புதன், ஜூலை 06, 2011

மருந்தோ மருந்து




பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று திரிகடுகம். இந்த நீதிநூல் நல்லாதானார் என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும். சுக்கு,மிளகு,திப்பிலி  எனும் மூன்று மருந்துவ குணமுடைய பொருட்களே  திரிகடுகம் ஆகும். இந்த மூன்று மருந்துப் பொருட்களும் டல்நலம் பேணுவது போல், திரிகடுகத்தின் ஒவ்வொரு செய்யுளும் இயம்பும் மூன்று கருத்துக்கள் மனநலம் காக்கும் மருந்தாய் மிளிர்கிறது. ஒவ்வொரு செய்யுளிலும் உள்ள மூன்று கருத்துக்களும் ஒரு மையக் கருத்தை உணர்த்துவதாய் நேர்த்தியாய் புனையப் பட்டிருக்கும்.


ஒரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால், தொன்மையான

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி 

ஆகிய மருந்துவப் பெயருடன் மூன்று நீதிநூல்கள் உள்ளன. இதனால் 

அன்றைய சமுதாயத்தில் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம், 

சித்தமருத்துவம் ஆகியவை பரவலாக விளங்கியிருந்தது தெளிவாகிறது.

கணவன் மனைவி உறவுநலம், அருளுடைமை, புலால் மறுத்தல், 

மெய்யுணர்தல் போன்ற பல வாழ்க்கை நலன்களை பேசும் இந்தநூல் நூறு 

வெண்பாக்களைக் கொண்டது. அவற்றில் சில பாடல்களை விவாதிப்பதே 

இந்தப் பதிவின் நோக்கம். அங்குமிங்குமாய் சில பாடல்களை 

தேர்ந்தெடுத்து தந்துள்ளேன்.


பாடல் 1

கல்லார்க்  கினனாய் ஒழுகலும், காழ்கொண்ட
இல்லாளைக் கோலாற் புடைத்தலும் - இல்லம்
சிறியாரைக் கொண்டு புகலுமிம் மூன்றும்
அறியாமை  யான்வருங் கேடு.


விளக்கம்

கல்வியறிவு இல்லாதவருடன் உறவு கொண்டு நடப்பதும்,
மனதில் திண்மையுடனான அன்புமிகுந்த மனைவியை அடித்தலும்,
சிற்றறிவுள்ள மதியீனரை தம் இல்லத்துள் சேர்த்தலும்
ஆகிய இம்மூன்றும்..
தம்முடைய அறியாமையால் விளையும் கேடுகளாகும்.

பாடல் 2

பிறர்தன்னைப் பேணுங்கால் நாணலும், பேணார்
திறன்வேறு கூறின் பொறையும் - அறவினையைக்
காராண்மை போல ஒழுகுதலும், - இம்மூன்றும்
ஊராண்மை என்னுஞ் செருக்கு.

விளக்கம் 

ஏனையோர் தன்னை நயந்து புகழும் போது நாணத்துடன் கூச்சம் கொள்ளுவதும்,
தம்மை விரும்பாதவர் தகுதியை தாழ்த்தி வேறுபட கூறும் நேரம் பொறுமை காத்தலும்,
மேகத்தின் ஆளுமையேபோல் பலன் எதிர்பாராது பிறர்க்கு உதவுதலும்,
ஆகிய இம்மூன்றும்
ஒருவருக்கு ஊர் வியக்கும் ஆண்மையாகிய செல்வமாகும்.

பாடல் 3

உண்பொழுது நீராடி யுண்டலும், என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலும் - தோல்வற்றிச்
சாயினும் சான்றாண்மை குன்றாமை, - இம்மூன்றும்
தூஉயம் என்பார் தொழில்.

விளக்கம்

உண்பதற்குரிய நேரம் வருங்கால், குளித்த பின்னரே உணவருந்துதலும்
எவ்வளவு பெரும்பயன் கிடைப்பதாயினும்,ஒருபக்கமாய் சார்ந்து
பொய்சாட்சி  சொல்லாமல் விலகுதலும்,
உணவின்றி வாடி, உடல்அழியும் நிலை வந்தாலும், தாம் கொண்ட நற்குணங்களை நீக்காது நிற்றலும்
ஆகிய இவை மூன்றும்
தூயவர் வாழ்க்கை முறையாகும்.

பாடல் 4

பெண்விழைந்து பின்செலினும், தன்செலவிற் குன்றாமை;
கண்விழைந்து கையுறினுங், காதல் பொருட்கின்மை;
மண்விழைந்து வாழ்நாண் மதியாமை; - இம்மூன்றும்
நுண்விழைந்த நூலவர் நோக்கு.

விளக்கம்

ஒரு பெண் தானேவிரும்பி பின்வந்தபோதும், அவளைச் சேராது தன்னடத்தை குன்றாமையும்,
தன் இடம்தேடிவந்து கைப்பட்டபோதும், அடுத்தவர் பொருளின் மேல் ஆசைக்கொள்ளாமையும்,
மண்ணாசை கொண்டு வாழும்காலத்தை உயர்வென்று மதியாத மனவுறுதியும்
ஆகிய இவை மூன்றும்  
நுட்பமாய் நூல்களை ஆராய்ந்து தெளிந்தோரின் கருத்தாகும்.

47 comments:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல வாழ்வியலுக்கு நம்மைக் கொண்டு செல்ல உதவும் அருமையான பாடல்கள்.

பாடல்களாக மட்டும் சொல்லியிருந்தால் சத்தியமாக நாங்கள் படிக்கவோ புரிந்து கொள்ளவோ முயற்சித்திருக்க மாட்டோம். முயன்றாலும் என்னைப்போன்ற சாமான்யர்களுக்கு புரியவே புரியாத விஷயங்கள் இவை.

தங்களின் விளக்கங்கள் தான் அருமை.

அதற்கு மட்டும் என் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி வை.கோ சார்! இந்த நூல் ஆயிரத்தைன்னூறு வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட நூல் என்ற கருத்துண்டு. எளிய வார்த்தைகளும், நடைமுறைக் கருத்துக்களும் இன்று கூட பொருத்தமானவையாக தோன்றுகின்றன.
உங்கள் பாராட்டுக்கள் எல்லாம் இதை எழுதிய திருநெல்வேலி பக்கலில் வாழ்ந்த நல்லாதனார் எனும் புலவர் கழலடியில் சமர்ப்பிக்கின்றேன்.

meenakshi சொன்னது…

அருமையான விஷயங்களை அழகாய் நினைவு கூர்ந்து எழுதுகிறீர்கள். பாடலுக்கு உங்கள் விளக்கம் நயம்.

என் பாட்டிக்கும், பெரியம்மாவுக்கும் இது போல விஷயங்கள் நிறைய தெரியும். திருகடுக ரசம்தான் இன்னிக்கு ஆத்துல, சாப்பிடறியா என்றுதான் கேட்பார்கள். நான்தான் இதை மருந்து ரசம் என்று சொல்வேன். அந்தகாலத்தில் எல்லாம் வாரத்தில் ஒரு முறையோ, இருமுறையோ இது போல உணவே மருந்தாக இருந்தது, இல்லையா! 'வைத்தியனுக்கு கொடுப்பதை வணிகனுக்கு கொடு என்பார்கள்'.
இந்த திருகடுகத்தில் சுக்குக்கு மட்டும் மேலும் தனி இடம் என்றுதான் சொல்லவேண்டும். 'சுக்குக்கு விஞ்சின மருந்தும் இல்லை, சுப்ரமணியத்துக்கு விஞ்சின சுவாமியும் இல்லை' என்ற பழமொழியே இருக்கிறது.

பாடல் ஒன்றில் கல்வி அறிவு இல்லாதவருடன் உறவு கொள்வது, அறியாமையால் விளையும் கேடு என்பதை ஏனோ என்னால் ஒப்புகொள்ள முடியவில்லை. பண்பு இல்லாதவர்களுடன் பழகுவதுதான் கேடு என்பேன். ஏட்டுக் கல்வி சிலநேரம் வாழ்க்கைக்கு உதவாதுதான்.

ஹேமா சொன்னது…

சுக்கு,மிளகு,திப்பிலி எனும் மூன்று மருந்துவ குணமுடைய பொருட்களே திரிகடுகம்...இதில திப்பிலி தெரியாது மோகண்ணா.நீங்க விளக்கம் தராம இருந்திருந்தா எதுவுமே விளங்கியிருக்காது.
விளக்கம் தந்த விஷயங்கள் வாழ்வியல்.

ஊர்ல இருக்கிறவரைக்கும் குளிச்சப்பறம்தான் சாப்பாடு கிடைக்கும்.சாப்பிட்ட அப்புறம் குளிக்கவும் விடமாட்டாங்க.
இப்பல்லாம் கணக்கு எதுக்கும் இல்ல !

Yaathoramani.blogspot.com சொன்னது…

மிகச் சிறந்த பயனுள்ள பதிவு
தொடர்ந்து தர வேண்டுகிறேன்
ஹேமா அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல எனக்கும்
திப்பிலிக் குழப்பம் உண்டு
தரமான பதிவு தொடர வாழ்த்துக்கள்

பத்மநாபன் சொன்னது…

சபாஷ்...சரியான போட்டி.. ஔவையின் எளிய செய்யுள்களை ஆர்.வி.எஸ் எடுக்க ..பதினென்கிழ்கணக்கின் வெண்பாக்களை நீங்கள் எடுக்க... எங்களுக்கு நல்ல விருந்து... கவியோடு அதன் விளக்கமும் எழில்...

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

வீட்டின் அஞ்சறைப்பெட்டியில் சுக்கு- மிளகு-திப்பிலி-மஞ்சள்-சித்தரத்தை-அதிமதுரம்-சீரகம்-வெந்தயம் இவற்றை மட்டுமே வைத்து பல நோய்களை அண்டவிடாமல் செய்தனர் முன்னோர்கள்.மருத்துவர்களிடம் சாகும் வரை சென்றதில்லை.

திரிகடுகம் சொல்லும் எளிய அரிய கருத்துக்களைச் செவிமடுத்தால் இன்னொரு பிறவி எனும் மருத்துவமனைக்குச் செல்லாமலே முக்திக்கு வழி செல்லும் இறைத்தன்மையைச் சொல்கிறது.

திரிகடுகம் பற்றிப் பேச வந்த உங்களுக்கு ஒரு கோப்பை பனைவெல்லம் சேர்த்த சூடான சுக்குவென்னீர் மோஹன்ஜி.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மோகன்ஜி.... சுக்குமிளகுதிப்பிலி என்று எழுதி இருந்ததை சுக்குமி ளகுதி ப்பிலி என்று படித்தாராம் ஒருவர்.... அப்படித்தான் இருந்திருக்கும் என் நிலையும் நீங்கள் விளக்கம் தந்திருக்காவிடில்.....

நமது பழம் காப்பியங்களில் இப்படி நிறைய விஷய்ங்கள் கொட்டிக் கிடக்கிறது. எடுக்க எடுக்கக் குறையாத அட்சயப் பாத்திரம் அல்லவா அது! இப்படி நல்ல பாடல்களையெல்லாம் சேர்த்து ஒரு இடத்தில் எல்லோரும் சேர்ந்து முயற்சி செய்யலாம் என நினைக்கிறேன்...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல பகிர்வு நண்பா.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

ஒரு ஆச்சரியமான செய்தி என்னவென்றால், தொன்மையான


பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஏலாதி


ஆகிய மருந்துவப் பெயருடன் மூன்று நீதிநூல்கள் உள்ளன. இதனால்


அன்றைய சமுதாயத்தில் இயற்கை மருத்துவம், ஆயுர்வேதம்,


சித்தமருத்துவம் ஆகியவை பரவலாக விளங்கியிருந்தது தெளிவாகிறது!!

உண்மை நண்பா.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

சங்க காலத்திலேயே இசைமருத்துவம்
மற்றும் அறுவை மருத்துவத்தைக்கூடப் பார்க்கமுடிகிறதே..

http://gunathamizh.blogspot.com/2009/10/blog-post.html


நம்ம திருவள்ளுவர் சொல்லாததையா இன்றைய மருத்துவவியலார் மாணவர்களுக்குச் சொல்லித்தருகிறார்கள்.?

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

சங்ககால இருமல் மருந்து..

http://gunathamizh.blogspot.com/2011/02/blog-post_16.html

ADHI VENKAT சொன்னது…

பிரமாதம் சார். விளக்கத்துடன் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை அழகாக திரிகடுகத்திலிருந்து தொகுத்துள்ளீர்கள்.

உங்களுக்கு சூடாக ஒரு குவளை கண்டந்திப்பிலி ரசம் அனுப்பியுள்ளேன்.

எல் கே சொன்னது…

நாம ஆளுங்க தொடாத துறையே இல்லை

நன்றி

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி!
நீங்கள் சொன்னது போல் ஆரோக்கியமான சமையல் முறைகளெல்லாம் மெல்ல மெல்ல அருகி வருகிறது.இளைய தலைமுறைக்கு இவையெல்லாம் தெரியக்கூட தெரியாமல் போகும்.

எனக்கென்னவோ இத்தகு மூலிகைகளும், மருத்துவப் பொருட்களும் கொண்டு சமைக்கும் முறையை ஒரு இயக்கமாய் பதிவர்கள் கூட மீண்டும் பதித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் யோசிக்க வேண்டிய செய்தி இது.

/ 'சுக்குக்கு விஞ்சின மருந்தும் இல்லை, சுப்ரமணியத்துக்கு விஞ்சின சுவாமியும் இல்லை' என்ற பழமொழியே இருக்கிறது./ சுக்குக்கு மட்டும் ஓவஞ்சனையாய் பழமொழி தந்தால் போதுமா?

மிளகுக்கு ஒரு பழமொழி :" பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் "

இந்தப் பதிவே திப்பிலி பற்றியாதலால் உங்களுக்கு போனசாய் ஒரு தேரைச்சித்தர் பாடல்..

எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண விக்கலும் விட்டுப் போகும் விடாவிடில் புத்தகத்தைச்

சுட்டுப் போடு நான் தேரனுமல்லவே.

"எட்டுபங்கு திப்பிலியையும் பத்து பங்கு சீரகத்தையும் நன்கு பொடித்து
அத்தூளை சுத்தமான தேனில் குழைத்து உட்கொள்ள விக்கல் நிற்கும்.
அப்படியும் விக்கல் நிற்கவில்லையென்றால் மயில் தோகையை சுட்டுப் பொசுக்கி அந்த சாம்பலில் தேன் குழைத்து சாப்பிட அதுவும் நிற்காத விக்கலை நிறுத்தும்." ,
இந்தப் பாட்டில் தேரைச் சித்தரின் ஒரு சொல்விளையாட்டு அழகானது. கடைசி இரண்டு வரிகளான"விடாவிடில் புத்தகத்தைச்
சுட்டுப் போடு நான் தேரனுமல்லவே" என்பதை மேலோட்டமாய்ப் படிக்கும் போது வரும் கருத்து-
"திப்பிலி மருந்தை உட்கொண்டும் விக்கல் விடாவிடில் இந்தப் பாடல் கண்ட புத்தகத்தைக் கொளுத்திப் போடு. நானும் தேரன் அல்ல!" என்று சவால் விடுவது போல் அமைந்தவை.
புத்தகம் எனில் மயில் பீலி என்று அர்த்தமுண்டு.

ரிஷபன் சொன்னது…

விளக்கங்களுடன் படிக்க கூடுதலாய் ஆர்வம் கிளர்கிறது..

மோகன்ஜி சொன்னது…

ஹேமா!
திப்பிலி என்பது இந்தியா மருத்துவ முறைகளில் வேறுபல மருந்துப் பொருட்களோடும் இயற்கைப் பொருட்களோடும் சேர்த்து இருமலிலிருந்து மலட்டுத்தன்மை வரை மருந்தாய் பயன்படுகிறது. திப்பிலியில் யானைத் திப்பிலி , அரிசித் திப்பிலி, கண்டந்திப்பிலி என வகைகள் உண்டு. கண்டந்திப்பிலி ரசம் மணத்துடன் சுரீர் என்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
அம்மாவைக் கேட்டு திப்பிலி ரசம் ரெஸெப்பியை சொல்கிறேன் ஹேமா!

மோகன்ஜி சொன்னது…

ரமணி சார்! மீனாக்ஷி மேடம் மற்றும் ஹேமாவுக்கு தந்த பதிலில் கொஞ்சம் விளக்கியிருக்கிறேன். பாருங்கள். ரசம் ரேசிப்பி சற்று கழித்து...

மோகன்ஜி சொன்னது…

அன்பு பத்மநாபன்.. பதிவிட்டு கொஞ்ச நாள் ஆச்சே என்ற குற்ற உணர்வோடு, நேற்று இந்தப் பதிவை இட்டபின் தான் ஆர்.வீ.எஸ் பதிவைப் பார்த்தேன்..

அந்த மயிலாட்டத்துக்கு எதிரில் நான் வான்கோழியாய்... விடுங்க..மச்சினர் பதிவு மணக்கிறது..

மோகன்ஜி சொன்னது…

வருகைக்கு நன்றி கௌதமன் !

மோகன்ஜி சொன்னது…

நன்றி கோபி ராமமூர்த்தி சார்!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜி! கலக்குறீங்க.. எனக்கு பனைவெல்லம் ரொம்ப பிடிக்கும். புதுவை காதிபவனில் ஓலை பெட்டியில் போட்டு பனைவெல்லம் விற்பார்கள். சிறுவிள்ளல் வாயில் ஊற மோட்டுவளையை பார்த்தபடி யோசிக்க, கவிதை கொட்டும் பாருங்க..
அதுல்லாம் ஒரு காலம்ங்க.

மோகன்ஜி சொன்னது…

வெங்கட்! நினைவு படுத்தினீங்க.." சுக்குமி ளகுதி ப்பிலி"...அருமை!
உங்கள் கருத்து நிறைவேற்றப் பட வேண்டியது.

மோகன்ஜி சொன்னது…

குண சீலன் சார்! முதலில் உங்கள் நண்பா எனும் பாசக் குரலுக்கு நன்றி! உங்கள் பதிவு சிந்திக்க வைக்கிறது..
உங்களுக்கு நானும் நண்பேன்... ங்க !

மோகன்ஜி சொன்னது…

ஆதி! கண்ட திப்பிலி ரசம் வைப்பீங்களா? அட!

"நான் தான் மோகன் பேசறேன்.. அடுத்த வண்டில தில்லிக்கு ஒரு டிக்கெட் போடுங்க! லசம் குடிக்கப் போறேன்.."

மோகன்ஜி சொன்னது…

உண்மை கார்த்திக்! நினைக்க ஆச்சர்யமாய் இருக்கிறது !

மோகன்ஜி சொன்னது…

நன்றி ரிஷபன் சார்! நீங்க ரசிச்சா தேரைச்சித்தர் ரசிச்ச மாதிரி..

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

ஒரு விட்டமின் காப்ஸ்யூல் கையில் வைத்துக் கொண்டு இதைப் படிக்க ஆரம்பித்தேன்..முடிவில், கை அந்த காப்ஸ்யூலை குப்பைத் தொட்டியில் போட, கண்ணோ ஐந்தறைப் பெட்டியில் உள்ள திப்பிலியைத் தேட ஆரம்பித்தது! சூப்பர் ஸார்..அது சரி..அடுத்தது என்ன? ஆசாரக் கோவை தானே?

meenakshi சொன்னது…

தேரை சித்தர் பாட்டு மிகவும் அருமை மோகன். பாடலை படித்தபோது நானும் விக்கல் நிற்கா விட்டால் இந்த புத்தகத்தை கொளுத்தி போடு என்று மட்டும்தான் புரிந்து கொண்டேன். புத்தகம் என்பதற்கு மயில் பீலி என்றும் ஒரு அர்த்தம் இருப்பதை உங்கள் விளக்கத்தின் மூலம்தான் தெரிந்து கொண்டேன். நன்றி. உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் அருமையாகவும் அதை நீங்கள் எழுதும் விதம் மிகவும் சுவாரசியமாகவும் இருக்கிறது. இதுற்கு உங்கள் தமிழும், எழுத்து நடையும் மேலும் அழகு சேர்கிறது. அதனால் உங்கள் பதிவுகளை விரும்பி படிக்கிறேன். நன்றி.

என் அம்மா செய்யும் திப்பிலி ரசம்:
கண்டதிப்பிலி, அரிசி திப்பிலி இந்த இரண்டையும் சிறிது சீரகம், கடலைபருப்பு, தனியா, மிளகாய் வற்றல் இவற்றுடன் நெய்யில் வறுத்து, அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும். பின்பு புளித்தண்ணீரில், நெய்யில் வறுத்த பத்து பூண்டு பற்கள், தக்காளி(வேண்டுமெனில்) உப்பும் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, அரைத்த இந்த விழுதை கொதித்த புளித்தண்ணீரில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவேண்டும். பிறகு நெய்யில் கடுகும், நிறைய கறிவேப்பிலையும் தாளித்து இந்த ரசத்தில் சேர்க்க வேண்டும். இந்த ரசத்தைதான் பிள்ளை பேறு ஆனவுடன் தொடர்ந்து மூன்று மாதம் வரை, வாரத்தில் நான்கு நாட்கள் சாப்பிட கொடுப்பார்கள். நீங்கள் எதற்கும் உங்கள் அம்மாவின் செய்முறையையும் எழுதுங்கள். அந்த காலத்து அம்மாக்களின் கைமணமே தனிதானே!

எல் கே சொன்னது…

//உண்மை கார்த்திக்! நினைக்க ஆச்சர்யமாய் இருக்கிறது ! //

அதை எல்லாம் கணினியில் ஒரு இடத்தில ஏற்றி உலகம் முழுதும் பார்க்க பண்ணனும். அடுத்த தலைமுறைகளை கற்றுக் கொள்ள செய்யணும். இல்லாட்டி காலம் நம்மை மன்னிக்காது,

உண்மையில் தமிழ் மேல் பெற்று இருந்தால் இதைதான் செய்யணும். இதை செய்தாலே போதும் தமிழ் அழியாமல் இருக்கும் என்னிக்கும்

RVS சொன்னது…

அண்ணா நாங்கெல்லாம் சுக்குமி ளகுதி ப்பிலி ஆட்கள்... உங்களைப் போன்றோர் இடும் கருத்துரைகளால் மணக்கிறது.
இந்துபோன்ற அறிய விஷயங்கள் நீங்கள் சொல்லி நாங்கள் கேட்கவேண்டும்.

அப்புறம் அந்த கண்டந்திப்பிலி ரசம் பாட்டியோடு போயிடுச்சு.. ;-(

பதிவு அற்புதம். நன்றி. ;-))

மோகன்ஜி சொன்னது…

வாங்க மூவார்! அஞ்சறைப் பெட்டியை ஆதரிக்கும் ஆராராரே!
/அது சரி..அடுத்தது என்ன? ஆசாரக் கோவை தானே?/ ஆசாரக் கோவையை.. 'கோச்சாரப் பாவை' எனப்படித்தேன்.. இது உங்க அடுத்த கதைக்கு தலைப்பு. சரியா?

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்.. மீண்டும் நன்றி! உங்க ரிசிப்பியை ரசித்துப் படித்தேன். செய்யறதுக்கு தொணனுமே மக்களுக்கு. இதை படித்து நாலு பேர் ரசத்தை ருசிச்சிட்டாங்கன்னா நமக்கு வெற்றியே!

மோகன்ஜி சொன்னது…

எல்.கே! அங்குமிங்கும் சில முயற்சிகள் நடக்கின்றன. இது பெரிய வேலை. ஊர்கூடித் தேர் இழுக்கவேண்டிய சமாச்சாரம். ஆனாலும் நடக்கத்தான் வேண்டும் ஒரு இயக்கமாய்...

மோகன்ஜி சொன்னது…

எங்க வீட்டுக்கு வாங்க ஆர்.வீ.எஸ்! கண்டத்திப்பிலி ரசம் ஏற்பாடு பண்றேன். என் தங்கச்சி கூட செய்து குடுப்பா.. அப்புறம் நீங்க பாட்டி பாட்டீன்னு கூப்பிட ஆரம்பிச்சுடுவீங்களோன்னுதான் செய்யல.. அதான் மேட்டரு.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

அன்பு மோகன்ஜி

இப்போ சமைக்கற கும்பலுக்கே இது கஷ்டம் - இனி வரும் தலைமுறைக்கு - ரொம்பவே குசும்பு உங்களுக்கு !

மீனாக்ஷி அவர்களே

எழுதியது சரி ? நீங்கள் பண்ணியது உண்டா ?

மிளகு - என் பிள்ளைகள் இருவரும் வெண் பொங்கலில் வரும் அனைத்து மிளகையும் கிழே எடுத்து வைத்து விட்டு உண்ணும் ரகம். அது பரவாயில்லை என் சிறுவயதில் பேருக்கு இரண்டு முந்திரி போட தான் எங்களுக்கு வசதி இருந்தது. அதை அடித்து பிடித்து முண்டியடித்து எடுக்க போட்டிபோடுவோம் நாங்கள். இப்போது வாஞ்சனை இல்லாமல் போட்டு பண்ணினால் - முந்திரியை எடுத்து வைத்து உண்கின்றார்கள் என் மகன்கள் !!

ஒரு பைசாவுக்கு உதவாத பிஸ்ஸா கல்ப்கல்ப்பாக உள்ளே போகும். என்னத்தை சொல்ல !

ஸ்ரீராம். சொன்னது…

அருமையான விஷயங்கள். பின்னூட்டங்களிலும் நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது. ரசிக்க முடிகிறது.

மோகன்ஜி சொன்னது…

நிஜம் தான் சாய்! நாமே கூட பல பண்டங்களை ஒதுக்கிதானே, சாப்பிட அடம் பிடித்திருக்கிறோம்.. பெற்றோருக்கு அதை எடுத்து சொல்லி சாப்பிட வைக்க நேரமும் அக்கறையும் இருந்தது.. நமக்கு கொஞ்சம் அது குறைவோ என்று படுகிறது.

பாகற்காய் கறி சாப்பிட படுத்தியிருக்கிறேன். என் அம்மா நிறைய வெல்லம்,தேங்காய் சேர்த்து செய்து சாப்பிட ஏதுவாய் சுவை கூட்டி, நாளாவட்டத்தில் மெல்ல மெல்ல அதன் இனிப்பைக் குறைத்து அதற்கொரு ருசியை எனக்கு உண்டாக்கியவள்..

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ஸ்ரீராம் !
/பின்னூட்டங்களிலும் நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது. ரசிக்க முடிகிறது/

ஒரு சமஸ்க்ருதக் கவியின் சில வரிகள் நினைவுக்கு வருகிறது.

திராட்சையை விட திராட்சை ரசம் ஸ்வாரஸ்யமானது.

மனைவியைவிட மச்சினி ஸ்வாரஸ்யமானவள்.

அதுபோல்.. மோகன்ஜியின் பதிவினை விட பின்னூட்ட விவாதங்கள் ஸ்வாரஸ்யமானவை..

எல் கே சொன்னது…

/மனைவியைவிட மச்சினி ஸ்வாரஸ்யமானவள்.//

oho appadiya vishayam

மோகன்ஜி சொன்னது…

கார்த்திக் ! உங்க கண்ணுல பட்டுடுச்சா?!
யாரோ வடமொழிக் கவிஞன் சொல்லிட்டுப் போனது தல.. நானெல்லாம் ரொம்ப சமர்த்துப்பா!

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//மோகன்ஜி கூறியது... திராட்சையை விட திராட்சை ரசம் ஸ்வாரஸ்யமானது.

மனைவியைவிட மச்சினி ஸ்வாரஸ்யமானவள்.//

மச்சினியை மடக்குவது ஒரு சுகம் தான். எனக்கு அந்த கொடுப்பினை இல்லையே சுவாமி ! ஆனால், பெண்டாட்டியையே முடியவில்லை - இது ஒரு கேடு !

என் அம்மா இந்த முறை வந்தபோது "என் அப்பாவைவிட்டு பாகற்க்காயை பொடிசு பொடிசாக நறுக்கி, பச்சைமிளைகாயை இரண்டாய் நறுக்கி, இஞ்சி பொடியதாய் நறுக்கிபோட்டு, எலுமிச்சை பிழிந்து" சூப்பர் ஆக இருக்கும். கசப்பே தெரியாது. ட்ரை பண்ணுங்கள்.

அப்பாதுரை சொன்னது…

பின்னூட்டங்கள் சுவாரசியம். யார் யார் வீட்டுக்கு சாப்பிடக் கூப்பிட்டால் சாக்கு சொல்லி நழுவ வேண்டும் என்று தெரிந்து விட்டது.

புலால் மறுப்பு வாழ்க்கை நலனா? யார் சொன்னது? நல்லதாப் போச்சு. எங்களுக்கு மிச்சம்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விருந்தான திரிகடுகம் -சுவையான பின்னூட்டங்கள் -பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.

மோகன்ஜி சொன்னது…

@சாய்
@அப்பாதுரை
@இராஜராஜேஸ்வரி

நன்றி!நன்றீ! நன்றி!

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா. வேலைப்பளு அதிகம். நடுவில் ஒருமுறை வந்தேன், சுக்கு மிளகு ரசம் குடித்துவிட்டு சென்றுவிட்டேன். பின்னூட்டம் இடுவதற்குள் வயிற்றைக் கலக்கிவிட்டது.
வந்து மறுபடியும் திளைத்தேன்.
நன்றி!