றை மறந்து விட்டோம்


ஓய்ந்திருக்கும் போது தென்படும்
உன் இறக்கைகளின் அழுக்கை
சுழலும் போது சாதூரியமாய்
மறைத்து விடுகிறாய்..
இதயத்தை மறைத்து கண்களை சுழற்றும்
கயமையைப் போல...

நீ புழுக்கத்தில் அமர்ந்து
தென்றலைப் பாடும் கவிஞன்.

இரண்டுக்கு மூன்றாய் சிறகுகள் இருந்தும்,
நீ பறக்கத் தெரியாத இரும்புப் பறவை.

பலர் தூங்கி விட உதவும் நீ
சிலர் தூக்கிலாடவும் துணை புரிகிறாய்.

உன் வேகத்தை கட்டுப் படுத்த கற்ற மனிதர்கள்,
தம் மோகத்தை மட்டுப் படுத்த முயலாததற்கு
நீயோர் வெட்கம் கேட்ட சாட்சி !

(ஜூலை 1984)

என் மகன்

மலரைப் படைத்த கையோடு
உன்னையும் வடித்து
மானுடம் கண்டிடா இன்பத்தை
நீயாக அமைத்த இறைவன்,
என்னிடம் ஒரு வார்த்தை
சொல்லியிருந்தால்...
என் சபலமும் இச்சையும்
உன்னை உருவாக்க
ஒப்பியிருப்பேனா??

எழுதிய நாள் 16.01.1983