செவ்வாய், மார்ச் 01, 2016

ஜெயமோகனுடன் ஒரு பகல் பொழுது


‘சார், நான் தற்சமயம் மும்பை வந்திருக்கிறேன். நாம் இன்று சந்திக்க முடியுமா?’ என்ற குறுஞ்செய்தியை ஜெயமோகன் அவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக் கிழமை(21.02.2016)நண்பகல் அனுப்பி வைத்தேன். Gateway Litfest 2016 எனும் கருத்தரங்கில் கலந்து கொள்ள அவரும் மும்பை வந்ததை அவர் தளத்தில் வெளியிட்டிருந்த அறிவிப்பினால் அறிய வந்தது.

சிலநிமிடங்களிலேயே அவரிடமிருந்து அலைபேசியில் அழைப்பு வந்தது.
“மோகன்! நேராக அரங்கத்துக்கே வந்து விடுங்கள். அவசியம் சந்திப்போம்”.

மதியம் ஒரு மணிக்கு அரங்கை அடைந்திருந்தேன். ஆறு ஆண்டுகளுக்கு மேலாக அவரோடு மின்னஞ்சல்களிலும், அலைபேசி உரையாடல்கள் வழியாகவும் நல்ல தொடர்பு இருந்தாலும் இப்போதே முதலில் அவரை சந்திக்கிறேன்.


அரபிக் கடலோரம் அமைதியான சூழலில் டாடா அரங்கங்கள் பல இருக்கும் பெரிய வளாகம். ‘பிராந்திய இலக்கிய ஓடைகளின் சங்கமம்’ என்ற இலக்கோடு, இந்திய மொழிகளின் நிலைகள் பற்றியும், அவை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்தும் மொழிவாரியாக இலக்கிய அமர்வுகள் இரண்டு நாட்களாய் நடந்தபடி இருக்கின்றன. இண்டாம் நாள் மாலையில் இரண்டு அமர்வுகளில் ஜெயமோகன் பங்கேற்று பேச இருந்தார்.

1.”இந்திய இதிகாச புராணங்கள் பற்றிய தற்கால படைப்புகள் இந்தியமொழிகளின் எழுத்தாளர்களை விடவும்  நவீன ஆங்கிலேய எழுத்தாளர்களாலேயேஅதிகம் எழுதப்படுவது  குறித்தும்....
2.பிராந்திய மொழி எழுத்துக்களின் வருங்கால போக்கு பற்றியும் ஆன இந்த இரண்டு அமர்வுகளைக் கையாள ஜெயமோகன் சாரை விட தகுதியானவர் உண்டா என்ன?

நான் உள்ளே நுழைந்தபோது வாயிலின் அருகிலேயே ஒரு மலையாள எழுத்தாளரிடம் சம்சாரித்துக் கொண்டிருந்தார். வெளிர்நீல ஜீன்ஸ்,கருநீல முழுக்கை சட்டை, வெள்ளை பிரேம் போட்ட கண்ணாடி. என் பக்கம் திரும்பிய போது,”வணக்கம். நான் வானவில் மனிதன் மோகன்” என்றேன்.

குலுக்கிய அவர் கைகளின் இறுக்கமும் வெம்மையும் தோழமையை வெளிப்படுத்தின. கண்ணைப்பார்த்து பேசும் சாந்தமான முகம். மீசையை எடுத்திருப்பது பாந்தமாகவே இருந்தது. மிக மென்மையான குரல்.

சம்பிரதாய விசாரிப்புகள் ஏதுமின்றி, சிலகாலம் கழித்து சந்திக்கும் உற்ற நண்பனின் உரையாடல் போன்ற சகஜத்தை கைகுலுக்கிய கணமே ஏற்படுத்தி விட்டார். மராத்தி இலக்கியசூழல் குறித்த அமர்விலும், மலையாள புத்தகங்களை சந்தைப்படுத்துதலிலுள்ள பிரச்னைகள் குறித்ததுமான அமர்விலும் பார்வையாளர்களாய் அருகருகே நான்குமணி நேரத்துக்கு மேல் இருந்தோம்.

க.நா.சு., லா.சா.ரா. உ.வெ.சா, நாஞ்சில் நாடன், ஜெயகாந்தன் என பல ஆளுமைகள் பற்றி பல செய்திகள் சொல்லி வந்தார். அவருடைய  மனைவி அருண்மொழிநங்கை பற்றி சொல்லும்போதும், மகன் அஜிதன் எடுத்த ஆவணப்படம் பற்றியும் சொல்லும்போதும் ஒரு பாசமிகுந்த குடும்பத்தலைவனின் வாத்ஸல்யமும் நெகிழ்வும் குரலில் ஒலித்தது. சினிமாவில் அவருடைய பங்களிப்பை ஒரு காட்சிசித்திரமாய் நகைச்சுவைப்பட கூறினார்.

பேச்சினூடே,படைப்பாளிக்கென இருக்கவேண்டிய நேர மேலாண்மை குறித்து மிக அழகாகக் குறிப்பிட்டார். “நேரத்தை விரயம் செய்யாமல், தனக்கு அவசியமில்லாத விஷயங்களை முற்றிலுமாய் தவிர்த்தாலே அனைத்துக்கும் நேரம் இருக்கும் என்றும், தான்  டிவி பார்ப்பதில்லை என்றும் சொன்னார். அதொன்று போதுமே!

என்னதான் நேரத்தை வீணாக்காமல் சேமித்திருந்தாலும், படைப்பூக்கம் சற்றும் குறையாமல் எழுத்தை ஒரு வேள்வியாகவே மேற்கொள்ளும் பேறு அனைவருக்கும் வாய்க்குமா என்ன? இவை தெய்வ சங்கல்பம் அல்லவா?.ஒன்றை ஒன்று விஞ்சும் பலபடைப்புகள். காடும், கொற்றவையும், விஷ்ணுபுரமும் தமிழ் நாவல்களின் முக்கியமான எழுத்தோவியங்கள் அல்லவா?

ஜெயமோகனின் படைப்புகளின் உச்சம் ‘வெண்முரசு’. அசுர வேகத்தில் அவர் எழுதிவரும் அமரகாவியம். அந்தத் தமிழ்நடையின் இதமும், ஆழமும் தமிழுக்குப் புதியது. அதில் அவர் பயன்படுத்தும் பல வழக்கொழிந்த, மறக்கப்பட்ட தமிழ் வார்த்தைகளின் பட்டியல் மிக நீளம். அதன் கட்டமைப்பும் நுணுக்கமானது. ஒரு பல்கலை ஆராய்ச்சிக்கான விஷயமிது. ஜெயமோகனின் ஒரு திவீர வாசகி அவருடைய முதற்கனல் நாவலொன்றைக் கொண்டுவந்து அவருடைய கையொப்பம் வாங்கிக் கொண்டார். இடைவேளையின் போது மலையாள வாசகர்களோடு அவர் பேசிக்கொண்டிருந்த போது 'பாண்டியாய்' பார்த்தபடி இருந்தேன்.


அண்மையில் அவருக்கு வழங்கப்பட இருந்த  பத்மஸ்ரீ விருதை அவர் மறுதலித்தது மிகவும் பரபரப்பான விவாதத்திற்கு உள்ளானது. அவர் அதை மறுத்தது எனக்கு உடன்பாடாய்த் தோன்றவில்லை. மறுதலித்த காரணங்களை அவர் தளத்தில் விளக்கியிருப்பதை புரிந்துகொண்டாலும் அந்த ஆதங்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால்,மத்திய அரசின்  அங்கீகாரத்தை ஒரு தன்னறம் சார்ந்த தார்மீக மதிப்பினை கைவிடாதிருக்க செய்த ஒரு தியாகமாகவே உணர்கிறேன்.   
ஆனாலும், அந்த மறுதலிப்புக்குப் பின் அவருடைய தேர் பூமிக்குமேல் இரண்டடி உயர்ந்து ஜெயக்கொடி வீசி பறக்கதான் செய்கிறது. இந்த சந்திப்பின் போது பத்மஸ்ரீ குறித்தும் பேச்சு வந்தது. என்னை சமாதானப் படுத்துவது போல காரணங்களை நிதானமாய் சொல்லச் செய்தார்.

மலையாள புத்தக சந்தைபடுத்ததுலுக்கான விவாத முடிவில் கேள்விநேரத்தின் போது ஒருவர் விடாக்கண்டனாய் பேசிக் கொண்டேபோனார். விவாதத்திற்கு வெளியே ஏதேதோ சொல்லியபடி அனைவரையும் நெளிய வைத்தபடி இருந்தார். “இந்த தற்பேத்திகளை கேட்கவென  இத்தனைபேரும் இங்கு கூடியிருக்கவில்லை. உட்காருங்கள் “ என்ற திடமான குரல் எழுந்தது. அது ஜெயமோகன் குரல். அந்த குரலின் தீட்சண்யம் எதிர்வாதம் அற்று அவரை உட்கார வைத்தது.

தேர் இப்போது தரையிலிருந்து மூன்றடி மேலேறி விட்டது.

அந்த அமர்வுகளில் கலந்துரையாடிய படைப்பாளிகளையும், அருகிருந்த ஜெயமோகனையும் மாறிமாறி பார்த்தபடி இருந்தேன். சத்தியத்துக்கு கட்டுப்பட்டு நான்குகால்களையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாக ஒரு ஸ்டூலில் நெருக்கிவைத்து அமரும் சர்க்கஸ்யானை நினைவுக்கு வந்தது. தன்னை ஒடுக்கிக் கொண்டு அங்கு அவர் அமர்ந்திருப்பதாகவே தோன்றியது. 'இவர் எழுதியவற்றின் பெயர் பட்டியலாவது தெரியுமா உங்களுக்கு?' என்று கூவவேண்டும் போல் இருந்தது.

அடுத்த அமர்வில் ஜெயமோகன் பேசுமுன், தவிர்க்கமுடியாத  சொந்த வேலைக்கான அவசர அலைபேசி அழைப்பின் காரணமாய், அவர் உரையை கேட்க இயலாமல் திரும்பநேர்ந்தது. அவர் என்ன பேசியிருப்பார் என்று சிந்தித்துக் கொண்டே வந்தேன். ஜெயமோகன் கருத்துக்களாய், இந்த வெறும்மோகனின் கருத்துக்கள் அலைஅலையாக எழுந்தன.

விடைபெறும் போதும் சிலநிமிடங்கள் பேசிவிட்டே அரங்குக்குள் போனார்.

அவருடைய கலந்துரையாடலை கேட்க இயலாதது வருத்தமாக இருந்தது. ஆனாலும் தினம்தோறும் படைப்புகள் வழியே அவருடன் உரையாடியபடிதான் இருக்கிறேனே என்றுஆறுதல் சொல்லிக் கொண்டேன்.


45 comments:

sury siva சொன்னது…

கேட்ட இசையை விட
கேளாத இசையின் சுவை அதிகம் என்றான்
கீட்ஸ்.
ஜெய மோகனைப் பொறுத்த வரை,
சொல்லிய சொற்களை விட
சொல்லாத சொற்களுக்கு
வலிமை அதிகம்.

வானவில் லை
வென்ற மோகன் ஆகையால்
ஜெய மோகன்.

சு தா.
www.subbuthatha72.blogspot.com

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வித்தகர் என்பதில் சந்தேகமில்லை.... காரணம் நேரம் பற்றிய புரிதல்...

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

ஜெயமோகனுடன் ஒரு பகல் பொழுது ..

ஓர் எழுத்துலக பிரபலத்துடனான இனியதோர் சந்திப்பைப்பற்றி அழகாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.

ஸ்ரீராம். சொன்னது…

அவரின் தீவிர விசிறி நீங்கள் என்பதில் மகிழ்ச்சி. படித்தேன், ரசித்தேன்.

எங்கள் ப்ளாக்கில் 'ஸார்' போட்டு என்னை சற்றுத் தளி வைத்து விட்டீர்கள்.

நீண்ட காலமாக உங்கள் முக நூல் உல் டப்பியில் ஒரு மெஸேஜ் அனுப்பி பதிலுக்காய்க் காத்திருக்கிறேன்!

எம் அப்துல் காதர் சொன்னது…

அருமை!

Geetha Sambasivam சொன்னது…

உங்கள் பார்வையில் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். எனக்கெல்லாம் இப்படி ஆராதனை செய்யத் தெரியாது! நம்மைப் போல அவரும் என எண்ணிக்கொள்வேன். பத்து வயசில் இருந்து சித்தப்பாவைப் பார்த்ததாலோ என்னமோ! :))))

மோகன்ஜி சொன்னது…

அன்பின் சுதா,
ஜெயமோகன் நிச்சயமாக எனக்கு ஆதர்ச எழுத்தாளர் தான்.அவரை சிற்றிதழ்களின் வாயிலாக அறிந்த நாள்முதல் என் கவனத்துக்குரிய படைப்பாளியாகவே இருந்து வந்திருக்கிறார்.அவருடைய ஆரம்பகால எழுத்து நடை கடினமான ஒன்றாகவே இருந்தாலும், படிக்க அதில் ஒரு சவாலும் வசீகரமும் இருந்தன.ரப்பர் நாவலுக்கு பிறகான ஜெயமோகன் வேறுஒருவர். எழுத்தின் அத்துணை சாத்தியக்கூறுகளையும் கையாண்டு பார்த்திருக்கிறார். அவர் மொழியின் செறிவு,கருத்துக்களின் நேர்மை மற்றும் தன் மனதுக்குப்பட்டதை எடுத்துச் சொல்லும் நெஞ்சுரம் ஆச்சர்யத்துக்குரியவை. அவர் வலைத்தளம் தொடாத துறையே இல்லை எனலாம். மேலோட்டமான வாசகனுக்கு சொல்ல அவரிடம் ஒன்றும் இல்லை. அவருடைய விஷ்ணுபுரம் படித்துப் பாருங்கள். உங்களுக்கு மிக நெருக்கமான நூலாய் அது அமையும்.

மோகன்ஜி சொன்னது…

உண்மைதான் தனபாலன் ! அதில் சந்தேகமில்லை!

மோகன்ஜி சொன்னது…

நன்றி வைகோ சார்! பொதுவாகவே எனக்கு பிரபலங்களிடம் ஒரு மனவிலக்கம் உண்டு. ஆனாலும் சிலருடன் ஒரு நெஞ்சார்ந்த உறவிருந்தது.ஜெயமோகன் சார், தான் பிரபலம் என்று இன்னமும் அவருக்கே அவர் சொல்லிக் கொள்ளாதவர் போலும்.அலைபேசியழைப்புக்கோ,குறுஞ்செய்திக்கோ உடனே பதிலளிப்பவர்.இளம் வாசகர்களை அவர் ஊக்குவித்து வழிநடத்துவதும், அவர்களுடன் ஓரிரு நாட்கள் சேர்ந்திருந்து கலந்துரையாடுவதும் மிக மேன்மையான விஷயங்கள்.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

அன்பு ஸ்ரீராம்! ரசித்ததிற்கு என் அன்பு.
உங்களுக்கு 'சார்' போட்டுவிட்டேனா? நமக்குள் ஒரு அடி தள்ளி என்பதெல்லாம் ரொம்ப தொலை தூரம் உடன்பிறப்பே.
முகநூல் மெசேஜ் எண் கூடிக்கொண்டே போகிறது. திறக்க இயலவில்லை. என்ன செய்தி அனுப்பினீர்கள்? mohanji.ab@gmail.com மின்னஞ்சல் செய்யுங்கள். உங்கள் அலைபேசி எண்ணும் அதில் தாருங்கள்..என்ன விஷயம் ஸ்ரீராம் ??

மோகன்ஜி சொன்னது…

நன்றி காதர் பாய்! நலம்தானே?

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்!பாராட்டுக்கு நன்றி.
'ஆராதனை செய்வது' என்ற நல்ல பதத்தை உபயோகப்படுத்தி இருக்கிறீர்கள். 'ஒரு எழுத்தாளன் தமிழ் சமூகத்தில் ஆராதிக்கப்படுகிறானா என்ன?' எனும் கேள்வி எழுகிறது.எழுத்தரசியலில் தரப்புக்களை எடுத்துக்கொண்டு, காழ்ப்பை வெளிப் படுத்துவதேன்பதே பெரும்பாலும் நடக்கிறது.ஆறேழு மாநிலங்களில் வாழ்ந்தவன்,இலக்கியப் போக்கை உன்னிப்பாக கவனிப்பவன் என்ற முறையில் எழுத்தாளனுக்கு வங்கம் போன்றோ,மராட்டிய மாநிலம் போன்றோ போற்றுதல் இங்கில்லை என்பேன்.. இருக்கும் ஆதரவும் ஒரு திவீர சிறிய வாசகர்வட்டம் மட்டுமே தருவது. இத்தனைக்கும் நம்மிடையே சிறந்த படைப்பாளிகள் இருக்கிறார்கள்.

எங்கே படைப்பாளிகளும், கலைஞர்களும் ஆதரிக்கப்படுகிறார்களோ,அந்த சமூகமே மேம்பட்டிருக்கும். எழுதப்படும் புத்தகங்களின் விற்பனை அதிகரித்தால் மட்டுமே பதிப்பகங்களும்,படைப்பாளிகளும் கௌரவமாக ஜீவிக்க முடியும்.ஆனாலும், அண்மையில் வாசிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதற்கு,பரபரக்கும் புத்தக விழாக்களே சாட்சி. இளையதலைமுறை நம்மைவிடவும் கௌரவமாய் எழுத்தாளர்களைப் போற்றும் என்று தோன்றுகிறது.


Geetha Sambasivam சொன்னது…

கர்நாடகா, கேரளாவையும் உங்களோட லிஸ்ட்லே சேர்த்துக்கலாம்! இல்லையா?

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…


கண்டிப்பாக மேடம் ! அரசாங்கம் எழுத்தாளர்களை கௌரவிப்பதும் கணக்கில் கொள்ளவேண்டியது. ஆனால் அவை பாரபட்சமில்லாமல் தரப் படுவதா ?,அன்றி அரசியல் சார்புநிலை ஈட்டித்தரும் கௌரவமா ? என்பது மாபெரும் கேள்வி

கௌதமன் சொன்னது…

நல்லா இருக்கு. ரசித்துப் படித்தேன்.

சிவகுமாரன் சொன்னது…

பிரமித்துப் போயிருக்கிறேன்.நான் பாமரன். உண்மையைச் சொல்லப் போனால் நான் ஜெயமோகனைப் படித்ததில்லை. படிக்கும் ஆர்வத்தை தூண்டியது உங்கள் எழுத்து.
நன்றி அண்ணா.

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sury siva சொன்னது…

//உங்கள் அலைபேசி எண்ணும் அதில் தாருங்கள்..என்ன விஷயம் ஸ்ரீராம் ??//

for me too

//தற்பேத்திகள்/// ??

தன்னைப் பற்றியே உயர்வாகச் சொல்கிறோம் என்று நினைத்துக்கொண்டு பேத்துவதா?

தன்னுடைய பேத்திகளைப் பற்றி சொல்வதா?

அதே போல, மறுதலித்தல் ?

மறுத்தல் என்பதா?

கூகிள் லே தமிழ் அகராதி லே தேடினேன்.

ஊஹும். அது மாதிரி ஒரு சொல்லே இல்லை. நீங்கள் வேண்டுமானால், புதிதாகச் சேர்க்க இங்கே சொடுக்குங்கள் என்று சொல்கிறது.

நடை முறையில் புரியாத ஒன்றை
நடுத்தெருவிலே
நட்டுவிட்டு
நறுமணம் வீசுமென
நாடி நிற்பதும்
நம்மூர் இலக்கியத்தில்
நாற்பது விழுக்காடு .!!!

(ஆறுவது சினம் )

சுப்பு தாத்தா.

kashyapan சொன்னது…

இந்தி உருது எழுத்தாளர் அமைப்பின் மாநாடு ஒன்றுக்கு கல்கத்தா சென்றிருந்தேன். இருவது ஆண்டுகளாவது ஆகி இருக்கும். மராத்தி,இந்தி மற்றும் உருது எழுத்தாலைகளொடு பழகும் வாய்ப்பு கிடத்தது. காண்டெகர்,பிரேம்சந்த்,அக்ஞே,யஷ்பால், என்று தமிழகத்து கிரம பெண்கள் படித்து உள்ளார்கள். அன்று கலமகளும்,கல்கியும்,விகடனும் கொடுத்தகொடை அவை.என்றென். பிற மொழி எழுத்தாளர்கள் ஆர்வத்தோடு கேட்டார்கள். அவர்களுக்கு பாரதியை கொஞ்சம் தெரியும்.அழ்கிரிசாமியை,புதுமை பித்தன., சுஜாதாவை, கி.ரா வை, குசிபாவை தெரியுமா என்று கேட்டென். அவை இந்தியில் வந்திருக்கிறதா என்று கேட்டார்கள். ஆம் என்று பொய் சொல்ல மனம் வரவில்லை.தமிழுக்கு வேளியிலிருந்து வரும் அளவுக்கு தமிழ் படைப்புகள் வெளியில் அறிமுகமாகவில்லை. அது தான் இன்றைய சாபக்கேடு. தமிழ் சிறுகதைகள்,சர்வதேச அளவில் ஒப்பிடதக்க அளவு உயர்ந்து வளர்ந்துள்ளன என்பது என் அனுபவம்.என்ன செய்ய.
பிராந்திய மொழி பற்றிய கருத்தரங்கில் இடு பற்றிபெசீருக்கவாய்ப்பில்லை. தமிழ்படைப்புகளும்,படப்பாளிகளும் மற்ற இந்திய மொழிகளுக்கு அறிமுகப்படுத்தவேண்டிய தருணம் இது. யார் செய்வார்கள் ?---காஸ்யபன்.

மோகன்ஜி சொன்னது…

கௌதமன் சார்! உங்கள் ரசனைக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

தம்பி ! சிவா!! இணையத்தில் கைகுலுக்கி எவ்வளவு காலம் ஆயிற்று ? நலம் தானா?
பாமரன் என்று அடக்கம் காட்டினால் விட்டுவிடுவோமா பெருங்கவியே!

ஜெயமோகன் படித்ததில்லை என்று நீ சொல்வது ஆச்சர்யம் தான்!.ஜெயமோகன் சாரின் தளத்துக்கு சென்று பார்க்கவும். உன் போல் இலக்கியதாசனுக்கு அது பெரும் எழுத்துவெளி.

முதலில் 'நீலம்' பதிவுகளைப் பார்த்து விட்டு வா! பேச நிறையவே இருக்கிறது என் அருமைசிவா!

மோகன்ஜி சொன்னது…

அன்பின் சுப்புத் தாத்தா!

ஸ்ரீராம் சாருடன் இன்று பேசினேன். ஒரு கதையை அனுப்பி வைக்க சொல்லி உத்தரவு போட்டார். இருபத்து இரண்டு அல்லது இருபத்து மூன்றாண்டுகளுக்கு முன் நான் எழுதினது.எங்கள் ப்ளாகில் வெளியிடக் கேட்டு ரெண்டு மாசம் ஆகிறது. அவர் செய்தி படிக்க இயலாததால் தான் அனுப்பவில்லை. ஓரிருநாளில் அனுப்பிவைப்பேன்.( பதிலுக்கு அவர் என்னை ஐரோப்பா டூர் அனுப்பி வைப்பதாக சொல்லியிருக்கிறார்!)

'தற்பேத்தி' நீங்கள் சொன்னதுபோல் தன்புராணம் பாடிக் கொண்டிருத்தல் தான் . தஞ்சாவூர் பிராம்மண பாஷையாக்கும்.

'மறுதலித்தல்' மறுப்பது என்ற அர்த்தத்தில் புழக்கத்தில் உள்ள வார்த்தை தானே? நீங்கள் கூகிளில் 'மறுதலி' என்றடித்தால் ஜாதகமே வருகிறதே? ஒரு வேளை 'மறுதாலி' என்றடித்து விட்டீர்களோ?!

//நடை முறையில் புரியாத ஒன்றை
நடுத்தெருவிலே
நட்டுவிட்டு
நறுமணம் வீசுமென
நாடி நிற்பதும்
நம்மூர் இலக்கியத்தில்
நாற்பது விழுக்காடு .!!!//

என் வம்புக்கார சுப்புத் தாத்தா! நடைமுறையைத் தாண்டி யோசிப்பதும்,புது அர்த்தங்கள் தேடுவதும், அதை வேறுநோக்கில் சொல்ல முற்படுவதும்தானே இலக்கியம்?
எல்லோருக்கும் புரியும் விதமாய் எழுதுவதென்றால் 'அம்மா இங்கே வாவா'மட்டுமே கவிதையாகவும். "ஒரு மரத்துல காக்கா ஒக்காந்து இந்திச்சாம்'என்பது மட்டுமே கதையாவும் நின்று போயிருக்க வேண்டும்.

பல்லாயிரம் சொற்களிருக்கும் தமிழ் இலக்கியத்தில் அதிகபட்சம் எத்தனை வார்த்தைகள் அறிந்திருக்கிறோம்? மேலோட்டமான வாசிப்போடு எளிய களம்,முடிவு சுபம் என்று எழுதிஎழுதி நம்மை படிக்க பழக்கி விட்டு விட்டார்கள். எதற்காக இலக்கியம் என்பது ஒருநீண்ட விவாதமாய் வேறு சந்தர்ப்பத்தில் பேசுவோம் சுப்புத் தாத்தா.மீண்டும் உங்கள் கவிதைக்கு....

ஒரு எழுத்தாளன் என்ன சொல்ல வருகிறோம் என்று புரியாமலே எழுதிக் கொண்டு போகலாம். நமக்கு அங்கே கேள்வியில்லை.
ஆனால் வாசகன் படித்ததை புரிந்து கொள்ளும் முயற்சி செய்யாமல் இருக்கலாகாது.
எழுத்தாளனின் கற்பனையையும் விட வாசகன் எண்ணப்பாங்கு மேலானதாக இருந்தால்,
படைப்புக்கு ஒரு புதிய பரிமாணம் கிடைக்கிறது. மாவுக்கேத்த பணியாரம் என்பது படைப்பாளிக்கு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தம் படிப்பவர்க்கும் உண்டு.

காலம் குப்பைகளை ஒதுக்கிவிடும். நல்முத்து என்றும் ஒளிவீசிக் கொண்டுதான் இருக்கும்.

என் 'தற்பேத்தி'களை 'மறுதலிக்க' உங்களுக்கு முழு உரிமை உண்டு சுதா!
என்னை ஒரு விவாதத்துக்காய் சீண்டுகிறீர்கள் என்பதையும் அறிவேன்...
கூகிள் பண்ணாராம் ... கெடைக்கலியாம்....



மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்! நலம்தானே?

உங்கள் கேள்வியின் நியாயத்தையும், கவலையையும் முற்றிலுமாக ஒத்துக் கொள்கிறேன். இந்தக் கேள்வி என்னுள்ளும் குடைந்துகொண்டு தான் இருக்கிறது. நேற்று திரு.ஜெயமோகன் அவர்களுக்கு இதைப்பற்றியே விவரித்து ஒரு மின்னஞ்சல் எழுதினேன்.

நீங்கள்சொன்னது போல் காண்டேகர்,தகழி,கேசவதேவ்,பிரேம்சந்த்,சரத் சந்திரர்,பங்கிம் சந்திரர் போன்றவர்களின் படைப்புகள் எத்தனை மொழிபெயர்ப்புகள் மூலம்நம் வாசிப்பினை ஆழப்படுத்தின என்று நினைத்துப் பார்க்கிறேன்.அ.சீனிவாச ராகவன்,சேனாபதி,த.நா.குமாரசாமி, கா.ஸ்ரீ.ஸ்ரீ. போன்றவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு நேர்த்தியை நினைத்துப் பார்க்கிறேன்.

துரதிர்ஷ்ட வசமாக, தமிழின் பல உன்னத படைப்புகள் பிறமொழிகளுக்கு செல்லாதது மிகவும் கவலைக்குரிய விஷயம். உலக அளவிலும், நம் நாடளவிலும் பெறவேண்டிய அங்கீகாரத்தையும் கவனத்தையும் தமிழ் படைப்புகள் பெற்றிட ஏற்பாடுகள் ஏதும் இருக்கிறதா என்றே தெரியவில்லை. சாஹித்ய அகதெமி சில மொழிபெயர்ப்புகள் செய்திருக்கிறது.அவை எம்மாத்திரம்?

தமிழ் படைப்புகள் பிற மொழிகளில் மொழியாக்கம் பெரும் வகையில் கீழ்க்கண்ட கேள்விகள் எழுகின்றன :
1. இரு மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற தரமான மொழிபெயர்ப்பாளர்கள்
இருக்கிறார்களா?

௨. அவர்களுக்கான பயிற்சியோ வழிகாட்டுதல்களோ உள்ளனவா?

3. மொழியாக்கம் ஏறக்குறைய இன்னொரு படைப்பே ஆதலின்,
அவர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் படைப்பாளிக்கு சமானமாக
இருக்குமா?

4 உழைப்பிற்குண்டான ஊதியம் தொழில்முறை மொழிபெயர்ப்பாளர்களுக்கு
இருக்கிறதா?

இப்படி பட்டியலிடுவது பலமுறை நடந்திருக்கலாம். அரசோ அல்லது ஒரு பொது அமைப்போ இந்த ஏற்பாட்டை முன்னெடுக்க வேண்டும்.

இப்படியோர் அமைப்பிருக்கிறது எனில் விவரம் தெரிந்தால் நல்லது.

sury siva சொன்னது…

//நடைமுறையைத் தாண்டி யோசிப்பதும்,புது அர்த்தங்கள் தேடுவதும், அதை வேறுநோக்கில் சொல்ல முற்படுவதும்தானே இலக்கியம்?//

ஹரிவம்ச ராய் பச்சன் என்று ஒரு கவி இந்தி இலக்கியத்தில்.
அமிதாப் பச்சனோட அப்பா.

அந்தக்காலத்துலே அவரோட கவிதைகளைப் பார்த்து
நான் மயங்கி மயங்கிப் போனேன் .அப்பப்ப
கிறங்கி கிறங்கி போனேன்.

அவர் எழுதிய ஒரு கவிதை
நீங்கள் சொல்லும் கருத்தை
அப்படியே பிரதிபலிக்கிறது.

भावुकता अंगूर लता से खींच कल्पना की हाला,
कवि साकी बनकर आया है भरकर कविता का प्याला,
कभी न कण-भर खाली होगा लाख पिएँ, दो लाख पिएँ!
पाठकगण हैं पीनेवाले, पुस्तक मेरी मधुशाला।।४।
சொல்லப்போனால் இவர் அந்தக்காலத்து வாலி. ஆனால் சந்தங்களுக்கு கட்டுப்பட்டு மரபுக்கவிதைகள் இயற்றியவர்.

இன்னாயா அர்த்தம் அப்படின்னு கேட்கறீங்க இல்லையா ?

கொஞ்சம் வைட் பண்ணிப் பார்ப்போம். காம்ரேட் காஷ்யபன் சொல்ல லேனா நானே வந்து சொல்றேன்.
அது சரி.
நான் பார்த்த ஆன் லைன் தமிழ் அகராதி
http://eluthu.com/dictionary/
அதுலே "மறுதலித்தல்" இல்லை.

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

அடடா!ஹிந்தில வேற ரவுசா சு.தா?
புடிங்க குன்சா ஒரு மொழிபெயர்ப்பை :

உணர்வெனும் திராட்சையின்
உள்ளிருக்கும் எண்ண விதை.
கவிதைமது குடமேந்தி
காத்திருக்கும் கவிஞன்.
லட்சமாய் குடியர்கள் குடித்தாலும்
லட்சியமில்லை! குறையாதே மதுப் பாண்டம்.
உளங்கிரங்க வாசிப்பவன் குடிகாரன்-புத்தகமோ
கள்ளூறியே ததும்பும் மதுச் சுரங்கம்.

சரியா தலைவா? யாரு கிட்ட?? நாங்க அந்த காலத்து மத்யமா பெயிலு! ஹேமமாலினி அக்காவும், ஜீனத் அமன் செல்லமும் மோவாயைப் புடிச்சி ஊட்டி ஊட்டி வளர்த்த ஹிந்தி மோஹியோடது...ஓஹோன்னானாம் ....

kashyapan சொன்னது…

சூரி என்ன போய் மாட்டிவிடுறீரே அய்யா ! நான் ஒரு ஞனசூன்யம்! இந்தி எழுத்து கூட்டிகுட படிக்க தெரியாது. நல்லகாலம் முத்து மீனாட்சி என்ற மொழிபெயர்ப்பாளர் என் அருகிலெயே இருக்கிறார்.அவர் என் மனவி என்பதால் என்னை விட்டு பிரியமுடியாத பந்தம் .பச்சனுடைய கவிதைகள் அற்புதமானவை. "திராட்சை ரஸத்தை எவ்வளவு குடித்தாலும் போதாது. என்னுடைய மதுசாலைக்கு வந்து குடியுங்கள்" கவித்துவம் என்பது பருகப்பருக இன்னும் கேட்கும் "இது பதவுரை மட்டுமே.
இந்த கவிதைகளை மகன் பச்சனின் sonorous voice ல் கெட்க வேண்டும்.
வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.
( (மோகன் ஜீ அவ்ர்களின் மொழிபெயர்ப்பு மிகவும் சிறப்பாக உள்ளது என்று முத்துமிணட்சி அவர்கள்பாராட்டுகிறார்கள் )

sury siva சொன்னது…

//எதற்காக இலக்கியம் //

2002 லேயோ 3 லேயோ ஒரு பொஸ்தகம் படிச்சேன். அது நினைவுக்கு வர, அத தேடிக் கொண்டு இருந்தபோது அத நெட்டிலே பாக்கலாமே அப்படின்னு தோணிச்சு.

ஹாய்...இருக்கு.
http://www.crab.rutgers.edu/~goertzel/vargasllosa.htm

இலக்கியம் என்பதே ஒரு பொழுது போகாம, வூட்டுக்குள்ள அடைஞ்சு கிடக்கிற ஒரு ஹௌஸ் வைப் ஆக்டிவிடி என்பது போலத் துவங்கும் இந்த கட்டுரை, முடியற நேரத்துலே மண்டை லே அடிக்கிறது போல என்னா சொல்லுது படிங்க...

இலக்கியம் அப்படின்னு ஒன்னு இல்லாத ஒரு உலகம் எப்படி இருக்கும் அப்படின்னு கற்பனை செஞ்சு பார்த்தோம் அப்படின்னா, .....???

வேண்டாம் சாமி, இத கத, கட்டுரை, நாவலு, கவிதை, காவியம் எல்லாமே இருந்துட்டு போகட்டும். இவை எல்லாம் இல்லை அப்படின்னா,

மனுஷ்யமே ஒரு அமானுஷ்யத்துக்கு போகக் கூடிய அபாயம் இருக்கு அப்படிங்கறது நிதர்சனமா தெரியது...

இருந்தாலும்,

எங்க ஊர் கிராமத்து வாய்க்கால் லே புது தண்ணி ஓடுது. சல சல அப்படின்னு சத்தத்தோட... கரைலே ஒக்காந்து ரசிச்சுகிட்டே பாத்துகிட்டே இருக்கலாம்.

ஆனா, காவிரி லே வெள்ளத்துலே போட் லே ஒரு மெதக்கட்டை மேல உட்கார்ந்து போவுற பீலிங் வேற தினுசா இருக்கும்ல...வேகமா போய்க்கினே இருக்குது... நடுவுலே ஒரு ரவுண்ட் அடிக்குது. இன்னாடா அப்படின்னா, சுழல் . ஒரு செகண்ட் உசுரே போவுது உசுரே போவுது இல்லையா.

ஒரு கத சொல்ல வர்ரோம் ஒரு கட்டுரை எழுத வரோம் ஒரு கவிதை எழுதறோம் அப்படின்னா, அது எப்படி இருக்கணும்...?

புள்ளினத்தை பாடுகையில்
மெல்லினம் நளினம்.
வல்லினம் வ்யர்த்தம்

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

சுப்புத் தாத்தா!
மரியோ வெர்கஸ் லௌஸாவையெல்லாம் துணைக்கு கூட்டிகிட்டு வந்து அதகளம் பண்ணிட்டீங்க.கட்டுரை செரிக்க இன்னுமொரு முறை படிச்சுட்டு வரேன். உங்க ஓடையும் காவிரியும் ரசிக்க வைத்தது. இலக்கியத்தின் தேவை இவ்வளவு மட்டும் தானா?

காவிரி சுழலை விடுங்க..... ஓடையில் அடித்துக் கொண்டு போகும் பூ மூழ்கினால் கூட பதறும் நெஞ்சமிருப்பவனுக்கு இலக்கியம் அள்ளித்தான் தரும்.

மதுசாலா கவிதைபத்தி ஒன்றும் சொல்லையே? அப்பாதுரை இல்லாத மதுசாலை.... நினைச்சே பாக்க முடியலையே சுதா !

sury siva சொன்னது…

//மதுசாலா கவிதைபத்தி ஒன்றும் சொல்லையே? அப்பாதுரை இல்லாத மதுசாலை.//

ஒரு நாலு வரி படித்ததற்கே உன்மத்தமானவரே !
ஒரு நூறும் படித்து விட்டால் உலகை மறந்து செல்வீரோ !

சாயா வாத் என்று சொல்லப்படும் ஒரு பாணியைச் சார்ந்தவர் பச்சன்.
நிழலைத் தாண்டி, ரகசியம் என்னும் நிலையில் உள்ளவர் மகாதேவி வர்மா. ரஹச்ய வாத் .

நீங்கள் முன்னம் சொன்னபடி, வாசகனை இழுத்து வைத்து தான் என்ன சொல்கிறோம் என்பதை புரிய வைக்கும் வரை கவிதைகளின் காந்த சக்தி தொடர்ந்து கொண்டே இருக்கும். இவரது கவிதைகளை திரும்பத் திரும்ப படிக்கையிலே புதுப்புது அர்த்தங்கள் தோன்றும்.
புல்லரிக்க வைக்கும்.

முர்ஜாயா பூல் என்னும் ஒரு கவிதை . நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள்.

சில நேரங்களில் வைரமுத்துவும் இது போன்ற கவிதைகளை எழுதுகிறார் .

அது சரி. அப்பாதுரை சார் எங்கே ?
மது இலா பாலையிலே வலம் வந்து கொண்டு இருக்கிறாரோ !!

சு தா.

ஜீவி சொன்னது…

http://jeeveesblog.blogspot.in/2014/12/blog-post_62.html

மேற்கண்ட சுட்டி ஒரு அவசரப் பார்வைக்காக எடுத்துப் போட்டது, மோகன்ஜி.

"வணக்கம். நான் வானவில் மனிதன் மோகன்" என்று அறிமுகம் கொண்டது இயல்பாகவும் நேர்த்தியாகவும் இருந்தது, மோகன்ஜி. நிஜமாகவே வானவில் மனிதர்கள் இருந்தால் எவ்வளவு அதிசயமாக இருக்கும்!.. ஜெமோ இதற்குக் கூட மாய யதார்த்தம் என்று ஒரு இலக்கணக் குறிப்பு வைத்திருப்பார்!!



ஜீவி சொன்னது…

உங்க்ளுக்கு இந்த மாதிரி 'நிகழ்வு வர்ணனை'களை எழுதுவது நன்றாக வந்திருக்கிறது.
நம்ம சொல்ல வேண்டியது, சூழ்நிலை விவரிப்பு, முக்கிய குறிப்புகள், இதில் அந்த சப்ஜெக்ட்டில் நம் ஆளுமை தெரிகிற மாதிரி இரண்டொரு வரி, முன்னிலைப்படுத்த வேண்டியதையெல்லாம் தனியாகச் சொல்லி ஒட்டுமொத்த வைண்டஅப்-- தூள் கிளப்பியிருக்கிறீர்கள்..

அந்தத் தேர் விஷயத்தில் மட்டும் ஒரு சந்தேகம். பூமியில் பாவாமல் தேர்ச் சக்கரம் தரையிலிருந்து மேலேறினால் விசேஷமா?.. (காலரைத் தூக்கி விட்டுக்கிற மாதிரியோ?) தெரியலே!

sury siva சொன்னது…


//அந்தத் தேர் விஷயத்தில் மட்டும் ஒரு சந்தேகம். பூமியில் பாவாமல் தேர்ச் சக்கரம் தரையிலிருந்து மேலேறினால் விசேஷமா?.. (காலரைத் தூக்கி விட்டுக்கிற மாதிரியோ?) தெரியலே!//
கேள்வி கேட்க கரும்பாகத்தான் இருக்கிறது.
தேர் ஒன்று தேர்ச்சக்கரம் பூமியில் பாவாமல் !!!
வேர் நமக்கு ஒன்று இருக்கிறது என்பதை மறந்து போய்விடும் !!
யாரும் எண்ணுமுன்னே
தேரின் கும்பம் தான் தான் மேல் என நினைத்துத்
தன் சக்கரத்தையும் உதறி வானில் சற்று நேரம் மேலே செல்லும்.

சில நொடிகளிலே கீழ் நோக்கி வரத்
தனது சக்கரம் எங்கே எங்கே எனத் துடியாய்த் துடிக்கும்.
அந்த கணத்திலும் அந்தகன் போல் இல்லாமல்
பந்தங்களை உணர்ந்த சக்கரம்
சொந்தங்களை வா வா எனச் சொல்லி,
தேரைத் தாங்கும்.

பூமராங் கேள்விப்பட்டதுண்டா ?
திரும்புகையில் அதன் வேகம் அசுரத்தனம்.

பூமி தேவி யாரையும் தாங்குவாள். (சித்தப்ப்பூ உட்பட)


சுப்பு தாத்தா.

ஜீவி சொன்னது…

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா நினைவுகள் சூரி சார்!

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
//முர்ஜாயா பூல் என்னும் ஒரு கவிதை . நேரம் கிடைக்கும்போது படித்துப் பாருங்கள். //
மன்னிக்கவும் ... பதிலுக்கு தாமதம்....முர்ஜயா பூல் கிடைத்தால் அனுப்புகிறீர்களா? ஆவலைக் கிளப்பி விட்டிருக்கிறீர்கள்...

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
பதில் தர ஏற்பட்ட தாமதத்திற்கு மன்னியுங்கள்.
// நிஜமாகவே வானவில் மனிதர்கள் இருந்தால் எவ்வளவு அதிசயமாக இருக்கும்!.//
நான் இருக்கிறனே! இருப்பதான ஒரு பிரம்மாண்டத்தில் இல்லாமையின் பிரதிநிதியாக, கனவைக் கையில் பிடித்ததைப் போல் நானிருக்கிறேனே...என் படைப்புகள் இருக்கின்றனவே!

'மாய யதாத்தம்' ரொம்பவே ரசித்தேன்ஜி! உங்கள் ஒவ்வொரு வார்த்தையிலும்,நுண்ணிய ரசிகனின் புன்னகை இருக்கிறது ஜீவி!!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
என் இழுத்துக்கான உங்கள் பாராட்டுக்கு நன்றி சார்!
// பூமியில் பாவாமல் தேர்ச் சக்கரம் தரையிலிருந்து மேலேறினால் விசேஷமா?.. (காலரைத் தூக்கி விட்டுக்கிற மாதிரியோ?) தெரியலே!//

என் ஆறேழு வயதுகளில்.. என் பாட்டி சொன்ன மகாபாரதக் கதைகள் அவள் ஊட்டிய சோறோடு உள்ளே போனது. தர்மராஜா சத்தியமே சொல்வதால் அவர் தேர் பூமிக்கு மேலே பறக்குமென்றாள். எதுக்கு அப்படி பறக்கணும் என்ற கேள்விக்கு தரையிலே சுத்தமும் அசுத்தமும் இருக்கும்... தர்மராஜா சத்தியவந்தன் என்பதாலே அசுத்தம் தீண்டாமல் தரைக்கு நாலு விரக்கடை மேலே பறக்குமென்றாள்.கிருஷ்ணர் தேர் தரையிலே தானே ஓடும் என்றபோது சுத்தம் அசுத்தம் எல்லாமே அவர்தானே என்ற தத்துவ விளக்கம் அந்த வயதுக்கு போதுமாய் இருந்தது..

வயதுகூடி மஹாபாரதம் படித்தபோது தேர் ஓடியது பாட்டி சொன்னபடி தரையிலிருந்து நாலு விரக்கடை மேலேயா அல்லது இரண்டடி மேலேயா எனும் ஆராய்ச்சி செய்திருக்கிறேன்.சுத்தம் அசுத்தம் எல்லாமே கிருஷ்ணர்தானே என்றதைப் பற்றிய கேள்வி என்னுள் எழவே இல்லை!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
வெண்முரசு பற்றிய உங்கள் பதிவு அற்புதம். மகாபாரத நாயகர்கள் பற்றிய ஜெயமோகன் பார்வை, விவரிப்பில் புதிய கோணம், செறிவான போதைஎற்றும் தமிழ்ப் பிரவாகம்.... மனதை அள்ளுகிறது. இந்த பெருமுயற்சிக்கு தெய்வம் துணையிருக்கட்டும்.

மோகன்ஜி சொன்னது…

சு.தா! தேர் நீங்கள் இழுத்த இழுப்புகெல்லாம் வருகிறதே!
//பூமி தேவி யாரையும் தாங்குவாள். (சித்தப்ப்பூ உட்பட)// இங்கே தானே நான் முழிக்கிறேன்... சித்தப்பூ என்றால் யார்? உங்களையும் 'புதிரோமேனியா' தாக்கி விட்டதா?

Geetha Sambasivam சொன்னது…

//பூமி தேவி யாரையும் தாங்குவாள். (சித்தப்ப்பூ உட்பட)// இங்கே தானே நான் முழிக்கிறேன்... சித்தப்பூ என்றால் யார்? உங்களையும் 'புதிரோமேனியா' தாக்கி விட்டதா?//

தம்பி மோஹி,

சு.தா. சொல்லி இருப்பது கீழே நீங்கள் காணும் என்னுடைய கருத்துக்கான பதில்! :)))

உங்கள் பார்வையில் அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள். எனக்கெல்லாம் இப்படி ஆராதனை செய்யத் தெரியாது! நம்மைப் போல அவரும் என எண்ணிக்கொள்வேன். பத்து வயசில் இருந்து சித்தப்பாவைப் பார்த்ததாலோ என்னமோ! :))))

sury siva சொன்னது…

//பத்து வயசில் இருந்து சித்தப்பாவைப் பார்த்ததாலோ என்னமோ! :)))) //
என். ஓ. நோ.
அது உங்க சித்தப்பூ இல்லை.
எனக்கு புதிரோ மேனியாவும் இல்லை.

மோஹன் அறியா
முகங்கள் உண்டோ ?

ஒரு க்ளூ.
என்னிடம் ஒரு தடவை சித்தப்பூ பற்றி ...

வோண்டாம்.
சுப்பு தாத்தா தர்ம அடி தாங்க மாட்டார்.

Geetha Sambasivam சொன்னது…

நான் தான் தப்பாய்ப் புரிஞ்சுண்டே போல! மன்னிக்கவும் சு.தா.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம் ! சு.தா சொல்லும் ' சித்தப்பூ ' யார் என யூகம் பண்ணிட்டேன். அவர் உங்கள் சித்தப்பா அசோகமித்திரன் சார் அல்ல...
இந்த சித்தப்பூ நல்லவரு... வல்லவரு... நாலும் தெரிஞ்ச மேதை. உளவியல் அறிஞர்.... அவர் நின்னா கோபுரம்... நடந்தா ஊர்கோலம்... சிந்தனை வீச்சு... அவர் எழுதினா போச்சு...

அவரை கண்டிப்பாக உங்களால் அடையாளம் காணமுடியாது. உங்களுக்கு வயசு பத்தாது என் அன்பு அக்கா !!

Geetha Sambasivam சொன்னது…

//அவரை கண்டிப்பாக உங்களால் அடையாளம் காணமுடியாது. உங்களுக்கு வயசு பத்தாது என் அன்பு அக்கா !!//
என்னைச் சின்னப்பொண்ணுதான் என மனமார ஒத்துக்கொண்ட என் அருமைத் தம்பியே! சித்தப்பூ யார் என்பதையும் தனி மடலிலாவது சொல்லுங்களேன். மண்டை காய்கிறது. அதோடு என் ஊகம் சரியானு தெரிஞ்சுக்கலாமே! :)