திங்கள், செப்டம்பர் 27, 2010

பல்லேலக்காவும் சேரன் எக்ஸ்பிரஸ்சும்ஞொய்யாஞ்ஜியின் மனைவி பல்லேலக்கா, தன் அம்மா வீட்டுக்கு போய் பத்து நாள் கழித்து அன்று தான் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்புகிறாளாம்.
ரயில் நிலையம் போன நம்மாளு, பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த வண்டியின் சக்கரங்களை பெட்டி பெட்டியாக குனிந்து எண்ணிக் கொண்டு,
சீ! இது இல்லை இது இல்லை என்று சொல்லிக் கொண்டே பரபரப்பாக நகர்ந்து கொண்டிருந்தார்.

என்ன சார் தேடுறீங்க?ன்னு கேட்ட போர்ட்டரிடம்,
என்னாது... எல்லா பொட்டிக்கும் நாலு சக்கரமில்லே இருக்கு? என்றார்..

மேலும் கீழும் அவரைப் பார்த்த போர்ட்டர், டேசனுக்கு வெளிய போங்க.. மூணு சக்கரம்,ரெண்டு சக்கரம்,பல் சக்கரம் எல்லாம் இருக்கும் என்றபடி போய் விட்டான்.

அதான் சரியென்று வெளியே வந்த ஞொய்யாஞ்ஜி, அங்கே மனைவி பல்லேலக்கா நின்று கொண்டிருப்பதைப் பார்த்து
பரவசப் பட்டார்.

பல்லு ! உன் அண்ணன் ஒரு உதவாக்கரை! உன்னை ஏ.ஸி திரீ டயர் கோச்சில் அனுப்பறேன்னு போனில் சொன்னதிலிருந்து  ரொம்ப டென்ஷனாயிட்டேன் தெரியுமா?  ரயில் பொட்டிக்கு மூணு  டயர் மட்டும் இருந்தா, அது கவுந்துட வாய்ப்பிருக்குதில்லே? எவ்ளோ விபரீதம்? நாலு டயர் கோச்சுல அனுப்பினா, செலவு கூட ஆகுமின்னு இப்பிடி பண்ணியிருக்கான் கஞ்சப் பய.... ஆமாம்.. நீ எப்பிடி இங்க நிக்கிறே?

என் ராசா! எனக்கும் திரீ  டயர்ல டிக்கெட் எடுத்து தந்தவுடன் ரொம்ப யோசனயாப் போச்சு.. ஸ்டேஷனுக்கு  வரும்போதே  அவன் தந்த 
டிக்கெட்டை கிழிச்சி போட்டுட்டு, இந்த டேக்ஸில தாங்க வந்தேன்.. நீங்க இங்க வந்து எனக்காக காத்துகிட்டு இருப்பீங்கன்னு தெரியும். வாங்க போலாம்.

அந்த நாலு சக்கர டேக்ஸிக்கு பில் நாலாயிரம் ரூபாய் தந்து விட்டு வீட்டுக்குள் நுழைந்த ஞொய்யாஞ்ஜி,.மனைவியின் சமயோஜிதத்தை ஓஹோவேனப் புகழ்ந்தார்.

அவர்கள் பேச்சிலிருந்து நடந்ததை ஊகித்துக் கொண்ட டாக்சி டிரைவரும், தாங்க முடியாமல், டாஸ்மாக்குக்கு வண்டியை விட்டான்  

சனி, செப்டம்பர் 25, 2010

தமிழே ! என் தமிழே !!(பதினைந்து வருடங்களுக்கு முன்,கடலூரில் ஒரு அந்திமாலைப்  பொழுது. என் இல்லத்திற்கு திரு இறையன்பு I.A.S அவர்களும், மறைந்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்களும் வந்திருந்தனர்.
அப்போது நான் ஆந்திரா-ஒரிஸ்ஸா மாநில எல்லையில் தேசிய நெடுஞ்சாலை ஒட்டிய ஊரின் வங்கிக் கிளைக்கு மேலாளராய்
மாற்றலாகி, விடுப்பில் வந்திருந்த நேரம்.
புது ஊரில், யாரோடும் தமிழ் பேச வாய்ப்பில்லாத சூழலில், அதற்காக நான் தவித்த தவிப்பையும், சில சம்பவங்களையும் இருவரோடும் பகிர்ந்து கொண்டேன். உணர்வு பூர்வமான சிறு மௌனத்திற்கு பின் திரு.இறையன்பு அவர்கள், இந்த சம்பவத்தை அப்படியே எழுதுங்களேன் என்று சொன்னார். அந்த அன்புக் கட்டளையில் எழுதியது தான் இது. இதைக்  கதை என்பதா? கட்டுரை என்பதா? நீங்களே சொல்லுங்களேன்! இது மீள்பதிவு )

                    *****************

அன்றாட வாழ்க்கையில் நாம் சற்றும் கவனம் கொள்ளாத விஷயங்கள் சில,அவை இல்லாத சூழ்நிலை வரும் போது, எப்படித்தான் பூதாகாரமாய் நம் சிந்தையை ஆக்கிரமித்துக் கொள்கிறது? எப்படியெல்லாம் அதற்காக ஏங்கச் செய்கிறது?

இன்று அந்த நிலையில் தான் அய்யா நான்.....

வங்கிப்பணி எனும் நாடோடி வாழ்க்கையில் எதிலும் அதிகம் பற்றுக்  கூடாது தான்..

அதை நான் பற்ற வில்லை அய்யா.. அது தான் என்னைப் பற்றிக் கொண்டது.  என்ன என்கிறீர்களா?

தமிழ் அய்யா , தமிழ்! அந்தத் தேமதுரத் தமிழோசை கேட்காமல் தான் இந்த தவிப்பு.

முந்தைய இட மாற்றங்களில் கல்கத்தா,பெங்களூர் போன்ற பெருநகரங்களுக்கு சென்ற போது இந்த தவிப்பு இல்லை.அங்கெல்லாம் தமிழர்களும்,என் குடும்பமும் உடனிருந்த படியால் இப்படியொரு தமிழ் ஏக்கம் இல்லை போலும்.

இந்தமுறை மாற்றத்தில், இதம் தரும் மனை நீங்கி, தமிழ் வாசனையே இல்லாத, நெடுஞ்சாலை ஒட்டிய ஒரு ஆந்திர கிராமத்தில் வந்து விழுந்தேன். இங்கு எல்லோரும் பச்சை
தெலுங்கர்களே. காதாரத் தமிழ் கேட்க,நான் ஏங்கும் ஏக்கம்  மனதில் பாரமாய் அழுத்திக் கொண்டிருக்கிறது.

வீட்டிற்கு தொலைபேசியில் தொடர்பு   கொள்ளும் சில நிமிடங்களுள் காதில் விழும் செலவுப் பட்டியலும்,என் சுய சமையலுக்கு கொடுக்கப்படும் குறிப்புகளும் தமிழில் சேர்த்தியில்லை.

அந்த செவ்வாய்க்கிழமை மாலை,ஒரு பெரும் ஆனந்தத்தை, லாரியில் ஏற்றிக் கொண்டு வந்தது. தமிழ்ச்செல்வி என்ற பெயர் பலகையுடன்

நெடுஞ்சாலை ஓரம் நின்றிருந்த அந்த  சரக்கு லாரியை கண்ட போது நான் கொண்ட பரவசம் இருக்கிறதே...

லாரியை  நோக்கி ஓடினேன் .டிரைவரைத் தேடினேன்...

”எந்த ஊருப்பா நீ?.... என் குரல் படபடத்தது.

அட! தமிழா சார்? இது மதுர வண்டி சார்.. இம்புட்டு தொலவு வந்து என்ன சார் பண்றீங்க?

பேங்க் மானேஜர்ப்பா...உன் பேர் என்னய்யா?

நான் டேவிட் சார்.. இவன் கிளீனர் .பேரு சுடத்தண்ணி

சுடத்தண்ணியா? என்னய்யா இது பேரு?

ஆமாம்  சார். அவன் பேரே அதான்.. எவன் வச்சானோ.. அனாதப்  பொணம்
அப்படி சொல்லாதய்யா... சின்னப் பையனைப் போய்

இவனா சார் சின்னவன்? வெவரமானவன் சார். நம்பிடாத

அருகிருந்த டீக்கடைக்கு அழைத்து சென்று இருவருக்கும் விருந்தோம்பல்.

அப்பாராவ்.. மூடு டீ வேயி நைனா

டேவிட். பிஸ்கட் எடுத்துக்கய்யா

டீக்கடை அப்பாராவுக்கு ஆச்சரியம். முதன் முதலாய் ரோட்டில் நின்று டீ குடிக்கும் இந்த மேனஜரைப் பார்த்து .

அப்புறம் சொல்லு டேவிட். மதுரை நிலவரம் எல்லாம் எப்படி?

வேகவேகமாய் தமிழ் பேசித் தீர்த்துவிட துடிக்கிறது மனசு.
சரஸ்வதி சபதம் சினிமாவில் ஊமை சிவாஜிக்கு பேச்சு வந்ததும் வேகவேகமாய் தமிழில் அடுக்குவாரே  அதுபோல...

வண்டி எங்கே போகுது டேவிட்?

கல்கத்தா சார். ராத்திரி இப்படி ரோட்டோரம் வண்டிய நிப்பாட்டிட்டு விடிகாலையில் தான்  சார் கிளம்புவேன்.இந்த தெலுங்கனுங்க ஓட்டல்ல சாப்புட்டு நவத்துவாரமும் எரியுது சார்.

டேவிட். இன்னைக்கு வேணா என்னோட எடத்துல தங்கிக்குங்களேன் .ராத்திரி என்னோட சாப்பிடலாம்...

ஐயோ சார்.. பெத்த ஆத்தா மாதிரி கேட்குறீங்க..சந்தோஷம் சார்.
உங்களுக்கு என்னாத்துக்கு சிரமம் சார். நீங்க வாங்கித் தந்த டீயே போதும். ஊட்ல போய் என் சம்சாரத்துகிட்ட சொல்வேன் சார். எனக்கு நம்ம ஊர்க்கார பேங்க் மேனேஜர் டீ வாங்கித் தந்தார்னு.


எனக்கோ தனிமையைக்  கொல்ல வேண்டும். தமிழில் பேச வேண்டும்.

மேல பேசாத டேவிட்.. கிளம்புன்னா கிளம்பு. எனக்கொரு கஷ்டமும் இல்ல... சும்மா வாப்பா.

எங்க ஊரானா பேங்க் மேனேஜராண்ட நின்னு இவ்ளோ நேரம் பேச விடுவாங்களா? ரொம்ப மெனக்கெடுறீங்க சார்.

டிரைவர் அண்ணே! சாரு அய்யராட்டங்க்கீது. ராத்திரி கவுச்சி சாப்பிடலாம்னு சொன்னியே? இது சுடத்தண்ணி.

எல பொறம்போக்கு! பொத்திக்கிட்டு வாடா... சரி சார். இவ்ளோ தூரம் என்னையும் மனுஷனா மதிச்சு கூப்புடுறீங்க . உங்க வீட்டுல ஒரு ஓரமா படுத்துட்டு கருக்கல்ல கிளம்பறோம் சார்.. ஊர் பேர் தெரியாதவன வெத்தில பாக்கு வச்சு கூப்புடுறீங்க. வீடெங்க சார்?

லாரிய எடு டேவிட். இதே ரோடுல மூணு மைல் போகணும்.

வண்டியில் ஏறினேன். லாரியின் உறுமல் கூட தமிழில் ஒலித்தது!

நான் இருந்த கெஸ்ட் ஹவுஸ் கொய்யா,சப்போட்டா,தென்னை,மா மரங்கள் இருந்த தோப்பின் நடுவே இருந்தது..பாரதி கேட்ட காணி நிலம் போல அங்கு அனைத்தும் இருந்தது, பாட்டுக் கலந்திட ஒரு பத்தினி பெண் நீங்கலாக ...

எம்மாம் பெரிய வீடு சார்....  என்ன சார் நீங்களே பூட்டத் திறக்குறீங்க? ஊட்ல அம்மா இல்லியா சார்?.. எங்கள சாப்பிட வேற சொன்னீங்க?.டேவிடின் குழப்பத்தில் சாப்பாட்டுக் கவலை தொனித்தது.

நான் தனியாத் தான் இருக்கேன் டேவிட். நான் நல்லாவே சமைப்பேன் ராஜா. தைரியமாய் சாப்பிடலாம். மணி ஏழு தானே? எட்டரைக்கெல்லாம் சாப்பிடலாம்.

சரி சார். டேவிட் வீட்டை முழுவதும் துப்புரவாக கண்ணால் அளந்தான். எல்லாம் இருக்கு சார். ஆனா ஒண்ணுமே இல்ல

இவன் டிரைவரா இல்லை பட்டினத்தாரா?

சார் நான் குளிச்சிக்கவா?

ஜம்னு குளிப்பா.. சோப்பு அங்கியே இருக்கு.டவல் தரேன்.

அய்ய..அதெல்லாம் வேணாம் சார். டேய் பன்னாட. வண்டில இருந்து என் லுங்கி,துண்ட கொண்டா சுடத்ததண்ணியை விரட்டினான்.

சிரித்துக் கொண்டேன்.  உட்காரு டேவிட்

தரையில் அமர்ந்தான்.

சார் ஒரு டி.வி ,ரேடியோ பொட்டி கூட இல்லாமயா இருக்கீங்க?

என்ன விடு. உன்னப் பத்தி சொல்லு   

என்னப் பத்தி என்னா இருக்கு சொல்ல? ஸ்டீரிங் புடிச்சிகுனே பொறந்தேன். ராத்திரி பகல் பாக்காம ஓட்டிக்கினே இருக்கேன். என்ன நம்பி நாலு வயிறு இருக்கே சார்!

ஓ.. சொல்லு

நீங்க நெனச்சிக்கிட்டு இருக்குற மாதிரி நான் ஒண்ணும் உத்தமன் இல்லே சார். லாரிக்காரன் பண்ற தப்பு தண்டா ஒண்ணையும் நான் உடலே சார் . எங்க ஆத்தா ரோதன தாங்காமத்  தான் சரோஜாவ கட்டுனேன் சார். மாட்டோட கண்ணுகுட்டியா ரெண்டு பொட்ட புள்ளைங்களயும் ஓட்டியாந்தேன் சார்

புரியற மாதிரி சொல்லுப்பா

சரோஜா ஏற்கனவே கண்ணாலம் ஆனவ. புருஷன் ஆக்சிடன்ட்ல போய்ட்டான். சின்னப் புள்ளைங்களோட பக்கத்து விட்ல இருந்தா.
எங்க ஆத்தாவுக்கு இளகின மனசு சார். என்னிய கரைச்சு அதுக்கு கட்டி வச்சுடுச்சு சார். அதுவும் நல்ல பொண்ணு தான். என் பங்கா இன்னும் ரெண்டு பெத்துக்குனோம் சிரிக்கிறான்.

அட.. பெரிய கதையால்ல இருக்கு? சரி. போய் குளி.

குக்கரில் உலை வைத்தேன். வெங்காயம்,கத்தரிக்காய் போட்டு சாம்பார், உருளைக் கிழங்கு கறியும் சமைத்து,அப்பளம் பொறித்து,
தயிரை மூன்று பேருக்குமாய் மோராக்கி.... சமைக்கும் போதே இருவருடனும்  ஊர்க்கதை பேசி......

எதற்காக இப்படி பேசிக் கொண்டிருக்கிறேன்? யார் இவர்கள்?
டேவிடுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?

சாப்பிட உட்கார்ந்தோம்.

நெசம்மா சொல்றேன். ரொம்ப ருசியா இருக்கு சார். உங்களுக்கு நீங்களே சமைச்சுகிட்டு ஒண்டியா  எப்புடி சார் சாப்பபிடுறீங்க?

வேறே வழி? இந்த ஊர் ஓட்டல்ல காரம் ஜாஸ்தி. எனக்கும் நவத்துவாரம் இருக்குதேப்பா!

கண்ணுல நீர் முட்ட டேவிட் சிரித்தான். நம்ம கிட்ட இருந்து நவத்துவாரத்த கத்துக்கிட்டீங்க போல ?.
       
உன் வருமானத்துல சந்தோஷமா இருக்கியா டேவிட்?

சந்தோஷம் வருமானத்துலயா? மனசுல தான் சார். இந்த நிமிட்டு நான் ராஜா சார். பெரிய பதவில இருக்கிற மேனேஜர் எனக்காக சமைச்சு வயிறார போட கர்த்தரு இன்னிக்கு ஆசீர்வதிச்சிருக்குறாரு. நாலு சக்கரத்துக்கு மேல என் வாழ்க்கை சார். எப்ப வேணும்னாலும் எதுவும் ஆகலாம். முன்னமெல்லாம் ரோட்சைட்ல வண்டிய நிப்பாட்டிட்டு கெட்டதுங்களோட கொஞ்ச நேரம் குஜாலா இருக்கிறது தான். சம்சாரத்துக்கு சத்தியம் பண்ணி குடுத்தேன்... கருமத்த உட்டேன் சார். ஒரு வாரம்,பத்து நாள் இப்படி ஊர் சுத்திட்டு வீட்டுக்கு போய் பிள்ளைங்கள பாக்கிறப்போ
மனசு பொங்கி வழியும் சார். வீட்டுக்கு எப்போ போறோம்னு மனசு அடிச்சிக்கும் சார். உனக்கு எத்தினி புள்ளைங்க சார்?

எனக்கா? ரெண்டு பசங்க, ஒரு பொண்டாட்டி.

டேவிட் பெரிதாக சிரிக்கிறான். இவன் சிரிப்பில் ஒரு தோரணை இருக்கிறது. என்ன சார் ஒரு பொண்டாட்டி? பின்ன பத்தா கட்டுவாங்க? என்னக் கேட்டா ஒண்ணே வேஸ்ட்டு சார். நம்ம பாட்டன் கல்யாணம் கட்டுனான். அப்பன் கட்டுனான். நம்மளும் கட்டுனோம். நம்மள மாதிரி நம்ம பிள்ளையும் கட்டுவான். அவன் கட்டலன்னா நாம் தான் உடுவோமா?

அடேயப்பா! அப்பிடிப் போடு!

கண்ணாலம் கட்டாம இருந்துட்டா பரவாயில்ல. கட்டினப்புறம் இல்லாம இருக்கிறது கஷ்டம் சார்.. சம்சாரத்துக்கிட்ட ஸ்பெசலா ஒண்ணும் இல்ல. பழகிடுறோம் பாத்தீங்களா..அந்த  பாவம் தான்.
கூடவே  இருக்கறச்சே அவ முகத்தக் கூட பாக்காம நம்ம சோலிய பாத்துகிட்டிருப்போம். நாலு நாள் அவ இல்லையின்னா கையொடிஞ்சாப்புல ஹோன்னு ஆயிடும் சார்..எல்லாம் நம்ம மனசு தான் சார்.

என்ன சொல்ற டேவிட்? உன் மனசுக்கு கொடுக்கிற முக்கியம் அந்த மனுஷிக்கும் கொடுப்பா.

சார். நான் உங்களை மாதிரி படிச்சவன் இல்ல...ஆனாலும் சொல்றேன். எல்லாம் மனசு தான் சார். லாரி சூட்டுல உட்கார முடியாம எரியும் பாரு.... அப்ப வண்டிய புளிய மரத்துல ஏத்திடலாம்னு தோணும். ஒரு வாரம் வண்டிய எடுக்கலேன்னு வச்சிக்கோ,அப்போ  ஸ்டீரிங் புடிக்க கையெல்லாம்  நமநமங்கும்.

அப்போ உனக்கு லாரியும் பொண்டாட்டியும் ஒண்ணு  தான் இல்லையா?

எனக்கு தெரிஞ்ச ஞாயம் சார். எல்லாமே நம்ம மனசு தான்.
ஆனா ஒண்ணு.... எரியுதேன்னு லாரியையும் புளிய மரத்துல ஏத்த மாட்டேன்...ஆளப் புடுங்குதேன்னு சம்சாரத்தையும்  விட்டுற மாட்டேன். என்ன சார் நான் சொல்றது? அய்யாவுக்கு தெரியாத ஞாயமா? உங்க புண்ணியத்துல இந்த ராத்திரி கால் நீட்டி படுக்கிறேன் சார். குட்நைட்டு...

படுத்தவன் ரெண்டு நிமிஷத்தில் தூங்கிப் போனான். முன்னமே படுத்துவிட்ட சுடத்தண்ணியின் உறுமல் குறட்டைக் கூட எனக்கு எரிச்சலூட்டவில்லை.

தூக்கம் என்னுடன் கண்ணாமூச்சு ஆடிக் கொண்டிருந்தது. என்ன ஆகிக் கொண்டிருக்கிறது எனக்கு? எந்த தேவையோ நிர்பந்தமோ இன்றி இவனை அழைத்து வந்தது வாயார தமிழ்ப் பேச வேண்டி தானே?

இவனைத் தமிழில் பேசச் சொன்னால், வாழ்க்கையை அல்லவா பேசிக்கொண்டிருக்கிறான்?

ஹும்... எல்லாவற்றுக்கும் நம் மனசு தானே காரணம்?                               *******
      
புதன், செப்டம்பர் 22, 2010

ஸ்கெட்ச் போட்ட பிள்ளையார்ஒரு ஊர்ல திருப்தியே இல்லாத ஒருத்தன் இருந்தானாம்.
( யார் தான் திருப்தியோட இருக்காங்க?!).
அவன் ஒரு முன்கோபி வேறு..
சட்டு சட்டுன்னு சூடாயிடுவான்.

எனக்கு நீ ஒண்ணுமே தர மாட்டேங்கிறே.வேஸ்டு நீ!ன்னு
அவன் தினமும் பிள்ளையாருக்கு டார்ச்சர் குடுத்துகிட்டே இருந்தானாம்.

பிள்ளையாருக்கும் ரொம்ப கடுப்பாயிடுச்சாம். மவனே உனக்கு இருக்குடா ன்னு கரங்கட்டிட்டாராம்.

நம்மாளு.. மறுநாள் காலையில் பிள்ளையார் சன்னதியிலே வழக்கம் போல பாட்டு படிக்கவும், பிள்ளையார் டைங்குன்னு,(தாம்பாளம் கீழே போடற சத்தம் பேக் ரவுண்ட் மியூசிக்கோடு) பிரத்யக்ஷமானாராம். பொலம்பல் பார்ட்டியைப் பார்த்து,டேய். வென்று... இந்த மூணு தேங்காயைப் புடி. மூணே மூணு வரம்தான் உனக்கு. என்ன வேணுமோ வேண்டிகிட்டு தேங்காய உடைச்சா நீ கேட்டது கிடைக்கும். இதுக்கப்புறமும உன்னை இந்த ஏரியாவுல பாத்தேன்... மவனே சங்குதாண்டா உனக்குன்னு சொல்லிட்டு மறைஞ்சிட்டாராம்

இன்னிமே உன்னோட எனக்கென்ன சங்காத்தம்?.. வரம் மூணு அள்ளிட்டோமில்ல! என்று எக்காளத்துடன் வீட்டுக்கு ஓடினான்.
முதல் தேங்காயோட இருபது கோடி ரூபாய் கேட்கலாம்னு முடிவு பண்ணி, தேங்காயை உடைச்சான். 'இருபது'ன்னு சொல்லிட்டு,'கோடி'ன்னு அவன் சொல்லி முடிக்கிறதுக்குள்ள , அவன் சம்சாரம் என்ன பண்றீங்கன்னு நடுவுல புகுந்தாள்.

. நம்மாளுதான் கோபக்காரனாச்சா....என் தல ன்னு கத்தினான். அவன் சொன்ன இருபதும்,தலையும் சேர்ந்து உடனே அவனுக்கு இருபது தலை  முளைச்சிடுச்சு.
அய்யய்யோ என்னாங்க?ன்னு நம்ம ஹீரோயின் கத்தவும்
நம்மாளும், பரவாயில்ல. இன்னும் ரெண்டு தேங்காயிருக்கே. முதல்ல இந்த எக்ஸ்டிரா தலையெல்லாம் ஒழிச்சிடலாம்ன்னு இன்னொரு தேங்காய உடைச்சான்.

அப்பா கணேசு! என்னோட தலையெல்லாம் என்னை விட்டு போயிடணும்ன்னு கேட்டான் .கேட்ட உடனே இருபது தலையோட சொந்த தலையும் சேர்ந்து போயிடுச்சு.
தலையில்லேன்னாலும் உணர்வு இருந்ததாலே அலறினான்,
அப்பனே விநாயகா! என் தலைய திரும்பி கொடுப்பா"ன்னு கையிலே இருந்த மூணாவது தேங்காயையும் உடைச்சான்.

ஒரு வழியா அவனோட பனங்கா மண்டை அவன்கிட்டேயே திரும்ப வந்து சேர்ந்தது. மூணு தேங்காயும் போச்சே.கேனயாட்டம் விட்டுட்டோமேன்னு நம்மாளு நொந்து நூடுல்சாயிட்டான்.

அவன் மனைவி தேங்காய் சில்லை எல்லாம் பொறுக்கி எடுத்துகிட்டு, ஏங்க! தேங்காய் சட்னி அரைக்கிறேன். இட்லியும் வார்த்துடறேன் சரியா?"ன்னு கேட்டாளாம். மேல இருந்து பிள்ளையாரும், இடது முஷ்டியை மடக்கி ,முழங்கையை பின்னுக்கு இழுத்து"எஸ்.. எஸ்" ன்னு குஷியா சவுண்டு விட்டாராம்.

மக்களே! மஹா ஜனங்களே!! கோவப் படாதீங்க.... பேராசைப் படாதீங்க... அப்புறம் பிள்ளையார் ஸ்கெட்ச் போட்டுருவாரு  ..

சரிங்க நான் எதுக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கே போயிட்டு வரேன்... என்னாத்துக்கு வம்பு?

பின் குறிப்பு

(பாட்டி! நீ என் சின்ன வயசுல சொன்ன கதைய ஏடாகூடமா எழுதிட்டேன்.மேல இருந்து நீ எனக்கு ஸ்கெட்ச் போட்டுடாதே!).

ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

ஒரு இங்கிலீஷ் ஒளவையாரின் சூப்பர் ஆத்திச்சூடி !!


நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது என் அன்பிற்கினியவர்களே!.
ரெஜினா ப்ரெட் எனும் தொண்ணூறு வயது மூதாட்டி, வாழ்க்கை தனக்கு போதித்த நாற்பத்தைந்து முக்கிய பாடங்களை அழகாக சொல்லியிருக்கிறார்.

இதன் தமிழாக்கமும்,கொஞ்சமே கொஞ்சம் மசாலாத் தூவலும் மட்டும் அடியேன் செய்தது.

யான்பெற்ற இன்பம் பெருக இவ்வலையகம்!

இதை எனக்கு  மின்னஞ்சிய என் பாஸுக்கு நன்றி!

இனி இங்கிலீஷ் ஒளவையாரின் ஆத்திச்சூடி!

 1. வாழ்க்கை நமக்கு எப்போதுமே சாதகமாய் இருப்பதில்லை. இருந்தாலும் கூட அது மிக அழகானது.
 2. குழப்பத்தில் தயங்கும் போது, நின்று விடாதீர்கள் : மெல்ல அடுத்த அடியை எடுத்து வையுங்கள்.  
 3. பிறர்  மீது வன்மம் வளர்த்துக் கொண்டு,அதற்காக காலம் விரயம் செய்யுமளவுக்கு மிகுதியான நேரம், நம் சின்ன வாழ்க்கையில் இல்லை.
 4. உடல் நலிவுறும் போது,உங்கள் அலுவலகமோ, வாடிக்கையாளர்களோ அதிகம் உதவ முன்வர மாட்டார்கள். அந்த சமயங்களில் ஆதுரமாய்க் கரம்  நீட்டுபவர்கள், நம் குடும்பத்தினரும்,நண்பர்களுமே! அவர்களோடு எப்போதும் தொடர்பிலேயே இருங்கள்.
 5. கிரெடிட் கார்டு பில்களை மாதாமாதம் கட்டிவிடவும்.
 6. எல்லா விவாதங்களிலும்,நீங்களே வெற்றி கொள்ள வேண்டும் என்று கட்டாயமில்லை.உடன்பாடின்மைக்கும் உடன்படுங்கள்
 1. அழவேண்டியிருப்பின்,யாருடனாவதோ அல்லது யார் தோளிலோ சாய்ந்து அழவும்.தனிமையில் குமைவதை விட அது ஆறுதல் தரும்.
 2. கடவுளிடம் கோபித்துக் கொள்ள வேண்டியிருந்தால், தயங்காமல் அவரைக் கோபித்துக் கொள்ளவும். அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியும்.
 3. முதல் சம்பளத்திலிருந்தே பணி ஓய்வினை கருத்தில் கொண்டு சேமிக்கவும்.
 4. சுய கட்டுப்பாடு தேவை தான். ஆனால்,சாக்லேட் என்றால்.. அது கொஞ்சம் கஷ்டம் தான்.. பரவாயில்லை.
 5. உங்கள் கடந்த காலத்துடன் சமாதான உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள்.. அது நிகழ் காலத்திற்கு  குடைச்சல் தராமல் சுலபமாக்கும்.
 6. நீங்கள் கண்ணீர் உகுப்பதை உங்கள் பிள்ளைகள் பார்க்க நேர்ந்தால்.... சரி விடுங்கள்.. பரவாயில்லை.. மூக்கை சீந்திக் கொள்ளுங்கள்.
 7. பிறருடன் நம் வாழ்க்கையை  எப்போதும் ஒப்பீடு செய்யாதீர்கள். அவர்கள் வாழ்க்கைப் பயணத்தில் என்னென்ன பிரச்னைகளோ? அவையெல்லாம்  உங்களுக்கு தெரியுமா?
 8. ஏதேனும் ஓர் உறவு இரகசியமாக இருக்க வேண்டும் என்றால், அந்த உறவில் நீங்கள் இருக்கக் கூடாது!
 9. கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமே தலைக்கீழாய் மாறக் கூடும். ஆனாலும் பதட்டப் படாதீர்கள்.கடவுள் கண் இமைப்பதில்லை.
 10. ஆழ்ந்து மூச்சை உள்ளிழுக்கவும். அது மனதை அமைதிப் படுத்தும். உள்ளிழுத்த மூச்சை அவசியம் வெளியே விட்டு விடவும்.
 11. உபயோகமற்றவை, நேர்த்தியில்லாதவை, மகிழ்ச்சி தராதவை-இவைகளை தவிர்த்து விடுங்கள்
 12. உங்கள் உயிரை மாயக்காத எந்த நிகழ்வும், உங்களை பலப்  படுத்தவே வந்தவை என்று உணருங்கள்
 13. மகிழ்ச்சி ததும்பும் குழந்தைப் பருவத்திற்கு, உங்களுக்கு இன்னும் கூட அவகாசம் இருக்கிறது. இன்னொருமுறை,குழந்தையாய் மாறித்தான் பாருங்களேன்! ஆனால் ஒன்று! இந்த இரண்டாவது குழந்தைப் பருவத்தின்  மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு.
 14.  உங்களுக்குப் பிரியமானதை நீங்கள் பின்தொடரும் பட்சத்தில்,இல்லை,கிடையாது,முடியாது போன்ற மறுப்புகளை பதிலாக ஏற்றுக் கொள்ளாதீர்கள்
 15. அழகான மெழுகு வர்த்திகளை ஏற்றுங்கள்: புது விரிப்புகளை இடுங்கள்: பளிச்சென நல்ல ஆடைகளை உடுத்துங்கள். இவற்றையெல்லாம் ஏதேனும் விசேஷ தருணத்திற்காக பத்திரப் படுத்த வேண்டாம். அந்த இனிய நாள் இன்று தான்.!
 1. கவனமாய் எல்லாவற்றிற்கும் முன்னேற்பாடுகள் செய்து கொள்ளுங்கள். ஆனாலும், போகிற போக்கில் செல்லுங்கள்.
 2. கிறுக்குத்தனத்தை இப்போதே வெளிப்படுத்திக் கொள்ளலாம். முதுமை வரையில் அதற்கென காத்திருக்க வேண்டாம்.
 3. உங்கள் உடம்பின் அதிமுக்கியமான செக்ஸ் உறுப்பு உங்கள் மூளை தாங்க!
 4. உங்கள் மகிழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பல்ல. நீங்கள் தான் பொறுப்பு.   
 5.  பெரும் பிரச்சினை என நீங்கள் கருதும் நிகழ்வின் போது நீங்கள்  காணவேண்டிய விடை இந்த ஒரு கேள்விக்குத்தான்... ஐந்து வருடம் கழித்தும் இதன் தாக்கம் இருக்குமா?. பதில் இல்லை எனில் மேட்டர்  ஜுஜுபி.
 6. வாழ்க்கையின் கணங்களை தேர்ந்தெடுங்கள்..எப்போதும்.
 7. அனைவரையும்,அனைத்தையும்... மனதார மன்னித்து விடுங்கள்.
 8. மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது உங்கள் பிரச்சினை அல்ல.
 9. காலம் அத்தனை காயங்களையும் ஆற்றிவிடும். காலத்திற்கு கொஞ்சம் சந்தர்ப்பம் கொடுங்கள்.
 10.  நல்லதோ கெட்டதோ, எந்த சந்தர்ப்ப சூழலும் கண்டிப்பாய் மாறியே தீரும்.
 11. உங்களை நீங்களே சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.ஏனெனில்,யாருமே உங்களை அப்படி எடுத்துக் கொள்வதில்லையே!
 12.  அற்புத, அம்மானுஷ்ய நிகழ்ச்சிகளில் கொஞ்சம் நம்பிக்கை வைப்பதில் தவறே இல்லை.
 13. நீங்கள் செய்த புண்ணிய பாவங்களுக்கேற்ப கடவுள் உங்களிடம் கருணை செய்வதில்லை. அவர் கடவுளாய் இருப்பதாலேயே கருணையைப் பொழிகிறார். அதற்கு நாம் பாத்திரமாக வேண்டாமா?
 14. வாழ்க்கையை தணிக்கை செய்துகொண்டிருக்க வேண்டாம். நில்லுங்கள் இந்த நிமிடத்தில்.. இந்த கணத்தில் வாழுங்களேன்.
 1. வயது ஏறிக்கொண்டே போவது சந்தோஷமே.. இல்லையெனில் அதற்கு  மாற்றாக, சின்ன வயசில் மண்டையை அல்லவா போட வேண்டி இருக்கும்?!
 2. உங்கள் குழந்தைகளுக்கு வாய்த்திருப்பதென்னவோ ஒரே ஒரு குழந்தைப் பருவம் மட்டுமே. அவர்களைக் குழந்தைகளாய் இருக்க அனுமதியுங்கள்.
 3. எல்லாமும் முடிந்த பிறகு,எஞ்சியிருப்பது, நீங்கள் செலுத்திய அன்பு மட்டுமே.
 4. தினமும் வெளியே வந்து தான் பாருங்களேன். அதிசயங்கள் முக்குக்கு முக்கு காத்திருக்கிறது.
 5. நாம் எல்லோரும் நம் பிரச்சினையை ஓரிடத்தில் குவித்துவிட்டு, நம் விருப்பப்படி அந்தக் குவியலிலிருந்து ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுக்க விட்டால்,  நாம் அதிலிட்ட நமது  பிரச்சினையையே மீண்டும் தேர்ந்தெடுப்போம்.     
 6.  பொறாமை என்பது காலவிரயம். நம்மிடம் தான் அது ஏற்கெனவே நிறைய ஸ்டாக் இருக்கிறதே! போதும் போதும் இன்னமும் வேண்டாம்.
 7. மிகச் சிறந்தது இனிமேல் தான் ஏற்பட வேண்டும்.
 8. நீங்கள் எவ்வளவு தான் மோசமான மனநிலையில் இருந்தாலும் சரி... எழுந்திருங்கள்.. கொஞ்சம் மேக்கப் போட்டு, நல்ல உடை உடுத்தி, கொஞ்சம் ஸீன் போடுங்கள். அப்புறம் பாருங்கள்.. தெளிந்து விடுவீர்கள்.
 9. வளைந்து கொடுங்கள்..விட்டுக் கொடுங்கள்
 10. வாழ்க்கை ஒரு பரிசு.. அந்தப் பரிசின் சுகத்தை முழுக்க அனுபவியுங்கள்.

வலையுலகின் சகோதர சகோதரிகளே!

முதுகு வலிக்க இதைக் கணனியில் டைப்படித்து பதிவிட்டிருக்கிறேன். இதில் ஒன்றிரண்டாவது உங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க எத்தனியுங்கள்.
பொறுமையாகப் படித்ததற்கு என் அன்பும் நன்றியும்...

புதன், செப்டம்பர் 15, 2010

அம்மா யானையும் அப்பா யானையும்

Pair of elephants near water hole at dusk Flickrபுள்ளயாடீ பெத்து வச்சிருக்கே? தறுதல.. தறுதல... 
அப்பா யானை கோபத்துடன் அம்மா யானையிடம் எகிறிக் கொண்டிருந்தது.

நம்ம பிள்ளையை கரிச்சு கொட்டறதே உங்க வேலையாப் போச்சு.. அப்படி என்ன தப்புத்தான் என் மகன் பண்ணிட்டான்? 
அம்மா யானை சலித்துக் கொண்டது.

"உன் புத்திர சிகாமணி என்ன காரியம் பண்ணியிருக்கான் தெரியுமா? ஆத்தங்கரையோரமா வந்த கோயில் பெண் யானை குட்டியைப் பார்த்து “36000=28000=36000”ன்னு மார்க் போட்டிருகாண்டீ. வெளிய தல காட்ட 
முடியல.".

பின்னே உங்க பிள்ளை உங்களை மாதிரிதானே இருப்பான்?. உங்களை முதன் முதலா பார்த்தப்போ என்கிட்டேநான் தான் குருவாயூர் கேசவன்னு பொய் சொல்லி தானே என்ன கரெக்ட் பண்ணீங்க?வயசு பையன் அப்படித் தான் இருப்பான்.விடுங்க     

Enhanced by Zemanta

புதன், செப்டம்பர் 08, 2010

பாயைப் பிறாண்டிக் கொண்டு ஒரு நண்பன்..

.

ஞொய்யாஞ்ஜியின் நண்பர், அவரை ஒரு நாள் இரவு தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தார். ஞொய்யாஞ்ஜியும் விருந்தை ஒரு கட்டு கட்டிக் கொண்டிருந்த போது வெளியே பலமாக மழைப் பிடித்துக் கொண்டது .சாப்பிட்டு முடித்ததும் தன்  வீட்டுக்குக் கிளம்பின ஞொய்யாஞ்ஜியிடம் நண்பர்,மழையாய் இருக்கிறதே, இங்கேயே தங்கி விடேன் என்று சொன்னார்.. ஞொய்யாஞ்ஜியும் தங்கிவிட ஒத்துக் கொண்டார்.. மழையோ பெரிதாகப் பெய்து கொண்டிருந்தது.. நண்பர் சமையலறைக்கு சென்று பீடாவை எடுத்துக் கொண்டு திரும்பி வந்து பார்த்த போது ஞொய்யாஞ்ஜியைக் காண வில்லை.

அரைமணிநேரம் கழித்து தொப்பலாக நனைந்தபடி ஞொய்யாஞ்ஜி திரும்பினார்.

நன்பார் கேட்டார், திடீர்னு எங்க போயிட்டே ஞொய்யாஞ்ஜி?

ஞொய்யாஞ்ஜி: நீ பாட்டுக்கு மழையா இருக்கு, இங்கயே தங்கிடுன்னு சொல்லிட்டே. நைட் ட்ரெஸ் மாத்திக்காம எப்படித் தூங்கறதாம்? அதான் ஒரு எட்டு என் வீட்டுக்கு ஓடிப்போய் நைட் ட்ரெஸ்ஸ எடுத்திக்கிட்டு வந்தேன். சரி சரி! பாயைப்  போடு ! தூக்கம் வருது என்றார்.

நண்பர் ஞொய்யாஞ்ஜிக்குப் பாயைப் போட்டு விட்டு, இரவெல்லாம் தன் பாயை பிறாண்டிக் கொண்டே இருந்தார்.