வியாழன், மார்ச் 10, 2016

விக்கிரமன் சார்!


வருடம் தொண்ணூற்று மூன்றோ அல்லது நான்கோ.. 
எழுத்தாளர் விக்கிரமன் சார் வீட்டிற்கு சென்றிருந்தேன். 
ஐந்தாறு முறை  சந்தித்த நெருக்கம். அதுவும் நான்கு மாதங்களுக்குள்ளாக...

‘வாங்க!’ எனும் இணக்கமான அழைப்பு ‘வா மோகன்’ எனும் நெருக்கமான விளிவரை வந்திருந்தது. 
எட்டிப்பார்த்த திருமதி விக்கிரமனும்‘வாங்கோ’ என்ற முறுவலுடன் உள்ளே சென்றார்கள்.

‘’உங்க நண்பர் இறையன்பு சௌக்யமா?’’ திரு.இறையன்பு அவர்களின் முதல் கவிதைநூலுக்கு விக்கிரமன் சார் முன்னுரை எழுதியிருந்தார்.
  
“நல்லா இருக்கார் சார்! கொஞ்சநாள் முன்னே ஏர்வாடி சார் கடலூர் வந்திருந்தார். உங்களைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தோம். உங்க  சிறுகதைக் களஞ்சியம் வந்தாச்சா சார் ?’’

“வந்திருக்குப்பா. நல்லா வந்திருக்கு. தோ...கொண்டு வரேன்’ 
உள்ளே சென்றவர் திரும்ப வருமுன் எனக்கு காபி வந்திருந்தது.

“போன தடவையே உனக்கு சொல்லணும் என்று இருந்தேன். 
உங்க ஊரிலேருந்து ஒரு ஆசாமி ‘........ன்னு’ பேரு. அவர் தரும் 
தொல்லையைப் பற்றித் தான்”.

“ஓ... அவரா சார் ? கொஞ்சம் இலக்கிய ஆர்வலர் ஆச்சே!”
“ஆமாமாம்.. அதீத ஆர்வம் தான் ! உங்க ஊரிலே இலக்கியவாதிகளுக்கு பஞ்சமா என்ன?” சிரித்தார். உனக்குத் தெரிஞ்சவர்னா நல்லதாப் போச்சு.!”

‘பிரச்னை இலக்கியம் இல்லை போலிருக்கே சார்?’’

“கேக்காதே! மனுஷன் அப்பப்போ ராத்திரி உங்க ஊர்லேருந்து போட்மெய்லையோ பாஸஞ்சரையோ பிடிச்சி, விடியகாலைல மாம்பலம் ஸ்டேஷன்ல இறங்கி, நேரா இங்கே வந்து வீட்டுக்கதவைத் தட்டுறார்”

இந்த வண்டிகள் அதிகாலை ஐந்துமணிவாகில் மாம்பலம் வந்துவிடும். ஸ்டேஷனிலிருந்து விக்கிரமன் சார் வீடு நடக்கும் தூரமே.

“அடடா! ஏதோ அவசரத்துலே வந்திருப்பார் சார்.”

“சரியா போச்சு போ! வரும் போதேல்லாமே இப்படித்தான்”.‘ரொம்ப நேரமா கதவைத் தட்டிகிட்டு இருக்கேன்’ என்று ஊடல் வேற... கழுத்தறுப்பு!”

எனக்கு பாவமாயும் இருந்தது. அவர் ‘கழுத்தறுப்பு’ என்பதை சொன்னவிதத்தில்  சிரிப்பாயும் வந்தது.

“உங்களுக்கு எப்பேர்ப்பட்ட வாசகராயிருந்தா காலநேரம் பார்க்காம சந்திக்க ஓடிவருவார்?” 

“நாசமா போச்சு! எப்போ வந்தாலும், இப்பல்லாம்  தரமான எழுத்து வர்றதில்லே... பத்திரிக்கைகள் சரியில்லேங்கிறது முதல் பாட்டு. அப்புறம் எனக்கு புடிச்ச ஒரே புத்தகம் நந்திபுரத்து நாயகி தான் விக்கிரமன் சார்!ன்னு ஒரு புகழ் மாலை!”

“அப்புறம்?”

“ஒவ்வொரு தரமும் இதேதான். ஏண்டா நந்திபுரத்து நாயகியை எழுதினோம்னு இருக்கு!”

வெடித்துச் சிரித்தேன். அவர் முகம் மலர்ந்து என் சிரிப்போடு சேர்ந்து சிரித்தார்.

“காலங்கார்த்தாலே தொந்தரவு பண்ணாதீங்கன்னு  ஒருதரம் கண்டிப்பாக சொல்லவேண்டியது தானே சார்?"

“சட்டுன்னு அப்பிடி முகத்தில அடிச்சமாதிரி யாரையும்  சொல்லிட முடியாது மோகன் எனக்கு. அதான் கஷ்டம்! நீயானா சாலாக்கா ஹேண்டில் பண்ணுவே!  நீ, ‘லோன் கிடைக்காதுன்னு வலிக்காம சொல்ற மேனேஜர் வர்க்கம்!’ அதான் உன்கிட்ட சொன்னேன்.”

“விடுங்க சார்! அவரை நல்லாத் தெரியும். நல்ல மனுஷன் தான். நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் ‘கழுத்தறுப்பு’ ஆசாமியும் தான். நான் சொல்ற விதத்தில சொல்றேன்”.

“அவர் மனசு கஷ்டப்படற மாதிரி ஒண்ணும் சொல்லிடாதே!”

அதுதான் விக்கிரமன் சார்!! பூப்போன்ற மனசு அவருக்கு. அவர் எழுத்துக் கூட அப்படித்தான் இருந்தது.

அதற்குப்பின் கழுத்தறுப்பு நண்பரிடம் “சாலாக்காக” எடுத்துரைக்கப்பட்டு பள்ளியெழுச்சி விவகாரம் முடித்துவைக்கப்பட்டது. நந்திபுரத்து நாயகியும் பிழைத்தாள்!

அவர் ஆசிரியத்தில் 54 ஆண்டுகள் வந்த அமுதசுரபி பாரம்பரியம் காத்துவரும் பத்திரிகை. அதன் மேலட்டையில் இலக்கிய காட்சிகளின் சித்திரங்களையே அவர் போட்டு வந்தார். எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பது எப்போதுமேஅவருடைய கவலையாக இருந்தது. எழுத்தாளர் சங்கத்தை நிறுவி வழிநடத்தியவர். வளரும்  இளம்தலைமுறை படைப்பாளிகள் தரமான பங்களிப்பு செய்வார்கள் என்று நம்பிக்கை உடையவர். மூன்று தலைமுறை எழுத்தாளர்களைக் கண்டவர். அவர்களோடு நல்ல தொடர்பில் இருந்தவர்.    
‘பத்திரிகை பொறுப்புகள் இன்றி வெறும் படைப்பாளியாகவே நீங்கள் இருந்திருந்தால் நிறைய எழுதியிருப்பீர்கள் சார்!’ என்று அவரிடம் சொன்னதுண்டு. அந்த எண்ணத்தை அவர் ஒத்துக்கொள்ளவில்லை. எழுத்தே வாழ்க்கையா? வாழ்க்கையிலிருந்து எழுத்தா? என்று கேட்டிருக்கிறார்.

முப்பது சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள் ஆறும்,பல சிறுகதைத் தொகுப்புகளும்,மற்றும் பயண நூல்கள், கட்டுரைகள் பலவும் எழுதியிருக்கிறார். தமிழக அரசின் ‘கலைமாமணி’ பட்டமும் பெற்றவர்.

பாரதியின் மேல் மட்டற்ற பக்தி கொண்டவர். இன்னொரு பாரதி பக்தரான திருலோக சீதாராம் பற்றி தகவல்களும், அச்சில் வராத அவர் எழுத்துக்களையும் வெளிக்கொணர வேண்டியது உன் பொறுப்பு என்று சொல்லியிருக்கிறார். என் மேல் அவர் காட்டிய அன்பிற்கு திருலோக சீதாராம் அவர்களின் உறவும் ஒரு காரணமாய் இருக்க வேண்டும்..

விக்கிரமன் சாருக்கு அமரர் கல்கி ஒரு ஆதர்சம். வேம்பு எனும் இயற்பெயரைத் தாங்கி இவரின் ஆரம்பகாலப் படைப்புகள் வந்தன. கல்கியின் ‘பார்த்திபன் கனவு’ நாவலில் வரும் விக்கிரமன் என்ற கதாபாத்திரத்தின் பெயரையே தன் புனைபெயராய் வைத்துக் கொண்டார். நந்திபுரத்து நாயகி கதையை பொன்னியின் செல்வனின் 
தொடர்ச்சியாகவே எழுதினார்.

இது பற்றி ஒருமுறை பேச்சுவந்த போது ‘அவரெங்கே நானெங்கே’ என்று அடக்கத்துடன் சொன்னார். ‘‘பொன்னியின் செல்வனும், நந்திபுரத்து நாயகியும் இணைபிரியாத ஒருமையுடையவை சார்! அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்து வைத்ததைப்போல” என்றேன். இல்லையென அவர் தலையாட்டல் மறுத்தாலும், 
நான் சொன்னதை அவர் ரசித்தது எனக்குத் தெரியும்.  

அடுத்த முறை அவரை சந்தித்த நாள் எனது திருமண நாள். அன்று அவரையும் மாமியையும் நிற்கவைத்து காலில் விழுந்து ஆசி பெற்றேன். நெகிழ்வோடு வாழ்த்தினார். ஒரு பேனா செட் பரிசளித்தார். இன்றும் அது பத்திரமாய் என்னுடன் இருக்கிறது.

படைப்புகளை அச்சில் பார்க்கும் ஆர்வம் எனக்கில்லை என்பதை கண்டித்திருக்கிறார். ‘புளிப்பானைக்குள்ள வைக்கிறதாயிருந்தால் எதுக்கு மாங்காய்மாலை ஹாரம் பண்ணிக்கணும்’ என்று ஒருமுறை என்னைக் கேட்டார். அப்போதைக்கு, ‘இனி எழுதுகிறேன் சார்!’ என்று சொல்லி வைத்தேன். பேச்சுவாகில் நான் சொன்ன ஒரு ரிட்டயரான ஆசாமி கதை அவருக்கு பிடித்திருந்தது. நாலுநாளில் எழுதி அனுப்பச் சொன்னார். அன்றிரவே எழுதி அனுப்பிவைத்தேன். கதைக்கு ‘பேப்பர் ரோஸ்ட்’ என்று தலைப்பு வைத்திருந்தேன். கதை நன்றாக இருப்பதாகப் பாராட்டினார். தலைப்பை மட்டும் ‘கூளம்’ என்றோ ‘பழையன கழிதலும்’ என்றோ மாற்றிக் கொள்வதாயும் சொன்னார். ‘கூளம்’ நல்லா இருக்கு சார்! என்றேன்.

அந்த சமயம், தமிழ்நாட்டை விட்டு நான் ஆந்திராவின் ஒரு மூலைக்கு மாற்றலாகி இருந்த நேரம்.. கதைக்கு நான் வைத்த ‘பேப்பர் ரோஸ்ட் என்ற பெயர் ஏன் வேண்டாமென்று அவர் சொன்னார் என்பது, நீங்கள் அந்தக் கதையைப் படித்தால் உணர்வீர்கள். அவருடைய அனுபவத்தின் கூர்மை அது. அந்தக் கதை வெளிவந்த விவரமோ, இதழோ, எதுவும் அறிந்துகொள்ளக்கூட முற்படாது ஆந்திரத்துக் காற்றில் என்னைக் கரைத்துக் கொண்டேன்.

ஏனோ அவரை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு அமையவேயில்லை. அனுப்பிய சில புத்தாண்டு வாழ்த்துக்கள் காலப்போக்கில் நின்றும் போயின.

யோசித்துப் பார்க்கிறேன். அவருடைய எழுத்துக்கள் ஏற்படுத்திய தாக்கத்தைவிட, அவருடைய சில குணநலன்களும் பண்பும் தக்க சமயத்தில் ஸ்வீகரித்துக் கொண்டிருந்தேன். மற்றவர்கள் பேச்சை செவிமடுத்தல், யாரையும் புண்படுத்திவிடாத கனிவான பேச்சு, கருத்து வேறுபாட்டிலும் கண்ணியம் தவறாமை, எளிமை அவருடைய தனித்தன்மை.

அண்மைக்கால சென்னை பேரிடர் வெள்ளத்தின் அவலமான தருணத்தில், அவர் மறைந்தது பெரும் சோகம். குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு, ஈமக் கிரியைகள்கூட மிகுந்த பிரயாசைக்கிடையில் செய்யப்பட்டது அறிந்து கண்ணீர் சிந்தினேன். அவருடைய அன்பான வார்த்தைகளும் , குறுநகை தேங்கிய முகமும் பலகாலம் நினைவில் நிற்கும்.

சமூக உணர்வு மிக்க ஒரு மனிதராய் இருந்த விக்கிரமன் சார் வாழ்க்கையிலும் நாம் படித்துக் கொள்ள பல உன்னத ஏடுகள் இருக்கின்றன.      

 
( புகைப்படம் நன்றி கூகிள்)








28 comments:

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

விக்கிரமன் சாரின் தனித்தன்மைகள் பற்றியும், அவரை சிலமுறை சந்தித்தது பற்றியும் மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

போற்றுதலுக்கு உரிய மாமனிதர்

sury siva சொன்னது…

படிக்கும்போதே என்ன எழுதலாம் பின்னூட்டமா என்று
எண்ணியது எல்லாமே முடிவு வரும்போது
மறந்து போயிற்று. என் கண்ணீரில்
கரைந்து போயிற்று.

வேம்பு இவர்தானா !! அறியேன் நான்.

அது என்ன பேப்பர் ரோஸ்ட் ?
ஒரு விள்ளல் எடுத்து அனுப்பினீர்கள் என்றால்,
மென்று பார்க்கிறேன்.

சுப்பு தாத்தா.

'பரிவை' சே.குமார் சொன்னது…

விக்கிரமன் சார் குறித்த பகிர்வு நன்று...
மிகச் சிறப்பானவர்.... இறுதி பாரா படித்து கண் கலங்கியது...

பேப்பர் ரோஸ்டை கொஞ்சம் இங்கிட்டும் போடுங்களேன்... ருசி பார்ப்போம் மோகன் அண்ணா....

ஸ்ரீராம். சொன்னது…

அந்த குளிர்சாதனப் பெட்டி கிடைப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டார் அவரது மகன் என்பதையும் பத்திரிகையில் சொல்லி இருந்தார். எப்பேர்ப்பட்ட மனிதரின் முடிவு எப்படி அமைந்தது என்பது வேதனை.

‘பத்திரிகை பொறுப்புகள் இன்றி வெறும் படைப்பாளியாகவே நீங்கள் இருந்திருந்தால் நிறைய எழுதியிருப்பீர்கள் சார்!’ என்பதில் எனக்கும் உடன்பாடு. நந்திபுரத்து நாயகி நான் இதுவரை படித்ததில்லை. விக்ரமன் அவர்களை தஞ்சாவூர் எழுத்தாளர் மாநாட்டில் பார்த்திருக்கிறேன். அப்போது அன்பு வேதாச்சலம் அதன் தலைவர் என்று நினைக்கிறேன். என் அப்பாவும் அதில் ஏதோ ஒரு பொறுப்பில் இருந்தார். அதனால் அருகிலிருந்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்பாவுக்கும் விக்ரமன் அவர்களுக்கும் அவ்வப்போது கடிதத் தொடர்பு இருந்தது.

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி வை.கோ சார்!
ஒரு படைப்பாளியாக மட்டும் ஒதுங்கிவிடாமல், நல்ல நிர்வாகியாகவும் இருந்தார். மக்கள் தொடர்பு இவருக்கு கைவந்த கலை. சமரசங்கள் செய்து கொள்ளாமல் ஒரு பூரண வாழ்க்கை வாழ்ந்தவர் என்பதை அவர்மேல் விமரிசனம் உள்ளவர்கள் கூட ஒப்புக் கொள்வார்கள்.

மோகன்ஜி சொன்னது…

கரந்தையாரே! நீங்கள் சொன்னதுபோல் அவர் போற்றுதலருக்குரியவர் தான். சந்தேகமில்லை.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
சென்னை வெள்ளம் வந்த அமளியின்போது உங்களை அலைபேசியில் நலம் விசாரிக்க தொடர்பு கொண்டேன். அப்போது இவர் பற்றிய பிரஸ்தாபம் செய்தீர்கள். வேம்பு என்ற எழுத்தாளர் என்று. அவரே விக்கிரமன் சார் என்றும், அவர் குறித்தும் உங்களுக்கு சொன்னதும் நினைவிருக்கிறது.
'பேப்பர் ரோஸ்ட்' பெயரை 'கூளம்' என்று அவர் மாற்றிய கதை அடுத்த வாரம் வெளியாகும். படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.


மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார்! கதை அடுத்த வாரம் வெளியாகும். படித்து உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

ஸ்ரீராம்!
ஒரு மனிதனின் மரணம்,அவர் சார்ந்த குடும்பத்துக்குத் தான் எத்தனை பெரிய இழப்பு? அந்த இழப்பையும் தாங்க முடியாமல், வெள்ளப் பேரிடரின் கையறுநிலையில், அவர் குடும்பம் என்ன பாடுபட்டிருக்கும்? முதலில் ப்ரிட்ஜுள் உடலைவைத்து, எதுவும் செய்ய முடியாத நிலையில் அந்த வீட்டினுள்ளேயே புழங்கிக் கொண்டு பாழும் வயிற்றுக்கு ஏதும் உண்டேயாக வேண்டிய அவசியத்தில்,எப்படி எல்லாம் தவித்திருப்பார்கள்? கோரம்.

ஆனாலும் அவர் தன் ஈமக் கிரியைகள் எளிமையாக இருக்க வேண்டுமென்றும், அவர் மனைவி எப்போதும் போல பூவும் பொட்டுமாய் இருக்க வேண்டும் என்றும் எழுதி வைத்திருந்தாராம். என்னவோர் மனசு? அடுத்த முறை சென்னை செல்லும் போது மாமியைப் பார்த்து வர வேண்டும் என இருக்கிறேன்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அவரிடம் உள்ளம் எளிமையே அனைத்திலும் முதன்மை என்று புரிகிறது...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
போற்றுதலுக்கு உரிய மனிதர் பற்றி மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

மோகன்ஜி சொன்னது…

வாங்க தனபாலன் ! எளிமை எதையும் மனதார ஏற்கும்!எங்கும் விரும்பியதை சேர்க்கும்!

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ரூபன்!

கோமதி அரசு சொன்னது…

திரு . விக்கிரமன் அவர்களைப் பற்றி பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

எளிமையானவர். போற்றுதலுக்கு உரியவர்.
உங்கள் பேப்பர் ரோஸ்ட் படிக்க ஆவல்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி கோமதி அரசு மேடம்! என் கதை அடுத்த வாரம் வரும்...

நிலாமகள் சொன்னது…

அடுத்த முறை சென்னை செல்லும் போது மாமியைப் பார்த்து வர //

நல்லதொரு அஞ்சலியில் ஒரு 'தொடரும்...'

மோகன்ஜி சொன்னது…

மனைவியை எவ்வளவு நேசித்தார் என்பதை அவர் இறுதி விருப்பம் புலப்படுத்துகிறது. ஒரு படைப்பாளியின் வெளிப்பாடுகளின் முழுமை, புரிதல் கொண்டு ஆதரவும் அளிக்கும் வாழ்க்கைத்துணையின் கைகளில் தான் இருக்கிறது. தாம்பத்தியமே பெரும்பாடாக நகர்த்தும் வாழ்க்கை அமைந்தால், படைப்பேது? பகிர்தலேது?? அந்த வகையில் திருமதி விக்கிரமன் நம் போற்றுதலுக்குரியவர்.

sury siva சொன்னது…

ஞாபகம் வந்திருச்சு. என்ன சொல்லணும் அப்படின்னு நினைச்சேன் அப்படின்னா.....

"யோவ்..சுப்பு தாத்தா !! உனக்காகத் தானே அந்த கழுத்தறுப்பு ஆசாமி பத்தி விலா வாரியா எழுதியிருக்காரு...."

" இல்ல. நான் வந்து......"

" நீ என்ன சொல்லணும் அப்படின்னாலும் அடுத்த பதிவுக்கு வரும்போது சொல்லு. ஒரு பதிவுக்கு ஒரு தடவை தான் பதில் போடணும். ..இல்லைனா....."

"வேண்டாம் சார். வர்றேன். "

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

சுப்புத் தாத்தா!
உங்களை கழுத்தறுப்பு என்று எப்படி சொல்லப் போனது?! நீங்கள் கழுத்தில் விழுந்த பூமாலை அல்லவா? இப்படி சொன்னதிற்காக உங்களோடு கொஞ்ச நாள் 'டூ' விடலாம் எனப் பார்க்கிறேன்.
ஒருபதிவைத்தான் ஒரு தடவைக்கு மேல் போடுவது கொஞ்சம் ரசக்குறைவு.... கருத்துக்கள் பலபோடுவது அல்ல ... இன்னைலேயிருந்து வரும் செவ்வாய்வரை 'டூ' அமலில் இருக்கும்.

Geetha Sambasivam சொன்னது…

எதிலும், எவரிடமும் நீங்கள் காட்டும் ஆழ்ந்த ஈடுபாடு வியக்க வைக்கிறது. நான் அப்படி இல்லை என்பதே எனக்கு இதில் வியப்பை ஏற்படுத்துகிறது. நந்திபுரத்து நாயகி பல முறை படித்திருக்கிறேன். படங்கள் கூட ஆரம்பத்தில் அமுதசுரபியில் வந்தப்போ மணியம் தான் வரைந்திருந்ததாக நினைவு! பின்னர் புத்தகமாக வெளி வந்தும் படித்திருக்கிறேன். ஆனாலும் அவர் எழுத்தில் அத்தனை ஈடுபாடு தோன்றியதில்லை. சென்ற வருடம் சென்னைப் பேரிடர் சமயம் அவர் இறந்ததும் உடலை வைக்க வழியின்றித் தவித்ததும் எங்கள் மின் தமிழ்க் குழுமம் மூலம் அறிந்து வருந்தினேன். அதற்கு மேல் தனிப்பட்ட கவனம் அதில் இல்லை! உங்கள் பதிவைப் படித்தால் கொஞ்சம் வெட்கமாகவே இருக்கிறது. ஒட்டியும், ஒட்டாமலும் இருக்கிறேனோ? தெரியவில்லை!

Geetha Sambasivam சொன்னது…

//படைப்புகளை அச்சில் பார்க்கும் ஆர்வம் எனக்கில்லை என்பதை கண்டித்திருக்கிறார்.//
உங்கள் அளவுக்கு ஆழ்ந்த புலமையுடன் நான் எழுதியது இல்லை; இனிமேல் எழுதப் போவதும் இல்லை! என்றாலும் புத்தகமாக்கும் எண்ணம் எனக்கும் இல்லை; ஆனால் என்னுடைய சில பயணக்கட்டுரைகளையும், சிதம்பர ரகசியம் போன்ற தொடர்களையும் புத்தகமாக்க என் கணவர் விரும்பினார். என்றாலும் இயலவில்லை.மின்னூலாக்கி வெளியிட அனுமதி கொடுத்துவிட்டேன். பிரச்னையே இல்லை! ஏதேனும் ஒன்றைக்குறித்து யாரானும் ஒரு வாசகர் தினம் ஒரு கருத்துப் பகிர்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவே போதுமானது! :)))))

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

சென்னை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் பாரதி பணிச்செல்வர் என்ற விருதினை 2001இல் எட்டயபுரத்தில் ஐயா எனக்கு வழங்கிய நாளை இப்போது நன்றியுடன் நினைவுகூற விரும்புகிறேன். பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். தங்களின் பகிர்வுக்கு நன்றி.

Ajai Sunilkar Joseph சொன்னது…

அருமையான சந்திப்பு
வாழ்த்துக்கள் நண்பரே....

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்! நலம் தானே?
//எதிலும், எவரிடமும் நீங்கள் காட்டும் ஆழ்ந்த ஈடுபாடு வியக்க வைக்கிறது//

ஆழ்ந்த ஈடுபாடின்றி இலக்கிய ரசனை இல்லை.
கூர்ந்த கவனிப்பின்றி தேர்ந்த படைப்புகள் இல்லை அல்லவா?

உகலிடம் இருக்கும் ஈடுபாட்டினால் தானே நீங்களும் இவ்வளவு பதிவுகள் இட்டிருக்கிறீர்கள் அக்கா?

மோகன்ஜி சொன்னது…

அச்சில் பார்க்கும் ஆர்வம் இல்லாமல் இருந்தது எளிமை என்பதை விட, அது ஒரு பொறுப்பாக கமிட் ஆவதற்கான தயக்கத்தால் தானோ? எனத் தோன்றுகிறது.

ஆனாலும் என் நண்பர்கள் இன்னை விடுவதாயில்லை. என் பிள்ளைகளும் இப்போது அரிக்கிறார்கள். எனவே புத்தகங்கள் வெளியிட நீண்ட தயக்கத்துக்குப் பின் தயாராகிவிட்டேன். உங்களுக்கு செலவிருக்கிறது!

மோகன்ஜி சொன்னது…

முனைவர் ஜம்புலிங்கம் சார்! விக்ரமன் சார் கைகளால் நீங்கள் விருது பெற்றது மகிழ்வளிக்கக் கூடிய செய்தி.நீங்களும் சாரைப் பற்றி எழுதுங்களேன்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி அஜய் ஜோசப் சார்!