புதன், அக்டோபர் 12, 2011

தொழுவத்து மயில் 5


இதுவரை 1  2  3  4 

சுகிர்தத்தை வனரோஜாவுக்கு துணையாய் வைத்து விட்டு மேற்கொண்டு வைத்தியம் செய்வது பற்றி தீர்மானிக்க டாக்டர் நந்தகுமாரைப் பார்த்தார் கிருஸ்டி. வரதுவும் உடனிருந்தார்.

கிருஸ்டி சார்! நான் சொல்வதை உணர்ச்சிவசப்படாமல் கேளுங்கள் என்று பீடிகையுடன் டாக்டர் துவங்கினார்.

உணவுக் குழலுக்கு ஸ்டென்ட் வைத்து திரவ உணவாவது வயிற்றுக்குப் போகும் என்று தான் முயற்சி செய்தோம். ஆனால் புற்று மூர்க்கமாய் இரைப்பைக்கெல்லாம் கூட பரவி விட்டது சார். இனி...... மன்னியுங்கள். நான் நாட்கணக்கில் கூட உத்தரவாதம் தர இயலாது. மேலும் சிகிச்சை என்று அக்காவை அலைகழிக்காமல் அமைதியாய் அடங்க விடுவது தான் முறை. என்னை மன்னியுங்கள் சார்!

வரது குறுக்கிட்டார். டாக்டர்! எப்பாடேனும் பட்டு..

அவர் முடிப்பதற்குள் டாக்டர் மறுத்து தலையாட்டினார். சார்! நாம் முயற்சிகளெல்லாம் கடந்த நிலையில் இப்போ இருக்கிறோம்.. அக்காவுக்கு நினைவும் உயிரும் இருக்கும் வரை அவர்களுக்கு பழைய நல்ல தருணங்களை நினைவூட்டி அமைதியாய் வழியனுப்புவோம் கிருஸ்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.

உங்க ஸ்டூடண்ட்டா அக்காவை எனக்குத் தெரியும். ஒரு டாக்டராக நெஞ்சுரமும் சகிப்பும் நிறைந்த நோயாளியாயும் இப்போது தெரிஞ்சுகிட்டேன். அவர்கள் முடிவை நானும் எப்படி எதிர்கொள்வேன் என்று தெரியல்லை சார்! ஆனாலும் நிதர்சனம் அதுதான் சார். ஐ ஆம் சாரி! வேணும்னா இங்கே திரும்பவும் அட்மிட் செய்துடுங்க. அக்கா இரண்டே நாட்கள் வீட்டுக்கு போகணும்னு மன்றாடின போது,அவர்கள் ஆசையை நிறைவேற்றவே அனுப்பி வைத்தேன். அக்கா இருக்கிறவரை இங்கிருந்தால் உங்களுக்கு தைரியமாய் இருக்குமென்றால். திரும்பவும் கூட்டிக்கிட்டு வந்திடுங்க ........

கிருஸ்டிக்கு ஏதும் சொல்லத் தோன்றவில்லை. அதீதமான அதிர்ச்சியும், ஒரு கணத்தில் அனைத்தும் இழந்த கையறுநிலையும் அவர் மனத்தை மரத்துப்போக அடித்திருந்தன. கண்களுக்குள் நிரந்தரமாய் தங்கிவிட்ட வனரோஜாவின் மதிவதனம் கூட ஜடமான அவர் மனதை தேற்றவியலாது அவர் உலகம் ஸ்தம்பித்துப் போனது. மௌனமாய் வீடு திரும்பினார்கள்.

வரது கிருஸ்டியின் கைகளை இறுகப் பிடித்துக் கொண்டார். கிருஸ்டி! இந்த டாக்டர் கிடக்குறார்.. நம்ம ரோஜாவை இப்போதே சென்னைக்கு கூட்டிக்கிட்டு போகலாம். நடப்பது நடக்கட்டும். நம்ம முயற்சியை விட வேண்டாமடா!
கிருஸ்டி வெறுமே தலையை ஆட்டினார்.

அவர்களின் ஆட்டோ வீட்டு திரும்பும் போது இருட்டிவிட்டது. இருவரும் வீட்டில் நுழைவதற்கும், சுகிர்தம் பதட்டத்துடன் வெளியே ஓடிவருவதற்கும் சரியாய் இருந்தது.

என்னம்மா ஆச்சு?

அத்தை சமையல்கட்டுல மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க!

அய்யய்யோ! கிருஸ்டி ஒரு நிமிஷம் டாக்ஸி கூட்டிக்கிட்டு வந்துடறேன். வரது ஓடினார்.

சமையலறை வாசலில் கால்கள் மடிந்தநிலையில்  வனரோஜா விழுந்து கிடந்தாள். அவளை ஒரு பூமாலையைப் போல் கையில் ஏந்தி வந்தார் கிருஸ்டி.

மாமா! அத்தை என்னை கேரட்டை இந்த சீவியில் துருவிக் கொடுக்க சொன்னாங்க. காஸ்அடுப்பு  வரைக்கும் என்னைக் கைத்தாங்கலாய் கூட்டிக்கிட்டு போகச் சொன்னாங்க. பால் சீனியெல்லாம் நான் தான் ஒவ்வொண்ணா எடுத்துத் தந்தேன். அம்மாவை வேணும்னா கூப்புடறேன்னு சொன்னேன் மாமா. வேண்டாம்னுட்டாங்க. சமையல் மேடையிலேயே சாய்ஞ்சு கிட்டு கிண்டுனாங்க. ஆனா சிரிச்சுக்கிட்டே வாசனவருதாடி.. வாசன வருதாடின்னு கேட்டுகிட்டே இருந்தாங்க. கேஸை அணைச்சுட்டு கட்டிலுக்கு கூட்டிக்கிட்டு வந்தெனா? அப்படியே மூர்ச்சையா விழுந்துட்டாங்க. நானு எங்கம்மாவை கூப்பிட ஓடியாறேன்.. நீங்களும் வந்துட்டீங்க மூச்சுவிடாமல் படபடத்தாள் சுகிர்தம்.

சரியம்மா! நீ போ! ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கிட்டு போறேன்.

பயமா இருக்கு மாமா!

பயப்படாத கண்ணு. கர்த்தர் பாத்துக்குவாரம்மா.

மீண்டும் மருத்துவ மனையில் டாக்டரின் முயற்சிகள் வீணாயின. 

வனரோஜாவின் உடல் இல்லம் வந்து சேர்ந்தபோது இரவு மணி பதினொன்று. அவள் உடலை இன்னுமிரு உடல்கள் தாங்கி வந்தன. அமைதியாய் வனரோஜாவை வீட்டுக் கூடத்தில் கிடத்தினர்.

வாசலைப் பார்த்து கிளம்பிய வரதுவை கிருஸ்டி தடுத்தார். எங்கடா?

அக்கம்பக்கத்துல சொல்லிடுறேன்

வரதா! யாரையும் இந்த ராத்திரி வேளையில் தொந்தரவு செய்யாதே. நீ கூட வீட்டுக்கு கிளம்பிப் போ! எல்லாவற்றையும் காலையில் பார்த்துக்
கொள்ளலாம்.

நானும் போவதா? உன்னை தனியா விட்டுட்டா? என்னடா கிருஸ்டி இது?

தனியா விட்டா ஏதும் பண்ணிக்கிட்டு நானும் போயிடுவேன்னு பயப்படறயா? நான் ஏதும் செய்துக்க மாட்டேன். இன்னும் நான் இருபத்தி ஐஞ்சு வருஷமாவது உயிரோட இருக்கணுமடா. உயிரோட... என் ரோஜாவோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷத்தையும் எண்ணிஎண்ணி ஜீவிச்சிருக்கணும். கண்டிப்பா இருப்பேன். கவலைப் படாதே!

வேண்டாம்டா கிருஷ்டி.. உன்னைத் தனியே விடமாட்டேன்.. ப்ளீஸ்.. வரதுவின் கைகள் கிருஸ்டியை கும்பிட்டன.

முட்டாள்! நானும் போயிட மாட்டேன்... வரதா. என்னை நம்பு. எனக்கு நிறைய வேலை இன்னும் இருக்கு. ரோஜா நட்டு வைத்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடணும். சாய்ஞ்சு சாய்ஞ்சு ஓடும் அவள் கையெழுத்து இந்த நோட்டு,டைரிகள் பூராவும் இருக்கு... அந்த வரிகளையெல்லாம் வருடி வருடி படிக்கணும்.. நெறைய வேலை இருக்குடா.. நெறைய...

வரதுவை கிருஸ்டி அணைத்துக் கொண்டார். குலுங்கி குலுங்கி குமைந்து குமைந்து தன் பாரத்தை நண்பன் தோளில் இறக்கியபடி நிமிர்ந்தார். 

போ! போ!! காலையில் ஆறுமணிக்கு வா!

 என்ன கிருஸ்டி இது! நட்பின் பதற்றம் மெலிந்து ஓய்ந்தது.

வரது ஏதும் சொல்லவில்லை. வனரோஜாவை பார்த்தபடி
அழுதார்.. "என்னை அண்ணா அண்ணான்னு வாயார கூப்பிடுவியே.. என் கல்மனசு இன்னமும் வெடிக்கலியே என்னப் பெத்த தாயாரே..
   
வரதா! போ அழாதே. இது எங்கள் கடைசி ராத்திரி. தைரியமாய் இருப்பேன். என் ரோஜாவுடன் இருக்க எனக்கென்னடா பயம்? எந்த இடையூறும் இல்லாமல், அவளுடைய குறுக்கீடு கூட இல்லாமல் இந்த இரவு அவள் முகத்தைப் பார்த்தபடி இருக்க விடு வரதா.... இந்த டைரியில் எல்லோர் விலாசம் போன் நம்பரெல்லாம் இருக்கு. வெளியூர் சொந்தங்களுக்கு தந்தி ஏதும் கொடு.. எல்லோரையும் உனக்குத் தெரியுமே. உள்ளூர் நண்பர்களுக்கு காலையில் சொல்லு. பிலிப்பை சர்ச்சுலையும் சொல்லிவிட ஏற்பாடு பண்ணு. இனி ஒவ்வொரு நிமிடமும் என் சொத்து. வரதா!"

தலை குனிந்தபடி வரது வெளியேறினார்.

வரதுவை அனுப்பி வைத்து விட்டு கிருஸ்டி வாசற்கதவை தாழிட்டார்.
கூடத்தின் மறுகோடியிலிருந்த விளக்கை விட்டுவிட்டு மற்ற விளக்குகளை அணைத்தார். வனரோஜாவின் அருகே அமர்ந்தார். மூக்கருகே கைவைத்து மூச்சு வருகிறதா என்று பார்த்தார்.

ரோஜா! என் ஆசையைப் பார்த்தாயா? உன் மூச்சு நின்றதாய் நான் ஏன் ஒப்புக் கொள்கிறேன்? எங்கும் வீசும் காற்றெல்லாம்  உன் மூச்சு தானே ரோஜா! இப்போது உன் முகம் பழைய சிரிப்போடு இருக்கிறது. இந்த சிரிப்பை மட்டும் தான் எனக்கு மிச்சம் வைத்து விட்டு போகிறாயா ரோஜா?”

வனரோஜாவை முதலில் பார்த்ததிலிருந்து தொடங்கி அலையலையாக நினைவுகள் தம்மைதாமே ஒழுங்கு படுத்திக் கொண்டு வரிசையாய் நெஞ்சில் குமிழிட்டன . அவர் கண்கள் வனரோஜாவின் முகத்தை விட்டு அகலவில்லை. 'இந்த இரவு... எண்ணப் புற்றுகளை எனைச் சுற்றி எழுப்பும் இரவு...'

காலத்துக்கு கிருஸ்டியைப்பற்றி என்ன கவலை? 
வழக்கம் போல் விடிந்தது.

ஒருவரொருவராய் சுற்றமும் நட்பும் அலறிக் கொண்டு வந்தனர். கிருஸ்டியின் கையைத் தொட்டார்கள்..  தோளை அணைத்தார்கள்..பாக்கியம் செய்த பூக்கள் மாலையாகி வனரோஜாவின் சரீரத்தை அலங்கரித்தன. கண்கள் ரோஜாவின் மீது நிலைத்திருக்க, ஏதும் பேசாமல் சமைந்து நின்றார் கிருஸ்டி.

வரதுவுக்கு கிருஷ்டியின் கல்யாணம் ஆன நாள் நினைவுக்கு வந்தது. அன்றும் இப்படித்தானே ஏதும் செய்வதறியாமல் உறைந்து நின்றான்..? கடவுளே!

பாதிரியார் வந்தார்.. பெட்டியொன்று வந்தது. திடீரென்று ஏதோ நினைவுக்கு வந்தவராய் கிருஸ்டி சமயலறைக்கு ஓடினார். உள்ளிருந்து முதல்நாள் வனரோஜா செய்துவைத்த கேரட் அல்வாவை வாணலியோடு எடுத்து வந்து அவள் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அள்ளிஅள்ளித் தின்றார்.

பாவி! பொணத்தை வச்சுக்கிட்டு தின்கிறியே கிருஸ்டி என்று வாணலியைப் பிடுங்க வந்த தெரேசாம்மாளை அடிபட்ட புலிபோல் பார்த்தார் கிருஸ்டி. என்றுமே அதிராத அவர்  குரல் அதிர்ந்தது.

"பொணம்னு சொல்லாதே அத்தே ! அவள் என் ரோஜா! எனக்காக இதை செய்து இருக்கா.. எனக்காக மட்டும்....

சட்டென அங்கே ஒரு நிசப்தம் கவிந்தது.

நல்லடக்கத்திற்கான ஏற்பாடுகள் ஆனபடி இருந்தது. கிருஸ்டியின் அருகில் அவரை கைலாகு கொடுத்து எழுப்பவந்த வரதுவுக்கு  அவர் முணுமுணுத்துக் கொண்டிருந்த தேம்பாவணி வரிகள் சன்னமாய்க் காதில் விழுந்தன. கிருஸ்டியின் முகத்தில் துக்கமில்லை. அவர் கண்களில் வேதனையோ ஈரமோ இல்லை.. எல்லாவற்றையும் பார்த்து ஓய்ந்து விட்ட கண்கள். பார்வை எங்கோ உள்ளூர திரும்பி, மேலுக்கு வெறும் கண்ணாடிசில்லுகளாய் மங்கி உறைந்த கண்கள்...

கிருஸ்டியின் உதடுகள் மட்டும் துடித்து முனகிக் கொண்டிருந்தது..

மருள்தரு வலியுறுவே! மருள்அறு சினவுருவே!
அருள்தரு தயையுருவே! அளவறு திருவுருவே!

வரதுவுக்கு அந்தப் பாடல் இனி ஓயுமென்று தோன்றவில்லை.

(முற்றும்)
  52 comments:

மதுரை சரவணன் சொன்னது…

arumai...vaalhthukkal

மோகன்ஜி சொன்னது…

நன்றி சரவணன் சார். நாளாச்சு உங்களை சந்தித்து.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

//முதல் இரவு போல் கடைசி இரவு//


//வனரோஜாவை முதலில் பார்த்ததிலிருந்து தொடங்கி அலையலையாக நினைவுகள் தம்மைதாமே ஒழுங்கு படுத்திக் கொண்டு வரிசையாய் நெஞ்சில் குமிழிட்டன . அவர் கண்கள் வனரோஜாவின் முகத்தை விட்டு அகலவில்லை. 'இந்த இரவு... எண்ணப் புற்றுகளை எனைச் சுற்றி எழுப்பும் இரவு...'//

அருமை. இதுவே உண்மையான காதல் காவியம். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk

வெங்கட் நாகராஜ் சொன்னது…

என்ன சொல்வது என்று புரியவில்லை மோகன் அண்ணா.... கண்களில் கண்ணீர் திரையிட்டு வார்த்தைகளை மங்கலாக்கியது...

மனதுக்குப் பிடித்தவரின் நிரந்தரப் பிரிவு என்பது மிகவும் கோரமான ஒன்று... கிறிஸ்டி சொல்லும் தேம்பாவணி இந்தத் தொடரைப் படித்த எங்கள் எல்லோர் காதுகளிலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்...

அப்பாதுரை சொன்னது…

சட்டுனு முடிச்சிட்டதா தோணுது.
கேரட் அல்வா சாப்பிடுவது உருக்கமான டச். உங்களால மட்டுந்தான் இப்படிக் கதை சொல்ல முடியும்.
இறந்தவர் பாடு இருப்பவர் பாடு என்பார்கள். இருப்பவர்களின் நினைவுச்சுமை கொடுமை.
ரசித்துப் படித்தேன் என்று சொன்னால் தவறாகுமோ?

பத்மநாபன் சொன்னது…

நீங்கள் கதையாளர் கதையின் அழகை பார்த்தீர்கள் (சோக ).அதற்கு குறை வைக்க வில்லை சடாரென முடித்துவிட்டீர்கள் .நாங்கள் நடமாடும் உண்மையான உயிர்களாக பார்த்தோம் ..மருகுகிறோம் ..

வருபவர் எல்லாம் போய்த்தான் ஆகவேண்டும் எனும் ஓரு விதி மட்டும் உண்மை ...நடுவில் இவ்வளவு உணர்வுக் குவியல்...அந்த உணர்வு குவியலை இப்படி எழுத்தில் கொண்டுவந்து எங்கள் மனங்களை கொள்ளை அடித்து சென்றுவிட்டீர்கள் ....பறி போன மனதிற்கு எந்த இ .பி .கோ விடம் செல்வது ......

G.M Balasubramaniam சொன்னது…

முட்டாள்! நானும் போயிட மாட்டேன்... வரதா. என்னை நம்பு. எனக்கு நிறைய வேலை இன்னும் இருக்கு. ரோஜா நட்டு வைத்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடணும். சாய்ஞ்சு சாய்ஞ்சு ஓடும் அவள் கையெழுத்து இந்த நோட்டு,டைரிகள் பூராவும் இருக்கு... அந்த வரிகளையெல்லாம் வருடி வருடி படிக்கணும்.. நெறைய வேலை இருக்குடா.. நெறைய...

வேலை நிறைய இருக்கு என்னும் இந்த வார்த்தைகளை என் பதிவின் பின்னூட்டத்தில் படித்த நினைவு. அர்த்தம் பொதிந்துள்ள வரிகள் மூலம் எதையோ தெரிவிக்க விரும்புகிறீர்கள் போல் தோன்றுகிறது.நல்ல சிறுகதை.

சே.குமார் சொன்னது…

அருமை. இதுவே உண்மையான காதல் அழகான காவியம். கதை மாந்தர்களை நாங்கள் எங்களில் ஒருவராகப் பார்ட்த்தோம்... அதனால் வனரோஜாவை இழக்க எங்களுக்கு மனமில்லை. இருந்தும் கதாசிரியராய் உங்கள் முடிவு அருமை. பாராட்டுக்கள்.

கோவை2தில்லி சொன்னது…

இரண்டாம் பகுதிக்கு மேல் படிக்க முடியவில்லை. இன்று தான் மீதி பகுதிகளையும் படித்தேன்.

என்ன சொல்வதென்று தெரியவில்லை.மனது கனத்து விட்டது.
அன்னியோன்ய தம்பதிகளான கிருஸ்டி, வனரோஜாவின் வாழ்க்கையில் இப்படி ஒரு இடியா....

வனரோஜா கிருஸ்டியின் கூடவே தான் இருப்பாள்.

ரிஷபன் சொன்னது…

நானும் போயிட மாட்டேன்... வரதா. என்னை நம்பு. எனக்கு நிறைய வேலை இன்னும் இருக்கு. ரோஜா நட்டு வைத்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடணும். சாய்ஞ்சு சாய்ஞ்சு ஓடும் அவள் கையெழுத்து இந்த நோட்டு,டைரிகள் பூராவும் இருக்கு... அந்த வரிகளையெல்லாம் வருடி வருடி படிக்கணும்.. நெறைய வேலை இருக்குடா.. நெறைய...”


கதையல்ல காவியம் என்றே சொல்ல வேண்டும். கடைசி வரை உலுக்கிப் போட்ட கதை.

geetha santhanam சொன்னது…

கிறிஸ்டியின் துன்பத்தை, வரதுவின் தவிப்பை அப்படியே படிக்கும் எங்களை உணரச் செய்தீர்கள். சாகும் தருணத்திலும் கிறிஸ்டிக்காகக் காரட் அல்வா கிளறும் வன ரோஜாவின் அன்பை, அதை உண்டு வனரோஜாவின் அன்பிற்கு மரியாதை செய்யும் கிறிஸ்டியின் காதலை கவிதையாகச் சொல்லியிருக்கிறீர்கள். நெஞ்சை உருக்கிய கவிதை-வனரோஜா.

ஸ்ரீராம். சொன்னது…

முடிந்து விட்டது. கதையா, கவிதையா காவியமா என்று சொல்ல முடியவில்லை. கேன்சர் என்ற அந்த சொல்லை நான் வெறுக்கிறேன். அதனாலேயே சென்ற முறை பின்னூட்டமிட மனம் வரவில்லை. சந்தோஷங்களை எதிர்பார்க்கும் மனம். முதல் பாகம் படித்தபோதே சந்தேகப் பட்டேன். சோகமாய் முடித்தால்தான் மனதில் நிற்கும் என்று முடித்து விட்டீர்களோ....மனைவியை இந்த அளவு நேசிப்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். பார்த்த நிஜ சம்பவம் என்று சொன்னால் கூட சிகிச்சையில் இருக்கிறார்கள் என்று....விடுங்கள் ...பின்னூட்டம் நீண்டு கொண்டே போகிறது.

meenakshi சொன்னது…

மனசு உடைஞ்சு போச்சு. இப்படி முடிச்சுட்டீங்களே! போறவங்க போய்டுவாங்க, இருக்கறவங்க வாழ்ந்துதானே ஆகணும். அதுவும் இவ்வளவு உயிரா இணைந்து இருந்தவரில் ஒருவர் இறந்து விட்டால், அந்த இன்னொருவரின் நிலை, அம்மா! மிகவும் கொடுமை! நினைவு தரும் இனிமையில் மீதி நாட்களை கழிக்கலாம் என்றாலும், பிரிந்து விட்ட கொடுமை மனதை கொன்றே விடும்.
இது ஒரு நிஜமான சம்பவம் என்று இருந்தாலும், ஸ்ரீராம் எழுதி இருப்பது போல் கதையிலாவது சிகிச்சையில் இருக்கிறார் என்று முடித்திருக்கலாம். மனம் ஆறவில்லை இன்னும்!

கீதா சொன்னது…

வனரோஜா கிறிஸ்டி தம்பதியரின் அந்நியோன்னியத்தை அழகாக உணரவைத்துவிட்டீர்கள். இந்தப் பகுதியில் என் கண்கள் கலங்கிவிட்டன. காதலின் பரிபூரணத்தை அனுபவிக்காமலேயே போய்விட்ட அத்தம்பதியினருக்காக வருந்துகிறேன். கேரட் அல்வா இனி தொழுவத்து மயிலை நினைவுபடுத்தும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

“ரோஜா! என் ஆசையைப் பார்த்தாயா? உன் மூச்சு நின்றதாய் நான் ஏன் ஒப்புக் கொள்கிறேன்? எங்கும் வீசும் காற்றெல்லாம் உன் மூச்சு தானே ரோஜா! இப்போது உன் முகம் பழைய சிரிப்போடு இருக்கிறது. இந்த சிரிப்பை மட்டும் தான் எனக்கு மிச்சம் வைத்து விட்டு போகிறாயா ரோஜா?”/

உயிரின் பாதி மறைந்தபின்
மறுபாதி நினைல் வாட
சாவைவிட அதிகம் மனதிடம் வேண்டும்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மருள்தரு வலியுறுவே! மருள்அறு சினவுருவே!
அருள்தரு தயையுருவே! அளவறு திருவுருவே!”

வரதுவுக்கு அந்தப் பாடல் இனி ஓயுமென்று தோன்றவில்லை.


மனதில் கேரட் அல்வாவோடு பாடலும் தங்கிவிட்டது.

ஆதிரா சொன்னது…

“மருள்தரு வலியுறுவே! மருள்அறு சினவுருவே!
அருள்தரு தயையுருவே! அளவறு திருவுருவே!”
முடிவு அருமை. மனதில் பாரம். அது தவிர்க்க இயலாதது. சோகத்தில் சுகம்....

//முதல்நாள் வனரோஜா செய்துவைத்த கேரட் அல்வாவை வாணலியோடு எடுத்து வந்து அவள் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு அள்ளிஅள்ளித் தின்றார்.//

இது என் வீட்டில் நடந்த சம்பவத்தை நினைவூட்டியது. கண்களில் நீர்த்துளியுடன்..

ஒரே மூச்சில் படித்ததும் நல்லது என்றே தோன்றுகிறது. அருமையான கனமான சிறுகதை.

நிலாமகள் சொன்னது…

அவள் உடலை இன்னுமிரு உடல்கள் தாங்கி வந்தன//

நான் இருபத்தி ஐஞ்சு வருஷமாவது உயிரோட இருக்கணுமடா. உயிரோட... என் ரோஜாவோட வாழ்ந்த ஒவ்வொரு நிமிஷத்தையும் எண்ணிஎண்ணி ஜீவிச்சிருக்கணும். கண்டிப்பா இருப்பேன்//

ரோஜா நட்டு வைத்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் விடணும். சாய்ஞ்சு சாய்ஞ்சு ஓடும் அவள் கையெழுத்து இந்த நோட்டு,டைரிகள் பூராவும் இருக்கு... அந்த வரிகளையெல்லாம் வருடி வருடி படிக்கணும்.. நெறைய வேலை இருக்குடா.. நெறைய...”//

இனி ஒவ்வொரு நிமிடமும் என் சொத்து.//

எங்கும் வீசும் காற்றெல்லாம் உன் மூச்சு தானே ரோஜா!//

அவள் என் ரோஜா! எனக்காக இதை செய்து இருக்கா.. எனக்காக மட்டும்....”//

கிருஸ்டியின் முகத்தில் துக்கமில்லை. அவர் கண்களில் வேதனையோ ஈரமோ இல்லை.. எல்லாவற்றையும் பார்த்து ஓய்ந்து விட்ட கண்கள். பார்வை எங்கோ உள்ளூர திரும்பி, மேலுக்கு வெறும் கண்ணாடிசில்லுகளாய் மங்கி உறைந்த கண்கள்...//

க‌ண‌வ‌னை இழ‌ந்து அன்னியோன்ய‌ அன்பின் சுமையோடு குழ‌ந்தைக‌ளுக்காக‌ வாழ்ந்து க‌ழியும் பெண்க‌ளின் க‌தை பெண்ணிய‌ எழுத்தானால் இப்ப‌டைப்பு ச‌ர்வ‌ நிச்ச‌ய‌மான‌ ஆணிய‌ எழுத்தாகிற‌து. அன்பின் உருக்க‌ம் ப‌டைப்பில் க‌சியும் போது பெண்ணென்ன‌ ஆணென்ன...?!
கிருஸ்டியை வியாபித்த‌ துக்க‌ம் எங்க‌ளையும் ஒருசேர‌த் தாக்கி கேவிக்கேவி க‌ண்ணீர் விட்ட‌ழ‌ வைக்கிற‌து.
தாங்க‌ளுமொரு சாட்சிய‌மென்று வேறு கூறிவிட்டீர்க‌ள். பார்த்த‌ நீங்க‌ளே தாங்கிட‌ துணிவு பெற்றிருக்க‌ உங்க‌ளைப் பார்த்து ம‌ன‌சைத் தேற்ற‌ வேண்டும் நாங்க‌ள்.

"இங்கிவ‌னை யான் பெற‌வே என்ன‌ த‌வ‌ம் செய்துவிட்டேன்" என்ற‌ல்ல‌வா வ‌ன‌ரோஜாவின் ஆன்மா பூரித்து விம்மியிருக்கும்!

வ‌ன‌ரோஜா த‌ன் வ‌லிக‌ளையும் ர‌சித்து அனுப‌வித்த‌து போல‌ல்ல‌வா கிருஸ்டியும் த‌ன் இணை பிரிந்திடும் த‌ருண‌ம் உயிரே சிற‌காய் உப‌யோக‌ம‌ற்றுப் போவ‌தையும் கெள‌ர‌வ‌ப்ப‌டுத்திவிடுகிறார் ம‌ர‌ண‌மெனும் பெருநெருப்பை!

சிவகுமாரன் சொன்னது…

முதலில் மன்னிக்க வேண்டும் அண்ணா.விட்டுப் போன எல்லாவற்றையும் படித்துவிட்டு பிறகு வருகிறேன்.

மோகன்ஜி சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
மோகன்ஜி சொன்னது…

நன்றி வெங்கட்! உங்கள் நெகிழ்ச்சியில் நானும் நெகிழ்ந்து போகிறேன்

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை சார்!
உண்மை தான்.. ஒரு வேகத்தில் எழுதிய நான்கு அத்தியாயங்களை புறந்தள்ளி, கதையை முடித்து விட்டேன். என்றாவது இதை ஒரு நாவலாக்க வேண்டுமென்று தோன்றினால், பிளேஷ் பேக் இன்றி நேராக, விதாரமாய் எழுத இயலும். அவசியமா என்பது தான் கேள்வி.

//இறந்தவர் பாடு இருப்பவர் பாடு என்பார்கள். இருப்பவர்களின் நினைவுச்சுமை கொடுமை.//

அழகாய்ச் சொன்னீர்கள். நினைவுச்சுமை பெரும் பாரம். ஆனால் அந்த பாரம் தலைவலியில் தெறிக்கும் ஒரு பாரம் போன்றது. நினைவில்லாத நிலை தலை இல்லாத உடல் போலல்லவா.... நினைந்து நினைந்து நெக்குருகுதல் கூட ஒரு சுகம் தானோ?

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய பத்மநாபன்!
//நாங்கள் நடமாடும் உண்மையான உயிர்களாக பார்த்தோம் ..மருகுகிறோம் ..//
வனரோஜா எனக்கும் அப்படியே. என்னை பாதித்த இருவர் ஒருரு கொண்டு கதைக்காக, வேறொரு களத்தில் கதை மாந்தர்களாகி வந்தார்கள். வாழ மறந்த ஒருத்தி, வாழ்ந்து முடிந்த ஒருத்தி இருவரின் குணாதிசயங்கள் வனரோஜாவாக உருவெடுத்தது. என் இதயத்தின் எந்த மூலையிலோ உறைந்திருந்த கண்ணீர்... இந்த கதை எழுதி வந்த நேரத்தில் உருகி கன்னங்களை நனைத்தது. சற்று ஆசுவாசமாய்க் கூட இருந்தது.

மோகன்ஜி சொன்னது…

G.M.B சார்! இன்னும் நிறைய வேலை இருக்கிறது என்று கிருஸ்டி சொல்வது, வனரோஜாவின் நினைவையே அவள் இருப்பாக்கி வாழ்வை அதில் கரைத்துக் கொள்ளும் தீர்மானம்.

'உங்களுக்கு நிறைய வேலையிருக்கு' என்று நான் குறிப்பிட்டதோ இன்னமும் நீங்கள் ஆக்க வேண்டிய படைப்புகளை, எங்களைப் போன்ற ஆர்வலர்களை வழி நடத்துதல் எனும் அர்த்தத்தில்.
சரி தானே சார்?

மோகன்ஜி சொன்னது…

அன்பு குமார்! உன் நெகிழ்ச்சி என்னையும் பாதிக்கின்றது தம்பி. நன்றி. அடுத்த கதையில் சந்தோஷ வெள்ளத்தில் திக்கு முக்காட வைத்து விடுகிறேன்!

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஆதி! வாழ்த்துக்கு நன்றி. தாம்பத்தியம் ஒரு இனிய சங்கீதம். அந்த சேர்ந்திசையில் அபஸ்வரம் தட்டாமல் வாழ்வதற்கு நிறைய புரிதலும், விட்டுக் கொடுத்தாலும் அவசியம். பெரும்பாலோர் வாழ்வில் சுருதிபேதமே மேலோங்கி நிற்கிறது. எல்லாமே வாழ்க்கை தான். ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்?

மோகன்ஜி சொன்னது…

ரிஷபன் சார்! இந்தக் கதை உங்களுக்கு பிடித்திருப்பதில் எனக்கு சந்தோஷம். நன்றி சார்!

மோகன்ஜி சொன்னது…

கீதா சந்தானம் மேடம்! உங்கள் பின்னூட்டத்தில் உங்கள் வாசிப்பின் கூர்மை புலப்படுகிறது. இப்போதெல்லாம் உங்கள் கருத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

மோகன்ஜி சொன்னது…

அன்பு ஸ்ரீராம்!
/கேன்சர் என்ற அந்த சொல்லை நான் வெறுக்கிறேன். / என் ஒரே சகோதரி கேன்சரில் மறந்த பாதிப்பு இந்தக் கதையை ஆக்கிரமித்துக் கொண்டது.
/ சோகமாய் முடித்தால்தான் மனதில் நிற்கும் என்று முடித்து விட்டீர்களோ../ இந்தக் கதையை மெலோட்ராமாவாக தீர்மானத்தோடு எழுதவில்லை. அந்த வரது ஏறத்தாழ நான்தான்.இதை இன்னமும் ஜோடனையாய் எழுதியிருந்தால் கதை சுபமாய் இருந்திருக்கலாம். ஏனோ நடுவில் நான் கதைப் போக்கை மாற்ற யோசித்தபோதும், என்னால் இயலவில்லை.

ஒரு முகாரி இருந்து விட்டுதான் போகட்டுமே... அடுத்ததில் பிடிக்கிறேன் பாருங்கள் ஒரு மோகனத்தை..

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம்! உள்ளபடியே உங்களை வருத்தமடைய செய்ததிற்கு நான் வருந்துகிறேன். மேலே நான் சொல்லியிருக்கும் காரணங்களை ஏற்று என்னை மன்னியுங்கள்.

வேண்டுமானால் அபராதமாக, உங்களை சந்தோஷப் படுத்தும் வகையில் ஒரு கதையை எழுதுகிறேன். நீங்களே ஒரு ஸ்டோரிலைன் இரண்டு வரி சொல்லுங்கள். உங்களுக்கே உங்களுக்காய் கதையை எழுதுகிறேன். உங்கள் ஸ்டோரிலைனை என் மின்னஞ்சல் முகவரி mohanji.ab@gmail.com க்கு அனுப்புங்கள்.

மோகன்ஜி சொன்னது…

கீதா மேடம்! உங்கள் பின்னூட்டங்கள் மனதிற்கு உற்சாகமாய் இருக்கிறது.

தம்பதிகளின் அன்னியோன்னியமே இந்தக் கதையின் அடிநாதம்..

மோகன்ஜி சொன்னது…

இராஜராஜேஸ்வரி மேடம்!
/உயிரின் பாதி மறைந்தபின்
மறுபாதி நினைவில் வாட
சாவைவிட அதிகம் மனதிடம் வேண்டும்./
நீங்கள் சொல்வது உண்மை.. பிரிவு கொடுமையானது..

மோகன்ஜி சொன்னது…

மிக்க நன்றி ! ஒரே மூச்சில் படித்துவிட்டு ,பொறுமையுடன் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் கருத்து சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் நட்புக்கு நன்றி ஆதிரா!

மோகன்ஜி சொன்னது…

அன்பு நிலா!

மிக நுணுக்கமாய் ரசித்திருக்கிறீர்கள்.

என் புரிதலில் கணவனை இழந்த மனைவி மீதி வாழ்வை எதிர்கொள்வது போல, மனைவியை இழந்த கணவனால் வாழ்வை எதிர்கொள்ள இயலாது. உணர்வால் கூட மனைவியை சார்ந்தே கணவன் இருக்கிறான்.. குறிப்பாக வயதான தம்பதிகளிடையே நிலவும் புரிதலையும் சார்புநிலையையும் பார்த்தாலே புரியும்..
உங்கள் கருத்தினை ஆழமாக வெளிப்படுத்தும் தேர்ந்த நடையை ரசிக்கிறேன். நிலா

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! கதை முழுத்தையும் படித்து விட்டே வா.. காத்திருப்பேன்.

நிலாமகள் சொன்னது…

என் புரிதலில் கணவனை இழந்த மனைவி மீதி வாழ்வை எதிர்கொள்வது போல, மனைவியை இழந்த கணவனால் வாழ்வை எதிர்கொள்ள இயலாது. உணர்வால் கூட மனைவியை சார்ந்தே கணவன் இருக்கிறான்.. குறிப்பாக வயதான தம்பதிகளிடையே நிலவும் புரிதலையும் சார்புநிலையையும் பார்த்தாலே புரியும்..//

எழுந்து நின்று கைத்த‌ட்டிப் பாராட்ட‌த் தோன்றுகிற‌து. மென்மையாய் தோள்த‌ட்டி ஆறுத‌ல் சொல்ல‌வும் விழைகிறேன் ச‌கோ...

மோகன்ஜி சொன்னது…

ப்ரிய நிலா!உங்கள் பாராட்டும் ஆறுதலும் இதம். மனதார ஏற்றுக் கொண்டேன் சகோதரி!

சிவகுமாரன் சொன்னது…

என்ன சொல்வதென்று தெரியவில்லை
உறைந்து போய் இருக்கிறேன்.
வழக்கமாய், மோகன்ஜி கதைகளை என் மனைவி விரும்பி படிப்பாள். அவள் பார்வையில் இருந்து எப்படி வனரோஜாவை ஒளித்து வைப்பது ?

meenakshi சொன்னது…

மிக்க நன்றி மோகன். எனக்காக ஒரு கதை எழுதுகிறேன் என்று சொன்ன உங்கள் உள்ளம் என்னை நெகிழ வைத்து விட்டது. உங்கள் எழுத்து நடையை நான் மிகவும் ரசிப்பேன், விரும்பி படிப்பேன். அதனால் உங்கள் மின் அஞ்சலுக்கு இரண்டு வரி ஸ்டோரிலைன் அனுப்புகிறேன். இப்படி ஒரு அபராதம் நீங்கள் செய்வீர்கள் என்றால் உங்களை வேண்டுமென்றே நிறைய முறை மாட்டிவிட்டு அபராதம் வாங்கி கொண்டே இருக்கலாம் போலிருக்கிறதே! :)

Ramani சொன்னது…

அருமையான காதல் காவியம் படைத்துவிட்டீர்கள்
ஒட்டு மொத்தமாகப் படித்தால்தான்
அந்த உணர்வோடு செல்ல முடியும் என்று
இன்றுதான் முழுக் கதையையும் படித்து முடித்தேன்அருமை.
அழகு திருமணம் குழந்தையின்மை இப்படி
எதுவானாலும் குறைவுடைய வாழ்க்கைதான்ஆனாலும்
இதுவெல்லாம் நிறைய இருக்கிறவர்கள்
வாழுகிற வாழ்க்கையை விட இவர்கள்தான்
நிறைவான வாழ்க்கை வாழ்ந்ததாக எனக்குப் படுகிறது
அருமையான தொடரைத் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

மோகன்ஜி சொன்னது…

அன்பு சிவா! வனரோஜா பலரையும் பாதித்து இருக்கிறாள்.

அந்த பாதிப்பு,அவள் மரணம் தந்த பரிதாபத்தைக் காட்டிலும், அவள் வாழ்ந்த வகையின் பிரமிப்புத் தான்.

உன் மனைவி படிக்கட்டும். கதைகள் சில சமயம் அனைவர் மனங்களிலும் புதிய வாசல்களைத் திறக்கக் கூடும். என் அருமை வாசகியிடம் என் கதையை மறைக்க நீர் யார்?!

மோகன்ஜி சொன்னது…

மீனாக்ஷி மேடம் என் கதைகள், எழுத்து நடை உங்களுக்கு பிடித்திருப்பது என் ஆனந்தம். உங்கள் ஸ்டோரிலைனை சீக்கிரம் அனுப்புங்கள். நீங்கள் அபராதம் விதிப்பது உங்கள் உரிமையல்லவா.

ஒரு பழைய தெலுங்கு பாடலோ சுலோகமோ சிறு வயதில் கேட்டது...

ஒரு பெண்ணுக்கு கடவுளும், பர்த்தாவும் விதிக்கும் அபராதம்(தண்டனை)அவள் மேன்மையுர ,அவள் வாழ்வில் நிகழ வேண்டுமாம்.
அதே நேரம் ராஜா விதிக்கும் தண்டனையும்,மகன் தரும் தண்டனையும் எந்நாளும் நேரக்கூடாதாம்...

மீதி நினைவுக்கு வரவில்லை.

கதை எழுதச்சொல்லி நீங்கள் தரும் அபராதம் ஏற்புடையது. அதே சமயம் கதையென்ற ஒன்றை மோசமாய் எழுதி நான்தரும் அபராதம் உங்களுக்கு வாய்க்கக் கூடாதல்லவா?!

மோகன்ஜி சொன்னது…

ரமணி சார்! உங்கள் கருத்துக்காய் ஆவலுடன் காத்திருந்தேன். அந்த வாழ்க்கை நிறைவான வாழ்க்கை என்று மிக அழகாக சொல்லி விட்டீர்கள். நன்றி ஜீ!

அப்பாதுரை சொன்னது…

நாங்கள்ளாம் இஸ்டோரிலைன் தரமாட்டமா?

அமைதிச்சாரல் சொன்னது…

எல்லாப் பகுதிகளையும் சேர்த்து வெச்சு படிச்சிட்டேன்.

எப்பவுமே பாஸிட்டிவ் முடிவுகளே நடக்கணும்ன்னும் எதிர்பார்க்க முடியாதே.. அசத்தலான கதை. அருமையாயிருந்தது.

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை!ஸ்டோரிலைன் எனக்கு நீங்களும்,உங்களுக்கு நானும் தந்தா அதுகூட நன்றாய்த்தான் இருக்கும்.
நீங்க அனுப்புர் பிரிட்னீ ஸ்பியர்ஸுக்கு நான் பாவாடை தாவணி மாட்டுவேன்... நான் அனுப்பும் தேவிகாவுக்கு நீங்கள் கவுன் போடுவீர்கள்...
நமக்கு சரி! மக்கள் என்னாவது??

மோகன்ஜி சொன்னது…

அப்பாதுரை! ஸ்டோரிலைன் இன்னமும் வந்த பாடில்லை!

மோகன்ஜி சொன்னது…

நன்றி அமைதிச் சாரல்..கதையை நீங்கள் ரசித்தத்திற்கு...

அப்பாதுரை சொன்னது…

என்னாண்ட கேட்டிருந்தின்னா பீடிக்கட்டாட்டம் சும்மா எட்தெட்து குட்திருப்பேனே நைனா?

மோகன்ஜி சொன்னது…

நாங்கல்லாம் ரண்டு காதுலயும் பீடிய சொருவினு அலயரவியங்க்ய.. உங்களுது சொக்கலால் பீடின்னா ரண்டு வேணா குடுங்க சாரே!. பீடிய வாயால வலிச்சு பொகைய காதால விடுவமில்ல.

Matangi Mawley சொன்னது…

சின்ன கதைகள எப்படியோ- நானே பொறுமையா படிச்சுடுவேன். படிக்க படிக்க தான் fluency வரும்-ங்கறதுனால ... இந்த கதைய படிக்க துவங்கினப்போ- என்னமோ- இத நான் படிக்கரதவிட அம்மாவை படிக்க சொல்லி கேக்கணும்போல தோணித்து. எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் தமிழ், என் அம்மா எனக்கு பல தமிழ் கதைகள படிச்சு காட்டினதோட பலன். அத்தன அழகா இருக்கும், அம்மா படிக்கும் பொது. கல்கி அவர்களோட கதைகள, college ல படிக்கும்போது- அம்மா தான் படிச்சு காட்டினா. இந்த கதை தலைப்புல இருந்த லயமோ என்னவோ--- இத நான் படிக்கரதவிட- அம்மா படிச்சு கேட்கணும்-னு தோணித்து.
அந்த தேம்பாவணி வரிகளாகட்டும்... உங்க வருணனையின் ஆழமாகட்டும்... 'வன ரோஜா' ங்கற பெயரலேயே இயல்பா மிதந்த அழகாகட்டும்...
கடேசி பாகத்த படிக்கும்போது அம்மாவால படிக்கவே முடியல... கொஞ்ச நேரம் ஆச்சு- சுதாரிச்சுக்க... Touching !

G.M Balasubramaniam சொன்னது…

மோஹன் ஜி இந்தக் கதையை படித்தபிறகு வந்த சில சந்தேகங்கள்.
1) இந்தக்கதையில் தொழுவம் என்பது எதன் குறியீடு.?
2)மயில் என்று குறிப்பிடப்படுபவர் யார்.
3) தொழுவத்தில் யாரும் விருப்பப்படாமல் இருக்க வில்லையே.
4)உங்கள் அனுபவ பாதிப்பு ஏதோ இருக்கிறதா. ?கதையை ரசிக்காதவன் என்று எண்ண வேண்டாம். தலைப்புக்கும் கதைக்குமான தொடர்பு அறியவே இக்கேள்விகள்.உங்கள் மின் அஞ்சல் முகவரி தெரியாததால் பின்னூட்டத்தில் அதுவும் நாட்களான பிறகு கேட்கிறேன்.