ஞாயிறு, மே 29, 2016

ஜெயமோகனின் காடு நாவல் - சில எண்ணங்கள்

2004ஆம் வருடம். கோவையிலிருந்து ஹைதராபாத்திற்கு ரயிலில் பயணம். விடாத மழையில் விரைந்து கொண்டிருந்த ரயிலில்தான் முதன்முறையாக காடு நாவலைப் படித்தேன். கோவையில் ஆரம்பித்த நாவலை, நான் முடிக்கும் போது ஹைதராபாதை நெருங்கியிருந்தேன்.

அந்தப் பயணம் முழுவதும் நான் என் வசம் இல்லை. சமயம் வாய்க்கும் போதெல்லாம் காடுகளில் சுற்றிய எனக்கு, இந்த நாவல் ஒரு அந்தரங்கமான அனுபவமாக இருந்தது.கடந்த பன்னிரண்டு வருடங்களில், மேலும் மூன்று வாசிப்புகள் முடித்திருந்தேன்.


நீண்ட இடைவெளிக்குப் பின்பு,நான்கு நாட்களுக்கு முன், புதியதாய் வாசிப்பவன் போல் ஒரு பாவனை மேற்கொண்டு, ஐந்தாம் முறையாக வாசிக்கத் தொடங்கினேன். ஆயினும், எனக்குள் இருந்த கதையையும்,பதிந்த முகங்களையும், மனதுள் முகிழ்ந்திருந்த சம்பவங்களின் சூழல் காட்சிகளையும் மீறி ,அவற்றின் மேல் புதிதாய் ஒன்றை அழித்தெழுத இயலவில்லை. பழைய பாட்டையிலேயே வாசிப்பு நடந்து முடிந்தது.

                                             


என்றுமே நான் இந்தக்கதை மாந்தரின் மொழியை  பேசப் போவதில்லை. என்றும் இந்தக்கதையின் நாயகன் போல் உருகிஉருகி அலையப் போவதில்லை. இந்தக் கதையின் பாத்திரங்கள் போன்ற குணமும் ஆளுமையும் கொண்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பும் இருக்கப் போவதில்லை. எனினும், இது எனக்கு நெருக்கமான கதை. காடும், விரவிய சங்கக்கவிதைச்சிதறல்களும், தொட்டுச் சென்ற தொன்மமும், காதலின் உன்மத்தமும் தான் இந்த நெருக்கத்திற்கு காரணங்களாக இருக்கலாம்.

அம்மா சுடச்சுடத்தரும் வெண்பொங்கல் நினைவுக்கு வருகிறது'.லேகியம் போல கிளறியிருக்கேன். சாப்பிடுடா தங்கம்' என்று அருகிருந்து பரிமாறும் அவள் குரலின் கனிவும் நினைவிலாடுகிறது.. குழைந்த அரிசிபருப்பின் கூடவே மிளகு,நறுக்கின இஞ்சித்துண்டு,முந்திரிப் பருப்பும் சேர்த்து நெய்யையும் உருக்கியூற்றினால் தான் அது வெண்பொங்கல். இந்தக் காடு நாவல் கூட வெண்பொங்கல் போன்ற ஒரு கலவை சுவைதான்.

காடே அரிசியாகவும், காதல் பருப்பாகவும்,மிளகு காமமாகவும்
இஞ்சித்துண்டுகள் கட்டற்ற பெருந்திணையாக காமத் திளைப்பாயும்,
முந்திரிப்பருப்பு சங்கப் பாடல்துணுக்குகளாகவும்
நெய்மணமோ மலையாத்தி நீலியாகவும் ஆன பொங்கல் காடு.
இதில் மிளகையும் இஞ்சியையும் ஒவ்வாதவர்கள் அவற்றை ஒதுக்கிவிட்டாலும் காடு வாசிப்பு சுவை குன்றாது.

மிளகின் விறுவிறுப்பும் இஞ்சியின் மணமும் வேகமும்தான் பொங்கலுக்கு சுவை சேர்க்கின்றன என்பதையும் உணராமலில்லை. அவையன்றி பொங்கல் பொங்கலாக இருந்திருக்காதுதான். இந்தக் கதைக்கு இன்றியமையாத நுட்பமான உள்சரடு,  அந்தக்காமத்தின் சதிராட்டமதான். சித்தர்பாடல்கள் போல,அருணகிரியின் பாடல்கள் போல வெளிப்படையாக சொல்லப் படுகிறது. அவர்களெல்லாமும் காமத்தை வெளிப்படையாக சொல்லிவிட்டு,அதை தவிர்க்கச் சொன்னார்கள் . ஆசிரியரும் அதை வெளிப்படையாகத்தான் சொல்லிச் செல்கிறார். காமத்தின் இன்றியமையாமையை , மானுடத்தின் ஆடையில் ஊவாமுள்ளாய் பொதிந்திருக்கும் அதன் உறுத்தலை, சொன்னபடி செல்கிறார்.

இந்தக்காட்டின் மறுபக்கம் தறிகெட்டலையும் காமம் தான். வசப்படாத காட்டின் மர்மங்களே போல், காமமும் ஒரு தைய்யமாக மானுடத்தை ஆட்டிவைக்கும் கதையை பந்திவைக்கிறார் ஆசிரியர். நகரங்களின் நிகழும் மேல்பூச்சுகளின்றி, சடுதியில் சதிராடுகிறது காமக்களி. விரசமா இந்த விவரணை என்று யோசித்துமுடிக்குமுன், காட்டுமழையின் வேகத்தோடு காமச்சாரல் பொழிந்து விடுகிறது. மழையை கேள்வி கேட்பது எங்ஙனம்? அதுவும் பொழிந்தபின்??

கதாநாயகன் கிரியின் உன்னதமான காதலின் தவிப்பையும், அந்தத் தவிப்பினால் உந்தப்பட்ட எண்ணங்களின் தறிகெட்ட ஓட்டத்தையும் கவிதையைப் பிழிந்து எழுதியிருக்கிறார் ஜெயமோகன். கதைசொல்லலினூடே, பிரமிக்கவைக்கும் உவமைகள் தரும் கிறக்கத்தில் அங்கங்கே நின்று மலைத்து, வாசிப்பைத் தொடர நேர்கிறது.மிகப் பொருத்தமாக, செறுகலாக அன்றி, சங்கப்பாடல் வரிகள் கதையில் இழையோடுகின்றன.

இதன் கதாபாத்திரங்கள் யாவரும் தன்னளவில் முழுமையானவர்களாகவும், கதாநாயகனுக்கு சிறப்பு அந்தஸ்து ஏதுமின்றியும் நாவல் நிர்தாட்சண்யமாக நீள்கிறது. காடே கதாநாயகனை மீறிய உயிர்ப்புடன் நம் புலன்களில் விரிகிறது. குட்டப்பன், ரேசாலம்,குரிசு, அய்யர்,கிரியின் மாமா,மாமி, அம்மா,வேணி, சினேகம்மை,ரெஜினாள்,ஆகியோரின் பாத்திரங்கள் கச்சிதமாக படைக்கப் பட்டிருக்கின்றன. தேவாங்கும்,மிளாவும், கீறக்காதனும், ஏன் அயனிமரம் கூட கதையின் ஓட்டத்திற்கு பங்காற்றியிருக்கின்றன.

காட்டின் உள்ளிட்டை, இவ்வளவு தெளிவாகவும் விவரமாகவும் சொன்ன பிரிதோர் ஆக்கம் தமிழில் வந்திருக்குமா என்பது சந்தேகமே. எனது பதினெட்டாம் வயதில் , சபரிமலையின் அடர்ந்த காட்டில் எனக்கோர் மறக்கவியலாத அனுபவம் ஏற்பட்டது. ஒரு குருஸ்வாமியின் துணையாக ஓர் புழக்கம் அற்றுப்போன ஒரு வழியில் காட்டினுள்ளே செல்ல நேர்ந்தது.அது எல்லோரும் செல்லும் பாதையல்ல . நான் துணை செல்ல ஒப்புக்கொண்டது ஆர்வக் கோளாறாலும் வயதுக் கோளாறாலும் எனச் சொல்லலாம். காட்டின் உள்ளிருந்து மூன்றுமணிநேரம் கழித்து வெளியே பொதுவழிக்கு மீண்ட   போது, வேறொரு மனிதனாய் வந்தேன். உடம்பே கண்ணாக, உடலே ஒரு இதயமாக, சாகசம் ஒடுங்கி, பயம் வடிந்து, பக்திகூட பயமோ என்றுணர்ந்து, நினைவழிந்து நிர்மலமாகி இருந்தேன். இந்தக் கதையில் காடு விவரிக்கப்படும் இடமெல்லாம் என் அனுபவம் விழித்துக் கொள்ளும். உணர்ந்த ஒருவனுக்குத்தான் அந்த எழுத்தின் உயரம் புரியும் போலும் . அது வெறும் விவரணை அன்று. ஆசிரியருடைய வித்வத்தின் வெளிப்பாடு!.

குறிஞ்சித் திணையின் அழகியல்,மண்மனம் போல் கதையெங்கும் மணந்து கிடக்கின்றது. கதாநாயகன் கிரியின் நனவும் கனவும் ஒன்றோடொன்று இழைந்து கிடப்பதை சிலந்திவலையின் இழைபின்னலாக கதைபின்னிச் செல்கிறது. கூர்ந்த வாசிப்பினுடே அதை நாம் உள்வாங்கும் போது, அந்த மயக்கே இந்தப் படைப்பிற்கு ஒரு அலங்காரமாகிறது .

காடழிவின் நிதர்சனத்தை கதை காட்டிச் செல்லும்போது, அடிவயிற்றுள் கல் விழுந்தது போன்ற துக்கம் நம்மைக் கவ்விக் கொள்கிறது. மனிதனின் கயமைக்கு விடிவே இல்லையா என்ற பதற்றம் பற்றித் கொள்கிறது.

கதையின் முதலிலேயே வரும் காஞ்சிரமரத்தின் கசப்பை, அதில் வாழ்ந்த வனநீலியின் நிழலசைவை வாசித்தபின், அது மனத்தின் ஆழத்தில் பரவிப் புரள்கிறது. கண்ணாடி கோளத்தின் கீழே காற்றில் படபடக்கும் காகிதம் போல் அது அங்கே அல்லாடியபடி இருக்கிறது. எந்தநேரமும் அந்தக் கோளத்தை உருட்டிவிட்டுவிட்டு காகிதம் பறந்து விடுமோ எனும் கிலி படர்கிறது.  கதைமுடியும் வரை கூடவரும் அந்த போதத்தின் பதைப்பு, எழுத்தாளனின் கையொப்பம்; முத்திரையுடன் இடப்பட்ட நேர்த்தி.

இந்தக் கதையின் மொழியும் வார்த்தைகளும் புத்தம்புதியவை. ஐந்தாவது வாசிப்பிலும் மங்காது சுடர்விடுகின்றன. ஜெயமோகனின் நீலம் படித்த உன்மத்த தருணங்களிலும்கூட, காடுஏனோ  நினைவுக்கு வந்தபடியே இருந்தது. இந்தக்  கதையின் பல வரிகள் எனக்கு பாடாந்திரம் ஆனவை எனதான் சொல்ல வேண்டும். ('காடாந்திரம்'ஆனவை என சொல்ல வேணுமோ?!)

இந்த நாவலை, ஜெயமோகன் தனக்கே தனக்காக எழுதிவைத்து, போனால் போகிறது என்று வாசகருக்காய் விட்டுக் கொடுத்து விட்டாரோ எனும்படியான கட்டற்ற அந்தரங்க எழுத்தாய் காடு மிளிர்கிறது.

அந்த மிளாவின் காலடித்தடங்கள் கல்வெர்ட்டின் சிமிட்டி சுவர்மாட்டில் மட்டுமா பதிந்திருக்கிறது? என் மனசில் கூடத்தான்.


காடு நாவல்
தமிழினி வெளியீடு
ரூ 190/-
 (படங்கள் நன்றியுடன்: கூகிள்)

85 comments:

ஜீவி சொன்னது…

கொஞ்சம் கொஞ்சமாக மோகன்ஜி, வானவில் மனிதனாக வெளிப்படுவது தெரிகிறது.

'காடு' நாவல் குறித்து நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களிலிருந்து பின்னூஈட்டங்கள் விலகிப் போய் விடாமல் தடம் பதித்தால் அந்த அனுபவம் அற்புதமாக இருக்கும்.

உதாரணமாக நீங்கள் ஒப்புமைக்கு எடுத்துக் கொண்ட வெண்பொங்கல் சமாசாரம். வெண்பொங்கல் எப்படிச் செய்ய வேண்டும், தளரவா கெட்டியாகவா, முந்திரிப் பருப்பை நெய்யில் லேசாகப் பிரட்டலாக வறுத்துப் போட வேண்டுமா, இல்லை, மெல்லிசாக கறுப்புத் தட்டும் அளவுக்கா, 'எனக்குப் பிடித்த வெண்பொங்கல் எப்படி இருக்க வேண்டும்' என்றெல்லாம் வேறு திசைகளில் பின்னூட்டங்கள் விலகிப் போய் விடாமல்..

விலகிப் போய் விடின், ஒரு இலக்கியவாதியின் ஆழ்ந்த எழுத்தாற்றலுக்கு இழைத்த அநீதி அதுவேயாகிப் போதும்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

ஜெயமோகனின் இரண்டே இரண்டு கதைகள் வாசித்திருக்கிறேன்.ஒன்று யானை டாக்டர். இன்னொன்று பத்ம வியூகம். இரண்டும் ஜெயமோகன் மீதான ஈர்ப்பை உருவாக்கியது. அவரது வலைப் பக்கங்களில் காந்தியைப் பற்றி எழுதிய கட்டுரைகள் எனக்குப் பிடித்தமானவை. காடு நிச்சயம் படிக்க வேண்டிய நாவல் என்பதை உங்கள் எழுத்து வழி உணர்ந்தேன்

மோகன்ஜி சொன்னது…

ஜீ.வி சார்!

சில வருடங்களுக்கு முன், வானவில் மனிதனில் பல பதிவுகளில் நல்ல விவாதங்கள் நடை பெற்றன. பல பதிவர்கள்,இவற்றிலிருந்து கற்றுக்கொள்வதாகவும், பின்னூட்ட பதில்களை தொடரவேண்டியும் கேட்டுக் கொண்டதுண்டு. எனவே கிடைக்கும் நேரத்தில் பின்னூட்டங்களும் விளக்கங்களும் தொடர்கின்றன.

ஆனாலும் பெரும்பாலான பதிவர்கள்முகநூல் பக்கம் உபத்திரவமில்லாமல் ஒதுங்கினாலும் நம்மைப் போல சிலர் விடாப்பிடியாக வலைப்பூவில் தொடர்கிறோம் அல்லவா? முடிந்ததை செய்வோம்.

நீங்கள் குறிப்பிட்ட பொங்கல் சமாச்சாரம் நகைச்சுவையாக சொல்லப்பட்டிருந்தாலும் ,அந்த விபத்து நடந்தபடி தான் இருக்கிறது. விவாதம் மையம்விட்டு விலகி,திசைமாறி எளிமையாக இறங்கி விடுகிறது.
இருந்த போதிலும், ஒரு நல்ல கருத்து பதிவானாலும், இறங்கியதை நெம்பி மேலேற்றி நேர்சாலையில் செலுத்துவதில் ஒரு சவாலை உள்ளது.

என்ன சார் செய்ய? விவாதம் விலகாமல் கிளர்ந்து வந்தால் ஜெயமோகன். தளர்ந்து குழைந்தால் சமையல் குறிப்பு!

மோகன்ஜி சொன்னது…

அன்பு முரளி,
உங்கள் இலக்கிய ஆர்வம் நன்கறிந்தவன் என்றமுறையில், ஜெயமோகன் எழுத்தை இந்த வரிசையில் தொடருங்கள்.இதை காலவரிசையில்
நான் பரிந்துரை செய்யவில்லை.

1. அறம் தொகுதி
2. காடு
3. சங்கச் சித்திரங்கள்
4. கொற்றவை
5. பின் தொடரும் நிழலின் குரல்
6. நீலம்
7. விஷ்ணுபுரம்

நடுநடுவே 'மானே தேனே 'என்று அவர் தளத்திலேயே சிறுகதைகள்.
அதன்பின் .... பின்னென்ன? ஜெயமோகனுக்கே அவருடைய கதைகளை நீங்களே பரிந்துரை செய்வீர்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் வலைத்தளத்தைப் பாராட்டி எழுதியவர்களில் ஒருவர். தங்களது இந்நூல் அறிமுகம் வாசிப்பின் மீதான ஆர்வத்தை உண்டாக்கியது. அவசியம் படிப்பேன். பகிர்வுக்கு நன்றி.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அவசியம் வாங்கிப் படிக்க வேண்டியதன் தேவையை தங்களின் விமர்சனம் உணர்த்தியுள்ளது
நிச்சயம் வாங்கிப் படிப்பேன்
நன்றி

sury siva சொன்னது…

//காடு' நாவல் குறித்து நீங்கள் சொல்லியிருக்கும் கருத்துக்களிலிருந்து பின்னூஈட்டங்கள் விலகிப் போய் விடாமல் தடம் பதித்தால் அந்த அனுபவம் அற்புதமாக இருக்கும்.//


புரிஞ்சுகிட்டேன்.



அடுத்த பதிவு எப்போ சாரே மோகன் ஜி ?

சுப்பு தாத்தா.

Geetha Sambasivam சொன்னது…

சு.தா.வை வழிமொழிகிறேன். நான் படித்த ஒரு சில ஜெயமோகன்களுள் காடு ஒன்றாக இல்லை. எனினும் உங்கள் விமரிசனத்தின் இந்தக் குறிப்பிட்ட வரிகள் மனதைக் கவர்ந்தன.

//காடழிவின் நிதர்சனத்தை கதை காட்டிச் செல்லும்போது, அடிவயிற்றுள் கல் விழுந்தது போன்ற துக்கம் நம்மைக் கவ்விக் கொள்கிறது. மனிதனின் கயமைக்கு விடிவே இல்லையா என்ற பதற்றம் பற்றித் கொள்கிறது.//

உங்கள் விமரிசனம் வெகு சுவாரசியம். நன்கு ரசித்து அனுபவித்துக் காட்டுக்குள்ளே இருந்து கொண்டே எழுதி இருக்கிறீர்கள். காடாந்தரமான அனுபவம் தான்.

மோகன்ஜி சொன்னது…

முனைவர் ஜம்புலிங்கம் சார்,

உங்கள் முயற்சி பாராட்டப் படவேண்டியது அல்லவா? இந்த அறிமுகம் உங்களுக்கு காடு நாவல் வாசிக்கப்பட்டது தூண்டுவது மகிழ்ச்சியே.
அவசியம் படியுங்கள்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க கரந்தையாரே!
நிச்சயம் படிப்பேன் என நீங்கள் சொல்வதற்கு நன்றி.
படித்தபின் 'தவறவிட்டிருப்பேனே மோகன்ஜி'என்பீர்கள்!

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
ஜீவி சாரை எப்படி புரிந்து கொண்டீர்களோ அறியேன்.

என் அடுத்தப் பதிவிற்கு அச்சாரம் பலமாய்அல்லவா இருக்கிறது?!

மோகன்ஜி சொன்னது…

கீதாக்கா,

மொழி வழியும் சுப்புத்தாத்தாவுக்கு வழிமொழியும் நீங்கள்
வனம் அழியும் வருத்தத்தில் பங்கெடுப்பதில் ஆறுதலடைகிறேன்!

sury siva சொன்னது…

கதைக்கு மூன்று விதிகள் என்று ஒரு முக்கோண சிறைக்குள் அடைக்க முற்படும் ஜெயமோகன் அவர்கள்

கதையின் விமர்சனத்துக்கும் மூன்று விதிகள் சொல்லியிருக்கலாமோ ?

ஒரு இலக்கியப் படைப்பின் விமர்சனமோ அல்லது அந்த விமர்சனத்தின் விமர்சனமோ இப்படித்தான் இருக்கவேண்டுமேனவோர் விதியிருந்தால், சாமுவேல் பெக்கெட் போன்றவர்களின் படைப்புகள் தோன்றியிருக்கவே சாத்தியம்மில்லை.
நிற்க.
காடும் காமமும் ஒன்றே ஒரு கோணத்தில்.
காடு தனிமை தரும் பீதி.
காமம் தனிமை காட்டும் வீதி.

ஒரு பாடல் எப்படி சொல்கிறது பார்ப்போமா...


காமம் காமம் என்ப; காமம்,
அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின்,
முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல்
மூதா தைவந் தாங்கு
விருந்தே காமம் பெருந்தோ ளோயே
என்ற குறுந்தொகைப்பாடல் (204 – குறிஞ்சித் திணை – மிளைப் பெருங்கந்தன்)

சு.தா.

ஜீவி சொன்னது…

//புரிஞ்சுகிட்டேன். //

மன்னிக்கணும், சுதாஜி!

அதான் ரெண்டு பக்கமும் இலை போடலாம்ன்னு மோகன்ஜி சொல்லிட்டாரே!

மயக்கமென்ன, இந்த மறுமொழிதான் என்ன,
தங்கள் பங்களிப்புடன் ஐம்பதாவது எட்ட வேண்டாமோ, சுதாஜி?
தயக்கமென்ன, இந்த சலனமென்ன, அன்பு காணிக்கை தான் பின்னூட்டங்களே!

Geetha Sambasivam சொன்னது…

சு.தா. வழக்கம் போல் கலக்கறார். ஆனாலும் உங்கள் பொங்கல்--காடு நாவல் குறித்த ஒப்பீடுகளைக் குறித்து விவாதிக்கலாம், இந்தக் கதையைப் படித்தவர்கள் மட்டும். நான் வெளியே இருந்தே படிச்சு ரசிச்சுக்கறேன். பங்கெடுக்க முடியாது! :)

sury siva சொன்னது…

தொன்று தொட்டு மொழி வல்லுனர்கள் கூற்றே இலக்கியத்தில் இலக்கண வல்லுனர்களின் தேவையற்ற அதிகப்படியான, சொல்லப்போனால் இன்றைய சுப்ரீம் கோர்ட் போன்ற, big brother attitude and intervention, காரணமாகத் தான் மொழி சிதைவது உருக்குலைந்து போவது வேறு ஒரு உரு எடுத்துக்கொள்வது ஆனாலும் அதே பொருளில் பயன் படுவது, அதே பொருளில் வேறு ஒரு உருவில் செயல்படுவது.

அன்றைய சம்ஸ்க்ருதம் இன்றைய கடி போலி எனச் சொல்லப்படும் ஆதுனிக் ஹிந்தி வரை நடுவே, கிட்டத்தட்ட 4 முதல் 6 மொழிகள் இருக்கின்றன. பாலி , ப்ராக்ருதம், வ்ரஜ பாஷா, பீஹாரி . ஒவ்வொரு தடவையும் மொழி இலக்கண வல்லுனர்கள் இலக்கியம் என்பது இப்படித்தான், சொல் என்றால் இது தான், வாக்கியம் என்றால் இது தான் என்று வரையறை செய்கிறார்கள் .

தமிழைப் பொருத்தவரை, பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும்
புடவைக்கும் ஜீன்சுக்கும் உண்டான மாற்றம் போல ஆகிவிட்டது.

முதல் முதலில் ஆர்தர் ப்ரீச்லி எனப்படும் ஆங்கில இலக்கிய மேதை சொன்னார்:
மக்களால் எந்த எண்ணங்களையும் எழுத்து வடிவாக்கி அவற்றினைக் கோர்த்து சொல்லாக்கி, சொற்களைத் தொடுத்து மாலையாக்கி தருவதே இலக்கியம்.

காடு விமர்சனம் ஒன்றில் நான் படித்தது:

"ஒரு இடத்தில் சந்திக்கும்போது அய்யர் கூறுவார் உன்னை எல்லோரும் சீராட்டவேண்டும் என நினைக்கிறாய் அதுதான் காரணம் என்று. பருவத்தில் உயர்ந்த மனிதர்களாக நம்மை நினைப்பதும் சராசரியாக சாதாரனமானவனாக பின்னால் சரியும்போது ஏற்படும் அந்த‌ உள்ளச்சரிவுதான் அது என நினைக்கும்போது தான் அந்த சரிவு சரியே என படுகிறது."

இது தனி மனிதனுக்கு மட்டுமல்ல,ஒரு இலக்கிய கர்த்தாவுக்கும் பொருந்துமோ என்று மோகன் ஜி சார் தான் சம்சாரிக்கவெண்டும்.

சுப்பு தாத்தா

மோகன்ஜி சொன்னது…

சு.தா!

கதைக்கு விதிகள்,விமரிசனத்துக்கு விதிகள், விமரிசனம் மேலான விமரிசனத்துக்கு விதிகள் என்று புதியதாய் ஏதோ சொல்கிறீர்களே சுதா!

உண்மையில், சில விதிகளை உடைத்துத் தாண்டி செல்பவையே இலக்கியங்களாக தடம் பதித்திருக்கின்றன. 'பாட்டிடையிட்ட உரைநடைச்செய்யுள்' என இளங்கோ மீறிய விதிதான் சிலம்பை இலக்கிய உச்சத்தில் வைத்தது. கம்பரை ஓட்டக்கூத்தர்முதல் பல புலவர்களும் ஏற்கவில்லையே?பொது ஜனங்களின் வழக்குமொழிகளை புழங்கினார் என்றல்லவா எதிர்த்தார்கள்?

பாரதி இலக்கணவிதிகளை மீறிய கவிஞன் என்று அவன் காலத்திலேயே எதிர்க்கப் பட்டான். ஆசாரமான புலவர்கள் ஏற்க வில்லை.

இந்தக்கதை'காடு'வெளிவந்த காலகட்டம் நவீனத்துவம்,பின் நவீனத்துவம் என்று யதார்த்த இனிமாவெல்லாம் கொடுக்கப்பட்டு இலக்கிய வயிறு வெறும்காற்றில் உப்பிக்கிடந்த காலம். காடு அந்தக் கட்டுகளைஎல்லாம் உடைத்து வந்த விருந்து எனச் சொல்லுவேன்.

விமரிசனத்துக்கோ கருத்துக்கோ விதிகளை விட, தேவைகள் என்று இரண்டு உண்டு. பேசப்பட்டு பொருள் பற்றிய அறிதலும்,மனச்சாய்வின்மையும் ஆகும்.

விமரிசனம் கூறப்படும் முறைமையில் வித்தியாசங்கள் உண்டு.சாதக பாதகங்களைச் சொல்லி,தீர்ப்பை வாசிப்பவனுக்கு விடலாம். இது தேறாது என ஆயிரம் சுட்டி நிறுவலாம். குறைகளை தொட்டுக் காட்டிச் செல்லலாம், குறைகளையும் மீறின நிறைகளை விதந்து பரிந்துரைக்கலாம், இல்லையேல் முற்றுமாகத் துடைத்தும் எறியலாம்.

//காடு தனிமை தரும் பீதி.
காமம் தனிமை காட்டும் வீதி//

இதற்காகவாவது நீங்கள் இந்த நாவலைப் படியுங்கள். நீங்கள் சொல்வது தானா? இல்லை,அதனினும் வேறுண்டா என உணரலாம்.

ஒரு முரண்நகையாக நீங்கள் குறிப்பிட்ட குறுந்தொகை வரிகளைத்தான் கடவுள் வாழ்த்தேபோல் கைதொழுது ஜெயமோகன் தொடங்குகிறார்.

மோகன்ஜி சொன்னது…

கீதாக்கா!
//சு.தா. வழக்கம் போல் கலக்கறார்//
சுதா ஏதும் தொடங்குமுன்னேயே கைதட்டி விட்டீர்களே!
அவர் 'கலக்கும்'போது நல்ல ஒப்புமைகள், கவிதைகள் என வரும் எனத்தான் காத்திருக்கிறேன்.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
//அதான் ரெண்டு பக்கமும் இலை போடலாம்ன்னு மோகன்ஜி சொல்லிட்டாரே!//

மிகவும் ரசித்தேன் ஜீவி சார்! சமாராதனை சத்திக்கு இரண்டுபக்கமும் தான் இலை போடணும் அது சம்ப்ரதாயம். பாகவதோத்தமர்கள் கூடவே கனபாடிகளும் அமர்வார் என்றால் கேட்கணுமா? 'மயக்கமென்ன'ன்னு அன்னபூரணிபிரீதியாக பாட்டும் பாடிவிட்டீர்கள்! ஆகட்டும்... விளம்பலாமே!

sury siva சொன்னது…

"கதைக்கு விதிகள் " என்று நான் சொல்லவில்லை.

அவருடைய பரம ரசிகர் சொல்லி இருக்கிறார் அவரே சொன்னதாக:

http://kjashokkumar.blogspot.in/2010/08/3.htm


ஒரு விமர்சனம் என்பது குணம் நாடி, குற்றம் நாடி, அதில் மிகை நாடி மிக்க கொளல் " ஆக இருக்கவேண்டும். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் இருத்தல் விமர்சனுக்கு அழகு.

ஒரு படைப்பினை வாசகர் நோக்குவது பல்முகத்தானது. பள்நோக்கானது. அவற்றினை இவ்வழி தான் செல்லவேண்டும் என நினைப்பே இலக்கியத்த்துக்கு எதிர் விளைவினை உண்டாக்கும்.


அது இருக்கட்டும்.
என்னை கனபாட்டி ஆக்கி விட்டீராக்கும்..!! தேவலை...

யதா சௌகர்யம் துஷத்வம் என்று சொல்லி விட்டீர்கள்.

சுப்பு கனபாட்டிகள்.
அதுவும் நன்னாத்தான் இருக்கு.
சோறும் கிடைக்கும் காசும் கிடைக்கும்.

மோகன்ஜி சொன்னது…

சுதா!
//இலக்கண வல்லுனர்களின் தேவையற்ற அதிகப்படியான, சொல்லப்போனால் இன்றைய சுப்ரீம் கோர்ட் போன்ற, big brother attitude and intervention, காரணமாகத் தான் மொழி சிதைவது //

உங்களுடைய முந்தைய கருத்துக்கு பதில் இட்டபிறகே இதைப் பார்க்கிறேன். Grammer is not essentially the end all and be all of literature.உண்மையில் தமிழில், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் என்ற பகுப்பே உண்டு.

வழக்குமொழி மீது, அந்நிய மொழிகளின் புழக்கம்,மாறும் கலாச்சாரம் ஆகியவற்றின் தாக்கம் இருந்தபடியே இருக்கும்.மாற்றத்திற்குள்ளான வழக்குமொழியை உபயோகிப்பது கலைக்கும்,காட்சி ஊடகங்களுக்கும், புனைவிலக்கியங்களுக்கும், இன்றியமையாத தேவையாக மாறிப்போகும்.

கடந்த ஐம்பதாண்டு சினிமா வசனங்களைக் கேட்டாலே மாற்றம் விளங்கும். புனைவிலக்கியத்தில் பண்டித,பிராம்மணத் தாக்கங்கள் குறைந்து, திராவிட பாணி எழுத்து கோலோச்சியது சிலகாலம், மேனாட்டு இலக்கிய வகைமைகளின் புகுதல் மார்டனிசம்,டிரான்ஸ்கிரேஸ்ஸிவ் என்று ஆடையை மாற்றிக் கொண்டிருக்கின்றன.

எழுத்தை எடுத்துக் கொண்டோமென்றால்,மாறிவரும் மோஸ்தர்களில் உருவான எழுத்துக்கள் சீக்கிரம் வழக்கொழிகின்றன.மொழியின் ஆதார எளிமையில், மானுடத்தின் என்றுமான சிக்கல்களைப் பேசும் எழுத்து சற்றே சிரஞ்சீவித்துவம் பெறுகிறது.

சு.தா! காடு விமர்சனங்களைத் தேடித் படித்திருக்கிறீர்கள். மிக்க மகிழ்ச்சி!
தனி மனிதனுக்கு பொருந்துவது இலக்கிய கர்த்தாவுக்கும் பொருந்துமா எனும் கேள்விக்கு என்ன சொல்ல இயலும்? அவனும் அடிப்படையில் தனிமனிதன் தானே? இலக்கியத்தைப் படைத்து உம் கையில்கொடுத்த பின்னே இலக்கியவாதிக்கு அங்கே இன்னுமென்ன வேலை?
கருத்தும் கதையும் நல்லதென்றால் அதை மனதில் சுமக்கலாம்.புத்தகம் அற்புதமானது என்றால், ஹஸ்தபூஷணம் என கையில் சுமக்கலாம். இலக்கிய கர்த்தாவை ஏன் சுவாமி சுமக்கிறீர்? அவன் சம காலத்தவன் என்றால் கைதட்டிப் பாராட்டலாம், மாலை மரியாதை செய்யலாம்,பட்டம் பரிசுகள் கொடுக்கலாம். பிடிக்கவில்லை என்றால் புத்தகம் வாங்காமலிருக்கலாம். பின்னூட்டத்தில் 'அவருன்னா எனக்கு உவ்வே' எனலாம்.அதற்குமேல் இலக்கியகர்த்தாவை என்ன செய்யவேணும்?

போங்க சுதா!

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
நீங்கள் குறிப்பிட்ட சுட்டி எனக்கு திறக்கவில்லை.அவர் சொல்லியிருந்தாலும் அது பிரச்னை இல்லை.

விமரிசனம் 'மிகை நாடி மிக்கக் கொளல்' என்பதை தி ஜானகிராமனின் செம்பருத்தியிலேயே நிறைய விவாதித்தோம். வாசகர் நோக்கு பற்றி நீங்கள் சொல்வதில் அபிப்ராயபேதம் இல்லை.

கனபாட்டிகள் என்பது உங்களுடைய பன்முக வாசிப்புக்கு நான் அளிக்கும் மரியாதை என புரிந்து கொள்ளுங்கள் சுப்பு கனபாடிகளே!

sury siva சொன்னது…

ஜெயமோகன் சிறுகதை எழுதுவதைப் பற்றி நிறைய கூறியிருக்கிறார். அவர் கூறிய, சிறுகதைப் பற்றிய, இந்த மூன்று விசயங்கள் எனக்கு பிடித்தமானவைகள். மற்ற விசயங்களை அவரது இணைய தளத்தில் தேடி கண்டுகொள்ளலாம். அந்த மூன்று:

எழுத ஆரம்பிக்கும்போது எழுத்தில் கவனம் கொள்ளவேண்டிய மூன்று தொழில்நுட்ப விஷயங்களை மட்டும் சொல்லி முடிக்கிறேன்.

”சொல்லாதீர்கள், காட்டுங்கள்.” எழுத ஆரம்பிப்பவர்கள் கதைகளை சுருக்கமாகச் சொல்ல முயல்வார்கள். காரணம் அது நாம் சாதாரணமாக வாழ்க்கையில் செய்வது. நடந்ததை சுருக்கமாக சொல்வது. ஆனால் இலக்கியத்தின் நோக்கம் அனுபவத்தைத் தெரிவிப்பது அல்ல. அது கற்பனை மூலம் வாசகனை அந்த அனுபவத்தை தானும் அடைய வைக்கவே முயலவேண்டும். ஆகவே அந்த கதை கண்முன் உண்மையில் நிகழ்ந்தால் எப்படி இருக்குமோ அந்த காட்சியனுபவத்தை வாசகனுக்கு அளியுங்கள். நுண்ணிய தகவல்கள் மூலம் கதையை கண்ணிலே காட்டுங்கள். கடற்கரை வாழ்க்கையை எநக்குச் சொல்லாதீர்கள், நானே அங்குவந்து வாழும் அனுபவத்தை எனக்கு அளியுங்கள்.
”கதையின் கருத்தை கதைக்குள் சொல்லாதீர்கள்.” கதை என்பது வாசகனுக்கு அனுபவத்தை அளிப்பது. கருத்தை அவனே உருவாக்கிக் கொள்ளட்டும். வாசகனுக்கு நீங்கள் ஒரு கருத்தைச் சொன்னால் அது உங்கள் கருத்து. அவனே அதை கதையில் கண்டடைந்தால் அது வாசகனின் கருத்து. கதைக்குள் என்ன சொல்லப்படுகிறது என்பது அல்ல முக்கியம். என்ன உணர்த்தப்படுகிறது என்பதுதான் முக்கியம்.
”கதைவடிவங்களை கற்றுக்கொள்ளுங்கள்.” கதையின் வடிவம் பற்றிய ஒரு பிரக்ஞை எழுத்தாளனுக்கு தேவை. இன்றுவரை கதையிலக்கியம் அடைந்துள்ள சிறந்த வடிவத்தை முயன்று கற்று அதை நாமும் அடைவதற்கான முயற்சி தேவை.
-o0o-

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
அப்படி வாரும் வழிக்கு!
'வேணாம் வேணாம் அந்த மூக்கொழுகின்னானாம்.... அவ வேண பிள்ள பெத்தாளாம்'. பாண்டிச்சேரியில எப்பவோஒரு பாட்டி சொன்னது ..இப்பத்தான் புரியுது.. என்னா கொட்டேஷன்லாம் வருது??
பிடிக்காமலா படிக்கீய? சும்மா மாய்மாலம் பண்ணுதீய !

அடுத்தப் பதிவ நானு போடவேண்டியதுதான் மக்கா.....

sury siva சொன்னது…



எங்கே தேடினாலும் "காடு " கிடைக்கலையே...
பிடிக்காமலா படிக்கீய? சும்மா மாய்மாலம் பண்ணுதீய !//

காடு பற்றி ஏகப்பட்ட கருத்துக்குவியல்
எங்க கீதா அக்கா பண்ற கத்திரிக்காய் துவையல் மாதிரி
சும்மா சும்மா சுண்டி சுண்டி இழுக்குது.

ஆளாளுக்கு ஜெயமோகனை படிச்சுட்டு,
அவர் மாதிரியே எழுதணும் அப்படின்னு திரியறாங்க..

அசலு அசலு தான்
நகலு நகலு தான்
பத்து நூறு அகலு வச்சாலும்
பகலு ஆகுமோ ?

சு.க.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
அவரை அதிகம் படிக்காமலேயே அசலு,பகலுன்னு சொல்றீங்களே... நிறைய படிச்சீங்கன்னா என்னவெல்லாம் சொல்வீங்களோ?
//அவர் மாதிரியே எழுதணும்னு திரியறாங்க//
சு.தா! அவர் மாதிரி எழுதவும் முடியாது. திரியவும் முடியாது. அது தான் உண்மை.

அப்படி எழுத முயல்பவர்கள் தனக்கான எழுத்து வடிவை அடைவதற்கான விசை அவர் எழுத்திலேயே இருக்கிறது ( அவரை மாதிரியே இதை எழுதிட்டேனோ?!)

sury siva சொன்னது…
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
கீதமஞ்சரி சொன்னது…

ஜெயமோகனின் எழுத்துகளில் ஓரளவு பரிச்சயம் உண்டு. யானை டாக்டர் இணையத்தில் வாசித்து அசந்திருக்கிறேன். காடு புதினம் இங்கு சிட்னியில் உள்ள நூலகத்தில் எடுத்து வாசித்து மிரண்டுபோனேன். என்ன ஒரு ஆளுமை.. காட்டை புதிய பரிமாணத்தில் அறிமுகப்படுத்திய எழுத்து... ஒவ்வொரு கதாமாந்தரும் நச்சென்று மனத்தில் இடம்பிடித்த நேர்த்தி.. இப்போது உங்கள் விமர்சனம் வாசித்தபின் மீண்டுமொருமுறை காடேக ஆவல் பிறக்கிறது. கிடைத்தால் மறுபடியும் வாசிப்பேன். நன்றி மோகன்ஜி.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
உங்கள் கருத்து தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது. அதற்காக மன்னிக்கவும்.
சிரம்ம் பாராமல் மீண்டும் அதை இட்டால் நன்றியுடையவன் ஆவேன்.

sury siva சொன்னது…


உங்கள் கருத்து தவறுதலாக நீக்கப்பட்டு விட்டது///




காடு புத்தகம் ஆன் லைனில் 430 ரூபாயாம்.

அது என்ன விலை என்று பார்த்த இடத்தில் :

இருந்த ஒரு முகவுரை:


அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும் மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச் சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு் உறவுகளின் பெரும்பாலை நிலத்தையும் சித்திரிக்கிறது இப்படைப்பு, மனித உறவுகளின் நுட்பமான ஊடுபாவுகளை, காமத்தின் பலவிமான வண்ணபேதங்களை தேர்ந்த வாசகனுக்கு மட்டும் எட்டும்படி நுட்பமாகச் சொல்லி மேல்தளத்தில் சரளமான உத்வேகமான கதையோட்டத்தை முன்வைக்கிறது

(உரை இல்லாமல் புரியப்படும் ஒரு முக உரை )

நிற்க.

இருந்தாலும்,புத்தக விலை சந்தனக் கட்டை,
செம்மரக்கட்டை விலை போல் இருக்கிறது. என் போன்ற வர்கள் ஏறிட்டும்
பார்க்க இயலா விலை.

அதனால்,

நீங்கள் தான் படித்தாயிற்றே,

அந்த புத்தகத்தையும்
அதைப் படிப்பதற்கு ஒரு இன்சென்டிவ ஆக
நீங்கள் உங்கள் பதிவில் குறிப்பிட்ட வெண்பொங்கல்
ஆஹா ஆஹா ஆஹா ஆஹா
ஒரு இரண்டு ஆழாக்கும்

கூரியலில் அனுப்பி வைத்தால், அல்லது அட் லீஸ்ட்
அனுப்புவதாக உறுதி கூறினால்,
நீங்கள்
தவறுதலாக டெலிட் செய்த என் கருத்தை அனுப்புகிறேன்.

சு தா.

Geetha Sambasivam சொன்னது…

//இருந்தாலும்,புத்தக விலை சந்தனக் கட்டை,
செம்மரக்கட்டை விலை போல் இருக்கிறது. என் போன்ற வர்கள் ஏறிட்டும்
பார்க்க இயலா விலை. //

அதே, அதே, சபாபதே, சு.தா. சரியாச் சொன்னீங்க. நான் சொல்ல யோசிச்சிட்டு இருந்தேன். :) எனக்குப் பொங்கல் வேண்டாம். புத்தகம் மட்டும் போதும். :)

sury siva சொன்னது…

//பொங்கல் வேண்டாம். //


வெண்பொங்கல் பற்றி பேசி திசை மாறக்கூடாது அப்படின்னு என்னதான்
படிச்சு படிச்சு சொன்னாலும்
பாழும் மனசு
வெண்பொங்கலை தான்
நாடு கிறது.
காடு அழைக்கிறது.
அந்த சமயத்திலே நீர் படுத்தற
பாடு தாங்கலையே...

இது இடப்பக்க வாசினி.

எது முக்கியம் நீங்க சொல்லுங்க கீதா மாமி ( பாட்டி ? )

காடா ? பொங்கலா ?

காட்டுக்கு போனா குறிஞ்சி மலையிலே
தேனும் திணை மாவும் தான் கிடைக்கும்.

வெண்பொங்கலுக்கு ஜே.

சு தா.

Geetha Sambasivam சொன்னது…

//எது முக்கியம் நீங்க சொல்லுங்க கீதா மாமி ( பாட்டி ? )//

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்ன அநியாயம், அராஜகம், அக்கிரமம்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :)

sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
sury siva சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

வாங்க கீதமஞ்சரி,
நீங்கள் ஏற்கெனவே படித்திருப்பது மகிழ்ச்சி.
ஒரு புத்தகத்தை படிப்பதில் பல வகைகள் உண்டு.
கதையின் மையப் போக்கை புரிந்துகொண்டு பக்கங்களைப் புரட்டிக் கொண்டு போதல்;
கையில் அரிவாளோடு எங்கே தப்பு எங்கே தகவல்பிழை என்ற கவனம் ஒன்றே கொண்ட போலீஸ் படிப்பு;
தனது அறிவையும் உள்ளுணர்வையும் காவலாக வைத்து விட்டு,எழுத்தாளன் போக்கில் தன்னை ஒப்புக்கொடுத்து விடுவது.கதைக்குள் ஒரு பாத்திரமாகவே இரைக்க இரைக்க கூடவே ஓடுவது.

எதைப் படிக்கிறோம் என்ற தேர்வில் மட்டும் கவனமாக இருந்து விட்டால் வாசிப்பைவிட சுகமான ஒன்று வாழ்வில் இல்லை.
கண்டதைப் படிக்கப் பண்டிதனாவான் என்பது புரட்டு.
அட்டையைப் பார்த்து புத்தகம் வாங்காதே என்பது எவ்வளவு சத்தியமான வாக்கியம் ?!

சுஜாதா புத்தகத்தை சரளமாகப் படித்து முடிக்கலாம்.
திஜாவை,புதுமைப்பித்தனை அங்கங்கே நிறுத்தி 'ஆஹா'காரம் போட்டுக் கொண்டு தொடரலாம்.
ஜெயமோகனைப் படிக்கும் தோறும் செறிவான கதைசொல்லலும் அதில் பெருங்கனவுகளை பொதித்திருப்பதும் வாசிப்பை உள்வாங்கி உள்வாங்கி நகர்ந்து செல்லும் நிதானமும் ஏற்படுகிறது. காபி டிகாக்‌ஷன் சொட்டு சொட்டாக இறங்குவது போல....

வேகமாக படிக்கும் எத்தனத்தில் நுட்பங்கள் நழுவி விடுகின்றன. சில பரவசங்கள் கடந்து விடுகின்றன. ஒரு குழந்தையின் அழைப்பைத் தவறவிட்டது போல், தாண்டிச் சென்ற சௌந்தரியத்தை கண்ணெடுத்துப் பாராமல் குருட்டு யோசனையில் கடந்து செல்வது போன்ற இழப்புகள் அவை.

காடு நாவலில் ரேசாலம் தேவாங்கை வளர்க்க, அனைவரும் கேலி செய்கிறார்கள். அவரோ அதனுடனான உறவில் தன்னை இழந்த பித்தனாய் சுற்றிவருவதை பல பக்கங்களில் கதையில் ஜெயமோகன் வளர்த்து சொல்கிறார். அந்த முரண்பாட்டையும், கேலிச் பேச்சின் ஹாஸ்யத்தையும் ரசிக்கும் நமக்கு ரேசாலம் பற்றிய பிம்பம் சற்றே பிறழ்ந்த போக்காய்த் தோன்றும். ரேசாலம் அவர் வீட்டுக்காய்த் திரும்பும் பரபரப்பான தருணத்தில், ஓரிரு வரிகளில் அவருடைய மகளைக் காட்டிச் செல்கிறார். சூம்பிய கால்களும், சிறிய மண்டையுமான ஊனம் கொண்ட அந்தப் பெண்ணைத் தான் காட்டில் தேவாங்கின் வடிவில் சீராட்டினார் என்பதை உணரும் போது மனம் கனக்கிறது. அந்த நுட்பமான தொடர்பை வாசிப்பின் வேகத்தில் தவறவிடும் வாய்ப்பு அதிகம்.

மீண்டும் படிக்கும் போது இவற்றை கவனம் கொள்ளுங்கள் கீதமஞ்சரி!




மோகன்ஜி சொன்னது…

சு.தா !
//இருந்தாலும்,புத்தக விலை சந்தனக் கட்டை,
செம்மரக்கட்டை விலை போல் இருக்கிறது. //

இந்தமுறை நான் படித்தது மும்பையில் நூலகத்து புத்தகத்தை.
ஹைதராபாத் திரும்பும் போது உங்களுக்கு 'காடு' ஏற்பாடு செய்கிறேன் சுதா!

மோகன்ஜி சொன்னது…

கீதாக்கா,
பொங்கல் வேண்டாம் புத்தகம் வேண்டும் எனச் சொல்லும் சமையல் நிபுணிக்கு ஒரு ஜே!

மோகன்ஜி சொன்னது…

சுதா!

பொங்கலை வச்சு ஒரு மாநாடே நடத்துறீங்க.!
காட்டுல உமக்கு தேனும் தினைமாவும் தர எந்த வள்ளி ஆலோலம் போடுறா?!
பெரிய கேரியரை தூக்கிகிட்டு போங்க ஜி!

மோகன்ஜி சொன்னது…

கீதாக்கா!
பாட்டின்னு சொன்னதை நானும் ஆட்சேபிக்கிறேன்.
என்றும் நீங்க 'எழுத்துச் செல்வி' தான்!

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
//, அவருக்கு இன்னா பேரு வைக்கணும் அப்படின்னு
நினைக்கும்போது, அய்யர் ங்கற பேரு தான் கிடைச்சுதா//

நீங்கள் கதையை படித்தபின் முழு பார்வையோடு இந்தக் கேள்விகளை எழுப்புங்கள்.
ஹேஷ்யத்தில் இலக்கியம் உருவாவதில்லை. விமரிசனங்களும் நியாயம் செய்வதாகாது.

sury siva சொன்னது…



கையில் அரிவாளோடு எங்கே தப்பு எங்கே தகவல்பிழை என்ற கவனம் ஒன்றே கொண்ட....///




அய்யய்யோ நான் இல்லை ...நான் இல்லை.

சு தா.

ரிஷபன் சொன்னது…

வாசிக்கத் தூண்டியிருக்கிறீர்கள். படித்த நினைவு இல்லை..

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
உங்கள் கையிலே ஆயுதமா?!

'முன்னடி மாடன் கையில் வெட்டுக்கத்தி எட்டுச் சாணில்
பார்த்தவர்கள் கேட்டவர்கள் கூப்பிட்டால் அவர் வருவார்' என்று வரவு பாட வேண்டியது தான்!

ஸ்ரீராம். சொன்னது…

ஒரு நாவலை /படைப்பை ரசிக்க நம் அனுபவங்களோடு அது ஒன்றி / இயைந்து போயிருந்தால் அதிகம் பிடித்துப் போகும்.

ஸ்ரீராம். சொன்னது…

ஒரு படைப்பை மீள் வாசிப்புகள் செய்கையில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எண்ணங்கள் எழுவது அரிது. மனம் அதில் அமிழ்ந்து ஒரு என்னத்தைப் பதிவிட்டுக் கொள்கிறது. இதற்கு ஒத்த எண்ணம்தான் நாம் வாசித்த நாவலைத் திரைப்படமாக எடுத்தால் நம்மால் அதை ரசிக்க முடியாமல் போவது! சரிதானா?

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்,
வாங்க... வழி தெரிஞ்சதாக்கும்.....
படித்த நினைவில்லையெனில் படிக்காதது என்று தான் அர்த்தம்.

படிச்சு நெட்டுரு போட்டு வையும்.
ஜூலையில் நான் திருச்சி வரும் போது பரிட்சை வைப்பேன் .
Fill in the blanks, ஒரு வரிக் கேள்விகள், இடம் சுட்டி பொருள் விளக்குதல், ஒப்பித்தல் எல்லாம் உண்டு.
60%க்கு மேல் வாங்கினால் அபிநயம சரஸ்வதி சரோஜா தேவி உபயோகித்த சோப்பு டப்பா பரிசு.

பெயிலானாலும் பரிசு உண்டு. எனக்கு வந்திருக்கும் கவிதைத்தொகுதிகள் ஒரு செட்டு.
சாம்பிளுக்கு ஒரு கவிதை:

அமாவாசை பகலில்
வெளிச்சத்துக்கு சூரியன்.
அமாவாசை இரவுக்கு
உன் புன்சிரிப்பு போதும்.

நீ மட்டும் சிரித்து விட்டால்,
பௌர்ணமியிலே திதி வரும்
அமாவாசையிலே கிரிவலம்.

தலைப்பு: சிரியடி என் செல்லமே !

ஸ்ரீராம். சொன்னது…

வெண் பொங்கலுடன் இந்த நாவலைப் பொருத்திக் கொள்ள நானும் இந்தப் படைப்பைப் படித்திருக்க வேண்டும்! இல்லாவிட்டால் கண்ணிழந்தவன் நிறத்தை அறிவது போல ஆகி விடும்!

ஸ்ரீராம். சொன்னது…

ஜெமோ வாசிக்கத் தொடங்கினேன், அறம் சிறுகதைத் தொகுப்பு வாங்கி! மயங்கித்தான் போனேன். அந்தோ.. பாதி படிக்கும் முன்னே இரவல் வாங்கிச் சென்றார் ஒரு ஏந்திழை! இன்றுவரை திரும்பவில்லைப் புத்தகம்! வேறொன்று வாங்கி விடலாமா என்ற ஆர்வமும் வருகிறது.

ஸ்ரீராம். சொன்னது…

அவர் (ஜெமோ) தளத்தில் வெண் முரசு வாசிக்கத் துவங்கியும் பிரமித்திருக்கிறேன். இந்தத் தொடர் பற்றி வேறு அபிப்ராயமும் எனக்கு(ம்) உண்டு! விஷ்னூரம் வாங்கி இரண்டு வருடமாயிற்று. இன்னும் தொடங்கவில்லை. சோம்பேறியாகி விட்டேன்.

ஜீவி சொன்னது…

அப்படி இப்படி வெண்பொங்கல் பக்கம் யார் தலை திருப்பி வாசனை நுகர்ந்தாலும் மீண்டும் மீண்டும் காட்டுக்குள் இழுத்து வந்து கட்டிப் போடும் உங்கள் சாகசம் ஜெயமோகனுக்கே தெரியாத ஒன்று. ஜெயமோகன் வழி தனி வழி.

போகட்டும். இடையில் அவசரமாக ஒரு சேதி சொல்ல வேண்டி இருக்கிறது.

ஜெயகாந்தனை வெளியுலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது அந்தக் கால ஆனந்த விகடன், இல்லையா?

இந்தக் காலத்து ஜெயகாந்தன் போலவான பிரமிப்பூட்டும் ஒருவரை 'கல்கி' வெளியுலகிற்கு தெரியப்படுத்திய புண்ணியத்தைக் கட்டிக் கொண்டிருக்கிறது.

'கல்கி' சமீபத்தில் குறுநாவல் போட்டி ஒன்றை நடத்தியது. அதில் முதல் பரிசு குறுநாவலை எழுதிய ராமசந்திர வைத்தியநாத் அவர் ஆவார். குறுநாவலின் பெயர் 'கண்ணகி நகர்.'

கல்கி எங்கே கிடைத்தாலும் அதன் ஜூன் 5 தேதியிட்ட இதழைப் பார்க்கவும்.

அற்புதமான ஆரம்பம். இழந்து போன எழுத்துப் பொன்னுலகத்தை மீண்டும் மீட்டெடுக்கப் போகிற சந்தோஷம். தமிழ் எழுத்துலகிற்கு நல்ல காலம் பிறந்திருக்கிறது.

'கண்ணகி நகரை' வாசிக்கத் தவறாதீர்கள்

அன்புடன்,
ஜீவி

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம்,
//ஒரு நாவலை /படைப்பை ரசிக்க நம் அனுபவங்களோடு அது ஒன்றி / இயைந்து போயிருந்தால் அதிகம் பிடித்துப் போகும்.//

கண்டிப்பாக அனுபவத்தோடு படைப்பு ஒன்றும் போது படைப்பின் ஆழத்தை தரிசிக்கிறோம் தான்.
சில படைப்புகளை, 'என் கதை போலே இருக்கிறது' என்று வாசகன் சொந்தம் கொள்கிறான்.
வணிக எழுத்து என்பது அந்த ஒருமைக்குண்டான லயத்திலே தான் பயணிக்கும்.

ரசனையின் விளிம்பைத் தொட்ட வாசகன், கதையின் உள்ளே சங்கமித்து, படைப்பின் ஆதார சுருதியை அடையாளம் காண்கிறான்.
அங்கே 'சொந்த அனுபவம்' என்பதை உள்ளுணர்வாலும், லோகாயத அறிவாலும் ஈடுகட்டி வாசிப்பை மேம்படுத்துகிறான்.

அதனால் தானே படைப்புகள் மிக உயர்ந்ததாய் பாராட்டப் பெறுவதும், பிடிக்காமல் போவதும் ஏற்படுகிறது.

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம்,
//இதற்கு ஒத்த எண்ணம்தான் நாம் வாசித்த நாவலைத் திரைப்படமாக எடுத்தால் நம்மால் அதை ரசிக்க முடியாமல் போவது! சரிதானா?//

சரியாக்க் சொன்னீர்கள். படித்த கதையையோ, கேட்ட கதையையோ மனசு ஒரு சித்திரமாய்த் தீட்டிக் கொள்கிறது. அழியாத வண்ணங்களால். அவை மாறுவதேயில்லை. அந்தச் சித்திரங்கள் ஆழ்மனதில் அடுக்கப்படுகின்றன.

இளமையில் கேட்டு தீட்டிக் கொண்ட கண்ணகி, கண்ணாம்பாவோ, விஜயகுமாரியோ அல்ல. அந்த ஆகிருதியையும் திடத்தையும் படங்களில் நான் காணவில்லை. இன்றும் மனதில் நடமாடும் கண்ணகி என் பள்ளிப் பருவத்தில் மனதில் உருவாகி வந்தவள். அரக்குச் சிவப்பில் சேலை அணிந்தவள் .

அவ்வளவு ஏன்? நான் மிகவும் ரசித்த, இன்றும் ரசிக்கும் தில்லானா மோகனாம்பாள் கதையை பதினோராவது வயதில் படித்தேன். தன் சண்முக சுந்தரம் கடுக்கன் அணிந்து குடுமி வைத்திருப்பான். உயரமாயும் ஒல்லியாகவும் இருப்பான். இவ்வாறு கதையின் வர்ணனையில் மனதில் படிந்த சண்முக சுந்தரத்தின் இடத்தில் சிவாஜியை அமர வைக்கவே இயலவில்லை. இது வேறு சண்முகம் என்ற கற்பிதத்தின் பிறகு தான் சிவாஜிக்காக விசிலடிக்கவே முடிந்தது. போன வருடம், மீண்டும் இரண்டு பாகங்களாக இருக்கும் தி.மோ. கதையை படித்தேன். குடுமிக்காரன் தான் வந்தான்.

இந்த விஷயத்தை வைத்து ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். என்றாவது ஒருநாள் தட்டச்சியபின் போடுகிறேன். அதுல கொலையெல்லாம் கூட வரும் சாமியோவ் !

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம்,

படிக்கவில்லையெனில் மூங்கில் காற்று முரளி அவர்களுக்கு நான் சொன்ன வரிசையில் படியுங்கள்.

ஏந்திழைகளுக்கு இரவலாய்த் தராமல் அன்பளிப்பாக தந்துவிடுவதே சாலச் சிறந்தது. அறம் கிடக்குது... எப்ப வேணா படிச்சிக்கலாம் !
இன்றுவரை புத்தகம் திரும்பவில்லை என்று அங்கலாய்கிறீர்களே! ரிஷபன் சாருக்கு நான் தருவதாகச் சொன்ன கவிதைத்தொகுதிகள் உமக்குத்தான் தரவேண்டும்.

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம்,
வெண்முரசுவை பற்றிய விமரிசனத்திற்கு இன்னும் கால அவகாசம் எழுத்தாளருக்கு தரப்படவேண்டும்.
விவரிப்பின் போக்கு பற்றிய அவர் விளக்கங்களை அங்குமிங்குமாக வரும் சில விமரிசனங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் செய்யப்பட்டவையாக
உள்ளது.

சில காலம் கழித்து விவரமாய் இங்கே விவாதிக்கலாம். எனக்கும் வெண்முரசு வாசிப்பில் கொஞ்சம் அரியர்ஸ் இருக்கிறது.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
//யார் தலை திருப்பி வாசனை நுகர்ந்தாலும் மீண்டும் மீண்டும் காட்டுக்குள் இழுத்து வந்து கட்டிப் போடும் உங்கள் சாகசம் ஜெயமோகனுக்கே தெரியாத ஒன்று.//

சாகசங்களை வெறும் மோகன்கள் மட்டுமே செய்யமுடியும். ஜாலங்கள் செய்ய ஜெயமோகன் வேண்டும்!

உங்கள் கண்ணகி நகர் பரிந்துரை பார்த்தேன்.வாரஇதழ்கள் பார்த்து நாட்களாகின்றது. கல்கியை கண்டிப்பாகப் படிக்கிறேன். 'பொன்னுலகத்தை மீட்டெடுக்கிற சந்தோஷம்' என நீங்கள் சொல்லும்போதே எனக்கும் மனதில் சந்தோஷம் அலையடிக்கிறதே!நல்லிரவு ஜீவி சார்!

sury siva சொன்னது…


காடு கதை
எங்காவது படிக்கவேண்டும் என்ற முனைப்பிலே
ஒரு வாசகர் சண்முகன் என்றவர் இந்த நாவலைப் படித்து முடித்து
நாவலைப்படிக்கத்துவங்கி முடிக்கும் வரை தான் ஒரு கனவு கண்டது போல் இருந்தது என்று சொல்கிறார்.

மேலும் இது ஒரு ஒழுக்க நோக்கம் இல்லா amoral novel எனவும் சொல்கிறார்.

//இந்த நாவலின் மிகச்சிறந்த அம்சமே இது தமிழில் எழுதப்பட்ட முதல் amoral நாவல் என்பதுதான். செக்ஸை எல்லாம் நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே ஒழுக்கநோக்கம் இருக்கும். இது இயல்பாகவே ஒழுக்கமில்லாமல் இருக்கிறது. கனவுக்கு ஒழுக்கம் இல்லை அல்லவா?சண்முகம்////


இதுபற்றிய தங்கள் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.


நான் ஏதாவது சொல்லி,

வரும் வெண்பொங்கலுக்கு பங்கம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை.

subbu thatha.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
தாராளமாய் ஷண்முகம் அவர்களின் கருத்தைப் பற்றி எனக்கு சொல்ல இருக்கிறது தான். உங்களது அண்மைக்கால பழக்கமாயிருக்கும் 'போட்ட கருத்தை' சடுதியில் நீக்கிவிடும் அபாக்கியம் இந்தக் கருத்துக்கும் ஏற்படாது என்று சொன்னால் தான் அதைச் சொல்வேன்.. அதுவும் என் வலதுகையில் பிளஸ் போட்டு ரெண்டு தட்டு தட்டி சத்தியம் செஞ்சு கொடுக்க வேணும்.சரியா?!

sury siva சொன்னது…

ஷண்முகம் அவர்களின் கருத்தைப் பற்றி எனக்கு சொல்ல இருக்கிறது///


சரி. சரி. சரி.

சென்ற எனது பின்னூட்டத்தில் ஒரு தவறு நிகழ்ந்து விட்டது. அதைச் சரி செய்யும் முகாந்திரமாகத்தான் யானதை நீக்கும் மன நிலை கொண்டேன். எனைப்பார்த்து சீறுவதும் சினம் கொள்வதும் சரியோ ?

போகட்டும்.

ஒரு குறட்பா சொல்கிறது.

இணருழ்த்தும் நாரா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார் - குறள் 650

அது போன்ற நாரா மலர் என்றிராது நறும் மணம் பரப்பிடும் மல்லிகையாக, முல்லையாக, பன்னீர்ப்பூ போன்றவர் எனது நண்பர் மோகன மனம் கொண்டவர்.

தாம் படித்த மன மகிழ்ந்த கதைகளை இதமாகச் சொல்லும் நா நயம் கொண்ட வல்லவர்.

அவர் மனம் நோக ஒரு சொல் சொல்லுதலும் தகுமோ தகுமோ ?
எனவே நீக்கிவிட்டேன். மறுமுறை படித்தபோது சற்று அவசரப் பட்டுவிட்டேன் எனப்புரிந்தேன்.

நிற்க.

இலக்கியத்தின் இலக்கே மக்களை நல் வழிப் படுத்துதல் என சிலரும்
எதுவும் இலக்கியமே, சொல் வளம், பொருள் வளம் இருந்தால் போதும் என
வாதிப்போரும் உளர். மறுப்பதற்கில்லை.

நல வழிப் படுத்தும் இலக்கியம் காலம் கடந்தும் நிற்கும்.
மற்றவை சென்னை வெள்ளம் போல் சீரழிக்கும். கடலில் போய் தானும் மாளும்.

மக்களை குறிப்பாக வாசகர்களை ஈர்க்க எழுத்தாளர் சிலர் கையாளும் யுக்திகள் சில உண்டு. அவற்றினைக் குறிப்பால் உணர்த்தலாம், சாடையாகவும் சொல்ல லாம்.

யதார்த்தம் என்ற சொல்லி ஒழுக்கம் பிரளும் சொற்களை கையாள்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை.

இத்தனையும் சொல்லிப்போயும் இன்னமும் 'காடு' முழுமையாகப் படிக்கவில்லை.

யான் வகுப்புகளிலே சொல்வதுண்டு.

Be a critic of Russel. I understand.
But do not , before you read him.

நான் அதை பின்பற்ற வேண்டுமல்லவா ?
அதனால் தான் நீக்கினேன்.

அது இருக்கட்டும். நீங்கள் சொல்லப்போகும் கருத்து என் பின்னூட்டம் பற்றியா ?

(without prejudice to venpongal)
வாருங்கள்.

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள சு.தா!

சினம் என்ற ஒன்றை நான் இதுநாள்வரை ஒரு ஆயுதமாகவோ, தற்காப்பாகவோ கைக் கொண்டதில்லை. சிறிதே கற்ற இலக்கியம் தந்த ஒரு பண்பு எனக்கொள்கிறேன். எனவே சினந்தேன் எனக் கொள்ளவேண்டாம்.

என் கருத்தென சொன்னது, நீங்கள் குறிப்பிட்ட சண்முகத்தின் பார்வை பற்றியது.உங்கள் கருத்தைப் பற்றியது அல்ல.

இலக்கியத்தின் பயன் என்ன என்பது ஒரு கருத்துக்கு பதிலாய் சுருக்க உரைத்தல் கடினம். உங்களுக்கு தெரியாதது இல்லை. ஒழுக்க மதிப்பீடுகளினூடே கணிக்க முயன்றால் கம்பனோ, காளிதாசனோ பேசிய காமம்கூட விவாதிக்கப்பட வேண்டியதுதான்.
காமம் மட்டுமே பேசுபொருளாகக் கொண்ட படைப்புகள்கூட இலக்கியம் ஆகலாம்... அது கொண்ட பொருளின் பொதுமையையும் தாக்கத்தையும் உணர்த்த முடிந்தால்.

//யதார்த்தம் என்ற சொல்லி ஒழுக்கம் பிரளும் சொற்களை கையாள்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை//
எனது தி ஜானகிராமன் பதிவில் நடந்த கருத்து பரிமாற்றங்களில்,
ஜெயமோகனின் 'அறம்' கதை பற்றிய உங்கள் அறச்சீற்றம் நினைவுக்கு வருகிறது. அதுவே இன்னமும் கனன்று கொண்டிருப்பதை உணர்கிறேன். அம்பாளுக்கு 'அறம் வளர்த்த நாயகி' என்று அழகான தமிழ்ப் பெயர் உண்டு. அறம் வளர்த்த சினம் அடங்க அவள் அருள்தான் வேண்டும்.என்னால் எப்படி இயலும்?

எனது இந்தப் பதிவில், வெண்பொங்கலை உவமை சொன்னபோது,
"இதில் மிளகையும் இஞ்சியையும் ஒவ்வாதவர்கள் அவற்றை ஒதுக்கிவிட்டாலும் காடு வாசிப்பு சுவை குன்றாது." என்று குறிப்பிட்டேன்.
அப்போது நீங்கள் இஞ்சித் துண்டை ஒதுக்காமல் கடித்து வைப்பீர் என யோசிக்கவே இல்லை சு.தா!

இன்னமும் கூட சொல்வேன், நீங்கள் நாவலைப் படித்துவிட்டு விவாதிக்க வரும்வரை கம்மாங்கரையில் காத்திருப்பேன்.

sury siva சொன்னது…



//"இதில் மிளகையும் இஞ்சியையும் ஒவ்வாதவர்கள் அவற்றை ஒதுக்கிவிட்டாலும் காடு வாசிப்பு சுவை குன்றாது." என்று குறிப்பிட்டேன்.
அப்போது நீங்கள் இஞ்சித் துண்டை ஒதுக்காமல் கடித்து வைப்பீர் என யோசிக்கவே இல்லை சு.தா!///


இஞ்சியா காமம் ?
கிஞ்சித்தும் இல்லை.
காமம் கருகப்பிலை.
கருமம் முடிந்தபின் இலைக்கு அப்பால்.


இஞ்சி காதல்.
நெஞ்சு வெந்திடினும்
விஞ்சி நின்று சுவை தரும் ஆன்மா.

காதலில்லா காமமா ?
காதலுள் காமமா ?


எது போற்றத்தக்கது ?

எங்கே சாலமன் பாப்பையா சார் !!

சுப்பு தாத்தா.
.

ஜீவி சொன்னது…

தீர்க்கமான இலக்கிய எழுத்துக்களில் சில வகைகள் உண்டு.

புதுமைப்பித்தன், ஜெயகாந்தன் ஒரு வகை என்றால் அதற்கு நேர் எதிர் ஜெயமோகன்.

இந்த நேர்--எதிர் சுலபமாகப் புரிவதற்காக ஒன்று சொல்லலாம்.

ஜெயகாந்தனின் எழுத்தைப் படிக்கும் பொழுது எதையோ நிலைநிறுத்துவதற்கோ அல்லது நிலை குலையச் செய்வதற்கோ வரிந்து கட்டிக் கொண்டு எழுதுவது புரியும். முடிவில்லாத விவாதங்களுக்கு முடிவு கட்டுகிற மாதிரியான எழுத்து அவரது.

ஜெயமோகனது எழுத்தோ பஞ்சு மிட்டாய். கைக்கு அடங்காமல் புஸூபுஸூ என்றிருப்பது பார்வைக்குத் தான். அது ஒரு தோற்றமே தவிர உள்ளடக்கத்தின் திரட்சி அல்ல. வாசிப்பதும் நோக்கமில்லாத ஊர் சுற்றல் மாதிரி. படித்து முடித்த பின் வாழ்க்கைக் கல்விக்காக அதிலிருந்து தெரிந்து கொண்டது என்னவென்றால் ஜீரோ. (Zero) அவரது ஆழ்ந்த புலமையின் பின்புலத்தில் நிறைய சாதித்திருக்கலாம். சாதித்தது என்று சொல்லப்படுபவை எல்லாம் சமூகத்தின் நோய்களுக்கு மருந்தாகப் போகாமல், அழகியல் வலையில் மாட்டிக் கொண்ட மானைப் போலவான பரிதாப உணர்வைத் தோன்றுவிக்கும்.

ஜெயகாந்தனைக் கற்ற அளவு நான் ஜெயமோக்கனைப் படித்ததில்லை. அவரை வாசித்தவரை என் உணர்வு இது. அவரிடம் எனக்கிருக்கும் எதிர்பார்ப்பின் ஏமாற்றமாகவும் இருக்கலாம். இது அவரது சிறுகதை நாவல் பற்றிய கணிப்பே தவிர அவரது கட்டுரைகளைப் பற்றி அல்ல.

அவரது கட்டுரைகளின் தேஜஸ் கண்ணைக் கூச வைப்பவை. ஜெயகாந்தனைத் தாண்டி எல்லை காண முடியாத விரிவுக்கு நம்மை கைபிடித்து அழைத்துச் செல்பவை. சூரியனின் கீழ் இருக்கும் எல்லா விஷயங்களையும் அலசும் ஆற்றல் அவருக்கு உண்டு. எல்லாவகை வினாக்களுக்கும் அவரிடம் விடை உண்டு. இந்த விஷயத்தில் அவர் ஒரு தகவல் களஞ்சியமாகத் திக்டழ்கிறார்.

அவரது வாழ்க்கை அவருக்கு அளித்த கல்வியை விட வாசித்த கல்வியின் விளைபலன் இது. ஜெயகாந்தன் அவர் வாழ்ந்த வாழ்க்கையிலிருந்து கல்வி பெற்றிருக்கிறார் என்றார் இவர் வாசித்த வாசிப்பிலிருந்து. அவரது அனுபவக் லவி என்றால் இவரது வாசிப்புக் கல்வி.

அவரது கட்டுரைத் தெளிவுகளின் சுரங்கமாக அவர் நாவல் உலகம் மாற வேண்டும். அப்பொழுது தமிழுக்கான பெருமையாகக்யாக ஜெமோ மிளர்வார்.

தனது வாசிப்பை வாழ்க்கையில் உரசிப் பார்க்கிற அனுபவக் கல்வி கிடைப்பின் ஜெயகாந்த்னைத் தாண்டிய விரிவாக இவர் திகழ்வார். தமிழுக்கான ஞானபீடம் இவருக்குக்காகவே காத்திருப்பதாக எனக்கு அடிக்கடி நினைப்பு வரும்.

இலட்சியவாதிகளை விழுங்கக் காத்திருக்கும் சினிமா என்ற பகாசுர பள்ளத்தைத் தாண்டி வேறே வர வேண்டும். பார்க்கலாம்.

ரிஷபன் சொன்னது…

ஜூலைக்குக் காத்திருக்கிறேன்

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
சாலமன் பாப்பையா என்னையல்லவா 'இஞ்சி தின்ன குரங்கு, காட்டை விட்டு இறங்கு' என்கிறார்?!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்!
தமிழ் புனைவிலக்கியத்தின் ஆளுமைகளில் புதுமைப் பித்தன், ஜெயகாந்தன் என்ற இருவரை மட்டும் குறிப்பிட்டு உங்கள் கருத்தை தொடங்கியிருப்பது, சுருங்கச்சொல்லும் வசதிக்காகத்தான் என்று புரிந்து கொள்கிறேன்.

புதுமைப்பித்தன் ஒரு முன்னோடி என்பதில் சந்தேகமேயில்லை. இன்னமும் சில காலம் வாழ்ந்திருந்தால் நல்ல பல படைப்புகளை அவர் விட்டு சென்றிருப்பார்.

ஜெயகாந்தனை பற்றிய உங்கள் பார்வையையும் அப்படியே ஏற்கிறேன். வாழ்க்கையை படித்த அவர், புனைவுகளில் ‘நிறுவுதல்’ எனும் அவரின் தீர்க்கமான கோட்பாட்டில், கதைசொல்லலின் கவிதைத் தருணங்களை விலகிச் சென்றுவிட்டார் எனும் ஆதங்கம் எனக்கு உண்டு. எனக்குமான சிந்தனையையும் சேர்த்தே அவர் சிந்தித்து விட்டாரோ எனத் தோன்றுகிறது. இருந்தும், அவரே என் ஆதர்சமான படைப்பாளி என தயக்கமின்றி சொல்வேன். கதையின் கருவும் களமும் அவருடைய பலம்.

ஜானகிராமன் அழகியல் நிபுணன். ஜெயகாந்த்தனைப் போன்ற வலுவான களங்கள் இல்லாத குறையை, தனது உரையாடலின் மூலமும், உணர்வுகளைத் துல்லியமாக படம் பிடித்துக் காட்டுவதன் மூலமும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
சுஜாதாவுடைய எழுத்தின் craftsmanship, மாறுபட்ட சிந்தனை மேற்கொண்ட உத்திகளில் இருந்தது எல்லாமுமே அவரை பிரபலமாக்கியது.. ஆனால் என்றும் புனைவின் ஆழங்களை அவர் அடைய முற்பட்டதில்லை. வாசகனை புனைவின் வளையத்திற்குள் கொண்டுவந்து அசத்தியவர்.

இப்படியே கல்கி,நா.பா,சாண்டில்யன், அசோகமித்திரன், ப.சிங்காரம் என்று ஏனையோரும்,அவரவர்க்குரிய இடத்தை அவரவர் படைப்பின் தகுதி கொண்டு பெற்றவரே.

ஜெயமோகனின் கட்டுரைகளையும் அவருடைய பன்முக ஆளுமையும் பற்றி நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியே. அவருடைய சிறுகதைகள், பயணக் குறிப்புகள்,விமரிசன எழுத்து ஆகியவற்றைத் தவிர்த்து அவருடைய நாவல்களுக்கு வருவோம். உங்களுக்கு பஞ்சுமிட்டாய் போல் தோன்றுவது அவைதானே?

முதலாக, தமிழில் நாவல் எனும் இலக்கிய வடிவத்திற்கு அருகே நிற்கும் படைப்புகளில் ஜெயமோகனின் நாவல்கள், அந்த வடிவம் முற்றாக அமைந்தவை. அறக்கூறுகளின் மேல் உள்ள பிடிப்பும், கேள்விகளும் ஆதாரமாக மிளிர்பவை.

உள்ளிருந்து ஒரே அளவில் விரியும் தாமரையைப் போல் பாரபட்சமில்லாமல் கதை மாந்தர்களின் சித்தரிப்பு,உரையாடல் வழியே களம் கண்டு விரியும் நாவல்கள் அவருடையவை. அவருடைய முதல் நாவலான ‘ரப்பர்’ என்னைப் பெரிதாக ஈர்த்ததில்லை. இதையும் அவருடைய பிற்கால நாவல்களுடன் ஒப்பிட்டே சொல்ல நேர்ந்தது.

‘பின் தொடரும் நிழலின் குரல்’ ஒரு அரசியல் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்பட்டது. தொழிற்சங்கங்கள், போராட்டங்கள், சித்தாந்தங்களின் செயல்பாடு.என ஊடுருவிச் செல்கிறது.. இந்தக் குரல் அளவு காத்திரமான குரல் இந்த திசையில் எழுப்பப் பட்டதில்லை.

'காடு' பற்றி இந்தப் பதிவில் சொல்லப்பட்டு விட்டது. மனித மனத்தின் விசித்திரங்களை,மனம் கட்டற்று அவனை செலுத்தும் திசையை, இயற்கையையே வேட்டையாடும் மனிதனின் கயமையை, ஒரு கனவின் தீற்றலோடு சொல்லப்பட்ட கதை.

'கொற்றவை' உங்களுக்கு நெருக்கமான கண்ணகியின் கதை. படிமங்களில் அவர் அமைத்த நந்தவனம். மொழியின் செறிவும் கவித்துவமும் பொங்கிவழியும் எழுத்தோட்டம். ஆசிரியர் இந்த நாவலுக்கென மேற்கொண்ட பிரயாசை படிக்கும்போது நாம் உணரக் கூடியது.
'விஷ்ணுபுரம்' ஒரு மகத்தான செவ்வியல் ஆக்கம். நெடுக தத்துவார்த்தமான தேடல் நீண்டபடியே செல்லும் படைப்பு. ஞானத்தை தேடும் பயணம். வாழ்க்கையின் சல்லிவேரில் பொதிந்து கிடக்கும் ஞானத்தின் அணுக்களை கண்டெடுத்தல் என்று விரியும் ஒரு பிரம்மாண்டம்.

இவையன்றி கன்னியாகுமரி, ஏழாம் உலகம், வெண் முரசு வரிசையின் ஆக்கங்கள் என நாவல்கள் படைத்திருக்கிறார் ஜெயமோகன். இவை அனைத்துமே தன்னளவில் முழுமையான படைப்புகள்.

உங்களுக்கொரு அனுமானத்தைப் பகிரட்டுமா? தமிழில், கல்கி காலம் தொட்டு நீண்டகால வாசிப்பு உள்ளவர்கள் ஜெயமோகனை அடைவதை விட, சுஜாதாவை வாசிக்கத் தொடங்கியபின் இலக்கியத்தேடல் கொண்டவர்கள் ஜெயமோகனை வெகு சீக்கிரம் உணர்ந்து வாசிப்பதை கண்டிருக்கிறேன். நீண்டகால வாசிப்பில் ஒரு தடத்திற்கு பழகிவிட்ட விலகலாகக் கூட இருக்கலாமோ அது ?

//ஜெயகாந்தனைக் கற்ற அளவு நான் ஜெயமோகனைப் படித்ததில்லை. அவரை வாசித்தவரை என் உணர்வு இது. அவரிடம் எனக்கிருக்கும் எதிர்பார்ப்பின் ஏமாற்றமாகவும் இருக்கலாம்//
ஜெயமோகன் கட்டுரைகளில் தோயும் உங்கள் மனம், அவருடைய ஏனைய எழுத்தையும் படித்தால் உங்கள் நிலைப்பாடு மாறலாம் ஜீவி.

உங்களின் ஆழமான ரசனையை உணர்த்தவன் என்பதால் தான் உரிமை எடுத்துக் கொண்டு நிறையவே எழுதலாயிற்று. நன்றி ஜீவி சார்!



மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்!

ஜூலைக்காக அடியவனும் வெய்ட்டிங்!

kashyapan சொன்னது…

மோகன் ஜி ! காடு நாவலை படித்ததில்லை ! ஜெயமோகனுடைய சில சிறுகதைகளை படித்திருக்கிறேன். நல்ல எழுத்தாளர்களில் ஒருவர். நீங்கள் அவர் எழுத்தில் முங்கி மய்ங்கி உள்ளீர்கள் என்று தெரிகிறது.அந்த அளவுக்கு அவருடைய எழுத்து எனக்கு பரிச்சயமில்லை .வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

மோகன்ஜி சொன்னது…

காஸ்யபன் சார்!
முங்குவதும் மயங்குவதும் இலக்கிய நுகர்வின் விதிகளன்றோ!
ஐந்து நிமிடங்களுக்கு முன் உங்களை நினைத்தேன். நாக்பூரில் ஹிந்துஸ்தானி இசைவிழாவுக்கு நீங்கள் போவதுண்டோ?!

ஜீவி சொன்னது…

ஒரு நீண்ட பதிலுக்கு நன்றி, மோகன்ஜி! கருத்துப் பகிர்தலுக்காகத் தானே வேலை மெனக்கெட்டு இந்த வேலையைச் செய்து கொண்டீருக்கிறோம். அதில் கிடைக்கும் ஆத்ம சுகத்தை நாம் இருவருமே அறிவோம். அதனால் நீங்களும் நானும் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதலாம். அது ஒரு பொது விவாதத்திற்கு உட்படும் பொழுது நீங்களும் நானுமே நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். அதான் முக்கியம். அதான் இந்த 'வேலை மெனக்கிடுதலின்' ஆய பயன்.

தமிழகத்தைப் பொறுத்தமட்டில் பெரும் பத்திரிகைகள் (அதுவும் நாலே நாலு) எழுதுவோரும் எழுதியவரும் தான் வெகுதிரள் வாசகர்களுக்கு அறிமுகமாகி இருக்கிறார்கள். அந்த விதத்தில் சிறு பத்திரிகைகளில் (முக்கியமாக தாமரை, செம்மலர் போன்ற)வற்றில் எழுதும் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் கணக்கிலேயே வராமல் போகிறார்களோ. அந்த விதத்தில் எனக்கு ஆதங்கம் தான்.

எல்லாவிதங்களிலும் பெரும் பத்திரிகைகளின் அரவணைப்புகளைச் சீந்தாமல் உடைத்துக் கொண்டு வெளி வந்து ஒரு பரந்து பட்ட வாசகர் குழாமிற்கு அறிமுகமானவர் ஜெயமோகன். அந்தவிதத்தில் சந்தேகமில்லாமல் அவர் பெருமைக்குரியவரே. அவரின் இந்த வெளிப்பாடு தான் அவர் நினைப்பதை எழுதக் கூடிய சுதந்திரத்தையும் செளகரியங்களையும் அளித்திருக்கிறது என்பதையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஜெயகாந்தனுக்குக் கூட இந்த சுதந்திரம் கிடைத்ததில்லை. தினமணிக்கதிரில் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலுக்கு எழுத வந்த முன்னுரையில் 'ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்கு மேலாக வட்டாட முடியாத நிலை. அப்படி வட்டாடினால் உறவுப் பாலம் தகர்ந்து விடும்' என்று பத்திரிகைகளுடான உறவு குறித்து அவரே குமைந்து கொண்டது உண்டு. அப்படி வட்டாட முடியாத சூழ்நிலையில் தான் அவர் எழுதுவதையே தவ்ரித்து விட்டார்.

புதுமைப்பித்தனையும் ஜெயகாந்தனையும் மட்டுமே ஒரு அணி சார்ந்தவர்கள் போல காரணத்திற்காக தான் குறிப்பிட வேண்டியிருந்தது. விந்தன், ஜெகசிற்பியன், ராஜம் கிருஷ்ணன், பிற்காலத்து அகிலன் ('எங்கே போகிறோம் நாவல்') ஆகியோரையும் சேர்த்து ஒரு பெரிய வட்டத்தில் உள்ளடக்கலாம். அவ்வளவு தான். சிறுபத்திரிகை சார்ந்த இந்த அணி சார்ந்த பலரை பரந்துபட்ட வாசகர்களுக்கு அறிமுகமின்மையால் குறிப்பிட்டச் சொல்ல முடியாத வருத்தமும் எனக்கு இந்த தருணத்தில் இருப்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இந்த அணிக்கு பொதுபுத்தியில் புரிவதற்காக ஒரு பெயர் கொடுக்கலாம் என்றால் சமூகம் சார்ந்த சிந்தனையுள்ள எழுத்து ஆளுமைகள் என்று கொள்ளலாம்.

இந்த தாத்பரியத்தில் தான் புதுமைப் பித்தன், ஜெயகாந்தன் ஒருவகை என்றால் அதற்கு நேர் எதிர் ஜெயமோகன் என்று குறிப்பிட்டேன்.

சமூகம் சார்ந்த எழுத்துக்கு நேர் எதிர் என்னவென்று கணித்துக் கொண்டால் இந்த வகைப்படுத்தல் வெகு சுலபத்தில் புரிந்து போகும்.

தொடர்ந்து பார்க்கலாம்.

ஜீவி சொன்னது…

//முதலாக, தமிழில் நாவல் எனும் இலக்கிய வடிவத்திற்கு அருகே நிற்கும் படைப்புகளில் ஜெயமோகனின் நாவல்கள், அந்த வடிவம் முற்றாக அமைந்தவை.//

அது என்ன தமிழில் நாவல் என்னும் இலக்கிய வடிவம்?.. யாரின் கண்டுபிடிப்பு இது?.. அப்படியான நாவல் இலக்கியத்தின் வரையறைகள் தாம் என்ன?..
எப்படி எழுதப்பட்டால் அது நாவல்?.. எப்படி எழுதப்பட்டால் அது நாவல் இல்லை?..

--போன்றா கேள்விகளுக்கு விடை உண்டு எனில், அவற்றின் அடிப்படையில் எய்படி நாவல் என்னும் இலக்கிய வடிவத்திற்கு அருகே ஜெயமோகனின் படைப்புகள் இருக்கின்றன என்று நாம் பார்த்து விடலாம்.

'தமிழில் நாவல் இலக்கியம்' என்ற ஆய்வுக்காகத் தான் 'அழகிய தமிழ் மொழி இது' தொடரை எழுத ஆரம்பித்தேன். உங்கள் கருத்துக்கள் அந்தத் தொடரின் மேற்கொண்டான வளர்ச்சிக்கும் உதவிடும் என்ற ஆர்வமும் எனக்கிருக்கிறது.

sury siva சொன்னது…

//அது என்ன தமிழில் நாவல் என்னும் இலக்கிய வடிவம்?.. யாரின் கண்டுபிடிப்பு இது?.. அப்படியான நாவல் இலக்கியத்தின் வரையறைகள் தாம் என்ன?..
எப்படி எழுதப்பட்டால் அது நாவல்?.. எப்படி எழுதப்பட்டால் அது நாவல் இல்லை?..//

சரியான கேள்வி தான்.
சீரியசா பதில் சொல்ல லாம்.
ரசிகர் கூட்டத்திற்காக ஒரு பதில் சொல்ல லாம்.
சுப்பு தாத்தா தன்னோட பாணியிலும் பதில் சொல்லலாம்.

மரபுக் கவிதைகள் எழுத இயலாதவர்கள் நச் என்று ஒரு இரண்டு வரிகளில் இப்போதெல்லாம் சொல்லிவிடுகிறார்கள் இல்லயா ?

மரபு சாரா கவிதைகள் ஏற்படுத்தும் நெகிழ்ச்சி பல தருணங்களில் மரபுக்கவிதைகளிலும் ஏற்படுவதில்லை. இல்லையா

அது போன்று ஒரு பெரும் காப்பியம் இயற்றக்கூடிய கதை, சூழ்நிலை, வடிவமைப்புத் திறன் எல்லாம் இருக்கிறது. ஆனால்,
இலக்கண நிர்ப்பந்தங்கள் இருக்கையிலே

காப்பியம் அல்லது காவியம் நாவல் உரு எடுத்திருக்குமோ என்று எண்ணிப்பாருங்கள்.

சங்ககால படைப்புகளிலே சில பாக்களின் இடையிடையே வசனங்களும் வருவது உண்டு. கடைச் சங்க காலம் முதல் கொண்டே இந்த புது வழி இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிறது.

பாடல் எப்போது உரையாக பரிணமித்தது என்பது பற்றி ஆராய, தமிழ் இலக்கிய சரித்திர அறிவு எனக்கு இல்லை.

(அறிவு இல்லை எனச் சுருக்கமாக சொல்லியிருக்கலாம் என்று ஒருவர் மனதுக்குள் முணுமுணுக்கிறார். )

தமிழில் முதல் நாவலை எழுதியவர் மாயூரம் வேதநாயகம் பிள்ளை.அவர் 1879ல் எழுதிய ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘தான் தமிழில்முதல் உரைநடை வடிவ நாவல்.




அப்பாடி, மூச்சு இரைக்கிறது . ஒரு டிகிரி காபி சாப்பிட்டு விட்டு வாறேன்.

நான் வரதுக்குள்ளே இந்திரா பார்த்தசாரதி எழுதிய "சிலப்பதிகாரச் சிக்கல்களில் " நீங்களும் கொஞ்சம் புரண்டு எழுந்திருங்கள்.

https://indiraparthasarathy.wordpress.com/2014/07/06/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/

சு தா.

காட்டுக்குள்ளே போயிட்டு வாங்க அப்படின்னு உங்க நாட்டுலே சொல்றீக. நான் பாட்டுக்குத் தெரியாம, சிங்கக் கூண்டுக்குள்ளே கையை விட்டு, அது என்ன கடிச்சு கிடிச்சு குதறி கீழே விழுந்தேன்னா ஜீவி சார் தான் போகச் சொன்னார் அப்படின்னு சொல்லட்டுமா

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்,

இந்த 'மெனக்கெடுதல்' எனக்கும் உவப்பே. இதில் நமக்கான தெளிவுமட்டுமன்றி, சுற்றியிருப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுமென்பதால் வரவேற்கபட படவேண்டியதே.

எழுபதுகளின் தொடக்கத்தில், நான் வாசிப்பே வாழ்க்கையாக அமைந்த முதிரா இளைஞன். நாபா, கண்ணதாசன், ஜெயகாந்தன் என்ற ஆளுமைகளை சுற்றிசுற்றி வரும் வாய்ப்பு... பல இலக்கிய ஆர்வலர்களுடனான விவாதங்கள் என்றிருந்த நாட்கள். அங்கெல்லாம் படைப்புகளையும் விட அதிகமாய் பேசப்பட்ட எழுத்தரசியல், காழ்ப்புகள், குண்டுசட்டிக்குள்ளே குதிரையோட்டம்.

ஜோல்னாப்பையுடன் சிற்றிதழ் வன்தமிழ் சகாக்களையும் அறிந்திருந்தேன். புரிந்து கொண்டது ஒரு உண்மை:

தாங்கிப் பிடிக்க ஒரு நிறுவனமோ, அமைப்போ இருந்தவர்கள் வெளிச்சத்துக்கு வந்தனர். சமரசம் செய்து கொள்ளாதவர்கள் உதாசீனப்படுத்தப் பட்டனர். அல்லது சிற்றிதழ்களுக்கு ஒதுங்கினர்.

கல்கி,சாண்டில்யன், ஜெயகாந்தன் போன்றவர்கள் அனைவருமே நிறுவனங்களின் ஆதரவு பெற்றவர்கள். அவர்களின் எழுத்தின் பிராபல்யம் நிறுவனங்களை அவர்களை நாடச் செய்தாலும், நீங்கள் குறிப்பிட்ட சமரசங்களுக்கு உட்பட்டு, நிறுவனங்கள் போட்ட வேலிகளுக்குள்ளிருந்து செயல்பட வேண்டி வந்திருக்கலாம்.

பின்னால் வந்த சுஜாதா, பாலகுமாரன் ஆகியோரும் பொன்வேலிக்குள் இருந்தபடி பொலிந்தவர்கள் தாம்.
வணிக எழுத்திலும் நல்ல ஆக்கங்கள் வந்தன என்பதை மறுப்பதற்கில்லை. பெருவாரியான வாசகர்க்கான தேவையும் கூட. ஆனாலும் பிற மொழிகளில் வெளியான வளமான ஆக்கங்கள் போல் இங்கு பரவலாக சீரிய ஆக்கங்கள் வரவில்லை. இத்தனைக்கும் சிறந்த படைப்பாளிகள் இங்கு இருந்தார்கள். அவர்கள் அரசாங்கம் ஊடகம் ஆகியவற்றின் ஆதரவுக்கு அப்பால்,எழுத்து என்னும் மாய ஈர்ப்பு ஒன்றிற்காகவே படைத்தார்கள். பரவலாக அப்படைப்புகள் சேராமல் , தேடி வருபவனுக்கே கண்ணில்படும் வனமலராய் பூத்து வாடவும் செய்தது.

ஜெயகாந்தனுக்கு அரசியல் பின்புலமும், போராளி எனும் பிம்பமும், சினிமாவும் எழுத்தாளன் எனும் அடையாளத்தை விட மகத்தான ஆளுமையாய் அவரைக்கட்டமைத்தன. அந்த கம்பீரத்துடனேயே வலம் வந்தார். கற்பனை வற்றியதால் எழுத்தை விடவில்லை. Self actualisation எனும் சுயமெய்ம்மை அடைந்ததால் எழுத்தையும் கடந்தார்.

ஜெயகாந்தன் போன்றோர்க்கு வாய்த்த வசதிகள் ஜெயமோகனுக்கு கிடைத்ததில்லை. எழுத்தின் வலிமையொன்றாலேயே தன்னை மெல்லமெல்ல நிலைநிறுத்திக் கொண்டவர். காடு வந்த சமயத்தில் ,
'ஜெயமோகன் நாளைக்கான எழுத்தாளர்' என்று ஒரு பேராசியருக்கு கடிதம் எழுதியது நினைவுக்கு வருகிறது. இப்போது கேட்டால், 'நாளைக்கும் என்றைக்குமான எழுத்தாளன்' என்றே சொல்வேன்.
தமிழ்இலக்கியத்தில் அவருக்கான் ஒரு நாற்காலி முன்னோடிகளுக்கு அருகே இருக்கும்.
வெறும் நட்பாலும் அபிமானத்தாலும் இதைச் சொல்லவில்லை. அவருடைய ஆக்கங்கள் தரும் நம்பிக்கையின் பேரில் சொல்கிறேன்.

தமிழ்மைய்யை நிரப்பி, காலமெனும் காகித்த்தில் எழுதிய அத்தனை படைப்பாளிகளுக்கும் கரங்குவித்த என் வணக்கம்!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்,

எனக்கு எழுத்தின் வகைகளை, சிறுகதை,நெடுங்கதை,நாவல்,பெருநாவல்,காவியம் என்று விரிவாக எழுதும் எண்ணமுண்டு. எழுதத் தொடங்கி கொஞ்சம் வளர்ந்து நிற்கிறது. தமிழ் புனைவுகளிலிருந்து தக்க உதாரணங்களும் மேற்கோள்களும் தந்து இருபத்தைந்து நெடும் பதிவுகளாக விஸ்தாரமாக எழுத நினைத்திருக்கிறேன். உங்களைப் போல தார்க்கோல் போட யாருமிருந்திருந்தால் இந்நேரம் முடித்திருப்பேன். பரவாயில்லை. விரைவில் எழுத உந்திவிட்டீர்கள்.

நாவல் அடுக்கடுக்காய் விரிவது. ஒரு இணைவாழ்க்கையாக நீள்வது. வாசிப்பவன் அதனுள் தானும் புகுந்து இயல்பாக கூடவே பயணிக்க வைப்பது. ஒரு உடனடி உதாரணமாக 'மோகமுள்' நாவலைச் சொல்வேன்.

ஜெயமோகன் ஆற்றிய உரை ஒன்று நினைவுக்கு வருகிறது. இருங்கள் ......

இருக்கு....
அவர் தளத்தில் 'இரண்டாயிரத்துக்குப்பின் நாவல்' என்று மார்ச் 2015ல் எழுதியிருக்கிறார். வாசியுங்கள் தற்போதைக்கு.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
அழகாகச் சொன்னீர்கள். காவியங்களின் முடிச்சுகளை, நாம் முயன்று நம் வழியில் பொதித்து எழுதினால் அதுவே நாவல் .
ஒரு ஆலமரத்தை போன்சாய் மரமாய் பிரதியெடுத்த வித்தை.
நிஜ பார்க்கைப் போலவே வடிவமைக்கப்பட்ட நவராத்திரி கொலு பார்க்.
பெரிதினும் பெரிதின், பெரும் குறு வடிவம்.

கைகுடுங்க சுதா!

ஜீவி சொன்னது…

மோகன்ஜி!

ஒரு இன்ச் கூட முன்னேறாமல் நாம் ஆரம்ப கேள்வியிலேயே இருக்கிறோம்.

இப்பொழுது இந்த பின்னூட்டங்களில் குறிப்பிட்ட எல்லா எழுத்தாளர்களையும் ஒரு வசதிக்காக மறந்து விடுவோம். சிக்கல்களை அவிழ்ப்போம். உணர்ச்சி வசப்படாமல் விஷயங்களை பிரித்துப் போட்டு அணுகுவதே அதற்கான ஆக்கபூர்வமான வழி. யாரையும் துதி பாடவோ ஆராதிக்கவோ நமக்கு அவசியமில்லை. அவரவர்கள் சாதித்தது அவர்களுக்காக நின்று நமக்கு வழிகாட்டட்டும். உங்களுக்கும் உதவக்கூடிய ஆக்கபூர்வமான ஒரு முயற்சி இது என்பதினால் இந்த முயற்சிக்கு உண்மையாக இருப்போம்.

இப்பொழுது ஆரம்ப கேள்விக்கே வருவோம். அங்கு தான் முழு சரித்திரமே இருக்கிறது. நீங்கள் தான் சொன்னீர்கள். என்ன சொன்னீர்கள்?..

"தமிழில் நாவல் எனும் இலக்கிய வடிவத்திற்கு அருகே நிற்கும் படைப்புகளில் ஜெயமோகனின் நாவல்கள், அந்த வடிவம் முற்றாக அமைந்தவை" என்று.

அதற்கு நான் கேட்டேன்: "அது என்ன தமிழில் நாவல் என்னும் இலக்கிய வடிவம்?.. யாரின் கண்டுபிடிப்பு இது?.. அப்படியான நாவல் இலக்கியத்தின் வரையறைகள் தாம் என்ன?.. எப்படி எழுதப்பட்டால் அது நாவல்?.. எப்படி எழுதப்பட்டால் அது நாவல் இல்லை?.."

ஒவ்வொரு கேள்வியாகப் பார்ப்போம்:

ஜெயமோகனின் படைப்புகளை அருகாமையில் நிறுத்தும் தமிழுக்கான நாவல் இலக்கிய வடிவம் எது?.. யாரின் கண்டுபிடிப்பு அது?..

இரண்டே கேள்விகள். இதற்கு பதில் கண்ட பிறகு மற்ற கேள்விகளுக்குப் போகலாம். சரியா?..

ஜீவி சொன்னது…

//ஜெயமோகன் தளத்தில் 'இரண்டாயிரத்துக்குப்பின் நாவல்' என்று மார்ச் 2015ல் எழுதியிருக்கிறார். வாசியுங்கள் தற்போதைக்கு. //

நம்மைப் பொறுத்த மட்டில் ஜெயமோகனும் இந்தத் தேவில் ஒரு மாணவர். அவர் சொல்லும் வழிநடத்தல்களை வைத்துக் கொண்டு அவருக்கே மார்க் போடுவதா?

'கேள்வியும் ஜெயமோகனே; பதிலும் ஜெயமோகனே' என்ற பரிதாபம் வேண்டாம்.

நாம் நமது இலக்கை அடைவதில் சமரசங்கள் இல்லாது இருப்போம்.

ஜீவி சொன்னது…

காடு புதினம் இங்கு சிட்னியில் உள்ள நூலகத்தில் எடுத்து வாசித்து மிரண்டுபோனேன். என்ன ஒரு ஆளுமை.. காட்டை புதிய பரிமாணத்தில் அறிமுகப்படுத்திய எழுத்து... ஒவ்வொரு கதாமாந்தரும் நச்சென்று மனத்தில் இடம்பிடித்த நேர்த்தி.. இப்போது உங்கள் விமர்சனம் வாசித்தபின் மீண்டுமொருமுறை காடேக ஆவல் பிறக்கிறது. கிடைத்தால் மறுபடியும் வாசிப்பேன். நன்றி மோகன்ஜி.

--- கீதமஞ்சரி

கீதமஞ்சரி மேடம்! ஜெயமோகனின் எழுத்தை இவ்வளவு ரசித்திருக்கிறீர்கள். நீங்கள் ஒதுங்கி இருக்கலாகுமா?.. நீஙகளும் கலந்து கொண்டால் இப்போதைக்கு மூவரோடு சேர்ந்து நால்வராவோமே!

sury siva சொன்னது…

https://www.youtube.com/watch?v=OlojSTpXhVo

மோகன்ஜி சொன்னது…

Jeevi sir,
Seen yr questions. I am otherwise engaged today.Shall try to continue the discussion tomrw.

ஜீவி சொன்னது…

நல்லது, மோகன்ஜி!

இந்த ஆய்வு நம் இருவரின் ப்ரொஜெக்ட்டுக்கும் பேருதவியாக இருக்கும் என்பது மட்டும் திண்ணம்.

'மங்களம், எக்காலத்தும் மங்கலம் தான். தொடர்வோம்.

வேங்கடப்பிரகாஷ், புதியதலைமுறை சொன்னது…

அருமை

வேங்கடப்பிரகாஷ், புதியதலைமுறை சொன்னது…

அருமை

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி வேங்கடபிரகாஷ்! முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும்.... தொடர்பில் இருப்போம் ஜி!

sury siva சொன்னது…

இங்கேயும் ஒரு விமர்சனம்
காடு நாவலில் வரும் கதா நாயகர்கள்
அவர்கள் வாழும்
மண்ணுடன் எப்படி இணைந்துள்ளார்கள் என்று
போற்றிச்சொல்லும் விதம்

https://gayathrid.blogspot.com/2016/06/blog-post.html?showComment=1465193445841#c6869922155071281255


சுப்பு தாத்தா.

geethasmbsvm6 சொன்னது…

தம்பி இன்னமும் காட்டிலிருந்து வெளியேறவில்லையா? :)