புதன், அக்டோபர் 28, 2015

காதல் விலங்கு

    


நான் ரசிக்க வேண்டிய பாடல்களை
நீயே தெரிவு செய்கிறாய்

நான் உடுக்கவேண்டியிருப்பது,
நீ சுட்டும் ஆடைகளைத் தான்.

என் உணவும் உற்சாகமும் கூட
நீ கைகாட்டியவை தான்.

நீ உள்ளிழுக்கும் சுவாசத்தை
நான் வெளிவிடவேண்டும் என எதிர்பார்க்கிறாய்

என்னையன்றி வேறோர் நினைப்பில்லை உனக்கு.
காதல்காதல் என்றே என்னைக் கட்டிப்போடுகிறாய்.

உணரச் சொன்னால் உணர்வதும்
புணரச் சொன்னால் புணர்வதுமாய்
போய்க் கொண்டிருக்கிறது என் காலம்.

என் கனவிலும் கவிதைகளிலும்,
உன் சாயம் ஒட்டிவிடாதிருக்க
மெனக்கெடுகிறேன்.

ஆபரணம் என்றுதான் உன்னை அணிந்தேன்.
தளையானாய் என்றிடத் தயக்கமாய் இருக்கிறது.

இதைச் சொன்னேன் என்றே விதிர்த்து,
என்னைக் கையொதுக்கி விடாதே.

தோளில் வளர்த்த கிளி தூரப் பறப்பதெங்கனம்?
பட்டியைப் பிரித்த கண்,
பார்வைக் கூச்சம் கொள்ளாதோ?

இருந்துபோவோம் இப்படியே..
எல்லாமே காதலினால் தானே?நவம்பர் 1990
(என் பரணிலிருந்து பரல்கள்)

திங்கள், அக்டோபர் 26, 2015

கவிக்கோ அப்துல் ரஹ்மான்


தமிழிலக்கியக் காட்டில் கூவித்திரியும் கவிக்குயில்கள் பல.
அந்தக் குயில்களுக்கு மத்தியில் தனித்து ஒலிக்கும் ஒரு கவிக்குரல். 
எளிமை அதன் சாரம்.
குறியீடுகளால் கூவிக் குவித்தது கவிதைகளை. 

அந்தக்குயில் அப்துல் ரஹமான். ‘கவிக்கோ’ என்ற பட்டத்திற்கு சந்தேகமற உரியவர். புதுக்கவிதைகள் கோலோச்ச எழுந்தபோது மரபின் வாசிப்பனுபவத்தை, வார்த்தைகளின் வார்ப்புருவை உள்வாங்கி தனிப் பாணியிலே சொல்லப் பட்டவை இவர் கவிதைகள்

எழுபதுளின் ஆரம்பத்தில் புதுக்கவிதை இலக்கிய முறையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டது என்றே சொல்லலாம். மரபுக் கவிதைகளின் தாக்கத்தை சற்றே பின்தள்ளி புதுக்கவிதை புழக்கத்தில் வந்தது. 
பல முயற்சிகள் முன்வைக்கப் பட்டன. சொல்லவந்ததை கவிதைகள் உரத்துச் சொல்லின. மரபின் வேலிகளை பிய்த்தெரிந்து பாய்ச்சல் காட்டின.
வாசகனின் உணர்வை நோக்கியே பேசின. 
மு.மேத்தா நா.காமராசன், தமிழன்பன்,சிற்பி,மீரா, பிரமிள்,ஞானக்கூத்தன் முதலானோர் நல்ல பங்களிப்பை செய்தனர். இன்றுவரை அவர்கள் கவிதைகள் ‘புது’க்கவிதையாகவே இருக்கிறது. 
காலம் அவற்றை களிம்பேற்றவில்லை .

வானம்பாடிக் கவிஞர்கள் இயக்கமாய் உருவானபோது அப்துல் ரஹ்மானின் கவிதைகள் அடையாளம் காணப் பட்டது. மரபை நன்கு உணர்ந்த கவிஞன் அப்துல் ரஹமான். மரபின் சொற்கட்டும் அடுக்கும் இயல்பாகவே இவர் கவிதைகளில் மிளிர்ந்தன. சொல்லவந்ததை உணர்த்தியபின்னும் இவரின் வரிகள் மனதில் ரீங்காரமிடும். கவிதையின் படிமங்களில் லயித்து வாசகன் உணர்வுகள் சுகம் காணும்.

பிறமொழி இலக்கிய வகைகள் சிலவற்றை தம் கவிதைகளில் முனைந்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் இவர் பாடல்களில் உண்டு. 
ஹைக்கூ, கஜல் கவிதைகள் பலவும் எழுதினர். ஆய்வு கட்டுரைகள், நூல்கள்,சொற்பொழிவுகள் கவியரங்கக் கவிதைகள் ஆகிய பல தளங்களிலும் ஈடுபட்டார். 
தாகூர்,ஷெல்லி, கலீல் கிப்ரான்,குன்ட்டர் கிராஸ், இக்பால், மிர்ஸா காலீப் போன்ற கவிஞர்களின் படைப்புகளில் ஈடுபாடு கொண்டவர்

அரபி, உருது, ஹிந்தி ஆங்கிலம் என பல மொழிகளிலும் தேர்ச்சியுள்ள கவிக்கோவின் கவியுள்ளம், ஒரு தேனியைப் போன்றே அந்த மொழிவனங்களின் இலக்கியப்பூக்களில் தேன்மாந்தின.

பகுத்தறிவுவாதியாய் தன்னை முன்னிறுத்தியவராய் இருந்தபோதும், கவிக்கோ ஆழ்ந்த இறைநம்பிக்கை உடையவர். தத்துவக் கவிதைகள் பல எழுதியிருக்கிறார்.

                           (பூபாளத்திற்கொரு புல்லாங்குழல் கவிதைநூல் வெளியீட்டு விழா- மாவட்ட
                    ஆட்சியாளர் திரு பிராபகர ராவ் , அடுத்து திரு.இறையன்பு, உரையாற்றும்
                    கவிக்கோ மற்றும் அடியேன் (கருப்பு சட்டையுடன்)

வருடம் 1991 என நினைக்கிறேன். என் அன்பு நண்பர் வெ. இறையன்பு அவர்களின் முதல் கவிதைத் தொகுப்பை வெளியிட நண்பர்கள் ஏற்பாடு செய்தோம். அந்தக் கவிதைநூலை வெளியிட கவிக்கோ அவர்களை அழைத்திருந்தோம். ஒரு மாலைநேரம் விழா இருந்தது. அதற்காக கடலூருக்கு வந்த அவருடன், ஒரு பகல்முழுதும் கவிதை இலக்கியம் பற்றி தனியே விடுதியறையில் பேசிக்கொண்டிருந்தது, எனக்கு வாய்த்த மேன்மையான தருணங்களில் ஒன்று. அந்த சமயம் மிகுந்த உற்சாகத்திலிருந்தார். என் சில கவிதைகளை சிலாகித்தது பரவசமளித்தது. சிலேடையான சொல்லாடலும், மதுரைக்கே உரிய மெல்லிய நையாண்டியும் அவர் பேச்சில் கண்டேன். கவிதைகளின் சொற்சிக்கனம் பற்றிய அவரின் வார்த்தைகளை இதயத்தின் ஓரத்தில் எழுதி வைத்துக் கொண்டேன். சூஃபி இலக்கியம் பற்றி ஒரு தெளிவையும் ஆர்வத்தையும் ஏற்ப்படுத்தினார். விழா முடிந்து ஊர் திரும்பியவர் நன்றிபாராட்டி எனக்கு கடிதமும் எழுதியிருந்த அவரின் பண்பு நெகிழச் செய்தது.

கவிஞர் அரசியல் சார்புநிலை எடுத்தவர். தி.மு.க ஆதரவாளர். தனக்கு வாய்ப்பளிக்கப் பட்ட பல பதவிகளை ஒத்துக் கொள்ளாதவர். எனினும் கடந்த ஆட்சியில் தமிழ்நாடு வக்ப் வாரியத் தலைவர் பொறுப்பை வகித்தார். அதை தன் இனம்சார்ந்த மக்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பாக ஏற்றார்.

பால்வீதி, நேயர் விருப்பம், பித்தன்,ரகசிய பூ, பறவையின் பாதை, சொந்தச் சிறைகள்,சுட்டுவிரல்,விதைபோல் விழுந்தவன்,பாலை நிலா போன்ற பல கவிதை நூல்கள என நாற்பதுக்கும் மேற்ப்பட்டவை வெளியாயிருக்கின்றன.

தமிழன்னை விருது, கலைமாமணி விருது, ஆலாபனை கவிதைத் தொகுதிக்காக1999ல் சாகித்ய அகாடமி விருது போன்ற பல விருதுகள் இவரை வந்தடைந்தன.

‘அம்மிக் கொத்த சிற்பி எதற்கு?’ என்று கவிக்கோ திரைப்பாடல்கள் எழுதும் வாய்ப்பை மறுதலித்ததும் , ‘சிற்பிக்கு அம்மிகொத்தக் கூட தெரிந்திருக்க வேண்டும்’ என  கவிஞர் வைரமுத்து ஆற்றியதாய்க் கூறப்படும் எதிர்வினையும் அந்நாள் இலக்கிய வம்புகளில் ஒன்று!

நான் மிகவும் ரசிக்கும் அவரின் ஒரு வரிக் கவிதை ஒன்று உண்டு .

தலைப்பு : திருக்குறள்
கவிதைவரி : மும்முலைத் தாய்.

கவிக்கோவின் கவிதை வரிகள் சில:

ஆன்மாவின் விபச்சாரம்
.....................
அரும்பிய துருவ மீன்
அதனை நோக்கியே
திரும்ப வேண்டிய
திசைகாட் டியின்முள்
மின்மினிக் கெல்லாம்
மேனி திருப்பினால்
கப்பல் எப்படிக்
கரைபோய்ச் சேரும்............
===========

சிலப்பதிகாரம்
பால்நகையாள் வெண்முத்துப்
பல்நகையாள் கண்ணகிதன்
கால்ககையால் வாய்நகைபோய்\
கழுத்துநகை இழந்தகதை.

காமத்துப் பால் 

கடைப்பால் என்றாலே
கலப்புப் பால்தான்

முதுமை

முதுமை
நிமிஷக் கரையான்
அரித்த ஏடு

இறந்த காலத்தையே பாடும்
கீறல் விழுந்த இசைத்தட்டு

ஞாபகங்களின்
குப்பைக் கூடை

வியாதிகளின்
மேய்ச்சல் நிலம்.......
..................
உயிர்களுள் நான்
ஆய்தம் எனக்காட்ட
நடக்கும் பாதையெல்லாம்
காலோடு கோல்சுவடு.

மறுப்பதுபோல் தலையாட்டம்
வாழ்வையா?
மரணத்தையா?.........
............................

முதுமை
போதிமர நிழல்தான்
ஆனால்
சிலர்தான் இங்கே
புத்தர்களாகிறார்கள்
பலர்
உறங்கிவிடுகிறார்கள்......

----------------- இன்னொரு கவிதையில்,

பிருந்தாவனமெங்கும்
செவிகள் பூக்க
சுவாசத்தை ராகமாக்கி
ராதை உன்னில்
புல்லாங்குழலாகி இருக்கிறாள்.”

                                               என்று பால்வீதியில் பரவசம் காட்டுகிறார்.

“வருடம் தவறாமல்
குழந்தைகள் தினத்தைக்
கொண்டாடுகிறவர்களே!
தினங்களைக் கொண்டாடுவதை
விட்டு விட்டுக்
குழந்தைகளை எப்போது
கொண்டாடப் போகிறீர்கள்?
                                            என்ற அவரின் ஆதங்கத்தைப் பாருங்கள்.இன்று அவருடைய பவளவிழா சென்னையில் விமரிசையாக நடந்து வருகிறது.

ஒரு உன்னதக் கவிஞனின் சில கவிதைகளைத் தேடித் படியுங்கள். அவர் இன்னமும் பலகாலம் வாழ்ந்து கவிதைகளை அள்ளித்தர ஆசீர்வதிக்க இறைவனை இறைஞ்சுகிறேன்.

சனி, அக்டோபர் 24, 2015

குழந்தை வளர்ப்பு


சிறுவனாயிருந்த தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியிலிருந்து வீடுவந்ததும், அவருடைய பள்ளிஆசிரியை கொடுத்துவிட்ட கடிதத்தை அம்மாவிடம் நீட்டினார். 

‘டீச்சர் என்னம்மா எழுதியிருக்காங்க?’ அன்று ஆவல்மேலிடக் கேட்ட எடிசனை கண்ணில் நீர் மல்க கட்டித்தழுவியபடி அந்தத் தாய் சொன்னாள்:
“கண்ணே! நீ ரொம்பவே பெரிய மேதையாம் ! உனக்குப் பாடம் எடுக்கத் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் உங்கள் பள்ளியில் யாரும் இல்லையாம். எனவே உன்னை நம்வீட்டிலேயே வைத்து நன்கு கற்றுக் கொடுக்கவேண்டுமாம்!” என்றாள்.

வருடங்கள் உருண்டோடின. எடிசனின் தாயும் மறைந்தார். உலகின் மிகப் பெரிய சாதனையாளராய், புகழ்வாய்ந்த கண்டுபிடுப்புகளின் நாயகனாய் எடிசன் மாறியிருந்தார்.

ஒருநாள், பழையபொருட்கள் கிடந்த வீட்டுமூலையில் எதையோ அவர் தேடிக் கொண்டிருந்தபோது’ மடிந்துகிடந்த  கடிதமொன்றை கண்ணுற்றார். அது அவர் பள்ளிஆசிரியை எழுதியிருந்த கடிதம். அதை ஆவலுடன் பிரித்து படித்தபோது அதில் எழுதியிருந்தது என்ன தெரியுமா?
“உங்கள் குழந்தை சித்தஸ்வாதீனம் குறைவாக உள்ள குழந்தையெனத் தோன்றுகிறது. இனிமேல் அவனை மீண்டும் எங்கள் பள்ளிக்கு அனுப்பவேண்டாம்.”

பலமணி நேரம் அந்த தூசுபடிந்த மூலையிலே முடங்கி அழுதபடி இருந்த எடிசன், அன்றைய தினம் தனது நாட்குறிப்பில் இவ்வாறு எழுதினர்.
“தாமஸ் ஆல்வா எடிசன் எனும் மூளைவளர்ச்சி குன்றிய மகனை, இந்த நூற்றாண்டின் மேதையாய் மாற்றினாள் ஒரு வீரத்தாய்”

இதல்லவா நேர்மறை சிந்தனை !!


 மேன்மையான குழந்தை வளர்ப்பைப் பற்றி அந்தத் தாய் நமக்கெல்லாம் தந்த செய்தி இது அல்லவா?  

படம்: நன்றி கூகிள்

வெள்ளி, அக்டோபர் 23, 2015

காலணிகளும் தடங்களும்
தடங்களை விட்டு செல்லச் சொன்னால்,
நீங்கள்
காலணிகளை விட்டுச் செல்கிறீர்கள்.

காலணிகள் உங்களுக்கானவை.
தடங்களோ தொடர்ந்து வருபவர்களுக்கு.

காலணிகளை விட்டுவிட்டு
நீங்கள்
சென்ற சுவடே தெரியவில்லை.

பாதை காட்ட தயக்கமா?
விருப்பமில்லையா?
அன்றி,
இவற்றை வழிபடுவோம் என நினைத்தீர்களா?

உங்களைத் தொடர்ந்தினி ஆவதொன்றில்லை.

உங்கள் இருப்பை,
இந்தக் காலணிகள் உணர்த்தும் என எப்படி நம்பினீர்கள்?
இவை காலவாக்கில் நிறமிழந்து உருவழிந்து விடும்.

இனி பயணத்தின் திசையை நாங்களே வகுப்போம்.
புதிய தடங்கள் உருவாகும்.
சுவடுகளில் காலணிகளின் கர்வம் எஞ்சாது.

கொண்டு செல்லுங்கள் உங்கள் காலணிகளை.

அவை  
உங்களுக்கேயானவை.


புகைப்படம்: ஹரிஹரன் சங்கர்


செவ்வாய், அக்டோபர் 20, 2015

கேள்விகள்வரிசைகட்டி நின்றன என் கேள்விகள்.
கேள்விகளின் கூர்மையோ,
ஞானத்தை ஊடுருவும் என்றார்கள்.

முடிவுறாத என் கேள்விகளெல்லாம்
சிலுவைகளாய் அறையப்பட்டிருக்கின்றன.
மாற்றிக் கேட்கின்ற சாத்தியமின்றி.

விளக்கம் தென்படா படுகைகளில்,
ஆழ்ந்தே கிடக்கின்றன ஒற்றைக்கால் கேள்விகள்.

இன்றெனக்கு பதில்கள் கூடத் தேவையில்லை.
தளைகளின்றிக் கிடந்தால் போதும்.

ஞானம் கிடைத்தால் விடுதலைப்பேறு என
யார் சொன்னார்கள்?

சுத்தியல் சொல்லும் பதில்கள்
சுகமானதாய் இருப்பதில்லை.

புதன், அக்டோபர் 14, 2015

வாழ்வின் விளிம்பில் (சிறுகதைகள் )


எது சிறுகதையாவது எனும் கேள்வி சற்றே சிக்கலானதுதான்., ஒரு சம்பவத்தை, அல்லது கதைமாந்தரின் ஒருநேரத்து உணர்வை, ஒரு சிக்கலை, ஒரு தெளிவை, ஒரு முடிவை சொல்லிச்செல்லும் எழுத்தே சிறுகதை என உருப்பெற்று விட்டது. சிறுகதையில் கதை மேலதிகமாய் நீட்சி பெறுவதில்லை. ஒரு நாவலுக்கான பெருங்கதையின் விவரிப்பை நான்கைந்து பக்கங்களில் சுருக்கி சொல்லும் வடிவக் குறுக்கமும் சிறுகதையாவதில்லை.

தமிழில் சிறுகதைகள் ஒரு முக்கிய இலக்கியஆக்கமாய் முழுமை பெற்றுவிட்டதென்றே சொல்லலாம். கடந்த ஏழெட்டு சதாப்தங்களில் சிறுகதை படைப்புகள் பலநிலைகள் கண்டு முன்னேறி வந்திருக்கின்றன. வெகுஜனப் பத்திரிக்கைகள் பெரும்பாலான சிறுகதைகளின் எல்லைகளை வகுத்து விட்டாலும், சிற்றிதழ்கள் பலவித உத்திகளை முயற்சி செய்யும் களனாய் வாய்த்திருந்தன. இணையமோ,வெள்ளமடைகளைத் திறந்து விட்டது எனலாம். எல்லாமும் சிறுகதைகளாய் வடிக்கப்படுகின்றன. ஆனால் வடித்ததெல்லாமும் சிறுகதை ஆவதில்லை. இந்த ஆராய்ச்சி விரிக்கப் பெருகும்ஆதலின், இந்த அளவில் நிறுத்தி மேலே தொடருவோம்.

திரு ஜி.எம். பாலசுப்ரமணியம் அவர்கள் வலையுலகில் நன்கு அறிமுகமான பதிவரும் எழுத்தாளரும் ஆவார். வயதுக்கும் படைப்பூக்கத்துக்கும் சம்பந்தமில்லை என்பதை நிரூபித்து வரும் 76 வயது இளைஞர். கதைகள், அனுபவப்பகிர்தல்கள், கவிதை, ஆராய்ச்சி, ஆன்மிகம் எனப் பயணிக்கும் இவரின் பதிவுகள் வேகமும், பிடிக்கடங்கா திமிறலும் கொண்டவை. அதொன்றாலேயே தம் வாசகர்களை ஈர்ப்பதையும் தக்க வைத்துக் கொள்வதையும் நிகழ்த்துகிறார். ஒளிவுமறைவின்றி தன் எண்ணத்தையும் எதிர்பார்ப்பையும் பதிவு செய்கிறார். இவர் கருத்தை  மறுதலிக்கலாம். ஆயினும் இவரை வாசித்தலை தவிர்க்கமுடியாது.
ஜி.எம்.பி அவர்களின் சிறுகதைத் தொகுப்பான ‘வாழ்வின் விளிம்பில்’ அண்மையில் வெளிவந்த படைப்பாகும்.

இந்த விமரிசனமும் சற்றே தாமதம் தான். முன்னரே எழுதிவைத்த என் அணிந்துரை, ஒரு சிறுகதை ஆராய்ச்சிக் கட்டுரையாகவே விரிந்து விட்டபடியால் அதை பிறிதொரு தருணத்திற்காக பக்கலில் வைக்க முடிவு செய்தேன். இவரென்ன அடுத்த புத்தகம் போடாமலா இருக்கப் போகிறார்? அப்போதைக்கிப்போதே அதை பத்திரமாய் பதுக்கி வைத்தேன்! இந்தக் கட்டுரையை இந்தப் புத்தகத்தின் இரண்டாம் பதிப்புக்கான மதிப்புரை என்றே கொள்ளலாம்.

இந்தக் கதைகள் பத்திரிக்கைகளில் வெளியானவை அல்ல. சொன்ன விதத்திலும், சொல்லப்பட்ட பொருளிலும் தனக்கான வடிவை தாமே அமைத்துக்கொண்ட கதைகள். இவற்றை, சம்பவப் பதிவுகள்... எண்ணச் சிதறல்கள்...ஒரு நோக்கு.... உள்ளொளிப் பயணம்.... உணர்ச்சி வெளிப்பாடு.... என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். முந்திரி,திராட்சை, கல்கண்டு,பாதாம்,கர்ஜூரம் என்று பலதும் கலந்துகட்டிக் கொடுத்தால் சாப்பிடமாட்டோமா என்ன?

இந்தத் தொகுதியில் மொத்தம் பதினாறு கதைகள். எழுத்தாளர் உருவாக்கியிருக்கும் இந்தக் கதைவனத்தில் பலதருக்கள், பலபூக்கள், பலவாய்த் தாவரங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஆயினும் அது வகையொழுங்கு பூண்ட நந்தவனமாய் இராமல், அந்த மீறலே கூட ஒரு ஒழுங்காய் காணப் பெறுகிறது.

‘வாழ்வின் விளிம்பில்’ கதையில் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் ரங்கசாமியின் சஞ்சலங்கள் சீராக பதியப்பட்டிருக்கிறது. முடிவை ஊகத்துக்கு விட்டபடி முடிகிறது. இந்தத் தொகுதியின் சிறந்த படைப்பாய் இதையே கொள்ளலாம்.

‘கேள்வியே பதிலாய்’ எனும் கதையில் வரும் அம்மாஜி போன்ற கதாபாத்திரத்தை நாம் பலஊர்களிலும் பார்க்கலாம். பாத்திரப் படைப்பில் ஒரு கூர்மை. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பது சொல்லாமல் சொல்லப்படுகிறது.
‘ஏறி வந்த ஏணி’யும் இன்றைய குடும்பங்களின் கசப்பான யதாத்தத்தை பேசுகிறது. தலைப்பே உணர்த்தும் ஒரு குடும்பத்தலைவனின் நிலை, குடும்ப நலனுக்காக  அவன் மேற்கொள்ளும் அனைத்துக்கும் கிடைக்கும் அங்கீகாரத்தை பேசுகிறது. அந்த வெறுமையின் கசப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது.

‘மனசாட்சி’கதை, உடற்கிளர்ச்சி தோற்றுவிக்கும் காதல் எந்த திசையில் பயணிக்கும் என்று படம்பிடித்து காட்டுகிறது.. ஒரு வழக்கமான கதை.
இளமையின் ஏழ்மை மனத்தளவில் பலருக்கும் கடைசிவரை இருக்கத்தான் செய்கிறது. அதிக சம்பாத்தியம் கூட அதை மாற்றுவதில்லை என்கிறது ‘அனுபவி ராஜா அனுபவி’. 
ஒரு சராசரி மனிதன் விஸ்வரூபம் எடுக்கும் தருணம் ஒன்றை அழகாகச் சொல்லும் ‘இப்படியும் ஒரு கதை’. கச்சிதமான உருவாக்கம்.
பெண்களுக்கான அநீதி சமுதாயத்தில் இன்னமும்கூட நீங்கவில்லை என்று ஆசிரியர் வீசும் சாட்டை ‘எங்கே தவறு’ கதையில் தெறிக்கிறது.
‘விபரீத உறவு’ கதையின் ஏமாற்றுக்கார வைத்தியனும்,
ஜோதிட பலிதம் பேசும் ‘சௌத் வி கா சாந்த் ஹோ’வும்,
திருமணம் நடத்துவதின் சிக்கல்களைச் சொல்லும் ‘லக்ஷ்மி கல்யாண வைபோகமே’வும்,

இளம் விதவைக்கு சம்பிரதாயங்களின் பெயரால் நிகழும் அவலங்களைச் சாடும் ‘பார்வையும் மௌனமும்’ இதர சில கதைகள்.     

சொல்லவந்ததை ஐயம் திரிபற சொல்லிச் செல்கிறது இவரின் எழுத்து. கதை மாந்தர்களூடே ஆசிரியரும் பயணிக்கிறார்.. அவர்களின் சம்பாஷணைகளோடே இவர் குரலும் ஒலிக்கிறது. உபதேசிக்கிறது ; கடிந்து கொள்கிறது; அனுதாபிக்கிறது. சமயங்களிலே வாசகன் ஊகத்துக்கு இடம்தர மறுக்கிறது.. அந்த ஊடாடும் குரலே கதையாடல் செய்கிறது. அதிகம் கைக்கொள்ளப் படாத உத்தியாய் நிற்கிறது. சட்டென்று நம்மை ஆட்கொள்வது கதைசொல்லலில் ஜி.எம்.பி சார் கைகொள்ளும் மொழியின் எளிமையே. வித்தார ஜோடனைகள் இல்லாத நேரிடையான விவரணைகள்.

நம் பாசத்திற்குரிய ஜி.எம்.பி சாரின் படைப்புகளுக்கு இன்னமும் எழுது பொருள் இருக்கிறது. அவருக்கும் கூட வற்றாத கற்பனைத்திறன் இருக்கிறது. எழுதியதைக் கொஞ்சம் ஊறப் போட்டு, செதுக்கவும் செய்தல் வேண்டும். நன்கமைந்த கருத்தே ஆயினும், கதைப்போக்கின் ஓட்டத்தை மட்டுப்படுத்துமெனில் நிர்தாட்சண்யமாய் கத்திரியை கையிலெடுக்கத்தான் வேண்டும். இதை விமரிசகனாக சொல்லாமல் அவரின் வாசகனாய் சொல்கிறேன். என் தமையனுக்கு இதைச் சொல்ல எனக்கில்லாத உரிமையா?!

அன்புடன்

மோகன்ஜி