ஞாயிறு, மே 26, 2013

டி.எம்.எஸ்



 
இன்னுமொரு தூக்கம் துறந்த இரவு. மூன்று தலைமுறைகளை வசியப்படுத்தி ஆதூரம் தந்த காந்தக்குரல் மீளா மௌனத்தில் ஒன்றி விட்டது. டி.எம்.எஸ் அமரராகி விட்டார். சில நஷ்டங்கள் என்றுமே ஈடு செய்யப்படுவதில்லை. இந்த இழப்பும் மாளப் பெரிய இழப்பு..  

இந்த மகத்தான கலைஞனுக்குக்கூட சாவு என்ற ஒன்று வரும் என்று எதிர்பார்க்கவில்லை தான். அவர் பின்னணி பாடகர் என்று என்றுமே நான் ஒத்துக் கொண்டதில்லை. நடிகனின் குரலின் பாங்கை உள்வாங்கி, கவிஞனின் வரிகளில் தொக்கி நிற்கும் அர்த்தத்தையும்,உணர்வையும் தன்வயப்படுத்தி, கோதற்ற தங்கக் குரலில் வெளிப்படுத்த  டி.எம்.எஸ் போன்ற வேறொரு பாடகன்  யாருமே இருந்ததில்லை. பாடலாசிரியனின் வரிகளுக்கு வண்ணம் சேர்த்தவர் : நடிகனின் ஆளுமைக்கு தன் குரல் ஜாலத்தால் அர்த்தம் தந்தவர் டி.எம்.எஸ்.

எத்தனை ஆயிரம் பாடல்கள்... குழைவும் கோபமும்,காதலும் காருண்யமும்,ஏக்கமும், துக்கமும் இந்த மேதையின் குரலில் வடிவம் பெற்றன. பின்னணி இசையின் ஏகபோக சக்ரவர்த்தியாய் பீடு நடை போட்டவர்.

அவர் பாடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகின்றன தான். அண்மைக்கால டீ.வி நிகழ்ச்சிகளின் சித்ரஹிம்ஸையில்,அந்த காந்தர்வனின் குரலோசை மூப்பில் நொய்ந்து நெளிந்து நடுங்கியதும் கூட நாம் பார்த்தது தான். ஆனாலும் நம் டி.எம்.எஸ்ஸை நம்மிடமிருந்து பிரிக்க சாவுக்குத் தான் எத்தனை நெஞ்சுரம்? உலகெங்கும் வாழும் அவரின் ரசிகர் ஒவ்வொருவரும் தன் ஆயுளில் ஒரே ஒரு நிமிடம் அவருக்காய்க் கொடுக்க முடிந்திருந்தால் கூட இன்னுமொரு நூற்றாண்டு வாழ்ந்திருப்பார் அன்றோ டி.எம்.எஸ் ?

டி.எம்.எஸ் பாடல் கேட்காமல் நான் கழித்த நாட்கள் வெகு குறைவு. உலோபி சேர்க்கும் பொன் போல அவரின் பாடல்களை தேடிதேடி சேர்த்தேன். இனிஅவர் பாடல்களைக்  கேட்கும் போதெல்லாம் அவர் இப்போது இல்லை எனும் எண்ணம் தரப்போகும் நெருடலை எப்படி தாங்கப் போகிறோம் என்பது இன்னுமொரு துக்கம். இன்னும் சில நாட்கள் உன் பாடல் கேட்கும் நெஞ்சுரம் எமக்கில்லை.

அவர் பாடித்துதித்த முருகன் இணையடி நிழலில் இளைப்பாற அமரனாகி விட்டார் நம் அன்பு டி.எம்.எஸ்....

மயில் முருகன் இனி டி.எம்.எஸ்ஸிடம் நேயர் விருப்பம் கேட்டபடி உள்ளம் உருகலாம்.. 

ஆனாலும் கருணை முருகா... எங்கள் நட்டத்திலா நீ லாபம் பார்ப்பது?


18 comments:

அப்பாதுரை சொன்னது…

போகட்டும்.

கீதமஞ்சரி சொன்னது…

இரண்டுநாளாய் இல்லத்தில் இடைவிடாது ஒலித்துக்கொண்டிருக்கிறது அவரது குரல். ஒவ்வொரு பாடலும் முதன்முறை கேட்பதைப் போன்ற பரவசம் தரும் அனுபவம்...அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான அஞ்சலி.....

அவர் மறைந்தாலும் அவரது குரல் நம்மிடம் இருந்து என்றும் மறையாது......

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அன்னாரின்
ஆன்மா சாந்தியடையட்டும் ..!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

வாழ்நாள் சாதனையாளர் என்ற தகுதிக்குரிய ஒரு பாடகர். அவர் பாடல்களால் என்றும் அவர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…


ஆனாலும் கருணை முருகா... எங்கள் நட்டத்திலா நீ லாபம் பார்ப்பது?

Real Anjali....

ரிஷபன் சொன்னது…

தவிர்க்கமுடியாத சில விஷயங்கள் வாழ்வில். ஆனாலும் நம் கடைசி மூச்சு வரை அவர் குரலைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்பதே மகத்தான ஆறுதல்.

G.M Balasubramaniam சொன்னது…


அவர் மறைந்தாலும் அவர் குரல் தமிழ்த்திரையிசை உள்ளவரை ஒலித்துக் கொண்டு இருக்கும்.நிறை வாழ்வு வாழ்ந்த அந்த அமரருக்கு என் அஞ்சலிகள்.

vasan சொன்னது…

??உலகெங்கும் வாழும் அவரின் ரசிகர் ஒவ்வொருவரும் தன் ஆயுளில் ஒரே ஒரு நிமிடம் அவருக்காய்க் கொடுக்க முடிந்திருந்தால் கூட இன்னுமொரு நூற்றாண்டு வாழ்ந்திருப்பார் அன்றோ டி.எம்.எஸ் ??/

...ஆமால்ல‌?

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நாமிருவர் மட்டும் அந்த யாத்திரையில் செலவழித்த நேரங்களில் அவரின் பாடல்களை நடுநிசி வரை பாடிக்கொண்டிருந்தது நினைவில் அசைகிறது மோகன்ஜி.

ஒரு பூகம்பம் உண்டாக்கும் சேதம்போல அத்தனை வலி இந்தக் கலைஞனின் மறைவில்.அதற்கும் நிவாரணம் அவருடைய இசை என்பதுதான் எத்தனை பெரிய முரண்?

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை; என்கிற கலைஞர்களுக்கான சாஸ்வதமான வரிகளின் முழுவீச்சு இப்போது மீண்டும் புரியவைக்கப்பட்டிருக்கிறது.

உங்களோடு சேர்ந்து இப்போது நானும் பாடிக்கொண்டிருக்கிறேன் பெட்டையை இழந்த ஒற்றைக்குருவி போல.

sury siva சொன்னது…

//எங்கள் நட்டத்திலா நீ லாபம் பார்ப்பது?//

லாபமும் நட்டமும் அவ்வுலகிலும் உண்டோ ?

அங்கு செல்லும்பொழுது தான் தெரியும்.
அது ஒரு புறம் இருக்கட்டும்.

டி.எம்.எஸ் பற்றியும் முருகன் பற்றியும் ஒன்றே தான் நாம் எல்லோருமே சொல்கிறோம்:

உனைச் சொல்லாத நாளில்லை. சுடர் மிகும் வடிவேலா....

அவர் வாழ்ந்த காலத்திலே நாமும் வாழ்ந்ததே நமக்கெல்லாம் பெருமை.


சுப்பு தாத்தா.

நிலாமகள் சொன்னது…

பதிவும் பின்னூட்டங்களும் மனதைக் கசியச் செய்கின்றன....

கேட்டாவது கிடப்போம்.

சிவகுமாரன் சொன்னது…

அவர் மறைந்த சோகத்தை மறக்க அவர் பாடல்களே துணையாய்.
இரவு நேரங்களில் அவர் பாடல்கள் தாலாட்ட தூக்கம் வரும். இனி துக்கமும்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வணக்கம் அண்ணா...

வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்... நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்...

நன்றி...

http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html

சாய்ராம் கோபாலன் சொன்னது…

//அவர் பின்னணி பாடகர் என்று என்றுமே நான் ஒத்துக் கொண்டதில்லை. நடிகனின் குரலின் பாங்கை உள்வாங்கி, கவிஞனின் வரிகளில் தொக்கி நிற்கும் அர்த்தத்தையும்,உணர்வையும் தன்வயப்படுத்தி, கோதற்ற தங்கக் குரலில் வெளிப்படுத்த டி.எம்.எஸ் போன்ற வேறொரு பாடகன் யாருமே இருந்ததில்லை.//

So True Mohanji. I doubt there can be one more like TMS.

I have skipped every other songs other than his in my listening time. I doubt I have skipped any of his songs though I have listened it 1000+ times. That is how I am attracted to his voice.

The void he created can never be fulfilled. "Unn Kannil Neer Vazhindhaal" as a song is absolutely resonates your above sentence.

சிவகுமாரன் சொன்னது…

ஆவலாய் வந்தேன் அண்ணா .

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.