வியாழன், ஜூன் 16, 2011

வெளையாட்டு


சொன்னது கவனத்துல வச்சிக்க முத்து. தருமு அண்ணன் இப்ப வந்துரும்.

பெங்களூரின் கலாசிப்பாளயத்தின் குறுக்கு சந்துகளில் புகுந்து புறப்பட்டு சேகர் தங்கியிருந்த வீட்டை இருவரும் அடைந்து பத்து நிமிடம் தான் ஆயிற்று. சேகரே அங்கு தருமு அண்ணனிடம் தான் ஒட்டிக கொண்டிருந்தான். இப்போது எப்படியோ சமாளித்து  தன்னுடனேயே முத்துவையும் அவன் சேர்த்துக் கொண்டாயிற்று. ஆத்தாவுக்கு எப்போவுமே சேகர் பற்றி பெருமை தான். வெட்டிகிட்டு வான்னா கட்டிக்கிட்டு வர்ற புள்ளை என்பாளே.. சரிதான் அவ சொல்றது.

                                             
ராணிப்பேட்டையிலிருந்து பெங்களூருக்கு பஸ் ஏறினது முதலே சேகர் பெங்களூர் பற்றியும், அவன் வேலைக்கு சேரப்போகும் ட்ராவல் ஏஜென்சி குறித்தும் முத்துவுக்கு சொல்லிக்கொண்டே வந்தான் . குறிப்பாக அவன் சேகரோடு கலாசிப்பாளையத்தில் தங்கப்போகும் தருமு அண்ணன் வீடு பற்றியும், தருமு அண்ணனின் குணாதிசயங்களையும் கிளிப்பாடமாய் முத்துவுக்கு உருவேற்றியிருந்தான்.

முத்து நல்லபிள்ளைதான். பாழாய்ப்போன படிப்புதான் ஏறவில்லை. பிளஸ்டூ தாண்டியதே ரத்தினகிரி சாமியார் ஆசியால தான். வேலைவெட்டி இல்லாதவனை,ஆத்தாவின் நச்சரிப்பு தாங்காமல் சேகர் தான் இங்கு வேலைக்கு அழைத்து வந்திருக்கிறான். முத்துவுக்கு சேகர் தூரத்து சொந்தம்.

டேய் முத்து எந்திரி. அண்ணனைக் கும்பிட்டுக்க.

தருமு உள்ளே நுழைந்தார். ஆறடி உயரம். அம்பத்தஞ்சு வயசிருக்குமா? நாலுநாள் மழிக்காத நீண்ட முகம். கண்ணில் ஒரு நிரந்தர மஞ்சள். அடர்த்தியான கம்பிப் புருவம். வெள்ளை வேட்டி,. பனியன் போடாத வெள்ளைமல் சட்டை. அதன் பாக்கெட்டில் துருத்திக் கொண்டிருக்கும் சார்மினார் சிகிரட் டப்பா,வெட்டும்புலி தீப்பெட்டி. சில்லறை.

வா..வா.. நீதான் முத்துப்பயலா?

முத்துக்குமாருங்க.

இன்னும் மீசையே சரியா மூஞ்சில புடிக்கல்ல. இன்னா வேலை செஞ்சிருவ?

எதுன்னாலும் அண்ணே

சேகர் இடைமறித்தான். நம்ம ஜெகவீருல சொல்லி விட்டிருக்கேண்ணே.. டிக்கிட்டு போட, லக்கேஜ் ஏத்த, கஸ்டமர கூவிக்கூப்பிட ... இப்பிடி எதுனா செய்வாண்ணே. நாணயமான பிள்ளை. வாழ்ந்துகெட்ட குடும்பம்ணே..

அதான் வாரமா சொல்லிக்கிட்டிருக்கிறியே.விடு. முத்து! ஏதும் வம்புதும்பு வச்சுக்காம இங்க இருந்துக்க”

சரிங்கண்ணே

இப்படித்தான் இப்ப சொல்வே.. தூங்கத் திண்ணையும் திங்க சோறும் கிடைச்சா ஒவ்வொண்ணா வரும். குடி கூத்தியான்னு..

முத்துவுக்கு பதில் சொல்லக் கூட வாய்வரவில்லை. தருமுவின் முரட்டுப் பேச்சு இவ்வாறாகவே தொடர்ந்தது.

தருமு தம்பிகள் இல்லாத ஒரு அனாதை அண்ணன், வயசும், அனுகூலங்களும் அவரை சேகர் போன்றோருக்கு அண்ணனாக ஆக்கிவிட்டிருந்தன. நாலு வருஷமாய் அவருடன் இருக்கும் சேகருக்கும் அவர் பற்றிய எந்த செய்தியும் பெரிதாய்த் தெரியாது. தெரிந்து என்ன ஆகப்போகிறது.? ஒண்ட இடம் கொடுத்து, அவனுக்கு ஒரு ஆதரவாயும் இருக்கும் அவர் பற்றி என்ன அறிய வேண்டும்?. தருமுவின் வாழ்க்கைமுறையை, வசவுகளை, வினோத நடவடிக்கைகளை சேகர் மெளனமாக ஏற்றுக் கொண்டு விட்டான். இந்த முத்துப்பயல் அவருடைய ஆளுமையை எப்படி எதிர்கொள்வானோ என்பதே இப்போது சேகரின் கவலை   

முத்துவுக்கு அந்த இரவு தூக்கம் பிடிக்கவில்லை. பத்துக்கு பனிரெண்டு ஹாலில் பாய்விரித்து மூவருமாய் படுத்தனர். எதிர் சுவரில் தருமுவின்  தகப்பனார் போட்டோ பெரிது படுத்தி மாட்டியிருந்தது. என்றோ எடுத்த ஒரு குரூப் போட்டோவிலிருந்து பெரிதாக்கி உள்ளூர் ஸ்டூடியோக்காரன் தன் கைவரிசையைக் காட்டியிருந்தான். ஏறத்தாழ கருப்பு மையில் வரையப் பட்டதாகவே இருந்தது. படத்தின் மேலே மாட்டியிருந்த ஒரு சிகப்புவண்ண ஜீரோவாட் பல்ப், அந்த படத்துக்கு ஒரு சவக்களையை ஏற்படுத்திவிட்டிருந்தது. போதாததிற்கு மாலை சாற்றினாற்போல் படத்தை சுற்றி பலவண்ண சீரியல் லாம்ப் வேறு மினுக்கிக் கொண்டிருந்தது.. முத்து திரும்பிப் படுத்துக் கொண்டான்..வயிற்றுக்கு இருந்ததோ இல்லையோ ஆத்தாவை விட்டுப் பிரிந்ததே இல்லை. அழுகை நெஞ்சுக்குழியில் ஸ்வரம் பிடித்து வாய்விட்டு வெடித்துவிடும் போல் இருந்தது. ஒருவாறு தூங்கிப் போனான்..

ஏலே முத்து. எந்திரி. நல்லாத் தூங்குறாம் பாரு.. விடிஞ்சப்புறமும் பாயை சுருட்டலைன்னா மூத்தவ இல்ல வீட்ல உக்காந்துக்குவா.?

ஆத்தாளிடம் கனாவில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த முத்துவை, தருமுவின் கரகரப்பான குரல் உலுக்கி எழுப்பியது.. ஆத்தா கண்ணைக்கசக்கிக் கொண்டே அழைத்தான்.

ஆத்தாவாம்.. ஞாத்தா.. எந்திரிங்கறேன்

முத்துவுக்கு பல்துலக்கும் போது ஏதோ கலவரமாயும், பெரிய இருட்டுப் பள்ளத்திற்குள் மாட்டிக் கொண்டு தவிப்பது போலும் இருந்தது.

சேகர் டீ போட்டு எடுத்து வந்தான்.

முத்து நீயும் டீ போட, சமையல் செய்யன்னு சேகராண்ட கத்துக்க. என்ன?

சரிண்ணே. எனக்கும் சமைக்க கொஞ்சம் வரும்ணே

ஏன் உம்முன்னு இருக்க? கனால ஆத்தா வந்துச்சா. இங்க ஒரு மாசம் இருந்தியானா கனாவுல தெனைக்கும் ஒரு சிங்காரியா வருவாளுக.. ஆத்தா ராணிபெட்டையில வரட்டிதட்டிகிட்டிருக்கும். தன் ஹாஸ்யத்துக்கு தானே பெரிதாய் சிரித்தார் தருமு. சேகரும் முறுவலித்தான். முத்துவுக்கு கோபம்கோபமாய்ப் பொங்கியது..

சரி முத்து சட்டுன்னு குளி. ஒன்பதுக்குல்லாம் மொதலாளி வந்துருவாரு. அண்ணே! நான் இவன சேர்த்துட்டு வந்தப்புறம் சமைக்கிறேண்ணே.

சரி சேகரு  ... இன்னிக்கு நீ மண்டிக்கு போவலையா?

பன்னண்டுமனிக்கு போறேன் அண்ணே
 .
சரி.

முத்துவும் சேகரும் கிளம்பினார்கள்.

முத்து! துன்னூறு இட்டுகினு சாமி கும்பிட்டுட்டு போ.

உருமாறிப் போயிருந்த ஒரு வட்டமான தகர டப்பாவில் மக்கலாய் விபூதி இருந்தது. கோவிலில் தந்த குங்குமம் விபூதிஎல்லாம் ஒன்றாய்க்கொட்டி பல்பொடி நிறமாய் உருமாறியிருந்தது.
சிறிதாய் இட்டுக்கொண்டு சாமி படம் தேடினான்.

இன்னா தேடுற முத்து?. எனக்கு புள்ளையாரு,அய்யனாரு எல்லாம் எங்க நைனாதான். செத்தா எல்லாரும் சாமிதான். என் நைனா படத்தையே கும்புட்டுக்க.

என்ன அநியாயம்? ஊர்பேர் தெரியாத ஒரு கிழவன் எனக்கு சாமியா? முதமுதல் வேலைக்கு போகச்சொல்ல இந்தக் கும்பிடு வெளங்குமா?

சேகர் உலுக்கியதில் கைகுவித்து கண்ணைமூடி ரத்தினகிரி முருகனை நினைத்துக் கொண்டான். சாமி.. பெரிய வேலைக்குப் போய் தனியா வேற வீட்டுல இருக்கணும் நான் மட்டும்.. ஆத்தா வந்தாலும் சரிதான் .

ட்ராவல் ஏஜென்சி வேலை முத்துவுக்கு பிடித்திருந்தது. சேலம் , குடியாத்தம் ,தருமபுரிக்காரர்கள் உடன் வேலை பார்த்தனர்.முத்துவிடம் நல்லதனமாய்த்தான் நடந்து கொண்டார்கள்.

என்ன முத்து.. வேலை புடிச்சிருச்சா? தருமுவின் வினவல்

பிடிச்சிருக்கண்ணே

அங்கஇங்க பாக்காம பொழப்பைப் பாரு. நாலு மாசம் முன்னாடி உங்க ஏரியாவுல உன்னைமாதிரி ஒருபையன் நாயடி பட்டான்

என்னண்ணே பண்ணான்?

என்ன பண்ணானா? பஸ்சுல கைபுள்ளைக்கு பால் குடுத்துக்கிட்டிருந்தவள வெறிச்சிவெறிச்சி பாத்துருக்கான். மொத்திட்டாங்க.

நான் அப்படியாப்பட்டவன் இல்லண்ணே

அதுசரி


அன்று இரவு சாப்பிடும் போது சேகரோடு அவன் மண்டி பற்றிய பேச்சும், காதுகூசும் ஏகத்தாளமுமாய் இருந்தது. முத்து மோர்சாதம் சாப்பிடத் தொடங்கியபோது தருமு சத்தமாய் காற்றைப் பிரித்தார்.

பேசிக் கொண்டிருந்த சேகர் சட்டென்று பேச்சை நிறுத்தினான். தருமு பெரிதாய் சிரித்தார். என்ன முத்து? இதுக்கே அசந்துட்ட? எங்க நைனா வுட்டா ரெண்டுதெருவுக்கு கேக்கும். சும்மாவா அவரு சொன்னாரு? மேல்ஸ்வாசம் கீழ்ஸ்வாசம் ஆஸ்வாசம்ன்னு

சேகர் சிரித்தான். முத்துவுக்கு அருவெறுப்பாய் இருந்தது. குமட்டிக்கொண்டு வந்தது .
துத்தேறி! பண்பு இல்லாத சனங்க.
மேற்கொண்டு சாப்பாடு இறங்கவில்லை. சேகர் மட்டும் எப்படி சகிப்புடன் இருக்கிறான்? மையமாய் சிரிப்புவேறு. என்ன தலையெழுத்து... நான் சம்பாதித்தே இல்லை ஆக வேண்டும்?.. ஆத்தா.. சமாளிச்சுக்கிறேன் ஆத்தா.



ஆயிற்று ஒரு மாசம். முத்து வேலையில் வேர்பிடித்து விட்டான். முத சம்பளம் அறுநூறு ரூபாய்.. அப்பாரு ஆயுசுல பாக்காத பணம்.

சேகருக்கு முத்துவின் பிரச்னை புரிந்தாலும், சகிப்புடன் சகஜமாய் இருக்குமாறு நாளைக்கு ஒரு தரமாவது சொல்லிக் கொண்டுதானிருந்தான். முதல் சம்பளம் தருமு அண்ணன் கையில குடுத்து வாங்கு.

இல்ல சேகரு. ஆத்தா கிட்டதான் தரணும்.

சேகர் திட்டினான்."முட்டாள். அது ஒரு மருவாதிடா.. அண்ணன் திரும்பக் கொடுத்துடுவாரு".

தருமுவிடம் பணத்தை நீட்டிய போது, அத்துடன் ஐம்பது ரூபாய்த் தாளையும் சேர்த்து திருப்பித் தந்தார்.

சம்பளப் பணத்துல கைவைக்காம ஊருக்குபோய் ஆத்தா கைல குடு. சந்தோசப்படும்.

அவர் தந்த ஐம்பதை மறுத்தால் மனசைக் கலக்குறாமாதிரி ஏதும் சொல்வார் அவர்... தயக்கத்துடன் வாங்கிக் கொண்டு ஊருக்காய் இரவு பஸ்ஸை பிடித்தான். வந்துகிட்டேயிருக்கேன் ஆத்தா.

பெங்களூருக்கு கிளம்புமுன், இளச்சிட்டியே முத்து..  இந்தக் குடும்பமே உன் தலைல விடிஞ்சிடிச்சே சாமி என்று அழுதாள்.

நானென்ன குழந்தையா ஆத்தா.. தெகிரியமா இரு. தம்பிங்களை இஸ்கோலுக்கு தொரத்து. இந்த தீவாளிக்கு உனக்கு பட்டுசீலை வாங்கியாறேன்..

நீ சொன்னதே போதும்டா கண்ணு. மச்சுவீட்டுக் கடனை தீத்துட்டுதான் மத்தது.. சந்தோசமா இரு முத்து. உனக்கின்னு செவ்வா வெள்ளி பல்லுல தண்ணிபடாம விரதம் இருக்கேன் ராசா.

நானும் உனக்காக விரதம் இருப்பேன் ஆத்தா தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பஸ்சில் திரும்பும் போது தன்னிலை பற்றி யோசித்தான். சேகர் சொல்வதுபோல் ஒண்டிக்கொள்ள தருமுவின் வீடு மட்டும் இல்லையின்னா எப்பிடி பணம் மிஞ்சும்?.ஆனாலும் பூதமாய் வளர்ந்து நிற்குதே தருமு அண்ணனைப் பற்றின வெறுப்பு... அதை குறைத்துக் கொள்ள வேண்டும். அவர் எப்படி இருந்தால் என்ன? அவர் வீட்டில் இருந்து கொண்டு அவரை வெறுப்பது என்ன நியாயம்? பிடிக்கவில்லை என்றால் வெளியே போக வேண்டியது தானே? போனால் குடக்கூலிக்கு காணுமா சம்பளம்?

திரும்பத்திரும்ப மனம் இந்த யோசனையிலேயே சுற்றி வந்தது.

காலை கலாசிப்பாளையம் வீட்டுக்கு திரும்பினான்.
அண்ணன் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். சேகரைக் காணவில்லை.

என்ன ஆச்சு? சேகர் எங்கண்ணே?

நேத்துப்பகல்ல இருந்து ஜுரமா இருக்கு முத்து. சேகரு சரக்கு பிடிக்க மைசூருக்கு போயிருக்கான்

டீ போட்டுத் தந்தான். அவரால் பாதிதான் குடிக்கமுடிந்தது. வாயைத் துடைத்து விட்டான். சற்று கழித்து ஆழாக்கு புழுங்கல் அரிசியை வறுத்து, அம்மியில் லேசாய் நுணுக்கிப் பொங்கவிட்டு, சீரகத்தை தாளித்துப் போட்டு,மிளகுப் பொடி சேர்த்து கஞ்சி தயாரித்தான். அய்யா காயலாவாய்க் கிடந்தபோது ஆத்தா இப்பிடித்தானே கஞ்சி பொங்கி குடுக்கும்?.

தருமு அண்ணன் கஞ்சிப் பாத்திரத்தை சுழற்றி சுழற்றிக் குடித்தார். பாவம் பசி.... கண்கள் கலங்க அவனைப் பார்த்தார்.

இதுல்லாம் கூட செய்யக் கத்துகிட்டியா ராஜா?

இது ஏதோ புதுக் குரல். எங்கோ புதைந்து வெளிவரக் காத்திருந்து காத்திருந்து புறப்பட்டக் குரல்.

முத்து சிரித்தான்.

நீ பொம்பளை வளர்த்தப் பிள்ளையில்லியா?

எல்லாப் பிள்ளைகளையுமே பொம்பளைங்க தானே வளர்க்குறாங்கண்ணே?

அப்படி இல்ல முத்து.. ஆத்தாளை பாக்காத அதிஷ்டக்கட்டைங்க உண்டு என்னாட்டம்... நாலு பயலுங்க பொறந்த வீட்டுலகூட ஒரு பிள்ளையை பொண்ணாட்டம் தாய் வளர்க்கும். அந்தப் புள்ளை மத்ததுங்களை விடவும் பொறுப்பும் பாசமாயும் இருக்கும் உன்னைப்போல.

நீங்க கண்ணாலமே கட்டல்லயாண்ணே?
கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது முத்துவுக்கு.

சேகரு எங்கூட நாலு வருசமா இருக்கான். இப்படி கேக்கல்ல.. உனக்கு கேக்கத் தோணிச்சிபாரு.

தப்புன்னா விட்டிருங்கண்ணே. சூடா கஞ்சி சாப்பிட்டு வேர்த்து விட்டிருக்கு பாருங்க. கொஞ்சம் படுங்க.

பரவால்ல. கேளு.. சமாச்சாரத்தை உன்னோடமட்டும் வச்சுக்கோ. சரியா?

சரிண்ணே. சொல்லுங்க

என்னை பெத்துபோட்டுட்டு அம்மாக்காரி போய் சேர்ந்தா. எங்க நைனா தான் வளத்துச்சி. தறுதலையாதான் வளந்தேன். உன் வயசு எனக்கு வந்தபோது நைனாவும் காலமாயிட்டாரு. ஏதேதோ செஞ்சேன் போ.... முப்பது வயசு வரைக்கும் கல்யாண ரோசனையே இல்லை. எனக்குன்னு எடுத்துகட்டி பொண்ணுபார்க்க யார் இருந்தா?

தயக்கமாய் செருமினார் தருமு.. ஒரு நா உடம்பு கொழுப்பெடுத்து இங்கயும் அங்கியுமா தேடி அலைஞ்சேன்.

எதையண்ணே?

கூமுட்டை.. வயசுல கொழுப்பெடுத்து எதுக்குடா அலைவாங்க.?.

அய்ய... சரிசரி சொல்லுங்க.

அவென்யூ ரோடாண்ட நின்னிகிட்டிருந்தா பிலோமினா.

“”எப்பவோ பாத்தவங்க பேருல்லாம்கூட நெனவா சொல்றீங்க?

பின்னே ரெண்டு வருஷம் என்னோட குடும்பமில்ல நடத்துனா மகராசி?

என்ன?? குடும்பம் நடத்துனீங்களா?

ஆமாம் முத்து.அவ சேலத்துக்காரி. ஒருபோதுக்கு தான் இட்டுகினு போனேன். ஆனாலும் ரொம்ப பெரும்போக்காத்தான் இருந்தா.. ரெண்டுமூணு தரம் அவளுக்காய் காத்திருந்து கூட்டிப் போனேன். ஏதோ தோணிச்சு.... கூடவே இருந்துக்கிறயான்னு கேட்டேன். சரின்னுட்டா. கட்டுன பொண்டாட்டி மாதிரித் தான் ... மாதிரியென்ன பொண்டாட்டிய்யாத்தானே அரைப்பவுன் தாலி கட்டி குடித்தனம் பண்ணுனேன்.

முத்துவுக்கு அதிசயமாயும் கொஞ்சம் திகிலாயும் கூட இருந்தது.

கைக்கு ரெண்டுரெண்டு வளை, நெளிமொதிரம், சங்கிலி, காதுக்கு மூக்குக்குன்னு வாங்கிப் போட்டேன். நாலு பட்டு சீலை. எடுத்தேன்.அதுக்கு பாக்கிய ராஜு படம்னா உசிரு.படம் வந்தநாளே கூட்டிப் போவேன்

உம் முத்துவுக்கு உடம்பெல்லாம் முள்படர்ந்தது.

ஒரு நாள் மேஜைமேலே ஒரு கடுதாசியும், பக்கத்தில் பட்டுப் புடவைகளையும் அடுக்கி, அதன்மேல் எல்லா நகைகளையும் வைத்துவிட்டு போயே போய் விட்டாள்.

எதுனாச்சும் திட்டுனிங்களா?

வாடின்னு கூட பிலோமினாவை நான் கூப்பிட்டதில்லை

பின்னே ஏன் போனாங்க?

தெரியாது முத்து.இன்னி வரைக்கும் மருகிக்கிட்டு இருக்கேன் இந்தக் கடுதாசிய பாரு அலமாரியிலிருந்து தடுமாறியபடி எழுந்து எடுத்துக் கொடுத்தார்..

நெளிந்தான் முத்து.

பரவாயில்ல படி

அந்தக் கடிதம் கசங்கலாய் சற்று எண்ணையேறி இருந்தது. மீண்டும்மீண்டும் படிக்கப் பட்டிருக்க வேண்டும்

என் சாமிக்கு பிலோமினா எழுதியது. நிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா நீங்க கட்டுன தாலிமட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்புதண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தா உங்களை மாதிரி தான் இருப்பார்..காலம் பூராவும் உங்களை நினைச்சுகிட்டே தான் இருப்பேன்.. சாவுற வரைக்கும்

அக்குறும்பா இருக்கே. எவங்களையோ ராணி மாதிரி வச்சிருந்தீங்க. ஒரு கோபம் இல்லை ஒரு சண்டை இல்லை. அவங்க எதிர்பார்த்திருக்க முடியாத வாழ்வு குடுத்தீங்க.நீங்க சொல்றதையும்,இந்த லெட்டரையும் வச்சு பார்த்தா சந்தோஷமா நிறைவா இருந்திருக்காங்கன்னு தான் தோணுது. பின்ன எதுக்குப் போனாங்க?

சில கேள்விங்களுக்கு பதிலு இல்ல முத்து. உறவுகளையும் கட்டுப்பாடுகளையும் நாமதான் விதிச்சிக்கிறோம். அல்லாரும் வெளையாடுறது ஒரே வெள்ளாட்டுத் தான். அந்த வெளையாட்டுக்கான  ரூலு அவங்கவுங்க போட்டுக்கிட்டு ஆடிகிட்டிருக்கோம். உன் வெளையாட்டு எனக்கு பிடிக்காது.. என் விளையாட்டு உனக்குப் புரியாது. நம்மபோட்டு வச்ச எல்லைகோட்டைத் தாண்டி மத்தவங்க வெளையாடும்போது  நமக்கு பிடிக்கிறதில்லை.. செலப்போ நமக்கே நம்ம  போட்டுகிட்ட கோடுங்களே தடையாயும் சலிப்பாயும் ஆயிடுது. வெளங்காத வெளையாட்டு...  வுடு... கொஞ்சம் வெந்நீர் குடிக்க தா முத்து.. அறிஞ்சும் அறியா புள்ளை நீ. ஏதேதோ சொல்லி உன்னைக் குழப்பிட்டேன்

வெந்நீர் சுடவைத்துக் கொண்டிருந்த முத்துவுக்கோ இப்போதுதான் வாழ்வின் குழப்பங்கள் மெல்லத்தெளிவதுபோல் இருந்தது.



படஉதவி: Master Sarvesh Sainathan
  

ஞாயிறு, மே 29, 2011

நாட்குறிப்பிலிருந்து





நாட்குறிப்பு எழுதும் பழக்கம் எனக்கிருந்தது.
விடாமல் பல வருடங்கள் எழுதினேன்.
பின்னர் அவ்வப்போது..

காலையில் கண்ணில்பட்ட டைரியிலிருந்து சில பக்கங்கள்..
ஆந்திராவுக்கு மாற்றலாய்ப் போயிருந்த சமயம் எழுதியது


10th செப்டம்பர் 1995

இந்த ஞாயிற்றுக் கிழமை, வெற்று நாளாய் உதித்தது.
இந்த ஊருக்கு வந்து பத்துநாட்கள் ஆகிவிட்டது.
இதம்தரும் மனை நீங்கி, குழந்தைகளை விட்டுவிட்டு 
இதென்ன உத்தியோகம் என்று தோன்றுகிறது.
தோன்றக்கூடாது தான்... ஆனாலும் தோன்றுகிறதே.

ராத்திரி சரியாக தூங்கவில்லை. பிள்ளைகள் நினைவாய்...
இவ்வளவு பெரிய கெஸ்ட்ஹவுசில் தனிஆளாய்..
பெருமூச்சு கூட இங்கே எதிரொலிக்கிறது. 
காலையில் பூத்துக்குச்சென்று தொலைபேசியில் குழந்தைகளுடன் பேசினேன்.
விவேக் எனக்கு கடிதம் எழுதிக்கொண்டிருப்பதாய்ச் சொன்னான்..
அதில் அவனுடைய புது பேட்,பரீட்சை மார்க், காமிக்ஸ், எல்லாமுமாய் இருக்கும்..

அம்மாவுக்கு கடிதம் எழுதினேன்.

ரேடியோவில் ஒரு அழகான பழைய தெலுங்கு சினிமாபாடல்.
மூகமனசுலு (ஊமை நெஞ்சங்கள்) சித்ராலோ....

வரிகள் மனதை ஊடுருவிப் பதிந்து விட்டன. அந்தப் பாடலோடு ரேடியோவை நிறுத்திவிட்டு, மீண்டும்மீண்டும் அதன்  வரிகளை நினைவுபடுத்திக் கொண்டேன்.. நாளெல்லாம் நாவில்பயின்ற பாடலை தமிழ்ப்படுத்தினேன்.. 


பூமாலையில் சிரித்திருக்கும் பூக்களினூடே
         கோர்த்த நாரும் பொதிந்திருக்கும்

பூவாய் மலரும் கண்கள்தாண்டி, இதயமோ
         எதைத்தான் ஒளித்திருக்கும்?

தவிக்கும் மனதோர் ஊமைஎனினும்-அதற்கே
       மொழி ஒன்றும் இருந்திருக்கும்

செவிபடைத்த மனங்களுக்கு மட்டும்
       அதன் பேச்சும் கேட்டிருக்கும்.....

சிரித்திடினும் அழுதிடினும் விழிகளில்
       கண்ணீர் அன்றோ துளிர்த்திருக்கும்?

கண்ணீரின் கதைகள் நீ முயன்றிருந்தால்
        கண்டிப்பாய் புரிந்திருக்கும்......

திரைப்பாடல் போல் இல்லாமல் கொஞ்சம் செய்யுள் போல் இருக்கிறதோ?..
இருந்துவிட்டுப் போகட்டும்.



தெலுங்கில் பாடலாசிரியர்  புரிந்திருக்கும் ஜாலம் இந்தப் பாட்டில் வரவில்லை எனத் தோன்றுகிறது....

மொழிபெயர்ப்பில் நழுவிப்போவது மூலக்கவிதையின்
கவிதானுபவம் அல்லவா?



11th செப்டம்பர் 1995

இன்றிலிருந்து அரைலிட்டர் பால் வாடிக்கையாய் வரும்.
செய்த உப்புமா வாசனையாகத்தான் இருந்தது.
உப்பைத் தான் மறந்து விட்டேன்.

பரபரப்பாக வேலையில் ஆழ்ந்துவிட்டேன்.. 
தனிமைக்கு வேலையும், படிப்புமன்றோ மாற்று?
சுற்றி பதினெட்டுபட்டிக்கும் நாளைமுதல் போக ஆரம்பிக்க வேண்டும்.

12th செப்டம்பர் 1995

நிறைய வாடிக்கையாளர்கள்..  தெலுங்கில் புகுந்துவிளையாடிக் கொண்டு இருக்கிறேன். கொஞ்சம் தமிழ்ல எவனாவது பேசுங்களேண்டா?

டிராக்டர் லோன்கேட்டு வந்த ஒருவர் தன் மாமாவுக்கு முதல்வர் சந்திரபாபு நாயடுவைத் தெரியும் என்று அளந்துவிட்டு என்னைக்  கேட்டார்:

சாரு.. மீ பேரு ஏமி?

சொன்னேன்......நேனு சந்திரபாபு நாயுடு

சகஅலுவலர்கள் சற்று திகைத்து, பின் சிரித்தார்கள்..

லொள்ளு,நையாண்டி, நக்கலுக்கெல்லாம் நம்ம ஊர் நம்ம ஊருதான்.

இன்னும் துணிதுவைக்கிற வேலையொண்ணு பாக்கியிருக்குடா சாமி!

13th செப்டம்பர் 1995

மற்றுமொரு நாள்.
கொண்டு வந்திருக்கும் இராமலிங்க வள்ளலாரின் திருவருட்பாவை மாந்திக் கொண்டிருக்கிறேன்....

அவரு தானே சொன்னார்? விழித்திரு... தனித்திரு... பசித்திரு...

ரொம்ப பசிக்குது ராமலிங்கம்.  

திங்கள், மே 23, 2011

அம்மா மரம்



எங்கள் தோட்டத்து பம்ப்ளிமாஸ் மரம்
அழல்தம்பமாய் உயர்ந்து
அனல்விரல் பலநீட்டும் வேள்வித்தீயாய்
கிணற்றடியில் கிளை விரித்து நிற்கும்.

குடம்குடமாய் அதன் பழங்கள் ..
குருவிகளால் இயன்றது முகர்தல் மட்டும்...


சிலநாட்கள் இலைகளுதிர்த்து அம்மணமாய்
சிலகோடைகள் பழம்பழுக்கும் சுவடின்றி....

அம்மா இழுக்கும் தொரட்டிக்கோல்
காம்பைவருடிப் பழம் கறக்கும்.

உக்கிராண அறைமூலை குவிந்த பம்பிளிமாஸ்கள்
உக்கிரபீமன் உருட்டிய கோலிகுண்டுகளாய்,

காத்திருக்கும்.......

அண்டைஅயல் அனைவருக்கும்
அம்மா கும்பமாய் எடுத்து நீட்ட...  
  
கத்தியை மெத்தென வாங்கும் கதுப்புத் தோலுரித்து
கனிச்சுளை நீள்முத்துக்களாய் உதிர்க்கும் அம்மா

பட்டுபோனது தெரிந்தும் மரத்தைப்
பலவருடம் விட்டிருந்தாள் அம்மா.

புயலில் அது விழுந்த நாளில்
பட்டினியிருந்தாள் அம்மா.  




picture: from GOOGLE with thanks      

செவ்வாய், மே 17, 2011

கல்யாணியை கடித்த கதை



எட்டுக்குடியார் வீட்டின் பரந்த திண்ணைகள் அந்தக் கோடைவிடுமுறையில் திமிலோகப்பட்டன. அந்த அகன்றவீட்டின் மொத்த அகலத்துக்குமாய் ஒரு தட்டை செங்கல் மேவிய கீழடுக்குத் திண்ணையும், அடுத்த தட்டாய் நாலு படிக்கட்டுகள் தாண்டிய வாசலுக்கு இருபுறமும் அகன்ற இரு திண்ணைகளும் அந்தத்தெரு வானரங்களின் குதியாட்டத்தில் அதிர்ந்தன.

கீழ்த்திண்ணையில் வரதுவின் கீச்சுக்குரல்
சார் சார் ஒண்ணுக்கு ........
சட்டாம்பிள்ளை ரெண்டுக்கு
நான் போறேன் வீட்டுக்கு
நாளைக்கு வந்தா கேட்டுக்கோ!

பல்லாங்குழி ஒருபுறம்,கிச்சுகிச்சு தாம்பாளம் ஒருபுறம் என்று குழுக்களாய் ஆடிக்கொண்டிருந்தோம். முனைகள் மழுங்கி, பெரியவர்கள் நிராகரித்த சீட்டுக்கட்டில் சீட்டாட்டம் இன்னொருபுறம்.  தொலைந்துபோன ஏழு கிளாவர்,ஹாட்டீன் ராணிக்கு பதிலாய் கார்பன் பென்சிலால் எச்சில்தொட்டு எழுதப்பட்ட பாஸிங்க்ஷோ சிகரெட் அட்டை இரண்டு அந்தக் கட்டின் கறுப்பாடுகளாய் எதிராளிக்கு கையிருப்பைக் காட்டிக் கொடுத்தது.
அந்த சீட்டாட்டத்தின் போதுதான் அந்தக்கலவரம் வெடித்தது.

சொல்றேன் இருங்க....

எனக்கும்,கல்யாணிக்கும் இடையே வார்த்தைகள் முற்றி, கை எட்டிய வரையில் அடியும் கிள்ளலும் இரண்டு பக்கமும் பரிமாறப்பட்டது. 

கல்யாணியை உங்களுக்குத் தெரியாது. இரண்டாம் வகுப்பில் அவள் பிரிவு ..ஞானசேகரன் சார் கிளாஸ். நான் பி‌ பிரிவு மேரி டீச்சர் கிளாஸ். கல்யாணி கொஞ்சம் ஓங்குதாங்கான பெண். அவள் வகுப்பு மானீட்டர் வேறு. அதிகாரம் கொடிகட்டிப் பறக்கும். ஆட்டமோ பாட்டமோ, அவள் இருப்பை சாதித்துக் கொள்வாள்.

பாருங்க பாதி சண்டையில விட்டுட்டு என்னமோ சொல்லிக்கிட்டிருக்கேன். அடிகள் அடுத்தகட்டத்துக்கு முன்னேறி, திண்ணையில் கட்டிப் புரண்டு கீழ்த்திண்ணைக்கு இருவரும் உருண்டு உக்கிரமாகிவிட்டிருந்தது. மூச்சுமுட்ட என் கழுத்தைச் சுற்றி கல்யாணி கால்களைப் பிடியாய்ப் போட்டு இறுக்க சுவாசத்துக்கு திண்டாடினேன். வாகாய், என் வாய்க்கு அண்மையில் தட்டுப்பட்டப் பகுதியில் ஒரே அக் ஆம். கடித்து விட்டேன். கல்யாணி பிடியை விலக்கி அலறிய அலறலில் திண்ணை காலியாகி, பையன்கள் ஆளுக்கொரு திசையாய் ஓட, அங்கேய நிற்க நானென்ன பைத்தியமா? வீட்டுக்கு ஓடிவந்து சித்தியின் கால்களைக் கட்டிக்கொண்டேன். அப்பா அம்மா ஊரில் இல்லை. சித்தியின் செல்லமாயிற்றே நான்.

“என்ன மோகி? எங்க விஷமம் பண்ணிட்டு வரே? அய்யய்ய.. சட்டையெல்லாம் பாரு புழுதி..”

“என்னை கல்யாணி கீழே தள்ளிட்டாக்கா...”  சித்தியை அக்காவென்றே அழைத்துப் பழகிவிட்டேன்.

“கல்யாணியா? அந்த ஆம்பிள காமாட்சியோட ஏண்டா உனக்கு சகவாசம்?”
“அவ ரொம்ப கெட்டவக்கா..”.
“நீ என்ன பண்ணினே?”
“ஒரு சின்ன அடி மட்டும் தான் கொடுத்தேன்”. கண்களைப் பார்க்காமல் வலுவற்று ஒலித்தது என் குரல்.

“ருக்மணி மாமீ ....” வாசலில் நீதிகேட்டு பெரும்பசு மணியடிக்கிறதே!

உள்பக்கம் ஓடிப்போய் ஜன்னல்வழி பார்த்தபோது கண்ணீரும் கம்பலையுமாய்க் கல்யாணி, அவளுடைய அம்மா மற்றும் பாட்டிவாசலில் நின்றிருந்தார்கள்.

ஏதும் தெரியாததுபோல் சித்தி அவர்களை வரவேற்றாள்.

“உள்ளே வாங்கோ மாமி”

“ஏண்டி? உங்க அக்கா எங்கே?”

“தேரழுந்தூர் போய்யிருக்கா... என்ன சொல்லுங்கோ?”

கல்யாணியின் பாட்டி கையை ஆட்டிஆட்டிக் கூவினாள்.

“உங்காத்து மோகன் பண்ணின காரியத்தைப் பாருங்கோ .. கடங்காரன்”.
“மோகி அப்படி என்னத்த  பண்ணிட்டான்?”
சித்தியின் குரலில் கொஞ்சம் நிஜமான கலவரம் .

“எங்க கல்யாணியின் தொடையிலே ஆறுபல்லு பதியக் கடிச்சு வச்சிருக்கான்.கொழந்தைத் துடிக்கிறாள். எப்படி கன்னிப்போச்சு பாத்தியா?”

“எங்க மோகி அப்படியெல்லாம் பண்ண மாட்டான் பாட்டி.”என்ற சித்தி, கல்யாணியைப் பார்த்துக் கேட்டாள்.
“கல்யாணி! மோகியா உன்னைக் கடிச்சான்? எங்கடி?”
கல்யாணி ஆங்காரமாய் அதிர்ந்தாள்.”உங்காத்த்து மோகிப் பிசாசே தான் கடிச்சது. பாருங்கோ மாமி.”

கல்யாணியின் பாவாடை மெல்ல உயர்ந்தது.

சித்தி குனிந்து ஆராய்ந்தாள். நிமிடமாய் உள்ளே ஓடி சைபால் எடுத்து வந்து கல்யாணியின் தொடையில் இட்டு நிமிர்ந்தாள்.

“வரவர இவன் அழிச்சாட்டியம் ரொம்பத்தான் ஜாஸ்த்தியாயிடுத்து.அழாதடி கண்ணு... அவனுக்கும் அதே இடத்தில் கரண்டியை பழுக்கக் காய்ச்சி சூடு வைக்கிறேன் பார்.” சித்தி ரொம்பத்தான் கடுமைக் காட்டினாள்.

சீச்சீ.. அம்மாவே பரவாயில்லை. சூடு வைப்பாளாமே?

வழங்கப்பட்ட சித்தியின் தீர்ப்பில் சமாதானமாகி கல்யாணி கட்சி  நகர்ந்தது.

உள்ளே வந்த சித்தி, ஓடப்பார்த்த என்னைப் பிடித்தாள்.
நான் திமிறியபடி ஆழ ஆரம்பித்தேன்.

“என்னைக் கொஞ்சறதெல்லாம் கொஞ்சிட்டு சூடும் வைக்கப் போறே இல்லை? சித்தப்பா வந்தபுறம் உன்னை அடிக்க சொல்றேன்” என்று விசும்பினேன்.

என்னை அணைத்தபடி சித்தி கொஞ்சினாள். “என் பம்ப்ளிமாசுக்கு யாரும் சூடு வைப்பாங்களா?”

“பின்னே அந்த பாட்டிக்கிட்டே அப்படி சொன்னியே?
“அப்பத்தாண்டா அவங்கல்லாம் போவா..”

“அப்போ எனக்கு நிஜமா சூடு வைக்க மாட்டியா?

“இல்லடா குட்டி ... இனிமே யாரையும் கடிக்கல்லாம் கூடாது. சரியா?”

அப்பாடா.. பழைய உற்சாகமும், குறும்பும் வந்தது எனக்கு.

“பிள்ளையார் பிராமிஸ் யாரையும் கடிக்க மாட்டேன்” என்று சித்தியின் கையை வலிக்காமல் கடித்துவிட்டு ஓடினேன்.

எனக்கு சித்தி வழங்குவதாக சொன்ன தண்டனை அந்தத்தெரு முழுதும் பரவி விட்டது. அடுத்த நாள் காலை என்னைக் குளிப்பாட்டி, இடுப்பில் ஒரு துண்டை கட்டிவிட்டு, கொடியிலிருந்து டிராயரை எடுக்க  சித்தி உள்ளே போனசமயம் எதிர்வீட்டு ஜிகினி வந்தான். என்னைத் துண்டோடு பார்த்தவுடன் பேஸ்த்தாகி வெளியே ஓடினான்.

எனக்கு சித்தி சூடுபோட்டு விட்டதால் டிராயர் கூடபோட்டுக் கொள்ள முடியாமல் துண்டோடு நான் உலாவிக் கொண்டிருப்பதாக அவன்  கிளப்பிவிட, கல்யாணி தரப்பு ஏகத்துக்கும் சந்தோஷப்பட்டிருக்கும்.
அன்று இரவே சித்தப்பா என்னை ஏதோ கல்யாணத்திருக்கு சிதம்பரத்திற்கு அழைத்துசெல்ல,  என் சூடு மேட்டருக்குப்பின் என் நடமாட்டம் குறித்த ஊகங்களுக்கு வலு சேர்ந்தது.

அடுத்தவாரம் வழக்கம்போல் நான் விளையாடக் கிளம்பிய சமயம் சித்தி அழைத்தாள் ,”யாரும் உனக்கு சூடு விழுந்ததான்னு கேட்டால் ஆமாமின்னு சொல்லு” என்று கண் சிமிட்டினாள்.  

என் பங்குக்கு நானும் காலை விந்திவிந்தி,  பார்த்தால் பசிதீரும் சிவாஜிபோல் நடந்து காட்டினேன்.

முனிசிபாலிட்டி பைப்பில் தண்ணீர் குடிக்கச் சென்றபோது அங்கே கல்யாணி வந்தாள்.
வேணும் கட்டைக்கு வேணுமாம் வெண்கலக் கட்டைக்கு வேணுமாம்” என்று எகத்தாளமாய் கொக்கரித்தாள்.

பதிலுக்கு “பொக்கப்பல்லு பொரிமாவு”  என்று அவள் பல் விழுந்ததைக் கேலி செய்த எனக்கும் அடுத்தவாரமே விழுந்த பல்லை வானம் பார்க்காமல் புதைக்க வேண்டிவந்தது.


அதே கல்யாணியை கல்லூரி நாட்களில் ஒருமுறை சந்தித்தேன். அவள்தான் என்னை அடையாளம் கண்டுகொண்டு பேசினாள். சிறுபிராயத்தில் என்னைவிட பெரிய ஆகிருதியுடன் தோன்றியவள்,அந்நாளில் உயரக் குறைவாயும் ஒல்லியாகவும் தென்பட்டாள். அவளுடன் ஓரிரு தோழியர் உடனிருந்ததால் அதிகம் நான் பேசவில்லை. எனக்கேனோ பாவமாய் இருந்தது..

அடுத்தமுறை கல்யாணியை பலவருடம் கழித்து கல்கத்தாவில் சந்தித்தேன்.

கல்கத்தாவில் நான்  இருந்த நாட்கள் அவை. என் மனைவி இரண்டாம் பிரசவத்திற்கு என்கையில் கரண்டியைக் கொடுத்துவிட்டு சென்னை  போனசமயம்.

லேக் மார்க்கெட்டில் மோகி என்று யாரோ கூப்பிடத் திரும்பினேன். 
முன் வழுக்கை விழுந்த ஒரு சுப்ரமணியம் கையில் ஒரு குழந்தையுடனும் இடுப்புயரத்தில் ஒரு பெண்குழந்தையும் ஒட்டிவர,கூடவந்தாள் கல்யாணி.... “நான் கல்யாணிப்பா”

“நல்லா இருக்கீங்களா?” என்று அவளைக் கேட்டபடி அவள் கணவரைப் பார்த்து மையமாய் சிரித்து வைத்தேன்.

“என்னங்க.. இவன் மோகன். என்னோட படிச்சவன். எங்க ரெண்டுபேர் வீடும் ரொம்ப சிநேகம்”.

“நீங்களும் கல்கத்தாவுலயா இருக்கீங்க?”

“நோ நோ  நான் கும்மாணத்துகிட்ட பேங்குல வேலை செய்யுறேன். எல்.டீ.சில இங்க நேத்து வந்தோம்”.

“எங்கப்பா கிளார்க்கு” என்றது அவர் பெண்.  

பொதுவாய் அவரிடம் பேசிக்கொண்டிருந்த போதும், அவ்வப்போது  கல்யாணியை பார்த்தபடி இருந்தேன். ஓடிக் களைத்துவிட்ட குதிரைபோல் தோன்றினாள். அசுவாரஸ்யமாக உடுத்தியிருந்தாள்.

“எங்களை உன்வீட்டுக்கு கூப்பிட மாட்டியா?”

“சார் .அதெல்லாம் வேண்டாம். தக்ஷினேஸ்வரம் எப்படி போகணும்னு மட்டும் சொல்லுங்கோ” இது அவள் கணவர்.

அந்த ஞாயிறுகாலை எனக்கும் வேலைவெட்டி இருக்கவில்லை. “அதுக்கென்ன சார். நானே கூட்டிப் போறேன். வாங்க”.

தக்ஷினேஸ்வரத்துக்கு மினிபஸ் பிடித்தோம். டிக்கெட் வாங்கினேன். முன்னிருக்கையில் கல்யாணியும் அவள் கணவனும் அமர்ந்தார்கள்.. பின்னிருக்கையில் நான் இடம் பிடித்தேன். கல்யாணியின் பெண் பூமாவோ  முன்னே அப்பாவுடன் உட்கார அடம்பிடித்து,கல்யாணியின் சுட்டெரிக்கும் ஒரு பார்வையில் அடங்கி உம்மென்று என் பக்கத்தில் அமர்ந்தாள்.

“என்ன கிளாஸ் படிக்கிறே பூமா?”

“மூணாவது.” வேடிக்கைப் பார்த்தபடி, என் கேள்விகளுக்கு திட்டமாய் பதில் சொன்னபடி பூமா.. கொஞ்சம் அவளின் அப்பா ஜாடை.

“நீ நல்ல பொண்ணாச்சே. அம்மாகிட்ட அடம் பிடிக்கலாமா?”

நானொன்னும் நல்லவள் இல்லை. உங்களை மாதிரி துஷ்டை”

அதிர்ந்து போனேன்.”என்ன? நான் துஷ்டனா? உனக்கார்  சொன்னா?”

“நீங்க சின்னப்போ எங்கம்மாவைக் கடிச்சேளா இல்லையா?”

“உனக்கெப்படி தெரியும்?”

“அதான் உங்களை மோகின்னு அம்மா கூப்பிட்டாளே? அப்பவே நீங்கதான்னு தெரிஞ்சு போச்சு நேக்கு”

“நான் கடிச்சத்தை உனக்கு ஏன் சொன்னாள்?”

“நானும் உங்களை மாதிரி அப்புவை சண்டைபோட்டு கடிச்சுட்டேன். அதுக்கு அப்பா என்னை அடிச்சார். அம்மா கையில சூடு வச்சுட்டா”

இடது முழங்கையை காட்டினாள். ஒரு இஞ்சு நீளத்தில் சூட்டிழுப்பு வடுவாய் பளிச்சிட்டது. “சூடு போட்டுட்டு என்னை சமாதானம் பண்ணினப்போதான் துஷ்டத்தனம் பண்ணின உங்களுக்கு உங்க சித்தி சூடு வச்சதைச் சொன்னாள்.”

எனக்கு என்னவோபோல் ஆகிவிட்டது. கடிக்கு சூடு என்று கல்யாணி மனத்தில் ஒரு நியதி உருவாகியிருக்க வேண்டும்.

சே! எனக்கு சித்தி சூடு வைக்கவில்லை என்று கல்யாணிக்கு நான் சொல்லியிருக்கவேண்டும். குற்றவுணர்வு என்னை சூழ்ந்தது.

அருகிலிருந்த பூமாவை லேசாய் அணைத்துக் கொண்டேன்.
   


    

புதன், மே 11, 2011

வடு



இந்த டிரிப் தான் கடைசி.... ஒரு தரம் துப்புரவாய்ப் பார்த்துடுங்க குருராஜன்

எல்லாம் ஏறக்கட்டியாச்சு சார்.. ஏதும் பாக்கியில்லை.. நான் பாத்துக்கறேன். நீங்க எதுக்கு சார் இங்க வீணா? வீட்டுக்கு கிளம்புங்க..

எதுக்கும் இண்டுஇடுக்கு விடாம ஒருமுறை கோதிட்டீங்கன்னா நல்லது பாருங்க

நம்பி சார் எப்பொழுதும் இப்படித்தான். சொன்னதையே சொல்லியபடி எல்லாவற்றையும் நூத்துநூத்து பாக்குற ஆசாமி.

சரிசார்!

நம்பி சார் கிளம்பிவிட்டார்.. இந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்காய் காத்திருந்தமாதிரி குருவுக்குப் பட்டது.

ஒத்தாசைக்கு உடன் இருந்த பியூன் முருகேசன் அருகிருந்து செருமினான். சார்.. தம்பி வீடு வரை போயிட்டு வந்துடறேன் சார். ஒரு பணப்பிரச்னை.. எப்படியும் போன லாரி திரும்பி வரதுக்குள்ள திரும்பிடுவேன் சார்.

குருவுக்குக் கூட தனியாய் சற்றுநேரம் இருக்கத் தோன்றியது. போயிட்டு வா முருகேசா. ஏதும் பணம் வேணுமா?

அதெல்லாம் வேணாம் சார் சிட்டாய்ப் பறந்து விட்டான்.


குரு வேலைப்பார்க்கும் அலுவலகம் நகரின் மையப் பகுதியிலிருந்து  இன்னும் விஸ்தாரமான சொந்த கட்டிடத்துக்கு மாறுகிறது.. நான்கு நாட்களாய் அலமாரிகள், கணனிகள்,மேஜை நாற்காலிகள், கோப்புகள் என லாரிகளில் ஏற்றப்பட்டு புதுவளாகத்திற்கு போனபடி இருக்கிறது.

ஆயிற்று... மிச்சமிருக்கும் இந்த இரண்டு அலமாரிகளும், ஐந்து அட்டைப்பெட்டிகளும் லாரியில் ஏறிவிட்டால் இந்தக் கட்டிடத்தோடு உறவு முற்றிலுமாய் அற்றுவிடும். குருவுக்கு தொண்டையை அடைத்தது.

ஒருநாளா?இரண்டு நாளா? இருபது வருஷம்... இதே ஆபீஸ். சில  வருடங்களாய் இதே சன்னலோர இருக்கை. இந்த சன்னலின் கதவுகளை சீண்டியபடி அசைந்துஅசைந்து கண்சிமிட்டும் வாதுமை மரத்து இலைகள். இந்த இலைகள் பழுத்து,உதிர்ந்து, மீண்டும் துளிர்த்து ,மென்அரக்கு மினுமினுப்பில் உள்ளங்கையகலம் விரிந்து கரும்பச்சை முதிர்வில் மொடமொடத்து....

இத்தனை வருடங்களில் எத்தனை சகஊழியர்கள்,அதிகாரிகள் வந்துபோய் விட்டார்கள்?.. தான்மட்டும் இங்கே நங்கூரமாய்  நிலைகொண்டு..

குடும்பசூழல், தங்கைகள் திருமணம், அடுக்களையில் பாதிநாள் படுக்கையில் மீதிநாள் என உழலும் அம்மா... இவர்கள் தேவைக்கென்றே உத்தியோக உயர்வுகளைப் புறக்கணித்து,கனவுகளைப் புறந்த்தள்ளி ஓர் இயந்திரமாய் குருராஜன் மாறி பலகாலம் ஆயிற்று.

பழகிய இடம், புழங்கிய இடம் விட்டு மாறிப்போவது குருவுக்கு மிகுந்த வேதனையாக இருந்தது..

இதோ.. இது வெங்கடராமன் சார் சீட் இருந்த இடம். மனசில் வெண்ணையும் நாக்கில் சுண்ணாம்பும் கொண்ட வெள்ளை மனிதர். அவர் குருவிடம் மட்டும் காட்டிய அனுதாபமும் அரவணைப்பும் மனதில் நிழலாடியது. மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். பிரிவுபசாரக் கூட்டத்தில்கூட அவரால் தேள் கொட்டினார்போலத்தான் பேச முடிந்தது.


இங்கு அன்பழகன் மேஜை இருந்தது. கையை அழுக்காக்கிக் கொள்ளாமல் பேர்வாங்கும் வித்தை தெரிந்தவன்.. என்னைத்தேடவேண்டாம் என அவன்மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு, யாருடனோ போன மூன்றாம் நாளே,.ஏதும் நடக்காததுமாதிரி எப்போதும்போல் சிரித்துக் கொண்டே அல்லவா வந்தான்?.. கடற்கரையில் குருவின் கைகளைப் பிடித்தபடி மெல்ல விஷயத்தை சொன்னானே.. ஆறுதல் தேடியா?

இங்கு மைத்ரேயி .. பக்கத்து சீட்டில் வித்யா என்ற வித்யாதரன். பின்னால் ராதா, செபஸ்டியன், கார்மேகம் சார்..
குருவின் கண்கள் நிலைகொள்ளாமல் இங்குமங்குமாய் அலைந்தது. காலியான அந்தக்கட்டிடம் ஹோவென்று நின்றது..
தரையெங்கும் கூளமும் தூசியுமாய் விரவிக்கிடந்தது. மெல்ல நடந்தான் குரு. இடப்பக்கம் சின்னதாய்க் கேண்டீன்.
பக்கத்தில் லஞ்ச் ரூம். அங்கு கைகழுவும் இடத்தில் உள்ள கண்ணாடியில் கொஞ்சம் ரசம்போன பகுதி ஒற்றைக்காலில் தவமிருக்கும் கொக்குபோல் அவனுக்குத் தோன்றும்.

இந்த ஹாலின் வாயிலைக் கடந்தால் பழைய கோப்புகள் வைக்கப்பட்ட ஸ்டோர் ரூம். முன்பெல்லாம் இந்த அறை ஸ்டோர் ரூமாக இல்லை.  கணனிகள் வராத நாட்கள் அவை . டைப்ரைட்டர்களின் சங்கீதம் தனித்தும், பலசமயம் கோரஸாயும் எதிரொலித்த நாட்கள். அந்த பெரிய அறையின் ஒருபகுதி மரத்தடுப்புகளால் உருவான மேலாளரின் கேபின் இருந்தது.   அந்தக்காலியான அறையில் நுழைந்த போதே அவன் விரல்கள் மெல்ல நடுங்கின.. அந்த கேபினை ஒட்டியபடி ஸ்டெனோ வரலட்சுமி டைப்ரைட்டர் சகிதம் அந்நாளில் அமர்ந்திருந்த கோலம் குருவினுள்ளே விஸ்வரூபம் எடுத்தது.

வரா.. வரா.. என்று குருவின் நாடிநரம்பெல்லாம் ஒலித்த அந்த பெயர்... அவன் வாழ்க்கைக்குள் வராமலேயே அல்லவா போய் விட்டது?                 

மெல்ல அவர்களுள் முகிழ்த்த காதல்... திடமாய் இருந்த குருவின் அப்பாவின் திடீர் மறைவு.. ஒரு பகலில் குருவின் தலையில் சுமத்தப்பட்ட குடும்பபாரம். அவனுக்காய் காத்திருக்க இயலாத மத்தியதர வர்க்கத்து நெருக்கடியில் அவள்.

எல்லாமே முடிந்து விட்டது. குருவுக்கு மனம் மெல்ல மரத்துப் போனது. நாற்பதைத் தாண்டியாயிற்று.. தனிமரமாய் நின்று பழகிவிட்டது...

தன்னையறியாமல் வரலட்சுமியின் மேஜை  இருந்த மூலையில் வந்து நின்றான்.

அட இது.. இது... இன்னுமிங்கே... இதுநாள் வரை அலமாரிகளால் மறைக்கப் பட்ட ஒரு அன்பின் வடு இன்னமும் அங்கே...

அந்த மரத்தடுப்பில் ஒட்டப்பட்டிருந்த விநாயகர் படம்.
இலைகளையே விநாயகரின் அங்கங்களாய் வரைந்த ஒரு வாழ்த்து அட்டை... புசுபுசுவென்று நினைவும் பரபரப்பும் குருவின் நெஞ்சிலிருந்து கிளர்ந்தன. அந்த வாழ்த்துஅட்டையை அவன் தான் அங்கு ஓட்டினான். மேல்பக்க ஓரம்  மட்டும் ஒட்டப்பட்ட,  நிறம் மங்கிப்போன விநாயகர்...


வரா! பத்துநாள் ஆபீஸ் வரமாட்டேன்னு சொன்னா என்ன அர்த்தம்.? ஞாயிற்றுக்கிழமை ஒரு நாளே என்னால் உன்னை  பார்க்காமல் இருக்கமுடியல்ல.. நீ ஒண்ணும் மதுரைக்கு போக வேண்டாம்.

வராவுக்கு அவன் தவிப்பு பிடித்திருந்தது. எனக்கு மட்டும் போகணும்னு ஆசையா குரு? குடும்பத்தோடு போக அப்பா ஏற்பாடு பண்ணிட்டாங்க. என் ராஜா இல்ல.. பத்தே நாள்.... ஓடி வந்திடுவேன். சரியா.?

அதுவரைக்கும் நான் என்ன பண்ண?

இரு..  வரா தன் நெற்றியிலிருந்த ஸ்டிக்கர் பொட்டை  எடுத்தாள். அவள் மேஜையின் பக்கலில் இருந்த மரத்தடுப்பில் ஒட்டினாள். ஒட்டப்பட்ட பொட்டினைச் சுற்றி நீலப்பேனாவால் அழுத்தமாய் வட்டம் இட்டாள்..

குரு! இந்த பத்து நாளும் இந்த ஸ்டிக்கர் தான் உன் வரா! பாத்துகிட்டே இரு.

கையில் டிபன் பாக்சை எடுத்துக் கொண்டு விடுவிடுவென நகர்ந்தாள்
.
அடுத்த பத்துநாளும் அந்தப் பொட்டில் குரு புதைந்து போனான். யாருமற்ற ஒரு பின்மாலையில், அந்தப் பொட்டை பாதுகாக்க வேண்டி அதன் மேற்புறம் விநாயகர் படத்தை  ஓட்டினான்.


குரு நினைவின் பிரவாகத்தில் அடித்து செல்லப்பட்டுக் கொண்டிருந்தான். மெல்ல அந்த வாழ்த்துஅட்டையை மேல்நோக்கி வளைத்து ஸ்டிக்கர்பொட்டைத் தேடினான். வராவின் பொட்டு  இன்னமும் அங்கே பத்திரமாய் இருந்தது. அதன் சின்ன வெல்வெட்பரப்பு சற்று மங்கியும் சுருக்கம் கண்டும் இருந்தது..

மெல்ல விரலால் அதைத் தொட்டான்.

அந்த தொடுகைக்காக மட்டுமே இதுநாள்வரைக்  காத்திருந்த்தது போல் அந்தப் பொட்டு உதிர்ந்தது.

குருவின் வயிற்றிலிருந்து அலையலையாய் விம்மிஎழுந்த ஒரு கேவல் வெடிக்க அழுதான். அன்றும் இன்றும் சாட்சியாய் மட்டுமே இருந்த அந்த அறையின் சுவர்களில் அவன் விசும்பல் மோதி வெறுமையில் மெல்லக் கரைந்தபடி இருந்தது.

சார்! லாரி வந்தாச்சு என்றபடி உள்ளே வந்த முருகேசன், தலையை இருகைகளாலும் பிடித்தபடி புழுதித்தரையில் அமர்ந்திருந்த குருவை நோக்கி பதறியபடி ஓடிவந்தான்.