செவ்வாய், அக்டோபர் 20, 2015

கேள்விகள்வரிசைகட்டி நின்றன என் கேள்விகள்.
கேள்விகளின் கூர்மையோ,
ஞானத்தை ஊடுருவும் என்றார்கள்.

முடிவுறாத என் கேள்விகளெல்லாம்
சிலுவைகளாய் அறையப்பட்டிருக்கின்றன.
மாற்றிக் கேட்கின்ற சாத்தியமின்றி.

விளக்கம் தென்படா படுகைகளில்,
ஆழ்ந்தே கிடக்கின்றன ஒற்றைக்கால் கேள்விகள்.

இன்றெனக்கு பதில்கள் கூடத் தேவையில்லை.
தளைகளின்றிக் கிடந்தால் போதும்.

ஞானம் கிடைத்தால் விடுதலைப்பேறு என
யார் சொன்னார்கள்?

சுத்தியல் சொல்லும் பதில்கள்
சுகமானதாய் இருப்பதில்லை.

8 comments:

sury Siva சொன்னது…

என் கேள்விக்கென்ன பதில் ??? !!!

ஒரு கேள்வி உன் மனதில் எழுந்தால் அதற்கான பதில் ஒன்று உன்னிடம் சொல்லப் படுவதற்காகவே
உன் கேள்விக்கு முன் எழுந்துவிட்டது .
நீ கேட்கவேண்டுமென்றே
பதில் காத்துக்கிடக்கிறது.

சொல்வது நானல்ல.


பார்த்தன் கேட்டான்.
பரந்தாமன் பதில் சொன்னான்.
படிப்பது இதுவே.

புகுந்து பார்த்தால்,
புரிவது வேறு .


பரந்தாமன் பூவுலகுக்கு வந்ததே
புவியினில் உள்ளோர்க்கு ஒன்று சொல்லவே.
ப்ரச்னத்தை கேட்டது
பார்த்தன் .
பதில் புரிந்தவர் பயன் அடைந்தார்.
புரியாதவர் இன்னும்
அடைந்திருந்தார்.

நிற்க.
தான் என்பதைத்
தானம் தராதவர்
ஞானம் பெறுவரோ ?

சுப்பு தாத்தா.


sury Siva சொன்னது…

//முடிவுறாத என் கேள்விகளெல்லாம்
சிலுவைகளாய் அறையப்பட்டிருக்கின்றன.//

சிலுவைகளாக , இல்லை,.
சிற்பங்களாக நாம் இருந்து விட்டால்
சிந்திப்பது எப்போது ?
செயல் படுவது எப்போது ?
செய் அல்லது செத்து மடி என்று சொன்னானே !!
செய்யவும் இயலாது
சாகவும் தயாரில்லை என்ற
சோம்பேறிகளைத் தானே அவன்
அகர்மன் (inaction) எனச் சொன்னான்.

இன்னொன்றும் சொல்லவேண்டும்.
கேள்விக்கான பதிலை வேண்டுபவன் இன்னும் என்
வேள்வி தொடர்கிறதே எனப் புலம்புவதில் பயனில்லை.

ஒரு பதில் கிடைக்குமாயின் அதை
ஒப்புக்கொள்ளும் பக்குவம் வேண்டும்.
சாதகமாயில்லை எனின்
சண்டை நீர்.பிடிப்பீர் என்றால்
அண்டை வீட்டார் கூட
ஆபத்து என்றாலும்
அருகில் வராத நிலை.
ஆதலால் நீரே சொல்வீர்:
"சுத்தியல் சொல்லும் பதில்கள்
சுகமானதாய் இருப்பதில்லை"

ஆகவே,
பக்குவம் வராத வரை
பதில் வரும் சாத்தியம் இல்லை.

சு
மூ
தா. .

G.M Balasubramaniam சொன்னது…

கேள்வி கேட்பேன் நான் தரும் பதில் எனக்குப் புரிய வேண்டும் மேலும் கேள்வி கேட்க வைக்கக் கூடாது முன்பொரு பின்னூட்டத்தில் DRONAR என்னும் ஆங்கிலக் கவிதையை தமிழில் மொழி மாற்றமோ மொழி பெயர்ப்போ செய்யுமாறு வேண்டி இருந்தேனே கிடப்பில் போட்டு விட்டீர்களா சுத்தியல் சொல்லும் பதில் வேண்டாம்

மோகன்ஜி சொன்னது…

அன்பின் சு.தா ,

கொக்கிகள் அறையப்பட்ட பலகையின் புகைப்படம் பார்த்து எழுந்த எண்ணங்களில் எழுதிய கவிதை இது. அவரவர் மனப்போக்கும்,உள்ளுணர்வும்.அனுபவமும் வாசித்த கவிதைக்கு அநேகம் பொருள் கொள்ளும். பலசமயம், எழுதியவன் எண்ணவோட்டத்தினும் மேலான அர்த்தங்கள் தரும்.

கேள்வியையும் பதிலையும் பற்றிய உங்கள் பார்வை நன்றாக இருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! என் கவிதை சொல்லும் பொருள் உங்கள் எதிர்வினைக்கு சம்பந்தம் இல்லை.
//கேள்வி கேட்பேன் நான் தரும் பதில் எனக்குப் புரிய வேண்டும் மேலும் கேள்வி கேட்க வைக்கக் கூடாது//

உங்கள் கேள்விக்கான பதில், உங்களைத் திருப்தி செய்யும்வகையில் சொல்லவியலாமற் போவது,பதில் சொல்பவன் குறையாகவும் இருக்கலாம் அல்லவா?பல சமயங்களில் தகுந்த பதிலைப் பெறுவது,கல்லில் நார் உரிக்கும் செயலே!
பயிற்றுவிப்பர்களுக்கு பயிற்சியளிக்கும் வகுப்புகளில் (trainers'training programmes)வகுப்பெடுக்கும்போது, புரிந்து கொள்ளும்வகையில் விளக்கம் சொல்லும் முறைகளை பயிற்றுவிப்பதுண்டு. தான் நன்கு அறிந்துகொண்ட ஒன்றை, அடுத்தவருக்கு புரியும் வகையில் சொல்வது என்பது சற்று சவாலான செயல். ஒரு நல்ல ஆசிரியனுக்கு அதுவே முதல் தகுதி.அதற்கு கருத்தில் தெளிவும், கேட்பவரின் புரிந்துகொள்ளல் திறம் பற்றிய மதிப்பீடும் அவசியம்.
உங்கள் DRONOR கவிதை நினைவிருக்கிறது. சற்று நேரம் கிடைக்கும்போது அதை மொழிபெயர்க்கிறேன் ஜி.

sury Siva சொன்னது…

எனது முந்தைய பின்னோட்டத்துடன் இணையாத மன ஓட்டம் இது.

பல கேள்விகள் பல தருணங்களில் எழுவது வாஸ்தவம் தான்.
பல கேள்விகளுக்குப் பதில் கிடைத்தாலும் அவை நம்மை திருப்திப் படுத்தாது இருப்பதும் உண்மை தான்.
அதே போல்,
மனதில் இருக்கும் பல கேள்விகளை என்றாவது ஒரு நாள் கேட்டுத்தான் ஆக வேண்டும் என்று நான் நினைத்து சென்ற போது,

உனக்கு கிடைக்கும் பதிலால், உன் மன நிலை இன்னமும் பாதிக்கப்படும் என்ற ஒரு நிலை ஒன்று இருக்கும் என்று உன்னால் ஏன் யோசிக்க முடியவில்லை ? என்று என் தங்கை குறுக்குக் கேள்வி போட,

திரும்பி வந்தேன்.
பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் இருப்பதும் நல்லது தானே.
தெரிந்து என்ன செய்யப்போகிறோம் ?

//புகைப்படம் பார்த்து எழுந்த எண்ணங்கள் //

நான் எடுத்த கம்யூனிகேஷன்ஸ் வகுப்புகளிலே எனக்குப் பிடித்த
பாடம் .

புகைப்படம் மட்டுமல்ல, ஒருவர் சொல்லும் வாக்கியத்துக்கு, பேசும் த்வனி, உடல் மொழி எல்லாமே சேர்ந்து தானே பொருளைத் தருகின்றன. !!

உதாரணமாக, ஒரு ஆசிரியர் (யை) ஒரு மாணவனிடம் சொல்கிறார் (ள் )

"பங்கஜ் ! த டோர் இஸ் ஓபன். "

எத்தனை அர்த்தங்கள் இருக்கின்றன சொல்லுங்கள் பார்ப்போம்.

சு தா.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விடை தெரியாக கேள்விகள் தொடரத்தானே செய்யும்

பரிவை சே.குமார் சொன்னது…

கேள்விகள் எப்போதும் தொடரத்தானே செய்யும்?