“வரவர உன் அழிச்சியாட்டியம் தாங்க முடியல்லே. உன் அப்பாவும் தாத்தாவும் கொடுக்குற செல்லத்தில் கொட்டம் ஜாஸ்தியாயிடுத்து. இனிமே சங்கரை அடிப்பியா?”
விசிறிக் காம்பால் காலில் ஒன்று போட்டாள் என்றுமே அடிக்காத என் அம்மா.
அடிபட்ட அவமானம் வலியை விட அதிகமா இருந்தது .
“அவன் என்ன பண்ணினான் தெரியுமா?” பொங்கும் கோபத்தில் குரல் உயர்த்தி கூவினேன்.
காலில் மேலும் ஒன்று விழுந்தது.
என் நியாயத்தை கேட்க அவள் தயாரில்லை.
“அவன் தான் முக்கியம்னா என்னை என் பெத்தே!”
“உன்னைப்போய் பெத்தேனா? தவிட்டுக்கு வாங்கினேன் போடா!”
“போன்னு தானே சொன்னே! போய்ட்டேன்னா கேட்கக் கூடாது”
“கொட்டுமேளத்தோட போ! யாரு வேணாம்னா? வயிறு காஞ்சா தானா வருவே.”
அதிர்ந்தேன்.... இப்படி என்றும் நிகழ்ந்தது இல்லை. என் அம்மா இப்படி என்னை நடத்தியதில்லை. பாராட்டுகளிலேயே சுகம் கண்டவனுக்கு இது தாளவில்லை.
எனக்கு அப்போது வயது பத்து. தம்பி சங்கருக்கு வயது எட்டு .
என் ஆளுமையையும் அதிகாரத்தையும் அவன் மீறியவனில்லை. ஏதோ ஒரு எம்ஜியார் சிவாஜி சண்டையில் என்னிடம் அவன் அடிபட்டு, அம்மாவின் பஞ்சாயத்தில் அநியாயத் தீர்ப்பு!
ஒரு வெற்றி புன்னகையுடன் இடம் பெயர்ந்த தம்பி....
வேறு வேலைப் பார்க்க அடுக்களை புகுந்த அம்மா.
சுயஇரக்கம் பிடுங்கித் தின்றது. நான் போனால் நஷ்டம் இல்லையாமே?? நான் போனால் என் அப்பாவுக்கும் தாத்தாவுக்கும் என்ன பதில் சொல்வாள்?
எனக்காய் எல்லோரும் தவிக்க வேண்டும்... என் அருமை உணர வேண்டும். நான் வீட்டைவிட்டு போகத்தான் வேண்டும்..
முடிவு செய்து விட்டேன்.
விறுவிறுவென்று மாடிக்கு சென்றேன்.
தீபாவளிக்கு எடுத்திருந்த புதுசட்டையும், நிக்கரும் அணிந்தேன்.
அம்மா வாங்கித் தந்த நீலக்கல் வைத்த வெள்ளி மோதிரத்தைக் கழற்றி விளக்கு மாடத்தில் வைத்தேன்.
விபூதி இட்டுக் கொண்டேன். அழுகையின் செருமல் அடங்கி விட்டிருந்தது. நான் சேகரித்து வைத்திருந்த தீப்பெட்டி லேபில்களையும் திருவிளையாடல்,எங்கவீட்டுப் பிள்ளை பிலிம் துண்டுகளையும் கால்சட்டைப் பையில் திணித்துக் கொண்டேன். சரசரவென்று சாரைப்பாம்பு போல் வீதிக்கு வந்து விட்டேன்.
அது கடலூரின் பிரதான வீதி. கமிட்டி பாய்ஸ் ஸ்கூல் கடந்து, கழுத்து மாரியம்மன் கோயில் கடந்து ,பீமவிலாஸ் கடந்து கெடிலம் பாலம் வரை வந்துவிட்டேன்.. ஏதும் இலக்கில்லை. எந்த சொந்தக்காரர் வீட்டுக்கும் போகக் கூடாது. இந்த அம்மாவின் மீதுள்ள கோபத்தை தணியவிடக் கூடாது.. தீர்மானித்து விட்டேன்.
அந்த ஞாயிற்றுக்கிழமையின் கோடைவெய்யில ஏறத்தொடங்கிய முன்பகல்... .நேராக மூன்று மைல் தொலைவில் இருந்த திருவஹீந்த்ரபுரம் கோவிலை அடைந்தேன்.
அது அற்புதமான வைணவத் திருத்தலம். கீழே தேவனாதச்வாமி கோவிலும்,எதிருள்ள குன்றின் மேல் ஹயக்ரீவர் சன்னதியும் அமைந்த மனோரம்மியமான கோயில் அது.
குன்றின் படிகளில் ஏறினேன். அண்ணாந்து பார்க்க யாரும் கண்ணுக்கெட்டிய வரையில் தென்படவில்லை. பத்தாவது
படிக்கட்டிலேயே அமர்ந்து விட்டேன்.
அது வரை பொங்கி வந்த ஆற்றாமை தணிந்து,மேற்கொண்டு என்ன செய்யலாம் எனும் சிந்தனை எழுந்தது.
“ஏய்! யார்ரா அம்பி நீ? இங்க தனியா என்ன பண்ணிண்டிருக்கே?”
கேட்டது உடம்பெங்கும் திருமண் இட்டிருந்தவர். கோவில் அர்ச்சகர்களுள் ஒருவராய் இருக்க வேண்டும்.
“தனியா இல்லே மாமா.. சிநேகிதாளோட வந்தேன்”.
“சரி. அவாளெல்லாம் எங்க?”
“நம்பர் டூவுக்கு கெடிலம் போயிருக்கா மாமா”.
பெருமாள் சன்னதியில் பொய்.
தலையிலடித்துக் கொண்டார். “யாராம்..டா நீ?”
“ஆடிட்டர் லக்ஷ்மிபதி வீட்டுப்பையன் மாமா”.
சித்தப்பா பேரைச் சொன்னேன். என் வீட்டைத்தான் துறந்து விட்டேனே? எதற்கு ருக்மணியின் புருஷன் பேரைச் சொல்ல வேண்டும்?
“சரிசரி நேரத்தோட ஆத்துக்கு போங்கோடா. பிள்ளை
பிடிக்கிறவனெல்லாம் வருவன்.”
புதுகுண்டை போட்டுவிட்டு கையில் வாழைஇலை சருகில் வைத்திருந்த தோசை பிரசாதத்தை எனக்கு கொடுத்து விட்டு பிரபந்தம் சொல்லிக் கொண்டு நகர்ந்தார்.
அந்த தடிமனான தோசையை பிய்த்து காக்கைகளுக்கு போட்டுக் கொண்டு வேடிக்கை பார்த்தேன். அது தீர்ந்தவுடன் காகங்கள் பறந்து விட்டன. அம்மா எனக்காக மாவு அரைத்தவுடன் சப்பென்று வார்த்துக் கொடுக்கும் தோசை நினைவுக்கு வந்தது.
தலையை வேகமாய் ஆட்டிக்கொண்டேன். கூடாது கூடாது. அம்மா என்னை நினைத்து நினைத்து ஏங்க வேண்டும் . மயிலம் முருகா உனக்கு மாவிளக்கு போடுகிறேன் என்று அம்மா அழத்தான் வேண்டும் . தவிட்டுக்கு என்னை வாங்கினாளாமே?.
அங்கு மேலும் இருந்தால் அந்த பட்டாச்சாரியாருக்கு பதில் சொல்ல வேண்டும். மீண்டும் திருப்பாப்புலியூர் நோக்கி நடந்தேன். பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது. மாலை நான்கு மணிக்கு மேல் இருக்கும்.. ரோட்டோரம் ஒரு பைப்பில் மடக்மடக் என்று தண்ணீர் குடித்தேன்
“என்ன மோகனம்.. இங்க என்ன கண்ணு பண்ணிக்கிட்டு இருக்கே?”என்று வினவியவாறு திருமகள் லாண்டரி மணி சைக்கிளின் இரு பக்கமும் காலூன்றி சிரித்துக் கொண்டே கேட்டார். அவர் லாண்டரி என் வீட்டின் கீழே, வாசல் பார்த்த பெரிய ரூமில் இருந்தது. சன்னக்குரலில் அழகாய்ப் பாடுவார். நாடகங்கள் போடுவார்.... சிவாஜி பக்தர்.
“என் கிளாஸ்மேட்டை பாக்க வந்தேன் மணி”.
“அப்படியா. இருட்டிடுமே ராஜா! . வா சைக்கிள்ள ஏறு. வீட்டுக்கு போலாம்.”,
“இல்ல மணி நீ போ! நான் புதுப்பாளையம் போய் இன்னொரு பிரெண்ட் கிட்ட நோட்டு ஒண்ணு வாங்கிக்கணும்.”
“அவ்வளவு தானே! சரி. நான் கெடிலம் பாலத்தாண்ட இறக்கி விட்டுடறேன். எனக்கும் ரெட்டைப் பிள்ளையார் கோவில் கிட்ட வேலை இருக்கு. ஏறு மோகனம்”
கையில் இருந்த தினத்தந்தி பேப்பர் கசக்கலில் இருந்து ஒரு மல்லாட்ட கேக் (கடலை கேக்) எடுத்து தந்தார். மறுப்பேதும் சொல்லாமல் வாங்கிக் கொண்டேன்.
இவருக்கு தெரிந்தால் விஷயம் விவகாரமாய் விடும்.
‘சரி மணி’ என்று பின்பக்கம் கேரியரில் ஏறப் போனேன்.
“முன்னாடி பார்ல உக்காரு மோகனம். கேரியல் ஒரு பக்கம் இத்துபோயிருக்கு ராஜா”.
பாரில் ஏறி அமர்ந்தேன், கெடிலம் பாலத்து இறக்கம் வந்து விட்டது. சைக்கிள் வேகம் பிடித்தது..
“மணி! நிறுத்து! நான் இங்க இறங்கிக்கணும்!”
மணியின் இரு கைகளும் முன்பாரில் அமர்ந்த என்
இரு பக்கலிலும் பாலமாய் இறுக்கியது. குதிக்க வழியில்லை.
“மோகனம்.இப்போ நீ எம்ஜியார் கட்சியா... இல்ல... சிவாஜி கட்சியா?”
“வேணாம் மணி. என் ஜோலிக்கு வராதே!”
முரண்டு பிடித்தும் இறங்க வழியில்லை. நிமிடங்களில் என் வீட்டு வாசலில் சைக்கிள் நின்றது.
வாசலில் நின்றிருந்த என் அப்பா புன்னகை மாறாமல் கேட்டார், “எங்க துரை போயிட்டு வராரு?”
“நானும் மோகனமும் திருவேந்திபுரம் போயிட்டு வரோம்யா” இது மணி.
சைக்கிளை விட்டு இறங்கினேன். அப்பா வாஞ்சையுடன் தன்பால் என்னை இழுத்துக் கொண்டார். “உள்ளே போய் பொம்மைபிஸ்கட்
சாப்பிடு”
ஓ! நடந்த எதுவும் அப்பாவுக்குத் தெரியவில்லை! நான் எப்போதும் ஊர்மேய்ந்து விட்டு வருவது வழக்கமாதலால், வீட்டிலிருந்த மற்றவர்களும் வித்தியாசமாய் உணரவில்லை. யாருக்கும் என் திக்விஜயம் பற்றிய பிரஸ்தாபமே இன்றி,அம்மாவே காதும்காதும் வைத்தாற்போல், மணியை மட்டும் களத்தில் இறக்கி ஒரு ‘ஆப்பரேஷன் ரெஸ்கியூ’ நடத்தியிருக்கிறாள்.!
பறவைகள், மிருகங்கள் போன்ற வார்ப்பில் இருந்த பொம்மை பிஸ்கட்டுகள் பரப்பிய தட்டை அம்மா என் கையில் தந்தாள், முகத்தை சாதாரணமாய் வைத்துக் கொண்டு....
மறுப்பில்லாமல் மௌனமாய் சாப்பிட்டேன். ஆயாசமாயும், திகிலாயும் உள்ளுக்குள் பரபரத்தது.
மாடிக்கு ஓடினேன். விபூதி சம்புடத்தின் கீழே பரபரப்பாய்த் தேடினேன்.
“என்ன மோகி தேடுற?” பின்னால் அம்மா.
“என் மோதிரம்” ஈனஸ்வரத்தில் நான்.
“உன் மோதிரம் இதோ மாடத்தில்...”
குழப்பத்துடன் ஸ்வாமி உள்ளில் அங்கும் இங்கும் என் பார்வை பரபரத்தது..
“உன் லெட்டரை யாரும் பார்க்கல்லை.. போ!
என் நெற்றியில் கீற்றாய் விபூதி இட்டு அணைத்துக் கொண்டாள்.
திமிரவில்லை நான்..
புறப்படுமுன்னர் நான் என் அப்பாவுக்கு எழுதி வைத்த கடிதம் அது. “.நான் வீட்டை விட்டுப் போகிறேன்.என்னைத் தேடவேண்டாம்.அடுத்த ஜென்மத்திலும் நீங்களே எனக்கு அப்பா ஆகவேண்டும். ஆனால் அப்போது வேறு அம்மா வேண்டும்” என்று நான் பென்சிலில் கிறுக்கிய கடிதம் !
தினமும் அப்பாவின் மேல் கால்போட்டபடி தூங்கும் நான், அன்று அம்மாவைக் கட்டிக் கொண்டு தூங்கினேன்,
பலகாலம் இந்த விவகாரம் யாருக்குமே தெரியாது.
நான் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு போய் விட்டேன் என்று உணர்ந்தும் ஏன் அம்மா ஊரைக் கூட்டவில்லை?
ஏதும் ரயிலேறி போயிருந்தேனானால் என்ன செய்திருப்பாள்?
அம்மா...
உனக்கு சிலமணி நேரம் பரிதவிப்பைக் கொடுத்ததற்கு என்னை மன்னிப்பாயா? யாருக்கும் சொல்லாமல் இதைக் கையாண்டதற்கு ஏதம்மா உனக்கு தைரியம்.?
உன்னிலிருந்து நான் வந்ததால் தான் எனக்கு வீட்டை துறக்கும் அந்த தைரியம் வந்ததா? சொல்லம்மா!