திங்கள், ஆகஸ்ட் 23, 2010

ஜுரம் வந்த நேரம்....

இன்று வேலைக்குப் போக வில்லை.
நேற்றிலிருந்து கடுமையான ஜுரம்.உடம்புவலி.
போட்டுக் கொண்ட ஊசியில் ஜுரம் குறைந்து வேர்க்கிறது.
 எதாவது எழுதுவோம் என்று லேப்டாப்பை தட்டிக் கொண்டிருக்கிறேன்.விரல் முனைகள் வலிக்கின்றன, மெல்லின எழுத்துக்களுக்கு கொஞ்சமாயும்,வல்லின எழுத்துக்களுக்கு அதிகமாயும்.

சற்றைக்குமுன் ஜுரவேகத்தில் வர்ஜியாவர்ஜியமில்லாமல் தொடர்பற்ற ஞாபகச் சிதறல்கள்....
-கடலூர் மணி டாக்டர், கம்மல் குரலில் பேசிக் கொண்டு, 
 ஜுரத்துக்கு தரும் மிக்ஸ்சர்,
-சமையல் அடுப்புக்கு விறகுகளை மாட்டு வண்டி உச்சியிலிருந்து லாவகமாய் கீழெறியும் கோதண்டம்.
- ஆத்துத்திருநாளில்,பெண்ணயாற்றில் சுழலில் சிக்கி
  மாண்டுபோன பள்ளித்தோழன் ராமதாஸு
- பெர்ரிங்கன்.... என்று ஒலிக்கும் கூவலோடு
  ரிப்பன்,வளை,கண்மை இத்யாதிகள் விற்கும் தெரு வியாபாரி.
- பின்னிரவு நகரப் பேருந்தில் ஜெயகாந்தனுடன் பேசியது.
- கெடிலம் ஆஞ்சநேயர் கோவில் லட்சதீபம்-
- கல்கத்தா தமிழ் மன்றம்- என் கவிதைகள்
- தொழிற்சங்கத் தோழன் கமாலுதீன் சுரானி
- பைரவிக்கும் நடபைரவிக்கும் வேறுபாடுகள்

மனசு ஓயாமல் எதையாவது உருட்டிக் கொண்டு இருந்தாலும்,
ஜுரத்தின் போது ஆழ் மனத்தில் உறைந்து போன சில பழைய  நினைவுகள் மேல்தளத்திற்கு மீண்டு வருவதாய்ப் படுகிறது.

இப்போழுது  இதெல்லாம் எழுத வேண்டுமா?.
ஜுர கால பலஹீனம் எழுத்தில் எதிரொலிக்குமா என்ன?
பல வருடங்களுக்குமுன், ஒரு ஜுரம் விட்ட நாளில்
கதை ஒன்று எழுதியிருந்தேன். கதையினூடே கவிதை வேறு..
கவிதை மட்டும் .இங்கே

நெற்றி தொட்டு
நெஞ்சு தொட்டு
உடல்நீவும் பாட்டன் முகம்,
மஞ்சளாய் தெரியும் ஜுரம்

திராட்சை வைத்த பன் கசக்கும்
அல்பகோடா நாவடியில் ஊரும்

உலக்கையிடி சத்தத்தில்
உள்வீட்டில் படுக்கையில்
பள்ளிக்கூடம் தனைமறந்து
படுத்திருக்க கனவு  வரும்
ஜுரமடித்து ஓய்ந்த பின்
மினுமினுப்பு உடலேறும்

மீண்டும் பள்ளி செல்ல
யாவும் பதியதாய்...

தொடரும் நண்பரொடு
எம்ஜியார் சிவாஜி சண்டைகள்..
டிரில் கிளாசில் மரத்தடி ஓய்வு
ஜுரம் வந்தால் சந்தோஷம்.

இப்போது ஜுர கால சந்தோஷத்தை அனுபவிக்கிறேனா?

அனுபவிக்கத்தான் தோன்றுகிறது
உட்கார முடியவில்லை.
இத்தோடு இதை முடித்து விட்டு
படுக்கையில் படுத்த வண்ணம்
படிக்கப் போகிறேன்
தி ஜாவின் முதல் நாவலான அமிர்தத்தை
சந்திப்போம் மீண்டும்.- .   

2 comments:

Chitra சொன்னது…

மனசு ஓயாமல் எதையாவது உருட்டிக் கொண்டு இருந்தாலும்,
ஜுரத்தின் போது ஆழ் மனத்தில் உறைந்து போன சில பழைய நினைவுகள் மேல்தளத்திற்கு மீண்டு வருவதாய்ப் படுகிறது.

.....இந்த கருத்தை, உங்கள் அருமையான கவிதையிலும் காண முடிகிறது..... சீக்கிரம் குணமாகி, தொடர்ந்து எழுத வாருங்கள்.

மோகன்ஜி சொன்னது…

நன்றி சித்ரா.. வலைப்பூவில் தான் எத்தனை சொந்தங்கள் நமக்கு.. சாண்டில்யனின் யவன ராணியை இப்போது படிக்க எடுத்திருக்கிறேன்.ஜுரம் என்னை விட்டாலும் நான் அதை இன்னும் இரண்டு நாள் விடுவதாய் இல்லை.யவன ராணி revision முடிக்க வேண்டாமா?!