புதன், நவம்பர் 07, 2012

வேறென்ன கேட்பேன்?- 2


இந்த கதையின் இந்தப் பதிவு திரு ரிஷபனின் கைவண்ணத்தில்...

ஆராமுதின் பக்கம் வந்து சிவபாதம் உட்கார்ந்ததை ஆச்சர்யமாய் பார்த்தாள்.
'எழுந்துப்பாரான்னு கிடந்த மனுசனா இவுரு..'

அப்படி ஒன்றும் உடம்பு சொல் பேச்சு கேட்கவில்லைதான். கால் ஒரு பக்கம் இழுக்க கை ஒரு பக்கம் இழுத்தது. பிடிவாதம் ஜெயித்தது. பால்ய நண்பனைப் பார்த்த வேகமோ.. அல்லது மனதின் குதியாட்டமோ. பதறிப் போய் பற்றிக் கொள்ள வந்தால் உதறியதில் வீம்பு தெரிந்தது. ஆராமுது பிடித்துக் கொண்ட போது உடன்பட்டதில் லேசாய் பொறாமையும் கோபமும் வந்தது.

"தட்டு போதும்டா"

ஆராமுது சொன்னதைக் கேட்காமல் வாழை இலை. புது எவர்சில்வர் டம்ளர். சுடச் சுட இட்லி. சட்னி.

ஆராமுதுக்கு உள்ளே ஏதோ தளும்பியது. அவமானம் பின்னுக்குப் போய் ஆதி நாட்களின் பிரியம் மேலோங்கியது. எது கிடைத்தாலும் பகிர்ந்து கொண்ட நட்பு.

"ரொம்ப காரமா.. எண்ணை ஊத்துடி.. " சிவபாதம் இரைந்ததில் குரலில் கணீர்.
"அதெல்லாம் இல்லை.."
"இன்னும் ரெண்டு வைக்கட்டுமா"

அம்மா.. அம்மாவின் ஞாபகம் வந்தது. கேட்கக் கூட மாட்டாள். போட்டு விட்டு போவாள். வயிற்றைப் பார்க்காமல் மனசைப் பார்த்து ஊட்டிய காலம்.

சுடச் சுட காப்பி. சிவபாதம் மீண்டும் கட்டிலுக்கு வர.. பக்கத்தில் ஆராமுது. வயிறு நிறைந்து, மனம் மட்டும் குமுறிக் கொண்டு. எங்கிருந்து ஆரம்பிப்பது.. சுவர் காலண்டர் பின்னோக்கி போன பிரமை.

மகன், மருமகள், மனைவி பற்றிய விசாரிப்புகளுக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மனம் ஒட்டவில்லை. அதை சிவபாதமும் புரிந்து கொண்டதாலோ என்னவோ டக்கென்று பேச்சை நிறுத்தி ஏதோ கேட்டார்.

"ஆராமுது.. டேய் ஆராமுது"
"ஆங்க்.. என்ன"
"உன் கவனம் இங்கே இல்லைதானே"

ஆராமுது அவனையே வெறிக்கப் பார்த்தார். மனசுக்குள் ஒரு உக்கிரம் கிளம்பிவிட்டது. உன்னால் தானே.. உன்னால் தானே..

"என்னடா.. ஏதாச்சும் பண்ணுதா.. கொஞ்சம் படுக்கறியா.. பிரயாணம் ஒத்துக்கலியா"
சிவபாதம் குரலில் அக்கறை பீரிட்டது.

ஆராமுது தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். உன் பேச்சைத் தானே இத்தனை நாள் கேட்டேன்.
"வெளியே போயிட்டு வரேன்.."
"ஏண்டா.. இப்பதானே வந்த.. இரு.. அப்புறமா போகலாம்.." சிவபாதம் கெஞ்சிய குரலில் சொன்னார்.

ஆராமுது அதற்குள் எழுந்து விட்டார். சிவபாதம் முகத்தைப் பார்க்கவில்லை. கோபம் தெரிந்து விடும்.
"பத்து நிமிஷம்.. வந்துருவேன்"

படிகளில் இறங்க ஆரம்பித்து விட்டார்.
"அவன் போறான்டி.. கூப்பிடேன்"
சிவபாதம் மனைவியிடம் சொல்லியது கேட்டது.

"பச்சைப்புள்ளையா அவரு.. போயிட்டு வந்துருவாரு.."
ஆராமுது சிவபாதம் அருகில் அந்த நிமிஷம் இருக்கப் பிடிக்காமல் இறங்கி வந்து விட்டாரே ஒழிய.. தெருவுக்கு வந்ததும் எங்கே போவதென்று புரியவில்லை. தன்னிச்சையாய் கால்கள் நடந்தன. பண்டாபீஸ் இங்கேதானே.. எங்கே காணோம்.. முப்பது வருஷத்துக்குப் பிறகு தேடுவதில் ஒரு அபத்தம் புரிந்தது மனசுக்கு. தெருவின் முகம் மாறிப் போயிருந்தது. யாரோ கூப்பிடுவது போல.. இல்லை.. விரட்டுவது போல.. காலகள் வேகமாய் நடக்க பின்னாலேயே வந்து கையைப் பிடித்து இழுத்தார் ஒருத்தர்.

"அது நான் இல்லை.. நான் இல்லை" அலறினார் ஆராமுது.
"ஸார்.. பர்ஸை கீழே போட்டு போறீங்க.."
பர்ஸ். முகத்துக்கு எதிரே காட்டினார். ஆமாம். என் பர்ஸ். என் பணம்.

"தொலைச்சவுங்களுக்குத் தான் அந்த அருமை தெரியும் ஸார்..பிடிங்க.. பத்திரமா வைங்க"
தொலைச்சவங்க.. எத்தனை வருஷம் கழிச்சு வந்தாலும் வார்த்தைகள் உயிரோடு நின்று மிரட்டுகின்றன.

 'பாவி.. வெளங்குவியாடா நீ.. நல்லா இருப்பியா..'
'நான் இல்ல.. நான் இல்ல'
ஆராமுது வாய் விட்டு அலறி இருக்க வேண்டும். எதிரே இரண்டு மூன்று பேர் நின்று வேடிக்கை பார்த்தார்கள்.

'புத்தி சரியில்லையா'

ஆராமுது திரும்பி நடக்க ஆரம்பித்தார். வேணாம், சிவபாதம்கிட்ட போயிரலாம்.. படியேறியபோது மீண்டும் நாயின் குரைப்பு.

"வந்துட்டாரு உங்க நண்பர்"
சிவபாதம் உடம்பு நடுங்கியது இவரைப் பார்த்து.

"நீ திரும்பப் போயிடுவியோன்னு பயந்துட்டேன்.."
"இல்ல" முனகினார் ஆராமுது.

"உன் கிட்ட பேசணும்டா"
"ம்ம்.."
"அவர் கொஞ்சம் படுக்கட்டுமே.."
"ஓய்வு எடுக்கறியாடா"
"ம்ம்"

பூக்குழி மிதித்த மாதிரி உடம்பு எங்கும் அனலடித்தது. தலைக்கு உசர கட்டை வைத்து மின் விசிறியின் அடியில் படுத்தார்.
இறந்த காலம் உயிர் பெற்று எழுந்து இரைச்சல்கள் கேட்டன.

"டேய்.. ஆராமுது.. நல்லா இருப்பியாடா.. '

'அவனை என்ன கேள்வி.. பிடிங்கடா'

'இரு கொஞ்சம் விசாரிக்கலாம்..'

'விசாரிக்க என்ன இருக்கு.. கையும் களவுமா பிடிச்சாச்சு'

'சிவபாதம் நீ இதுல தலையிடாதே..'

சிவபாதம் சட்டென்று ஒதுங்கியதைப் பார்த்து ஆராமுது அரண்டு போனார்.

டேய் சிவபாதம்..”
கூட்டம் மெல்ல மெல்ல முன்னேறியது. சிவபாதம் நகர்ந்து கொண்டே பின்னுக்கு போவது தெரிந்தது. அவன் கண்களில் தெரிந்த மிரட்சி.. கெஞ்சல்.. பயம்..

ஆராமுதுவுக்கு இன்னது செய்வதென்ற நிதானம் தொலைந்தது.



                                                                                                       (தொடரும்)

இதன் அடுத்தப் பகுதியை வரும் சனிக்கிழமை(10.11.2012)தொடரப் போவது மூவார் முத்து திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்கள்



28 comments:

அப்பாதுரை சொன்னது…

விவரத்தைச் சொல்லாமலே முழுக்கப் படிக்க வச்சுட்டாரே மனுசன்? அதுவும் ரெண்டு தரம்?

sury siva சொன்னது…


' இன்னிக்கு இரண்டு பேர்லெ ஒத்தரு கண்டிப்பா வந்துடுவாரு இல்லையா ?'

' யாரு அவுக ?' " என்று சன்னமாகக் கேட்டாள் கிழவி.

" ஓபாமா வருவாரா... இல்லை அதுக்கு முன்னாடி மோஹன் ஜீ கதைலே யம தர்மராஜன்
வருவாரான்னு தெரியல்ல........ " என்றேன்.

டிரிங்க்...டிரிங்..... வாசலில் காலிங் பெல்....

:இருங்க....யாரு வந்திருக்காகன்னு தெரியல்ல...... போய் பார்த்துட்டு வர்றேன்.

"யாரு ?""

" :இட்லி வந்துருக்குது. ஆஹா..வாழை இலையிலே வந்திருக்கு....சூடா ...சாப்பிடுங்க முன்னாடி...."


" யம தர்மராஜன் வல்லையா ? அவராத்தான் இருக்கும்னு நினச்சேன்."

"அவன் 10..10.2012 அன்னிக்குத் தான் வருவார் போல இருக்கு ? "

" ஏன் அப்படி ? சனிக்கிழமையாச்சே ! ஆமாம். த்வாதசி வேற... ஸ்திர வாரம் இல்லையோ ?
அப்ப அவரு வருவாரா !! "

' அது தெரியாது. ஆனா
அப்பதான் உங்க ஊர் காரரு ஆரண்ய நிவாஸ் எழுதராறாம்."

" தேகம் அனித்யம் மரணம் நிச்சயம். சிவனை மறவாதிரு மனமே... "

" சிவபாதத்தை அப்படின்னு சொல்லுங்க...""

சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.in

G.M Balasubramaniam சொன்னது…


கோலம் வரையத் துவங்கு முன்பே இன்னும் சில புள்ளிகள் வைக்கப் பட்டு விட்டன. புள்ளிகள் அதிகமாகும்போது கோலம் வரைவதும் சிரமம். இருக்கும் புள்ளிகளை ஒழுங்காய் இணைக்க வேண்டும் அல்லவா. மூவரும் சேர்ந்து கண்ணாமூச்சி ஆடுவார்களா. பொறுத்திருந்து பார்ப்போம்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

சூரி சார் ......



வரும் 10.11.12 அன்று வரும் எனக்கும் எமனுக்கும் ஓரே ஒரு வித்யாசம் தான் ..அவன் ஒரே அடியாய் உயிரை எடுப்பான் ஆனா நான் கொஞ்சம்...கொஞ்சமா உயிரை எடுப்பேன்....கதை..ஜோக்னு சொல்லிண்டு !

sury siva சொன்னது…

என்னதான் இருந்தாலும் நானும் நீங்களும் ஒரே ஊர் இல்லயா ?
அந்த பந்துத்வம் எப்படி எங்கே போயிடும் ?

சீக்கிரம் நீங்க வாங்கோ.... ஆனா அந்த யம தர்ம ராஜனை ஒரு இரண்டு மாசம்
பிரிவிலேஜ் லீவிலே போகச்சொல்லிட்டு, அடுத்த ரவுன்டிலே வரலாம் அப்படின்னு
ஒரு ஈ மெயில் அனுப்பிச்சுடுங்க...

சுப்பு தாத்தா.
ஆங்கரை.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஆஹா...அனுப்பிச்சுட்டேன் ....எமனுக்கே ஈமெயில் ஆ என்று

பல்லை நற நற என்று கடித்துக் கொண்டான் ...'போடா புண்ணாக்கு ' என்றேன் நான் மனத்துள் !

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சுவர் காலண்டர் பின்னோக்கி போன பிரமை.

கதை விரைவாகிவிட்டது !

Matangi Mawley சொன்னது…

There is visible difference in the style of the story... really interesting! Can't wait to read how it ends...

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை!படிங்க.. படிங்க... படிச்சிக்கிட்டே இருங்க

மோகன்ஜி சொன்னது…

சுப்பு சார்! கலக்குறீங்க!

மோகன்ஜி சொன்னது…

ஆமாம் G.M.B சார்! புள்ளிகள் பலவாக கோலம் பெரிசாகுமோ என்னவோ? மூவார் என்ன செய்யிறார்னு பார்ப்போம்.

மோகன்ஜி சொன்னது…

மூவார்!
//அவன் ஒரே அடியாய் உயிரை எடுப்பான் ஆனா நான் கொஞ்சம்...கொஞ்சமா உயிரை எடுப்பேன்...//

அது....!

மோகன்ஜி சொன்னது…

மாற்றுப்பார்வை ! வருகைக்கு நன்றி

மோகன்ஜி சொன்னது…

நன்றி இராஜேஸ்வரி மேடம்! அடுத்து காலம் இறங்குபவர் மூவார்! ஆரத்தி கரைச்சு வைங்க!

மோகன்ஜி சொன்னது…

மாதங்கி! ஸ்டைல் வேற வேற இருக்காதா பின்னே?

இந்தப் பதிவை எழுதினது எம்.ஜீ.ஆர்ன்னா அடுத்டு வரப் போறது ரஜினி ! இருக்கு பாருங்க!

Aathira mullai சொன்னது…

ரிஷபன்.. இப்ப என்ன சொல்றீங்கன்னு சத்தமா கேட்க நினைத்து..படிச்சுட்டே வந்தேன்.

சொல்லாமல் சொல்வது என்பது இதுதானா. சொல்லாததும் ஆர்வமா படிக்கும்படி இருந்தது.

பெயரில்லா சொன்னது…

எல்லாரும் பாராட்டிடாங்க. இனி நான் என்ன சொல்றது மோகன்ஜி. ஏற்கெனவே இரண்டு முறை படித்து விட்டேன்.
ரசித்த வரிகள்னு சொல்லணும்னா கதையே எடுத்து பின்னூட்டத்துல போட வேண்டியதுதான். பிரமாதம். பதிவுலகில் நிறைய பேர் எழுதுவதை படிக்கும்போது எப்படி இப்படி எல்லாம் எழுதுகிறார்கள் என்று மாய்ந்து மாய்ந்து போய்விடுவேன். நீங்களும் அதில் ஒருவர். வாழ்த்துக்கள்.

இந்த சுழல் தொடர் ஐடியா சுவாரசியமா இருக்கே. இது போல இனியும் தொடருங்கள். படிக்கும் எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

பெயரில்லா சொன்னது…

முதல் பின்னூட்டம் முதல் பகுதிக்கு போட வேண்டியது. இங்கேயே போட்டுவிட்டேன்.

இந்த பகுதி ரிஷபன் அவர்கள் எழுதியது என்று முன்கூட்டியே சொன்னதினால்தான் தெரிகிறது. கதையை ஓட்டம் பிரமாதமாக தொடர்ந்திருக்கிறது. உன்னிப்பாக கவனித்தால் எழுத்து நடையில் மட்டும் வித்தியாசம் தெரிகிறது. நீங்கள் தொடர்ந்திருந்தால் இந்த பகுதியில் எதாவது ஒரு சித்தர் பாடலோ அல்லது வேறு எதாவது பதிகமோ கதையில் நுழைந்திருக்கும். :))
'தொலைச்சவங்க' இந்த ஒரு வார்த்தையை கதையின் உயிர்நாடியாக்கி விட்டார். //தொலைச்சவங்களுக்குதான் அருமை தெரியும்// இந்த வரிகளை படித்தபோது கண் கலங்கி விட்டது.

அடுத்து பகுதியில் கதையின் முடிச்சு எப்படி அவிழ போகிறது என்று மிகவும் ஆவலாக இருக்கிறது.

சிவகுமாரன் சொன்னது…

அடேங்கப்பா ... என்னா விறுவிறுப்பு !
என்ன நடந்தது என்று அறிய மனது தவிக்கிறது.

கதையின் போக்கு கொஞ்சமும் மாறாமல் தொடர்ந்திருக்கிறீர்கள் ரிஷபன் சார்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதிரா!
//சொல்லாமல் சொல்வது என்பது இதுதானா.//
அடடா... நோட் பண்ணுங்கப்பா..நோட் பண்ணுங்கப்பா..

அழகாச் சொன்னீங்க ஆதிரா!

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி!

//ரசித்த வரிகள்னு சொல்லணும்னா கதையே எடுத்து பின்னூட்டத்துல போட வேண்டியதுதான். //

எப்பிடிம்மா இப்படி டாப் கியர்ல தூக்குறீங்க?
நானில்லே மாய்ந்து மாய்ந்து போறேன்..

தொடர்வதற்கு நன்றி மீனாக்ஷி.

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள மீண்டும் மீனாக்ஷி!

//முதல் பின்னூட்டம் முதல் பகுதிக்கு போட வேண்டியது. இங்கேயே போட்டுவிட்டேன்.//

மாப்பிள்ளை வீட்டு சார்பா வந்திருந்தா என்ன பொண்ணு வீட்டு சார்பா வந்திருந்தா என்ன?

விருந்து உங்களுக்காகத்தான்..
//

மோகன்ஜி சொன்னது…

சிவா!
ரிஷபன் சார்ன்னா சும்மாவா,கொக்கா??
அவரின் இயல்பான நடை.. மென்மையாக..

அடுத்து களம் இறங்குவது அதிரடி ஆட்ட நாயகன் மூவார்! சனிக்கிழமை எல்லாரும் எண்ணை தேச்சு குளிச்சிட்டு லேப்டாப்பும் கையுமா இருங்கோ...

என்னா பில்டப்பு?!

நிலாமகள் சொன்னது…

இருட்டில் ப‌ழ‌கிக் கொள்ளும் க‌ண்க‌ள் போல் தொலைத்த‌தும் தொலைந்த‌தும் ம‌ச‌ம‌ச‌ப்பாய் புரிகிறாற்போல‌... நீங்க‌ விதைத்த‌து செடியாகிடுத்து; அடுத்த‌ புத‌ன் ம‌ர‌மாகுமா ப‌ழ‌மே காய்ச்சுடுமா.. ?! த‌ட‌க் த‌ட‌க் ம‌ன‌சோட‌ எண்ணெய் ச‌ட்டியில் நாங்க‌ 'க‌ற‌க் முற‌க்' செய்த‌ப‌டி.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

எண்ணெய்க் கிண்ணத்தோட அகஸ்தியர் நடந்துபோறது தெரியுது ரிஷபனைப் படிச்சு முடிக்கும்போது.

பந்து மூவார் முத்துக்குத் திருப்பி தூக்கி அடிச்சிருக்காரு.அவ்வளவுதான் சொல்ல முடியுது.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய நிலா! என்ன அழகாய் உருவாகப் படுத்துகிறீர்கள்? Amazing!
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன்... அகஸ்தியரா? யோசித்து பார்க்கிறேன்.. தோளில் ஒரு குழந்தையுடனும் கையில் கமண்டலத்துடனும் நடந்து செல்லும் அகஸ்திய முனியை!

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்.

நிலாமகள் சொன்னது…

தங்கள் அன்பான ஆசிகளுடன் இனிதே கழிந்தது பண்டிகை.

உங்க பட்டறையில் பழகிய அனுபவம் தான்... இருப்பினும் பாராட்டு வெகு ஊக்கமளிப்பதாய்!