சனி, மார்ச் 21, 2015

திருக்குறளிசை

'ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே', 'ஒவ்வொரு பூக்களுமே  சொல்கிறதே', 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள்'....... இன்னும் எத்தனையெத்தனை நினைவிலகலாப் பாடல்கள்??....இவற்றையெல்லாம் இசையமைத்தவர்  இசையமைப்பாளர் திரு பரத்வாஜ் அவர்கள் என்பதை நான் சொல்லியா தெரிய வேண்டும்?

 தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம், என்று பல மொழிகளிலும் தன் இசையமைப்பால் முத்திரை பதித்தவர் இவர்.இவரின் பாடல்களில் 'மெலடி என்பது அடிநாதமாய் இதயம் வருடும் .மனதை  மென்தென்றலாய் வருடிச்செல்லும்.

தமிழக அரசின் 'கலைமாமணி' உட்பட இவரின்இசைக்கு பல அங்கீகாரங்கள். இவர் இசையில் வெளிவந்த 'தி லெஜன்ட் ஆப் புத்தா' ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. பிலிம் பேர் விருதுகள், சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகள் பலமுறை இவருக்கு வழங்கப் பட்டிருக்கிறது. பல தேசிய விருதுகளை அள்ளியது இவர் இசையமைத்த 'ஒவ்வொரு பூக்களுமே  சொல்கிறதே' பாடல்.

 23 நாடுகளில் இசைப்பயணம், இவர் துவக்கியிருக்கும் இசைப்பள்ளி, இசை சார்ந்த பணிகளுக்காக இவர் உருவாக்கி நிர்வகிக்கும் 'பரத்வராஜ் பவுண்டேஷன்'...  இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் திருக்குறளுக்கு இசையமைத்து, உள்ளம் தோறும் வள்ளுவம் எனும் உயர்நோக்கில், 'ஒரு குறள் ஒரு குரல்' என்று புதுமைஉச்சம் தொட்டிருக்கிறார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மும்பாய் தமிழ் சங்கத்தில் திரு.பரத்வாஜ் அவர்கள் இசையமைத்த ‘திருக்குறளிசை’ குறுந்தகடு வெளியீட்டு விழா  விமரிசையாக நடைபெற்றது. அறத்துப்பாலிலுள்ள 380 குறள்கள்,அதற்கான 380 விளக்க உரைகளுடன் முதல் கட்டமாய் வெளியிடப் படுகிறது.  விழா துவக்கும் நேரத்திற்கு முன்னதாகவே வருகைதந்த திரு பரத்வாஜ் அவர்களுடன் மனம்விட்டு உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அவரின் இசையைப் போன்றே அவரின் உரையாடல் கூட மென்மையாய் ஆற்றொழுக்காய் இருந்ததும் ஒரு ஆச்சரியம்.

திருநெல்வெலி ரவணசமுத்திரத்தில் பிறந்து,டில்லியில் வளர்ந்து சி.ஏ.படித்து முடித்தவர் பரத்வாஜ் .  தமிழ்த்திரை இசைக்கு மற்றுமொரு சுக ராகமாய் வந்து சேர்ந்தார். திரையிசைப் பயணத்தின் உச்சத்தில் இருந்தபோதே இவருக்கு திருக்குறளை முதன்முதலாக அறிய வாய்த்தது. இரவுபகலாய் நினைவின் தம்புரா இடைவிடாது குறளின் சுதியை மீட்டியபடி இருக்க, சட்டென்று அவர் வாழ்க்கைப்பூரணத்துவத்தின் கணத்தைக் கண்டுகொண்டார். ஒவ்வொரு  குறளுக்கும் துல்லியமான தாளக்கட்டு இருப்பதை உணர்ந்தார். திருக்குறளுக்கு அனைவர் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம், மரபிசை,மெல்லிசை கொண்டு இசையமைத்து அடுத்த தலைமுறைக்கும் வள்ளுவன் குரலை கொண்டு சேர்க்கும் எண்ணம் கருக்கொண்டது. 
மூன்றாண்டுகளின் தவமாய் இந்த இசையமைப்பு உருவாகி இருக்கின்றது. உலகெங்கிலும்  இருக்கும் பல பாடகர்களைக் கொண்டு ஒவ்வொரு குறளையும் பாட  ஒவ்வொருபாடகர்  என பாடச்செய்து, அந்தந்த குறளுக்கு விளக்கவுரையை ஒவ்வொரு  அறிஞரை சொல்லவைத்து பதிவு செய்திருக்கின்றார். கடவுள்வாழ்த்தின் ஒவ்வொரு குறளுக்கும் ஒரு மதத்தலைவரென விளக்கம் சொல்லப் பதிவு செய்திருப்பது ஒன்றே பரத்வாஜ் அவர்களின் நுண்ணுணர்வுக்கு சான்று. உலகப் பொதுமறைக்கு சூட்டி அழகுபார்க்க வேறென்ன அணிகலன் உகந்தது?!  'வான்சிறப்பு' குறளொன்று அமிர்தவர்ஷனி ராகத்தில் பூமாரி பொழிகின்றது. இயல்பான,எளிமையின் அழகோடு இவரின் குறளிசை வள்ளுவருக்கு  வெஞ்சாமரம் வீசுகிறது.குமரிக்கடலில் நெடுநெடுவென நின்றபடி தமிழினத்தைக் காவல் காக்கும் தெய்வப்புலவனுக்கோர் தாலாட்டாய் ஆராட்டாய் இழையும் இசைஆராதனை.
எஸ்.பி.பி, சித்ரா மற்றும் பிரபல பின்னணி பாடகர்களும் , கர்னாடக இசைப்பாடகர்களும் இந்தக் குறள்களைப் பாடியிருக்கிறார்கள். இந்த இசையமைப்புக்கு பாடிய எவருமே சன்மானம் பெறாமல் பாடிக் கொடுத்துள்ளார்கள் என்று நெகிழ்ந்தார் பரத்வாஜ். இத்தனை நாட்களும் நீங்கள் இசையமைத்ததெல்லாம் இந்தப் பெரும்பணிக்காகத் தான் என்றேன். பற்றிய அவர் கைவிரல்களினூடே அவர் பெருங்கனவு தகித்தது. ஒவ்வொரு தமிழன் வீட்டிலும்  இந்தக் குறளிசை ஒலிக்க வேண்டுமென்பதே தன் அவா என அவர் சொன்னபோது 'ஐயன் அருள் ' என்று மனம் வழக்கம்போல ஐயப்பனை பிரார்த்தனை செய்தது என் மனம். வள்ளுவர்கூட 'ஐயன்' தானே !
பொருட்பால் மற்றும் இன்பத்துப்பால் குறள்களுக்கும்  இசையமைப்பு முடிந்து பாடல்பதிவு மும்முரமாய் நடந்தவண்ணம் இருப்பதாகவும் விழாவில் பேசும்போது குறிப்பிட்டார். அத்தனைப் பள்ளிகளிலும் இந்த குறளிசை ஒலிக்க வேண்டும் என்று அவர்சொன்னபோது 'ததாஸ்து' என்று தேவதைகள் ஆசீர்வதித்ததைக் காதாறக் கேட்டேன்!
இந்த 'திருக்குறளிசை'  மொபைல் அப்' ( mobile App) ஆக விரைவில் வெளியிட இருப்பதாயும் பரத்வாஜ் சொன்னார். தரவிறக்கிக் கொண்டால், உள்ளுந்தொறும் உவகை தரும் குறளை உளமாரக் கேட்கலாமல்லவா? 
பேச்சினூடே அவர் சொன்ன இசையமைப்பு நுணுக்கங்களையும், மக்களிடையே திரையிசைப் பாடல்களின் பெரும் தாக்கத்தை உணர்த்தும் சம்பவங்களையும் விவரிக்க இன்னும் இரு பதிவுகளாவது போடவேண்டும்.
வீடு திரும்பும்போது  காரிலேயே அந்தக் குறுந்தகடைப் போட்டுக் கேட்டுவிடும் ஆவலைஅடக்கிக் கொண்டேன். கர்மசிரத்தையுடன் சாங்கோபாங்கமாய் செய்யவேண்டிய வேலைஅல்லவா அது? எண்ணத்தை மாற்றிக்கொண்டு பரத்வராஜ் அவர்கள் இசையமைத்த பாடல்களை யோசித்துப் பார்த்தேன். 
1. ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்
2.காதல் மழையே காதல் மழையே எங்கே விழுந்தாயோ?”
3.கலக்கப் போவது யாரு? ஜெயிக்கப் போவது யாரு
4.சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
5. ஓ போடு.... ஓ போடு....
6. காடு திறந்தே கிடக்கிறது … காற்று மலர்களை உடைக்கின்றது
பதிவின் ஆரம்பத்திலேயே தான் இன்னமும் சில பாடல்களை சொல்லியிருக்கின்றேனே.....
கூடிய விரைவிலேயே பரத்வாஜ்  லிஸ்ட்டை எல்லோரும்  இப்படி சொல்லப்போகிறார்கள் பாருங்கள் ....
1.கற்றதனாலாய பயன் என்கொல் வாலறிவன்
   நற்றாள் தோழாஅர் எனின்.
2.அறனென்ப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
   பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

3.உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன 
   மடந்தையொடு எம்மிடை நட்பு.

4.நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் 
    சினைப்பது போன்று கெடும்.


.......இந்த நான்கு மட்டும் தானா?   மீதமுள்ள 1326 குறள்களைக் கூடத் தான்!!

பரத்வாஜ் அவர்களுக்கு இந்த மாபெரும் சாதனைக்காக அன்பும் , நன்றியும்,வாழ்த்துக்களும். இந்த நிகழ்ச்சியை உயர்ந்த இசையமைப்பின் கச்சிதத்தோடு நடத்திய மும்பை தமிழ்ச்சங்க சகோதரர்கள் திரு ஆர்.கண்ணன், திரு சாந்தாராம், திரு பாலு, திரு மைக்கேல் அந்தோணி, திரு ஞாயிறு இராமசாமி போன்றோர் போற்றுதலுக்குரியவர்கள்.

'இசைபட' வாழ  முயல்வோம்.

40 comments:

Bagawanjee KA சொன்னது…

பரத்வாஜ் நம்பிக்கை வீண் போகாது .தமிழ் கூறும் உலகமெல்லாம் அவர் இசை ஒலிக்கத்தான் போகிறது .முன்னோட்டம் தந்த உங்களுக்கும் அவருக்கும் வாழ்த்துகள்!

Geetha Sambasivam சொன்னது…

முற்றிலும் புதிய முயற்சி. அதைப் பகிர்ந்த உங்களுக்கு என் உளமார்ந்த நன்றி. அரிய இந்தத் தொண்டு சிறக்கப் பிரார்த்தனைகள்.

பெயரில்லா சொன்னது…

https://www.youtube.com/watch?v=4fNitJIhxEA

all 1330 in an easily memorizing raagam.

கோமதி அரசு சொன்னது…

பரத்வாஜ் அவர்களுக்கு இந்த மாபெரும் சாதனைக்காக அன்பும் , நன்றியும்,வாழ்த்துக்களும்.//

நாங்களும் சொல்லிக் கொள்கிறோம் அவருக்கு வாழ்த்துக்களை.
எங்கும் ஒலிக்கட்டும் ஐயன் குறள்.

பரத்வாஜ் அவர்களைப்பற்றி பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்

...... :)

மிகவும் அருமையான இசை அமைப்பாளர் திரு பரத்வாஜ் அவர்கள் பற்றிய தங்களின் இந்தப்பதிவும் மிக அருமையாகவே உள்ளது.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

பரிவை சே.குமார் சொன்னது…

திரு.பரத்வாஜ் அவர்களை வாழ்த்துவோம்...
நல்ல பகிர்வு அண்ணா...

sury Siva சொன்னது…Bharathwaj is a creative genius.

An innovative musician with a passion for Tamil Literature i am sure his musical journey embroidered by his works will soon be reverberating at every Tamil Home.

subbu thatha

மோகன்ஜி சொன்னது…

வாங்க பகவான்ஜி!உங்கள் வாழ்த்துக்கு நன்றி! நலம்தானே?

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்.. உங்கள் எண்ணம் பலிக்கட்டும்.வருமானத்தை மட்டுமே குறியாகக்கொண்டு பிழைப்புகள் நடக்கும் இக்காலத்தில், ஆத்மசந்துஷ்டிக்காக மேற்கொள்ளப் படும் இத்தகு முயற்சிகளே நமக்கு நம்பிக்கை அளிக்கின்றன.

மோகன்ஜி சொன்னது…

பெயரில்லா சார்! தகவலுக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

கோமதி மேடம் !இந்தப் பதிவின் இணைப்பை திரு பரத்வாஜ் அவர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உங்கள்வாழ்த்துக்களை அவரே பார்த்து ஏற்றுக் கொள்ளட்டும். நன்றி மேடம்.

மோகன்ஜி சொன்னது…

வைகோ சார்! வாழ்த்துக்கு நன்றி

மோகன்ஜி சொன்னது…

குமார்! நன்றிங்க.பரத்வாஜ் நம் போற்றுதலுக்குரியவர்.

மோகன்ஜி சொன்னது…

சுப்பு தாத்தா! உங்களைப் போன்ற பெரியவர்களின் ஆசியே பரத்வாஜ் போன்ற வெற்றியாளர்களுக்கு தேவை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இது மிகப் பெரிய சாதனை...! உலகமெங்கும் இந்த குறளிசை ஒலிக்க வேண்டும்... ஒலிக்கும்...

அவரது ஆர்வம் மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் பல...

அப்பாதுரை சொன்னது…

கேள்விப்பட்டது இல்லை.
நான் அறிய வேண்டியது அதிகம்.

(அதற்காக ஓ போடு பாட்டா? ஆகா! இதான் சாதனையா?)

G.M Balasubramaniam சொன்னது…

காதுக்கு இனிமையான யார் பாடலையும் ரசிப்பதுண்டு. இன்னவர் பாடல் என்று பகுத்துப் பார்ப்பதில்லை. அப்படியும் பார்த்தல் அவசியம் என்று தோன்றுகிறது. அதுதானே புகழ் ஏணியின் முதல் படி.பெயர் பெற்றவர்கள் படைப்புகளை மட்டும் நோக்கிப் போனால் பிறர் எங்ஙனம் புகழ் பெறுவது.?மோகன் ஜியின் புரிதலில் எனக்குக் குழப்பம் இல்லை.

மோகன்ஜி சொன்னது…

உண்மை தனபாலன்! இது ஒரு பெரிய சாதனையே!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை காரு !'ஓ போடு' சேர்க்கும் போதே நினைச்சேன்.. ஏறுவீங்கன்னு... அந்தப்பாட்டு வந்தபின், தமிழகமே ஓ போட்டுக் கொண்டிருந்தது. அண்மைக்காலம் வரை விழா மேடைகளில் கூட தலைவருக்கு ஒரு ஓ போடுங்க என ஒருவர் ஊக்கப்படுத்த,அனைவரும் கோரசாய் 'ஓ' என்று குரல் கொடுக்கும் நிகழ்வுகள்.

'ஓ' என்பது 'வாழ்க!' போடுவதை விட சுலபமாய் இருப்பதாலோ, 'ஓம்' போடுவதாய் ஒரு ஆன்மீக டச் இருப்பதாலோ என்னவோ பாப்புலர் ஆகிவிட்டது போல...

குரளைப் பற்றியோ இந்த முயற்சி பற்றியோ எழுதியிருக்கிறது கண்ணில் படல்லியாக்கும்?

sury Siva சொன்னது…

//குரளைப் பற்றியோ இந்த முயற்சி பற்றியோ எழுதியிருக்கிறது கண்ணில் படல்லியாக்கும்? //

வி ஸீ வாட் வீ வாண்ட் டு ஸீ

அப்படின்னு சொல்லுவா. அது யதார்த்தம். ஸ்வாவாபிகம் .

அதுக்காக கொவிச்சுக்கலாமா !!

அவருக்கும் ஓ போட்டு விடுங்கோ...

ஓஹோ...அப்படியா ... அப்படின்னு சொல்லிடுங்களேன். !!

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்!யார் புகழை சொல்கிறீர்கள்? இசையமைப்பாளர் பரத்வாஜுக்கு வேண்டியஅளவு புகழ்க் இருக்கிறது.என்னை யார் புகழப் போகிறார்கள் என்ற நிச்சயமும் எனக்கு உண்டு...ஒருவேளை திருவள்ளுவரை சொல்கிறீர்களோ??

மோகன்ஜி சொன்னது…

சுப்பு தாத்தா சார்!

//வி ஸீ வாட் வீ வாண்ட் டு ஸீ//

ஓ....ஓ... ஓஹோ....

மனோ சாமிநாதன் சொன்னது…

நல்லதொரு தகவலைப்பகிர்ந்து கொண்டதற்கு அன்பு நன்றி!
இந்த குறுந்தகடு சென்னையில் எங்கு கிடைக்கும்? திரு பரத்வாஜ் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவியுங்கள்!
திரு பரத்வாஜ் இசையமைத்த 'வெண்ணிலவின் பாடல்' கேட்டிருக்கிறீர்களா? மிகவும் இனிமையான பாடல் அது.

மோகன்ஜி சொன்னது…

நன்றி மனோ மேடம் ! சென்னையில் எங்கு கிடைக்கும் என்று விசாரித்து சொல்கிறேன் . சற்றுமுன் திரு பரத்வாஜ் அவர்கள் இந்தப்பதிவையும் கருத்துக்களையும் கண்ணுற்று, மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து செய்தி அனுப்பியிருக்கிறார்.

'வெண்ணிலவின் பாடல் ' அவரின் சிறந்த பாடல்களுல் ஒன்றல்லவா.

கீத மஞ்சரி சொன்னது…

பரத்வாஜ் அவர்களின் அற்புதமான இந்த முயற்சிக்கு மனமார்ந்த பாராட்டுகள். எதையும் உரையாய் உரைநடையாய் செவியேற்றுவதை விடவும் பாடலாய் இசையாய் ஏற்றுவது எளிது.

இந்த சமயத்தில் ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது. எங்கள் உறவினர் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது நடந்த சம்பவம். படிப்பில் ஆர்வமில்லாத அவனைப் படிக்கவைக்க அவ்வளவு கஷ்டப்படுவார் அவன் அம்மா. மறுநாள் தமிழ்த்தேர்வு. அவனை அறையில் விட்டு படிக்கச்சொல்லிவிட்டு என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறார் அவன் அம்மா. அறையிலிருந்து மன்மதராசா பாடல் ஒலிக்கிறது. என்னடா உன்னைப் படிக்கச்சொன்னால் மன்மத ராசா பாட்டு பாடுறே... உதை வேணுமா? இது அம்மா. நான் பாடம்தான் படிக்கிறேன். எத்தனை தடவை படிச்சாலும் திருக்குறள் மண்டையில் ஏறலை. மன்மத ராசா பாட்டு ஸ்டைலில் பாடினால் ஈஸியா ஏறுது என்கிறான் அவன். அப்போது நாங்கள் பேசிக்கொண்டோம். இந்த குறள்களை இதுபோல் பிள்ளைகளுக்கு எளிதில் மனத்தில் ஏற்றும் வண்ணம் யாராவது இசையமைத்து பாடல்களாக வெளியிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று.

அது ஆயிற்று ஆறேழு வருடங்கள். இப்போது அவன் கல்லூரி முடிக்கப்போகிறான். இப்போது இந்த அரிய முயற்சியைப் பற்றி அறிந்து வியப்பும் மகிழ்ச்சியும்தான் எனக்கு. மாணவர்கள் மட்டுமல்ல, வாழ்க்கையின் நுணுக்கத்தைக் கற்றுத்தரும் அற்புத குறள்களை மறந்துவிட்ட பலருக்கும் உதவும் பெருமுயற்சி. பகிர்ந்த தங்களுக்கு மிகவும் நன்றி மோகன்ஜி.

நிலாமகள் சொன்னது…

பரத்வாஜ் அவர்களுக்கு இந்த மாபெரும் சாதனைக்காக அன்பும் , நன்றியும்,வாழ்த்துக்களும். //

வழிமொழிகிறேன்.

Aadhiraa Mullai சொன்னது…

அன்பு ஜீ,

வணக்கம். அச்சச்சோ... நீங்க மும்பையில்தானா.
இந்த மாதம் முதல் தேதி அதாவது மார்ச் 1 ஞாயிறு கவியரங்கத்தில் நான் பங்கேற்றேன். கவியரங்கத் தலைமை. தெரியாமல் போச்சே ஜீ. அன்பு நண்பர் ஞாயிறு இராமசாமி மிக அழகாக நிகழ்வை அமைத்திருந்தார்.

http://www.akaramuthala.in/modernliterature/kavithai/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE/

http://www.akaramuthala.in/nikazhvukal/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/Aadhiraa Mullai சொன்னது…

இசையமைப்பாளர் பரத்வாஜ் அவர்களின் இம்முயற்சி மிகவும் பாராட்டுக்குரியதும் போற்றுதற்குரியதும். இது தொடர்பாகவும் ஒரு தகவல்.

*******நானும் இந்த திருக்குறள் இசைப்பேழையில் ஒரு குறளுக்கு விளக்கம் சொல்லியுள்ளேன் என்பதில் பெரிய மகிழ்ச்சி.*********

https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/10349198_724559184252952_295022821529000944_n.jpg?oh=389d537e96f61c95ce2144b10db2919c&oe=55B44E9A&__gda__=1437953537_053130f27dd361ec6032a6f3ec6a9d51

https://www.facebook.com/photo.php?fbid=724559347586269&set=pcb.724562750919262&type=1&theater

ஞாயிறு இராமசாமி அவர்கள் அழைத்தார்கள். செல்ல முடியவில்லை.

மோகன்ஜி சொன்னது…

கீதமஞ்சரி ! உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி ! நீங்கள் குறிப்பிட்டது போல் இசைவழியே தகவல்களை நினைவில் நிறுத்துவது எளிது.

இந்தக்காரணத்தினால் தான் வேதங்கள் குறிப்பிட்ட தாளக்கட்டுடன் காலம்காலமாய் நிலைத்திருக்கிறது. வைத்திய சாஸ்திரம், ஜோதிஷம் போன்றவை பாடல்களாய் வெண்பாக்களாய் தலைமுறைகளாக நிலை பெற்றிருக்கின்றன.

மிக பொருத்தமாய் மன்மத ராசா மைந்தனைக் குறிப்பிட்டிருந்தீர்கள். சந்தோஷம் கீதமஞ்சரி!

மோகன்ஜி சொன்னது…

வாங்க நிலா! வந்து வழிமொழிஞ்சிட்டு அப்படியே பூடறதா ?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஆதிரா! நலம் தானா? நான் மும்பையில் ஒரு காலும் ஹைதராபாதின் ஒரு காலுமாய் ஆடிக்கொண்டிருக்கிறேன்.

நீங்கள் மும்பை வந்திருந்தது தெரியாமல் போயிற்று. அதற்கு முந்தியநாள்தான் மும்பை வந்தேன். சந்தித்திருக்கலாம். பரத்வாஜ் அவர்களின் நிகழ்ச்சிக்கும் திரு ஞாயிறு இராமசாமி அவர்கள் பிரயாசைப் பட்டிருக்கிறர்ர் என அறிந்தேன்.

சிலகாலம் முன்பு நான் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது தான் அவர் பரிச்சயம். எளிய மனிதர். நீங்கள் குறள்விளக்கம் சொன்னதற்கும் பாராட்டுகள். அன்பு.

Ezhil.v சொன்னது…

கீதா சொல்லியிருப்பது போல் வரும் தலைமுறையினருக்கு மிக எளிதாய் சென்று சேரும வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவிருக்கும் இசையமைப்பாளர் பரத்வாஜ்க்கு நன்றியும் வாழ்த்துக்களும்

sury Siva சொன்னது…

அடியேன் சுப்பு தாத்தாவும்
எனக்குத் தெரிந்த கர்நாடக சங்கீத மெட்டுக்களில்
ராகங்களில், திருக்குறளைப் பாடி மகிழ்ந்திடத்
துவங்கி இருக்கிறேன்.

இன்று ஸ்ரீராம நவமி.

ராமன் அருளுடன் இது என்றோ நாள் நிறைவு பெறலாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

முதல் குறள் ஹம்ச வர்த்தினி ராகத்தில் துவங்குகிறது.

சுப்பு தாத்தா.

sury Siva சொன்னது…

அடியேன் சுப்பு தாத்தாவும்
எனக்குத் தெரிந்த கர்நாடக சங்கீத மெட்டுக்களில்
ராகங்களில், திருக்குறளைப் பாடி மகிழ்ந்திடத்
துவங்கி இருக்கிறேன்.

இன்று ஸ்ரீராம நவமி.

ராமன் அருளுடன் இது என்றோ நாள் நிறைவு பெறலாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு

முதல் குறள் ஹம்ச வர்த்தினி ராகத்தில் துவங்குகிறது.

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

வாங்க எழில்! நீங்கள் சொல்வது போல் இது மிகவும் போற்றத் தக்க முயற்சி என்பதில் ஐயமில்லை

மோகன்ஜி சொன்னது…

சுப்புத்தாத்தா ! மிக்க மகிழ்ச்சி. குரல் பதிவு செய்திருக்கிறீர்கள் தானே ! பகிருங்கள்... கேட்டு விசிலடிக்க நான் ரெடி.....

Durai A சொன்னது…

'ஓ போடு'வும் ஒரு மைல்கல் தான். சாதனையாளர் அடையாளமா என்பதே கே.

மற்றபடி திருக்குறள் பாட்டெல்லாம் ஆராதிக்கப்பட வேண்டியது தான்.

ஓ தவிர நீங்க குறிப்பிட்ட பாட்டுக்கள்ல மிச்ச எதுவும் தெரியாதுன்றது வேறே.

மோகன்ஜி சொன்னது…

ஒத்துக் கொள்கிறேன் .பாஸ். ' ஓ போடு' பாடலை வைத்து மட்டும் வைத்து சாதனையை கணிக்கமுடியாது. ப்ராபல்யத்திற்கும் சாதனைக்கும் இரு வேறு வாசல்கள் அல்லவா? அவர் இசையமைத்த பெரும்பான்மையான பாடல்கள் அழகான மெலடிகள்... பதிவில் குறிப்பிடப்பட்ட பாடல்களை ஒருமுறை கேட்டுப்பாருங்கள். மெல்லிசையில் உங்கள் ரசனை நான்றிவேன். உங்களுக்குப் பிடிக்கும்.

Unknown சொன்னது…

அண்ணா சிடி எங்கே கிடைக்கும் plz enakku konjam pone number அனுப்புங்கள்

jerome fernando சொன்னது…

M jerome..9952106699