புதன், பிப்ரவரி 11, 2015

கிளாரினட்


இன்று இரவு தொலைக்காட்சியைப் பிராண்டிக் கொண்டிருந்தபோது, தூர்தர்ஷன் பாரதியில் AKC நடராசன் அவர்களின் கிளாரினட் இசை ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. ‘பஹுதாரி’ ராகம். சுகமான வாசிப்பு. என் நினைவுகளோ பின்னோக்கி விரைந்தன.

கடலூரில் கெடிலநதிக் கரையில் ஒரு பிரசித்திபெற்ற ஆஞ்சநேயர் கோவிலொன்று உண்டு. அக்கோவிலில் இலட்சதீபம் வருடாவருடம் ஏற்றப்பட்டு விமரிசையாக நடக்கும். சிறுவனாய் நான் அப்பாவுடன் அங்கு போவதுண்டு.

ஒரு வருடம் லட்சதீபத்தின்போது AKC நடராஜன் அவர்களின் நிகழ்ச்சி இருந்தது. பிராபல்யத்தின் உச்சத்தில் அவர் இருந்த நாட்கள் அவை. என் அப்பாவின் சங்கீதரசனையில் AKCயின் கிளாரினட்டுக்கு தனிஇடம் உண்டு. மேடையின் மிக அருகிலிருந்தபடியால், அவர் கால்பாதத்தால் தாளம்போட்டபடி வாசித்ததும், அந்த கால்தாளம் பற்றி அப்பாவைக் கேட்டதுவும், பின்னாளில் தில்லானா மோகனாம்பாளில் சிவாஜி நாயனம் வாசிக்கும்போது காலால் தாளம்போடுவதை கவனித்து சிலாகித்ததும் நினைவுக்கு வந்தது. இன்று அதே கால்தாளத்தை AKC போடுவதை தொலைக்காட்சியில் பார்த்தபோது அப்பா வாசனை என்னை சுற்றிப்படர்ந்தது.

சில வருடங்களுக்குமுன், நான் திருச்சியில் பணியாற்றிய நாட்களில் AKCநடராசன் அவர்களோடு நல்ல தொடர்பில் இருக்கும் வாய்ப்பு இருந்தது. அப்பாவைப் பற்றியும் அந்த இலட்சதீபம் பற்றியும் அவரிடம் பிரஸ்தாபித்ததுண்டு. பழகுவதற்கு இனிமையான கலைஞர் அவர்.

கிளாரினட் பதினேழாம் நூற்றாண்டு இறுதியில் உருவானது.பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளிலும், பின்னர் ஏனைய நாடுகளிலும்  பல்வகை இசைகளிலும் வாசிக்கப் பட்டது. இதில் சில வகைகளும் உண்டு.
இது  நம் நாதஸ்வரத்தின் தங்கை என சொல்லலாம். 

தஞ்சையை சரபோஜி மன்னர்கள் ஆண்டபோதுதான் கிளாரினட் சதிர் கச்சேரிகளுக்கு இங்கு முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. தேவார ஓதலுக்கும் கிளாரினட்டை பின்னிசையாக உபயோகப்படுத்தினார்கள். அதற்கு நாதஸ்வரம் போல் ஒரு அந்தஸ்தை ஏற்படுத்தி, கர்னாடக இசையுலகிற்கு கொண்டு சேர்த்ததில் பெரும்பங்கு AKC ஐயா அவர்களுக்கு உண்டு. இவருடைய வளர்ச்சியிலும் வாசிப்பின் நுணுக்கங்களுக்கும் அவருடைய குருநாதர் திருவாவடுதுறை ராஜரத்தினம்பிள்ளைக்கு பெரும்பங்கு உண்டு. இவர் ஏறாத மேடைஇல்லை, வாசிக்காத கோவில்இல்லை எனும்படி இவருடைய மேதைமை கொண்டாடப்பட்டது. பல நாடுகளுக்கு சென்று தன் இசைக்கொடியை நாட்டி வந்தவர் AKC ஐயா அவர்கள்.

பக்கவாத்யமாய் தவில் மட்டுமின்றி, மிருதங்கத்தை சேர்த்துக் கொண்டும், ஜுகல்பந்தி முறையில் பிற வாத்யங்களோடு கூட்டிசை முயற்சிகளையும் மேற்கொண்டவர். இசையே தானாக மாறிப்போனவர். அவர்  எதைப்பற்றி பேசினாலும் அது இசையைப் பற்றியே முடியும்.

கிளாரினெட் எளிதாக வாசித்துவிடக்கூடிய வாத்தியம் அல்ல. நாதஸ்வரம் போலல்லாமல், ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒரு ‘கீ’ இருக்கும். அவற்றில் விரல் பதித்து வாசிக்கும் போது விட்டுவிட்டு கேட்காமல் நாதஸ்வரம்போல் நாதத்தின் குழைவைக் கொண்டுவருவதற்கு அசுரசாதகம் வேண்டும். AKC அவர்களின் நாதஸ்வர அப்யாசமும், வாய்ப்பாட்டு படாந்தரமுமே அவரை இந்த இசைக்கருவியின் முடிசூடா மன்னனாக நிறுத்தியது.

இன்று கிளாரினட் வாத்யம் எந்த சபாவில் தனிக்கச்சேரியாக ஒலிக்கிறது? இல்லை என்பதே வேதனையான பதில். அவ்வளவு ஏன்? நாதஸ்வரம் திருமணமண்டபங்களிலும் கோவில்களிலும் மங்களஇசை என்ற அளவிலேயே வாசிக்கப்படுகிறது. அந்நாள் போல் முழுநேரக் கச்சேரிக்கு ஏற்பாடுகளும் அருகிவிட்டன. கேட்பார்கூட குறைந்துதான் போய் விட்டார்களோ? இந்தக் குறுக்கத்தினால் இந்த இசையை கற்பவர்கள் கூட சொற்ப அளவிலேயே இருக்கிறார்கள்.

இந்த இன்டர்நெட் யுகத்தில், சினிமா சங்கீதம், தொலைக்காட்சி இசைப் போட்டிகளுக்கு பழகிப்போனக் காதுகள், பாரம்பரிய இசையை கேட்காது என்பது சரியான வாதமல்ல. இந்த இசைக்கிளர்ச்சிகளையையும் மீறி, இந்த அசுரகதியில் இயங்கும் வாழ்க்கையின் அயர்ந்துஓயும் தருணங்களில், நம் பாரம்பரிய இசையே ஒரு மயிலிறகு வருடலாய் ஆதூரம் தரும். சம்பந்தப் பட்டவர்கள் ஆலோசித்து இவற்றை மீண்டும் செழிக்கவிடல் வேண்டும். இந்த பாரம்பரிய இசையில்  நம் கிராமிய வாத்யங்களும் அடங்கும். அடுத்த தலைமுறை இவைபற்றி கூகுளில் தேடித்படித்து தெரிந்துகொள்ளாமல், கேட்டும் இன்புற வேண்டும் அல்லவா?



( AKC அவர்களின் புகைப்படம் GOOGLEக்கு  நன்றியுடன்) 






செவ்வாய், பிப்ரவரி 03, 2015

பாண்டு






ரங்கம்மா உச்சஸ்தாயியில் கத்திக் கொண்டிருந்தாள். அவள் கையிலிருந்த துடைப்பம் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தது . வாருகோலின் இலட்சணமெல்லாம் தேய்ந்து ,ஒரு குச்சிக்கட்டையாய் அது இருப்பதனால்தானோ என்னவோ அதன் இலக்கை சரியாய் தாக்காமல் ‘சப்சப்’பென்ற ஒலியே அதிகமாய் எழுந்தது. அந்த அக்ரஹாரத்தின் கடைக்கோடி வீடு அது. வீடு எனும் சோபையை இழந்து, வெறும் செங்கல்ஜோடனையாய் இளித்துக் கொண்டிருந்தது.. அந்த வீட்டின் சமையற்கட்டு மேடையின் உட்பகுதியில்தான் ரங்கம்மா எங்களுடைய கரப்பான்பூச்சி காலனியில் வாருகோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தாள்.

என் இனத்தார் ஓரிருவர் தாக்குதலுக்கு தப்பாமல் உயிரைவிட்டு மல்லாந்திருந்தனர். எல்லாவரும் திசைக்கொருத்தராய் சிதறி ஓடிக்கொண்டிருந்தார்கள். நான்மட்டும் காரைப்பெயர்ந்த ஒரு சிறுகுழியில் தஞ்சம் புகுந்திருந்தேன். அம்மா என்ன ஆனாளோ? படபடப்பாய் இருந்தது. என்ன வாழ்க்கை இது?

சமையலறைக்குள் அடுத்த குரல் புகுந்தது. "ஏண்டி ரங்கு! காலமே இப்படி சிலம்பம் சுத்திண்டிருக்கே? இப்போத்தான் கரப்பான்பூச்சியை ஒழிக்க மருந்தெல்லாம் வந்திருக்கே.. வாங்கி அடிக்க வேண்டியது தானே? எதுக்கு இந்த ஹிம்சை?" இது அடுத்த வீட்டு பங்கஜாக்ஷி மாமி. இரண்டு மாமிகளும் ரொம்ப சினேகிதம்..

"மருந்துவாங்க காசிருந்தா முதல்ல உங்கஅண்ணாவுகில்லே பழையதுலே கலந்து கொடுத்திருப்பேன்?"

“அட ராமச்சந்திரா! என்னடி பேச்சு இது? உன் மஞ்சகுங்குமத்துக்கு பழுதில்லாமே அவர்தான் ஒரு வழியா வந்து சேர்ந்துட்டரே....... அசடாட்டம் எதையோ பேசிண்டு"

இருவரின் குரலும் மெல்ல தேய்ந்து அந்த இருளோடின சமையற்கட்டு மீண்டும் நிசப்தமானது.. ஆபத்துக்கட்டம் தாண்டியாச்சு.. எனக்கு இதொண்ணும் புதுசில்லே.. மூணு மாசத்துக்கொருக்கா நடக்கிற வைபவம்தான். ரங்கம்மா இனி வரமாட்டாள். எங்கம்மாவும் மத்த கரப்புகளும் திரும்பிவர கொஞ்சம் நேரமெடுக்கும் அதுக்குள்ளே உங்களுக்கு என்னைப்பத்தின விருத்தாந்தமெல்லாம் சொல்றேன். சித்த பெரியமனசு பண்ணிக் கேளுங்கோ!

என்னடா இது? நீச்சக்கரப்பு சொல்றதையெல்லாம் கேக்கத் தலையெழுத்தான்னு என்னை ஒதுக்கிடாதேள். ‘புல்லாய் பிறவி தரவேணும், புழுவாய் பிறவி தர வேணும்’னுல்லாம் பாடரேளோன்னோ... அதெல்லாம் மெய்யின்னா என் கதையையும் நீங்க கேட்டுத்தான் ஆகணும் சொல்லிபிட்டேன்..

எங்க கரப்பு காலனியிலே யாருக்கும் பேரில்லே.. என்னத்துக்கு பேரு?.. இத்துணுண்டு வயத்துக்காக ஒரு ஜீவிதம்.. ஆனா எங்கம்மா மத்தக் கரப்பையெல்லாம் விட மேலானவள் . 'எந்த ஜென்ம பாவமோ கரப்பா பொறந்துட்டோம். ஆனாலும் மத்தவா வாயிலே விழுந்து எழுந்திருக்காம ஜீவிச்சிட்டு அந்த தேவநாதன் காலடியிலே சேர்ந்துடணும்' என்பாள்.

அம்மா பிறந்ததிலிருந்து இந்த வீட்டுப்படியை தாண்டினவளில்லை. ‘ப்ரபந்தம் முழங்கின வீடுடா இது’ என்று என்னையும் வெளியே விட்டவளில்லை. நான் கொஞ்சம் பெரியவனானப்புறம்தான் ஆத்த விட்டு வெளிய போய்வர ஒப்புத்துண்டா .அதுவும் எதுத்த கோவில் வரைக்கும்தான்.

யாருக்கும் பெயரில்லாத காலனியிலே எனக்குமட்டும் அம்மா ‘பாண்டுரங்கன்’னு பேரு வச்சா. செல்லமா ‘பாண்டு பாண்டு’ம்பா. மத்தவாளுக்கு என்னைமாதிரி நேரான பேரில்லேன்னாலும் , அடையாளத்துக்குன்னு ‘ஒத்த மீசையன்,சிடுமூஞ்சி, பெரிய கருப்பன், ஜீண்ட்ரம், பீன்சு’ன்னு கூப்பிட்டுப்பா...

எனக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம்.. ரொம்ப சங்கோஜி.. சட்டுன்னு பழகிட மாட்டேன். என்னைப் பார்த்தா மத்த கரப்புகளுக்கு இளக்காரம்தான். நான் கச்சலா இருக்கிறது மட்டுமில்லே... என் உடம்பு நெறம் வெளுத்து சோகையாய் இருப்பேன்.. தாளிப்புலே தப்பி விழுந்த உளுத்தம் பருப்பாட்டம் ஒரு நெறம்.. கேலி பண்ண மத்தவாளுக்கு இது போதாதா? அப்பப்போ அம்மாண்ட சொல்லி அழுவேன்.

‘உனக்கென்னடா ராஜா குறைச்சல்? நம்ம ஜாதிக்கே இல்லாத நெறம்டா உனக்கு.. ரங்கம்மா வைக்கிற சேமியா பாயசம் கூட உன் நெறம் தான்.. கரப்புகளுக்கு தெரியுமா அழகும் அழுக்கும்..’ ன்னு சமாதானம் சொல்வா.

நேத்து பாருங்கோ... ஒத்த மீசையன் என்னை வீணுக்கு வம்புக்கிழுத்தார். எங்க காலனியிலேயே மூத்தக் கரப்பு அது. கோவிலுக்கு தப்பாம போயிட்டு வரும். ஆனா போறவர்றவாளையெல்லாம் நொட்டை சொல்லும்..

நானு தேமேண்டு எறும்பு ஊர்கோலத்தை வேடிக்கை பார்த்துண்டிருந்தேன்.


“என்னடா பாண்டு? இப்படி வெறிச்சுவெறிச்சு பார்த்துண்டிருக்கே? எறும்பெல்லாம் உன்னை மிந்திரிபருப்புன்னு இழுத்துண்டு போயிடப் போறது!”

அவருக்கு என்னோட நெறத்தை கிண்டல் பண்ணல்லேன்னா போதுபோகாது. ஒருபக்கம் மீசைஇல்லாமப் போனாலும் நையாண்டிக்கு குறைவில்லே. நானொண்ணும் பதில் சொல்லல்லே. கோவிலப்பாக்க நடை கட்டினேன்.

“உனக்கு சும்மா ஒண்ணும் பாண்டுன்னு பேர் வைக்கல்லேடா உங்கம்மா. பொருத்தமாத்தான் வச்சிருக்கா போ!”

“ஸ்வாமி பேர் வச்சதுலே என்ன பொருத்தம் மாமா? அம்மாவுக்கு பிடிச்ச பேரு. வச்சுட்டா” என்றேன் தீனமாக.

‘பாண்டுரங்கன்’னு நினச்சுட்டியா? கூப்பிடறதோ பொருத்தமா பாண்டுன்னு மட்டும் தானே?”

"அதனால என்ன மாமா?"

"சாயங்காலம் கோவில்ல பாரதம் சொல்றா கேளு. தெரியும்.... ஹெஹ்ஹே!”

சித்த நாழியாச்சு.. ஓடி ஒளிஞ்ச மத்த கரப்பெல்லாம் ஒரு வழியா காலனிக்குள்ளே வந்துட்டா.. அம்மாவை பார்த்தப்பின்னே தான் சமாதானமாச்சு.

சாயங்காலமும் கோவிலுக்கு போனேன். பிரகாரத்துலே சேப்புசால்வை போர்த்திண்டு ஒரு மாமா கதை சொல்லிண்டு இருந்தார். அம்பாலிகா, விசித்ரவீர்யன், வேத வியாசர்ன்னு பேர்களெல்லாம் அவர் கதையில் வந்தன. தூணுக்கு இந்தப்புறம் நானும், அந்தப்புறமாய் நைவேத்தியத்துக்கு புளியோதரையுமா இருந்தா கதைதான் புரியுமா? “பகவானே! புளியோதரையை எல்லோரும் கைகொள்ளாம வாங்கி, சிந்திகிட்டே போகணும்னு வேண்டிகிட்டேன்.

அப்போதான் அந்த கதைசொல்ற மாமா சொன்னார்.
“வேதவியாசரைக் கூடினபோது அந்த முனியின் தோற்றம் கண்டு அசூயையில் அம்பாலிகா வெளிறிப் போனதால், அவளுக்கு பிறந்த பாண்டு மகாராஜா வெளுத்த அருவருப்பான தேகத்துடன் பிறந்தார்.”

அடடா ! பாண்டு மகாராஜாவுக்கும் என்னை மாதிரி வெளிறிப்போன தேகமா? ஓ....

அதான் ஒத்தமீசையன் ‘பாண்டுபாண்டு’ன்னு கிண்டல் பண்ணினாரா? மனசல்லாம் வலிச்சது.

தேவநாதன் வரப்ப்ரசாதி தான். புளியோதரை நான் வேண்டிகிட்ட மாதிரி தரையெல்லாம் சிந்திக் கிடந்தது. எனக்குத்தான் அதை சாப்பிட தோணல்லை.

நான் செத்துப்போனா, எறும்பெல்லாம்கூட அருவருத்து என்னை இழுத்துண்டு போகாது.

நான் யாருக்கு பிரயோஜனம்? என்னை ஏன் இப்படி பெத்தே அம்மா? உனக்கு என்னைப் பார்த்தா அருவருப்பில்லையா? இல்லை என்னைப் பிடிச்சா மாதிரி நடிக்கிறயா?

திரும்பிப் போகக்கூட தோணலே... இந்த அழகுல எனக்கு கல்யாணம் பண்ணனும்னு வேற அம்மா சொல்லிகிட்டிருந்தா. நான்கூட கனவெல்லாம் கண்டபடிதான் இருந்தேன். இப்போ புரியறது. நான் கனவுமட்டும்தான் காண முடியும்னு.
எல்லாம் போறும் போறும்..

“ஸ்...ஸ்..” ன்னு யாரோ கூப்பிடறமாதிரி இருந்தது. தூணோரம் கொஞ்சம் புஷ்டியா இன்னொரு கரப்பு தான் கூப்பிட்டது.. கிட்ட போனேன்.

“என்ன வேணும்.. நான் உங்களை பார்த்ததேயில்லையே.?”

“நான் இந்தக் கோயில்லையே தான் இருக்கேன். உங்களை அடிக்கடி பார்த்திருக்கேன். இப்படிஅப்படி பார்க்காமே போவேள்” என்றாள் அந்த புஷ்டி.

கேட்க மனசுக்கு சமாதானமா இருந்தது. “ என்ன வேணும் உங்களுக்கு?”


“எனக்கு நாலு பருக்கை புளியோதரை சிந்தலை இப்படி புரட்டிப்போட மாட்டேளா?”

இதென்ன?? இவளுக்கு நானென்ன வச்சஆளா?.
“ஏன்? நீங்களா எடுத்துக்க மாட்டேளா?”

“எனக்கு வேகமா நடக்க ஏலாது. ஒரு குழந்தை மிதிச்சு என் முன்னங்கால் போயிடுத்து. அதான் கேட்டேன்.”

அடடா... உடனே பருக்கைகளைப் புரட்டிக் கொண்டு வந்தேன்.

“கேட்கவே கஷ்டமா இருக்கு. எப்போ உதவி வேணும்னாலும் சங்கோஜமில்லாம கேளுங்கோ.”

“சந்தோஷம்.. உதவி வேணும்னா எப்படி உங்களை கேட்பேன்?..எங்கயோ வெளிய இல்லே இருக்கேள? எப்பவாவது இந்த பக்கம் வந்தால் பார்த்துக்கலாம். நான் வரேன்”.

மிச்சமிருந்த கால்களைஉந்தி தன்உடலை இழுத்தபடி மெள்ள சென்றாள். அடுத்திருந்த சுவரின் விரிசலுள் மறைந்தாள்.

அங்கேயே நின்று விட்டேன். என்னைப்போல இன்னொரு பாவப்பட்ட ஜென்மம்.. கொஞ்ச நேரம் போயிருக்கும்

“ பாண்டு.. பாண்டு” அம்மாதான் தேடி வந்துகொண்டிருந்தாள்.

“இங்கேயிருக்கேன்மா”

“கொஞ்ச நேரம் தவிச்சு போயிட்டேண்டா. இங்க தான் இருக்கியா?”

“ என்ன பாண்டு... என்ன யோசனை?”

“அம்மா.. நாம இனிமே இந்தக் கோயில்லையே இருக்கலாம்மா”

“பைத்தியமா உனக்கு? அந்த வீட்டுக்கு என்னடா? அது பிரபந்தம் ..”

“போறும்மா... பிரபந்தம் எப்பவோ முழங்கின வீடு தானே...இப்ப என்ன முழங்கறது.?. எப்பப்பாரு ரங்கம்மாவோட புலம்பல்.. இந்த இடத்துல இப்பவும் பிரபந்தம் முழங்குது அம்மா.. அர்ச்சனைகளென்ன? வேத கோஷமென்ன? பாரதமும் ராமாயணமும் பிரவசனம் ஆகிறதென்ன? நான் முடிவு பண்ணிட்டேம்மா. இனிமே இங்கயே இருப்போம்மா”

‘ஆமாம் மாமி.. இனிமே இங்கேயே இருங்கோளேன்’ என்று நாணத்துடன் புஷ்டி வெளியே வந்தாள்

ஆச்சு... என்ன அப்பிடியே நின்னுட்டேள் ??எங்க கல்யாணத்துக்கு வந்துடுங்கோன்னா.... எனக்கும் உங்களைப்போல பெரியவா யாரு இருக்கா? வந்து ரெண்டு அட்சதைபோட்டுட்டு கோயில்ல புளியோதரை பிரசாதம் வாங்கிண்டு போங்கோ... புதுசா மடப்பள்ளிகுள்ளேயே ஜாகை பார்த்துருக்கேன்.. வரட்டுமா?















புதன், நவம்பர் 05, 2014

அமிர்த மந்தனம்




இவனுமொரு நீலகண்டன்.


அமிர்தம் கடைகிறார்கள் எனக்
                                               கேள்வியுற்று,
ஓடு நிறைய அமிர்தம் எனும் ஆவலோடு,
பாற்கடல் கரையதிர ஓடி வந்தவன்.


கடைந்தார்கள்.
கடைந்தார்கள்.
கட்சிகட்டிக் கொண்டு கடைந்தார்கள்.

வெளிவந்த ஐராவதமும் உச்சஸ்ரவைஸும் 
                                    இவனுக்கு லட்சியமில்லை
கௌஸ்துபமும் கற்பகத்தருவும் 
                                     ஒரு பட்சமுமில்லை.
ஓர் ஓடளவுக்கு அமிர்தம் போதும்.

சிலுப்பிசிலுப்பி கடல் நுரைத்தது.
ஆர்ப்பரித்து அலைபுரண்டு கடல் வரண்டது.

கருமைசூழ்ந்து ஓலமெங்கும் அதிர்ந்தவேளை,
அமிர்தம் கிடைக்காதென்று தெரிந்து போனது
ஆலாலம் திரண்டெழுந்து கையில் விழுந்நது.
விரக்தியிலே நஞ்சையவன் உண்ணலானது.

கண்டம் பற்றி மிடறுநிறுத்திய உமை அறியாள்.
ஓரவஞ்சனையாய் அமுதம் பகிர்ந்த மால் அறியான்.
அண்டம் போற்ற தேவர்முனி என்றா ரும் அறியார்.
ஓடொன்றே அறியும் தியாகேசன் உள்ளக் கிடக்கை.

உச்சியிலே என்றுமிங்கே மீளாத்தனிமை.
வரம்தந்து வரம்தந்து சலித்த பெருமை.
ஈடேறா விருப்பங்களே ஈசன்நிலைமை.
கங்கையென்ன சக்தியென்ன அதே வெறுமை.










(பட உதவி: கூகிள் )








திங்கள், நவம்பர் 03, 2014

மீள்பயணம்




இரண்டாம் யௌவனமும் கடந்து

                                        கொண்டே இருக்கிறது.

ஓய்வூதியம் என்றோர் அவமானம்.

இதே வாழ்க்கையை மீண்டும் வாழ்வாயா

                                                  எனக் கேட்காதே.

சலிப்பாய் இருக்கிறது.

நானிருக்கிறேனே என நீ சொன்னால்,

                                அது உனக்கு கரிசனம்;

எனக்கோ அதுவே உதாசீனம்.


பொய்யைக் காட்டுகிறது கண்ணாடி

என் பிம்பம் எனக்குள்ளே.


கரையும் மேகங்களில் தொங்கிச்சென்ற பயணம்.

மிஞ்சி இருப்பதோ ஒரே ஆசை.....


எல்லாவற்றையும் கலைத்துவிட்டு

மீண்டுமொரு பயணம்......

புதிய முகங்கள்

புதிய கரங்கள்

புதிய காதல்

புதிய பார்வை

              இவற்றோடு எனது,

பழைய நட்புகளும்

பழைய கனவுகளும் கூடி


புறப்பட்ட இடம் நோக்கியே

மீள்பயணம் .

*****************
                காக்கைக் காதல்



காக்கைகளுக்கு காதலுண்டா?

சரஸமோ சாகசமோ தெரியாத

முட்டாள் பட்சி !


காக்கைகள் புணர்ந்து

பார்த்ததுண்டா ?


காதலே தெரியாத காக்கைக்கு,

குயில்முட்டையா தெரியப்போகிறது?



கருப்பாயிருந்தாலென்ன?

அவநம்பிக்கையில் ஒரு பக்கமாய்

வெறிப்பதை விடுத்து,

கண்ணுக்குள் கண் வைத்து

காலமழியப் பாரேன்....


இலக்கியத்துக் காதலெல்லாம்

இளகிவழிந்தே ஊரை நனைக்காதோ??

                                     ********************
                      மிச்சம்


விடிந்தபின்னும் எரியும் விளக்கு.

முடிந்தபின்னும் அசைபோடும் மனசு.

தாரத்திடம் தேடிய தாயின் சாயல்.

விருந்தில் வீசும் பசியின் வாசம்.

கனவில் தொலைந்த தூக்கம்.

நனவில் கனவின் ஏக்கம்.

காமத்தின் மிச்சம் கண்ணோடு.

காலத்தின் மிச்சம் மண்ணோடு.



















திங்கள், அக்டோபர் 27, 2014

திருலோக சீதாராம்- சில நினைவுகள்


         
'எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ என்றான் பாரதி. பாரதிக்கொரு ஞானவாரிசு வந்தார். அவரோ, 'எழுத்தும், எழுதுகோலும் மட்டுமன்றி எழுதுபவனும் தெய்வம்' என்று கவிதைக்காவலனாய் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். அவர்தான் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள்.

 ஒரு ஆற்றல்மிக்க கவிஞராய் ,பத்திரிகை ஆசிரியராய், தேசிய இயக்க முன்னோடியாய், கேட்போர் மயங்கும் பேருரையாளராய், இலக்கியவாதியாய் பன்முகம் கொண்ட மேதையாய்த் திகழ்ந்தவர்  திருலோகசீதாராம். 

சீதாராம் அவர்களின் தந்தை பெயர் திருவையாறு லோகநாத சாஸ்திரி. ஊரின் பெயரான திருவையாற்றிலிருந்து "திரு'வையும்தகப்பனார் பெயரில் உள்ள "லோக'த்தையும் சேர்த்துக் கொண்டு புதுமையாய் திருலோக சீதாராம்’ என்று பெயர் கொண்டார்.


(திருலோக சீதாராம் அவர் மனைவியுடன்)
                 
தான் ஞானத் தந்தையாக வரித்துக் கொண்ட மஹாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு வருடம் தவறாமல் நீர்க்கடன் செலுத்தி வந்தவர்.

பாரதியாருக்குப் பின்னர் அவர் குடும்பத்தை கண்இமைப்போல் காத்துவந்தவர். பாரதியின் மனைவி செல்லம்மாள்பாரதியின் இறுதிநாட்களில் நோயுற்றிருந்தபோது ஒருமகனாய் உடனிருந்து உதவியவர். தன் மடியிலேயே இறுதி மூச்சைவிட்ட செல்லம்மாள் பாரதிக்காக அந்திமக்கிரியை செய்து துக்கம் மேற்கொண்டவர்.  



                         

திருலோகசீதாராம் திருச்சியில் நடத்திவந்த சிவாஜி பத்திரிகையில் பல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்கமளித்தவர்.

எழுத்தாளர் சுஜாதாவை அடையாளம் கண்டு அவரின் முதல்படைப்பை சிவாஜியில் வெளியிட்டு அவருக்கு ஒரு ராஜபாட்டை அமைத்தவர்.        

அவர் காலத்திய அத்தனை பெரிய எழுத்தாளர்களையும் மிக நெருங்கிய நண்பர்களாய்ப் பெற்றவர். திருச்சி வரும் எழுத்தாளர்கள் அத்தனைபேரும் இவரை சந்திக்காமல் திரும்ப மாட்டார்கள். இவரின் விருந்தோம்பல் மிகப் பிரசித்தம். 

பாவேந்தர் பாரதிதாசனுடனும் ,புதுமைப்பித்தனுடனும்  நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

திரு G.D.நாயுடு, எழுத்தாளர்கள் கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன், கு.பா.ரா மற்றும் பல ஜாம்பவான்கள் அவரின் பேச்சாற்றலையும் கவித்திறனையும் வியந்து அவரோடு நீண்ட நட்பு கொண்டிருந்தனர். 

‘மந்தஹாசன்’ என்றும்,’படிக்காசுப் புலவர்’ என்றும் இலக்கிய நண்பர்கள் இவரை அழைத்து வந்தனர்.

இவர் பயணங்களில் பெருவிருப்பு கொண்டவர். சுத்தானந்த பாரதியார் இவரை ‘திரிலோக சஞ்சாரி' என்று குறிப்பிடுவாராம். 

 வாலி பல சமயங்களில் எழுத்திலும் பேட்டிகளிலும் இவரைப் பற்றி நினைவு கூர்ந்தபடி இருந்தார்.

தேவசபை' எனும் குழுமத்தை ஏற்படுத்தி, இலக்கிய சர்ச்சைகளை காவிரியின் கரையில், தேர்ந்த ஆர்வலர்களுடன் நிகழ்த்தினார்.

 சீதாராம் அவர்கள் கவிதைகளை ஏற்ற இறக்கங்களுடன் கம்பீரமாக சொல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது. அபாரமான நினைவாற்றல் கொண்டவர். பல இலக்கியப் பாடல்களை அவர் குறிப்புகள் ஏதுமின்றி மடை திறந்த வெள்ளம்போல் பொழிவதை பலரும் நினைவுகூர்வார்கள்.

'ஆற்காடு தூதன்' எனும் இதழோடு இவர் இலக்கிய பயணம் தொடங்கியது.

நாற்பதுகளின் ஆரம்பத்தில் ‘கிராம ஊழியன்’ எனும் அரசியல் பத்திரிகை இலக்கிய ஏடாக மீண்டும் உயிர்பெற்றது. திருச்சிக்கு அப்பால் உள்ள துறையூரில் மறுமலர்ச்சி இலக்கிய ஏடாக வளர்ந்து வந்தது. திருலோக சீதாராம் அவர்களை ஆசிரியராயும், கு.ப.ரா. அவர்களை கௌரவ ஆசிரியராயும் கொண்டு வெளிவந்து, பல நல்ல ஆக்கங்களை வெளியிட்டது. 1944இல் கு.ப.ரா. இறந்தபோது, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனுக்கு வந்தார். அந்த ஆண்டே திருலோகசீதாராம் 'சிவாஜி ' இதழைத் தொடங்க, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனின் ஆசிரியராய் பொறுப்பேற்றார். 

சற்றொப்ப 37 ஆண்டுகாலம் அவர் சிவாஜி இதழை வெளியிட்டுவந்தார்.. ‘கவிஞர் அச்சகம்’ எனும் பதிப்பகத்தையும் நடத்தினார். அதில் அவர் எழுதிய ஆக்கங்களில் சில நூல்களாயின. ‘இலக்கியப் படகு’ எனும் நூல் அதிக கவனம் பெற்ற ஒன்று. விகடனில் அவர் எழுதிய கட்டுரைகள் ‘புதுயுகக் கவிஞர் ‘ என்ற நூலாய் வெளியிடப்பட்டது. மேலும் சில நூல்களும் வெளியாயின.

ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய 'சித்தார்த்தா'எனும் நூலை இவர்  மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் மூலநூலின் உயிர்ப்பை போலன்றி, சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பு ஜீவனுடன் விளங்கியது. பல ஆங்கிலக் கவிதைகளையும் மொழியாக்கம் செய்தார்.

கவிஞரின் 'கந்தர்வகானம்' எனும் படைப்பிற்கு, சாஹித்திய அகாதமி விருது கிடைப்பதாக  இருந்தது என்றும்,ஏனோ கடைசி நிமிடத்தில் நழுவிவிட்டது என்றும் ஒரு பேச்சுண்டு. 'கந்தர்வ கானம்' ஏற்படுத்திய தாக்கத்தில் தொழிற்சங்கவாதியும்,படைப்பாளியுமான திரு நாகலிங்கம் தன் பெயரை 'கந்தர்வன்' என மாற்றிக் கொண்டார்.

காரைக்குடி கம்பன் கழகத்திலும், இலக்கிய  மாநாடுகளிலும் கவிஞரின் காந்தக்குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. கு.ப.ரா, வல்லிக்கண்ணன்,கவிஞர் சுரதா என அவர் ஆதரவு பெற்றோரின் எண்ணிக்கை அதிகம். எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத எளிமை உடைவராகவே திகழ்ந்தார். மரபுக்கவிதையிலும் வேகமும் செறிவுமாய், புதுபாடுபொருள்களை கொண்டு நெஞ்சையள்ளும் கவிமாரி பொழிந்தார்.

கவிஞர் தேர்தலிலும் போட்டியிட்டார். வீதிவீதியாய் பாரதியின் பாடல்களை கணீரென பாடியவாறே வாக்கு சேகரித்தாராம். 

56 வயதுவரை மட்டுமே வாழ்ந்த கவிஞர் 1973 ஆம் வருடம் அவரின் ஞானத்தந்தை பாரதியினைத் தேடி இவ்வுலகை நீத்தார். நல்ல இலக்கிய படைப்புகளையும் ஒரு அன்புமயமான குடும்பத்தையும் விட்டுச் சென்றார். 
திருலோகசீதாராம்
 

 








திருலோக சீதாராம் அவர்களின் சீடரும் நெடுநாள் நண்பருமான பன்மொழி வித்தகர் TNR என்று அறியப்படும் சேக்கிழார் அடிப்பொடிதிரு டி.என்.ராமச்சந்திரன் அவர்கள் திருலோக சீதாராமின் பல சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அண்மைக்காலத்தில் வெளிவந்த மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைநூல் ஆகும். 

இது .கவிஞரின் நயமிக்க படைப்புகளான ‘கந்தர்வ கானம்’, ’உடையவர்’, ’புகழ்க்கவிகை’ குருவிக்கூடு'' போன்ற நெடுங்கவிதைகள் உட்பட 55 ஆக்கங்களை  சுவைகுன்றாமல் மொழிபெயர்த்துள்ளார். 


சேக்கிழார் அடிப்பொடி
T.N.ராமச்சந்திரன் அவர்கள் 
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தஞ்சையில் நடந்த விமரிசையான விழாவில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. ஹைதராபாதிலிருந்து இவ்விழாவுக்கென தஞ்சை சென்றிருந்தேன்.

இங்கு நான் நெஞ்சுநிமிர்த்தி சொல்லிக்கொள்ள ஒன்று உண்டு. திருலோக சீதாராம் அவர்கள் எனக்கு சொந்தக்காரர். என் தந்தைக்கு மாமன்முறை. கடலூர்,பாண்டிச்சேரி வரும் போதெல்லாம் எங்கள் இல்லத்துக்கு அவர் வருவதுண்டு. என் இளமைப்பிராய நினைவுகளில்,அவரின் சற்றே குள்ளமான உருவமும், கணீர்க்குரலும், என் பதின்மவயதின் கவிதை முயற்சிகளை அவர் ஊக்குவித்ததும் நிழலாடுகின்றன. அவர் வெற்றிலை செல்லத்தில்தான் அவர் கவித்துவம் இருப்பதாய் என் தந்தை கேலியாய் சொல்வதுண்டு.

 அவருடைய நான்கு புதல்வர்களும், மூன்று மகள்களும் குடும்பத்துடன்  இந்த விழாவுக்காய் தஞ்சை வந்திருந்தனர். குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவனாய் நின்று, ஒரு மாமேதையை இரண்டு நாட்கள் சிந்தித்திருந்தது, என் மனதிற்கு நிறைவாய் இருந்தது. நாளெல்லாம் கவிஞரின் வாழ்க்கைச் சம்பவங்களை அசைபோட்டபடி இருந்தோம்.

 திருலோக சீதாராம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சற்று விரிவாக எழுதும் முயற்சியில் இருக்கிறேன். புத்தகவெளியீட்டு விழா சமயத்தில் நண்பர் திரு ரவிசுப்ரமண்யம் கவிஞர் பற்றிய ஆவணப் படத்தையும் தொடங்கினார்.

அண்மையில் திரு ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இந்த விழா பற்றி குறிப்பிட்டிருந்தேன். தற்செயலாக முந்தையதினம் தன் நண்பர்களிடம் திருலோகசீதாராம் பற்றி பேசியதாகவும், அவர்  பாரதிக்கு நீர்க்கடன் செய்து வந்ததைப் பற்றி, மகாபாரதத்தில் விதவிதமான மகன்களைப் பற்றி வருவதன் தொடர்ச்சியாக......” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மிக மனநெகிழ்வாய் இருந்தது. காலத்தை வென்று நிற்க ஒரு கவிஞனுக்கு, தன் உயர்ந்த படைப்புகள் மட்டுமின்றி , உன்னதமான வாழ்க்கைமுறை கூட தேவை என்று எண்ணிக்கொண்டேன்.


திருலோகசீதாராம் அவர்களின் சில வாழ்க்கைக் குறிப்புகளை இந்தப் பதிவில் தந்திருக்கிறேன். கவிஞரின் வைரவரிகளை இன்னொரு பதிவில் பேசுவோம். கவிஞரைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் யாத்த கவிதை ஒன்றின் சிலவரிகளை சிந்தித்து இந்தப் பதிவினை நிறைவு செய்வோம்.

இவனுயர்ந்தான்   அவன்   தாழ்ந்தான்
என்னும்  இன   வேற்றுமை   ஓர்  அணுவும்  இல்லான்
எவன்   பொதுவுக்கு   இடர்   சூழ்ந்தான்
அவன்   தாழ்ந்தான்   அஃதில்லான்
உயர்ந்தான்  என்று
நுவல்வதிலே   திருலோகன்  அஞ்சாநெஞ்சன்
தக்க  நூற்கள்   ஆய்ந்தோன்



படங்களுக்கு நன்றி: முதல் படம்- திருமதி இந்திரா, தஞ்சை(கவிஞரின் மகள்).
ஏனைய படங்களுக்கு GOOGLEக்கு நன்றி) 




வியாழன், அக்டோபர் 23, 2014

காதல் கோட்டை






நானும் மோதிமோதித்தான் பார்க்கின்றேன்,
ஒருதலையாய் ஆர்ப்பரிப்பில்
அலையடித்து அலையடித்து
உன்னை உண்டுவிடத் துடிக்கின்றேன்.

தெறிக்கும் நீர்த்திவிலைகள் தளர்ந்து
கசிகின்றன உன் மேனிவழி.
காலம் உதிர்ததுவிட்ட கல்லிடுக்குகளினூடே
துப்புரவாய் நீரையெல்லாம் துப்பிவிடுகிறாய்

நிராகரிப்பின் வன்மத்தில்
ஓங்கிஓங்கித் தாக்குகின்றேன்.
சற்றும் அசைந்து கொடுப்பதில்லை நீ.

பின்வாங்கித் தளர்கிறேன் கண்ணீர்நுரைக்க.
காலம்காலமாய் கண்ணீர் சிந்தி,
உப்பாய்க் கரிக்கின்றேன்.

எனக்கு வேறுவழியில்லை.
உனக்கும் கூடத்தான்.

என்றோ ஒருநாள் உனை உதிர்த்துவிடுவேன்,
கல்லுகல்லாய்....

வாரி உருட்டி யுன்னை
பொத்தி வைப்பேன்
என் கர்ப்பத்துள்...




வெள்ளி, அக்டோபர் 17, 2014

சட்டைக் கவிதைகள்

மஞ்சள்

நேர்காணலுக்காய் உள்ளே அழைக்கப்பட
ஐந்துநிமிடம் இருந்த போதே
அதைப் பார்த்தேன்.
வெள்ளைசட்டையின் மூன்றாம்பட்டன் அருகே
உளுந்து அளவுக்கு ஓர் மஞ்சள்கறை.
கொண்டைக்கடலை அளவுகூட இருக்கலாம்.

காலை இட்லிசாம்பாரின் சிந்தலாய் இருக்கக்கூடும்.
அதை சாந்தி ஊற்றியபோது சிந்தியிருந்தால்
அப்போதே அவளை கத்தியாவது இருக்கலாம்.

அந்த மஞ்சள்பொட்டை விரலால் மூடிக்கொண்டு
அறைக்குள் நுழைந்தேன்.

அரக்குமஞ்சளில் புடவையணிந்த ஒரு அம்மாளும்,
சந்தணகுங்குமதாரியாய் ஒரு கண்ணாடிக்காரரும்,
மஞ்சள்பல் தெரிய அமரச்சொன்ன அதிகாரியும்
கண்களால் எனைக் கவ்வினார்கள்.

கேட்கப்பட்ட பத்து மஞ்சள்கேள்விகளில்
ஒன்பது மஞ்சள்பதில்கள் சரியானவை.
வாழ்த்துக்கள் என்று சொன்னபின்னரே
கறையை மறைத்த விரல்களை எடுத்தேன்.
கறை நல்லது.

வாழ்த்து சொன்ன சாந்தியிடம் கறையைக் காட்டினேன்.
காலையில் கேட்டைமூடி நான் சென்றபோதே
அதை அவள் பார்த்ததாய்ச் சொன்னாள்.


அளவுகள் 

நாற்பதென்றால் நாற்பது தான்.
முப்பத்தெட்டும் கூடாது,
நாற்பத்திரண்டும் உதவாது.

எல் எக்ஸெல் டபுளெக்ஸெல் எல்லாம்
 வேலைக்காகாது.
ஸ்லிம்பிட்,ஸ்டிச்லெஸ் சங்கதி
நமக்கும் புரியாது.

கௌஸ்பாய் தையல்கடையை
மூடிய பின்னே,
முகம் தெரியாதவன் தைத்ததை
முனகாமல் போட்டுக்கொள்கிறேன்,
காலர்நுனியில் குங்குமம் தீற்றி.

இல்லாத மாடல்

'என்னமாதிரி தைக்க'என்றான்.

'ஆனந்த ஜோதி எம்.ஜி.ஆர் போட்டமாதிரி,
டீசர்ட்டாட்டம் ;ஆனா சட்டைத்துணியிலே'என்றேன்.
இல்லையென்றே தலையசைப்பில் மிரண்டு சொன்னான்.

'சிவாஜி போட்ட சிலுக்கு சட்டை போல'என்றேன்.
'ஆவாது ஓல்டு பேஷன் சாரே' என்றான்.

அப்போ காமராஜர் மாடல் வேண்டுமென்றேன்.
முக்கால்கை சட்டை இப்போ முடியாதென்றான்.

'மோடி மாடல்சட்டை தான் தையேன்' என்றேன்.
அது சட்டையே இல்லையென்று அனுப்பிவிட்டான்.


புதுசு

சீ... என்ன இது?
மனுஷனை இப்படியா இறுக்குவது?
இனிமேலும்
எனக்குத் தாங்காது.
புதுசு தான்!
அதற்காக இப்படியா?

பொத்தான்களை ஒவ்வொன்றாக 
கழற்றினேன்

கலைந்த படுக்கையில்
படர்ந்தது
நான் எறிந்த இறுக்கமான புதுச்சட்டை.



பாம்புச் சட்டை

சட்டென்று கனவில் வந்தது
கிராமத்துவீட்டு வேலியில் தொங்கிய
பாம்புச்சட்டை.
இவ்வளவு வருடங்களுக்குப்பிறகும்
அன்று பார்த்தபடியே.

பாட்டனும் ராசய்யாவும் கோல்கொண்டு
எங்கும் துழாவியதையும்,
ஆடுதீண்டாப்பாளை செடிகளை
வேலியோரம் அம்மா நட்டதையும்,
'நல்லது' வந்திருந்தால் அப்பளம் சுடும் வாடைவரும்
என்று அப்பா சொன்னதையும்,
சுப்ரமண்யபுஜங்கம் படித்தபடி
பாட்டி இருந்ததையும்,
சன்னல் வழியே பார்த்தபடி பயந்ததையும்
நான் மறந்துவிட்டேன் என்றுதான் நினைத்திருந்தேன்.

ஃபப்பிள்பேக் பாலிதீன் கிழிசல்போல
கனவில் வந்த பாம்புச்சட்டை
இன்னமும்
ஆடிக்கொண்டுதான் இருக்கிறது.