வெள்ளி, ஜூலை 29, 2016

வங்கத்து சீயமும் தங்கத் தமிழ் கவிஞனும்

நானும் 'ஜிங்க்னு போயிட்டு ஜங்க்ன்னு வந்துடலாம்
என்றுதான் போன பதிவுக்கப்புறம் போனேன். 
அப்பிடியே தாமதமாகி விட்டது. 
ஓயாத ஊர்சுற்றல். வெளிநாட்டுப் பயணங்கள்.... 
வெளியூர் பயணங்கள்... லண்டன், ஐரோப்பா சென்று வந்தேன். 
வந்தவுடன் ஐயப்பன் புத்தக வேலை முடித்தேன்.. 
அச்சுக்கு போயிருக்கிறது.. வந்தவுடன் தெரிவிப்பேன். 
ஒரு புத்தக மொழியாக்கம் இப்போது செய்து கொண்டிருக்கிறேன். 
என் சிறுகதை தொகுப்பு வெளியீட்டிற்காக தயார் செய்து கொண்டிருக்கிறேன்.

எதுக்காக இவ்வளவு பீடிகை என்கிறீர்களா? 
வலைக்கு வராது டபாய்த்ததிற்கு சால்ஜாப்பு சொல்லத்தான். 
இனிமே வண்டி ஒழுங்காய் ஓடும்..

துவக்கத்திற்கு முன், முடிந்துபோன இரு சகாப்தங்கள் பற்றிய அஞ்சலி

முடிந்து போனது அந்த ஆளுமைகளின் ஸ்தூல சரீரத்தின் 
நடமாட்டம் மட்டுமே. 
இலக்கிய வானில் என்றும் அந்தத் தாரகைகள் 
ஒளிவீசிக் கொண்டிருக்கும்.

மஹாஸ்வேதா தேவி

இந்திய இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாத படைப்பாளியாக 
விளங்கிய மகாஸ்வேதாதேவி தனது 90வது வயதில் 
நேற்று காலமானார். 

அவர் வெறும் படைப்பாளி மட்டுமல்ல. ஒரு சமூக சேவகி: 
அரசியல் விமரிசகர்: பிற்பட்டவர்களுக்கும், சமுதாயத்தில் 
ஒடுக்கப்பட்ட மக்களுக்குமாய் இறுதிவரை குரல்கொடுத்த 
புரட்சிக்குயில். இலக்கியவாதிகளைப் பெற்றோராகப் பெற்று, 
ஒரு நாடகாசிரியரை மணந்து, நபரூன் பட்டாச்சார்யா எனும் 
திறமை வாய்ந்த நாவலாசிரியரை மகனாகவும் பெற்றவர். 
வங்கதேசத்தில் பிறந்து, இந்தியப் பிரிவினைக்குப் பின் 
கொல்கத்தா நகரில் குடியேறினார். 
ஒரு பத்திரிகையாசிரியராகவும் நாவலாசிரியையாகவும் 
இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். 
ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாய் ஓங்கி ஒலித்தது இவர் குரல். 
மலைவாழ் பழங்குடியினர் படும் அல்லல்களும், அவர்களைச் 
சுரண்டும் மேட்டுக்குடியினரின் கொடுமையும்  அவருடைய 
நாவல்களில் இடம்பெற்றபடி இருந்தது . மேற்கு வங்காளத்தில் 
தொழில் வளர்ச்சியைக் காரணம் காட்டி விவசாய நிலங்கள் 
ஆர்ஜிதம் செய்யப்படுவதற்கு கடும் எதிப்பு தெரிவித்தவர். 
விளைவுகளைப் பற்றி அச்சம் இன்றி செயல்பட்டவர் இந்த 
பாரதி கண்ட புதுமைப் பெண். மகாஸ்வேதாதேவி மார்க்கசீய 
சிந்தனைகள் கொண்டவரே ஆன போதிலும், 
மேற்குவங்கத்தில் மா.கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தபோது, 
நந்திக்ராம் பிரச்னையின் போது அரசை எதிர்த்தவர்.


தனது கணவர் பிஜோன் பட்டாசார்யவுடன் ஏற்பட்ட விவாகரத்தும், 
தன் மகனும் தந்தையோடு போனதும் இந்த உறுதிவாய்ந்த 
பெண்ணரசியை நிலைகுலைய செய்யவில்லை. எழுத்தும், 
சமூக நோக்குமே அவர் வாழ்க்கையாகிப் போனது.

மகாஸ்வேதாதேவியின் ஆக்கங்கள் ஆங்கிலம் ஹிந்தி உட்பட 
பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டன. 
பெண்களின் முன்னேற்றத்துக்கும் சமவாய்ப்புகளுக்கும் 
தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்டார்.

பத்மவிபூஷன்(2006), மேகசெசே விருது (1996),சாஹித்திய அகாதமி 
விருது  (1979), ஞானபீட விருது (1995),பத்மஸ்ரீ  (1986) மற்றும் 
பல மாநில விருதுகளும் பட்டங்களும் இவரைத் தேடிவந்தன. 
இவர் படைப்புகளில் ஜான்சி ராணி, அக்னி கர்பா, 
சோட்டி முண்டா ஏவம் தார் திர், பாஷாய் துடு, 
ருடாலி, பெண்களும் நலிந்தவர்களும் விவசாயிகளும், குலபுத்ரா 
ஆகியவை முக்கியமானவை. வங்க இலக்கியத்தில்  வாழ்நாள் சாதனையாளர் பட்டமும் பெற்றார். 
“ஆரண்யேர் அதிகார்” நாவலுக்காக கிடைத்ததே 
சாஹித்ய அகாதமி விருதாகும்.

எண்பதுகளில் கல்கத்தாவில் நான் பணியாற்றியபோது 
வங்க இலக்கிய ஆர்வல நண்பருடன் ஒரு இலக்கிய கூட்டத்திற்கு போயிருந்தேன். 
விழாமுடிந்தவுடன் நண்பருடன் மகாஸ்வேதா தேவி அவர்கள் 
அருகாமையில் சென்றோம். அறிமுகம் செய்விக்கப் பட்டேன். 
தமிழ்நாடு என்றவுடன்... ‘ஜோயகோந்தோன்’ (ஜெயகாந்தன் ) என்று சிரித்தார். 
அந்த சிரிப்பை என் புத்தக அலமாரிகளில் ஒன்றில் 
பத்திரமாய் வைத்திருக்கிறேன்.  

மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த அவர் மறைவு இலக்கியத்துக்கும் 
ஆதரவற்ற ஏழைச் சமூகத்துக்கும் ஒரு பெரும் இழப்பு.


ஞானக்கூத்தன்

தமிழ்ப் புதுக்கவிதையுலகில் ஒரு முன்னோடியாக இருந்த கவிஞர் 
ஞானக் கூத்தன் மறைவு ஒரு சொந்த சோகம். மிகக்குறைந்த 
சொற்களில், கூற வந்ததை காட்சிப்படுத்த வல்லவை இவர் கவிதைகள். 
இவர் மரபுக்கவிதை இலக்கணம் நன்கு அறிந்திருந்ததாலேயே 
புதுக் கவிதைகளும் உறுத்தாத ஒலிநயம் கொண்டிருந்தன. 
அங்கதம் பேசும் வரிகள்.
           
எனக்கும்
தமிழ் தான் மூச்சு ஆனால்,
அதை பிறர் மேல் விடேன்!

என்ற வரிகள்தான் நான்கு தசாப்தங்களுக்கு முன் என் பிடரியை 
உலுக்கி ஞானக்கூத்தனை திரும்பிப் பார்க்க வைத்தது. 
அவர் கவிதைகள் எளிமை போல் தோன்றும், எள்ளி நகையாடும், 
நம் உள்ளேபோன கவிதை நள்ளிரவில் எழுப்பி வேறோர் அர்த்தம் சொல்லும்.....

அவருடைய மேஜையில் இருந்த நடராஜர் பற்றிய கவிதையும், 
'அம்மாவின் பொய்கள்' போன்ற பல கவிதைகளும் என்றும் 
நினைவில் நிழலாடும். 

'பவழமல்லி' என்ற ஞானக்கூத்தனின் காதல்கவிதையைப் பாருங்கள்: 


கதைகேட்கப் போய்விடுவாள் அம்மா
மாடிக்கொட்டகைக்குப் போய் விடுவார் அப்பா
சன்னத் தாலாட்டின் முதல்வரிக்கே குழந்தைத்தம்பி தூங்கிவிடும்
சிறுபொழுது தாத்தாவுக்கு விசிறியதும் அவரோடு வீடுதூங்கும்

பூக்களெல்லாம் மலர்ந்தோய்ந்த இரவில் – மெல்ல
கட்டவிழும் கொல்லையிலே பவழமல்லி

கதைமுடிந்து தாய்திரும்பும் வேளை மட்டும்
தெருப்படியில் முழுநிலவில்- அந்த நேரத்தனிமையிலே
என் நினைப்புத் தோன்றுமோடி ?

அவருடைய கவிதைத் தொகுப்புக்களான ‘அன்று வேறு கிழமை’, ‘மீண்டும் அவர்கள்’, ‘சூரியனுக்கு பின் பக்கம்’ போன்றவைகளை தேடி வாசியுங்கள். அப்போது புரியும் மரணம் ஏன் கவிஞனை வெல்லவே முடியாதென்று.

53 comments:

G.M Balasubramaniam சொன்னது…

சால்ஜாப்பு சொல்லக் காரணங்களும் திறமையும் இருக்கிறது கோபப்படவோ வருத்தப்படவோ முடியவில்லை. நலிந்த மக்களுக்காக எழுதுபவை அவர்களுக்கு உதவி இருக்கிறதா மஹாஸ்வேதா தேவி என்னும் பெயர் பத்திரிகைகளில் படித்துதான் தெரிந்து கொண்டேன் தெரியாதது உலகளவு என்பது மீண்டும் ருஜுவாகிறது எனக்கும் தமிழ்தான் மூச்சுஆனால் அதை பிறர்மேல் விடேன் தாயே தமிழே என்றெல்லம் பேசும் ஆர்வலர்களைக் குறி வைக்கிறதா

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

ஆளுமைகளின் மறைவு வேதனையளிக்கிறது

மோகன்ஜி சொன்னது…

வாங்க GMB சார்!
கைமீறி வழியும் அளவுக்கு பொறுப்புகள் எடுத்துக் கொள்வதன் விளைவே அவ்வப்போது வலைப்பூ வர இயலாமல் போவது. என்ன செய்வது?
மகாஸ்வேதா தேவியின் கருத்துக்கள் வங்க மக்களிடையேயும், ஊடகங்களிலும் நல்ல தாக்கம் ஏற்ப்படுத்தியவை.மக்கள் கவனத்தைப்பெற்று, ஒரு விவாதமும் கருத்தாக்கமும் உருவாக காரணமாய் இருந்திருக்கிறார்.

ஞானக்கூத்தன் வரிகள் அவருடைய ஆளுமையின் வெளிப்பாடே..

எல்லா மொழியும் நன்றே
கோவிக்காதீர் நண்பரே,
தமிழும் அவற்றில் ஒன்று என்கிறார்.

சமஸ்க்ரித்த மொழியை நன்கு அறிந்தவர். வடமொழி ஆக்கங்களை அந்த மொழியிலேயே பயின்று களித்தவர். கன்னடம் அறிந்தவர். ஆகவே தான் எளித்தில் பிறமொழிகளை புறந்தள்ளவில்லை அவர்.

'யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்' என்று பாரதி சொன்னது வேறு விஷயம். தமிழைக் கொண்டாட பாரதிக்கு எந்த அரசியல் நிலைப்பாடோ நிர்பந்தங்களோ இல்லை. ஆங்கிலம், சமஸ்க்ருதம், தெலுங்கு, ஹிந்தி என்றுபலமொழிகளிலும் பாண்டித்யம் பெற்றவன். ஒரு ஒப்பீட்டிலேயே தமிழின் சிறப்பைக் கொண்டாடியவன். நான்கூட பாரதியார் கட்சி தாங்க.
தமிழ் எனக்கும் மூச்சு தான்.
அந்த மூச்சு
என்னை விட்டு விடாதிருந்தால் சரிதான்!


மோகன்ஜி சொன்னது…

உண்மை கரந்தையாரே!
இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவர்கள் மறைவு தாங்கவொணாததே!

Ramani S சொன்னது…

மிகச் சிறப்பான பணிகளுக்காக
வலைத்தளம் வராது இருந்ததை
சொல்லிப் போனவிதத்தை மிகவும் இரசித்தேன்

இரண்டு பேரிழப்புகளைச் சுருக்கமாகச்
சொல்லிப் போனாலும்
அழுத்தமாகச் சொல்லிப் போனவிதம்
மிக மிக அருமை

தொடர்ந்து சந்திப்போம்

வாழ்த்துக்களுடன்

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

வாங்க ரமணி சார்!

உங்கள் ரசனைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜி!

உங்களுக்காய் ஒரு ஞானக் கூத்தன் கவிதை இங்கே:

மேசை நடராசர்

மேசை மேல் உள்ள நடராசரைச்
சுற்றிலும் இருந்தவை பூத
கணங்கள் அல்ல. கிங்கரர் அல்ல.

எழுதாத பேனா
மூக்குடைந்த கோணூசி
தைக்கும் நூலான பூணூல் உருண்டை
கறுத்துத் தடித்த குடுமி மெழுகு
குப்புறப் படுத்துக் கொண்டு
சசிகலா படித்த நாவல்
முதல்வரின் மழை விமானம்
பயன்படாமல் பழுது பார்க்கப்பட
பங்களூர் சென்றதைக்
கட்டமிட்டுக் கூறிய செய்தித்தாள்
மூலை நான்கிலும் சாரமிழந்து
மையம் விடாத முகம் பார்க்கும் கண்ணாடி
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டி, மற்றும்
இனிவரப் போகும் பலவகைப் பொருள்கள்

ஆனால் நடராசர்
ஆடிக் கொண்டிருக்கிறார்
இருப்பிடம் இமயமோ சித்சபையோ
இல்லையென்றாலும் சூழ்ந்தவை பூத
கணங்கள் இல்லையென்றாலும்

எனக்குத்தான் ஆச்சரியம்
எடுத்த பொற்பாதத்தின் அருகே
கழுத்து நீண்ட எண்ணெய்ப் புட்டியைத்
தவறியும் இடறி விடாமல்
ஆடிக் கொண்டிருக்கிறார்
மேசை நடராசர்

தனிமரம் சொன்னது…

மகாஸ்வேதா தேவி பற்றி பல அறியாத தகவல்கள் அறிந்தேன் .அவரின் நூல்கள் தமிழில் மொழிபெயர்ப்பு இருக்கா என்று இனித்தான் தேடனும்!

ஸ்ரீராம். சொன்னது…

ஞானக்கூத்தன் அவர்களின்மறைவு ஒரு இழப்பு என்பதை எடுத்துக் காட்டப்படும் அவரது கவிதை வரிகள் உணர்த்துகின்றன. நீங்கள் சொல்லியிருக்கும் புத்தகங்களை வாங்க முயல்வேன்.

sury Siva சொன்னது…

மஹாஸ்வேதா அவர்களின் கதையின் அடிப்படையில் வந்த ஐந்து படங்களில் நான் பார்த்தது றுதாலி.
சமூகத்தின் சில பல அநாகரீக பழக்கங்களை வெளிக்கொண்டு வந்து வெளிச்சம் போட்டு காட்டியவர்.
இவரதுபடங்களை நான் இங்கு காட்டி இருக்கிறேன்.
www.sachboloyaar.blogspot.com

ஞானக் கூத்தன் கவிதைகளில் ஒன்று
அம்மாவின் பொய்கள்.


"பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்

தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்

தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்

ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்

எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா

அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்

தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?

அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?

தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா

உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்?""

என்னையும் என் அம்மா
தவிட்டுக்கு வாங்கியவன் என்று
சொல்லி இருக்கிறார். நினைவுக்கு வருகிறது.


சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

வாங்க தனிமரம் ! மஹாஸ்வேதா தேவியின் நூல்கள் சில தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. கூகிளில் தட்டினாலே, சில பதிப்பக தகவல்கள் வருகின்றன. நான் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் படித்தேன். வங்காளத்திலேயே படித்துகாட்டி, contextஐ எடுத்து சொல்லவல்ல சிநேகிதங்கள் வாய்த்தது. விமரிசனங்களையும் அறிய நேர்ந்தது.
பிறிதொரு சமயத்தில் அவர் படைப்புகளைப் பற்றி விரிவாக எழுத ஆர்வம் இருக்கிறது. பார்ப்போம் நண்பரே!

மோகன்ஜி சொன்னது…

ஶ்ரீராம் !

புதுக்கவிதை என்பது தமிழ் இலக்கியத்தில் பல காலத்திற்குப் பிறகு ஏற்பட்ட ஒரு மகத்தான இயக்கம். யாப்பு போட்டிருந்த வேலி தாண்டி, புதிய கருத்துக்கள் தமிழ்கவிதையில் சொல்ல கடினமாக ஆகிவிட்டிருந்த காலகட்டம். வசனகவிதை என்று பாரதி தான் சொல்புதிது பொருள்புதிது என் ஆர்ப்பரித்து வந்தவன். அந்த அக்கினிக்குஞ்சே கனன்று கொண்டிருந்து, ஐம்பதுகளில் கொழுந்துவிட்டு எரியலாயிற்று. எதுவுமே பாடுபொருளாய் பவனி வந்தது. பல கவிஞர்கள் முன்னோடிகளாக படைத்து வந்தார்கள். ந.பிச்சமூர்த்தி, கநாசு தொடங்கி பல பல்லக்கு தாங்கிகள். முதலில் பல்லக்கில் ஏறத் தயங்கிய கவிதைமகள், விரைவிலேயே ஸ்வாதீனமாய் அமர்ந்து கொண்டாள். எந்த வெள்ளப் பெருக்கும் உடன் கொண்டு சேர்க்கும் குப்பைக் கூளங்களுக்கும் குறைவில்லை. காலம் அவற்றை உதிர்த்துவிடும். வரும் சந்ததியினர் புதுக்கவிதை சரித்திரத்தை எழுதும்போது, ஞானக்கூத்தனுக்கான அத்தியாயம் மிதற்பத்திலேயே வந்துவிடும். ஐயமில்லை.

sury Siva சொன்னது…


//மிதற்பத்திலேயே//

???

subbu thatha.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
நலம் தானே?
மஹாஸ்வேதாதேவி பற்றிய உங்கள் சுட்டிக்கு நன்றி.
ருதாலி ஒரு நல்ல படைப்பு.
வங்க திரைப்படங்களைப் பார்க்க ஒரு தனிமனநிலை வேண்டும்.
அது புத்தகங்களின் பக்கங்கள் போலவே மெள்ளவே புரளும்.

மஹாஸ்வேதாதேவி.இன் புதல்வர் நபாருன் பட்டாச்சார்யாவின் ஆக்கங்கள் சிலவும் திரைப்படங்களாயின.
அவரும்படி தாயைப்போலவே ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாய் பேசியும் எழுதியும் வந்தவர்.
தாயிடம் பெரும் ஒட்டுதலின்றி விலகி இருந்தவர். 2014ல் அவர் மரணமடைந்த போது,
அந்த தாய்க்கு பேனா மட்டுமே சொல்லிக் கொள்ள சொந்தமென்றானது.

ஞானக்கூத்தனின் 'அம்மாவின் பொய்கள்' புதுக்கவிதைக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு.
'அட, நான்கூட எழுதியிருப்பேனே இந்தக் கவிதையை' என்று எண்ணவைக்கும் எளிமையான வரிகள்.
ஆனால், எளிமை தான் கடினமான ஒன்று என நமக்குத்தான் புரிவதேயில்லை!

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
'முதற் பத்திலேயே' என்பதே 'மிதற்பத்திலேயே' என வந்து விட்டது.
'மிதப்பிலேயே' இருந்தா இப்படித்தான்!!

sury Siva சொன்னது…

//எளிமை தான் கடினமான ஒன்று என நமக்குத்தான் புரிவதேயில்லை!//


எளிமை இதயத்திற்குப் புரிந்த அளவிற்கு,

ஏணி வைத்தாலும் என் தலைக்குப் புரியாது.

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

சு.தா!
நான் உங்களைப் போல் நினைக்கவில்லை.
உங்கள் எளிமையை அறிந்தவன் நான்.
தளும்பாத நிறைகுடம் நீங்கள் .
குடமே இன்றி, கைகுவித்து கூத்தாடும் எனைப்போன்ற கூத்தாடி அல்ல நீங்கள் !

KILLERGEE Devakottai சொன்னது…

//தமிழ் தான் மூச்சு ஆனால்,
அதை பிறர் மேல் விடேன்//

எத்தனை பொருள் பதிந்த வைரவரிகள் நன்று, என்றும் நிற்கும்.
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி

மோகன்ஜி சொன்னது…

வாங்க கில்லர்ஜி! இன்று சாருவின் தளத்தில் ஞானக்கூத்தனின் 'காலவழுவமைதி' எனும் பழைய கவிதை ஒன்றைப் போட்டிருக்கறார் பாருங்கள்.
அது காது கொண்டு எழுதிய கவிதை!

sury Siva சொன்னது…

//கைகுவித்து கூத்தாடும் எனைப்போன்ற கைகுவித்து கூத்தாடும் நீங்கள் ! அல்ல நீங்கள் !//


ஆத்தாடி !!

அம்புட்டு வார்த்தை எல்லாம் வேண்டாமுங்கோ...ஜன்னி புறந்துடும்.

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

அந்த அவை யிலே நானும் ஒருவன். அம்புடுதேன்.

பெருஞ்செல்வம் அப்படின்னா இன்னா ?

இப்ப, ஸ்வேதா, ஞானக் கூத்தன் இவங்க எல்லோருமே இறந்த பின்னே
எப்படி நினைவு கூறப்படுகிறார்களோ அது போல, வேண்டாம், அதுலே கோடிலே ஒரு பங்காவது என்னைபத்தி பிற்காலத்திலே நினைப்பாகளா அப்படின்னு யோசனை.

ஊஹூம். ஒரு பய புள்ள இருக்க மாட்டான் இல்ல !!

இருக்க மாட்டான் அப்படின்னு ஒப்புக்கறது எளிமை.இல்லையா.

சுப்பு தாத்தா.

மோகன்ஜி சொன்னது…

அஹா! சு.தா!

//இருக்க மாட்டான் அப்படின்னு ஒப்புக்கறது எளிமை.இல்லையா//

அது எளிமையில்லை. சுய பச்சாதாபம்! கழிவிரக்கம் !!

எல்லோரும் பேசும் வண்ணம் எல்லோருடைய வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை.
பேசப்படாதவர்கள் யாவருமே 'பொருட்படுத்தத் தக்கவர் இல்லை' என்பதுமில்லை.

எங்க சித்தப்பா Thomas Grey இன்னான்றார் தெரியுமா?

Full many a gem of purest ray serene
The dark unfathomed caves of ocean bear:
Full many a flower is born to blush unseen
And waste its sweetness on the desert air

பாடப்படாத வீராதி வீரர்கள்தான் உலகின் அச்சு.
மகாத்மா காந்தி என்றால் ஒட்டுமொத்த விடுதலைப் போராட்டத் தியாகிகள் தான்.

எனவே பார்த்தா! அந்த யோசனையையே விடு!
இல்லை அங்கீகாரம் தான் வேண்டுமென்றால், நான்கு புத்தகம் போடு. மோடியை எதிர்த்து கூப்பாடு போடு. இல்லை கர்நாடக சங்கீதத்தை பிராம்மணர்கள் கையிலிருந்து பிடுங்கிப் போடு! இல்லை, ஒரே பிரசவத்தில் ஏழு குழந்தைகளாவது பிறக்கும் வகை செய்.

மனம் தளராதே.
சாகும் வரை வராதது,செத்தபின் வந்தால் தெரியாது!!

ஜீவி சொன்னது…

ஆஹா. மோகன்ஜி! பார்த்ததில் சந்தோஷம்.

மஹாஸ்வேதா தேவி பற்றித் தெரியாததைத் தெரிந்து கொண்டேன்.
அவரைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் கூடிற்று.

ஞானகூத்தன் பற்றி வேறு யாராவது எழுதியிருந்ததைப் படித்திருந்தால் அது வழக்கமான இரங்கல் செய்தி போல அமைந்திருக்கும். அவரை வாசித்துத் தெரிந்தவர் அவர் பற்றி எதைச் சொல்ல வேண்டுமோ அதை சொல்லிக் கேட்டதில் கேட்ட விஷயம் ரொம்பவும் அர்த்தம் நிரம்பியதாகப் பட்டது.

அந்த வானம்பாடியின் நினைவுகளுக்கு அஞ்சலிகள்.
ஜீவி சொன்னது…

1. ஐயப்பன் புத்தக வேலை முடித்தாயிற்று. அச்சுக்கு போயிருக்கிறது.

2. ஒரு புத்தகத்திற்கான மொழிபெயர்ப்பு வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது.

3. சிறுகதைத் தொகுப்புக்கான தயாரிப்பு வேலைகள்.

-- நல்ல செய்திகள். காத்திருக்கிறேன்.

S.P.SENTHIL KUMAR சொன்னது…

இலக்கிய படைப்பாளி மஹாஸ்வேதா தேவி பற்றி தங்கள் மூலமே அறிந்துகொண்டேன். அவரின் மறைவும் ஞானக்கூத்தனின் மறைவும் படைப்புலகுக்கு மிகப் பெரும் இழப்பே.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நேற்று மாலை பெங்காலி நண்பர் மஜும்தார் வீட்டிற்குச் சென்றிருந்தபோது மாஹாஸ்வேதா தேவி பற்றியும் பேச்சு வந்தது. அவரின் வாழ்க்கை, அவரது படைப்புகள் என பேச்சு இருந்தது.

ஞானக்கூத்தன் மறைவும் வருத்தம் தந்தது. அவரது புத்தகங்களை படிக்க வேண்டும்.

உங்கள் புத்தகங்களும் வெளிவரப் போவதில் மகிழ்ச்சி. காத்திருக்கிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

ஸ்வேதாவை அறிந்திலேன். பதின்ம வயதுகளில் கூத்தனை படித்து வியந்திருக்கிறேன். அதுபோல் எழுத முற்பட்டு அது எவ்வளவு கடினம் என்றறிந்து கைவிட்டிருக்கிறேன்.

சிவகுமாரன் சொன்னது…

தங்கள் புத்தகங்களுக்காகக் காத்திருக்கிறேன்

sury Siva சொன்னது…

//பதின்ம வயதுகளில் கூத்தனை படித்து வியந்திருக்கிறேன்//

ஞானக் கூத்தன்

ஞாலத்தைப் புரிந்தவன்
ஞானம் அடைந்தவன்
வானத்து மேடுகளையும் - ம
யானத்துத் துயர்களையும் - தன்
கானத்தால் அளந்தவன்.

திணை உலகம் படித்தேனே . நினைவு வந்தது.
தேடிப்பார்த்தேன். இங்கு இருந்தது.

எருமைகள் சாணம்போட
குருவிகள் எச்சம்போட
உருப்பெரிய எலிகள் முன்பே
விருந்துண்டு இல்லம் ஏக
முழங்குறைத் தளக்கும் கையாள்
முல்லைப் பூ கூவக் கேட்டுக்
கிருதயுகம் எழுந்ததம்மா
என் கனவைக் கீறிக்கொண்டு.

(2)
உலகத்தோடொட்டி
யொழுகியொழுகிப்
பலபெற்றோம் இன்னும் உள.

(3)
இன்னும் சிலநாள் அப்புறம் பலநாள்
ஆயினும்
வரத்தான் போகிறது அந்நாள்
விண்குதித்த
சின்னப் பறவைகளின்
பறக்குங்கால் எடுக்குங்கால்
பூளைப் பூகிழியும் நாள்."


வேதங்கள் கூறும் செய்தி ஒரு
விதையிலே காட்டிச் செல்லும்
வித்தகன் ஞானக்கூத்தன்.
வியப்பதில் விந்தை இல்லை.

சுதா.

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்.
நலம் தானே?
உங்கள் ஆர்வம் கண்டு மஹாஸ்வேதா தேவி படைப்புகள் பற்றி எழுதும் ஆவல் மேலிடுகிறது. எழுதுவேன் சார்.
ஞானக்கூத்தன் பற்றி என்ன சொல்ல? சில வெற்றிடங்கள் நிரப்பப்படுமோ இல்லையோ என அச்சம் சூழ்கிறது. இறுதி மரியாதைக்கு மிகக் குறைவான வாசகர்களே இருந்தார்களாம். பாரதியை விடப் பரவாயில்லையாம். அவனுக்கோ பத்தே பேர் தானே?!

மோகன்ஜி சொன்னது…

ஜீவி சார்,
அச்சில் எழுத்தைப் பார்க்கும் ஆர்வம் ஏனோ எனக்கு இருந்ததில்லை. அச்சில் இரண்டு நூல்கள் வந்தும்(ஒன்றில் ஜெயமோகன் சார் புத்தகத்தில் ஒரு சிறுகதை மொழியாக்கம்) மாறாக அதை ஒரு நிர்பந்தமாக்கிக் கொள்வதாக ஒரு மனவிலக்கம் இருந்தபடியே இருந்து வந்திருக்கின்றது.
நண்பர்கள் விடுவதாயில்லை.
நீங்கள் கூட ஒருமுறை வெளியீடு அவசியம் என அலைபேசியில் வலியுறுத்தினீர்கள்.
பெரிய உந்துதல் எனது குடும்பத்தின் நச்சரிப்பும் கூட. எனவே தான் களத்தில் குதித்தேன்!
உங்களைப் போன்ற நலம்விரும்பிகள் வழிகாட்டலில், இந்தப்பணியை சொச்ச காலத்திற்கும் தொடர உத்தேசம்.
அந்த வகையில் உங்களுக்கு என் தனிப்பட்ட நன்றிஜி!

மோகன்ஜி சொன்னது…

உண்மை செந்தில் குமார்ஜி. இருவரையும் இழந்தது ஈடுபட்ட செய்யமுடியாதது.

மோகன்ஜி சொன்னது…

பல வங்காளிகளுக்கு அவர் பெரிய ஆதர்சம். வங்காளத்தில் அவர் மொழியாளுமை தனித்துவமானது. நம் ஜெயகாந்தன் போலே...

மோகன்ஜி சொன்னது…

சிவா!
மஹாஸ்வேதா தேவி பற்றி விரிவாக, அவர் எழுத்தை வைத்து பதிவிடுகிறேன் தம்பி.

நான் புதுக்கவிதைகளுக்கு என்னை ஒப்புக் கொடுத்துவிட்டு எழுதிக் குவித்த நாட்களில் , சொல்லாடலை ஞானக்கூத்தனிடமும், கூர்மையை அப்துல் ரகுமானிடமும் ஸ்வீகரித்துக் கொண்டேன்.

அந்த வகையில் ஒரு குருவை இழந்து விட்டேன்.

மோகன்ஜி சொன்னது…

சிவா!
உன் கவிதைக்கு ஏது ஈடு?
நீ ஸ்வயம்பு அல்லவா தம்பி?!

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

சுதா!
ஆஹாஹா!
//வேதங்கள் கூறும் செய்தி ஒரு
விதையிலே காட்டிச் செல்லும்
வித்தகன் ஞானக்கூத்தன்.
வியப்பதில் விந்தை இல்லை. //

நெகிழ்த்தி விட்டீர்கள்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

நூல் விரைவில் வெளியிட வாழ்த்துகள். ஞானக் கூத்தன் மறைவு பற்றி சங்கரநாராயணன் அவர்களின் முகநூல் பதிவின் மூலம அறிந்தேன். ஞானக் கூத்தன் அவர்களின் சில கவிதைகளை அவரது இறப்புக்குப் பின் சிலர் சுட்டிக் காட்டியதன் மூலம் ஆங்காங்கே படித்து வியந்தேன்.எத்தகைய நல்ல படைப்பாளிகளின் ஒரு சில படைப்புகளைககூட இது வரை அறியாமல் இருந்ததில் வெட்கப் படுகிறேன்.
இந்த நிலையில் எங்களைப் போன்றவர்கள் மகாஸ்வேதாதேவி போன்றவர்களை அறியாமல் இருந்ததில் வியப்பில்லை.இப்போதுதாவது அறிந்தோமே! மகிழ்ச்சி நன்றி

மோகன்ஜி சொன்னது…

நன்றி முரளி!

தாமதமாக அறிய நேர்வது பிழையல்ல.அறிய வந்ததை ஆழ்ந்து வாசித்து பயன் கொள்ளல் அல்லவா முக்கியம்? இயன்ற போது அவர் கவிதைகளை வாசியுங்கள். அது நல்ல அனுபவமாக அமையும் என்பது உறுதி.

Geetha Sambasivam சொன்னது…

மஹா ஸ்வேதா தேவி குறித்து அறிந்திருந்தாலும் உங்கள் அளவுக்கு ஞானம் இல்லை. ருதாலி பார்த்தப்போத் தான் அதன் ஆழம் கொஞ்சமானும் புரிந்தது. இவ்வளவு நாட்கள் காணோமேனு நினைச்சாலும் அந்த நாட்கள் பயனுள்ளவையாகக் கழிந்தமைக்கு வாழ்த்துகள். புத்தகங்கள் வெளியீடு காண வாழ்த்துகள்.

மோகன்ஜி சொன்னது…

வாங்க அக்கா!
எனக்கு கொஞ்சம் 'கூட தெரிஞ்சிருந்தது'.
அதுவே கொஞ்சமே ஆனாலும், நீங்கள் 'அறிந்திருந்தது'.
தெரிதல் வெறும் விவரம். அறிதல் ஞானம்.
ஓவர் to சுதா செல்லம் !

நிலாமகள் சொன்னது…

முடிந்து போனது அந்த ஆளுமைகளின் ஸ்தூல சரீரத்தின்
நடமாட்டம் மட்டுமே.
இலக்கிய வானில் என்றும் அந்தத் தாரகைகள்
ஒளிவீசிக் கொண்டிருக்கும்.//

இது சம்பிரதாயம் மட்டுமற்ற அசல் வார்த்தைகள்!

ஆகச் சிறந்த படைப்பாளியின் உயிர்ப்பு அவனது படைப்பில் தங்கி விடுகிறதே...

தமிழ் இந்துவில் இருவரின் அஞ்சலி படித்தாலும் உணர்ந்து உருகச் செய்தது உங்க பதிவும் பின்நூட்டங்களும்.

பவழமல்லியும், மேசை நடராசரும் உங்க தயவில் ரசிக்கக் கிடைத்தது.அம்மாவின் பொய்களும், காலவழுவமைதியும் தி இந்துவின் உபயத்தில்.

@சுப்பு தாத்தா...

நானும் தவிட்டுக்கு வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டதுண்டு. 'நான் யார்?' என்ற தேடலை துவக்கி வைத்த நாட்களல்லவா அவை...!

வாசித்த கவிதையால் உயிர்த்தது நினைவில் நின்ற அந்த நாள்.

நிலாமகள் சொன்னது…

தமிழ்நாடு என்றவுடன்... ‘ஜோயகோந்தோன்’ (ஜெயகாந்தன் ) என்று சிரித்தார்.
அந்த சிரிப்பை என் புத்தக அலமாரிகளில் ஒன்றில்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்.//

சிலிர்ப்பு!

நிலாமகள் சொன்னது…

http://nilaamagal.blogspot.in/2016/07/blog-post_74.html#comments//

நீங்க வரலைன்னு காத்திருந்தது இது.

sury Siva சொன்னது…

//
நானும் தவிட்டுக்கு வாங்கப்பட்டதாக சொல்லப்பட்டதுண்டு. 'நான் யார்?' என்ற தேடலை துவக்கி வைத்த நாட்களல்லவா அவை...!//
@கீதா மேடம்.

ஒரு ஒரு உண்மை சொல்லட்டுமா கீதா பாட்டி சாரி, சாரி, கீதா அம்மா,

காதை பக்கத்தில் கொண்டு வாங்க சொல்றேன்.

எதுக்கு அப்படின்னு எல்லாம் கேட்கக் கூடாது.

நான் அந்த "தவிட்டுக்கு வாங்கின" விஷயம் இருக்குதே அது பத்தி தான்.

விலா வாரியா சொல்லலாம். விளக்கமா சொல்லலாம்.
இல்லே, சுருக்கமா சொல்லலாம்.
ஏன் ! ஒரு சொல் போதுமே அதை
என்ன அப்படின்னு சொல்வதற்கு.

அந்த தவிட்டுக்கு வாங்கின ரகசியம் இருக்கே...
அது சிதம்பர ரகசியம் போல.

எல்லோருக்கும் தெரியும் ஆனா தெரியாது.

எங்க வீட்டுலேயும் அந்த வாக்கியம்.

எதுக்கு எப்ப யார் சொன்னாங்க அப்படின்னு எல்லாம்

உங்க கிட்ட சொல்லணும் அப்படின்னு தோணியாச்சு.

சொல்லாம இத முடிக்க கூடாது.
இருந்தாலும்
ஒரு மனசிலே ஒரு சந்தேகம் இருக்கு.

நிஜமாவே இருக்குமா, இல்ல..ஒல்லாக்கட்டிக்கா !

புரியல்ல...இருந்தாலும்
நிஜமாவே சொன்னாங்க.

யாரு எப்ப சொன்னாங்க அப்படின்னு கேட்கறீக...இல்லையா.

நீங்க மெட்றாஸ் வரும்போது சொல்றேன்.

இப்ப சொன்னா ஒரு ப்ராப்ளம் இருக்கு.

நான் அத ஒரு கதை மாதிரி சொல்லி,
என்ன கதை மாதிரி அப்படின்னு,
உண்மைக் கதை அப்படின்னு சொல்லு.
அப்படிங்கறீக.

சொல்றேன்.

இவ எதோ கூப்பிடறா ?

இன்னான்னு கேட்டுட்டு வர்றேன்.

சுதா.

பரிவை சே.குமார் சொன்னது…

ஆளுமைகளின் இழப்பு ஈடு செய்ய இயலாதது...

மோகன்ஜி சொன்னது…

நிலா!
வருவதும் போவதும் வாழ்க்கையின் நியதிதான் என்றபோதும் சிலரே போகும்போது பெரும்கொடையை கொடுத்துவிட்டும்,விலையாக நம் மனதைக் கொஞ்சம் பிய்த்து எடுத்துக் கொண்டே செல்கிறார்கள். ஞானக்கூத்தன் பெரும் கொடையாளி.

வழிவழியாக நம் அம்மாக்கள் பிள்ளைகளை தவிட்டுக்கு வாங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள். பிள்ளைகளும் காயப்பட்டு பதறிப்போவதும், அந்தத்தவிடு அவள்மனம் உதிர்க்கும் பொன்துகள் என்பதும் காலம்கடந்து புரியும் மாய வாழ்க்கை இது.

மோகன்ஜி சொன்னது…

ஒரு காலகட்டத்தின் தமிழ் இலக்கியமுகம் ஜெயகாந்தன் தான் அல்லவா நிலா?

மோகன்ஜி சொன்னது…

நிலா!
சித்தார்த்தன் பற்றிய உங்கள் பதிவு செறிவாக எழுதப் பட்ட ஒன்று. என்னையும் நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.

மோகன்ஜி சொன்னது…

சுதா!
தவிட்டுக்கு வாங்கினதாக அம்மாக்கள் சொல்வது என்ன அழகான பொய்?

எனக்கு நினைவு தெரிந்து ஒருமுறை என் அம்மாவும் ' உன்னை தவிட்டுக்கு வாங்கினேன் போடா' என்றதும், அவள் சொன்ன சூழ்நிலையில் தவிடு தலையில் கொட்டப் பட்டதாய் நான் வீட்டைவிட்டு ஓடிப் போனதும் நான் மறக்க இயலாத சம்பவம். ஆறாண்டுகளுக்கு முன் "வீட்டைத் துறந்தேன்" (http://vanavilmanithan.blogspot.in/2010/12/blog-post.html) இன்று வானவில் மனிதனில் ஒரு பதிவு இட்ருடிந்தேன். இன்றும் கூட யாராவது அதைப் படித்தபடி இருக்கிறார்கள்!

உங்கள் கதையைப் போட்டு உடையுங்களேன்!

மோகன்ஜி சொன்னது…

வாங்க குமார்,
//ஆளுமைகளின் இழப்பு ஈடு செய்ய இயலாதது//

உண்மை.

நிலாமகள் சொன்னது…

விலையாக நம் மனதைக் கொஞ்சம் பிய்த்து// ஆஹா!

அந்தத்தவிடு அவள்மனம் உதிர்க்கும் பொன்துகள் // ஆஹாஹா!!

சித்தார்த்தன் பற்றிய பதிவு செறிவாக// தன்யளானேன்.

தமிழ் இலக்கியமுகம் ஜெயகாந்தன் தான்// அந்தம்மா உச்சரித்தபோது அழகு பெருகியது அவருக்கு. உங்களைத் தெரியாவிட்டாலும் உங்க ஊரையும் மொழியையும் அதிலொரு ஆளுமையையும் தெரியுமென்பதன் ஒற்றைச் சொல் விளக்கம் அல்லவா ‘ஜோயகோந்தோன்’!

மோகன்ஜி சொன்னது…

நிலா,
ரசித்ததிற்கு நன்றி!
உங்களைப் போல எழுதும் நளினம் அறிந்தவர்கள், அதிகம் எழுதுவதில்லை என்பது தான் என் குறை.

ஜெயகாந்தனின் பற்றிய உங்கள் பார்வை மிக அழகு.

kashyapan சொன்னது…

மோகன் ஜி ! என் மைத்துனர் அமெரிக்கா செல்கிறார். அப்பாதுரை அவர்களுக்கு அறிமுகமானவர்தான். அப்பாதுரை அவர்களுக்கு சில புத்தகங்களை மைத்துனர் மூலம் அனுப்ப இருக்கிறேன். அப்பாதுரை அவர்களின் முகவரி வேண்டும். யாரவது கொடுத்து உடவுங்களேன்.நன்றி---காஸ்யபன்.