புதன், பிப்ரவரி 11, 2015

கிளாரினட்


இன்று இரவு தொலைக்காட்சியைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது, தூர்தர்ஷன் பாரதியில் AKC நடராசன் அவர்களின் கிளாரினட் இசை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ‘பஹுதாரி’ ராகம். சுகமான வாசிப்பு. என் நினைவுகளோ பின்னோக்கி விரைந்தன.

கடலூரில் கெடிலநதிக் கரையில் ஒரு பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலொன்று உண்டு. அக்கோவிலில் இலட்சதீபம் வருடாவருடம் ஏற்றப்பட்டு விமரிசையாக நடக்கும். சிறுவனாய் நான் அப்பாவுடன் அங்கு போவதுண்டு.

ஒரு வருடம் லட்சதீபத்தின்போது AKC நடராஜன் அவர்களின் நிகழ்ச்சி இருந்தது. பிராபல்யத்தின் உச்சத்தில் அவர் இருந்த நாட்கள் அவை. என் அப்பாவின் சங்கீதரசனையில் AKCயின் கிளாரினட்டுக்கு தனிஇடம் உண்டு. மேடையின் மிக அருகிலிருந்தபடியால், அவர் கால்பாதத்தால் தாளம்போட்டபடி வாசித்ததும், அந்த கால்தாளம் பற்றி அப்பாவைக் கேட்டதுவும், பின்னாளில் தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி நாயனம் வாசிக்கும்போது காலால் தாளம்போடுவதை கவனித்து சிலாகித்ததும் நினைவுக்கு வந்தது. இன்று அதே கால்தாளத்தை AKC போடுவதை தொலைக்காட்சியில் பார்த்தபோது அப்பா வாசனை என்னை சுற்றிப்படர்ந்தது.

சில வருடங்களுக்குமுன், நான் திருச்சியில் பணியாற்றிய நாட்களில் AKCநடராசன் அவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கும் வாய்ப்பு இருந்தது. அப்பாவைப் பற்றியும் அந்த இலட்சதீபம் பற்றியும் அவரிடம் பிரஸ்தாபித்ததுண்டு. பழகுவதற்கு இனிமையான கலைஞர் அவர்.

கிளாரினட் பதினேழாம் நூற்றாண்டு இறுதியில் உருவானது.பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் ஏனைய நாடுகளிலும்  பல்வகை இசைகளிலும் வாசிக்கப் பட்டது. இதில் சில வகைகளும் உண்டு.
இது  நம் நாதஸ்வரத்தின் தங்கை என சொல்லலாம். 

தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டபோதுதான் கிளாரினட் சதிர் கச்சேரிகளுக்கு இங்கு முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. தேவார ஓதலுக்கும் கிளாரினட்டை பின்னிசையாக உபயோகப்படுத்தினார்கள். அதற்கு நாதஸ்வரம் போல் ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தி, கர்னாடக இசையுலகிற்கு கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு AKC ஐயா அவர்களுக்கு உண்டு. இவருடைய வளர்ச்சியிலும் வாசிப்பின் நுணுக்கங்களுக்கும் அவருடைய குருநாதர் திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளைக்கு பெரும்பங்கு உண்டு. இவர் ஏறாத மேடைஇல்லை, வாசிக்காத கோவில்இல்லை எனும்படி இவருடைய மேதைமை கொண்டாடப்பட்டது. பல நாடுகளுக்கு சென்று தன் இசைக்கொடியை நாட்டி வந்தவர் AKC ஐயா அவர்கள்.

பக்கவாத்யமாய் தவில் மட்டுமின்றி, மிருதங்கத்தை சேர்த்துக் கொண்டும், ஜுகல்பந்தி முறையில் பிற வாத்யங்களோடு கூட்டிசை முயற்சிகளையும் மேற்கொண்டவர். இசையே தானாக மாறிப்போனவர். அவர்  எதைப்பற்றி பேசினாலும் அது இசையைப் பற்றியே முடியும்.

கிளாரினெட் எளிதாக வாசித்துவிடக்கூடிய வாத்தியம் அல்ல. நாதஸ்வரம் போலல்லாமல், ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு ‘கீ’ இருக்கும். அவற்றில் விரல் பதித்து வாசிக்கும் போது விட்டுவிட்டு கேட்காமல் நாதஸ்வரம்போல் நாதத்தின் குழைவைக் கொண்டுவருவதற்கு அசுரசாதகம் வேண்டும். AKC அவர்களின் நாதஸ்வர அப்யாசமும், வாய்ப்பாட்டு படாந்தரமுமே அவரை இந்த இசைக்கருவியின் முடிசூடா மன்னனாக நிறுத்தியது.

இன்று கிளாரினட் வாத்யம் எந்த சபாவில் தனிக்கச்சேரியாக ஒலிக்கிறது? இல்லை என்பதே வேதனையான பதில். அவ்வளவு ஏன்? நாதஸ்வரம் திருமணமண்டபங்களிலும் கோவில்களிலும் மங்களஇசை என்ற அளவிலேயே வாசிக்கப்படுகிறது. அந்நாள் போல் முழுநேரக் கச்சேரிக்கு ஏற்பாடுகளும் அருகிவிட்டன. கேட்பார்கூட குறைந்துதான் போய் விட்டார்களோ? இந்தக் குறுக்கத்தினால் இந்த இசையை கற்பவர்கள் கூட சொற்ப அளவிலேயே இருக்கிறார்கள்.

இந்த இன்டர்நெட் யுகத்தில், சினிமா சங்கீதம், தொலைக்காட்சி இசைப் போட்டிகளுக்கு பழகிப்போனக் காதுகள், பாரம்பரிய இசையை கேட்காது என்பது சரியான வாதமல்ல. இந்த இசைக்கிளர்ச்சிகளையையும் மீறி, இந்த அசுரகதியில் இயங்கும் வாழ்க்கையின் அயர்ந்துஓயும் தருணங்களில், நம் பாரம்பரிய இசையே ஒரு மயிலிறகு வருடலாய் ஆதூரம் தரும். சம்பந்தப் பட்டவர்கள் ஆலோசித்து இவற்றை மீண்டும் செழிக்கவிடல் வேண்டும். இந்த பாரம்பரிய இசையில்  நம் கிராமிய வாத்யங்களும் அடங்கும். அடுத்த தலைமுறை இவைபற்றி கூகுளில் தேடித்படித்து தெரிந்துகொள்ளாமல், கேட்டும் இன்புற வேண்டும் அல்லவா?



( AKC அவர்களின் புகைப்படம் GOOGLEக்கு  நன்றியுடன்) 






செவ்வாய், பிப்ரவரி 03, 2015

பாண்டு






ரங்கம்மா உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தாள். அவள் கையிலிருந்த துடைப்பம் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது . வாருகோலின் இலட்சணமெல்லாம் தேய்ந்து ,ஒரு குச்சிக்கட்டையாய் அது இருப்பதனால்தானோ என்னவோ அதன் இலக்கை சரியாய் தாக்காமல் ‘சப்சப்’பென்ற ஒலியே அதிகமாய் எழுந்தது. அந்த அக்ரஹாரத்தின் கடைக்கோடி வீடு அது. வீடு எனும் சோபையை இழந்து, வெறும் செங்கல்ஜோடனையாய் இளித்துக் கொண்டிருந்தது.. அந்த வீட்டின் சமையற்கட்டு மேடையின் உட்பகுதியில்தான் ரங்கம்மா எங்களுடைய கரப்பான்பூச்சி காலனியில் வாருகோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள்.

என் இனத்தார் ஓரிருவர் தாக்குதலுக்கு தப்பாமல் உயிரைவிட்டு மல்லாந்திருந்தனர். எல்லாவரும் திசைக்கொருத்தராய் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். நான்மட்டும் காரைப்பெயர்ந்த ஒரு சிறுகுழியில் தஞ்சம் புகுந்திருந்தேன். அம்மா என்ன ஆனாளோ? படபடப்பாய் இருந்தது. என்ன வாழ்க்கை இது?

சமையலறைக்குள் அடுத்த குரல் புகுந்தது. "ஏண்டி ரங்கு! காலமே இப்படி சிலம்பம் சுத்திண்டிருக்கே? இப்போத்தான் கரப்பான்பூச்சியை ஒழிக்க மருந்தெல்லாம் வந்திருக்கே.. வாங்கி அடிக்க வேண்டியது தானே? எதுக்கு இந்த ஹிம்சை?" இது அடுத்த வீட்டு பங்கஜாக்ஷி மாமி. இரண்டு மாமிகளும் ரொம்ப சினேகிதம்..

"மருந்துவாங்க காசிருந்தா முதல்ல உங்கஅண்ணாவுகில்லே பழையதுலே கலந்து கொடுத்திருப்பேன்?"

“அட ராமச்சந்திரா! என்னடி பேச்சு இது? உன் மஞ்சகுங்குமத்துக்கு பழுதில்லாமே அவர்தான் ஒரு வழியா வந்து சேர்ந்துட்டரே....... அசடாட்டம் எதையோ பேசிண்டு"

இருவரின் குரலும் மெல்ல தேய்ந்து அந்த இருளோடின சமையற்கட்டு மீண்டும் நிசப்தமானது.. ஆபத்துக்கட்டம் தாண்டியாச்சு.. எனக்கு இதொண்ணும் புதுசில்லே.. மூணு மாசத்துக்கொருக்கா நடக்கிற வைபவம்தான். ரங்கம்மா இனி வரமாட்டாள். எங்கம்மாவும் மத்த கரப்புகளும் திரும்பிவர கொஞ்சம் நேரமெடுக்கும் அதுக்குள்ளே உங்களுக்கு என்னைப்பத்தின விருத்தாந்தமெல்லாம் சொல்றேன். சித்த பெரியமனசு பண்ணிக் கேளுங்கோ!

என்னடா இது? நீச்சக்கரப்பு சொல்றதையெல்லாம் கேக்கத் தலையெழுத்தான்னு என்னை ஒதுக்கிடாதேள். ‘புல்லாய் பிறவி தரவேணும், புழுவாய் பிறவி தர வேணும்’னுல்லாம் பாடரேளோன்னோ... அதெல்லாம் மெய்யின்னா என் கதையையும் நீங்க கேட்டுத்தான் ஆகணும் சொல்லிபிட்டேன்..

எங்க கரப்பு காலனியிலே யாருக்கும் பேரில்லே.. என்னத்துக்கு பேரு?.. இத்துணுண்டு வயத்துக்காக ஒரு ஜீவிதம்.. ஆனா எங்கம்மா மத்தக் கரப்பையெல்லாம் விட மேலானவள் . 'எந்த ஜென்ம பாவமோ கரப்பா பொறந்துட்டோம். ஆனாலும் மத்தவா வாயிலே விழுந்து எழுந்திருக்காம ஜீவிச்சிட்டு அந்த தேவநாதன் காலடியிலே சேர்ந்துடணும்' என்பாள்.

அம்மா பிறந்ததிலிருந்து இந்த வீட்டுப்படியை தாண்டினவளில்லை. ‘ப்ரபந்தம் முழங்கின வீடுடா இது’ என்று என்னையும் வெளியே விட்டவளில்லை. நான் கொஞ்சம் பெரியவனானப்புறம்தான் ஆத்த விட்டு வெளிய போய்வர ஒப்புத்துண்டா .அதுவும் எதுத்த கோவில் வரைக்கும்தான்.

யாருக்கும் பெயரில்லாத காலனியிலே எனக்குமட்டும் அம்மா ‘பாண்டுரங்கன்’னு பேரு வச்சா. செல்லமா ‘பாண்டு பாண்டு’ம்பா. மத்தவாளுக்கு என்னைமாதிரி நேரான பேரில்லேன்னாலும் , அடையாளத்துக்குன்னு ‘ஒத்த மீசையன்,சிடுமூஞ்சி, பெரிய கருப்பன், ஜீண்ட்ரம், பீன்சு’ன்னு கூப்பிட்டுப்பா...

எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்.. ரொம்ப சங்கோஜி.. சட்டுன்னு பழகிட மாட்டேன். என்னைப் பார்த்தா மத்த கரப்புகளுக்கு இளக்காரம்தான். நான் கச்சலா இருக்கிறது மட்டுமில்லே... என் உடம்பு நெறம் வெளுத்து சோகையாய் இருப்பேன்.. தாளிப்புலே தப்பி விழுந்த உளுத்தம் பருப்பாட்டம் ஒரு நெறம்.. கேலி பண்ண மத்தவாளுக்கு இது போதாதா? அப்பப்போ அம்மாண்ட சொல்லி அழுவேன்.

‘உனக்கென்னடா ராஜா குறைச்சல்? நம்ம ஜாதிக்கே இல்லாத நெறம்டா உனக்கு.. ரங்கம்மா வைக்கிற சேமியா பாயசம் கூட உன் நெறம் தான்.. கரப்புகளுக்கு தெரியுமா அழகும் அழுக்கும்..’ ன்னு சமாதானம் சொல்வா.

நேத்து பாருங்கோ... ஒத்த மீசையன் என்னை வீணுக்கு வம்புக்கிழுத்தார். எங்க காலனியிலேயே மூத்தக் கரப்பு அது. கோவிலுக்கு தப்பாம போயிட்டு வரும். ஆனா போறவர்றவாளையெல்லாம் நொட்டை சொல்லும்..

நானு தேமேண்டு எறும்பு ஊர்கோலத்தை வேடிக்கை பார்த்துண்டிருந்தேன்.


“என்னடா பாண்டு? இப்படி வெறிச்சுவெறிச்சு பார்த்துண்டிருக்கே? எறும்பெல்லாம் உன்னை மிந்திரிபருப்புன்னு இழுத்துண்டு போயிடப் போறது!”

அவருக்கு என்னோட நெறத்தை கிண்டல் பண்ணல்லேன்னா போதுபோகாது. ஒருபக்கம் மீசைஇல்லாமப் போனாலும் நையாண்டிக்கு குறைவில்லே. நானொண்ணும் பதில் சொல்லல்லே. கோவிலப்பாக்க நடை கட்டினேன்.

“உனக்கு சும்மா ஒண்ணும் பாண்டுன்னு பேர் வைக்கல்லேடா உங்கம்மா. பொருத்தமாத்தான் வச்சிருக்கா போ!”

“ஸ்வாமி பேர் வச்சதுலே என்ன பொருத்தம் மாமா? அம்மாவுக்கு பிடிச்ச பேரு. வச்சுட்டா” என்றேன் தீனமாக.

‘பாண்டுரங்கன்’னு நினச்சுட்டியா? கூப்பிடறதோ பொருத்தமா பாண்டுன்னு மட்டும் தானே?”

"அதனால என்ன மாமா?"

"சாயங்காலம் கோவில்ல பாரதம் சொல்றா கேளு. தெரியும்.... ஹெஹ்ஹே!”

சித்த நாழியாச்சு.. ஓடி ஒளிஞ்ச மத்த கரப்பெல்லாம் ஒரு வழியா காலனிக்குள்ளே வந்துட்டா.. அம்மாவை பார்த்தப்பின்னே தான் சமாதானமாச்சு.

சாயங்காலமும் கோவிலுக்கு போனேன். பிரகாரத்துலே சேப்புசால்வை போர்த்திண்டு ஒரு மாமா கதை சொல்லிண்டு இருந்தார். அம்பாலிகா, விசித்ரவீர்யன், வேத வியாசர்ன்னு பேர்களெல்லாம் அவர் கதையில் வந்தன. தூணுக்கு இந்தப்புறம் நானும், அந்தப்புறமாய் நைவேத்தியத்துக்கு புளியோதரையுமா இருந்தா கதைதான் புரியுமா? “பகவானே! புளியோதரையை எல்லோரும் கைகொள்ளாம வாங்கி, சிந்திகிட்டே போகணும்னு வேண்டிகிட்டேன்.

அப்போதான் அந்த கதைசொல்ற மாமா சொன்னார்.
“வேதவியாசரைக் கூடினபோது அந்த முனியின் தோற்றம் கண்டு அசூயையில் அம்பாலிகா வெளிறிப் போனதால், அவளுக்கு பிறந்த பாண்டு மகாராஜா வெளுத்த அருவருப்பான தேகத்துடன் பிறந்தார்.”

அடடா ! பாண்டு மகாராஜாவுக்கும் என்னை மாதிரி வெளிறிப்போன தேகமா? ஓ....

அதான் ஒத்தமீசையன் ‘பாண்டுபாண்டு’ன்னு கிண்டல் பண்ணினாரா? மனசல்லாம் வலிச்சது.

தேவநாதன் வரப்ப்ரசாதி தான். புளியோதரை நான் வேண்டிகிட்ட மாதிரி தரையெல்லாம் சிந்திக் கிடந்தது. எனக்குத்தான் அதை சாப்பிட தோணல்லை.

நான் செத்துப்போனா, எறும்பெல்லாம்கூட அருவருத்து என்னை இழுத்துண்டு போகாது.

நான் யாருக்கு பிரயோஜனம்? என்னை ஏன் இப்படி பெத்தே அம்மா? உனக்கு என்னைப் பார்த்தா அருவருப்பில்லையா? இல்லை என்னைப் பிடிச்சா மாதிரி நடிக்கிறயா?

திரும்பிப் போகக்கூட தோணலே... இந்த அழகுல எனக்கு கல்யாணம் பண்ணனும்னு வேற அம்மா சொல்லிகிட்டிருந்தா. நான்கூட கனவெல்லாம் கண்டபடிதான் இருந்தேன். இப்போ புரியறது. நான் கனவுமட்டும்தான் காண முடியும்னு.
எல்லாம் போறும் போறும்..

“ஸ்...ஸ்..” ன்னு யாரோ கூப்பிடறமாதிரி இருந்தது. தூணோரம் கொஞ்சம் புஷ்டியா இன்னொரு கரப்பு தான் கூப்பிட்டது.. கிட்ட போனேன்.

“என்ன வேணும்.. நான் உங்களை பார்த்ததேயில்லையே.?”

“நான் இந்தக் கோயில்லையே தான் இருக்கேன். உங்களை அடிக்கடி பார்த்திருக்கேன். இப்படிஅப்படி பார்க்காமே போவேள்” என்றாள் அந்த புஷ்டி.

கேட்க மனசுக்கு சமாதானமா இருந்தது. “ என்ன வேணும் உங்களுக்கு?”


“எனக்கு நாலு பருக்கை புளியோதரை சிந்தலை இப்படி புரட்டிப்போட மாட்டேளா?”

இதென்ன?? இவளுக்கு நானென்ன வச்சஆளா?.
“ஏன்? நீங்களா எடுத்துக்க மாட்டேளா?”

“எனக்கு வேகமா நடக்க ஏலாது. ஒரு குழந்தை மிதிச்சு என் முன்னங்கால் போயிடுத்து. அதான் கேட்டேன்.”

அடடா... உடனே பருக்கைகளைப் புரட்டிக் கொண்டு வந்தேன்.

“கேட்கவே கஷ்டமா இருக்கு. எப்போ உதவி வேணும்னாலும் சங்கோஜமில்லாம கேளுங்கோ.”

“சந்தோஷம்.. உதவி வேணும்னா எப்படி உங்களை கேட்பேன்?..எங்கயோ வெளிய இல்லே இருக்கேள? எப்பவாவது இந்த பக்கம் வந்தால் பார்த்துக்கலாம். நான் வரேன்”.

மிச்சமிருந்த கால்களைஉந்தி தன்உடலை இழுத்தபடி மெள்ள சென்றாள். அடுத்திருந்த சுவரின் விரிசலுள் மறைந்தாள்.

அங்கேயே நின்று விட்டேன். என்னைப்போல இன்னொரு பாவப்பட்ட ஜென்மம்.. கொஞ்ச நேரம் போயிருக்கும்

“ பாண்டு.. பாண்டு” அம்மாதான் தேடி வந்துகொண்டிருந்தாள்.

“இங்கேயிருக்கேன்மா”

“கொஞ்ச நேரம் தவிச்சு போயிட்டேண்டா. இங்க தான் இருக்கியா?”

“ என்ன பாண்டு... என்ன யோசனை?”

“அம்மா.. நாம இனிமே இந்தக் கோயில்லையே இருக்கலாம்மா”

“பைத்தியமா உனக்கு? அந்த வீட்டுக்கு என்னடா? அது பிரபந்தம் ..”

“போறும்மா... பிரபந்தம் எப்பவோ முழங்கின வீடு தானே...இப்ப என்ன முழங்கறது.?. எப்பப்பாரு ரங்கம்மாவோட புலம்பல்.. இந்த இடத்துல இப்பவும் பிரபந்தம் முழங்குது அம்மா.. அர்ச்சனைகளென்ன? வேத கோஷமென்ன? பாரதமும் ராமாயணமும் பிரவசனம் ஆகிறதென்ன? நான் முடிவு பண்ணிட்டேம்மா. இனிமே இங்கயே இருப்போம்மா”

‘ஆமாம் மாமி.. இனிமே இங்கேயே இருங்கோளேன்’ என்று நாணத்துடன் புஷ்டி வெளியே வந்தாள்

ஆச்சு... என்ன அப்பிடியே நின்னுட்டேள் ??எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்கோன்னா.... எனக்கும் உங்களைப்போல பெரியவா யாரு இருக்கா? வந்து ரெண்டு அட்சதைபோட்டுட்டு கோயில்ல புளியோதரை பிரசாதம் வாங்கிண்டு போங்கோ... புதுசா மடப்பள்ளிகுள்ளேயே ஜாகை பார்த்துருக்கேன்.. வரட்டுமா?