வியாழன், ஏப்ரல் 09, 2015

ஜெயகாந்தன்


மானிடர் மரணம் ஒருமுறை,ஒரேமுறை மட்டும் நேர்வதில்லை. தன்னை செதுக்கியவர்கள், தன்னில் ஒரு தவிர்க்கவியலாத ஆளுமையாய்ப் பொதிந்தவர்கள் ஒவ்வொருவராய் மரணம் எய்தும் தோறும் தவணைகளில் தானும் சிறுகச்சிறுக மரணிக்கிறார்கள். அந்த சிறு மரணத்தில் இழக்கும் வாழ்வின் ஒரு பகுதி, ஈடு செய்யப்படாமலேயே, ஒரு பெருநினைவின் வடுவாய் எஞ்சிப் போகிறது.

எனக்கும் அந்த மரணம் ... தவணை மரணமாய் நேற்றிரவு நிகழ்ந்தது. ஜே.கே எனும் மாபெரும் ஆளுமை மறைந்ததை எப்படி சொல்ல?? எனக்கு அவர் வெறும் இலக்கியவாதி மட்டும் தானா ? எழுத்தால் வாழ்க்கையை உபதேசித்த குரு மட்டும் தானா? இல்லை.. நானிங்கே இரங்கல் செய்தி எழுதப் போவதில்லை.... அவரின் படைப்புகளையும் திரை,இலக்கிய மற்றும் அரசியல் முயற்சிகளைப் பட்டியலிடப்போவதில்லை... அவையெல்லாம் எல்லோர்க்கும் பெய்தபோது எனக்கும் பெய்தமழை. அவருடன் எனக்கே எனக்கான சில அனுபவங்கள்...... சிறுகுருவி சேர்ப்பது போல் ஞாபகங்களின் கூரைகளில் சேமித்துவைத்த நிகழ்வுகள் . அவற்றில் இங்கே ஓரிரண்டு.....

எனக்கோர் அசட்டுப் பெருமையுண்டு. நானும் அவர் பிறந்த அதே கடலூரில், அதே மஞ்சக்குப்பம் பகுதியில் , அதே தெருவில் பிறந்தவன். கம்பன் தெரு கட்டுத்தறி.. கட்டுத்தறியென்ற நினைப்பொன்று போதாதோ காலந்தள்ள?? இந்த அசட்டுப்பெருமை நிஜப்பெருமையாய் ஏற்றம் பெற்ற தருணம்கூட வாய்த்தது.


எண்பத்திரண்டாம் வருடம்... ஒரு இரவுப்பொழுது...சென்னை அண்ணாநகர் மேற்கு பஸ்டிப்போவிலிருந்து தி.நகர் செல்லும் கடைசி பேருந்தின் பின்னிருக்கையில் அமர்ந்திருக்கிறேன். டிப்போவிலிருந்து கிளம்பி சற்றே ஓடிய பஸ், யாரோ கைகாட்டி நிறுத்த,கிறீச்சிட்டு நின்றது .
பின்புறம் அந்தப்பயணி ஏறியவுடன் வண்டி குலுங்கிப்புறப்பட்டது. அந்தக்குலுங்கலில் தள்ளாடியவரை தாங்கிச்சென்று பிடித்தேன். எனக்கருகேயே அமரவைத்தேன்.
அவர்குடித்திருந்ததை நாசி உணருமுன்னரே, அவர் என்னுடைய ஜே.கே என்பதை மனசு உணர்ந்து கொண்டது.

'தேங்க்ஸ்' என்றார் அரைக்கண்களால் ஏறிட்டபடி.

'நி..நீங்க.. ஜே.கே தானே சார்..'

' என்னைத் தெரியுமா?'

' உங்களைத்தெரியாமல் இருக்குமா சார்?.. நான் எட்டுவயசு பையனாய் இருக்கும் போதே உங்களிடம் ஊர்பட்ட அரட்டை அடிச்சிருக்கிறேன் சார்'

'மேலே சொல்லு' என்பதுபோல் அவர் தலையாடியது.
கண்களில் போதையை கட்டுக்குள் அடைத்த வெறி.

கடலூர் பாஷ்யம் ரெட்டியார் தெரு... அங்கு வசித்த அவருடைய மாமா , அடுத்தவீட்டுப் பையனாய் அவர்வீட்டிலேயே ஆடித்திரிந்த நான்.....
அந்தக் கம்யூனிஸ்ட் மாமா வீட்டிற்கு அவர் வருகைதந்த தருணங்கள் என பரபரப்பாய் நான் பட்டியலிட்டது...

'நீ.. நீங்க ஐயரா,நாயுடுவா ?'

ஜாதியையா பேசுகிறது என் ஆளுமை?!

'கம்யூனிஸ்ட்டா இல்லைன்னு ஆயிட்டா ஜாதி வரணம்லாம் வந்துடுச்சி பாருங்க சார்!'

அரைக்கண் கிறக்கத்திலேயே சிரித்தார். 'அப்படியில்லைப்பா... யார்வீடு என்று ஞாபகம் கொள்ள ஐயர் ,ரெட்டியார் என்று கவனம் வைக்கிறது.
அது ஒரு வசதிக்காகத்தான்' சமாதானமாய் சொன்னார்.
 'அவரைத் தெரியுமா இவரைத்தெரியுமா 'என்று சில வினவல்கள்.
இல்லை என்ற என் உதட்டுப் பிதுக்கலை அவர் பார்க்கவே இல்லை.
கண்களை மூடியபடி இருந்தார். 
கிறக்கமென்றுதான் அவரையே பார்த்தபடி இருந்தேன்.

' கடலூர் தெருப்பெயர்கள் வித்தியாசமானவை இல்லையா?' என்று கேட்டார். அது கிறக்கமல்ல, நினைவின் ஆழத்தில் தேடல் என்று புரிந்தது. 'கவரைத்தெரு.... தெற்கு கவரைத்தெரு'

'ஆக்கர் சந்து' என்று தொடர்ந்தேன் அவர் கேட்காமலேயே.

'சபாஷ். ஞாபகத்தில் இருக்கு. உப்பலவாடி....

கோமுட்டிசந்து, நேப்பியர் ரோடு, ஞான ஒளிவுத்தெரு, கொத்தவால் சாவடித்தெரு,வண்ணாங்குட்டை.......
இருவரும் பல தெரு பெயர்களை சிறுவர்களின் ஊக்கத்துடன்
நினைவுகூர்ந்த அந்த சில நிமிடங்கள்.... 
மீண்டும் அவர் கண்கள் மூடிக்கொண்டு விட்டன . 
அவராக கண்விழிக்கட்டும் என்று காத்திருந்தேன். 
நான் இறங்கவேண்டிய நிறுத்தமோ காத்திராமல் சமீபித்தது. 
அவரைத் தொட்டு எழுப்பி விடைபெற மனம் ஒப்பவில்லை. 
நடத்துனரிடம் ஜே.கே வை சுட்டி ஜாடைகாட்டினேன். 
'நான் பார்த்துக்கொள்கிறேன்' என்ற நடத்துனரிடன் அபிநயம் இன்னும் கண்ணுக்குள் இருக்கிறது.

நான் இறங்கிய நிறுத்தத்தில் சில நொடிகளே நின்ற பஸ் கிளம்பும் வரை அவரையே பார்த்திருந்தேன்.
பஸ் போனபின்னும் மனசு அவரையே பார்த்துக் கொண்டிருந்தது ரொம்ப நேரம்.

பின்னர் அவரை சென்று சந்திக்கும் வாய்ப்புகள் சில நேர்ந்தும், ஏனோ அது வாய்க்கவில்லை. எழுத்தாளனுக்கு கம்பீரமும், சுயகௌரவமும் இயல்பாக வேண்டும் என்பது போன்றதொரு வாழ்க்கை அவருடையது. 
அவரிடம் அகம்பாவம் கூட ஒரு அலங்காரமாகி நின்றது . 
சீற்றம் கூட சிங்காரமாகி சிரித்தது.... சிறந்த சிந்தனையாளர். 
எண்ணங்களை கோர்வையாய் எழுத்தில் எப்படி செதுக்கினாரோ,அது போன்றே மேடைப்பேச்சிலும் சண்டமாருதமாய் பொழியும் ஞானபானு அவர். 

ஏதோ உந்துதலில் நான்கு நாட்களுக்கு முன்னர் அவர் எழுதிய 'ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர' நாவலைப் படித்தேன்.
அவர் எழுத்துக்கள் அனைத்தும் மீண்டும்மீண்டும் படித்தது தான். 
இந்தமுறை 'ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர' புதிய தாக்கங்களைக் தந்தது.

அந்த வாசிப்பின் நீட்சியாக ஒரு சிறுகதை எழுத ஆரம்பித்தேன் .
 'இந்த கெடில நதி மேம் பாலத்தின் மீதுதானே வெய்யிலில்நடந்து போனாள் ஜெயகாந்தன் படைப்பில் ஒரு பாட்டி' என்று ஒரே வரி மட்டும் தொடங்கி அப்படியே நிற்கிறது.

அந்தக் கதையை முடிப்பேன் என்று தோன்றவில்லை.


(புகைப்படங்களுக்கு நன்றி Google)41 comments:

G.M Balasubramaniam சொன்னது…

ஜெயகாந்தனின் படைப்புகள் மூலம் நினைவு கூறுவோருக்கிடையே அவருடனான வித்தியாசமான சந்திப்பு பற்றி நினைக்க ஒரு அனுபவம் உங்களுக்கு. ஜெயகாந்தனை நினைவு கூறும் போது என் அண்ணாவின் நினைவு வரும். பல சாடைகளில் இவரும் அவரைப் போலத் தெரிவார்

மனோ சாமிநாதன் சொன்னது…

இளம் வயதில் அவரின் எழுத்தின் தாக்கம் என்னை பாதித்திருக்கிறது. ' யாருக்காக அழுதான்' படித்து கண்ணீரில் கரைந்ததும் ' கருணையினால் அல்ல' படித்து மனம் நெகிழ்ந்ததும் நினைவுக்கு வருகிறது.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

+2 துணைப் பாடத்தில் ஜெயகாந்தனின் நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்ற கதை என்னை ஈர்த்தது.அதன் பின் அவரது சிறுகதைகளை தேடிப் படித்தேன். அதற்கு முன்னரே பாவம் இவள் ஒரு பாப்பாத்தி என்ற கதையை புரியாமல் படித்த நினைவும் இருக்கிறது. அற்புத எழுத்தாளர்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க GMB சார்!

ஜெயகாந்தனின் படைப்புகளில் அறத்தின் வலியுறுத்தல் தெளிவாய் இருக்கும். இரண்டு தலைமுறை வாசகர்களை தன் ஈர்ப்பில் வைத்திருந்தவர்.சில வருடங்கள் ஏதும் எழுதவில்லை என்றாலும், அவர் இருப்பே ஒரு நிறைவாய் இருந்தது. யூ டியூபில் திரு.ரவி சுப்ரமண்யன் அவர்களின் ஆவணப்படத்தைப் பாருங்கள்... ஜே.கே வின் பன்முகம்தேரியும்.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய திரு. ஜெயகாந்தன் அவர்களுடனான தங்களின் ஒருசில அனுபவங்களை எடுத்துச்சொல்லியுள்ள இந்தப் பதிவினால், மறைந்த அவரின் எழுத்துக்களின் மேல் பெரும்பாலான வாசக நெஞ்சங்களுக்கு இன்றும் நினைவலைகளில் உள்ள போதையை நன்கு உணரமுடிகிறது.

>>>>>

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…


//மானிடர் மரணம் ஒருமுறை,ஒரேமுறை மட்டும் நேர்வதில்லை. தன்னை செதுக்கியவர்கள், தன்னில் ஒரு தவிர்க்கவியலாத ஆளுமையாய்ப் பொதிந்தவர்கள் ஒவ்வொருவராய் மரணம் எய்தும் தோறும் தவணைகளில் தானும் சிறுகச்சிறுக மரணிக்கிறார்கள். அந்த சிறு மரணத்தில் இழக்கும் வாழ்வின் ஒரு பகுதி, ஈடு செய்யப்படாமலேயே, ஒரு பெருநினைவின் வடுவாய் எஞ்சிப் போகிறது.//

உண்மை தான். இந்த ஆரம்ப வரிகளை நான் மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்.

பகிர்வுக்கு நன்றிகள்.

மோகன்ஜி சொன்னது…

உண்மை மனோ மேடம்!அவருடைய கதைகளை மிக இளவயதிலேயே படித்தபோதே புரியவும் செய்தது... யோசிக்கவும் வைத்தது.பல்வேறு காலகட்டங்களில் அவற்றை மீள் வாசிப்பு செய்யும்போது, வேறு தொனியிலும், கதையின் தளம் விரிவாகவும் தோற்றம் தந்தது.

மோகன்ஜி சொன்னது…

அன்பு முரளி! ஜெயகாந்தனை ரைட்டர்ஸ்'ரைட்டர் எனலாம். எழுத நினைப்பவர்கள் ஜெயகாந்தனையும், புதுமைப் பித்தனையும் படித்த பின்னரே
எழுத முயல வேண்டும் என்பது என் துணிபு.

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்! இளம் வாசகனுக்கு ஒரு நல்ல கதாசிரியன் ஒரு தகப்பனைப் போல வழிகாட்டி.. ஆதர்சம். ஜெகே வின் பாதிப்பில்லாத எழுத்தாளர்கள் இல்லை.

மோகன்ஜி சொன்னது…

வை.கோ சார்!
//ஆரம்ப வரிகளை நான் மீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்//

மிக்க நன்றி! ஏனோ நேற்றிரவிலிருந்து மிகவும் சோகமாய் இருந்தேன்.. காலையில் என் பிள்ளை தான் ஜெ.கே பற்றி ஏதும் எழுதேன் அப்பா! என்றதால் இந்தப் பதிவை எழுதினேன்.. சற்றே மனசு பாரம் நீங்கியது. நேற்றிரவெல்லாம் அவர் கதைகள், அந்த கதா பாத்திரங்கள் என்று மேலேமேலே நினைவலைகள் எழும்பியவாறு இருந்தது...

ஸ்ரீராம். சொன்னது…

யாருக்காக அழுதான் சோசப்பு கண்கலங்க வைத்திருக்கிறான். கோகிலா என்ன செய்து விட்டாள் என்று வியந்து நெகிழ வைத்திருக்கிறாள். சில நேரங்களில் சில மனிதர்களை அணு அணுவாய் ரசிக்க வைத்து, பாரீசுக்குப் போ சாரங்கன் மலைக்க வைத்திருக்கிறான். அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் சிந்திக்க வைத்திருக்கிறார்கள். இன்னும் சுயதரிசனங்களைச் சொல்ல கை துடிக்கிறது.

ஸ்ரீராம். சொன்னது…

tf

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஸ்ரீராம்!

ஜெயகாந்தனின் கதைகளில் சிறப்பம்சமே அவர் மானுடத்தின் மேன்மையை அல்லது கீழ்மையை மையமாக வைத்தே விவாதித்தது தான். அவர் குரல் கதையோட்டத்தோடு மேலோங்கி இருந்தது. மனங்களின் நுட்பத்தை நுணுக்கமாக வடித்த சமூகச் சிற்பி அவர். பலகதைகள் நம் மீது அவர் தொடுத்த சாட்டை அடியே ! பல பக்கங்களிலிருந்தும் இழுபட்டுக் கொண்டிருந்த தமிழ்சமூகத்தை சிந்திக்கத் தூண்டிய படைப்புகள் அவருடையவை. அவற்றில் சில இன்றைய கண்ணோட்டத்தில் பிரச்சாரமாகவோ, உபதேசமாகவோ தோன்றலாம்.ஆனாலும் அவர் தொடுத்த அந்த ஆதாரமான கேள்விகள் அப்படியே இருக்கின்றன.

நீங்கள் குறிப்பிட்ட நாவல்கள் சிறந்தவை.' ஒரு மனிதன்ஒரு வீடு ஒரு உலகம்' உங்கள் லிஸ்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அவர் நாவல்களையும், சிறுகதை தொகுப்புகளையும் மீறி,அவருடைய முன்னுரைகள் கவனத்தை ஈர்ப்பவை. சாட்டையை அவர் சுழற்றும் முன்னமேயே சப்தம் செய்தவை..

sury Siva சொன்னது…

சமூகம் நிந்திக்கும் ஒரு சில மனிதப் பிறவிகள்
ஜெயகாந்தன் எழுத்தின் வன்மையால்
நம்மை
சிந்திக்க வைத்து இருக்கிறார்கள் . நம்
இதயத்தை கூறிட்டு
இரத்தம் சிந்த வைத்து இருக்கிறார்கள் .

சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com

மோகன்ஜி சொன்னது…

எளிய ஏழைமக்களின் உயர்ந்த பண்பையும் மனித நேயத்தையும் ஜெ.கே போல காட்சிப் படுத்தியவர்கள் யாருமில்லை. பல சிறுகதைகளில் இதைக் காணலாம். சமுதாய ஏற்றத் தாழ்வு மிகுந்திருந்த ஒரு காலநிலையில் ஒடுக்கப் பட்டவர்களின் பண்பாட்டுக் கூறுகளை நுட்பமாக சித்தரித்தவர்.

இன்றைய இன்னொரு இழப்பு நாகூர் ஹனீபா அவர்கள். தன் கம்பீர குரல்வளத்தால் இறைவனை நமக்கு அருகே கொண்டு வந்தவர். 'இறைவனிடம் கை ஏந்துங்கள்'ஆன்மிகம் நாடும் இறையன்பர்களின் தேசிய கீதம்.

மலரன்பன் சொன்னது…

ஓர் எழுத்தாளனை சினிமா ஹீரோக்களைப் பற்றிப்பேசிப்பாடி பரவசமடையும் இரசிகர்களைப்போல தூக்கி வைத்து எழுதுகிறீர்கள். எனக்கு வியப்பாக இருக்கிறது. எழுதியதைத் தவிர வேறெதுவும் சமூகத்துக்குச் செய்யவில்லை. அவன் எழுத்துக்கள் கூட தமிழ்தெரிந்த எல்லாரும் படிப்பதில்லை. அவரவருக்கு முடிந்த வகையில் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்துதான் படிப்பர். ஜயகாந்தனைப் படிக்க இலக்கிய இரசனை உள்ளவர்களால் மட்டுமே முடியும். 11 கோடித்தமிழர்களும் அப்படியல்ல. குண்டடிபட்டு செத்த 20 பேரும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் ஜயகாந்தன் யார்? சில நேரங்களில் சில மனிதர்கள் என்று ஒரு நூல் இருக்கின்றது என்றெல்லாம் தெரியாது. எனவே மக்களுக்கு உதவா ஒருவன் மரணிக்கும்போது ஒரு சாதாரண விடயம். முத்துநிலவன் எழுதியதைப்போல, இவரால் ஏராளம் மாணவர்கள் முனைவர் பட்டம் வாங்க முடிந்தது. அவ்வளவுதான் இவரால் உதவி. அப்படி வாங்கியவர்களும் வேலைவாய்ப்புக்குத்தான் செய்தார்கள். அவர் தன்னலத்துக்கு இவர் உதவி. நம் இன்றைய தமிழ்நாட்டில் எழுத்தாளால் சமூகத்தில் தாக்கம் கிடையவே கிடையாது. ஏன் இவ்வளவு அலட்டல் ?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எழுத்துகள் திரைப்படங்கள் ஆனதை மறக்க முடியாது...

கதையை தொடர்ந்து விட்டீர்களா...?

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள மலரன்பன்,
" ஒரு கருத்தை சொல்ல நமக்கு எவ்வளவு நியாயம் இருக்கிறதோ, அவ்வளவு நியாயம் அதை மறுப்பவர்க்கும் இருக்கிறது"
இதைக் சொன்னவர் ஒரு எழுத்தாளன் தான். அவர் பெயர் ஜெயகாந்தன். உங்கள் மறுக்கும் உரிமையை மதிக்கிறேன். சினிமா, எழுத்து ஆகிய பெரும் ஊடகங்கள் மக்கள் மனதில் அதிகத்தாக்கம் ஏற்படுத்தக் கூடியவை. அவற்றை ஏளனமாக்க் கருதுவது நியாயம் இல்லை. பல குப்பை சினிமாக்களும், மட்டமான எழுத்துக்கள் பரவலாக வந்தாலும் அத்தனையையும் புரட்டிப்போடும் நல்ல படைப்புகளும் வந்தவண்ணம் தான் இருக்கின்றன. அவற்றை முற்றுமாக மறுதலிப்பதோ ஒதுக்குவதோ இயலாது.. சரியும் அல்ல. நீங்கள் ஜெயகாந்தனின் எழுத்துக்களை படித்து அவற்றை மறுப்பது உங்கள் உரிமை.

ஒரு பெரிய எழுத்தாளன் மரணமடையும் போது, அவனைப் பிடித்தவர்கள் அவனுடைய எழுத்தையும் நினைவுகளையும் கொண்டாடலாம்; பிடிக்காதவர்களோ, அந்த மரணத்தையே கொண்டாடத் தடையில்லை....

உங்கள் கருத்துகளை,எதிர்வினைகளை பற்றிய சஞ்சலமின்றி உரத்தை சொல்கிறீர்கள் மலரன்பன்! பாராட்டுக்கள் . இவ்வாறே தான் சிறுமையை எதிர்த்து,அதிகாரத்தை எதிர்த்து எந்த அச்சமுமின்றி குரல் கொடுத்தவர் , எழுதியவர் ஜெயகாந்தன். நன்றி..

மோகன்ஜி சொன்னது…

வாங்க டி்டி!

அந்தக் கதை அப்படியேதான் இருக்கிறது.. வேறொன்று எழுதி வைத்திருக்கிறேன் . விரைவில் பதிகிறேன் பாஸ் !

நிலாமகள் சொன்னது…

பதிவின் தொடக்கம் பலே!

உருவம், எழுத்து, பேச்சு எல்லாவற்றிலும் கம்பீரம்!

சொல்லிக்கொள்ளாமல் அன்று இறங்கினீர்கள்... இன்று அவர்.

அவரது 'ஒருமனிதன் ஒருவீடு ஒரு உலகம்' மறக்க முடியுமா... அதன் நாயகன் ஹென்றியை...? 'சோப் எங்கப்பா சோப் எங்கப்பா' வசனம் நினைக்கும் போதெல்லாம் பாத்திரப்படைப்பின் காத்திரம் கண்ணுக்குள்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிலா!

கம்பீரம் அவருடைய தன்னம்பிக்கையினால், தருக்கு அவர் மொழியில் கைக்கொண்ட பாண்டித்தியத்தால்...

கல்லூரி நாட்களில் அவர் பேசிய எந்தக் கூட்டத்தையும் விட்டதில்லை. அனல் தெறிக்கும் பார்வை, புனல் பாய்வாய்ப் பேச்சு. அண்மைக்கால ஒளிப்பட பதிவுகளைக் காண்கையில், முதுமையின் கோரப்பிடியை சபித்தவாறே தான் காண முடிந்தது...

Geetha Sambasivam சொன்னது…

ஜெயகாந்தனின் பல கதைகள், நாவல்கள் படித்தது தான். :) தினமணி கதிரில் வந்த அவருடைய சுயசரிதை(கிட்டத்தட்ட) படிக்கப் படிக்க சுவாரசியமாக இருக்கும். அவருடன் நெருங்கிப் பழகியதால் உங்கள் மன வருத்தம் புரிகிறது.

நானும் அவரை ஆழ்வார்ப்பேட்டை ராமசாமி நாயக்கன் தெரு முனை வீட்டு மாடியில் பலமுறை பார்த்திருக்கிறேன். அங்கே நண்பர்கள் சேர்ந்து கலந்துரையாடுவார்கள் எனச் சொல்லிக் கேள்வி. அதன் பின்னும் ஓரிரு முறை சித்தப்பாவைப் பார்க்க வந்தபோதும் பார்த்திருக்கேன். பேசியதெல்லாம் இல்லை.

மோகன்ஜி சொன்னது…

கீதா சாம்பசிவம் மேடம்!

வாழ்க்கையை ஒரு கொண்டாட்டமாக, அணுஅணுவாய் ரசித்து வாழ்ந்தவர் ஜெ.கே அவர்கள். தன் கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளாதவர். அவர் சொந்த அனுபவங்களையும், வாழ்க்கையையும் எழுதிய போது எந்த ஒப்பனைகளும் செய்து கொள்ளாதவர்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல எழுத்தாளர். அவரது கதைகள் சில நெஞ்சை விட்டு அகலாமல்....

அவருடன் உங்களுக்கு இருந்த தொடர்பு - அவரது இழப்பு உங்களுக்கு அதிகம்தான்....

May his soul rest in peace.

மோகன்ஜி சொன்னது…

வாங்க வெங்கட் ! ஜெ.கே எழுதுவதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டபோதிலும், தமிழ் இலக்கிய வானில் அவர் ஒரு துருவ நட்சத்திரமே !

Matangi Mawley சொன்னது…

Surreal!!

He's one of the writers who got me into reading thamizh. Listening to my father speak about him and reading his "suya tharisanam" are the two most important turning points for me and my thamizh reading experience!

Kedila nathi mempaalam wants its story told!

V Mawley சொன்னது…

அவருடைய " சுய தரிசனம் " சிறு கதையை கடந்த முப்பது ஆண்டுகளில் 20 முறைக்கும்அதிகமாக

படித்திருப்பேன்..ஒவ்வொரு முறையும் கடைசிப்பாரா படிக்கும்போது கண்கள் குளமாகி,எழுத்துக்களை

மறைக்கும் நிலைதான்..

மாலி.

மோகன்ஜி சொன்னது…

மாதங்கி ! நலம் தானே ? பல காலம் ஆயிற்று அல்லவா?
ஜே்கே வின் சுய தரிசனம் ஒரு அற்புதமான புத்தகம்.

கெடில நதி பாலத்தில் தொடங்கின கதையை எழுதுகிறேன்... உங்களுக்காக....

மோகன்ஜி சொன்னது…

மாலி சார் நலமா? ஜெ்கே கதைகளை ஒவ்வோருமுறை படிக்கும் போதும், ஒரு புதிய வாசல் திறக்கும்... இன்னும்பல காலம் அவர் படைப்புகளின் ரெலவன்ஸ் இருக்கும்.

போன மாதம் வாக்கிங் என்றொரு கதை பதிவிட்டிருக்கிறேன். படியுங்கள்...உங்களுக்குப் பிடிக்கும்.

கீத மஞ்சரி சொன்னது…

ஜேகே என்னும் மாபெரும் எழுத்தாளுமை... என் ஆதர்ச பிம்பத்தின் இழப்பு இன்னமுமே மனம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று. அவர் மறைந்த செய்தி கேட்டவுடனே மனம் நாடியது அவருடைய எழுத்துக்களைத்தான். மறுபடி மறுபடி வாசித்து அவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டது மனம்.

அவருடனான உங்கள் அனுபவங்கள் என்னும் உங்களுக்கு மாத்திரமே உரிய பொக்கிஷப்பெட்டகத்தை எங்களுக்கும் திறந்துகாட்டியதில் அளவிலாத மகிழ்ச்சி. நன்றி மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

கீத மஞ்சரி !

ஜெ்கே பாத்திரப் படைப்புகள் அத்தனையுமே அழுத்தமானவை.. காத்திரமானவை. அவர் படைப்புகள் வந்த காலத்தில் அந்தப் பாத்திரங்கள் மூலம் பேசினார்... ஏசினார்... உரத்து ஒலித்துக்கொண்டேயிருந்தது அவர் குரல். விளிம்புநிலை மனிதர்கள்.... பிச்சைக்காரன், வேசி, பண்டாரம், ரிக்‌ஷாத் தொழிலாளி.... என எண்ணிலடங்காத அவரின் கதைமாந்தர்கள் கவனத்துக்கு வந்தார்கள். அவருடைய கம்யூனிசப் பார்வை என்றும் வரை விலகவேயில்லை. பொதுவுடமை கோட்பாடுகள் நீரோட்டமாய் ,அடிநாதமாய் விளங்கின அவர் எழுத்துக்களில் .....
வள்ளலார், பாரதி, சித்தர்மரபு, கம்பன் என சரளமான மேற்கோள்கள் தெறித்தவாறிருக்கும் அவர் சம்பாஷனைகளில்...

அப்பாதுரை சொன்னது…

நெஞ்சைத் தொட்ட வரிகள்.

மோகன்ஜி சொன்னது…

அவை நெஞ்சிலிருந்தே வந்த வரிகளாதலால்....

அப்பாதுரை சொன்னது…

ஜெ (தமிழகத்தில் எத்தனை ஜெ?) எழுத்தை அதிகம் படித்ததில்லை என்றாலும் அவருடைய வாழ்க்கை முறைகள், குறுக்கீடுகள், அவர் எடுத்துக்கொண்ட நிலைகள் பற்றி அவ்வப்போது படித்திருக்கிறேன். முரண் மூட்டை என்று எண்ண வைத்தவர்.

ஜெ ஒரு சுவாரசியமான திரைப்படத்துக்கான கரு என்று நினைக்கிறேன்.

(தவணை மரணம் - பின்னிட்டீங்கண்ணே)

அப்பாதுரை சொன்னது…

இவரையும் ஜேகே ஆக்கிவிட்டோமா? அந்தக் குழப்ப சாம்பாரை விட இந்தக் குழப்ப சாம்பார் மேல், இல்லையோ?

அப்பாதுரை சொன்னது…

மலரன்பன் அவர்களின் கருத்து கொஞ்சம் உசுப்பி விடுகிறதே, என்ன செய்ய?

மக்களுக்கு உதவி என்பதை வகைப்படுத்துவது? சோறு போட்டாலும் உதவி. பணம் கொடுத்தாலும் உதவி. மருந்து கொடுத்தால் உதவி. சரி, மனம் கொடுத்தால் உதவியா இல்லையா?

ஜெ பணம் சோறு கொடுத்து உதவினாரா தெரியாது - அவசியமும் இல்லை. இங்கே கொண்டாடப் படுவது ஒரு மனிதனின் நேரமும் மனமும், இல்லையா? எழுத்தாளன் என்ற பரிமாணத்தில் ஜெ பொதுவில் வைத்த தன் நேரமும் மனமும் எத்தனையோ மனிதர்களின் ஒரு சில பொழுதுகளை சோர்விலிருந்து மீட்டெடுக்க உதவி செய்திருப்பதை அங்கீகரிப்பதில் தவறில்லையே? ஷேக்ஸ்பியர் இறந்து போனதில் எனக்கு இன்னமும் வருத்தம் உண்டு :-)

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார் !
ஜெ்கே கதாசிரியர் மட்டுமல்ல.. அரசியலிலும் சினிமாவிலும் ஈடுபட்டவர். தன் கருத்துக்களை பட்டவர்த்தனமாக தயக்கங்களின்றி வெளிப்படுத்தியவர். ஆளுகின்றவர்களின் கருத்திலும் போக்கிலும் முரண்பட்டவர். பட்டம் பதவிகளை மதியாத போக்கே அவரிடம் இருந்தது. அந்த காலகட்டத்தில் அவரின்,ஓங்கி ஒலித்த குரல் எழுத்தாளனின் சுயகௌரவத்தை தாங்கிப் பிடிக்கும் முயற்சியே.. ஏறத்தாழ 35 வருடங்கள் எழுதுவதை நிறுத்தி வைத்த ஒரு எழுத்தாளன் இன்றும் விவாதப்பொருளாய் இருப்பதொன்றே அவர் எழுத்தின் வெற்றி.

இன்னுமொன்று... அவருடைய கருத்துக்களில் முரண்பாடும், கடுமையும் இருந்திருக்கலாம். ஆனாலும் அது அவர் சுய சிந்தனையின்பால் உதித்தவை. தன்னலமோ, தன்முனைப்போஅற்றவை. அந்த அதிரடிக் கருத்துக்களாலேயே மக்களின் கவனத்தை ஈற்றார். சிந்திக்க வைத்தார். அவர் நிந்திக்கப்பட்ட நிகழ்வுகளுக்கும் குறைவில்லை.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார் !

ஜெயகாந்தன் 'ஜெ.கே' ஆனது இப்போதில்லைங்க... வாசகர்கள் அபிமானத்துடன் பலவருடங்களுக்கு முன்னரேயே அப்படி அழைத்து வந்தார்கள்.

தமிழுக்கு ஒரு ஜெ்கே தான்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்!

மலரன்பன் கருத்துக்கு உங்கள் பார்வை மிகச்சரியானது. சமுதாயத்தில் எழுத்தாளர் பங்களிப்பு அவசியம் தான்.

சிலர் எழுதாதபோது இன்னமும் அதிக நன்மை செய்கிறார்கள்!!

அப்பாதுரை சொன்னது…

//சிலர் எழுதாதபோது இன்னமும் அதிக நன்மை செய்கிறார்கள்!!

விழாது விழாது சிரித்தேன்.