புதன், மே 01, 2013

தத்த்தி




இன்னமும் இந்த தத்த்திப் பயலை எங்கே காணோம்?

காலிப் பொடிமட்டையை மத்தியானத்துலேயிருந்து எவ்வளவு தடவை தான் முகர்வது? தீனதயாளு சாருக்கு கோபமாய் வந்தது. ஒரு வருஷமாய் இந்தத் திண்ணைதான். காலு விழுந்தப்புறம் எல்லாரோட சகாயமும் இல்லாமல் ஏதும் முடிகிறதா? போதாததற்கு தெரிந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராய்க் கழன்று கொண்டு விட்டார்கள். தயாளு பேச ஆரம்பிச்சா விடிஞ்சிரும்ன்னு புது பிராபல்யம் வேறு. ஏதோ ஆஞ்சநேயனுக்கு பண்ணின பக்தியில் அய்யாதுரையும், தாசரதி என்கிற தத்த்தியும் வந்து போய்க் கொண்டிருக்கிறார்களோ பிழைத்தோமோ என்று தயாளுசார் சந்தோஷிப்பது வழக்கம்.

புல்லட் வண்டி அதிர்கிறது.. அய்யாதுரை தான் வரான்...

எப்படி சார் இருக்கீங்க?” பிளாஸ்டிக் பையில் இருந்த நாலு ஆப்பிளையும், ஒரு கட்டு தையலிலையையும் திண்ணையில் வைத்தார் அய்யாதுரை. அய்யாதுரைக்கு தயாளுசார் ஒன்பதாம் வகுப்பில் கணக்கு வாத்தியார்.

என்ன அடி வாங்கியிருப்பான்? இல்லாத வீட்டுப் பையன்.. எதனாலோ தயாளுசார் அய்யாதுரைக்கு இலவசமாய் ட்யூஷன் எடுத்து பரிட்சைக்கு பணம் கட்டி ஆதரவு செய்தது இப்போது தலைக்கு மேல் காய்க்கிறது. க்ஷேமமாய் இருக்கட்டும்.. இந்த நாஸ்திக வாதம் மட்டும் அவனுக்கு இல்லைன்னா எப்படி இருக்க வேண்டியவன்? கட்டட காண்ட்ராக்ட் வேலையில் துட்டை அரித்து கொட்டியாகிறது..

பண உதவியாகட்டும் சரீர பிரயாசை ஆகட்டும் அய்யாதுரை  அவருக்கு  ஒரு குறையும் வைத்ததில்லை. ஆனால் தயாளுசார் விடாமல் சாமி சடங்கு என்று பேசும் போது பதிலுக்கு கிண்டலாய் பதில் சொல்லப் பழகிவிட்டார் அய்யாதுரை. இந்த ஒரு வருடமாய்  அய்யாதுரையை திட்டுவதையும் குறைத்துக் கொண்டு விட்டார் தயாளு.
யாருமற்று, தம்பியின் பிள்ளை வீட்டுத் திண்ணையில் தனியாளாய் கிடக்கும் போது என்ன தர்க்கம் வேண்டிக் கிடக்கிறது ?..கபிராஜ வல்லபா.. சத்குரோ..

அப்ப கிளம்பறேன் சார்! என்ற அய்யாதுரை நினைவுக்கு வந்தவராய் சட்டைப் பையில் இருந்து பொடிமட்டையை எடுத்துக் கொடுத்தார்.

மகராஜனா இருடா?”  புல்லட் புட்புட்ட்.. என்று பறந்தது.. தயாளு சாருக்கு பொடியை போட்டுக் கொள்ளக் கூட தோன்றவில்லை.. என்ன பாசம்.. என்ன முன்யோசனை.. நெகிழ்வாய் இருந்தது.. பாவிக்கு பகவத் நிந்தை மட்டும் இல்லையின்னா....

’மாமா.. மாமா  தாசரதி அரக்கபரக்க ஓடிவந்தான்.. எப்போ வராம் பாரு?

தாசரதி என்றால் அங்கு யாருக்கும் தெரியாது. கொஞ்சம் மந்தமானவன் என்பதால் எல்லோரும் தத்த்தி தத்த்தி என்று அழைத்து அதுவே பேராகி விட்டது. நாலுவருஷம் முன் அவன் தாயாரும் போய் சேர்ந்தாள். தனிக்கட்டை தான். கொஞ்சம் குட்டை தான். யாரும் பெண் கொடுக்கவில்லை. ராயரின் ரைஸ் மில் மாவு மிஷினில் மாவரைக்கும் வேலை.. மதியம் ஒரு மணிக்கு மில்லை கட்டிவிடுவார் ராயர். ஊர்க்கோடியில் இருக்கும் அவரது நிலத்தில் துளசி செடிகளுக்கு தண்ணீர் விடுகிற வேலையும் தத்த்திக்கு உண்டு.

என்னடா டவுனுக்கு போய்ட்டியா? ஆளையே காணும்?”.

எங்கயும் போகல்லை மாமா. ரேழில தூங்கிட்டேன். தத்திக்கு நாக்கு லேசில் மடியாது. பேச்சு குழறலாய்த் தான் இருக்கும்..

நல்லா தூங்கினே போ.. வெளக்கு வைக்கிற நேரம் பாத்தியோ?”

அத விடுங்கோ. இதக் கேளுங்கோ மாமா. கேட்டா எழுந்து கூத்தாடுவீங்க

என்னடா பீடிகையெல்லாம் பலமா இருக்கு? நீ தூங்குற அழகைப் பார்த்து எந்த சுந்தரியாவது கல்யாணம் பண்ணிக்கிறேன்னுட்டாளா?”

:இனிமே எனக்கெதுக்கு மாமா கல்யாணம்? சொப்பனம் கண்டேன் மாமா.. சித்த மின்னே... கனவுல யாரு வந்தா தெரியுமா? ஆஞ்சநேயராக்கும்.

என்னது? ஆஞ்சநேயராஅடடா.என்ன பாக்கியமடா உனக்கு! போக்கத்தவனே!. நானும் தான் எத்தனை ஸ்லோகம் சொல்றேன் எத்தனை பஜனைப் பாட்டா ஹனுமான் மேல பாடுறேன்.. ஒரு நாளும் ஸ்வாமி சொப்பனத்துல வந்ததில்லையே? தண்ணில மூழ்கறாப் போல,நாயி துரத்துறாப்பலயும் தானே எனக்கு வருது?”

பெருமையாய் சிரித்துக் கொண்டான் தத்த்தி

சொல்லு. சொப்பனத்துல பகவான் என்ன பண்ணினார்?” ஆர்வ மேலீட்டால் குரல் உயர்த்திக் கேட்டார் தயாளு.

நம்ம ராயர் தோட்டத்துல பெரிய பாறை இருக்கில்ல? அதுல சாஞ்சி உட்கார்ந்திருந்தார். நான் துளசி பறிச்சிகிட்டிருக்கேன். இங்க வாடா தத்த்தின்னு கூப்பிட்டார்..

பாக்கியம்டா? தத்த்தின்னா கூப்பிட்டார்?”

ஆமாம் மாமா.. ஏதும் ஸ்லோகம் தெரியுமா?ன்னு கேட்டார் மாமா. எனக்குதான் எதுவும் சட்டுன்னு வாய்க்கு வரல்லே.."

முட்டாப் பயலே.. அஞ்சிலே ஒன்று பெற்றான் சொல்லிக் கொடுத்திருக்கேன் இல்லே? அத சொல்லித் தொலய வேண்டியது தானே?”

ஹாங்.. வரும் வரும்.. நீங்க அவர் எதுத்தாப்பல நின்னிருந்தீங்கன்னா அப்போ தெரிஞ்சிருக்கும்.. பெரிசா பச்சையா உட்கார்ந்திருந்தார். வெலவெலன்னு வந்துடுத்து.

அது சரி. பெருமாளைப் பார்த்தா யாருக்கு பேச்சு வரும்?.. பச்சையா இருந்தார்ன்னியே.. கிரீடமெல்லாம் இருந்ததா?”

அதெல்லாம் இல்லை தலேல முடி கொண்டையாட்டம் கட்டி இருந்தது.. துளசி மாலை சுத்தியிருந்தது.

ஹாஹா... சமய சஞ்சீவி வந்திருக்காருடா.. என்ன கொடுப்பினைடா உனக்கு? அப்புறம்?” தயாளு பரபரத்தார்.

என் தூக்குசட்டியிலே பெருமாள் கோவில் தத்தியன்னம் இருந்தது. அதைக் குடுன்னு வாங்கி ஒரே கவளமா வாயிலே போட்டுகிட்டார்.இந்தப் பாறை சாஞ்சிக்க வாட்டமா இருக்குடான்னார்

ஹே ராமதூதா! அப்புறம்?”

பாறை மேல சாஞ்சிக்கிட்டு, நல்லா காலை நீட்டி, இந்தக் காலை சித்த அமிக்கி விடுடான்னார். நானும் பயந்து பயந்து பிடிச்சிவிட்டேன். கொஞ்ச நேரத்துல காலை இழுத்துகிட்டு சட்டுன்னு எழுந்தார். எனக்கு டவுனுக்கு போகணும்.. சமர்த்தா இருன்னு தலையில தட்டினார்.

தயாளு தத்த்தியின் தலையைத் தடவி கண்ணில் ஒற்றிக் கொண்டார். ஆஹா.. நேர்ல பாக்குறாப்புலயே இருக்கே.. சொல்லு சொல்லு..

அப்பன்னு பார்த்து நம்ம அய்யாதுரை புல்லட்டுல அங்கே வந்தார்.

அந்த கடங்காரன் அங்க எங்க வந்தான்?”..

என்னடா தத்த்தி! டவுனுக்கு போறேன் வரயா.. நாலு டியூப் லைட் எடுத்துக்கிட்டு வரணும்ன்னு சத்தமா கேட்டார் அய்யாதுரை

ஸ்வாமி ஒண்ணும் சொல்லலையா?”

நானே பதிலாஒண்ணும் சொல்லலியே... உங்களை நான் மறுபடி பார்க்க முடியுமான்னு ஹனுமாரைக் கேட்டேன். சிரிச்சார்.. நீ ரொம்ப புண்ணியம் பண்ணியிருந்தா என் வால் மட்டும் கண்ணுக்கு தெரியும்னார்.. ஒரே தாவலா தாவி அய்யாதுரை புல்லட்டு பின்சீட்ல உட்கார்ந்துட்டார்.. அப்புறம் என் கண்ணுல அவர் தெரியலே.தனக்குப் பின்னால் ஹனுமார் அமர்ந்திருப்பது தெரியாமல் அய்யாதுரை வண்டியைக் கிளப்ப, அதுவும் புழுதியடிச்சிக்கிட்டு  நகர்ந்துட்டுது.

அய்யாதுரை பரம நாஸ்திகனாச்சேடா. போயும்போயும் ஸ்வாமி அவனோடயா போகணும்? அது சரி! என்னத்துக்கு இப்போ சிரிக்கிறே?”

மாமா.. ரொம்ப புண்ணியம் பண்ணியிருந்தா என் வால் மட்டும்  தெரியும்னாரே ஸ்வாமி.. அப்படி புண்ணியம் பண்ணினவா பார்த்திருந்தா, வண்டில போற அய்யாதுரை வாலோட போறாப்புல தெரிஞ்சிருக்கும்! தத்த்தி கைக்கொட்டி சிரித்தான்

போறும்.. அவன் சூத்தாமட்டை கெட்டக்கேட்டுக்கு வாலு ஒரு கேடு!

இருவரும் வாய்விட்டு சிரித்தார்கள்..

என்னவோடா.. உங்கம்மா பண்ணின பாக்கியம் இன்னைக்கு உன் கனவுல தரிசனம் காமிச்சிட்டார் ஹனுமார். உனக்கு இனி நல்ல காலம் தாண்டா தாசரதி.. அட என்னடாது..என் காலைப் பிடிக்கிறே?ஸ்வாமி காலைத்தொட்ட கைடா உன்னுது. என் காலைத் தொட்டு என்னை பாபியாக்கிடாதே!

ஸ்வாமி எதுக்கு டவுனுக்கு போயிருப்பார் மாமா?”

உம்... காலேஜில வாசிக்க..  என்ன கேள்வி கேக்குறாம் பாரு?”

ஸ்வாமிக்கெல்லாம் ஏதும் பள்ளிக்கூடம் படிப்புன்னு உண்டா மாமா?”

தயாளு சாருக்கு ஆயாசமாய் இருந்தது தத்த்தியின் கேள்வி.. இவனைத் இனி திட்டக் கூடாது. ஸ்வாமியே அவனைத் தேடி வந்திருக்கிறார். லேசுபட்ட விஷயமா?

தாசரதி.. ஹனுமனுக்கு நவவியாக்ரண பண்டிதன்னு ஒரு பேர் இருக்கு தெரியுமா?. அவர் பாலகனா இருக்கறப்போ நேரா சூரியன் கிட்டயே போய் எனக்கு வேதம் சாஸ்த்ரம்லாம் இப்போவே சொல்லிக் கொடுன்னு அடம் பிடிச்சார். எனக்கு இப்போ நேரம் இல்லே.. என் வேலையைப் பார்க்கணும் போன்னுட்டார். நானும் கூடவே வரேன்னார் ஹனுமார். நான் போற வேகத்துக்கு ஈடா உன்னாலே பின்னாடி கூட வர முடியாது. அப்படி வந்தாலும் வித்தையை சொல்லிக்கிற சிஷ்யன் குருவுக்கு முன்புறமா இருந்து வாய்ப் பொத்தி கேட்கணும்.. உன்னால எப்படி முடியும்? வேற குருவைப் பார்த்துக்கோன்னு சொல்லிட்டு ஸஞ்சாரம் பண்ணத் தொடங்கிட்டார். ஹனுமாரோ நிமிஷமா சூரியனுக்கு முன்னுக்கா வந்து கையால் வாயை பொத்திக்கிட்டு ரிவர்ஸுலேயே ஸூர்யன் வேகத்துக்கு ஈடுகொடுத்து நடந்தபடி ஒரு நாளைக்குள்ளே சகல வேத சாஸ்த்ரத்தையும் கத்துகிட்ட மகானுபாவர்டா அவர்.

தத்த்தி கிளம்பி போய் விட்டான். ஊரெல்லாம் அவன் கனவு ஒரே  பேச்சாய் போய் விட்டது. தாசரதியின் முகத்துக்கு ஒரு தனி சோபை வந்து வலம் வர ஆரம்பித்தான்.

கொஞ்ச நாளில் தயாளு சாருக்கு உடம்புக்கு  ரொம்பவே முடியாமல் போய் செத்துப் பிழைத்தார். டவுன் ஆஸ்பத்திரியில் பலநாட்கள் பேச்சு மூச்சில்லாமல் கிடந்தவரை நிறைய செலவு செய்து கரை சேர்த்ததென்னவோ அய்யாதுரை தான். எல்லாம் மெல்ல உணரத் தொடங்கிய தயாளுவுக்கு அய்யாதுரை வாலுடன் நடந்து போவது போலவே பிரமை ஏற்பட்டது.. தாசரதியோ கண்ணிலேயே படவில்லை. ஒருவாறாய் மீண்டும் பழைய திண்ணைக்கு வந்து சேர்ந்தார் ஈர்க்குச்சி போல..
  

இப்போதெல்லாம் காசிராயர் தோட்டம் எவ்வளவோ மாறி விட்டது. ஹனுமார் சாய்ந்து அமர்ந்த கல்லை சுற்றி கர்ப்பக்ருஹம் எழுப்பப்பட்டு, ஸஞ்ஜீவி பர்வதத்தை தூக்கிக் கொண்டு பாயும் பஞ்சலோக விக்ரகம் பிரதிஷ்டையாகி ஆறுகால பூஜையோடு அமர்க்களப் படுகிறது. கர்ப்பக்ருஹத்தின் முன்பாய் ஒரு பெரிய மண்டபம், கூரையில்  பல ஓவியங்களும்,தூண்களில் சுதைபொம்மைகளும் வண்ணமயமாய் காட்சியளிக்கிறது. கோவிலே கூட்டம் அலைமோத திணறிக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு வங்கியின் உபயத்தில் ஒரு பெரிய ஸ்டீல் உண்டியல் வேறு.

மண்டபம் தாண்டி கொடிமரம். அதற்குமுன்பாய் ஒரு புல்லட் வண்டி சந்தனக்காப்பும், மாலைகளுமாய் நின்று கொண்டிருக்கிறது. இது நம்ம அய்யாதுரையின் புல்லட் அல்லவா? திருமதி அய்யாதுரை தன் புருஷனிடம் இல்லாத பக்தியையும் சேர்ந்து பெற்றிருந்தாள். தாசரதியின் இன்பக்கனாவின் விவரங்கள் அறிந்து அவள் கண்ணீர் உகுத்தாள். நம்பிக்கையே இல்லாத அய்யாதுரையின் வண்டியில் பின்னால் அமர்ந்து ஸ்வாமி போனது தன் பக்திஸ்ரத்தையால் தான் என்று நம்பினாள். கோவில் கைங்கர்யம் துவங்கியவுடனே அனுமார் அமர்ந்த பைக்கை கோவிலுக்கு அளித்து அதற்கு தீரா பெருமை தேடித் தந்தாள். அய்யாதுரையின் கடவுள் மறுப்பு, கட்டிய மனைவியிடம் செல்லுபடியாகவில்லை.. புல்லட்டுக்கு தனி சன்னதி அமைக்க கோவில் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றிநன்கொடை வசூலிக்கவும் முடிவாயிருக்கிறதாம்

லேமினேட் செய்த படங்கள், துளசி மாலைகள், கேசட், ஸ்தோத்திர புத்தகங்கள் ,தாயத்துகள் விற்றுதீர்ந்தன. தெற்கு கோடியில், எலக்ட்ரிக் டமாரம் மிரட்டிக் கொண்டு நிற்கிறது. அதனருகில் உள்ளே இருக்கும் ஹனுமனின் பெரிய போட்டோ.. ஸ்வாமியின் காலடியில் இருபது நாள் தாடியுடன் கைகள் கூப்பி வணங்கியபடி ஒரு தாட்டியான சாமியாரின் போட்டோவும் ஒருசேர இருந்தது. ... அட.. இவரை எங்கோ பார்த்தாற்போல் அல்லவா இருக்கிறது? நம்ம தத்த்தி தாசரதியா?
அபச்சாரம்.. தாசரதி இப்போது பெரிய மகான் என்று கொண்டாடுகிறார்கள்.. தத்திரிஷி ஸ்வாமிகள் எனும் நாமகரணத்தோடு அருள்பாலிக்கிறார். இப்போதெல்லாம் அதிகம் பேசுவதில்லையாம்.

ஹனுமத் ஜெயந்திக்கு பெரிய வடதேர் அனைவரையுமே பரவசப் படுத்தி விட்டதாம்.. தேருன்னா வடம் இருப்பது சகஜம் தானே என்கிறீர்களா? அது வடை தேர்ங்க.. தேர்முழுதும் மிளகு வடையாலேயே அலங்கரிக்கப்பட்டு மணக்க மணக்க அசைந்து வந்த அழகைப் பார்க்க உங்களுக்குதான் கொடுத்து வைக்கவில்லை.. அடுத்த வருஷம் வாரும். இந்த வடைத்தேர்  கூட ஹனுமன் கனவில் தந்த கட்டளை என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

நடமாட்டம் குறைந்து போன தீனதயாளு காதுக்கு அவ்வப்போது தத்திரிஷி ஸ்வாமிகள் பற்றிய தகவல்கள் வரும்.. நாட்பட நாட்பட தாசரதியின் கனவைப் பற்றி அவருக்கு ஏதோ உவ்வாமுள்ளாய் உறுத்திக் கொண்டுதான் இருக்கிறது. அதற்காக அந்த பெருமாள் இல்லைன்னு ஆகிவிடுமோ?ஸ்வாமி அவர் கார்யத்தை எதையோ, யாரையோ வியாஜ்ஜியமாய் வைத்து நடத்திக் கொள்கிறார். எதுக்கு வேற எண்ணமும்  பொச்சரிப்பும்.?. போன வாரம் வடைத்தேர் வீட்டைக் கடந்து வீதியுலா போனபோது வீசிய வாசனை இன்னமும் மூக்கிலே துளைக்கிறது.. இந்த தத்த்தி.. அபச்சாரம்...தத்திரிஷி ஸ்வாமிகள் பழகின தோஷத்துக்காவது நாலு வடையை தினத்தந்தி பேப்பர் தூண்டில் மடித்து அனுப்பி வைக்கப்படாதோ? 


90 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

தாசரதி என்கிற தத்த்தியும் தத்திரிஷியாகி -அருமையான கதையுடன் நீண்ட நாட்களுக்குப்பிறகு வானவில்லாய் வருகை தந்த அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்..
வாழ்த்துகள்..

கௌதமன் சொன்னது…

Welcome back. Best wishes!!

கோமதி அரசு சொன்னது…

போன வாரம் வடைத்தேர் வீட்டைக் கடந்து வீதியுலா போனபோது வீசிய வாசனை இன்னமும் மூக்கிலே துளைக்கிறது.. இந்த தத்த்தி.. அபச்சாரம்...தத்திரிஷி ஸ்வாமிகள் பழகின தோஷத்துக்காவது நாலு வடையை தினத்தந்தி பேப்பர் தூண்டில் மடித்து அனுப்பி வைக்கப்படாதோ? //

தத்திரிஷி ஸ்வாமிகள் தீனதாயள் மாமாவுக்கு நாலுவடை அனுப்பி இருக்கலாம்.
கதை அருமை.

geethasmbsvm6 சொன்னது…

// க்ஷேமமாய் இருக்கட்டும்.. இந்த நாஸ்திக வாதம் மட்டும் அவனுக்கு இல்லைன்னா எப்படி இருக்க வேண்டியவன்? கட்டட காண்ட்ராக்ட் வேளையில் துட்டை அரித்து கொட்டியாகிறது..//

ஹிஹிஹி, அப்பாதுரை நினைவில் வந்தார். :))))

இந்தக் காலத்துக்கு ஏற்ற கதை. உண்மையில் நடப்பதும் இது தானே! உண்மையோ பொய்யோ தாசரதி எப்படியோ பெரிய ஆளாகி முன்னாள் வாத்தியாரையும் மறந்தாச்சு. இது நடப்பதே. நடந்ததும், நடக்கக் கூடியதும் இதுவே. இதனாலேயே பலருக்கும் கடவுள் குறித்த அவநம்பிக்கைகள், அவதூறுகள், என்ன செய்யலாம்! ஒரு நல்லது நடக்க வேண்டுமெனில் இப்படியான கெடுதல்களும் கூடவே இருந்து தான் தீரும் போல! :(

கெளதமன் சாரின் +இல் பார்த்தேன் சுட்டியை. :))))

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கதை... தொடர்ந்து எழுதவும்...

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள மோகன்ஜி...

வணக்கம்.

கிடட்த்தட்ட முப்பதாண்டுகள் பின்னே போய்விட்டேன். அப்போதெல்லாம் வெளி வந்துகொண்டிருந்த கதைகளினுர்டாக இதுபோன்ற பக்தியும் அதற்கென்று உரித்தான நடையுடன் அதாவது பிராமணப் புழங்கு சொற்களுடன் கதைகள் வரும். தி.ஜானகிராமன்...விமலா ரமணி.. வாஸந்தி...இன்னும் பலர் நினைவில் இல்லை.. அற்புதமான கதைப்பொருண்மையுடன் வரும்.

இத்தகைய கதைகளைப் படிக்கையில் எந்தவிதமான சிக்கலும் இல்லாமல் மனதை லேசாக வைத்துக்கொண்டு ஆனந்தப்பட்டுக் கொண்டே படிக்கலாம். ஏனென்றால் இதுபோன்ற கதைகளுக்குப் பயன்படுத்தும் நடையின் தன்மை அப்படி.

சட்டென்று மனசு தளர்வாகிவிட்டது இப்போது இதை வாசித்ததும். பழைய நினைவுகள் வந்துவிட்டன. எத்தனை கதைகள் இதுபோன்று அப்போதெல்லாம். இப்போது இப்படி எழுதுவாரில்லை. கதைகளில் ஒரு அன்னியோன்யம் இல்லாமல் போய்விட்டது.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் ஒரு நல்ல அனுபவிக்கத்தக்கக் கதையைத் தந்திருக்கிறீர்கள். அனுபவித்தேன். ரொம்பவும் அனுபவித்தேன். கதை முடிப்பு பழகின தோஷத்துக்கான நாலு வடையை தினத்தந்தி பேப்பர் துண்டில் மடித்து வைத்து அனுப்பப்படாதோ.. என்ன ஒருமுடிப்பு இது?

மோகன்ஜி மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எனக்கு இன்று ஒரு நிறைவான மகிழ்ச்சி இக்கதை வாசிப்பில் நிலைக்கிறது. நிறைகிறது. நன்றிகள்.

அப்பாதுரை சொன்னது…

வந்தாலே அதிரடியாத்தான் வருவீங்க போல.
அவசரமா படிச்சாச்சு. மறுபடி வரேன்.

ஸ்ரீராம். சொன்னது…

என்னுடைய சிறுபராயத்தில் ஒரு 'மௌனச்சாமி'யைப் பார்த்திருக்கிறேன். அழுக்கு உடை. கொடுப்பதைச் சாப்பிடுவார் கொடுக்கா விட்டால் எதுவும் கேட்பதெல்லாம் கிடையாது. இங்குமங்கும் நடந்து போவார். கை ஜாடைதான். காவி வேட்டி என்பதால் சாமி. ஊமை (என்றுதான் கடைசிவரை நினைத்துக் கொண்டிருந்தோம்) என்பதால் மௌனச்சாமி! அவர் நினைவுக்கு வந்தார்.

அது சரி..எதற்கு இரண்டு 'த்'.....!

வல்லிசிம்ஹன் சொன்னது…

எனக்கென்னவோ அய்யாதுரையோடு தயாளு சாரை ஹனுமான் ஜியும் பார்த்து ஆசீர்வதித்தாரோ என்று தோன்றுகிறது. அருமையான கதை. திண்ணைஉள்ள வீடுகள் இன்னும் இருக்கிறதா.

நிஜமாகவே இந்த தத்தி ரிஷி நாலு வடை கொடுத்திருக்கலாம்.
வெகு நாட்களாச்சு இது போலக் கதை படித்து. மிகவும் நன்றி மோகன் ஜி.

மோகன்ஜி சொன்னது…

உங்கள் பாராட்டுக்கு நன்றி இராஜேஸ்வரி மேடம். மிகுந்த பணிச்சுமை காரணமாயும், வரிசையான குடும்ப நிகழ்ச்சிகளாலும் வலைக்கு வர இயலாது போயிற்று. இனி தொடர்ந்து எழுதுவேன்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி கௌதமன் சார்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி கோமதி அரசு மேடம்!

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம். உங்கள் அன்புக்கு நன்றி.

/ஹிஹிஹி, அப்பாதுரை நினைவில் வந்தார். :))))/
அடடா அப்படி ஒண்ணு இருக்கோ? உங்களுக்கு தெரியுமா? நம்ம அப்பாஜியை கதாநாயகனாய் வைத்து ஒரு கதை எழுதி பாதியில் தொங்கிக் கொண்டிருக்கிறது.கதை நான்கு அமைந்ததால் அதை நீட்டி முழக்கலாம் என்று வைத்திருக்கிறேன். இந்தக் கதையில் பேரென்னவோ அப்படித்தான் இருக்கிறது. மனுஷனை நான் விடுவதாய் இல்லை.

ஆண்டவனுக்கு இடைத்தரகர்கள் வெகுவாய்த்தான் முளைத்து விட்டார்கள். உண்மையான சாதுக்களும், குருமார்களும் வேறு வகை..பாமர மக்களுக்கு இதெல்லாம் வேண்டியிருக்கிறது..

விவாதம் கொஞ்சம் சூடு பிடிக்கட்டும் . அலசி ஆறப் போடுவோம்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி தி.தனபாலன்

G.M Balasubramaniam சொன்னது…


யாருக்காவது அனுமானின் வால் தெரிந்ததா. ? நம்பிக்கைகளுக்கு எவ்வளவு முகங்கள்.தெளிவான கதை நடை. பாராட்டுக்கள்.

மோகன்ஜி சொன்னது…

ஹரணி சார்! நலமா? உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் ரசனையை மிக அழகாய் வெளிப் படுத்தியிருக்கிறீர்கள். என் பிற கதைகளையும் நேரம் இருக்கும் போது படியுங்கள். உங்கள் ரசனைக்கு அவை ஒத்துப் போகும் என நம்புகிறேன்.சந்திப்போம்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க அப்பாதுரை!

//வந்தாலே அதிரடியாத்தான் வருவீங்க போல.
அவசரமா படிச்சாச்சு. மறுபடி வரேன்//

மறுபடியும் ஆரம்பத்துல இருந்தா?!

வாங்க சகோ..

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஸ்ரீராம் நலம் தானே? நீங்கள் குறிப்பிட்ட மௌன சாமியார் போன்றோர் உபத்திரமில்லாத வகை.. நம்ம தத்திரிஷி போன்றவர்கள் சாமி பேரில் செட்டிலாகும் கெட்டிக்காரர்கள்.அல்லது அப்படி ஒரு சாமியாரை முன்னிறுத்தி ஒரு பெரும் கோஷ்டியே செட்டிலாகும்..

//அது சரி..எதற்கு இரண்டு 'த்'.....!//நல்லா கேட்டீங்க.. ஒருவனை அப்படி அழைக்கும் போது
உச்சரிப்பு அழுத்தமாக இருக்கும். மேலும் எக்ஸ்ட்ரா 'த்' இல்லையெனில் தலைப்பைப் பார்த்து நீங்கள் தத்தி தாண்டி சென்று விடும் அபாயம் இருக்கிறது..!அதனால் தான் நக்கீரரே.

மோகன்ஜி சொன்னது…

நன்றி வல்லிசிம்ஹன் மேடம்! இந்தக் கதைக்களன் ஒரு டவுனுக்கு பக்கத்தில் இருக்கும் சிற்றூராயோ கிராமாயோ வைத்திருக்கிறேன். திண்ணை உள்ள வீடுகள் நம் கலாச்சாரத்தின் வெளிப்பாடு.அது ஒரு விருந்தோம்பல் நாகரீகம். அதெல்லாம் இப்போது நகரங்களில் ஏது?.அதை ஒரு ரூமாய்க் கட்டிப் போட்டால் வாடகையாவது வருமே எனும் எண்ணம் தான்.

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! வாங்க.. அழகாய்ச் சொன்னீங்க.. நம்பிக்கை ஒரு பற்றுக் கோடு. அது இறை நம்பிக்கையோ அல்லது தன்னம்பிக்கையோ... வாழ்க்கை பயணத்தை லகுவாக்கும். உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்!

சிவகுமாரன் சொன்னது…

கதையோடு ஒன்றிப் போய்விட்டேன். இந்த முத்தெடுக்கவோ ஆறு மாதம் மூச்சடக்கினீர்கள்?
போலி ஆன்மீகத்தை நன்றாய் சாடியிருக்கிறீர்கள். ( ஆன்மீகமே போலி தான் என்கிறார் அப்பாஜி )

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஹைய்யா..மோகன் ஜி மறுபடியும் வந்துட்டாரு....இனி நமக்கு ஜாலி தான் இந்த மாதிரி நல்ல நல்ல கதை கிடைக்கும்..
எனக்கென்னவோ இந்த கதையை படித்தவுடன், காவேரியும், கும்பகோணமும் மனதை ஏனோ வருடி விட்டுச் சென்றது...



மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! ரசித்தத்திற்கு நன்றி சிவா! அதிக வேலைப் பளு வலைப்பக்கம் வரவொட்டாமல் அடித்து விட்டது.

விவேகானந்தர் சொல்லுவார்"இந்த பாரத மண்ணில் மக்களை ஏமாற்றுவதற்கு கூட ஆன்மீகம் மூலமாகத்தான் யத்தனிக்க முடியும்." என்று. நடப்பை விவரித்தேன். கதையென்றாகிப் போனது.

மோகன்ஜி சொன்னது…

அன்பு மூவார்! நல்ல முகமனுக்கு நன்றி நண்பரே!
//கதையை படித்தவுடன், காவேரியும், கும்பகோணமும் மனதை ஏனோ வருடி விட்டுச் சென்றது...//காட்சிப் படுத்தல் உமது மனத்தின் அழகு. நானோ சரஸ்வதி கடாக்ஷம் கிடைக்குமுன் காளிதாசன் காண்பித்தத்தைப் போல் ஒன்று, இரண்டு என்கிறேன்.. உங்கள் மேதாவிலாசத்தால் நிரப்பிக் கொள்கிறீர்கள்..

கீதமஞ்சரி சொன்னது…

வணக்கம் மோகன்ஜி. மிகவும் அபாரமான ஒரு கதையுடன் இந்த வருடத்தில் அடி எடுத்துவைத்தமைக்கு நன்றி.

என்ன ஒரு அருமையான படைப்பு. அய்யாதுரை, தத்த்தி, இடையில் ஊசலாடும் தீனதயாளு சார் மூவரின் பாத்திரப்படைப்பும் பிரமாதம். தீனதயாளு சாருக்கு கால் விழாமல் இருந்திருந்தால் அவரும் தத்த்திரிஷி சுவாமிகளுக்கு சேவகம் பண்ணப் போயிருப்பாரோ என்னவோ? இயலாமை இங்கே பொச்சரிப்பாகிறது.

உவ்வாமுள் - அது என்ன முள்?

தலைப்பை மிகவும் ரசித்தேன். தத்த்தி - மிகவும் அழுத்தமாய் பொருள் தரும் விதத்தில் அழகாக யோசித்து வைத்திருக்கிறீர்கள். ஒற்றை த் - ப்ச் ! நீங்கள் சொல்வது போல் தத்திப் போகச் செய்துவிடலாம் எண்ணங்களை!

பாராட்டுகள் மோகன்ஜி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எப்போதோ ஒரு முறை வந்தாலும் இப்படி ‘பச்ச்’சென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் ஒரு பகிர்வோடு வரும் உங்களுக்கு நல்வரவு....

தத்தாத்ரி முதல் ரிஷி வரை...., அய்யாதுரை [முதலில் படிக்கும்போது அப்பாதுரை என்றே படித்தது போல இருந்தது], தீனதயாளு என மூன்றே கதாபாத்திரங்களைக் கொண்டு பின்னப்பட்ட சிறப்பான பகிர்வு.

ரசித்தேன் மோகன் அண்ணா....

எல்லாமே வியாபாரமாகி விட்டது.....

மனோ சாமிநாதன் சொன்னது…

நீண்ட இடைவெளிக்குப்பிறகு ஒரு அருமையான கதை! போலி ஆன்மீகத்தின் வேர்கள் எங்கிருந்தெல்லாம் எந்த விதங்களிலெல்லாம் வளர்கின்றன என்பதை மிக அழ‌காக காட்டியிருக்கிறீர்கள்!

ADHI VENKAT சொன்னது…

//.தத்திரிஷி ஸ்வாமிகள் பழகின தோஷத்துக்காவது நாலு வடையை தினத்தந்தி பேப்பர் தூண்டில் மடித்து அனுப்பி வைக்கப்படாதோ?//

இது தான் நிதர்சனம்....:)

அருமையான கதை அண்ணா. மனதில் பதிந்து விட்டது. வடைத் தேரின் வாசனை இங்கு வரைக்கும் வந்து விட்டது...:)


//திண்ணைஉள்ள வீடுகள் இன்னும் இருக்கிறதா.//

வல்லிம்மா ஸ்ரீரங்கத்துக்கு வந்து பாருங்கள். வம்பு பேசுவதற்காகவே தவறாமல் வீட்டுக்கு வீடு திண்ணை உண்டு...:))

நிலாமகள் சொன்னது…

ரெண்டு த் ஒன்றான போது தான் மக்களின் நாடி புரிந்தவன் அவனென தெரிகிறது. மெய்யோ பொய்யோ ஐய்யாதுரைக்கே வெளிச்சம்... மகாபிரபு தரிசனம்.நம்புபவர்க்கும் நம்பாதவர்க்குமான மகா தரிசனம். அனுமனின் திறனும் பலமும் மரபுவழி நம்மக்குமிருக்கும். அறியாதவர்களாய் இருக்கிறோம் நாமும்.

உங்க வரிகள் எனக்கும் கலர்சட்டைக்காரரைத் தான் கண் முன் கொணர்ந்தது. மறுபடி வரும்போது நமக்கு ஏதேனும் ப்ரசாதமிருக்கும்.

எல்லாப் பொச்சரிப்பும் நாலு வடையில் தீர்ந்துடும் போலிருக்கே...

புதைக்கப்பட்ட திராட்சை ரசம்.

மோகன்ஜி சொன்னது…

கீதமஞ்சரி...
கதையையும் தலைப்பையும் ரசித்தத்திற்கு வந்தனங்கள்.

//உவ்வாமுள் - அது என்ன முள்?// அது 'ஊவாமுள்' என இருந்திருக்க வேண்டும் அதை சரி செய்து விடுகிறேன். வீடு பெருக்க பூந்தடைப்பம் புதிதாக வாங்கி உப்யோகிக்கும் போது. அதன் நுனிப் பாகத்தில் ஊசிபோன்ற மெல்லிய இழைமுட்கள் தரையில் சிதறி நம் ஆடையில் ஒட்டிக்கொண்டு சருமத்தில் உறுத்தும். சட்டென்று கண்ணுக்கும் புலப்படாது..

மோகன்ஜி சொன்னது…

வெங்கட்! மிக்க நன்றி தோழமை மிளிரும் பாராட்டுக்கு..

மோகன்ஜி சொன்னது…

ரசிப்புக்கும்,நல்ல கருத்துக்கும் மிக்க நன்றி மனோ மேடம்..

மோகன்ஜி சொன்னது…

ஆதி! ரசனைக்கு நன்றி.. எனக்கெனோ திண்ணை உள்ள வீடுகள் மிகவும் பிடிக்கும்.. இனி எங்கே அத்தகு இல்லங்களில் வாழப் போகிறோம்??

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய நிலா!
//மகாபிரபு தரிசனம்.நம்புபவர்க்கும் நம்பாதவர்க்குமான மகா தரிசனம்// ரொம்ப நேரம் இந்தக் கருத்தை யோசித்துக் கொண்டிருக்கிறேன்..

//அனுமனின் திறனும் பலமும் மரபுவழி நம்க்குமிருக்கும். அறியாதவர்களாய் இருக்கிறோம் //

குழந்தை மாருதி தன் அதீத பலத்திற்கேற்ப காடுகளின் மரங்களையெல்லாம் பிடுங்கியெறிந்து ரகளை செய்வாராம். அதன் காரணமாய், அங்கிருந்த முனிபுங்கவர்களின் தவவாழ்க்கைக்கு குந்தகம் விளைந்ததால், இவன் சக்தியை இந்த பாலகன் என்றும் உணராமலே போகட்டும் என்று சபித்து விட்டனராம். அவன் வாயுகுமாரன் என்று உணர்ந்து, யாரும் எடுத்து சொன்னால் தன் பலம் உணர்வான் என்று சாபத்துக்கு அமெண்ட்மெண்ட் தரப்பட்டதாம். அற்ப மானிடனுக்கோ, 'தன் பலவீனத்தையும், அறியாமையையும் என்றும் உணராமல் போகக்கடவாய்' என்று யாரும் சாபம் கொடுத்து விட்டார்களோ என்னவோ தெரியவில்லை!

//புதைக்கப்பட்ட திராட்சை ரசம்// ஒண்ணும் சரியா பிடிபடவில்லையே!

kashyapan சொன்னது…

மோகன் ஜி அவர்களே! பக்த ராமதாசர் ராமருக்கு நவாபின் கஜானா பணத்தை எடுத்து கோவில்கட்டினார்! நவாப் அவரைசிறையிலடைத்தார்! ராமரும் லட்சுமணரும் ,ராமோஜி,லட்சுமோஜி என்ற பேயாரில் வந்து நவாப்பிடம் வரிப்ப பணத்தை கட்டினாறாம் !நவப் ராமதாசை விடுதலை செய்தார்! ராமா நான் உனக்குகொவில் கட்டினேன்! நீயோ நவாபுக்கு தரிசனம் கொடுத்தாய்! என்று கதறி அழுதாராம்! அதே நிலைதான் தயளுவுக்கும் !---காஸ்யபன்.

மோகன்ஜி சொன்னது…

காஷ்யபன் சார்! பக்த ராமதாசை பொருத்தமாக நினைவு கூர்ந்தீர்கள். நவாபின் கோட்டையில் இன்றும் அவர் இருந்த சிறை இருக்கிறது. நன்றி!

ரிஷபன் சொன்னது…

சில கோவில்களில் காத்துக் கிடந்தால் சுடச் சுட பிரசாதம் கிடைக்கும்.. வயிறும் மனசும் குளிரும்.

வானவில்லும் அப்படித்தான்.

எழுத்தின் வர்ணஜாலம் காட்டி விட்டது.
பெருமழை கொட்டி.

வாழ்க்கை ஒரு சுவாரசியமான நையாண்டிதான். //புண்ணியம் பண்ணினவா பார்த்திருந்தா, வண்டில போற அய்யாதுரை வாலோட போறாப்புல தெரிஞ்சிருக்கும்!” தத்த்தி கைக்கொட்டி சிரித்தான்//

உங்க எழுத்துக்கு கேட்கவா வேணும்..

மோகன்ஜி சொன்னது…

அன்பு ரிஷபன் சார்! உங்கள் ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி. மீண்டுமொரு கதையோடு உங்கள் சபாஷ்! கேட்க ஆவலாய் இருக்கிறது.. சந்திப்போம் சார்!

கதம்ப உணர்வுகள் சொன்னது…

அருமையான ஒரு சுழற்சி கதைத்தொடர் கொடுத்தப்பின் மீண்டு(ம்) வந்திருக்கும் மோகன் ஜீக்கு என் அன்பு வாழ்த்துகள்பா முதலில்… தங்கள் மெயில் கிடைக்கப்பெற்றேன்.. வலைக்குள் வந்துவிட்டால் மீளமுடியாமல் இதிலேயே வீழ்ந்துக்கிடப்பேன் என்ற பயத்தில் தான் இத்தனை நாட்கள் எட்டிக்கூட பார்க்கவில்லை.. பார்த்தால் படிக்கத்தோன்றும்.. படித்தால் கருத்திடத்தோன்றும்.. கருத்திட்டால் அடுத்தவர் படைப்பு எங்கே என்று மனம் பரபரக்கும் கருத்தெழுத…

தத்த்தி….

கதையின் தலைப்பு வைக்கும்போதே அது எல்லோரையும் ஈர்க்கும்படி வைப்பது ஒரு தனிக்கலை…  தத்தி அப்டின்னு வெச்சிட்டு கதை எழுதி இருந்திருக்கலாம் தானே? ஹுஹும்… அப்படி வெச்சுட்டா…. என்னதுன்னு உள் நுழைந்து பார்க்கத்தோணனும்ல? எதுக்கு ரெண்டு த்த் அப்டின்னு கேட்க தோணனும்ல? அதனால தொடங்கியாச்சு ரணகளம் தலைப்பிலேயே… அட்டகாசம் மோகன் ஜீ..

கதை படிக்க ஆரம்பித்தபோது தயாளு சார் ஒரு அருமையான மனிதநேயமுள்ள ஆசிரியராக என் மனதில் தோன்றினது… வரிகளின் அசாத்தியம் அப்படி… அய்யாதுரை.. இருங்க கண்ணை கசக்கிவிட்டு திரும்ப படித்துப்பார்க்கிறேன். அப்பாதுரையா இருக்குமோ? இல்லல்ல… அய்யாதுரை தான்  அய்யாதுரையின் நாத்திகம் யாரையும் எங்கும் கஷ்டப்படுத்தவில்லை.. மாறாய் ஆசிரியர் என்றோ தன்னை படிக்கவைத்த நன்றியை மிக அற்புதமாய் இந்த நேரத்தில் இப்படி செய்து தீர்த்துக்கொண்டிருக்கிறார்…. மனிதன் பக்திமானா இருப்பது அவரவர் விருப்பம்… ஆனால் மனிதநேயத்துடன் இருப்பது முக்கியம்…. அதனால் அய்யாதுரையின் நாத்திகம் சிரமப்படுத்தவில்லை தயாளு சாரை…


தாசரதி (பெயர் ரொம்ப நல்லாருக்குப்பா) தெலுங்கு பட டைரக்டர் பெயர் கூட இதேபோல் தாசரதி நாராயணன் என்று நினைக்கிறேன். அருமையான பெயர்… மக்கு தத்த்தி குட்டை இதெல்லாம் சொல்லி தத்த்திக்கு கல்யாணமும் ஆகாம ஏதோ வேலை செய்து வயிற்றை நிறைச்சிண்டிருக்கு…


ஆஞ்சநேயர் கனவில் வந்தார்னு தத்த்தி சொன்னதும் தயாளு சார் மட்டுமா?? படிச்ச எனக்கும் இல்ல அப்டியே சிலிர்த்தது… ஆஹா ஆஹா எத்தனை திவ்யம்? யாரும் வேண்டாம் என்று ஒதுக்கிய ஒருவனின் கனவில் வந்து ஆஞ்சநேயர் பிரசாதம் வாங்கி சாப்டுட்டு…. இந்த கல்லில் ஓய்யாரமாய் சாஞ்சுண்டு அய்யாதுரை பைக்ல ஏறி உட்கார்ந்துண்டு வால் மட்டும் தெரிகிறதா???? செம்ம கற்பனை…. அவனை இப்படி பேச வைத்து தயாளு சார் கிட்ட கற்பனையை விரித்தது யார் சொல்லி இருக்கும்? அப்டின்னு யோசிக்க அதிக சமயம் அவசியமில்லை.



நம்பிக்கை தான் கடவுள்… ஒவ்வொரு மனசுல அன்பு இருந்தா அவரே பகவான்…

நாத்திகம் பேசுறவன் ஆத்திகம் பேசுற மனுஷனை வெச்சு பணம் பண்ண எத்தனை நாள் திட்டம் போட்டானோ? அருமையான கதை ஆனால்…. தயாளு சார் போல எனக்கும் தோணித்து.. தினமும் இப்படி விழுந்து விழுந்து சாமி கும்பிடறோமே நம்ம கனவுல வந்தாரா? இப்படி சாவகாசமா உட்கார்ந்து பேசி இருந்திருக்காரே… அனுமனைப்பற்றிய வர்ணனை… கதையின் உயிரோட்டத்தை நிரூபித்தது மோகன் ஜீ..


ஏதோ எழுதினோம் கதை அப்படின்னு இல்லை… நுணுக்கம் தான் ஒவ்வொரு வரிகளிலும் நிமிரச்செய்தது வாசகர்களை என்றால் அது மிகையில்லை கண்டிப்பா…


இப்ப இருக்கிற இந்த காலக்கட்டத்தில் குற்றங்களும் அதிகரிக்கிறது…. கோயில்களும் அதிகரிக்கிறது.. சாமியார்களும் அதிகரிக்கிறார்கள்.. சரியா பேசத்தெரியாம குளறி உளறிக்கொட்டிட்டு இருந்த தத்த்தி தப்பு தப்பு தத்த்திரிஷி ஸ்வாமிகளாகி மௌனமே சமாப்தமாகி அருள் பாலிக்கவும் ஆரம்பிச்சாச்சு…


இதுல மக்களை பேக்குகளாக்கி தன் பக்கம் வளைத்து இப்படி என் கனவுல வந்து சாமி சொல்லிச்சு என்று சொல்லி ஒரு இடத்தையே கோயில் ஆக்கும் அதிசயம் சத்தியமா நம்ம இந்தியாவில் மட்டும் தான் சாத்தியமாகும்….

இதனால் என்னாறதுன்னா உண்மையான ஆன்மீக பெரியவர்கள் குருமார்கள் ஸ்வாமிகள் இவர்கள் பெயரும் கெட காரணமாகிவிடுகிறது…



எல்லா கேரக்டர்ஸும் அழகா பேசினதுகள் மோகன் ஜீ தங்கள் வரிகளில்…


கதை தான்.. திரும்ப திரும்பச்சொல்லி பார்க்கிறேன் இது கதை தான்…

ஆனால் கதை போலவே இல்லாதது போல அத்தனை இயல்பு கதை நடை.. தெளிவான வரிகள்….

யாரும் குழப்பிக்கொள்ள முடியாதபடி தெளிவாக சொல்லிச்சென்ற விஷயங்கள்….

அய்யாதுரை நாத்திகம் ஆனால் என்ன? அவர் பைக்ல அனுமன் போய் உட்கார்ந்தாரே அப்டின்னு மாணவர்களுக்கு பாடம் போதித்த ஆசிரியரே வாயடைத்துப்போக செய்துவிட்டாரே தத்த்தி ரிஷி ஸ்வாமிகள்?


தயாளு சாரும் ஊரோடு ஒத்துவாழ் என்பது போல தேர்வடை.. வடைத்தேர் மிளகு வாசனை மூக்கை பதம் பார்க்க… ச்ச்ச்சு… ஒரு நாலு வடை கொடுத்திருந்திருக்கலாம் தானே?? எனக்கும் அப்டி தான் தோணினது…


அற்புதமான கதை மோகன் ஜீ… நீண்ட நாள் கழித்து ஒரு அருமையான நிகழ்வை நேரில் கண்டது போலவே கதையின் பாணி அமைத்தது அசத்தல்….

அன்பு வாழ்த்துகள்… இன்னும் நிறைய எழுதுங்கள்…. ரசனையுடன் கவிதையும் கதையும் படைக்கும்போது வாசகர்களும் ஆவலுடன் காத்திருப்போம் உயிரோட்டமுள்ள இதுபோன்ற அருமையான கதையை வாசிக்க…

நிலாமகள் சொன்னது…

அற்ப மானிடனுக்கோ, 'தன் பலவீனத்தையும், அறியாமையையும் என்றும் உணராமல் போகக்கடவாய்' என்று யாரும் சாபம் கொடுத்து விட்டார்களோ //

ஆஹா...! என்னவொரு துலக்கமான விளக்கம்!!

ஐந்து மாத அஞ்ஞாத வாசத்துக்குப் பின்னான வருகை... புதைக்கப் பட்ட திராட்சை ரசம்.

பாமர மக்களின் போதைமிகு பக்திக்கு தூண்டு கோலாக ஞானியரும் யோகியரும் மட்டுமல்ல... பக்தியையும் வியாபாரமாக்கும் புத்தி சாதுரியக் காரர்களும் போதுமானவர்களாய் இருந்து விடுகிறார்களே சமயங்களில்...

எத்தனை நியாயமான நாத்திகவாதங்கள் பரவினாலும் திக்கற்ற பாமரனுக்கு தெய்வமே துணையாகிறது பல சமயங்களில்.

தத்த்தி ரிஷியாக வேண்டியது பிராப்தமாய் இருக்கலாம்...

என் வாழ்வில் இடறிய ஒரு சம்பவம் சொல்லட்டுமா..
வீடருகே சிவ, வைணவத் தலங்களிருந்தும் தினசரி போவதில்லை நான். எனது நம்பிக்கைக்கேற்ற வழிபாட்டை பிறருக்கு அறிவிக்க அவசியமில்லாமல் கடைபிடிப்பது வழக்கம். பெருமாள் கோயில் ஐயரின் தாயார், என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஏன் கோயில் பக்கம் வருவதில்லை என்றோ, இன்று வந்து பெருமாள் அலங்காரத்தைப் பார் என்றோ சொல்வார். எனக்கு வீட்டுக்குள்ளேயே காட்சி தருகிறார் பெருமாள் என்பேன் நான்.
"இந்தப் பெருமாள் மோசக்காரரான்னா இருக்கார்! தெனம் போகிற எங்களுக்கு ஒருநாளும் காட்சி தரலையே!!" என்றார் பாட்டி.

//வாழ்க்கை ஒரு சுவாரஸ்யமான நையாண்டிதான்//
சபாஷ்!!

மஞ்சுபாஷினியின் அலசல் அட்டகாசம்!! கிரேட் மேம்!!

நிலாமகள் சொன்னது…

வயல் வெளிகளின் வரப்பில் நீர்முள் செடி என்று ஒன்று உண்டு. அதன் மயிரிழை போன்ற முட்களும் காலில் ஏறி விட்டால் எடுப்பது மிகக் கடினம். அதைக் கூட ஊகாமுள் என்பர். மனதை விட்டு நீங்காத வலியை' ஊகாமுள் உறுத்தலாய்' என்பர் எழுத்தாளர்கள்.

கதம்ப உணர்வுகள் சொன்னது…

எல்லோரும் எழுதும் கருத்துகள் இன்னும் இன்னும் இன்னும் அதிகமாக அலசவைக்கிறது மோகன் ஜீ உங்கள் படைப்புகளை.. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் நிலாமகள்....

நிலாமகள் சொன்ன “ அனுபவம் அற்புதம் “ அதானே.. வீட்டிலேயே பெருமாள் காட்சி தருகிறார் என்பது எத்தனைப்பேருக்கு கிடைக்கும் இந்தப்பேறு?


தாசரி நாராயணராவ்... இவரின் சகோதரி அம்மாவுடன் ஒன்றாய் வேலை செய்தவர்கள். அதனால் இந்தப்பெயர் நினைவில் இருந்ததுப்பா.. தாசரதி அருமையான பெயர்ப்பா... வித்தியாசமா இருக்கு...

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய மஞ்சு பாஷிணி! உங்க கருத்தைப் படிச்சப்புறம் தான் எனக்கே என் கதை இப்போ பிடிக்குது போங்க! அற்புதமான அலசல்.. வாசகப்பார்வை மட்டுமின்றி, படைப்பாளியின் நோக்கிலும் விரியும் உங்கள் கருத்தாழம். என் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள் மஞ்சு.

உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி.

சில விளக்கங்கள்:

தாசரதி=ஆம் அழகான பெயர். தசரதனுடையம் மைந்தன் எனும் பொருளில் இராமனைக் குறிக்கும்.

"மேலுகோ தயாநிதி.. மேலுகோ தாசரதி" எனும் அற்புதமான தியாகராஜ கீர்த்தனம் 'ஸௌராஷ்ட்ரம்' எனும் ராகத்தில் உண்டு.

// தெலுங்கு பட டைரக்டர் பெயர் கூட இதேபோல் தாசரதி நாராயணன் //
அவர் தாசரி நாராயணராவ். தாசரி என்பது அவரின் வீட்டுப் பெயர்.

//அய்யாதுரை.. இருங்க கண்ணை கசக்கிவிட்டு திரும்ப படித்துப்பார்க்கிறேன். அப்பாதுரையா இருக்குமோ? இல்லல்ல… அய்யாதுரை தான்  அய்யாதுரையின் நாத்திகம் யாரையும் எங்கும் கஷ்டப்படுத்தவில்லை..//
பெயர் பொருத்தமும், கொள்கையும் இந்த கேள்வியை எழுப்புகிறது. என் நோக்கம் திரு அப்பாதுரையை வம்புக்கிழுப்பதோ பகடி செய்வதோ அல்ல. எனக்கும் அவருக்கும் இருக்கும் நட்பும்,பலவிஷயங்களில் ஒருமித்த பார்வையும் என்றும் என் மகிழ்ச்சிக்குரியவை. அவர் நாத்திகவாதம் யாரையும் புண்படுத்தியதில்லை. இந்த தளத்திலேயே ஆன்மீக மறுப்பு குறித்து சில பதிவுகளில் நிறைய விவாதங்கள் நடந்திருக்கிறது." நண்பேண்டா!" என்று வாய்ப்புதோறும் கட்டிக் கொள்வோம். அவரின் சில பதிவுகளுக்காய் அவருக்கு ஒரு கோவிலே கட்டுவேன்..(கனவுல அப்பாதுரை வரட்டும்!) உங்கள் வாயிலாக நண்பருக்கு மீண்டும் பிரகடனம்.. "நண்பேண்டா!"

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய நிலா!
புதைக்கப் பட்ட திராட்சை ரசம்னா இதானா? நானு ஏதோ டாஸ்மாக் மேட்டரை சொல்றீங்களோன்னு நெனைச்சேன்..( நானும் தத்த்தி தான் நிலா)

உங்கள் பார்வை மிகத் தெளிவாய் இருக்கிறது உங்கள் பின்னூட்டத்தில்.. பாராட்டுக்கள்.

//வயல் வெளிகளின் வரப்பில் நீர்முள் செடி என்று ஒன்று உண்டு// நீங்கள் நீர்முள்ளி செடியைக் குறிக்கிறீர்கள் போல. ஆம் அவை கூட மெல்லியமுட்கள் கொண்டவை. நீர்முள்ளியின் விதையை சிறுநீரகக் களை கரைக்கவும், மற்றும் மலட்டுத்தன்மை நீங்கவும் நாட்டுவைத்தியத்தில் உபயோகப் படுத்துவார்கள். உங்கள் தகவலுக்கு நன்றி நிலா!.

மோகன்ஜி சொன்னது…

மஞ்சுபாஷிணி! நிலாவின் அனுபவத்தை குறிப்பிட விட்டுவிட்டேன்.
அவர் "நட்ட கல்லும் பேசுமோ,நாதன் உள்ளிருக்கையில் கட்சி"

எங்க வீட்டுல கூட அதே நிலைப்பாடு தான். சின்ன வித்தியாசம் .. அவங்க"கணவனே கண்கண்ட தெய்வம் கட்சி!"

அப்பாதுரை சொன்னது…

காஸ்யபன் சொன்ன கதை பிரமாதம். சிலிர்க்க வைத்தது. சிரிக்கவும்.

அப்பாதுரை சொன்னது…

//புதைக்கப்பட்ட திராட்சை ரசம்.
நிலாமகளுக்கு ஒரு hug.

அப்பாதுரை சொன்னது…

மஞ்சுபாஷிணி பதிவுலகில் உயிரோடு இருப்பது பெரிய மகிழ்ச்சி! ரொம்ப நாளாச்சு பக்கம் பக்கமா பின்னூட்டம் படிச்சு. வாழ்க.

(அப்பாதுரையே தாங்க. இவரு சும்மா அய்யாதுரைனு எழுதிப்பிட்டு மீனாக்ஷி மாதிரி முயலுக்கு மூணுகால்னு சாதிக்கிறாரு. போகட்டும் விடுங்க. அடுத்த முறை ஹைதரா போறப்ப 'அது என்னங்க கீழே கிடக்கு?'னு அப்பாவியா கேட்டு அவரு குனியறப்ப தவறுதலா தள்ளிவிட்டுற மாட்டேன்?)

அப்பாதுரை சொன்னது…

//முத்தெடுக்கவோ ஆறுமாதம் மூச்சடக்கினீர்கள்
சொக்கவைக்கும் சிவகுமாரன்.

அப்பாதுரை சொன்னது…

கதைக்கு வரேன். என்னாங்க இது? கனவுல அனுமார் வந்த அற்புதமான கருவை வச்சுக்கிட்டு கடைசில ரெண்டு வடை கிடைக்காம புலம்புற மாதிரி முடிச்சிருக்கீங்களே? இது போல கரு கிடைக்க மாட்டேங்குதேனு எத்தனை பேர் பழி கிடக்கிறாங்க?! பான்சாய் மரத்துக்கான விதையா அது? நியாயமா? அவசரமா எழுதிட்டீங்களோ?

அடிக்கடி படித்து யோசிக்க வச்சது என்னவோ உண்மை. பாராட்டுக்கள். டிசம்பரில் அடுத்த பதிவின் போது சந்திப்போம்.

அப்பாதுரை சொன்னது…

//எத்தனை நியாயமான நாத்திகவாதங்கள் பரவினாலும் திக்கற்ற பாமரனுக்கு தெய்வமே துணையாகிறது பல சமயங்களில்.

exactly நிலாமகள். பாமரத்தனம் ஒரு வட்டம்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை அய்யா,

//காஸ்யபன் சொன்ன கதை பிரமாதம். சிலிர்க்க வைத்தது. சிரிக்கவும்.//

ஏங்க? ஏங்க?? காஸ்யபன் சாரே ஏதோ மனவாடு விட்டுருவோம்னு மேலாக்க எழுதினா கிளப்பி விடுறீங்களே?

//புதைக்கப்பட்ட திராட்சை ரசம்.
நிலாமகளுக்கு ஒரு hug.// ஆமாம் அப்பாஜி! நிலா தான் என்ன அழகா சொல்லிட்டாங்க!

//அப்பாதுரையே தாங்க. இவரு சும்மா அய்யாதுரைனு எழுதிப்பிட்டு மீனாக்ஷி மாதிரி முயலுக்கு மூணுகால்னு சாதிக்கிறாரு. போகட்டும் விடுங்க.//

சொன்னா நம்பணும் தல! நீங்க சொல்றா மாதிரி இருந்தா... உம்ம்... உங்க கிட்ட புல்லட் இருக்கா? இருந்தாலும் ஓட்டத் தெரியுமா?? டிரைவிங் லைசன்ஸ் இருக்கா??? நீங்க கட்டட காண்ட்ராக்டா பண்ணுறீங்க????
எவ்ளோ வித்தியாசம் இருக்கு? அய்யாதுரை, அப்பாதுரை அல்ல..அல்ல... அது அதையும் தாண்டி புனிதமானது!

ஆமாம் மீனாக்ஷி எங்கே?

// சொக்கவைக்கும் சிவகுமாரன்.//
என் தம்பின்னா சும்மாவா?

//அற்புதமான கருவை வச்சுக்கிட்டு கடைசில ரெண்டு வடை கிடைக்காம புலம்புற மாதிரி முடிச்சிருக்கீங்களே? //

அது சிறுகதையின் தெருக்கோடி நீட்சி மட்டுமே.. நெடுங்கதையாய் நீட்டியிருக்கலாம் தான். அந்த மூன்று கதாபாத்திரங்களின் அழுத்தம் அமைந்த லாகிரியில், நாலாவது கதாபாத்திரமான அனுமனை இன்னமும் கொஞ்சம் ட்ரீட் பண்ணத் தவறி விட்டேனோ என்று தோன்றுகிறது.

// டிசம்பரில் அடுத்த பதிவின் போது சந்திப்போம்.//
என்னண்ணே செய்யுறது? இந்தத் தபா மெய்யாலும் இங்கியே குந்தினுகீறேன் மொதலாளி. அட்த வாரம் பாக்கசொல எதுனாச்சும் நான் எய்தலைன்னா ஏண்டா சோமாரின்னு கேளு!

//exactly நிலாமகள். பாமரத்தனம் ஒரு வட்டம்//

அடடா தங்கச்சி..கலர்சட்ட வந்தா பிரசாதம் கெடைக்கும்னு சொன்னியேம்மா.. கெடச்சுருச்சி தாயி கெடச்சுருச்சி...








நிலாமகள் சொன்னது…

நாட்டு வைத்தியம் சொல்றீங்க, தடால்ன்னு எதாவது ராகம் பெயரும் பாடல் வரிகளும் வருது, சினிமா செய்திகளுக்கும் குறைவில்லை,ஆன்மீக விஷயங்களையும் புட்டு புட்டு வைக்கறீங்க... எழுத்தும் கலக்கல்தான்... (இது வேற கலக்கல்)இன்னும் இன்னும் சொல்ல நீளும்... பல்துறை வித்தகர் ஒருவர் என் சகோதரர் என்பதில் எனக்கும் பெருமிதம் தான்.

எல்லா வீட்டிலும் மஞ்சு மேம் சொல்வது போல் அன்பு நிறைந்தவர்கள் கடவுளுக்கு ஒப்பானவர்களே.

'நானே கடவுள்' என்பதில் சிறு அகந்தை தோன்றுகிறது. தூணிலும் துரும்பிலும் இருப்பவர் நம்முள்ளும் சிறிதேனும் இருக்கலாம்.

புதைக்கப் பட்ட திராட்சை ரசத்தை வற்றாத ஆன்மீகத்துக்கும் பொருத்திப் பார்த்தேன். பழைய கள்; பழைய மொந்தை; புதைத்த கைப்பக்குவம் பற்றிய சிலாகிப்பாகவும் கொள்ளலாம்.

கோயிலுக்குப் போவது பற்றி ஒரு பதிவும் திண்ணை வைத்து ஒரு கதையும் எழுத யோசனை வந்து விட்டது. பின்னூட்டக்காரர்களுக்கு நன்றி. முந்திக் கொண்டு யாரேனும் எழுதினாலும் சிலாக்கியமே.

நிலாமகள் சொன்னது…

@ அப்பாஜி...

உச்சிதனை முகர்ந்தால் கர்வம் ஓங்கி வளருதடி...

பதினாறில் பறிபோன என் தந்தையை உங்களில் காண்கிறேன். மெச்சுமளவு புத்திசாலியாகி விட்டேனா நான்...! அவரிருந்தால் மகிழ்ந்திருப்பார்... :((

பாமரத்தனம் ஒரு வட்டம்//

நிச்சயமாக. வெளிவருவதும் கிணற்றுத் தவளையாய் உள்ளிருப்பதும் அவரவர் கைகளில். மழைக்காலத்து நிரம்பிய கிணற்றில் இருந்தேனும் சில தவளைகள் வெளியேற வாய்ப்பிருக்கிறது.

டிசம்பரில் அடுத்த பதிவின் போது//

மோகன் அண்ணாவை நல்லா நிமிட்டி விட்டாச்சு.

சிலிர்க்க வைத்தது. சிரிக்கவும்.//
இதிலுள்ள 'பொடி' புரியவில்லை. ஏன் சிரிக்கணும்?

RVS சொன்னது…

இதோ வந்துட்டேன். (உங்கள் கதையின் முதல் வரி கேள்விக்குப் பதில்). ஆனால் தத்திரிஷி ஸ்வாமிகள்
அளவுக்கு முன்னேறத் தெரியாது!!

தத்திரிஷி ஸ்வாமிகளின் அருள் எனக்கு லேட்டாதான் கிடைச்சுது மோகன்ஜி ஸ்வாமிஜி! புல்லட்டுக்கு தனி சன்னிதி ....... என்னா குசும்பு...

அப்பாதுரை சொன்னது…

தெரியலிங்க நிலாமகள்..
"ராமா.. ஊரான் சொத்தைத் திருடித் திருடி கோவில் கட்டியது என்னவோ நான், தரிசனம் மட்டும் நவாபுக்கா?" என்ற புலம்பலில் நகைச்சுவை மிகையாக இருப்பதாகத் தோன்றியது. ராமனின் தீர்ப்பில் தொனிப்பது நீதியா நகைச்சுவையா?

அப்பாதுரை சொன்னது…

திருட்டுக்கு ராமன் உடந்தை என்பதால் நவாபுக்குக் காட்சியளித்தானென்றக் கோணமும் நகையூட்டுவதாகவே.

geethasmbsvm6 சொன்னது…

//http://geethasmbsvm6.blogspot.in/2012/09/blog-post.html//

அப்பாதுரை, மேற்கண்ட சுட்டியில் பத்ராசல ராமதாசரின் கதை இருக்கு. பாருங்க. நவாபுக்குக் காட்சி அளித்த காரணமும், (ஹிஹிஹி, நீங்க ஒத்துண்டால் அதிசயமே) ராமதாஸருக்கு ஏன் காட்சி அளிக்கலை என்பதும் புரியும். :)))))) ராமதாசர் இருந்த அந்தச் சிறை இன்னமும் இருக்கு என்பதும் உண்மை.

geethasmbsvm6 சொன்னது…

புதைக்கப்பட்ட திராக்ஷை ரசம் நாளாக ஆகச் சுவை கூடும், அதன் மதிப்பும் கூடுதல் என்றறிந்திருக்கிறேன். அப்படித்தான் மோகன் ஜியின் இந்தக் கதையையும் புரிந்து கொண்டேன். ஆனால் இங்கே சொல்லி இருப்பது????????

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய நிலா! யம்மா.. யம்மா... நான் ஒரு சாதாரண ரசிகன் மட்டுமே..

//பல்துறை வித்தகர் ஒருவர் என் சகோதரர் என்பதில் எனக்கும் பெருமிதம் தான்.//
"பல்துறை வித்தகர்"- என்னை ஒரு டெண்டிஸ்ட் ஆக்கி அழகு பார்க்கும் சகோதரிக்கு ஜே!

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆர்.வீ.எஸ்! மோகன்ஜி பதிவுக்காய் வருபவர்களில் பலர் ஆர்.வீ.எஸ்ஸின் நீண்ட பின்னூட்டங்களுக்காகவே வந்த காலம் ஒன்று உண்டு..

முகநூலில் சின்ன சின்ன நூலாய் விட்டுக் கொண்டிருக்கும் மைனரே! முகநூல் இளைஞர்களுக்கானது.. நான் மற்றும் அப்பாதுரை போன்ற இளவட்டங்களே வலைப்பூவில் மட்டுமே கோலாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் போது, உம்மைப் போன்ற 'முதிர்ந்த'அனுபவஸ்தர்கள் முகநூலில் மோகம் கொண்டு அலைவது ஏன்? ஒழுங்கு மரியாதையாய் " ராமாயணத்தை" தொடரும்.. இல்லேன்னா கீசிடுவோம்!!

இப்படிக்கு

மொத்து மோகன்ஜி &
அட்டாக் அப்பாதுரை

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு! கீதாசாம்பசிவம் அவர்களின் பதிவைப் படித்து உன் தரப்பை கூறும் ... கூறிப் பாரும்! உடந்தன்னே வருகிறேன்.

மோகன்ஜி சொன்னது…

உங்கள் பதிவை முன்னமே ஏன் பார்க்கத் தவறினேன்?? அருமை மேடம் !

மீனாக்ஷியை யாரும் பார்த்தீர்களா? முயலுக்கு மூணு காலாமே?

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!
//புதைக்கப்பட்ட திராக்ஷை ரசம் நாளாக ஆகச் சுவை கூடும்..ஆனால் இங்கே சொல்லி இருப்பது????????//

உங்கள் கேள்வி நிலாவின் கருத்தினை ஒட்டி எழுந்ததாய் நினைக்கிறேன்.
(//திராட்சை ரசத்தை வற்றாத ஆன்மீகத்துக்கும் பொருத்திப் பார்த்தேன். பழைய கள்; பழைய மொந்தை; புதைத்த கைப்பக்குவம் பற்றிய சிலாகிப்பாகவும் கொள்ளலாம்.//)

நிலா கொஞ்சம் விளக்கட்டுமே.. நாமும் சேர்ந்துக்கலாம்..

geethasmbsvm6 சொன்னது…

மோகன் ஜி, புதைக்கப்பட்ட திராக்ஷை ரசத்தின் கூடுதல் சுவையையும், கூடுதல் மதிப்பையும் பல நாட்கள்/மாதங்கள் கழித்து வந்த உங்கள் கதைப் பதிவில் கிடைத்த ஆனந்தம் அனைவருக்கும் என்பது என் புரிதல்.

இதுக்காகக் காத்திருந்த ரசிகப் பெருமக்களை மழை நீருக்காகக் காத்திருக்கும் சகோரப் பக்ஷியோடு ஒப்பிடலாமோ???

நிலாமகள் சொன்னது…

@அப்பாஜி...

டியுப் லைட் எரியுது.

@மோகன் ஜி ..
ரசிக்க வைக்கும் குறும்பு.

geethasmbsvm6 கூறியது...
மோகன் ஜி, புதைக்கப்பட்ட திராக்ஷை ரசத்தின் கூடுதல் சுவையையும், கூடுதல் மதிப்பையும் பல நாட்கள்/மாதங்கள் கழித்து வந்த உங்கள் கதைப் பதிவில் கிடைத்த ஆனந்தம் அனைவருக்கும் என்பது என் புரிதல்.

இதுக்காகக் காத்திருந்த ரசிகப் பெருமக்களை மழை நீருக்காகக் காத்திருக்கும் சகோரப் பக்ஷியோடு ஒப்பிடலாமோ???//

சகோதரி... உங்க புரிதல் மிகச்சரி.

//எத்தனை நியாயமான நாத்திகவாதங்கள் பரவினாலும் திக்கற்ற பாமரனுக்கு தெய்வமே துணையாகிறது பல சமயங்களில்.

exactly நிலாமகள். பாமரத்தனம் ஒரு வட்டம்.//

இந்த இடத்தில் கதையை விட்டு நாங்க சொந்த கதை பேசத் தொடங்கியாச்சு.

நிலாமகள் சொன்னது…

மொத்து மோகன்ஜி &
அட்டாக் அப்பாதுரை//

நல்லாயிருக்குப்பா உங்க கெட்டப்:))

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்! உங்கள் வாழ்த்துக்கும் அன்புக்கும் என் வந்தனங்கள். அடுத்த கதையை சீக்கிரமாகவே பதிவிடுவேன். நன்றி!

மோகன்ஜி சொன்னது…

மொத்து மோகன்ஜி &
அட்டாக் அப்பாதுரை//
நாங்க ரொம்ப டெர்ரர்ரான பார்ட்டிங்க இல்லே?!

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நிதானமாகவும், அழுத்தமாகவும் கதை சொல்லும் உங்களைக் கால இடைவெளி கொஞ்சம் அவசரப்படுத்திவிட்டதோ? என நினைக்க வைக்கிறது மோகன்ஜி.

அப்பாதுரை சொன்னது போல எத்தனை அருமையான கனவு? அந்தக் கனவின் நீட்சி நீர்த்துப்போனது போல ஒரு அநுபவத்தைத் தந்துவிட்டது.

எல்லாமே கால எல்லைக்குள் கட்டுப்பட்டிருக்க, அதென்ன தயாளு மட்டும் நிரந்தரமாகத் திண்ணையிலேயே தங்கி இன்னமும் நாலு வடைக்காக ஏங்குவது கவனப் பிசகாய்த் தெரிகிறதே?

அதேபோல் ப்ளாஸ்டிக் கவரில் ஆப்பிளும் பின்னால் நீளும் கால அளவுக்கு உறுத்தலாய் இருப்பதாய்த் தோன்றியது.

கதையின் சுவாரஸ்யம் பாத்திரங்களுக்கு நடுவில் பேசப்படும் சம்பாஷணைகள்.அதிகம் பேசாது செயல் மூலம் பேசும் அய்யாதுரையின் பாத்திர நேர்த்தி.

பச்ச மொழகாவை மீண்டும் எதிர்பார்ப்பது தப்பா?

kashyapan சொன்னது…

அப்பாதுரை அவர்களே! தூண்டி விடுவதில் யமகாதகர் நீர் ! சொல்லித்தொலைக்கிறேன் ! "பக்த விஜயம்" என்று சொல்வார்கள் ! ராமதாஸ்,கபீர்தாஸ், சிரீடி சாய்பாபா,கோர கும்பர் என்று அன்பர்கள் பற்றிய கதைகளுண்டு ! இவற்றிர்க்கு ஒரு hostorysity இருக்கலாமென்றே கருதுகிறேன் ! மராட்டியத்தின் தென்பகுதி,கனடத்தின்வடபகுதி,ஆந்திராவின் வடமேற்குப்பகுதி -இந்த பூக்கோளப் பகுதியில் சுல்தான் ஆட்சி இருந்தது ! சுல்தானுக்கும், இந்து சிற்றரசர்களுக்கும் வகுப்பு அமைதி அவசியமாக இருந்தது ! இலக்கியத்தின் துணையொடு மத நல்லிணக்க கதைகள் உருவாகின! இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் ! கொளுத்தி போட்டாச்சு ! பாப்பம்---காஸ்யபன்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க சுந்தர்ஜி! எங்கடா இன்னும் காணோமின்னு பார்த்தேன்..

சில விளக்கங்கள்.

//எல்லாமே கால எல்லைக்குள் கட்டுப்பட்டிருக்க, அதென்ன தயாளு மட்டும் நிரந்தரமாகத் திண்ணையிலேயே தங்கி இன்னமும் நாலு வடைக்காக ஏங்குவது கவனப் பிசகாய்த் தெரிகிறதே?//

இதில் கவனப்பசகு ஏதும் இல்லை என நினைக்கிறேன். திண்ணையிலேயே தயாளு இருக்கவேண்டிய நிர்பந்தம் முன்னமே சொல்லப் பட்டுவிட்டது.

கனவு விவரணைக்குப் பின் அவ்ர் உடல்நலம் சீர்கெட்டு "பல நாட்கள்" ஆஸ்பத்திரியில் இருந்து செத்துப் பிழைத்து மீண்டு வந்தபின் யதாஸ்த்தானத்துக்கு தானே திரும்பமுடியும்? அவருக்கு வேறு யாரும் இல்லை என்றும் தம்பி மகன் வீட்டுத் திண்ணை ஏதோ ஒதுக்கப் பட்டிருக்கிறது என்றே கதையோட்டம் செல்கிறது. அவ்ர் வேறெங்கே போவார்? வடைக்கு ஏங்குவது என்பதை ஒரு சூட்சமமாய் பொதித்திருந்தேன். மீண்டும் நேரம் இருக்கும் போது ஒரு முறை கதையைப் படியுங்கள். ஏதும் புது திறப்புகள் தோன்றலாம்.

மேலே சொன்னதுபோல் தயாளு நோயுற்ற இடைப்பட்ட காலம் வருஷக் கணக்காய் இருக்க வில்லை. வேகமாய் அந்தக் கோவில் முளைத்த காலப் பிரமாணமே அந்த இடைவெளி என்பதற்கு விவரணைகள் தேவையில்லை அல்லவா?

//அதேபோல் ப்ளாஸ்டிக் கவரில் ஆப்பிளும் பின்னால் நீளும் கால அளவுக்கு உறுத்தலாய் இருப்பதாய்த் தோன்றியது //

மேற்சொன்ன விளக்கத்திருக்குள் பொருத்திப் பாருங்கள். "ப்ளாஸ்டிக் கவர்" உறுத்தாது.

எங்கோ உங்கள் மனச் சித்திரத்தில் கால நீட்சியை அகலமாக்கி விட்ட வார்த்தைகள் கதையில் எங்கும் இருக்கிறதா என்று யோசிக்கிறேன்.

கதை முடிபு குறித்து உங்கள் கருத்துக்கு இடமிருக்கிறது. அப்பாதுரைக்கு சொன்ன பதில் தான். நடப்பின் அபத்தத்தைக் கோடிட்டுவிட்டு படிப்பவர்கள் ஊகத்திற்காய் மீதியை அந்தரத்தில் விடுவதும் ஒரு சிறுகதை உத்தி.

கூர்ந்து பார்த்திருந்தீர்கள் எனில் இந்தக் கதையின் மையப்புள்ளி கனவு அல்ல. கடவுள் பெயரால் நடத்தப்படும் கூட்டு என்பதே.

ஆனாலும் கூட அப்பாதுரையும் நீங்களும் சொன்னது போல் அந்தக் கனவை மட்டுமே மையமாக வைத்திருந்தால் ஒரு முழு கச்சேரி செய்திருக்கலாம் தான்..

'பச்சமொழகா'வை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி. அங்கே மிளகாய்.. இங்கே மிளகு (வடை) காரம் இருந்தால் சரி தான்.

கண்டிப்பாய் உங்களுக்கு மறுபடியும் ஒரு பச்சமொழகா பஜ்ஜி காத்திருக்கிறது.

நன்றி சுந்தரா! கறாரான விமரிசனம்.. .. ரசித்தேன். என் விளக்கங்களை ஒட்டிய கருத்துக்கள் உண்டெனில் காத்திருக்கிறேன். சந்திப்போம்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை! இப்போ சந்தோஷமா? காஸ்யபன் சாரை உசுப்பி விட்டுட்டீங்க..
சாரின் கருத்துகளுக்கு இரவு பதில் அளிக்கிறேன்.. கடமை அழைக்கிறது அன்பே!

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! உங்களுக்கான பதிலில்
//கடவுள் பெயரால் நடத்தப்படும் கூட்டு // என்பதை கடவுள் பெயரால் நடத்தப்படும் கூத்து என்று வாசிக்கவும்..

அப்பாதுரை சொன்னது…

மொத்து மோகன்ஜிக்கு நன்றாக மாவரைக்கவும் வருகிறது.
சுந்தர்ஜிக்கு ஒரு படா தாங்க்சுபா.
காஸ்பயன் சார் - உங்க கிட்டே பொக்கிஷமான துணுக்குகள் மூட்டை மூட்டையா கிடக்கு சார். அதான்.

அப்பாதுரை சொன்னது…

சுட்டிக்கு ரொம்ப நன்றி கீதா சாம்பசிவம். கைவேலை முடிச்சுகிட்டு வரதா சொன்னது இவங்க மிசஸா.. நான் வேறே ஒரு ராமபக்தரை நினைச்சிருந்தேன்..
இதுல கூட பெண்களுக்கு ஒரு இடி வச்சிருக்காங்க பாருங்க! அதாவது புருசனுக்கு ராமனோட பயணம் - சும்மா திருடியும் பாட்டு பாடிகிட்டும் இருந்ததுக்கு. ஆனா ஓடி ஓடி உழைச்ச ஓடாப்போன மனைவிக்கு நத்திங்க். இங்கே என்ன செயதி புரியலியே. திருடினாலும் ராமரோட ஓடிறலாம். சுதந்திரம். வீட்டு வேலை செஞ்சா அப்படியே இருக்க வேண்டியது தான். தியாகச்சுடர். ஹ்ம்ம்ம்.

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

Class is permanent. Form is temporaryன்னு ஒரு சொலவடை உண்டு. அதுதான் உங்களுக்கும்.

உங்கள் விளக்கங்கள் கதையில் புரிந்துகொள்ள ஏதுவாய் இல்லாமல் ஒரு இடைவெளி தெரிவதாய் ஒரு உணர்வு. நெருக்கமாய் நெய்யப்படாத நெசவு போல கனவுக்கும், அதற்குப் பிந்தைய நிகழ்வுக்கும் நடுவில் ஒரு விலகல் இப்போதும் தென்படுகிறது. என் வாசிப்பின் போதாமையோ என்னவோ. போகட்டும்.

உங்களை வாசித்து வரும் எனக்கு இந்தக் கதையை வழக்கமான நகாசுக்கு நீங்கள் உட்படுத்தாத குறையை இப்போதும் உணர்கிறேன் -அன்று நீங்கள் கடுகுக்குப் பதிலாக கவனக்குறைவாய் எள்ளை ரசத்திற்குத் தாளித்துக்கொட்டியது போல.

அப்பாதுரை சொன்னது…

ஆ! சுந்தர்ஜி! நான் ஊக்குவிக்குறப்போ நீங்க பின்வாங்கலாமா? நியாயமா? மொத்துஜியோட தனியா இருக்கனே..

(ஊக்கு விக்கறதும் பின் வாங்கறதும் கிவாஜ கிட்டே சுட்டது)

kashyapan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

@அப்பாதுரை
//காஸ்பயன் சார் - உங்க கிட்டே பொக்கிஷமான துணுக்குகள் மூட்டை மூட்டையா கிடக்கு சார். அதான்.//

நல்லா சொன்னீங்க..

மொகலாய ஆட்சி இந்தியாவில் நிலை நிறுத்தப்பட்டபின், காஸ்யபன் சார் குறிப்பிட்ட வகுப்பு அமைதி, மத நல்லிணக்கதின் அவசியம் கருதி இருதரப்பிலும் இத்தகு பியூஷன்ஸ் உருவாக்கப் பட்டிருக்கலாம். மறுக்கவில்லை.இவை காஸ்யபன் சார் குறிப்பிட்ட மராட்டியதென்பகுதி, கன்னடத்தின்வடபகுதி,ஆந்திராவின் வடமேற்குப்பகுதி' மட்டுமன்றி தமிழ் நாடு, கேரளத்திலும் கூட தென் படுகிறது.

பல இடைச்செருகல்கள் பக்த விஜயங்களில்,அந்த சரித்திரங்களில் இதன் காரணமாகவே ஏற்பட்டிருக்கின்றன.. சில நம்ப முடியாத அளவுக்குக் கூட...

உதாரணத்துக்கு, ஐயப்பன் சரித்திரத்தில் அவருடைய தளபதிகளில் ஒருவனான வாபுரன் என்பான் 'வாவர்' எனும் முஸ்லிம் கொள்ளைக்காரனாக்கப் பட்டு, ஐயப்பன் அவரை வழிப்படுத்தி தோழனாய் ஏற்றுக் கொண்டதாய் ஒரு திரிபு உண்டு. இன்றும் ஐயப்ப பக்தர்கள் தங்கள் சபரிமலை யாத்திரையை எருமேலியில் வாவரின் தர்க்காவிலிருந்தே தொடங்குகிறார்கள். வாவரின் அனுமதியின்றி மலையேறக் கூடாது என்ற கட்டுப்பாடும் உண்டு..
ஐயப்பன் கோவிலுக்கு எதிரே வாவர் நடையும் உண்டு. ஆயிரக் கணக்கில் முஸ்லிம் சகோதரர்கள் அங்கு வருகிறார்கள். 'பகவானுக்கு ஜாதிமத பேதமில்லை' என்புதும் ஒரு ஐயப்ப கோஷம்..

வகுப்பமைதிக்கோ,சமரசமாயோ இவை உருவாகியிருந்தாலும் ,அவற்றின் நம்பகத்தன்மையையும் மீறி ஒரு சமூகநலமும் மதமார்ச்சர்யங்களை சமன்ப்படுத்துவதும் நிகழ்ந்தே வந்திருக்கின்றன.
அந்த வகையில் இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்னமும் சொல்ல இருக்கிறது.




மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி!
/வழக்கமான நகாசுக்கு நீங்கள் உட்படுத்தாத குறையை இப்போதும் உணர்கிறேன் /
வாசனையிலேயே சாம்பார் நன்றாக வந்திருக்கிறது என்று உணர்ந்ததால் உள்ளங்கையில் கொஞ்சம் விட்டு நக்கிப் பார்க்கவில்லை..

விடும்..

//அன்று நீங்கள் கடுகுக்குப் பதிலாக கவனக்குறைவாய் எள்ளை ரசத்திற்குத் தாளித்துக்கொட்டியது போல.//

அடுத்த அமாவாசை தர்ப்பணத்திற்கு உட்கார்ந்த போது, "டப்பாவுல எள்ளா இல்லே கடுகா" என்று கேட்ட என் மனைவிக்கும், உங்களுக்கும், அப்பாதுரைக்கும் எனக்கு ஒரு வித்தியாசமும் தெரிய வில்லை! ஒரு க்ரூப்பாத்தான் கிளம்பியிருக்கீங்க!

சிவகுமாரன் சொன்னது…

பின்னூட்ட இலக்கியம் பருகவே மீண்டும் வந்தேன்.

\\சொக்கவைக்கும் சிவகுமாரன்.//

நன்றி அப்பாஜி

\\\என் தம்பின்னா சும்மாவா?///


நன்றி மோகன் அண்ணா

பாரதசாரி சொன்னது…

அருமை :)
உள்ளடக்கத்தை பற்றி சொல்லும் முன்: இந்த நடையே ஒரு திரைபடம் பார்பது போல் இருந்தது!
மிக்க நன்றி மோஹன்ஜீ

பாரதசாரி சொன்னது…

கடைசியில் பாவம் தயாளு சாருக்கு வடை போச்சே ? :)

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html?showComment=1392429988876#c4485828933258341568

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html?showComment=1392429988876#c4485828933258341568

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html?showComment=1392429988876#c4485828933258341568

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
இன்று தங்களின் தளம் வலைசரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ முகவரி
http://blogintamil.blogspot.com/2014/02/blog-post_15.html?showComment=1392429988876#c4485828933258341568

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-