சனி, டிசம்பர் 10, 2011

அமராவதியே! ஆனந்தமே!!


அதிக நாட்கள் தான் ஆகி விட்டது வலை மேய்ந்து.
நிறைய வேலை...கொஞ்சம் அலுப்பு.....
நிறைய பயணம்... கொஞ்சம் ஆசுவாசம்..
நிறைய பூஜை... சாமி சரணம் ...

வெறும் கையோடு வரவில்லை...
ஒரு ஆன்மீகப் பயணத்தின் பகிர்தலோடு பதிவிடத் துவங்குகிறேன் என் சொந்தங்களே!

இந்த வாரம் ஆந்திர மாநிலம் குண்டூரில் அலுவலக வேலையாக
இருக்க நேர்ந்தது. குண்டூரிலிருந்து 36 கி.மீ தொலைவிலுள்ள அமராவதி சென்று வந்தேன். வரலாற்றின் சுவடுகள் இன்னமும் அழியாமல் சலனமற்று இருக்கும் ஒரு சிற்றூர். இந்து சமயமும் பௌத்தமும் செழிப்புற்று இங்கு கோலோச்சிய தலம்.

முதலில் அமரேசன் ஆலயம் பற்றி பார்ப்போம்.. புனிதமான கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்திருக்கும் இந்த சிவன்கோவிலில் உறையும் ஈசன் அமரேஸ்வரர், அமரலிங்கேஸ்வரர் என்ற திருநாமங்களுடன் அழைக்கப் படுகிறார். அம்பிகை பால சாமுண்டேஸ்வரி. இது தத்த க்ஷேத்திரமும் கூட.

இந்தத் தலம் பஞ்சாராமம் எனும் ஐந்து தலங்களில் முக்கியமானதும், முதன்மையானதும் ஆகும். இதை அமரராமம்
என்பர்.மற்ற நான்கு தலங்கள் திராக்ஷாராமம்,குமாரராமம் க்ஷீரராமம் மற்றும் பீமராமம் ஆகும். இவையனைத்தும் ஆந்திரத்திலேயே அமைந்துள்ளன. இந்த பஞ்சாராமத்துக்கு ஒரு புராண கதையுண்டு.தாரகாசூரன் பிரம்மதேவரை நோக்கி கடும்தவம் இருந்தான். தன்னை விட சக்தியுள்ளவர்கள் யாரும் இருக்கக் கூடாது என்று ஒரு வரமும், தனக்கு மரணம் நேரிட்டால் அது சிவனுக்குப் பிறந்த ஒரு பாலகனாலேயே நிகழ வேண்டும் என்று இரண்டாம் வரமும் பெற்றான். சிவன் நெடுந்தவத்தில் ஆழ்ந்து விட்ட படியால் சிவகுமார சம்பவத்திற்கு வாய்ப்பு இருக்காது என்ற நம்பிக்கையில் தான் இரண்டாம் வரத்தை பெற்றான். வரம் வாங்கியவன் சும்மா இருப்பானா? தேவர்களை இம்ஸித்தான், யாகங்களைக் கலைத்தான். கொடுங்கோல் புரிந்தான்.

தேவர்களைக் காக்க துணை புரிய வேண்டிய சிவனோ தவத்திலல்லவா இருக்கிறார்? பிருகஸ்பதியை அனுப்பி மன்மதனை அழைத்து வந்து....

உங்களக்குத்தான் தெரியுமே ? மன்மதன் சிவனின் தவத்தைக் கலைத்ததும், காமதகனம் நடந்ததும், ஆறுமுகன் சரவணப் பொய்கையில் உதித்ததுவும் நிகழ்ந்தன. தாகாசுரனால் துரத்தப் பட்ட இந்திரனும், ஏனைய தேவர்களும் இந்தத்தலத்தில் தஞ்சம் புகுந்து சிவனை நோக்கி தவமிருந்தனர். அதனால் தான் இந்தத் தலம் அமரேசம், அமராவதி, அமராபுரம், (தேவர்கள் தன்யமடைந்ததால்) தன்ய கோட்டா என பல பெயர்கள் பெற்றது.

தாரகாசுரன் செய்து கொண்ட அட்வான்ஸ் புக்கிங் படி, சிவகுமாரனான முருகன் கைவேல் தாரகனின் நெஞ்சைக் கிழித்தது. முன்னொருமுறை தவத்தால் சிவனிடம் பெற்றதும் தாரகன் நெஞ்சில் பொதிந்திருந்ததுமான ஆத்ம லிங்கம் ஐந்து துண்டுகளாய் சிதறி மேற்சொன்ன பஞ்சாராமங்களில் விழுந்தன. அந்த ஆத்மலிங்கத்தின் பெரிய துண்டு விழுந்தது இந்த அமராவதியில். அதை இந்திரனும், தேவகுரு பிருகஸ்பதியும், அசுரகுரு சுக்ராச்சார்யார் ஆகிய மூவருமாய் பிரதிஷ்டை செய்ததாய் ஐதீகம். இந்த பளிங்கு லிங்கம் பதினைந்து அடி உயரம் கொண்டது. இதற்கு அபிஷேகம் மேன்மாடத்திலிருந்து செய்யப் படுகிறது. தமிழ் நாட்டில் இப்படி நெடுநெடுவென சிவலிங்கம் இருக்கிறதா எனத் தெரியவில்லை.

இன்னொரு தலபுராணம் யாதெனில் திரிபுரம் முற்றுமாய் சிவபெருமான் எரித்த பிறகு, சூரியனால் உருவாக்கப் பட்ட உயர்ந்த சிவலிங்கம் ஒன்று மட்டுமே எஞ்சியிருந்ததாம். சிவபெருமானே அதை ஐந்தாக்கி இந்த ஐந்து தலங்களிலும் இருக்கச் செய்ததாயும் ஐதீகம்.

மற்றபடி பல தலங்களிலும் சொல்லப் படுவதைப் போல் வளர்ந்து கொண்டே வந்த இந்த சிவலிங்கத்தின் உச்சியில் இந்திரன் ஒரு ஆணி அறைந்து வளர்ச்சியை தடுக்க முயன்றதாயும், உச்சியிலிருந்து இரத்தம் வழிந்ததாயும், லிங்கத்தின் மேனியில் இன்னமும் அந்த வடு காணப்படுவதாயும் ஒரு இளம் குருக்கள் சொன்னபோது ஒன்றும் பேசாமல் கேட்டுக் கொண்டேன். இன்னுமெவ்வளவு எடத்துல தாண்டா இந்த கதையையே விடுவீங்க?’ என என்னுள் இருந்த ஒரு கவுண்டமணி சவுண்டு விட, அவசர அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக் கொண்டேன்.

கோவில் பிராகாரத்தில் பல கல்வெட்டுக்கள் காணப் படுகின்றன. கிருஷ்ண தேவராயர் கால கல்வெட்டுகளும், பனிரெண்டாம் நூற்றாண்டு சார்ந்த கல்வெட்டுக்களும் இருப்பதாய் அறியவருகிறது.

ஆந்திரத்தில் புழங்கும் இன்னொரு சரித்திரம் பண்டிதராத்ய சரிதம் ஆகும். ஸ்ரீபதி பண்டிதராத்யர் எனும் மகான் சூர்ய சிம்ஹாசன பண்டிதராத்ய பீடத்தை ஸ்தாபித்தவர். மல்லிகார்ஜுனஸ்வாமியின் அருளால் சிவராத்ரி சமயம் அவதரித்தவர். அவர் வாழ்ந்த கொண்டவீடு பகுதியின் அரசன்  பௌத்த துறவிகள் சிலரின் துர்போதனையால் பண்டிதராத்யர் கண்களைத் தோண்டி அவரைக் குருடாக்கினான். ஒரு முறையல்ல... மூன்று முறை. ஒவ்வொரு முறையும் அம்மகானுக்கு மீண்டும் கண்கள் தெரிந்தது. மூன்றாம் முறை கண் தோண்டிய குழியில் கள்ளிப்பாலை ஊற்றி கொடுமை புரிந்தான். இந்த முறை அமராவதி வந்த பண்டிதராத்யர் அமரேஸ்வரரைக் கண்டவுடன் மீண்டும் கண்பார்வை கிடைக்கப் பெற்றார். இப்படியாய் ஒரு சரிதம் இத்தல மகிமை பற்றி பேசுகிறது.

ஆலயம் விட்டு வெளியே வந்தால் கிருஷ்ணை நதி அமரேஸ்வரன் பாதம் அலம்பியபடி அமைதியாய் ஓடுகிறது. எவ்வளவு வெள்ளம் வந்தாலும் கோவிலுக்குள் நீர் புகாது என்றும் ஒருவர் சொன்னார்.

கிருஷ்ணா நதியிலிருந்து படகுகளில் ஆற்று மணல் நிரப்பி அதை
கோவிலுக்கு எதிரிலேயே லாரிகளில் ஏற்றுகிறார்கள். மணல்கொள்ளைக்கு ஆந்திரம் தமிழ்நாடு எனும் பேதமே இருக்காது போலும். தமிழ் நாடு என்றவுடன் போன வருடத்து பத்திரிகை செய்தி நினைவுக்கு வருகிறது. இந்த அமராவதி கோவிலுக்கு சொந்தமான ஐநூறு ஏக்கரோ என்னவோ, நிலம் மகாபலிபுரம் செல்லும் வழியில் இருப்பதாயும் அதற்காக அந்நாள் ஆந்திர முதல்வர் ரோசய்யா தமிழக முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்துவதாயும் செய்தி வந்தது. .அந்த  நிலத்துக்கான மதிப்பை ஆந்திரம் பெற்றதோ இல்லையோ, ரோசய்யா அவர்களையே தமிழகம் பெற்று விட்டதே! எப்படியாவது என்குடி வாழ்க!

கோவிலுக்கு வெளியே ஒரு மண்டபம் இருக்கிறது. அதன் முகப்பில் ஒரு மாடம். அந்த மாடத்தில் இடது பதம் தூக்கி ஆடும் அம்பலவன் நடராஜனின் சுதைச் சிற்பம்.... கோவிலுள் அமரேச லிங்கத்தினைக் கண்டு மனம் உருகியதை விட இந்த நடராஜனின் சுதைச் சிற்பம் என்னுள் பெரும் ஆன்மீக விழிப்பை கிளர்த்தி கல்லாய் சமைந்து நிற்கச் செய்துவிட்டது. அந்த நடராஜனின் மடக்கிய வலக்கைக்கும் மார்புக்கும் இடையே ஒரு குருவியின் கூடு. கிரீச்சிடும் குஞ்சுகளை ஒரு தாய் போல் மார்பில் தாங்கி ஆதூரம் காட்டும் மன்றாடி.

எனக்கென்னவோ, கூடு பொதிந்த கையன், தென்னாடு உடைய சிவன் கண்ணெதிரே காட்டிய இறைமையை விட ஏடு கூறும் தலபுராணம் முகிழ்த்தும் ஆன்மீக உணர்வு ஒரு மாற்று குறைவுதான் என்று தோன்றுகிறது.

நீங்க என்ன சொல்றீங்க?

49 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பக்கத்தில் ஒரு பகிர்வு..

ஆன்மீகப் பயணத்தில் இருப்பீர்கள் என்று தெரியும்... அமரலிங்கேஸ்வரர் தரிசனம் பற்றி எழுதிய விஷயங்கள் நன்று. நானும் குடும்பத்துடன் சென்ற வருடம் அக்டோபர் மாதத்தில் வந்திருந்தேன். ஒரு பதிவாகவும் எழுதி இருந்தேன்..

http://venkatnagaraj.blogspot.com/2010/11/3.html

இன்னமும் மணல் திருட்டு... என்ன சொல்வது...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அமராவதியே! ஆனந்தமே!!

ஆனந்தம் அளிக்கும் அழகான பதிவே!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அப்படியே, கை பிடித்து அழைத்து சென்று விட்டீர்கள், ஸார்!

மோகன்ஜி சொன்னது…

அன்பின் வெங்கட்! இந்தப்பதிவை ஓடும் ரயிலில் பதித்து வெளியிட்டேன். ரயில் பயணங்களை எப்போதும் அக்கம்பக்கம் கவனிப்பதையும், பின்னோக்கிய நினைவுப் பயணங்களிலுமே வழக்கமாய் நான் செலவிடுவேன்.

பதிவிடாமல் காலம் தாழ்த்தும் குற்ற உணர்வு உந்த லேப்டாப்பை உருட்டித் தள்ளுகிறேன்.

அடுத்து உங்கள் பதிவை பார்த்து விடுவேன்.மற்றபடி நலம் தானே?

மோகன்ஜி சொன்னது…

நன்றி வை.கோ சார்! உங்க தளத்துக்கு வந்து கொண்டே இருக்கிறேன்

மோகன்ஜி சொன்னது…

அன்பின் மூவார்! நீங்கள் சொல்வது போல் உண்மையிலேயே உங்கள் கை கோர்த்தபடி பழைய சிவன் கோவில்களுக்கு சென்று தேவாரம் பாட ஆசை தான்.

உங்களுக்கு தெரியுமோ? நம் சுந்தர்ஜி அடியவனுடன் இந்த முறை சபரிமலைக்கு யாத்திரை வருகிறார்.பின்னூட்டத்தையெல்லாம் அவர் முதுகிலேயே எழுதிவிட மாட்டேனா?

Ramani சொன்னது…

அருமையான ஆன்மீகப் பதிவு
கால தாமதக் குறைபாட்டை
ஒன்றுமில்லாத தாக்கிவிட்டது
தொடர்ந்து தர வேண்டுகிறேன்
த.ம 2

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தாரகாசுரன் செய்து கொண்ட ‘அட்வான்ஸ் புக்கிங்’ படி, சிவகுமாரனான முருகன் கைவேல் தாரகனின் நெஞ்சைக் கிழித்தது. /

அருமையான் பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி சொன்னது…

கூடு பொதிந்த கையன், தென்னாடு உடைய சிவன் கண்ணெதிரே காட்டிய இறைமையை விட ஏடு கூறும் தலபுராணம் முகிழ்த்தும் ஆன்மீக உணர்வு ஒரு மாற்று குறைவுதான் என்று தோன்றுகிறது.

ஒவ்வொரு முறையும் ஸ்தலத்தில் நம் கண் முன்ன்னே இறைவன் முகிழ்த்தும் நிகழ்வுகளின் ஆன்மீக உணர்வு புனிதம் நிரம்பியது...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நடராஜனின் சுதைச் சிற்பம் என்னுள் பெரும் ஆன்மீக விழிப்பை கிளர்த்தி கல்லாய் சமைந்து நிற்கச் செய்துவிட்டது../

சுதைச்சிற்பத்தில் குருவியின் வாசத்திர்கு அன்புடன் இதயத்தில் இடம் தந்து அன்பே சிவம் என்று
அழகாய் கண்கூடாய்,
நிதர்சனத்தில்
நிலைநிறுத்திவிட்டாரே மன்றாடி!

நிலாமகள் சொன்னது…

தாரகாசுரன் செய்து கொண்ட ‘அட்வான்ஸ் புக்கிங்’ படி//
:-)

நிலாமகள் சொன்னது…

மணல்கொள்ளைக்கு ஆந்திரம் தமிழ்நாடு எனும் பேதமே இருக்காது போலும். //
:-)

நிலாமகள் சொன்னது…

அந்த நிலத்துக்கான மதிப்பை ஆந்திரம் பெற்றதோ இல்லையோ, ரோசய்யா அவர்களையே தமிழகம் பெற்று விட்டதே!//
:-)

அந்த நடராஜனின் மடக்கிய வலக்கைக்கும் மார்புக்கும் இடையே ஒரு குருவியின் கூடு. கிரீச்சிடும் குஞ்சுகளை ஒரு தாய் போல் மார்பில் தாங்கி ஆதூரம் காட்டும் மன்றாடி. //

:-0

கூடு பொதிந்த கையன், தென்னாடு உடைய சிவன் கண்ணெதிரே காட்டிய இறைமையை விட ஏடு கூறும் தலபுராணம் முகிழ்த்தும் ஆன்மீக உணர்வு ஒரு மாற்று குறைவுதான்

த‌த்த‌ க்ஷேத்ர‌ம்ன்னா என்ன‌ங்ணா?

//நம் சுந்தர்ஜி அடியவனுடன் இந்த முறை சபரிமலைக்கு யாத்திரை வருகிறார்.பின்னூட்டத்தையெல்லாம் அவர் முதுகிலேயே எழுதிவிட மாட்டேனா?//

ப‌ருத்தி, புட‌வையா காய்க்க‌ப் போகுது எங்க‌ளுக்கு!

சிவகுமாரன் சொன்னது…

இறுதி வரிகளில் சொக்கிப் போனேன்.
கூடு பொதிந்த கையன்.-- தோடுடைய செவியனுக்கு இன்னொரு நாமம்.
சுந்தர்ஜியும் வருகிறாரா ? பொறாமையாய் இருக்கிறது.

கீதா சொன்னது…

இத்தனை நாள் வெறுமையை நிறைவு செய்த பதிவு. மனதில் பதிந்ததும் எழுத்தாய் உருமாறியதும் மனம் நிறைத்தது. அருமை மோகன்ஜி. தொடரட்டும் பயணங்களும், பதிவுகளும்.

கோவை2தில்லி சொன்னது…

ஆன்மீகப் பகிர்வோடு வந்த உங்களை வரவேற்கிறேன் சார்.

சென்ற அக்டோபரில் சென்று வந்த கோவில் உங்கள் விவரிப்பில் கண் முன் நிற்கிறார் அமரலிங்கேஸ்வரரும் அந்த தளமும்.

அந்த ஆறு சொர்ணமுகி என்று சொன்னார்களே?

geetha santhanam சொன்னது…

சிவதலங்களைப் பற்றி உங்கள் நடையில் அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். மேலும் சொல்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய ரமணி சார்!

கண்ணதாசன் சொல்வார்: "எல்லோருக்கும் உண்டு ஒரு மதம். என் மதமோ தாமதம்"
அவர் சொல்லலாம் .. நான் சொல்லலாமோ!

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம்! அலசி விட்டீர்கள் போங்கள்! எனக்கு நடராஜரை 'மன்றாடி' என்று அழைக்கும் பெயர் ரொம்பப் பிடிக்கும். கூத்தனுக்குத் தான் எத்தனை பெயர்கள்?

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய நிலா! ஸ்வாரஸ்யமான ஸ்மைலிகள்.

தத்தாத்ரேயர் சிறப்பாக வழிபடப் படும் தலம் தத்த க்ஷேத்ரம் ஆகும். உங்களுக்கு தத்தாத்ரேயர் கதையும் வழிபாடும் பற்றி தெரியுமோ?

இல்லை கிளாஸ் எடுக்கவா?

மோகன்ஜி சொன்னது…

நிலா!

/ப‌ருத்தி, புட‌வையா காய்க்க‌ப் போகுது எங்க‌ளுக்கு!/

ரொம்ப ரசிச்சேங்க இந்த சொலவடையை! என்னமா அனுபவிச்சு சொல்லியிருக்காங்க பெரியவங்க?

மோகன்ஜி சொன்னது…

சிவா! உன்னை வைத்துக் கோண்டா நான் ஈசன் பேரில் விளையாடுவது?!

சுந்தர்ஜியுடன் சபரிமலைக்கு சேர்ந்து பயணிப்பதில் எனக்கு தாங்கவோனா எதிர்பார்ப்பு...

காளிதாசன் சொல்வான்:

"ஸதாம் ஸங்கதம் மனிஷிபி:
ஸாப்த பதீனாம் உஸ்யதே"

நல்ல மனசுள்ளவருடன் ஏழு அடி நடந்தாலே இருவருக்குமிடையே நல்ல சிநேகிதம் தோன்றும்.

நானோ நல்ல மனசுள்ள,நல்ல சினேகிதருமான, சுந்தர்ஜீயுடன் ஏழு அடி அல்ல.... நாற்பத்தெட்டு மைல் நடக்கப் போகிறேன்.. என்னென்னவெல்லாம் தோன்றுமோ?

மோகன்ஜி சொன்னது…

நன்றி கீதா! உங்கள் அன்பான கட்டளையில் என் பயணமும் பதிவுகளும் தொடரும்.. கொஞ்சம் சோம்பேறியாகிக்கிட்டே வரேனோ?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதி! வெங்கட்டின் பதிவைப் படித்தேன்.. அருமையாக இருந்தது. தலைவர் எழுதினத்தை நானும் எழுத நேர்ந்தது என் பாக்கியமல்லவா?

சொர்ணமுகி பெண்ணையாற்றின் உபநதி. அதை காளஹஸ்தியில் பார்த்திருப்பீர்கள். அமராவதியில் ஓடுவது கிருஷ்ணா நதியாகும்.

நிலாமகள் சொன்னது…

தத்தாத்ரேயர் சிறப்பாக வழிபடப் படும் தலம் தத்த க்ஷேத்ரம் ஆகும். உங்களுக்கு தத்தாத்ரேயர் கதையும் வழிபாடும் பற்றி தெரியுமோ?//

:-) இதுக்கு அர்த்த‌ம் இப்போ ராஜேந்திர‌க் குமாரின் 'ஙே'

சொல்லுங்க‌ளேன்... தெரியாத‌வ‌ர்க‌ளுக்கு தெரிய‌ட்டும்.

meenakshi சொன்னது…

இவ்வளவு நாள் விடுப்பு எடுத்ததற்கு பிராயசித்தமாக ஆன்மிக பயணம் பற்றிய பதிவா! :)
ரொம்ப அருமையா இருக்கு. இது போல ஊர்களில் இருக்கும் கோவில்களில் ஒரு அமைதி இருக்கும். அதுவும் நதிக்கரையில் இருக்கும் கோவில் என்றால் அந்த அமைதி இன்னும் அழகாய் இருக்கும். இதை நான் மிக மிக ரசிப்பேன், அனுபவிப்பேன். கோவில்களின் ஸ்தல புராணத்தை தெரிந்து கொண்டு
பிரதக்ஷணம் செய்வதும்
ஒரு சுவாரசியமான விஷயம் . பதிவை படித்தவுடன் இந்த கோவிலை பார்க்க வேண்டும் என்று மிகவும் ஆவலாக இருக்கிறது. பார்க்கலாம்!

G.M Balasubramaniam சொன்னது…

//இன்னுமெவ்வளவு எடத்துல தாண்டா இந்த கதையையே விடுவீங்க?’ என என்னுள் இருந்த ஒரு கவுண்டமணி சவுண்டு விட, அவசர அவசரமாய்க் கன்னத்தில் போட்டுக் கொண்டேன்//.Iam happy that you are not carried away by all these "STORIES " YOU should keep your eyes and ears wide open for the stories but only understand the reason for which these are told. The meaning and the essence must be understood and the chaff removed.With best wishes.

அப்பாதுரை சொன்னது…

என்னங்க சொல்றது.. நீங்களே சொல்லிட்டீங்களே..
நிறைய அலுப்பு ...கொஞ்சம் வேலை.....
நிறைய ஆசுவாசம்... கொஞ்சம் பயணம்..
சரியா வரலியே.. மாத்திச் சொல்லுறனோ? இருங்க செக் பண்ணிட்டு வாரன்.

க்ருஷ்ணா நதியைப் பார்க்க ஆசையாக இருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

நிலாமகள்! தத்தாத்ரேயர் விரைவில் வருவார் 'ஙே'ங்க கேட்டபடியே..

மோகன்ஜி சொன்னது…

கோவிலுக்கு போவதற்கும் ஒரு முறை,ரசனை,முன்னேற்பாடு தேவை.
எனக்கும் உங்களைப் போன்றே தோன்றும்.

நான் 'தீத்தீ'யென கோவிலுக்கு போய் வர மாட்டேன். ஆரஅமர தூண்தூணாய் நின்று சிற்பங்களையும் ரசிப்பேன்.. கொஞ்சம் கல்வெட்டுக்களையும் படிக்க மெனக்கெடுவேன். ஸ்தலபுராணம் துப்புரவாய்த் தெரிந்து கொள்வேன். அந்தக் கோவில் பெற்ற பாடல்களையும் நூல்களையும் படிக்க பெருமுயற்சியெடுப்பேன்.

கோவில் ஒரு வரலாற்றுப் பெட்டகம். நாம் முன்னோரின் கலாச்சார பிரதிபலிப்பு. நாம் பேண வேண்டிய பொக்கிஷம்.
(பிரசாதத்தை விட்டு விட்டேனே!)

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! அந்த காலத்தில் அதிகம் பேர் பிரயாணம் செய்திருக்க மாட்டார்கள். என்னைப் போல் தேசாந்திரிகள் அந்நிய பிரதேசங்களில் கேள்வியுற்ற அவ்விடத்து இறைவனின் பெருமையை, தன் சொந்த ஊர் தெய்வத்திற்கு ஏற்றி உள்ளூர் மக்களுக்கு ஏதுவாய் சொல்லி வந்திருக்கலாம்.

இல்லையென்றால், கத்தி வெட்டுபட்டு ஸ்வாமி தலையில் இரத்தம் வந்ததாயும், பசு பாம்பு புற்றில் மேல் பால் வார்த்ததாயும் பல தலங்களில் எப்படி ஒரே புராணம் சின்னசின்ன மாற்றங்களுடன் சொல்லப் படுகிறது?

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சாரே! விட மாட்டீங்களே? வாங்க! கிருஷ்ணா கோதாவரின்னு சேர்ந்து முங்கலாம்.

Rishvan சொன்னது…

nice post...best of luck your kovil tharisanam.... i joined your site as a follower...please read my tamil kavithaigal blog www.rishvan.com

சுந்தர்ஜி சொன்னது…

”அமராவதியே ஆனந்தமே” எத்தனை ஆனந்தம் மோகன்ஜி?

பாடாதவர் பாடுவது போல எழுதாதவர் எழுதினால் என்ன ஒரு ஆனந்தம்? அமராவதி க்ஷேத்திரத்தின் அனுபவத்தை மயிரிழையில் தவறவிட்டுவிட்டேன் போன வருடம்.திரும்பக்கிடைக்கப் பெற்றேன் உங்களால். ஒரு ஸ்தலத்தை எப்படிப் பார்க்கவேண்டும் என்பதில் நமக்குள் ஒருமிப்பு இருப்பதும் இந்த மனநிறைவுக்குக் காரணமாய் இருக்கலாம்.அற்புதம். அதியற்புதம்.

நான் சமீபத்தில் படித்து வரும் தத்தாத்ரேயர் பற்றி எழுதநேர்வதும் அதே நேரம் நிலாமகள் தத்தராத்ரேயர் யாருங்ணா என்று கேட்டிருப்பதும் ஓர் ஆச்சர்யமான டெலிபதியாய் விதியின் கட்டளையாய்.

உங்கள் அனுமதியுடன் நிலாமகளின் விருப்பத்துக்கு என் அடுத்த இடுகை.

தினேஷ்குமார் சொன்னது…

வணக்கம் ஐயா

அப்பனின் தரிசனம் பெற்றேன் தங்களருளால் எட்டாது தூரத்தே
எங்கெங்கோ அமர்ந்திருக்க
கிட்டாத கனியல்ல கிடைப்போர்க்கு
அவ்விடம் நினைப்போர்க்கு
எவ்விடத்தும் காட்சி தருவோனைக்
காணக் கண்க்கோடி வேண்டுமையா ....

kashyapan சொன்னது…

மொகன் ஜி ! ஐம்பத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு நாகார்ஜுனா அணை கட்டிக் கொண்டிருக்கும் போது போயிருக்கிறேன். கிருஷ்னா நதியில் ஒரு நீர் வீழ்ச்சி இருந்தது.அதில் குளித்திருக்கிறேன்.நகார்ஜுனா குகைச்சிற்பங்களை பார்த்திருக்கிறேன். நீர்வீழ்ச்சி அணையில் மூழ்கிவிட்டது. குஹைச்சிற்பங்களை குன்றின் மேலே கொண்டுபோய் வைத்திருக்கிறார்கள். பொளத்த கலாச்சாரத்தை அங்கு பார்க்கலாம். என்னுடைய " கிருஷ்ணா நதிக்கரையில் " நாவலில் விவரித்து உள்ளேன்.."பிரஜா சக்தி "பத்திரிகையின் வாராந்திரியில் 4-12-11 லிருந்து என்னுடைய சிறுகதைகள் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகிறது. அன்புடன் ---காஸ்யபன்

மோகன்ஜி சொன்னது…

வாங்க ரிஷ்வன்! வானவில்லை பின்தொடர்வதற்கு நன்றி! உங்கள் இடுகையை அவசியம் பார்க்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! உங்கள் அன்புக்கு நன்றி. நீங்கள் தத்தாத்ரேயர் பற்றி பதிவிடுவது மகிழ்ச்சியே! அவசியம் இருப்பின் வேறு ஒரு கோணத்தில் சொல்கிறேன். நானும் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் ஸ்வாமி!

மோகன்ஜி சொன்னது…

தினேஷ்! நன்றி தம்பி! இதையெல்லாம் விடு. நான் எப்போது பெரியப்பா ஆகப் போகிறேன்?

மோகன்ஜி சொன்னது…

வணக்கம் காஸ்யபன் சார்! நான் இங்கே நாகார்ஜுனா குகைச் சிற்பங்களைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறேன். நீங்கள் அதைக் கண்ணால் கண்ட பாக்கிய சாலி.
உங்கள் கிருஷ்ணா நதிக் கரையில் நாவல் எனக்கு கிடைக்குமா?

பிரஜா சக்தியில் உங்கள் சிறுகதைகள் வெளியாவது மிக்க மகிழ்ச்சி. என் நண்பர்கள் அனைவரையும் படிக்குமாறு சொல்லி வருகிறேன்.

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள மோகன்ஜி,,
நானும் நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவிற்கு வந்தேன். அருமையான ஆன்மிகப் பயணத்தைத் தரிசிக்க வைத்துவிட்டீர்கள். அருமையான விவரிப்பு. செய்திகள். நன்றி.

நிலாமகள் சொன்னது…

தத்தாத்ரேயர் விரைவில் வருவார் 'ஙே'ங்க கேட்டபடியே..//

ரைட்டுங்ணா.

நான் சமீபத்தில் படித்து வரும் தத்தாத்ரேயர் பற்றி எழுதநேர்வதும் அதே நேரம் நிலாமகள் தத்தராத்ரேயர் யாருங்ணா என்று கேட்டிருப்பதும் ஓர் ஆச்சர்யமான டெலிபதியாய் விதியின் கட்டளையாய்.//

அட‌! ஒத்த‌ அலைவ‌ரிசை! ந‌ட்பின் வெகும‌தி!!

உங்கள் அனுமதியுடன் நிலாமகளின் விருப்பத்துக்கு என் அடுத்த இடுகை//

அங்கே ப‌டித்தேன்... இப்போதான் இங்கே பார்க்கிறேன். ந‌ன்றி 'ஜி' இர‌ட்டைய‌ர்க‌ளே!

அப்பாதுரை சொன்னது…

[புத்தாண்டு வாழ்த்துக்கள்]

பெயரில்லா சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் மோகன்!

geetha santhanam சொன்னது…

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

கீதா சொன்னது…

அன்பு நண்பர் மோகன் ஜி, தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். எந்நாளும் நலமே விளைக.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் அப்பாதுரை, மீனாக்ஷி மேடம், கீதா சந்தானம் மேடம், கீதா மற்றும் அலைபேசியிலும் மின்னஞ்சலிலும் வாழ்த்து சொன்ன அத்துணை நல்ல உள்ளங்களுக்கும் என் அன்பும், புத்தாண்டு வாழ்த்துக்களும்...

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அன்பு மோகன் அண்ணா அவர்களுக்கு,

உங்களுக்காக ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில் - வாருங்களேன்....

http://www.venkatnagaraj.blogspot.in/2012/02/blog-post_14.html

கீதமஞ்சரி சொன்னது…

தங்களை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள். நன்றி.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html