ஞாயிறு, பிப்ரவரி 06, 2011

கம்பன் ஏமாந்தான்




சில எளிமையான இலக்கிய சுவாரஸ்யங்களை பார்ப்போம்.
கம்பனும் ஔவையாரும் முட்டிக் கொண்ட கதை தெரியுமா?
இது போன தலைமுறை வரை பிரபலமான கதை. 
ஏற்கெனவே அறிந்தவர்கள் இதை நினைவுறுத்திக் கொண்டு குழந்தைகளுக்கு  சொல்லுங்கள். முன்னம் கேள்விப்பட்டிராதவர்கள் குழந்தையாய் மாறி மேற்கொண்டு கேளுங்கள். இது. எளிமையான தமிழுக்கும், புலவர்களின் குறும்புக்கும் ஒரு சான்று.

நான் நாலாம் வகுப்பு படிக்கையிலே, ஈசிசேரில், நீலசட்டைப் போட்டுக் கொண்டு, என்னை மடியிருத்தி அப்பா சொன்ன கதை/பாடல்


 புலவர் கம்பருக்கும், தமிழ் மூதாட்டி ஔவைக்கும்  புலவர்களுக்கேயான போட்டியும் பொறாமையும் இருந்ததாம்.

சோழ நாடு வந்த ஔவை, குலோத்துங்க சோழன் அரசவைக்கு சென்றாளாம்.
மன்னன் ஔவையை வரவேற்று உபசரித்து அவளின் தமிழைக் கேட்க ஆவலாய் காத்திருப்பதாய் சொன்னானாம்.

இது கண்டு பொறுக்காத அரசவைப் புலவரான கம்பர் ஔவையை மட்டம்தட்ட உறுதி கொண்டார்.

நான் சொல்லும் ஓரடியை பொருள் கண்டு பாட்டிலே  உரைக்க இயலுமோ?

மன்னன் தமிழ் விருந்துக்கு தயாராகி, ஔவையின் முகம் நோக்கினான்.

அப்படியே ஆகட்டும் கம்ப நாடரே!

ஒரு தண்டில் நான்கே இலைகளை தாங்கி நிற்கும் ஆரைக்கீரையை பொருளாய்க் கொண்டு, கம்பர் சொல்லலுற்றார்
      
"ஒரு காலில் நாலிலைப் பந்தலடீ" 

தமிழறிந்த சோழன் துணுக்குற்றான். பந்தலடி என்ற பதத்தில் அடியாக கொள் எனப் பொருள் பட்டாலும்,அடியே என்று ஔவையை விளிக்கும் குதர்க்கம் அல்லவா தென்படுகிறது?! ஔவையின் மறுமொழியை கேட்க முனைந்தான்.

ஔவையோ நிமிடம் கூட தாமதித்தாளில்லை. சடசடவென வார்த்தைகள் அவளிடமிருந்து தெறித்தன.

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே
மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது

கர்வபங்கப் பட்ட கம்பர் ஔவையின் மேதைமைக்கு தலை வணங்கினார்.

ஔவையின் பாட்டுக்கு பொருள் காண்போமா?

அடியே என்று விளித்த கம்பனை எப்படியெல்லாம் பாட்டுவிட்டார் பாருங்கள்!
 

எட்டேகால் லட்சணமே .... "அவலட்சணமே"( '' என்பது 8 ஐக் குறிக்கும்.
                                                                    '' என்பது 1/4 என தமிழில்
                                       பொருள்படும் . இரண்டையும்
                                      சேர்த்தால் 'அவ' என்றாகும்)

எமனேறும் பரியே..          "எருமையே" (எமனின் வாகனம் 
                                               எருமையல்லவா!)

மட்டில் பெரியம்மை வாகனமே.. கழுதையே(
                               அம்மை என்பவள் ஸ்ரீதேவி..
                                 பெரியம்மை ஸ்ரீதேவியின் அக்காவான 
                                  மூதேவி. மூதேவியின் வாகனம் கழுதை)
                                      

முட்டமேற் கூரையில்லா வீடே..  குட்டிச்சுவரே  (மேலேகூரை இல்லாதது)

குலராமன் தூதுவனே..        "குரங்கே! (ராமனுக்கு தூது சென்ற ஆஞ்சநேயர்
                                          குரங்குதானே?)
 
ஆரையடா சொன்னாயது... ஆரைக்கீரை  என்பது பதில் என்றுபொருள் படும்
                          நீ  யாரையடா பார்த்து இப்படிச் சொன்னாய்?
                          என்றும் அர்த்தப்படும்.

கம்பராமாயணத்தில் பெண்மையின் மேன்மையை உரத்து சொன்ன கம்பன், மனவியலையும் அவையடக்கத்தையும் தன் காவியமெங்கும் விரவிய சொற்கோ, ஒரு பெண்மணியை, அதுவும் மேம்பட்ட புலமைப்பெருமகளை இவ்விதம் மட்டம்தட்ட முயன்றிருக்கக் கூடும் என மனம் ஒப்ப மறுக்கிறது. மேலும் ஔவையின் காலம் குறித்து சர்ச்சைகள் உண்டு. ஒன்றுக்கு மேற்பட்ட ஔவைகள் இருந்திருக்கக் கூடும் எனும் துணிபும் உண்டு. 

எது எப்படியாகிலும் சரி, இந்த ரசமான கற்பனையை சித்தரித்த புலவன் யாரோ, இதை பிரபலப்படுத்த எண்ணி ஔவையையும் கம்பனையும் வம்புக்கிழுத்தான் போலும்.

கம்பனுக்கும் ஔவைக்கும் ஏன் பகைமை உணர்வு ஏற்ப்பட்டது என்பதற்கும் ஓர்
பாட்டுண்டு. பிறிதொருமுறை அதைப் பார்ப்போம்..

என்ன? கதையும் பாட்டும் பிடிச்சதா?? 
 






46 comments:

பெயரில்லா சொன்னது…

செம இண்ட்ரஸ்டிங் மோகன் சார்! பாடலும் அதற்கான பொருளும் சூப்பர்!

மோகன்ஜி சொன்னது…

தமிழிலக்கியத்தில் எத்தனையோ முத்துக்கள் கொட்டிக் கிடக்கின்றன பாலா! நாம் தான் கண்களை இருக்க மூடிக் கொண்டு ஏதோ உலகத்தில் சஞ்சரிக்கிறோம். தேடித் தேடி படியுங்கள் பாலா!

RVS சொன்னது…

கம்பனும்.. ஔவையும் மோதிக் கொண்டதில் ஒரு அற்புதமான பாடல் கிடைத்தது. இது எப்பவோ கேட்டிருக்கிறேன். போன தலைமுறை மக்கள் பேசிக்கொண்டது! நன்றி ஜி. ;-)

மோகன்ஜி சொன்னது…

நல்லது ஆர்.வீ.எஸ்! உங்கள் குழந்தைகளுக்கு சொல்லுங்கள்..அவர்களுக்கு தமிழார்வம் இவற்றால் தான் தூண்டல் பெறும்

ஹேமா சொன்னது…

இனிக்க இனிக்க இலக்கியம் சுவைக்க வைத்த அண்ணா வாழ்க !

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சமீபத்தில் இதையே தினமலர் செய்தித்தாளுடன் வரும் வார மலர்/பெண்கள் மலர்/சிறுவர் மலர்/பக்தி மலர் போன்ற எதிலோ ஒன்றில் படித்த ஞாபகம். மீண்டும் தங்கள் ஸ்டைலில் தக்க விளக்கங்களுடன் படித்ததில் மகிழ்ச்சியே !

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஹேமா!ஒரு நாள் நீ படைக்கும் இலக்கியத்தையும் பற்றி இந்த அண்ணன் பதிவிடுவேன். சரி தானே?!

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! தினமலரில் வந்திருந்தது தெரியாது. இங்கு ஹைதராபாத்தில் தமிழ் சஞ்சிகைகள் அதிகம் பார்க்க எனக்கு வாய்ப்பில்லை. பணிச்சுமையின் நடுவே, இலக்கியம் வெறும் அசைபோடல் நிகழ்ச்சியாய் மாறிப் போனது. ஆனாலும் அசைபோட ஆயிரம் இருக்கிறதே!

சிவகுமாரன் சொன்னது…

அருமை அண்ணா.
என் சிறு வயதில் ஒருமுறை கீரை ஆயும் போது என் அம்மை(பாட்டி) இந்தக் கதையை சொன்னார். பசுமையாகப் பதிந்து விட்டது. அவர் "ஆரையடா சொன்னா யடா" - என்று சொல்லியிருந்தார். வெண்பா என்றால் அடா என்று முடியாதே என்று பின்னாளில் என்னுள் கேள்வி. அவர் ஓட்டக் கூத்தர் என்று சொல்லியிருந்தார். என் அம்மை படிக்காதவர். கொஞ்சம் கொஞ்சமாக நினைவு தப்பிக் கொண்டிருக்கும் அவரிடம் சென்று இந்தப் பாடல் நினைவிருக்கிறதா எனக் கேட்க வேண்டும். நன்றி அண்ணா .

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா!கேட்கவே சந்தோஷமாய் இருக்கிறது. அந்நாட்களில் எப்படி இத்தகு இலக்கிய செய்திகள் எளிமையாய் தலைமுறைகள் தாண்டி வந்திருக்கின்றன?
உன் அம்மையிடம் நினைவூட்ட முயன்றுபார். இத்தகு இலக்கிய செய்திகள் ஆழ்மனத்தில் பதிந்திருக்கும். ஓரிழை வெளிப்பட்டாலும் அவர்கள் சொல்லிவிடுவார்கள். அவருக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்

பத்மநாபன் சொன்னது…

``ஏட்டே கால் லட்சணமே``முதலில் கேட்ட பாடலாக இருந்தாலும், இவ்வளவு விஸ்தாரனமாக பொருள் இப்பொழுதுதான் பொருள் புரிந்தது..
என்னதான் இருந்தாலும்..ஔவை பாட்டி கம்பரை இவ்வளவு தாளிச்சுருக்கவேண்டாம்.

மோகன்ஜி சொன்னது…

கிருபானந்த வாரியார் சொல்வார்.. நவராத்திரி ஒன்பது நாள் பெண்களுக்கு. ஆண்களுக்கோ சிவராத்திரி ஒரே நாள் தான். அதனால் தான் ஆண் ஒன்று சொன்னால் பெண் ஒன்பது சொல்வாளாம்!

பாவம் கம்பர் ஒரே ஒரு 'அடியே!' போட்டுட்டு எவ்வளவு வாங்கிக் கட்டிகிட்டார் பாருங்க.

எதுக்கும் என் தங்கச்சிகிட்டே அளந்தே பேசுங்க பத்மநாபன்!

ஆதி மனிதன் சொன்னது…

அந்த அளவிற்கு செந்தமிழ் எனக்கு தெரியாது என்றாலும், தாங்கள் விளக்கி கூறியிருந்ததை வைத்து என்னால் கம்பர் ஒளவையின் கோபங்களை புரிந்து கொள்ள முடிந்தது. சுவாரசியமாகவும் இருந்தது.

//கிருபானந்த வாரியார் சொல்வார்.. நவராத்திரி ஒன்பது நாள் பெண்களுக்கு. ஆண்களுக்கோ சிவராத்திரி ஒரே நாள் தான். அதனால் தான் ஆண் ஒன்று சொன்னால் பெண் ஒன்பது சொல்வாளாம்!//

சூப்பர்.

பத்மநாபன் சொன்னது…

//ஆண் ஒன்று சொன்னால் பெண் ஒன்பது சொல்வாளாம்!//

அளவு குறைவா இருக்கே ...கொடுத்துவைத்தவர்தான் நீங்கள்..

பத்மநாபன் சொன்னது…

இங்கே மௌனமாக இருந்தாலே எளிதாக ஒன்பதை தாண்டிவிடும்...ஒரு வார்த்தைன்னு ஆரம்பித்தால் சிக்ஸர் சிக்ஸராக சதத்தில் தான் போய் நிற்கும்

Philosophy Prabhakaran சொன்னது…

ம்ம்ம்... சில விஷயங்கள் எனது சிறிய மூளைக்கு எட்டவில்லை... புரிந்தவரைக்கும் அருமையாக இருந்தது...

Chitra சொன்னது…

தொடருங்கள்... சுவாரசியமாக இருக்கிறது

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதிமனிதன்! நலம்தானே! உங்கள் கருத்துக்கு நன்றி.அடிக்கடி வாங்க பிரதர்!

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! என் கதையே வேறங்க! ஒண்ணும் சொல்லாமலேயே ஒன்பது சொல்றாங்க!

அடடா! அங்கயும் அப்பிடித்தானா?
ஒரு சங்கம் ஆரம்பிச்சிடுவோமா? ஒரு பேரை பிடிங்களேன் சங்கத்துக்கு... எதுக்கும் நம்ம பொதுச் செயலாளர் கருத்தையும் கேட்போமே.. அவரு நடுநிசியில சைலண்டா இல்ல பதியிராறாமே! அங்க டேமேஜ் எப்பிடியோ தெரியல்லியே?

மோகன்ஜி சொன்னது…

வாங்க பிலாசபி ! வலையையே கலக்குறீங்க.. உங்களுக்கா புரியாது?

மோகன்ஜி சொன்னது…

நன்றி சித்ரா! இப்படி கொஞ்சம் இலக்கிய 'சட்பட்டா' தேடி போட்டுடலாம்!

meenakshi சொன்னது…

மிகவும் சுவாரசியமாக இருந்தது. இது போன்ற தமிழ் அமுதை நீங்கள் மட்டும் சுவைக்காமல் எங்களுக்கும் அளிப்பதற்கு மிகவும் நன்றி.
'எட்டேகால் லட்சணம்' என் பெரியம்மா சொல்லி பலமுறை கேட்டிருக்கிறேன். இப்பொழுது கூட அவர் அதை சொல்லும் அழகை நினைவு கூர்ந்து ரசிக்க முடிகிறது. 'ஒண்ணு கேட்டா ஒன்பது சொல்லாதே' என் அம்மாவின் favorite டயலாக். :)

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல பகிர்வு மோகன்ஜி! என் அம்மா அடிக்கடி இந்த செய்யுளை முணுமுணுப்பது கேட்டு இருக்கிறேன். ஆனால் இப்போதுதான் கம்பருக்கும், ஔவைக்கும் நடந்த இந்த போட்டி பற்றி தெரிந்தது. சுவையான இந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

ADHI VENKAT சொன்னது…

இந்த சுவையான கதையை இதுவரை கேட்டது இல்லை. இப்பொழுது குழந்தையாய் மாறி கேட்டு கொண்டு விட்டேன்.

ரிஷபன் சொன்னது…

அழகான சண்டை.. அது ஒளவையா.. கம்பனா.. யாராய் இருந்தால் என்ன.. நல்ல கவிதை கிடைத்தது.. சுவாரசியமாய்

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! நீங்கள் இப்பதிவை ரசித்ததற்கு நன்றி.இந்தக்கதை உங்களின் இனிய நினைவுகளை கிளர்ந்தெழச் செய்தது கண்டு மகிழ்கிறேன். வாழ்க்கையின் சுவாரஸ்யமே இத்தகு சின்னசின்ன ஞாபகங்களாலேயே கோர்க்கப்பட்டிருக்கிறது அல்லவா?

மோகன்ஜி சொன்னது…

வெங்கட் நாகராஜ் சார்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி. உங்கள் பின்னூட்டங்களை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.

மோகன்ஜி சொன்னது…

ஆதி மேடம்!
//இப்பொழுது குழந்தையாய் மாறி கேட்டு கொண்டு விட்டேன்//
கதை கேட்டாச்சு இல்லையா?இப்போ பாப்பா சமர்த்தா தூங்குமாம்.. நாளைக்கு அடுத்தக்கதை சொல்வேனாம்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க ரிஷபன்! நீங்க சொன்னது தான் சரி. நமக்குத் தேவை கவிதை.. சுவாரஸ்யமான கவிதை..

அப்பாதுரை சொன்னது…

எத்தனையோ முறை இதைப் படித்திருக்கிறேன்; ஒவ்வொரு முறையும் புதிதாகப் படிப்பது போல் ஒரு சுவை. நன்று.

மோகன்ஜி சொன்னது…

நன்றுக்கு நன்றி அப்பாதுரை சார் !

Matangi Mawley சொன்னது…

nalla katha, sir! enakku kathaikal romba ishtam! :) avvai paattikku enna oru presence of mind! ivvalavu methaavi-yaana avvaiyai mattam thattinathu pol pesuvaar- athuvum kambar endru ninaikka manam varavillai.

nevertheless-- ithu rombave swaarasyamaana kathai thaan! :)

மோகன்ஜி சொன்னது…

மாதங்கி!நான் நினைச்சது போல்தான் நீங்களும் நினைக்கிறீர்கள். மேலே ரிஷபன் சார் சொன்னதைப் படிச்சீங்களா?
//அழகான சண்டை.. அது ஒளவையா.. கம்பனா.. யாராய் இருந்தால் என்ன.. நல்ல கவிதை கிடைத்தது.. சுவாரசியமாய் //

இன்னும் கூட கதைகள் சொல்வேன் உங்களுக்கு.

ம.தி.சுதா சொன்னது…

மிகவும் ரசித்துச் சுவைத்தேன் அருமையான இலக்கிய விளக்கம்...

ஆயிஷா சொன்னது…

அருமையான விளக்கம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

நல்லா இருக்கு! பத்து ரத புத்திரனின் என்று ஒரு வெண்பா ஆரம்பிக்கும். இப்போது மறந்து விட்டது.அர்த்தம் என்னவென்றால், காலில் முள் குத்தினால், காலை தரையில் தேய் என்று முடியும்,அது.யாராவது தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி ம.தி.சுதா.. நலமா?

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆயிஷா!

மோகன்ஜி சொன்னது…

வாங்க மூவார் முத்தே! நீங்க கேட்டு சொல்லாம இருப்பேனா. அடுத்த பதிவாய் போட்டுடலாம்.

மதுரை சரவணன் சொன்னது…

மிகவும் சுவாரசியமாக இருந்தது. இது போன்ற தமிழ் அமுதை நீங்கள் மட்டும் சுவைக்காமல் எங்களுக்கும் அளிப்பதற்கு மிகவும் நன்றி.

Asiya Omar சொன்னது…

கதையும் பாட்டும் விளக்கமும் அருமை.

மோகன்ஜி சொன்னது…

வாங்க சரவணன் சார்! இன்னொரு இலக்கிய டிட்பிட்டும் இப்போ போட்டிருக்கேன் பாருங்க!

மோகன்ஜி சொன்னது…

ஆசியா மேடம்.நன்றி!

பாரதசாரி சொன்னது…

திரும்ப நாலாம் வகுப்புக்கு போன உணர்வு :-)
தமிழை வாசிக்க தொடங்கிய காலத்தில் அதை நேசிக்கவும் படிப்படியாக சுவாசிக்கவும் செய்தவர் எனது தமிழாசிரியர் வெங்கடேசன் .
இன்றும் கலிங்கத்துபரணியின் வரிகள் நினைவில் நீங்காமல் இருக்கிறது
"கடுவிடப் பொறிப் பணப்பினி பிடரொடித்தல் கொள்"
கடுமையான விஷத்தை கொண்ட ஆதிசேஷனின் (பூமியைத் தாங்குவதாக புராண நம்பிக்கை) கழுத்து உடைந்து விடும் படி அரசனின் படை விரைந்தது...

பாரதசாரி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

பாரதசாரி சார்! கலிங்கத்துப் பரணி ஒரு அற்புதம்.. அழகான வரிகளை நினைவு கூர்ந்ததற்கு நன்றி