செவ்வாய், மார்ச் 31, 2015

வாக்கிங்



ஒரு பெருநகரத்தின் மையத்திலிருக்குது இந்த மேல்தட்டு குடியிருப்பு வளாகம். வந்தேறிகளை விரட்டியும் விலைக்குவாங்கியும் வளைக்கப்பட்ட பெரிய சதுரம்.. வட்டமாய் விட்டுவிட்டு ஆறு பல்லடுக்கு கட்டிடங்கள். நடுவே ஒரு பெரிய புல்தரை. புல்தரையை சுற்றி நடைபாதை.

அந்த நடைபாதை ஒரு பெரிய வட்டத்தை நடுவாந்திரத்தில் குறுக்கியும், கீழ்பக்கத்தைவிடமேற்பகுதி அகன்றும் இருக்குமாறு அமைச்சிருக்கா. மேற்புறமாய் பாதைதாண்டி சிலநீற்றூற்றுகள் வரிசைகட்டி நிக்கிறது. ஆகாசத்திலிருந்து பார்த்தால் பெரிய பாதம்போல் தோணுமாயிருக்கும். கோகுலாஷ்டமி கிருஷ்ணபாதம்..... பெரியபெரிய பதம்வைத்து கண்ணா நீ வாவா! வா! பாதமே இத்தனை பெரிதெனில் உன் மோகவுரு எவ்வளவு பெரிதாய் பரந்திருக்கும்? மலைமுகடுகள் தலையணையாக,உன்மார்பில் பொருதவள் எத்துணை பென்னம்பெரியவள்! விசாலம் சொல்லுவாளே சுந்தரகாண்டம்.....”எழுந்துஓங்கி விண்ணொடு மண் ஒக்க, இலங்கும்ஆடி......’’ 

மூணுமாசம் கழித்து இன்னைக்குதான் வாக்கிங் வந்துருக்கேன். அண்மையில தான் ஹிருதயத்துக்குள்ளே துருவி ஸ்டென்ட் வச்சிருக்கா.

நெஞ்சைக்கிழித்து பார்த்தீங்களே.... அங்கிருந்த முகங்களை, ஞாபகங்களை, சௌந்தர்யங்களை கண்டீர்களோ? கண்டிருந்தாலும் என்போல அவற்றை சீராட்டத் தெரியுமோ? அந்தக் கமலத்தில்தான் ஒவ்வொரு காலத்துல ஒவ்வொரு ஜீவனை தேவதையா ஆவாஹனம் பண்ணி, வேளை தப்பாம ஷோடசோபசாரம் பூஜாவசம். அடுத்த தேவதைக்கு வேளைவந்தபின், இருப்பிலுள்ளதை கோஷ்டமூர்த்தமா நினைவு கர்ப்பத்துல ஏற்றி... உங்களுக்கு இதெல்லாம் புரியுமோ. புரிஞ்சாலும் அவசியமோ? வேலையைப் பாருங்கோ.....

இதோ என்னை தாண்டிகிட்டு ஒரு பொண்ணு வேகமா நடந்துபோறா. டக்குடக்குன்னு பொய்க்கால்குதிரை நடை. பூரிக்கு பிசைந்து வச்ச மைதா உருட்டலாட்டம் ஒரு பசுவெண்ணை நிறம். கருப்புல முக்கால்சராயும் வெள்ளைபனியனுமாய் ‘நைக்கி’ அலங்காரம். காலரில்லா பனியனுக்கு கழுத்தைசுற்றி கருப்புல பைப்பிங்தையல். அதே பைப்பிங்ல ஒருகீற்று நேற்கோடாய் முதுகுநெடுக்க இழுத்திருக்கு. ஆளை ரெண்டாப் பிளந்தாப்பல..... குதிரைவால் பின்குச்சம் ரெண்டுதோளுக்குமாய் மாறிமாறி ஜிங்குஜிங்குன்னு ஆடறது. கையில தர்ப்பணதட்டு அகலத்துக்கு ஒரு செல்போன். அதுல வெள்ளை ஒயர் கிளைவிட்டு காதேறிகிடக்கு. 'தாமரைப்பூத்த தடாகமடி'யா கேக்கப் போறா?! ஏதோவொரு ஜிங்கலாலா..... தாண்டி ரொம்பதூரம் போயாச்சு. இப்போ பளிச்சுன்னு காண்றது முக்கால் பேண்டுக்கும் மீந்த அவளோட கெண்டைக்கால்கள்தான்.

'அம்மா! காலைக்காட்டிண்டு புடவையைத்தூக்கி சொருகிக்காதேயேன்... எனக்கு பிடிக்கல்லம்மா....' அதுதான் அம்மாவுக்கு வேலை செய்யத்தோதுன்னு எனக்கென்ன தெரியும்?

'இதப்பாருடீ! உன் புருஷனுக்கு பாதத்துக்குமேல கண்ணுக்குப்படாம பாத்துக்கோ. எட்டு வயசுலேயே சொருகின புடவையை இழுத்துஇழுத்து விட்டுடுவான்'....புது மருமகளுக்கு அம்மோபதேசம்...

ஒற்றைத்தலையணையில் புதுவாசனையோடு கிசுகிசுத்ததோ 'அப்டில்லாம் உனக்கு தடையில்லை. வேணும்னா பாதத்தை மட்ட்டும்ம் மூடிக்கோ'ன்னு...

'ச்சீய்ய்'....

'சீச்சீ'கள் சிதறியபடி சிலகாலம்....

'என்ன சார்? தனிக்கு சிரிச்சபடி நடந்தாறது ?'

"சீச்சீ... அதெல்லாம் ஒண்ணுமில்லே... லைப் சர்டிபிகேட் அனுப்பிட்டேளா?"

"இன்னும் இல்லை."... சிந்தனை வயப்பட்டது கிழ சகபாடி. லைப் சர்டிபிகேட் குறித்து நினைவுறுத்தி டென்ஷன் பண்ணியாச்சு. அதுங்கிட்ட இருந்து இன்னுமொரு பத்துநிமிஷம் பேச்சுமூச்சு இருக்காது. தியாகராஜன் இத்தனைக்கும் என்னைவிட மூணுவயசு சின்னவன். பொறக்கறச்சேயே அவன் கிழவனா பொறந்தாச்சு. கவலைப்பட்டுகிட்டு இருக்கறதுக்குன்னு ஒரு பிறப்பு. இந்த பொழுதுக்கு ஒரு லைப்சர்டிபிகேட்.என்ன செய்ய?

கொஞ்சமேதூரம் சேர்ந்து நடைபோட்ட தியாகராஜன் சொல்லிக்காம பின்வாங்கியாச்சு. உங்க 'எட்டிகெட்டு' இங்கிதமெல்லாம் கிழமார் நாங்க அறியோம்.  மேலே நடக்குறேன்.

நடைபாதையை சுற்றி மார்உயரத்துக்கு நெருக்கமா வெறும்பச்சையாய் குரோட்டன்ஸ் போல நெடுக்க நட்டுருக்கு. இப்பத்தான் புதுசாக பார்க்கறாப்பல பார்க்கிறேன். மேலிலையெல்லாம் பொன்பச்சையாய் துளிர்த்திருக்க கீழிலைகள் அடர்பச்சையில் முதிர்ந்துகிடக்கு. சீரா வெட்டிவிட்டிருக்கான். ரொம்ப உறுத்து பார்த்தால்தான் அந்தப்பக்கம் கொஞ்சிக்கொண்டிருக்கும் இளஞ்சோடி இடுக்குகளூடே நீரோட்டமாக தெரியும். அவ்வளவு அடர்ந்த பச்சைவளையம். அதுசரி... அந்தப் பக்கம் இருப்பது 'இளஞ்'ஜோடின்னு எப்படி தெரியும்னு கேக்கறேளா? ஒரு நம்பிக்கை தான்... அப்படியே இருக்கட்டுமே!

இது 'சி' பிளாக். இங்குதான் பாதையும் வளையறது. ரெண்டுமாடி உசரத்துக்கு பெரும் கான்கிரீட் தூண்கள்தான். அதுக்கும் மேல்தான் இருப்பிடங்கள். அத்தூண்கள் அடர்ந்த கூடத்தில், பத்துபதினைந்து பெண்டுகள் கையைக்காலை மடக்கிநீட்டி, தலையையும் தோளையும் சுழற்றி முன்னும்பின்னுமாய் ஆடிண்டு இருக்கா. பெரிய கறுப்பு ஸ்பீக்கர்களினின்று இசைவழியறது.  ஜங்குசக் ஜங்குசக் ஜங்குஜங்கு ஜங்குசக்....

லுக்மீ லெப்ட் லுக்மீ ரைட்
லுக்மீ லேடி யூ ஆர் ரைட்.
ஜங்குசக் ஜங்குசக்
ஜங்குஜங்கு ஜங்குசக்....

இது பிட்னஸ் எக்ஸர்ஸைசாம்...ஏரோபிக்ஸோ இறங்கோபிக்ஸோ ஏதோ ஒண்ணு.

அந்தப்பாட்டு தாளகதிக்கேத்தபடி நானாத்தான் இட்டுகட்டி சொல்றேன். 'லுக்மீ'ன்னு வருமோ? 'லுக்அட்மீ’'ன்னு தானே சொல்லணும்? பரவாயில்லை... இசையுடைய பாட்டுக்கு இழுக்கு நன்று ! ஆடுங்கோ.. நல்லா ஆடுங்கோ... ஊளைசதை வைக்காம ஊட்டமா இருங்கோ. இதெல்லாம் அப்போ உண்டா? ஆனா போற வரைக்கும் விசாலம் கோயில் சிலையாட்டமாத்தானே இருந்தா?

“ .......உங்களுக்கென்ன? உக்காந்த இடத்துல காப்பி... அம்பாரம் பாத்திரம் துலக்கி கல்லுரல் தேயத்தேய மாவரைச்சு, சமைச்சு,பறுமாரி பம்பரமா நாளெல்லாம் சுழண்டு அக்காடான்னு படுத்தா பின்னோடியே பாதம் சொரண்ட நீங்க... ‘’ தலைய விலுக்குன்னு ஆட்டிக்கிறேன்... நினைப்பு என்னவோ அப்படி ஆட்டினா உதுந்து போயிடும்னு... 

அந்த மேடு பார்த்தீங்களா? அங்க ஒரு விசிறிவாழை இருந்தது. விழுந்தது.அதோட சரி. என் தம்பி கிட்டே நாலுமாசம் மங்களூரிலிருந்துவிட்டு திரும்பிவந்து பாக்கிறேன்.... வாழையைக் காணோம். ரெண்டு பாக்குமரம் ஒண்ணுக்கொண்ணு எதிரெதிரா வளைஞ்சு விறைச்சுகிட்டு அங்க நிக்கிறதுகள். வேரடி மட்டும் என்னவோ ஒண்ணு பக்கத்துடன் ஒண்ணாத்தான் நட்டிருக்கு. 

இந்த ரெண்டையும் பாக்குமரம்னா சொன்னேன்? ஒரு பாளையுண்டா பாக்குண்டா? இது பாக்குமரம் போல ஏதோ ஒண்ணு. எல்லாமே இங்க ஏதோ ஒண்ணைப்போலதானே? மனுஷனைப் போல மனுஷன்.. உறவைப் போலவே உறவு.....வாழ்க்கை போலவொரு வாழ்க்கை.

இடது 'பாக்குபோல' மரத்துகீத்துகளிலே காய்ஞ்சுபோன கீத்தொண்ணு தொங்கினபடி இருக்கு. எப்பவோ மேலத் தைக்கால்தெரு கரண்ட்கம்பியில செத்துத் தொங்கின கருடனை மாதிரி. கோயில்ல மூன்றாம் நாள் உற்சவம் வேற... ஆவுடையப்பன்தான் துரட்டிக்கோலை ரப்பர்கிளவுஸ் போட்டுகிட்டு அந்த கருடப்பட்சியை கீழே தள்ளினது .குளக்கரையிலே குழிவெட்டி,உப்பு கற்பூரம் நாமகட்டி எல்லாமுமா போட்டு புதைச்சா...

பெரியவால்லாம் தலைமுழுகினா... பாட்டிகளெல்லாம் உபவாசம் இருந்தா... இப்படி வந்து இங்க உயிரைவிடுமோ பெருந்திருவடி?! இப்போ அந்தப் பாட்டிகளில்லே, ஆவுடையப்பனில்லே.. அந்தப் குளத்தை தூர்த்து கட்டடமாக் கூட ஆயிடுத்து. நினைப்புமட்டும் ஊசலாடிகிட்டே இருக்கு, இதோ காய்ஞ்சு தொங்கற கீத்துமாதிரி.


ரெண்டு ரவுண்டு நடந்திருப்பேனா? அதுக்குள்ள கால்முட்டி பாட்டுபாடறது. தைலம் தேச்சுக்கிறதெல்லாம் ஒரு மனசாந்திக்காகத்தானே? மொசைக் பெஞ்சில் உட்கார்ந்துட்டேன். உட்கார்ந்தப்புறம் தான், நாங்கல்லாம் மட்டும் லேசுபட்டவாளான்னு இடுப்பு, தோள்பட்டை, கழுத்து மூணுமா லாவணி பாடறதுகள்.

'சிங்கக்குட்டிக்கு காலுவலிக்குதா?', மடியில் என் கால்களைத்தூக்கிப் போட்டுக்கொண்டு பிடித்துவிட்ட என் தாத்தா நினைப்பு வந்துடுத்து.
'அஸ்மத் பிதாமஹம் கௌண்டின்ய கோத்ரம் கோபாலசாமி சர்மாணாம், ருத்ரரூபம் ஸ்வதாநமஸ் தர்ப்பயாமி.'

தாத்தாவோட சரி! அதுக்கப்புறம் யாரும் என்னைக் கொண்டாடினவங்க இல்லை. எனக்கு வாய்ச்சவளோட கண்ணோட்டமே தனி. ஜூரம் வலின்னு சொன்னாப் போறும் ,முகத்துல தனி சிடுசிடுப்பு வந்துடும்.

'கையும்காலும் இரும்பால அடிச்சு வார்ப்படமாவா வார்த்திருக்கு? பூனையாட்டம் உடம்ப நக்கிண்டே இருக்காம ஆறவேலையைப் பாருங்கோ'ம்பா.... மருமகளோ ஒருபடி மேல... இருமினாலே போறும்.. அவளோட வாய்,மூக்கு,கண்ணு,புருவமெல்லாம் சுருங்கி ஒரு நேர்க்கோட்டுக்கு வந்துடும். மகராசிக்கு அவ்வளவு அருவருப்பாம்..... 

உனக்கும் என்னைமாதிரி எழுபத்தெட்டு வயசு வரும்... வா... நீ இருமினா உன் மருமகள் உன்னை துப்பாக்கி எடுத்து சுடப்போறா பாரு... 

என்னோட பேத்திக்கு ஏழுவயசு. குழந்தைக்கு சுகவீனம் வந்தாக்கூட வீட்டுல மிரட்டலும்உருட்டலும் தான். ஒரு தழுவல்கூட இருக்காது. யாரைச் சொல்றது என்னத்த சொல்றது...

மெல்ல எழப்பார்க்குறேன். கீழ்க்கால் நடுங்குது. பரந்தாமனை ஒரு வாக்கிங் ஸ்டிக் வாங்கித்தரச் சொல்லணும். ஒருவழியா வீட்டுக்குள் வந்தாச்சு. சோபாவில் படுத்தபடி பேத்தி சிணுங்குகிறாள். 'ஸ்கூல்ல ரெண்டு பீரியட் டான்ஸ் ரிகர்ஸல்ம்மா... காலுல்லாம் வலி தாங்கல்லமா' . 

பரபரன்னு சோபா ஓரத்தில் சரிந்து உட்கார்ந்தேன். பேத்தியின் கால்களை மடியில் கிடத்தி 'என் சிங்கக்குட்டிக்கு கால்வலிக்குதா?' என்று அந்த மெல்லிய கால்களைத் பிடித்துவிட்டேன். எதிர்பாராமையின் ஆச்சரியம் கலையாமலே 'சூப்பரா இருக்குத் தாத்தா' என்றாள் முகம்பொங்க சிரித்தபடி. விரல்களில் நெட்டிமுறித்து விட்டேன். 'வௌவ்.சூப்பர் தாத்தா' என்றாள் மீண்டும். 

எனக்கு பேத்தி பாக்கியம் மட்டும்தான். 'பிதாமஹம்.... ருத்ர ரூபம்... தர்ப்பயாமி' ஒண்ணும் கிடைக்காது. பரவாயில்லே.....

உனக்கு கைகால் பிடிச்சுவிடற புருஷனும் பிள்ளைகளுமா வாய்க்கட்டும் என் குலக்கொடியே !

சனி, மார்ச் 21, 2015

திருக்குறளிசை

'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே', 'ஒவ்வொரு பூக்களுமே  சொல்கிறதே', 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்'....... இன்னும் எத்தனையெத்தனை நினைவிலகலாப் பாடல்கள்??....இவற்றையெல்லாம் இசையமைத்தவர்  இசையமைப்பாளர் திரு பரத்வாஜ் அவர்கள் என்பதை நான் சொல்லியா தெரிய வேண்டும்?

 தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், என்று பல மொழிகளிலும் தன் இசையமைப்பால் முத்திரை பதித்தவர் இவர்.இவரின் பாடல்களில் 'மெலடி என்பது அடிநாதமாய் இதயம் வருடும் .மனதை  மென்தென்றலாய் வருடிச்செல்லும்.

தமிழக அரசின் 'கலைமாமணி' உட்பட இவரின்இசைக்கு பல அங்கீகாரங்கள். இவர் இசையில் வெளிவந்த 'தி லெஜன்ட் ஆப் புத்தா' ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பிலிம் பேர் விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் பலமுறை இவருக்கு வழங்கப் பட்டிருக்கிறது. பல தேசிய விருதுகளை அள்ளியது இவர் இசையமைத்த 'ஒவ்வொரு பூக்களுமே  சொல்கிறதே' பாடல்.

 23 நாடுகளில் இசைப்பயணம், இவர் துவக்கியிருக்கும் இசைப்பள்ளி, இசை சார்ந்த பணிகளுக்காக இவர் உருவாக்கி நிர்வகிக்கும் 'பரத்வராஜ் பவுண்டேஷன்'...  இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் திருக்குறளுக்கு இசையமைத்து, உள்ளம் தோறும் வள்ளுவம் எனும் உயர்நோக்கில், 'ஒரு குறள் ஒரு குரல்' என்று புதுமைஉச்சம் தொட்டிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பாய் தமிழ் சங்கத்தில் திரு.பரத்வாஜ் அவர்கள் இசையமைத்த ‘திருக்குறளிசை’ குறுந்தகடு வெளியீட்டு விழா  விமரிசையாக நடைபெற்றது. அறத்துப்பாலிலுள்ள 380 குறள்கள்,அதற்கான 380 விளக்க உரைகளுடன் முதல் கட்டமாய் வெளியிடப் படுகிறது.  விழா துவக்கும் நேரத்திற்கு முன்னதாகவே வருகைதந்த திரு பரத்வாஜ் அவர்களுடன் மனம்விட்டு உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அவரின் இசையைப் போன்றே அவரின் உரையாடல் கூட மென்மையாய் ஆற்றொழுக்காய் இருந்ததும் ஒரு ஆச்சரியம்.

திருநெல்வெலி ரவணசமுத்திரத்தில் பிறந்து,டில்லியில் வளர்ந்து சி.ஏ.படித்து முடித்தவர் பரத்வாஜ் .  தமிழ்த்திரை இசைக்கு மற்றுமொரு சுக ராகமாய் வந்து சேர்ந்தார். திரையிசைப் பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே இவருக்கு திருக்குறளை முதன்முதலாக அறிய வாய்த்தது. இரவுபகலாய் நினைவின் தம்புரா இடைவிடாது குறளின் சுதியை மீட்டியபடி இருக்க, சட்டென்று அவர் வாழ்க்கைப்பூரணத்துவத்தின் கணத்தைக் கண்டுகொண்டார். ஒவ்வொரு  குறளுக்கும் துல்லியமான தாளக்கட்டு இருப்பதை உணர்ந்தார். திருக்குறளுக்கு அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம், மரபிசை,மெல்லிசை கொண்டு இசையமைத்து அடுத்த தலைமுறைக்கும் வள்ளுவன் குரலை கொண்டு சேர்க்கும் எண்ணம் கருக்கொண்டது. 
மூன்றாண்டுகளின் தவமாய் இந்த இசையமைப்பு உருவாகி இருக்கின்றது. உலகெங்கிலும்  இருக்கும் பல பாடகர்களைக் கொண்டு ஒவ்வொரு குறளையும் பாட  ஒவ்வொருபாடகர்  என பாடச்செய்து, அந்தந்த குறளுக்கு விளக்கவுரையை ஒவ்வொரு  அறிஞரை சொல்லவைத்து பதிவு செய்திருக்கின்றார். கடவுள்வாழ்த்தின் ஒவ்வொரு குறளுக்கும் ஒரு மதத்தலைவரென விளக்கம் சொல்லப் பதிவு செய்திருப்பது ஒன்றே பரத்வாஜ் அவர்களின் நுண்ணுணர்வுக்கு சான்று. உலகப் பொதுமறைக்கு சூட்டி அழகுபார்க்க வேறென்ன அணிகலன் உகந்தது?!  'வான்சிறப்பு' குறளொன்று அமிர்தவர்ஷனி ராகத்தில் பூமாரி பொழிகின்றது. இயல்பான,எளிமையின் அழகோடு இவரின் குறளிசை வள்ளுவருக்கு  வெஞ்சாமரம் வீசுகிறது.குமரிக்கடலில் நெடுநெடுவென நின்றபடி தமிழினத்தைக் காவல் காக்கும் தெய்வப்புலவனுக்கோர் தாலாட்டாய் ஆராட்டாய் இழையும் இசைஆராதனை.
எஸ்.பி.பி, சித்ரா மற்றும் பிரபல பின்னணி பாடகர்களும் , கர்னாடக இசைப்பாடகர்களும் இந்தக் குறள்களைப் பாடியிருக்கிறார்கள். இந்த இசையமைப்புக்கு பாடிய எவருமே சன்மானம் பெறாமல் பாடிக் கொடுத்துள்ளார்கள் என்று நெகிழ்ந்தார் பரத்வாஜ். இத்தனை நாட்களும் நீங்கள் இசையமைத்ததெல்லாம் இந்தப் பெரும்பணிக்காகத் தான் என்றேன். பற்றிய அவர் கைவிரல்களினூடே அவர் பெருங்கனவு தகித்தது. ஒவ்வொரு தமிழன் வீட்டிலும்  இந்தக் குறளிசை ஒலிக்க வேண்டுமென்பதே தன் அவா என அவர் சொன்னபோது 'ஐயன் அருள் ' என்று மனம் வழக்கம்போல ஐயப்பனை பிரார்த்தனை செய்தது என் மனம். வள்ளுவர்கூட 'ஐயன்' தானே !
பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால் குறள்களுக்கும்  இசையமைப்பு முடிந்து பாடல்பதிவு மும்முரமாய் நடந்தவண்ணம் இருப்பதாகவும் விழாவில் பேசும்போது குறிப்பிட்டார். அத்தனைப் பள்ளிகளிலும் இந்த குறளிசை ஒலிக்க வேண்டும் என்று அவர்சொன்னபோது 'ததாஸ்து' என்று தேவதைகள் ஆசீர்வதித்ததைக் காதாறக் கேட்டேன்!
இந்த 'திருக்குறளிசை'  மொபைல் அப்' ( mobile App) ஆக விரைவில் வெளியிட இருப்பதாயும் பரத்வாஜ் சொன்னார். தரவிறக்கிக் கொண்டால், உள்ளுந்தொறும் உவகை தரும் குறளை உளமாரக் கேட்கலாமல்லவா? 
பேச்சினூடே அவர் சொன்ன இசையமைப்பு நுணுக்கங்களையும், மக்களிடையே திரையிசைப் பாடல்களின் பெரும் தாக்கத்தை உணர்த்தும் சம்பவங்களையும் விவரிக்க இன்னும் இரு பதிவுகளாவது போடவேண்டும்.
வீடு திரும்பும்போது  காரிலேயே அந்தக் குறுந்தகடைப் போட்டுக் கேட்டுவிடும் ஆவலைஅடக்கிக் கொண்டேன். கர்மசிரத்தையுடன் சாங்கோபாங்கமாய் செய்யவேண்டிய வேலைஅல்லவா அது? எண்ணத்தை மாற்றிக்கொண்டு பரத்வராஜ் அவர்கள் இசையமைத்த பாடல்களை யோசித்துப் பார்த்தேன். 
1. ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்
2.காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ?”
3.கலக்கப் போவது யாரு? ஜெயிக்கப் போவது யாரு
4.சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
5. ஓ போடு.... ஓ போடு....
6. காடு திறந்தே கிடக்கிறது … காற்று மலர்களை உடைக்கின்றது
பதிவின் ஆரம்பத்திலேயே தான் இன்னமும் சில பாடல்களை சொல்லியிருக்கின்றேனே.....
கூடிய விரைவிலேயே பரத்வாஜ்  லிஸ்ட்டை எல்லோரும்  இப்படி சொல்லப்போகிறார்கள் பாருங்கள் ....
1.கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
   நற்றாள் தோழாஅர் எனின்.
2.அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
   பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

3.உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன 
   மடந்தையொடு எம்மிடை நட்பு.

4.நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் 
    சினைப்பது போன்று கெடும்.


.......இந்த நான்கு மட்டும் தானா?   மீதமுள்ள 1326 குறள்களைக் கூடத் தான்!!

பரத்வாஜ் அவர்களுக்கு இந்த மாபெரும் சாதனைக்காக அன்பும் , நன்றியும்,வாழ்த்துக்களும். இந்த நிகழ்ச்சியை உயர்ந்த இசையமைப்பின் கச்சிதத்தோடு நடத்திய மும்பை தமிழ்ச்சங்க சகோதரர்கள் திரு ஆர்.கண்ணன், திரு சாந்தாராம், திரு பாலு, திரு மைக்கேல் அந்தோணி, திரு ஞாயிறு இராமசாமி போன்றோர் போற்றுதலுக்குரியவர்கள்.

'இசைபட' வாழ  முயல்வோம்.





வெள்ளி, மார்ச் 13, 2015

போவான் வருவான் திம்மப்பன்

ஞொய்யாஞ்ஜியை ஞாபகம் இருக்கோ? உல்டாபுல்டா , காமடிபீசு, அசடு, அச்சுபிச்சு, ரெண்டுங்கெட்டான்... இவற்றின் கலவை நாயகன்..
நம் வானவில்லில் ரொம்ப நாள் முன்பு கிச்சுகிச்சு மூட்டியவன்... அவனுக்கேத்த மனைவி பல்லேலக்கா.......
மீண்டும் இங்கு வந்திருக்கிறார்கள்.  சற்று முன் வரை இங்குதான் இருந்தார்கள்.
நடந்த சம்பாஷணையை உங்களுக்கும் சொல்லித்தானே ஆக வேண்டும்?

“வாப்பா ஞொய்யாஞ்ஜி.. என்ன உன்னை ஆளையே காணோம்... பாஸுபாஸுன்னு என்னை சுத்திகிட்டே இருப்பே... எல்லாம் அவ்வளவு தானா?”

“நான் காணல்லைங்கறது இருக்கட்டும்... வலைப்பக்கம் நீங்க வரல்லைன்னு எல்லோரும் சிரிக்கிறான்னா.... மானம் போறது...”

“அப்பிடியா? ஏதாவது சொல்லணும்னு சொல்லாதே.. என்னை மறந்தே போயிருப்பாங்க”.

“யாரும் மறக்கல்லைன்னா...வானவில் மனிதன்-காஞ்சா கருவாடு பெஞ்சா பெருமழைன்னு வழிச்சிண்டு சிரிக்கிறா..
எனக்குத் தான் மனசு கேக்கல்லை. இனிமேலாவது எழுதுங்கோன்னு சொல்லிட்டு போகலாம்னு வந்தேன்.”

“”என்னோட நிலைமை உனக்கென்ன தெரியும்.. எனக்கு நேரமே....”

“போறும் சால்ஜாப்பு.. மூன்றாம் சுழில உங்களைப் பத்தி வெண்பாவே வந்துடுத்து”

“ஐயையோ.... அப்பாதுரை சாரா... மானாடமயிலாட மகாவாக்கியம் பிரகடனம் ஆயிருக்குமே.”.

ஞே... ஞே...

அதாண்டா .. என்னை கிழிகிழின்னு கிழிச்சிருப்பாரே! எங்கே.. மூணாம் கிழி.... சாரி மூன்றாம் சுழிக்குப் போ பாக்கலாம்...””


மூன்றாம் சுழி




ன்று எழுதுவார் என்றறியோம் ஒன்றெழுதி
அன்றே வருவார் வலைதேடி - நன்றெனத்
தேடிவந்தோர் பின்னூட்டம் சேர்த்ததும் மோகன்ஜி
மூடிவைப்பார் வானவில்லைப் போர்த்து.

இதை எழுதிய இளங்காலை வெளியே -51°F. வானவில் மனிதனை வம்புக்கிழுப்பதும் சூடான சுகமே.
அன்றிலாய் எழுதினாலும் என்றும் இவரெழுத்து குன்றிலிட்டச் சுடர்.


அடுத்து பாடல் பெறும் பதிவர்: ஹுஸைனம்மா.
வகை கவிதை
10 கருத்துகள்:
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBo4XrUKKRZh7iAwCrJdj7quuveKBzcXsfyJsNQ7BNNqZIyn4s4CARHSZ93maqk9mNLfzJ-pqWOP2xTrg4N_3GJhMkeFmKOH6j1YkhLZ4Zl5c58em5YtryZOeyM-6zTBZmcw5HVXriPErH/s45/vgk+good+photo.JPG.கோபாலகிருஷ்ணன்மார்ச் 06, 2015
வானவில்’ எப்போதாவது மட்டுமே  தோன்றும் !

மோகன்ஜிக்கு மிகப்பொருத்தமான வரிகள். :)

2. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiXvWwqyGG1Hk34DtN1Sy8r2m4VcYLcGyJ4RBML3a6QwtFaoUNgcaDDZXBP3BZP2xwG6uQw-wEncB1KlonrRTsyApQi4TqcYWlU4MxCGQLXWcG4GtjDvc_Tn5xq02vhnjgshe3eCuZD3UJ5/s45/earth_250x251.jpg

பாடல்பெற்ற வானவில் பதிவருக்கு வாழ்த்துக்கள்.
3. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgHuuuIMeKyDPdXqLritnDJqHbqaW8-pS40DAFVd3lSfAZ0XA-_ZQabVx6jTta-A3BUORK16K1d01jUjBgQEqMbVQm0aW1vZB_qt_wT_tzCmnpRZB3W6kWV8CYAyZyTa9XjLU9En6zhyphenhyphen2Y/s45/*
மோகன்ஜி அவர்களின் பதிவுகளை அதிகமாகப் படித்ததில்லை.நிச்சயம் படிப்பேன்.பாடல் பெற்ற பதிவரான மோகன்ஜிக்கு வாழ்த்துக்கள்
4. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOSG5CJHi45ZzoHKWam_-4AykJYXIOeYa-BgShhIhTq0iH3UrhiVfKSOCVjD1Dgvmmty_Klp7iUbrJyruaVs6U7WChohtJJoRp4_iDdWUT9170m23-5lJQPpFtQZ6Ef5CbVUc6Vdsr72ft/s45/Image0498.jpg
என்று எழுதுவார் என்று அறியோம் எழுத வேண்டினாலும் எழுத மாட்டார். சித்தன் போக்கு சிவன் போக்கு என்பதுபோல் இது மோகன் ஜி போக்கு எனலாமா.
5. http://lh6.googleusercontent.com/-bEmirF5HCac/AAAAAAAAAAI/AAAAAAAAHfY/vCLJOXCNqyM/s512-c/photo.jpg
வெண்பாவின் இறுதி வரிக்குப் பொருள் என்ன மன்னா?

அதில் என்ன குற்றம் கண்டீர் ?

இல்லை.வான வில்லே ஒரு மாயத்தோற்றம் தானே ?
அதை மூடி வைப்பது என்பது எங்கனம் சாத்தியம்.?

புலவரே!! சற்று சும்மா இரும்.
அப்பாதுரை சாருக்கு மூடு வரும்போது
அவரே விரி உரை தருவார்.

அது இருக்கட்டும்.
மோகன்ஜிக்கு ஜே சொல்லி விடுங்கள்.

சுப்பு தாத்தா.
6. http://img2.blogblog.com/img/b36-rounded.png
வானவில்லை அபூர்வமாகத் தானே பார்க்க முடியும். மோகன் ஜியின் எழுத்துகள் நினைவில் என்றென்றும் நிற்பவை.
7. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhao0OU23tdX80Gg1Jrtq_qUCELS79jUMZkmlg81d_bbLZfikbcw_bDRGu4imjkIo_09OpOiliS7bcDYhx72v2QAEVYEc9-v0s3RnhtlI_6CMxZkDHJju3EmNk8s8Kq58U05SEcrr6kzwFX/s45/*
வானவில் என்று வந்தாலும் ரசிப்பேன்...
8. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgCgdd7HMGHf9NzAgm03qQ6TYTF_cGdiQNh9FcRU7FaLgXq_ewpXrmdX8koS8W4NWt7Fc2PzfnGMdpDSiKRPoqQtfDvQ_XdfVLDehMyE1eiO9hA5eocW8BVEl3JSekPy4HbFiCTU_LkQ1s/s45/sshoe.jpg
வாங்குவர் என்னுடன் வந்திங்கு என்றெண்ண
வாங்கினரே என்னையும் வாங்கு.
9. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjggTRXy4K9t7naRgq2jjZdLsU8aJebKMa7Tjuq29mSlmZBtBgEdq33cAncldG346bT1bEeI0Y-GCFS01Mv0wdBw3AhqXBccdTGxIU-dVRTcUUtBRvbB29a4-cB3u4L3VqfbNfw4oijyus/s45/IMG_0247-crop.JPG
வானவில் பதிவர் - அவ்வப்போது வந்து சிறப்பான பதிவிடும் மோகன் ஜி! அவர்களுக்கு பொருத்தமான பா. வாழ்த்துகள் மோகன் ஜி!
10.             https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEizWHDYxZZ3Iu6vU6nhV6ER2TD4fmhm2cbnBbZQNcoHYX1fd-GyjnihMJdLRD5AdetOcA32r1puGv7kiafd7HdCRPdXLT0H4MP9Gnm9OllI3zp7YRrpvWwEobbQzdNx2Rkczk-Prvy4rYdD/s45/*
வானவில் மோகனை அண்மையில் தஞ்சையில் சேக்கிழார் அடிப்பொடியின் சதாபிஷேக விழாவினில் பார்த்தேன்...எளிமையானவர்
திறமைகள் பல கொண்டவர்
மோகனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.
  1. https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjWsBckAUfncJwt9SiFizWgTGyoNMrdTVxeQBlt4x271KVpkW55jqK5GrjUExkoHeMW3sByL2mzOZY8FEXKU1gCaWNrLy6dUnLF12c6GBkHsA8PQ7M66IxWNZUzGYYhdtZ7nErMvOleOuE2/s45/hpqscan0027.jpg
காளிதாச மகாகவிக்கும் போஜ ராஜனுக்கும் ரொம்ப சிநேகிதம்.
ஒரு நாள் போஜன் காளிதாசனிடம் “நான் இறந்தால் என்ன இரங்கற்பா பாடுவாய் என்று அறிய ஆவலாய் இருக்கிறது. என் மீது இப்போதே ஒரு இரங்கற்பா பாடு” என்றான். அருட்கவியான காளிதாசன் தன் நண்பன் உயிருடன் இருக்கும் போதே இரங்கற்பா பாடினால் மன்னன் இறந்துகூட போய் விடுவானே என்று பாட மறுத்து விட்டார். மன்னனாய் பாடும்படி ஆணையிட்டும், காளிதாசன் பாட மறுத்ததால் கோபம் கொண்டு, தன் நாட்டைவிட்டே வெளியேறுமாறு தண்டனை வழங்குகிறார் போஜராஜன் . காளிதாசனும் நாட்டைவிட்டு வெளியேறி விட்டார்.

நண்பனின் பிரிவைத் தாங்கமுடியாத போஜன் மாறுவேடம் பூண்டு காளிதாசனைத் தேடி அலைகிறார். பக்கத்து நாட்டில் ஒரு சத்திரத்தில் காளிதாசன் அமர்ந்திருப்பதைக் கண்டார். மாறுவேடத்திலிருந்த போஜன், தான் போஜனின் தேசத்திலிருந்து வந்திருப்பதாய்க் கூறினார். ஆவல் மேலிட,போஜ மகாராஜா எப்படி இருக்கிறார் என்று காளிதாசனும் வினவினார்.

எப்படியும் தன் மீதான காளிதாசனின் இரங்கற்பாவை கேட்டுவிடத் துடித்த போஜன், ராஜா இறந்து விட்டார் என்று சொல்ல, நண்பனின் பிரிவால் பெரும்துயருற்ற காளிதாசனும் போஜன் மீது இரங்கற்பாவை பாடிப் புலம்பினார். பாடல் கேட்ட மாத்திரத்திலேயே போஜனும் உயிர்நீத்தார்.

இறந்தது மாறுவேடத்திலிருந்த போஜனே என்றுணர்ந்து காளிதாசனும் உயிர்விட்டாராம்.

அப்பாதுரை சார்! நானும் நீரும் பாட்டிற்காக உயிர்விட வேண்டாம். ஆனால் போஜனைப் போல், இப்படி ஒரு வெண்பா என் மேல் நீங்கள் பாடுவதாய் இருந்தால், வலைக்கு அவ்வப்போது மட்டம் போடுவேனே!

பின்னூட்டத்தில் அன்பையும் ஆதங்கத்தையும் பொழிந்த அன்பு உள்ளங்களுக்கு என் நன்றியை, குற்ற உணர்வுடனே கூறுகிறேன். இனியும் வானவில் உங்களை ஏமாற்றாது. வானவில்மனிதனில் பதிவுகள் அடிக்கடி வரும் என்று காளிதாசன் மற்றும் போஜராஜன் தலையில் சத்தியம் செய்து உறுதி கூறுகிறேன்.

வெண்பா எழுதின கைக்கு ஒரு உம்மா... 





“அடடா ஞொய்யாஞ்ஜி ! எப்படி கடைசீல சமாளிச்சேன் பார்த்தியா?”

“போங்கண்ணா...  நிஜம்மா சொல்லுங்க..என்ன எழுதப் போறீங்க?”

“உடனே பதிவிட கைவசம் ஆறு கவிதை ஒரு கதை ரெடியா இருக்கு. இருபது வருசத்துக்கு முன்னே ஒரு ரிட்டையர் ஆன மனுஷன் பத்தி ஒரு கதை எழுதியிருந்தேன். அதை விக்கிரமன் சார் படிச்சு பாராட்டினது கூட நினைவிருக்கு. அதன் கடைசிபக்கம் மட்டும் கிடைக்கல்லே. கொஞ்சம் உக்காந்து பட்டி பார்த்துட்டா அதையும் போட்டுடலாம்.”

“அண்ணா! எங்களைப்பத்தியும் ஒரு பதிவு போடுங்கோளேன்” இது திருமதி பல்லேலக்கா ஞொய்யாஞ்ஜி.

"அதுக்கென்னம்மா! போட்டுட்டா போச்சு!"


அப்பாதுரை சாரு! என்ன நக்கலா சிரிச்சாறது??