வியாழன், ஜூன் 16, 2011

வெளையாட்டு


சொன்னது கவனத்துல வச்சிக்க முத்து. தருமு அண்ணன் இப்ப வந்துரும்.

பெங்களூரின் கலாசிப்பாளயத்தின் குறுக்கு சந்துகளில் புகுந்து புறப்பட்டு சேகர் தங்கியிருந்த வீட்டை இருவரும் அடைந்து பத்து நிமிடம் தான் ஆயிற்று. சேகரே அங்கு தருமு அண்ணனிடம் தான் ஒட்டிக கொண்டிருந்தான். இப்போது எப்படியோ சமாளித்து  தன்னுடனேயே முத்துவையும் அவன் சேர்த்துக் கொண்டாயிற்று. ஆத்தாவுக்கு எப்போவுமே சேகர் பற்றி பெருமை தான். வெட்டிகிட்டு வான்னா கட்டிக்கிட்டு வர்ற புள்ளை என்பாளே.. சரிதான் அவ சொல்றது.

                                             
ராணிப்பேட்டையிலிருந்து பெங்களூருக்கு பஸ் ஏறினது முதலே சேகர் பெங்களூர் பற்றியும், அவன் வேலைக்கு சேரப்போகும் ட்ராவல் ஏஜென்சி குறித்தும் முத்துவுக்கு சொல்லிக்கொண்டே வந்தான் . குறிப்பாக அவன் சேகரோடு கலாசிப்பாளையத்தில் தங்கப்போகும் தருமு அண்ணன் வீடு பற்றியும், தருமு அண்ணனின் குணாதிசயங்களையும் கிளிப்பாடமாய் முத்துவுக்கு உருவேற்றியிருந்தான்.

முத்து நல்லபிள்ளைதான். பாழாய்ப்போன படிப்புதான் ஏறவில்லை. பிளஸ்டூ தாண்டியதே ரத்தினகிரி சாமியார் ஆசியால தான். வேலைவெட்டி இல்லாதவனை,ஆத்தாவின் நச்சரிப்பு தாங்காமல் சேகர் தான் இங்கு வேலைக்கு அழைத்து வந்திருக்கிறான். முத்துவுக்கு சேகர் தூரத்து சொந்தம்.

டேய் முத்து எந்திரி. அண்ணனைக் கும்பிட்டுக்க.

தருமு உள்ளே நுழைந்தார். ஆறடி உயரம். அம்பத்தஞ்சு வயசிருக்குமா? நாலுநாள் மழிக்காத நீண்ட முகம். கண்ணில் ஒரு நிரந்தர மஞ்சள். அடர்த்தியான கம்பிப் புருவம். வெள்ளை வேட்டி,. பனியன் போடாத வெள்ளைமல் சட்டை. அதன் பாக்கெட்டில் துருத்திக் கொண்டிருக்கும் சார்மினார் சிகிரட் டப்பா,வெட்டும்புலி தீப்பெட்டி. சில்லறை.

வா..வா.. நீதான் முத்துப்பயலா?

முத்துக்குமாருங்க.

இன்னும் மீசையே சரியா மூஞ்சில புடிக்கல்ல. இன்னா வேலை செஞ்சிருவ?

எதுன்னாலும் அண்ணே

சேகர் இடைமறித்தான். நம்ம ஜெகவீருல சொல்லி விட்டிருக்கேண்ணே.. டிக்கிட்டு போட, லக்கேஜ் ஏத்த, கஸ்டமர கூவிக்கூப்பிட ... இப்பிடி எதுனா செய்வாண்ணே. நாணயமான பிள்ளை. வாழ்ந்துகெட்ட குடும்பம்ணே..

அதான் வாரமா சொல்லிக்கிட்டிருக்கிறியே.விடு. முத்து! ஏதும் வம்புதும்பு வச்சுக்காம இங்க இருந்துக்க”

சரிங்கண்ணே

இப்படித்தான் இப்ப சொல்வே.. தூங்கத் திண்ணையும் திங்க சோறும் கிடைச்சா ஒவ்வொண்ணா வரும். குடி கூத்தியான்னு..

முத்துவுக்கு பதில் சொல்லக் கூட வாய்வரவில்லை. தருமுவின் முரட்டுப் பேச்சு இவ்வாறாகவே தொடர்ந்தது.

தருமு தம்பிகள் இல்லாத ஒரு அனாதை அண்ணன், வயசும், அனுகூலங்களும் அவரை சேகர் போன்றோருக்கு அண்ணனாக ஆக்கிவிட்டிருந்தன. நாலு வருஷமாய் அவருடன் இருக்கும் சேகருக்கும் அவர் பற்றிய எந்த செய்தியும் பெரிதாய்த் தெரியாது. தெரிந்து என்ன ஆகப்போகிறது.? ஒண்ட இடம் கொடுத்து, அவனுக்கு ஒரு ஆதரவாயும் இருக்கும் அவர் பற்றி என்ன அறிய வேண்டும்?. தருமுவின் வாழ்க்கைமுறையை, வசவுகளை, வினோத நடவடிக்கைகளை சேகர் மெளனமாக ஏற்றுக் கொண்டு விட்டான். இந்த முத்துப்பயல் அவருடைய ஆளுமையை எப்படி எதிர்கொள்வானோ என்பதே இப்போது சேகரின் கவலை   

முத்துவுக்கு அந்த இரவு தூக்கம் பிடிக்கவில்லை. பத்துக்கு பனிரெண்டு ஹாலில் பாய்விரித்து மூவருமாய் படுத்தனர். எதிர் சுவரில் தருமுவின்  தகப்பனார் போட்டோ பெரிது படுத்தி மாட்டியிருந்தது. என்றோ எடுத்த ஒரு குரூப் போட்டோவிலிருந்து பெரிதாக்கி உள்ளூர் ஸ்டூடியோக்காரன் தன் கைவரிசையைக் காட்டியிருந்தான். ஏறத்தாழ கருப்பு மையில் வரையப் பட்டதாகவே இருந்தது. படத்தின் மேலே மாட்டியிருந்த ஒரு சிகப்புவண்ண ஜீரோவாட் பல்ப், அந்த படத்துக்கு ஒரு சவக்களையை ஏற்படுத்திவிட்டிருந்தது. போதாததிற்கு மாலை சாற்றினாற்போல் படத்தை சுற்றி பலவண்ண சீரியல் லாம்ப் வேறு மினுக்கிக் கொண்டிருந்தது.. முத்து திரும்பிப் படுத்துக் கொண்டான்..வயிற்றுக்கு இருந்ததோ இல்லையோ ஆத்தாவை விட்டுப் பிரிந்ததே இல்லை. அழுகை நெஞ்சுக்குழியில் ஸ்வரம் பிடித்து வாய்விட்டு வெடித்துவிடும் போல் இருந்தது. ஒருவாறு தூங்கிப் போனான்..

ஏலே முத்து. எந்திரி. நல்லாத் தூங்குறாம் பாரு.. விடிஞ்சப்புறமும் பாயை சுருட்டலைன்னா மூத்தவ இல்ல வீட்ல உக்காந்துக்குவா.?

ஆத்தாளிடம் கனாவில் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த முத்துவை, தருமுவின் கரகரப்பான குரல் உலுக்கி எழுப்பியது.. ஆத்தா கண்ணைக்கசக்கிக் கொண்டே அழைத்தான்.

ஆத்தாவாம்.. ஞாத்தா.. எந்திரிங்கறேன்

முத்துவுக்கு பல்துலக்கும் போது ஏதோ கலவரமாயும், பெரிய இருட்டுப் பள்ளத்திற்குள் மாட்டிக் கொண்டு தவிப்பது போலும் இருந்தது.

சேகர் டீ போட்டு எடுத்து வந்தான்.

முத்து நீயும் டீ போட, சமையல் செய்யன்னு சேகராண்ட கத்துக்க. என்ன?

சரிண்ணே. எனக்கும் சமைக்க கொஞ்சம் வரும்ணே

ஏன் உம்முன்னு இருக்க? கனால ஆத்தா வந்துச்சா. இங்க ஒரு மாசம் இருந்தியானா கனாவுல தெனைக்கும் ஒரு சிங்காரியா வருவாளுக.. ஆத்தா ராணிபெட்டையில வரட்டிதட்டிகிட்டிருக்கும். தன் ஹாஸ்யத்துக்கு தானே பெரிதாய் சிரித்தார் தருமு. சேகரும் முறுவலித்தான். முத்துவுக்கு கோபம்கோபமாய்ப் பொங்கியது..

சரி முத்து சட்டுன்னு குளி. ஒன்பதுக்குல்லாம் மொதலாளி வந்துருவாரு. அண்ணே! நான் இவன சேர்த்துட்டு வந்தப்புறம் சமைக்கிறேண்ணே.

சரி சேகரு  ... இன்னிக்கு நீ மண்டிக்கு போவலையா?

பன்னண்டுமனிக்கு போறேன் அண்ணே
 .
சரி.

முத்துவும் சேகரும் கிளம்பினார்கள்.

முத்து! துன்னூறு இட்டுகினு சாமி கும்பிட்டுட்டு போ.

உருமாறிப் போயிருந்த ஒரு வட்டமான தகர டப்பாவில் மக்கலாய் விபூதி இருந்தது. கோவிலில் தந்த குங்குமம் விபூதிஎல்லாம் ஒன்றாய்க்கொட்டி பல்பொடி நிறமாய் உருமாறியிருந்தது.
சிறிதாய் இட்டுக்கொண்டு சாமி படம் தேடினான்.

இன்னா தேடுற முத்து?. எனக்கு புள்ளையாரு,அய்யனாரு எல்லாம் எங்க நைனாதான். செத்தா எல்லாரும் சாமிதான். என் நைனா படத்தையே கும்புட்டுக்க.

என்ன அநியாயம்? ஊர்பேர் தெரியாத ஒரு கிழவன் எனக்கு சாமியா? முதமுதல் வேலைக்கு போகச்சொல்ல இந்தக் கும்பிடு வெளங்குமா?

சேகர் உலுக்கியதில் கைகுவித்து கண்ணைமூடி ரத்தினகிரி முருகனை நினைத்துக் கொண்டான். சாமி.. பெரிய வேலைக்குப் போய் தனியா வேற வீட்டுல இருக்கணும் நான் மட்டும்.. ஆத்தா வந்தாலும் சரிதான் .

ட்ராவல் ஏஜென்சி வேலை முத்துவுக்கு பிடித்திருந்தது. சேலம் , குடியாத்தம் ,தருமபுரிக்காரர்கள் உடன் வேலை பார்த்தனர்.முத்துவிடம் நல்லதனமாய்த்தான் நடந்து கொண்டார்கள்.

என்ன முத்து.. வேலை புடிச்சிருச்சா? தருமுவின் வினவல்

பிடிச்சிருக்கண்ணே

அங்கஇங்க பாக்காம பொழப்பைப் பாரு. நாலு மாசம் முன்னாடி உங்க ஏரியாவுல உன்னைமாதிரி ஒருபையன் நாயடி பட்டான்

என்னண்ணே பண்ணான்?

என்ன பண்ணானா? பஸ்சுல கைபுள்ளைக்கு பால் குடுத்துக்கிட்டிருந்தவள வெறிச்சிவெறிச்சி பாத்துருக்கான். மொத்திட்டாங்க.

நான் அப்படியாப்பட்டவன் இல்லண்ணே

அதுசரி


அன்று இரவு சாப்பிடும் போது சேகரோடு அவன் மண்டி பற்றிய பேச்சும், காதுகூசும் ஏகத்தாளமுமாய் இருந்தது. முத்து மோர்சாதம் சாப்பிடத் தொடங்கியபோது தருமு சத்தமாய் காற்றைப் பிரித்தார்.

பேசிக் கொண்டிருந்த சேகர் சட்டென்று பேச்சை நிறுத்தினான். தருமு பெரிதாய் சிரித்தார். என்ன முத்து? இதுக்கே அசந்துட்ட? எங்க நைனா வுட்டா ரெண்டுதெருவுக்கு கேக்கும். சும்மாவா அவரு சொன்னாரு? மேல்ஸ்வாசம் கீழ்ஸ்வாசம் ஆஸ்வாசம்ன்னு

சேகர் சிரித்தான். முத்துவுக்கு அருவெறுப்பாய் இருந்தது. குமட்டிக்கொண்டு வந்தது .
துத்தேறி! பண்பு இல்லாத சனங்க.
மேற்கொண்டு சாப்பாடு இறங்கவில்லை. சேகர் மட்டும் எப்படி சகிப்புடன் இருக்கிறான்? மையமாய் சிரிப்புவேறு. என்ன தலையெழுத்து... நான் சம்பாதித்தே இல்லை ஆக வேண்டும்?.. ஆத்தா.. சமாளிச்சுக்கிறேன் ஆத்தா.



ஆயிற்று ஒரு மாசம். முத்து வேலையில் வேர்பிடித்து விட்டான். முத சம்பளம் அறுநூறு ரூபாய்.. அப்பாரு ஆயுசுல பாக்காத பணம்.

சேகருக்கு முத்துவின் பிரச்னை புரிந்தாலும், சகிப்புடன் சகஜமாய் இருக்குமாறு நாளைக்கு ஒரு தரமாவது சொல்லிக் கொண்டுதானிருந்தான். முதல் சம்பளம் தருமு அண்ணன் கையில குடுத்து வாங்கு.

இல்ல சேகரு. ஆத்தா கிட்டதான் தரணும்.

சேகர் திட்டினான்."முட்டாள். அது ஒரு மருவாதிடா.. அண்ணன் திரும்பக் கொடுத்துடுவாரு".

தருமுவிடம் பணத்தை நீட்டிய போது, அத்துடன் ஐம்பது ரூபாய்த் தாளையும் சேர்த்து திருப்பித் தந்தார்.

சம்பளப் பணத்துல கைவைக்காம ஊருக்குபோய் ஆத்தா கைல குடு. சந்தோசப்படும்.

அவர் தந்த ஐம்பதை மறுத்தால் மனசைக் கலக்குறாமாதிரி ஏதும் சொல்வார் அவர்... தயக்கத்துடன் வாங்கிக் கொண்டு ஊருக்காய் இரவு பஸ்ஸை பிடித்தான். வந்துகிட்டேயிருக்கேன் ஆத்தா.

பெங்களூருக்கு கிளம்புமுன், இளச்சிட்டியே முத்து..  இந்தக் குடும்பமே உன் தலைல விடிஞ்சிடிச்சே சாமி என்று அழுதாள்.

நானென்ன குழந்தையா ஆத்தா.. தெகிரியமா இரு. தம்பிங்களை இஸ்கோலுக்கு தொரத்து. இந்த தீவாளிக்கு உனக்கு பட்டுசீலை வாங்கியாறேன்..

நீ சொன்னதே போதும்டா கண்ணு. மச்சுவீட்டுக் கடனை தீத்துட்டுதான் மத்தது.. சந்தோசமா இரு முத்து. உனக்கின்னு செவ்வா வெள்ளி பல்லுல தண்ணிபடாம விரதம் இருக்கேன் ராசா.

நானும் உனக்காக விரதம் இருப்பேன் ஆத்தா தனக்குள் சொல்லிக் கொண்டான்.

பஸ்சில் திரும்பும் போது தன்னிலை பற்றி யோசித்தான். சேகர் சொல்வதுபோல் ஒண்டிக்கொள்ள தருமுவின் வீடு மட்டும் இல்லையின்னா எப்பிடி பணம் மிஞ்சும்?.ஆனாலும் பூதமாய் வளர்ந்து நிற்குதே தருமு அண்ணனைப் பற்றின வெறுப்பு... அதை குறைத்துக் கொள்ள வேண்டும். அவர் எப்படி இருந்தால் என்ன? அவர் வீட்டில் இருந்து கொண்டு அவரை வெறுப்பது என்ன நியாயம்? பிடிக்கவில்லை என்றால் வெளியே போக வேண்டியது தானே? போனால் குடக்கூலிக்கு காணுமா சம்பளம்?

திரும்பத்திரும்ப மனம் இந்த யோசனையிலேயே சுற்றி வந்தது.

காலை கலாசிப்பாளையம் வீட்டுக்கு திரும்பினான்.
அண்ணன் போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். சேகரைக் காணவில்லை.

என்ன ஆச்சு? சேகர் எங்கண்ணே?

நேத்துப்பகல்ல இருந்து ஜுரமா இருக்கு முத்து. சேகரு சரக்கு பிடிக்க மைசூருக்கு போயிருக்கான்

டீ போட்டுத் தந்தான். அவரால் பாதிதான் குடிக்கமுடிந்தது. வாயைத் துடைத்து விட்டான். சற்று கழித்து ஆழாக்கு புழுங்கல் அரிசியை வறுத்து, அம்மியில் லேசாய் நுணுக்கிப் பொங்கவிட்டு, சீரகத்தை தாளித்துப் போட்டு,மிளகுப் பொடி சேர்த்து கஞ்சி தயாரித்தான். அய்யா காயலாவாய்க் கிடந்தபோது ஆத்தா இப்பிடித்தானே கஞ்சி பொங்கி குடுக்கும்?.

தருமு அண்ணன் கஞ்சிப் பாத்திரத்தை சுழற்றி சுழற்றிக் குடித்தார். பாவம் பசி.... கண்கள் கலங்க அவனைப் பார்த்தார்.

இதுல்லாம் கூட செய்யக் கத்துகிட்டியா ராஜா?

இது ஏதோ புதுக் குரல். எங்கோ புதைந்து வெளிவரக் காத்திருந்து காத்திருந்து புறப்பட்டக் குரல்.

முத்து சிரித்தான்.

நீ பொம்பளை வளர்த்தப் பிள்ளையில்லியா?

எல்லாப் பிள்ளைகளையுமே பொம்பளைங்க தானே வளர்க்குறாங்கண்ணே?

அப்படி இல்ல முத்து.. ஆத்தாளை பாக்காத அதிஷ்டக்கட்டைங்க உண்டு என்னாட்டம்... நாலு பயலுங்க பொறந்த வீட்டுலகூட ஒரு பிள்ளையை பொண்ணாட்டம் தாய் வளர்க்கும். அந்தப் புள்ளை மத்ததுங்களை விடவும் பொறுப்பும் பாசமாயும் இருக்கும் உன்னைப்போல.

நீங்க கண்ணாலமே கட்டல்லயாண்ணே?
கேட்டிருக்கக் கூடாதோ என்று தோன்றியது முத்துவுக்கு.

சேகரு எங்கூட நாலு வருசமா இருக்கான். இப்படி கேக்கல்ல.. உனக்கு கேக்கத் தோணிச்சிபாரு.

தப்புன்னா விட்டிருங்கண்ணே. சூடா கஞ்சி சாப்பிட்டு வேர்த்து விட்டிருக்கு பாருங்க. கொஞ்சம் படுங்க.

பரவால்ல. கேளு.. சமாச்சாரத்தை உன்னோடமட்டும் வச்சுக்கோ. சரியா?

சரிண்ணே. சொல்லுங்க

என்னை பெத்துபோட்டுட்டு அம்மாக்காரி போய் சேர்ந்தா. எங்க நைனா தான் வளத்துச்சி. தறுதலையாதான் வளந்தேன். உன் வயசு எனக்கு வந்தபோது நைனாவும் காலமாயிட்டாரு. ஏதேதோ செஞ்சேன் போ.... முப்பது வயசு வரைக்கும் கல்யாண ரோசனையே இல்லை. எனக்குன்னு எடுத்துகட்டி பொண்ணுபார்க்க யார் இருந்தா?

தயக்கமாய் செருமினார் தருமு.. ஒரு நா உடம்பு கொழுப்பெடுத்து இங்கயும் அங்கியுமா தேடி அலைஞ்சேன்.

எதையண்ணே?

கூமுட்டை.. வயசுல கொழுப்பெடுத்து எதுக்குடா அலைவாங்க.?.

அய்ய... சரிசரி சொல்லுங்க.

அவென்யூ ரோடாண்ட நின்னிகிட்டிருந்தா பிலோமினா.

“”எப்பவோ பாத்தவங்க பேருல்லாம்கூட நெனவா சொல்றீங்க?

பின்னே ரெண்டு வருஷம் என்னோட குடும்பமில்ல நடத்துனா மகராசி?

என்ன?? குடும்பம் நடத்துனீங்களா?

ஆமாம் முத்து.அவ சேலத்துக்காரி. ஒருபோதுக்கு தான் இட்டுகினு போனேன். ஆனாலும் ரொம்ப பெரும்போக்காத்தான் இருந்தா.. ரெண்டுமூணு தரம் அவளுக்காய் காத்திருந்து கூட்டிப் போனேன். ஏதோ தோணிச்சு.... கூடவே இருந்துக்கிறயான்னு கேட்டேன். சரின்னுட்டா. கட்டுன பொண்டாட்டி மாதிரித் தான் ... மாதிரியென்ன பொண்டாட்டிய்யாத்தானே அரைப்பவுன் தாலி கட்டி குடித்தனம் பண்ணுனேன்.

முத்துவுக்கு அதிசயமாயும் கொஞ்சம் திகிலாயும் கூட இருந்தது.

கைக்கு ரெண்டுரெண்டு வளை, நெளிமொதிரம், சங்கிலி, காதுக்கு மூக்குக்குன்னு வாங்கிப் போட்டேன். நாலு பட்டு சீலை. எடுத்தேன்.அதுக்கு பாக்கிய ராஜு படம்னா உசிரு.படம் வந்தநாளே கூட்டிப் போவேன்

உம் முத்துவுக்கு உடம்பெல்லாம் முள்படர்ந்தது.

ஒரு நாள் மேஜைமேலே ஒரு கடுதாசியும், பக்கத்தில் பட்டுப் புடவைகளையும் அடுக்கி, அதன்மேல் எல்லா நகைகளையும் வைத்துவிட்டு போயே போய் விட்டாள்.

எதுனாச்சும் திட்டுனிங்களா?

வாடின்னு கூட பிலோமினாவை நான் கூப்பிட்டதில்லை

பின்னே ஏன் போனாங்க?

தெரியாது முத்து.இன்னி வரைக்கும் மருகிக்கிட்டு இருக்கேன் இந்தக் கடுதாசிய பாரு அலமாரியிலிருந்து தடுமாறியபடி எழுந்து எடுத்துக் கொடுத்தார்..

நெளிந்தான் முத்து.

பரவாயில்ல படி

அந்தக் கடிதம் கசங்கலாய் சற்று எண்ணையேறி இருந்தது. மீண்டும்மீண்டும் படிக்கப் பட்டிருக்க வேண்டும்

என் சாமிக்கு பிலோமினா எழுதியது. நிறைவா ரெண்டு வருஷம் மனுஷியா உங்க காலைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துட்டேன். அந்த நினைப்பா நீங்க கட்டுன தாலிமட்டும் என்னோட எடுத்து போறேன். என்னை தயவு செய்து தேடாதீங்க. மீண்டும் தப்புதண்டாவுக்கு போக மாட்டேன். கடவுள் இருந்தா உங்களை மாதிரி தான் இருப்பார்..காலம் பூராவும் உங்களை நினைச்சுகிட்டே தான் இருப்பேன்.. சாவுற வரைக்கும்

அக்குறும்பா இருக்கே. எவங்களையோ ராணி மாதிரி வச்சிருந்தீங்க. ஒரு கோபம் இல்லை ஒரு சண்டை இல்லை. அவங்க எதிர்பார்த்திருக்க முடியாத வாழ்வு குடுத்தீங்க.நீங்க சொல்றதையும்,இந்த லெட்டரையும் வச்சு பார்த்தா சந்தோஷமா நிறைவா இருந்திருக்காங்கன்னு தான் தோணுது. பின்ன எதுக்குப் போனாங்க?

சில கேள்விங்களுக்கு பதிலு இல்ல முத்து. உறவுகளையும் கட்டுப்பாடுகளையும் நாமதான் விதிச்சிக்கிறோம். அல்லாரும் வெளையாடுறது ஒரே வெள்ளாட்டுத் தான். அந்த வெளையாட்டுக்கான  ரூலு அவங்கவுங்க போட்டுக்கிட்டு ஆடிகிட்டிருக்கோம். உன் வெளையாட்டு எனக்கு பிடிக்காது.. என் விளையாட்டு உனக்குப் புரியாது. நம்மபோட்டு வச்ச எல்லைகோட்டைத் தாண்டி மத்தவங்க வெளையாடும்போது  நமக்கு பிடிக்கிறதில்லை.. செலப்போ நமக்கே நம்ம  போட்டுகிட்ட கோடுங்களே தடையாயும் சலிப்பாயும் ஆயிடுது. வெளங்காத வெளையாட்டு...  வுடு... கொஞ்சம் வெந்நீர் குடிக்க தா முத்து.. அறிஞ்சும் அறியா புள்ளை நீ. ஏதேதோ சொல்லி உன்னைக் குழப்பிட்டேன்

வெந்நீர் சுடவைத்துக் கொண்டிருந்த முத்துவுக்கோ இப்போதுதான் வாழ்வின் குழப்பங்கள் மெல்லத்தெளிவதுபோல் இருந்தது.



படஉதவி: Master Sarvesh Sainathan
  

57 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் சொன்னது…

நெக்குருக்கியது கதையின் அடிநாதம்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து வயிற்றுப் பாட்டுக்காக ஒன்றாய் இணைந்தாலும் ஒவ்வொருத்தரின் பின்னும் எத்தனை எத்தனை அனுபவங்களும் கதைகளும்?

கதையின் இறுதிப் பத்தியின் போதனை கதையையே தூக்கிப்பிடிக்கிறது.

அருமையான யதார்த்தமான கலாசிப்பாளையத்தின் மையத்தில் தினமும் எல்லோரும் பார்க்கும் யாரும் அறியாத கதை.

சபாஷ் மோஹன்ஜி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

Voted 1 to 2 in Indli

சூப்பர் கதை சார். எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. என்னைப்போலவே பாக்கியராஜ் படத்தை விரும்பிப்பார்க்கும் ரஸிகரான அவள், ஏதோவொரு முக்கிய முடிவுடனே தான் கிளம்பியிருப்ப்பாள். நல்ல பொண்ணு.

நல்ல முடிவில்லாத முடிவுடன் கூடிய கதை சூப்பரோ சூப்பர், சார்.

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

G.M Balasubramaniam சொன்னது…

அருமையான கதை. அழகாக சொல்லப் பட்டிருக்கிறது. பதில் இல்லாத கேள்வியாய் முடித்திருந்தாலும், பதில் தேடி அலைகிறது மனம். விதிக்கப்பட்ட கட்டுப் பாட்டுக்குள் எந்த விதி மீறப் பட்டது. எல்லைக் கோடுதான் என்ன.? யார் எதை மீறினார்கள் ?வெளங்காத விளையாட்டு என்று எண்ண முடிய வில்லையே. ஏதேதோ எண்ணிக் குழம்புகிறேன்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

கட்டிப்போட்டு இழுத்துச் சென்றது போல உங்கள் கதையோட்டம் என்னை இழுத்துச் சென்றது மோகன்ஜி...
ஒவ்வொரு ஊரிலும் வேலை தேடியோ, வேலை நிமித்தமோ வரும்போது இப்படித்தான் புதிய இடத்தில் தங்கும்போது எத்தனை எத்தனை அனுபவங்கள்....

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பகிர்வு... மகிழ்ச்சி....

பத்மநாபன் சொன்னது…

அப்பப்பா....முத்துவுக்கு மட்டுமல்ல இந்த கதை கேட்ட அனைவருக்கும் நிச்சயம் ஒரு சுய பரிசோதனை ஓடும்.. எது வாழ்வு..எது தேடல் .நாம் எங்கிருக்கிறோம்..எங்கு போக வேண்டும்..வளர்ப்பில் எங்கு ஐகோளாறு என தொடரும் கேள்விகள்..

உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ளவேண்டும் ..உங்களிடம் பாடம் கற்றுக் கொள்ளும் மேலாளர்கள் எதோ வரம் வாங்கி வந்திருக்கிறார்கள்...

மனோ சாமிநாதன் சொன்னது…

யதார்த்தமான சிறுகதை!

இப்படித்தான் பலாப்பழ முட்களாய் இருக்கும் பலரின் உள்ள‌த்தின் ஆழத்தில் பரிவும் சோகமும் நீருபூத்த நெருப்பாய் மறைந்திருக்கும். நெஞ்சக்கனல் தீடீரென்று ஆழ்ந்த பரிவில் வெளிப்படும். பழுத்த அனுபவமும் அப்போதுதான் முகிழ்த்து வரும் செடியும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும் பரிவும் எண்ன அலைகளும் மிகுந்த சுவாரஸ்யம்!!

RVS சொன்னது…

அண்ணா! அசத்தரேள்!!
கலாசிப்பாளையம் கண் முன்னே விரிகிறது...
மனித உணர்வுகள் கூட வெளையாடிட்டீங்க... ;-)))
படம் சூப்பர்! ;-))

ADHI VENKAT சொன்னது…

அருமையான கதையாக இருந்தது சார். வெளிப்பார்வைக்கு முரடாக தெரிபவர்களுக்கும் உள்ளுக்குள் மென்மையான குணம் இருக்கும்.

எல் கே சொன்னது…

வெளித் தோற்றத்தை வைத்து யாரையும் எடைப் போடக்கூடாது. எல்லோருக்குமே இந்த மாதிரி கறுப்புப் பக்கங்கள் உண்டு

மோகன்ஜி சொன்னது…

பிரிய சுந்தர்ஜி!மனிதர்களில் தான் எத்தனை நிறங்கள்? பல்லாயிரம் சாத்தியக் கூறுகளைக் காட்டும் கெலிடாஸ்கோப் மனச்சித்திரங்கள். உங்கள் பாராட்டுக்கு நன்றி.அண்மையில் புதுவை வழியாய் வந்திருந்தேன். அலைபேசியை சென்னையில் விட்டுவிட்டதால் உங்களைத் தொடர்பு கொள்ளமுடியாமல் புதுவையின் காக்கை குருவிகளை எல்லாம் என் சுந்தஜீயை பார்த்தீர்களா என வினவிக் கொண்டே வந்தேன்.

மோகன்ஜி சொன்னது…

//முடிவில்லாத முடிவுடன் கூடிய கதை சூப்பரோ சூப்பர், சார்.//நன்றி வைகோ சார். சில கதைகள் முடிவதில்லை, வாழ்க்கையைப் போல

மோகன்ஜி சொன்னது…

பாலு சார்... தர்முகளும், சேகர்களும், முத்துகளும் நம்மிடையே இருப்பவர்கள் தானே..வாழ்க்கை நதி சலனமில்லாமல் ஓடுவதுபோல் தான் தோன்றுகிறது. உள்ளோடும் நீரோட்டமோ விரைவும் சுழிப்புமாய்...

மோகன்ஜி சொன்னது…

அன்புள்ள வெங்கட் ! நீங்கள் ரசித்ததிற்கு நன்றி!
இடைவெளி தவிர்க்க முடியாததாகி விட்டது. சென்னை, சேலம்,ஏற்காடு என திரியவேண்டி வந்தது. நெய்வேலி தாண்டியபோது உம்மை நினைத்துக் கொண்டேன்.

மோகன்ஜி சொன்னது…

பத்மநாபன்ஜி... அழகாய்ச் சொன்னீர்கள். சுயபரிசோதனை என்பது அவ்வப்போது சர்க்கரை டெஸ்ட் செய்துகொள்வதுபோல் செய்யப் பட வேண்டியதுதான். வான் நோக்கி கிளை அசைந்தாலும் மண்ணைத் தழுவிக் கிடக்கும் வேர்போல் நாம் நாமாய் சுயத்தில் ஒன்றிநிற்றல் ஒன்றே நம்மை உறவுகளைப் பேண வைக்கிறது.

வரம் வாங்கிவந்தவன் நான் தான். உங்களைப்போல உறவாடும் வலைசொந்தங்கள் எனக்கு வரமன்றோ.

மோகன்ஜி சொன்னது…

மனோ மேடம் ! உங்கள் பாராட்டுக்கு நன்றி.. உங்கள் கருத்து மிக அழகு. வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கும் பார்வையின் வெளிப்பாடு அது. நன்றி!

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ஆர்.வீ.எஸ்! கலாசிப் பாளையத்தை சமீபத்தில் எப்போதாவது பார்த்தீர்களா? நான் கண்டு பல நாளாயிற்று

மோகன்ஜி சொன்னது…

ஆதிமேடம்! கல்லுக்குள் ஈரம்??

மோகன்ஜி சொன்னது…

உண்மை கார்த்திக்! உருவத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தம் பலநேரம் இருப்பதில்லை

ரிஷபன் சொன்னது…

சில கேள்விங்களுக்கு பதிலு இல்ல முத்து. உறவுகளையும் கட்டுப்பாடுகளையும் நாமதான் விதிச்சிக்கிறோம். அல்லாரும் வெளையாடுறது ஒரே வெள்ளாட்டுத் தான். அந்த வெளையாட்டுக்கான ரூலு அவங்கவுங்க போட்டுக்கிட்டு ஆடிகிட்டிருக்கோம். உன் வெளையாட்டு எனக்கு பிடிக்காது.. என் விளையாட்டு உனக்குப் புரியாது. நம்மபோட்டு வச்ச எல்லைகோட்டைத் தாண்டி மத்தவங்க வெளையாடும்போது நமக்கு பிடிக்கிறதில்லை.. செலப்போ நமக்கே நம்ம போட்டுகிட்ட கோடுங்களே தடையாயும் சலிப்பாயும் ஆயிடுது. வெளங்காத வெளையாட்டு... வுடு... கொஞ்சம் வெந்நீர் குடிக்க தா முத்து.. அறிஞ்சும் அறியா புள்ளை நீ. ஏதேதோ சொல்லி உன்னைக் குழப்பிட்டேன் ”

கதை என்றே நினைக்க முடியாத அளவு யதார்த்த வாழ்வின் பிரதிபலிப்பு. கொண்டு போன விதமும் சம்பாஷணைகளும் சபாஷ் போட வைக்கின்றன.

மோகன்ஜி சொன்னது…

அன்பின் ரிஷபன் சார்! கதைகள் வாழ்க்கையின் பிரதிபலிப்பே அல்லவா ? எழுதப்பட்டது படிப்பவர் மனதில் தோற்றுவிக்கும் பிம்பமும்,புரிதலுமே புனைவுக்கு ஒரு அர்த்தமாகிறது. யதார்த்தத்தைப் பாராட்டாக்கிய நீங்கள் அல்லவா சபாஷ் பெற வேண்டும்.

ஸ்ரீராம். சொன்னது…

அறியா வயது அறியும் வயதாகும் கட்டத்தில் பெரிய மனுஷத் தனமாய் சம்பாதிப்பவனாக மாறினால் ஆயிரம் அனுபவங்கள். அனுபவங்கள் அவனை மனிதனாக்கும். எந்த வகையில் என்பது சேருமிடம் பொறுத்து. இவனால் அவருக்கு ஒரு அனுபவ நெகிழ்ச்சி...அவரால் இவனுக்கு ஒரு அனுபவ பாடம்....வாழ்க்கை!

ஹேமா சொன்னது…

மோகண்ணா...இடைக்கிடை வந்து அசத்துறீங்க.

வாழ்வின் தத்துவம் சொல்லி முடிக்கிறது கதையின் கடைசிப்பந்தி.ஆரம்பத்தில் முரட்டு மனிதனாகக் காட்டி அவருக்குள்ளும் நல்லமனம் ஒன்றைக் காட்டி கதையோடு ஒன்றவைத்து விட்டீர்கள்.

அந்த நாத்தம் சொன்ன இடத்தில் நானும் முகத்தைச் சுழித்துக்கொண்டேன்.அதுதான் உங்கள் எழுத்தின் வெற்றி !

மோகன்ஜி சொன்னது…

// இவனால் அவருக்கு ஒரு அனுபவ நெகிழ்ச்சி...அவரால் இவனுக்கு ஒரு அனுபவ பாடம்....வாழ்க்கை//
ஸ்ரீராம்! இந்தக் கதை சாரத்தை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டீர்கள்.

அனுபவங்கள் வாழ்க்கை. ஒவ்வொருவரும் தனிப்பட்ட விருப்புவெறுப்புகளை வளர்த்துக் கொண்டு, அதைச் சார்ந்தே எதையும், யாரையும் அணுகுகிறோம்.

நம்மிடமிருந்தே நாம் எட்டிநின்று பார்க்கும் போது வாழ்க்கையின் வீச்சும் அழகும் புரியும் என்பது என் துணிபு ஸ்ரீராம்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஹேமா!
//மோகண்ணா...இடைக்கிடை வந்து அசத்துறீங்க./ என்ன செய்வதம்மா? அவ்வப்போது நிறைய ஊர் சுற்ற வேண்டி நேர்ந்து விடுகிறது. பணியின் சுமைகளும் சேர்ந்து கொள்கிறது. சொல்லசொல்ல பதிவிடும் கருவி ஒன்று வந்தால், வலையுலகு முழுதும் தோரணம் கட்டிவிட மாட்டேனா?!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நெய்வேலி வழியே செல்லும் என் நினைவு வந்ததா? கொடுத்து வைத்தவன் நான்... சந்தோஷம் பொங்கியது உங்கள் பதில் படித்தபோது....

உங்கள் “அம்மா மரம்” என்னுள் எழுப்பிய நினைவுகளை இப்போது பதிவு செய்து இருக்கிறேன்...

http://venkatnagaraj.blogspot.com/2011/06/blog-post_17.html

முடிந்தால் பாருங்களேன்...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) சொன்னது…

வாழ்வியல் கதை... ரெம்ப நல்லா எழுதி இருக்கீங்க சார்... வாழ்த்துக்கள்

சிவகுமாரன் சொன்னது…

நீண்ட நாட்களாய் வலைப்பக்கம் வரவில்லை. முதன்முதலாய் உங்க வெளையாட்டுத் தான்.
அப்படியே அடிச்சுப் போட்டிருக்கீங்க. படித்து முடிக்கும் போது கண்களில் நீர். எந்த இடத்தில் அரும்ப ஆரம்பித்தது
தெரியவில்லை. காசுக்ககாக வயிற்றுப் பாட்டுக்காக பிடிக்காத வேலையில் ஒட்டிக் கொண்டிருப்பவனின் வாழ்க்கை நரகம். அனுபவித்தவர்களுக்கே அது புரியும்.
யாராலும் திரும்பி பார்க்கப்படாமல் இருக்கும் வாழ்க்கையின் பக்கங்கள் உங்கள் கதைகளில்... கண்முன் காட்சிகளாய் விரிகிறது.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

அப்படியே ஆளை கட்டிப் போட்டுட்டேள் போங்கோ! கண்ண மூடினா, அந்த தர்மு அண்ணாவும்,முத்துவும் முழுசா நிக்கறா..என்னத்தைச் சொல்ல?

மோகன்ஜி சொன்னது…

வெங்கட்! நெய்வேலியில் நிலக்கரியும், தலைவரும் இருப்பது குழந்தைக்கு கூட தெரியுமே !

உங்கள் பதிவு சுவாரஸ்யமாய் இருந்தது. என் கருத்தையும் அதில் இட்டிருக்கிறேன் தலைவரே!

மோகன்ஜி சொன்னது…

நன்றி அப்பாவி தங்கமணி!

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! உந்தன் பாராட்டை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறேன். நன்றி சிவா!

மோகன்ஜி சொன்னது…

மூவார்! மூடின கண்ணை கொஞ்ச நேரம் திறக்காதேயும்.. அங்க நானில்ல நிற்பேன். உங்கள் பாராட்டு எனக்கு டானிக்கு பிரதர்!

அப்பாதுரை சொன்னது…

சுகம்-சோகம்-சுகம் என்று இரண்டு பக்கமும் அலட்சியமாகத் தாவியிருக்கிறீர்கள். முடிவு சோகமா சுகமா என்று சொல்ல முடியாத அளவுக்கு எழுதப்பட்டக் கதை மோகன்ஜி! பதிவெழுதாத நாளில் ஆணி என்று கதைக்கிறீரா இல்லை எங்கேயாவது குகைக்குள் போய் இப்படி யோசிக்கிறீர்களா? தொடர்ந்து இந்தப் போடு போடுகிறீர்களே? இந்தாங்க, என் மனசைக் கழற்றிக் கொடுத்தேன்... ரொம்பப் பிசையுறீங்க.

உங்கள் கதை அப்படியென்றால், ஸ்ரீராம், சிவகுமாரன் பின்னூட்டங்களில் அதி நுட்பமான உயிர்க்கதைகள் ஒளிந்திருக்கின்றன. அருமை!

bandhu சொன்னது…

மிக அழகாக இருக்கிறது! (நீயும் எழுதறியேன்னு மனசு இடிக்குது!)

மதுரை சரவணன் சொன்னது…

ithu anaivarukkaana kathai vaalththukkal

Matangi Mawley சொன்னது…

ஏதோ ஒரு கூட்டத்தில்- குத்து-மதிப்பாக நம் கண்ணில் படும் முதல் மதினனின் கதை- இது- என்று தோன்றியது! ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு கதை உண்டு. அந்த கதை-- அந்தக் கதையை எழுத உரியவருக்குப் புலப்படும். அப்படி ஒரு ஜீவனின்- கதை வெளிப்படும் 'தருணத்தை' பிடித்து விட்டீர்கள்!

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்! சோகத்திலே தான் சுகமான கவிதையோ, அல்லது கதையின் வித்தோ ஜனிக்கிறது. நீறுபூத்த நெருப்பாய் கனிந்து கிடந்து, ஏதோவோர் அழுத்தத்தில் வெடித்து வெளிப்படுகிறது. இந்த சோகம் ஒரு பரந்த சோகம். படைப்பாளிகளின் நிரந்தர சோகம்..

அப்பாஜி! தற்சமயம் ஏறத்தாழ மூன்று மணி நேரத்துக்கும் மேலாய் அலுவலகம் சென்றுவர பயணத்தில் கழிகிறது. அமர்ந்து பதிவிட இயலாமல் தவிப்பாய் இருக்கிறது. வெளியூர் பயணங்கள் வரும்போது இன்னமும் நேர நெருக்கடி.

இனி நேரத்தைக் கண்டிப்பாய் வலைக்கென்று ஒதுக்கி தினமும் மேயத்தான் எண்ணுகிறேன்.
நசிகேத நாயகரே! பார்த்துக் கொண்டேயிரும்.. உங்கள் அன்புக்கு வந்தனம்.. எனக்கு பலரின் பதிவுகளைக் காட்டிலும் சின்ன பின்னூட்டங்களில் தெறித்துவிழும் கருத்தாடல்கள் வசீகரமாய் இருப்பதாய்த் தோன்றும்.

மோகன்ஜி சொன்னது…

வணக்கம் பந்து சார்! நல்லாத்தானே எழுதுறீங்க.. அடிக்கடி வாங்க

மோகன்ஜி சொன்னது…

நன்றி சரவணன் சார்.. நலம் தானே?

மோகன்ஜி சொன்னது…

//கதை வெளிப்படும் 'தருணத்தை' பிடித்து விட்டீர்கள்//
ரொம்ப அழகாய் யோசிக்கிறீர்கள் மாதங்கி!

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான படைப்பு
நாம் எப்படித்தான் கோட்டை கட்டி மறைத்துக்கொண்டிருந்தாலும்
உடன் இருப்பவனைவிட திடுமென வந்த எவனோ ஒருவன்
உள் நுழைந்து விடுவான்.முத்துவின் சேவைகள் தருமுவின்
கோட்டை கொத்தளங்களை உடைத்ததுதான் யதார்த்தம்
தருமு இறுதியாக பேசுகிற பேச்சுக்கள் மொத்த வாழ்வின்
நியதிகளையும் புட்டு புட்டு வைக்கிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி சொன்னது…

மறுபடியும் படித்தேன்..எனக்கு திடீரென்று அந்த ஹென்றியும்...அந்த மீசைக் கார துரைக்கண்ணுவும் ஞாபகம் வந்தார்கள்....

meenakshi சொன்னது…

கதை இதுதான்னு ஒரு வரில சொல்லிடலாம். அது சோபிக்கறது அதை எழுதற விதத்துலதான். அந்த வகைல இந்த கதை ரொம்பவே ஜொலிக்கறது. பல வரிகளில் மனம் லயித்து ரசித்தது.
//குங்குமம் விபூதிஎல்லாம் ஒன்றாய்க்கொட்டி பல்பொடி நிறமாய் உருமாறியிருந்தது.// எவ்வளவு தூரம் ஆழ்ந்து, அனுபவிச்சு எழுதி இருக்கீங்க மோகன்! Beautiful!
அறிவு மட்டும் எப்படி நமக்கே நமக்கானவையோ, அது போல், இது போன்ற வாழ்கை கற்று தரும் அனுபவங்களும் நமக்கே நமக்கானவை. மனம் பண்படுவதே இது போன்ற அனுபவங்களால்தான்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

அருமையான கதை.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சிறப்பான நடையுடன் அருமையான கதைக்குப் பாராட்டுக்கள்.

சாய்ராம் கோபாலன் சொன்னது…

பெங்களூரில் மெடிக்கல் ரெப் காலங்களில் இந்த இடங்களில் மருந்து மொத்த வாடிக்கையாளர்களை காண செல்வேன். இந்த லாரி கம்பெனி, கூவி அழைப்பது, லக்கேஜ் எடை போட்டு மேலே ஏற்றுவது, சிறிய ரூம் அதில் ஒண்டுக்குடித்தன வாழ்க்கை என்று கண்டு இருக்கின்றேன்.

அப்படியே அந்த வாழ்க்கைக்கு எழுத்து சென்றது உங்கள் எழுத்து. அப்படிப்பட்ட வாழ்க்கையில் பிலோமினா போல் தென்றல் வந்து இருப்பவர்கள் பலர் உண்டு. பெங்களூரில் வண்டியில் செல்லும்போது இப்படி கூவி பொம்பளைகளையும் பார்த்து இருக்கின்றேன்.

நல்ல நடை

மோகன்ஜி சொன்னது…

நன்றி ரமணி சார்! பின்னூட்டம் எழுதும் கலையை எங்களுக்கும் சொல்லித் தாருங்களேன்?

மோகன்ஜி சொன்னது…

மூவார்ஜி! நன்றி.. நன்றி

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! எதையும் மேலோட்டமாகப் படிக்காமல், ஆழ்ந்து அலசும் உங்கள் வாசிப்பு என்னை வியக்க வைக்கின்றது.உங்களை அசத்தேவேனும் யோசித்து சிறப்பாய் எழுதத் தோன்றுகிறது... நன்றி மேடம்

மோகன்ஜி சொன்னது…

இராஜேஸ்வரி மேடம்! வலைச் சரத்தில் உங்கள் அறிமுகத்துக்கு மிக்க நன்றி. அதிலேயே என் கருத்தையும் இட்டிருக்கின்றேன். நன்றி!

மோகன்ஜி சொன்னது…

நன்றி குமார்! சுகம் தானா?

மோகன்ஜி சொன்னது…

இராஜேஸ்வரி மேடம் ! உங்கள் ரசனைக்கு நன்றி!

மோகன்ஜி சொன்னது…

அன்பு சாய்! இந்தக் கதையை நான் உருவாக்கிய போது என் நினைவிலாடிய பெங்களூர் எண்பதுகளின் ஆரம்பகால பெங்களூர். ஐ.டீ கம்பனிகளும்,போக்குவரத்து நெரிசலும் இல்லாத.. நல்ல சீதோஷ்ணம் தழுவித் தாலாட்டிய கனவு நகரம்..

உங்கள் நினைவுகளை கிளறி வீட்டுவிட்டேனோ?

kashyapan சொன்னது…

மொகன் ஜி! நல்ல காலம். வெகுஜனப் பத்திரிகைகளுக்கு பொகாமல் இருந்தீர். பதிவுலகம் கண்டெடுத்த முத்து நீர்.என்ன லாவகம்! பிசிறிலாத சொல்லாடல்.!சபாஷ்! 1954 -57 ல் மெட்டூர் மின்சார இலாகாவில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். என்னுடன் கோபால கிருஷ்ணன் என்பவர் வெலை பார்த்தார். பின்னாளில் அவர் சாமியாராகி ரத்தினகிரியில் இருப்பதாக கேள்விப்பட்டேன்.அந்த நினைவும் சேர்ந்துவிட்டது.வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்

மோகன்ஜி சொன்னது…

அன்பின் காஸ்யபன் சார்! உங்கள் கருத்தை ஆவலோடே எதிர்ப்பார்த்திருந்தேன்.
//பதிவுலகம் கண்டெடுத்த முத்து நீர்.என்ன லாவகம்! பிசிறிலாத சொல்லாடல்.!சபாஷ்!//

உங்கள் பாராட்டை மிகுந்த தன்னடக்கத்துடன் ஏற்றுக் கொள்கிறேன். உங்கள் உளமார்ந்த பாராட்டு என் பொறுப்பை அதிகமாக்குகிறது. நன்றி சார்!

நான் கல்லூரிநாட்களில் ஒரு முறை ரத்தினகிரி சென்று வந்திருக்கிறேன். அங்கு மௌன சாமியார் பாலமுருகனடிமை என்ற பேரோடு தங்கி ஐந்தாறு வருடங்களே ஆகியிருக்கும்.வெகுவேகமாய் சிலேட்டில் குறி சொல்வது போல் எழுதுவார். அவர் பெயர் சச்சிதானந்தம் என்றும் ,வேலூர் மின்வாரியத்தில் குமாச்த்தாவாய் இருந்தார் என்றும் அறிகிறேன். உங்கள் நண்பர் பெயரை மீண்டும் நினைவு கூர்ந்து பாருங்கள்..

kashyapan சொன்னது…

மோகன் ஜி!மின் இலாகதான் (E.D.)பின்நாளில் மின் வாரியமாக (E.B.)மாறியது.மெட்டுரிலிருந்து பலர் வெல்லூர்,சென்னை, மதுரை,நெல்லை சென்றொம். ரத்னகிரி மலைக்கு படியில் ஏறாமல் கைப்பிடிச்சுவர் மூலம் சாமி ஏறுவார் ---காஸ்யபன்

மோகன்ஜி சொன்னது…

புது விவரங்கள் சார்! உங்கள் நினைவோடையில் ஓயாமல் துள்ளும் ஞாபக மீன்கள் தோழர்!