வியாழன், பிப்ரவரி 17, 2011

ஞாபகங்கள்




ததிக்ராவிண்ணோ அகாரிஷம்.....

கூடமெங்கும்  தெளிக்கப்பட்ட நீர்த்துளிகள் சின்னச்சின்னதாய்க் குளம்கட்டியிருந்தது.

தட்டப்பட்ட வாயிற் கதவை நோக்கி விரைந்தாள் அகிலாண்டம்.

வாங்கோண்ணா" புடவைத்தலைப்பை இழுத்து போர்த்தியபடி கதவைத் திறந்தாள்.

என்ன சொல்றான்?"

உங்க சினேகிதர் அடிக்கிற கூத்தை நீங்களே பாருங்க. சொன்ன மந்திரத்தையே திரும்பதிரும்ப சொல்லினபடி சந்தி பண்ணிண்டு வீடுமுழுக்க தீர்த்தவாரி.. இது வரைக்கும் ரெண்டு சொம்பு ஜலம் தெளிச்சாச்சு.. அம்பிகே!
சலிப்பும் திகிலுமாய் அவள் கண்களில் ஈரம் பளபளத்தது.

ஏய்! சாம்பா! சகாயம் வந்திருக்கேன் பாரு

"கோணிய மோவாயுடன் வெறித்துப் பார்த்தார் சாம்பா என்கிற சாம்பசிவன்.
.பத்துநாள் தாடி.. .காதெல்லாம் அப்பிய விபூதிக் குழைசல்..

இன்னும் ஜலம் அகிலாண்டத்தை நோக்கி சொம்பை நீட்டினார்

போறும்.. கெணறு வத்திடுத்து.. வெடுக்கென சொம்பைப் அவள் பிடுங்கியதில்அலங்கோலமாய் கூடத்தில் சரிந்த சாம்பனை தூக்கி மணையில் அமர்த்தினார்  சகாயம் என்கிற சகாயராஜ்.

சாம்பனின் உடல் கனத்தில் அவருக்கும் மூச்சிறைத்தது. ஆச்சே.. அவருக்கும் இந்த கிறிஸ்மஸ்ஸுக்கு அறுபத்தெட்டு தொடங்கிடுமே....

என்னடா சாம்பா இது? பண்ணின சந்தியெல்லாம் போதாதா?

படவா.. நித்திய கர்மா நித்திய கர்மா...

சரி மெல்ல எழுந்திரு

இவனுடன் லோல்பட ஒரு பத்து நிமிஷம் என்னாலயே முடியலயே.. இந்த அகிலாண்டம் என்ன பண்ணும். சகாயம் கவலைப் பட்டார்..

நண்பனை அணைத்தபடி வாயிற்திண்ணைக்கு வந்தார்.

மெல்ல உட்காரு..

சாப்டியா?

மீண்டும் வெறித்தப் பார்வை

நாளைக்கு ஜிப்மர் போறோம்

ம்ம்..

என்கிட்டயாவது பேசேண்டா.. என்னைகூட மறந்துட்டியா?

தமிழரசிக்கிட்டே கடுதாசி குடுத்தியே...” சாம்பன் கண்ணில் பழைய குறும்பு சின்னதாய் எட்டி பார்த்தது.

சகாயராஜுக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது.

என் கல்லூரி நாட்களின் கதை அல்லவா அது? எல்லாவற்றையும் மறந்து போனாலும் என் சிநேகிதன் என்னை மறக்கவில்லை. என் வாழ்வின் சம்பவங்கள் இன்னும் சாம்பனின் மனத்தின் ஓரத்தில். அந்த ஞாபகங்கள் கூட அவ்வப்போது மட்டும்.....

சகாயராஜின் கண்கள் கசிந்தன.

சாம்பா! நான் அத்தனை முக்கியமா உனக்கு? மனைவியின் பெயர் மறந்து விட்டது. பேரனைத் தெரியவில்லை. உடன்பிறந்த தம்பியை செருப்புக்கடை பாலு தானே என்கிறான்.. என்னை மட்டும்... என்னை மட்டும்.

கொஞ்சம் காபி குடிங்கோண்ணா.. பித்தளை தம்ளர் பொன்னாய்  மின்னியது..
 இந்த சிதம்பரத்தில் தான் இன்னும் பித்தளை டம்ளர்ல காப்பி.. எல்லா எடத்துலயும் காது மொளச்ச பீங்கான் கப்பு.

அண்ணா! பாண்டிச்சேரி ஆஸ்பத்திரிலயாவது சொஸ்தமாயிடுமா?

எதுக்கும்மா இவ்வளவு கவலை? கர்த்தர் மகிமை.. நல்லது தான் அகிலாண்டம் நடக்கும்

எங்க நடராஜருக்கு காலை மாத்திகிட்டு ஆடக்கூட ஒழியல்லே.. உங்க சாமியாவது உதவட்டும் அண்ணா.

பைத்தியம்... எல்லா சாமியும் ஒண்ணு தாம்மா! நம்பிக்கைதாம்மா சாமி!

என்ன பாக்கிறேள்? வெறிக்கும் கணவனைக் கேட்டாள்.

கமலம் அத்தை தானே நீ?

ஈஸ்வரா! முந்தி பேசாம கழுத்தறுத்தார். இப்போ ஏதேதோ.... மேற்கொண்டு பேசமுடியாமல் அகிலாண்டம் விம்மினாள்.

சரியாயிடும்மா. நான் காலை ஆறு மணிக்குல்லாம் வந்துடறேன். எதுக்கும் மூணு நாலு நாளைக்கு துணிமணி எடுத்துக்கம்மா.டாக்டர் கடுதாசிஎல்லாம் எடுத்து வச்சிக்கோ. நான் பாங்குக்கு போய் பணம் எடுத்துகிட்டு வந்திடுறேன். கவலைப்படாதே. டேய் சாம்பா! வர்றேன்.

சாம்பன் குரல் எழுந்தது
தெய்வச் சிதம்பர தேவா! உன் சித்தம் திரும்பிவிட்டால்
 பொய்வித்த சொப்பன மாமன்னர் வாழ்வும்புவியுமிங்கே
மெய்வைத்த ... உம்ம்ம்... அவர்  கண்கள் அலைந்தன...

இது ஒண்ணு தான் குறைச்சல். என்ன பாவம் நான் பண்ணினேன்

அகிலாண்டம். அவன் மனசுல ஏதேதோ ஞாபகம் அலைமோதுது. ஏதோ ஒரு நேரம் எல்லாமே நேராயுடும் பாரேன்.

பாங்கு நோக்கி நடந்தார் சகாயம்.. எப்படி இருந்தவன்? எத்தனைக் கால நட்பு.
சாம்பனின் நிர்தாட்சண்யமான குணத்தால் எத்தனை இழந்தான்?.. நான் ஒருவன் மட்டும் தான் இன்றுவரை அவனுடன்.. நல்லதோ கெட்டதோ. எனக்குத் தெரியாத ரகசியம் சாம்பன் வாழ்வில் ஏது?

வேண்டாம் என்று ஆகிவிட்டால் திரும்பிக்கூட பார்க்காத பிடிவாதம்...
சாம்பனின் தங்கைக் கல்யாணத்தில் அவமானப் படுத்திய தன் தந்தையை இறுதிவரை பார்க்காதவன்.

சாம்பனின் ஒரே மகன் பிறந்த புதிது. வாலிபத்தின் உந்துதலில் மனைவியை நெருங்க, எப்போதும் இதே நினைப்புத்தானா?’ என்றவளை உதறி ஒரேயடியாய் அந்த நினைப்பை ஒழித்தவன். இதைக்கூட என் கையைப் பிடித்துக் கொண்டு முறுக்காய்ச் சொன்னவன்.


பிள்ளை வெளிநாட்டில் வேலைக்குப் போய் ஒரு குஜராத்திப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சிதம்பரம் வர, அவன் முகம் பார்க்காமல், பிள்ளை ஊர் திரும்பும் வரை சீர்காழி, வைதீஸ்வரன் கோவில் என்று திரிந்தவன்..

எதனாலோ இப்போது தன் ஞாபகங்களையும் தன்னிலையையும் 
ஒழித்து விட்டு நிற்கிறான்.


சகாயராஜின் மனம் கனத்தது.

மறுநாள் சகாயம், சாம்பனின் கையைப் பிடித்துக் கொண்டு,அகிலாண்டம் பின்தொடர பஸ் நிலையத்தை அடைந்தார்.

சகாயம் சார்! எங்க பிரயாணம்? சிவகுரு தான். சாம்பனின் சகோதரன்.

'ஆஸ்பத்திரிக்கு'.

கடலூர் பெரியாஸ்பத்திரியா?

கோரிமேட்டுக்கு

அவ்வளவு முத்திடுச்சா? எள்ளல் தெறித்தது.
அவனைப் புழுப்போல பார்த்தபடி மேற்கொண்டு நடந்தார் சகாயம்.

பஸ் விரைந்து கொண்டிருந்தது. சூனியத்தில் வெறித்தபடி சாம்பன்..

இவன் வாழ்க்கைக்கு ஏதும் அர்த்தம் இருக்கிறதா?
சுற்றங்களை ஒழித்துவிட்டு, வாழ்க்கையை ஒழித்துவிட்டு,அது கிளர்த்திய நினைவுகளைக் கூட ஒழித்துவிட்டு, மனதின் ஓரத்தில் நூலாம்படைபோல் ஒட்டிக்கொண்டு தொங்கிக் கொண்டிருக்கும் ஓரிரு நினைவுகள் மட்டும் கண்ணாமூச்சு ஆட...

சாம்பனுக்கு நினைவு முழுதாய்த் திரும்பி என்ன சாதிக்கப் போகிறான்?
வேலையிலும், வாழ்க்கையிலும் பட்ட அவமானங்களையும் தோல்விகளையும் மீண்டும் மீண்டும் அசைபோட்டு மனசை ரணகளமாக்கிக் கொள்ளவா? பேரனைக் கூட ஒட்டவிடாமல்  முறுக்கிக் கொண்டு நிற்கும் மகனை எண்ணிக் குமையவா?
கொஞ்ச நேரம் முன்னர் கெக்கலி கொட்டி விட்டுப் போனானே இவன் தம்பி சிவகுரு ...அந்தப் பேச்சுக்கெல்லாம் அர்த்தம் புரிந்து கொண்டு வேதனைப்படவா?
எதற்கு.. எதற்காக  இவனுக்கு நினைவு திரும்ப வேண்டும்?..

இல்லை இல்லை.. இன்பமோ துன்பமோ.. வாழ்வின் முழுமை அவற்றை இறுதிவரை எண்ணி எண்ணி சுகிக்கவோ, துக்கிக்கவோ செய்வதில் தானே இருக்கிறது.. சாம்பனுடன் நினைவுபடுத்தி அசைபோட எங்கள் நட்பொன்று போதாதா?

சகாயம் குமைந்தார்.. கர்த்தரே? இது  என்ன சோதனை.?. என் நண்பனுக்கு வழிகாட்டுதல் புரியும்.. அவனுக்கு சாந்தி அருளும்..

கண்மூடி பிரார்த்தித்தார்.

ஜிப்மர் எறங்கு....

அண்ணே! அண்ணே! இவரைப் பாருங்களேன்.....

சாம்பனின் கையைப் பிடித்த சகாயம் குழறினார்.. சாம்பா...”

பதினைந்து நிமிட பரபரப்புக்குப் பின், பஸ் இருவரோடு சாம்பனின் உடலையும் இறக்கிவிட்டுவிட்டு... அவரின்  சொச்ச நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு நகரத் தொடங்கியது.

70 comments:

Matangi Mawley சொன்னது…

such a gripping narration! throughout- there was an edge throughout-- the storm of thoughts inside a man crawling towards eternal bliss... Brilliant, sir!

மோகன்ஜி சொன்னது…

நன்றி மாதங்கி.. உங்கள் கமேன்ட்ஸ்க்கு நான் ரசிகனாகி விட்டேன்.

RVS சொன்னது…

மோகன்ஜி! அண்ணா சாம்பனை நினைச்சு.. சகாயராஜை நினைச்சு 'ஓ'ன்னு அழணும் போல இருக்கு... காது மொளச்ச பீங்கான் கப்பு!! மத்தபடி மாதங்கியை வழிமொழிகிறேன். ;-) நன்றி.. நன்றி.. நன்றி.. ;-)

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆர்.வீ.எஸ்!நினைவழிந்த மனிதனை விட உடன் இருப்பவர் நிலை கொடுமையானது. நட்பின் இறுக்கம் மதங்களையும்,சோதனைகளையும் கடந்த ஒன்று என்பதை சாம்பனும்,சகாயராஜூம் எடுத்துக் காட்டுவது இந்தக் கதையின் பயனாய் இருக்கட்டும்

'பரிவை' சே.குமார் சொன்னது…

Arumai anna... natpin vilasam ungal kathaiyil... arumaiyai ezhuthi irukkinga...

பத்மநாபன் சொன்னது…

காலகாலமாக பதிந்த நித்ய சடங்கின் மீது அதீத பற்று....
கல்லூரிக் காதல் நினைவு படுத்தியவுடன் எட்டி பார்த்து வெளிவரும் நினைவு..
பிடிப்பில்லாத உறவுகள்,நமக்கில்லை என்று விலக, நட்பும் மனையும் தான் கடைசிவரை நினைவை மீட்க போராடுவது...
எதற்கு நினைவு திரும்பவேண்டும் ...எனும் நியாயமான கேள்வி....
இப்படி வாழ்வியலில், நட்பியலையும் மனவியலையும் கலந்து அற்புதமான பதிவு......

மதுரை சரவணன் சொன்னது…

கதை அருமை.. வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார். தாய்மைக்கு ஈடானது நட்பு ஒன்றே!

பத்மநாபன் சொன்னது…

//காது மொளச்ச பீங்கான் கப்பு //

//நூலாம்படைபோல் ஒட்டிக்கொண்டு //அந்தந்த இடத்தில் அருமையாக உட்கார்ந்து கொண்ட வார்த்தை பிரயோகங்கள்.....
எந்த சூழலின் தன்னை தொலைத்தார் சாம்பசிவம்..... இது போல் சாம்பசிவர்கள் தோன்றாமல் இருக்க தீர்வுகள் என்ன என்பதை கொஞ்சம் பின்னூட்டங்கள் தாண்டி யோசிக்கும் தளமாக்குவோம்

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! கதையின் மையத்தை உங்களைப் போல் தொட்டு ரசிக்கும் பாங்கு யாருக்கு வரும்? நன்றி பத்மநாபன்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி சரவணன் சார்!

மோகன்ஜி சொன்னது…

//எந்த சூழலின் தன்னை தொலைத்தார் சாம்பசிவம்..... இது போல் சாம்பசிவர்கள் தோன்றாமல் இருக்க தீர்வுகள் என்ன //

என்ன அழகான கேள்வி கேட்டீர்கள்? பதில் மற்றவர் கருத்துகளுக்குப் பின்னர் நாமும் ஆராய்வோம் பத்மநாபன்!

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

மிகவும் ரசித்த வரிகள்:

//எல்லா எடத்துலயும் காது மொளச்ச பீங்கான் கப்பு.//

//“என்ன பாக்கிறேள்? “வெறிக்கும் கணவனைக் கேட்டாள்.

“கமலம் அத்தை தானே நீ?”

“ஈஸ்வரா! முந்தி பேசாம கழுத்தறுத்தார். இப்போ ஏதேதோ....” மேற்கொண்டு பேசமுடியாமல் அகிலாண்டம் விம்மினாள்.//


//“அவ்வளவு முத்திடுச்சா?” எள்ளல் தெறித்தது.
அவனைப் புழுப்போல பார்த்தபடி மேற்கொண்டு நடந்தார் சகாயம்.//


//எதற்கு.. எதற்காக இவனுக்கு நினைவு திரும்ப வேண்டும்?..//


நல்லதொரு நடையில், சங்கடமான தொரு நிகழ்வைச் சித்தரித்த தங்களுக்கு என் பாராட்டுக்கள்.

Chitra சொன்னது…

மனதை கனக்க வைக்கும் கதை.... கதையில் இருந்த உணர்வுகளுடன், வாசிப்பவர்களையும் கட்டி போடும் எழுத்து நடை... பாராட்டுக்கள்!

பாரதசாரி சொன்னது…

'ததிக்ராவிண்ணோ அகாரிஷம்.....’என்று தொடங்கும்போதே நான் எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு தான் படிக்க தொடங்கினேன், இருந்தாலும் கடைசி வரிகள் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தத்தான் செய்தது.

Philosophy Prabhakaran சொன்னது…

அருமையான விவரிப்பு... பிரமாதம் சார்...

சாய்ராம் கோபாலன் சொன்னது…

அருமை மோகன்ஜி.

உங்கள் கதை நிறைய என்னையும், என் நண்பன் ஆனந்தையும், எங்கள் ஆழமான நட்பையும், எங்கள் இளமை துள்ளல்கள், ரகசியங்கள் என்று அசைபோடவைத்தது. எனக்கு இருக்கும் ஞாபக மறதிக்கு சாய் தான் சாம்பன். ஆனந்தன் அதனால் தான் என் ப்ளாகில் என்னுடைய நான்கு பேரில் ஒருவன் என்று சொன்னேன்.

இன்று தான் என் சக தொழிலாளி தன எண்பத்தைந்து வருட தந்தை சாம்பன் நிலைமையில் இருப்பதை சொன்னார். இங்கே வந்து படித்தால் உங்கள் கதை.

ஆயிஷா சொன்னது…

எழுத்து நடை அருமை. பாராட்டுக்கள்!

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! உங்கள் ரசனையும் பாராட்டும் வணக்கத்துக்குரியவை.நன்றி!

மோகன்ஜி சொன்னது…

சித்ரா! உங்கள் கனிவான பாராட்டுக்கு என் நன்றி!

மோகன்ஜி சொன்னது…

//நான் எதற்கும் தயாராக இருக்கவேண்டும் என்று முடிவு செய்துகொண்டு தான் படிக்க தொடங்கினேன்//
அன்புள்ள பாரதசாரி! ஒரு நல்ல படைப்பாளியின் முதல் தகுதியே ஒரு நல்ல வாசகனாய் ரசிக்க முடிவது தான்! உங்கள் வரிகள் ஆச்சரியப் படுத்துகிறது. நன்றி!

மோகன்ஜி சொன்னது…

நன்றி என் அன்பு பிலாசபி!

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாய்! உங்கள் நாலு பேருக்கு நன்றி என்னை நிறையவே யோசிக்க வைத்தது. அந்த நால்வரைப் பற்றியும் ஒரு பதிவிட ஆசைப் படுகிறேன்.உங்களின் நண்பரின் தந்தை குணமடைய பிரார்த்திக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆயிஷா! உங்கள் பாராட்டுக்கு நன்றி சகோதரி!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

மோஹன்ஜி! என்ன எழுதியும் தீராத இந்த வாழ்க்கையை என்ன பெயரிட்டழைப்பது?

மனங்கனக்கும் இந்தக் கதைக்கு நடுவே என் தாத்தாவின் வயோதிக நாட்களைக் கண்டேன்.

எழுதப்படாத வரிகளுக்கு இடையே மீதி வாழ்க்கையைத் தேடியபடி இருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அப்பா! என்னைப் பிரமிக்க செய்கிறது உங்கள் வார்த்தை கோர்வைகள். எங்கே தொலைக்கிறோம் வாழ்க்கையை என்று தெரியாமலேயே தொலைத்துக் கொண்டு இருக்கிறோம், நாமும். கதையின் கனத்தில் மூழ்கி விட்டேன்..... நல்ல கதை பகிர்வுக்கு மிக்க நன்றி மோகன்ஜி!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

பிரிய சுந்தர்ஜி!
வாழ்க்கையை நாம் எழுதி தீர்த்து விட முடியாது. மாறாக நம்மை தான் வாழ்க்கை தன் மாளா பக்கங்களில் எழுதி, தீர்த்தும் விடுகிறது.

/ எழுதப் படாத வரிகளின் இடையே வாழ்க்கைத் தேடல்/
அழகாய்ச் சொன்னீர்கள்.வரிந்து கட்டிக் கொண்டு தேட ஆரம்பித்தால் அவ்வப்போது நம் காலில் இடறுகிறது. நேசத்தில், இயலாமையில்,தியாகத்தில்,கண்ணீரில் அங்கங்கு தலைதூக்கும் வாழ்வின் நிழல்.
18 பிப்ரவரி, 2011 2:59 pm

Unknown சொன்னது…

எழுத்து நடையிலுள்ள வீரியம் ஈர்க்கிறது.

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள வெ.நா! உங்கள் அன்பின் வெளிப்பாடே உங்கள் பாராட்டுக்கள்.
/எங்கே தொலைக்கிறோம் வாழ்க்கையை என்று தெரியாமலேயே தொலைத்துக் கொண்டு இருக்கிறோம்/

ஒரு வேளை.வாழ்க்கையை தொலைப்பதோன்றே வேலையாய் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ?

மோகன்ஜி சொன்னது…

வாங்க பாரத் பாரதி! உங்கள் அன்புக்கு நன்றி!

ADHI VENKAT சொன்னது…

மனம் கனக்க வைத்த கதை. காது முளைத்த பீங்கான் கப்புகள், நூலாம் படை வார்த்தை பிரயோகங்கள் அருமை. எதனால் தன் நினைவுகளை இழந்தார் ?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதி! உங்கள் வாழ்த்துக்கு நன்றி. அவர் நினைவிழந்தது எப்படி என்பது உங்கள் ஊகத்திற்கு..

பெயரில்லா சொன்னது…

nenga andravil irukum thamil kuyila ji..

மோகன்ஜி சொன்னது…

ஆம் தமிழரசி! எந்த மூலையில் இருந்தாலும் தமிழை சுவாசிக்கும் குயில் தான் நான். இப்போது ஹைதராபாதில் தமிழ் ஏக்கத்துடன் கூவிக்கொண்டிருக்கிறேன்.வருகைக்கு நன்றி அரசியே!

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//மோகன்ஜி சொன்னது… அன்பு சாய்! உங்கள் நாலு பேருக்கு நன்றி என்னை நிறையவே யோசிக்க வைத்தது. //

அன்புள்ள மோகன்ஜி, காத்திருக்கின்றேன் உங்கள் நால்வரை பற்றி அறிய. என் நண்பன் ஆனந்தன் நான் எழுதியதை படிக்க கூட கணணி இல்லாதவன். அவன் படித்தால் கேவி கேவி அழுவான். இதை எழுதும்போதே என் கண்களில் அவனைப்பற்றி நினைத்து கண்ணீர் பெருகுகின்றது.

நீங்களே அருமையானவர், உங்கள் அந்த ஸ்தானத்தை அடைந்த நண்பர்கள் இன்னும் எவ்வளவு அன்புள்ளவர்களாக இருப்பார்கள்.

மோகன்ஜி சொன்னது…

அவசியம் எழுதுவேன் சாய்! உங்கள் நண்பரை நினைத்து நானும் நெகிழ்கிறேன்

சிவகுமாரன் சொன்னது…

கதை என்னைக் கட்டிப் போட்டது. வெகுநேரம் மனம் கலங்கிப் போய் அமர்ந்திருந்தேன்.

\\\நினைவழிந்த மனிதனை விட உடன் இருப்பவர் நிலை கொடுமையானது///

நிதர்சனமான வார்த்தைகள். சென்னை புற்றுநோய் மருத்துவமனையில் நோயாளிகளை விட அவர்களின் உடனிருப்பவர்களின் முகங்களைக் கவனித்திருக்கிறீர்களா?
சில இடங்கள் என் தந்தையின் இறுதிக் காலத்தை நினைவு படுத்தியது. இங்கு விவரிக்க முடியாத பல நினைவுகளைக் கிளறி விட்டது அண்ணா இந்தப் பதிவு.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! சென்னைப் புற்று நோய் மருத்துவமனை எனக்கும் சில நெஞ்சறுக்கும் நினைவுகளை எழுப்பும் . என் ஒரே சகோதரியை, அவளுக்கு புற்றுநோய் என்பதையே தெரிவிக்காமல் பலநாட்கள் அங்கே மூடுமந்திரமாய் வைத்தியம் பார்த்தோம்..அதுவோர் மண்மூடிப் போன கதை. நம்மை சார்ந்தவர்கள் தான் வேறுவேறு.சோகம் ஒன்றுதான்.

எல் கே சொன்னது…

நேற்றே பின்னூட்டம் இட நினைத்து மறந்து விட்டேன். சொந்தங்களே கைவிட்ட ஒருவனை கடைசி வரை கூட இருந்து நண்பன் .

எல் கே சொன்னது…

//நினைவழிந்த மனிதனை விட உடன் இருப்பவர் நிலை கொடுமையானது//

இந்த மாதிரி ஒரு சிலரை நேரில் சந்தித்து இருக்கிறேன். யாருக்கும் அந்த நிலை வர வேண்டாம்

மோகன்ஜி சொன்னது…

வாங்க எல்.கே! நட்பு இறுதி வரை கூட வரும். எதிர்பார்ப்புகள் இல்லாத நட்பு வைத்தவர்கள் ஆசீர்வதிக்கப் பட்டவர்கள். உங்கள் வலைப்பூ அழகில் மின்னுகிறது. அடியவனுக்கும் ரகசியம் சொல்வீரா நண்பரே?

அப்பாதுரை சொன்னது…

நாலைந்து நாள் அசை போடவைக்கும் கதை. மாதங்கி சொன்னது போல் ஒரு edge கடைசி வரை வருகிறது. பிறகு கதையிலிருந்து படிப்பவர் மனதுக்குத் தாவிக் குடைகிறது. ஒரு சபாஷ் போட அனுமதியுங்கள்.

RVS சொன்னது…

இன்னிக்கும் ஒரு தடவை முழுக்கப் படிச்சேன்!

அப்பாஜியின் அனுமதியோடு....
// பிறகு கதையிலிருந்து படிப்பவர் மனதுக்குத் தாவிக் குடைகிறது//

இதைத்தான் எனக்கு சொல்ல வரலை!

மோகன்ஜி சொன்னது…

வாரும் நசிகேத நாயகரே! குடைச்சல் குடுக்க ஆரம்பிச்சிட்டேன் இல்லையா?

உங்கள் சபாஷ் தனை சிரம்தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன்

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! அப்பாதுரையின் இந்த வரிகளை படித்து ஆச்சர்யப் படுகிறேன். என்ன அழகான கருத்து?

நமக்கு இதெல்லாம் எப்போ சொல்லவரும் என்ற உங்கள் ஐயப்பாட்டில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நாமெல்லாம் பஞ்சத்து ஆண்டி. அப்பாதுரையோ பரம்பரை ஆண்டி!

என்றென்றும் உங்கள் எல்லென்... சொன்னது…

சரளமான நடை...ப்ரமிக்க வைக்கும் வார்த்தை ப்ரயோகங்கள்...முடிவு கனமாய் இதயத்தில் இறங்கியது.....Hats off !!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

என் சொல்வேன்..என்னருமை மோஹன்?

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

வாசகனை கிறங்க அடித்த அற்புதமான நடைக்கு என் ஸல்யூட்!

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள லக்ஷ்மிநாராயணன் சார்! முதல் முறை வருகிறீர்கள் என் நினைக்கிறேன். உங்கள் அன்புக்கு நன்றி.அடிக்கடி வாருங்கள் நண்பரே!

மோகன்ஜி சொன்னது…

மூவார் முத்தே! உங்களைக் காணாமல் ஏங்க ஆரம்பித்து விட்டேன். வந்தீரோ... சமாதானமானேனோ! நன்றி!நன்றி!

ரிஷபன் சொன்னது…

கதையல்ல நிஜம்.. என்னைக் கை பிடித்து இழுத்துப் போன நடை.. கடைசியில் கதறடித்த முடிவு.. நடுநடுவே வார்த்தைகளின் சாகசப் பின்னல்கள்.. சபாஷ்..

மோகன்ஜி சொன்னது…

என் பிரிய ரிஷபன்!உங்களின் நேசம் மிளிரும் பாராட்டுக்காக ஆயிரம் புனைவுகள் படைக்க ஆர்வமாய் இருக்கிறது. நன்றி!

எல் கே சொன்னது…

ஜி, ரகசியம் எதுவுமில்லை. எழுத்தில்தான் ஒன்றுமில்லை. பார்க்கவாது நல்லா இருக்கட்டுமேன்னு ஏதவாது போட்டு இருப்பேன் அவ்ளோதான்

மோகன்ஜி சொன்னது…

இல்லை எல்.கே! உங்கள் அழகான பதிவுகளுக்கு மேலும் மெருகூட்ட தொழில் நுட்பத்தை
கையாள்கிறீர்கள்.
ஆர்பாட்டமில்லாத உங்கள் எழுத்துக்களை ரசிக்கிறேன்.
உங்களை வேறு யாரோ என்று எண்ணிக கொண்டு உங்களின் சனந்தரை இப்போது படியுங்கள். அந்த படைப்பில் காணும் எளிமை புரியும். நிறைய எழுதுங்கள் எல்.கே! விசிலடிக்கக் காத்திருக்கிறோம்!! குழந்தை நலமா?

எல் கே சொன்னது…

குழந்தை நலமே ஜி .. நன்றி

RVS சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
RVS சொன்னது…

//நாமெல்லாம் பஞ்சத்து ஆண்டி. அப்பாதுரையோ பரம்பரை ஆண்டி! //
நாந்தான் பஞ்சத்துக்கு ஆண்டி நீங்கள் ராஜ பரம்பரை ஆண்டி.
இந்த சாக்குல நீங்க என் கூட சேர்ந்துக்காதீங்க.. அஸ்க்கு புஸ்க்கு..
இதயத்தை பிசைந்தது!!... ;-)

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆர்.வீ.எஸ்!
நீங்க 'மஞ்சத்து ஆண்டி'ன்னு சொல்வீங்கன்னு எதிர்பார்த்தேன்!

மோகன்ஜி சொன்னது…

'மஞ்சத்து ஆண்டி' உங்கள் அடுத்த பதிவுக்கு தலைப்பு கிடைச்சாச்சு போலிருக்கே ஆர்.வீ.எஸ்!

ம.தி.சுதா சொன்னது…

ஃஃஃஃஃபிள்ளை வெளிநாட்டில் வேலைக்குப் போய் ஒரு குஜராத்திப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சிதம்பரம் வரஃஃஃஃ

சமூகத்திற்கு ஒரு சாட்டை... நல்லாயிருக்குங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தமிழுக்காக ஒரு தமிழனால் முடிந்த உதவி (இலகு தட்டச்சு உதவி)

மோகன்ஜி சொன்னது…

நன்றி மதி சுதா!

geetha santhanam சொன்னது…

மனதைக் கலக்கிய கதை. ஒரு நல்ல நட்பு பெருவரமாகக் கிடைத்ததால்தான் வேறு சாதரண சுகங்கள் அவருக்குக் கிட்டவில்லை போலும்.

மோகன்ஜி சொன்னது…

ஆழமான சிந்தனை! அழகான கருத்து கீதா மேடம்! நல்ல நட்பு நீங்கள் சொன்னது போல் பெருவரம். அடிக்கடி வாருங்கள்.

kashyapan சொன்னது…

இந்தக்கதையை முற்றிலும் வேறு கொணத்தில் என்னால் பார்க்க முடிகிறது.பிரசவமான மனைவி மீது கோபம்.அவமதித்ததாக தந்தை மீது கோபம். குஜராத்திப் பெண்ணை மணந்ததால் மகன் மிது கொபம். தம்பி மீது கோபம்.இறுக்கமான மனனிலை கொண்ட சாம்பான் ஒரு Introvert. ஒரு சைகோ.அப்படி ஒரு படிமம் எனக்குக் கிடைத்தது. இது கதை வடிக்கப்பட்டதில் உள்ள ambuguity யா? அல்லது என்னுடைய thought process ன் super imposition ஆ? தெரியவில்லை..----வாழ்த்துக்கள் மொஹன் ஜி---காஸ்யபன

மோகன்ஜி சொன்னது…

சாம்பான் பாத்திரத்தை ஒரு உள்வாங்ங்கிய மனநிலையும்,அனுசரித்து செல்லாத ஒரு இறுக்கமான மனிதனாயுமே படைத்தேன்.

/வேண்டாம் என்று ஆகிவிட்டால் திரும்பிக்கூட பார்க்காத பிடிவாதம்../

அவன் மனநிலை பிறழ்ந்த காரணம் கூட ஊகத்திற்கே விட்டு வைத்தேன்.இதுபோல் பிரகிரதிகளை அங்கங்கே காணலாம். அந்த கதாபாத்திரத்தின்,இந்த குணாதிசயமே அனுதாபம் பெறவேண்டும் :அவன் மரணமல்ல.. என்றுதான் இதைப் புனைந்தேன். உங்கள் துல்லியமான எண்ணஓட்டம சரிதான் காச்யபன் சார்!உங்கள் வாழ்த்தை ஆசீர்வாதமாய் ஏற்றுக் கொள்கிறேன்.நன்றி சார் !

ஹேமா சொன்னது…

மோகண்ணா....அருமையான மிகவும் நெகிழ்வான கதை.இப்போதான் வாசித்தேன்.கதையில் கவித்துவமும் காண்கின்றேன்.நட்பும் தாய்மையும் ஒன்று என்று சொல்லி என் மனதில் இன்னும் ஒருபடி உயர்ந்துவிட்டீர்கள் அண்ணா !

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மண்மூடிப் போன கதை.//
eternal story. feel in mind.

மோகன்ஜி சொன்னது…

ஹேமா! கவிஞன் கதை எழுதினா இப்படித்தான் இருக்கும். சைனீஸ் நூடல்ஸ்க்கு தேங்காச்சட்னி தொட்டுகிட்டாப் போல!

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம் !வாழ்த்துக்கு நன்றி!