ஞாயிறு, ஜூன் 03, 2012

பிள்ளைக் கனியமுதே!


மா..ர்ட்டீனா... நவரத்தி...லோவா

கருப்புவெள்ளை டயனோரா டீ.வி யில் பிரென்ச் உச்சரிப்புக் காமெண்டரியுடன் க்ரீஸ் எவர்ட்டும் மார்டீனாவும் ஆத்தாடி பாவாட காத்தாட என்று டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த ஞாயிற்றுக் கிழமை காலை சுகமாகத்தான் துவங்கியது. ஹாலில் தரையில் அமர்ந்து கண்கள் டீ.வியிலும், கையில் பீலரும் இருக்க, உருளைக்கிழங்கின் தோலைநீக்கிக் கொண்டிருந்தேன். கர்ப்பிணியான மனைவிக்கு ஒத்தாசை செய்கிறேனாக்கும்.!

ஹாலுக்கும் இடைக்கழிக்கும் மத்தியிலான தளத்தின் படிக்கட்டு தான் என் மூத்த வாரிசின் சிம்மாசனம். மூணு வயசு இன்ஜினீயர். கையிலிருந்த கார் பொம்மையை எப்படி உடைக்கலாம் என்ற யோசனையுடன் கால்களை ‘M’ எழுத்தைப் போல் பரப்பிக் கொண்டு அதை உருட்டியவாறு இருந்தான்.என்ன.. ஆச்சா என்று ஹாலுக்கு கையில் காப்பியுடனும், வயிற்றில் இரண்டாம் வாரிசை சுமந்தபடியும் வந்தாள் என் தர்ம பத்தினி.. இந்த முறை கண்டிப்பா உனக்கு பொண்ணு தான்டீ.. வயறு நல்லா சரிஞ்சிருக்கு பாரு என்று கீழ்வீட்டு ஜம்பகா மாமி நேற்று அவளுக்கு சொல்லிக் கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது. மகளுக்கு நல்ல பேரா வைக்கணும்.... கண்ணம்மா, நிவேதிதா,மதுமதி,ஓவியா,கவிதா, தாக்ஷாயினி,திரிபுரா....

காலங்காத்தால டென்னிஸ்... விவேக்குக்கு பல்லு தேய்க்க சொல்லிக் குடுங்கன்னு தினம் உங்களுக்கு சொல்றேன். அதைக் கேக்காதீங்க. இந்த டீ.வியை முதல்ல நிறுத்துங்களேன்.

அவன் பெயர் பிரஸ்தாபிக்கப் படுவதைக் கேட்டு நிமிர்ந்த விவேக் அவளைப் பார்த்து கண்ணடித்தான்.

முழியத் தோண்டிடுவேன் கம்மனாட்டி. கண்ணா அடிக்கிறே?”

மீண்டும் கண் சிமிட்டும் குறும்பனைப் பார்த்து சிரித்தாள். உங்கப்பா கிட்ட இதெல்லாம் தான் கத்துக்கலாம். நல்லா கண்ணடி..  “ஏங்க இந்த சனியனை நிப்பாட்டுங்களேன்.

இருடி! உலகமே இதைப் பார்த்துகிட்டிருக்கு. அயனான மேட்சு.. படுத்தாத

போறும் உங்க ரசனை. நீங்க ஆம்பளைங்க விளையாடுற டென்னிஸ் பாக்கறதை நான் கண்டதே இல்லையே!

கிராதகி!

மோகன் சார்! கீழ் வீட்டு ஜக்கு சார் குரல். விவேக்கு! அப்பா என்னடா பண்றா..

உள்ளே கைகாட்டி ஆலூக்கு சேவீங் பண்றா என்றான் சின்னக் கள்ளன்.
ஆலூக்கு ஷேவிங்கா?!” வியப்புடன் கேட்டபடி உள்ளே வந்தார்.

வாங்க சார்!

அடடே! இதத்தான் சொன்னியா என்று என் கையில் தோலுரிந்து
வெளுத்திருந்த உருளைக் கிழங்கைப் பார்த்து பெரிதாக சிரித்தார்.

தூக்கினியூண்டு இருந்துகிட்டு என்னமா யோசிக்கிறான் பாருங்க படவா! சரியானப் பயடா நீ!

என் மனைவி பூரிப்புடன் கேட்டாள் கொஞ்சம் காபி தரவா மாமா?”

மகராசியா குடும்மா.

சார் ! உங்கப் பயலுக்கு நேத்து நான் முத்தம் கொடுத்தேன். சட்டையால கன்னத்த தொடச்சிக்கிட்டான். ஆனா பாருங்கோ.. மாமியைத் தேடிப் போயி முத்தம் கொடுக்கிறான். பொல்லாதப் பய!.

அடியே நான் என்ன பண்ணுவேன். என்னைப் பார்த்து முழிய உருட்டுறே?

சொல்லுங்க சார். என்ன சமாச்சாரம்?”

ஏன் ஓய்? சங்கரா ஹால்ல வருஷப் பிறப்பு கவியரங்கத்துலே போன வாரம் கவிதை சொல்லி பின்னியெடுத்துட்டீங்களாம்? நேத்து லேக் மார்க்கெட்ல மூ.நா. சொல்லி சொல்லி மாய்ஞ்சி போயிட்டார். எனக்கு ஒரு வார்த்த சொல்லக் கூடாதோ? நான் ரசனைகெட்ட அசடுன்னு இருந்துட்டீங்களா? சண்டை போடலாம்னு தான் வந்தேன். உங்கபிள்ளை போட்ட போடுலயும், ஜெயந்தி கொடுத்த காபிக்காகவும் தான் உம்மை விடுறேன். பொழைச்சு போம்.

சாரி சார்! இது ஒரு பெரிய விஷயமான்னு உங்க கிட்டே சொல்லத் தோணலே. உங்களுக்கு இதெல்லாம் பிடிக்கும்னு தெரிஞ்சிருந்தா கூப்பிடாம இருந்திருப்பேனா?”

போகட்டும் இந்த சின்ன வயசுல சபைலே கௌரவம் கிடைக்கிறதுன்னா லேசு பட்டதா? மூ.நா உங்களைப் பத்தி சொன்னப்போ எனக்கே அந்த கௌரவம் கிடைச்சா மாதிரி இருந்தது. எங்க தான் உங்களுக்கு இதுக்கெல்லாம் நேரம் இருக்கோ. பெரிய விஷயம்.. பெரிய விஷயம்..."

தேடி வந்து பாராட்ட உங்களுக்கு தான் சார் பெரிய மனசு..

இந்திரா காந்தி, எம் ஜீ ஆர், துர்கா பூஜை, மாமியின் முட்டிவலி என்று அலசிவிட்டு கிளம்பினார். அடேய் குட்டிப் பயலே! என்னோட வர்றியா?

விவேக் அவரைப் பார்த்து கண் சிமிட்டினான்...பாலுக்கு கோபம் வந்துச்சு என்றான்.

என்னடா சொல்றே?”

எனக்கும் புரியவில்லை.

அவனுடைய ஆஸ்தான மொழிபெயர்ப்பாளினியான என் மனைவி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

அதுவா! காலைலே இவனை இடுப்புல வச்சுக்கிட்டு பால் காய்ச்சிக் கொண்டிருந்தேன்.பால் பொங்கி வர்றதைப் பார்த்து பாலுக்கு கோவம் வந்துடிச்சிங்கறான். அதைத்தான் உங்களுக்கு சேதியா சொல்லியாறது

பலே பலே! கவிஞன் பிள்ளையில்லையா? என்னமா யோசிக்கிறான்? வரேன் சார்!  

பெருமையாய்த் தான் இருந்தது.

......................

இப்போது யோசித்துப் பார்க்கிறேன்...

என் பிள்ளை கவிதை எழுதுவதில்லை... கண்ணடிப்பதில்லை...

அதுக்கெல்லாம் தான் நானிருக்கின்றேனே!

52 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மூணு வயசு இன்ஜினீயர். கையிலிருந்த கார் பொம்மையை எப்படி உடைக்கலாம் என்ற யோசனையுடன் கால்களை ‘M’ எழுத்தைப் போல் பரப்பிக் கொண்டு அதை உருட்டியவாறு இருந்தான்.

மனதை நிறைக்கும் குழந்தை !

ஹேமா சொன்னது…

ஒரு அப்பாவாய் உங்கள் இஞ்ஜீனியர் குழந்தையை எப்படியெல்லாம் ரசிக்கிறீர்கள் மோகண்ணா.உங்கள் கிராதகியையும் கூடத்தான்.

‘மா..ர்ட்டீனா... நவரத்தி...லோவா’

வாவ்...என்ன ஆட்டம்...மறக்கவே முடியாதே இவர்களை !

சுந்தர்ஜி சொன்னது…

//நீங்க ஆம்பளைங்க விளையாடுற டென்னிஸ் பாக்கறதை நான் கண்டதே இல்லையே!”//

//அதுக்கெல்லாம் தான் நானிருக்கின்றேனே!//

நிஜம்மா இந்த ரெண்டு வரிகளுக்கு நடுவுலதான் கீதாசாரமே இருக்கு.

அப்டித்தானே மோகன்ஜி?

ரிஷபன் சொன்னது…

பையனை நல்லா ரசிச்சேன்..

மோகன்ஜி சொன்னது…

நன்றி இராஜேஸ்வரி மேடம்! பெற்ற பிள்ளைகள் வளர்ந்த நாட்கள் எந்த பெற்றோருக்குமே சலிக்காத நினைவுகள்.

G.M Balasubramaniam சொன்னது…

/என் பிள்ளை கவிதை எழுதுவதில்லை... கண்ணடிப்பதில்லை./
வருத்த்மாக இருக்கிறதா.?

மோகன்ஜி சொன்னது…

வா ஹேமா!
/ஒரு அப்பாவாய் உங்கள் இஞ்ஜீனியர் குழந்தையை எப்படியெல்லாம் ரசிக்கிறீர்கள் மோகண்ணா.உங்கள் கிராதகியையும் கூடத்தான்./

உண்மை தான். பிள்ளைகள் எந்த சமயம் எந்த நிறத்தில் சட்டை அணிந்திருந்தார்கள் என்று கூட நினைவில் நிற்கும் தான்.

கிராதகியை ரசிக்கிறேன்னு அவ கிட்ட சொல்லிடாதீங்க!

நிஜம் என்னவென்றால் அனைத்துமே ரசனைக்குரியவை தான். அவற்றில் சில, பூசனைக்குரிய பொருளாய் மாறுவது தான் விசித்ரம்

அப்பாதுரை சொன்னது…

நல்ல வெயிலில் ஒருமுறை கிண்டி ரெயில் நிலையம் வாசலில் பஸ்ஸுக்குக் காத்துக் கொண்டிருந்தோம். பக்கத்துப் பழவண்டிக்காரனிடம் ஒரு கிழவி 'பசிக்குது, ஒரு பழம் கொடுப்பா' என்பது போல வார்த்தை வராமல் கெஞ்சிக் கொண்டிருந்தாள். பஸ் வராதா என்று நாங்கள் சலித்துக் கொண்டிருந்த போது கையில் ஒரு நோட்புக் பென்சிலுடன் பயணிகளை அணுகிய சிறுவன்.. பத்து பைசாவோ நாலணாவோ காசுக்கு பயணிகள் கேட்ட படங்களை வரைந்து கொடுத்துக் கொண்டிருந்தான். நாலணாவுக்கு மேல் வாங்கவில்லை. ஏழெட்டு பேரிடம் படம் வரைந்து காசு வாங்கியவன் பக்கத்தில் பழவண்டிக்காரனிடம் கொடுத்து இரண்டு வாழைப்பழம் வாங்கிக் கிழவியிடம் கொடுத்துவிட்டு எதிர்ப்பக்க பஸ் ஸ்டேண்டுக்குப் போனான்.
உங்க பதிவைப் படிச்சதும் ஏனோ இது நினைவுக்கு வந்தது.

மோகன்ஜி சொன்னது…

சுந்தர்ஜீ! சுந்தர்ஜி! எப்பிடி.. எப்பிடி... இப்படி. நீங்களா யோசிக்கிறீங்களா?இல்லே அதுவா வருதா?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ரிஷபன்! பையனை ரசித்தத்திற்கு நன்றி.. வீடுதோறும் பிருந்தாவன கண்ணன்கள்!

வளர்ந்த பின் சிலர் கம்ஸர்களாய் மாறுவதும் மாறாததும் பெற்றோர் கையில் தானே இருக்கிறது?

மோகன்ஜி சொன்னது…

வணக்கம் G.M.B சார்!
/என் பிள்ளை கவிதை எழுதுவதில்லை... கண்ணடிப்பதில்லை./
வருத்தமாக இருக்கிறதா.?

பிள்ளையின் கவிதை பெற்றவனுக்கு பேரானந்தம் அல்லவா? எனக்கேனோ என் அப்பாவின் நினைவு வருகிறது. என் எழுத்துக்களை அவர் படிப்பார். சில நேரம் கண்களைத் துடைத்த்க் கொள்வார்.

அந்த பாஷ்பம்,கவிதையில் மனம் கசிந்தோ அல்லது இது என்ன தமிழுக்கு வந்த சோதனை எனும் வருத்தமோ எதனால் என்றுஅறியேன்!.

மோகன்ஜி சொன்னது…

வாங்க அப்பாதுரை. பழம் வந்தாலே பிரச்சினை தான்.

ஞானப் பழத்தாலே சிவன் பேமலில குழப்பம்.

செந்தில் கொண்டு வந்த பழத்தாலே கவுண்ட மணிக்கு குழப்பம்.

இப்போது எனக்கு!

நான் இதில் கிழவியா,வண்டிக்காரனா, படம் போட்ட பாலகனா, இல்ல அந்தப் பழமே நான் தானா?

ஆர்.வீ.எஸ்! பத்மநாபன்! மூவார் ! யாராவது வந்து நெக்கு ஒரு பழம் உரிச்சு தர மாட்டேளா?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பிள்ளைக் கனியமுதே ரசித்தேன்....

அது ஏனோ குழந்தைகள் இப்படி கண்ணடிப்பது மாதிரி செய்தால் அதற்குக் காரணம் அப்பாதான் என்று எல்லா அம்மாக்களுமே முடிவு செய்கிறார்களோ தெரியவில்லை... :)

//என் பிள்ளை கவிதை எழுதுவதில்லை... கண்ணடிப்பதில்லை.... அதுக்கெல்லாதம் தான் நானிருக்கின்றேனே!” அதானே.... :)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

தோ வந்துட்டேன்...மோகன் ஜி!
என்ன கேட்டீங்க..பழம் உரிச்சுத் தரணுமா?
அடடா.....எங்கிட்ட எலுமிச்சம்பழம் தானே இருக்கு?
அட ராகவா!!!!

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

“....அங்க்கிள்..அங்க்கிள்...உங்க படைப்பிலியே, எனக்கு ரொம்ப புடிச்சது விவேக் தான்”னு ஏதாவது பொண்ணு சொல்லாம இருந்தா சரி...

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

" ......கருப்புவெள்ளை டயனோரா டீ.வி யில் பிரென்ச் உச்சரிப்புக் காமெண்டரியுடன் க்ரீஸ் எவர்ட்டும் மார்டீனாவும் ‘ஆத்தாடி பாவாட காத்தாட’ என்று டென்னிஸ் ஆடிக் கொண்டிருந்தார்கள்......."

-- ஆரம்பமே ரொம்ப ‘எடுப்பா’ இருந்தது...சூப்பர் சார்!

மோகன்ஜி சொன்னது…

வெங்கட்! பொண்ணப் பார்த்து கண்ணடிச்சா பெத்தவன் திட்டுறான். பிள்ளைக்கு சொல்லிக் குடுத்தா பொண்டாட்டி திட்டுரா. .நம்ம எப்போதான் கண்ணடிக்கிறது தல?

மோகன்ஜி சொன்னது…

மூவார்! எலுமிச்சம் பழம் தானா இருக்கு. தாங்க.! தலைல தேச்சிக்குவோம்.

மோகன்ஜி சொன்னது…

//“....அங்க்கிள்..அங்க்கிள்...உங்க படைப்பிலியே, எனக்கு ரொம்ப புடிச்சது விவேக் தான்”னு ஏதாவது பொண்ணு சொல்லாம இருந்தா சரி...//

சொல்லிட்டாப்பு.... சொல்லிட்டாப்பு!

மோகன்ஜி சொன்னது…

//ஆரம்பமே ரொம்ப ‘எடுப்பா’ இருந்தது...சூப்பர் சார்!//

அட ராமச்சந்த்ரா! மேட்சை பாக்க சொன்னா...
இந்த தில்லாலங்கிடி தானே வேணாம்கிறது.

RVS சொன்னது…

ஆலூக்கு ஷேவிங்கும்..பாலுக்கு கோபமும் ரசித்தது.

அப்பாஜி எழுதிய பின்னூட்ட நிகழ்வு அசைத்துப் பார்த்தது.

சுந்தர்ஜிக்கு எதுவுமே கீதாவாக.. ச்சே... கீதையாக தெரிகிறது போலிருக்கிறது.... :-)))))

அண்ணா நீங்கதான் ஞானப்பழம்! :-)

மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! அப்பாஜி காமெண்ட்டுக்கு நீங்க ஏதும் போட்டு வாங்குவீங்கன்னு பார்த்தா,'இனியெல்லாம் சுகமே'ன்னு இண்டெர்வேல் விட்டிட்டீங்க.

அவரு சொன்னதை நானும் எவ்வளவு நேரம் தான் புரியாத மாதிரியே நடிக்கிறது? இந்த அண்ணனுக்கு சப்போர்ட்டா ஏதும் சொல்ல தோணுச்சா?

அந்த படம் போட்ட பையன் சரசரன்னு பத்து படம் போட்டுட்டு அவன் ஜோலிய பார்க்க போயிடறான் இல்லையோ? அது போல நானும் படபடன்னு நாலு பதிவை இறக்கிட்டு மீண்டும் காணாமல் போயிடுவேனாம்?

அண்ணன் நல்லவரு,வல்லவரு,நாலும் தெரிஞ்சவரு.. எங்கப் போனாலும் இங்கனத்தேன் வருவாருன்னு சொல்லு என்னப் பெத்த ராசா!

அப்பாதுரை சொன்னது…

ஏதோ ஞாபகம் வந்துச்சுன்னு சொன்னா இப்படித் துருவுறீங்களே? அந்த அளவுக்கு விசய ஞானிய நல்லாப் பாத்தீங்களே..!
போவுது.. அதான் சொல்லிட்டாரே நீங்க ஞானப்பழம்னு.

அப்பாதுரை சொன்னது…

ஆராரார் சொன்னாப்புல எலுமிச்சபழம் தான் இப்ப உதவும்.

மோகன்ஜி சொன்னது…

அப்பாஜி! இந்தக் கதையெல்லாம் வேணாம்!

"கையப் புடிச்சி இழுத்தியா இல்லியா?"

ஓவர் டூ ஆர்.வீ.எஸ்!

பாலைவன பாபாவையும் காணும்..

பத்மநாபன் சொன்னது…

வலைக்கோளாறு இருக்கிறதனால நிழல் யுத்தத்தை வோர்டில் நகலெடுத்து அப்பப்ப கஞ்சிராவையும் துந்தனாவையும் படிச்சு ரசிக்கிறேன்....

இவ்வளவு சீக்கிரம் பிள்ளை கனியமுதோடு வருவிங்கன்னு எதிர்பார்க்கவில்லை ... மைனர் சொன்னமாதிரி உங்கமைனரின்..ஆலும் பாலும்... அவர்களுக்கே உரித்தான கனியமுது...

நீங்க மார்ட்டியா...நாங்க ஸ்டெஃபி கூட்டம்...

RVS சொன்னது…

மார்ட்டியெல்லாம் உங்க காலத்து வீராங்கனையாம் ஞானமோகன்ஜி! பாலைவன பாபாவின் நெஞ்சில் ராக்கெட்டால் கணைத் தொடுத்த வீரி ஸ்டெஃபியாம். பார்த்துங்க... ஆந்த்ரே அகாஸி கோச்சுக்கப்போறார்.

ஆமாம் அவரு விசயஞானி இல்லை... கலைஞானி.. கதைஞானி.. கவிதைஞானி.. இப்படி நெறைய சொல்லலாம்...

பழம் நீயப்பா... ஞானப் பழம் நீயப்பா.... தமிழ் ஞான............

Geetha Santhanam சொன்னது…

ரொம்ப நாள் கழிச்சு உங்கள் கதையைப் படித்தது சந்தோஷம்.  தொழுவத்து மயில் போல படைப்புகளை உங்களிடமிருந்து விரைவில் எதிர்பார்க்கிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

அண்ணா -- அதற்குள்ளயுமா?
இந்த வேகம் எதிர்பார்க்கவில்லை
கனியமுதை
படித்தேன்,
ரசித்தேன்.
தேன் தேன் தேன்

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! வருக! நிழல் யுத்தத்தோடு உங்கள் யுத்தம் இன்னும் தொடர்வது மகிழ்ச்சி.
//நீங்க மார்ட்டியா...நாங்க ஸ்டெஃபி கூட்டம்..//

மார்ட்டீனாவின் கன்சிஸ்டன்சி பிடிக்கும். ஸ்டெபி ஒரு தேவதை... என்னையும் கூட்டத்துல சேர்த்துக்குங்க!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ஆர்.வீ.எஸ்! ஸ்டெபி ஆட ஆரம்பிச்சப்போ நான் பிறக்கவே இல்லைன்னு சொல்வீங்கன்னு பார்த்தேன்.!

ஆந்த்ரே அகாஸியின் கொடும்பாவியை ஊட்டியில எரிச்சுட்டு மொபெட்ல பாலைவனத்துக்கு பறந்த ஒரு பக்தனை நீர் அறிவீரா?

கலை ஞானி கதை ஞானி கவிதை ஞானி.... பத்தாது.. இன்னும் மேல சொல்லுங்க. நள வெண்பாவுக்குப் பிறகு எதை விருந்தாப் படைக்கப் போறார்ன்னு காத்துக்கிட்டிருக்கேன்.
பதிவை விட பெருசு பெருசா பின்னூட்டம் போட்டு பிரிச்சு மேஞ்சிடப் போறேன். எனக்கு இன்னும் கொஞ்சம் அறிவு கொடு வாக்தேவி!

மோகன்ஜி சொன்னது…

கண்டிப்பா மேடம்! உங்களுக்கு நிறைவு தரும் வகையில் என்னுள்ளே ஒரு நெடுங்கதை குடைஞ்சுகிட்டு இருக்கு..

விரைவில் அதை அவசியம் எழுதுவேன்.

இதற்கு முந்தைய பதிவான நிழல் யுத்தம் படித்தீர்களா?

மோகன்ஜி சொன்னது…

இல்லையா பின்னே சிவா? கிரிசும் மார்ட்டீனாவும் பதிவுக்குள்ளே வந்தப்புறம் இவ்வளவு வேகம் தானே இருக்கணும்?

போதாததுக்கு பத்து சார் ஸ்டெபியை கைபிடிச்சு கூட்டிக்கிட்டு வந்துட்டார். வேகம் வேணாமா தம்பி!

சிவாவுக்கு யாரும் செல்லம் இல்லையா?

RVS சொன்னது…

யாரந்த வாக்தேவி!

வாக் போகும்போது பார்த்த பக்கத்துத் தெரு தேவியா? :-)

மார்டினாவும் ஸ்டெஃபியும் விளையாடும் அரங்கில் ’வாக்’தேவியா? :-)

ரந்திதேவன் போல எதாவது ரந்தேவியைக் கூப்பிடுங்கண்ணா! :-)

முனைவர்.இரா.குணசீலன் சொன்னது…

நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் வலைப்பக்கம் வந்ததில் மகிழ்ச்சி நண்பரே..

பால் பொங்கி வர்றதைப் பார்த்து பாலுக்கு கோவம் வந்துடிச்சிங்கறான்.

மிகவும் இரசித்தேன்.

மழலை உலகம் அழகானது.

மோகன்ஜி சொன்னது…

வாக்கிங் போறச்சே பார்த்தா வாக்தெவி! என்னா குசும்பு? வாக்தேவின்னா சச்சு.. நம்ம பிரம்மரோட ஊட்டுக்காரம்மா... அந்தம்மாவ எழுதசொல்ல கும்ட்டுக்குனா ரோசனையா கொட்டும் நைனா.. அந்தம்மா கிட்ட ராங்க் காட்னியோ.. அவ்ள தான். என்ன எய்துனாலும் புட்டுக்கும்...
எங்க சொல்லு..

விற்பன்னங்கள் செய்யும்

வீணையின் நாதமே...

கற்பகவல்லி கலைமதியே!

என் அன்பு தேவதே சரஸ்வதி..
என் அன்பு தேவதே சரஸ்வதி!

மோகன்ஜி சொன்னது…

அன்பு குணசீலன்! வாங்க! உண்மை! மழலை உலகம் மிகமிக அழகானது!

ஹ ர ணி சொன்னது…

ரசித்தேன். ரசனை. நீங்கள் எழுதிய கவிதைதானே அவன். கவிதை பேசுவதே கவிதைதான் எழுதவும் வேண்டுமோ? கவிதை கண்ணடிப்பது அழகின் உச்சம். சுவையின் சுகம். எதையும் அனுபவிப்பதும் அப்படி வாய்ப்பதும் ஒரு கொடுப்பினைதான்.

நிலாமகள் சொன்னது…

பிள்ளையின் விவேக‌மான‌ பேச்சையும் செய‌லையும் ர‌சித்து சிரித்து ம‌கிழாம‌ல் டென்னிசை அடித்து ஆடிக்கொண்டிருக்கிற‌ 'இளைஞ‌ர்'க‌ளை என்ன‌ செய்ய‌? சுந்த‌ர்ஜி, அப்பாதுரை, ஆர்.வீ.எஸ், ஆர்.ஆர்.ஆர்.,ஹ‌ரிணி ஆகியோர் பின்னூட்ட‌ங்க‌ள் சுவைமிகு ப‌தார்த்த‌த்தின் அழ‌கூட்டும் அல‌ங்கார‌மாய்! தொழுவ‌த்து ம‌யில், நிழ‌ல் யுத்த‌ம், பிள்ளைக் க‌னிய‌முதே எதுவானாலும் அபிமானிக‌ளுக்கு ச‌ர்க்க‌ரைப் ப‌ந்த‌லில் தேன்மாரிதான்!

மோகன்ஜி சொன்னது…

ஹரணி சார்! உங்கள் பின்னூட்டமே ஒரு கவிதை தானே எப்போதும்?

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய நிலா!
//பிள்ளையின் விவேக‌மான‌ பேச்சையும் செய‌லையும் ர‌சித்து சிரித்து ம‌கிழாம‌ல் டென்னிசை அடித்து ஆடிக்கொண்டிருக்கிற‌ 'இளைஞ‌ர்'க‌ளை என்ன‌ செய்ய‌? //

வேண்டுமானால் பல்லைத் தட்டி தொட்டிலில் போடலாம் அவர்களை!

நண்பர்களின் பின்னூட்டமே என் பதிவுகளுக்கு ஒரு அடர்த்தியைக் கொடுக்கிறது. அவர்களுக்கு நான் நன்றியெல்லாம் சொல்ல மாட்டேன். வேண்டுமானால் அவர்களுக்கெல்லாம் ஆளுக்கொரு வாழ்த்துப்பா எழுதி சுவற்றில் ஒட்டி விடுகிறேன்!

என் பதிவுகளை ஆழ்ந்து படித்து சுவையான கருத்துக்கள் சொல்லும் உங்கள் நட்புக்கு நன்றி!

Matangi Mawley சொன்னது…

Shaving the potato! LOL! Too good!

But appa enjoyed this post a lot... In fact, he shared an anecdote after he read this post... Mohan kumaramangalam was calling out for his assistant. He was busy sharpening the pencil. He asked the assistant what he was doing. He replied- "I am combing the pencil". For this Mr. Kumaramangalam replied- "Is that so bushy"? Funny incidents that happen when u think in tamil and talk in english are endless!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ப்ரிய மாதங்கி! உனக்கும் உன் அப்பாவுக்கும் இந்தப் பதிவு பிடித்திருந்தது குறித்து மகிழ்ச்சி. மோகன் குமாரமங்கலம் அடித்த ஜோக் கலக்கல். எப்போது நீங்களிருவரும் ஹைதராபாத் வருவீர்கள்?

நிலாமகள் சொன்னது…

வேண்டுமானால் பல்லைத் தட்டி தொட்டிலில் போடலாம் அவர்களை!//

hahahaha....!

Matangi Mawley சொன்னது…

நானா எப்போவாவது வந்தாதான் உண்டு! :) But these recent times I am busy with so many things that it is very hard to think of traveling anywhere!
But hope I travel to Hyderabad some day... Never been there!

மோகன்ஜி சொன்னது…

நிலா!

யாரிந்தப் பெயரை வைத்தார்கள்? மானுடத்துக்கு இயற்றுதல் தெரிந்த நாள்முதலாய்..நிலாவுக்கும் கவிதைக்கும் ஏனிந்த தொடர்பு ? .

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய மாதங்கி! சற்றுமுன் உனது பதிவைப் படித்து அயர்ந்து போனேன். சரளமாய் அமைந்திருந்தது உன் அப்பாவுடனான உரையாடல். வாழ்த்துக்கள் மாதங்கி.

ஹைதராபாத் ஒருமுறை வாருங்கள். உங்கள் அரட்டையில் நானும் கலந்து கொள்வேன்..

நான் சென்னை வந்த போது பதிவுலக நண்பர்களுடன் எடுத்த புகைப்படத்தை இன்று ஒரு முறைப் பார்த்தேன். உங்களையெல்லாம் நினைத்துக் கொண்டேன்.

கீதமஞ்சரி சொன்னது…

அழகான நீரோட்டம் போன்ற எழுத்தோட்டத்தோடு ஆழமான மனவோட்டங்களையும் அநாயாசமாக சொல்லிவிடுகிறீர்கள்.உங்கள் பதிவுகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளது. பாராட்டுகள் மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

நன்றி கீதமஞ்சரி! மிக்க நன்றி!!