புதன், செப்டம்பர் 07, 2011

பொன்வீதி

கொடியில் உணர்த்தியிருந்த தாவணியும் பாவாடை சட்டையும் இன்னமும் முழுதாய்க் காயவில்லைமணி மூணாகி விட்டது. நாலுமணிக்கு  சிவா வந்துவிடுவான்

கிரைண்டரின் பெல்ட்டையெல்லாம் இழுத்துவிட்டு, அவன் வருவதற்குள், காலையிலிருந்து காத்திருக்கும் இரண்டு பாத்திரம் அரிசி, உளுந்து ஊறலை அரைத்த பின்தான் முகம் கழுவிக்கொள்ள வேண்டும். ஜானுவுக்கு பரபரப்பாய்  இருந்தது.

ஒரு மில்குமாஸ்தாவுக்கு மகளாகப்பிறந்து வளர்ந்த இந்த பதினைந்து வயதிற்குள் ஜானுவுக்கு அசாத்திய நிதானமும் ஒரு முதிர்ச்சியும் வந்திருந்தது. அவளுக்குப்பின் மூன்று தங்கைகள், ஒரு தம்பி வேறு. கடந்த மூன்று வருடங்களாய் பள்ளி விடுமுறை நாட்களில் மேட்டூரிலிருந்து சேலம் அத்தைவீட்டுக்கு கூடமாட மாவு அரைக்க  ஒத்தாசையாக வந்து கொண்டிருக்கிறாள். இல்லையா பின்னே? தட்டினாமுட்டினா அப்பாவுக்கு கைமாத்துத் தரும் அத்தைக்கு இந்த பிரதியுபகாரமாவது பண்ணவேணும் இல்லையா?

ஜானு... ஜானும்மா...” பின்கட்டிலிருந்து அத்தை கூப்பிட்டாள். தொண்டைக்கட்டின ஆம்பிளைக்குரல் அத்தைக்கு..

முதலியார் வீட்டு மாவை அரைச்சுடேன் கொழந்தே

சரித்தே... டீ போட்டுட்டு அரைக்கிறேனே?”

அதுவும் சரிதான்.. மகராசியா இரு.”

ஸ்டவ்வில் தேநீருக்காய் நீரைக் கொதிக்கவிட்டாள்.
 ‘சளக்புளக் என நீரும் கொதிக்கத் துவங்கியது. குமிழிகளாய்ப் பொங்கிப்பொங்கி பாத்திரத்தின் ஓரம்தொட்டு உடைந்தவாறு இருந்தது. அதில் டீத்தூள் சேர்ந்த எதிர்பாராமையில் சற்று அடங்கி, பின் உத்வேகத்துடன் அத்தூளை பாத்திரத்திலிருந்து வெளியேற்ற  யத்தனித்துக்கொண்டிருந்தது. கொதிக்கும் நீரின் ஆர்ப்பாட்டத்தை பார்த்தபடி கிடுக்கியை எடுத்துக் கொண்டாள். இந்தத் தண்ணீர் லேசில் எதையும் தன்னுடன் சேர்க்காதத் தொட்டாற்சிணுங்கி... அம்மா மாதிரி..  தீயைக் குறைக்காவிட்டால் அனர்த்தம்தான். ஜானுவுக்கு அவள் அம்மாவின் நினைவு வந்தது.

அப்பா காலையில் எதற்கோ போட்டசத்தத்துக்கு கறுவிக் கறுவி, இரவுச் சாப்பாட்டைத் தட்டில் போட்டுவிட்டு பிலுபிலுவென பிடித்துக் கொள்வாள். எதுவும் அவளுள்ளே தங்காதுகொதிக்கும் நீர் டீத்தூளை வெளியில் தள்ளுவது மாதிரி... ஒருவார்த்தை அவளுக்கு யாரும்  யோசனையாய் சொன்னால்கூட தாங்கமாட்டாள்.திராவகம் கொட்டும் ஆங்காரி.. 

மேட்டூரிலிருந்து இந்த சேலம் அத்தை வீட்டுக்கு குதித்துக் கொண்டு ஜானு வருவதற்கு, அம்மாவின் சிடுசிடுப்பை இரண்டுமாதம் பார்க்கவேண்டாம் என்பதும் ஒரு காரணம்..

டீயை ஒரு தம்ளரில் எடுத்துக் கொண்டு பின்கட்டுக்குப் போனாள். அதை ருசித்த அத்தையின் முகம் மலர்ந்தது..

எவன் குடுத்து வச்சிருக்கானோ உன்னை கொத்திண்டு போக....’’

என்னை யாரும் கொத்த வேணாம் அத்தை. நான் போய் மாவறைக்கிறேன்.’’

சௌடாம்பிகே’’ என்றபடி அத்தை மீண்டும் சாய்ந்தாள். அடுத்த குரல் இனி ராத்திரி சாப்பாட்டுக்குத்தான் எழும்.. அவளும் என்ன செய்வாள்.? பாவம் ரத்தக் கொதிப்பாமே?

ஜானு வேகவேகமாய் முகம் அலம்பினாள். கொடியில் இருந்து துணிகளை எடுத்து உடுத்திக் கொண்டாள். தாவணி காய்ந்திருந்தது. பாவாடை மட்டும் இடுப்பருகே இன்னமும் கொஞ்சம் ஈரம் உலராமல் இருந்தது. ரோஸ்கலரில் பெரிய  கருநீலபூக்கள் சிதறியிருந்த சீட்டிப் பாவாடை. இந்த வருடம் தீபாவளிக்கு அத்தை உபயம். பளிச்சென இருப்பது இது ஒண்ணுதானே? ரெமி பவுடர் பூசி சாந்தைத் திலகமாய்  இட்டுக் கொண்டாள். இன்றைக்குப் எல்லாம் புதுசாய்த்தான் இருக்கிறது.

முதலியார் வீட்டு மாவு அரைத்தாகிவிட்டது. வாசலுக்கும் உள்ளுக்குமாய் தவித்தபடி நடந்தாள்.

போன தசரா விடுமுறைக்கு வந்தபோதுதான் சிவராமன் பரிச்சயம்.
நேரே கண்ணைப்பார்த்து பேசும்பேச்சும், அதிராத குரலும் அவனுக்குகண் காது மூக்கு எல்லாமுமாகவா ஒருத்தனுக்கு சிரிக்கும்.? அவன் ரமணி டீச்சரோட தம்பி.. கடலூரில் படிக்கிறான். ரமணி டீச்சரை இங்கே கட்டிக் கொடுத்திருக்கிறது

மாவரைக்கும் கிரைண்டர் வைப்பது ஒரு நல்ல ஜீவனோபாயமாக துவங்கிய காலம். நடுத்தர வர்க்க வீடுகளில் சொந்த கிரைண்டர் இன்னமும் அத்தியாவசியமில்லாத வஸ்துவாய்த் தானிருந்ததுஒரு லிட்டர் அரிசி உளுந்துக்கு  ஐம்பது பைசாமாவாட்டும் வேலை மிச்சம் என்று மாவு மாமியிடம்  அரைக்க கொடுத்து விடுவது தான். ஜானுவின் அத்தை இந்த கிரைண்டர் வைத்த சில நாட்களிலேயேமாவுமாமியாக மாறிப்போனாள்.

சிவா வந்து விட்டான். கத்தி வீசினாற்போல் சரக் என்று வேகமாய் வந்த சைக்கிள், வீட்டுவாசல் முன் பிரேக் அடித்து நின்றது. வெயிலில் அவன் முகம் தாமிரவர்ணத்தில் பளபளத்தது.

சைக்கிள் நின்ற வேகத்தில்மூடிபோட்ட எவர்சில்வர் பாத்திரத்திலிருந்து வெளியே தண்ணீர் வழிந்தது.

வா சிவா! காலைலேருந்து உன்னைத்தான் எதிர்பார்த்து கிட்டிருக்கேன்.’’

நாலு மணிக்கு மேலதான் மாவுக்கு அனுப்புவேன்னு மாமிக்கிட்ட நேத்து தியேட்டர்ல அக்கா சொன்னாளே?’’ இது சிவாவின் பழைய குரல் இல்லை
ஏதோ பதில் சொல்ல வேண்டுமே என்று பேசுவதாக ஜானுவுக்கு தோன்றியது

சொன்னா தான்.. .பரிட்சையெல்லாம் எப்படி எழுதியிருக்கேநேத்து சினிமா புடிச்சுதா நோக்கு?’’

இல்லை...அந்தகாதலின் பொன் வீதியில் பாட்டு மட்டும் ரொம்ப புடிச்சது’’

நேக்கும் தான். அது சரி.. பரிட்சை என்னாச்சு?’’

நல்லாவே எழுதியிருக்கேன். மாமி இல்லையா?.’’

படுத்துண்டிருக்கா.. மாமிக்கிட்டத்தான் பேசுவியா? நானெல்லாம் ஆளாய்த் தெரியலையா?’’

கொஞ்ச நேரம் ஓடும் கிரைண்டரையே பார்த்துக் கொண்டிருந்தான். கரும்பச்சையில் அரைக்கை சட்டை.. அதன் இரு கைகளையும் ஒரு சுற்று மடித்துவேறு விட்டிருந்தான். போனதரம் பார்த்ததிற்கு உதட்டு மேல் மீசை அரும்பு விட்டிருந்தது.. பளிச்சென்று துடைத்துவைத்த  கண்ணாடிபோல் இருந்தான்ஓடும் கிரைண்டரின் தடுப்புப் பலகையில் முட்டிமோதி குழைந்து தவிக்கும் மாவின் சலனத்தோடு அவன் கண்களும் சலனப்பட்டவாறு இருந்தது.

என்ன... பேச மாட்டேங்கறே? ஏதும் கோபமா?’’

போனவாட்டி லீவுக்கு நான் வந்துட்டு போனப்புறம் அக்காகிட்டே, எங்க மாமாகிட்டேயெல்லாம் என்னைப் பத்தி எதுக்கு விசாரிச்சிக்கிட்டே இருந்தே?’’

நீ சொல்லிக்காம போயிட்டியேன்னு... ஏதும் பிரச்சினையா?’’

பாட்டி திவசத்துக்கு வந்த அக்கா கேட்டாளே? என்னடா அந்தப் பொண்ணு உன்னைப்பத்தி துருவித்துருவி விசாரிக்கிறான்னு அப்பாவை வச்சுக்கிட்டு கேட்டா தெரியுமா?’’

சாரி.. ஏதோ ஆவல்.. இனிமே கேக்கல்ல சிவா!’’ ஸ்ருதியிறங்கிய குரலின் தழுதழுப்பை  அவன் கவனித்தாற்போல் தெரியவில்லை. இவ்வளவு நாள் காத்திருந்து இவனை நேற்று சினிமா தியேட்டரில் அவன் அக்கா, மாமாவுடன் பார்த்தபோது பொங்கி பரவசப்பட்ட மனசு புஸ்ஸென்று அடங்கிப்போனது. ஆமாம், நேற்று பார்த்த ரெண்டு நிமிஷத்தில் அவன் என்னை நேராக பார்க்கவில்லை என்று இப்போதுதான் அவளுக்கு உறைத்தது. இதுதானா அவனுடைய கோபத்துக்கு காரணம்?...

அதை விடு.. முட்டாள் மாதிரி என் ஸ்கூல் விலாசத்துக்கே லெட்டர் வேற போட்டிருக்கே?’’

சிவாவின் குரலில் படபடத்து  வினோதமாய்  ஒலித்தது.

நீ சொல்லிக்காம போனே. உன் அக்கா கிட்டே விசாரிச்சப்போ குர்ருன்னு பார்த்துட்டு போயிட்டா.. உன் பள்ளிக்கூடம் திறக்கிற வரையில் காத்திருந்து லெட்டர் போட்டேன். நான் தப்பா ஒண்ணும் எழுதலையே’’

லெட்டர் எழுதறதே தப்பு. அதை தப்பா வேற எழுதுவியா?’’

......’’

தமிழ்க்கிளாஸ் பாதி நடந்துகிட்டிருக்குறப்போ ஜோசப் சார் வந்து அதைக் குடுத்தார். யார்ரா அது ஸ்கூலுக்கெல்லாம் உனக்கு லெட்டர் போடறதுன்னு கொடைஞ்சுட்டார் இன்லாண்டு லெட்டர் பின்பக்கம்ஜான்... அப்பிடின்னு போட்டிருந்தயோ பொழச்சேனோ. என் சினேகிதன்னு சொல்லி தப்பிச்சேன். இனிமே வீட்டு அட்ரசுக்கு அந்த பரதேசியை எழுதச் சொல்லுன்னு போய்ட்டார்.’’

அந்த பரதேசிக்கு நீ ஒரு பதில் போட்டிருக்கலாமில்லையா?’’

நீ என்னை என்னன்னு நினச்சுக்கிட்டிருக்கே? நானொன்னும் அந்த மாதிரி பையனில்லே’’

சரி.. நான்தான் அந்த மாதிரி பொண்ணா இருந்துட்டு போறேன். இன்னும் ஐஞ்சு நிமிஷம் இருந்தேள்ன்னா இங்க மாவு தயாராயிடும்.’’

ஜானு கூடம் தாண்டி விடுவிடுவேன உள்ளே போனாள். சிவாவுக்கு சட்டென்று பாவமாய் இருந்தது.. கொஞ்சம் அதிகமாய் கடுமைக்காட்டி விட்டோமோ? போன தடவை வந்தபோது இரண்டுநாளைக்கொருமுறை பாத்திரத்தைத் தூக்கிக்கொண்டு வருவதும் அவளோடு பேசுவதும் பிடித்துத் தானே இருந்தது.? அவன் அம்மாவிற்கு மாவாட்டிக் கொடுப்பதிலிருந்து சினிமா, கதைகள், நண்பர்கள் என்று எல்லாவற்றையும் அவளுக்கு சொன்னதும், அவளும் அவளின் கோபக்கார அம்மா, , ஊருக்கு வந்த மகாபெரியவா, அவள் தீட்டும் ஓவியங்கள் என்று என்னென்னவோ பகிர்ந்து கொண்டாளே..  இவளைப் பற்றி அம்மாவிடமும், நண்பர்களிடமும் கூட சொன்னானே... 

அக்காவிடம் அவள் விசாரித்ததும், கடிதம் போட்டதும்தான் தப்பாகி விடுமா?
உள்ளேபோனவள் வெளியே வரவில்லை. சிவாவுக்கு தவிப்பாக இருந்தது. முதலில் அவளை சமாதானப் படுத்தவேண்டும் என்ற எண்ணம் பிடரியை உந்த, சட்டென்று வீட்டினுள் நுழைந்தான், “ஜானு’’ என்று சன்னமாய்க் கூப்பிட்டபடி.

வாடிக்கைக்காராளெல்லாம் அந்த அங்கணதோடேயே நின்னுக்கலாம். ஆத்துக்குள்ள வரவேண்டாம்’’ என்றபடி ஜானு வெளியில் வந்தாள்கண்களும் மூக்குநுனியும் சிவந்திருந்தது. அழுதிருக்கவேண்டும்.

சாரி! நானொன்னும் உன் மனசைப் புண்படுத்தணும்னு  கேக்கல்லை.
 எதுக்கு வீணா பிறத்தியாருக்கு தப்பா அபிப்ராயம் வர்றாப் போலன்னு......’’

விடுங்கோ சிவா. காணாத சிநேகிதத்தைக் கண்டெடுத்தேனா?!. தலைகால் புரியலை நேக்கு. சாரி!’’

புரிஞ்சிக்கோ ஜானு. உன் சிநேகிதத்தை யாரு வேண்டாமின்னா?. உன்னைப் பத்தி என் ப்ரெண்ட்ஸ் கிட்டே, எங்கம்மா கிட்டகூட சொல்லியிருக்கேன் தெரியுமா?  கோச்சுக்காத ப்ளீஸ்.’’

 “போறும்.. நான்தான் றெக்கை இல்லாம பறக்கப் பார்க்கிறேன். விடுங்கோ. உங்க மாவுகூட ரெடியாயிடுத்து. காசை எண்ணி வச்சுட்டு நடையைக் கட்டலாம்.’’

ஜானு..  நான் சொல்லவந்தது என்னன்னா கடுதாசி, ஜாரிப்புல்லாம் வேண்டாமின்னு தான்..’’

இன்னும் எத்தனை தரம் இதையே சொல்வேள்?.’’

ஜானு.. அத்தோட விடு. இன்னமும் மாயாவி, பி.டி.சாமி கதை தான் படிக்கிறாயா?. ஜெயகாந்தன், நா..பா புத்தகமாப் படி...’’ பேச்சை மாற்றிப் பார்த்தான்.

ஜானு இன்னமும் உம்மென்று தான் இருந்தாள்.

அவள் அத்தை மாவுமாமிக் குரலில்  கிரைண்டரை அலம்புவது  பற்றி மாமி பேசுவதுபோல் பேசிக் காட்டினான்.

ஜானுவுக்கு அடக்கமுடியாமல் சிரிப்பு கண்ணீரோடு கலந்து வந்தது.

ரொம்ப சாரி ஜானு. இப்போதான் நீ  பழைய ஜானுவா இருக்கே. பயந்தே போயிட்டேன் தெரியுமா?’’

என் லெட்டெரையாவது படிச்சயா இல்லையா?’’

கொஞ்சம் முன்னே என்னை வாங்கோ போங்கோன்னே?’’

எனக்கு மட்டும் கோபம் வராதா..  லெட்டரைப் படிச்சியான்னு கேட்டேன்.’’

படிச்சேன்.. படிச்சேன்...  ஒப்பிக்கணுமா?’’

வாண்டாம். அதுதான் உனக்கு நான் முதலும் கடைசியுமா எழுதினதா இருக்கட்டும். மத்தபடி இங்க வரும்போதாவது இப்போ மாதிரி பேசலாமோன்னோ?...’’

என்ன இது ஜானு.. உச்சாணிக் கொம்பிலருந்து இறங்கவே மாட்டியா?’’

ஜானூ... யாரு வாசல்ல?’’ உள்ளிருந்து மாவு மாமியின் வினாவல்.

ரமணி டீச்சர் தம்பி அத்தே.’’

மாவுத்தூக்கின் மூடியை மெதுவாய் மூடினாள். காசை வாங்கிக் கொண்டு தூக்கைக் கொடுத்தாள்... அவள் விரலில் ஒட்டியிருந்த மாவை குறும்புப்பார்வையுடன் சிவாவின் புறங்கையில் பூசினாள்.

வரட்டுமா?.’’

சரி. சட்டைக் கையை மடிச்சு விட்டுக்க வாண்டாம். ரௌடி மாதிரி இருக்கு.”

நான் ரௌடி தான்.’’

போறும். ஒரு கடுதாசிக்கே ஜூரம் வந்துடுத்து உனக்கு. ரௌடியாம் ரௌடி!’’

சிரித்துக் கொண்டே சைக்கிளில் ஏறி மிதித்தான்..

அன்றே திடீரென்று சேலம் வந்த அப்பாவுடன் அடுத்த நாளே சிவா ஊர் திரும்ப நேரிட்டது..  இந்த முறையும் ஜானுவிடம் சொல்லிக் கொள்ள இயலவில்லை. அவளை நோகடித்த அந்த மாலையின் நிகழ்வு  நினைவில் அவ்வப்போது  உறுத்தியது..

தீபாவளிக்கு வந்த அக்கா , கோயமுத்தூரிலிருந்து வீட்டுக்கு கிரைண்டர் வாங்கிவந்து விட்டதாய் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அதைக் கேட்ட சிவாவுக்கு முகம் வாடிப் போனது.

என்ன சிவா? சேலம் வந்தா இனிமே உனக்கு தினமும் இட்லி, வடை தான்.’’

அப்போ இனிமே எனக்கு மாவரைச்சுகிட்டு வர்ற வேலை சேலத்துல இல்லை?’’

என்ன சொன்னே? சேலத்துல வேலை இல்லன்னா?.. இல்லை சேலம் வர்ற வேலை இல்லைன்னா?’’

அக்கா சொன்னது அம்மாவுக்கு புரியவில்லை. சிவாவுக்கு புரிந்து கொள்ள இஷ்டமில்லை.

பள்ளியிறுதித் தேர்வுக்குப் பிறகு சேலம் போனபோது மாவுமாமி வீட்டிற்கு அக்காவுக்கு சொல்லாமல் சென்று பார்த்தான். அந்த மாமி அந்த வீட்டை விற்றுவிட்டு இரண்டு மாதங்களுக்கு முன் திருப்பத்தூரோ, திருப்பூரோ போய் விட்டாள் என்று பக்கத்து வீட்டில் அறிந்து கொண்டான். செய்வதொன்றும் தோன்றாமல்  திரும்பினான்.

வருஷங்கள் காலடியில் நழுவிக் கொண்டு ஓடுகின்றன.

காதலின் பொன் வீதியில் நானொரு பண் பாடினேன்’’ என்று எப்போதாவது ஒலிக்கும் பாடலில் கொப்பளித்துக் கிளம்பும் வேதனையும் தவிப்பையும் புறம் தள்ள சிவா யத்தனிப்பதில்லை.


69 comments:

பத்மநாபன் சொன்னது…

தென்றலாய் வருடும் ஒரு காதல் கதை.. துணிவு துணையோடு ஜானு..அக்கம்பக்க பயத்தோடு சிவா.. அடங்கிப் போன காதல்.. ஈரம் காயாத முத்தமாக..துடைக்காதா மாவாக. பொன்வீதி பாட்டு அவன் மனதில் என்றென்றும் ... கதை காதல் போல் பல ஏக்கங்களை நினைவு படுத்து (படுத்து)கிறது ஜீ....

Rathnavel சொன்னது…

நல்ல கதை.
வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். சொன்னது…

பொன்வீதியில் பண்பாடி நொடியில் மனதை வருடிப் போகும் நிகழ்வுகள். இதைக் காதலில் சேர்ப்பதா, கவர்ச்சியில் சேர்ப்பதா, சிறு சலனத்தில் சேர்ப்பதா...முதல் காதல் பெரும்பாலும் முறிந்த காதல்தானோ ...நிகழ்வுகளில் இருக்கும் குறும்புகளும், கோபதாப ஊடல்களும் மனதில் நினைவுகளை அசைத்துப் பார்த்தன.

கோவை2தில்லி சொன்னது…

வித்தியாசமான சூழலில் துளிர்த்த ஒரு மென்மையான காதல் கதை.

”ரோஸ்கலரில் பெரிய கருநீலபூக்கள் சிதறியிருந்த சீட்டிப் பாவாடை.”

சீட்டிப் பாவாடையும் திலகமாய் இட்டுக் கொண்ட சாந்தும் சிறு வயது நினைவுகளைத் தூண்டியது.

தக்குடு சொன்னது…

எந்த விதமான ஒரு கிலேசமோ ஆபாசமோ இல்லாம எவ்ளோ அழகா கொண்டு போயிருக்கேள் கதையை.மறக்க முடியாத ஜானுக்கள் எல்லார் நினைவிலும்...... நல்ல விஷயத்தை படிக்க அழைச்சதுக்கு ரொம்ப சந்தோஷம் ஜி!! :))

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான மென்மையான உண்மையான காதலொன்று துளிரக்கண்டேன்.

// அவள் விரலில் ஒட்டியிருந்த மாவை குறும்புப்பார்வையுடன் சிவாவின் புறங்கையில் பூசினாள்.//

அடடா! சிவனேனு கதையில் வரும் சிவா போன்று இருந்த என்னை, எங்கேயோ கொண்டு போகிறதே, இந்த ஜானுவின் செயல்.

முடிவு தெரியாத இதுபோன்ற அனுபவங்களே மிகவும் ருசியானவை.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். நன்றிகள். vgk

ரிஷபன் சொன்னது…

விடுங்கோ சிவா. காணாத ஸ்நேகிதத்தைக் கண்டெடுத்தேனா?!. தலைகால் புரியலை நேக்கு. சாரி!

அந்த பரதேசிக்கு நீ ஒரு பதில் போட்டிருக்கலாமில்லையா

டேயப்பா.. மோகன் ஜி.. கையக் கொடுங்க..

காதல் நிறைவேறாமல் போகும்போது ஒரு நல்ல கதை கிடைத்துவிடுகிறது..

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்! இந்தக் கன்றுக்குட்டிக் காதல் நெஞ்சிருக்கும் வரை நினைவிருக்கும் ஒரு வேதனை.அதற்கு அந்த ஈர்ப்பைத் தவிர வேறு விதிகள் கிடையாது.

அவனையோ,அவளையோ எப்படியாவது தேடி அடைதல் போன்ற முயற்சிகளுக்கு வசதியோ வாய்ப்போ பெரும்பாலும் அமைவதில்லை.

அதுவும் இந்தக் கதை சொல்லபடும் காலம் எழுபதுகளின் தொடக்கம். (அந்தப் படம் "பூக்காரி ")இன்றைய தொடர்பு சாதனங்கள் இல்லாத காலம்.
இன்றைய பதினாறு வயது மாணவனுக்கு இந்தக் கதை உணர்த்துவது எதுவும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. சரி தானே?

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்! அழகான பின்னூட்டத்திற்கு நன்றி. அந்த ஸ்னேகம் காதல் தான் என்று உணர்வதற்கு முன்பே பெரும்பாலும் கலைந்து போய் விடுகிறதாய் எனக்குப் படுகிறது.

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆதி! பாவாடை தாவணி ஒரு அழகு தான்..

மோகன்ஜி சொன்னது…

வாங்க தக்குடு.
/மறக்க முடியாத ஜானுக்கள் எல்லார் நினைவிலும்.....//

ஹூம்... ஆமோதிக்கிறேன்..

மோகன்ஜி சொன்னது…

வைகோ சார்! உங்கள் அழகான கருத்துக்கு நன்றி! அந்த சின்ன தொடல்.. ஒரு பார்வை.. பலநேரம் கல்லறை வரை தொடரும்...

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்!
//காதல் நிறைவேறாமல் போகும்போது ஒரு நல்ல கதை கிடைத்துவிடுகிறது.//

இதே கருத்தை, கதைக்கு பதிலாய் கவிதை என்று வைத்து நானும் ஒருவருக்கு சொன்னேன் ஏதோவொரு கவிதை பற்றிய உரையாடலில்.

அவர் அழகாய் ஒரு பதிலைச் சொன்னார்:
காதல் நிறைவேறாத போது ஒரு நல்ல கவிதை கிடைத்துவிடுகிறது. ஆனால் கூடவே ஒரு மனைவியுமல்லவா கிடைக்கிறாள்?!"

சொன்னவர்: திரு தென்கச்சி ஸ்வாமினாதன் அவர்கள்.
அவர் பற்றி ஒரு பதிவைப் போடத் தூண்டுகிறது உங்கள் கருத்து.

மோகன்ஜி சொன்னது…

நன்றி ரத்தினவேல் சார்!

மனோ சாமிநாதன் சொன்னது…

விடை தெரியாத விடுகதை மாதிரி, அந்த இளைமைப்பருவத்திற்கேயுரிய இலேசான சோகத்துடனும் ஆயிரம் கனவுகளுடனும் அழகான ஒரு சிறுகதை! அருமையான நடை!

பெயரில்லா சொன்னது…

முதல் காதலை மறக்க இயலாது ஜி

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

பெரும்பாலும்,அது ஒரு காதலா..ஸ்னெஹமா..என்று ஒரு தீர்மானத்திற்கு வருவதற்க்குள்..சட்டென்று முடிந்து விடுகிறது..ம்..எத்தனை ஜானுக்களோ..எத்தனை சிவாக்களோ..இருவருக்கும் நடுவே ஊடுருவும் எத்தனை சினிமா பல்லவிகளோ....
இளமையும் காதல் போல் தான் போல இருக்கிறது...சட்டென்று முடிந்து விடுகிறது...ஹூம்..இந்த வரிகள் அருமை.....
..போறுமே ரெளடியாம் ரெளடி..ஒரு கடுதாசிக்கே பயந்து சாவுறே..”
சூப்பர் வரிகள்...

மோகன்ஜி சொன்னது…

உங்கள் பாராட்டுக்கு நன்றி மனோ மேடம். இந்த வார்த்தையைத் தான் நான் தேடிக் கொண்டிருந்தேன்.
"விடை தெரியாத விடுகதை" நன்றி மேடம்

மோகன்ஜி சொன்னது…

அன்பின் சாரா !
+முதல் காதலை மறக்க இயலாது +
ஓ! இரண்டாம் காதல், மூன்றாம் காதலெல்லாம் கூட உண்டா சாரா?!

மோகன்ஜி சொன்னது…

மூவார்! நீங்கள் சொல்வது அத்தனையையும் ஒத்துக் கொள்கிறேன்,கீழ்க்கண்ட வரிகள் தவிர..
//இளமையும் காதல் போல் தான் போல இருக்கிறது...சட்டென்று முடிந்து விடுகிறது...//

உங்களுக்கு இளமையெல்லாம் முடிந்தாற்போல் தெரியவில்லையே?! எவர் கிரீனாகத்தானே இருக்கிறீர்கள்?

வெங்கட் நாகராஜ் சொன்னது…

எத்தனை இடைவெளி மோகன்ஜி! இருந்தாலும், இந்த நீண்ட இடைவெளியை மன்னிக்கும்படி செய்து விட்டாள் உங்கள் ஜானு....

என்ன ஒரு கதாபாத்திரப் படைப்பு... என் சிறு வயது நினைவுகளைத் தூண்டியது.. மாவு அரைத்துத் தருவதை நிறைய பேர் செய்து வந்தார்கள்... அப்படி ஒருவர் வீட்டில் நடந்த இதே காதல், அதனால் வந்த பிரச்சனைகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது... அந்த கதை நடந்தது விஜயவாடாவில்... நெய்வேலியில் அல்ல:) என்பதை சேர்த்து விடுகிறேன் முன் ஜாக்கிரதை முத்தண்ணாவாக...

நம்ம பக்கத்திலும் வந்தமைக்கு நன்றி. இந்த இடைவெளியில் சில பயணப் பதிவுகள் எழுதி இருக்கிறேன்... முடியும்போது படியுங்கள்....

இராஜராஜேஸ்வரி சொன்னது…

நேரே கண்ணைப் பார்த்து பேசும் பேச்சும்,அதிராத குரலும் அவனுக்கு. கண் காது மூக்கு எல்லாமுமாகவா ஒருத்தனுக்கு சிரிக்கும்.? /

அழகான வரிகள்!

மோகன்ஜி சொன்னது…

ஆந்திராவில் நெடிய பயணம் மேற்கொள்ள நேரிட்டது. எனவே தான் இடைவெளி. ஜானுவை உங்களுக்கு பிடித்தது குறித்து மகிழ்ச்சி. உங்களின் பயணப் பதிவுகளை அவசியம் பார்க்கிறேன் வெங்கட்.

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஷ்வரி மேடம்.. உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் பதிவுகள் சிலவும் நான் பார்க்கவில்லை கடந்த மாதம். பார்த்துவிடுவேன்.

அமைதிச்சாரல் சொன்னது…

நல்லதொரு காதல் கதை.

அப்போதைக்கு பிரிந்தாலும் மறுபடியும் நினைவு படுத்தவென்று ஏதேனும் சொல்லோ செயலோ தன்னுடைய தடங்களை விட்டுச் செல்லத்தான் செய்யும். இந்தக் கதையின் ''பொன்வீதி மாதிரி :-)

மோகன்ஜி சொன்னது…

ஆம்.அமைதிச் சாரல் ! வழியெங்கும் தடங்கள் நினைவுறுத்தியவாறே தான் இருக்கும். சிலருக்கு அந்த நினைவூட்டல்கள் ரணத்தை மீண்டும் கீறும், சிலருக்கு சுயபச்சாதாபத்தைக் கிளர்த்தும்,சிலருக்கு வெறுப்பையும், சிலருக்கு வெறுமையையும் கூட்டும்,
வெகு சிலரே யாருக்கோ நடந்த சம்பவமாய் அதை நினைவாற்றின் அக்கரையில் நிறுத்த இயலும்..

bandhu சொன்னது…

அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு கதா பாத்திரத்தில் ஆரம்பித்து சரேல் என்று இன்னொரு கதா பாத்திரத்தில் முடித்த உத்தி மிக அருமை!

சாய் சொன்னது…

இலஞ்சியில் என் அண்ணனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது டிஎம்.எஸ்ஸின் இந்த பாடலின் இரண்டாவது முறை அவர் பண் என்பதை பள்ன் என்று சொல்லும் யுத்தியை பெற்றி பேசிக்கொண்டு இருந்தோம்.

அதைப்போல் அவர் பல பாடல்களில் இரண்டாவது முறை பாடும்போது அந்த வார்த்தையிலேயே ஒரு ஜில்பான்சா சேர்ப்பார்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி பந்து! கூர்ந்து படித்திருக்கிறீர்கள்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாய்!
/வார்த்தையிலேயே ஒரு ஜில்பான்சா /

டி.எம்.எஸ் ஒரு ஜீனியஸ்.அந்த உச்சரிப்பின் அழகல்லவா ஆயிரமாயிரம் பாடல்களை தூக்கி நிறுத்தியது?
ஆண்மை மிகுந்த அந்தக் குரலில் காதல் கெஞ்சலையும் கொஞ்சலையும் கூட இப்படி சின்ன உச்சரிப்பு வேறுபாடுகளில் தான் வெளிப்படுத்தும் கம்பீரம்.
இதைத் தட்டுச்சும் நேரம்'முத்துக்களோ கண்கள்' கேட்டுக்கொண்டிருக்கிறேன். 'முத்துக்களோ'எனும்போது முடியும் ஓகாரத்தில் ஒரு சலனத்தை அலையடிக்க வைத்து உயிரைக் குடிக்கும் கிராதகன் அவர்.
என்னைக் கிளப்பி விடாதீங்க. நாளெல்லாம் அவ்ர்பத்தி பேசிக்கிட்டேயில்லே இருப்பேன் சாய்!.

நிலாமகள் சொன்னது…

மோக‌ன் ஜி... மோக‌ன் ஜி... ப‌டிப்ப‌வ‌ருள் எல்லாம் ஜானுவையும் சிவாவையும் கிள‌ர்ந்தெழ‌ச் செய்து விட்டீர்க‌ளே... என்ன‌வொரு விவ‌ர‌ணைக‌ள்....! பாத்திர‌ப்ப‌டைப்பின் செழுமை ம‌ன‌சுள் சிம்மாச‌ன‌மிட்டு விடுகிற‌து. க‌தையும் பின்னூட்ட‌ங்க‌ளும் ஒன்றையொன்று விஞ்ச‌த் துடிக்கும் த‌த்ரூப‌ம்! 'காத‌லின் பொன்வீதியில்' ம‌ன‌துள் இழையோட‌, முடிப்பில் 'முத்துக்க‌ளோ க‌ண்க‌ள்' முணுமுணுக்க‌ச் செய்து விட்டீர்க‌ள்! இவ்வ‌ள‌வு ர‌ச‌னைக்கார‌ரா நீங்க‌ள்! பெருமித‌மாயிருக்கிற‌து த‌ங்க‌ள் ந‌ட்பில். ம‌கிழ்வும் ந‌ன்றியும்.

//ஸ்‌டவ்வில் தேநீருக்காய் நீரைக் கொதிக்கவிட்டாள். ‘சளக்புளக்’ என நீர் கொதிக்கத் துவங்கியது. குமிழிகளாய்ப் பொங்கிபொங்கி பாத்திரத்தின் ஓரம் தொட்டு உடைந்தவாறு இருந்தது. அதில் டீத்தூள் சேர்ந்த எதிர்பாராமையில் சற்று அடங்கி, பின் உத்வேகத்துடன் அத்தூளை பாத்திரத்திலிருந்து வெளியேற்ற யத்தனித்துக்கொண்டிருந்தது. கொதிக்கும் நீரின் ஆர்ப்பாட்டத்தை பார்த்தபடி கிடுக்கியை எடுத்துக் கொண்டாள். இந்த தண்ணீர் லேசில் எதையும் தன்னுடன் சேர்க்காத தொட்டாற்சிணுங்கி ...அம்மா மாதிரி.. தீயை குறைக்காவிட்டால் அனர்த்தம்தான்.


அப்பா காலையில் எதற்கோ போட்ட சத்தத்துக்கு கறுவிகறுவி, இரவு சாப்பாட்டைத் தட்டில் போட்டுவிட்டு பிலுபிலுவென பிடித்துக் கொள்வாள். எதுவும் அவளுள்ளே தங்காது. கொதிக்கும் நீர் டீத்தூளை வெளியில் தள்ளுவதுமாதிரி.... ஒருவார்த்தை அவளுக்கு யாரும் யோசனையாய் சொன்னால் கூட தாங்கமாட்டாள். திராவகம் கொட்டும் ஆங்காரி.. மேட்டூரிலிருந்து இந்த சேலம் அத்தை வீட்டுக்கு குதித்துக் கொண்டு ஜானு வருவதற்கு அம்மாவின் சிடுசிடுப்பை இரண்டு மாதம் பார்க்க வேண்டாம் என்பதும் ஒரு காரணம்..//

க‌தையின் வ‌ரிக‌ளும் வார்த்தைக‌ளும் போட்டிபோட்டு முன்நிற்க‌ எதை எடுத்து எழுதுவ‌தென்று திக்குமுக்காடுகிறேன்.

//தாவணி காய்ந்திருந்தது. பாவாடை மட்டும் இடுப்பருகே இன்னமும் கொஞ்சம் ஈரம் உலராமல் இருந்தது. //

இத்த‌னை நுட்ப‌மான‌ எழுத்து வ‌ண்ண‌தாச‌னைய‌ல்ல‌வா நினைவூட்டுகிற‌து! வாழ்க‌, வாழ்க‌!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

அன்பின் நிலாமகள்! அழகான பின்னூட்டம். உங்கள் திக்குமுக்காடல் உங்கள் பண்பட்ட ரசனையினாலேயே. வண்ணதாசனுடன் ஒப்பிட்டதற்கு நன்றி சொல்லவா? இல்லை அவர் பேரில் உங்களுக்கென்ன கோபம் எனக் கேட்கவா?
உங்கள் அன்பிற்கும், நட்புக்கும் நன்றி!

நிலாமகள் சொன்னது…

அவர் பேரில் உங்களுக்கென்ன கோபம் // ஹ‌ஹ‌ஹா...

த‌ங்க‌ள் த‌ன்ன‌ட‌க்க‌த்தை அழ‌காக‌ காட்டியுள்ளீர்க‌ள் ஜி. என் வாசிப்ப‌னுப‌வ‌த்தில் சொன்ன‌தேய‌ன்றி வெற்றுப் புக‌ழுரைய‌ல்ல‌.

க‌தையை, பின்னூட்ட‌ங்க‌ளை, அத‌ற்கான‌ த‌ங்க‌ள் ப‌தில்க‌ளைப் ப‌டிக்க‌வே ம‌றுப‌டியும் வ‌ந்தேன் ம‌கிழ்வோடு.

எல் கே சொன்னது…

நான் போட்ட கமென்ட் எங்க ஜி ??

காக்கா உஷ் போய்டுச்சு போல .. சரி சரி எல்லாம் சரி . கடைசிய எப்ப தாவணி பாவாடை பாத்தீங்க சென்னையில் அல்லது தமிழகத்தில் ???

meenakshi சொன்னது…

பொன் வீதி என்று தலைப்பை படித்த உடனேயே 'காதலின் பொன் வீதியில்' என்றுதான் என் மனமும் பண் பாடியது.
ஆமாம் திடீர் தீடீரென்று நீங்கள் காணாமல் போவது இவ்வளவு அற்புதமாக எழுத வரம் வாங்கவா! :) கதை மிகவும் பிரமாதம். இதுவரை மூன்று முறை படித்து விட்டேன்.
சரியாக உலராத பாவாடையின் இடுப்பின் ஈரம், அடுப்பில் டீ கொதிக்கும் போது கூடவே அவள் அம்மாவின் நினைவில் அவள் மனதில் எழுந்த கொதிப்பதையும், கோபமாக இருக்கும்போது சிவாவிடம் மரியாதையுடன் பேசுவது, கோபம் மறைந்ததும் ஒருமையில் பேசுவது,
“அந்த பரதேசிக்கு நீ ஒரு பதில் போட்டிருக்கலாமில்லையா' என்ற கிண்டல் என்று வரிக்கு வரி ரசிக்க வைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்!

காதலின் பொன் வீதியில் இந்த அழகான ராகம் பாதியிலேயே நின்று விட்டதே! கதையாக இருந்தாலும் வேதனையாகதான் இருக்கிறது.

கீதா சொன்னது…

மீனாக்ஷி சொன்னமாதிரி பொன்வீதி என்ற தலைப்பைப் பார்த்ததுமே காதலின் பொன்வீதியில் பாடல் மனமுழுவதும் நிறைந்து இனித்தது. கதை படிக்கும்போது அந்தப் பதினைந்து வயதுக்கே போனது போலொரு உணர்வு. நிகழ்வினை இயல்பாய்ச் சொல்லி நெகிழ்த்திவிட்டீர்கள். இனி அந்தப் பாடலைக் கேட்கும்போதெல்லாம் ஜானுவும் சிவாவும் என் நினைவுக்கு வந்துபோவார்கள். அருமையான கதைக்குப் பாராட்டுகள் மோகன்ஜி.

அப்பாதுரை சொன்னது…

இனிமையான வலிகள் (?) பட்டியலில் அதில் இளவயதுக் காதல் #1 அல்லது #2வாக இருக்கும் என்று நினைக்கிறேன். துணிவற்ற உணர்வுகளை உள்ளடக்கிய காலம் எல்லோருள்ளும் உண்டு என்று தோன்றுகிறது. 'என்ன ஆகியிருக்கும்?' என்ற சிந்தனையை சாகும் வரைக் கிண்டிவிடும் அனுபவங்கள்.

ஆளைக் காணோமேனு பாத்தேன். அசத்திட்டீங்க போங்க.

period details தெளித்து எழுதப்பட்ட கதைகளை மிகவும் ரசித்துப் படிப்பேன். இந்தக் கதையில் அங்கங்கே தெளித்திருக்கிறீர்கள். very nice.

ரெமி பவுடர் ரொம்ப ரசித்தேன். யார்ட்லி என்று ஒரு பவுடரும் நினைவுக்கு வருகிறது. ரெமி பவுடர் அறுபதுகளின் சின்னம் என்று நினைக்கிறேன். எழுபதுகளில் புழங்கியதா என்ன? பூக்காரி டயத்தில் பான்ட்ஸ் சிந்தால் கோகுல் என நிறைய வந்துவிட்டது. என் பள்ளிக்கூட நண்பன் ஒருவனுக்கு ரெமி என்று பெயர். கோகுல் சேந்டல் பவுடரை சேறு போல பூசிக் கொண்டு வருவான். போதாக்குறைக்கு ஒரு கர்சீபில் பவுடரைத் தெளித்து கழுத்துக் காலருக்குள் இடுக்கி வைத்திருப்பான். பி.டி டீச்சர் அவனை ரெமி என்று அழைக்க, அதுவே தொற்றிக் கொண்டு விட்டது. ரெமி என்றால் என்னவென்று டீச்சரிடம் கேட்டபோது டீச்சர்ஸ் அறையிலிருந்து ஒரு பச்சை டப்பாவை எடுத்து வந்து காட்டினார். பெண்கள் பவுடர் போட்டுக்கொள்ளும் விதங்களை (க்க்க்க்க்க்க்ம்ம்ம்ம்ம்) அவர் அபிநயிக்க எல்லோரும் சிரித்தது லேசாக நினைவுக்கு வந்தது. ரெமி இப்போது என்ன செய்கிறான் என்று எண்ண வைத்தீர்கள்..:)

இன்னதென்று தேர்ந்தெடுக்க முடியாமல் கதையின் உரையாடல்கள் எல்லாமே அருமை. படிக்கும் போது பூ முகர்ந்து பார்ப்பது போல் இருந்தது. ஒரு முறையோடு நிறுத்திக் கொள்ள முடியவில்லை. ஒன்று செய்தாலும் அதை நன்று செய்கிறீர்கள் மோகன்ஜி..

அப்பாதுரை சொன்னது…

எல் கேயின் கமெந்ட் யோசிக்க வைத்தது... உண்மை தான்.. சென்னையில் மட்டுமல்ல உள்ளடங்கிய மாயவரம் கும்பகோணத்தில் கூட பா.தா காணோம்.

அப்பாதுரை சொன்னது…

ஸ்ரீராமுக்கு இப்படி நைசாக ஊசிமுனைக் கேள்விகளைக் கேட்டுவிட்டு கழண்டு கொள்வதே வழக்கமாகி விட்டது..

RVS சொன்னது…

இட்லி மாவுல இவ்ளோ இருக்கா? சத்தியமா அசத்திட்டீங்க..

இது எதாவது நாவல் மாதிரி எழுதினதோட சுருக்கிய வடிவமா?


புதுப்புது அர்த்தங்கள் படத்தில் வரும் பாட்டு அண்ணா!

எல்லோரும் மாவாட்டக் கத்துக்கிடணும்.. அதில் எப்போதும் தப்பில்லை ஒத்துக்கிடணும்

meenakshi சொன்னது…

TMS. பத்தி இவ்வளவு அழகா எழுதினதுக்காக உங்களுக்கு ஓராயிரம் ஜே போடறேன் மோகன்! :)
//அந்த உச்சரிப்பின் அழகல்லவா ஆயிரமாயிரம் பாடல்களை தூக்கி நிறுத்தியது?// மிக சரியாக சொல்லி விட்டீர்கள். 'முத்துக்களோ கண்கள்' இந்த பாடலில் 'கன்னி பெண்ணை மெல்ல' என்ற சரணம் முடிந்து மீண்டும் பல்லவியான முத்துக்களோ கண்கள் என்று TMS. பாடும்போது 'சிந்திக்கவே இல்லை' என்பதை அவர் எப்படி பாடுகிறார் என்று அடுத்தமுறை இந்த பாடலை கேட்கும்போது மறக்காமல் கவனியுங்கள். சத்தியமா சிந்திக்கவே இல்லை அப்படின்னு நிறுத்தி, நிதானமா, அழுத்தமா பாடறா மாதிரி இருக்கும். இந்த இரண்டு வார்த்தையை அவர் உச்சரிக்கும் அழகில் மனம் அப்படியே மண்டியிட்டு அவர் குரல் முன் சரணடைந்து விடும். அப்படி ஒரு அற்புதமான குரல், உச்சரிப்பு. நானும் விட்டா நாளெல்லாம் இவர் புராணம் பாடிண்டு இருப்பேன். :)

உங்கள் பதிவில் பாடல்களை ஒலிபரப்ப போகிறேன் என்றீர்களே, அது எப்பொழுதிலிருந்து?

அப்பாதுரை சொன்னது…

'கன்னிப்பெண்ணை மெல்ல'னு பாடுறாரா..? ஒரு வேளை ராடசசக் காதல் பாட்டாக இருக்குமோ?
(ஹிஹி..)

மோகன்ஜி சொன்னது…

I am hospitalised for a surgery. I WILL REPLY all of you after 3 days. mohanji

meenakshi சொன்னது…

விரைவில் உடல் நலமாக வாழ்த்துக்கள்!

பத்மநாபன் சொன்னது…

என்ன ஜீ... என்னாச்சு திடீர்னு.. விரைவில் குணமடைந்து நலம் எனும் முன்று எழுத்து முதலில் போதும்..மீதி ஒய்வுக்கு பின்னர்...

பிரார்த்தனைகள்....

அப்பாதுரை சொன்னது…

ஆஸ்பத்திரியில உக்காந்துகிட்டு ப்லாக் பாக்குறீங்களா!

ஆதிரா சொன்னது…

ரிப்ளை எல்லாம் இருக்கட்டும் ஜி. அது அப்பரம் பார்த்துக்கொள்ளலாம். முதல்ல உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள். நாங்களும் விரைவில் குணமடைய இறைவனைப் பிராத்திக்கிறோம்.

RVS சொன்னது…

சீக்கிரம் குணமடைய ப்ராத்திக்கிறேன் ஜி! :-)

ஸ்ரீராம். சொன்னது…

சர்ஜரி? எதற்கு? உடல்நலத்தை முதலில் கவனித்துக் கொள்ளுங்கள். விரைவில் பூரண நலம் பெற எங்கள் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்.

தக்குடு சொன்னது…

உடம்பை பாத்துக்கோங்கோ ஜி! குக்கர் இருந்தாதான் சாதம் வடிக்க முடியும்!! ஆஸ்பத்திரிலேந்து பதில் போடறேள்னா, பக்கத்து படுக்கைல யாராவது பதிவர் இருக்கனும் இல்லைனா டாக்டர் உங்க ரசிகரா இருக்கனும்!! :))

கோவை2தில்லி சொன்னது…

உடல்நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் சார். உங்களுக்காக எங்கள் பிரார்த்தனைகளும் தொடரும்.

கீதா சொன்னது…

உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுங்கள் மோகன்ஜி. போதுமான ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். பிறகு பார்த்துக்கொள்ளலாம் பதிவுகளை.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்ன ஆச்சு? உடல் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்..... பதிவெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்....

geetha santhanam சொன்னது…

நீங்கள் உடல் நலம் தேறி விரைவில் வரவேண்டும் என்று இறைவனைப் ப்ரார்த்திக் கொள்கிறேன்.
கதை சொல்லியவிதம் நன்றாக இருந்தது. டீ கொதிப்பது, ஜானுவின் பொய்கோவம் என்று நிறைய இடங்கள் மீண்டும் படிக்கத் தூண்டுவதாக இருந்தன.
take care of your health.

சிவகுமாரன் சொன்னது…

சில காரணங்களால் வலைப்பக்கம் வரமுடியவில்லை. இடுகை இடுவதில்லை. கட்டுத்தறி அறுத்துவந்த காளையாய் ... இன்று வந்தேன். எதையோ இழந்தது போன்ற ஏக்கம் இன்னும் அதிகமாகி விட்டது.
அருமையான மனதை தொடும் கதை.
தியேட்டர் இடைவேளையில் காதலின் பொன் வீதியில் பாடல் தான் அப்போது போடுவார்கள். பசுமையாய் பதிந்து விட்ட பாடல் .
உடல்நலம் தேறி விட்டதா அண்ணா ?

மோகன்ஜி சொன்னது…

அன்பின்நிலாமகள் ! உங்களின் பாராட்டை உவந்து ஏற்கிறேன்!

மோகன்ஜி சொன்னது…

கார்த்திக் ! பாவாடைதாவணி வழக்கொழிந்து போனது, ஸௌந்தர்யத்துக்கு ஏற்பட்ட பேரிழப்பு..

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! உங்கள் ரசனைக்கு என் நன்றி! பாதியில் முடிந்த அந்தக் காதல் ராகம், அந்த இருவரின் இறுதிவரை அவர்களுக்குள் ரீங்கரித்துக் கொண்டு தானே இருக்கும்?

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்! அழகான பின்னூட்டம் ! இந்தக் கதையை எழுதி முடித்த நான்கு நாட்களும் சிவாவும்,ஜாணுவும் என்னுள் குறுகுறுத்துக் கொண்டே இருந்தார்கள்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்!
/இனிமையான வலிகள் (?) பட்டியலில் அதில் இளவயதுக் காதல் #1 அல்லது #2வாக இருக்கும் என்று நினைக்கிறேன்/ வலிகளின் பட்டியலைவிட காதல் பட்டியல் 1,2 எனக் கூடிக்கொண்டே போனால் வலி குறையுமோ என்னவோ?

ரேமி பவுடரின் ஆதிக்கம் எழுபதுகளின் பாதிவரை இருந்த்து. சற்று காட்டமான வாசனையுடன். மற்றவற்றை விட விலை கம்மி. எங்கள் வீட்டில் எங்களுக்கெல்லாம் பாண்ட்ஸ் பெரிய டப்பா. அம்மாவுக்கும் மட்டும் ஆரஞ்சு வர்ண குட்டிக்கூரா. என் அண்ணன் தனியாக கோயா எனும் பவுடர் போட்டுக் கொள்வான். வேலைக்காரி பூதர மாவு என்பாள் பவுடரை. இந்த்ர்ம் நான் பவுடரை விடவில்லை.

பாவாடை தாவணி இப்போது இல்லை என்று நீங்கள் வருந்தலாகாது.
வேணது பாத்தோச்சோல்லியோ?>

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஆர்.வீ.எஸ்! இதை நாவலாக்கினால் மைய அனுபவத்தைக் கிளார்த்தாது.

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம் , ஆர்.வீ.எஸ், அப்பாதுரை,பத்மநாபன், ஆதிரா, ஸ்ரீராம், தக்குடு,ஆதி, கீதாமேடம்,வெங்கட், கீதாசந்தானம் மேடம், சிவா உங்கள் வாழ்த்துக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. பூரண குணமடைய இன்னமும் ஒரு வாரமாகலாம். மருத்துவமனை அனுபவத்தை இன்று ஒரு பதிவாய் இட்டிருக்கிறேன். மீண்டும் நன்றி

Matangi Mawley சொன்னது…

கதாபாத்திரங்களோட flow of thought ல எந்த ஒரு confusions உம் இல்ல. நிறையா தடவ, "இந்த character ஏன் இப்படி பண்ணினா... அப்படி பண்ணிருக்கலாமே.." ன்னுலாம் எண்ணங்கள் தோணும். அப்படி எந்த எண்ணத்துக்கும் இங்க இடமே இல்ல. எனக்கு இது ரொம்ப பிடிச்சிருந்தது.

ஒரு அழகான 80s movie பாத்தது போல இருந்தது!

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய மாதங்கி!
/ "இந்த character ஏன் இப்படி பண்ணினா... அப்படி பண்ணிருக்கலாமே.." ன்னுலாம் எண்ணங்கள் தோணும். /

ஈடுபாடு மிகுந்த உயர்ந்த வாசகத் தன்மையின் அடையாளம் நீங்கள் குறிப்பிடுவது. உங்களிடம் அது இருப்பதும்,என் கதை ஏற்கப்பட்டதும் மிக்க மகிழ்ச்சி மாதங்கி. இன்னமும் சில பதிவுகள் உங்கள் பார்வைக்காய் வானவில்லில் காத்திருக்கின்றன மாதங்கி!

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் கூறியது:

/மொகன் ஜி அவர்களே! நேற்றுதான் வந்தேன். "பொன்வீதி"படித்தேன். காதலா?நட்பா? பருவமோகமா?

இல்லை ஐயா! இதுதான் வாழ்க்கை.....எழுதியதைவிட
எழுதப்படாமல் கொட்டிய உணர்வுகள் நெஞ்சை நிறைத்தது
வாழ்த்துக்கள்...காஸ்யபன்/

மோகன்ஜி சொன்னது…

அன்பின் காஸ்யபன் சார்! உங்கள் வாழ்த்துக்கு நன்றி.மருத்துவ மனையில் படுத்துக் கொண்டு உங்களுடன் பேசியது
மனதுக்கு ஆறுதலாய் இருந்தது.

raji சொன்னது…

தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்
நேரமிருக்கும்போது பார்க்கவும்

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_20.html

பெயரில்லா சொன்னது…

நண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு