தவிப்பு
வளைந்து வளைந்து பறக்கிறது
ஒரு பட்டாம்பூச்சி.
வண்ணங்கள் வாய்க்காத
ஏழைப்பட்டாம்பூச்சி
ஏதோ சேதி சொல்லவந்தாற்போல்
ஏனோ பதைபதைக்கிறாற்போல்
எங்கோ பாதைதவறி வந்தாற்போல்
எதற்கோ எதிர்ப்பு சொல்வது போல்
கருமையும் வெறும்பழுப்புமாய்
படபடத்து மேலும்கீழுமாய்த் தவிக்கிறது .
துணையைத் தேடுகிறதா? இல்லை
பறிகொடுத்துவிட்டதா?
உள்ளங்கைக்குள் வந்து உட்காரேன்.
சேர்ந்தே தான் எதிர்கொள்வோமே?
உதடுகளுக்குள் சொல்லிக்கொண்ட தருணம்,
பால்கனியை விட்டு பறந்துபோனது.
எக்கிஎக்கி பார்க்கிறேன்.
புலப்படவேயில்லை.
எங்கோ நீ
சுகப்பட்டால் சரிதான்.
காத்திருப்பு
பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
அந்த இளம்பெண் தன் குழந்தையிடம்,
என்னென்னவோ பேசுகிறாள்....
வாயோடு சேர்ந்து பேசுகிறது,
அவள் கண்ணும் மூக்கும்.
தாயின் முகம்விட்டு கண்கள் அகலாமல்,
கைகொட்டி சிரித்தபடி அந்தக் கருப்புக்குழந்தை.
புகைவண்டி வந்துசேர இன்னமும்
அரைமணி இருக்கிறது.
கூடவே ஒரு குழந்தை இருந்தால்,
பொழுதுபோகும்.
நானே ஒரு குழந்தையாய் இருந்தாலும் கூட.
23 comments:
1) ஐயோ... அங்கும் ஏழையா...?
2) முடிவில் குறும்பு...!
வண்ணத்துப் பூச்சியுடன் ஒரு எண்ணப் பயணம்!
என்ன பேசியிருப்பார்கள் தாயும், சேயும்?
பட்டாம்பூச்சி என்பதைப் பார்த்ததும் என் பேரன் நினைவு வந்தது. ஐந்து வருடம் முன்பு எழுதிய பதிவும் நினைவுக்கு வந்தது
/பட்டாம் பூச்சிப் பிடிக்கப்
பதுங்கிப் பதுங்கி முன்னேறும்
பத்து வயசுச் சிறுமி.
அவளிடமிருந்து அதைக் காக்க
எம்பி எம்பித் துரத்தும்
ஐந்தே வயசுப் பாலகன்.
எப்படியும் பிடிக்க வேண்டும்
என்ற முனைப்பில்
தடுக்க வந்த தம்பியை
அடித்து விடுகிறாள் அக்கா.
அவனும் ஆற்றாமையால் கூவுகிறான்,
அன்று தும்பியைக் கல் தூக்க வைத்தாள்
இன்று இதன் இறகைப் பிய்ப்பாளோ.?
பாவம் பட்டாம் பூச்சி !
கடவுளே, நீ அதைக் காப்பாற்று.
பிறிதொரு நாள், குறும்பு செய்த பிள்ளையை
கூடத்தின் ஓரத்தில் நிற்க வைக்க,
நில்லாமல் ஓடிப்போனவனைப் பிடித்து
ஓரடி அடித்தாள் அவன் தாய்.
சிறிது நேரம் அழுது ஓய்ந்தவன்
மாடியின் மேலேறி வானம் பார்த்து
வேண்டிக்கொண்டான்,
" பட்டாம் பூச்சியைக் காத்த கடவுளே,
என்னையும் இவர்களிடமிருந்து காப்பாற்று.!"/
இப்படித்தான் காத்திருக்கும் நேரம் சில காட்சிகள் மனதை ஈர்த்துவிடுமதன் ஈர்ப்பில் ஒன்றிப்போய் நாமும் ஒரு பாத்திரமாக மாறி விடக்கூடாதா எனும் ஏக்கமும். பதிவு யதார்த்தநிகழ்வை , நிலையைச் சொல்லிப் போகிறது. வாழ்த்துக்கள்
_________________________________________________
// உள்ளங்கைக்குள் வந்து உட்காரேன்.
சேர்ந்தே தான் எதிர்கொள்வோமே?//
எத்தனை நல்லுள்ளம்......
இரண்டு கவிதைகளையும் ரசித்தேன்....
கவிதைகள் அருமை சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)
அன்பு டி.டி ! ரசித்ததிற்கு நன்றி !
ஶ்ரீராம் !
//தாயும் சேயும் எதைப் பற்றி பேசியிருப்பார்கள்?//
ஒருவேளை உதவாக்கரை அப்பனைப் பற்றி இருக்குமோ ?!
GMB சார் ! மிக அழகான பதிவு... பொருத்தமாய் சேர்த்திருக்கிறீர்கள்... பட்டாம்பூச்சியைக் காத்த கடவுள் வந்து தானே தீரவேண்டும்??
வாங்க வெங்கட் ! பாராட்டுக்கு நன்றி பாஸ்...
வாங்க தேனம்மை மேடம் ! நலம் தானே ? பாராட்டுக்கு நன்றி
பதிவாளர் ஒற்றுமை பற்றிய உங்கள் குரலை ஆமோதிக்கிறேன்! உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....
\\வண்ணங்கள் வாய்க்காத
ஏழைப்பட்டாம்பூச்சி\\
இந்த இருவரிகளிலிருந்து விடுபடுவதற்கே என்னால் இன்னும் இயலவில்லை.
வார்த்தைகள் வெளிவராவிட்டாலும் உதடுகளின் மென்னதிர்வு விளங்கவைத்திருக்கும் ஆறுதல் மொழிகளை...
நம்பிக்கையின் பாதை புலப்பட்டுவிட்டது போலும்.
இன்துணையோடு இன்னொருநாள் வரக்கூடும்.
சாளரம் மட்டும் சற்று திறந்தே இருக்கட்டும்.
தாயாய்... கொஞ்சநேரம்...சேயாய் கொஞ்சநேரம்...
மாறிமாறி உருவகப்படுத்திக்கொண்டு கொஞ்சவும் கொஞ்சப்படவுமாய்... சுகமான காத்திருப்பு...
கீதமஞ்சரி!
சாளரம் மட்டும் திறந்தே இருக்கட்டும் என்பது தான் இந்தக் கவிதைக்கான விடையோ?
அற்புதமாய்ஒரு அவதானிப்பு.
கீதமஞ்சரி !
// சுகமான காத்திருப்பு //
ரசித்ததிற்கு நன்றி...
இரண்டில் ஒன்று நன்றாகப் புரிந்தது.
இரண்டுக்கு ஒன்று பழுதில்லை தானே !
ஜி.எம்.பி. சாரின் கவிதையின் முடிப்பு ரசித்தேன்.
உள்ளங்கைக்குள் வந்து உட்காரேன்.
சேர்ந்தே தான் எதிர்கொள்வோமே?//
இதம்.
ஏழைப் பட்டாம் பூச்சி, கருப்புக் குழந்தை- சொற்சுருக்கத்தில் விரிபொருள் .
கீத மஞ்சரி அழகழகா ரசிக்கிறாங்க.
நிலா ! நானும் gmbசாரின் பிரார்த்தனையை ரசித்தேன்.
நிலா ! ரசனைக்கு நன்றி!!
கீதமஞ்சரியும் நீங்களும் ரசனைக்கார நாரீமணிகள் அல்லவா? உயர்த்தி ஊக்குவிப்பதிலாகட்டும், பிரித்து மேய்வதிலாகட்டும்...
ஆனாலும் இன்னாட்களில் வலை ஏனோ டல்லடிக்கிறது... பிடிவாதமாய் ஏதேதோ தளங்களுக்கு சென்று பார்த்தேன். மனசை இழுத்துக்கொண்டு பிடிக்கிறாற் போல் பதிவுகள் எதுவும் காணோம். இன்னிக்கி நமக்கு அதிர்ஷ்டம் இல்லை, இன்னொருநாள் மீண்டும் பார்ப்போம் என்று நம்பிக்கை தளராமல் மீண்டேன்.
கீதா 'அழகாய்' ரசிக்காமல் 'அழகழகாய்' ரசிக்கிறாங்களாக்கும்.... கவிதைக்கார லேடி!
தவிப்பு கவிதை மனதை தவிக்க வைத்து விடுகிறது
பட்டாம்பூச்சி பறத்தல் மகிழ்ச்சிக்கு உவமானம் "
வண்ணங்கள் உற்சாகத்தின் வெளிப்பாடு. ஆனால் இன்னொரு பரிமாணத்தை 'வண்ணங்கள் வாய்க்காத ஏழைப் பட்டாம்பூச்சி' என்ற வரிகள் காட்டிவிட்டன. அவை சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம்.
காத்திருப்பு கவிதையும் அட்டகாசம் .இரண்டிலும் ஒரு பொதுத் தன்மை இருப்பதாகத் தோன்றுகிறது.
இதே போல் ரயிலில் அம்மாவுடன் விளையாடிக் கொண்டிருந்த ஒரு பெண்குழந்தையின் குறும்புகள் ஈர்க்க அதை ஒரு பதிவாக எழுதி இருந்தேன்.
பாவம் செய்தவர்கள்
உள்ளங்கைக்குள் உட்காருமோ உலகளக்கும் சிறகுகள் ?
காத்திருத்தலின் தவிப்பும் சுகம் தான்.
கருத்துரையிடுக