நானும் பல மேட்டேரைப் பதிவாப் போடறேன். ஆனாலும் மக்கள் சமையல்குறிப்பு பதிவுகள் பக்கமல்லவா மொய்க்கிறார்கள் ? மோதிப் பார்த்துடலாமேன்னு முடிவுப் பண்ணிட்டேங்க .. சரியா? இனி மேற்கொண்டு படிங்க!
இந்த ‘க.க.எ.க’ வை செய்யத் தேவையானது :
-டீ.வீ. ரிமோட்
-பிஞ்சு கத்திரிக்காய் அரைக்கிலோ
- கைத்தலம் பற்றிய கணவர்
- நூல்கண்டு
- கடலைப் பருப்பு இரண்டு டீஸ்பூன்
-உளுத்தம் பருப்பு ஒன்றரை டீஸ்பூன்
-மிளகாய் வற்றல்
-தனியா இரண்டு டீஸ்பூன்
-பெருங்காயம் கொஞ்சம்
- அரைமூடி தேங்காய்த் துருவல்
-எண்ணை தேவையான அளவு
தாய்க் குலமே! நீங்கள் பக்கத்தில் இருக்கும் போது சங்கரா சேனலையும், அந்தப்பக்கம் நகர்ந்து விட்டால் சைலண்டாய் எஃப் டீ.வீ யும் பார்த்துக் கொண்டிருக்கும் கணவரை, இந்தக் கறிவகையை செய்ய ஈடுபடுத்துவது அதன் சுவையை மேலும் அதிகரிக்கும்.
முதலில் டீ.வீ. ரிமோட்டைக் கைப்படுத்தி, ‘படக்’ என்று டீ.வி யை அணைக்கவும். அந்த சமயம் உங்கள் முகத்தில் சற்றே கடுகடுப்பு அவசியம் தேவை. இந்த ‘பாவம்’ கணவரின் ஒத்துழையாமையையும், நழுவுதலையும் கட்டுப்படுத்த உதவும்.
முதலில் வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரையும், கத்தரிக்காய் மற்றும் கத்தியையும் கணவர் கையில் தரவும்.
கணவரைத் தண்ணீரில் அப்படியே அமுக்கி... ஸாரி.. கணவர் என்றா சொன்னேன்? ஸாரி! கத்தரிக்காய் .. கத்தரிக்காய் என்று மாற்றி வாசிக்கவும்.
சற்றே வறண்ட குரலில் செய்முறையை கணவருக்கு விளக்கவும். பட்சி இந்த நேரத்திலும் பறந்துவிட வாய்ப்பிருக்கிறது. ஒரு கத்திரிக்காயை வேண்டுமானால் வெட்டிக் காண்பிக்கலாம்.
கத்திரிகாயின் காம்புத்தொப்பியை மட்டும் வெட்டி,முழுதுமாய் நறுக்காமல், குறுக்கும் நெடுக்குமாய் கீற வேண்டும்..
‘கணவர் சார்’ கத்திரிக்காய்க்கு வலிக்காமல் கீறி முடிப்பதற்குள்,
வாணலியில் சிறிதளவு எண்ணை விட்டு க.பருப்பு,உ.பருப்பு, மிளகாய் வற்றல், சிறுங்காயம்( அதாவது சிறிதளவான பெருங்காயம்), தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சிவக்க வறுக்கவும்.
தலைவரிடம் அவ்வப்போது ‘ஆச்சா... ஆச்சா’ என வினவிக் கொண்டே இருக்கவும்.
வறுத்தவற்றை மிக்சியில் இட்டு,கரகரவென அரைக்கவும்.
சொல்ல விட்டுப் போச்சே... தேவையான அளவு உப்பையும் அரைக்கும் போது சேர்க்கவும்.
அரைத்த பொடியை ஒரு ஸ்பூனோடு கணவர் வசம் தந்து கீறி வைத்த ஒவ்வொரு கத்தரிக்காயின் உள்ளேயும் ஸ்பூனால் திணிக்கச் சொல்லுங்கள். வேணுமானால் முகத்தில் இப்போது கடுகடுப்பைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளலாம்.
பிறகு, அவரிடம் நூல்கண்டைத் தரவும். ஸ்டப்பிங் செய்யப்பட்ட கத்தரிக்காயைச் சுற்றி நூலால் பம்பரத்துக்கு சாட்டைசுற்றுவது போல் இரண்டே சுற்று சுற்றி, ஒரு முடிச்சை போடச் சொல்லவும். மூணு முடிச்சு போட்ட அவரின் அனுபவம் இப்போது கண்டிப்பாய்க் கை கொடுக்கும். நூல்கண்டைக் கையில் வாங்கியபடி, ‘சின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது?’ போன்ற பன்ச் டயலாக் எல்லாம் கணவர் உதிர்க்கலாம். அதைப் பொருட்படுத்த வேண்டாம்.
முடிச்சுகள் போட்டு முடித்தபின், கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று சொல்லிக் கொண்டே, வாணலியில் எண்ணைவிட்டு, கடுகு தாளித்தபின் கத்தரிக்காயகளை சேர்த்து மெல்ல பிரட்டவும்.
காஸ் அடுப்பை சிம்மில் வைக்கவும்.
இதுவே, ‘கணவக்கத்திரிக்காய் எண்ணைக்கறி’ செய்முறை. காய் வெந்தபின் சுற்றிய நூலை நீக்கி விடலாம்.
கொஞ்சம் அதிகமாய் செய்து வைத்துக் கொண்டால், பிரிட்ஜில் வைத்து, காலை ‘வரவர’ உப்புமாவுக்குத் தொட்டுக் கொள்வதற்கும், மதியம் டிபன் பாக்சில் சாதத்துக்கு கலந்து கொள்ளவும், இரவு சப்பாத்திக்கு சைட் டிஷ்ஷாகவும் அன்புக் கணவருக்கு பதினைந்து நாள் பரிமாறலாம்.
வர்ட்டா?
-