செவ்வாய், ஆகஸ்ட் 28, 2012

விட்ட குறை தொட்ட குறை


வேகம் பிடித்து விட்ட ரயிலின் தடதடப்பு ஒரு தாளகதியோடு என்னுள்ளே முழுமையாய் இறங்கி உடம்பு மனசெல்லாம் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.
தட் தடக் தட் தடக். தடக் தடக்

அன்று போல் தான் இன்றும் ரயிலின் கதவருகே  நின்றபடி நான்.

அன்று மார்கோ சோப் மணக்க அருகே அவளும் நின்றிருந்தாள்
இன்று நான் மட்டும் தனியாய் கதவருகில்...

அவள்...  அருகே தான்..  பெட்டியின் இரண்டாவது வரிசையில்...
ஆனாலும் வெகு தொலைவில்.

சார்! இங்கே ஸ்மோக் பண்ணக் கூடாது.

சாரிங்க. சிகரட்டை பற்ற வைக்குமுன்னரே வெளியே எறிந்தேன்.

முப்பது நிமிடங்களுக்கு முன்வரை, அவளின் நினைவுகள், பிரிவின் ரணங்கள் எல்லாமே புதையுண்டு புல்முளைத்து போய் விட்டதென்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன் ? உறங்கிக் கிடந்த எரிமலை பொங்கிக் கக்கும் என்று கண்டேனா?

இதற்காகவா இந்தியா வந்தேன்? கூல் கூல்... இதென்ன இப்படி படபடக்கிறது எனக்கு? தென்ன பைத்தியக்காரத்தனம்..நோ.. நோ.. கூல்.. கூல்..

இது விந்தையாகக் கூட இருக்கிறது.. நேற்று இரவு தானே ராகவன் சார் கேட்டார்...

என்ன ஸ்ரீராம்! உங்க எழுத்தின் அடியாழத்தில் ஒரு காதலின் ஏக்கம்.. ஒரு பிரிவின் ஆராட்டம் நீரோட்டமாய் சலனித்தபடியே இருக்கிறதாய் எனக்கு தோணும்.. தப்பா கேட்கிறேனா?”. 

என்ன உரிமை கேள்வியில்?! இது பிறர் விவகாரத்தில் மூக்கு நுழைக்கும் வக்கிரம் அல்ல.. ராத்திரி என்ன சாப்ட்டீங்க என்று ஒரு டாக்டர் கேட்கும் கேள்வியாய்..  கோத்திரம் நட்சத்திரம் சொல்லுங்கோ என வினவும் அர்ச்சகரின் கடமைக் குரலாய்..

ராகவன் சாரோடு எனக்கு ஒரு வருடப் பழக்கம் தான். ஒருவருக்கொருவர் வலைப்பூக்களில் கருத்துகள் பரிமாறியும் அவரின் தமிழில் வசமிழந்தும், கேள்வி கேட்காமல் அவரை என் இலக்கிய நண்பனாய் ஒரு வழிகாட்டியாய் ஏற்றுக் கொண்டிருந்தேன். இருபது வருட லண்டன் வாழ்க்கையின் அன்னியத்தை  சமன்செய்து வரும் இணையத் தொடர்புகளில் ராகவன் சார் ஒரு முக்கிய கண்ணி.

என் தங்கை மகளின் திருமணதிற்கான கோயமுத்தூர் பயணத்தின் போது  ராகவன் சாரை சந்திக்கும் விருப்பம் தெரிவித்தேன். அவரும் மறுக்காமல் சென்னையிலிருந்து வந்திருந்தார்.. இருவரும் தனியே அளவளாவ உதகைக்கு நேற்று சென்றிருந்தோம். அவரை முழுதுமாய்  பேசவிட்டு கேட்டுக் கொண்டல்லவா இருந்தேன்? அவர் எழுத்தில் ததும்பும் மேதாவிலாசமும் , மனிதாபிமானமும் அவர் பேச்சில் கூட விகசித்து என்னை திக்குமுக்காட வைத்தபடி இருந்தது. என்னவோர் அனுபவம்?. அதிக நேரம் அவருடன் இருக்க வேண்டியே சென்னை திரும்ப ரயில் பயணம் தேர்வு செய்தேன். விடுமுறை சீசன். ஒருவாறாய் வெவ்வேறு பெட்டிகளில் இடம் கிடைத்த ஏமாற்றதுடன் இந்தப் பயணம். .. இந்த ஏமாற்றத்தை விழுங்கி விட ஒரு அதிர்ச்சி என் எதிர் சீட்டில் காத்திருந்தது. இருபது வருடங்களுக்கு முன் என் கவிதைகளுக்கு ஊற்றுக் கண்ணாக இருந்தவள் ...  சாவதை யோசிக்க வைத்து என்னை உதறிவிட்டு சென்ற அபி அமர்ந்திருந்தாள்.

இந்த நேரத்து அதிர்ச்சிக்கு முன்னோடியாகத்தான் நேற்று இரண்டுமூன்று தரம் இவள் நினைப்பு எழுந்ததா?

நேற்று ரோஜா தோட்டத்தை பார்த்துவிட்டு ராகவன் சாருடன் நடந்து கொண்டிருந்தேன். ஒரு நெடிய மரத்தினருகே அதைத் தொட்டபடி ராகவன் சார் நின்றார்.

ஸ்ரீராம்! இந்த இடத்துல எத்தனை சினிமாக்காதல் அரங்கேறியிருக்கும்?” சாருக்கு பழைய பாடல்களில் நுண்ணிய ரசனை.

சார்! நான் வேணும்னா உங்களை கதாநாயகனாய் வைத்து ஒரு சினிமா எடுக்கவா?” சிரித்தபடி கேட்டேன்.

ஏன்? நான் நடிக்க மாட்டேனா? முப்பது வருஷமா நல்ல கணவனாய் நடிச்சுக்கிட்டிருக்கேன் தெரியுமா?”

சரி! சொல்லுங்க யாரை கதாநாயகியாய்ப் போடட்டும்?"

"அப்ப முதல்லேருந்து வருவோம். வைஜயந்திமாலாவை முதல் படத்துல போடேன்?”

அப்போ ரெண்டாவது மூணாவது படம்கூட இருக்கா? கதாநாயகிகள் லிஸ்ட் நீளமா இருக்கும் போலிருக்கே?”

ராகவன் புன்னகையுடன்  மறுப்பாய் தலையாட்டினார். நடிகை லிஸ்ட் இல்ல ஸ்ரீராம்... என் மனசில்.பாட்டு லிஸ்ட் தான் இருக்கு

வைஜயந்தி மாலா பட பாட்டு ஒண்ணு பாடுங்களேன்...

ஒய் நாட்.. ராகவன் பாட ஆரம்பித்தார்.

தில் தடப் தடப் கெ கெஹரஹா ஹை ஹஹா பி ஜா...

பன்னீர் பூக்கள் என் மேல் சொரிந்தது போலிருந்தது அவர் பாடிய பாடலும், பாடிய விதமும்...  ஒரு கண்ணிறுக்கம், ஒரு வாய்க் கோணல் உண்டா.?. என்ன இந்த மனிதன்  என்னுள்ளே விஸ்வரூபமாய் எடுத்துக் கொண்டே போகிறார்?

அந்தப்பாட்டு எங்கேயோ என்னுள்ளிருந்து குடைந்ததே..

ஆம். நினைவுக்கு வந்தது. கல்லூரிக்கு செல்லும் வழக்கமான ரயில் பயணத்தில் இந்தப் பாட்டை ரயிலின் தடதடப்பை பின்னிசையாய்க் கொண்டு அபி பாடினாள் ஒரு முறை. அவளுக்கு இது பிடித்த பாட்டு.

என்ன ஸ்ரீராம்? ஏதும் பிளேஷ்பாக்கா?”

 இல்ல சார்.. பாட்டுல சொக்கிட்டேன். பியூட்டிபுல் சார்.,
முகமத் ரபியும் லதாவும் தானே பாடினது?”. பேச்சை மாற்றினேன்.

இல்லை.. முகேஷும் லதாவும். மதுமதின்னு அழகான படம் திலீப் குமாரும் வைஜயந்தியும்.. இளமையும் இயற்கையும் கொஞ்சும் பாட்டு


எவ்வளவு நேரம் தான் ரயில் கதவருகே நிற்பது? இருக்கைக்கு திரும்பினேன் .

அபியின் பக்கத்திலிருந்த பெண் பன்னிரண்டு வயதிருக்கலாம். அவளுடைய மகளாயிருக்க வேண்டும்.. அபியின் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள்.

நீங்க அப்படியே இறங்கிப் போய்ட்டீங்களோன்னு பார்த்தேன். இது அபியின் குரலா?

நான் ஏதும் பதில் சொல்லவில்லை.

எப்படி இருக்கீங்க. எங்க இருக்கீங்க?”

பைன்.. லண்டன்ல இருக்கேன்.

உங்க வைஃப் வரல்லையா?”

அவங்க இப்போ இல்ல..

ஐ ஆம் சாரி. அவங்களுக்கு என்னாச்சு?”

ஒண்ணும் ஆகல்லே. இட் வாஸ் அ டிவோர்ஸ்.

அபி ஒன்றும் சொல்லவில்லை. மேலும் என்ன பேசுவது என்று இருவருக்கும் புரியாது அங்கு மௌனம் கவிந்ததுபோல் இருந்தது. என் குறைந்த ஆங்கில அறிவு, உத்தியோக வாய்ப்புகள் குறித்த ஐயம், வசதியான அவள் பெற்றோரின் மறுப்பு, ஏதோவொன்று அபியை  என்னை ஒதுக்கும்படி செய்திருக்கவேண்டும். இவற்றை ஏதேதோ விதங்களில் அவள் வெளிப்படுத்திக் கொண்டிருந்த சமயங்களில் என் காதல் மும்முரம் கண்களை மறைத்து விட்டிருந்ததை பின்னாட்களில் உணர்ந்து கொண்டேன்.

இவன் எப்படி லண்டன்,.. வியாபாரம் என்று போயிருக்க முடியும் என்று அவளுக்குள் ஏதோ ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.
சட்டென்று பாதாதிகேசம் கசப்பு தட்டியது. நெஞ்சில் அசூயை மண்டியது. நான்கு வருடக் காதலை மறுதலித்து, என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று என் வீட்டு படியேறி விடைத்துக் கொண்டு சொல்லி அகன்றவள்.

ஆனாலும், என் இன்றைய முன்னேற்றத்திற்கு இவளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். உடைந்து நொறுங்கி விட்ட எனக்கு இந்த உதாசீனம் புரிபட்ட போது உண்டான வெறியில் என்னைப் பட்டைத் தீட்டிக் கொண்டேன். அபி குடியிருந்த என் மனதை பார்க்க மறுத்தேன். முகம் பார்க்கும் கண்ணாடியைக்  கூட பார்க்காத தவம்... என்னிலிருந்து நானே பெற்றுக் கொண்ட விடுதலை... திரும்பிப் பார்க்காத ஓட்டம். என்னை நானே ஜெயித்து விட்டது போலத் தான் தோன்றுகிறது. என்ன.....வாழ்க்கை ஒன்று தான் இந்த ஓட்டத்தில் எங்கோ வழியில் நழுவி விட்டது.

எதிரில் அபி கண்ணை மூடிய நிலையில் இருந்தாள். ஏதும் யோசிக்கிறாளா? பழைய நினைவுகள் அவள் உள்ளுக்குள்ளே அலைக்கழிக்கின்றதா?

சட்டென்று அவள் தலை முன்னோக்கித் துவண்ட அதிர்ச்சியில் கண் விழித்தாள். சை! நல்ல தூக்கம் தான் அவளுக்கு. கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது எனக்கு.

காலையில் ராகவன் சாருக்கு என் தொலைந்து போன காதலை சொல்ல வேண்டும். இன்றைய அசந்தர்ப்பமான சந்திப்பைப் பற்றி சொல்ல வேண்டும்.

காதலையும் அன்பையும் உருகிஉருகி எழுதும் அவரிடம் இதைப் பற்றியும் எழுதச் சொல்ல வேண்டும். ஏதும் மிஞ்சாத இந்த காதல் விபத்தில், ஒரு கதையேனும் மிஞ்சுகிறதா என அவரைப் பார்க்கச் சொல்ல வேண்டும். உணர்வுகளின் நுணுக்கங்களை துல்லியமாய்ச் சொல்லும் ராகவன் சார், இந்தக் காதல் சிலுவையை என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்.

மனதினுள் ஒரு சன்னல் திறந்து, தூசுகளின் நடனத்துடன் உள்ளே வெளிச்சம் பரவியது..

தூக்கம் எனக்கும் வரும் போலத்தான் இருக்கிறது.

77 comments:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

G.M Balasubramaniam சொன்னது…

வெகு நாட்களுக்குப் பிறகு படிக்க மகிழ்ச்சி. கதையில் அண்மையில் வந்துபோன நண்பர் சாயல் தெரிகிறதோ. வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

அந்த ராகவன் யாரன்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

எல்லோருக்கும் எதோ ஒரு பழைய நினைவலையை எழுப்பி விட்டுப் போகும் எழுத்து.
\\\என்ன.....வாழ்க்கை ஒன்று தான் இந்த ஓட்டத்தில் எங்கோ வழியில் நழுவி விட்டது.///

திடுக்கிட வைத்த வரிகள். இதே வரிகளைத் தான் சில நாட்களாய் நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

அண்ணா உங்களைப் போலத்தான் நானும் அவ்வப்போது வனவாசம் போய்விடுகிறேன். நீங்கள் வந்து விட்டீர்கள் அல்லவா . இனி நானும் வருவேன்.

நிலாமகள் சொன்னது…

இது பிறர் விவகாரத்தில் மூக்கு நுழைக்கும் வக்கிரம் அல்ல.. ராத்திரி என்ன சாப்ட்டீங்க என்று ஒரு டாக்டர் கேட்கும் கேள்வியாய்.. ‘கோத்திரம் நட்சத்திரம் சொல்லுங்கோ’ என வினவும் அர்ச்சகரின் கடமைக் குரலாய்..//

இப்ப‌டியான‌ ந‌ட்பின் ஆதூர‌ம் ப‌ற்றிய‌ழைத்துச் சென்றுவிடுகிற‌து த‌ண‌லிடைப்ப‌ட்ட‌ சில‌ த‌ருண‌ங்க‌ளை...

//முகம் பார்க்கும் கண்ணாடியைக் கூட பார்க்காத தவம்... என்னிலிருந்து நானே பெற்றுக் கொண்ட விடுதலை... திரும்பிப் பார்க்காத ஓட்டம். என்னை நானே ஜெயித்து விட்டது போலத் தான் தோன்றுகிறது. என்ன.....வாழ்க்கை ஒன்று தான் இந்த ஓட்டத்தில் எங்கோ வழியில் நழுவி விட்டது.//

இழ‌ந்த‌தும் ம‌ற‌ந்த‌தும் தான் வாழ்வின் சிற‌ந்த‌தாகி விடுகிற‌தோ... ஆனாலும் அசாத்திய‌ திட‌ம் வேண்டும் இத‌ற்கும்.

தூக்கம் எனக்கும் வரும் போலத்தான் இருக்கிறது.//

ந‌ல்ல‌து தான். பாதை பெரிது, ப‌ய‌ண‌மும்.மோகன்ஜி சொன்னது…

நன்றி தனபாலன் !

மோகன்ஜி சொன்னது…

GMB சார்! நலமா? எவ்வளவு நாள் கழித்து சந்தித்தாலும் நட்புறவு தேய்ந்து விடுமா என்ன? இனி அடிக்கடி சந்திப்போம்.

இந்தக் கதையை பல வருடங்களுக்கு முன் எழுதியிருந்தேன். '
'நான்' கேரக்டர் ஒரு வாசகனாயும், ராகவன் சார் ஒரு எழுத்தாளனாயும் அதில் வருவார்கள். சின்ன டிங்கரிங்க் செய்து பதிவுலகர்களாய் மாற்றினேன்.

/கதையில் அண்மையில் வந்துபோன நண்பர் சாயல் தெரிகிறதோ. வாழ்த்துக்கள்/

இது செம ஸ்கூப்புங்க. கொஞ்சம் போகட்டும்.. பில்ட் அப் கொடுப்போம்!

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா
அருட்கவிக்கு வந்தீர்களா?

மோகன்ஜி சொன்னது…

வா சிவா! வருதலை விட இருத்தல் முக்கியம். இருக்கிறோமே.. அதைச் சொல்லு.

/அந்த ராகவன் யாரன்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்./
யோசிக்க ஆரம்பிச்சாச்சா?

அப்போ அந்த 'நான்' யாருன்னு தெரிஞ்சி போச்சா?

விடிஞ்சா யார் யார்ன்னு தெரிஞ்சி போயிடாதோ?

விட்டு பிடிக்கலாம் . இப்போ வேடிக்கை பார்ப்போம்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய நிலா! நலமா?

/ந‌ட்பின் ஆதூர‌ம் ப‌ற்றிய‌ழைத்துச் சென்றுவிடுகிற‌து த‌ண‌லிடைப்ப‌ட்ட‌ சில‌ த‌ருண‌ங்க‌ளை./

உண்மை. அந்தத் தருணங்களில் நல்ல நட்பு நம்மை பற்றிக் கொண்டு ஆறுதல் தரும்..

அல்லது அந்த தருணங்களில் நம்மைப் பற்றிக் கொள்ள அனுமதிக்கும் கரங்கள் நீண்ட நட்பாய் நிலை பெறுகின்றன.

//இழ‌ந்த‌தும் ம‌ற‌ந்த‌தும் தான் வாழ்வின் சிற‌ந்த‌தாகி விடுகிற‌தோ//

ஆஹா! இழந்து விட்டது ஏதாகிலும் அது இல்லாத வெறுமை ஒன்றாலேயே நினைவில் நங்கூரம் பாய்ச்சி நிற்கின்றது.

மறந்தவை ஆழ்மனதிலிருந்து வெளியேறுவதில்லையே? ஆறி ஓய்ந்த தணல் கங்கு, கரியாய் மிஞ்சி இருப்பதில்லையா? அவ்வாறே ஓர் ஓரத்தில் இருக்கிறது. அதோடு மீண்டும் கரி பற்றிக் கொள்ளும் அவகாசம் கூட....மோகன்ஜி சொன்னது…

சிவா! அருட்கவிக்கு வந்து கிட்டே இருக்கேன்....

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//ஆனாலும், என் இன்றைய முன்னேற்றத்திற்கு இவளுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். உடைந்து நொறுங்கி விட்ட எனக்கு இந்த உதாசீனம் புரிபட்ட போது உண்டான வெறியில் என்னைப் பட்டைத் தீட்டிக் கொண்டேன். அபி குடியிருந்த என் மனதை பார்க்க மறுத்தேன். முகம் பார்க்கும் கண்ணாடியைக் கூட பார்க்காத தவம்... என்னிலிருந்து நானே பெற்றுக் கொண்ட விடுதலை... திரும்பிப் பார்க்காத ஓட்டம். என்னை நானே ஜெயித்து விட்டது போலத் தான் தோன்றுகிறது. என்ன.....வாழ்க்கை ஒன்று தான் இந்த ஓட்டத்தில் எங்கோ வழியில் நழுவி விட்டது.//


முன்னேற்றத்திற்குக் காரணமான
அபி வாழ்க!

என்று சொல்லலாம் என நினைத்தேன். ஆனால் .....

”அபி இல்லாத முன்னேற்றம் ஒரு முன்னேற்றம் தானா” என் எனக்கே தோன்றி விட்டது.

அதனால் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.

என் ”மறக்க மனம் கூடுதில்லையே”
http://gopu1949.blogspot.com/2011/06/1-of-4_19.html

அன்புடன்
VGK

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! வாங்க! உங்கள் மறக்க மனம் கூடுதில்லையே படித்து கருத்தும் இட்டிருக்கிறேன்.

இருபது வருடங்கள் கழித்து மீண்டும் சந்தித்த அபியால், அவள் பழைய காதலனை ஒப்புக்கு விசாரித்து விட்டு சடுதியில் தூங்கி விழ முடிந்திருக்கிறது.

நம்பாளு அபி இருத்திருந்தா முன்னேறி இருந்திருப்பான்னா சொல்றீங்க?

யோசிக்க வேண்டிய விஷயம் சார்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

என்னிலிருந்து நானே பெற்றுக் கொண்ட விடுதலை... திரும்பிப் பார்க்காத ஓட்டம். என்னை நானே ஜெயித்து விட்டது போலத் தான் தோன்றுகிறது.

ரன் ..ரன் .. என்று வேகமான ஓட்டத்துடன் கதை ஓடி ரசிக்கவைக்கிறது.. பாராட்டுக்கள்.!!

kashyapan சொன்னது…

மோகன் ஜி அவர்களே! கடவுளையும் காதலையும் நம்பாதவன் நான்! மகிழ்ச்சி,சோகம் , போன்று அதுவும் ஒரு உணர்ச்சி! அது சரி! ராகவன் எனக்கும் தெரிந்தவர் தானோ! ---காஸ்யபன்.

எல் கே சொன்னது…

ரொம்ப சலனப்படுத்திய கதை மோகன் ஜி. உடல் நலம் எப்படி இருக்கு ? ரொம்ப நாளா காணலை (நானும் இந்த பக்கம் வரலை )

ஸ்ரீராம். சொன்னது…

தொலைந்து போனேன்!
முடிக்கும்போது ராகவன் சார் வந்து "அபி...ஊர் வந்திட்டுது...பெட்டியை எடு... இறங்கலாம்" என்று சொல்வாரோ என்று கூட யோசித்தேன்! (ராகவன் சாரை எனக்கும் தெரியுமோ என்று நான் கேட்க மாட்டேன்! எனக்கு நிஜமாகவே தெரியாது!)

சிவகுமாரன் சொன்னது…

ஸ்ரீராம் சார் ... நானும் அந்த கிளைமாக்சை எதிர்பார்த்தேன். ஆனால் அது டிராமாட்டிகலா இருக்கும். மோகன் அண்ணாவின் கதையில் யதார்த்தம் தானே special.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ராஜேஸ்வரி மேடம்! ஓடும் ரயிலில் நிகழ்வதால் தானோ என்னவோ கதையும் வேகமாய் ஓடியிருக்கிறது போலும்!

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார் ! நலம் தானே? அப்பாதுரை ஹைதராபாத் வந்திருந்த போது உங்களைப் பற்றி நிறையவே பேசிக் கொண்டிருந்தோம். ஒரு நாள் நாக்பூர் வந்து குதித்தாலும் குதிப்பேன்.

கடவுளை நம்ப வேண்டாம். சரி.. காதலைக் கூடவா? ஒரு வேளை காதல் தான் கடவுளோ? கோபம் போல் காதலும் ஓர் உணர்ச்சி என்றும் சொல்லி விட்டீர்கள்.. இந்த நிலைப்பாட்டில் ஒரு சவால் இருக்கிறது சார். ரசமான சவால். இரண்டாவது ரவுண்டில் அதை விவாதிப்போம்.

ராகவனை பொருத்திப் பார்க்க கூடிய நபரை நீங்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டீர்கள் தானே? இதை மூன்றாம் ரவுண்டில் வைத்துக் கொள்வோம்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க எல்.கே! உங்கள் பாராட்டுக்கு நன்றி ! நான் நலமே.. நிறைய டூரிங்க். இனி கொஞ்சம் ரெகுலராய் இருப்பேன் என நினைக்கி....

திவ்யா குட்டி எப்படி இருக்கிறாள்? டீச்சருக்கு பாடம் சொல்லித் தருகிறாளா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஸ்ரீராம். நாளாச்சு.. நலம் தானே?

//முடிக்கும்போது ராகவன் சார் வந்து "அபி...ஊர் வந்திட்டுது...பெட்டியை எடு... இறங்கலாம்" என்று சொல்வாரோ என்று கூட யோசித்தேன்!//

நல்லாத்தான் யோசிக்கிறீங்கப்பு.. இண்டரெஸ்ட்டிங்..

கதையின் உபகதையாய் ஒரு நிழல் கதை அல்லவா ஓடிக் கொண்டிருக்கிறது?! இதுல வேணும் என்றால் கொஞ்சம் டிராமா போடலாம்.. யார் யார் எவர் எவரோ?

மோகன்ஜி சொன்னது…

சிவா.. ஸ்ரீராம் மாதிரி யோசிக்க தோணலியேன்னு நான் நினைச்சுக்கிட்டிருக்கேன்.. வாகாய் யதார்த்த ஸ்பெஷலிஸ்ட் என்று கைலாகு கொடுத்த என் இளவலே! வாழ்க வாழ்க!

பத்மநாபன் சொன்னது…

நாள் விட்டு வந்தாலும் மனம் விட்டு அகலாத மாதிரி கதை சொல்லி விடுகிறீர்கள்...

நினைவுத்தாலட்டில் கிடைக்கும் தூக்கம் அலாதிதான்....

கீதமஞ்சரி சொன்னது…

மோகன்ஜி, மனங்களைப் படம்பிடித்துப் போடும் கலை உங்களுக்குக் கைவந்தகலை. பாராட்டுகள். நான் சிலாகிக்க நினைத்த வரிகளை என்னிலும் தீர்க்கமாக சிலாகித்துவிட்டார்கள் நிலாமகள். அவர்களுக்கு நன்றி. தில் தடப் பாட்டைக் கேட்டு நாளாகிவிட்டது. இன்று உங்கள் உதவியால் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். கதைக்கு பின்னணி போல் மனதுக்குள் வட்டமிடும் பாடல்.

அபியின் மனதையும் யாராவது படம் பிடித்துப் போட்டால்தான் தெரியும், அங்கே என்ன இருக்கிறது என்று. சில கனவுகளை நேர் செய்ய சிலருக்கு கவிதைகள் உதவுவது போல் சில துக்கங்களை மறக்க சிலருக்கு தூக்கம் என்றும் தோன்றுகிறது.

மோகன்ஜி சொன்னது…

என் அன்பின் பத்மநாபன்,

உங்கள் கருத்துக்கு நன்றி. எந்த ஆபீசிலும் ஊழியர்கள் விடுப்பில் இருந்தால், முதல் பலியாவது டெஸ்பாட்ச் டிபார்ட்மெண்ட் தான். அந்த சீட் அன்று இயங்காது.

நம் பணியின் சுமை அழுத்தும் சமயம், வலைப்பூவை வாட விட்டு விடுகிறோம்.
இதற்கு என்ன செய்யலாம்?

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய கீதமஞ்சரி!

எனக்கும் தில் தடப் பாடல் ரொம்ப பிடிக்கும். அதன் காட்சி அமைப்பு கூட ரம்யமானது.

//அபியின் மனதையும் யாராவது படம் பிடித்துப் போட்டால்தான் தெரியும், அங்கே என்ன இருக்கிறது என்று. சில கனவுகளை நேர் செய்ய சிலருக்கு கவிதைகள் உதவுவது போல் சில துக்கங்களை மறக்க சிலருக்கு தூக்கம் என்றும் தோன்றுகிறது.//

உங்களுக்கு எப்படி இதை சொல்லத் தோன்றியது? பிரில்லியண்ட்... துக்கத்தின் நீட்சி தூக்கமாயும் இருக்க இயலும் என்பதும் சாத்தியம் தான். அபிக்கு நான் நியாயம் செய்யவில்லையோ..

மிக நுட்பமாய் வாசிக்கும் நீங்கள் மனதில் சிம்மாசனம் போட்டு ஸ்திரமாய் அமர்ந்து விட்டீர்கள் கீதமஞ்சரி!

kashyapan சொன்னது…

மொகன் ஜி அவர்களே! குதியும்! சந்தோஷப்படுவேன்! அப்பாதுரை அவர்கள் ஊர் ஊரகப் போய் என்னைப் பற்றி பேசி இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது! நல்லதாகத்தான் சொல்லியிருப்பார் என்ற நம்பிக்கை! ---காஸ்யபன்

Matangi Mawley சொன்னது…

"ஏதும் மிஞ்சாத இந்த காதல் விபத்தில், ஒரு கதையேனும் மிஞ்சுகிறதா என அவரைப் பார்க்கச் சொல்ல வேண்டும்." -- A hope in hopelessness! Oxymoronic!
Brilliant narration- as ever...

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்! அப்பாதுரையும் சுந்தர்ஜியும் ஹைதராபாத்தில் என்னுடன் இருந்த பல மணி நேரங்களில், உங்கள் விருந்தோம்பல் பற்றியும் உங்கள் அனுபவத்தின் மேம்பாட்டையும் குறித்து நெகிழ்ந்து சொன்னார். அப்பாதுரை போன்ற ஒரு விருந்தினர் வாய்ப்பது கூட அரிது எனத் தோன்றியது.

வலையுலக சொந்தங்கள் ஒரு தனி உறவு முறை. பதிவர்கள் பலருடன் தொடர்பில் இருப்பது மனதிற்கு உவகை சேர்க்கும் உபாயம்..

மோகன்ஜி சொன்னது…

நன்றி மாதங்கி!
//A hope in hopelessness! Oxymoronic! //
நிஜத்தில் நிகழாத ஒரு எதிர்பார்ப்பு, ஒரு படைப்பின் கருப்பொருளாய் ஆவது மனபாரத்தை இறக்கி வைக்கும் ஒரு வழி. நமக்குள் நாமே ஆடும் கண்ணாமூச்சு.

அப்பாதுரை சொன்னது…

கண்ணைக் கசக்கிப் பார்த்து.. மறுபடியும் ககபா.. பதிவே தான்!

அப்பாதுரை சொன்னது…

எழுதாத கதை, பாத்திரங்களின் சலனத் தூக்கத்தில் இருக்கிறதோ? கடைசிக் காட்சி ஷேக்ஸ்பியரின் ரோமியோவை நினைவுபடுத்திப் போனது. ['would I were sleep and peace' என்றான் ரோமியோ. நம்மாளு அதை "அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே.. அந்த தூக்கமும் அமைதியும் நானானால்"னு அற்புதமா சொன்னாரு] நீங்க அதை இன்னும் பட்டை தீட்டியிருக்கீங்க. நிறைய வரிகளை மிகவும் ரசித்தேன்.

அப்பப்போ காணாமல் போய் ஏதோவொரு கண்ணாடியை வைரம் பண்ணிக் கொண்டு வருகிறீர்கள் மோகன்ஜி.

அப்பாதுரை சொன்னது…

'hopelessly romantic' என்பதும் இதனால் தானே மாதங்கி?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அண்ணா ரொம்ப நாள் சத்தமே இல்லாம இருந்துட்டு இப்படி திடீர்னு ஒரு அருமையான பதிவோட வரீங்க...

அசத்தறீங்க!

ஸ்ரீராம் சொன்ன மாதிரி க்ளைமேக்ஸ் எனக்குள்ளும் ஓடியது... ஆனால் அது உங்க லெவல் இல்லைன்னும் மனதுக்குள்ள பட்சி சொல்லியது....

மிக அருமை. தொடர்ந்து சந்திப்போம்...

எல் கே சொன்னது…

நலமே மோகன் ஜி . திவ்யாவும் நலம்தான். பள்ளியில் சமர்த்து என்று பெயர் எடுத்தாச்சு

ரிஷபன் சொன்னது…

வித்தியாசமாய் யோசித்திருக்கிறீர்கள்.

அப்பாதுரை சொன்னது…

காஸ்யபன் அவர்கள் கமெந்ட் படித்ததுவிட்டு "கடவுள் நம்பிக்கை இல்லாது போனாப் போகட்டும், காதல் நம்பிக்கை வேணும்" என்று நான் எண்ணிய அதே கருத்து!!

அப்பாதுரை சொன்னது…

<<.வாழ்க்கை ஒன்று தான் இந்த ஓட்டத்தில் எங்கோ வழியில் நழுவி விட்டது>>
நானும் மிக ரசித்த வரி.

பெயரில்லா சொன்னது…

வடிவேலும் மயிலும் துணை

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! பெரியார் அவர்கள் மிக அற்புதமான கட்டுரை ஒன்றை காதல் பற்றி எழுதியிருக்கிறார். கண்டிப்பாக அறிவு ஜீவிகள்( நீங்கள்,மோகன் ஜி போன்றவர்கள்) படித்தே ஆக வேண்டும்!---காஸ்யபன்.(கவிச்சித்தனையும் சேர்த்துக்கோள்ளுங்கள்)

பெயரில்லா சொன்னது…

அழகான சிறுகதை. எப்பொழுதும் போல் மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பிரமாதம்.

கதையை படித்தபோது நானும் ஸ்ரீராம் போலதான் இறுதியில் ராகவன் வருவார் என்று நினைத்தேன். பிறகு இறக்கிவிட வருபவர், ஏற்றி விடவே வந்திருப்பாரே என்று தோன்றியது. :)

எந்த நெருக்கமான உறவிலும் மனதளவில் பிரிவு ஏற்பட்டபின் மீண்டும் இணையும் ஒரு சந்தர்பம் வந்தாலும், மனம் ஒரு அடி விலகி இருக்கதான் சொல்லும்.
காண காண பேச பேசதான், காதல் மட்டுமல்ல எந்த உறவுமே வளரும். நினைவுகள் கூட மனதுடன் நெருக்கமாக இருக்க அதை மீட்டிக் கொண்டே தான் இருக்க வேண்டும். இல்லை என்றால் அது வெறும் வடுக்களாகி மனதின் ஆழத்தில் புதைந்து போகும். என்றோ ஒரு நாள் அவர்களை காணும்போது கொஞ்சம் தலை தூக்கும். பின் ஒரு வெறுப்புடனோ அல்லது அமைதியாகவோ அது அடங்கி விடும். இதை அழகாக கதையில் வெளிபடுத்தி இருக்கிறீர்கள்.

//ஏதும் மிஞ்சாத இந்த காதல் விபத்தில், ஒரு கதையேனும் மிஞ்சுகிறதா என அவரைப் பார்க்கச் சொல்ல வேண்டும்.// பிரமாதம்! இந்த கதையின் சாரத்தை சொல்லும் அற்புதமான வரி. மிகவும் ரசித்தேன்.

'விட்டகுறை தொட்ட குறை' கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் எல்லா உறவுகளுமே விட்ட குறை தொட்ட குறைதான். இறுதியில் மிஞ்சி இருப்பது 'உமக்கு நீரே, எமக்கு யாமேதான், இடையில் எதற்குதான் இந்த கச முச, கச முச'.

உங்கள் சிறுகதைகளை எல்லாம் தொகுத்து அது ஒரு புத்தமாக வெளி வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் மோகன்ஜி.

ஹேமா சொன்னது…

மோகண்ணா நலமா.நலம் நானும்!

மறத்தலும் இழத்தலும் வாழ்வின் சம்பிரதாயம் போலாகிவிட்டது.ஒருவேளை வாழ்வின் நியதியாகவும் கூட.ஆனால் மீட்டுப்பார்ப்பது அவஸ்தை.கண்ணீரை வரவிடாமல் கதையை முடித்துவிட்டீர்கள்.நன்றி அன்புக்கு !

அப்பாதுரை சொன்னது…

அருமையான பார்வை மீனாக்ஷி.

அப்பாதுரை சொன்னது…

நன்றி காஸ்யபன் சார்.

பெரியார் போன்றவர்கள் பொதுவாக பக்தியையும் காதலையும் ஒன்றாகப் பாவித்தவர்கள். அதனால் இறைவன் மீது காதலுக்கும் இருப்பவர் மீதான காதலுக்கும் வேறுபாடு புரியாமல் பேசியிருக்கிறார்கள். நீங்கள் குறிப்பிட்டுள்ள கட்டுரை பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் - இல்லாவிடிலும் தேடிப்படிக்கிறேன். என்னிடம் பெரியார் கட்டுரைகள் புத்தகம் இரண்டு உள்ளன; ஒன்றை அட்டை கூடப் பிரிக்கவில்லை. தேடிப்பார்க்கிறேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அபியின் காதல் கை கூடி இருந்தால், ஸ்ரீராமின் வாழ்க்கை, பையன்களுக்கு ஸ்கூல் புஸ்தகங்களுக்கு

அட்டை போடுவதிலும், ரேஷன் கடையில் பாமாயில் வாங்குவதிலும்

கரைந்து போயிருக்கும்!

காதல் வேறு ! யதார்த்தம் வேறு !!


அப்பாதுரை சொன்னது…

ஹாஹா ராமமூர்த்தி சார்!
அதுக்குத்தான் திருமணமானதும் காதலிக்கணுங்கறது. ரெண்டு பேருக்குமே கல்யாணமாயிருக்கும் பாருங்க?

மோகன்ஜி சொன்னது…

//கண்ணைக் கசக்கிப் பார்த்து.. மறுபடியும் ககபா.. பதிவே தான்!//

பாருங்க .. பாருங்க அப்பாதுரை! இதுவே காதலியா இருந்திருந்தா கண்ணைக் கசக்க விட்டிருப்பேனா?

உங்கள் ரசனைக்கும் பாராட்டுக்கும் நன்றி தொரைகாரு!

மோகன்ஜி சொன்னது…

வருக வெங்கட்! எல்லாரும் ஒரு குரூப்பாத்தான் யோசிக்கிறீங்க மக்கா! ஒரு தபா என்னிய காசிக்கு இட்டுனு போங்க தலைவரே!

மோகன்ஜி சொன்னது…

எல்.கே! திவ்யா பள்ளிக்கூடத்தில் நல்ல பெயர் எடுப்பது இந்த பெரியப்பனுக்கு ரொம்ப சந்தோஷம்!

என் கவலையெல்லாம் நம்ம ரெண்டு பேரும் திவ்யாக்குட்டி கிட்ட நல்லபேரு வாங்குவோமோன்னு தான்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன் சார்!

ஒரு சங்கிலித் தொடர் கதை பற்றி பேசினோமே நினைவிருக்கிறதா? இப்போ நான் ரெடி!

ஞாயிற்றுக் கிழமை உங்களைத் தொடர்பு கொள்கிறேன் சார்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை!

காஸ்யபன் சாருக்கு காதலும் வேணாம் கடவுளும் வேணாம்...

உங்களுக்கு கடவுள் எரவாணத்துல..காதலோ வேணும் வேணும்!

எனக்கு உம்மாச்சியும் வேணும்.. உம்ம ஆசை போல காதலும் வேணும்.

மூணு பேரும் ஒரு காமன் பாயிண்ட்டிலே சேர வேணாமோ?

இன்னுமொன்று.. இந்தக் கதை அண்மையில் இந்தியா வந்து போன ஆஞ்சநேயரைக் குறிப்பதா என GNB முதலிலேயே கேட்டது நினைவிருக்கா?
அது யாரா இருக்கும்..(கடல் தாண்டியதால் ஆஞ்சநேயர்...) காஸ்யபன் சாரோ ராகவனை எனக்குத் தெரியுமான்னு கேட்டார்...

ஏதும் தோணுதா சாமி?

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி!
//<<.வாழ்க்கை ஒன்று தான் இந்த ஓட்டத்தில் எங்கோ வழியில் நழுவி விட்டது>> நானும் மிக ரசித்த வரி.//

நன்றி சாரே!

மோகன்ஜி சொன்னது…

பெயரில்லா!
//வடிவேலும் மயிலும் துணை//

வடிவேல் -- கடவுள்.
மயிலு ---காதல்

இத இதத் தானே சொன்னிய?

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்! பெரியாரின் கருத்துக்களை நிறையப் படித்ததுண்டு.. நீங்கள் சொல்லும் கட்டுரை கவனத்துக்கு வரவில்லை. மேலும் விவரமிருந்தால் சொல்லுங்கள்..


காதல் களவழியாய் மட்டும் பார்க்கின்ற பார்வை தவறு. நல்ல காதல் திருமணத்திற்குப் பின்னரும், ஜீவிதத்திற்கு பின்னரும் கூடத் தொடரும்.

காதல் தவிர்த்த இலக்கியத்தை கற்பனையிலும் பார்க்க இயலுமா?
பேரிலக்கியங்கள் மட்டுமல்ல.. எளிய நாட்டுப் புற பாடல்கள் கூட காதல் உணர்வை வெளியிடும் போது பெரும் பரிமாணம் பெறுகிறது. இந்த பாட்டை படிங்க சார்!

ஆத்துல தோணிவிட
ஆளிறங்காத் தண்ணி வர,
நான் வாரேன் நீச்சலில்
நினைவாப் படுத்திரடி!

சடசடன்னு மழை பேய
சாமம் போல் இடிவிழுக
குடைபிடிச்சி நான் வாரேன்
குணமயிலே தூங்கிராதே!

நாராங்கி வீட்டுக் காரி!
நடுத் தெருவு வெள்ளையம்மா!
நான் வருவேன் நடுச் சாமம்
நாயை விட்டு ஏவிராதே!

காதல் ஆதார சுருதி என்பது என் கட்சி!மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி! வந்துட்டீங்களா? மிக நயமான கருத்துக்கள் உங்களுடையது. உங்கள் பாராட்டுக்கு நன்றி!

இந்தக் கதையில் முடிவுறாக் காதல் ஒன்றின் அவஸ்தையை கதாநாயகன் கடந்து செல்லக் கூடிய ஒரு தருணத்தை மட்டுமே வெளிப்படுத்த முயன்றேன்.

இங்கே காதலையும் தாம்பத்தியத்தையும் ஒரு காண்டிராக்ட் போல் புரிந்து கொள்வதாலேயே இத்தனை அவஸ்தையும்..

பிறர் மீது நாம் செலுத்தும் அன்பு பெரும்பாலும் ஏதோ எதிர்பார்ப்பின் வெளிப்பாடாய் அமைந்து விடுகிறது. ஒரு கணவன் அன்பு செலுத்துவது மனைவியிடம் அல்ல... மனைவியைப் பற்றி தான் கொண்டிருக்கும் அபிப்பிராயத்தின் மீதே அந்த அன்பு வைக்கப் படுகிறது. அந்த அபிப்பிராயம் மாறுபடும்படி ஏதும் நிகழ்ந்தால், அந்த அன்பு வெறுப்பாயும், சலிப்பாயும் மாறிப் போகிறது.

எதிர்பார்ப்புகள் அற்ற அன்பு ஆழமானது. மன்னித்தலும், மன்னிக்கப்படுதலும் மாறாக் காதலுக்கு எருவும் நீரும் போல்..

அன்புதனில் செழிக்கும் இவ்வையமம்மா..

மோகன்ஜி சொன்னது…

நான் நலமே ஹேமா! வாழ்க்கையின் நியதி என்று அழகாய்ச் சொன்னாய். நினைவுகளை மீட்டுப் பார்ப்பது அவஸ்தை தான்! ஆனாலும் அவை தவிர்க்க முடியாதது. முயன்றால் அந்த அவஸ்தையை ஒரு சக்தியாகக் கூட மாற்றிக் கொள்ள இயலும்..

நான் எதையுமே மறக்க முயல்வதில்லை ஹேமா.. பெரும்பாலும் அன்பு செலுத்தப் பட்ட தருணங்களிலெல்லாம் உண்மையான அன்பாகவே இருக்கிறது. சந்தர்ப்ப சூழல்கள் அதன் நோக்கம் ஈடேறாமல் செய்யலாம்.. அதொன்றாலேயே அந்த அன்பு பொய்யாகி விடுமா என்ன..

ஒரு படைப்பாளிக்கு இந்த முயக்கம் மிகமிக அவசியம் என்று எனக்குத் தோன்றும்.

மோகன்ஜி சொன்னது…

மூவார்! வாங்க வாங்க! அதெப்புடீ? யதார்த்தம் அட்டை போட்டு ரேஷன் கடைக்கு போய் வருவதில் முடிந்திருக்குமா??

ஒரு நாளில் நாப்பது எஸ்,எம்.எஸ் அனுப்புனோமா? ரோடுமுக்குல கடலை போட்டோமா, சவுகரியம் இருந்தா பார்க்கு பீச்ன்னு போய் கண்'லாக்'கில் நேரம் கடத்திவிட்டு லாஸ்ட் சீன்ல தங்கச்சின்னு எஸ்கேப்ன்னு இல்லாம ஒருத்தொருக்கொருத்தர் துணையா இல்லே இருக்கணும்?

என்னை மாதிரி இளைஞர்களை இப்படிதான் நல்வழி படுத்துவீங்களா மொதலாளி?

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை! மூவாருக்கு இன்னமும் கொம்பு சீவி விடாதீங்க.

அவர் அது வேறு இது வேறுன்னு சொல்லிடப் போறாரு!

kashyapan சொன்னது…

ஐயா மார்களே! ஏகப்பட்ட புத்தகம்! குறிப்புகள்! தகவல்கள் நிரம்பிய ஏடுகள்! அத்தனயையும் மதுரயிலிருந்து வரும்பொது பெத்தானியாபுரத்தில் உள்ள "மார்க்ஸ்" நூலகத்திக்கு கொடுத்திட்டேன். ஒரு 200 புத்தகமாவது இருக்கும்! நான் கண்டேனா! அப்பதுரை, மொகன்ஜி கிட்ட மாட்டிக்கிட்டு முழிப்பேன்னு! ஆக இப்ப ஞாபகத்துல தான் எழுத வேண்டியிருக்கு! பெரியார் எழுதின கட்டுரைல தலைப்பில "காதல்" வார்த்தை வரும்னு தோணுது! தீவிரமான சிந்தணையாளர்! சமூகப் போராளீ! அவர் இந்த விஷயத்தினுடைய முக்கியத்துவம் கருதி எழுதியிருக்கார்! அப்பாதுரைஅவர்களே!! தர்க்கரீதியான அவருடைய வாதமே "கோடி பெரும்" . நீரெல்லாம் கண்டிப்பாக படிக்க வேண்டிய ஒன்று! Weather u accept or not for the logic of it u will enjoy! இதுக்கும் மேல நான் என்னத்தை சொல்ல! வாழ்த்துக்களூடன்---காஸ்யபன்.

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்! பரவாயில்லை சார். பெரியாரின் கட்டுரை,எனது நண்பர்கள் வசம் ஏதும் கிடைக்கிறதா என்று பார்க்கிறேன்.

மறுபடியும் சந்திப்போம். நீங்கள்
பெரியாரைப் பற்றி கூறிய கருத்து தான் எனதும்.

கதம்ப உணர்வுகள் சொன்னது…

கதையை வாசிக்கும் முன்பு தங்கள் வலைப்பூவின் பெயரை பார்த்தேன். அதன்பின் உங்களைப்பற்றிய விவரமும் படித்தேன்..

அறிவு ஜீவி சார் நீங்க. அதான் அத்தனை அருமையா சொல்லி இருக்கீங்க....

கதையை படிக்க ஆரம்பிக்கும் போது சாதாரணமா தான் ஆரம்பித்தது ஸ்வாமி... ஆனால் படிக்க படிக்க சதா ரணமாகி இறுகி இறுதியில் வடுவாகி போன உங்க காதல் உங்க கண்முன் ரயில்பெட்டியில் அசந்தர்ப்பமா அமர்ந்திருப்பதை தான் எழுதி இருக்கீங்கன்னு புரிஞ்சுக்க முடிந்தது....

ராகவன் சாரோட அதான் சார் உங்க நண்பரோட ரசனைகளை எல்லாம் அழகா தொகுக்கும்போதே உங்களோட ரசனைகளைப்பற்றி பட்டியல் இடலையேன்னு கேட்கவே தோணலை... ஏன்னா நண்பரோட எண்ண அலைகளும் உங்க எண்ண அலைகளும் ஒன்றாய் பயணிப்பதால்....

என்னப்பா உன்னோட வரிகளில் காதல் பிரிவின் ஏக்கம் இழையோடுகிறது அப்படின்னு சொல்லிட்டு அதை கேட்பது இன்னொருத்தர் விவகாரத்துல மூக்கு நுழைக்கும் வக்கிரம் அல்ல...

ஒரு வாஞ்சையோடும் வாத்சல்யத்தோடும் கேட்பதாய் சொன்னது அந்த வரி எனக்கு ரொம்பவும் பிடிச்சிருந்தது... எடுத்துக்கிற மனப்பக்குவம் தானே முக்கியம்??

கதம்ப உணர்வுகள் சொன்னது…

ஹிந்தி பழைய பாடல்கள் தமிழ் பழைய பாடல்களைப்போல் தேன் தேன்..... தில் தடப் தடப் கே கெஹரஹா ஹை.... பழைய பாடலை மறுபடி ரசிக்க முடிந்தது உங்க தயவால்..... இருவருக்கும் அதென்ன சார் ஒரே டேஸ்ட் பாடல்களை ரசிப்பதில்.....

இந்த கதையில் காதல் பிரிவைச்சொல்லும்போதே நட்பின் உயர்வையும் மிக மிக தத்ரூபமாய் சொன்னவிதம் அழகு சார்....

ராகவன் சார் நிஜமாவே அப்படி ஒரு கேரக்டர் இருந்தால் சல்யூட் வைக்க தோணுகிறது எனக்கு உங்களுக்கு.... ஒரு நண்பரைப்பற்றி அதிக புகழ்ச்சியாகவும் சொல்லாமல் அவர் மேல் கொண்ட மதிப்பை, நட்பை, உயர்வை, அன்பை இதை விட விஸ்தாரமாக சொல்ல இயலும்னு தோணலை... அவருடைய செய்கைகள், அவருடைய வார்த்தைகள் இதை எல்லாம் அணு அணுவாய் நீங்க ரசித்து சொன்னவிதம் கண்டிப்பா ராகவன் சார் ஒரு கற்பனை கேரக்டரா இருக்கவே முடியாது என்பது என் அபிப்ராயம்....

ஒருவரை நாம் எந்த அளவுக்கு நேசிக்கிறோம் என்பதை அவரைப்பற்றி நாம் சதா சிந்தித்துக்கொண்டு இருப்பதிலும், எழுதினாலும் எழுத்தில் அவரைப்பற்றி கொண்டு வருவதிலும் மற்றவரிடம் பேசும்போதும் எதேச்சையாக அவரைப்பற்றிய வார்த்தைகள் உதாரணத்திற்கென்று கூட சொல்வதுண்டு.... நமக்கே தெரியாது நம் ஆழ்மனதில் ஒருவரைப்பற்றி இத்தனை சிந்திக்கிறோமா என்று....

எத்தனையோ வருடத்திற்கு முன்னால் உயிராய் இருந்த காதல் இன்று உயிரற்று ஒரு வெறுமையான மனதுடன் உடன் பயணித்தாலும் அன்றைய நினைவுகள் இருவர் மனதிலும் மின்னி இருந்திருக்கும்.. உங்க மனதில் எழுந்த நெருப்பு ஒருவேளை அபியின் மனதிலும் எழுந்திருக்கலாம். தன் தவற்றை எண்ணி தலை குனிந்திருக்கலாம்...

ஒன்று தெரியுமா சார்? என்னை திட்டினால் நானும் இப்படி தான் படுத்துக்கிட்டு அழுதுக்கிட்டே தூங்கிருவேன்... அபி ஒருவேளை நேசித்தவனை தவிக்கவிட்டு போய்விட்டோமே என்ற குற்ற உணர்விலும் தற்போதைய வாழ்க்கையை ஒப்பிட்டு நோக்கியும் கண் மூடி மோனத்தில் இருந்து அது தூக்கத்தில் முடிந்திருக்குமோ???

பார்த்தீங்களா பார்த்தீங்களா?? 4 வருடங்கள் காதலித்து வேண்டாம்னு மறுதலித்து போனது அபி என்றாலும் ஸ்ரீராம் மனசுல அதே அன்பு மாறாம இருந்திருக்கலாம் தானே? ஏன் இத்தனை அசூயை? பலவருடங்கள் கழித்து ஒரு விரோதியை பார்த்தாலும் அதே வெறுப்பு இருக்குமா என்ன?? இருக்காதுன்னு தான் தோன்றதுப்பா... கதைக்கு வேணும்னா சாத்தியமாகலாம்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் காலம் தானே மனப்புண்ணை ஆற்றும் மருந்து.... அப்படி இருக்கும்போது இத்தனை வருடங்கள் கழித்து பார்க்கும்போது கோபம் வெறுப்பு அசூயை எல்லாம் மறைந்து அன்பு தானே தலைதூக்கி இருக்கும்?? எனக்கென்னவோ அப்படி தான் தோன்றது....

ஆனால் ஸ்ரீராமை வேண்டாம்னு ஒதுக்கிட்டு போனப்பின் ஒரு வெறியோடு வாழ்க்கையில் முன்னேற பாடுபட்டு காதலை தோற்று வாழ்க்கையில் ஜெயிக்க முயன்று பணத்தை மட்டுமே ஜெயிக்கமுடிந்தது... மனதையும் ஜெயிக்க முடியலையே... இல்லன்னா அபியை பார்த்ததும் இத்தனை எண்ணங்கள் அலைமோத காரணம்?? வாழ்க்கையிலும் தோற்கும்படி ஆகிவிட்டதே.... மிக அருமையான வரிகள் சார் இந்த இடத்தில்... வார்த்தைகளின் கோர்ப்பு முத்திரை பதித்திருக்கிறது...

பாருங்களேன்.. காதல் ஸ்ரீராமை வீசி எறிந்த வேதனை, அந்த விரக்தியில் சோர்ந்து உட்காராமல் தன்னை முழுமையாக பட்டைத்தீட்டிக்கொள்ள உதவியதே.... காதல், வாழ்க்கை இருவகையிலும் தோல்வி ஏற்பட்டாலும் நட்பு முழுமையாகப்பெற்றதை இந்த கதை வரிகள் முடித்திருக்கிறது சிறப்பாக இருக்கிறது.....காதலில் தோல்வி உற்றதையும் ராகவன் சாரோட பகிர்ந்துக்கொள்ள உடனே மனம் நினைத்திருக்கிறதை வேறெப்படி சொல்வதாம்?

க்ளாஸ்..... சிந்தனையே அசத்தலாக இருப்பதால் தான் இப்படி ஒரு கதையை படைக்கமுடிகிறது மோகன் ஜீ சார்....

இடையே இடையே வரிகளில் வைரச்சிதறலாய் அருமையான உவமைகள்.... ரசிக்க வைத்தது...

ரசனை உள்ள மனிதரால் தான் வாசிப்போருக்கும் ரசிக்க தகும்படியான படைப்பை தரமுடியும் என்பதை மிக அருமையாக இந்த கதை சொல்லி இருக்கிறது....

முழுமையாக இந்த கதையில் ஆழ்ந்து போக வைத்து பதிவிட வைத்தீர்கள்.... அன்பு வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகள்... தொடருங்கள்....

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய மஞ்சுபாஷினி!

முதல் முறையாக வானவில்லுக்கு வருகிறீர்கள் என நினைக்கிறேன். வரும் போதே விளாசி விட்டீர்கள். உங்கள் விஸ்த்தாரமான வாசிப்புக்கும், பின்னூட்ட அலசலுக்கும் நன்றி!

சில விளக்கங்கள் உங்களுக்காய்:

1.//அறிவு ஜீவி சார் நீங்க. அதான் அத்தனை அருமையா சொல்லி இருக்கீங்க....//

நோட் பண்ணுங்கப்பா!
நானொரு சாதாரணமான ரசிகனுங்க. கண்ணில் பட்டதை கண்ணியமாய் சொல்லும் எளிமையான பதிவாளி.

2.//இறுதியில் வடுவாகி போன உங்க காதல் உங்க கண்முன் ரயில்பெட்டியில் அசந்தர்ப்பமா அமர்ந்திருப்பதை தான் எழுதி இருக்கீங்கன்னு புரிஞ்சுக்க முடிந்தது.... //

ஹோல்டான்.. ஹோல்டான்... இந்தக் காதல் என் கதை அல்ல மேடம்.
தன்மையில் எழுதுவதில் நேரும் சிக்கலோ இது.. நான் ஸ்ரீராம் அல்ல!

என் சோகமே வேறு.. காதல் கைகூடி காதலியையே மணந்த அபலன்.. ஹீம்..

இதை பதிவிட்ட போது நான் மனதில் உருவகித்த ராகவன் நம் பதிவர் 'காஸ்யபன் சார்' தான். ஆனா அந்த கேரக்டரோட பெர்சனாலிட்டி நான் தான். மாப்பிள்ளை காஸ்யபன் சார் தான்.. ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னுது!

என்ன குழப்பம்னா, ஊரில் உள்ள காதல்லாம் என்னுது. எல்லா காதல் தோல்விக்கும் நான் தான் அழணும்னு சங்கல்பம் பண்ணியிருக்கேன் மஞ்சு பாஷிணி !

நேரம் கிடைக்கும் போது என் சில கதைகளையும் படியுங்கள். உங்கள் ரசனைக்கு பிடிக்கலாம்அவை.

பாடல்களில் ஒத்த ரசனை இருப்பதாய் நீங்கள் சொன்னதற்கு நன்றி!

அபி ஸ்ரீராமை மறுதலித்த விதம். இயல்பான எண்ண ஓட்டத்தையே தூர்த்து விட்ட அந்தக் காதல், அதனாலான வெறுமை எல்லாமும் அசூயை கொள்ள வைக்கும் தானே? அல்லது அந்த எதிர்பாரா சந்திப்பில் தன்வசமிழந்து ஏதும் சொல்லி சங்கடம் ஏற்படுத்தி விடாதிருக்க மனம் செய்யும் தந்திரமாய்க் கூட அந்த அசூயையைக் கொள்ளலாம்.

வாழ்க்கை நதியின் ஆழம் அளவிடுதற்கு அப்பாற்பட்டது. அது சுழித்தோடும்,வரண்டிருக்கும்,கலங்கி வெள்ளமாய் வரும்,தெளிந்து கண்ணாடி காட்டும்...
அதை கரையிலிருந்து கண்ணுறுதல் வேறு, அதில் குதித்து திளைத்து மீளல் வேறு.

உங்கள் பின்னூட்டம் மிக்க மகிழ்ச்சி தந்தது மஞ்சு பாஷிணி. வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்

அப்பாதுரை சொன்னது…

பின்னூட்டம் வியக்க வைக்கிறது.
உள்ளார்ந்து உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள் மஞ்சுபாஷிணி.

மோகன்ஜி சொன்னது…

உண்மை அப்பாதுரை ! மஞ்சுபாஷிணியின் கருத்துக்கள் தான் எத்தனை கோர்வையாக இருக்கிறது. அருமை தான்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

வர..வர...பதிவை விட கமெண்ட்ஸ் அதிகமாய்ப் போய் விட்டது..யோசித்துப் பார்த்தால்,பரிமேலழகரின் உரையும்..திருக்குறளும் ஞாபகம் வருதே!

மோகன்ஜி சொன்னது…

மூவார்! "எவ்வளவு அடிச்சாலும் இவன் தாங்கராண்டா" தான் எனக்கு ஞாபகம் வருதுண்ணே!"

V Mawley சொன்னது…

ஒரு சமயம் , மிகவும் வசீகரமான , பிரபலமான ஒரு இசைக்கலைஞருடன் சக பயணியாக பயணிக்க வாய்ப்புக்கிடைக்கபெற்றேன்;
பேச்சு சுவாரஸ்யத்தில், நான் " it is better to have loved and lost, than never to have loved at all " என்கிற மேற்கோளை கூறிவிட்டு , நான் ஒருபடி
மேலே போய் "the 'loved and lost ' -element , really makes one's life richer and fuller " என்று கூறினேன் ; அவர் என்னை கட்டிக்கொண்டு நட்பு பாராட்டியது
இன்னமும் மறக்கமுடியாத நிகழ்வு! இந்த என் கூற்று அவருடைய வாழ்கையின் ஆதார ச்ருதியை தொட்டுவிட்டதாக நெகிழ்ந்து கூறினார் ...மாலி.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

கவிராயரின் சிகிச்சை காரணமாக ரயிலின் கடைசிப் பெட்டியில் இந்த சுந்தர்ஜி.

கதைகள் இப்படித்தான் எழுதப்படணும் மோகன்ஜி.

முடிவுங்கறது வாசிக்கறவங்க மனசுல எப்படி எதிரொலிக்குமோ அப்படியே எதிரொலிக்கட்டும்-மலைசிகரங்கள்ல அந்தந்தக் குரலுக்கு ஏத்த எதிரொலி போல.

ஒரு வட்டத்தில் ஏது தொடக்கம் ஏது முடிவு?

ஒரு புள்ளியில் ஏது முன் பின்?

வழக்கமான செறிவான வாக்கியங்களின் தொடுப்பாய் இருப்பதால் தனியே எதையும் குறிப்பிட விரும்பவில்லை.

ராகவனுடன் பகிர்வை நீட்டிக்க தனித்தனிப் பெட்டிகளில் ஏமாற்றத்துடன் சென்னை பயணிக்கும் இடம் ரொம்பப் பிடித்தது -அபியும்,ஸ்ரீராமும் பயணிக்கும் பயணம் போல.

மதுமதி பாடலை இப்போது நானும் பாடிக்கொண்டிருக்கிறேன் மோஹன்ஜி.என் நாசியின் அருகே கசப்பை நினைவூட்டும் மார்கோவின் அற்புதமான சுகந்தம்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய மாலி சார்! மிக ஸ்வாரஸ்யமான சந்திப்பு உங்களுடையது.

காதல் இரசாயனங்களான எபிநெப்ப்ரின்,நைட்ரிக் ஆக்ஸைட்,ஆக்ஸிடோசின் முதலியவை நம்முள் செய்யும் ரகளை தான் காதல் உணர்வுக்கு காரணம்னு ஒரு முறை படிச்சேன். எழுதி வச்ச கவிதைகளையும், கதைகளையும் என்ன செய்யுறது என்று ஒரு பயம் வந்து விட்டது மாலி சார்!

மோகன்ஜி சொன்னது…

வா சுந்தரா! கவிராயருக்கு செய்த உதவியை எண்ணி பெருமைப் படுகிறேன். என் ஆசி கலந்த அன்பு சகோதரா!

இந்தக்கதைக்கு பெரிய பூமாலை இது சுந்தர்ஜி! நன்றி!

//ராகவனுடன் பகிர்வை நீட்டிக்க தனித்தனிப் பெட்டிகளில் ஏமாற்றத்துடன் சென்னை பயணிக்கும் இடம் ரொம்பப் பிடித்தது -அபியும்,ஸ்ரீராமும் பயணிக்கும் பயணம் போல//

கூர்ந்த வாசிப்பு ...

//கசப்பை நினைவூட்டும் மார்கோவின் அற்புதமான சுகந்தம்.//

தொலைபேசியில் மார்கோவைப் பற்றி சொன்னபோது பரவசப் பட்டேன்.

அந்த வரி எழுதியபோது சில சோப்பு பெயர்களை மாற்றி மாற்றி மார்கோவில் நிறுத்தினேன்.. எழுதப் போகும் கசப்பை என் உணர்வில் ஏற்றும் வண்ணம்..

ஒரு சதாவதானி இருந்தாராம். அரசவையில் தன் கலையை வெளிப்படுத்தும் வண்ணம் என்னென்னவோ சாகசங்களை ஒரே நேரத்தில் செய்தபடி இருந்தாராம். ஒருவனை ஒரு விரலால் தன் முதுகில் தொடச் சொன்னாராம். முதுகில் தொட்ட இடத்தில் சருமத்தை சுறுக்கியும் விரித்தும் ஒரு சிலிர்ப்பை வெளிப் படுத்தினாராம். மற்றவர் பார்த்துக் கொண்டிருக்க, அவையில் இருந்த ஒரு இடையன் தன்னை மீறி சபாஷ் என்று கூவினானாம்.(மாட்டைத் தொட்டால் சிலிர்த்துக் கொள்ளும்)

நீதானடா எனக்கு ராஜா என்று அவனைக் கட்டி கொண்டாராம்.

நீ தானடா எனக்கு ராஜா!


மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சுந்தர்ஜீ! உங்கள் ஆழ்ந்த வாசிப்பின் பெருமையை சொல்லவே சதாவதானி கதையை சொன்னேன். நான் அந்த சதாவதானி என்று திமிருடன் சொல்லிக் கொண்டாற்போல் தோன்றியது. நான் சிங்கிள்தானி கூட இல்லை ஒரு வேலையையே உருப்படியாய் செய்தறியா நிரட்சரகுட்சி!

சிவகுமாரன் சொன்னது…

நாயை வுட்டு ஏவீராதே
நாட்டுப் புற பாடல் ரசித்தேன்.
அருமை அண்ணா

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா! இப்போ ஒரு ஜோடிக் கிளியை பறக்க விட்டிருக்கேன்.. பார்க்கவும்.ரசிக்கவும்.

கோமதி அரசு சொன்னது…

எதிரில் அபி கண்ணை மூடிய நிலையில் இருந்தாள். ஏதும் யோசிக்கிறாளா? பழைய நினைவுகள் அவள் உள்ளுக்குள்ளே அலைக்கழிக்கின்றதா?

சட்டென்று அவள் தலை முன்னோக்கித் துவண்ட அதிர்ச்சியில் கண் விழித்தாள். சை! நல்ல தூக்கம் தான் அவளுக்கு. கொஞ்சம் சிரிப்பு கூட வந்தது எனக்கு.//

எனக்கும் சிரிப்பு வந்து விட்டது.
தன்னால் மறுக்கபட்டவன் எதிரில் இருக்கும் போது எப்படி தூக்கம் வரும்!

Geetha Sambasivam சொன்னது…

எல்லோரும் வந்து அற்புதமான கருத்துகளைப் பகிர்ந்திருக்காங்க. அவங்க கருத்தோட்டங்களுக்கு முன்னால் நான் சொல்வதெல்லாம் எம்மாத்திரம்? ஆனால் அபியின் குணநலன்களைப் பார்த்தால், அவள் முழுக்க முழுக்கப்பொருளாதார ரீதியிலேயே சிந்திக்கும் வர்க்கமாகத் தோன்றுகிறது. காதல் என்பது அவளைப் பொறுத்த மட்டில் பணமும் அது சார்ந்த வசதிகளும் சம்பந்தப்பட்டது! அவளை நினைத்து நினைத்து இத்தனை நாட்கள் உருகி உருகி வாழ்க்கையைத் தொலைத்த ஶ்ரீராமின் மேல் பரிதாபம் பொங்குகிறது. ஏனெனில் அவருக்கும் உண்மைக்காதல்னா என்னனு தெரியலை! சிறிதும் தன்னைக் குறித்து நினைத்துக் கூடப் பார்க்காத ஒரு பெண்ணிற்காக உருகி இருக்கிறாரே! :( ஆனால் இப்போது புரிந்திருக்கிறது ராகவனால்! :) அந்த விதத்தில் ராகவன் ஒரு நன்மையைச் செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

Geetha Sambasivam சொன்னது…

ஶ்ரீராம் இனியாவது வாழ்க்கையைச் செப்பனிட்டுக் கொள்ள வேண்டும். ராகவன் சாரின் குணநலன்கள் பற்றிய விவரிப்பு நமக்கெல்லாம் நன்கு பரிச்சயமான தெரிந்த ஒருவரை நினைவூட்டுவது போல் உள்ளது. ஆனால் திரு காச்யபனை நினைத்துக் கொண்டு எழுதியதாகச் சொல்லி இருக்கிறீர்கள். அவரை எனக்குத் தெரியாது! :) நானும் இந்தக்கதையில் கொஞ்சம் தமிழ் சினிமாத்தனத்தோடு கூடிய முடிவை எதிர்பார்த்தேன். ராகவன் மூலமாக விஷயம் தெரிந்து கொண்டு அபி ஶ்ரீராமை ஏற்றுக் கொண்டு காதலைப் பூர்த்தி செய்வாளோ என்பது தான் அது! ஆனால் ராகவனுக்கும், அபிக்கும் முடிச்சுப் போட்டுப் பார்க்கவில்லை. ஏனெனில் ராகவன் மனைவியோடு வந்ததாக எங்கும் குறிப்பிடவே இல்லை! :)