செவ்வாய், ஜூலை 26, 2011

வலைச்சரத்தில் ஒரு குயிலிறகு -2


ஒரு கதை 
ஒரு காட்டுக்குள்ளே ஓடு ஒரு நதியின் கரையில், ஒரு ஆலமரம் இருந்திச்சாம். அந்த மரத்துல ஒரு குருவி கூடு கட்டிக்கிட்டு சந்தோஷமா திரிஞ்சுகிட்டிருந்ததாம். அப்பப்போ ஓய்வு எடுக்க அந்த மரத்துக்கு ஒரு பருந்தும் வந்து உட்காரும். அவையிரண்டும் ரொம்பவே சினேகமாயிடிச்சாம் .

அந்த மரத்துக்கு கொஞ்சம் பக்கத்துலேயே ஒரு முனிவரோட குடிசை இருந்தது. ஒரு நாள் முனிவர் வெளிய போயிருந்தப்போ திடீரென குடிசைக்குள்ள இருந்த விளக்கை பூனை தள்ளிவிட நெருப்பு பிடிச்சிக்கிட்டு குடிசை எரிய ஆரம்பிச்சது. எரியிற குடிசையைப் பார்த்த குருவி, தீயை அணைக்கணுமேன்னு பரபரத்தது. விர்ருன்னு பறந்து போய் நதியில முழுகி, குடிசைக்கு மேலாக வந்து, தன் இறக்கைகளை படபடன்னு உதறிச்சாம். அதுலேருந்து பத்து பன்னிரண்டு சொட்டுத்தண்ணி, ஏரியிற தீ மேல விழுந்தது. இப்படியா நதியில முழுகறதும், குடிசைமேல வந்து இறக்கையை உதறுவதுமாய் குருவி அலைஞ்சுகிட்டு இருந்தது.

இதையெல்லாம் பார்த்தபடி மரக்கிளையிலே மூக்கை தேச்சுக்கிட்டிருந்த பருந்து, குருவிய திட்டிச்சாம். “முட்டாளே! நீயே இத்தனூண்டு இருக்கே. உன் இறக்கையோ இன்னமும் சின்னது.. அது எவ்வளவு துளி தண்ணி கொள்ளும்? நீ எவ்வளவு தண்ணியை முங்கி எடுக்கிறது?எப்போ தீயை அணைக்கிறது? பேசாம இப்படி வந்து உக்காரு.. தீயை அணைக்கிறானாம் தீய.. “

குருவி மூச்சிரைக்க பதில் சொன்னதாம்,அண்ணா!  என்னோட சின்ன இறக்கைளை வச்சுக்கிட்டு தீயை அணைக்கமுடியாதுன்னு எனக்கும் தெரியும்.  ஆனாலும், நானிருக்கிற இடத்திலே நிகழும் பிரச்னையை பார்த்துகிட்டு என்னால சும்மா இருக்க இயலாது. நம்மால் ன்றதை செய்வது அல்லவா தர்மம்? அது மட்டுமில்லே! இந்தக் காட்டில் நம்மைப் போல் சிறியதும் பெரியதுமாய் ஆயிரக்கணக்காய் பறவைகள் இருக்கு. அவையெல்லாம் என் முயற்சியைப் பார்த்துஇந்தப் பொடியனே செய்யும் பொது நாமும் தீயணைக்க ஏதும் செய்தாலென்ன என்று உற்சாகமாகி சேர்ந்து முயன்றால் தீயை அணைக்கவும் கூடும். வாங்கண்ணெ !, வந்து ஒரு முங்கு முங்குங்கண்ணு கூப்பிட்டதாம்.  

மக்களே! மற்றவர்கள் வந்து நம்மை ஊக்கப்படுத்தணும்னு காத்திருக்காதீங்க. சுயஊக்கமே மேலானது. உங்களைப் பார்த்து பத்து பேருக்கு உற்சாகம் பிறக்கணும். இந்த சுயஊக்கத்திற்கு சின்னவன் பெரியவன் என்றோ, பதவியோ பொருட்டே இல்லைங்க..
இந்த வாழ்க்கை ரொம்பவே அழகானதுங்க. சரிங்களா?


ஒரு கவிதை 

பிரசாதம்

உள்ளங்கை குவித்து பெற்ற
உத்தரணி தீர்த்தம்
பருகுமுன்,
விரலிடுக்கில் வழிந்து
வாய்க்கு மிஞ்சாமல்
வாசமாய் நாசிக்கு மட்டும்.......
நினைவுக்கே எஞ்சிய
நம் காதலைப் போல.......

ஒரு ஜோக் 

ஞொய்யாஞ்சி ஒரு வினாவிடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
குவிஸ் மாஸ்டர் ஒரு பறவையின் கால்கள் மட்டும் இருந்த படத்தைக் காட்டி, அது என்ன பறவை என்று கண்டுபிடிக்க சொன்னார்.

ஞொய்யாஞ்சி பதில் தெரியாமல் ஞே என்று விழித்தார்.

குவிஸ் மாஸ்டர்: 'இது கூட தெரியலே! உன் பேரென்ன?'

ஞொய்யாஞ்சி: 'ஹூம் .. நீயே கண்டுபிடிச்சுக்கோ' என்றார் தன் கால்களை குவிஸ் மாஸ்டருக்கு காட்டியபடி.



 இன்று நான் ரசித்த பதிவர்கள் 


கோகுலத்தில் சூரியன் 

'சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!' என்று பேனர் கட்டி புன்னகை விற்கும் வெங்கட், சேலத்தை சேர்ந்தவர்.  கலகலப்பான இவரின் சின்னசின்ன பதிவுகள் இயல்பான நகைச்சுவை விருந்து.அண்மைய சில பதிவுகளைப் பார்த்தீர்களானால் ஒரு பத்து வயசு உங்களுக்கு குறையும். அதுக்கு நான் கேரண்டி. 




R கோபி   இந்த கும்பகோணத்து கோபியை அண்மையில் தான் பிடித்தேன். பரந்த ரசனை இவருக்கு. ஆர்.சூடாமணியின் கதைகள் பற்றிய பதிவினை ரசித்தேன். பேனா பற்றிய இவரின் தற்போதைய பதிவும் , விமலாதித்த மாமல்லன் கதை பற்றிய பதிவின் அலசலும் எழுத்தின் நறுவீசும் .. படித்து பாருங்கள்.


என் வார்த்தை.. என் குரல்.. என் முகம் 


'என் உணவு கனவு பானம் கவிதை' எனும் வருணனுக்கு சிக்கலின்றி கவிதை சொல்ல இயல்கிறது. சொல்சிக்கனமும் காட்சிப்படுத்துதலும் இயலாயிருக்கிறது இந்த இளைஞருக்கு.. வாழ்த்துக்கள். 


மனசு   தேவக்கோட்டையைச் சேர்ந்த செ.குமாரின் வலைப்பூ. மண்வாசம் மணக்கும் இவரின் கதைகள் பலவும் படித்ததுண்டு. கவனிக்கப் பட வேண்டிய பதிவர் 


கோவை to  டில்லி  கோவை மாநகரைச் சேர்ந்த ஆதி வெங்கட்டின் வலைப்பூ. எளிமையான தமிழில் சமையல் குறிப்பிலிருந்து, பயணம் வரை நன்கு தாளிக்கிறார்.  ஒரு குட்டி தேவதையின் தாயான இவர், கதைகளும், தன் நோக்கில் சம்பவங்களையும் நிறைய எழுதவேண்டும் என்பது என் ஆவல். இவரால் அது முடியும். 


இன்றைக்கு இவ்வளவுதாங்க. அதான் இன்னமும் ஐந்து நாளிருக்கே! 
சந்திப்போமா நாளை?

28 comments:

சிவகுமாரன் சொன்னது…

குருவி கதை சூப்பர் அண்ணா. நான் மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்த கேள்வி, உங்கள் மனதுக்கு தெரிந்து பதில் சொன்னது போல இருந்தது.
அந்தக் கவிதை முன்பே படித்து விட்டேன் ஆனாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம் சலிக்காது. பாரதியின் காக்கைச் சிறகினிலே மாதிரி.

அப்பாதுரை சொன்னது…

ஏதோ உலாவிக் கொண்டிருக்கையில் இன்று காலை இதே கவிதையைப் படித்தேன். 'அட!' போட்டு மனதுக்குள் வைத்துவிட்டு இப்போ மறுபடி வந்தால்.. அட!

அப்பாதுரை சொன்னது…

ஙொய்யாஜி வலையுலகத்துக்கு உங்கள் கொடை. விட்டு விடாதீர்கள் :)

meenakshi சொன்னது…

நல்ல கதை! ரசனையுடன் வாழ்ந்தால் வாழ்கை என்றைக்குமே அழகானதுதான்.
கவிதையை மீண்டும் ரசித்து படித்தேன்.
ஞொய்யாஞ்சி ஜோக் கலக்கல்!

கோகுலத்தில் சூரியன் அவர்களின் பதிவுகள் நல்ல நகைசுவை விருந்து. அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!

ஸ்ரீராம். சொன்னது…

க(வி)தை பிரமாதம்.

மோகன்ஜி சொன்னது…

வருக சிவா! இதுபோன்ற சிறுசிறு கதைகளை மேலாண்மை, மனோவியல் வகுப்புகளை எடுக்கும் போது நான் அள்ளி விடுவது தான்.அரைமணி நேரம் போதித்த ஆளுமை சமாசாரமெல்லாம், ஐந்து நிமிடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொள்ளும் ஒரு சின்ன கதை வழியே.

அந்தக் கவிதை முன்னமே வானவில்லில் இட்டது தான். நன்றி சிவா!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இந்த வாழ்க்கை ரொம்பவே அழகானதுங்க. சரிங்களா?//

தங்கள் தொகுப்பும், சுவையான பகிர்வுகளும் அழகானவை.

அப்பாதுரை சொன்னது…

ஞொய்யாவா ஙொய்யாவா?

மோகன்ஜி சொன்னது…

பாருங்கள் நமக்குள் ஒற்றுமையை. நானும் உங்கள் 'களிம்பை' மீண்டும் ஒரு முறை தடவிக் கொண்ட போது, உங்கள் 'உத்தரணி' சரக்கு கிளர்த்தியது, என் உத்தரணிக் கவிதை பற்றின ஞாபகம்.

அதைத் தேடிப் போட்டேன். இன்னொரு அட! போடுங்க மொதலாளி!

R. Gopi சொன்னது…

என் பதிவுகள் உங்களுக்குப் பிடித்திருப்பது குறித்து மகிழ்ச்சி.

நன்றி மோகன்ஜி!

பத்மநாபன் சொன்னது…

அருமையான ஊக்க கதை..ஹைக்கூவாய் கவிதை....நம்ம ஞொய்யாஜி...நல்ல அறிமுகங்கள்.. வலைச்சரம் நறுமணம் கமழ்கிறது....

'பரிவை' சே.குமார் சொன்னது…

வலைச்சரத்தில் என்னை அறிமுகம் செய்த அண்ணன் மோகன்ஜி-க்கு நன்றிகள்.

கதை...
கவிதை...
ஜோக்...
என கலந்து கட்டி ஆடி ஜெயித்திருக்கிறீர்கள்.

ரிஷபன் சொன்னது…

ஞொய்யாஞ்சி: 'ஹூம் .. நீயே கண்டுபிடிச்சுக்கோ' என்றார் தன் கால்களை குவிஸ் மாஸ்டருக்கு காட்டியபடி.

கலகலப்பாய் ஆரம்பிச்சாச்சு..

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//இந்த வாழ்க்கை ரொம்பவே அழகானதுங்க. சரிங்களா?//

மோகன்ஜி, ஈசியாக சொல்லிட்டீங்க. ஆனால் எவ்வளவு கஷ்டம் பிறருக்கு கொடுத்து இருக்கின்றேன் - என் கோவத்தால் என்று நினைக்கும்போது - மாற தோன்றினாலும் - முடியாமல் விழிக்கின்றேன்.

பிறந்த நாள் போது (சனிக்கிழமை) முழு தினமும் சுவாமி சின்மயானந்தாவின் ஆசிரமத்தில் (இங்கே அமெரிக்காவில்) சீடர் ஒருவரின் முழுநாள் பிரசங்கத்தை கேட்டேன். எவ்வளவு சுகமாக இருந்தது. அப்படி உட்கார்ந்தாலும் மனது குரங்கை விட தாவுகின்றது.

ஆக்ஸ்ட் இறுதி முதல் / செப்டம்பர் நடு வரை இந்தியா விஜயம் உண்டு. அப்போது நிறைய நல்லது செய்ய ஆசை. பணத்தால் உதவுவது என்னால் முடியும், உடம்பால் செய்ய உடம்பில் பாதி வேலை செய்வதில்லை. அது கடினம். நிறைய சுற்ற இருக்கின்றேன். பார்ப்போம்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

மோகன்ஜி, கவிதை சூப்பர்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

இனிய தொடக்கம். தொடக்கத்தில் அறிமுகம் செய்தவர்களில் ஒருவர் மிகவும் ஸ்பெஷல்.... :) அதற்காகவே ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து உங்களுக்கு :)

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி அப்பாதுரை சார்! அவ்வப்போது தலைகாட்டும் ஞொய்யாந்ஜி யை அடிக்கடி வரச் சொல்கிறேன் இனி..

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி மீனாக்ஷி மேடம்! தொடர்ந்து படியுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய ஸ்ரீராம்!
இத... இதத்தான் எதிர்பார்த்தேன்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி இராஜராஜேஸ்வ்ரி மேடம்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்!தட்டச்சும் போது எந்தவிதமாய் டிரான்ஸ்லிட்டரேஷன் உருவெடுக்கிறதோ அதுவே ஞொய்...

மோகன்ஜி சொன்னது…

அது என் சந்தோஷம் ராமமூர்த்தி சார்! வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ரிஷபன் சார்! உம்மை சந்திக்கும் நாளை எதிர்பார்த்திருக்கிறேன்..

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாய்! சில நாட்களுக்கு முன் அப்பாதுரையின் ஒரு பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். அது இதோ....

சுமதி சதகம் எனும் நீதி நூலொன்று தெலுங்கில் உண்டு.

பர நாரி சோதுருடை
பர தனமுலகு ஆச படக,
பரலகு ஹிதுடை,
பரலு தனு போகட நெகுடக
பரு லலிகின நாலுக நடடு பரமுடு சுமதி!

என்ன நாக்கு சுளிக்கிடிச்சா? அர்த்தம் இதோ.

பிற பெண்களை சகோதரிகளாய் நினைப்பவன் ;
பிறர் செல்வத்தை விரும்பாதவன் ;
பிறர் நலம் விழைபவன் ;
பிறர் புகழ்ச்சியில் மயங்காதவன் ;
பிறர் கோபிக்கும் போதும் அமைதி காப்பவன் எவனோ
அவனே மேம்பட்டவன் என அறிவாய் சுமதி!

ஆகவே மகாஜனங்களே! கோச்சுக்காதீங்க.

மோகன்ஜி சொன்னது…

பாராட்டுக்கு நன்றி சாய்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி வெங்கட்! வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

கோகுலத்தில் சூரியன்

'சந்தோஷத்துலயே பெரிய சந்தோஷம்.,அடுத்தவங்கள சந்தோஷப்படுத்தி பார்க்கிறது தான்..!' என்று பேனர் கட்டி புன்னகை விற்கும் வெங்கட், சேலத்தை சேர்ந்தவர். கலகலப்பான இவரின் சின்னசின்ன பதிவுகள் இயல்பான நகைச்சுவை விருந்து.அண்மைய சில பதிவுகளைப் பார்த்தீர்களானால் ஒரு பத்து வயசு உங்களுக்கு குறையும். அதுக்கு நான் கேரண்டி. //

தெய்வ திருமகள் விக்ரம் மாதிரி ஆயிடுவோம்ன்னு சொல்றீங்களா?

மோகன்ஜி சொன்னது…

ரமேஷ்!
//தெய்வ திருமகள் விக்ரம் மாதிரி ஆயிடுவோம்ன்னு சொல்றீங்களா? //
ஆஹா... நிமிஷத்துல என்னை 'குணா' கமல் ஆக்கிட்டீங்களே ! அபிராமி! அபிராமி!!