வியாழன், ஜூன் 30, 2011

எனது நூறாவது பதிவு
இன்றோடு நான் வலையுலகில் அடியெடுத்து வைத்து ஓராண்டு ஆகிறது. இன்றைய பதிவும் நூறாவது பதிவாய் மலர்கின்றது.

ஏதோ பெரிய சாதனைப் போல் சொல்கிறேனோ? 

உண்மையில் இன்னமும்கூட பதிவுகள் போட்டிருக்கலாம். அலுவலகம்  வெகு தொலைவில் மாறிப் போனதால்  பயணத்திலேயே நேரம் போய் விடுகிறது. நிறைய வெளியூர்ப்  பயணங்கள் வேறு....

இனி நிலைமை கொஞ்சம் சீராகும் என நம்புகிறேன்.
இனிமேல்  அதிகப் பதிவுகளை எதிர்பார்க்கலாம்.

இந்த ஓராண்டில் எத்தனை அன்பு நெஞ்சங்களை சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறேன்?! 

பின்னூட்டங்களில் வாழ்த்தியும், மின்னஞ்சலிலும் அலைபேசியிலும் அடிக்கடி தொடர்பு கொள்ளும் வலையுலக நண்பர்களுக்கும் என் அன்பும் நன்றியும்..

ஆண்டு நிறைவு, நூறு ஆயிரம் என எண்ணிக்கைத் தட்டுகள் தோறும் வாழ்த்துதலும் கொண்டாடுதலும் நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ளும் செயல் தானே?

உண்மையில் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு சந்திப்பையும் ஒவ்வொரு சிரிப்பையும் கொண்டாடுவது தான் சரியானது.. அனைவருக்கும் அப்படிக் கொண்டாடும் மனமும் சூழலும் சீக்கிரம் உருவாக இறையருள் புரியட்டும்.

எங்கும் அன்பும் கருணையும் பெருகட்டும்.

நன்றியும் நட்பும் அனைவருக்கும்...

மோகன்ஜி
ஹைதராபாத்

புதன், ஜூன் 29, 2011

கனாக் கண்டேனடி .. தோழி!


இன்று காலையில் கல்லூரி வளாகத்தில் நானும் ஒரு தெலுங்கு நண்பரொருவரும் பேசிக்கொண்டிருந்தோம். சற்றுதொலைவில் கண்மூடிப் படுத்திருந்த ஒரு நாய், திடுக்கிட்டு விழித்து சிறுகுரைப்பு குரைத்துவிட்டு, மீண்டும் கண்மூடிக் கொண்டது .

கானா ஏதும் கண்டிருக்கும் என்றேன்.

மிருகங்களும் பறவைகளும் கனாக் காணாது.. மனுசப்பயல் தான் ஏங்கிஏங்கிக் கனவு காண்பவன் என்று என் கூற்றை நிராகரித்தார்.

அவரை மறுத்தேன். வடமொழி மட்டும் தமிழிலக்கியத்தில் மிருகங்களும் கனாக்காண்பவையே என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

அவற்றையெல்லாம் எழுதினது உங்களைப் போன்ற கவிகள் தானே? டிரீம் மெர்ச்சண்ட்ஸ்!

பரவாயில்லை.. நம்மையும் கவி என்கிறார்.. சரி! அவரை விட்டுவிடுவோம்..

மிருகங்களும் பறவைகளும் கனாக்காணும் சில சங்கப் பாடல்கள் உண்டு.

நற்றிணையில் ஒரு பாடல். இதை எழுதியவர் நக்கண்ணையார்


உள்ளூர் மா அத்த முள் எயிற்று வாவல்
ஓங்கல்அம் சினைத் தூங்கு துயில் பொழுதின்
வெல் போர்ச் சோழர் அழிசிஅம் பெருங் காட்டு
நெல்லி அம் புளிச் சுவைக் கனவியாஅங்கு
அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப்
பனி அரும்பு உடைந்த பெருந் தாட் புன்னை
துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும்
சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும்
பெருந் தண் கானலும் நினைந்த அப் பகலே.


பொருளுரை:

 மா அத்த மாமரம்
முள் எயிற்று வாவல் முட்கள் போன்ற பற்கள் கொண்ட
                            வௌவ்வால்
 ஓங்கல் உயர்ந்த
 அம் அழகிய
 சினை கிளை
 தூங்கு தொங்கிக்கிடக்கும்
 அழிசி அழிசியம் எனும் பெருங்காடு  
 நெல்லி அம் புளிச் சுவைக் சுவையான புளிக்கும் நெல்லிக்
                                   கனிகள்
 கனவியா அங்கு என் கனவே போல்
 அது கழிந்தன்றே எனை விட்டகன்றது
 பனி அரும்பு உடைந்த தண்ணிய அரும்புகள் கொண்ட
 பெருந் தாட் புன்னை அகன்ற நடுமரம் கொண்ட புன்னைமரம்
 துறை துறைமுகம்
 மேய் இப்பி உயிருள்ள சிப்பிகள்

நெய்தல் திணையின் அழகான பாடல் இது.

மாமரத்தில் வசிக்கும் ஒரு வௌவ்வால்  நெல்லிக்கனி உண்பதில் பெரு விருப்பம் உடையதாம்.. அழிசியம் எனும் பெருங்காட்டிடை விளைந்த புளிக்கும் நெல்லிக்கனிக்காக ஏங்கியபடி உறக்கம் கொள்கிறது. என்றோ உண்ட அக்கனியினை உண்பதாய் கனவும் காண்கின்றதாம் .

நெய்தல் தலைவி , தலைவனுடன் கூடிக்களித்த தருணங்களையே எப்போதும் எண்ணியபடி, கனவிலும் நனவிலும் அந்த நினைவுகளின் கனம் தாங்க மாட்டாது, தோழியிடம் புலம்புகின்றாள். நெல்லிக்கனி சுவையை கனாக்காணும் வௌவ்வாலை தனது நிலைக்கு உவமையாய்ச் சொல்லி
ழிவிரக்கம் மிகுந்து மயங்குகிறாளாம்.

இதேபோல்,புலியினைக் கனவில் காணும் யானை, இரால்மீனைப் பற்றி கனவு காணும் காகம் என்று பல உவமைகள் சங்கப் பாடல்களில் கிடைக்கின்றன.

என்ன.. கொஞ்சம் படிக்க பொறுமை வேண்டும்.
பிறிதோர் பதிவில் மேலும் சிலவற்றை விவாதிப்போம்.. 

ஞாயிறு, ஜூன் 26, 2011

மீண்டும் கிசு கிசு


கிசுகிசு 1

ஒரு வலைப்பூவுக்கே பதிவர்கள் ததிங்கனத்தோம் போட, நாலு வலைப்பூவில் தூள் கிளப்பும் ஒரு சிவக்கொழுந்து, பதிவிடும் ரகசியம் அம்பலமாகிவிட்டதாம். அவரின் புத்திசாலி மகள், தூங்கப்போகும் முன் அப்பாவுக்கே சொல்லும் கதைகளை அப்படியே பதிவாக்கி பேரைத் தட்டிக் கொண்டு போய் விடுகிறாராம். எனக்கும் அப்படி திவ்யமான மகள் இருந்தால் ,நான்கூட பத்துவலை மேய்ப்பேனே என்று வானவில் பெருமூச்சு விடுகிறதாம்.

கிசுகிசு 2

இரு கைகளையும் தூக்கி அண்மைக்காலம் வரை ஆசீர்வதித்துக் கொண்டிருந்த மகானின் பேர்கொண்ட பதிவர். அண்மையில் கையில் அறுவைசிகிச்சை செய்து கொண்டாலும் ஓய்வெடுக்காமல் பதிவில் தட்டச்சுகிறாராம். அவரிடம் அன்பு கொண்ட நண்பர்கள், இப்போதெல்லாம் அவரைப் பார்த்து பாடுவது கைய வச்சுகிட்டு..... சும்மா இருடா.. என்ற பாடலைத்தானாம். இந்த நவரசப்பதிவர் முற்றிலும் குணமாகி தன் கைவரிசையை காட்ட பாபா அருளட்டும்..

கிசுகிசு 3

பதிவுலகின் பாசமலர் சிவாஜி, சாவித்திரி போன்று அண்ணா, தங்கச்சி என்று உருகி ஓடும் ஏழுவண்ணக்காரரும், வெளித்த பெண்ணும் உண்மையிலேயே உடன்பிறப்புகள் தானாம்.
SALT-MUTT-JUNCTION வலைப்பூவின் பின்புலத்தில் தெரியும் அவர்களிருவரின் படத்தில் காணப்படும் ஒரே முகஜாடை, இந்த உண்மையைக் காட்டிக் கொடுத்து விட்டது என்று நம் துப்பறியும் துரைசிங்கம் கண்டுபிடித்து விட்டாராம்.  

ஆடுரா ராமா ஆடு....

கிசுகிசு 4

மைன்ட் வாய்சோடு அடிக்கடி பேசும் பரபரப்பு பதிவர் ,வலையில் தன் முழுதிறமையும் வெளிப்படுவதில்லை என்று, தனி சேனலே துவங்க முடிவு செய்திருக்கிறாராம். பதிவர்கள் யாரும், தன் வலைப்பூவைதிறந்தவுடன் ,முதல் அரைமணி நேரம் கண்டிப்பாக இந்த சேனல் ஒளிபரப்பபாகுமாறு தொழில் நுட்பம் உண்டா என ஆராய்ந்து வருகிறாராம். அப்பாவி பதிவர்கள் கதிகலங்கி இருக்கிறார்கள். சேனல் பெயரை பதிவர்களே தேர்ந்தெடுக்கவும் வேண்டுகோள்விடப் போகிறாராம். பேரு இருந்தா  சொல்லுங்களேன் !


கிசுகிசு 5


வில்லேந்திய இந்த பதிவர் தன் பதிவிலும், கூட்டுப் பதிவிலும் தொடாத துறைகளே இல்லை. இருந்தாலும் அவர் இடும் பின்னூட்டங்களில் தான் அவர் மேதைமை அதிகம் வெளிப்படுகிறது என்று பதிவர்கள் நினைக்கிறார்கள்.

பின்னூட்டப் பெருமாளு??  

  

வியாழன், ஜூன் 23, 2011

பதிவுலகில் கிசுகிசு


பத்திரிகைகளில் கிசுகிசுக்களைப் படித்தவுடனே அது யாரைப் பற்றியது என்று கண்டுகொள்ளும் அறிவுஜீவியா நீங்கள்? எனக்கு அவ்வளவு சமர்த்து பத்தாதுங்க. தங்கமணி சொல்லும்போதுதான் "அட!அவங்களா?" என்று வாய்பிளக்கும் அப்புராணி நான்.

படிச்சாதான் புரியாது? கிசுகிசு எழுதியாவது பார்த்துடுவோமேன்னு ஒரு முயற்சி. எழுதும் முயற்சியில் இன்னமும் முயலாதது கிசுகிசு மற்றும் கழிப்பறை சுவர் கிறுக்கல் இரண்டுமட்டும் தானோ?!. இதில் சம்பந்தப்பட்டவர்கள் என் இதயத்துக்கு மிக நெருக்கமான பதிவர்கள். என் நையாண்டியை ரசிப்பவர்கள். எனவே இந்தப் பதிவை நகைச்சுவையாக ரசிக்கவும். இனி நீங்களாச்சு.. அவிய்ங்களாச்சு ..

கிசுகிசு 1

பலகடவுளர்களையும் பற்றி கலர்கலராய் எழுதும் ஒரு பதிவர் ,தன்னைப்பற்றி மட்டும் பதிவிடாமல் இருட்டடிப்பு செய்வதாய் ஸ்ரீராமபிரான் குமுறுகிறாராம். "லச்சு! என்னான்னு விசாரி!" என்று இளவலுக்கு கட்டளை இட்டிருக்கிறாராம்.... 'தாமரை' போன்ற கண்ணுடைய இராமருக்கே இந்த கதி!

கிசுகிசு 2

சரசரவென்று பதிவுக்குமேல் பதிவு இறக்கி,வலையுலகைக் கலக்கும் ஒரு மைனர், நள்ளிரவு தாண்டியும் லைட்டை எரியவிட்டுக் கொண்டு பதிவுபோட்டபடி அட்டகாசம் செய்தாராம்.பொறுக்கமுடியாத தாய்க்குலம்,"உன் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா?" என்று காய்ச்சி விட்டாராம். அதனால், இப்போதெல்லாம் சத்தம் போடாமல் தன் புதுக்காருக்குள் இரவு நேரங்களில் உட்கார்ந்து கொண்டு சத்தம்போடாமல் மடிக்கணணியில்   பதிவிடுகிறாராம். விரைவில் இவருக்கு மண்டகப்படி கிடைக்கலாம் என்று தாய்க்குல வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிசுகிசு 3

இந்திரதனுசு வலைக்காரருக்கும்,சூர்யாப்பாவின் பெயர்கொண்ட பதிவருக்கும் ரொம்ப ஒற்றுமையாம். அண்ணனுடன் பலவகையிலும் ஒத்துபோகும் கவித்தம்பி , இப்போதெல்லாம் அண்ணனைப் போலவே ஆடிக்கொருதரம் அமாவாசைக்கொருதரம் தான் வலைப்பக்கம் வருகிராராம். நமசிவாயம் நமசிவாயம் ... 

கிசுகிசு 4

காமனானாலும் காலனானாலும் இந்தப் பதிவர் கையில் தவிடுபொடிதான் . அண்மையில் ஒபாமா நாட்டிலிருந்து தமிழ்நாடு வரும்வழியில், நிஜாம் ஆண்ட தெலுங்குநகரில் இறங்கி,மோகனமான சகப்பதிவரை சந்திப்பதாய் திட்டமாம். ஆனாலும்,விமானத்திலே தூங்கிவிட்டதால்,தெலுங்கு விமானநிலையத்தில் இறங்காமல் கோட்டைவிட்டாராம். விமானப் பணிப்பெண்ணோ,"அப்பா! இப்படியா தூங்குவாரு இந்த துரை?" என்று கேப்டனிடம் சொல்லிசொல்லி சிரித்தாராம். வல்லவரை சந்திக்க முடியாமல் வானவில் வாடிவிட்டதாம்.

கிசுகிசு 5

ததரினனனா... என்று ராகம் போட இன்னொரு வலைப்பூவையும் வைத்திருக்கும் மூணாறு பார்ட்டி,  கீர்த்தனைக்கு இப்போதெல்லாம் அதிகம்அஞ்சலி செய்வதில்லையாம். கேட்டால் இதுக்கே வீட்டுல பாட்டு... அதுக்கு நேரமில்லைன்னு கைவிரிக்கிராராம். கீர்த்தனம் பாட எல்லோருக்கும் வாய்க்குமா? என்று பலரும் கொந்தளித்துக் கிடக்கிறார்கள்.

கிசுகிசு 6

ஒரு கொம்புக்காரப் பதிவர்,கதைகளில் எப்போதும் அதகளப் படுத்துவாராம். எல்லாக் கதைகளும் சிறப்பாய் அமைவதற்கு காரணம், பதிவிடும் போது நவீனமான சாப்ட்வேர் உபயோகிக்கிறாரோ என்று சந்தேகம் மலைக்கோட்டையில் எதிரொலிக்கிறது.

கிசுகிசு 7

கவிதை,காளமேகம் என்று வலையில் வூடு கட்டும் சுந்தரமான பாண்டிச்சேரி பார்ட்டியை, கடலூர் வரைக்கும் அண்மையில் சென்றவர் சந்திக்காமலே திரும்பிவிட்டாராம். கைப்பேசியை விட்டுவிட்டு சென்றதினால்தான் தொடர்பு கொள்ள இயலவில்லையாம். விஷயம் தெரிந்தால் கையால் அள்ளிப் போட்டுவிடுவாரோ என்று ஆந்தரா பார்ட்டி பம்முகிராராம்.  மேட்டர் தெரிந்த மன்னை மச்சினருக்கு கடலை உருண்டை வாங்கிக் கொடுத்து விஷயம் வெளியே தெரியாமல் அமுக்கிவிட்டாராம். அட தேவுடா!

கிசுகிசு 8

சுரங்க நகரிலிருந்து தலைநகர் போன பதிவரும் அவரது சம்சாரமும் பதிவுலகில் தடம் பதித்துவரும் ஆதர்ச தம்பதிகளாம்.  தங்கமணி பதிவிடும் நாளில் யாரு சமைக்கிறார்கள் வீட்டில் என நமது பட்சிக்கு சந்தேகம்....  வேணா.. வெநா... நல்லநல்லப் பதிவுகளாய் போட்டு இப்போதுபோல் எப்போதும் நம்மையெல்லாம் சந்தோஷப்படுத்தினால் சரிதான்!

கிசுகிசு 9

குழலூதும் கண்ணனிவர்.. கொஞ்சம் வயதானாற்போல் படத்தைப் போட்டுவிட்டு, அந்தகாலத்துலே என்று எழுதுவதெல்லாம் ஒரு பில்டப் தானாம். உண்மையில் வால்லிப வய்யசு ஆள் தானாம். எப்படி என்றுகேட்டால்,' பதிவில் துள்ளும் இளமையே சாட்சி' என்று பட்சி தலையில் அடித்து சத்தியம் செய்கிறது. 

கிசுகிசு 10

பாலைவன பாபாவின்  அமைதிக்குக் காரணம் ஆணி இல்லையாம்.. சத்தம் போடாமல் ஒரு பெரிய சரித்திரநாவல் எழுதி வருகிறாராம். பெயர் கூட "பாலைச்சுறா" என்று முடிவு செய்திருக்கிறாராம். எழில் உச்சிகள், லாவண்யங்கள் என்று பிளந்துகட்டப் போகிறாராம்.. துபாய்க்குப் போனபோது  குலோத்துங்கன் செய்த போர்களும், போன பார்களும் பின்னணியாய்  வைத்து  கலக்கிவருவதாய் நம் பாலைக்கிளி தரும் தகவல். 


யார்யார்ன்னு கண்டுபிடிங்க பார்ப்போம்!


புதன், ஜூன் 22, 2011

வாழச் சொன்னால் வாழ்கிறேன் !


படித்து, மனதில் பதிந்த சில முன்னேற்ற மொழிகளை, சொல்ல விழைகிறேன்.. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வலையகம்......


போகும் பாதை மிக அழகாய் இருக்குமெனின் அது எங்கே செல்கின்றது என்பதறிந்தபின்  பயணம்  தொடருங்கள்.
ஆனால் சேருமிடம் மிக ரம்மியமானதெனின், பாதை எப்படி இருக்கின்றெதென யோசிக்காதீர்கள் .


கவலைகளை தலையணையாக்கிக்கொண்டு தூங்கச் செல்லாதீர்கள்...
நாளை விடியும்போது வெற்றிபெற மற்றுமோர் வாய்ப்பு மலரும் என்ற நம்பிக்கையின் டியில் தலைசாய்த்து உறங்குங்கள் ஒரு குழந்தைபோல
.

நல்ல பாதைகள் நல்ல ஓட்டுனர்களை உருவாக்குவதில்லை.
அமைதியான கடல் சிறந்த மாலுமிகளை உருவாக்குவதில்லை.
சுடப்படாத பொன் நகைகளாய் ஆவதில்லை
பிரச்னைகள் இல்லாத வாழ்க்கை மனிதர்களைப் பண்படுத்துவதில்லை


உலகில் உணவில்லாமல் வாடுபவர்களைவிட அன்புசெலுத்தப்படாமல் வாடுபவர்களே அதிகம். பாராட்டவும், தட்டிக்கொடுக்கவும் தயங்காதீர்கள். சின்ன புன்னகையும், ஆமோதிக்கும் தலையாட்டலும், கவனிக்கப் படுகிறோம் என்ற உணர்வும்.... வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களை ஏற்படுத்த வல்லவை.


உங்களுடைய அனுமதியிலாமல் யாருடைய வார்த்தைகளும் உங்களைப் புண்படுத்த முடியாது. மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று யோசித்து வாழ்வீர்களேயானால், உங்கள் வாழ்க்கையை மற்றவர்கள் தான் வாழ்கிறார்கள்... நீங்களல்ல.


வாழ்க்கையின் சவால்கள் மூன்று வகைப்பட்டவை. சுலபமானவை, கடினமானவை மற்றும் எதிர்கொள்ள இயலாதவை.

-சுலபமான சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு வாழ்க்கை பிரச்னைகளின்றி அமையும். ஆனால் சலிப்பானதாக இருக்கும்.

- கடினமான சவால்களோடு மோதுகிறவர்களுக்கு வாழ்க்கை சற்று ஏறுமாறாக இருக்கலாம் .ஆனாலும் மனநிறைவைத் தருகின்ற வாழ்வாய் அமையும்.

- எதிர்கொள்ளவே இயலாது எனும்படியான சவால்களை துணிந்து ஏற்பவர்கள் வாழ்வோ, அவர்கள் வாழ்ந்து முடிந்த பின்னும், ஊக்கமூட்டும் கலங்கரை விளக்காக அனைவர் நினைவிலும் நின்று வழிநடத்தும்.நல்லதோர் உறவு கரும்பினைப்போல..
கரும்பை முறுக்கினாலும்,நசுக்கினாலும், கசக்கினாலும் பிழிந்தாலும் வெளிப்படுவது அதன் சுவையான சாறு ஒன்றே..


உனது இன்று உனது நேற்றைப் போல இருந்தால் ,உனது நாளையோ உனது இன்று போலல்லாவா இருக்கும்?
செய்து வருவதையே தொடர்வாயானால், கிடைத்து வந்தது மட்டுமே தான் கிட்டும்.இதுவரை இல்லாத ஒன்றை பெறவேண்டுமென்றால், இதுவரை செய்யாத ஒன்றை செய்யவேண்டும்.. சரி தானே?

உண்மையான் அன்பு என்பது மற்றவரை அவரது நிறைகுறைகளோடு ஏற்றுக் கொள்வதுதான்.
பிறரை வெறுப்பது என்பது, நாம் விஷம் குடித்தபடி, பிறர் சாவதை எதிர்பார்ப்பது போல தான்.

வாழ்க்கையின் வினோதமான ஒரு விஷயம் என்னவென்றால் , “சிறந்ததைத் தவிர மற்றவற்றை நீங்கள் பெற தயாரில்லை எனும் போது, பெரும்பாலும் சிறந்ததே உங்களை அடைகிறது என்பதுதான்.


இருட்டு என்பது வெளிச்சத்திற்கு எதிர்மறையானது அல்ல. அது வெளிச்சம் இல்லாததோர் நிலையே.
பிரச்னை என்பது. தீர்வு இல்லாத நிலையன்று.. செயல்படுத்தும் யோசனை தோன்றாத நிலை தான்

ஒரு அழகான உறவு, எவ்வளவு நன்றாக ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தது அல்ல. தவறாய்ப் புரிந்து கொள்வதை எவ்வாறு தவிர்க்கிறோம் என்பதைப் பொறுத்தது.


வெற்றி என்பது ஒரு கரடியுடன் சண்டைப் போடுவது போன்றது.
நீங்கள் ஓய்ந்து விட்டதால் சண்டையிலிருந்து விலகமுடியாது.
கரடி ய்ந்தபின்னரே உங்களால் விலகமுடியும்.


மன்னிப்பு கோருவதால் நீங்கள் தவறு செய்தீர்கள் என்றோ, மற்றவர் சரியென்றும் அர்த்தமல்ல. உங்கள் சுயகௌரவத்தை விடவும்,அந்த உறவை மேலானதாக நீங்கள் மதிப்பதாகத்தான் அர்த்தம்.

வியாழன், ஜூன் 16, 2011

வெளையாட்டு


சொன்னது கவனத்துல வச்சிக்க முத்து. தருமு அண்ணன் இப்ப வந்துரும்.

பெங்களூரின் கலாசிப்பாளயத்தின் குறுக்கு சந்துகளில் புகுந்து புறப்பட்டு சேகர் தங்கியிருந்த வீட்டை இருவரும் அடைந்து பத்து நிமிடம் தான் ஆயிற்று. சேகரே அங்கு தருமு அண்ணனிடம் தான் ஒட்டிக கொண்டிருந்தான். இப்போது எப்படியோ சமாளித்து  தன்னுடனேயே முத்துவையும் அவன் சேர்த்துக் கொண்டாயிற்று. ஆத்தாவுக்கு எப்போவுமே சேகர் பற்றி பெருமை தான். வெட்டிகிட்டு வான்னா கட்டிக்கிட்டு வர்ற புள்ளை என்பாளே.. சரிதான் அவ சொல்றது.

                                             
ராணிப்பேட்டையிலிருந்து பெங்களூருக்கு பஸ் ஏறினது முதலே சேகர் பெங்களூர் பற்றியும், அவன் வேலைக்கு சேரப்போகும் ட்ராவல் ஏஜென்சி குறித்தும் முத்துவுக்கு சொல்லிக்கொண்டே வந்தான் . குறிப்பாக அவன் சேகரோடு கலாசிப்பாளையத்தில் தங்கப்போகும் தருமு அண்ணன் வீடு பற்றியும், தருமு அண்ணனின் குணாதிசயங்களையும் கிளிப்பாடமாய் முத்துவுக்கு உருவேற்றியிருந்தான்.

முத்து நல்லபிள்ளைதான். பாழாய்ப்போன படிப்புதான் ஏறவில்லை. பிளஸ்டூ தாண்டியதே ரத்தினகிரி சாமியார் ஆசியால தான். வேலைவெட்டி இல்லாதவனை,ஆத்தாவின் நச்சரிப்பு தாங்காமல் சேகர் தான் இங்கு வேலைக்கு அழைத்து வந்திருக்கிறான். முத்துவுக்கு சேகர் தூரத்து சொந்தம்.

டேய் முத்து எந்திரி. அண்ணனைக் கும்பிட்டுக்க.

தருமு உள்ளே நுழைந்தார். ஆறடி உயரம். அம்பத்தஞ்சு வயசிருக்குமா? நாலுநாள் மழிக்காத நீண்ட முகம். கண்ணில் ஒரு நிரந்தர மஞ்சள். அடர்த்தியான கம்பிப் புருவம். வெள்ளை வேட்டி,. பனியன் போடாத வெள்ளைமல் சட்டை. அதன் பாக்கெட்டில் துருத்திக் கொண்டிருக்கும் சார்மினார் சிகிரட் டப்பா,வெட்டும்புலி தீப்பெட்டி. சில்லறை.

வா..வா.. நீதான் முத்துப்பயலா?

முத்துக்குமாருங்க.

இன்னும் மீசையே சரியா மூஞ்சில புடிக்கல்ல. இன்னா வேலை செஞ்சிருவ?

எதுன்னாலும் அண்ணே

சேகர் இடைமறித்தான். நம்ம ஜெகவீருல சொல்லி விட்டிருக்கேண்ணே.. டிக்கிட்டு போட, லக்கேஜ் ஏத்த, கஸ்டமர கூவிக்கூப்பிட ... இப்பிடி எதுனா செய்வாண்ணே. நாணயமான பிள்ளை. வாழ்ந்துகெட்ட குடும்பம்ணே..

அதான் வாரமா சொல்லிக்கிட்டிருக்கிறியே.விடு. முத்து! ஏதும் வம்புதும்பு வச்சுக்காம இங்க இருந்துக்க”

சரிங்கண்ணே

இப்படித்தான் இப்ப சொல்வே.. தூங்கத் திண்ணையும் திங்க சோறும் கிடைச்சா ஒவ்வொண்ணா வரும். குடி கூத்தியான்னு..

முத்துவுக்கு பதில் சொல்லக் கூட வாய்வரவில்லை. தருமுவின் முரட்டுப் பேச்சு இவ்வாறாகவே தொடர்ந்தது.

தருமு தம்பிகள் இல்லாத ஒரு அனாதை அண்ணன், வயசும், அனுகூலங்களும் அவரை சேகர் போன்றோருக்கு அண்ணனாக ஆக்கிவிட்டிருந்தன. நாலு வருஷமாய் அவருடன் இருக்கும் சேகருக்கும் அவர் பற்றிய எந்த செய்தியும் பெரிதாய்த் தெரியாது. தெரிந்து என்ன ஆகப்போகிறது.? ஒண்ட இடம் கொடுத்து, அவனுக்கு ஒரு ஆதரவாயும் இருக்கும் அவர் பற்றி என்ன அறிய வேண்டும்?. தருமுவின் வாழ்க்கைமுறையை, வசவுகளை, வினோத நடவடிக்கைகளை சேகர் மெளனமாக ஏற்றுக் கொண்டு விட்டான். இந்த முத்துப்பயல் அவருடைய ஆளுமையை எப்படி எதிர்கொள்வானோ என்பதே இப்போது சேகரின் கவலை   

முத்துவுக்கு அந்த இரவு தூக்கம் பிடிக்கவில்லை. பத்துக்கு பனிரெண்டு ஹாலில் பாய்விரித்து மூவருமாய் படுத்தனர். எதிர் சுவரில் தருமுவின்  தகப்பனார் போட்டோ பெரிது படுத்தி மாட்டியிருந்தது. என்றோ எடுத்த ஒரு குரூப் போட்டோவிலிருந்து பெரிதாக்கி உள்ளூர் ஸ்டூடியோக்காரன் தன் கைவரிசையைக் காட்டியிருந்தான். ஏறத்தாழ கருப்பு மையில் வரையப் பட்டதாகவே இருந்தது. படத்தின் மேலே மாட்டியிருந்த ஒரு சிகப்புவண்ண ஜீரோவாட் பல்ப், அந்த படத்துக்கு ஒரு சவக்களையை ஏற்படுத்திவிட்டிருந்தது. போதாததிற்கு மாலை சாற்றினாற்போல் படத்தை சுற்றி பலவண்ண சீரியல் லாம்ப் வேறு மினுக்கிக் கொண்டிருந்தது.. முத்து திரும்பிப் படுத்துக் கொண்டான்..வயிற்றுக்கு இருந்ததோ இல்லையோ ஆத்தாவை விட்டுப் பிரிந்ததே இல்லை. அழுகை நெஞ்சுக்குழியில் ஸ்வரம் பிடித்து வாய்விட்டு வெடித்துவிடும் போல் இருந்தது. ஒருவாறு தூங்கிப் போனான்..

ஏலே முத்து. எந்திரி. நல்லாத் தூங்குறாம் பாரு.. விடிஞ்சப்புறமும் பாயை சுருட்டலைன்னா மூத்தவ இல்ல வீட்ல உக்காந்துக்குவா.?

ஆத்தாளிடம் கனாவில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த முத்துவை, தருமுவின் கரகரப்பான குரல் உலுக்கி எழுப்பியது.. ஆத்தா கண்ணைக்கசக்கிக் கொண்டே அழைத்தான்.

ஆத்தாவாம்.. ஞாத்தா.. எந்திரிங்கறேன்

முத்துவுக்கு பல்துலக்கும் போது ஏதோ கலவரமாயும், பெரிய இருட்டுப் பள்ளத்திற்குள் மாட்டிக் கொண்டு தவிப்பது போலும் இருந்தது.

சேகர் டீ போட்டு எடுத்து வந்தான்.

முத்து நீயும் டீ போட, சமையல் செய்யன்னு சேகராண்ட கத்துக்க. என்ன?

சரிண்ணே. எனக்கும் சமைக்க கொஞ்சம் வரும்ணே

ஏன் உம்முன்னு இருக்க? கனால ஆத்தா வந்துச்சா. இங்க ஒரு மாசம் இருந்தியானா கனாவுல தெனைக்கும் ஒரு சிங்காரியா வருவாளுக.. ஆத்தா ராணிபெட்டையில வரட்டிதட்டிகிட்டிருக்கும். தன் ஹாஸ்யத்துக்கு தானே பெரிதாய் சிரித்தார் தருமு. சேகரும் முறுவலித்தான். முத்துவுக்கு கோபம்கோபமாய்ப் பொங்கியது..

சரி முத்து சட்டுன்னு குளி. ஒன்பதுக்குல்லாம் மொதலாளி வந்துருவாரு. அண்ணே! நான் இவன சேர்த்துட்டு வந்தப்புறம் சமைக்கிறேண்ணே.

சரி சேகரு  ... இன்னிக்கு நீ மண்டிக்கு போவலையா?

பன்னண்டுமனிக்கு போறேன் அண்ணே
 .
சரி.

முத்துவும் சேகரும் கிளம்பினார்கள்.

முத்து! துன்னூறு இட்டுகினு சாமி கும்பிட்டுட்டு போ.

உருமாறிப் போயிருந்த ஒரு வட்டமான தகர டப்பாவில் மக்கலாய் விபூதி இருந்தது. கோவிலில் தந்த குங்குமம் விபூதிஎல்லாம் ஒன்றாய்க்கொட்டி பல்பொடி நிறமாய் உருமாறியிருந்தது.
சிறிதாய் இட்டுக்கொண்டு சாமி படம் தேடினான்.

இன்னா தேடுற முத்து?. எனக்கு புள்ளையாரு,அய்யனாரு எல்லாம் எங்க நைனாதான். செத்தா எல்லாரும் சாமிதான். என் நைனா படத்தையே கும்புட்டுக்க.

என்ன அநியாயம்? ஊர்பேர் தெரியாத ஒரு கிழவன் எனக்கு சாமியா? முதமுதல் வேலைக்கு போகச்சொல்ல இந்தக் கும்பிடு வெளங்குமா?

சேகர் உலுக்கியதில் கைகுவித்து கண்ணைமூடி ரத்தினகிரி முருகனை நினைத்துக் கொண்டான். சாமி.. பெரிய வேலைக்குப் போய் தனியா வேற வீட்டுல இருக்கணும் நான் மட்டும்.. ஆத்தா வந்தாலும் சரிதான் .

ட்ராவல் ஏஜென்சி வேலை முத்துவுக்கு பிடித்திருந்தது. சேலம் , குடியாத்தம் ,தருமபுரிக்காரர்கள் உடன் வேலை பார்த்தனர்.முத்துவிடம் நல்லதனமாய்த்தான் நடந்து கொண்டார்கள்.

என்ன முத்து.. வேலை புடிச்சிருச்சா? தருமுவின் வினவல்

பிடிச்சிருக்கண்ணே

அங்கஇங்க பாக்காம பொழப்பைப் பாரு. நாலு மாசம் முன்னாடி உங்க ஏரியாவுல உன்னைமாதிரி ஒருபையன் நாயடி பட்டான்

என்னண்ணே பண்ணான்?

என்ன பண்ணானா? பஸ்சுல கைபுள்ளைக்கு பால் குடுத்துக்கிட்டிருந்தவள வெறிச்சிவெறிச்சி பாத்துருக்கான். மொத்திட்டாங்க.

நான் அப்படியாப்பட்டவன் இல்லண்ணே

அதுசரி


அன்று இரவு சாப்பிடும் போது சேகரோடு அவன் மண்டி பற்றிய பேச்சும், காதுகூசும் ஏகத்தாளமுமாய் இருந்தது. முத்து மோர்சாதம் சாப்பிடத் தொடங்கியபோது தருமு சத்தமாய் காற்றைப் பிரித்தார்.

பேசிக் கொண்டிருந்த சேகர் சட்டென்று பேச்சை நிறுத்தினான். தருமு பெரிதாய் சிரித்தார். என்ன முத்து? இதுக்கே அசந்துட்ட? எங்க நைனா வுட்டா ரெண்டுதெருவுக்கு கேக்கும். சும்மாவா அவரு சொன்னாரு? மேல்ஸ்வாசம் கீழ்ஸ்வாசம் ஆஸ்வாசம்ன்னு

சேகர் சிரித்தான். முத்துவுக்கு அருவெறுப்பாய் இருந்தது. குமட்டிக்கொண்டு வந்தது .
துத்தேறி! பண்பு இல்லாத சனங்க.
மேற்கொண்டு சாப்பாடு இறங்கவில்லை. சேகர் மட்டும் எப்படி சகிப்புடன் இருக்கிறான்? மையமாய் சிரிப்புவேறு. என்ன தலையெழுத்து... நான் சம்பாதித்தே இல்லை ஆக வேண்டும்?.. ஆத்தா.. சமாளிச்சுக்கிறேன் ஆத்தா.ஆயிற்று ஒரு மாசம். முத்து வேலையில் வேர்பிடித்து விட்டான். முத சம்பளம் அறுநூறு ரூபாய்.. அப்பாரு ஆயுசுல பாக்காத பணம்.

சேகருக்கு முத்துவின் பிரச்னை புரிந்தாலும், சகிப்புடன் சகஜமாய் இருக்குமாறு நாளைக்கு ஒரு தரமாவது சொல்லிக் கொண்டுதானிருந்தான். முதல் சம்பளம் தருமு அண்ணன் கையில குடுத்து வாங்கு.

இல்ல சேகரு. ஆத்தா கிட்டதான் தரணும்.

சேகர் திட்டினான்."முட்டாள். அது ஒரு மருவாதிடா.. அண்ணன் திரும்பக் கொடுத்துடுவாரு".

தருமுவிடம் பணத்தை நீட்டிய போது, அத்துடன் ஐம்பது ரூபாய்த் தாளையும் சேர்த்து திருப்பித் தந்தார்.

சம்பளப் பணத்துல கைவைக்காம ஊருக்குபோய் ஆத்தா கைல குடு. சந்தோசப்படும்.

அவர் தந்த ஐம்பதை மறுத்தால் மனசைக் கலக்குறாமாதிரி ஏதும் சொல்வார் அவர்... தயக்கத்துடன் வாங்கிக் கொண்டு ஊருக்காய் இரவு பஸ்ஸை பிடித்தான். வந்துகிட்டேயிருக்கேன் ஆத்தா.

பெங்களூருக்கு கிளம்புமுன், இளச்சிட்டியே முத்து..  இந்தக் குடும்பமே உன் தலைல விடிஞ்சிடிச்சே சாமி என்று அழுதாள்.

நானென்ன குழந்தையா ஆத்தா.. தெகிரியமா இரு. தம்பிங்களை இஸ்கோலுக்கு தொரத்து. இந்த தீவாளிக்கு உனக்கு பட்டுசீலை வாங்கியாறேன்..

நீ சொன்னதே போதும்டா கண்ணு. மச்சுவீட்டுக் கடனை தீத்துட்டுதான் மத்தது.. சந்தோசமா இரு முத்து. உனக்கின்னு செவ்வா வெள்ளி பல்லுல தண்ணிபடாம விரதம் இருக்கேன் ராசா.

நானும் உனக்காக விரதம் இருப்பேன் ஆத்தா தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பஸ்சில் திரும்பும் போது தன்னிலை பற்றி யோசித்தான். சேகர் சொல்வதுபோல் ஒண்டிக்கொள்ள தருமுவின் வீடு மட்டும் இல்லையின்னா எப்பிடி பணம் மிஞ்சும்?.ஆனாலும் பூதமாய் வளர்ந்து நிற்குதே தருமு அண்ணனைப் பற்றின வெறுப்பு... அதை குறைத்துக் கொள்ள வேண்டும். அவர் எப்படி இருந்தால் என்ன? அவர் வீட்டில் இருந்து கொண்டு அவரை வெறுப்பது என்ன நியாயம்? பிடிக்கவில்லை என்றால் வெளியே போக வேண்டியது தானே? போனால் குடக்கூலிக்கு காணுமா சம்பளம்?

திரும்பத்திரும்ப மனம் இந்த யோசனையிலேயே சுற்றி வந்தது.

காலை கலாசிப்பாளையம் வீட்டுக்கு திரும்பினான்.
அண்ணன் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். சேகரைக் காணவில்லை.

என்ன ஆச்சு? சேகர் எங்கண்ணே?

நேத்துப்பகல்ல இருந்து ஜுரமா இருக்கு முத்து. சேகரு சரக்கு பிடிக்க மைசூருக்கு போயிருக்கான்

டீ போட்டுத் தந்தான். அவரால் பாதிதான் குடிக்கமுடிந்தது. வாயைத் துடைத்து விட்டான். சற்று கழித்து ஆழாக்கு புழுங்கல் அரிசியை வறுத்து, அம்மியில் லேசாய் நுணுக்கிப் பொங்கவிட்டு, சீரகத்தை தாளித்துப் போட்டு,மிளகுப் பொடி சேர்த்து கஞ்சி தயாரித்தான். அய்யா காயலாவாய்க் கிடந்தபோது ஆத்தா இப்பிடித்தானே கஞ்சி பொங்கி குடுக்கும்?.

தருமு அண்ணன் கஞ்சிப் பாத்திரத்தை சுழற்றி சுழற்றிக் குடித்தார். பாவம் பசி.... கண்கள் கலங்க அவனைப் பார்த்தார்.

இதுல்லாம் கூட செய்யக் கத்துகிட்டியா ராஜா?

இது ஏதோ புதுக் குரல். எங்கோ புதைந்து வெளிவரக் காத்திருந்து காத்திருந்து புறப்பட்டக் குரல்.

முத்து சிரித்தான்.

நீ பொம்பளை வளர்த்தப் பிள்ளையில்லியா?

எல்லாப் பிள்ளைகளையுமே பொம்பளைங்க தானே வளர்க்குறாங்கண்ணே?

அப்படி இல்ல முத்து.. ஆத்தாளை பாக்காத அதிஷ்டக்கட்டைங்க உண்டு என்னாட்டம்... நாலு பயலுங்க பொறந்த வீட்டுலகூட ஒரு பிள்ளையை பொண்ணாட்டம் தாய் வளர்க்கும். அந்தப் புள்ளை மத்ததுங்களை விடவும் பொறுப்பும் பாசமாயும் இருக்கும் உன்னைப்போல.

நீங்க கண்ணாலமே கட்டல்லயாண்ணே?
கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது முத்துவுக்கு.

சேகரு எங்கூட நாலு வருசமா இருக்கான். இப்படி கேக்கல்ல.. உனக்கு கேக்கத் தோணிச்சிபாரு.

தப்புன்னா விட்டிருங்கண்ணே. சூடா கஞ்சி சாப்பிட்டு வேர்த்து விட்டிருக்கு பாருங்க. கொஞ்சம் படுங்க.

பரவால்ல. கேளு.. சமாச்சாரத்தை உன்னோடமட்டும் வச்சுக்கோ. சரியா?

சரிண்ணே. சொல்லுங்க

என்னை பெத்துபோட்டுட்டு அம்மாக்காரி போய் சேர்ந்தா. எங்க நைனா தான் வளத்துச்சி. தறுதலையாதான் வளந்தேன். உன் வயசு எனக்கு வந்தபோது நைனாவும் காலமாயிட்டாரு. ஏதேதோ செஞ்சேன் போ.... முப்பது வயசு வரைக்கும் கல்யாண ரோசனையே இல்லை. எனக்குன்னு எடுத்துகட்டி பொண்ணுபார்க்க யார் இருந்தா?

தயக்கமாய் செருமினார் தருமு.. ஒரு நா உடம்பு கொழுப்பெடுத்து இங்கயும் அங்கியுமா தேடி அலைஞ்சேன்.

எதையண்ணே?

கூமுட்டை.. வயசுல கொழுப்பெடுத்து எதுக்குடா அலைவாங்க.?.

அய்ய... சரிசரி சொல்லுங்க.

அவென்யூ ரோடாண்ட நின்னிகிட்டிருந்தா பிலோமினா.

“”எப்பவோ பாத்தவங்க பேருல்லாம்கூட நெனவா சொல்றீங்க?

பின்னே ரெண்டு வருஷம் என்னோட குடும்பமில்ல நடத்துனா மகராசி?

என்ன?? குடும்பம் நடத்துனீங்களா?

ஆமாம் முத்து.அவ சேலத்துக்காரி. ஒருபோதுக்கு தான் இட்டுகினு போனேன். ஆனாலும் ரொம்ப பெரும்போக்காத்தான் இருந்தா.. ரெண்டுமூணு தரம் அவளுக்காய் காத்திருந்து கூட்டிப் போனேன். ஏதோ தோணிச்சு.... கூடவே இருந்துக்கிறயான்னு கேட்டேன். சரின்னுட்டா. கட்டுன பொண்டாட்டி மாதிரித் தான் ... மாதிரியென்ன பொண்டாட்டிய்யாத்தானே அரைப்பவுன் தாலி கட்டி குடித்தனம் பண்ணுனேன்.

முத்துவுக்கு அதிசயமாயும் கொஞ்சம் திகிலாயும் கூட இருந்தது.

கைக்கு ரெண்டுரெண்டு வளை, நெளிமொதிரம், சங்கிலி, காதுக்கு மூக்குக்குன்னு வாங்கிப் போட்டேன். நாலு பட்டு சீலை. எடுத்தேன்.அதுக்கு பாக்கிய ராஜு படம்னா உசிரு.படம் வந்தநாளே கூட்டிப் போவேன்

உம் முத்துவுக்கு உடம்பெல்லாம் முள்படர்ந்தது.

ஒரு நாள் மேஜைமேலே ஒரு கடுதாசியும், பக்கத்தில் பட்டுப் புடவைகளையும் அடுக்கி, அதன்மேல் எல்லா நகைகளையும் வைத்துவிட்டு போயே போய் விட்டாள்.

எதுனாச்சும் திட்டுனிங்களா?

வாடின்னு கூட பிலோமினாவை நான் கூப்பிட்டதில்லை

பின்னே ஏன் போனாங்க?

தெரியாது முத்து.இன்னி வரைக்கும் மருகிக்கிட்டு இருக்கேன் இந்தக் கடுதாசிய பாரு அலமாரியிலிருந்து தடுமாறியபடி எழுந்து எடுத்துக் கொடுத்தார்..

நெளிந்தான் முத்து.

பரவாயில்ல படி

அந்தக் கடிதம் கசங்கலாய் சற்று எண்ணையேறி இருந்தது. மீண்டும்மீண்டும் படிக்கப் பட்டிருக்க வேண்டும்

என் சாமிக்கு பிலோமினா எழுதியது. நிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா நீங்க கட்டுன தாலிமட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்புதண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தா உங்களை மாதிரி தான் இருப்பார்..காலம் பூராவும் உங்களை நினைச்சுகிட்டே தான் இருப்பேன்.. சாவுற வரைக்கும்

அக்குறும்பா இருக்கே. எவங்களையோ ராணி மாதிரி வச்சிருந்தீங்க. ஒரு கோபம் இல்லை ஒரு சண்டை இல்லை. அவங்க எதிர்பார்த்திருக்க முடியாத வாழ்வு குடுத்தீங்க.நீங்க சொல்றதையும்,இந்த லெட்டரையும் வச்சு பார்த்தா சந்தோஷமா நிறைவா இருந்திருக்காங்கன்னு தான் தோணுது. பின்ன எதுக்குப் போனாங்க?

சில கேள்விங்களுக்கு பதிலு இல்ல முத்து. உறவுகளையும் கட்டுப்பாடுகளையும் நாமதான் விதிச்சிக்கிறோம். அல்லாரும் வெளையாடுறது ஒரே வெள்ளாட்டுத் தான். அந்த வெளையாட்டுக்கான  ரூலு அவங்கவுங்க போட்டுக்கிட்டு ஆடிகிட்டிருக்கோம். உன் வெளையாட்டு எனக்கு பிடிக்காது.. என் விளையாட்டு உனக்குப் புரியாது. நம்மபோட்டு வச்ச எல்லைகோட்டைத் தாண்டி மத்தவங்க வெளையாடும்போது  நமக்கு பிடிக்கிறதில்லை.. செலப்போ நமக்கே நம்ம  போட்டுகிட்ட கோடுங்களே தடையாயும் சலிப்பாயும் ஆயிடுது. வெளங்காத வெளையாட்டு...  வுடு... கொஞ்சம் வெந்நீர் குடிக்க தா முத்து.. அறிஞ்சும் அறியா புள்ளை நீ. ஏதேதோ சொல்லி உன்னைக் குழப்பிட்டேன்

வெந்நீர் சுடவைத்துக் கொண்டிருந்த முத்துவுக்கோ இப்போதுதான் வாழ்வின் குழப்பங்கள் மெல்லத்தெளிவதுபோல் இருந்தது.படஉதவி: Master Sarvesh Sainathan