திங்கள், நவம்பர் 03, 2014

மீள்பயணம்
இரண்டாம் யௌவனமும் கடந்து

                                        கொண்டே இருக்கிறது.

ஓய்வூதியம் என்றோர் அவமானம்.

இதே வாழ்க்கையை மீண்டும் வாழ்வாயா

                                                  எனக் கேட்காதே.

சலிப்பாய் இருக்கிறது.

நானிருக்கிறேனே என நீ சொன்னால்,

                                அது உனக்கு கரிசனம்;

எனக்கோ அதுவே உதாசீனம்.


பொய்யைக் காட்டுகிறது கண்ணாடி

என் பிம்பம் எனக்குள்ளே.


கரையும் மேகங்களில் தொங்கிச்சென்ற பயணம்.

மிஞ்சி இருப்பதோ ஒரே ஆசை.....


எல்லாவற்றையும் கலைத்துவிட்டு

மீண்டுமொரு பயணம்......

புதிய முகங்கள்

புதிய கரங்கள்

புதிய காதல்

புதிய பார்வை

              இவற்றோடு எனது,

பழைய நட்புகளும்

பழைய கனவுகளும் கூடி


புறப்பட்ட இடம் நோக்கியே

மீள்பயணம் .

*****************
                காக்கைக் காதல்காக்கைகளுக்கு காதலுண்டா?

சரஸமோ சாகசமோ தெரியாத

முட்டாள் பட்சி !


காக்கைகள் புணர்ந்து

பார்த்ததுண்டா ?


காதலே தெரியாத காக்கைக்கு,

குயில்முட்டையா தெரியப்போகிறது?கருப்பாயிருந்தாலென்ன?

அவநம்பிக்கையில் ஒரு பக்கமாய்

வெறிப்பதை விடுத்து,

கண்ணுக்குள் கண் வைத்து

காலமழியப் பாரேன்....


இலக்கியத்துக் காதலெல்லாம்

இளகிவழிந்தே ஊரை நனைக்காதோ??

                                     ********************
                      மிச்சம்


விடிந்தபின்னும் எரியும் விளக்கு.

முடிந்தபின்னும் அசைபோடும் மனசு.

தாரத்திடம் தேடிய தாயின் சாயல்.

விருந்தில் வீசும் பசியின் வாசம்.

கனவில் தொலைந்த தூக்கம்.

நனவில் கனவின் ஏக்கம்.

காமத்தின் மிச்சம் கண்ணோடு.

காலத்தின் மிச்சம் மண்ணோடு.46 comments:

Durai A சொன்னது…

கவிதை மாதிரியே கவிதை.

Durai A சொன்னது…

முகத்திரையின் இரட்டை முதல் கவிதை ஜாடை.

காமத்தின மிச்சத்தில் கவிதையின் உச்சம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மீள் பயணம்
புதிய பார்வைகளை விதைத்துச்செல்கிறது..!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு,

'மாதிரி இருப்பதுவே இலக்கியம். மாறாது இருந்தாலோ இயற்கை!'

தினேஷ்குமார் சொன்னது…

காலக் கிடங்கில் நினைவுகள் ஆட்சி காணும் சுகம் இனிமைதான் புதியதோர் பார்வை அசைபோடும் ஆசா பாசங்கள் ...

மோகன்ஜி சொன்னது…

துரை ஜி!

//முகத்திரையின் இரட்டை முதல் கவிதை ஜாடை.

காமத்தின மிச்சத்தில் கவிதையின் உச்சம்//

நன்றிங்க! சுக்குல இருக்குது சூட்சமம்!
படத்துல இல்லாதது கவிதை.

உச்சத்துக்கு பிறகு மிச்சமா? மிச்சத்துக்கு பிறகு உச்சமா?

மோகன்ஜி சொன்னது…

நன்றி இராஜேஸ்வரி மேடம்.. இன்னமும் உங்க பூச்சி என் கண்ணுலே பறக்குது!

ரிஷபன் சொன்னது…

சிந்தனைத் தெறிப்பு.. சின்ன சின்ன கங்குகளாய் !

மோகன்ஜி சொன்னது…

மீண்டும் நன்றி தினேஷ்!

"காலக்கிடங்கு' தமிழோடு தொடரட்டும் உங்கள் சடுகுடு!

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்!
//சிந்தனைத் தெறிப்பு.. சின்ன சின்ன கங்குகளாய் !//

தெறிக்கும் கங்கிலே சின்னதென்றும் முன்னதேன்றும் உண்டோ! தத்தரிகிட தத்தரிகிட தத்தோம் !

G.M Balasubramaniam சொன்னது…

யௌவனத்தில் முதல் இரண்டு என்று உண்டா என்ன. எனக்கென்னவோ என்றுமே யௌவனம்தான்.இதே வாழ்க்கையை மீண்டும் வாழ்வாயா எனக் கேட்காதே (ஆனால்) இவற்றோடு எனது பழைய நட்புகளும் பழைய கனவுகளும் கூடி புறப்பட்ட இடம் நோக்கியே மீள் பயணம்...?

G.M Balasubramaniam சொன்னது…

காக்கைகளுக்குக் காதல் உண்டா?காக்கைகள் புணர்ந்து பார்த்ததுண்டா.இல்லை. ஆனால் இனவிருத்தியாகிறதே.

G.M Balasubramaniam சொன்னது…

மிச்சம் ரசிக்க வைக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

GMB சார்!

யௌவனம் இன்னமும் இருப்பதாய் ஆன நம்பிக்கையும் ஆட்டமுமே இரண்டாம் யௌவனம்!

'மிடில் ஏஜ் கிரைசிஸ்' என ஒன்று உண்டு. அதைச் சொல்ல வந்தேன்.. நீங்கள் கேட்கும் கேள்வியில் தான் கவிதை ஏதோ சொல்ல வருகிறது..

மோகன்ஜி சொன்னது…

GMB சார்!

//காக்கைகளுக்கு..... ஆனால் இனவிருத்தியாகிறதே//

காக்கைகளை விடுங்கள். மனிதர்கள் கூடத்தான் இனவிருத்தி செய்து கொண்டே இருக்கிறார்கள்...

என் கேள்வி காதலுண்டா என்பது...

இதை யோசிச்சுதான் பாரதி அன்னைக்கே சொன்னான் 'காக்கை குருவி எங்கள் ஜாதி' ..

நல்ல ஜாதிதான்!

மோகன்ஜி சொன்னது…

GMB சார்! நீங்க ரசிச்ச மிச்சம் தான் மற்றவர்களுக்கு! நன்றி சார்!

இளமதி சொன்னது…

வணக்கம் ஐயா!

என் வலைப்பூவில் உங்கள் வருகை கண்டு இங்கு வந்தேன்.
மிக்க நன்றி அங்கிட்ட உங்கள் கருத்திற்கும் வாழ்த்திற்கும்!

இங்கும்..!
அடடா...! சிந்தனைக் குதிரைகள் சிட்டாய் பறக்கின்றன!..
அற்புதம்! மிகவே சிந்திக்க வைக்கின்றீர்கள்! நல்ல கவிதைகள்!

மீள்பயணம் ஆசையே மிச்சம் இருப்பதென்ன?
வாழ்க்கையைக் காதலித்தே வாழு!

இனிய வாழ்த்துக்கள் ஐயா!

மோகன்ஜி சொன்னது…

வாங்க இளமதி!
நீங்கள் ஒரு கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய கவிஞர்.என் வாழ்த்துக்கள்.

உங்கள் அன்புக்கும் கருத்துக்கும் நன்றி. அடிக்கடி வாருங்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…


காலத்தின் மிச்சம் மண்ணோடு ‍..... சூப்பர் நச்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி மூவார். நலம் தானே...

ஸ்ரீராம். சொன்னது…

மீள்பயணம் நினைவுகளில்தான் சாத்தியம்! சுகமான கற்பனை.

காக்கைகள் இப்போது மாறி வருகின்றன
சுயநலம் பழகி விட்டன. காதல் மட்டும் பழகுவதே இல்லை!


மோகன்ஜி சொன்னது…

வாங்க ஸ்ரீராம் ! நன்றிங்க .

காக்கை பற்றி அண்மையில் எங்கோ படித்தேன். காக்கைக்கு சாதம் வைத்து காக்கைகள் வராமல் போக, கொஞ்சம் சிப்சோ மிக்ஸ்சரோ கூட வைத்ததும் கூட்டமாய் வந்து தின்றனவாம். காக்கை மாறித்தான் போய் விட்டது.

சில வீடுகளில், சிப்ஸ்,அப்பளம் தரும் பலத்தில் தானே, வைத்த சாம்பாரும் ரசமும் உள்ளே போகிறது? கொஞ்சம் சுவையாய் சமைத்தால் காக்கை ஏன் சிப்ஸ் கேக்குது?

Durai A சொன்னது…

//வாழ்க்கையைக் காதலித்தே வாழு!

ஆகா!

-'பரிவை' சே.குமார் சொன்னது…

கவிதை அருமை...
வாழ்த்துக்கள் ஜி....

கோமதி அரசு சொன்னது…

மீண்டும் பயணம், மீள் பயணம் அருமை.

மீண்டும் பயணம் வாய்க்கும் என்றால் குழந்தை பருவம் தான் வேண்டும். கவலையற்று விளையாடி களித்து இருந்த காலம் தான்.
kashyapan சொன்னது…

ஓய்வு பெற்று சிலவருடங்களில் இதய நோய் ! வலது கண்,நாக்கு,கை,கால் செயலிழந்து விட்டது ! முத்து மீனாட்சி தான் சோறு ஊட்டினார் ! கை ,கால்களை பயிற்சி கொடுத்து முகம் கண்களை நீவி விட்டு இப்போது தெளிவோடு பெசுகிறேன் ! நடக்கிறேன் ! எழுதுகிறென் ! இது கரிசனம் மட்டுமல்ல
மொகன் ஜி 1---காஸ்யபன்.


மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

கோமதி அரசு மேடம்! நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை.

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்! அண்ணியாரின் சேவைக்கு என் சிரம் தாழ்ந்த வந்தனங்கள். அது இந்த மண்ணின் பாரம்பரியம்.

கரிசனமாய் சொல்லப்படுவதையெல்லாம் நிராகரிக்கும் ஒரு மனநிலை கொண்டவன் வெளிப்பாட்டை, நிதர்சனத்தை மறுதலிக்கும் ஒரு குழப்பத்தையே சொல்ல வந்தேன்..இது. ஒரு மனோத்த்துவ சிக்கல்... ஒருகாலும் ஒப்புக்கொள்ளப்படாத நடுவயது நாகரீகம்.

நிலாமகள் சொன்னது…

நாற்பதைக் கடந்தாலே பரபரவென ஊருக்குக் கிளம்பும் பதட்டம் வந்துவிடுகிறது வாழ்வில். செய்ததை சரியாக செய்தோமா; செய்யாததை செய்வோமா...

இரண்டாம் யவ்வனத்துக்கு ஏங்கும் இதே மனசு தான் இரண்டாம் குழந்தைப் பருவத்துக்கும் நகர்கிறது.

அப்போது இதுகாலமும் வளர்த்துவந்த 'தான்' எல்லாம் மறந்தே போய்விடும். வாத்சல்யமான ஒரு சொல்லும் தேவாமிர்தமாகிவிடும்.

நிலாமகள் சொன்னது…

சொன்ன சொல்லைக் காப்பாற்ற மூன்று நாளுக்கொரு கணக்காய் மூன்று கவிதைகள்! மூன்றாவது ரொம்பக் கச்சிதம்.

மோகன்ஜி சொன்னது…

நிலா! எனக்கொரு கருத்துண்டு. எல்லோருமே 25 வயது வரை வாழ்வை எதிர்கொண்டு 'வாழ்ந்து' முடிக்கிறார்கள். அதற்கு பின் அவர்களின் அகவாழ்க்கை, வாழ்ந்ததின் எதிரொலியாகவே நகர்கிறது. புறவாழ்க்கையோ அனுபவம் ,வாய்ப்புகளால் பெரிதளவு மாறி வரும் போதிலும் அகவாழ்க்கை 25ஆண்டுகாலத்தின் நிழல் நீட்சி.

மோகன்ஜி சொன்னது…

நிலா!உங்க கருத்துக்காகத்தான் காத்திருந்தேன்.

அடுத்த கவிதை இன்றே பதியப்படும். எப்பூடி??

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கவலைகளே இல்லாத குழந்தைப் பருவத்தினை மீண்டும் பெற முடியாது என்று தெரிந்தும் அந்த ஏக்கம் வந்தபடியே தான் இருக்கிறது! :)

காக்கைக்கு காதல் உண்டா? பாசம் உண்டோ - அதனால் தான் தன் இனத்தினை அழைக்கிறதோ என்று நினைத்தால் - வந்தாலும், சிலவற்ற்றை கொத்தியே துரத்தி விடுகிறதே!

அருமையான கவிதைகள்......

மோகன்ஜி சொன்னது…

நன்றி நாகராஜ்..... ஏக்கம் இல்லையேல் வாழ்க்கையில்லை

சிவகுமாரன் சொன்னது…


\\கரையும் மேகங்களில் தொங்கிச்சென்ற பயணம்//.

வானவில் மனிதனா ?

கவிதைகள் ஒவ்வொன்றும் எளிமையாகவும் பொருள் நிறைந்ததுமாகவும் உள்ளன.

நிலாமகள் சொன்னது…

இது நாள்வரை இருந்த என் புரிதல், உங்க கருத்தை யோசிக்க முனைகிறது.

மோகன்ஜி சொன்னது…

வானவில் பயணிப்பதில்லை சிவா. அது வியாபிக்கின்றது. எல்லாப்பயணங்களுக்கும் சாட்சியாகி தாற்காலிகமாய் ஒதுங்குகின்றது. மீண்டும் வளையும். வாய்ப்பமையும் போது...

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிலா !

நன்கு யோசியுங்கள்.
விடாது வாசியுங்கள்.
ஞானம் யாசியுங்கள்.
தமிழை சுவாசியுங்கள்.

கீத மஞ்சரி சொன்னது…

இலக்கியக் காதலுக்கு ஏங்குவானேன்? காக்கைக் காதலுக்கே வாருங்களேன். காக்கைகளின் காதலை நீங்கள் அறிந்ததில்லையா என்ன?

கொளுத்தும் வெயிலில் ஊரடங்கிக்கிடக்குமொரு பின்மதியப் பொழுதினில் மாமரத்துக் கிளையில் அடர்பச்சை இலைகளின் மறைவில் இணையின் தலையை இதமாய்க் கோதிவிடும் காக்கைக் காதலனைக் கண்டதில்லையா நீங்கள்?

கோதும் சுகத்தில் அரைக்கண் மூடி சொக்கி சொக்கி விழும் காட்சியில் சோடியதன் சுகமறியக்கூடுமே... அவ்வப்போது கிளுகிளுப்பாய் அடித்தொண்டையில் ரகசியக் கரையலில் காட்சியின் ரசனை கூட்டுமே.. அந்த செல்லக்கொஞ்சலைக் கேட்டதில்லையா?

கீத மஞ்சரி சொன்னது…

மீள்பயணம் பற்றிப் பேசும்போதே மெல்லிய ஆயாசமும் வரிக்கு வரி தலைகாட்டுகிறதே... ஆயாசம் மேலிட்டாலும் அநாயாசமாய் மனம் தொடும் வரிகள். அருமை மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

கீதா! நன்றாகச் சொன்னீர்கள்.

//இலக்கியக் காதலுக்கு ஏங்குவானேன்? காக்கைக் காதலுக்கே வாருங்களேன். காக்கைகளின் காதலை நீங்கள் அறிந்ததில்லையா என்ன?

//கொளுத்தும் வெயிலில் ஊரடங்கிக்கிடக்குமொரு பின்மதியப் பொழுதினில் மாமரத்துக் கிளையில் அடர்பச்சை இலைகளின் மறைவில் இணையின் தலையை இதமாய்க் கோதிவிடும் காக்கைக் காதலனைக் கண்டதில்லையா நீங்கள்? //

கவிதையில் காக்கை ஒரு உருவகம். நீங்கள் குறிப்பிடும் யாருக்கும் புலப்படாத,ரகசியக் காதலை... கேள்வி கேட்கிறது.

யானைக் காதலை எழுதி வச்சிருக்கேனே! படிச்சா ரொம்பத் திட்டுவீங்க !மோகன்ஜி சொன்னது…

கீதா! ஆயாசமும் ஆராட்டமும் கொண்ட ஒரு மனவோட்டத்தைக் கவிதையில் பதிவிட்டேன்...

எனக்கு ஆயாசம் இருக்கவே வாய்ப்பில்லை கீதா ! காணுவதை உள்ளே அசைபோட்டு கலங்கி,தவித்து, வார்த்தைகளில் உணர்ச்சிகளை மடைமாற்றி ஆசுவாசம் கொள்ளும் எளிய சாலைப் பாணன் நான்.

இதைப்பதிவிடுவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்தான் ஒரு தெலுங்குப் பாட்டை பாடி வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டேன். அது நம்மவூர்" வாடி வாடி நாட்டுக் கட்ட, வசமா வந்து மாட்டிக் கிட்ட" ரகப் பாட்டு!!

நிலாமகள் சொன்னது…

நன்கு யோசியுங்கள்.
விடாது வாசியுங்கள்.
ஞானம் யாசியுங்கள்.
தமிழை சுவாசியுங்கள்//

நன்றி தமிழ் வேந்தே!!

அது வியாபிக்கின்றது. எல்லாப்பயணங்களுக்கும் சாட்சியாகி தாற்காலிகமாய் ஒதுங்குகின்றது. மீண்டும் வளையும். வாய்ப்பமையும் போது...//

காணுவதை உள்ளே அசைபோட்டு கலங்கி,தவித்து, வார்த்தைகளில் உணர்ச்சிகளை மடைமாற்றி ஆசுவாசம் கொள்ளும் எளிய சாலைப் பாணன் நான்.//

திரும்பத் திரும்ப வருமெனக்கு 'ஆஹா' என்றிட ஏதேனும் கிடைத்தபடியே.

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிலா! ஒரு வாரம் கல்கத்தா நகரில் இருந்தேன். பழைய சிநேகிதங்களுடனும், சிஷ்யமாருடனும். ஓரிரு நாட்களில் அடுத்த பதிவுடன் சந்திப்பேன். ஸ்வாமியே சரணம் ஐயப்பா !

Geetha Sambasivam சொன்னது…

காக்கைக் காதலை நானும் கண்டிருக்கிறேன். வேறொரு காக்கையைத் தான் துரத்துமே தவிர தன் குடும்பத்துக் காக்கை என்றால் துரத்துவதில்லை.
அருமையான கவிதைப் பகிர்வுக்கு நன்றி. மனதின் விரக்தி கவிதையில் தெரிகிறது.