வியாழன், மே 05, 2016

பெரிய பாட்டன் சங்கதி

மெல்ல ஊர்ந்திடும் கடிகார முட்கள் 
வேகமாய் கிழிபடும் தினசரித்தாள்.

சிரிக்கும் தொறும் கண்ணீர்.
அழுகையே போலும் புன்னகை

சாபம் போல்வரும் ஆசி
சரசம் போலோ கோபம்

உணர்வதோ யானைப்பசி
உண்பதோ குழந்தைக் கொறிப்பு

கனவு காண்பதாய் விழிப்பு
நினைவு அழியா உறக்கம்

தாவிஅலையும் ஞாபகங்கள்
தவிக்கவிடும் பொல்லா மறதி

கூட்டத்தில் உணர்வதோ தனிமை
தனிமையில் நினைவுகளின் சந்தடி

உறவுகளுடன் ஓயாத பேச்சு 
பேச்சாலே விலகும் உறவு

சொல்லத் தடுமாறும் நாவு
சொல்லியே வருமோ சாவு

62 comments:

ஜீவி சொன்னது…


//கூட்டத்தில் உணர்வதோ தனிமை
தனிமையில் நினைவுகளின் சந்தடி

உறவுகளுடன் ஓயாத பேச்சு
பேச்சாலே விலகும் உறவு.. //

என்னமாய் சொல்லி விட்டீர்கள்?..
வரிகளிலிருந்து விலகவே முடியவில்லை.
திருப்பித் திருப்பி படித்தேன்.

இந்த இரண்டு கண்ணிகள்----
அந்தாதியோ?..

ஸ்ரீராம். சொன்னது…

நினைவுக்கும் நடப்புக்கும் சம்பந்தமில்லை.
நடப்பது எதுவும் நம் கையில் இல்லை.

முரண்களால் சூழப்பட்ட வாழ்வு
அந்த அரணைத் தாண்டினால் சாவு!

கடைசிவரை வாழ்வில் இருக்கும் முரண்
கடவுளே நாங்கள் உன் சரண்!

பேசாமல் இருக்குமா உறவு
வம்பு மட்டுமே வரவு!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!

அந்தாதியல்ல... சொந்தாதி தான்!

அண்மைக் காலமாக இங்கு மும்பையில் நானிருக்கும் குடியிருப்பில், பல முதியவர்களோடு பரிச்சியம் ஆனது. பலரும் பெரிய பதவிகளெல்லாம் வகித்து, பல வருடங்களுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்கள். பல கலக்கங்களும் கதைகளும் கேட்கிறேன். என் மனோவியலும்,ஆலோசனை அனுபவமும் சிலருக்கு உபயோகப்படும் என நம்புகிறேன்.

பல ஆரோக்கியமான முதுமை எதிர்கொள்ளலும் பார்க்கிறேன். பகிர நிறையவே இருக்கிறது ஜீவி சார்!

மோகன்ஜி சொன்னது…

அடடா ஸ்ரீராம்!
பொருள் பொதிந்த வரிகள்.
ரசித்தேன் ஸ்ரீராம்!

நீங்கள் குறிப்பிடும் சரணாகதி தான் எதையும் எதிர்கொள்ளும் பலம் தரும்.நன்று.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அப்பாடா.....

மோகன்ஜி சொன்னது…

நன்றி வெங்கட் நாகராஜ் !

சிவகுமாரன் சொன்னது…

மீண்டும் மீண்டும் படித்துக் கொண்டிருக்கிறேன். முதுமையின் வலிகளை, சவால்களை மிக அழகாகச் சொன்னீர்கள். அத்தனை வரிகளும் என் தந்தையை , அண்மையில் நான் பார்க்காமலே இறந்து போன என் மாமனாரை , என் அப்பத்தாவை நினைவுபடுத்துகின்றன. படுத்துகின்றன. கடைசி வரி படிக்கும் போது பொத்தென விழுந்தன கண்ணீர்த் துளிகள். ,

மோகன்ஜி சொன்னது…

சிவா!

முதுமையின் பெரும்வலி தன்மீது தானே உண்டாக்கிக் கொள்ளும் காயங்கள் தான்.

மனம் தன் சக்தி குறைந்து வருவதை ஏற்க மறுக்கிறது.
சின்ன உதாசீனத்தையும் பெரிதுபடுத்திக் கொள்கிறது.
பிறர் வார்த்தைகளை சலித்துசலித்து அர்த்தங்கள் கற்பித்துக் கொள்கிறது.
தன்னைசுற்றி நடக்கும் அனைத்தும் தனக்கு தெரிவிக்கப் பட வேண்டுமென்றோ, தன்
ஒப்புதல் பெற வேண்டுமென்றோ எதிர்பார்க்கிறது.
தன்னோடே கூடி கிழப்பருவம் எய்திய துணையை, அதிகம் ஆதிக்கம் செய்து பிணக்கு கொள்கிறது.

கூடவே ஏற்படும் பொருளாதார சிக்கல்கள், உடல்நலக் கோளாறுகள், காலமாற்றம், கருத்து மாற்றம், அதீத அன்பினால் ஏற்படுத்திக் கொள்ளும் ஏமாற்றங்கள் என பலவும் அலைகழிக்கின்றன.

இந்த மாறுபாடுகளின் தாக்கமும், சுய இரக்கமும் ஏற்படுத்தும் சிக்கல்வளையத்துக்குள்ளேயே சுழலும் நிலை உருவாகிறது. அது மேலும் பிரச்னைகளை வளர்க்கிறது.

ஆனாலும், பல பெரியவர்கள் வெகு சீக்கிரத்திலேயே அந்த வளையத்துக்குள் தள்ளும் காரணிகளை கண்டுகொண்டு,அவற்றை எதிர்கொண்டு வெற்றி காண்கிறார்கள்.

மனித உறவுகளை ஆரோக்கியமாக பேணி வருபவர்களும்,நல்ல இலக்கிய வாசிப்பு உள்ளவர்களும் எளிதில் இந்த சிக்கல்களைக் கடந்து, எஞ்சிய வாழ்வை இன்பமாய்க் கழிக்கிறார்கள்.

வயது முதிர்ந்தவர்களை மரியாதையோடும் மதிப்போடும் பேணும் எந்த சமூகமும் வளமாக முன்னேறும். அவர்களின் அனுபவத்தைப் போற்ற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.

இங்கு இன்னமும் நல்ல கருத்துக்களை சொல்ல பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கூற்றையும் கேட்போம் சிவா!

நம்மைவிட்டுப் போனவர்களை நினைத்துநினைத்து வேதனை கொள்ளுவது தவிர்க்க இயலாதது தான். அவர்களுடைய அன்பையும், இனிய ஞாபகங்களையும் தன்வயப் படுத்திக் கொள்வதே (internalise) நம்மை மீட்டுக் கொள்ளும் வழி. அதுவே தூய அன்பின் வழியும் கூட சிவா!

தனியாக இருக்கிறாய் அல்லவா? நினைவுகளை சுழலவிட்டபடி வேதனைப் படாதே சிவா.

Geetha Sambasivam சொன்னது…

//கூட்டத்தில் உணர்வதோ தனிமை
தனிமையில் நினைவுகளின் சந்தடி//

தம்பி அல்லவா! அக்காவின் உணர்வுகள் புரிந்திருக்கிறது!
திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டேன். அப்படியே என் மனோநிலை! இதற்காகவே தனிமையில் இருப்பதைத் தவிர்க்கவும் முற்படுகிறேன். :)

சிவகுமாரன் சொன்னது…

ஆமாம். அண்ணா. முதுமையை ஏற்றுக் கொண்டவர்கள், திட்டமிட்டு எதிர்கொண்டவர்கள் வெற்றி காண்கிறார்கள்.

சிவகுமாரன் சொன்னது…

ஆமாம். அண்ணா. முதுமையை ஏற்றுக் கொண்டவர்கள், திட்டமிட்டு எதிர்கொண்டவர்கள் வெற்றி காண்கிறார்கள்.

கோமதி அரசு சொன்னது…

உறவுகளுடன் ஓயாத பேச்சு
பேச்சாலே விலகும் உறவு//

கவிதை அருமை.

வயதான பின் சில நேரங்களில் உறவுகளிடம் மெளனமாய் இருப்பதே நல்லது. அவர்கள் பேசுவதை மட்டும் காது கொடுத்து கேட்க வேண்டும்.

நம் பேச்சை, நம் அறிவுரையை கேட்க வேண்டும், நம்மிடம் மட்டுமே பேச வேண்டும் என்று நினைத்தால் பிரச்சனைகள் வர ஆரம்பித்து விடும்.

முதுமையை போற்ற வேண்டும் என்கிறீர்கள் முதுமையில் மதிக்கப்படுவது கொடுப்பினை.‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

முதுமையை, முதுமையின் தனிமையை சித்தரித்த கவிதை வரிகள் சிறப்பு! அருமை! தொடருங்கள்!

கோமதி அரசு சொன்னது…

ஶ்ரீராம் கவிதையும் அருமை. நாம் பேசாமல் இருந்தாலும் பேசும் உறவு என்பது உண்மை.

ஸ்ரீராம். சொன்னது…

கோமதி அரசு மேடம்...

//ஸ்ரீராம் கவிதையும்//

நன்றி. தருமி நாகேஷாய் நன்றி கூறுகிறேன்!

G.M Balasubramaniam சொன்னது…

முதலில் என்னை நினைத்து எழுதியதோ என்னும் சந்தேகம் வந்தது கூடவே முதுமையின் பரிசு என்று நான் எழுதிய பதிவும் நினைவுக்கு வந்தது சுட்டி தருகிறேன் படித்ட்க்ஹுப் பாருங்கள்
http://gmbat1649.blogspot.in/2012/07/blog-post_29.html

Dr B Jambulingam சொன்னது…

யதார்த்தத்தைப் பகிர்ந்த விதம் அருமை.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்,
உண்மையில் தனிமையில் தான் ஒரு பெரும் சுகம்இருக்கிறது.
ஏகாந்தத்தில் திளைக்கப் பழகிய மனசு, பஞ்சு போல் லேசாக ஆகிவிடும்.
ஆன்மீக முன்னேற்றத்துக்கு ஆரம்பநிலைகளில் கூட்டுவழிபாடும், மேலே போகப்போக தன்னுள்ளே அமிழ்ந்து தானேகரைந்துபோவதும் அவசியம்.
மாறாக தனிமையில் பழையபுண்களை மீண்டும் கிளறியபடி துன்ப ப்படுதல் எனத் தொடங்கிவிட்டால் வேதனையே மிஞ்சும்.

எழுத்தை மெருகேற்றும் தனிமை. தனிமை சூழும் போது எழுதும் மனநிலையை பழக்கிப் பாருங்கள்.
உங்களின் சிறந்த படைப்புகள் உருவாகும்.

“தன்னை அறிந்தேன்டி ! தனிக்குமரி ஆனேன்டி
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?
-வள்ளலார்

மோகன்ஜி சொன்னது…

சிவா,
//முதுமையை ஏற்றுக் கொண்டவர்கள், திட்டமிட்டு எதிர்கொண்டவர்கள் வெற்றி காண்கிறார்கள்.//
முற்றிலும் உண்மை தம்பி !

மோகன்ஜி சொன்னது…

கோமதி அரசு மேடம்,
//முதுமையில் மதிக்கப்படுவது கொடுப்பினை.//

சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள். அந்த மதிப்பை பெறுவதும் தக்கவைத்துக் கொள்வதும் ஓர் வாழ்நாள் சேகரிப்பு அல்லவா ?

மோகன்ஜி சொன்னது…

சுரேஷ்,
மிக்க நன்றி !

மோகன்ஜி சொன்னது…

கோமதி அரசு மேடம் !
ஶ்ரீராம் பற்றிய உங்கள் பாராட்டுக்கு என் கைதட்டல்கள் பலமாய்.....
அண்மையில் அவருடைய சில சிறுகதைகளைப் படித்தேன்.
என் மனசை விட்டு இறங்கமாட்டேன் என்கிறார்!

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம் ! தருமியின் ஸ்தானத்துக்கு நீங்கள் கூட போட்டியா?!

மோகன்ஜி சொன்னது…

GMB சார் !
//முதலில் என்னை நினைத்து எழுதியதோ என்னும் சந்தேகம் வந்தது//
உங்களை அனைவரும் நினைத்துக் கொள்கிறார்கள் ....ஆனால் உங்களைப் பற்றி எழுதுவதானால் யானை பார்த்த குருடர் கதையல்லவா ஆகிவிடும் ?!
அடுத்து, இந்த கவிதை முதியவர்கள் பற்றியது. உங்களைப் போன்ற கட்டிளங்காளைகளுக்கு அல்ல !
அவசியம் உங்கள் பதிவைப் பார்க்கிறேன். நல்ல நினைவாற்றல் உங்களுடையது GMB சார்.

மோகன்ஜி சொன்னது…

முனைவர் ஜம்புலிங்கம் சார்!

அன்புக்கு நன்றிங்க.

பரிவை சே.குமார் சொன்னது…

யதார்த்தம்...
அருமை அண்ணா.

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார் !

ஸ்ரீராம். சொன்னது…


//ஶ்ரீராம் பற்றிய உங்கள் பாராட்டுக்கு என் கைதட்டல்கள் பலமாய்.....
அண்மையில் அவருடைய சில சிறுகதைகளைப் படித்தேன்.
என் மனசை விட்டு இறங்கமாட்டேன் என்கிறார்!//

நன்றி மோகன் ஜி! தனியனாய் இருந்தவன் தன்யனானேன்!

:)))

ஸ்ரீராம். சொன்னது…


//ஶ்ரீராம் ! தருமியின் ஸ்தானத்துக்கு நீங்கள் கூட போட்டியா?!//

"கொஞ்சம் வசன நடையாய் எழுதுவேன்... ஆனாலும் புலவன்னு ஒத்துகிட்டிருக்காங்க.." எனும் தருமியின் வாசத்தை இங்கு நினைவுகூர வேண்டும்! மேலும் நானும் கேட்க (படிக்க) மட்டுமே தெரிந்தவன்!

ஸ்ரீராம். சொன்னது…

'க' விட்டுப்போச்சே...

மோகன்ஜி சொன்னது…

வாழ்த்துக்கள் ஶ்ரீராம் !
'தருமியின் வாசம்' என்னை கொஞ்சம் மிரட்டிவிட்டது ஶ்ரீராம்.
கவிஞனை ஆராதிக்க இதேதும் புது முறையோ என்றும், கீதா அக்கா படித்தால் உங்களை என்ன சொல்லப் போறாங்களோ என்றும் யோசித்துக் கொண்டிருந்தேன்.

விட்டுப் போன 'க' விடைசொல்லியது.

'கா'விட்டுப் போனாரோ சுதா என்று இப்போது பார்த்தபடிஇருக்கிறேன் ஶ்ரீராம் !

ஸ்ரீராம். சொன்னது…

// கீதா அக்கா படித்தால் உங்களை என்ன சொல்லப் போறாங்களோ என்றும் யோசித்துக்கொண்டிருந்தேன். //

ஊ..ஹூம்.... இம்போஸிஷன் எல்லாம் எழுதுவதாய் இல்லை!

Geetha Sambasivam சொன்னது…

"வாசம்" குறித்துத் தானே தருமியின் "வாச"க"ம்" தம்பிகளா? அதான் ஏதும் சொல்லலை! இதை யாரானும் சொல்வாங்களானு பார்த்தேன். யாரையும் காணலை! :) மற்றபடி கவிஜ்ஜை(தை)க்கும் எனக்கும் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப தூரம்.

நிலாமகள் சொன்னது…

பெரிய பாட்டன் வயசுக்கு நாமெல்லாம் இருப்போமா என்ன...?

ஆனாலும் நினைக்கும் போது பயமாகவும்(நம் நிலை எப்படியோ) பரிதாபமாகவும் (எப்படியிருந்தவர்!) இருக்கு.

எழுத்தும் வாசிப்பும் ஊன்று கோல் ஆவது நல்லதொரு பிடிமானம்.

அவர்களின் அனுபவ மொழிகளையும் உங்க ஆறுதல் மொழிகளையும் தொடர்ந்து பதிவிடுங்களேன்...

//முதுமையின் பெரும்வலி தன்மீது தானே உண்டாக்கிக் கொள்ளும் காயங்கள் தான்.

மனம் தன் சக்தி குறைந்து வருவதை ஏற்க மறுக்கிறது.
சின்ன உதாசீனத்தையும் பெரிதுபடுத்திக் கொள்கிறது.
பிறர் வார்த்தைகளை சலித்துசலித்து அர்த்தங்கள் கற்பித்துக் கொள்கிறது.
தன்னைசுற்றி நடக்கும் அனைத்தும் தனக்கு தெரிவிக்கப் பட வேண்டுமென்றோ, தன்
ஒப்புதல் பெற வேண்டுமென்றோ எதிர்பார்க்கிறது.
தன்னோடே கூடி கிழப்பருவம் எய்திய துணையை, அதிகம் ஆதிக்கம் செய்து பிணக்கு கொள்கிறது.

கூடவே ஏற்படும் பொருளாதார சிக்கல்கள், உடல்நலக் கோளாறுகள், காலமாற்றம், கருத்து மாற்றம், அதீத அன்பினால் ஏற்படுத்திக் கொள்ளும் ஏமாற்றங்கள் என பலவும் அலைகழிக்கின்றன.

இந்த மாறுபாடுகளின் தாக்கமும், சுய இரக்கமும் ஏற்படுத்தும் சிக்கல்வளையத்துக்குள்ளேயே சுழலும் நிலை உருவாகிறது. அது மேலும் பிரச்னைகளை வளர்க்கிறது.//

மனித உறவுகளை ஆரோக்கியமாக பேணி வருபவர்களும்,நல்ல இலக்கிய வாசிப்பு உள்ளவர்களும் எளிதில் இந்த சிக்கல்களைக் கடந்து, எஞ்சிய வாழ்வை இன்பமாய்க் கழிக்கிறார்கள்.

வயது முதிர்ந்தவர்களை மரியாதையோடும் மதிப்போடும் பேணும் எந்த சமூகமும் வளமாக முன்னேறும். அவர்களின் அனுபவத்தைப் போற்ற பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.//

நல்ல அவதானிப்பு.

G.M Balasubramaniam சொன்னது…

மோகன் ஜி என் பதிவை நான் படிக்கக் கேட்டுக் கொண்டது வயோதிகம் என்பது செய்யாத குற்றத்துக்குத் தண்டனை என்று எழுதி விளக்கி இருந்தேன் அதன் இன்னொரு கோணமாகவே முதுமையின் பரிசு எழுதி இருந்தேன் கருத்துக்கள் பரவலாகப் படிக்கப் படவேண்டும் என்னும் ஆசையே சுட்டியைக் கொடுக்க வைத்தது நாணயத்தின் இரு பக்கங்களையும் குறிப்பிடும் பதிவுகள் என் நினைவு சக்தியைப் பாராட்டுவதற்கு நன்றி ஒரு டி ஷர்ட் வாங்கி வைக்கட்டுமா எப்போது பெங்களூர் விஜயம் ?

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம் ! 'இம்போசிஷன்' நல்ல தண்டனை தான்!

மோகன்ஜி சொன்னது…

அக்கா!
ஒரு கவிதைக்கே கவிதை தூரமாகி விட்டதே! ஆச்சரியக் குறி !! ஶ்ரீராமை எதேனும் வாருவீங்கன்னு போட்டுகுடுத்தா..' ஐ யாம் நோ கவிதை'ன்னு ஜகா வாங்கிட்டீங்களே!

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிலா !
//அவர்களின் அனுபவ மொழிகளையும் உங்க ஆறுதல் மொழிகளையும் தொடர்ந்து பதிவிடுங்களேன்... //
நல்ல யோசனை தான் ! பதிவிட்டால் போயிற்று.

மோகன்ஜி சொன்னது…

GMB சார்!
உங்கள் பதிவைப் படித்தேன். அற்புதமான கருத்துக்கள். என் கருத்தையும் இட்டிருக்கிறேன் .
பெங்களூர் ஜூலைக்கு மேல் வருவேன். அவசியம் சந்திப்பேன்.

உங்கள் பதிவை மீண்டும் மீள்பதிவு செய்யுங்கள். அனைவரும் படிக்க வகைசெய்யும் சார்!

sury Siva சொன்னது…

சொல்லியே வருமோ சாவு //

சொல்லாமல் வருவது
கல்லும் நக்கலும் தான்
விக்கல் வரவில்லையே !

எருமை வாகனன்
வரும் வழியில்
இருளோ !

பொறுங்கள் .
யாரோ கதவைத்
தட்டுகிறார்கள்.

சுப்பு தாத்தா. .

மோகன்ஜி சொன்னது…

சுதா!
//விக்கல் வரவில்லையே !//
தினைமாவு தின்று பாருமேன் !
வள்ளிபுரம் கல்யாணத்து வரிகள் பாருங்கள்:

தேனும் தினைமாவும் தின்றாண்டி-வள்ளி
திருக்கையில் வாங்கியே தின்றாண்டி;

மீனும் மருள்கின்ற கண்ணாளே-ஐயோ!
விக்கல் எடுக்குதே என்றாண்டி. 9
தாகத்தைத் தாங்கேனே என்றாண்டி-கண்ணே!
தாராய் சுனைத்தண்ணீர் என்றாண்டி;

தட்டப்படும் கதவெல்லாம் பட்டியலில் இருப்பதில்லை. வள்ளியொடு சுப்ரமணியர் வருவார். ஆரத்தியும் மட்டைத் தேங்காயும் கையில் எடுத்துகிட்டு கதவைத் திறவும்.

சுப்ரமணியத்துகிட்டே ரெண்டு மயில்பீலி எனக்காக வாங்கி வையும்.

வேலுண்டு வினையில்லை
மயிலுண்டு பயமில்லை.

sury Siva சொன்னது…

நான் எங்கே போய் விடப்போகிறேன் ?
"நான்" உள் இருக்கும் வரை ?

பல அறுசுவைகளுக்காக காத்திருந்தேன்.
சில சுவை நகைச் சுவை.

(உ-ம்.)

//ஒரு டி ஷர்ட் வாங்கி வைக்கட்டுமா எப்போது பெங்களூர் விஜயம் ?//
ஒன்பது வரிப் பாட்டுக்கு ஒன்பது நூறு டீ ஷர்ட்டா ?
அநியாயம். அநியாயம்.

பாட்டில் பல குறைகள் இருப்பதால்,
பாதி விலையில் ஒரு
படா பட்டி தான் தரலாம்.

வேண்டுமென்றால் கூட ஒரு
படா கானா தரலாம். बडा खाना
சென்னை வாருங்கள்.சுப்பு தாத்தா.

sury Siva சொன்னது…

1. சிரிக்கும் தொறும் கண்ணீர்.//

சிரிக்கும் தோறும் கண்ணீர் . என இருத்தல் நன்றோ !!

"தொறும் "
தொல் அகராதியில் பொருள் இலையே !!
2.
//தாவிஅலையும் ஞாபகங்கள்
தவிக்கவிடும் பொல்லா மறதி//
ஞாபகம் :
வடமொழிச் சொல்லின் தத்பவம். உருமாறி.

தாவி அலைவது எண்ணங்கள் .
தவிக்க விடுவது தகுந்த சொற்கள்.

அதனால் தானோ என்னவோ,
கிடைத்த நேரத்திலே
கிடைத்த தனிமையிலே

//எழுத்தை மெருகேற்றும் தனிமை// (செய்வது)
செய்யவேண்டியது:
"தன்"னை அறிய தன்னைத் தியாகம் செய்யும் பக்குவம்.
அதனாலோ என்னவோ வள்ளலார் சொல்லுவார்:
"தன்னை அறிந்தேன்டி ! தனிக்குமரி ஆனேன்டி
தன்னம் தனியே தனி இருக்கும் பக்குவமோ?
-வள்ளலார்"

அது சரி. இரண்டு தானே !! அதற்குத் தகுந்தாற்போல்......

நோ. மிச்சம் 8 இருக்கின்றன.

3 முதல் 10 வரை அடுத்த ஒவ்வொரு திங்கள் திங்கட்கிழமை அன்றும் வரும்.

ஆனி முதல் பங்குனி வரை.


இந்த வருடம் துர்முகி அல்லவா !!

அனுபவி ராஜா அனுபவி.

ஆரம்பிச்சுட்டார்யா !! இந்த சுப்பு தாத்தா.

எங்க முடியப்போவுதோ !!

துரை சாரே ! எங்கயா போனே...மோகன்ஜி சொன்னது…

சு்தா!
//ஒன்பது வரிப் பாட்டுக்கு ஒன்பது நூறு டீ ஷர்ட்டா ?
அநியாயம்//

ஒரு புலவனுக்கு ஒரு தமிழ்ப் புரவலர் டீ சர்ட் தந்து ஆதரிக்க கூடாதா?
பிழைகளுக்கு பிடித்தம் செய்தால் எனக்கு பட்டாபட்டி கூட மிஞ்சாது தான்.
ஆனாலும்கூட GMB சாரின் அன்பின் கனிவில், பிழைகளைப் பொருட்படுத்த மாட்டாரே!

நான் அவர் வீட்டிற்கு வந்தால் டீசர்ட் எனக்குண்டு எனும் டீல் எப்போதோ முடிந்த ஒன்று.
நடுவில் கரடி விட்டு குழப்படி செய்யாதேயும் ஸ்ஸ்ஸுதா....

//சென்னைக்கு வந்தால் படாகானா.//
ஆஹா! வருகிறேன். அப்பாதுரையையும் உடன்அழைத்து வருகிறேன்.
சென்னைக்கும் பெங்களூருக்கும விஜயம் செய்கிறோம்.
சென்னைக்கு சாப்பிடாமலும்....
பெங்களூருக்கு மேல்சட்டை ஏதும் போடாமலும்.....

மோகன்ஜி சொன்னது…

சுதா !
//சிரிக்கும் 'தோறும், கண்ணீர் என் இருக்க வேண்டுமோ?//

இல்லை சுதா.
தொறும் தோறும் இரண்டும் எங்கே உபயோகிக்க வேண்டும் எனும் இலக்கணம் உண்டு.
குறளைச் சுட்டியே இலக்கணம் சொல்லித் தந்த என் தமிழய்யாவுக்கு வணக்கம்...

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது

உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தோறும்' உபயோகிக்க வேண்டும்
மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தொறும்' உபயோகிக்க வேண்டும்.

ஆனால் நான் எதை உபயோகித்தாலும் டீசர்ட் கிடைக்கும் படாகானா சு.தா !

மோகன்ஜி சொன்னது…

சுதா!
//நோ. மிச்சம் 8 இருக்கின்றன.

3 முதல் 10 வரை அடுத்த ஒவ்வொரு திங்கள் திங்கட்கிழமை அன்றும் வரும். //

புரியல்லையே மாஸ்டரு?

நீங்க 'பல்கொட்டிப் பேய்'படிக் ஆரம்பிச்சதிலிருந்தே பேச்சும் போக்கும் ஒரு மார்க்கமாத்தேன் இருக்குன்றேன்.

sury Siva சொன்னது…

//உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தோறும்' உபயோகிக்க வேண்டும்
மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன் 'தொறும்' உபயோகிக்க வேண்டும்.//


என்ன இது ! இவரு பாயிண்டை புடிச்சுட்டாறே !!
சரி, வேற ரூட்டிலே போயி பார்ப்போம்.

அது சரி.

"மெருகு" போடறதுக்கு என்ன பதில் ?

மெருகு உருகி கருகி சருகலாய் ச்செல்லுமுன்னே
மெய்த்தோற்றம் காணப்படும்.


இது எப்படி இருக்கு ?

சுப்பு தாத்தா.

கீதா அம்மா !! ஹெல்ப் ஹெல்ப் !!!

மோகன்ஜி சொன்னது…

சு தா!
எது என்னண்ணே மெருகு?

sury Siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sury Siva சொன்னது…

//உறவுகளுடன் ஓயாத பேச்சு
பேச்சாலே விலகும் உறவு//

இரண்டாவது வாக்கியம் நூற்றுக்கு நூறு உண்மை.

பேச்சாலே என்றால் வெறும் வெற்றுப் புகழ்ச்சியோட
நிறுத்திக்கணும். வந்தாயா, போனாயா, ஒரு வாய் காபி கொடுத்தோமா, அதை சாப்பிட்டுவிட்டு போனார்களா என்று இருக்கவேண்டும் உறவு.

அதை மீறி, கொஞ்சம் உண்மையைப் பேச ஆரம்பிச்சா வம்பு தான்.

உறவு விலகித்தான் போகிரது. போயும் விட்டது.

நத்திங் இஸ் லாஸ்ட் தோ.

இதுவே நண்பனை பத்து திட்டு திட்டினாலும் பொறுத்துண்டு போவான். அதான்,

நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு

அப்படின்னு சொன்னாப் போல...

சு தா.

sury Siva சொன்னது…

// சிரிக்கும் தொறும் கண்ணீர்.
அழுகையே போலும் புன்னகை//


நீரும் நகையும் ஒன்றாய் சங்கமிக்கும் தருணம் ஒன்று உண்டு எனின்
அது இங்கே தான்.

அந்த நேரம் வரும்போது கண்ணீர் விடுவேனா, புன்னகை பூப்பேனா என்று தெரியவில்லையே என்று புலம்பும் காட்சி இதுவே:

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன்.சுப்பு தாத்தா.

சிவகுமாரன் சொன்னது…

:-) :-) :-D

சிவகுமாரன் சொன்னது…

:-) :-) :-D

கோமதி அரசு சொன்னது…

அந்த மதிப்பை பெறுவதும் தக்கவைத்துக் கொள்வதும் ஓர் வாழ்நாள் சேகரிப்பு அல்லவா ?//

ஆமாம், மதிப்பை தக்க வைத்துக் கொள்வது வாழ்நாள் சேகரிப்புதான்.மோகன்ஜி சொன்னது…

சுப்புத் தாத்தா !
//இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.//
அந்தக் கருத்துக்கு எழுதின பதிலை என்ன செய்வது? என்றாவது ஒருநாள் என் கதாபாத்திரம் உரையாடுமோ?

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய சுதா !
நல்ல கவனம் உங்கள் பார்வையில் .

//நகுதல் பொருட்டன்று நட்டல், மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு //

மிக உயர்ந்த குறள்!

சுட்டிங் கேதுமுண்டோ பிழையின் ஊற்றுக்கண்
ஹிட்டிங் பிலோத பெல்ட்டு.

காமெடித் குறள்!

மோகன்ஜி சொன்னது…

சுதா !
புலப்பின் கண்... என்ன அழகான குறள். எவ்வளவு பொருத்தமாய் சொல்லியிருக்கிறீர்கள் . முன்னதை செய்ய நினைப்பவள் தான் பின்னதையும் ஆலோசிக்கிறாள்.
இரண்டையும் அவள் குழம்புவது போன்று ஒருங்கே செய்யத்தான் வேண்டும்.
முன்னது ஊடல்
பின்னது காதல்
இரண்டுமாய் தாம்பத்தியம்.

sury Siva சொன்னது…

கொஞ்சம் அதிகப் பிரசிங்கத் தனமாக இருக்கிறதோ என்று
நினைத்தேன். அதனால் தான் "கட்" டி விட்டேன்.

இருந்தாலும்,

காமெடி + குறள் = காமெடிக் குறள் இல்லையா ?

காமெடித் குறள் எப்படி ?

இதுக்காக ஒரு பத்து பர்சென்ட் கட்.

அது சரி, குறளுக்கான இலக்கணம் என்ன ?

அடுத்தது,
உணர்வதோ யானைப்பசி
உண்பதோ குழந்தைக் கொறிப்பு

பல நேரங்களில் பலவற்றை எதிர்பார்க்கிறோம்.
பலாப் பழத்தை மிகச் சிரமத்துடன் உரித்துப்பார்த்தால்,
கொட்டை தான் எஞ்சி நிற்கிறது.
கோட்டை விட்ட உணர்வு மிஞ்சி நிற்கிறது. .


இப்படித்தான் இன்றைய நாள் இலக்கியமும்.
பலர் தன்னை முன் நிறுத்தும் முனைப்பிலே
தான் சொல்லவந்ததை முழுங்கி விடுகின்றனரோ !!சு தா.

மோகன்ஜி சொன்னது…

கோமதி அரசு மேடம்!
//மதிப்பை தக்க வைத்துக் கொள்வது வாழ்நாள் சேகரிப்புதான்.//

உண்மை தான்! மதிப்பு தூக்கணாங்குருவி கட்டும் கூட்டைப் போல. இழையிழையாய்ப் பின்னி வளர்ப்பது. ஒரு நாளில் உருவாவதில்லை !


மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…


சுதா !
காமெடித் குறள் - ஓடும் காரில் ஐபோன் ஆடின கபடி ! பிழை பொறுத்தருள்க ஐயன்மீர் !

இலக்கணம் மீறியதால் தான் அது காமெடிக் குறள்!
பலாவை உரித்து கொட்டைமட்டுமே எஞ்சி நின்றால் ஏமாற்றம் தான். அதற்காக அதை எறிந்து விடாதீர்கள். அதை நசுக்கி மோர்க்குழம்பில் போடலாம். தணலில் வெறுமனே சுட்டு உரித்து சாப்பிடலாம்(கபத்துக்கு நல்லது).
தோலையும் சடையையும் மாட்டுக்குப் போடலாம்...
ஏமாற்றத்துடன்,உரித்ததை வழியிலே எறிந்தால் நாமேகூட வழுக்கிவிழ ஏதுவாகும்.

முன்னிறுத்தும் முனைப்பிலே இருப்பவன் எழுத்தில் சரக்கிருந்தால் படித்துவிட்டுப் போகலாம். வெற்றுக்கூச்சல் மட்டும்தான் என்றால், ஒதுக்கிவிட்டு மேலே போகலாம் . அது நம் பொன்னான நேரத்துக்கு லாபம். அவர்களோடு மல்லுகட்டி ,இலக்கியம் வளர்க்க பொறுமையும்,திறமையைம்,நிராகரிப்பை ஏற்கும் பெரியமனதும் வேண்டும். அப்படி யாரேனும் வருவார்கள்... அது காலத்தின் கட்டளை !

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா!

:-) :-) D

இத்தகு குறியீடுகளுக்கு தமிழில் ஏதும் முயன்று உருவாக்கு தம்பி. நாம் புழக்கத்தில் கொண்டு வருவோம் !