திங்கள், அக்டோபர் 27, 2014

திருலோக சீதாராம்- சில நினைவுகள்


         
'எழுத்தும் தெய்வம் எழுதுகோலும் தெய்வம்’ என்றான் பாரதி. பாரதிக்கொரு ஞானவாரிசு வந்தார். அவரோ, 'எழுத்தும், எழுதுகோலும் மட்டுமன்றி எழுதுபவனும் தெய்வம்' என்று கவிதைக்காவலனாய் ஒரு உன்னத வாழ்க்கையை வாழ்ந்து காட்டினார். அவர்தான் கவிஞர் திருலோக சீதாராம் அவர்கள்.

 ஒரு ஆற்றல்மிக்க கவிஞராய் ,பத்திரிகை ஆசிரியராய், தேசிய இயக்க முன்னோடியாய், கேட்போர் மயங்கும் பேருரையாளராய், இலக்கியவாதியாய் பன்முகம் கொண்ட மேதையாய்த் திகழ்ந்தவர்  திருலோகசீதாராம். 

சீதாராம் அவர்களின் தந்தை பெயர் திருவையாறு லோகநாத சாஸ்திரி. ஊரின் பெயரான திருவையாற்றிலிருந்து "திரு'வையும்தகப்பனார் பெயரில் உள்ள "லோக'த்தையும் சேர்த்துக் கொண்டு புதுமையாய் திருலோக சீதாராம்’ என்று பெயர் கொண்டார்.


(திருலோக சீதாராம் அவர் மனைவியுடன்)
                 
தான் ஞானத் தந்தையாக வரித்துக் கொண்ட மஹாகவி சுப்பிரமணிய பாரதியாருக்கு வருடம் தவறாமல் நீர்க்கடன் செலுத்தி வந்தவர்.

பாரதியாருக்குப் பின்னர் அவர் குடும்பத்தை கண்இமைப்போல் காத்துவந்தவர். பாரதியின் மனைவி செல்லம்மாள்பாரதியின் இறுதிநாட்களில் நோயுற்றிருந்தபோது ஒருமகனாய் உடனிருந்து உதவியவர். தன் மடியிலேயே இறுதி மூச்சைவிட்ட செல்லம்மாள் பாரதிக்காக அந்திமக்கிரியை செய்து துக்கம் மேற்கொண்டவர்.  



                         

திருலோகசீதாராம் திருச்சியில் நடத்திவந்த சிவாஜி பத்திரிகையில் பல எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு ஊக்கமளித்தவர்.

எழுத்தாளர் சுஜாதாவை அடையாளம் கண்டு அவரின் முதல்படைப்பை சிவாஜியில் வெளியிட்டு அவருக்கு ஒரு ராஜபாட்டை அமைத்தவர்.        

அவர் காலத்திய அத்தனை பெரிய எழுத்தாளர்களையும் மிக நெருங்கிய நண்பர்களாய்ப் பெற்றவர். திருச்சி வரும் எழுத்தாளர்கள் அத்தனைபேரும் இவரை சந்திக்காமல் திரும்ப மாட்டார்கள். இவரின் விருந்தோம்பல் மிகப் பிரசித்தம். 

பாவேந்தர் பாரதிதாசனுடனும் ,புதுமைப்பித்தனுடனும்  நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

திரு G.D.நாயுடு, எழுத்தாளர்கள் கரிச்சான்குஞ்சு, தி.ஜானகிராமன், கு.பா.ரா மற்றும் பல ஜாம்பவான்கள் அவரின் பேச்சாற்றலையும் கவித்திறனையும் வியந்து அவரோடு நீண்ட நட்பு கொண்டிருந்தனர். 

‘மந்தஹாசன்’ என்றும்,’படிக்காசுப் புலவர்’ என்றும் இலக்கிய நண்பர்கள் இவரை அழைத்து வந்தனர்.

இவர் பயணங்களில் பெருவிருப்பு கொண்டவர். சுத்தானந்த பாரதியார் இவரை ‘திரிலோக சஞ்சாரி' என்று குறிப்பிடுவாராம். 

 வாலி பல சமயங்களில் எழுத்திலும் பேட்டிகளிலும் இவரைப் பற்றி நினைவு கூர்ந்தபடி இருந்தார்.

தேவசபை' எனும் குழுமத்தை ஏற்படுத்தி, இலக்கிய சர்ச்சைகளை காவிரியின் கரையில், தேர்ந்த ஆர்வலர்களுடன் நிகழ்த்தினார்.

 சீதாராம் அவர்கள் கவிதைகளை ஏற்ற இறக்கங்களுடன் கம்பீரமாக சொல்லும் பாங்கு அனைவரையும் கவர்ந்தது. அபாரமான நினைவாற்றல் கொண்டவர். பல இலக்கியப் பாடல்களை அவர் குறிப்புகள் ஏதுமின்றி மடை திறந்த வெள்ளம்போல் பொழிவதை பலரும் நினைவுகூர்வார்கள்.

'ஆற்காடு தூதன்' எனும் இதழோடு இவர் இலக்கிய பயணம் தொடங்கியது.

நாற்பதுகளின் ஆரம்பத்தில் ‘கிராம ஊழியன்’ எனும் அரசியல் பத்திரிகை இலக்கிய ஏடாக மீண்டும் உயிர்பெற்றது. திருச்சிக்கு அப்பால் உள்ள துறையூரில் மறுமலர்ச்சி இலக்கிய ஏடாக வளர்ந்து வந்தது. திருலோக சீதாராம் அவர்களை ஆசிரியராயும், கு.ப.ரா. அவர்களை கௌரவ ஆசிரியராயும் கொண்டு வெளிவந்து, பல நல்ல ஆக்கங்களை வெளியிட்டது. 1944இல் கு.ப.ரா. இறந்தபோது, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனுக்கு வந்தார். அந்த ஆண்டே திருலோகசீதாராம் 'சிவாஜி ' இதழைத் தொடங்க, வல்லிக்கண்ணன் கிராம ஊழியனின் ஆசிரியராய் பொறுப்பேற்றார். 

சற்றொப்ப 37 ஆண்டுகாலம் அவர் சிவாஜி இதழை வெளியிட்டுவந்தார்.. ‘கவிஞர் அச்சகம்’ எனும் பதிப்பகத்தையும் நடத்தினார். அதில் அவர் எழுதிய ஆக்கங்களில் சில நூல்களாயின. ‘இலக்கியப் படகு’ எனும் நூல் அதிக கவனம் பெற்ற ஒன்று. விகடனில் அவர் எழுதிய கட்டுரைகள் ‘புதுயுகக் கவிஞர் ‘ என்ற நூலாய் வெளியிடப்பட்டது. மேலும் சில நூல்களும் வெளியாயின.

ஹெர்மான் ஹெஸ்ஸே எழுதிய 'சித்தார்த்தா'எனும் நூலை இவர்  மொழிபெயர்த்தார். மொழிபெயர்ப்பில் நழுவிவிடும் மூலநூலின் உயிர்ப்பை போலன்றி, சீதாராம் அவர்களின் மொழிபெயர்ப்பு ஜீவனுடன் விளங்கியது. பல ஆங்கிலக் கவிதைகளையும் மொழியாக்கம் செய்தார்.

கவிஞரின் 'கந்தர்வகானம்' எனும் படைப்பிற்கு, சாஹித்திய அகாதமி விருது கிடைப்பதாக  இருந்தது என்றும்,ஏனோ கடைசி நிமிடத்தில் நழுவிவிட்டது என்றும் ஒரு பேச்சுண்டு. 'கந்தர்வ கானம்' ஏற்படுத்திய தாக்கத்தில் தொழிற்சங்கவாதியும்,படைப்பாளியுமான திரு நாகலிங்கம் தன் பெயரை 'கந்தர்வன்' என மாற்றிக் கொண்டார்.

காரைக்குடி கம்பன் கழகத்திலும், இலக்கிய  மாநாடுகளிலும் கவிஞரின் காந்தக்குரல் ஒலித்துக் கொண்டே இருந்தது. கு.ப.ரா, வல்லிக்கண்ணன்,கவிஞர் சுரதா என அவர் ஆதரவு பெற்றோரின் எண்ணிக்கை அதிகம். எதிலும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத எளிமை உடைவராகவே திகழ்ந்தார். மரபுக்கவிதையிலும் வேகமும் செறிவுமாய், புதுபாடுபொருள்களை கொண்டு நெஞ்சையள்ளும் கவிமாரி பொழிந்தார்.

கவிஞர் தேர்தலிலும் போட்டியிட்டார். வீதிவீதியாய் பாரதியின் பாடல்களை கணீரென பாடியவாறே வாக்கு சேகரித்தாராம். 

56 வயதுவரை மட்டுமே வாழ்ந்த கவிஞர் 1973 ஆம் வருடம் அவரின் ஞானத்தந்தை பாரதியினைத் தேடி இவ்வுலகை நீத்தார். நல்ல இலக்கிய படைப்புகளையும் ஒரு அன்புமயமான குடும்பத்தையும் விட்டுச் சென்றார். 
திருலோகசீதாராம்
 

 








திருலோக சீதாராம் அவர்களின் சீடரும் நெடுநாள் நண்பருமான பன்மொழி வித்தகர் TNR என்று அறியப்படும் சேக்கிழார் அடிப்பொடிதிரு டி.என்.ராமச்சந்திரன் அவர்கள் திருலோக சீதாராமின் பல சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அண்மைக்காலத்தில் வெளிவந்த மிகச்சிறந்த ஆங்கில மொழிபெயர்ப்பு கவிதைநூல் ஆகும். 

இது .கவிஞரின் நயமிக்க படைப்புகளான ‘கந்தர்வ கானம்’, ’உடையவர்’, ’புகழ்க்கவிகை’ குருவிக்கூடு'' போன்ற நெடுங்கவிதைகள் உட்பட 55 ஆக்கங்களை  சுவைகுன்றாமல் மொழிபெயர்த்துள்ளார். 


சேக்கிழார் அடிப்பொடி
T.N.ராமச்சந்திரன் அவர்கள் 
கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தஞ்சையில் நடந்த விமரிசையான விழாவில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது. ஹைதராபாதிலிருந்து இவ்விழாவுக்கென தஞ்சை சென்றிருந்தேன்.

இங்கு நான் நெஞ்சுநிமிர்த்தி சொல்லிக்கொள்ள ஒன்று உண்டு. திருலோக சீதாராம் அவர்கள் எனக்கு சொந்தக்காரர். என் தந்தைக்கு மாமன்முறை. கடலூர்,பாண்டிச்சேரி வரும் போதெல்லாம் எங்கள் இல்லத்துக்கு அவர் வருவதுண்டு. என் இளமைப்பிராய நினைவுகளில்,அவரின் சற்றே குள்ளமான உருவமும், கணீர்க்குரலும், என் பதின்மவயதின் கவிதை முயற்சிகளை அவர் ஊக்குவித்ததும் நிழலாடுகின்றன. அவர் வெற்றிலை செல்லத்தில்தான் அவர் கவித்துவம் இருப்பதாய் என் தந்தை கேலியாய் சொல்வதுண்டு.

 அவருடைய நான்கு புதல்வர்களும், மூன்று மகள்களும் குடும்பத்துடன்  இந்த விழாவுக்காய் தஞ்சை வந்திருந்தனர். குடும்பத்து உறுப்பினர்களில் ஒருவனாய் நின்று, ஒரு மாமேதையை இரண்டு நாட்கள் சிந்தித்திருந்தது, என் மனதிற்கு நிறைவாய் இருந்தது. நாளெல்லாம் கவிஞரின் வாழ்க்கைச் சம்பவங்களை அசைபோட்டபடி இருந்தோம்.

 திருலோக சீதாராம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை சற்று விரிவாக எழுதும் முயற்சியில் இருக்கிறேன். புத்தகவெளியீட்டு விழா சமயத்தில் நண்பர் திரு ரவிசுப்ரமண்யம் கவிஞர் பற்றிய ஆவணப் படத்தையும் தொடங்கினார்.

அண்மையில் திரு ஜெயமோகன் அவர்களுக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் இந்த விழா பற்றி குறிப்பிட்டிருந்தேன். தற்செயலாக முந்தையதினம் தன் நண்பர்களிடம் திருலோகசீதாராம் பற்றி பேசியதாகவும், அவர்  பாரதிக்கு நீர்க்கடன் செய்து வந்ததைப் பற்றி, மகாபாரதத்தில் விதவிதமான மகன்களைப் பற்றி வருவதன் தொடர்ச்சியாக......” என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். மிக மனநெகிழ்வாய் இருந்தது. காலத்தை வென்று நிற்க ஒரு கவிஞனுக்கு, தன் உயர்ந்த படைப்புகள் மட்டுமின்றி , உன்னதமான வாழ்க்கைமுறை கூட தேவை என்று எண்ணிக்கொண்டேன்.


திருலோகசீதாராம் அவர்களின் சில வாழ்க்கைக் குறிப்புகளை இந்தப் பதிவில் தந்திருக்கிறேன். கவிஞரின் வைரவரிகளை இன்னொரு பதிவில் பேசுவோம். கவிஞரைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் யாத்த கவிதை ஒன்றின் சிலவரிகளை சிந்தித்து இந்தப் பதிவினை நிறைவு செய்வோம்.

இவனுயர்ந்தான்   அவன்   தாழ்ந்தான்
என்னும்  இன   வேற்றுமை   ஓர்  அணுவும்  இல்லான்
எவன்   பொதுவுக்கு   இடர்   சூழ்ந்தான்
அவன்   தாழ்ந்தான்   அஃதில்லான்
உயர்ந்தான்  என்று
நுவல்வதிலே   திருலோகன்  அஞ்சாநெஞ்சன்
தக்க  நூற்கள்   ஆய்ந்தோன்



படங்களுக்கு நன்றி: முதல் படம்- திருமதி இந்திரா, தஞ்சை(கவிஞரின் மகள்).
ஏனைய படங்களுக்கு GOOGLEக்கு நன்றி) 




35 comments:

தினேஷ்குமார் சொன்னது…

நற்றமிழ் பாடிய நல் உள்ளங்களை மறைத்தே வைத்துள்ளது தமிழ்அகத்தில் நானறிய செய்தமைக்கு மிக்க நன்றி ஐயனே ...

நிலாமகள் சொன்னது…

காலத்தை வென்று நிற்க ஒரு கவிஞனுக்கு, தன் உயர்ந்த படைப்புகள் மட்டுமின்றி , உன்னதமான வாழ்க்கைமுறை கூட தேவை//

சுவை மிகு தொகுப்பு.

அவரின் உறவினரான தங்களுக்கு உற்றார் நாங்கள்!

சிவகுமாரன் சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
சிவகுமாரன் சொன்னது…

பாரதிக்கு நீர்க்கடன் செய்ததும், செல்லம்மாள் பாரதி சீதாரம் மடியிலேயே உயிர் துறந்ததும் அறியாத செய்திகள். மிகவும் அரிதான செய்திகள். பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

காலத்தை வென்று நிற்க ஒரு கவிஞனுக்கு, தன் உயர்ந்த படைப்புகள் மட்டுமின்றி , உன்னதமான வாழ்க்கைமுறை கூட தேவை /

வானவில்லாய் விகசிக்கும் வார்த்தைகள்...

அப்பாதுரை சொன்னது…

தெரியாத பெயர், அறியாத விவரம். பணி சிறக்க வாழ்த்துக்கள்.

கீதமஞ்சரி சொன்னது…

இதுவரை ஒருமுறை கூட கேள்விப்பட்டிராத ஒரு அரிய மனிதரின் வாழ்க்கையைப் பற்றி அறிய வியப்பு மேலோங்குகிறது. எவ்வளவு கீர்த்திமிகு மனிதர்! உங்கள் தயவால் அவரை இப்போதாவது அறிந்துகொள்ள முடிந்ததே என்று மகிழ்கிறேன். நன்றி மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

வாங்க தினேஷ்! நலம் தானே?

// நற்றமிழ் பாடிய நல் உள்ளங்களை மறைத்தே வைத்துள்ளது//

யாதும் சுவடு படாமல் , அரும்பணியாற்றி ,சமுதாயத்தை மேம்படச் செய்த செம்மல்கள் பலருண்டு.

புகழின் வெளிச்சம்பற்றி சிந்தியாமல், தன்னை முன்னிறுத்தாமல் இலக்கியம் மூச்சென வாழ்ந்த தலைமுறை அது.
குடத்திலிட்ட விளக்குகளை குன்றிலேற்றி ஒளியெங்கும் பரவச்செய்ய நமக்கு கடமை இருக்கிறது. அந்த ஒளியால் அவர்களுக்கு ஆவதொன்றும் இல்லை. நமக்காக,நம் சந்ததிகளுக்காக அந்த ஒளி தேவை.

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிலாமகள் ! ஒரு நல்ல இலக்கியவாதிக்கும் அவருடைய வாசகனுக்கும் இடையேயான உறவு மேம்பட்டது.

மனத்தளவில் ஒரு சம்பாஷனை அவருடன் நடந்து கொண்டே இருக்கும். நாம் காணும் காட்சியையோ சம்பவத்தையோ , எழுத்தாளர் விவரிப்பதாயிருந்தால்,எவ்வாறு எழுதுவார் எந்த வார்த்தைக் கோர்வைகளில் அந்தக் காட்சி வசப்பட்டிருக்கும் என்ற எண்ணம் நமக்குள் ஓடும். நம் வாழ்வின் ஒரு சிறு அங்கமாகவேனும் மாறியிருப்பார்.

திருலோக சீதாராம் அவர்களோ, தன் ஆதர்ச இலக்கியவாதியான பாரதியாரை, தன் தந்தையாகவே கொண்டு, அன்னாரின் புகழ்பரப்பும் பணியே தலையாயதாகக் கொண்டு வாழ்ந்தார். பாரதியாரின் படைப்புகளின் பதிப்புரிமை தனியார்வசம் சென்றபோது, பாரதி விடுதலை இயக்கம் என்ற பேரில் தன்னார்வலர்கள் சிலருடன் அதைமீட்கப் போராடினார் என்றும் தெரிய வருகிறது.

மோகன்ஜி சொன்னது…

நன்றி சிவா !

இவருடைய தமிழ் நடை அதிக சலனமின்றி, தெளிவோடும் ஆழத்தோடும் நகரும் நதி போன்றது.

அவரின் பன்முகப் பணிகளும், குறுகிய ஆயுளும் இல்லையெனில் ஒரு நிகரில்லாக் கவிஞனாக பெரும் ஏற்றம் பெற்றிருப்பார் என்பது என் ஆதங்கம். அவரின் அமரவரிகளை பிறிதொரு பதிவில் பார்ப்போம் சிவா!

மோகன்ஜி சொன்னது…

நன்றி ராஜேஸ்வரி மேடம்!

செறிவான நடையில், எழுத்தை ஒரு தொழில் நுட்பமாகவே மட்டும் கொண்டு வனையப்படும் ஆக்கங்களால் பயனில்லை. எழுத்தாளனின் கருத்துக்கும்,நடத்தைக்கும் ஒரு தார்மீகபலம் வேண்டும். அது தாய்ப்பாலைப் போன்றது.

மோகன்ஜி சொன்னது…

நன்றி அப்பாதுரை அவர்களே!

ஒரு கவிஞனாக பரவலாக அறியப்பட வேண்டுமாயின் தற்காலத்தில் திரைப்பட பாடலாசிரியனாய் இருக்க வேண்டும் அல்லது அரசியல் சார்புநிலையோடு இருக்க வேண்டும். (கவிதையில் அரசியல் இதில் சேர்த்தியில்லை!)

மோகன்ஜி சொன்னது…

நன்றி கீதமஞ்சரி! நலம்தானே ? அடிக்கடி வாருங்கள். நிறைய விவாதிப்போம்

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அரியாத செய்திகள். உங்கள் பதிவு மூலம் அவரது படைப்புகளை படித்திட ஆசை.....

மோகன்ஜி சொன்னது…

கண்டிப்பாய் பகிர்ந்து கொள்வோம் வெங்கட் !

ஸ்ரீராம். சொன்னது…


திரு திருலோக சீதாராம் - பெயர் கேள்விப்பட்ட பெயராயிருக்கிறதே தவிர, இத்தனை விவரங்கள் இப்போதுதான் அறிந்தேன்.

இவர் மடியில் செல்லம்மா பாரதி உயிர் துறந்தார் என்பதுவும், எழுத்தாளர் சுஜாதாவை முதலில் தனது பத்திரிகையில் எழுத வைத்து ஊக்குவித்தவர் என்பதும் வியப்பான செய்திகள். நீர்க்கடன் செய்தி நெகிழ்ச்சி. அவர் உங்களுக்கு உறவு என்பதில் மகிழ்ச்சி.

கவிஞர் சுத்தானந்த பாரதி அவர்கள் எங்களுக்கு உறவு. சற்று தூரத்து உறவு.

எங்கள் ப்ளாக்கில் பின்னூட்டமிடுவதில் கஷ்டமென்ன? சாதாரணமாகத்தானே இருக்கிறது?

மோகன்ஜி சொன்னது…

வாங்க ஶ்ரீராம் ! சுகம் தானே !

திருலோக சீதாராம் மறைந்தது 1973ஆம் ஆண்டு. 40 ஆண்டுகள் ஓடி விட்டன. போன தலைமுறையின் பெரும்பாலான எழுத்தாளர்களும் கவிஞர்களும் இன்றைய நினைவு தளத்தில் மெல்ல மங்கியே வருகிறார்கள். இன்னுமொரு 50 ஆண்டுகள் கழித்து கவிதை எப்படி இருக்கும். தமிழ் கவிதை தமிழிலேயே இருக்குமா?

யோகி சுத்தானந்த பாரதி உங்கள் உறவினர் என்பதில் சந்தோஷம். நீங்களும் அவர் குறித்து எழுதுங்களேன்.

எங்கள் ப்ளாக் காமெண்ட் தட்டினால் திறக்கவில்லை . மீண்டும் முயற்சிக்கிறேன்.

தினேஷ்குமார் சொன்னது…

அகத்தியன் அச்சுதனுடன் நலம் ஐயனே ....

kashyapan சொன்னது…

திரிலோக சீதாராம் அவ்ர்கலிண் சித்தார்த்தன் நூலை என் பதின்ம வயதில்படித்திருக்கிறேன் ! மிகவும் அற்புதமான மொழி பெயர்ப்பு ! மிக உயர்ந்த தத்துவ விளக்கங்களைக் கொண்டது ! அதன் ஜெர்மனிய ஆசிரியருக்கு நோபல் பரிசு பெற்றுத்தந்த படைப்பு ! மேலை நாட்டு இளைஞன் ஒருவன் ஆன்மீகத்தேடலில் இந்தியா வந்து சித்தி அடைகிறான் ! நினைக்க நினைக்க மனம் மணக்கிறது ! பலகலை மாணவர்களின்" மொழிபெய்ர்ப்பு " பாடத்திற்கக ஒரு கையேடு கொண்டுவர முயற்சித்து வருகிறேன் ! அதில் திரிலொக சீத்தாராம் அவர்களின் படைப்பை பற்றியும் குறிப்பிட்டுள்ளேன் ! அவ்ர் உங்களுறவினர் என்பது பெருமைக்குறியது 1 வாழ்த்துக்கள் ---காஸ்யபன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

படித்தேன்!
ரசித்தேன்!!
நெகிழ்ந்தேன்!!!

சுப்ரா சொன்னது…

சுகமான நினைவுகள் . நினைவு படுத்தியமைக்கு நன்றி . - சுப்ரா .

மோகன்ஜி சொன்னது…

மிக்க மகிழ்ச்சி தினேஷ்! சிங்கக் குட்டிகள்

மோகன்ஜி சொன்னது…

நன்றி காஸ்யபன் சார்! சித்தார்த்தன் ஒரு சிறப்பான மொழிபெயர்ப்பு. அது மலிவுவிலை நாவலாய் பலவருடங்களுக்கு முன் ராணிமுத்து மாத நாவல் வரிசையில் சற்று சுருக்கி வெளியிட்டிருந்தார்கள்.
வார்த்தைக்கு வார்த்தை மொழிபெயர்த்து மனதுக்கு ஒட்டாத சித்ரஹிம்சையாகத்தான் பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் இருக்கின்றன. அவை ஒட்டாத தன்மையுடன் உலர்ந்த ஆக்கமாயன்றி மூலப்படைப்பாகவே திகழவேண்டும்.

உங்கள் புதிய கையேட்டுக்கு என் வாழ்த்துக்கள். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

மோகன்ஜி சொன்னது…

வாங்க மூவார்! தஞ்சையில் நடந்த விழாவில் பங்குகொண்ட மகிழ்ச்சிக்கு சற்றும் குறைந்ததல்ல முந்தைய மாலை உங்களுடன் இருந்தது. திருவானைக்கா சென்றுவந்ததும், உங்கள் மொட்டைமாடியில் அடித்த அரட்டையும்,சகோதரி வார்த்து அடுக்கிய ரவாதோசையும் மறக்க இயலாதவை.
வசந்தராயப் பிள்ளையாரை அப்புறம் சந்தித்தீர்களா?

மோகன்ஜி சொன்னது…

சுப்பிரமணியன் வேலாயுதம் அவர்களே! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

நிலாமகள் சொன்னது…

செறிவான நடையில், எழுத்தை ஒரு
//நம் வாழ்வின் ஒரு சிறு அங்கமாகவேனும் மாறியிருப்பார். //

ஆமாமாம்.

//தொழில் நுட்பமாகவே மட்டும் கொண்டு வனையப்படும் ஆக்கங்களால் பயனில்லை. எழுத்தாளனின் கருத்துக்கும்,நடத்தைக்கும் ஒரு தார்மீகபலம் வேண்டும். அது தாய்ப்பாலைப் போன்றது.//

முத்தான வார்த்தைகள்!

சித்ரஹிம்சை// :))

மோகன்ஜி சொன்னது…

நன்றி நிலா., அடுத்த வாரத்திலிருந்து 3 பதிவுகள் வாரம்தோறும் போட நினைக்கிறேன். தாங்குவீங்களா??

நிலாமகள் சொன்னது…

போட்டுப் பாருங்க:))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…


தன்யனானேன்.

ரிஷபன் சொன்னது…

அவர் பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர.. இவ்வளவு தகவல்களை ஒரு சேர இப்போதுதான் அறிகிறேன். மனம் நெகிழ்கிறது !

ரிஷபன் சொன்னது…

பாரதியாருக்குப் பின்னர் அவர் குடும்பத்தை கண்இமைப்போல் காத்துவந்தவர். பாரதியின் மனைவி செல்லம்மாள்பாரதியின் இறுதிநாட்களில் நோயுற்றிருந்தபோது ஒருமகனாய் உடனிருந்து உதவியவர். தன் மடியிலேயே இறுதி மூச்சைவிட்ட செல்லம்மாள் பாரதிக்காக அந்திமக்கிரியை செய்து துக்கம் மேற்கொண்டவர்.

என்னை உலுக்கிய தகவல் இது

மோகன்ஜி சொன்னது…

நிலா! பதியறேனா இல்லையா பாருங்க... இன்னும் பத்து நிமிடங்களில் அடுத்த பதிவைப் போட்டுக்கிட்டே இருக்....

மோகன்ஜி சொன்னது…

மூவார்! ஹைதராபாத்துக்கு வாங்க....ஆரஅமரப் பேசுவோம்...

மோகன்ஜி சொன்னது…

வாங்க ரிஷபன் சார்! உங்கள் நெகிழ்வில் புரிகிறது உங்கள் தமிழுள்ளம். திருலோகம் அவர்கள் ஆக்கங்களைப் பற்றி சில நாட்கள் கழித்து உரையாடுவோம்.

கோமதி அரசு சொன்னது…

திருலோக சீதாராம் அவர்களைப் பற்றி அறிந்து கொண்டேன்.

உங்கள் உறவினர் என்று கேட்டு மகிழ்ச்சி.

புகழ் விரும்பாத உன்னதமனிதர் என்று தெரிகிறது.

நீங்கள் அவர் வாழ்க்கை வரலாற்றை எழுதுங்கள் அனைவரும் தெரிந்து கொள்வார்கள். உங்கள் புத்தகவெளியீட்டுவிழாவிற்கு வாழ்த்துக்கள்.