புதன், அக்டோபர் 28, 2015

காதல் விலங்கு

    


நான் ரசிக்க வேண்டிய பாடல்களை
நீயே தெரிவு செய்கிறாய்

நான் உடுக்கவேண்டியிருப்பது,
நீ சுட்டும் ஆடைகளைத் தான்.

என் உணவும் உற்சாகமும் கூட
நீ கைகாட்டியவை தான்.

நீ உள்ளிழுக்கும் சுவாசத்தை
நான் வெளிவிடவேண்டும் என எதிர்பார்க்கிறாய்

என்னையன்றி வேறோர் நினைப்பில்லை உனக்கு.
காதல்காதல் என்றே என்னைக் கட்டிப்போடுகிறாய்.

உணரச் சொன்னால் உணர்வதும்
புணரச் சொன்னால் புணர்வதுமாய்
போய்க் கொண்டிருக்கிறது என் காலம்.

என் கனவிலும் கவிதைகளிலும்,
உன் சாயம் ஒட்டிவிடாதிருக்க
மெனக்கெடுகிறேன்.

ஆபரணம் என்றுதான் உன்னை அணிந்தேன்.
தளையானாய் என்றிடத் தயக்கமாய் இருக்கிறது.

இதைச் சொன்னேன் என்றே விதிர்த்து,
என்னைக் கையொதுக்கி விடாதே.

தோளில் வளர்த்த கிளி தூரப் பறப்பதெங்கனம்?
பட்டியைப் பிரித்த கண்,
பார்வைக் கூச்சம் கொள்ளாதோ?

இருந்துபோவோம் இப்படியே..
எல்லாமே காதலினால் தானே?



நவம்பர் 1990
(என் பரணிலிருந்து பரல்கள்)

39 comments:

sury siva சொன்னது…

விலங்கு வந்தவனை
வலையில் விழுந்தவனை
விழுங்கி விடும் அன்றோ !!
வாலை ஆட்டினால்
விடுதலையா கிடைக்கும் ?

சுப்பு தாத்தா.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சங்கடமான சில சந்தோஷங்களை தவிர்க்க முடிவதில்லைதான்! காதல் சிறக்கட்டும்! அருமை!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அது அப்படித்தான்... சமாளிப்போம்...!

மோகன்ஜி சொன்னது…

சு.தா !

நீங்கள் சொல்லும் விலங்கின் பகை எதிர்க் கொள்ளக் கூடியதே!
சோழன் கரிகாற்பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடினதில் சில வரிகள்

விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியா,
கொழும் பல் குடிச் செழும் பாக்கத்து,
குறும் பல் ஊர் நெடுஞ் சோணாட்டு...... என வரும்.

கழனிகளை மேய்ந்துவிடும் ஆவினங்கள் போன்ற விலங்குகளின் பகையன்றி, தைரியமாய் எதிர்த்து போர் செய்யவரும் எதிரிகளே கரிகாலனுக்கு இல்லையாம். மேய்ச்சல் தானே.. பண்ணிவிட்டு போகட்டுமே.. என்று தயையோடு ஏற்கப்பட வேண்டியதுதான் அந்தப் பகை..

மேலும் விலங்கு என்றால் தடுப்பது என்ற பொருளும் உண்டே..
"விலங்கு பகைக் கடிந்த கலங்காச் செங்கோல்" என்று மன்னன் எழினியை அரிசில் கிழார் பாடுவார்.

(விலங்கு பகை = தடுக்கின்ற பகை, கடிதல் = தடை செய்தல்)

இங்கே தடுக்கும் விலங்கை 'தள்ளி' வைத்தல் அடுக்காதே!






"

மோகன்ஜி சொன்னது…

வாங்க சுரேஷ்!

//சங்கடமான சில சந்தோஷங்களை தவிர்க்க முடிவதில்லைதான்//

அது சந்தோஷம்னு புரிஞ்சுகிட்டீங்க பாருங்க... அங்க தான் நீங்க நிமிர்ந்து நிக்கிறீங்க பாஸ்!

மோகன்ஜி சொன்னது…

நன்றி தனபாலன் !சரியா சொன்னீங்க !

மோகன்ஜி சொன்னது…

முகநூலில் வந்த சில கருத்துக்கள்

வாசன்ஜி: வருகிறேன் அப்புறம்...வைச்சுகிறேன் கச்சேரி.
Unlike · Reply · 1 · Yesterday at 12:04pm

மோகன் ஜி
மோகன் ஜி அண்ணே ! எப்போதோ ஒரு நண்பனின் பிரச்னையை எளுதிப் போட்டேன் கவிதையா.... தப்புத்தேன்... தப்புத்தேன்...
Like · Reply · Yesterday at 1:43pm

Sriram Balasubramaniam
Sriram Balasubramaniam ஆக, 'நீ' இருக்கும் வரை 'நான்' 'நானி'ல்லை! smile emoticon
Unlike · Reply · 1 · Yesterday at 12:17pm

மோகன் ஜி
மோகன் ஜி அதே... அதே....
Like · Reply · 1 · Yesterday at 1:44pm


Geetha Sambasivam
Geetha Sambasivam காதலி உள்ளிழுக்கும் சுவாசத்தை வெளியிடும் காதலன், "கும்பகம்" அறிந்தவனோ? smile emoticon
Like · Reply · Yesterday at 1:24pm

மோகன் ஜி
மோகன் ஜி 'கும்பகம்'தெரியுமோ தெரியாதோ எனக்குத் தெரியாது.. அவன் 'குடும்பம்' அறிந்தவன் ...
Like · Reply · Yesterday at 1:47pm
View more replies
அவ்வளவு நேரம் மூச்சை இழுத்துப் பிடிக்கிறாரே! கும்பகமும் அறிந்து குடும்பமும் அறிந்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன். smile emoticon
Like · Reply · Yesterday at 1:48pm
மோகன் ஜி
மோகன் ஜி ஆஹா....
Like · Reply · Yesterday at 1:48pm

Geetha Sambasivam
Geetha Sambasivam கும்பகம் என்பது மூச்சை வெகு நேரம் உள்ளே வைத்து இருத்தல் என்பதை அறிந்திருக்கிறீர்கள் தானே?
Unlike · Reply · 1 · Yesterday at 1:25pm

மோகன் ஜி
மோகன் ஜி கொஞ்சம் தெரியுங்க...
Like · Reply · Yesterday at 1:52pm

Geetha Sambasivam
Geetha Sambasivam //தளையானாய் என்றிடத் தயக்கமாய் இருக்கிறது.// இப்படி வேறே ஒரு எண்ணமா? அப்போ அது உண்மையான காதல் தானா? இதையும் சொல்லிட்டு அப்புறமா ஏன் கை ஒதுக்காதேனு கெஞ்சல் வேறே! ம்ஹூம், சரியாய்த் தெரியலை எனக்கு!
Unlike · Reply · 1 · Yesterday at 1:26pm

Geetha Sambasivam
Geetha Sambasivam கிளி பறந்தாலும் திரும்பத் திரும்பப் பழகிய இடத்துக்கே வரும்!
Unlike · Reply · 1 · Yesterday at 1:26pm

மோகன் ஜி
மோகன் ஜி கிளிக்கு தெரிந்தது அவ்வளவு தானே!
Like · Reply · Yesterday at 1:53pm

Geetha Sambasivam
Geetha Sambasivam காதலே ஒரு விலங்கென்றால் {இங்கே இரண்டு அர்த்தமும் கொள்கிறேன். :)} அப்புறமா ஏன் இருந்துட்டுப் போகட்டும்னு தி,ஜா. மாதிரி????? அப்பாடா! ஒரு வழி பண்ணிட்டேன்னு நினைக்கிறேன். வர்ட்ட்ட்டா?
Unlike · Reply · 1 · Yesterday at 1:28pm

மோகன் ஜி
மோகன் ஜி இந்த ஜன்மத்துக்கு விதிச்சது அதுதானோ...
Like · Reply · Yesterday at 1:55pm

View more replies
மோகன் ஜி
மோகன் ஜி கவிதையை படிச்சீங்கன்னா அது அவன் கூற்றா அல்லது அவள் கூற்றா என்பதற்கு தடயம் ஏதும் இருக்காது கீதா மேடம் !
Like · Reply · Yesterday at 2:01pm

View previous replies
சரி, அப்படியானும் ஏன் சகிச்சுக்கணும்னு தான் கேள்வியே! smile emoticon
Like · Reply · Yesterday at 2:04pm

மோகன் ஜி
மோகன் ஜி ரிவர்ஸ் காதல்ங்க !
Like · Reply · Yesterday at 2:08pm

மோகன் ஜி
மோகன் ஜி :ஆண்கள் 'அவன்' என்று எடுத்துக் கொண்டால் அடப்பாவமே என்று எமோஷனலா இல்லே ஆயிடுவாங்க??
Like · Reply · Yesterday at 2:12pm · Edited

sury siva சொன்னது…

//விலங்கின் பகை எதிர்க் கொள்ளக் கூடியதே!//

அவ்விலங்கின் பகையும்
இவ்விலங்கின் நகையும்
இரண்டுமே ஒன்றுதான்.

விளங்காதவன்
விழுங்கப்படுகிறான்.

விளங்கியவனோ
விலகிச் செல்கிறான்.

காதல் கசக்குதையா !!

நிற்க.
மஸ்தானைப் பற்றி எழுதச்சொன்னால்,
மஸ்த் பற்றி எழுதுகிறீரே !!

சுதா.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
இது எப்போதோ எழுதிய ஒன்று.. நெருங்கிய நட்பு வட்டத்தின் குமுறலை எழுதியது. பிரச்னை என்றுமுளதன்றோ?! ஆகவே தான் நினைவுக்கு வந்ததைப் பதிவிட்டேன். மஸ்தானைத் தான் தேடிக் கொண்டிருக்கிறேன்.. படித்துப் பொங்கி எழுந்த அந்நாளின் உணர்வுகளை மீட்டுத்தான் வைத்திருக்கிறேன். சாஹிபு கிடைத்தவுடன் பதிவேன் சார்!

ஸ்ரீராம். சொன்னது…

அங்கு ஃபேஸ்புக்கில் சொன்ன அதே வார்த்தைகளையே இங்கும் சொல்லவா? :)))

இவ்வளவு ஒன்றி கமிட் ஆயிட்டா அப்புறம் கஷ்டமாயிடுமே...!

கமெண்ட் பாக்ஸ் திறந்ததும்தான் எனது முதல் வரிக்குத் தேவையே இல்லை என்று தெரிகிறது! ம்ம்ம்ம்...

மோகன்ஜி சொன்னது…

ஹ... ஶ்ரீராம்காரு,

அக்கட உண்டே பாண்டுரங்கடு இக்கட உன்னாடு...
கடுபுலோ இல்லுகட்டி காபுரம் உன்னாடு....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

நல்ல விலங்கு

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

விலங்கு
அரூமை ஐயா

S.P.SENTHIL KUMAR சொன்னது…

அருமையான கவிதை. இந்த விலங்கை உடைப்பது கஷ்டம்தான்.

சசிகலா சொன்னது…

அழகான அவசியமான இம்சை தான்...ரசித்தேன்.

http://veesuthendral.blogspot.in/2015/10/blog-post_23.html
நான் இங்கு தான் தொடர்ந்து எழுதுகிறேன்.
தங்கள் வருகையைக் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

தொடர்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி முனைவர் ஐயா!

மோகன்ஜி சொன்னது…

நன்றி ஜெயகுமார் சார்!

மோகன்ஜி சொன்னது…

ரசித்ததிற்கு நன்றி சசிகலா.
நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள்.
அதிக புத்தக வாசிப்பு உங்கள் எழுத்தை மேலும் செம்மையாக்கும்.
வந்தபடி இருங்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

காதல் என்றாலே ஒருவரில் ஒருவர் கட்டுண்டு கிடப்பதுதானே

சென்னை பித்தன் சொன்னது…

// அடிமையா யிருப்பதும் சுகம்தான் சிலநேரம்!

அடியே அதைநான் உணர்கிறேன் உனாதிக்கத்தில்

தளையறுத்து நான் எழ எண்ணும் போதெல்லாம்

தாமரைக்கண் பார்வையால் கட்டிப் போடுகிறாய்!

சினங் கொண்டு நான் சீறத் துடிக்கையில்

சிங்காரச் சிரிப்பினால் சிந்தை கவர்கிறாய்

ஏன் அடங்கிக் கிடக்கிறோம் என்றெண்ணினாலோ

தேன் மொழி பேசி என்னை த் திணற வைக்கிறாய்.

சத்தம்போட்டுன்னை அடக்க நினைத்தாலோ

முத்தமொன்றினால் மூங்கையாய் ஆக்குகின்றாய்.

உணர்ந்து விட்டேன் நான் சுகம் இதுவேயென்று!//-(குட்டன்)

சொல்லித் தெரிவதில்லையே இச்சுகம்!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

GMB சார் ! அப்படிப்போடுங்க அருவாளை !

sury siva சொன்னது…

இதெல்லாம் பார்த்துத்தான்
அன்று அப்துல் ரஹ்மான் சொன்னாரோ
முதுமை
ஞாபகங்கள் குப்பைக் கூடை.

சுதா.

மோகன்ஜி சொன்னது…

சென்னைப் பித்தன் சார் !
கவிதையிலே கலக்கிட்டீங்க...
அப்போ ஜகா வாங்கிடலாம்னு உறுதியாக சொல்லிட்டீங்க... பெரியவங்க சொன்னா பெருமாளே சொன்னா மாதிரி...

அப்போ சரி... போடச்சொன்னா போட்டுக்கிறேன்... போடும்வரை கன்னத்திலே!!

மோகன்ஜி சொன்னது…

சு.தா ! அப்போ இதெல்லாம் ஞாபகங்களின் கு.கூ லிருந்து தானா... மெய்யாலும் இல்லையா? சரி ... எடுப்பா அந்த குணங்குடிக்கார்ர் புத்தகத்த... போட்றா மோகா பதிவ....

sury siva சொன்னது…

//எடுப்பா அந்த குணங்குடிக்கார்ர் புத்தகத்த... போட்றா மோகா பதிவ//

கள்ளுண்டும் கொலைபுரிந்தும் கபடம் செய்தும் கணிகையர்தம் புணர்ப்பினுறு காம நோயால்
எள்ளுண்டும் திரிகொடும்பா தகத்தோர் தாமும் இணையில்குணங் குடியானே இறைவா உன்றன்
வி்ள்ளுண்ட கமலவடி படுந்தூள் ஒன்று மேற்படப்பெற் றிடினவர்வெவ் வினைக ளெல்லாம்
தள்ளுண்டு சிறுசிலையொன் றெடுத்து வீசத் தருநிறைபுட் குழாமெனவே பறந்து போமே. (11

அந்த சிறு சிலை என்ன தம்பி ?

subbu thatha.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

ஆஹா! சு.தா.!
கள்ளுண்டும்... பாட்டு குணங்குடியார் பேர்ல பாடப்பட்ட நான்மணிமாலை பாடல்களில் ஒன்றல்லவா. தணிகைப் புலவர் சரவணனார் எழுதின, எண்சீர் கழிநெடிலடி ஆசிரியப்பா.

நீங்க கேட்டது சிறுசிலை பற்றியல்லோ? சிலான்னா கல்லுண்ணே. சிறுசிலைன்னா சின்ன கல்லு. எப்படி ஒரு சிறுகல்லை எறிந்தால் மரத்தில் நிறைந்திருக்கும் அத்தனை பறவைகளும் பறந்துபோகுமோ அப்படியே வெவ்வினைகளெல்லாம் இறைவா!,உன்பாத தூளி பெற்றுவிட்டால் பறந்துவிடாதோ எனப்பொருள் கொள்க.

சிறுசிலை என்பது அழகான சொல். மீண்டும் சந்திக்கும் வரை இந்த வேல்விருத்ததை உருட்டிகிட்டு கிடங்க சு.தா!

வொலாவொலி நிசாசரர் உலோகம தெலாமழல்
உலாவிய நிலாவு கொலைவேல்

சிலாவட கலாவிநொ தவாசிலி முகாவிலொச
னாசின சிலாத ணிவிலா

சிலாமலர் எலாமதிய மோதமதி சேலொழிய
சேவக சராப முகிலாம்

விலாசகலி யாணகலை சேரபசு மேலைமுலை
மேவிய விலாச அகலன்

விலாழியி னிலாழியகல் வானில்அனல் ஆரவிடு
வேழம்இளை ஞன்கை வேலே.

joseph jeyabal சொன்னது…

நல்ல அறிவுள்ள விலங்கு..

மோகன்ஜி சொன்னது…


நன்றி ஜோசப் ஜெயபால் சார்! நன்றி!

sury siva சொன்னது…

தீபாவளி வாழ்த்துக்கள்.

subbu thatha
www.vazhvuneri.blogspot.com

மனோ சாமிநாதன் சொன்னது…

அன்பார்ந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்!!

அப்பாதுரை சொன்னது…

ஆகா!

(நினைவுகளைக் காணக் கனவுப் பார்வை தரும் கண்மணிகள்)

நிலாமகள் சொன்னது…

தோளில் வளர்த்த கிளி தூரப் பறப்பதெங்கனம்?
பட்டியைப் பிரித்த கண்,
பார்வைக் கூச்சம் கொள்ளாதோ?

//இருந்துபோவோம் //

மோகன்ஜி சொன்னது…

நலம் தானே நிலா!

நிலாமகள் சொன்னது…

கரையேறவொண்ணா சம்சார சாகரத்துள் அலைதாண்டி, நடுவானும் நடுக்கடலும் ஒருசேரும் புள்ளியதில் முங்கியமிழ்ந்து மூச்சடக்கி, நலமோடு இருக்கிறேன் ஜி! துழாவும் கைகளில் சிப்பியுள் சிறைப்பட்ட முத்து அகப்படும் போதெல்லாம் வலைகரையோரம் வருவேனே...எழில்நட்புகளோடு இளைப்பாற.

மோகன்ஜி சொன்னது…

கடமைகள் என்று நாம் வரிந்து கொண்டவை ஏற்புடையவையாய் ஆவதொன்றே நல்வாழ்க்கையின் நியதி. ஆழ்கடலுள் பெரும் சுறாவாகவும், கரையென்றால் குறுகுறுக்கும் நண்டாகவும், ஆகாசத்தில் கழுகாயும், சோலைதனில் மயிலாகவும், மாறும் வல்லமை தெய்வம் தரும்... நாம் கேட்டால் போதும் அல்லவா?
ஒரோருவருக்கோ வாழ்க்கையது கதைபோலும், கதையோ வாழ்க்கையாயும் காணும் பித்து ஒரு வரமென்றே ஆகிப்போகும் !

நிலாமகள் சொன்னது…

நாம் கேட்டால் போதும் அல்லவா? //

கேட்டதும் கொடுப்பவனே... என்றும், கேளுங்கள் தரப்படும்... என்றும் கேட்டலின் சூட்சுமம் சொல்லிச் சென்றவர் பலரிருக்க, அதுபுரியா மாந்தர் இன்னும் இப்புவியில் உழல்கின்றனரே ஜி...

//ஆழ்கடலுள் பெரும் சுறாவாகவும், கரையென்றால் குறுகுறுக்கும் நண்டாகவும், ஆகாசத்தில் கழுகாயும், சோலைதனில் மயிலாகவும், மாறும் வல்லமை தெய்வம் தரும்...//

புலம்பலற்று நிமிர்ந்தமரச் செய்யும் இதம் தரும் தோழமையொரு வரம்!